வேலூரிலிருந்து பஸ் பிடித்து கோயம்பேடு வந்திறங்க மாலை மூன்று மணியாகிவிட்டது. எனக்கு அந்த தகவல் வரும்போது காலை பதினோறு மணி. சரண்யாவுக்கு தகவல் சொல்லி விட்டு ஆபீஸில் பதினைந்து நாட்கள் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு வர நேரமாகிவிட்டது. இதற்கே பள்ளிக்கு போகும் பிள்ளையை அவள் எப்படி தனியாய் பதினைந்து நாட்கள் சமாளிப்பாள்?. என்பதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்க அவகாசம் இல்லை. அதற்கான எவ்வித ஏற்பாட்டையும் செய்யவில்லை. ஏடிஎம் ல் பத்தாயிரம் ரூபாயை ட்ரா பண்ணிக் கொண்டு, அதில் ஒரு மூவாயிரம் ரூபாயை சரண்யாவிடம் குடும்ப மேஞ்செலவுக்கு கொடுத்து விட்டு கிளம்பினேன். இந்த மாசத்துக்கான மளிகை, அரிசி எல்லாவற்றையும் ஏற்கனவெ வாங்கி போட்டிருந்தேன். பாஸ் புக்ல இன்னும் பதினைந்தாயிரம் தான் இருப்பு இருக்கு. மொத்த இருப்பே அவ்வளவுதான். நல்ல வெய்யில் வெக்கை. ஆட்டோ பிடித்து ராஜீவ் காந்தி பொது மருத்துவ மனைக்கு விரைந்தேன். வழியெங்கும் மன உளைச்சல், மவுனமான அழுகை. அப்பாவுக்கு சீரியஸ் என்று சுதா போனில் அழுத போது அப்படியே திக்பிரமை பிடித்து நின்றுவிட்டேன். சுதாரித்து என்னவென்று கேட்க, ஹார்ட் அட்டாக் என்றாள். நினைவு இல்லையாம். கோமாவோ என்று அச்சப் படுகின்றார்களாம். ராஜீவ்காந்தி பொது மருத்துவ மனையில் சேர்த்து விட்டுத்தான் எனக்கு போன் செய்திருக்கிறாள்.
அய்யோ அப்பா! மனசு ஏற்க மறுக்கிறது. திடகாத்திரமான மனிதர். யோகாவெல்லாம் செய்வார். மாலையில் ஈஸ்வரன் கோயிலில் தவறாது தேவாரப் பதிகங்களை மனமுறுக பாடுவார். எவ்வித கெட்ட பழக்கங்களும் கிடையாது. கடுமையான உழைப்பாளி. இன்றைக்கும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். என் தங்கை சுதாவுக்கு இரண்டு வயசாக இருக்கும் போது எங்கள் அம்மாவை இழந்து விட்டோம். அவர் மறுமணம் செய்துக் கொள்ள வில்லை. எங்களை பாசத்துடன் வளர்த்தார். உண்பதற்கு, தின்பதற்கு செல்லம் மற்றதில் கண்டிப்பு என்று உருவாக்கினார். எங்கள் மேல் அப்பாவுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. நல்லா படிக்க வெச்சி பெரிய வேலைக்கு அனுப்பணும். ஆனால் வருத்தமான விஷயம் எங்க இரண்டு பேருக்கும் படிப்பு ஏறவில்லை. பத்தாம் வகுப்பு தாண்டுவதற்கே இரண்டு பேரும் திணறி விட்டோம். இன்றைக்கு நான் வேலூர் அரசு மேநிலைப் பள்ளியில் பியூனாக இருக்கிறேன்.. சுதா எழும்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர். அவள் கணவர் ரவி டூவீலர் மெக்கானிக். எக்மோர் பாந்தியன் சாலையில் கடை வைத்து தொழில் செய்கிறார். எங்கள் வீடு எழும்பூர் வீராசாமி தெருவில் இருக்கிறது.. சொந்த வீடுதான். அப்பாவுடன் சுதாவின் குடும்பம் ஒன்றாக எங்கள் வீட்டில் வசிக்க, நான் என் குடும்பத்துடன் வேலூரில் இருக்கிறேன். நிறைய புக்ஸ் படிப்பேன். அப்பாவிடமிருந்து வந்த பழக்கம். கவிதைகள் கூட எழுதுவேன். சில கவிதைகள் வார, மாத இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.
அப்பாவைப் பொறுத்தமட்டில் சற்று முரட்டு ஆள் என்றாலும் உணர்ச்சியான மனிதர். கோபம் வந்தால் எங்களை கண்ணு மண்ணு தெரியாமல் விளாசி விடுவார். அப்புறம் வருந்துவார். அவர் இன்றைக்கு ஆபத்தான கட்டத்தில் ஆஸ்பிட்டலில் கிடக்கிறார். இடையில் என்னுள் உறுத்திக் கொண்டிருக்கிற ஒரு விஷயம், என்றைக்காவது அவரைப் பார்த்து நான் கேட்கவேண்டிய கேள்வி ஒன்று பாக்கி இருக்கிறது. சின்ன வயசிலிருந்தே என்னை அரித்துக் கொண்டிருக்கிற கேள்வி அது. எப்பவோ கேட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போதெல்லாம் கிட்டே நெருங்கவே அவ்வளவு பயம். எப்படி ரியாக்ட் பண்ணுவார் என்று சொல்ல முடியாது. இப்போதாவது அவரை கேட்கணும். அது நடக்காமலே போய்விடுமோ?. கடவுளே!
பொது மருத்துவமனை வாயிலில் காவலாளிக்கு கையூட்டு கொடுத்துவிட்டு உள்ளே சற்றேறக் குறைய ஓடினேன்.. பொது வார்டில் 32வது படுக்கை. முன்னதாக அரை நாள் ஐ.சி.யூ. ல் வைத்திருந்து மாற்றியிருக்கிறார்கள். அப்பா கண்மூடியபடி துவண்டு கிடக்கிறார். கை நரம்பில் குளுகோஸ் மாதிரி எதுவோ ஒன்று ஏறிக் கொண்டிருக்கிறது. சுதா தரையில் உட்கார்ந்து அவரை கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டு அழுதாள். மாப்பிள்ளை பக்கத்தில் பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறார். பக்கத்தில் அவர்களுடைய பெண்கள் தரணியும், குழலியும் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். என்னால் முடியவில்லை அவர் காலை பிடித்துக் கொண்டு கதறி தீர்த்து விட்டேன். அந்த அளவுக்கு ஒழுக்க சீலராகவும், உழைப்பாளியாகவும் வாழ்ந்தவருக்கு எப்படி இந்த பாதிப்பு ஏற்பட்டது?.
“இல்லண்ணா அவருக்கு பிரஷர் இருந்திருக்கிறது. நாமதான் கவனிக்க தவறி விட்டோம். இங்க செக் பண்ணிட்டாங்க. பிரஷர் 200/110”—- “அதற்கான ஒரு அறிகுறியும் தெரியவில்லையே.”—— நான் அருகில் உட்கார்ந்து அவரைத் தொட்டேன்… என்னைப் பர்த்ததும் கண்ணீர் கன்னங்களில் கோடாய் இறங்கியது. என்னாலும் அழுகையை அடக்க முடியவில்லை. “டாக்டர் என்ன சொல்றார்?.” “இன்னும் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லையாம். இரண்டு நாள் போனால்தான் சொல்ல முடியுமாம்.” —சொல்லும் போதே சுதாவும் கண்கலங்கினாள்..
மாலைக்குள் மூன்று நான்கு முறை டாக்டர்கள் வந்து செக் பண்ணி, பிரஷர் பார்த்து விட்டு சென்றார்கள். ஈஸிஜி எடுத்தார்கள். பிரஷர் மட்டும் குறையவே இல்லையாம். நாளைக்கு எக்கோ எடுத்து பார்ப்போம் ஹார்ட்டில் அடைப்பு இருக்கிறமாதிரி தெரியுது.. இப்போது இன்னொரு பிரச்சினையும் கிளம்பியிருக்கிறது. கிட்னியில் ப்ராப்ளம் இருக்கும் போல் தெரிகிறது.. என்று ஷாக் கொடுத்து விட்டு அகன்றார்கள். போகும்போது “என்ன இவ்வளவு பேருமா இங்க இருக்கப் போறீங்க?. ராத்திரியில ஒருத்தர்தான் அலவ்டு. சிஸ்டர்! பார்த்துக்கோங்க. சென்ட் தெம் அவுட் .”—-என்று நர்ஸிடம் சொல்ல, அதைத் தொடர்ந்து நர்ஸ் எங்களையெல்லாம் கிளம்பச் சொல்லி நச்சரிக்க ஆரம்பித்தாள். “சுதா, நீயும் அவரும் கிளம்புங்கள் இனிமேல் நான் பார்த்துக்கறேன். எல்லாரும் கூட்டமாய் எதற்கு இங்கே.”—அவர்களை வற்புறுத்தி அனுப்பி வைத்தேன்.
மறுநாள் என் மனைவி பிள்ளை பிரசாத்துடன் வந்து விட்டாள். சனி ஞாயிறு லீவு திங்கட்கிழமை ஒரு நாள் சிறுவிடுப்பு போட்டுவிட்டு மொத்தம் மூன்று நாள் உடனிருக்க வந்திருக்கிறாள். அது முதல் நானும் சரண்யாவும் மாற்றி மாற்றி காவல் இருந்தோம். சுதா வீட்டில் சமையலை பார்த்துக் கொண்டாள். என் பிள்ளை பிரசாத்தை தங்கச்சி வீட்டில் விட்டுவிட்டோம். பாவம் சுதாவுக்குத்தான் கஷ்டம். எங்க எல்லாருக்கும் சமைக்கணும். சித்தப்பா, சின்ன சித்தப்பா, சித்திகள், ரெண்டு மாமாக்கள், மாமிகள், என்று அது ஒரு கும்பல் வந்துக் கொண்டும் போய்க்கொண்டும். சமாளிக்க முடியாமல் சுதா பத்து நாள் லிவு போட்டு விட்டாள்.
காலையில் எழுந்ததும் நான் ப்ரஷ் பண்ணிட்டு அப்பாவுக்கு காலை கடனுக்கு ஹெல்ப் பண்ணிட்டு அவருக்கு சுடுதண்ணீரில் டவல் வாஷ் கொடுப்பேன். அப்புறம் கிளம்பி வீட்டுக்கு போயி நான் குளித்து சாப்பிட்டு அப்பாவுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து அவருக்கு ஊட்டணும். கால் உப்பு போட்ட உணவுதான். அதுபோல மதியமும் இரவும் வீட்டிற்கு போய் வரணும்.. ஃப்ரீயாக இருக்கும் போது மாப்பிள்ளை சாப்பாடு கொண்டு வருவார். இதுதான் என்னுடைய ரொட்டீன் என்றாகி விட்டது. இப்படியே பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. அப்பாவின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமுமில்லை. இருதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்காம். சர்ஜரி இல்லாமல் ட்ரீட் பண்ண முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். உபரியாக கால்களிலும், முகத்திலும் லேசாக உப்பலும் மினுமினுப்பும் சேர்ந்து விட்டிருந்தன. கிட்னி பிரச்சினைக்கும் வைத்தியம் நடக்கிறது. அப்பாவை ஆளாளுக்கு துடிக்க துடிக்க குத்தி குத்தி எடுக்கிறார்கள். எனக்கு அழுகையே வந்துவிட்டது. நாங்கள் பார்த்து அவர் ஒரு நாள் உடம்பு சரியில்லை என்று தரையில் படுத்ததில்லை. ஒல்லியான தேகம். வலி தாங்க முடியாமல் சில சமயம் என்னைப் பார்த்து அழுகிறார். செய்வதறியாமல் கண்ணீருடன் அவரை தட்டிக் குடுக்கிறேன்.
ஒரு கட்டத்தில் வந்து போன உறவுகளெல்லாம் கடமை முடிந்து விலக, நிச்சலமான அமைதி. நான் மேலும் ஒரு பதினைந்து நாள் விடுப்பு போட்டிருந்தேன். மாலை சரண்யா போன் பண்ணாள்.
“ஏங்க நீங்க எப்படி இருக்கீங்க?. பிரசாந்துக்கு மூன்று நாளாய் ஜுரம் அடிக்குதுங்க. வாந்தியெடுக்கிறான். ரெண்டு நாளா ஆஸ்பிட்டலுக்கு இட்டும் போய் வர்றேன். ஜுரம் குறையல. பயமா இருக்குதுங்க. இங்க எங்க பார்த்தாலும் டெங்கு ஜுரம் இருக்குது.”—போனில் அழுகிறாள். “அழாதேம்மா! ஆஸ்பிட்டல்ல ரத்தம் டெஸ்ட் பண்ணலியா?.” “நாளைக்கு டெங்கு ஜுர டெஸ்ட் பண்றதா சொல்லியிருக்காங்க.” “அழாத தைரியமா இரு. ரெண்டு நாள்ல இங்க மச்சானை பார்த்துக்கச் சொல்லி வுட்டுட்டு வர்றேன். தைரியத்த வுட்றாத.”——- கூழில் விழுந்த ஈ போல மனசு தத்தளிக்கிறது. அன்றைக்கு முழுக்க பிள்ளை நினைப்பில் தூங்க முடியவில்லை. என் ஒரே பையன். ரெண்டு நாளில் சுதாவை பார்த்துக்க சொல்லிட்டு ஊருக்கு போயே ஆகணும்.
இரண்டு நாளுக்கப்புறம் அன்று மறுநாள் காலை ஊருக்கு கிளம்ப இருந்தேன். சுதாவிடமும் லீவு போட சொல்லி விட்டேன். மாப்பிள்ளையும் ரெண்டு நாள் கடையை மூடிட்டு தான் பார்த்துக்கிறதாக சொல்லிட்டார். இரவு அப்பாவுக்கு பக்கத்தில் கீழே பெட்ஷீட் விரித்து படுத்தேன். படுக்கும் முன்பாக அப்பாவை ஒரு பார்வை பார்த்து விடுவது வழக்கம். நல்ல தூக்கத்தில் இருக்கின்றாரோ. கண்களை மூடியிருந்தார். வித்தியாசமாக திருகின மாதிரி படுத்திருந்தார்.
“அப்பா…அப்பா..”—பதிலில்லை. பதற்றம் வந்தது. தொட்டேன் மாலை மாலையாக வியர்வை. உடை தொப்பலாக நனைந்து விட்டிருந்தது. லேசாக ஹூங்கார சத்தம் வருகிறது. அப்பாவுக்கு என்னவோ ஆகிவிட்டது. ஓடி டாக்டரிடம் சொன்னேன். சாவகாசமாக கால் மணி நேரம் கழித்து வந்து பார்த்தவர் சிஸ்டர்..சிஸ்டர் என்று கத்தினார். அடுத்த பத்து நிமிடங்களுக்குள் அவரை ஐஸியூ க்கு மாற்றினார்கள். ஒருமணி நேரம் நான் பதைபதைப்புடன் வெளியே நின்றேன். மறுநாள் காலையில்தான் அப்பாவை பொது வார்டுக்கு மாற்றினார்கள். ராத்திரி வந்தது இரண்டாவது அட்டாக் இந்த தடவை எப்படியோ காப்பாற்றி விட்டோம் என்றார்கள். மூன்றாவது அட்டாக் வந்தால் அவ்வளவுதான் காப்பாற்ற முடியாது. அவருக்கு டென்ஷன் வராம பார்த்துக்கோங்க என்றார்கள். சிலிர்ப்பாய் இருந்தது. அந்த நேரம் நான் கவனிக்காமல் இருந்தால் இந்நேரம் அவர் வாழ்வு முடிந்து போயிருக்கும். அப்.பா…அ.ப்.பா… தகவலறிந்து சுதாவும், மாப்பிள்ளையும் ஓடி வந்தார்கள். இத்தனை நெருக்கடியில் ஓயாமல் என் பிள்ளையின் நினைப்பு வந்து வந்து போகிறது. அன்று இரவு சரண்யாவை போனில் கூப்பிட்டேன்.
“சரண்யா! என்னால இப்ப வரமுடியாதும்மா. நீயேதான் சமாளிக்கணும். இங்க ராத்திரி அப்பாவுக்கு செகண்ட் அட்டாக் வந்துவிட்டது. நான் என்ன பண்ணுவேன்?, எப்படி விட்டுட்டு வரமுடியும்? ஒண்ணுமே புரியலம்மா.”
“கவலை படாதீங்க. பையனுக்கு ரத்தம் செக் பண்ணி டெங்கு ஜுரம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. சாதா ஜுரந்தானாம். ஊசி போட்டு மாத்திரைகளை குடுத்திருக்காங்க இன்னைக்கு ஜுரம் குறைஞ்சிருக்கு. எதுக்கும் கவுன்ஸிலர் ஆபீஸில இருந்து நிலவேம்பு கஷாயமும் வாங்கிக் குடுத்துட்டேன். ”—அப்பாடா என்று மனசு நிம்மதியாயிற்று.
மதியம் அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்தாச்சி. மதியம் சாப்பிட வேண்டிய மாத்திரைகளையும் கொடுத்தாச்சி. அப்பா கண் மூடி படுத்திருந்தார். இப்போது அவருக்கு கால் வீக்கமும் முக மினுமினுப்பும் சற்று கூடியிருந்தன. பாத வீக்கத்தை அழுத்தினால் பள்ளம் விழுகிறது. மணி மூன்று ஆகிவிட்டது இன்னும் நான் சாப்பிடவில்லை. எழுந்தேன் அப்பா என் கையை பிடித்துக் கொண்டார்.
“அப்பா…என்னப்பா?.” —மெதுவாக பேசினார். “உங்க ரெண்டுபேருக்கும் நான் பாரமாயிட்டேன்.”—அழுதார். அவர் வாயை மூடினேன்.
“ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறீங்க?. எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை.உங்களுக்கு செய்றது எங்க கடமைப்பா. நீங்க எங்களை பாரமா நினைச்சீங்களா?. நாங்க மட்டும் எப்படி பாரம்னு நினைப்போம்?. தூங்குங்க.”—அவர் கையை இறுகப் பிடித்தேன்.
சிறு வயசிலிருந்தே அவரை கேட்க பயந்து கேட்காமல் போய் இன்னும் என்னை அரித்துக் கொண்டிருக்கும் அந்த கேள்வியை இன்றைக்கு அவரிடம் கேட்டுவிடப் போகிறேன்.
“என்னப்பா?”—என்று கேட்டார். இதை விட்டால் வேறு சமயம் வாய்க்காது.. “உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கணும்பா. சின்ன வயசிலிருந்தே அது என்னை அரிச்சிக்கிட்டு இருக்கு.”
“கேளு.”
“ எங்க சின்ன வயசில இருந்தே எப்பவும் நீங்க சுதாவுக்கு குடுக்கிற முக்கியத்த எனக்கு குடுக்கிறதில்லை. ஏம்பா?. அப்பல்லாம் விடியற்காலை அஞ்சி மணிக்கெல்லாம் டீ கடைக்கு போவீங்க. போறப்ப அவகிட்ட ரகசியமா காதில சொல்லி எழுப்பி டீக்கடைக்கு கூட்டிப் போவீங்க. என்னை விட்ருவீங்க. ஏம்பா?. எத்தனையோ நாள்…எத்தனையோ நாள் உங்களை ரகசியமா பின்னாலியே வந்து ரெண்டு பேரும் ஓட்டலுக்குள் போய் டிபன் சாப்பிட்றதை பார்த்து அழுதிருக்கிறேன் தெரியுமாப்பா?. நான் உங்க பிள்ளை இல்லையாப்பா. ஏன் இந்த ஓரவஞ்சனை செஞ்சீங்க?.”—-இப்போது கூட எனக்கு லேசாய் கண்கலங்கியது. அப்பா அழுதார். என் கையை கெட்டியாகப் பற்றினார்.
“அப்படி இல்லப்பா. சின்ன குழந்தையில இருந்தே கண்டதையும் தின்னும் சுபாவம் உனக்கு. கூழா இருந்தாலும் வயிறு முட்ட இருக்கணும். எதுவும் தள்ளுபடி இல்லை உனக்கு. சுதா அப்படி இல்ல எதையும் சாப்பிடமாட்டா. சவலை குழந்தைடா அவ. உன்னையுந்தான் வாரம் ஒரு தடவையாவது ஓட்டலுக்கு கூட்டிப் போயிருக்கேனே. என்ன மிச்சமா அவளை கூட்டிப் போயிருப்பேன். இன்னைக்கு கூட வயிறு முட்ட சாப்பிட்ற ஆளு நீ. அவ இன்னைக்கும் சோற்றை சீச்சி வைக்கிறவ. சவலை குழந்தைக்கு கொஞ்சம் மிச்சமா ஊட்டி விட்றது பெத்தவங்க குணம்தானாப்பா.” —–எனக்கு மனசு பளீரென்று அலம்பி விட்டது போல இருந்தது. உள்ளே இதுவரையிலும் அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலகி லேசாகியது. உண்மைதான் இன்றைக்கும் சுதா ரெண்டு கை சோறு கூட சாப்பிட மாட்டாள். அவர் கைகளைப் பற்றி முத்தம் கொடுத்தேன். “சாரிப்பா.”
அடுத்த வாரம் அப்பாவை டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டார்கள். வாராவாரம் ஆஸ்பிட்டலுக்கு வந்து மாத்திரைகளை வாங்கிக் கொள்ள வேண்டும். மாதத்திற்கு மூன்று முறை கிட்னி பிரச்சினைக்காக வேண்டி டயலாஸிஸ் பண்ணிக் கொள்ள வேண்டும். ஓபி சீட்டை புத்தகமாக போட்டு குடுத்து விட்டார்கள். இப்ப அப்பாவை யார் பார்த்துக்கிறது?. டயாலிஸிஸ் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து அவருடைய நடமாட்டம் அடங்கி விட்டது. துக்கி நிற்க வைத்தால் தடுமாறி விழுகிறார். அது முதல் எல்லாம் படுக்கையிலேயே என்றாகி விட்டது. ட்ரீட்மெண்ட்டுக்கு, டயலாஸிஸுக்கு எல்லாம் சென்னைதான் பெஸ்ட். ஆனால் சுதாவும், மாப்பிள்ளையும் வேலைக்கு போறவங்க. என் வீட்டில சரண்யா வீட்டில இருக்கிறவதான். அப்பாவை வேறு வழியில்லாமல் வேலூருக்கு காரில் கொண்டு வந்துவிட்டேன். இங்கே கவர்மெண்ட் ஆஸ்பிட்டலில் ஓபி புக்கை காட்டி மாத்திரைகளை வாங்கிக் கொள்ள ஆரம்பித்தேன். டயலாஸிஸ்தான் பிரச்சினை. மாசம் மூன்று தடவை நானும், சரண்யாவும், மாற்றி மாற்றி சென்னைக்கு காரில் கூட்டிப் போய் வருகிறோம். கடன் இல்லாமல் செட்டாக வாழ்ந்த நான் இப்போதெல்லாம் அக்கம் பக்கம், நண்பர்களிடமெல்லாம் கடன் வாங்க ஆரம்பித்து விட்டேன் என்ன செய்ய?. அவ்வப்போது ஜிபிஎஃப் லோன் போட்டு கடன்களை நேர் செய்கிறேன். நல்லவேளையாக எங்கள் யாருக்கும் எதுவும் நோய் வரவில்லை. வந்தால் பட்ஜெட்டில் துண்டு விழுந்திருக்கும்.
இரண்டு மாதங்களாக நான் டியூட்டிக்கு போய்க் கொண்டிருக்கிறேன். காலையில் எழுந்ததும் அப்பாவின் காலைக் கடனை முடிக்க அவருக்கு ஹெல்ப் பண்ணி, படுக்கையில் மூத்திரத்தில் நனைந்து கிடக்கும் பெட்ஷீட்டை மாற்றி, குளிக்க வைத்து அவரை சாப்பிட வைத்து விட்டு அதற்கப்புறம் நான் ரெடியாகி டியூட்டிக்கு கிளம்புவேன். மாலையில் கண்டிப்பாய் ஒரு அரை மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருப்பேன். நான்தான் அவருக்கு மகன். என் மனைவி…? எவ்வித ரத்த சம்பந்தமும் இல்லதவள். அவள்கூட கொஞ்சமும் கூச்சமில்லாமல் எல்லா பணிவிடைகளையும் செய்து வந்தாள். அப்பா இன்னமும் பாரமாய் இருக்கிறேன் பாரமாய் இருக்கிறேன் என்று சொல்லி அழுதுக் கொண்டிருக்கிறார்..
அன்றைக்கு ஸ்கூல் மதிய உணவு இடைவேளை விடுகிற நேரம் சரண்யாவிடமிருந்து மாமா சீரியஸா இருக்கார் என்று போன் செய்தி வந்தது. ஹெட்மாஸ்டரிடம் நிலைமையை சொல்லி ரெண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு விரைந்தேன். அப்பா நினைவில்லாமல் கிடந்தார்.மேல்மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. தொட்டேன் நல்ல ஜுரம். சரண்யா! அப்பாவை கைசோர விட்ருவோம் போலிருக்கேம்மா கலக்கமாக இருந்தது.. ஏடிஎம் மில் பணம் எடுத்துக் கொண்டு காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஓடினேன். மறுபடியும் பொது மருத்துவமனை ஐஸியூவில் அட்மிஷன்.
இரவு முழுக்க நான் தூங்கவில்லை. டாக்டர்கள் போராடி காலையில் ஜுரம் கட்டுக்குள் வந்திருந்தது. சுதாவும் மாப்பிள்ளையும் ஓடி வந்தனர். எல்லோராலும் அழத்தான் முடிகிறது. அழுது விட்டு கிளம்பிவிட்டார்கள். மாப்பிள்ளை எங்களுக்கு இரவு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு எட்டு மணிபோல திரும்பவும் வந்தார். அப்பாவுக்கு இப்போது மேல்மூச்சு குறைந்திருந்தது. அப்பாவை எழுப்பி உட்கார வைத்து சாப்பாடு கொடுத்தேன். தண்ணீர் அளவாகத்தான் தரவேண்டும். ஒரு நாள் முழுவதுக்கும் ஒரு லிட்டர் தண்ணீர்தான் குடிக்க வேண்டும். நானும் சாப்பிட்டேன். களைப்பாக இருந்தது. உடல் முழுக்க அடித்துப் போட்டாற்போல வலி. படுத்தேன். தூக்கம் வர்ற நேரம். செல்போன் ஒலித்தது. என் மனைவிதான். செல்லை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அப்பா தூக்கத்துக்கு போய்விட்டார்.
“ஏங்க அப்பாவை அம்மா சீரியஸ்ஸாக கொண்டு போனீங்களே. என்னாச்சின்னு எனக்கு சொல்லவேண்டாம்?.”
“ த்சு இல்லம்மா ஒரே அலைச்சல் களைப்பா இருந்திச்சி படுத்துட்டேன் சாரி.”
“இப்பவாவது சொல்லுங்க என்னாச்சி?.”
“ த்சு இன்னும் ஒண்ணும் ஆவல.”—- சொல்லிவிட்டு அவசரமாக நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
– இது 15-12-2019 தினமணி கதிர் இதழில் பிரசுரமான சிறுகதையாகும்.