அவசர சிகிச்சை உடனடி தேவை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 9,038 
 
 

அலுவலகத்தில் என்னுடைய கேபினுக்கு வெளியே, டை கட்டிக்கொண்டு மிடுக்காக ஒருவர், அவர் விசிட்டிங் கார்டை பியூனிடம் கொடுத்துவிட்டு காத்திருந்ததை கண்ணாடி வழியாகப்பார்த்தேன். நான் கையெழுத்திட்ட பைல்களை, அலுவலக உதவியாளர் எடுத்துச்சென்றபின், பியூனைக்கூப்பிட்டு அவரை அனுப்பச்சொன்னேன். விசிட்டிங் கார்டைப்பார்த்தபோது, நகரின் பிரபலமான கார்பொரேட் மருத்துவமனை: வந்திருந்தவர் பெயர் ராஜேஷ்: பெயருக்குப்பின்னே எம் காம், எம் பி ஏ, டிப்ளமோ என்று ஏகப்பட்ட படிப்பு படித்திருந்தார். மருத்துவமனைக்கும், அவர் படிப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால், அவர் அங்கு விற்பனை நிர்வாகி.

ராஜேஷ் ஸ்டைலாக அறிமுகப்படுத்திக்கொண்டார். “மேனேஜர் சார்! நீங்கள் நாற்பது வயது கடந்து விட்டீர்களா?” என்றார். நான் சிரித்துக்கொண்டே, “நல்ல விற்பனை நுட்பம்! பெண்களிடம் எடுபடும். நான் ஐம்பது கடந்தவன். என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “உங்கள் நிறுவனத்தினால் முழு உடல் பரிசோதனைக்கு அடையாளப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளுள் எங்களுடையதும் ஒன்று: வேலைநாட்களில் சிரமம் கூடாது என்பதற்காக, வரும் ஞாயிறு காலை ஏழு மணிக்கு உங்கள் மற்ற கிளை அதிகாரிகளுக்கும் சேர்த்து பிரத்தியேகமாக உடல் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.

“இதுபோன்று திட்டம் வந்திருப்பதாகச் சொன்னார்கள். உங்கள் மருத்துவமனை அதில் உண்டா என்று தெரியவில்லையே” என்று இழுத்தேன். உடனே எங்கள் தலைமை அலுவலக சுற்றறிக்கையின் பிரதியை நீட்டினார்! மற்றகிளைகளிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வர ஒப்புக்கொண்டவர்கள் பட்டியல் இது என்று அவர் குறிப்பேட்டை கொடுத்தார். “ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டுமணிநேரம், வேறு வேலைகள் இருந்தால் தள்ளிவைத்துவிட்டு, வந்துவிடுங்கள். உங்கள் பெயரையும் சேர்த்து உங்கள் மண்டல அலுவலகத்திற்கு அனுப்பிவிடுகிறோம் செலவுத்தொகையையும், அங்கிருந்து நேரடியாக எங்களுக்கு அனுப்பிவிடுவார்கள்” என்று சொல்லிக்கொண்டே பெயர்ப்பலகையில் எழுதியிருந்த என் பெயரை குறிப்பேட்டில் எழுதிக்கொண்டு கைகுலுக்கி விடைபெற்றார். நானும். இரத்த அழுத்தம், நீரிழிவு இருக்கும்போது, முழு உடல்பரிசோதனை நல்லதுதானே என்று மறுப்பு சொல்லவில்லை.

ஞாயிற்றுக்கிழமை வந்தது. காலை ஏழுமணிக்கு மருத்துவமனை சென்றடைந்தேன். எங்கள் நிறுவனத்தின் மற்ற கிளைகளிலிருந்து ஏழெட்டு பேர் வந்திருந்தார்கள். வெறும் வயிற்றில் சில:சிற்றுண்டிக்குப்பிறகு சில இ சி ஜி, யூரின், பிளட் என்று எல்லா பரிசோதனைகளும் எடுத்தார்கள். பெரிய டாக்டர் அடுத்து ஒருமணி நேரத்தில் வருவார் என்றார்கள். வந்தார். என்முறைவந்தபோது உள்ளே சென்றேன். பெரிய டாக்டருடன் இன்னும் இருவர்:பயிற்சிமருத்துவர்கள் போலும். உட்காரச்சொன்னார். என்னுடைய மருத்துவ அறிக்கையைப்பார்த்தபடி பேசினார்.

“இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் குழாயில், முக்கியமான இடத்தில் அடைப்பு இருக்கிறது. ஆஞ்சியோ அறுவைசிகிச்சை நீங்கள் அவசியம் செய்தே ஆக வேண்டும்” என்றார். ” டாக்டர்! நீரிழிவு, இரத்தஅழுத்தம் இருப்பதால் மாத்திரை சாப்பிட்டுவருகிறேன். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் மருத்துவமனையிலும் இதுபற்றி சொல்லவில்லை! குடும்பத்தாரைக் கலந்து ஆலோசித்துப் பின்னர் வருகிறேன் ” என்றேன் கவலையுடன். ” இரத்த ஓட்டம் சரியாக இதயத்திற்குப்போகாத பட்சத்தில், மாரடைப்பு எப்போது வேண்டு மானாலும் வரலாம். முன்னதாகவே செய்துகொள்வது நல்லது. அவசர சிகிச்சை உடனடி தேவை. உங்கள் நிறுவனம்தான் இதற்கான செலவை ஏற்றுக் கொள்கிறதே:பின்னர் என்ன தயக்கம்? நோய் அபாயகட்டத்தை அடையுமுன் சரிப்படுத்திக்கொள்வதே நல்லது. உங்களுக்கு தெரியாததா என்ன?” என்றார் பயிற்சிமருத்துவர் போன்றிருந்தவர்களில் ஒருவர். மற்றொருவர், ” மூன்று நாட்களுக்குமுன்னர் உங்கள் நிறுவனத்தின் நுங்கம்பாக்கம் மேலாளர் மாரடைப்பு ஏற்பட்டு இங்கு சேர்ந்து இன்னும் தீவிர சிகிச்சைப்பிரிவில் தான் இருக்கிறார்.” என் று வயிற்றில் புளியைக்கரைத்தார். “சரி டாக்டர்! வரும் புதன்கிழமை மாலை திரும்பவும் வருகிறேன்” என்று சொல்லி வீடு திரும்பினேன்.

மனதுக்குள் படபடவென்றுதான் இருந்தது. பதினைந்துவயதுவரை ஜுரம் என்று கூட ஊசி போட்டுக்கொண்டது கிடையாது. பாட்டியின் கைவைத்தியம் தான். டாக்டரிடம் எப்போதாவதுசென்றால் சிலமாத்திரைகள்: ரோஸ் கலரில் கசப்புமருந்து. பென்சில் சீவும்போது விரலையும் சேர்த்து சீவிக்கொண்டதும், முகச்சவரம் செய்துகொள்ள ஆரம்பித்தபுதிதில் பிளேடினால் வெட்டிக் கொண்டதையும்தவிர இந்த ஐம்பது வருடங்களில் உடம்பில் கத்தி எங்கேயும் பட்டது கிடையாது. விழுப்புண்கள் தாங்காதமேனி. ஆஞ்சியோ செய்துகொள்வது மிகவும் எளிமையானது என்றுதான் சொல்கிறார்கள். தொழில்சார் நோய்கள் என்று சொல்கிறார்களே, அதுபோல் உடன் வேலைபார்ப்பவர்கள் பலருக்கும் இதுபோன்ற பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. இக்காலத்தில் இது வெகுசகஜம் என்ற மனப்பான்மைக்கு எல்லோரும் வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. மனைவியிடம் அறுவைசிகிச்சை என்று சொல்லாமல் இதற்கான வைத்தியம் பார்க்கவேண்டியிருக்கிறது என்றுமட்டும் சொன்னேன். புதன்கிழமையன்று டாக்டரைப்பார்த்து சிகிச்சைக்கான வேலைகளை ஆரம்பிக்கவேண்டுமென்று முடிவுசெய்தேன்.

செவ்வாய்க்கிழமை மாலை என் மைத்துனரும், தங்கையும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர் பள்ளித்தலைமை ஆசிரியர். உயிர் வேதியியலில் முதுகலைப்படிப்பு முடித்தவர். குடும்பவிஷயங்களெல்லாம் பேசிமுடித்தபின் ஆஞ்சியோ பற்றி சொன்னேன்: மருத்துவ அறிக்கையையும் காண்பித்தேன். அவரோ, “எல்லாம் சரி. இத்துறையில் மருத்துவ நிபுணரிடம் இரண்டாவது ஒப்பீனியன் எடுத்தீர்களா? சந்தேகம் என்றால் மூன்றாவது ஒப்பீனியன்கூட இன்னொரு வல்லுனரிடம் கேட்கலாம். பின்னர் முடிவு செய்யலாம்” என்றார். அதுவும் நல்ல யோசனையாகத்தெரிந்தது.

அவர் சொன்னபடியே, இத்துறையில் வல்லுநர் என்று பெயரெடுத்த டாக்டரிடம், டிரெட்மில் உள்பட எல்லா பரிசோதனைகளையும் மீண்டும் எடுத்து காண்பிக்கும்போது, மருத்துவ அறிக்கையை ப்பார்த்தார். பயமுறுத்துவதுபோல் எதுவும் சொல்லவில்லை .நான் கேட்டேன்.

“டாக்டர்! இரத்தக்குழாயில் அடைப்பு ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா? அப்படி யிருந்தால் ஆஞ்சியோ உடனடியாக செய்யவேண்டுமா?”

” இரத்தக்குழாயில் சிறுசிறு அடைப்பு கள் கொலஸ்டெரால் அதிகமானால் எல்லோருக்கும் ஏற்படும். முக்கியமான இடத்தில் நன்றாக அடைத்துக் கொண்டால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். உங்களுக்கு அதுபோன்ற பாதிப்பு இல்லை. ஆஞ்சியோ இப்போது அவசியமில்லை. இந்த வயதில், நடைப்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும், கொழுப்பைக்குறைப்பதும் மிகமிக அவசியம். வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைத்தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்.ஏதாவது பிரச்சினை இருந்தால் வாருங்கள்”

பிரச்சினை பின்னர் எழவில்லை. இதுநடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.அந்த கார்பொரேட் மருத்துவமனை வழியே போகும்போது நினைத்துக்கொள்வேன்: மருத்துவம் எந்த அளவு வணிகமயமாகவும், இலாபநோக்கம் மட்டுமே குறிக்கோள் என்று ஆகிவிட்டதை. மருத்துவர்கள் என்றாலே பணம் பிடுங்குபவர்கள் என்ற கருத்து ஸ்திரமானது ஒன்றும் ஆச்சர்யமில்லை. டாக்டர் சொன்னால் அது தேவவாக்கு என்று மக்கள் எண்ணும் அளவிற்கு அந்த காலத்தில் சேவைமனப்பான்மையுடன் மட்டுமே அவர்கள் இருந்தார்கள். இனிமேல் அதுபோன்ற டாக்டர்களைப்பற்றி பழைய கதைகளில்தான் படிக்கமுடியும் என்றாகிவிட்டது.

பணியிட மாறுதலில் பல ஊர்களுக்குப்பிறகு பெங்களூரில் வேலை. திடீரென்று ஒருநாள் ராஜேஷ், முன்பிருந்த அதே மிடுக்குடன். இப்போது வேறொரு கார்பொரேட் மருத்துவமனைக்காக. அடுத்தடுத்து பலரை சந்தித்துக் கொண்டே இருப்பதால், என்னை அவரால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. அப்போதைய சில நிகழ்வுகளை நினைவு படுத்தியவுடன் ஞாபகப்படுத்திக்கொண்டார். வேலை மாற்றம்பற்றிக்கேட்டதற்கு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் பதினான்கு நோயாளிகள் இறந்துவிட்டதாகவும், நீதிமன்றம் மருத்துவமனைக்கு தடையுத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் சொன்னார். அதனால்தான்மாற்றிக்கொண்டாராம். மருத்துவமனை செயல்பாடு கள் எதைநோக்கி சென்றுகொண்டிருக்கின்றன? ஆத்திரம் ஆத்திரமாக வந்ததை நேரடியாகவே கேட்டேன்.

“சமீப காலமாக மருத்துவத்துறை க்கேடுகள் புரையோடிப்போய்விட்டன. பணம் ஈட்டுவதற்காக எல்லாவற்றையும் பலிகொடுக்கும் மோசமான துறையாக உருவெடுத்துள்ளது. நீங்களும் அதில் ஓர் அங்கம். அறுவைசிகிச்சைக்கு அவசியம் இல்லாதவர்களையும், மருத்துவ மனைக்குள் கொண்டுவந்து அறுவை சிகிச்சைக்குட்படுத்துவதை, உங்களால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடிகிறது? நவீன உலகில் சந்தைப்படுத்துதல் என்றபெயரில், இதுபோன்று ஆள் சேர்க்கும் வேலை நியாயமானதா என்று நீங்கள் யோசித்ததே இல்லையா?

” எங்களுக்குக்கொடுக்கப்பட்ட பணியை நாங்கள் நேர்மையாகத்தானே செய்கிறோம். நிறைய ஊதியம் தருகிறார்கள் என்று தான் இதுபோன்ற வேலையில் சேருகிறோம.”

“திருட்டுத்தொழில் செய்கிறவனிடம் உதவியாளராகச்சேர்ந்தால் இன்னும் நிறைய சம்பளம் கொடுப்பான். சேர்ந்துகொள்கிறீர்களா? நீங்கள் நேர்மையாக வேலையைச்செயதாலும், தப்புசெய்கிறவர்களுக்குத்துணைபோனால், நீங்களும் குற்றவாளிதானே? சினிமா பிரபலங்களும் இப்படித்தான்.தகுதியற்ற பொருட்களின் விற்பனையை அதிகரிக்க ஊக்குவிக்கிறார்கள்,தங்கள் பகட்டான விளம்பரத்தின்மூலம். வணிகநிர்வாகம் படித்த நீங்கள், உங்கள் நிர்வாகத்தின்கீழ் பத்துபேருக்கு வேலைகொடுப்பதற்கு பதில், தப்புத்தப்பாய் நடக்கும் தொழில்களுக்கு உண்மையாய் உழைப்பை செலுத்துகிறீர்கள். இப்படி இக்கால இளைஞர்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக ஆகிவிட்டார்களே என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது.”

“அப்படியில்லை, சார்! பெரும்பாலான பெற்றோர்கள், தாங்கள் ஈடுபட்டுள்ள விவசாயம்,சிறுதொழில் போன்றவற்றிலோ, அல்லது தங்கள் வாரிசுகளுக்குப்பிடித்த துறைகளிலோ, சுயதொழில் செய்வதையோ விரும்புவ தில்லை. ஏதாவதொரு வேலையிலிருந்தால்தான் கௌரவம் என்று நினைக்கிறார்கள். வேளாண்மைப்பட்டதாரிகள்கூட அலுவலகநாற்காலிகளில் உட்கார்ந்து வேலைபார்ப்பதையே விரும்புகிறார்கள்.”

“குடும்ப சூழ்நிலை காரணமாக ஏதாவதொரு வேலையில் சேரும் நிர்பந்தம் ஏற்பட்டால்கூட, அந்நிறுவனம் மக்களுக்குப்பய னுள்ளவகையில் செயல்படுகிறதா, வணிகநோக்கம் தவிர சமுதாய அக்கறை கொண்டுள்ளதா, அந்நிறுவனத்தில் உங்கள் பணி சமூகத்திற்கு நன்மை விளைவிக்குமா, என்பனவற்றை நன்கு யோசித்து முடிவு எடுங்கள். மருத்துவம், கல்வி போன்றவை தனியாரிடம் விடப்பட்டதால் ஏற்பட்ட விளைவு. மருத்துவத் துறை அமைப்புமுறை மாறவேண்டும் என்ற சிந்தனை, அவா எல்லோரிடமும் இருக்கிறது. அந்த மாற்றத்திற்காக காத்திருக்காமல், மாற்றத்தின் முன்மாதிரியாக நீங்கள் ஏன் இருக்கக்கூடாது?உண்மையில் உங்களைப் போன்றோருக்குத்தான் மனதளவில், அறுவை சிகிச்சை உடனடி தேவை.” என்று மனதில்பட்டதைப் பொரிந்து தள்ளினேன்.

பியூன் கொண்டுவந்த காப்பியை நீட்ட, ராஜேஷ் அதை வாங்கி கனத்த மௌனத்துடனும், ஆழ்ந்த யோசனையுடனும், மெதுவாக அருந்தினார். சற்றுநேரம் தலைகுனிந்து இருந்த ராஜேஷ், தீர்க்கமான குரலில் சொன்னார், “நானே இதுபற்றி மனசங்கடத்துடனும், குழப்பத்துடனும்தான் இருந்தேன். தங்கள் அறிவுரை குழப்பத்திலிருந்து மனதைத்தெளிய வைத்துள்ளது. விரைவில் புதிய ராஜேஷாக உங்களைச் சந்திக்கிறேன், சார்!” என்று மனப்பூர்வமாக என் கையை இறுகப்பற்றி சற்றுநேரம் குலுக்கி, கம்பீரமாக வெளியேறினார்.

Print Friendly, PDF & Email

1 thought on “அவசர சிகிச்சை உடனடி தேவை

  1. இன்றைய உண்மை நிலவரத்தை அற்புதமாக எழுதியுள்ளீர்கள்…. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *