கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 15,877 
 
 

அம்மா படுத்தப் படுக்கையாய்க் கிடப்பதைப் பார்த்து அக்காள், தம்பி, தங்கைகள் எல்லோருமே வருத்தப் பட்டார்கள்.

” ஏன்டா. .! சென்னையில் ஒரு ஸ்பெசலிஸ்ட் இருக்காராமே ! அங்கே கொண்டு போய் அம்மாவைக் காட்டிக் குணப்படுத்தலாமா .? ” அக்காள் இவனை யோசனைக் கேட்டாள்.

” அதெல்லாம் நடக்காது. அம்மா இனிமே இப்படித்தான் ! ” தம்பி மறுப்பு சொன்னான்.

” என்னமோ போ. அம்மா இப்படி கிடக்கிறதைப் பார்க்க மனசுக்குக் கஷ்டமா இருக்கு. ” சியாமளா – தங்கை கண்ணின் ஓரம் கசிய சொன்னாள்.

அம்மாவைப் பார்க்க வருத்தமாகத்தானிருந்தது. ஆனால் எனக்கு மட்டும் வருத்தம் வரவில்லை.

அம்மா ஒரு வாரத்திற்கு முன் நன்றாகத்தான் இருந்தாள்.

போன திங்கள் கிழமை. ..

அப்பா திண்ணையில் சாப்பிட்டுவிட்டு அவர் அறைக்குப் போய் விட்டார். வீட்டிற்கு வெளியே மாட்டுத் தொழுவத்தில் உள்ள அறைதான் அப்பாவின் அறை.

தவிடு, புண்ணாக்கு, ஏர்கலப்பை, இதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அதில்தான் அவர் தங்கி இருந்தார்.

நானும் மனைவியும் வீட்டினுள் அடுப்பங்கரையில் சாப்பிட்டிக்கொண்டிருந்தோம். நடுக்கூடத்தில் முற்றத்தை ஒட்டிய சாய்மானத்தில் உட்கார்ந்திருந்த அம்மா எதற்கோ எழுந்தவள் இரண்டு அடி எடுத்து வைக்கவில்லை.

” ஐயையோ. .! என்னால் ஒரு கையையும், காலையும் அசைக்க முடியலையே. ..! ” அலறினாள்.

நாங்கள் உதறி அடித்துக்கொண்டு ஓடுவதற்குள் சாய்ந்துவிட்டாள்.

” ழ். .ழே. ..! ” சத்தம் வந்தது.

பயந்து போய் டாக்டரை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தால் பக்கவாதம் !

” இனிமேல் பேச முடியாது. நடக்க முடியாது. வயதாகி விட்டது. மருத்துவம் பார்த்தும் பிரயோஜனமில்லே. ” – டாக்டர் கை விரித்து விட்டார்.

எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எனக்குக்கூட ஒருகணம் அப்படித்தானிருந்தது. மறுகணம் சந்தோசம் வந்தது.

ஏ. .அப்பா ! அம்மாவிற்கு நாக்கா அது…?! விஷம் ! தேள் கொடுக்கு.!! அப்பாவை நொங்க நொங்க வைத்து அடித்த சாட்டை.!!!

அம்மாவிற்குக் கொஞ்சம் கோபம் வந்து பேச ஆரம்பித்து விட்டால். .. காதைப் பொத்திக் கொள்ள வேண்டும். இல்லை . … செவிடர்களாய், ஊமைகளாய் இருந்து விட வேண்டும். கணவன், பிள்ளைகளென்று பார்க்க மாட்டாள் அவள் இஷ்டத்திற்குப் பேசுவாள்.

இந்த நாக்குதான் அப்பாவை. ..

” சாகிறவரைக்கும்…. இனி உன் வீட்டு வாசல்படி மிதிக்க மாட்டேன். ! ” என்று சத்தியம் செய்ய வைத்தது.

திண்ணையிலும், கொல்லை யிலும் சாப்பிட்டுவிட்டு, மாட்டுக்கொட்டகை அறையில் முடங்கிக் கொள்ள வைத்தது.

எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. அப்போது நான் ஏழாவது படித்து கொண்டிருந்தேன்.

அன்றைக்குச் சாயந்திரம் ஏழு மணி. நான், அக்காள், தங்கைகள் என்று எல்லோரும் சிம்னி விளக்கில் படித்துக் கொண்டிருன்தோம்.

அம்மா அடுப்பங்கரையிலிருந்தாள்.

அப்பா கொஞ்சம் ‘ போட்டுக் ‘ கொண்டு வந்தார். பகல் முழுக்க ஆட்களைக் கட்டிக் கொண்டு வேலை, நடவு, என்று மாரடித்தால்தான் அப்பா கொஞ்சம்…’ உற்றிக்’ கொண்டு வருவது வழக்கம். அன்றைக்கும் அப்படித்தான் வந்தார்.

அவர் எங்கள் பக்கத்தில் உட்கார்ந்து. ..

” அம்மா எங்கேடா. .? ” என்று என்னைக் கேட்டார்.

” அடுப்புல. ..” என்றேன்.

” என்ன செய்யிறா. .? ”

” சோறாக்குறாங்க. .”

” இன்னுமா சோறாக்கலை. .? ! ”

அவ்வளவுதான் ! காயாகி கேட்ட அம்மா சரேலென கரண்டியுடன் வெளியே வந்தாள்.

” தொரை என்ன வெட்டி முறிச்சிட்டு வந்துட்டீங்களோ ?!. அதுக்குள்ள சோறு கேட்குது. .? ” உரக்கக் கேட்டாள்.

‘ அப்பா கேட்ட கேள்வி என்ன. .? இவள் கொடுத்த பதிலென்ன. .? ‘ – அப்பா அப்படியே ஒருகணம் ஸ்தம்பித்துப் போனார். மறுகணம் முகத்தில் கோபம் பரவியது.

” ஏன்… கறிக்குத்தான் வாங்கிக் கொடுத்துட்டுப் போனேல்லே. நேரா நேரத்தோடு சமைக்கிறதுக்கென்ன. .? ”

” சமைக்கிறதுன்னா சாதாரணமாய்ப் போயிடுச்சா. .? ஒன்னு ரெண்டா பெத்து வச்சிருக்கே. .? ஒரு சத்திரம் பெத்து வச்சிருக்கே. அதுங்களைக் கட்டி மாரடிக்கவே பொழுது சரியாய் இருக்கு. ” என்று இடையில் எங்களை இழுத்துப் போட்டுக் கொண்டாள்.

அம்மா எப்பவுமே இப்படித்தான். தான் பெற்ற ஏழு பிள்ளைகளையும் சத்திரம் என்றுதான் சொல்வதுதான் வழக்கம். அதுமட்டுமல்ல. அப்பாவை, வாங்க, போங்க என்று மரியாதைக் கொடுத்துப் பேசுவது கிடையாது. ஏதோ மாட்டுக்காரனை அழைப்பது போல எப்போதுமே. .. ‘ வா, போ ‘ தான்.

அப்பா கொஞ்சம் படித்தவர். ஊரில் பெரிய மிராசு. செல்வாக்குள்ளவர்.

அம்மாவை…” அப்படிக் கூப்பிடாதே ! ” – என்று சொல்லிப் பார்த்தார்.

ம்ம். . கேட்டால்தானே.! ??

அம்மாவிற்குப் படிப்பு வாசனைக் கிடையாது. மாற்றிக் கொள்ளவே இல்லை.

அப்பா இதற்காக ஆரம்பத்தில் பெரிய யுத்தமே நடத்தி இருக்கிறார். வயசுக் காலத்தில் அப்பா ரொம்ப மூர்க்கம். அம்மாவை அடிக்க ஆரம்பித்தாரென்றால் அவளின் நீண்ட தலைமுடியைப் பிடித்து கையில் சுருட்டிக் கொண்டு சுழற்றி சுழற்றி அடிப்பார்.

” பேசுவியா. .? மரியாதை இல்லாம பேசுவியா. .? ” – என்று கேட்டு வாயிலேயே அடிப்பார்.

அடி விழ அடி விழத்தான் மரியாதையெல்லாம் சுத்தமாகப் போய் ….

” அடிடா. .! இன்னும் அடிடா. எவ்வளவுதான்டா அடிப்பே. ?!!.” அம்மா கூப்பாடு போடுவாள்.

ஆத்திரத்தில் அப்பா அவள் வாயை மூடுவார். ஏன். . கழுத்தைக்கூட நெரிப்பார்.

அம்மா அடங்கவே மாட்டாள். ஒரு நாலாந்தர மனுஷியை விடக் கேவலமாகப் பேசுவாள்.

இந்தச் சண்டையை நாங்களெல்லாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு சுவர் மூலையில் முகம் வெளிறிப் பதுங்கிக் கிடப்போம்.

அப்பாவிற்கே அலுத்துப் போய். … ” அடச்சே. .! ” விட்டு விடுவார்.

ஆயிற்று. சண்டை அதோடு முடிந்ததென்றால் அப்புறம் நாங்கள் கொலைப் பட்டினி. போட்ட வேலை போட்டபடி அம்மா ஒரு மூலையில் சுருண்டு விடுவாள். கோபமோ, அடியின் வலியோ. .. இரண்டு நாட்களுக்கு எழுந்திருக்கவே மாட்டாள்.

அப்பாதான் அவள் விட்ட வேலைகளைத் தொடர்ந்துசெய்து, எங்களுக்குச் சோறிட்டு, தூங்க வைத்து. .. எல்லாமும் செய்வார்.

அப்பாவிற்கு எங்கள் மேல் பாசம் அதிகம்.

‘ ஏனிப்படி அடிப்பானேன் ! அல்லல்படுவானேன். ! ‘ – அப்பாவைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.

அம்மா வாயை நினைத்தால் கோபம் வரும்.

அம்மா எதற்காக இப்படி பேசுகிறாள். ? அம்மாவின் சுபாவமே இப்படித்தானா. .? சுத்தப் பட்டிக்காட்டில் வளர்ந்த பெண்ணாம். அதனால் மரியாதை, மட்டு தெரியாதாம். !

அதுமட்டுமல்ல. . பெரிய பண்ணையார் வீட்டில் மூன்று பெண்களில் இவள் தான் செல்லப் பெண்ணாம்.

” ஏம்ப்பா. . இப்படிப்பட்ட அம்மாவைக் கட்டிக் கொண்டடீர்கள் ? ” என்று கேட்டால். …

” சொத்து பத்து உள்ள பொண்ணு. உறவு விட்டுடக் கூடாதேன்னு அனாதையா வளர்ந்த எனக்கு உங்க தாத்தா. .. அவ அப்பா கட்டி வச்சுட்டாருடா. .! ” என்று அப்பா சொல்லுவார், வருத்தப்படுவார்.

அப்பா இப்படி மூர்க்கமாக இருந்தாலும். … நாசூக்கு உள்ளவர். இதனால் அம்மாவின் வாய்க்குப் பயந்து கொண்டே பகல் பொழுதுகளையெல்லாம் வயல்வெளிகளில் கழிப்பார். வயல்களெல்லாம் அம்மாவின் சொத்து.

மிராசு…. என்பதால் காலை சோறு, மதிய சோறு எடுக்க வயலிலிருந்து ஆள் வரும். போர்செட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, ஆட்களுக்குக் கூலி கொடுத்துவிட்டு, சாயந்தரம். .. பொழுது இருட்டித்தான் அப்பா வீட்டிற்கு வருவார்.

அடிக்காமலிருந்தால் பேசாமலிருப்பாளே ! என்று அப்பா அடிப்பதைக் கூட கொஞ்சம் நிறுத்திப் பார்த்தார்.

ம்ம். … அம்மாவிற்குப் புரியாது. பயந்து கொண்டிருக்கிறார்! என்று பேசுவாள்.

” அப்பா. .! கம்முன்னு இருக்கீங்களே ! தாங்க முடியலையே. .! ” என்று கேட்டால். ..

‘ அடிச்சா திருந்துறாளாடா ! ரொம்பத் தரக் குறைவாய்ப் பேசுறா. மானம், மரியாதையெல்லாம் காத்துல பறக்குது. அடிச்சி பிரயோஜனமிருக்கா. .? ” கேள்வி கேட்பார்.

எங்களைப் பார்த்துப் பார்த்து வளர்ப்பார்.

அம்மா ஏழு பிள்ளைகளைப் பெற்றுப் போட்டாளேத் தவிர. .. இதுவரை ஒரு பிள்ளைக்காவது துணிமணிகள் கசக்கியது கிடையாது. எல்லாம் அப்பாதான் செய்வார்.நடவாள், கூலி ஆட்களை விடமாட்டார்.

அக்காள் பிறந்த போது… அப்பா ஒரு நடவாளை விட்டுத்தான் இதைச் செய்யச் சொன்னாராம்.

நான்கு நாட்கள் அவளும் செய்தாளாம்.

அம்மாவிற்கு இது பொறுக்கவில்லை.

” நீ பெத்தப் புள்ளைக்கு அவ என்ன கசக்கிறது. .? நீ அவளை வச்சிருக்கியா. ? அவ உனக்கு வைப்பாட்டியா. .? ! ” கேட்டு விட்டாளாம். !

‘ வேலை செய்கிறாள். கூலி கொடுக்கிறோம். அதற்கு இப்படியொரு வம்பா. .?!! ‘ – அதற்கு மேல் அப்பா அவளை நிறுத்தி விட்டாராம்.

அப்பா காலையில் எழுந்ததும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் எதிரே உள்ள குளத்தில் மூத்திர, பீத் துணிகளை அலசுவார். நான் கரையில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்ப்பேன். மீன்கள் கொத்தித் தின்னும்.

அன்றைக்கு. .. ” சமைக்கலை. .? ” என்று அப்பா கேட்ட கேள்விக்கும், அம்மா கொடுத்தப் பதிலுக்கும் நான் முறைத்தேன்.

” நீ என்ன முறைக்கிறே. .? அப்பன்தான் குடிச்சுட்டு வந்து உளர்றான்னா. . உனக்கும் ஒன்னும் புரியலையா. .? ” அம்மா என்னை முறைக்க. .. அப்பாவிற்குக் கோபம் வந்தது.

அன்றைக்கு அடிதடி. பெரிய ரகளை.

அடி தாங்க முடியாத அம்மா. ..

” வீட்டை விட்டு வெளியே போடா. ..! ”கத்தினாள்.

இதைக் கேட்ட அடுத்த வினாடி அப்பா அப்படியே அதிர்ந்து, அரண்டு பின் வாங்கினார்.

இது அம்மா வீடு. அப்பாதான் அம்மா பெயரில் இதை வாங்கி வைத்தார். எங்களுக்குத் தெரியும். வீடு விலை பேசிக்கொண்டிருந்தபோது அப்பா எங்களை அழைத்துக் கொண்டு காட்டினார்.

” இது சுத்துக்கட்டு வீடுடா. நம்ப வீட்டைவிட பெரிசு. அம்பதாயிரம் ! அம்மா பேர்ல நாளைக்கு ரிஜிஸ்டர் பண்ணப்போறேன். அந்த பொந்திலேர்ந்து மெயின் ரோட்டுக்கு வந்துட்டோம். ! ” அப்பா பெருமை வழியச் சொன்னார்.

எங்கள் வீடு ஆற்றைத் தாண்டி உள்ளே இருந்தது. ஓட்டு வீடுதான். சின்ன வீடு. இது பெரிசு.

திண்ணை, முற்றம், மேல் தாழ்வாரம், கீழ் தாழ்வாரம், அடுப்பங்கரை, கொல்லை, கொல்லையில் நெல் காய வைக்க பெரிய சிமெண்ட் தளம். நாங்களெல்லாம் ஆசை ஆசையாய்ப் பார்த்தோம். இந்த வீட்டிற்கு குடி வந்த பிறகு. .. அந்த பழைய வீடு நெல் கொட்டி வைக்கும் இடமாக, விவசாய சம்பந்தப்பட்ட பண்ணை வீடாக மாறியது. இரண்டு வீடுகளுக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவு. ஆற்றைத் தாண்டி குறுக்கே போனால். .. பத்து வயல் கடப்பு . குக்கிராமம். இதுவும் குக்கிராமம்தான். ஆனால் அதைவிட இது பரவாயில்லை. அங்கு போக மண் ரோடு. இங்கு சிகப்பு கப்பி போட்ட ரோடு. ஒன்றிரண்டு சைக்கிள்கள் போகும். இப்போது தார்போட்டு பஸ் ரூட்டாகிவிட்டது.

ஸ்தம்பித்துப் பின் வாங்கிய அப்பா அப்படியே நின்றார். உடம்பெல்லாம் திகுதிகுவென்று எரிந்திருக்க வேண்டும். முகம் காட்டியது.

அடுத்து…. அவர் வார்த்தைகளெல்லாம் அடிவயிற்றிலிருந்து வெளி வந்தது.

” உன் வீடுன்னுதானேடி இப்படிச் சொன்னே. .? இனிமே நான் சாகிற வரைக்கும் இந்த வீட்டு நிலை வாசல்படி தாண்ட மாட்டேன்டி. இது சத்தியம் ! ” சொன்னார்.

அன்றைக்குப் புறப்பட்டு வெளியேறியவர்தான் இன்னும் வாசல்படி மிதிக்கவில்லை.

நாங்களெல்லாம் போய் அழுது அழைத்துப் பார்த்தோம்.

” வீட்டுக்குள்ளாறத்தானேடா வரமாட்டேன். இங்கேயே இருக்கேன் ! ” என்று திண்ணையில் படுத்தவர் அடுத்த நாள் மாட்டுக்கொட்டாய் அறையை ஒழித்து படுத்துக்கொண்டார்.

ஏழு பிள்ளைகளுக்கும் திருமண முடித்துப் பேரன், பேத்திகள் எடுத்து விட்டார். இன்னும் சொன்ன சொல் மாறவில்லை. சத்தியம் மீறவில்லை.

அப்பா ரொம்ப ரோசக்காரர்.

அதற்கப்புறம் அம்மாவிற்கு முணுக்கென்று கோபம் வந்தால் போதும். …

” அவன் கிடக்கான் பரதேசிப் பயல் ! குடும்பஸ்தனாய் இருந்தால் வீட்டுக்குள்ள வராம இருப்பானா. .? என்னமோ என் தலையெழுத்து சொத்தையும் கொடுத்து இந்த ஓட்டாண்டிக்குக் கட்டி வச்சுட்டான் என் அப்பன். ! ” உள்ளே இருந்து சத்தம் போடுவாள். இல்லையென்றால் வெளியில் பேசிவிட்டு உள்ளே வந்துவிடுவாள்.

அப்பா உள்ளே வந்து அடிக்க மாட்டார் என்கிற துணிச்சல், திமிர். எனக்கு நறுக் நறுக்கென்கும். எனக்கே இப்படி என்றால் அப்பாவிற்கு எப்படி இருக்கும். ..? !

” ஏம்மா. .! இப்படி ராட்சசியாட்டம் பேசுறே. .? ” என் கேட்டால் போதும். ..

” ஏன்டா ! நானா ராட்சசி. .? அவனுக்குப் பொறந்தவன்தானே நீயும். பெத்தவனுக்குத்தானே வக்காலத்து வாங்கிக்கிட்டு வருவே..? ” என்னையும், இலவசமாய் அப்பாவையும் சேர்த்து சொடுக்குவாள்.

அதற்கு மேல் எதிர்த்து பேசினால் அப்பாவுக்கு இன்னும் மரியாதை குறையும். பேசாமல் விட்டுவிடுவேன்.

அம்மா எப்போதுமே இப்படித்தான். எதற்கும் அப்பாவைத் தொட்டுக் கொள்ளவில்லையென்றால் தூக்கம் வாராது.

அப்பாவைத் திட்டுவதென்றால் அவளுக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி. அப்பா என்றால் அம்மாவிற்கு அவ்வளவு இளக்காரம். !

இப்படி எலியும் பூனையுமாக இருக்கிறார்களே. ..! இவர்கள் எப்படித்தான் ஏழு பிள்ளைகளைப் பெற்றுப் போட்டார்களோ. .? !

இதை ஒருநாள் அம்மாவிடம் ஆத்திரத்தில் கேட்டு விட்டேன்.

” இத்தனையையும் பொரிக்க வச்சு. .. அவன் பொரிச்ச குஞ்சே என்னை என்ன கேள்வி கேட்குது பார்த்தியா . .? ” சட்டென்று அம்மா மார்பிலடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தாள். ஒப்பாரியில் அப்பா வாயில் கிடைக்கும் அவலாக அவதிப்பட்டார்.

அப்பா என்று மட்டுமில்லை. நான் கல்லூரி முடித்து விட்டு இரண்டு வருடங்களாக வேலைக்கு நாயாய் நாயாய் அலைந்து அல்லல்பட்ட போது…..

” இவனை மாடு மேய்க்க அனுப்பலாம்ன்னா இவன் அப்பன் கேட்டானா . .? படிக்க வச்சானாம் படிக்க. .! என்னைக் கேட்காத கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு ஊரைச் சுத்தி வந்து கொட்டிக்குது. ” அம்மா திட்டுவாள். ஆத்திரத்தைக் கொட்டுவாள். நெருப்பாக உமிழ்வாள்.

” அம்மா. ..! ” அதட்டினால் போதும். ..

” விளக்கமாத்தால அடிப்பேன். எதிர்த்தா பேசுறே. .? ” குறைப்பாள். அடித்தாலும் அடித்து விடுவாள். மரியாதை இருக்காது. ஒதுங்கி விடுவேன்.

வேலைக்குப் போயும் கூட மரியாதை இல்லை.

” என்ன பெரிய சம்பாத்தியம் சம்பாதிக்கிறதே. .? என் கால் காசு பெறுமா. .? ” அம்மாவிற்குச் சொத்து திமிர் அதிகம்.

நான் கலியாணம் பண்ணித்தான் அம்மா கொஞ்சம் அடக்கம். எனக்கில்லே. . அம்ம மனைவிக்கு.!!

வந்த புதிதில் எல்லோரையும் பேசுவதைப் போல அம்மா இரண்டொரு தடவை ஏறத்தாழ பேசினாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் என் சகதர்மினி. மூன்றாவது தடவை வாய்… வார்த்தைக்கு வார்த்தை லெப்ட் அண்ட் ரைட் கொடுத்துவிட்டாள்.

அம்மா ராட்சசி ஆட்டம் ஆடினாள்.

அம்மாவிற்கு மேல் இவள் ஆடினாள். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. அதிலிருந்து அம்மா அவளுக்கு அடக்கம்.

அப்பாவிற்கு. ..? அடக்கமே இல்லை. அதிகம்.

அம்மாவிற்கு மருமகள் மீது கோபமென்றால் அன்றைக்கு முழுதும் வறுபடுவது அப்பாதான். !!

நானும், என் மனைவி செல்வியும் அரசு ஊழியர்கள். வேலைக்குப் போய்விடுவோம். பெற்ற பிள்ளைகள் இரண்டையும் கையோடேயே பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்று விடுவோம்.

எல்லோரும் திருமணம் முடித்து வெளியில் சென்று விட்டதால் அவ்வளவு பெரிய வீட்டில் அம்மா ஒரு அறையில் சுருண்டு விடுவாள்.

அப்பா வெளியில் சுருண்டுவிடுவார். வயதாகிப் போய் விட்டது.

என் மனைவி காலையில் சமைத்து விட்டுப்போன சோற்றைக்கூட அப்பாவிற்குச் சமயத்தில் எடுத்துப் போடமாட்டாள். அப்பா என்றாலே அம்மாவிற்கு அலட்சியம் ! அலட்சியம் !!

முன்னே மாதிரி நிலம் நீச்செல்லாம் இருந்தாலாவது அப்பா வெளியில் போய் காலாறுவார். இப்போதெல்லாம் போக முடிவதில்லை. அப்பாவிற்கு வயதாகிவிட்டது. விவசாயத்திற்கு ஆட்களும் முன்னே மாதிரி கிடைப்பதில்லை. கூலி வேறு அதிகம். என்னாலும் பார்க்க முடியவில்லை என்று நான் தான் எல்லாவற்றையும் குறைத்து விட்டேன். விவசாயக் குடும்பமென்று மறக்காமலிருக்க மூன்று ஏக்கர் மட்டும் வைத்துக் கொண்டேன். பாக்கியெல்லாம் விற்று பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது.

அப்பா தற்போது இந்த மூன்று ஏக்கர் நிலத்தைத்தான் ஒரு சுற்று சுற்றுவார். அப்புறம் வீட்டைச் சுற்றி வருவார்.

கோடை காலத்தில் விவசாயம் கிடையாது. அப்போது அப்பா புத்தகமும் கையுமாகத்தானிருப்பார்.

இருபது மாடுகள். நான்கு கறவைகள் என்று இருந்த இடத்தில் அப்பாவின் வற்புறுத்தலுக்காக ஒரே ஒரு பசு மாடுதான் மீதம்.

அதை அப்பாதான் கவனித்துக் கொள்வார். குளிப்பாட்டுவார், தீனி வைப்பார், சாணி அள்ளுவார். அம்மா இவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் படுத்திருப்பாளேத் தவிர ஒரு வேலை செய்ய மாட்டாள்.

அப்பா கஷ்டப்பட்டால் அவளுக்கு மகிழ்ச்சி. என்ன ஜென்மமோ. ..!!

” ஏம்ப்பா ! நானும் உன் மருமகளும்தான் கை நிறைய சம்பாதிக்கிறோமில்ல. உட்கார்ந்து சாப்பிடாம. . எதுக்கு நீ இந்த மாட்டோட லோல் படனும். ..? ” கேட்டால். ..

” நமக்குப் பால் வாங்கி கட்டுப்படியாகாதுடா. நான் இருக்கிறவரைக்கு என் பேரப்புள்ளைக வெளியில பால் வாங்கி குடிச்சதுன்னு இருக்கக் கூடாது. வயசாயிடுச்சி குறைச்சுக்கோ சொன்னே. .. வயலெல்லாம் குறைச்சாச்சு. இதையும் குறைச்சுக்கிட்டேன்னா. … எனக்குப் பொழுது போக வேண்டாமா. .? ” சொல்வார்.

அந்தக்காலத்துக் கட்டை. அப்பாவால் உழைக்காமலிருக்க முடியாது.

அப்பாவிற்கு வயதாகிவிட்டதேத் தவிர, இதுவரை நோய் நொடியென்று படுத்தது கிடையாது. அப்படியே வந்தாலும் எப்போதாவது சுரம்தான் வரும். மருத்துவமனைக்கு வரமாட்டார், செல்ல மாட்டார்.

ஒரு பிடி வேப்பிலைக் கொழுந்தைத் தின்று விட்டு குளத்தில் முழுக்குப் போடுவார். அந்த ஈரத்துணியோடு போய் மோரங்கட்டளை மாரியம்மனை நெடுஞ்சாண்கடையாக விழுந்து வணங்குவார். அப்படியே நெற்றி நிறைய விபூதியைப் பூசி படுத்தாரென்றால் காலையில் கம்மென்று எழுந்திரிப்பார். தெய்வ அருளோ, உடல் வாகோ, மனத்திண்மையோ….. அப்பா எழுந்துவிடுவார்.

ஆனால் அம்மா அப்படி இல்லை. அவளுக்கு எங்கிருந்துதான் என்ன நோய்தான் வருகின்றதோ. .?

மாதத்திற்கு இரண்டு முறை மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஆஸ்பத்திரிக்கும் செல்லவேண்டும். தஞ்சாவூர், புதுச்சேரி ஜிப்மர், சென்னை என்று அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

நினைத்தால். ..மகன், மகள்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும். தடுத்தால். .. அடம்பண்ணுவாள். அப்பாவை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள். இல்லை. … முரண்டு பிடித்து மூலையில் முடங்கிவிடுவாள்.

அப்பா அழுது நான் பார்த்ததில்லை. அன்றைக்கு அப்பா அழுதபோது எனக்கு மனசு தாளவில்லை. பெற்ற தாயை அடிக்கக் கூடாது. அடிப்பவன் மிருகம். ஆனால். .. எனக்குள் இருந்த மிருகம் திமிறியது. கஷ்ட்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

காலையில் எட்டரை மணிக்குக் குடும்பத்தோடு கிளம்பினோமென்றால் அலுவகம் விட்டு மாலை ஆறு மணிக்குத்தான் திரும்புவோம். அன்றைக்கும் அப்படித்தான் போனோம், வந்தோம்.

ஸ்கூட்டரை வாசலில் நிறுத்தியபோதே கவனித்தேன். அப்பா சுருண்டிருந்தார்.

‘ சாயந்தரம் படுக்க மாட்டாரே மனுசன். .! ஏன். .. உடம்பு. கிடம்பு, சரி இல்லையா. .? ‘ என்று நினைக்கும்போதே. …

அடுப்பங்கரைக்குப் போன என் மனைவி செல்வி. ..

” என்னங்க ! ஆக்கி வச்சுட்டுப் போனது அப்படியே இருக்கு. மாமாவும், அத்தையும் சாப்பிடலையா. .? அத்தை.. அறையில் படுத்திருக்காங்க. மாமா.. அங்கே படுத்திருக்கார். ஏதாவது சண்டையா. .. கேளுங்க…? ” சொன்னாள்.

” என்னப்பா. .? ” போய் கட்டிலில் அமர்ந்து விசாரித்தேன்.

” உன் அம்மா சோறு போடலைடா. ..! ” ஒட்டிய வயிற்றுடன் அப்பா சின்னப் பிள்ளை மாதிரி கண் கலங்கியது மனசைப் பிசைந்தது.

” ஏன். ..?”

” சின்ன மகளுக்குச் செய்யணும். ஐயாயிரம் கொடுன்னா. . என்கிட்டே ஏதுடி பணம். .? அதான் வரவு செலவெல்லாம் உன் பிள்ளைக்கிட்ட இருக்கே. கேட்டு வாங்கிக்கிட்டு போக வேண்டியதுதானே. .?! ” சொன்னேன்.

அவ்வளவுதான் ! பிலுபிலுன்னு பிடிச்சிக்கிட்டா. அவ சுபாவம்தான் உனக்குத் தெரியுமே ! நாக்குல நரம்பில்லாம வரைமுறை இல்லாம பேசிட்டா. .”

”சரிடி. சோறு போடுன்னேன். ”

” கால் காசு வச்சுக்க வழிதெரியாத பிச்சைக்காரப் பயலுக்கு எதுக்குடா சோறு. .? சும்மா கிட….” ன்னு சொல்லி போய் படுத்துட்டா. காலையிலிருந்து பட்டினி. ” – சொல்லி முடித்துவிட்டு அவர் கேவ. ..

எனக்கு ரத்தம் கொதித்தது. மிருகம் கட்டறுத்தது. கோபத்தில் கிளம்பினேன்.

சட்டென்று என் கையைப் பிடித்துத் தடுத்து. ..

” ஒன்னும் கேட்காதேடா ! பேசினாவதானே ! பேசிட்டுப்போறா. வயித்தைப் பொரட்டுது. உன் பொண்ட்டாட்டியைக் கொஞ்சம் காபி மாட்டு சீக்கிரம் போட்டுக் கொடுக்கச் சொல்லு. ” கெஞ்சி பால் சொம்பை நீட்டினார்.

அம்மா! உன் நாக்கு தேளா. .? பாம்பா. .? பூரானா..? பல்லியா. ..? நீ மனுசியா. .? பேயா …? கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் இப்படி கொண்டவனை வதைக்கிறீயே ! நீ நல்லா இருக்க மாட்டே ! நல்ல கதிக்குப் போகமாட்டே ! நீன்னா பார். அப்பா பொட்டுன்னு போகப் போறார். நீ…சிரிச்சி, சின்னாப் பின்னப்பட்டு மலம், ஜலத்தில் உழன்று நாறிப் போகப் போறே. பெத்த புள்ள எனக்கே தாளலையே, அனுபவிச்ச அப்பா எப்படித் தாளுவார். .? நீ நொங்க நொங்க பேசின ஒவ்வொரு முறையும் அப்பா எப்படி வேதனைப் பட்டிருப்பார். அந்த வேதனை உன்னைச் சும்மா விடாது. அனுபவிக்கப் போறேத் திமிறிய . .? ‘ நான் அன்றைக்கு மிருகத்தை அடக்கி மனமுருகி நினைத்தது பலித்துவிட்டது.

அப்பா வதையை அம்மா தெத்த ஆரம்பித்து விட்டாள். அம்மாவைக் கிடத்தி நான்கு நாட்களாகி விட்டது. மலம், மூத்திரம், சிருஷ்டியெல்லாம் படுத்த படுக்கையிலேயே.

அக்காள், தம்பி, தங்கைகளென்று வந்து பார்த்தவர்களெல்லாம் போய் விட்டார்கள்.

ஆமாம் பிள்ளைகளாய் இருந்தாலும் வேறொரு குடும்பமாகிவிட்டப்பிறகு எத்தனை நாட்களுக்குத் தங்கிப் பார்க்க முடியும். .?

எங்களுக்கும் நான்கு நாட்கள் விடுப்பு முடிந்துவிட்டது.

காலையில் அப்பா என்னைத் தனியே அழைத்தார்.

” அவளை என் அறையில கொண்டாந்து போட்டுடுடா ” சொன்னார்.

” ஏன்ப்பா. ..? ”

” நீயெல்லாம் வேலைக்குப் போயிடுவே. அவ தனியா உள்ளே கிடந்து தவிச்ச வாக்குக் கூட தண்ணிக் கிடைக்காம .. யாரு சிருஷ்டை பண்ணப் போறா….? ” அப்பாவின் முகம் தொங்கி குரல் கரகரத்தது.

”அப்பா ! உங்களுக்குத் துவேஷமே கிடையாதா. .? இவ்வளவிற்குப் பிறகும் அம்மா மீது பாசம் வைத்திருக்கின்றீர்களே ! நீங்க மனுசப் பிறவிதானா. .?!…” ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

” நான் சாகிறவரைக்கும் பிடிச்ச கையை விடக்கூடாது. சொன்ன சொல்லைக் காப்பாத்தணும். தூக்கிக் கொண்டாந்து போடுடா. .”

அதற்கு மேல் பேச முடியாமல் அம்மாவைத் தூக்கி வந்த அவ படுக்கையில் கிடத்தினேன்.

அப்பா ஆதரவுடன் அவள் தலையை வருடினார்.

அம்மா. .. அவர் கையைச் சட்டென்று இறுக்கிப் பிடித்துக்கொண்டு. ..” ழே. .ழ். …ழே. ..! ” டென்று கண்ணீர் விட்டாள்.

கடைவிழியில் வழியும் நீரை அப்பா ஆதுரத்தோடும், கவலையோடும் துடைத்தார்.

அந்த நிலையில் அம்மாவைப் பார்க்க. .. எனக்குப் பாவமாக இருந்தது.

– தினமணிக்கதிர் – இலக்கியச் சிந்தனை தேர்வு – இந்தியில் மொழிபெயர்ப்பு .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *