கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 16,382 
 
 

கணேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவன் அவ்வப்போது சென்னையில் இருக்கும் அம்மாவிடம் அலைபேசியில் பேசுவான். இப்போது அம்மாவின் அலைபேசியில் பதிலில்லை. சற்று நேரத்துக்கு முன் கடைசியாக அம்மாவுடன் பேசினான். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென அம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அழைப்பு துண்டிக்கப்பட்டதாக நினைத்த கணேஷ் மீண்டும் அழைத்தான். ஆனால் அம்மாவின் அலைபேசி பதிலில்லாமல் இருந்தது. வேலைக்குப் போய்விட்டு வந்து பேசிக்கொள்ளலாம் என்று அவன் வேலைக்குப் போய்விட்டான்.

மறுநாளும் அம்மாவை அலைபேசியில் அழைத்துப் பார்த்தான். மீண்டும் பதிலில்லை. தன்னுடைய அம்மா இருக்கும் தனது வீட்டின் வீடியோ பதிவுகளை எடுத்துப் பார்த்தான். பேசிக்கொண்டிருந்த அம்மா எழுந்து பாத்ரூம் போவது மட்டும் தெரிந்தது. நீண்ட நேர பதிவுகளை பார்த்த அவனுக்கு பாத்ரூம் போன அம்மா வெளியே வரவில்லை என்பது புரிந்தது. அப்படியென்றால் ………? அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அம்மாவுக்கு ஏதோ ஆகிவிட்டிருக்க வேண்டும் அல்லது கேமரா வேலை செய்யாமல் இருக்க வேண்டும். கேமராவின் ஹாலில் உள்ள பதிவுகளை பார்த்தான். ஹாலில் இருந்த பெரிய டி வி யில் சன் செய்திகள் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அதில் தெரியும் நேரம் இந்திய நேரம் என்பதும் அன்றையது என்பதும் நன்றாக தெரிந்தது. அவனுக்கு ரத்த அழுத்தம் எகிற ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் தலை சுற்றுவது போல இருந்தது.

வெளிநாட்டில் கிடைக்கும் அதிக சம்பளத்துக்காக பெற்றோரைப் பிரிந்து அமெரிக்கா வந்த அவனுக்கு பெற்றோர்களின் இறுதிக்காலத்தில் அவர்களைத் தனியாகத்தான் விட வேண்டி வந்தது. அதிகம் படிக்காத மாமன் மகளை அவனுக்கு மணம் முடிக்க அவன் அம்மா விரும்பினார். அமெரிக்காவில் வேலைக்காகப் போன அவனுக்கு அங்கே வேலை செய்ய தகுதியுள்ள சாஃப்ட்வேர் எஞ்சினியர் தான் வேண்டும் என்று விரும்பினான். அப்படியே மணமகளைத்தேடிப் பிடித்து திருமணம் செய்துகொண்டான்.அவன் மனைவியும் அமெரிக்காவில் ஒரு வேலையில் சேர்ந்துவிட்டாள். பல வருடங்கள் ஓடிவிட்டன. இப்போது அப்பா இல்லை. அவ்ர் இறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் அம்மா ……………….

என்ன ஆயிற்றோ என்ற கவலை அதிகரிக்க உடனடியாக தன் வீட்டுக்கு யாரையாவது அனுப்பி என்ன நடந்தது என்று பார்க்கச் சொல்ல வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. உடனடியாக சென்னையில் இருக்கும் ராஜேஷ் அலைபேசி எண்ணுக்கு அழைத்தான். ராஜேஷ் அவனுடைய சித்தப்பா மகன். அலைபேசியில் பதிலில்லாமல் இருந்தது. தொடர்ந்து அவன் ராஜேஷ் எண்ணை தொடர்பு கொள்ள அழைத்துக்கொண்டே இருந்தான். பதிலில்லை என்றதும் இன்னும் டென்ஷன் அதிகம் ஆனது.

தனது பைக்கில் சென்றுகொண்டிருந்த ராஜேஷ் தொடர்ந்து அலைபேசி அழைப்பு வந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். ஆனாலும் அவனால் உடனடியாக அழைப்பை ஏற்கமுடியவில்லை. போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொண்டிருந்தவனுக்கு அண்ணனின் அவசரம் புரியாது தானே.போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட்டு சற்று வண்டியை நிறுத்தியவன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான். இதற்குள் பல முறை அழைத்திருந்தான் கணேஷ். ராஜேஷ் மனதில் ஏதோ பிரச்சினை என்று தோன்றியது. கணேஷுக்கு உடனே போன் செய்தான். ரிங் போய்க்கொண்டிருந்தது. பலமுறை போன் செய்தான், ஆனால் பதிலில்லை.

தொடர்ந்து ராஜேஷ் அலைபேசியை தொடர்புகொள்ள முயன்று தோற்றுப்போன விரக்தியில் இருந்த கணேஷை அவனுடைய மனைவி அழைத்தாள். அலைபேசியை மேஜையிலேயே வைத்துவிட்டு உள்ளே சென்றவன் மனைவி கொடுத்த ஒரு காபியை குடித்துவிட்டு திரும்பும்போது அலைபேசியில் அழைப்பு சத்தம் கேட்டு வேகமாக வந்தான். அவன் வருவதற்குள் அலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. உடனே அலைபேசியை எடுத்து தவற விடப்பட்ட அழைப்புகளைப் பார்த்தான். அனைத்தும் ராஜேஷுடையவை என்று அறிந்ததும் கொஞ்சம் நிம்மதி வந்து அவனது எண்ணை அழைத்தான். அழைப்புமணி ஓசை கேட்டதும் அதற்காகவே காத்திருந்த ராஜேஷ் இணைப்பில் வந்தான்.

” அண்ணா என்ன ஆச்சு? பல முறை அழைத்து இருக்கிறீர்கள்” என்றவனுக்கு பதிலாக கணேஷ் ” ராஜேஷ் நேற்று அம்மாகிட்ட பேசிட்டு இருந்தேன். திடீரென இணைப்பில் அம்மா இல்லாமல் போய்விட்டார்.சற்று நேரம் கழித்து கூப்பிட்டேன். அப்போதும் பதிலில்லை. அவசரத்தில் வேலைக்கு போய்விட்டேன். இன்றும் பதிலில்லாமல் இருக்கிறது.அதான் கொஞ்சம் போய் என்னன்னு பாக்கணும், எனக்கு பயமாயிருக்குடா, அம்மாவுக்கு ஏதோ ஆயிட்டுதுன்னு எனக்கு தோணுது. உடனே போய் பாத்து பேசுடா ராஜேஷ் ப்ளீஸ் ” என்றான் கணேஷ். “அண்ணா நான் உடனே கிளம்புறேன். எதுக்கும் ஒரு நல்ல டாக்டரை அழைச்சுகிட்டு போறேன். நீ டென்ஷன் ஆவாதே. ஒன்னும் ஆகியிருக்காது , நான் பாத்துட்டு பேசுறேன்” என்றான் ராஜேஷ்.

ராஜேஷ் தெரிந்த ஒரு டாக்டரை அழைத்துக்கொண்டு காரில் அண்ணாநகரில் இருக்கும் அண்ணன் வீட்டுக்கு சென்றான். வாசலில் செக்யூரிட்டி அமர்ந்து இருந்தான். அவன் ராஜேஷை தடுத்து விசாரித்தான். அதற்குள் கணேஷிடமிருந்து கால் செக்யூரிடிக்கு வந்தது. வணக்கம் சார் என்றவனிடம் ” அம்மாவை பார்க்க என் தம்பியை அனுப்பி இருக்கிறேன். கதவு பூட்டி இருந்தால் அதை உடைத்து திறந்து பார். கூடவே அவர்களுடன் போ ” என்றான் கணேஷ். வணக்கம் வைத்த செக்யூரிட்டி ராஜேஷை அழைத்துக்கொண்டு நான்காவது தளத்தில் இருக்கும் கணேஷ் வீட்டுக்கு அழைத்து சென்றான். கதவு பூட்டியிருந்தது. கதவை தட்டிப்பார்த்தார்கள். திறப்பதாக இல்லை. ராஜேஷும், செக்யூரிடியும் சேர்ந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். ஹாலில் அம்மா இல்லை. ஹாலில் டிவியில் ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. பாத்ரூம் அருகே சென்றபோது………….

அங்கே பாத்ரூம் அருகில் குப்புற கிடந்தார்கள் பெரியம்மா. அண்ணன் நினைத்தது சரிதான் என்று எண்ணிய ராஜேஷ் டாக்டரை அழைத்துக்கொண்டு அங்கே ஓடினான். டாக்டர் பெரியம்மாவை பரிசோதனை செய்தார். பிபி செக் செய்தார். இதய இயக்கத்தைப் பார்த்தார். அவரின் கண்ணை திறந்து டார்ச் லைட் அடித்துப் பார்த்தார். பிறகு ராஜேஷை பார்த்த டாக்டர் ” உடனே அருகில் உள்ள நல்ல மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லவேண்டும். அம்மா மயக்கத்திலிருக்கிறார். காரிலேயே போய்விடலாம் , உன் அண்ணனிடம் சொல்லிவிடு என்றார். அண்ணனை அலைபேசியில் அழைத்த ராஜேஷ் ” அண்ணா, அம்மா மயக்கத்திலிருக்கிறார்கள். அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கிறேன். எதற்கும் நீ புறப்பட்டு இங்கு வந்துவிடு ,நான் அம்மாவைப் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் ராஜேஷ். சரி ராஜேஷ் நான் முயற்சி பண்ணுறேன், நீ அம்மாவை பார்த்துக்கொள், மருத்துவமனையில் சேர்த்ததும் எனக்கு போன் பண்ணு ” என்றான் கணேஷ்.

பெரியம்மாவை மருத்துவமனையில் ஐசியு வில் அட்மிட் செய்தார்கள். ராஜேஷ் வெளியிலேயே காத்திருந்தான். மறுநாள் காலையில் பெரியம்மா கண் விழித்தார்கள். நர்ஸ் வந்து சொன்னதும் உள்ளே சென்று பார்த்தான். பெரியம்மாவின் அருகே அமர்ந்த அவனை இன்னும் அருகில் வா என அழைத்தார். ” என்ன ஆச்சு எனக்கு, நீ எப்படி என்னை இங்கே கொண்டு வந்தே ?” என்று கேட்டார். ராஜேஷ் நடந்ததை சொன்னான்.” நீங்கள் பாத்ரூம் அருகில் மயங்கி கிடந்தீங்க. உடனே இங்க கொண்டுவந்து சேத்துட்டோம்.இப்ப எப்படிம்மா இருக்கு ? என்றான் ராஜேஷ்.” பரவாயில்லப்பா, நீ தான் தெய்வம் மாதிரி வந்து என்னை காப்பாத்திட்டியே? நீ வரலேன்னா என்ன ஆயிருக்குமோ, நான் இன்னேரம் செத்துக்கூட போயிருப்பேன். புள்ளைங்க நல்லா படிச்சா நிறைய சம்பாதிப்பாங்க , வசதியா வாழலாம்னுதான் எல்லோரும் நினைக்கிறோம், ஆனா பெத்தவங்க கதை இப்படித்தான் இருக்குது. அவரு போனப்பவே என் மவங்கிட்ட எங்கேயாவது ஒரு நல்ல முதியோர் இல்லத்துல என்னை சேத்து விடுடான்னேன், கேட்கல. நான் தனியா கிடந்து தவிக்கிறது அவனுக்கு எங்க புரியப்போகுது, எல்லாம் என் தலைவிதி ” என்றார் பெரியம்மா.

அண்ணனை அழைத்த ராஜேஷ் அம்மா கண் விழித்துவிட்டதை தெரிவித்து உடனே வந்துவிட்டுப் போகுமாறு சொன்னான்.”அம்மாவை மருத்துவமனையில் இருந்து உன் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போ, நான் வந்து என்ன செய்றதுன்னு அம்மா கிட்ட பேசி முடிவு செய்யுறேன் ” என்றான் கணேஷ். உடல் நலமடைந்த பெரியம்மா ராஜேஷ் சொன்னதற்கு உடன்படவில்லை. ” இவ்வளவு நாளா நான் தனியா இல்லையா? பிரச்சினை எதுவும் இல்லைன்னா கிளம்பிடலாம், நீ முடிஞ்சப்ப வந்து பாரு.என்னை என் வீட்டிலேயே விட்டுவிடு ” என்றார் அம்மா. டாக்டரிடம் ராஜேஷ் அம்மாவைப் பற்றி கேட்டான். அவர்கள் தனியாக இருக்கலாமா என்றதற்கு டாக்டர் “ஒன்னும் பிரச்சினை இல்லை, ஆனாலும் தனியா அவங்களை இருக்கவிடுறது சரியில்லை என்றார்.

பெரியம்மாவிடம் சென்ற ராஜேஷ் ” அம்மா, அண்ணன் உடனே வரமுடியாத நிலையில் இருக்காராம். அதனால நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போய்விடலாம். ஒரு வாரம் என் அம்மாவை உங்க வீட்டில உங்களோடு தங்கவைக்கிறேன். உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது” ” இல்லை ராஜேஷ், என் மவனுக்கு என்னை பார்க்ககூட நேரம் இல்லேன்னு தெரிஞ்சு போச்சு, இனிமே நான் தான் ஒரு நல்ல முடிவை எடுக்கணும், நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லிடு. உங்கம்மாவுக்கு கஷ்டம் கொடுக்க வேணாம். நான் நல்லாதானே இருக்கேன், தனியாவே இருந்துடுவேன்” என்றார் பெரியம்மா. மறு நாள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார் பெரியம்மா. வீட்டுக்கு கொண்டு சென்று விட்ட ராஜேஷை வாழ்த்தி அனுப்பினார் பெரியம்மா.

ஒரு வாரம் ஆகியும் மகன் வரவில்லை. வருவதற்கான அறிகுறியும் இல்லை. அடிக்கடி பேசும் மகன் இப்போது எப்பவாவதுதான் பேசுகிறான். அதுவும் ஊருக்கு இப்ப வரமுடியாதம்மா, லீவு கெடைக்கல, லீவு கெடச்சதும் வந்து பாக்கறன் என்பது தான் அவன் பதிலாக இருக்கிறது. தூசு படிந்து கிடந்த பழைய டெலிபோன் டைரியைத் தேடினார். கணவர் இருந்த போது அடிக்கடித் தன் தோழிகளுடன் உரையாடுவார் தனம். அவர் போன பிறகு இப்போது மீண்டும் நெருங்கிய தோழிகளுடன் பேச விரும்பினார்.பல தோழிகளிடம் பேசினார். நடந்ததை சொன்னதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். மறு நாள் காலையிலேயே தனத்தின் தோழிகள் அனைவரும் அவர் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். கமலா என்ற தோழி தவிர மற்ற அனைவரும் சில மணி நேரம் இருந்து விட்டு கிளம்பி விட்டார்கள். கமலா ஒரு முதியோர் இல்லத்தில் வசிப்பவள், அவள் மகனும் அயல் நாட்டில் வேலைசெய்பவன் தான். யாரும் பார்த்துக்கொள்ள இல்லை என்பதால் முதியோர் இல்லத்தை தஞ்சம் அடைந்தவள்.

“என்ன கமலா நீ கிளம்பலயா என்று கேட்ட தனத்திடம் ” இல்ல தனம், உன் கூட ரெண்டு நாள் இருக்கலாம்னு நான் வந்திருக்கன். அந்த ரெண்டு நாளும் இந்த நகரத்தில் உள்ள முதியோர் இல்லங்களைப் போய் பார்க்கலாம். உனக்கு எது தோதுபடும்னு சொன்னீன்னா அங்க ஒன்ன சேத்துட்டு அப்புறமா நான் என் இடத்துக்குப் போறேன்” என்றார் கமலா. “என்னடி கமலா நான் உங்கிட்ட இதுபற்றி எதுவும் கேட்கலயே, நீயா எப்படி இப்படி யோசிக்கிற” “தனம் உனக்கு இப்போ பணம் தேவை இல்லை. அது நெறைய ஒங்கிட்ட இருக்கு. ஒனக்கு இப்போ பாதுகாப்பா வாழ ஒரு வழி தெரியனும் , அதுக்கு முன்னாடி எங்களை பாக்கணும்னு ஒனக்கு தோணியிருக்கு, அதான் எங்களை ஒன் வீட்டுக்கு கூப்பிட்டிருக்க , உண்மைதானே சொல் ” என்றார் கமலா.

“ஆமாம் கமலா, என்னுடைய மகன் என்னைப்பற்றி கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அன்று ராஜேஷ் மட்டும் வராமல் இருந்திருந்தால் நான் அன்றே செத்து போயிருக்கக்கூடும். அதில் இருந்து தேறி வந்த என்னை என் மகன் வந்து இதுவரை பார்க்கவில்லை, பெற்ற அம்மாவை வயசான காலத்தில பத்திரமா பாத்துக்க எதையும் செய்யாம வெளிநாட்டு மோகத்தில இருக்கான்.கேட்டா வர நேரமில்லேங்கிறான், நம்ம வாழ்க்கையை முடிவு பண்ண அவனுக்கு தகுதியில்லேண்ணு நினைக்கிறேன். அதான் ஒரு முடிவு எடுக்க உதவியாய் உங்களை கூப்பிட்டேன். என்னை மாதிரிதான் உன் வாழ்க்கையும்னு எனக்குத் தெரியும். நீ எப்படி சமாளிக்கிறேன்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டேன்” ” தனம் நான் என் மகனுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பல. அதனால ஒரு முதியோர் இல்லத்தில தங்கி இருக்கேன், அவனும் அதைப்பற்றி பெரிசா எடுத்துக்கல, அப்படியே என் காலம் ஓடுது ” என்றாள் கமலா.

” கமலா, என்னால வசதியான முதியோர் இல்லத்துக்கு போய்விட முடியும். எனக்கு வர்ற பென்ஷன் மட்டுமே நான் வசதியாக வாழ போதும், முதியோர் இல்லம் தாண்டி நாம் வாழ முடியாதா? ”

” எப்படி முடியும் தனம். பணம் நம்ம கிட்ட இருந்தாலும் நம் கூட யாருமே இல்லாத போது நாம் வாழறது எப்படி”

“அங்கே தான் உன் தயவு எனக்கு வேணும். நீயும் நானும் ஒரே நிலைமையில தான் இருக்கோம், என்னோட வா, கொஞ்சம் தனியா பேசலாம் ” என்ற தனம் கமலாவை அழைத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள். அங்கு கேமரா கிடையாது என்பதால் இருவரும் நெடுநேரம் மனம் விட்டு பேசிக்கொண்டார்கள். மறு நாள் தனமும் கமலாவும் வெளியே புறப்பட்டு சென்றார்கள். சென்னை நகருக்கு வெளியே இருக்கும் ஒரு மருத்துவமனை அருகில் ஒரு வீடு வாடகைக்கு இருப்பதாக சொன்ன கமலா அங்கே தனத்தை அழைத்துச்சென்றாள். வீட்டை வாடகை பேசி அட்வான்ஸ் கொடுத்தார் தனம்.

ஒரு நல்ல நாளில் தனது சொந்த வீட்டை விட்டுக் கிளம்பிய தனம் வீட்டுச்சாவியை செக்யூரிட்டியிடம் கொடுத்தார். மகன் வந்தால் தருமாறு ஒரு கடிதத்தை கொடுத்தார். வாடகைக்காரில் பயணமானார். வாடகை வீட்டில் குடியேற எந்த பூஜைகளும் வேண்டாம் என்று அவர் சொன்னதால் அங்கே வந்து காத்திருந்த கமலா அவளை வரவேற்று அழைத்துச்சென்றார். இருவரும் சேர்ந்து பால் காய்ச்சினர். கமலா ” தனம் நீ அன்னைக்கு சொன்னதை நெனைச்சு பார்த்தால் எனக்கு இன்னும் வியப்பா இருக்கு. எல்லாருக்கும் வாழ வழி இருக்குற இந்த நாட்டில் ஏன் இரண்டு வயதான விதவைகள் ஒண்ணா வாழக்கூடாது என்ற ஒன் கேள்வி எனக்கு சரியாகப்பட்டது. அதனால தான் நானும் முதியோர் இல்லத்த விட்டு வெளியேறி வந்துட்டேன். இனிமே நம்ம பசங்களுக்கு அம்மாவை பாக்கணும்னு தோணுச்சுனா வந்து பாக்கட்டும். இல்லேன்னா நாம நிம்மதியா இங்கே வாழ்வோம். முதியோர் இல்லம் போகாமல் வாழமுடியறவரை வாழ்ந்து பார்க்கலாம்” என்ற கமலா தனத்தை கட்டியணைத்துக்கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *