கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 34,766 
 
 

ஹேமாவதியைத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று நினைத்திருந்தேன். சென்றாலும், பெரிய கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும் ஒரு தீர்மானத்தில் நான் இருந்தேன். இரண்டு முடிவுகளையும் நான் மீறும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது.

இது இப்படித்தான். நான் எதையெல்லாம் செய்யக் கூடாது என்று என் டயரியில், டிசம்பர் மாதத்துக் கடைசி நாளில் எழுதி வைக்கிறேனோ, அதே காரியங்களை ஜனவரி முதல் தேதியிலிருந்தே செய்யும்படியாக ஆகிவிடும்.

என் நண்பர், அழகிய புதுவருஷத்து டயரி ஒன்றை எனக்கு அன்பளித்தார். டிசம்பர் மாதத்துக் கடைசி நாளில், இரவு முழுக்க விழித்திருந்து, மணி பன்னிரண்டைத் தொட்ட அந்த நிமிஷம், டயரியை எடுத்துப் புது வருஷத்துக்கு நல்வரவு கூறி ஒரு கவிதை எழுதினேன். பிறகு என் சங்கல்பங்களை எழுதினேன். என் சங்கல்பங்கள் கை விரல் எண்ணிக்கையில் அடங்குபவை. அவைகளில், நான் கடைசியாக எழுதியது இதுதான். ‘எந்தச் சந்தர்ப்பத்திலும் சுமதியை மீண்டும் எனக்கு நினைவுப்படுத்தும் இடங்களையோ, மனிதர்களையோ தேடி நான் போவதில்லை. என்னால் மீண்டும் அந்த வலி தாங்க முடியவில்லை!’

என்னை விடவும் வலிமை படைத்த கரம் ஒன்று, என் பிடரியைப் பிடித்து உந்தி, என்னை என் விருப்பத்துக்கெதிரான வழியில் நடத்திச் செல்கிறது என்றே நான் நம்புகிறேன். டிசம்பர் கடைசித் தேதி நான் எனக்கு விதித்துக்கொண்ட தடையை, ஜனவரி இருபதாம் தேதி மீறும்படியாக ஆனது. எனினும், எழுதி எழுதி மேற்செல்லும் விதியின் கையில், என்னை ஒப்புக் கொடுத்தபின் எனக்கு நிகழ்வது நன்மைகளாகவே இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் தஞ்சை அனுபவமும் அவ்வாறாகவே முடிந்தது.

ஜனவரி இருபதாம் தேதி என் மிக நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம் காரியமங்கலத்தில் நடக்க இருந்தது. தஞ்சாவூருக்கு மிக நெருங்கிய ஊர் அது. ஹேமாவதி கண்டிப்பாய் அத்திருமணத்துக்குப் போய்த்தான் ஆக வேண்டும் என்று அடம்பிடித்தாள். நானும் சம்மதித்தேன். எனக்கும் ஊர் சுற்றுவதில் இஷ்டம் உண்டு. பத்தொன்பதாம் தேதி காலையில் நாங்கள் புறப்பட்டோம். மாலை இருட்டும் நேரத்தில் ஊர் போய்ச் சேர்ந்தோம். களஞ்சேரி ஆற்றில் அதிர்ஷ்டவசமாகத் தண்ணீர் இருந்தது. குளித்தேன். ஆற்றில் குளிப்பது மட்டுமே குளியல். மற்றதெல்லாம் வெறும் கழுவல். இரவு கல்யாண வீட்டில் விழித்திருக்கும் இன்பத்துக்கென்றே மனிதர்கள் கல்யாணங்களுக்குச் செல்ல ஆசைப்படுகிறார்கள் என்றே நான் நம்புகிறேன். கல்யாண வீடுகளில் பெண்கள் புதிய முகம் பெறுவார்கள். புதுமையாகச் சிரிப்பார்கள். அவர்கள் அணியும் பட்டு, சலங்கையாய் மாறிச் சப்திக்கும். அவர்கள் சூடும் மல்லிகையோ, மனோரஞ்சித மலரின் மணத்தைப் பெற்று வித்தியாசமாய் மணக்கும்.

மறுநாள் காலை திருமணம் அழகாக நடந்து முடிந்தது. அப்புறம்தான் அந்த விபரீதக் கணங்கள் நிகழ ஆரம்பித்தன.

“ஏங்க! மதியம் சாப்பாடு எப்படியும் ஒரு மணி ஆகும். மணி இப்போ ஏழரைதானே ஆறது. எதுக்குச் சும்மா உட்கார்த்திருப்பது? தஞ்சாவூர் வரை போய் வரலாமே! இங்கிருந்து அஞ்சு மைல் இருக்குமா தஞ்சாவூர்? அரை மணியில் போய்ச் சேர்ந்துவிடலாம். புறப்படுங்கள்” என்றாள் ஹேமாவதி. என் குழந்தைகள் இருவரும் குதித்துக் கொண்டு கிளம்பினார்கள்.

நான் மறுப்பது சாத்தியமில்லை. விதியின் கரம் என் பிடரியில் பட்டுக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. பஸ்ஸில் அமர்ந்ததுமே சுமதியின் ஞாபகம் என்னைத் தின்னத் தொடங்கியது…

கரந்தை தமிழ்ச் சங்கத்தில் நான் படித்துக் கொண்டிருந்த காலம் அது. குதிரை கட்டித் தெருவில் ஓட்டு வீட்டின் மாடியில் நான் தங்கியிருந்தேன். காலை எழுந்ததும் உடனே எனக்குக் காபி தேவைப்படும். ஆகவே, ராமையர் கிளப்புக்கு நடந்து வருவேன். முத்து வேல் சேர்வைக்காரத் தெருவில் முதல் வீட்டை ஒட்டிய நகரசபைத் தண்ணீர்க் குழாயில் சுமதி தண்ணீர் பிடித்துக் கொண்டு நின்றிருப்பாள்.

கையால் அடித்து நீர் இறைக்கும் பம்பு கண்டுபிடிக்கவில்லை இன்னும். ஆகவே, குழாய்த் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தாலே தண்ணீர் வரும் மாதிரியான குழாயடியில்தான் சுமதியை நான் முதல் முதலாய்ச் சந்தித்தேன். தினம் காபிக்கு நான் வரும் போதெல்லாம் சுமதி அங்கே தண்ணீர் பிடித்துக் கொண்டு நின்றிருப்பாள். அந்த இடத்தைப் பொதுவாக நான் ஏழு மணிக்குக் கடப்பேன். சுமதி அப்போதும் அங்கு இருப்பாள். எனக்குக் காலை நான்கு மணிக்கு விழிப்புத்தட்ட ஆரம்பித்தது. ஐந்து மணிக்கு, ராமையர் எழுந்திருக்கும் முன்பேகூட, நான் அந்த இடத்தைக் கடந்தேன். சுமதி அப்போதும் அங்கு இருந்தாள். சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகுதான், சுமதி எனக்காகவே அங்கு நிற்பது எனக்குப் புரிந்தது. ஐந்து மணிக்கு நான் அவளைக் கடந்ததும், காபிக் கடைக்குச் சென்று ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு கப் காபிகள் அருந்தி, பேப்பர் கடையில் பேப்பர் வாங்கி மேய்ந்து, இரண்டு சிகரட்டுகளை வாங்கி, ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு, வெட்டாற்றங்கரைப் புதர் மறைவில் ஒதுங்கி, மீண்டும் திரும்பும் போதும் சுமதியைக் குழாயடியில் காண்பேன். ஒரு திருமணத்துக்குத் தேவைப்படும் அளவுக்கு, அவள் தண்ணீர் பிடிக்க வேண்டிய கட்டாயம் தினம் தினம் எனக்காக ஏற்பட்டமைக்காக நான் வருந்தாத நாள் இல்லை.

என் வகுப்பிலேயே செண்பக ராஜலட்சுமி, பரமேஸ்வரி, சீதா என்று கல்லூரிப் பேரழகிகள் இருக்கத்தான் செய்தனர். இவர்களில் யாருக்கும் இணையானவள் இல்லை இந்தச் சுமதி. எனினும் சுமதிதான் என்னைக் கவர்ந்தாள். அவர்கள் எவருக்கும் இல்லாத அழகொன்று அவளிடத்தில் நான் காண வாய்த்தது காரணமாக இருக்கலாம். சுமதியின் அழகை என் கண்களால் அல்லவா நீங்கள் காண முடியும்?

முதல் பார்வையில், என்னை மீண்டும் அவளைத் திரும்பப் பார்க்க வைத்தது அவள் தலை வகிடு என்று இப்போது யோசிக்கையில் தெரிகிறது. பெண்கள் நடு நெற்றிக்கு மேலே வகிடெடுப்பார்கள். அவள் கொஞ்சம் தள்ளி இடப்பக்கம் வகிடெடுத்திருந்தாள். கூந்தல் சுருள் சுருளாக, கேரளத்துப் பெண்கள் மாதிரி கருத்து, மின்னி, அடர்ந்து, செழித்து, பொங்கி, புரண்டு, குழைந்து, தவழ்ந்து தொங்கியது இரண்டாவது ஈர்ப்பாக இருக்கும். அசாதாரணமான கூர்மை பெற்ற நாசி, அழித்து நான்கு கண்கள் செய்யலாம் எனத் தோன்றும் இரண்டு மையுண்ட பெரிய விழிகள். இடது விழியில் வெள்ளைப் பகுதியில் ஒரு சிறு கருத்த மச்சம். கண்கள் பொதுவாகப் பழுப்பு நிறத்தில் இல்லாமல், கொஞ்சம் வெளுத்திருந்தது என் மூன்றாம் கவர்ச்சி. சின்னஞ் சிறிய, ஒழுங்கில் அமைந்த பற்கள். மென்மையான, கொஞ்சம் ஒல்லி எனச் சொல்லத்தக்க, பழுப்பு நிற தேகம். இவைகள் அவளிடம் இருப்பது. ஆனால் இவைகளே அல்ல சுமதி. நிறைய மீதமாய் இருந்தாள் அவள். பெண், அவள் உறுப்புகளுக்குள் இல்லை. அவைகளைத் தாண்டி பிறிதொன்றில் இருக்கிறாள்.

சுமதிக்கும் எனக்குமான காதல் வாழ்க்கை தொடங்கிய அந்த நாள் தொட்டுப் பின் நேர்ந்த அனைத்துச் சம்பவங்கள் பற்றியும் நான் என் டயரிகளில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் எங்கள் உறவில் முன் கை எடுப்பவள் சுமதியாகத்தான் இருந்தாள். ஒருநாள் மதியம் கல்லூரி விட்டு நான் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். சுமதி அவள் வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்தாள். என்னை நோக்கி ஒரு பொருளை விட்டெறியக் கண்டேன். அது தகரத்தால் ஆன சின்னஞ்சிறிய கண் மை டப்பா. அந்தக் காலத்து மை டப்பாக்கள் சின்னஞ்சிறிய குமிழிகளாகத்தான் இருந்தன. பரபரப்புடன் அதை எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன். அவளிடமிருந்து எனக்கு வந்த முதல் கடிதத்தைப் போல, அதற்குப் பிறகு எனக்குக் கிடைத்த முதல் பொருள் அந்தக் கண் மை டப்பாதான். அறை சேர்ந்ததும் திறந்து பார்த்தேன். ஒரு துண்டுக் கடிதத்தில் நுணுக்கி நுணுக்கி இரண்டு வரிகள் எழுதியிருந்தாள். எனக்கு இதயம் மிக வேகமாக அடித்துக் கொண்டது. உடம்பு சில்லிட்டது. வியர்த்தது. பரபரத்தது. மதியத்துக்குப் பிறகு இருந்த கல்லூரி வகுப்புகள் தலைமுடிக்குச் சமமாக எனக்கும் தோன்றியது. மூன்று மணிக்கெல்லாம் நான் பெரிய கோயிலில் இருந்தேன்.

ஏழு இருபத்து மூன்றுக்கு சுமதி, அவள் எப்போதும் விரும்பியுடுத்தும் ஊதா நிறச் சேலை, ரவிக்கையுடன் கோயிலுக்கு வந்தாள்.

முதலில் பெரு உடையார் சந்நிதிக்கும், பிறகு தாயார் சந்நிதிக்கும் சென்று வணங்கினாள். அதற்குப் பிறகு பிரகாரம் சுற்றினாள். பிரகாரத்தில் சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு இருட்டு அறைகள் பல இருக்கின்றன. ஒன்றின் முன் நான் நின்றிருந்தேன். மூன்று முறை சுற்றிய பிறகு என் அருகில் வந்தாள். நாங்கள் அந்தச் சிவலிங்க அறைக்குள் புகுந்து கொண்டோம்.

எங்களுக்குள் பேச ஒன்றும் இல்லை. பேசித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஒன்றும் இல்லை. அவள் கைகள் சூடாக இருந்தன. எனக்கு மட்டும் தான் உடம்பு நடுங்கியது. ஆண்டாளுக்குத் திருமாலின் இதழ்ச்சுவை அறியும் பாக்கியம் கிட்டவில்லை. ஆகவே தான் அவளுக்குச் சந்தேகங்கள் இருந்தன. திருமாலின் வாய் மணம் கற்பூரம் போல் இருக்குமோ, தாமரைப் பூவினது போல் இருக்குமோ, இதழ் தித்திப்பாய் இருக்குமோ என்றெல்லாம் ஐயப்பாடுகள் எழுந்தன. எனக்கு ஐயம் இல்லை. நான் சுமதியின் இதழ்ச் சுவையையும் மனத்தையும் அறிந்தேன். கொய்யாப்பழ வாசனையை உடையதாய் இருந்தது அவள் வாய். துவர்ப்பின் முதல் கட்டச் சுவையாகவும் அது இருந்தது.

தஞ்சையில் பார்க்கத்தக்க இடங்கள் பல. நாங்கள் சரஸ்வதி மகாலையும், சரபோஜி தர்பாரையும், சிவகங்கைப் பூங்காவையும் பார்த்தோம். அப்புறம் பெரிய கோயிலுக்கும் போகத்தான் வேண்டும் என்றாள் ஹேமாவதி. அவள் வார்த்தைகளை நான் என்று மீறினேன்? போனோம். உள்ளே நுழையும் போது எனக்கு மயிர்க் கூச்சல் எடுத்தது. அரை உயிர் வாசி மாதிரி நடந்து போனேன்.

அந்தச் சிவலிங்க அறை இன்றும் அப்படியேதான் இருந்தது. அந்த இடத்தைக் கடந்து எனக்கு நடக்கும் சக்தி இல்லாமல் போயிற்று. கால் துவண்டது. அப்படியே தரையில் அமர்ந்து விட்டேன்.

ஹேமா பதறிப் போனாள்.

‘என்னங்க! என்ன ஆச்சு?’ என்றாள்.

சுமதியைப் பற்றி அவள் அறிவாள். அவளை நான் முதல் முதலாக உடம்பாலும் அறிந்த இடம் அதுதான் என்று சொல்லி, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொன்னேன். அமைதியாகக் கேட்டிருந்துவிட்டு, பிறகு மென்மையாகச் சொன்னாள்.

‘சரி, எழுங்க போகலாம்’ என்று என் கையைப் பற்றி நான் எழத் துணை புரிந்தாள்.

இருபத்தொன்றாம் தேதி நாங்கள் பாண்டிச்சேரி மீண்டோம். அன்று இரவு. ஹேமா எனக்கு முதுகைக் காட்டியபடி படுத்திருந்தாள். அவளை அவ்விதமாகவே அணைத்துப் புறங்கழுத்தில் முத்தமிடுகையில்தான் கவனித்தேன். அவள் கண்களில் கண்ணீர் இருந்தது.

“எதற்கு அழவேண்டும், ஹேமா?”

அவள் மெளனம் சாதித்தாள்.

“நீ விரும்பியபடிதான், ஒரு மாற்றத்துக்காகவும் இருக்கட்டும் என்று தஞ்சாவூருக்குப் போய் வந்தோமே, அப்புறம் என்ன குறை?”

அவள் கரகரத்த குரலில் சொன்னாள்.

“குறைதான். தஞ்சாவூரில் நீங்கள் என்னுடனா இருந்தீர்கள்? சுமதியோடதானே? மனம் முழுக்க சுமதியை அல்லவா சுமந்து கொண்டு திரிந்தீர்கள். என் வருத்தமெல்லாம்…”

“சொல்”

“நான் என் கணவருடன் பயணம் செய்ய வில்லையே என்றுதான்”

எனக்கு வருத்தமாக இருந்தது. நான் சொன்னேன்.

“உனக்கும் எனக்கும் இடையில் எந்த ரகசியமும் இருந்துவிடக்கூடாது என்று எனக்குத் தோன்றியது ஹேமா. இருந்து விட்டால், அது கண்ணுக்குள் துரும்பு மாதிரி உறுத்தும். துரும்பு சிறியதுதான். ஆனாலும் அது இருப்பது கண்ணில் அல்லவா?”

அவள் சொன்னாள்.

“சுமதியைப் பற்றி என்னிடம் ரகசியங்கள் இன்றிப் பகிர்ந்து கொண்டீர்களே, அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், உங்களை ஒன்று கேட்கிறேன், ஒளிக்காமல் பதில் சொல்லுங்கள். இதுபோல எனக்கு ஒரு கிருஷ்ணமூர்த்தியோடோ, கேசவனோடோ, கணேசனோடோ இருந்து, அதை நான் உங்களுக்குச் சொன்னால், நீங்கள் அதைத் தாங்கி கொண்டு, மீண்டும் முன் போல் என் மீது அன்பு செலுத்துவீர்களா?”

நான் மிகவும் யோசித்தேன். பிறகு சொன்னேன்.

“அன்பு செலுத்துவேன். ஹேமாவதி! உனக்கு இந்த மாதிரி ஒரு அனுபவம் வாய்த்திருந்தால் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன். அது தீக்குள் விரலை வைக்கிற அனுபவம். தீதான் அது, அதைத் தீண்டினால் சுடும். ஆனால் வலிக்காது, கை பொசுங்காது. அது ஒரு பேரனுபவம்”.

அவள் என்னையே விழியகலப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் தொடர்ந்தேன்.

“ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஒரு ஹோமகுண்டம் இருக்கிறது. அங்கே ஒவ்வொருவரும் ஒரு வகைத் தீயை வளர்க்கிறார்கள். தீ எதுவாகவும் இருக்கலாம். அதை வளர்க்க வேண்டியது மட்டுமே முக்கியம். தீயை அணையாமல் காக்க வேண்டியது அதைவிட முக்கியம். எனக்கு சுமதி ஒரு தீ. உனக்கு வேறு ஏதோ ஒன்று. எந்த ரூபமானால் என்ன? தீயின் தன்மை ஒன்றுதானே? அதை வளர்த்து வருவது அவசியம். தீ இல்லையென்றல் ஹோமகுண்டம் இருந்து பயனில்லை. தீ அணைந்து போமாகில், உயிர் அணைந்தது என்றே அர்த்தம்.

அவள் என்னை நீண்ட நேரம் உற்றுப் பார்த்தவாறு இருந்தாள். பிறகு என் தோளில் தன் கையைச் சுற்றிக் கொண்டாள். இந்த அனுபவமும் அந்த அனுபவம் போலவே இருந்தது. காதலும் தீ மாதிரிதான். தீ அனைத்தும் ஒரு தன்மையையே கொண்டவை அல்லவா?.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *