கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 19,789 
 
 

கழிவறையில் இருந்து வெளியே வந்தவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவனையும் அறியாமல் அவன் கண்களில் இருந்து வந்த நீர்த்துளி தரையை தொட்டது.

எதிரே சுவரில் இருந்த பல புகைப்படங்களில் அந்த 80 வயது முதியவள் மட்டும் இவனை பார்த்து ஏளனமாக சிரிப்பதாக உணர்ந்தான்.

தினகரன்… பெயருக்கு ஏற்ப சூரியனின் பிரகாசம் அந்த முகத்தில் இருந்தாலும் மனித உணர்வுகளை அந்தந்த பருவங்களில் வென்றெடுக்க முடியாது பிற்காலத்தில் குற்ற உணர்வுகளில் வருந்தும் பெரும்பான்மையான கூட்டத்தில் அவன் மட்டும் என்ன விதிவிலக்கா ?

அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வில் இருந்த அவனை நேற்று வரை தாய், தந்தை,மனைவி என உடனிருந்து கவனித்த பெரும் கூட்டம் இயல்பாய் கரையத் தொடங்கி இருந்தது. ஒவ்வொருவருக்கும் அவர்களது கடமைகள் முக்கியத்துவம் பெற இவன் ஒரு மாதத்திற்குள்ளாகவே தனித்து விடப்பட்டான்.

முப்பத்து ஐந்து வயதே ஆன தினகரன் கடந்த 15 வருடங்களாக காலை முதல் மாலை வரை காற்றுக்கு இணையாக ஓடி ஓடி தேடியது எல்லாம் வெற்று காகிதம் என்று முற்றிலும் ஒதுக்கிவிட முடியாவிட்டாலும் சேர்த்திருக்க வேண்டிய ஏதோ ஒன்று வெற்றிடமாய் அவனருகே நின்று அவனது மனவேதனையை அதிகப்படுத்தியது.

கண்கள் சுவரில் இருந்த அந்த புகைப்படத்தில் நிலைபெற்றிருந்தாலும் மனதை ஓரிடத்தில் நிறுத்தும் மந்திரத்தை அவன் அறிந்திருக்கவில்லை.

அவனது தந்தையும், அத்தைகளும் அவர்களது குழந்தைப் பருவ வறுமையையும், அந்த வறுமையிலும் ஒரு தாயாக காடு மேடுகளில் உழைத்ததோடு வீட்டிலும் அயராது உழைத்த அவளது உழைப்பையும் தியாகத்தையும் கூற கேட்டிருக்கிறான்.

ஆயினும் அவன் அறிந்த அப்பாயி கணவனை இழந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் தனியாக கிராமத்து வீட்டில் வசித்தவர். பெரும்பாலும் அந்த வீடுதான் என்றாலும் சில நேரங்களில் அவன் இருந்த நகரத்து வீட்டிற்கும் வருவார். அதிகபட்சம் ஒரு மாதம் அதற்கு மேல் அங்கு அவள் தங்கி இருந்த நியாபகம் அவனுக்கு இல்லை.

கணவனும் தானும் உழைத்து சம்பாதித்த வீடுகள்,தோட்டம்,வயல் என அனைத்தையும் பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு அவர்கள் தரும் ஐநூறு ஆயிரத்தை எதிர்பார்த்து அவள் வாழ ஆரம்பித்து 20 வருடத்திற்கு மேல் இருக்கும்.

அவனது உயர்நிலைப் பள்ளி பருவத்தில் அவளை தாலாட்டுப் பாட சொல்லி கேட்டு ரசித்ததும்…

அவனது கல்லூரி காலத்தின் போது பதினைந்து நாட்களுக்கும் மேலாக குணமடையா காய்ச்சலுக்காக கிராமத்தில் இருந்து ஓடிவந்து முகத்தில் விபூதியை தூவிவிட்டு தன் பேரனுக்காக பூஜை அறையில் கடவுளுடன் சண்டையிட்டதும்…

அவனது திருமணத்திற்கு பெண் வீட்டார் வந்திருந்த போது என் பேரனை போல் உத்தமன் இந்த உலகில் இல்லை இவனுக்கு உங்கள் பெண்ணை தயங்காமல் கொடுங்கள் என்று சொன்னவுடன் உடனிருந்த ஒத்த வயதுடைய உறவினர்களும் நண்பர்களும் “நீ செல்லிகொடுத்தது போலவே பாட்டி பேசிவிட்டாள்” என்று கிண்டல் செய்தது என அவனது அப்பாயி உடன் சேர்ந்திருந்த பொழுதுகள் அவன் கண்முன் தோன்றி மறைந்தன.

அவனுக்கு எதிராகவோ மனம் வருந்தும் படியோ அவள் எதுவும் செய்த நியாபகம் அவனுக்கு இல்லை…

ஆனால் அவனோ அவளது இருப்பிலும் சரி இல்லாமையிலும் சரி பெரிய வித்தியாசத்தை இதுவரை உணர்ந்தது இல்லை.

அவனது திருமணத்தின் போதும் அவள் அந்த கிராமத்து வீட்டில் தனித்தே வாழ்ந்து வந்தாள். சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு அவளுக்கு கொடுத்த சில நூறு ரூபாயே அதிகபட்சமாக அவளுக்காக அவன் செய்தது.

இன்று தனிமையில் கழிவறையில் குனிந்து நீரை மொண்டு எடுக்க முடியாமல் பட்ட கஷ்டம் அவளது இறுதி கால தனிமையை அவனுக்கு நினைவுபடுத்தின…

காய்ந்த ஆரஞ்சு பழத்தின் தோல் போன்று சுருங்கிய தேகம். பகலிலும் எதிரே நிற்கும் மகனை கூட கஷ்டப்பட்டு அடையாளம் காணும் கண்கள். ஆனால் அந்த குரலில் இருந்த கம்பீரம் மட்டும் குறையவே இல்லை.

தினகரனின் மனைவியை பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது……

அவனது மூத்த அத்தையிடம் இருந்து அந்த தொலைபேசி வந்தது.

அப்பா எங்கே? அப்பாயிக்கு உடல் நலம் சரியாக இல்லை வந்து கூட்டி செல்லுங்கள் என்று.

தினகரன் தான் மருத்துவமனையில் இருப்பதையும் குழந்தை பிறந்த உடன் வரசொல்லுகிறேன் அது வரை பார்த்துகொள்ளுங்கள் என்றான். மூன்று மகன்கள் இருக்கும் போது நான் ஏன் பார்க்க வேண்டும் என்று பதில் வர என்ன செய்வது என்று புரியாமல் சரி என்றவாறு கைபேசியை துண்டித்து விட்டு அப்பாவை தேடினான்.

அப்பாவிடம் தெரிவித்தபோது…

அப்பாயிக்கு இருக்கும் கிராமத்திற்கு அருகில் இருந்த தன் அண்ணனிடமோ அல்லது தம்பியிடமோ தெரிவிக்குமாறு கூறினார்.

அவரது தம்பியோ ( தினகரனின் சித்தப்பா) தன் மனைவிக்கு சக்கரை வியாதி இருப்பதாகவும் இப்போது என்னால் பார்க்க முடியாது என்றும் கூற தினகரன் அதிர்ந்தே போனான்.

பெரியப்பாவிடம் பேசியபோது அவர் கூறிய பதில் அவனை நிலைகுலைய வைத்தது சொத்து பிரிக்கும் போது அண்ணன் என தனக்கு அதிகப்படியான சொத்தை கேட்டபோது மறுத்துவிட்டு இப்போது எதற்காக நான் முதலில் போய் நிற்க வேண்டும் என்றார்.

தன் அப்பாவிடம் தயவுசெய்து நீங்கள் சென்று அப்பாயியை நம் வீட்டிற்கு கூட்டி வந்து மருத்துவரிடம் காட்டுங்கள் இங்கு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினான். ஆனால் தினகரனின் தாயோ தன் பேரக்குழந்தையை பார்த்துவிட்டு தான் போவேன் என்று பிடிவாதம் பிடித்தாள். தினகரனுக்கோ மேல் இருந்த சுவர் இடிந்து தலையில் விழுந்தது போல் இருந்தது.

ஒருவழியாக அன்றே பேத்தி பிறக்க கஷ்டப்பட்டு அவர்களை அனுப்பி வைத்தான் தினகரன்.

மகள் பிறந்த மகிழ்ச்சியில் அவனும் அப்பாயியை பற்றி பெரிதாக வருந்தவில்லை போய் பார்கவும் இல்லை.

இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வயது முதிர்ச்சி ஒன்றும் செய்ய முடியாது என் மருத்துவர்கள் கூற அவனது அப்பாயி மருத்துவமனையில் இருந்து அவனது நகரத்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டாள்.

தினகரன் அப்பாயியை போய் பார்க்க முடிவு செய்து மறுநாள் தான் வருவதாக தந்தையிடம் தெரிவித்தான்.

அதற்கு அவனது தந்தை இங்கு இருந்து அப்பாயி இறந்தாள் என்றாள் அவளது இறுதி காரியத்துக்கு கூட இங்கு வரமாட்டேன் என்று தன் அண்ணன் கூறியதாகவும் அதனால் அப்பாயியை மீண்டும் கிராமத்தில் விடபோவதாகவும் கூறினார்.

அவர் வராவிடில் பரவாயில்லை நாமே பார்த்துக்கொள்வோம் தயவு செய்து கிராமத்தில் விடவேண்டாம் என்று கெஞ்சினான் தினகரன்.

அதற்கு அவன் அப்பா “உனக்கு ஒன்றும் தெரியாது நாளை ஏதாவது நடந்தால் அவனுங்க இரண்டு பேரும் (தினகரனின் பெரியப்பா மற்றும் சித்தப்பா ) நான் தான் கொன்றுவிட்டேன் என்று சொல்லுவார்கள். நீ பேசாமல் இரு என கூறிவிட்டார் கண்ணில் நீர் வழிய கைபேசியை துண்டித்தான்.

பின்புறம் எவனது தயவிலும் நான் இல்லை என்று எண்பது ஆண்டுகள் கம்பீரமாய் வாழ்ந்த அவனது அப்பாயினுடைய குரல் அதே கம்பீரத்தில் ஒலித்தது.

இப்ப எங்க கூப்பிடுகிறாய் என்றும்… என்னை விட்டுவிடுங்கள் நான் இங்கேயே இருந்து மடிகிறேன் இன்னும் இரண்டு நாள் தான் தூக்கி போட்டுட்டு வேலையை பாருங்கள் என்றாள்.

அம்மா கார் வந்திருக்கு வாமா என்று தினகரனின் தந்தை கூற, காரிலிருந்து உள்ளே நுழைந்த தனது கடைசி மகளை பார்த்தார்.

அவளது துணிமணிகள் உள்ள பெட்டியும் வண்டியில் ஏற்றப்பட எங்கு கிராமத்துக்கா என்றாள்.

“ஆம்” என்று பதில் வர அமைதியானாள்.

1.30 மணிநேரம் கிராமத்தை அடையும் வரை அவள் எதுவும் பேசவில்லை.

கிராமத்து வீட்டை அடைந்த உடன் அவரது கணவர் (தினகரனின் தாத்தா) விரும்பி அமரும் கட்டிலில் அமர்ந்தவாறு தன்னுடைய

கம்பீர குரலில்…

“எல்லா போயி அவுங்க அவுங்க வேலைய பாருங்க இருபத்து ஐஞ்சு வருசமா இல்லாம இப்பவந்துகிட்டு இங்க என்னத்துக்கு உக்காந்துகிட்டு … என்றவளது கருவிழி கண்ணின் மேல் நோக்கி நகர்ந்து இரு விழிகளிலும் நீர் வழிய கட்டிலில் சாய்ந்தாள்.

ஒரு முதிர்ந்த யானை தன் பலம் முழுவதும் கொண்டு அவன் நெஞ்சில் ஏறி மிதிப்பதைப் போன்ற கனத்தை அந்த நினைவுகள் அவனுக்கு தந்தது.

இயலாமையில் (முதுமையிலும்) தனிமையின் வலியை அறிந்து கதறி அழுதான் தினகரன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *