கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 32,655 
 
 

[ஓர் இளம் தம்பதியினரின் மென்மையான உணர்வுகளை–ஊடல்களை சித்தரிக்கும் இனிமையான சிறுகதை.]

(’மனைமாட்சி’ என்று நான் தலைப்பிட்டிருந்த இந்தக்கதை, ’அவன் அவள்…’ என்ற தலைப்பில், கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு சி.க. இதழில் பிரசுரமாகியது; அட்டைப்படக்கதையாக என்று ஞாபகம். இங்கு நான் பதிவது எடிட் செய்யப்படாத முழுக்கதை.–ரமணி)

ஹைதராபாத் நாம்பள்ளி ஸ்டேஷனில் அவளை நிம்மதியாக வழியனுப்பிவிட்டு அவன் வெளியில் வந்தபோது மழை மெலிதாகத் தூறிக்கொண்டிருந்தது…

என்ன கீத், என்ன தேடறே? துணியெல்லாம் இறைஞ்சு கிடக்கு?

ஒண்ணும் தேடல. நான் ஊருக்குக் கிளம்பறேன்.

ஊருக்கா? எப்போ?

இப்பவே! இன்னிக்கு மெட்ராஸ் எக்ஸ்ப்ரஸ்ல.

டிக்கெட்?

ஆல்ரெடி புக்ட்.

அவன் முகத்தில் ஜிவ்வென்று கோபம் ஏற, அதை கவனித்துவிட்டுத் தானும் கோபத்துடன் வெடித்தாள்.

நீங்கதான் நாலஞ்சு நாளா என்ன ஊருக்குப் போகச்சொல்லிக் கத்திண்டிருக்கேளே? அதான் உடனே நானே போய் டிக்கெட்லாம் புக் பண்ணிட்டேன். நா போறேன். நீங்க நிம்மதியா இருங்கோ…

நானும் கொஞ்சநாள் நிம்மதியா இருப்பேன்! என்றாள் தொடர்ந்து மெல்லிய குரலில்.

ஓகே! இன்னிக்கு சனிக்கிழமை அரைநாளாங்கண்டு நான் சீக்ரமே வந்தேன். இல்லாட்டி நீயே போயிருப்பல்ல? ஸோ, நான் ஸ்டேஶனுக்கு வரவேண்டியதில்லை?

உங்க இஷ்டம். பொண்டாட்டியத் தனியா ட்ரெயின்ல அனுப்பறேள். ஸ்டேஷனுக்கும் வராட்டா என்ன குறைஞ்சு போய்டப்போறது?

வாட் நான்சென்ஸ்! (எவ்ளோ திமிர் உனக்கு?) நானா உன்ன தனியா போகச் சொன்னேன்?

பின்ன என்னவாம்…? நானும் ஒரு வாரமாக் கேக்கறேன், டிக்கட் எடுத்துக்குடுங்கோன்னு. நீங்க என்னடான்னா, இப்ப என்னால வரமுடியாது, நீயே போய்க்கோன்னுட்டேள்… ’படிச்சவதானே, டிக்கெட்கூட புக் பண்ணத் தெரியாது?’ன்னு ஏளனம் வேற. எனக்குமட்டும் ரோஷம் இருக்காதா என்ன? எனிவே, ஐ நீட் எ சேஞ்ஜ். ப்ளீஸ், லெட் மி கோ.

உள்ளூர சந்தோஷம் என்பதால் அவன் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை.

*** *** ***

சில்லென்று வீசிய காற்றில் சில நீர்த்துளிகள் திசைமாறி முகத்தில் படிந்து கோலமிட, வெயில்-கண்ணாடியின் விளிம்புகள் நனையத்தொடங்கி அதை மெல்லக் கழற்றிவிட்டு, இமை மயிர்களில் ஒன்றிரண்டு முத்துக்கள் குதிர்ந்து மாலைச் சூரிய கிரணங்கள் பட்டு டாலடிக்க, மெலிதாக விசிலடித்துக்கொண்டு வந்தவனை, ஸ்கூட்டர்களைப் பார்த்துக்கொள்ளும் பையனின் குரல் தடுத்து நிறுத்தியது.

“டோக்கன் ஸாப்.”

கையிலிருந்த புத்தகங்களைக் காரியரில் போட்டுவிட்டு, மீண்டும் வெயில்-கண்ணாடி அணிந்துகொண்டு, அலட்சியமாகச் சாவிபோட்டு பஜாஜ் சேத்தக்கை ஒரு உதையில் ஸ்டார்ட் செய்துவிட்டுக் கூறினான்:

“டோக்கன்? மேரேகோ குச் நஹி தியா.”
(டோக்கனா? என்னிடம் ஒன்றும் கொடுக்கவில்லை.)

“சப்கோ தியா ஹ சாப்! டோக்கன் வாபஸ் கர்கே காடி நிகாலோ.”
(எல்லொருக்கும் கொடுத்தோம் ஐயா~ டோக்கன் திருப்பிக்கொடுத்துவிட்டு வண்டியைக் கிளப்பு.)

பையனின் கைகள் ஸ்கூட்டரைத் தீண்ட எரிச்சலுடன் தட்டிவிட்டுவிட்டுக் கூறினான்:

“அரே, மைன் போலா ந? ஹட் ஜாவோ! முஜே ஜல்தி ஜானா ஹ…”
(ஏய், நான் சொன்னேலில்ல? தள்ளிப்போ! எனக்கு சீக்கிரம் போகவேண்டும்.)

இவர்கள் உரையாடலைப் பார்த்து பீடித்துண்டை ஒரு முறை பலமாக உறிஞ்சிப் புகைவிட்டுத் தரையில் விசிறி உமிழ்ந்துவிட்டு ஒருவன் மெதுவாக வந்தான்.

“சாப்? ஆப்கோ மாலும் ஹ ந? டோக்கன் வாபஸ் கரோ ஔர் காடி லேகே ஜாவோ.”
(ஐயா, உங்களுக்குத் தெரியும் இல்லையா? டோக்கன் திரும்பக்கொடு, வண்டியை எடுத்துச் செல்.)

அவனை வெறுப்புடன் பார்த்துவிட்டுக் கூறினான்: “சுனோ பயி, மைன் காடி சோட்கே ஓ சோட்டுகோ சாரணா தியா. மகர் ஓ மேரேகோ குச் நஹி தியா, ஸம்ஜே? மைன் ஜூட் போல்ரா ஹூம் க்யா?… அச்சா, அப் க்யா கர்னா போலோ.”
(கேள் தம்பி, நான் வண்டியை விட்டுவிட்டு அந்தச் சிறுவனுக்கு நாலணா கொடுத்தேன். ஆனால் அவன் எனக்கு ஒன்றும் தரவில்லை, புரியுதா? நான் பொய் சொல்கிறேனா என்ன?…நல்லது, இப்போது என்ன செய்யவேண்டும் சொல்.)

அவர்களது ஆலொசனையின்பேரில் அவன் தன் பெயர், (பொய்) விலாசம், ஸ்கூட்டர் நம்பர் விவரங்களைக் கொடுத்துவிட்டு, டோக்கனுக்காக ஓர் எட்டணா தத்தம் செய்துவிட்டு, ஸ்கூட்டரை மறுபடியும் உயிர்ப்பித்து லாவகமாகத் திருப்பிக்கொண்டு விரைந்தான்.

*** *** ***

பப்ளிக் கார்டனுக்கு எதிரிலுள்ள விசாலமான சாலையில் விரைந்தபோது, மழைத்துளிகள் அவன் காலருக்குள் குறுகுறுத்தன. மூக்கு நுனிகளைச் சிலிர்க்கச் செய்தன. காது மடல்களைச் சில்லிட வைத்தன. மீசையில் ஓடிப் புல்லரித்து அதை நனைந்த கம்பளிப் புழுவாக்கின. இன்னும் மணிக்கட்டில், கை விரல்களில், கால் நகங்களில், நகங்களின் இடுக்குகளில் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் பட்டுப் புன்னகைக்க வைத்தன…

கொஞ்சம் வேகமாத்தான் போனா என்னவாம், மழை பெய்யறதில்ல?

என்ன கீத் கோவிச்சிக்கற? எவ்ளோ ப்யூட்டிஃபுல் ட்ரிஸ்ஸில் பத்தியா? கல்யாணப் பந்தல்ல பன்னீர் தெளிக்கறமாதிரி ஆனந்தமா இல்ல?

அது சரி! ஆரம்பிச்சிட்டீங்கில்ல?

கோவத்லகூட நீ எவ்ளோ அழஹ்ஹா இருக்க, தெரியுமா? லுக், உன்னோட வகிடுலேர்ந்து முழுசா ஒரு நீர்முத்து மெதுவா இறங்கறது! உனக்கு நெத்திச்சுட்டி போட்டாப்ல தெரியர்து இந்தக் கண்ணாடில!

கொஞ்சம் வேகமாப் போங்களேன், ப்ளீஸ்! உங்க ரசனையெல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம்.

டார்லிங், உனக்கு மழைன்னா பிடிக்காதா? இந்த லைட் ட்ரிஸ்ஸில்கா இப்படி அல்டிக்கற? கீதா, நீ சின்ன வயசில மழைல பேப்பர்போட் விட்டதில்ல? வாசல் திண்ணைல உக்கார்ந்து தகரக்குழாய் வழியா தண்ணி சொடசொடன்னு கொட்றதப் பாத்ததில்ல? மாடி ஜன்னல் வழியா எலெக்ட்ரிக் வயர்ல ரெய்ன் ட்ராப்ஸ் ரிலே ரேஸ் போறதக் கவனிச்சதில்ல? அட்லீஸ்ட், ’ஹௌ ப்யூட்டிஃபுல் இஸ் த ரெய்ன்!’ போயம்கூடப் படிச்சதில்லையா? யார் எழுதினது சொல்லு?

மழை பிடிக்கும்னா அதுக்காக எருமமாடு மாரியா நனைவா? உங்களுக்கு மழை பிடிக்கறதும் போதும், அதனால எனக்கு ஜலதோஷம் பிடிக்கறதும் போதும்.

எனக்குப் பைத்தியம் பிடிக்காம இருக்கறது பெரிய காரியம் என்று நினைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது.

RITZ HOTEL –> என்று பெயர்ப்பலகை வழிகாட்டும் சரிவான சாலையில் ஸ்கூட்டர் ஹம்பண்ணத் தனியாக ஏறி எதிரே சாலைவீழலில் ரிட்ஸ் ஹோட்டல் கட்டிட அழகை வியந்து, இடப்புறம் திரும்பி, வேகத்தடைகளில் நிதானித்து எம்.எல்.ஏ. ஹாஸ்டலைக்கடந்து, ’ஹைட்-இன் ரெஸ்டாரென்ட்’ (கொஞ்ச நாளைக்கு ’ஹைட்-அவுட் ரெஸ்டாரென்ட்’டாக இருந்ததாக ஞாபகம்) என்று மனதுக்குள் ஒருமுறை அனிச்சையாகப் படித்து அதிசயித்துவிட்டு, மறுபடியும் இடப்புறம் திரும்பி ஹோட்டல் சரோவருக்குள் நுழைந்தபோது மரங்கள் காற்றில் சிலிர்த்து பன்னீர்ப் பூக்களைப் பொழிந்தன.

வெயிட்டர் பாலையாவின் கனிவான உபசரிப்பில் ஆவி பறக்கும் காஃபியை நுகர்ந்து சுவத்துக் குடித்துக் கணிசமாக ட்ப்ஸ் வைத்துவிட்டு அவன் ப்ரிட்டிஷ் கவுன்ஸில் நூலகத்தை அடைந்தபோது கடிகார முள் ஐந்தைத் தொட்டது.

கமான், கீத்! புக்ஸ் மாத்தியாச்சு, போலாம். என்ன டெர்ரிஃபிக் லைப்ரரி பத்தியா?

ஹாய், அப்படி என்ன ஸ்வாரஸ்யமா ’பஞ்ச்’ படிக்கறே? எங்கே காட்டு?… மை காட்! கீதா, என்ன இங்க வந்து தூங்கிண்டு! கமான், வேக்கப்! வேக்கப் ஐஸே! சே, மானம் போறது, வா போலாம்.

கெடு முடிந்த புத்தகங்களைத் திருப்பிக்கொடுத்து டிக்கெட்களைப் பையில் திணித்துக்கொண்டு முதலில் ரெக்ரியேஷன் ஷெல்ஃபில் கண்களை ஓடவிட்டபோது அந்தப் புத்தகம் தனியாகப் படுத்திருந்தது.

‘An Opening Repertoire for an Attacking Club Player’

கைகள் ஆவலுடன் புத்தகத்தை நாடியபோது பின்னால் குரல் கேட்டது.

“எக்ஸ்க்யூஸ் மி, ஐ’ம் டேக்கிங் தட் புக்!”

“ஐ’ம் சாரி.”

மூக்கு நுனிவரை வந்துவிட்ட கண்ணாடியை நளினமாகப் பின்னால் தள்ளிவிட்டுப் பின்னல்களைச் சிலிர்த்துக்கொண்டு கொஞ்சம் யோசித்தவள் ரோகிணி காடில்கரின் மறுபதிப்பாகத் தோன்ற மனதுக்குள் பாராட்டியபடியே அவள் கையிலிருந்த புத்தகத்தை நோக்கினான்.

‘Can Machines Play Chess?’

அட்டையில் ஓர் இயந்திர விரல்களின் பிடியில் ஒரு பான் தொங்கியது.

“குட் யூ ஸ்பேர் மி அட்லீஸ்ட் தட் புக்?”

“வெல், ஒகே! யு டேக்கிட்.”

“தாங்க் யு!”

“யூ’ர் வெல்கம்.”

என்ன, நேரம்காலம் தெரியாம எப்பப் பாத்தாலும் செஸ்தானா? அதுவும் தனியாப் பைத்தியக்காரன் மாதிரி! ஒண்ணு செஸ், இல்லேன்னா புக்ஸ். சாயங்கால வேளைல எங்கயாது சினிமா கினிமா போனோம் வந்தோம்னு கிடையாது.

ஓ கமான், டார்லிங்! பொய்மட்டும் சொல்லப்டாது… நைட் இன்ட்டு பிஷப், பான் இன்ட்டு நைட்…முந்தாநாள்கூட நா உன்ன மூவிக்கூட்டிண்டுபோல? என்ன படம் அது?…பான் ரூக் ஃபோர்–

பான் ரூக் ஃபோர் இல்ல.

ஸாரி, ம்… ’கோபால்ராவ்காரு அம்மாயி!’ ’சுஜாதா, ஐ லவ்யு சுஜாதா! நிஜங்கா, ஐ லைக் யு சுஜாதா~…ஆ…ய்ய்ய்…லவ்யூ, கீதா, கீதா, கீதா!

விடுங்கோ, இந்த ஊர்ல வேறென்ன பண்றது சொல்லுங்கோ? உங்களுக்கானா ஆஃபீஸ்-செஸ்-நாவல்ஸ்னு பொழுது போய்ட்றது. இல்ல, ஒயம்ஸீஏ, க்ளப்னு ஃப்ரெண்ட்ஸ்ஸோட போயிடறேள்! நான்தான் தனியா இருவத்நாலு மண்ணேரமும் வீட்லயே அடஞ்சுகிடக்க வேண்டியிருக்கு.

நீ சொல்றதுலயும் ஒரு பாயின்ட் இருக்கு. எனிவே, என்ன மூவி போலாம் சொல்லு.

எனி டாம் மூவி! வீட்ல போரடிக்குது.

ஓகே, கெட் ரெடி. ஃபர்ஸ்ட் ஷோக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு. நீ ரெடியாறதுக்குள்ள நா இந்த கார்ப்போவ் கேம முடிச்சிருவேனாம்–வாவ், நைட் சாக்ரிஃபைஸ்!

நூலகத்தின் விசாலமான ரெஃபரன்ஸ் செக்ஷனில் கண்ணுக்கு இதமாக வழியும் வெளிச்சத்தில் நிதானமாக உட்கார்ந்து படிக்கப் பிடித்திருந்தது. ’ரைட்டர்ஸ் அன்ட் தேர் ஒர்க்ஸ்’, ’ஒன்டர்ஸ் ஆஃப் ஃபோட்டாக்ரஃபி’ போன்ற புத்தகங்களைக் கொஞ்ச நேரம் மனம் போனபோக்கில் மேய்ந்துவிட்டு, கடன் வாங்கிய புத்தகங்களை கவுன்டரில் முத்திரை வாங்கிப் பின் ரிஸப்ஷனில் சரிபார்த்து நன்றி கூறிவிட்டு வெளியில் வந்தபோது மழை முழுவதும் நின்று வானவில் பளிச்சிட்டது.

*** *** ***

மற்றொரு மாலையில் அவனுக்குப்பிடித்த டாங்க்-பந்த் சாலையில் ஸ்கூட்டரில் வலம்வந்தபோது ஹுசெய்ன் சாகர் ஏரியில் பரந்திருந்த வாட்டர் ஹ்யாஸிந்த்கள் போல மனக் கண்ணுக்கு எட்டயவரை கீதாவின் நினைவுகள் பிடிவாதமாகத் தொடர்ந்தன.

எனக்கு இந்த ஊர்லயே ரொம்பப் பிடிச்சது, இந்த இடமும் பிர்லா மந்திரும்தான். நல்ல்ல ஓபன் ஸ்பேஸ். இங்கேர்ந்து பாத்தா பிர்லா மந்திர் எவ்ளோ அழகாயிருக்கில்லே! லுக்! தூரத்ல ஒரு ப்ளேன் கண்சிமிட்டிண்டே பேகம்பேட் ஏர்போர்ட்ல இறங்கறது! ஈவன் அது ரன்வேல ஓடறதுகூடத் தெரியறது பாருங்கோ! இதோ, மறுபடி டேக் ஆஃப் ஆறது! ஏதோ டிரெய்னிங் ஃப்ளைட் போல.

ஏன் கீதா, சாலார்ஜங் மியூசியம், நேரு ஃஜூ பார்க்லாம் பிடிக்கல?

ஐய, அறுவை! அதெல்லாம் சின்னக் குழந்தைகளுக்குத்தான். எவ மணிக்கணக்கா அலைவா? கால் விண்ட்ரும்.

ஆனா, அந்த மியூசியத்ல இருக்கற சில ஓவியங்கள், சில சிற்பங்கள், இன்னும் பல வஸ்துக்கள்–எல்லாம் ஃபென்டாஸ்டிக், கீதா. உதாரணமா அந்த ’வெயில்ட் ரிபெக்கா’ மார்பிள் சிற்பம், ’லேடி இந்த பாத்’ ஓவியம், ’வெனிஷியன் லாண்ட்ஸ்கேப்’, ’ஸ்டில் லைஃப்’, பலவிதமான கடிகாரங்கள், பீங்கான் பொருட்கள்–எல்லாம் பியூட்டிஃபுல்.

எனக்கு அவ்வளவாப் பிடிக்கல. ஷியர் வேஸ்ட் ஆஃப் டைம். பொம்பளை குளிக்கறதப் படம் போடறது என்னதான் கலையோ தெரியலை.

உனக்கு என்னதான் பிடிக்கும்? ’பொதுவாக எம்மனசு தங்கம்’னு ஆம்பளைக் குரல்ல அபிநயத்தோட பாடப்பிடிக்கும், கேஸட்டப் போட்டுண்டு! அப்புறம் பக்கத்தாத்துப் பொண்ணோட ஓயாம வம்படிக்கப் பிடிக்கும், புருஷன்காரன் வந்ததுகூடத் தெரியாம! இல்லேனா ஓயாம வீட்டை ஒழிக்கறேன், தண்ணிக்குப் போறேன்னு எடுபிடி வேலை செய்யப் பிடிக்கும். சே! நீ இவ்வளவு தூரம் ’ப்ளெய்ன் கர்லா’ இருப்பேன்னு நா எதிபார்க்கலதான்.

வாட் நான்சென்ஸ்! நீங்கமட்டும் ’மொஹெ பூல்கயா சாவரியா’ன்னு லதா மங்கேஷ்கர இமிடேட் பண்றேன் பேர்வழின்னு அழுமூஞ்சிக் குரல்ல பாடறதில்லையாக்கும்? சாவறேன் வாழறேன்னு என்னதான் பாட்டோ? அனாவசியமா ஒருத்தரை சொல்லக்கூடாது. நா ஒரு பத்துநாள் ஊர்ல இல்லாட்டா ஐயாவோட வண்டவாளம் தெரியும்!

ஹாப்பியா இருப்பேன், ஜம்முனு சரோவர்ல சாப்டுண்டு, சங்கீத்ல இங்லீஷ் சினிமா பாத்துண்டு, ஆர்தர் ஹெய்லி படிச்சிண்டு, அப்புறம், செஸ் விளையாடிண்டு!

மங்கிய மாலைப்பொழுதில் பளிச்சென்று நியான் எழுத்துக்கள் ஒளிர நிற்கும் லிபர்டி தியேட்டரின் தூரத்து அழகையும் அதன் சாதகமான இட அமைப்பையும் (எந்தப் படம் போட்டாலும் கூட்டம்) மனதுக்குள் பாராட்டியபடியே ஸ்கூட்டரில் விரைந்து அபிட் சர்க்கிள் வழியாக அவன் ஜெயா இன்டர்நேஷனல் ஹோட்டலை அடைந்தபோது அந்த ஏஷியன் விமன்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடங்கி வழக்கம்போல் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

காலடிகளின் சலசலப்பையும், கயிறுகளில் தவழும் ஆர்வக் கரங்களையும் பொருட்படுத்தாமல் ப்ளாக் காஃபியைச் சுவைத்தபடியே, மடியில் ஸ்கோர்பேட் தூங்க, சாய்வு நாற்காலியில் மெலிதாக ராக் செய்தபடி காதில் குழையாட ரோஹிணி காடில்கர் யோசித்துக் கொண்டிருக்க, எதிரில் பங்க்ளா தேஷ் அழகி மெஹ்ஃபூஸா இல்ஸாம்.

கீதா, இங்க இருக்கற செஸ் ப்ளேயர்ஸ்ல யார் ரொம்ப அழகு சொல்லு பார்க்கலாம்?

அதான் உங்களப் பாத்தாலே தெரியுதே? உண்மையான செஸ் அபிமானிகள் எல்லோரும் ரோஹிணி, ஜெயஶ்ரீ டேபிளுக்கு முன்னால கூட்டமா நின்று பாக்கறாங்க. நீங்க என்னடான்னா வெச்ச விழி வாங்காம இவளையே பாத்துண்டிருக்கேள், ரொம்ப நேரமா! அஃப்கோர்ஸ், ஷி’ஸ் பியூட்டிஃபுல். பேர்தான் வாயில நுழையல.

டோன்ட் பி ஸில்லி. ஐ வான்ட் டு என்கரேஜ் ஹர். அவ மட்டும் ஒரு ஹிந்துவா இருந்து முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்நேரம் உனக்கு பதில அவ இங்க நின்னிட்டுப்பா.

போறும் போறும், பைத்தியம்தான் பிடிச்சிருக்கு! நான்கூட செஸ்ல இவளை ஜெயிச்சிருவேன் போலிருக்கு. ரூக்குக்கு நேரே க்வீன் இருந்தா, பெட்டர் மூவ் யுவர் க்வீன் எர்லின்னு ஒரு பிகின்னருக்குக்கூடத் தெரியும். லுக்! செக் அன்ட் க்வீன் காலி!

அசந்துவிட்டான்!

கீதா உனக்கு இவ்ளோதூரம் செஸ் தெரியுமா என்று வாஞ்சையுடன் வினவியதற்கு மௌனம்தான் பதிலாகக் கிடைத்தது.

*** *** ***

ரோஹிணி காடில்கர் அவன் நினைத்த விதத்தில் காய்களை நகர்த்தியதில் அவனுக்குத் தன் செஸ்மீது நம்பிக்கை அதிகரித்தது. வெகு சீக்கிரமே அவள் அந்த ரவுண்டில் ஜெயித்து விஸ்ஃபரில் எழுந்த பாராட்டுகளுக்குப் புன்னகையில் நன்றிகூறிவிட்டு வெளியில் வந்தபோது அவன் ரோஹிணியை சந்தித்து, அதுவரை அவள் அந்த டோர்னமென்டில் எவரிடமும் தோற்காமல் இருந்தது குறித்துப் பாராட்டி ஆட்டோக்ராஃப் பெற்றுக்கொண்டு வழக்கம்போல் ஹோட்டல் சரோவருக்கு விரைந்தான்.

வெயிட்டர் பாலையா காத்திருந்து வரவேற்று இதமாக உபசரித்ததில் காலிஃப்ளவர் கறியும், சுள்ளென்ற ரசமும், தாராளமாக உள்ளே சென்று மறையக் கடைசியில் ஒரு ஸ்லைஸ் கஸாட்டா ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது ஹோட்டல் சரோவர் ஒரு நாளைய கடினமான உழைப்புக்குப்பின் எழுந்து கொட்டாவியுடன் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது.

ஐஸ்கிரீம்லயே எனக்கு ரொம்பப் பிடிச்சது கஸாட்டாதான். ஃப்ர்ஸ்ட் க்ளாஸ்! வெலதான் அஞ்சு ரூவா சொல்றான். இல்லேனா இன்னொண்ணுகூடச் சாப்பிடுவேன். நீங்க வேஸ்ட் பண்ணிடாதீங்கோ.

சாப்டேன் டார்லிங், வெயிட்டர்!

ஐயோ, வேண்டாம்! ஐஸ்கிரீமுக்கு மட்டும் பத்து ரூவாயா? மூணு கிலோ அரிசி வாங்கலாம்.

இந்த மாதிரி சந்தர்பங்கள்ல பணம் பெரிசில்ல கீதா. டெய்லியா ஐஸ்கிரீம் சாப்டப் போறோம்?

நீங்க ஏற்கனவே செலவாளி, பைசா கைல தங்காது. கொஞ்சம் கோடி காமிச்சாப் போறும், வாரி இறைச்சிடுவேள். நீங்க ப்ரம்மச்சாரியா இருந்தபோது டிப்ஸுக்கே மாசம் நூறு ரூவா செலவழிச்சிருப்பீங்க போலிருக்கே? ஒண்ணார் ரூவா டிப்ஸ் ரொம்ப ஜாஸ்தி–

ஷ், கீதா! பாலையாவுக்குத் தமிழ் தெரியும்.

கஸாட்டாவின் வண்ணப் பூச்சுக்களை ஸ்பூனால் மெல்ல வருடியபோது இன்னொரு கீதா, எல்லோருக்கும் பொதுவாக ஒரு தடவை நமஸ்கரித்துவிட்டு அவனுக்கெதிரில் தலையைக் குனிந்துகொண்டு உட்கார்ந்தாள்.

’மை காட், ஷி’ஸ் பியூட்டிஃபுல்!’ என்று மலைத்தபோது தங்கையின் தூண்டுதலின்பேரில் அவள் அவனை ஒருமுறை ஏறிடக் கண்கள் சந்தித்தன. மனதில் நிலைத்தன.

கீதாவின் குரலில் கொஞ்சம் கட்டை ஸ்ருதி ஒலித்தாலும், அந்த ’என்ன தவம் செய்தனை’யின் வார்த்தை சாகசங்களைத் தெளிவான உச்சரிப்புகளுடன் அவள் தன் குரலில் காட்டியபோது கைகள் அவனை அறியாமல் தாளம்போட்டன.

மீரா பஜன் தெரியுமா என்று கேட்க நினைத்துக் கேட்கவில்லை.

ஏண்டா வாசு! பொண்ணை உனக்குப் பிடிச்சிருக்கா? பாத்துட்டுவந்து நாலு நாளாகுது. அன்னிக்கே கேட்டதுக்கு அப்புறம் சொல்றேன்னுட்டே! ஏதாவது பதில் எழுதணுமோன்னோ, இல்லேனா நல்லார்க்காது.

ஆர்தர் ஹெய்லியின் பக்கங்களுக்கு நடுவில் கீதாவின் கலர்ப் புகைப்படத்தை ஸ்வாரஸ்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தவன் அவசரமாக மூடிவிட்டு,

நீ என்னம்மா சொல்ற? அப்பா என்ன சொல்றார்? ஒங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கா? டெர்ம்ஸ்லாம் ஒத்துவரதா?

நாங்க ரெண்டுபேரும் அன்னிக்கே சரின்னுட்டோமேடா? மனுஷா பாக்கறதுக்கு நல்லவாளா இருக்கா, பொண்ணும் லட்சணமா இருக்கா, வேறென்ன வேணும்?

ஓகேம்மா! என்னோட ப்ரின்ஸிபிள், லைஃப்ல ஒரே பொண்ணத்தான் பாக்கணும், அவளையே கல்யாணம் பண்ணிக்கணும். இவள் நல்லாதான் இருக்கறமாதிரி தோண்றது. சரி, மேலே ப்ரொஸீட் பண்ணுங்கோ. உங்களுக்கு, ஜானாக்கெல்லாம் பிடிச்சிருந்தா சரி.

ஜானாவும் அன்னிக்கே ஒகே பண்ணிட்டா. சரி, நா அப்பாட்ட சொல்லிக் கடுதாசுபோட ஏற்பாடு பண்றேன். ஃபோட்டோ கீழே விழுந்துடுத்து பார், எடுத்து பத்ரமா வெச்சுக்கோ.

*** *** ***
லிபர்டியில் மாட்னி ஷோ பார்த்துவிட்டு அவன் களைப்புடன் விட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டுப் பத்திரிகைகளைப் புரட்டியபோது சுஜாதா குமுதத்தில் விடைபெற்றுக்கொண்டு சாவியில் அறிமுகமாகி விகடனில் தொடந்துகொண்டிருந்தார், இதயத்தில் வரவிருந்தார். மேசையில் மணியன் மாத இதழில் போஸ் கொடுத்துக்கொண்டு காத்திருந்தார். பக்கத்தில் கையடக்கமான ஃபோட்டோ ஸ்டான்டில் கீதா!

உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும். இருந்தாலும் தயவுபண்ணி தெனம் ஸ்வாமி விளக்க மட்டும் ஏத்தி வைங்கோ! முடிஞ்சா ரெண்டு ஊதுவத்தியும் கொளுத்தி வைங்கோ, கொசு வராது.

ரைட், செய்யறேன்.

டெய்லி காலைல முடிஞ்சா ஏதாவது டிஃபன் பண்ணி சாப்பிடுங்கோ. காஃபிக்கு ப்ரூ வாங்கி சமையலறை ஷெல்ஃப்ல வெச்சிருக்கேன். மூணு வேளையும் ஓட்டல்ல சாப்ட்டா உடம்புக்கு ஒத்துக்காது. நைட்ல வேணும்னா சாதம் மட்டும் வடிச்சு தயிர்விட்டுப் பிசைஞ்சு ஜெயா பிக்கிள்ஸ் தொட்டுண்டு சாப்பிடுங்கோ. உங்களுக்குத்தான் பிடிக்குமே? வேலைக்காரி வந்தா அப்பப்ப ஏதாவது தேய்க்கப்போட்டுத் தண்ணிகொண்டுவரச் சொல்லுங்கோ. பால் தேவையான அளவு வாங்கிக்கோங்கோ. தெனமும் ராத்திரி குடியுங்கோ.

எல்லாம் நா பாத்துக்கறேன் கீதா. நீ நிம்மதியாப் போய்ட்டு வா. ஒரு ’சேஞ்ஜ்’ வேணும்னுதானே ஊருக்குப்போற? அப்புறம் வீட்டப் பத்தி என்ன கவலை?

உங்க இஷ்டம். ஸ்வாமி விளக்க ஏத்தறதுமட்டும் மறந்துதாதீங்கோ. புதுத் தீப்பட்டி வாங்கணும். ட்ரெய்ன் கிளம்பிடுத்து, நாவரேன்உடம்பஜாக்ரதயாப்பாத்துக்கோங்கோஅடிக்கடிப்ராட் வேஹோட்டல்போகவேண்டாம்நான்போய்லெட்டர்…-நீங்களும்…

மூச்சுவிடாமல் ஒலித்த கீதாவின் வார்த்தைகள் ’டாப்ளர் எஃபெக்ட்’டில் காற்றில் கரைந்துவிட, அவள் முகமும் விடைகூறும் விரல்களும் கண்களில் தேய்ந்து மறைந்து மெல்லச் சுருங்கும் புகைவண்டித்தொடரின் நீளச் சிவப்புக்கோட்டில் கலந்துவிட, அவனுக்கு கீதா ஊருக்குப்போய் அது அடுத்த சனிக்கிழமை என்று உறைத்தது.

இன்னுமா லெட்டர் போடறா? என்று அனிச்சையாக எழுந்த கேள்விக்கு நாக்கைக் கடித்துக்கொண்டான்.

இரண்டு நாட்கள் முன்னரே வந்திருந்த அவள் கடிதத்தை செஸ் டோர்னமென்ட் மும்முரத்தில் அவன் பிரிக்க ஒத்திப்போட்டு மறந்து எங்கோ வைத்துவிட்டதை மனம் இடித்துக்காட்ட,

லெட்டரைத் தேட முனந்து முதலில் ஸ்வாமி அலமாரி கண்ணில்பட, அவன் மனதில் தன்னைத்தானே கடிந்துகொண்டு, கைகால் அலம்பிவிட்டுப் பரிவுடன் விளக்கை எடுத்தபோது,

திரியில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டுத் திரி தயார்செய்து எண்ணெய்யைத்தேடி ஊற்றி, ஊதுவத்தியைத் தயாராக வைத்துக்கொண்டு தீப்பெட்டியை எடுத்தபோது,

’கீதா புதுத்தீப்பட்டி வாங்கவேணும் என்று சொன்னாள்போலிருக்கிறதே’ என்று நினைத்துக்கொண்டு பார்த்தபோது,

நல்ல வேளை, ஒரு குச்சி இருந்தது. பற்றவைத்தபோது ரெகுலேட்டர் இல்லத ஃபேன் காற்றில் கோபித்துக்கொண்டு அணைந்துபோயிற்று!

சலிப்புடன் அவன் அந்த ஒரு வாரத்தில் முதல் முறையாக சமையலறைக் கதவை ஓசையுடன் திறந்துகொண்டு நுழைந்தபோது அடையாளமே தெரியவில்லை.

’ஸிங்க்’கில் பாத்திரங்கள் வெளியில் உலர்ந்து விளிம்பில் வரண்டு அழுக்கு நீரை ஏந்தி தீட்சண்ய நெடிவீசக் கரப்பான் பூச்சிகள் தைரியம் பெற்றிருந்தன, விளக்கொளியில் மீசையை அசைத்தன. பல்லிகள் இரண்டு சுவர்களில் காத்திருந்தன. பாச்சைகள் அன்புடன் தாவின. அலமாரியில் தயிர் செத்திருந்தது. ஜீனி டப்பாவைச் சுற்றி எறும்புகள் அணிவகுப்பு செய்துகொண்டிருக்க, ஒரு சிலந்தி மூலையில் நிதானமாக வலை பின்னிக்கொண்டிருந்தது. நூடன் ஸ்டவ் அருகில் மண்ணெண்ணெய் பாட்டிலின்மேல் ஃபனல் ரேடார் அன்டென்னாபோல் சாய்ந்திருக்க, அதன்மேல் இருந்த தீப்பெட்டியும் காலி. டைனிங் டேபிள்மேல் பார்த்தபோது ஊறுகாய்க் கிண்ணத்தைக் காளான்கள் ஆக்கிரமித்திருந்தன.

எரிச்சலுடன் சட்டையை மாட்டிக்கொண்டு கீழே இறங்கியபோது கீதாவைத் திட்ட மனம் வரவில்லை.

’என்ன, நாளைக்கு ஸண்டேதானே? எல்லாத்தையும் ஒழுங்குபடுத்திட்டாப் போறது’ என்று நினைத்துக்கொண்டு கால்களை எட்டிப்போட்டபோது எதிரில் வந்த காரின் விளக்கொளியில் கையில் நேரம் தெரியப் பசித்தது.

தாஜில் சாப்பிட்டுவிட்டு, நண்பர்களுடன் கடைகள் மூடும்வரை அரட்டையடித்துவிட்டு, அவசரமாக சோப்பும், ஷாம்புவும், ஷேவிங் கிரீமும் வாங்கிக்கொண்டு, தீப்பெட்டியை அறவே மறந்து ஒரு மீட்டா பான் போட்டுக்கொண்டு, வீட்டில் வந்து அப்பாடா என்று படுக்கையை உதறிப் போட்டதுபோதுதான் கவனித்தான், வரிவரியாகத் தரையில் புழுதிபடிந்து ஸஹாரா பாலைவனத்தை நினைவூட்டியது. ’மனைவி இல்லாத வீடு பாலைவனம்’ என்று எங்கோ படித்தது மனதில் நெருடத் தூங்கிப்போனான்.

கனவுகளில் அவன் மூச்சுவாங்க ஸஹாரா பாலைவனத்தில் நடந்துகொண்டிருந்தான். தூரத்தே புகைவண்டியில் கீதா கையசைத்தாள். கொஞ்ச தூரம் நடந்து நட்டநடுவில் ஈச்சமர நிழலில் டீப்பாயை இழுத்துப் போட்டுக்கொண்டு கீதாவுடன் செஸ் விளையாடித் தோற்றுப்போனான். களைப்பின் மிகுதியால் தொண்டை வறண்டு கீழேசரிய, எகிப்தியத் தடியன் ஒருவன் சாட்டியால் விசிறக் குப்புறப்புரண்டு கையில் மரக்கலயமேந்தி ’தண்ணீர்!’ என்று கெஞ்சியபோது விழித்துக்கொண்டான்.

மாலை சாப்பிட்ட வெஜிடபிள் பிரியாணியின் மசாலா ஏப்பங்கள் விளைவித்த அவசர தாகத்தில் அடுக்களைக்கு விரைந்தபோது குடங்களில் நீர் கருத்துப் புழுதி படிந்திருந்தது. கிணற்று நீரே தேவலாம் என்று ஸிங்க் குழாயைத் திருகியபோது பெருமூச்சுவிட்டு ’அஹ்…’ என்றது. கீதா தினமும் எங்கிருந்து தண்ணீர் கொண்டுவருகிறாள் என்று தெரியவில்லை.

திடீரென்று நினைவுக்கு வந்து அவன் மாடிப்படிகளில் தடதடவென்று இறங்கி சுவரோரம் இருந்த அன்டர்கிரவுன்ட் குழாயைக் கண்டுபிடித்து ஓசையுடன் சுற்றிலும் உள்ள மரப் பலகைகளை அப்புறப் படுத்தியபோது நாய் குரைத்தது. தொடர்ந்து விளக்கெரிய, “எவரூ?” என்ற கட்டைக்குரல் கேட்டு நிமிர்ந்தபோது குழாயின் நுனியில் தங்கியிருந்த கொஞ்சநஞ்ச நீரும் கைகளில் வழிந்து சிந்திவிடப் பரிதாபமாக விழித்து,

“நீலு… நீலு காவலண்டி.” (நீர்… நீர் வேணும் அய்யா)

“எவரய்யா மீரு?” (யாரய்யா நீர்?)

“நேனு, வாசு. வாசு தெர்லேதா மீக்கு? பயண உன்னேனு காதா? மன அம்மாயி ஊருக்கு எல்லாரு. இன்ட்டில நீலு லேது. அந்துக் கோசரம்…” (நான் வாசு. வாசு தெரியாதா உமக்கு? மேல இருக்கேன் இல்லையா? என் மனைவி ஊருக்குப் பொய்விட்டாள். வீட்டில் தண்ணீர் இல்லை. அதுக்காகத்தான்…)

“ஓ வாசு காரு? கொஞ்சம் ஆகண்டி இப்புடே ஒஸ்தானு.” (ஓ வாசு சாரா? கொஞ்சம் இருங்கள், இதோ வருகிறேன்.)

அவர் ஒரு செம்பு நிறைய நீர் கொண்டுவந்துதரப் பருகி ஜன்ம சாபல்யமடைந்தான்.

*** *** ***

மறுநாள் விடிந்தபோது விழித்துக்கொண்டு மெல்ல எழுந்து காலண்டரில் தேதி கிழித்தபோது பொட்டில் அடித்ததுபோல் திடுக்கிட்டான்.

’கேர்: கீதா’ஸ் ப்ர்த் டே’ என்று அவன் பால்பாயின்டால் எழுதியிருந்த காலண்டர்தாள் அவனைப் பார்த்து முறுவலிக்க, பிரிக்காமல் எறிந்த கீதாவின் கடிதம் மனதில் உறுத்த, அதை அவள் அலமாரியில் எறிந்தது உதயமாகப் பரபரவென்று துணிகளை விலக்கித் தேடி ’தட்ஸ் இட்’ என்று எடுத்தபோது கீதாவின் டயரி கீழே விழுந்தது.

அட! டயரிகூட எழுதுகிறாளா என்ன?

கீதாவின் டயரி அவள் ஊருக்குச் சென்ற சனிக்கிழமையுடன் நின்றிருந்தது. எடுத்துச்செல்ல மறந்துவிட்டாள், பாவம் என்றுணர்ந்து ஆவலுடன் பக்கங்களைப் புரட்டியபோது கண்கள் பனித்தன.

ஜனவரி 5, சனி.
அன்று நூலகத்தில் தூங்கியது தப்புத்தான். மிகவும் கோபித்துக் கொண்டார். தவறை உணர்ந்தாலும் மன்னிப்புக்கேட்க மனம் சண்டித்தனம் செய்கிறது. அவர்மீதும் தவறு இருக்கிறது. நான் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாமோ?

ஜனவரி 6, ஞாயிறு.
வரவர எங்களுக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை மூள்கிறது. ஆஃபீஸிலிருந்து பெரும்பாலும் லேட்டாகவே வருகிறார். இன்றுகூட என்ன ஆஃபீஸ்? கேட்டால் கோபம் வருகிறது. லீவு நாட்களில் நண்பர்கள் படையெடுப்பு. எனக்கு எப்போதும் அடுப்புத்தான். இவருக்கு செஸ், புத்தகங்கள் இருந்தால்போதும், நான்கூட அப்புறம்தான். எனக்கோ அவர் சுவைகளில் நாட்டம் இல்லை. பொங்கல் கழிந்ததும் கொஞ்சம் ஊருக்குப் போய்வந்தால் தேவலாம்.

ஜனவரி 12 சனி.
இன்று செஸ் டோர்னமென்ட் பார்க்கும்போது கொஞ்சம் என் பாண்டித்தியத்தைக் காட்டினேன். அசந்துவிட்டார்! எனக்கும் செஸ் நன்றாகவே தெரியும், ஆனால் பொறுமையில்லை. முயற்சி செய்துதான் பார்ப்போமே?

ஜனவரி 18 வெள்ளி.
நேற்றைய சண்டையின் உக்கிரத்தில் பிரிந்து நாளை ஊருக்குப் போகிறேன். என்னிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார்? நான் ’ப்ளெய்ன் கர்ல்’தான், ஆனால் பாசத்துடன்தானே இருக்கிறேன்? நல்லவேளை, கொஞ்சம் அழகாக இருக்கிறேனோ பிழைத்தேன். இல்லாவிட்டால் வாழ்க்கை நரகம்தான்.

அழகும், பாசமும் உள்ள பெண்ணிடம் வேறென்ன எதிர்பார்க்க வேண்டும்? அவள் சாதரணமானவளாக இருந்தால் பொறுத்துக்கொள்ளக் கூடாதா என்ன?

இவ்வளவு தூரம் நுண்கலைகளை ரசிப்பவர் ஒரு பெண்ணின் சாதாரண உணர்வுகளையும், இயல்புகளையும் புரிந்துகொள்ள மறுப்பது ஏன்? He is overly affectionate. In the wrong way.

கடிதத்தில் கீதா மேலும் மாறியிருந்தாள்.

கீதாவின் பிறந்தநாள் ஞாபகம்வர, அங்கிலத் தேதிதானே என்று ஆறுதலடைந்து, காலண்டரில் கார்த்திகை நட்சத்திரம் சரியாக அடுத்த ஞாயிறு வருவதும், தொடர்ந்து அவர்களுடைய முதல் திருமண அனிவர்சரி வருவதும் கண்டறிந்து, அவன் பல்கூடத் தேய்க்காமல் உட்கார்ந்து அவளுக்கு விவரமாகக் கடிதம் எழுதினான்…

செகந்திராபாத் ஸ்டேஷனில் அவன் அவளை வரவேற்கப் பாசத்துடன் காத்திருந்தபோது மழை மெலிதாகத் தூறிக்கொண்டிருந்தது.

– சிறுகதைக் களஞ்சியம், 01 Feb 1986

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *