கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 17,644 
 
 

என் எத்தனையோ கதைகளில் ஏதாவது ஒரு கேரக்டர் கையில் ஒரு தந்தியை வைத்துக்கொண்டு தவித்து நிற்பதைப் பத்திபத்தியாக விவரித்திருக்கிறேன். ஆனால், இப்போது நானே ஒரு சேதியை வைத்துக்கொண்டு தவித்த தவிப்பைப் பார்க்கும்போது, இதில் பாதியையாவது என் கேரக்டர்கள் அனுபவித்திருப்-பார்களா என்று தோன்றியது.

கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த ராஜேஸ்வரியைப் பார்த்தேன். மயக்கம் இன்னும் தெளியவில்லை. உலுக்கி எடுத்திருந்தது இருமல். கால் அடிக்கு ஏறி இறங்கியது நெஞ்சு. மூச்சில் இன்னும் கரகர சத்தம்.

அவள் விழிப்பதற்குள் நான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். யோசிக்க ஆரம்பித்தேன். அவளைச் சந்தித்தது ரொம்பத் தற்செயலாக நிகழ்ந்தது.

இரண்டு மணி நேரம் முன்…

இன்னும் சற்று நேரத்தில் புறப்படவிருந்த அந்த எக்ஸ்பிரஸின் முதல் வகுப்பு கோச்சில் என் இருக்கை தேடி அமர்ந்தேன்.

பெட்டியை மேலே தள்ளிவிட்டு தோள் பையிலிருந்து படிக்கப் புத்தகம் எடுத்து உட்கார்ந்தேன்.

”சார், நீங்க எழுத்தாளர் சுகந்தன்தானே?” என்-னையே உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டு இருந்த எதிர் ஸீட் பெண்மணி கேட்டாள். அவளுக்கு சுமார் 50 வயது இருக்-கும். நல்ல சிவப்பாக முகத்தில் ஒரு களையுடன் இருந்தாள். அளவான பருமன். பாந்தமாக உடுத்தி-இருந்தாள்.

”ஆமா, நீங்க..?”

”என்னை உங்களுக்கு ஞாபகமிருக்க சான்ஸ் ரொம்ப கம்மி. வேதாசலம் சார் வீட்டில் ‘பார்வைகள்’னு இலக்-கியக் கூட்டம் நடக்குமே, அதிலே ஒரு முறை நீங்க பேசினீங்க. அதுக்கு நானும் வந்திருந்தேன். என் பேர் ராஜேஸ்வரி.”

வேதாசலம் வீட்டு மாடி என் மனதில் விரிய, சட்-டென்று எனக்கு அந்தப் பெண்ணைப் புரிந்துபோயிற்று. அந்த மீட்டிங்குக்கு வந்திருந்த ஒரே பெண். நான் உரையை முடித்ததும் மற்றவர்கள் என்னைக் கேள்வி-களால் துளைத்தபோது, ஒரு கேள்விகூடக் கேட்காமல் பொறுமையாக நாடியில் கை வைத்தபடி அமர்ந்து நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த பெண்.

”உங்க கதைகள் படிச்சிருக்கேன். பிடிக்-கும். அதனால் வந்தேன். மற்றபடி எந்தவித இலக்கியப் பரிச்சயமும் கிடையாது.”

”ஆனா, நீங்க எந்தக் கேள்வியும் கேட்டதா ஞாபகம் இல்லியே?” என்றேன். பேச்சு முடிந்ததும் எல்லோருமே ஏதாவது கேள்வி கேட்பார்கள். கருத்து சொல்வார்கள்.

”எங்கே நான் வாயைத் திறந்தா அழுதுடுவேனோங்கிற பயம்தான் என்னைக் கட்டிப்போட்ருச்சு. அத்-தனை அந்நியர்கள் முன்னாடி அழுவதை என்னால் நினைச்-சுக்கூடப் பார்க்க முடியலை. அதான்!”

”அப்படீன்னா நீங்க ஏதோ பேச நினைச்சீங்க!”

”ஆமா. என் மனசிலே இருந்ததையெல்லாம் கொட்ட நினைச்சேன்!” – தூரத்து மலைச் சாரலில் நிலைத்தது அவள் பார்வை. டிரெயின் கிளம்பியிருந்ததை நான் உணரவே இல்லை.

ஜன்னலோரமாக எதிர் ஸீட்டில் அமர்ந்திருந்தோம். மீதம் இருந்த இரண்டு பயணிகளும் கையில் பூமியை வைத்துக்கொண்டு நாட்டு நடப்பைப் பற்றிய சர்ச்சையில் இருந்தனர்.

”அந்தக் காலகட்டத்தில் உங்க எண்ணங்களுக்கு இருந்த அர்த்தமும் அழுத்தமும் நிச்சயமா வேறுதான். இப்ப அதைக் கேட்டு பதில் தர முடியாது. உங்களுக்கும் எனக்கும் அது ஒரு இழப்புதான். ஆனா, இப்ப அதை ஒரு நாஸ்டால்ஜியாவா என்னோடு பகிர்ந்துக்கிறது ஒருவேளை உங்களுக்கு ஆறுதலா இருக்கலாம்!”

”நிச்சயமா இனிமேல் எனக்கு ஆறுதலா இருக்கப் போறதில்லே” என்று சிரித்தாள்.

”இனிமேன்னா?”

”ஏன்னா, நான் ஆறுதல் அடைஞ்சு ஜஸ்ட் இப்பதான் ரெண்டு மணி நேரமாச்சு!”

”ஐ ஸீ…” மிக லேசான அளவில்தான் என்றாலும், என் குரலில் தொனித்த ஏமாற்றத்தை அவள் கவனித்-திருக்க வேண்டும்.

கொஞ்சம் தண்ணீரைச் சரித்துக்கொண்டாள். ” ‘அவள் ஒரு பெண்’ அப்படிங்கிற தலைப்பில் நீங்க ஏதாவது கதை எழுதியிருக்கீங்களா சார்?”

”இல்லையே!”

”அப்படின்னா அந்தத் தலைப்பில் நீங்க என் கதையை எழுதலாம் சார்!”-சொல்ல ஆரம்-பித்தாள்…

”கேசவபுரம். அங்கேதான் நான் பிறந்தது. அப்பா எண்ணெய்க் கடை வெச்சிருந்தார். வியா பாரம் வியாபாரம்னு எப்பவும் கடைக்கு ஓடிருவார். அவரையும் அவர் தேவையையும் கவனிக்கவே அம்மா வுக்கு நேரம் சரியா இருக்கும்.

தாத்தாதான் என்னை வளர்த்தது. அந்த நாட்களில் அவர் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லித் தருவார். பெண் என்பவள் பொறுமையின் இருப்பிடம், சகிப்புத் தன்மையின் மறுபெயர், தியாகத்தின் சின்னம், அன்பின் ஊற்று என்று பெண்ணின் பெருமைமிகு பக்கத்தைப் பதிவு பண்ணினார். அதைத் தவிர பெண்-ணுக்குரிய சாதுர்யம், தைரியம், திடம், தேவையான வீரம் என்பதைப்பற்றியெல்லாம் மூச்சு-விடவில்லை.

துள்ளித் திரிய வேண்டிய வயசில் நான் என் தம்பியைப் பொறுப்பா ஸ்கூ-லுக்கு அழைச்சுட்டுப்போறது, அவனுக்கு விளையாட்டுக் காட்டறது, சாயந்திரம் அம்மாவுக்கு உதவியாக நின்னு அப்பம் சுட்டு தம்பிக்கு ஊட்டுறதுன்னு கவனிச்சுக்கிட்டேன். அதிலே ஒருவிதப் பெருமையும் அடைஞ்சேன். பெத்தவங்களைப் பொறுத்த-வரை, நான் வேண்டாத பெண் பிள்ளை. அவன் தவமிருந்து ஆசையோடு பெற்ற ஆண் பிள்ளை.

ஐந்தாம் வகுப்பில் 90 பர்சென்ட் மார்க் எடுத்தபோது அப்பா-வுக்கு அது ஒரு விஷயமாகவே படலை. அடுத்தாற்போல் டவுனிலிருக்கிற ஸ்கூலுக்கு பஸ் ஏறி மத்த பசங்களோட என்னை ஸ்கூலுக்கு அனுப்பணுமேங்-கிற கவலை வீட்டில் யாருக்குமே இல்லை. ஒரே வரி. ”பொம்பளைப் பிள்ளைதான, போதும் படிச்சது!”

அம்மாவிடம் அழுது அரற்றிப் பார்த்-தேன். ‘மீனா, கமலா, ராணி எல்லாரும் போறாளே’ன்னேன். ‘அப்பா எது சொன்-னாலும் நமக்கு நல்லதுக்குத்-தான் சொல்லு-வார். அவர் சொன்னபடி கேட்கணும். அதான் நல்ல பொண்ணுக்கு அடை-யாளம்’னு சொன்னாள். பரிதாபம் என்-னன்னா, அதை நம்பிட்டு நானும் வாயை மூடிக்கிட்டேன். மீனா, கமலா எல்லாம் நல்ல பொண்ணு இல்லேன்னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டேன்.

அம்மா அவளுடைய வழியில் என்னை ஓர் அடிமை-யாக மாற்றினாள். எனக்காகக் குரல் கொடுத்து என் வாழ்க்கையை நிமிர்த்துவதைவிட, என்னை அடிமையாகச் செய்வது பிரச்னையின்றி இருந்தது அவளுக்கு.

”ஆறு மாசம் வேணும்னாலும் வீட்டை அப்படியே ராஜிகிட்டே விட்டுட்டு எங்கே-யும் போய் வரலாம். பொறுப்பா பார்த்துக்-குவா!” என்பார் தாத்தா.

மத்தவங்க எப்படியோ அம்மா அடிக்கடி என்னை வீட்டைப் பார்த்துக்கச் சொல்லி-விட்டு கோயில், கச்சேரின்னு போய்விடு-வாள். தாத்தாவிலேர்ந்து தம்பி வரை பக்குவமா நான் பார்த்துக்குவேன். குடி, சூதாட்டம்னு கெட்டுப் போயிருந்த தன் அக்கா மகன் முருகேசனை நல்வழிப்படுத்த நினைச்சபோது, எங்கப்பாவுக்கு என் ஞாபகம்தான் வந்தது. என் கையில் அவரைப் பிடிச்சுக் கொடுக்-கிறதா நினைச்சு, அவன் கையில் என்னைப் பிடிச்சுக் கொடுத்தாங்க. நானும் அப்படியே நினைச்சேங்கிறதுதான் வேடிக்கை. அம்பலத்-தார் தோப்போரம் தான் எடுத்த வாந்திக்கு மேலேயே அத்தான் போதையில் விழுந்து கிடந்த காட்சி இன்னும் என் மனசைவிட்டு மறையலே. ஒரு அருவருப்பு எழுந்தபோதுகூட, ‘சே, அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது, நான் ஒரு நல்ல குடும்பப் பொண்ணு!’ன்னு நினைச்சுக்கிட்டேன்.

ஆண் என்ற அரணுக்குள் உட்கார்ந்துகொண்டு அஸ்திரங்களைத் தொடுத்தார் அவர். ஒரு பணிப்பெண், தாதி, கணிகை என்று பல பாத்திரங்கள் என் மீது திணிக்கப்பட்டன. ஆக, அவனும் திருந்தலே. நானும் வாழலை. அழுதுட்டு வந்து நின்னபோது, ‘உனக்கு சாமர்த்தியம் பத்தாது!’ன்னார் அப்பா. ‘நாமதாம்மா அனுசரிச்சுப் போகணும்!’னு அவர் தமிழில் சொன்னதையே, எனக்கு மொழிபெயர்த்துச் சொன்னாள் அம்மா.

ஏதோ சாமான் வாங்கிவந்த பத்திரிகைக் காகிதத்தில் அச்சாகியிருந்த உங்க கதையை எதார்த்தமாகப் படிச்சேன். நீரோட்டத்தில் விழுங்-கப்படும் சின்ன மீன்களின் மன ஓட்டங்களை நீங்க விவரிச்சிருந்ததைப் படித்தபோது என் மனசை எனக்கே தெரியாமல் நீங்க படிச்சிட்ட மாதிரி ஒரு படபடப்பு ஏற்பட்டது. அப்புறம் உங்க கதைகளைத் தேடிப் பிடித்துப் படிக்க ஆரம்பிச்சேன். ‘உங்க தோல்விகளுக்கு மட்டுமல்ல, சில சமயம் மற்றவர்கள் வெற்றிக்குமே உங்க அறியாமைதான் காரணம்’னு நீங்க எழுதி-யிருந்த வரிகளைப் படித்தபோதுதான் உங்களைச் சந்திக்கணும், உங்க பேச்சைக் கேட்கணும்னு ஆர்வம் ஏற்பட்டது. உங்க மீட்டிங்குக்கு வந்தது அப்பதான். இலக்கணப் பெண்ணாகத் திகழ நினைத்த நான், அந்த இலக்கணத்தைச் சரியாய்த் தெரிஞ்சுக்கலையோன்னு முதல் முதலா ஒரு சந்தேகம் மனசில் ஏற்பட்டது. அதை விடுங்க.. அது தனி சோகம்!

எனக்கு பொம்பளைப் பிள்ளை பிறந்தால் அவளை விவரமா, விவேகமா வளர்க்கணும்னு தீர்மானிச்சிருந்தேன். ஆனா, பொறந்-ததோ பையன். வளர்ந்து அவனாவது என்னை நல்லா நடத்துவான்னு எதிர்-பார்த்தேன். திமிர், ஆதிக்கம் எதுவும் இல்லாத ஓர் உதாரண ஆணாக அவனை வளர்க்க ஆன மட்டும் முயன்றேன். முடியலே. வீட்டில் எனக்கிருந்த… தப்பு, இல்லாத மரியாதையைப் புரிஞ்சிக்கிட்டு, அவனும் என்னை அதட்டினான், விரட்டினான், மிரட்டினான்.

அத்தனை கெட்ட பழக்கத்துக்கு சட்டுனு நோயில் விழுவார்ங்கிறது என் புருஷனைப் பொறுத்தவரை எதிர்பார்க்காத விஷயமில்லை. விழுந்தார். ஆனாலும், அவரு அகங்காரம் விழலே. வாழ்க்கையின் அந்தப் பகுதியையும் ஆர்ப்பாட்டமாவே அனுபவிச்சார். எனக்கு வேலைக்காரியில் இருந்து நர்ஸ் ப்ரமோஷன். அடுத்த வருஷம் ஆர்ப்பாட்டமா செத்துப் போனார். கண்ணை மூடறதுக்கு முந்தின நிமிடம் வரை என்னைத் திட்டினார். என் தாலி பாக்கியத்தைக் குறை சொன்னார். கண் ஓரத்தில் நான் அவரிடமிருந்து சுதந்திரம் அடையறேனேங்கிற ஆத்திரம் தெரிஞ்சது.

வேலையிலிருக்கிறபோதே அவர் இறந்துட்டதால அந்த வேலையைக் குடும்பத்தாருக்குத் தர்றதா சொன்-னாங்க. அதுக்கான கல்வித் தகுதி அடைய 5 வருஷம் வரை அவகாசமும் இருந்தது. படிச்சு எழுதிர-லாம்னு நினைச்சேன். மகன் விடலை. அடம்பிடிச்சு அந்த வேலையில் அவனே சேர்ந்துட்டான். கல்யாணம் ஆன பிற்பாடு வேற இடத்துக்கு மாற்றல் வாங்கிட்டு என்னை அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டான். வேற வழியில்லாம நான் இருந்த போர்ஷனையே வாடகைக்கு விட்டுட்டு மாடியில் ஒரு கீற்றுக் கொட்-டகை போட்டு அதில் காலம் தள்ள வேண்டியதாப் போச்சு.

படிக்கிறதுதான் எனக்கு ஒரே சுதந்திரமா, ஒரே சந்தோஷமா இருந்தது. ஆனா, படிக்கப் படிக்க ஆத்திரம் பிறந்து அந்த சந்தோஷத்-தையும் அனுபவிக்க முடியாமப் போச்சு. என் நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கிறபோது நான் எப்படியெல்லாம் ஏமாத்தப்-பட்டு வந்திருக்கேன்னு தெரியிறப்ப எப்படி ஆத்திரம் வராம இருக்கும்?

தாத்தா, அப்பா, கணவன், மகன் என்று வாழ்க்கை முழுதும் சுற்றியுள்ள ஆண்களால் ஏமாற்றப்பட்டு வந்திருக்கேன். ஏனென்றால் நான் பெண்! என் அறியாமையைப் பயன்படுத்தி அவங்க சுகம் தேடிக் கொண்டாங்க. இதைப் புரிஞ்சிக்கிட்டபோதுதான் அந்த ஆசை என் மனசில் மொட்டுவிட்டிருக்க வேண்டும். வாழ்க்-கை-யில் ஒரு ஆம்பளையையாவது நான் ஏமாத்-தணும்! அதுக்கு ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காதான்னு பார்த்திட்டிருந்தேன்.

அந்தச் சமயத்தில்தான் என் மாமனார் வந்தார். ஏற்கெனவே அவருக்கும் எனக்கும் அவ்வளவா சினேகம் கிடையாது, என் கணவர் என்னை தனியே அழைச்சிட்டு வந்ததால். ‘ராஜி, இப்படி ஆயிட்டியேம்மா! என் மகனால உன் வாழ்க்கை பாழாப்போச்சே!’னு என் கஷ்-டங்-களையெல்லாம் கேட்டார். மகனுடைய நடத்தைக்குப் பரிகாரம் செய்ய விரும்புவதாகச் சொன்னார்.

”போன மாசம்தான் ஆரம்பிச்சேன் இந்த கம்பெனியை. நல்லாப் போகுது. மேனேஜரை வீட்டுக்கு அனுப்பிட்டேன். நீ பார்த்துக்க. உனக்கு இதுகூடச் செய்யாட்டி நான் மனுஷனே இல்லை.”

”என்னால் எப்படி…” தயங்கினேன். ”அதெல்லாம் நான் கத்துத் தர்றேன்” என்று அழைச்சிட்டுப் போய் வேலை கொடுத்தபோது எனக்கு ஆச்சர்யம்! பாசம், அன்பு உள்ள ஒரு ஆம்பளையை முதல் தடவையா பார்த்த ஆச்சர்யம். ஆனா, அது கொஞ்ச நாள்கூட நீடிக்கலே.

அடுத்த மாசமே அவர் சுயரூபம் தெரிஞ்சுபோச்சு. பர்சேஸ§க்காக ஊர் ஊரா அவர் அலையும்போது கம்பெனியைப் பார்த்துக்க நம்பகமான ஓர் ஆள் சீப்பாகத் தேவைப்பட்டது அவருக்கு. என்னைப் பயன்படுத்திக்-கிட்டார். மத்தவங்க நேருக்கு நேர் ஏமாத்தினாங்க, இவர் கொஞ்சம் மறைமுகமா!

கொதிச்சுப் போனேன். ஏற்கெனவே என் மனசில் உறைஞ்சிருந்த ஆசை இன்னும் உறுதிப்பட்டது. சந்தர்ப்பத்தை நானே உருவாக்கிக்கொண்டேன். அடுத்த முறை பர்சேஸ§க்கு நானே போறேன்னேன். ‘நீ எப்படீம்மா?’ ‘3 ஆயிரம் ரூபாய்க் கட்டுதானே, பேப்-பரில் சுற்றிப் பையில் வெச்சிட்டு போயிரு-வேன்’னேன்.

பணத்தோட கிளம்பினதும் முதல் வேலையா, வழியில் லஷ்மணபுரியில் இறங்கி அங்கிருக்கிற ஓர் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் அந்த 3 லட்ச ரூபாயையும் அவர் பேரிலேயே நன்கொடை கொடுத்தேன். ரசீதை அவருக்கே அனுப்பச் சொல்லிவிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தேன்.

இனி, எர்ணாகுளம் போய் இறங்கினதும் கம்பெனி வீட்டுல லெட்டர் எழுதிவெச்சுட்டு காணாமப் போயிருவேன். கோழிக்கோடு பக்கம் எங்கேயாவது போய் வீட்டு வேலை, சமையல் வேலை செய்து பிழைச்சுக்குவேன். வாழ்க்கையில் நான் ஆசைப்பட்ட ஒரு விஷயமாவது நிறைவேறிவிட்டது. அதைத்தான் முதல்ல சொன்னேன்!” – அவள் சொல்லி முடித்தாள். நான் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது அவள் இருமினாள். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து இருமினாள். தண்ணீரை ஊற்றி நீட்டினேன். குடித்தாள்.

”வாழ்க்கை முழுவதும் ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டேன் இல்லையா? அதான் ரொம்பவும் முடியலே!” என்றாள் திக்கித் திணறி.

”இந்தச் சமயத்தில் இப்படி ஒரு காரியத்தைச் செய்துட்டீங்களே? உங்க மாமா போலீஸ் கீலீஸ்னு போயிட்டா?”

”சிரமம்தான். இப்ப என் உடல்நிலை இருக்கிற தினுசுக்குப் பிரச்னைதான். ஆனா சுகந்தன் சார், என் வாழ்க்கையில் இது நாள்வரை எப்பவுமே உணர்ந்திராத ஒரு சந்தோஷத்தை இப்ப அனுபவிச்சுட்டு இருக்கேன். எத்தனை பரவசமா இருக்கு தெரியுமா? இதை நான் எப்படி இழப்பேன்?” – பேசியபடியே கண்ணயர்ந்து-விட்டாள்.

எர்ணாகுளம் ஸ்டேஷனில் வண்டி நின்றது. இருமிக்கொண்டேதான் எழுந்தாள். அவள் செல்ல வேண்டிய இடத்துக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றேன். ஆட்டோவை விட்டு இறங்கியவுடன், என் தோளில் மயங்கிச் சரிந்து விழுந்தாள். டாக்டரை வரச் செய்தேன். டாக்டர் போனவுடன், அந்த எஸ்.எம்.எஸ். வந்தது, அவள் செல்லில். அவள் மாமாதான் கொடுத்திருந்தார்.

பளீர் என்றிருந்தது விஷயம். ‘பர்சேஸ் வேண்டாம். பணத்தை அப்படியே ஏதாவது தர்ம ஸ்தாபனத்துக்குக் கொடுத்துவிடலாம். பப்ளிசிட்டி தேவைப்படுது. எலெக்ஷனில் நிற்க திடீர் உத்தேசம்!’

முகத்தில் அறைந்த யதார்த்தமாய் அந்தச் சேதி! ஆக, அவர் விரும்பியதையே அவள் அறியாமல் செய்து-விட்டிருக்கிறாள்!

என்ன செய்வது நான்?

வந்த சேதியை அவளிடம் சொல்வதா வேண்டாமா? கேள்வி என் முன் விசுவரூபமாய். சொன்னால் வாழ்க்கையில் அவளுக்குக் கிடைத்த ஒரே சந்தோஷமும் போய்விடும்! சொல்லாவிட்டால் ஒரு குற்றவாளி என்ற நினைப்புடன் அவள் ஒளிந்தே வாழ நேரிடும்.

அவள் நிம்மதியைக் குலைப்பதா, ஒளிந்து வாழத் தூண்டுவதா? என்னால் ஒரு முடிவுக்கு வரமுடிய-வில்லை.

– 29th அக்டோபர் 2008

Print Friendly, PDF & Email

6 thoughts on “அவள் ஒரு பெண்!

  1. ரொம்ப சூப்பர். நல்ல கதை. எல்லா பெண்களும் படிக்கவேண்டிய கதை. முடிவில் உங்கள் கற்பனை திறன் மிகவும் அருமையாக இருந்தது.

  2. மிக நன்று. ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய கதை. அதற்காக, `பழி தீர்க்கிறேன்’ என்று புறப்பட வேண்டாம். ஆரம்பத்திலேயே விழித்துக்கொள்ள வேண்டும்.

  3. nice ஸ்டோரி அண்ட் யோசிக்க வைக்கும் கிளைமாக்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *