கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 20,538 
 

”பெல்ஜியம் சென்ட்ரல் மிகவும் கம்பீரமாக இருந்தது. பரபரப்பான வேலை நேரம். பெல்ஜியம், கண்ணாடிக்குப் பெயர் போன இடம். பொதுவாக பெல்ஜியத்தில் இருந்துதான் பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்கள் உலகின் மற்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்னுமொரு விஷயத்துக்கும் பெல்ஜியம் மறைமுகமாகப் பெயர்போன இடம். ஆள் கடத்தல், அகதிகள் கடத்தல்! இவற்றை தமிழர்கள்தான் முன் நின்று நடத்துகிறார்கள். ஆட்களைக் கடத்துவதன் சூட்சுமம் வலுவாகத் தெரிந்தவர்கள் தமிழர்கள். ஹார்பர்களுக்குப் போகும் கள்ளப்பாதைகள், கன்டெய்னர் யார்டுகளுக்கு எத்தனை வரிசை முள் கம்பி அடிக்கப்பட்டிருக்கின்றன, யார் யாரை எங்கு கொண்டுபோய் இடம் மாற்ற வேண்டும், எந்தப் பாதை எங்கே கொண்டுபோகும்… எல்லா விவரங்களும் இந்தக் கடத்தல்காரர்ளுக்கு அத்துபடி. அப்படியான ஒரு கடத்தல்காரரிடமிருந்து எனக்கான அழைப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் நான்!

ஒரு கோப்பை சோறும் கறியும் தின்னவேண்டும் போலிருந்தது. ஆனால், இங்கு கடைகளில் எல்லாம் சாண்ட்விச் மற்றும் சிப்ஸ்தான் கிடைக்கின்றன. சோறு கண்டு மூன்று நாட்களாகிவிட்டன. கையில் கொஞ்சம் பெல்ஜியம் பணம் இருக்கிறது. அருகில் ஒரு துருக்கிக் கடையில் சாப்பிடும் ஒருவரின் தட்டில் ஒரு பிடி சோறு தெரிகிறது. அருகே சென்று பார்த்தேன். உருளைக்கிழங்கு சிப்ஸ், சாலெட், ஒரு துண்டு மீனோ, இறைச்சியோ… மிகுதி உள்ள இடத்தில் சோறு ஒரு பிடி. ம்ஹூம்… இது வேலைக்கு ஆகாது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இந்தியர்களின் அல்லது பாகிஸ்தானியர்களின் கடைகள் எதுவும் இல்லை. சரி சிப்ஸும் கோலாவும் சாண்ட்விச்சும்தான் இன்றும். வாங்கிக்கொண்டு வந்து அந்தச் சாலையிலிருந்த ஒரு டச்சுக்காரரின் சிலைக்குக் கீழ் அமர்ந்தேன்.

”அண்ணை நீங்கள் தமிழே?”

அஸ்மியாவின் பயணம்இருந்த இருப்பிலேயே அண்ணாந்து பார்த்தேன். என் கண்களைப் பார்த்ததும் எந்தப் பதிலுக்கும் காத்திருக்காமல் என் அருகில் அமர்ந்துகொண்டு அழ ஆரம்பித்தாள் அந்தப் பெண்.

”கோலா குடியுங்கோ!”

”வேண்டாம்!”

”சிப்ஸ்?”

”வேண்டாம்! அண்ணை… நீங்கள் லண்டன் போகவே வந்தனீங்கள்?”

”ஓம்!”

ஒன்று அகதி… அல்லது கன்டெய்னரில் லண்டன் செல்லத்தான் பெல்ஜியத்துக்கு தமிழர்கள் வருவார்கள் என்பது அவ்வளவு உறுதி.

ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் அழுகையை உதிர்த்துக்கொண்டே இருந்தாள்.

”ஆரோ நாதனாம்! இன்னும் ஆளைக் காணலே!”

”எனக்கும் அந்தப் பேரைத்தான் சொல்லினாங்கள். உங்கடை பேரென்ன?”

”பாத்திமா அஸ்மியா.”

”என்னது?” – ஓர் அதிர்ச்சி அலை எனக்குள் ஓடியது. அது ஏனென்று புரியவில்லை. ஒன்று முஸ்லிம் பெண்கள் இப்படி ஊர் கடந்து வர மாட்டார்கள் என்ற எண்ணம், அல்லது அப்படியானவர்களை நான் சந்தித்திருக்கவில்லை. ஊர் திரிகோணமலையாம். வயதை நான் கேட்கவில்லை. இருபது இருக்கலாம். தொடர்ந்த கேள்விகள் அவளின் சொந்த விஷயங்களில் தலையிடுவதாக இருக்கும். அதனை நான் விரும்பவில்லை. இரவு முழுக்க அவள் தூங்கவில்லை போலும். கண் கள் சிவந்திருந்தன. அதுவும் போக, தொடர்ந்து கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று விழுந்துகொண்டே இருந்தது.

”இங்கை எங்கே தங்கியிருக்கிறீர்கள்?”

ரயில்வே ஸ்டேஷனைக் காட்டினாள். ஐரோப்பாவில் இப்படி பெண்கள் சுதந்திரமாக தங்க ஏலும். இதுவே வேறு நாடுகள் என்றால் அவளது கற்புக்கு எந்த உத்தரவாதமும் இருக்காது. சீரழித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள். நாதனைப் பிடிப்பதற்கு ஒரே ஒரு தொலைபேசி எண் மட்டும்தான் இருந்தது.

”அஸ்மியா, குளிச்சீங்களா?”

”இல்லை, மூன்று நாளாகிவிட்டன.”

”முதலில் களைப்பை, சோர்வைப் போக்குவோம். அப்போதான் கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருக்கும்!” என்று சொல்லி, ரயில் நிலையக் கட்டணக் குளியல் அறையில் அவளை போய் குளிக்கப் பணித்தேன்.

குளித்துவிட்டு வந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். கோப்பி வாங்கிக் கொடுத்தேன். சுடச்சுடக் குடித்தாள். குளிர் தாண்டியும் வெயில் லேசாக அடித்தது. சிமென்ட் பெஞ்சில் இருவரும் அமர்ந்தோம். ஈரக் கூந்தலை விரித்துவிட்டாள். அது அவளை இன்னும் அழகாக்கியது. சில நிமிட அமைதிக்குப் பிறகு என்னைப் பார்த்தாள். அவள் கண்கள் குளமாகி இருந்தன. கண்ணீர் உடைந்து சிதறியது. ‘அழ வேண்டாம்’ என்று அவளுடைய தலையில் கைவைத்து ஆதரவாக அழுத்தினேன். விம்மி விம்மி அழுதாள். எனது தோளில் தானாகவே சாய்ந்து கேவினாள். அவள் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறாள். விம்மல், அழுகை, பச்சாதாபம், இயலாமை எல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் அறிமுகம் இல்லாத என்தோளில் விழுந்து அவளை அழவைத்திருக்கிறது.

”நான் திரிகோணமலையில் பிறந்தனன். எங்கடை அம்மா, அப்பாவுக்கு அஞ்சு பிள்ளைகள். நான் மூன்றாவது. வாப்பா கடைசித் தங்கச்சி பிறந்தபோது மவுத் ஆகிவிட்டார். அதற்குப் பிறகு வீட்டில் கஷ்டம். மூத்த அக்காவை ஒருத்தர் லவ் பண்ணி நிக்காஹ் முடித்தார். எனக்கு முந்தின அக்காவுக்கு இன்னும் கல்யாணம் முடிக்க இல்லை. நான் படிக்கும்போது நவநீதன் என்றவரை லவ் பண்ணினன். அவர்தான் என்னை லண்டனுக்குக் கூப்பிடுகிறார். ஆனால், நவநீதனுக்கு என்னை நேரடியா லண்டனுக்குக் கூப்பிட ஏலாதாம். அதுதான் ஏஜன்சி ஆளைவெச்சுக் கூப்பிடுறார். நவநீதன் நல்லவர். ஆனால், எனக்குத்தான் எவ்வளவு கஷ்டம்!” – விம்மி விம்மி கேவிக் கேவி அழுதுவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

”ஏஜென்ட்க்கு நவநீதன் காசைக் கட்டிப்போட்டு, ‘அஸ்மியாவைக் கவனமாகக் கொண்டுவந்து லண்டனிலை சேர்க்க வேண்டும்’ என்று சொல்லிப் போட்டார். ஜெர்மனியில் இருந்து இங்கை வாறதுக்கு எந்த செக்கிங்கும் இல்லை. ஆனால், ஒவ்வொரு இரவையும் கடப்பதற்குள் எனக்குப் பைத்தியம் பிடிப்பதைப் போல இருக்கிறது. பீர் குடிக்கும் பொடியன்களுடன் புகை இழுக்கும் அண்ணாக்களுடன் தனி மனுஷியாக இருந்து கடந்து வந்திருக்கிறேன். இதற்கு மேல் இந்தப் பயணம் தாங்காது. யார் மடியிலாவது படுத்துக்கொண்டு அழ வேண்டுமாட்டும் இருந்தது. ஸாரி அண்ணா!” என்றாள். நான் அவள் தலையை ஆதுரமாகத் தடவிக்கொடுத்தேன்.

லண்டனுக்குச் செல்லும் கன்டெய் னர் பயணம் உயிரைப் பணையம்வைக்கும் பயணம். எண்பதுகளில் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு விமானங்களில் செல்வதேகூட எளிதாக இருந்தது. 1983-ல் அல்லது அதனையட்டிய காலகட்டங்களில் ஐரோப்பா சென்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று இப்போதும் சொல்வார்கள். பின்னர் பல கட்டுப்பாடுகள் வந்துவிட்டன.

அன்று முதல் இரண்டாவது நாள், நாதனிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ‘எங்களுக்கு’ என்றால் என்னையும் அஸ்மியாவையும் சேர்த்து ஏழு பேருக்கு!

குளிரும் இருளும் விலகாத அதிகாலையில் எங்களை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். சில இடங்களில் வெண்பஞ்சுப் பொதியைப் போல பனி திரண்டுகிடந்தது. வானில், சாலையில், காரில், எங்கும் பனி. விறை குளிரானது பற்களைக் கிட்டியடிக்கவைத்தது. எங்களை அழைத்துச் செல்ல வந்தவர்கள் நல்ல குளிர் தாங்கி உடுப்பு போட்டிருக்கிறார்கள். எங்களுக்கு எதுவுமே பழக்கம் இல்லை. வந்தவனில் ஒருவன் சிகரெட்டைத் தொடர்ச்சியாக ஊதிக்கொண்டெ இருந்தான்.

”கஸகஸ்தானை விட இங்கை குளிர் குறைவுதான்!” -நடுங்கியபடியே ஏழு பேரில் ஒருவன் சொன்னான். பல தேசங்களைக் கடந்து பல அனுபவங் களோடு வந்திருக்கிறார்கள். கிட்டத் தட்ட 20 கிலோ மீட்டர் தூரம் ஓடி, ஹைவே ஒன்றில் நிறுத்தப்பட்டது கார். வலதுபுறமும் இடதுபுறமும் பெரிய பெரிய பண்ணைகள். செம் மறி ஆடுகள் அந்தக் குளிரிலும் நின்றபடி புல்லை முகர்ந்துகொண்டு நின்றன.

”மெதுவாய் வாருங்கோ…”

பண்ணைகளுக்குள்ளால் குனிந்து பனித்தண்ணீர் பட்டு உடுப்புகள் நனைய மெதுவாக நடந்தோம்.

அஸ்மியாவின் பயணம்2”நல்ல குளிர்… கன்டெய்னர் சாரதி நல்லாத் தூங்குவான்” – ஒருவன் சொன்னான். விறைகுளிர் தாங்க முடியாமல் தாக்கியது. ஊரில் மார்கழி மாதப் பனி எவ்வளவு ரம்மியமாக இருக்கும். நுனிப் புல், பனியோடு கொஞ்சி விளையாடும். ஆனால், இங்கோ மனிதரைக் கொல்லும் பனி மைனஸ் எட்டு டிகிரி என்று சொன்னார்கள். அதற்குக் கீழும் போகுமாம். அடியில் எல்லாம் விறைத்துவிட்டது. இப்படி பனி என்று சொல்லவில்லை. சொல்லியும் என்ன நடக்கபோகுது. ஒன்றுக்கு மேலே இன்னொன்று என்று மூன்று பேன்ட் அணிந்திருந்தேன். எல்லாமே ஈரமாகிவிட்டது.

அஸ்மியா என் அருகிலேயே இருந்தாள். அவள் முகத்தில் ஒரு சோகம் அப்பியே கிடந் தது. யாரும் எதுவும் கதைக்கவில்லை. எங்களை கன்டெய்னரில் ஏற்றுபவனின் கட்டளைக்கு இயங்கிக்கொண்டிருந்தோம். எப்படித்தான் கள்ள வழிகளைக் கண்டுபிடிக்கிறார்களோ தமிழர்கள். எமது தேசம் எங்கே… பெல்ஜியம் எங்கே? வெள்ளைக்காரன் புத்திசாலி என்று அம்மய்யா அடிக்கடி சொல்வார். என்ன புத்திசாலி? இந்த இரவில் ஒரு கன்டெய்னரில் ஒரே ஒருத்தனை ஏற்றட்டும் பார்ப்பம், தமிழன் தான் புத்திசாலி!

‘ஒவ்வொருத்தராய் வாங்கோ’ – இருளிலிருந்து கட்டளை மட்டும் வந்தது. ஒவ்வொருத்தராய் போய் ஏறுகிறார்கள். எனக்கு முன்னால் அஸ்மியாவை அனுப்பினேன். அடுத்தது நான். கொஞ்சம் திரும்பிப் பார்த்தேன்.

‘பிராக்கு பாக்காமல் ஏறுங்கோ’

அது ஒரு ரயில்வே ஸ்டேஷன். சரக்குப் பெட்டிகளாக கன்டெய்னர்கள் நீண்டிருந்தது. எல்லாமே துணி அல்லது ரெக்ஸினால் மூடிய கன்டெய்னர்கள். லாகவமாக சைடு கிளிப்புக் களைக் கழற்றிவிட்டு ஆட்களை ஒவ்வொருத் தராக ஏற்றிவிட்டார்கள். கடைசி ஆளாக நான் ஏறியபோது உள்ளே இடம் மட்டு மட்டாக இருந்தது. கன்டெய்னர் முழுக்க பேப்பர் கட்டுகள் ரோல் ரோலாகச் சிதறிக்கிடந்தன. ‘இது லண்டன்தான் போகும்’ – ஒருவன் கரகரத்த குரலில் சொன்னான்.

வெளியில் எதுவும் தெரியவில்லை. விடியும் வெளிச்சம் தெரிகிறது. ரெக்ஸின் ஒருவகை சாக்குத் துணியைப் போல இருக்கும். கன் டெய்னர் என்றபடியால் மூச்சுவிடுவது பிரச்னை இல்லை. ஆனால், குளிர் வாட்டியது. கையில் பை எதுவும் கொண்டுவரக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் மூன்று பேன்ட், மூன்று ஷர்ட் அணிந்துகொண்டு வந்துவிட்டேன். கன்டெய்னர் உள்ளே இருக்கும் பேப்பர் சூடாக இருந்தது. கொஞ்சம் உஷ்ணமாக உணர்ந்தோம்.

சிறிது நேரத்தில் ஒரு கன்டெய்னர் கூட்டாளி மெதுவாகச் சொன்னார், எல்லாருக்கும் பொதுவாக.

”இஞ்சை பேசக் கூடாது. மலம், சலம் கழிக்கக் கூடாது. பொலிஸ் நாய்கள் மோந்து பிடித்துவிடும். நித்திரைகொள்ளாமல் இருந்தால் நல்லது!”

ஆனால், ரயில் கன்டெய்னரில் ஒரு வசதி. அடிக்கடி யாரும் வந்து செக் பண்ணிக்கொண்டு இருக்க மாட்டார்கள். ஒரு முறை ‘செக்’பண்ணி சாமான் ஏத்திய பிறகு, அடுத்த நாட்டு ஹார்பரிலேதான் செக்கிங்.

காலை எட்டு மணியிருக்கும். ரயில் புறப் பட்டது. எங்கே போகிறது அல்லது போகப்போகிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லண்டன் போகும் என்று ஏஜென்ட் சொன்னதை நம்பியிருந்தோம். லண்டன், தமிழர்களுக்கான ஒரு கனவு உலகம்தான். அங்கே தமிழர்கள் அதிகம். தட்டுத்தடுமாறி கதைத்தாலும் இங்கிலீஷ் ஒரு பிரச்னை இல்லை. எப்படியும் ஒரு சொந்தம் இருப்பார்கள். இந்தத் துணிவோடு லண்டன் போகிறவர்கள் இருக்கி றார்கள். ஏனைய கன்டெய்னர்கள் கப்பலில்தான் போகும். ஆனால், எங்கள் நல்ல நேரம்… இந்த கன்டெய்னர்கள் ரயிலில் போகிறது.

எனக்கு மூத்திரம் வந்தது. அதற்கு மேல் அடக்கவே முடியாத அளவுக்கு நெருக்கியது. வருவது வரட்டும்… பெய்தேன் ஒரு ஓரமாக, யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு. ஆனால், அதை எல்லாரும் கவனித்தே இருந்தார்கள். கன்டெய் னர் இடுக்குகள் வழியே வெளியே பார்த்தோம். காடுகள், கழனிகள், சின்னச் சின்ன கிராமங்கள், பண் ணைகள், விளை நிலங்கள், ஆட்டுப் பண்ணைகள், மாட்டுப் பண்ணைகள்… மஞ்சள் பூக்கள் பூத்திருந்த பரந்த வயல்களைக் காட்டி ‘அதெல்லாம் கடுகுப் பூக்கள்’ என்று ஒருவன் சொன்னான், பெல்ஜியம் நேர்த்தியாகத்தான் இருந்தது. பார்க்க அழகாகவும் இருந்தது.

அஸ்மியா என்னருகே வந்தாள். சொந்தக்காரப் பெண் என்று கன்டெய்னர் கூட்டாளிகளுக்குச் சொல்லியிருந்தேன்.

”அண்ணா…” தயங்கினாள்.

”என்ன?”

”எனக்கு… எனக்கு…”

”என்ன உனக்கு”

”வந்திட்டுது.”

”சரி பரவாயில்லை.. அங்காலை கொஞ்சம் ஒரு இடம் இருக்கு. அதிலை போய்…”

எனது ஷர்ட் ஒன்றைக் கழற்றிக் கிழித்துக் கொடுத்தேன். அந்த நேரம் அவள் மிகவும் கஷ்டப்பட்டாள். அடிவயிற்று வலியால் துடித்தாள். விம்மி விம்மி அழுதாள்.

”அழாதை… அழாதை பிள்ளை. எல்லாம் சரியாயிடும். போய்ச் சேந்திடுவம்… கடவுள் துணை இருக்கிறார்!”

எனக்கு வேறு என்ன சொல்லுறதெண்டே தெரியவில்லை.

‘உங்கடை மனைவி கொடுத்துவைத்தவள்!’ கன்டெய்னரில் வந்த ஒரு கூட்டாளி என்னருகில் வந்து சொன்னார்.

ரயில் சென்றுகொண்டிருந்தது. போகும் இடங்களில் ஒரே ஒரு ஸ்டேஷனில் மாத்திரம் அதுவரை நின்றது. அரை மணித் தியாலம் அளவுக்கு நின்றிருக்கும். எட்டிப் பார்த்தோம். லண்டன் மாதிரி தெரியவில்லை. ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இடது கைப் பக்கமாக வாகன ஸ்டீயரிங் இருக்கும், போர்டுகளில் ஆங்கிலம் எழுதி இருக்காது போன்ற சின்னச் சின்னத் தகவல்களை ஒப்பு நோக்கி இங்கி லாந்து வரவில்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டோம்.

ஐந்து மணித் தியாலம் கழிந்துவிட்டது. ரயில் இங்கிலாந்துதான் போகிறதோ அல்லது வேறு எங்கேயுமா? ஒரு ஸ்டேஷனில் ரயிலைப் போட்டு விட்டு எங்கேயோ போய்விட்டார்கள் போல. நிற்கிறது… நிற்கிறது… நின்றுகொண்டே இருக்கிறது. அங்கை நின்று, இங்கை நின்று பன்னிரண்டு மணித் தியாலங்கள் ரயில் ஓடி ஓடி ஒரு ஹார்பருக்கு அருகில் வந்துவிட்டது. ஆனால், எங்கே என்று தெரியவில்லை. சிறிது நேரத்தில் கன்டெய்னர் ரயிலில் இருந்து மாற்றி வெளியில் எடுக்கப்பட்டது. கொண்டுபோய் கன்டெய்னர்கள் அடுக்கும் இடத்தில் நிறுத்தினார்கள். அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் ஒவ்வொருத்தராக இனம், நாடு தெரியாத ஒரு ஹார்பரில் இறங்கினோம்.

பாதுகாவலர்களிடம் ஹார்பர் கேமரா காட்டிக் கொடுத்துவிட்டது. வரிசையாக மூன்று ஜீப்புகள் எங்களை நோக்கி வந்தன. ஆங்கிலத்தில் ஜீப்பின் நம்பர் இருந்தது. எங்களுக்கு அருகே வந்து ஒருவர் கை கொடுத்தார். வரவேற்புப் படலங்கள் முடிந்து ஜீப்பில் ஏறச் சொன்னார்கள். ஏறினோம்.

மேலும் ஏழு இலங்கைத் தமிழர்கள் பிடிபட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஃபிரான்ஸில் இருந்து வந்தவர்கள் என்று பின்னர் அறிந்தோம். கை விரல் அடை யாளம், போட்டோ பிடித்தல், சிறிய விசாரணை எல்லாம் முடிந்து ‘போங்கோ’ என்று அனுப்பிவிட் டார்கள். இங்கிலாந்துக்கு வர எண்ணினோம். வந்துவிட்டோம். அஸ்மியா, நவநீதனுக்குத் தொலைபேசி வரச் சொன்னாள். நவநீதன் வந்தார். அஸ்மியாவுக்குப்பொருத் தமான பெடியன்தான். விடை பெறும்போது அஸ்மியாவின் கண்கள் என்னைப் பார்த்துப் பனித்திருந்தன!

லண்டனுக்கு வந்து நான்கு மாதங்களாகிவிட்டது. லண்டன் பழகிவிட்டது. லண்டனில் பனி கொட்டுவது வெண் பஞ்சைக் கொட்டுவது போலிருக்கும். கைகளால் அள்ளி விளையாட ஆசையாக இருக்கும். விளையாடினால் கை கண்டிப்போய்விடும். அன்று நண்பனின் அழைப்பை மறுக்க முடியாமல் குளிர்காலம் என்றும் பாராமல் லிவர்பூல் போவதற்காக ரயில்வே ஸ்டே ஷனில் காத்திருந்தேன். இரண்டு பெஞ்ச் தாண்டி அஸ்மியா உட்கார்ந்திருந்தாள். அவளருகே போய் அஸ்மியா என்பதை உறுதி செய்துகொண்டேன். நான்கு மாதங்களுக்குப் பின்பு சந்திக்கிறேன். நவநீதனோடு சேர்ந்த உற்சாகமோ, புதிதாகக் கல்யா ணம் முடித்த சந்தோஷக் களையோ எதுவுமே இல்லாதது மாதிரி இருந்தாள்.

நான் அருகில் சென்றதும் என்னை அடையாளம் கண்டுகொண்டாள். என் னைப் பார்த்ததும் கண்கள் உடைந்து போனது. எனக்காகத்தான் அழுவதற்குக் காத்திருந்த மாதிரி இருந்தது அவளின் செயல்.

”ஏன் அஸ்மியா, என்ன நடந்தது?”

”நவநீதன் கெட்டவன் அண்ணா. அவன் ஒரு வஞ்சகம் பிடிச்சவனண்ணா. அவனை விட்டுட்டு நான் வந்திட்டன். இப்ப ஒரு பெண்கள் காப்பகத்தில் இருக்கிறன். நான் அவனை நம்பித் தானே இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தனான். எவ்வளவு துன்பங்களைச் சுமந்து வந்தனான். நான் வந்த ஆரம்பத்திலை ஒரு நாள் என்னோடை நல்லா கதைச்சவன்… பிறகு… பிறகு….” என்று விம்மி விம்மி அழுதாள்.

”இரண்டாவது நாளில் இருந்து என்னோடை கதைக்கேல்லே. அன்பாயில்லே. எனக்கு என்னவோ போலிருந்தது. நவநீதனைக் கேட்டன், ‘ஏன் என்னோடை இப்பிடி நடக்கிறியள்’ எண்டு.

அவன் சொன்னான்… ‘எனக்கு மன சஞ்சலமாயிட்டு உண்டு. நீ எதுக்கும் வெர்ஜினிட்டி டெஸ்ட் பண்ணிக்கோ. பிறகு நாம் சேர்ந்துவாழலாம். உன் கன்னித்தன்மை ரிசல்ட் பார்க்கிறவரை எனக்கு உன்னோட கதைக்கக் கூட ஏலாது’ என்று சொன்னான். நவநீதனைத் தேடி வந்த பயணத்தின்போது, நான் யாருடனாவது உடலுறவு செய்திருப்பேனோ என்று அவன் சந்தேகிக்கிறான் அண்ணா!”

சட்டென என் தோளில் சாய்ந்து வெடித்து அழத் துவங்கினாள். ஆறுதலும் தேறுதலும் சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை என்னிடம்.

அவள் காத்திருந்த ரயிலுக்கான பச்சை விளக்கு எரிய, அவள் புறப்படத் தயாரானாள்!

– ஆகஸ்ட் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *