தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 14,022 
 
 

“”அவுலவுலே…” “”அவுலவுலே…..”

அந்த வாரத்து இதழில் ஆயன் கடிதங்கள் நூல் பற்றிய மதிப்புரையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த சந்திரனின் கவனத்தை அந்தக் குரல் சற்றே இழுத்தது. இருந்தாலும் படிக்கும் விஷயத்தில் இருந்த ஈர்ப்பினால் சந்திரன் மீண்டும் படிப்பில் ஆழ்ந்து போனான். கொஞ்ச நேரம் சென்றிருக்கும்.

“”அவுலவுலே……”

சந்திரன் மீண்டும் நனவுலகு வந்தான். படிப்பதை சற்று நிறுத்திக் கொண்டு தன்னைத் திசை திருப்பிய அந்தக் குரலுக்காகக் காத்திருந்தான். ஒவ்வொரு நாளும் அந்தத் தெருவில் எத்தனையோ பேர் எதையெதையோ கூவிக் கூவி விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் கூவுவார்கள், சிலர் கத்துவார்கள், சிலர் ராகம் போட்டு இசைப்பார்கள், சிலர் மொணமொணப்பார்கள்.

சிலரின் வார்த்தைகள் புரியும். ஒரு சிலர் என்ன விற்கிறார்கள் என்று அவர்கள் உச்சரிப்பிலிருந்து புரிந்து கொள்வது கடினம். எழுந்து வந்து தெருவில் அவர்கள் விற்றுக் கொண்டு போகும் பொருளைப் பார்த்த பின்னர்தான், “அட இதைத்தானா இந்த மாதிரிக் கூவினான்’ என்று உதடு ஒரு புன்சிரிப்பையும் உதிர்க்கும். அதெல்லாம் அத்தோடு கலைந்து போகும்.

இந்த அவல் விற்கும் குரலும் அப்படித்தான். ஆனால் அந்த உச்சரிப்புத் தெளிவும், கணீரென்ற குரலும்தான் சந்திரனை அவன் படிப்பதை நிறுத்தி இவ்வளவும் நினைக்க வைத்தது. முன் ஒலித்ததை விட இடைவெளி அதிகமானதால், ஏன் இத்தனை நேரம் அந்தக் குரல் கேட்கவில்லை. நம் தெருவில் நுழையாமல் நேரே போய்விட்டதோ என்று சந்திரன் நினைத்த போதில் அந்தக் குரல் மீண்டது.

“”அவுலவுலே…..”

இரண்டு தெரு சேரும் மூலையில் அவன் வீடு இருந்ததால் நேரான சாலையில் இருந்து அவன் வீடு இருந்த தெருவில் அவுல் நுழைந்துவிட்டதை அந்தக் குரலின் அருகாமை உணர்த்தியது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியின் குரல் என மதிப்பிட்ட சந்திரன், அவுல் வாங்கச் சொல்லலாமா? வேண்டாமா? என நினைத்துக் குழம்பினான். அவுலை விட கணீரென்று குரலுள்ள அந்தப் பெண்மணியைப் பார்க்க அவனுக்குள் ஆவல் மிகுந்தது. இதற்காக எழுந்து செல்ல வேண்டுமே என்று சோம்பேறித்தனமும் ஒரு பக்கம் இருந்தது.

“”மார் சளிக்கு அவுல் நல்லது அதைப் பால்ல ஊற வச்சி கல்கண்டு, ஏலக்காய் எல்லாம் போட்டுச் சாப்பிடணும்” என்று அம்மா சொன்னது நினைவுக்கு வர, தன் மனைவியைக் கூப்பிட்டு அவுல் வாங்கச் சொல்லலாம் என நினைத்து வாய் திறந்தான்.

அதற்குள் “”இந்தா அவுலு” என்று அவன் மனைவி அவுலை அழைக்கும் குரல் கேட்டது. தெருவில் கூவி விற்பவர்களைப் பொறுத்தவரை உப்பு விற்பவர் பெயர் உப்பு தான். கோல மாவு விற்பவர் கோல மாவுதான். அதன் படி இந்த அவுலு விற்கும் பெண்மணியின் பெயர் அவுலு ஆகிவிட்டது.

“”அவுலு இங்க பாரு… தோ… மேல பாரு” என்று சந்திரனின் மனைவியின் குரல் மீண்டும் கேட்டது. மாடியில் குடியிருந்ததால் பால்கனியில் நின்று அவுலைத் தன்னை நோக்கித் தன் மனைவி திருப்புவதை சந்திரன் உணர்ந்து கொண்டான்.

“”தோ இந்தப் பக்கமா மெத்தப்படி இருக்கு. ஏறி மேல வா” என்று அவன் மனைவி கூறவும் இரண்டு மூன்று நிமிடம் சென்று கூடத்தை ஒட்டியிருந்த மெத்தை வாயிற் கதவைத் திறக்கும் சத்தம் அறையிலிருந்த சந்திரனுக்குக் கேட்டது.

“”இந்தாம்மா, செத்த இந்தக் கூடையைப் புடிச்சி கொஞ்சம் எறக்கி வைடா கண்ணு”

அவுலு தான் அப்படிச் சொல்லியது. ஆனால் குரல் என்னவோ தளர்ந்திருந்தது. தெருவில் கூவிய அந்த “கணீர்’ இதில் இல்லை. தொடர்ந்து அவன் மனைவிக்கும் அவுலுக்கும் பேரம் நடந்தது.

“”படி எவ்வுளோ பாட்டி” என்று அவன் மனைவி கேட்டாள்.

என்னது பாட்டியா என்று துணுக்குற்ற சந்திரன், அவுலுவை விட பாட்டி எவ்வளவோ தேவலை என்று நினைத்தாலும் தன் கணிப்புத் தவறாகிப் போனதே என்றும் நினைத்துக் கொண்டான்.

“”நாலு ருவாம்மா”

சந்திரனின் மனைவிக்கு அவுலின் விலை என்ன என்பது சரியாகத் தெரியாததால்,

“”கொஞ்சம் கொறைச்சிக் குடேன்” என்று பொதுவாகக் கேட்டாள்.

“”இல்லடா கண்ணு, நீ கடைல போயிக் கேட்டுப் பாரு, அஞ்சி ரூவா, நாலரை ரூவாய்க்குக் கொறஞ்சி கெடையாது. நான் தெரு மேல வந்தும் நாலு ரூவான்னுதான் எம்மா விக்கறேன்”

மேற்கொண்டு சந்திரனின் மனைவிக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை.

“”சரி ரெண்டு படி போடு” என்று தன் கையிலிருந்த சிறிய பிளாஸ்டிக் வாளியை எதிரே வைத்தாள்.

அந்தக் கூடத்தின் ஓர் ஓரத்தில் படுத்திருந்த சந்திரனின் தாய் திடீரென்று தலையைத் தூக்கிப் பார்த்து, “”இன்னாது படி நாலு ரூபாயா? மூணு ரூபாய்க்கிக் குடு. இல்லைன்னா போ” என்று சொல்லவும் சந்திரனின் மனைவி வாளியைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

படியில் அவலை அளந்து கொண்டிருந்த அவுலு அப்படியே நிறுத்திவிட்டு,

“”இல்லம்மா தாயீ. கட்டுப்படியாவாதும்மா, அரிசி விக்கிற விலைல இப்படிக் கேட்கிறீயே தாயி” என்றது.

சந்திரனின் அம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. விலை குறைக்காததற்கு அல்ல. தன்னைத் “தாயீ’ என்று அழைத்ததற்காக.

“”இந்தா உனக்குத் தாயா நானு? உனக்கு இன்னா வயசாவுது? என்னைப் போயி உன் தாயின்ற”

“”அட பேச்சுக்கு அப்பிடித்தான் எம்மா கூப்புடறது”

“”ஆமாமாம் கூப்புடுவே. தோ பாரு. படி மூணு ரூபாதான். இல்லன்னா நடையைக் கட்டு” குரலிலிருந்த கண்டிப்பு, வயது குறித்து அவுலுவின் சமாதானத்தை சந்திரனின் அம்மா ஏற்கவில்லை என்று காட்டியது.

இப்போது சந்திரன் மனைவிக்கு விலையில் ஒரு தெளிவு ஏற்பட்டது.

“”சரி படி மூணரை ரூபாய்க்கு குடு” என்று திட்டவட்டமாகக் கூறவும், இதுக்கு மேல் வழியில்லை என்று தெரிந்துகொண்ட அவுலு அரை குறை மனதுடன் ரெண்டுபடி அவலை அளந்து போட்டது. அப்புறம் கொசுறாக ஒரு கைப்பிடி எடுத்துப் போட்டது.

“”இன்னும் கொஞ்சம் அவுலு போடு பாட்டி”

“”அதான் போட்டன கண்ணு” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒருபிடி அவல் எடுத்துப் போட்டது.

“”சரி பாட்டி, இரு காசு கொண்டாரன்” என்று சந்திரனின் மனைவி எழுந்து அறைக்கு வந்தாள். சந்திரனைப் பார்த்து, “”காசு வச்சிருக்கீங்களா?”

என்று கேட்டவள், அவனுடைய பதிலுக்குத் காத்திராமல் சட்டைப் பாக்கெட்டில் கையை விட்டுக் காசை எடுத்துக் கொண்டாள்.

கணீரென்ற குரலை வைத்து நடுத்தர வயதுப் பெண்மணியாக நினைத்த அவுலுவைத் தன் மனைவி பாட்டியாக்கி விட்டதால் ஆவல் உந்த சந்திரன் அறையை விட்டுக் கூடத்துக்கு வந்தவன் அவுலுவைப் பார்த்ததும் அசந்து போனான்.

கிட்டத்தட்ட தொண்ணூறு வயது மதிக்கத்தக்க அளவில், கறுத்த மேனியில் அவுலு இருந்தது. தோல்களெல்லாம் சுருங்கிப் போய்த் தசைகள் தொங்கிக் கொண்டிருந்தன. காலமும், சமுதாயமும், முகத்தில் வரைந்த பல கோடுகள். ரவிக்கை இல்லாத கை உலக்கைபோல் நீளமாக அமைந்து அவுலு நல்ல உயரம் என்பதைத் தெரிவித்தது. உடம்பு அவ்வளவு ஒல்லியாக இல்லைதான். ஆனாலும் முகத்தில் ஓர் அமைதியும், கம்பீரமும் இருந்தன. பாட்டி ஒரு காலத்தில் நல்ல உடற்கட்டோடும், கம்பீரமாகவும் இருந்திருக்க வேண்டும் என்பது பொதுவாக அதன் தோற்றத்தில் தெரிந்தது.

ஆனால் தற்போது மூப்பு மிகவும் தளர்வை ஏற்படுத்தியிருந்தது. சந்திரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தக் கிழவியா இப்படிக் கணீர் குரலில் கத்தியது.

அவன் மனைவியிடமிருந்து காசை வாங்கிக் கொண்ட பாட்டி சந்திரனைப் பார்த்து, “”தம்பி, செத்த இந்தக் கூடையை ஒருகை புடிச்சிவுடு கண்ணு” என்றது.

சந்திரன் கூடையைப் பிடித்து பாட்டியின் தலையில் வைத்தான். பாட்டி மெத்தைப் படியை நோக்கிக் திரும்பியது.

“”பாத்து, மெதுவா படியிறங்கு பாட்டி” என்றான் சந்திரன்.

“”நா எறங்கிடுவன் கண்ணு” என்றபடி பாட்டி ஒவ்வொரு படியாக கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு இறங்கியது. பாட்டி படியிறங்கிப் போகும் வரையில் சந்திரன் பார்த்துக் கொண்டேயிருந்தான். இந்த வயதிலும் இந்தப் பாட்டி இப்படி வீடுவீடாய்ப் படியேறிக் கஷ்டப்படுகிறதே என்று நினைத்துக்கொண்டு உள்ளே திரும்பியவன் தன் மனைவியிடம்,

“”ஆமா, அந்தக் கிழவி நாலு ரூபாய்க்குத் தானே கேட்டுது. அந்த விலைக்கே வாங்கியிருக்கலாமில்ல. அதுல போயி எட்டணா கொறைச்சி வாங்கறியே?” என்றான்.

“”ம்க்கும், நான் மொதல்ல நாலு ரூபாய்க்கே போடுன்னுதான் சொன்னேன். உங்க அம்மாதான் மூணு ரூபாய்க்குக் கேட்டாங்க. அப்புறந்தான் நான் மூணரை ரூபாய்க்கு வாங்கினேன்”

கேள்விக்கு பதிலை விட, “முடிஞ்சா உங்கம்மாகிட்ட கேட்டுப் பாரேன்’ என்ற தொனிதான் தூக்கலாக இருந்ததால், சந்திரன் வழக்கம்போல் சமாதானப் பாதையில் நுழைந்தான்.

“”சரி சரி, அடுத்த தடவை அதுங்கிட்ட அவுல் வாங்கினா, அது கேக்கிற காசைக் குடுத்திடு. பாவம் அதும் வயசுக்கு எப்படிக் கஷ்டப்படுது பாத்தியா?”

“”ஆமாங்க, நானும் அதான் நெனைச்சேன். சரி வரட்டும் அடுத்த தடவை”

மீண்டும் தெருவில் “அவுலவுலே……’ என்ற கணீர் குரல் கேட்டு மெல்ல மெல்லத் தேயத் தொடங்கியது.

ஒரு மாதம் போயிருக்கும். அன்று விடுமுறையாதலால் சந்திரன் வழக்கப்படி ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கிப் போயிருந்தான்.

“”அவுலவுலே………..”

அவுலுப் பாட்டியின் கணீர் குரல் அந்தத் தெருவின் காற்றலைகளில் நீண்ட நேரம் நிலவியது. தொண்ணூறைத் தொட்டு நடுங்கி நடுங்கி வெளிப்படும் அந்தக் குரல் “”அவுலவுலே…” என்று கூவும்போது மட்டும் அடிவயிற்றில் இருந்து புறப்பட்டு அண்டத்தில் கலந்திடும் இடியோசை போல அதிர்வலைகளாய் அந்தத் தெருவின் அத்தனை சுவர்களிலும் மோதி மோதி, இறுதியில் சன்னமாய்த் தேயும்வரை அதனின் அத்தனை நெளிவு சுளிவுகளையும் நினைவில் ஏற்றிவிட்டுப் போகும்படியான ஒரு கூவல், ஓர் ஓசை, ஓர் ராகம். இது கூட சரியான விளக்கமல்ல.

சந்திரன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, “”அவுலு வாங்கப் போறியா?” என்று தன் மனைவியிடம் கேட்டான்.

“”ஆமாமாம்” என்று சொன்ன அவன் மனைவி பால்கனிப் பக்கம் சென்று அவுலை அழைத்தாள். சந்திரன் அறையை விட்டுக் கூடத்துக்கு வந்தான்.

அவுல் பாட்டி பொறுமையாக மேலேறி வந்ததும் உள்ளே நுழைய இரண்டு கதவையும் திறந்த விட்டவன், பாட்டி சொல்லாமலே கூடையைப் பிடித்து இறக்கிக் கீழே வைத்தான்.

“”நல்லாயிருக்கணும் கண்ணு” என்ற அவனை வாழ்த்திய பாட்டி, “”ஏம்பா வேலைக்குப் போலியா?” என்றது.

ஏதோ ரொம்பப் பழகியவர்களிடம் பேசுவதுபோல் அந்தப் பாட்டி பேசியது அவனுக்குப் பிடித்திருந்தது.

“”இல்லை பாட்டி இன்னிக்கு ஞாயித்திக்கிழமை இல்ல. அதான் வேலைக்குப் போவலை” என்றான் சந்திரன்.

“‘இன்னக்குத்தான் ஞாயித்திக்கெழமையா? நமக்கு எங்கப்பா தெரியுது நாளும் கெழமையுமெல்லாம்” என்று நடுங்கிய குரலில் முனகிக் கொண்ட பாட்டி, அவன் மனைவி வரவும், “”எத்தினி படிம்மா” என்றது.

“”படி எவ்வுளோ”

“”நாலரை ரூபா கண்ணு”

“”இன்னாது போன மாசந்தானே உங்கிட்ட மூணரை ரூபாய்க்கு வாங்கினேன். அதுக்குள்ள ஒரு ரூபா ஏத்திச் சொல்றியே?”

“”இல்லடா கண்ணு. அரிசி விலையெல்லாம் ஏறிப் போயிட்டுதும்மா. நா கடைல அரிசியை வெல போட்டு வாங்கித்தானே கண்ணு அவுலு இடிக்கறேன்” என்று பரிதாபமாய்ச் சொல்லவும், சந்திரன் தன் மனைவியைப் பார்த்து, “”வாங்கிக் கொள்” என்ற சாடையில் தலையை ஆட்டினான்.

“”சரி மூணு படி போடு” என்று சந்திரனின் மனைவி பிளாஸ்டிக் வாளியை வைக்கவும், சந்திரனின் தாயாரின் குரல் திடீரென குறுக்கிட்டது.

“”அதெல்லாம் கெடையாது. போன தடவை எவ்ளோவுக்குப் போட்டியோ அதெ வெலதான். மேல கெடையாது”

“”இல்லம்மா மூணரை ரூவாக்கிக் கட்டுப்படியாவாதும்மா” என்று மெல்லச் சொன்ன பாட்டி மூட்டையிலிருந்து படியை எடுத்து வெளியில் வைத்துவிட்டு மூட்டையைக் கட்ட ஆரம்பித்தது. சந்திரனுக்கு சங்கடமாகிப் போனது.

அம்மா எப்பவும் இப்படித்தான். எட்டணா, நாலணாவுக்குக் கணக்குப் பார்க்கும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அவுலுப் பாட்டியிடம் மெல்ல, பாட்டி, “”எங்கம்மா சொல்ற விலைக்கே நீ அவுலு அளந்துபோடு. நீ முதல்ல எவ்வளோ கேட்டியோ அந்தக் காசை நான் குடுத்துடறேன். நீ இனிமே பேரம் பேசாதே” என்றான்.

பாட்டி அவனை நிமிர்ந்து பார்த்தது. அவன் கண்களில் இருந்த பரிதாபம் பாட்டிக்குப் பிடிக்கவில்லை.

“”விக்காமப் பூடாதுப்பா. எப்பிடியும் வித்துடும்” என்ற பாட்டியின் பதிலில் இருந்த தன்னம்பிக்கை சந்திரனை சற்றே அயர வைத்தாலும், “”எங்களுக்கும் அவுல் வேணும் பாட்டி நீ அளந்துபோடு” என்றான். சந்திரனின் மனைவியும் “”ஆமாம் பாட்டி” என்றாள்.

கணவனும் மனைவியுமாக கண்களில் ஆவலுடன் குழந்தைகள் போல் தன் எதிரில் அமர்ந்து கேட்பதைப் பார்த்ததும், அவுலுப் பாட்டி லேசாகச் சிரித்துக்கொண்டே மூட்டையை மறுபடியும் பிரித்து அவலை அளந்து போட்டது.

“”இரு பாட்டி காசு கொண்டாரன்” என்று சந்திரனின் மனைவி உள்ளே போனாள்.

“”ஏன் பாட்டி, இன்னா ஊர்லேர்ந்து இந்த அவலைக் கொண்டு வர்ற?” என்று கேட்டான் சந்திரன்.

“”நா ஆலங்குப்பத்துலேர்ந்து வர்றேன் கண்ணு”

“”இவ்ளோ தூரம் எப்படி வர்றே?”

“”பஸ்சுலதான். பிச்சேரிக்கு வந்து எறங்கி அதுக்கப்புறம் நடந்து நாலு தெரு சுத்தினா பொழுதும் சாஞ்சிடும். அவுலும் வித்துடும், அத்தோட பஸ்சு ஏறிடுவேன் தம்பி”

“”அதுசரி இந்த அவுலை எங்கேர்ந்து வாங்கி விக்கறே?”

“”இது வாங்கி விக்கிறதில்லை கண்ணு. நானே இடிச்சிக் கொண்டாறன்”

“”இன்னா நீயேவா இடிக்கிறே? இந்த வயசுல நீயா இவ்ளோ அவுலையும் இடிச்சிக் கொண்டார்ற?”

“”ஆமாம் தம்பி. இன்னா வயசு கையில தெம்பு இருக்குறவரைக்கும் இடிக்க வேண்டியதுதான்”

“”சரி இந்த அவுலு ஏன் சிகப்பா இருக்குது?”

“”இது காரை அரிசிப்பா. கார் நெல்லும்பாங்க, இதான் சளிக்கு நல்லது”

“”அரிசியா, நெல்லா எதுல அவுல் இடிக்கறது?”

“”நெல்லுதாம்பா. காரு நெல்லா வாங்கி காலைல ஊறவச்சி ராவி வரைக்கும் சாக்குப் பைல கட்டி மேல கல்லு வச்சிடணும். மறுநாள் காலைல நெல்லு முளை வந்துடும். அதைத்தான் சட்டில போட்டு வறுத்துப், பாதி சூட்டோட உரல்ல போட்டு குத்தினா உமியெல்லாம் தனியா பூடும். அப்புறம் பொடைச்சி எடுத்தா தோ இப்புடி இருக்கும்”

“”இவ்ளோ வேலையும் நீ ஒண்டியாவா செய்யுற பாட்டி?”

“”ஆமாங்கண்ணு வேற யாரு எங்கூட நாந்தான் தனியா கடந்து லோல்பட்டு லொங்கழிஞ்சி போறன்”

“”ஏன் பாட்டி உனக்குப் புள்ளைங்கள்லாம் இல்லியா?” என்றான் சந்திரன்.

“”ஏன் இல்லாம ஒன்னுக்கு மூணு புள்ளிவ ராசா. எல்லாத்துக்கும் கலியாணம் ஆயி குடித்தனமா இருக்கறானுவ”

“”ஏன் அவங்க யாரும் உன்னைக் கவனிக்கிறதில்லையா? அவுங்க யாராவது ஒருத்தர்கிட்ட நீ இருக்க வேண்டியதுதானே? எதுக்கு இந்த வயசுல இப்புடி அலையுற?”

“”ம்… எவங்கிட்ட ராசா இருக்கறது ஒருத்தவங்கிட்ட இருந்தா மிச்ச ரெண்டு பேர் அவன் வூட்டுல இருக்கறது தானேன்னு கேக்கறான். அவங்கிட்டப் போனாலும் இதே கேள்விதான். அவனை வுடு. அவனாவது நான் பெத்தவனுவ. வந்த சிறுக்கிவகிட்ட வாயடி கையடி பண்ணி சோறு துன்னப் புடிக்கலியே ராசா”

“”அதுக்காக இந்த வெயில்ல இப்படிக் கஷ்டப்படுறியே. எத்தினி நாளைக்கு பாட்டி இந்த மாதிரி சுத்திச் சுத்தி வருவே?”

“”நா இன்னா பண்ணுவேன் ராசா… என் பொழப்பு அப்படியாப் போச்சு மவராசன்… போற வரைக்கும் நாந்தான் சட்டம். அவுரு போய்ச் சேர்ந்த பொறவு இப்பிடித்தான் பொழக்கணும்னு தலைல எழுதியிருக்குதே ராசா… என்ன பண்றது?”

அவுலுப்பாட்டியின் பதிலில் சந்திரன் நிறைவடையவில்லை. இந்தப் பாட்டி தன் பிள்ளைகளிடம் கொஞ்சம் அனுசரித்துப் போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் இது ரோசக்கார பாட்டியா இருக்கறதுனாலதான் அவங்களோட இருக்க முடியில என்பதும் அவனுக்கு விளங்கியது.

இந்த நேரம் காசு கொண்டு வந்த சந்திரனின் மனைவி, “”இந்தா பாட்டி இதுல பன்னெண்டு ரூபா இருக்குது” என்று கொடுத்தாள்.

அதை வாங்கிக் கொண்ட பாட்டி கொஞ்சம் குழப்பத்துடன் பார்க்க,

“”இன்னா பாட்டி, நீ கேட்டதைவிட கூடத்தான் இருக்குது. மூணரை ரூபான்னா மூணுபடி அவுலு பத்தரை ரூபாதான் வரும். நான், படி நாலு ரூபான்னு கணக்கு பண்ணி பன்னெண்டு ரூபா குடுத்திருக்கேன்” என்றாள் சந்திரனின் மனைவி.

சந்திரனுக்கு அந்தப் பாட்டியைப் பார்க்க பாவமாய் இருந்தது. அதன் கையிலிருந்த இரண்டு ஐந்து ரூபாய் ஒரு இரண்டு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாயை வாங்கிக் கொண்டு இன்னொரு ஐந்து ரூபாயைக் கொடுத்து விட்டு,””பாட்டி அஞ்சி ரூபான்னே வாங்கனதா வச்சிக்கோ. எங்க அம்மாகிட்ட நான் மூணரை ரூபாய்க்குத்தான் வாங்கணேன்னு சொல்லிக்கறேன்” என்றான் சந்திரன்.

காசு, கூட கொடுத்ததற்காகக் கிழவியின் முகத்தில் ஒரு சந்தோஷமும் இல்லை. மாறாக, என்ன வென்று கண்டு பிடிக்கமுடியாத ஓர் இறுக்கம்தான் தெரிந்தது. சந்திரனும் குழப்பத்துடன்,””என்ன பாட்டி, இன்னா யோசிக்கறே?” என்றான்.

“”தம்பி, உன்னை மாதிரிதான் ராசா எம்புள்ளங்களும். ஏதோ வந்தவுளுவ பேச்சக்கேட்டு, அவங்க குடும்பம், அப்படியிப்படின்னு ஆயிப்புட்டானுங்க. என் வீராப்பு நான் இப்படிப் பொழக்கறேன். அம்மாவை ஏமாத்தி நீ குடுக்கற காசு எனக்கு வாணாங் கண்ணு. அதெல்லாம் ஆண்டு அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும்” என்று கூறிவிட்டு அவன் கொடுத்த ஐந்து ரூபாயை அவனிடமே திருப்பித் தந்துவிட்டு,”” இந்தக் கூடையை செத்தப் புடிப்பா” என்றது பாட்டி. பளீரென்று கன்னத்தில் அறை விழுந்தது போலிருந்தது சந்திரனுக்கு. அவனுடைய மேதாவித்தனமெல்லாம் மெல்ல நொறுங்கிக் கொண்டிருக்கக் கூடையைப் பிடித்து பாட்டியின் தலையில் வைத்தான்.

சிறிது நேரத்தில் “அவுலவுலே’ என்ற கணீர் குரல் அந்தத் தெருவெங்கும் நிறைந்து பின்னர் தேய்ந்து கொண்டே போனது.

இது நடந்து இருபது வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் அந்தக் கிழவி வருவதில்லை. இத்தனை நாட்களுக்கு நிச்சயமாய்ச் செத்துப் போயிருக்கும். ஆனால் இப்பொழுதும் தெருவில் யார் எதை விற்றுக்கொண்டு போனாலும் சந்திரனுக்கு “அவுலவுலே’ என்ற கிழவியின் கணீர் குரல்தான் நினைவுக்கு வரும். கூடவே கிழவியின் தளராத தன்னம்பிக்கையும், அதனிடம் இரக்கம் காட்டுவதை ஏற்றுக் கொள்ளாத செருக்கும் நினைவுக்கு வரும்.

“அவுலவுலே’ என்னும் அக்கிழவியின் கணீர் குரலின் வளைவு, நெளிவு, ஏற்ற இறக்கங்களோடு கூடிய அதிர்வுகள் இன்றைக்கு அந்தத் தெருவில் யாருக்காவது நினைவிருக்குமா தெரியவில்லை. ஆனால் சந்திரனின் காதுகளைப் பொறுத்தவரை, யார் எதை விற்றுக் கொண்டு போனாலும் அவுலுப் பாட்டியின் அந்தக் கணீர் குரல் அந்தச் சுவர்களில் மோதி அதிர்வலைகளாக எழும்பிக் கொண்டே இருக்கின்றன இன்றும். அவுலவுலே

– புதுவை சிவ. இளங்கோ (ஜூலை 2014)

தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி-2014 சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000/- பெறும் கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *