அந்தாக்ஷரியில் தொடங்கி அப்பாவில் முடிந்தது அன்றைய தோழிகளோடான உரையாடல். எப்போதும் போல் அரட்டை எனத் தொடங்கிய அன்றைய உரையாடல் ஒரு ரணமாய் இதயத்துள்!
அவள் கலகலப்பான பெண், என் இனிய தோழி! ரித்து. இதோ அவளும் நானுமாய் சொல்கிறோம் எங்கள் உரையாடலின் சாராம்சத்தை:
என் தந்தை ஒரு பழமைவாதி, சிறு வயதில் தோளோடணைத்து வண்ணத்துப்பூச்சி கதை சொல்லி உறங்கவைத்த அந்த அன்பான அப்பா, கொஞ்சம் அதிகமான கோபகுணமுடையவர் என நான் அறிந்திருக்கவில்லை! அம்மாவுக்கும் அப்பாவுக்குமான செல்லச்சண்டைகள், கேலிகளை சிறு பிராயம் முதலே கண்டதில்லை!
தோழிகளோடான அளவளாவலில் நான் அறிந்த அப்பாக்கள் யாருமே என் அப்பாவோடு ஒத்துப்போகவில்லையென பல முறை தலையணை நணைத்திருக்கிறேன் இரவுகளில்!
பத்து வயதிலேயே அப்பாவின் அன்பில் குறைதலோ மாற்றமோ தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அம்மாவோடான அந்த அழகிய வாழ்வில் என் நர்சரி கடைசி ஆண்டிலேயே அப்பாவை முழுமையாய் அறிந்துகொண்டிருந்தேன்!
அவரின் உலகம் விசித்திரமானது, தான் மட்டும் தான் அந்த உலகின் மிக முக்கிய உயிரினம். தன்னோடொத்தவர்களில் தன்னைப் புகழ்வோர் மேல் அதீத அன்பும், தன் வார்த்தைக்கு மறுபேச்சு பேசுவோரின் மேல் அதீத வெறுப்பையும் காட்டிவிடுவார்!
என தொடர்ந்த அவள் குரலில் தொய்வு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகக் காண்கிறேன்.
காலை எழுந்ததும் செய்திகள், அலுவல், மதியத்தில் வீட்டில் உணவு, உறக்கம், பின்னான அலுவல் முடிந்ததும் வீட்டுக்கு வந்தாரென்றால் அவர் அறைதான் அவரின் தஞ்சம்! பேசும் வார்த்தைகளில் அளவிருக்கும், எப்போது கோபம் வரும் என கணிக்கவே முடியாது! என்ற என் ரித்துவின் கண்ணீர் தந்தையின் அன்புக்கான அவளின் ஏக்கத்தை எனக்குணர்த்த தவறவில்லை!
அவரின் அன்புக்கு அவள் குடும்பத்தில் பாத்திரமான ஒரே ஜீவன் அவள் மட்டும்தான்! அவரறிந்த அன்பின் வெளிப்பாடு மகளின் தேவைகளை பூர்த்தி செய்வதுதான், சரமாரியாக வார்த்தையாடவும் திட்டவும் அவளுக்கு மட்டுமே உரிமை அதிகம்!
அவளின் விடியலே பெரும்பாலும் அம்மா, அப்பாவின் உரத்த சம்பாஷனைகளால்தான் நிகழ்ந்திருக்கிறது. இவ்வாறாக அன்புக்கு ஏங்கி இதயம் கணத்த ஓர் வேளையில் அம்மாவின் கைப்பிடித்து அப்பா ஏன்மா இப்படி என ஒருமுறை கேட்டிருக்கிறாள்
“எல்லோரும் மதிக்க வேண்டும், புகழ வேண்டும், பணம் கையில் புழக்கம் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும், தன்னை யாரும் குறையே சொல்லக்கூடாது, இதுதான் உன் அப்பா. உன்னை அவர் கண்டுகொள்ளவேண்டும் என ஏங்காதே மகளே, தோற்றுப்போவாய்! “உனக்காகத்தான் நான் வாழ்கிறேன்!”
இது கண்ணீரோடு அவள் தாய் பகர்ந்த துக்கம்! இன்றுவரை அவளறிந்த அப்பாவின் உலகத்தில் அவர் மட்டும்தான் இருக்கிறார்.
சமீபத்திய ஓர் அலைபேசி உரையாடலில்
“நறு என் ஹஸ்பண்டும் அப்பா மாதிரி இருப்பாரோன்னுதான் நான் கல்யாணமே வேணாம்னேன்.என் கனவு பலிச்சிடுச்சுடீ அவர், அப்பாவைப்போல இல்லை”
என மகிழ்ச்சியோடு கூக்குரலிட்டு அவள் பகிர்ந்த நாழிகையில் இதயம் வலிக்கத்தான் செய்தது!
தோள் சாய, தலை கோதக்கூட தேவையில்லை! ஓர் அன்பான பார்வையை செலுத்தி ‘என்ன கண்ணம்மா’ எனக்கேட்டிருக்கலாம்! அவள் விம்மியிருக்க மாட்டாள்!
அப்பாக்களின் உலகம் மிகப்பெரிது தான், பல அப்பாக்கள் தனக்கான உறவுகளை கண்டுகொள்ளாமல் தன்னைச்சுற்றிய உலக்கத்துக்கு, தான் அரசனாக வேண்டுமென அரியணை எழுப்ப முயல்கிறார்கள்! தன் உலகத்தை மறந்து ஆகாசத்தில் கோட்டை கட்டுகிறார்கள்! சொல்லிப்புரிய வேண்டியதில்லை, நான் சொல்ல விரும்புவதெல்லாம் அன்பை வெளிப்படுத்துங்கள், இதயம் உடையாமல் இருக்க!