அன்னயாவினும் புண்ணியம் கோடி…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 31, 2021
பார்வையிட்டோர்: 6,315 
 
 

சூரியனின் சோம்பலான மஞ்சள்நிறக் கிரணங்கள், இப்போது தான் கீழ்வானைத் தடவத் துவங்கியிருந்தன.

ஆனால், புதுப்பட்டிக் கிராமமோ எப்போதோ எழுந்துகொண்டு சுறுசுறுப்பை உலவ விட்டிருந்தது.

அப்படி இருந்தால்தான் முடியும்.

நடுத்தர வர்க்கமும், அடித்தட்டு மக்களுமாய் நிரம்பி வாழ்கிற ஊருக்கு, சோம்பலைக் கொண்டாடவெல்லாம் நேரமும் கிடையாது, அது மாதிரியான சிந்தனையும் வராது.

எழுந்து கொண்டதுமே வியர்வை சிந்தத் தயாராகி விடவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் நகரும். நகர்த்தவும் முடியும்.

சின்னத்தாயும், சில பெண்களுமாய் மலைப்பகுதியை நோக்கி நடக்கிறார்கள்.

ஃபாரஸ்ட் வாச்சர் பொன்னையா கருணை காட்டினால், தலை கனக்கும் விறகுக் கட்டுகளோடு திரும்பி, பொழுது சாயும் முன் ஏதோ கொஞ்சம் சம்பாதிப்பார்கள்.

கால்களில் சாக்குத் துண்டுகளும், துனிச் சுருணைகளும் மொந்தையாய்ச் சுற்றப்பட்டுள்ளன. கொளுத்துகிற மதிய வெயிலுக்கு இவைதாம் பாதுகாப்பு.

வாச்சர் பொன்னையா சமயத்தில் திருகுதாளமும் பண்ணுகிற ஆள். அந்த வேளையில் அடிவாரத்திலுள்ள சீமைக்கருவேல மரத்துடன்தான் போராட நேரும்.

பீஷ்மரின் அம்புப் படுக்கை அவர்களுக்கும் அங்கு வாய்க்கும்.

அப்படிக் கஷ்டப்பட்டாவது எதையாவது கொண்டு வந்தால்தான், செட்டியார் கடைக்குப் போய் மளிகைச் சாமான் என்று வாங்கி வர முடியும். அழுகிற பிள்ளைகளுக்கு அரை வயிற்றுச் சோறாவது போட முடியும்.

ஓரிரு கறவை மாடுகளோடு சிலர் தோட்டத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். காடே காய்ந்து கிடக்கிறது. வருணபகவானிடம் இரக்கமே அற்றுப் போனது போல் வறட்சி.

குடிதண்ணீர் தேடிப் பெண்கள் குடங்களோடு அலைகிறார்கள்.

ஒரு சில தோட்டங்களில்தான் சற்றே பசுமை தெரிகிறது. கொஞ்சம் காய்கனிச் செடிகளும், கீரைகளும்தான்! டவுனில் விலை போக்குவார்கள்.

கைத்தொழில் என்று இங்கு எதுவும் கிடையாது. விவசாயம் மட்டும் தான். இரண்டு டெய்லர்கள் இருக்கிறார்கள். ஒட்டுப் போட வருபவர்கள்தான் அதிகம். முகஞ்சுளிக்காமல் தைத்துக் கொடுப்பார்கள். கஷ்டப்படுகிற ஜனங்களுக்கு, கஷ்டப்படுகிறவர்கள் தான் உதவுவார்கள்.

ஊரின் எல்லையில் தில்லையம்மன் கோவில். கோவிலை ஒட்டிய ஓட்டுப்புரைதான் பூசாரி கிருஷ்ணவேளார் குடியிருப்பு.

கரையடிச் சுடலை போன்று நெடுநெடுவென்று உயரமாய்த் தாட்டியமாய் இருப்பார். குருதிச் சிவப்பில் வேட்டியும், கழுத்தில் ஒற்றை ருத்ராட்சமணியும், பனங்கொட்டை அளவில் கொண்டையுமாய், பெரிய மீசையுடன் பார்க்கவே வித்தியாசமாய் இருப்பார்.

பெரிய குங்குமப் பொட்டும், உருட்டு விழிகளுமாய் ஓர் அச்சத்தை உண்டுபண்ணுகிறவராய் இருப்பார்.

அம்மன் கோவில் மண்மதில்கள் சிதைந்து கிடக்கின்றன. வன்னி மரமே கூரையாய், அருஉருவ வடிவில் அதன் கீழ் அமர்ந்திருக்கிறாள் அம்மன்.

செவ்வக வடிவமான கல்லை நட்டு, அம்மனை அதில் ஆவிர்ப்படுத்தியிருக்கிறார்கள்.

மொழுமொழுவென்று எண்ணெய் தடவி, மஞ்சளையும் குங்குமத்தையும் அப்பி, கண்மலர்கள் பதித்து, செவ்வாடை சார்த்தி, அரளிப்பூ மாலைபோட்டு அம்மனை அலங்காரம் செய்திருக்கிறார் வேளார்.

ஆடிமாதம் கடைசிச் செவ்வாயன்று கொடை விழா நடத்துவார்கள்.

போன வருடக் கொடையின் போது, கோமரத்தாடி சிதம்பரக் கோனார் அருள் வாக்குச் சொல்லும்போது அம்மனுக்குக் கோயில் இல்லை, சிலை இல்லை, சுற்றுமதில் இல்லை என்றெல்லாம் கூறி ஆடினார்.

ஊர்மக்கள் சார்பில் அம்மன் கொண்டாடி முன்பாகக் கை கட்டி நின்ற முத்தையாத்தேவர், வெகு சீக்கிரமே கோவில் கட்டி, சிலை வைத்து வழிபடப் போவதாக வாக்குக் கொடுத்தார். திருப்தியோடு அம்மனும் மலை ஏறினாள்.

கொடை முடிந்ததும் வந்த பௌர்ணமி இரவில் ஊர்க் கூட்டம் போட்டார்கள். ஒவ்வொரு பௌர்ணமி இரவிலுமே புதுப்பட்டியில் ஊர்க்கூட்டம் போடுவது வழக்கம்தான்.

அம்மனே வாய்திறந்து கேட்டபிறகு பேசாமல் இருக்கக் கூடாது என்று ஊரார் எண்ணினர்.

சின்னதாய் ஒரு விமானம் அமைத்து, அதன் கீழ் கருவறையும் கட்டி, தில்லை அம்மன் சிலையை மயிலாடி சிற்பக்கூட மொன்றில் செய்து வாங்கி, பிரதிஷ்டை பண்ணிக் குடமுழுக்கும் நடத்துவதாகப் பேசித் தீர்மானித்தனர். இதற்கெல்லாம் பத்துப் பதினைந்து லட்சங்கள் ஆகும் என்ற போது, மலைத்துப் போயினர்.

தீபாவளி, அம்மன் கொடை என்று வருகிறபோது புது உடைகள் வாங்கிக் கொண்டாடவே திணறுகிற மக்கள், எவ்வாறு பெருந்தொகையைத் திரட்டமுடியும்?

250 வீடுகள் கொண்ட புதுப்பட்டி, ஏழை எளியவர்கள் வாழும் கிராமம். பொருளாதார வசதியில் எவரும் இல்லை. உழைப்பின் சாரம் முழுவதும் இழுபறியான வாழ்வுக்கே போதாத நிலை. இந்த நிலையில் கோவில் கட்ட நிதி திரட்டுவது எப்படி?

ஆளுக்கொரு யோசனைகளாய்ச் சொன்னார்கள். எதுவுமே பொருத்தமானதாகப் படவில்லை.

அனைவருக்குமே கோவில் கட்ட ஆர்வம் தான். ஆனால் வழிதான் புலப்படவில்லை.

***

அப்போது போஸ்ட் மாஸ்டர் புன்னைவனம் எழுந்து நின்றார். அனைவரின் பார்வையும் அவர்மீதே குவிந்தன.

“எனக்கு ஒரு யோசனை தோணிச்சு. பிடிச்சாப் பாருங்க” என்று கூறிவிட்டு அனைவரையும் ஒரு சுற்றுப் பார்த்தார்.

“சொல்லுங்க , சொல்லுங்க” என்றனர் அனைவரும்.

சிறிது செருமிக் கொண்டபின் கூறத் துவங்கினார்.

Uma Kalyani - Annyavinum Punniyum-pic“இப்ப நான் சொல்லப் போற காரியம் எல்லாருக்கும் கஷ்டமாத்தான் தெரியும். ஆனாலும் வேற வழி தெரியலே. ஒவ்வொரு வீட்லயும் ஒரு உண்டியல் வைங்க. ஒவ்வொரு மாசமும் ரூபாய் நூறுக்குக் குறையாமல் அதிலே போடுங்க. இல்லாட்டி போஸ்டாபீஸ்ல அக்கவுண்ட் தொடங்கி அப்பப்ப அதுல ரூபாய் போட்டுட்டு வாங்க. வட்டியும் சேரும். ஒரு அஞ்சு வருசம் கழிச்சு எல்லார் கிட்டயும் ஒரு தொகை சேர்ந்திருக்கும். அதை வச்சு அம்மன் கோவிலைச் சூப்பராய்க் கட்டிறலாம்” என்றார். “அஞ்சு வருசமா?” என்று ஒருவர் கேட்டார். “பின்னே வேறவழி? போஸ்ட் மாஸ்டர் ஐயா சொல்றாப்ல சேமிப்போம். அதான் நடக்கிற காரியம். சிறுகக் கட்டி பெருக வாழ்ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க?” என்றார் வேறொருவர் எழுந்து.

கூட்டத்தினர் கருத்துப் பரிமாற்றம் செய்ததால் கசமுசவென்று சப்தம் உண்டானது. பேசினால்தானே மன அபிப்ராயங்கள் வெளிப்படும்.

சிதம்பரம் கோனார் எழுந்து நின்றதும், பேச்சுச் சப்தங்கள் காணாமற் போயின.

“காரியங்கள் கச்சிதமாய் நடந்துரும். தினசரி ரெண்டு ரூவா, மூணு ரூவான்னு உண்டியல்ல போட்டு சேமிச்சிட்டா, மாசம் பொறந்ததும் சேர்ந்ததை எடுத்து போஸ்டாபீஸ்ல போட்ருவோம். பணம் திரட்ட இதான் சுளுவான வழி. இப்படிச் செய்யலாமில்ல?” என்று கேட்டார். “ஓ! இதான் சுளுவான வழி!” என்றது கூட்டமும். “இதுல யாருக்காச்சும் மாற்றுக் கருத்து இருந்தால் எழுந்து நின்னு சொல்லுங்க” என்றார்.

அப்போது ஊர்ப்பகடை குருசாமி எழுந்து நின்றான். கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு, மிகவும் பவ்யமாக நின்றான்.

அங்குள்ளோரின் பார்வைக் குவியத்தில் நின்றான்.

“என்னப்பா ஊர்ப்பகடை, என்னவோ சொல்ல எண்ணுறே போல்ருக்கே. சொல்லுப்பா” என்று ஊக்கினார் கிருஷ்ணவேளார்.

“சாமீய், அது வந்துங்க, எனக்கு வருமானம் கம்மிங்க. கைல காசு புரள்றது கஷ்டம்ங்க. ஒரு செருப்பை ஒக்கிட்டுக் குடுத்தா என்ன கெடைக்கும்னு ஒங்களுக்குத் தெரியுமில்ல! அதான் சாமி ஒங்க யோசனைப்படி போஸ்டாபீஸ்ல பணம் போட முடியுமான்னு தெரியல. அதனாலே நான் என்ன பண்ணனும்னு நீங்க தான் சொல்லணும்…..” என்று கூறிவிட்டு, பயம் விரவிய பார்வையில், கூட்டத்தாரை ஒரு பார்வை சுற்றிப் பார்த்தான்.

கூட்டத்தில் மெல்லிய சலசலப்பு.

அவன் கூறுவது உண்மைதான்.

முக்கால்வாசி நாளும் அவன் வீட்டில் சமைப்பதே இல்லை. அவன் மனைவி பொம்மி முறைவைத்து, “ராச்சோறு” வாங்கி வருவாள். அதுதான் பெரும் பாலும் சாப்பாடு – குருசாமிப் பகடை, பொம்மி , அவர் களின் ஒரேமகன் மதுரைவீரன், அண்டிக் கிடக்கும் பெட்டைநாய் என்று நாலு ஜீவன்களுக்கும் அந்த ராச்சோறுதான். ஏதோ ஒப்பேற்றிக் கொள்கிறார்கள்.

அதனால் குருசாமி கூறுவது போல் மாதம் ஒரு தொகை ஒதுக்கிச் சேமிக்க இயலாதுதான். போஸ்ட்மாஸ்டர் எழுந்து நின்றார். “குருசாமி சொல்வது உண்மை தான். செருப்புக்களை ஒக்கிடும் வருமானம் மிகமிகக் குறைவு. அதனால் அவனை மட்டும் விட்டுவிடலாம்” என்றார். கூட்டம் அமைதியாக இருந்தது.

இது எல்லோருக்கும் தெரிந்திருக்கிற உண்மைதானே!

“இப்ப நீங்கல்லாம் அமைதியாய் இருக்கிறதைப் பார்க்கிறப்ப, குருசாமியை விட்றலாம்னு தான் தோணுது..” என்றார் கிருஷ்ண வேளார்.

“ஆமாம், ஆமாம். விட்றலாம்” என்றனர் கோரஸாக. எங்கிருந்தும் மாற்றுக் கருத்தே எழவில்லை.

“ஆமா, ஊரே ஒத்துக்கிடுச்சு. நம்ப ஊர்ப் பகடைக்கு தாம் விதி விலக்குக் குடுக்கிறோம். மற்றவங்க எல்லாரும் சேமிப்புத் திட்டத்திலே சேர்றோம். பகடை முடிஞ்ச அளவு தரட்டும். அவன் பங்கும் இருக்கணுமில்ல…” என்றார் சிதம்பரக் கோனார்.

“இது இப்படியே இருக்கட்டும். இதான் நல்ல முடிவு” என்றார் கிருஷ்ண வேளார்.

கூட்டம் அமைதியாக இந்த முடிவை ஏற்றுக்கொண்டது…

***

ஐந்து ஆண்டுகளும் ஓடிவிட்டன.

அடுத்த வாரத்தில் அனைவரின் சேமிப்புப் பணங்களும் வந்துவிடும்.

போஸ்ட் மாஸ்டர் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

பணம் வந்ததும் கோவில் வேலைகளை ஆரம்பித்து விடவேண்டும் என்று போன பௌர்ணமியன்றே முடிவு பண்ணியிருந்தார்கள்.

கிராமமே உற்சாக மிதப்பில் இருந்தது.

தில்லையம்மன் கோவில் புதுப்பட்டிக்கே அழகு தரப் போவதாக ஒவ்வொரு வரும் திருப்தியில் இருந்தனர்.

ஆவணி முதல்வாரமே வேலை துவங்குவதாக இருந்தது.

பணஉதவியோடு, வீட்டுக்கு ஒரு நபர் நின்று வேலைகள் செய்வதாக ஏற்பாடு. இதனால் செலவும் குறையும், வேலையும் துரிதமாக நடைபெறும் என்று எண்ணினார்கள்.

உண்மைதானே!

ஊர்க்கூட்டம் உற்சாகமாய்க் கூடியிருந்தது.

பெளர்ணமி நிலா பாலாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

கிருஷ்ண வேளாரும், சிதம்பரக் கோனாரும் கோவில் கட்டுவது பற்றிய திட்டங்களைக் கூற, மக்கள் ஒப்புதலாகத் தலையாட்டியபடி இருந்தனர்.

அப்போது குருசாமிப் பகடை மட்டும் எழுந்து, பவ்யமுடன் கைகட்டிக் கொண்டு நின்றான்.

“என்னப்பா பகடை, என்ன விஷயம்? சொல்லு” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் போஸ்ட் மாஸ்டர்.

“நீங்கல்லாம் பெரிய மனசு பண்ணி என்னை மன்னிக்க வேணும்” என்று பணிவோடு வேண்டினான் பகடை.

“அப்படி என்ன தப்பைப்பா பண்ணிட்டே நீ?” என்று கேட்டார் கிருஷ்ண வேளார்.

“நம்ப ஊர்ல நீங்க எல்லாரும் ஒரு வீடு பாக்கியில்லாம சேர்ந்து பங்கு போட்டு, அம்மன் கோவிலைப் புதுப்பிக்கப் போறீங்க. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்த கூட்டத்துல, நான் மட்டும் சமபங்கு தராண்டாம், ஏண்டதத் தந்தாப் போறும்னு பெரிய மனசு பண்ணிச் சொன்னீங்க. நானும் சரின்னுட்டுப் போய்ட்டேன். ஆனா… இப்ப… இப்ப…” என்று திணறலாய் நின்றான்.

“இப்ப அதுக்கு என்னாச்சு?” என்று கேட்டார் சிதம்பரக் கோனார்.

“நானும் அப்பவே பிடிச்சு உண்டியல்ல காசு போட்டுக்கிட்டே வந்தேன். நேத்திக்கு எடுத்து எண்ணிப் பார்த்தமுங்க. ஆறாயிரம் ரூவாய் இருந்திச்சு. என் பங்கும் கோயிலுக்குச் சேருதுன்னு சந்தோசப்பட்டேனுங்க. ஆனா… ஆனா…”

“ஆனா என்னடா குருசாமிப் பகடை?”

“இப்ப அதைக்கூடத் தர முடியாம ஆய்டுச்சுங்க. எம்மவனுக்கு இப்ப அந்தப் பணம் வேணும்கான்” என்றான் சோகமான குரலில்.

“அவனுக்கு இப்ப பணம் எதுக்காம்?”

“இப்ப ப்ளஸ் டூவுல நிறைய மார்க் வாங்கினான்ல்ல, மேலே படிக்க ‘நீட்’ பரீட்சை எழுதினாங்க. டாக்டருக்குப் படிக்க இடம் கிடைச்சிருக்கு. அந்தச் செலவுக்கு வேணுன்னு சொல்தான்.”

போஸ்ட் மாஸ்டர் வாய்விட்டுச் சிரித்தார்.

திணறலோடு திக்கிக் கொண்டே கேட்டான் குருசாமி, “ஏனுங்க ஐயா சிரிக்கிறீங்க?” என்று.

“இந்த ரூபாய வச்சுக்கிட்டு மகனை டாக்டருக்குப் படிக்க வைக்கப் போறதாச் சொல்றியே! அதான் சிரிப்பு.”

“அப்ப இந்த ரூபாய் பத்தாதுங்களா?”

“ஐயோ பகடை, அதுக்குப் பல லட்சங்கள் வேணுமேப்பா.”

“ஐயையோ, அவ்வளவுக்கு நான் எங்கே போவேன்? பயலும்ல்லா வெவரம் கெட்ட பயலா இருந்திருக்கான். இவன் போயி டாக்டருக்குப் படிக்க ஆசைப்படலாமா? மூனுவேளை சோத்துக்கே வழிஇல்லே. இதுல போயி லட்சக் கணக்குல பணம் புரட்டுறதா? பேசாம என்னாட்டமே கத்தி, தோலை எடுடா. செருப்புத் தச்சுப் பிழைடான்னு சொல்லிறப் போறேன்….” என்ற குருசாமியின் குரலே இறந்திருந்தது.

சற்றுமுன் தென்பட்ட அவனது மகிழ்ச்சியான முகம் குருதி வடிந்த முகம் போல் இருந்தது.

மகனது ஆசை மண்ணாகிப் போன விரக்தி!

செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் என்றால் நல்லவை எதற்கும் ஆசைப்படக்கூடாது போலும்.

சட்டென்று முகம் மாறினான் குருசாமி.

அதில் ஓர் உறுதி வந்து அப்பியிருந்தது.

மகனின் ஆசை நிறைவேறவழியில்லை, தான் சேமித்ததன் நோக்கமாவது நிறைவேறட்டுமே என்கிற பெருந்தன்மையான எண்ணத்துடன், “அப்ப ஆறாயிரம் ரூபாயையும் திருப்பணிக்கே தந்துடறேனுங்க. எம் பங்கும் இருக்குமில்ல! மகனைப் படிக்க வைக்கப் பணம் போதாது. பயன்படாது. அப்புறம் சேமிச்ச காரியமாவது நடைபெறட்டுமே” என்றான் பகடை.

அனைவரும் குருசாமியை நிமிர்ந்து பார்த்தனர். மகன் படிப்பதற்கு உதவுமென்றால் கோவிலுக்குச் சேர்த்த பணத்தை மகனுக்குக் கொடுக்கவும் தயாராகிவிட்டான். அதற்கு அப்பணம் போதாது என்று தெரியவந்ததும், அதை வேறு விதங்களில் தனக்குப் பயன்படுத்திக் கொள்கிற சுயநலம் இல்லாமல் திருப்பணிக்கே செலவிடத் தயாரான காரணம் அவனை உச்சத்தில் உட்கார வைத்துவிட்டது.

மகனுடைய வேறு படிப்பிற்கு எதற்கேனும் பயன்படலாமே என்றெல்லாம் எண்ணாமல், இப்படிக் கொடுத்துவிட முடிவுபண்ணுகிற மனம் என்ன சாதாரணமானதா?

பணம் படைத்தவன்கூடச் சலுகையைப் பயன் படுத்திக் கொண்டு சுயநலத்தோடு செயல்படுவானே தவிர, இப்படிப் பட்ட முடிவிற்கு வரமாட்டான். ஊர்ப் பகடையோ? அனைவரின் மனங்களிலும் குருசாமியைப் பற்றிய இந்த உயர்ந்த எண்ணமே உருவாயிற்று. அப்போது சிதம்பரக் கோனார் எழுந்து நின்றார்.

அழுத்தமான ஒன்றைச் சொல்வது போல் நின்றார்.

“இவ்வளவு அருமையான மனசை உடைய நம்ப கர்ப் பகடைக்கு, டாக்டராகத் தகுதி படைச்ச ஒரு மகனை அம்மன் கொடுத்திருக்கிறாள். ஆனால் பகடையோட வறுமை அந்தப் பாக்கியத்தை அடைய விடாமல் தடுத்திரும் போல்ருக்கே. அதனாலே, எனக்கொரு யோசனை தோணுது. சொல்லவா?” என்று அனுமதி கேட்டார்.

ஒருகணம் அமைதியில் அழுந்திய கூட்டம், மறுகணமே,

“சொல்லுங்க கோனாரே!” என்று கோரஸாகக் கூவியது.

திடல் முழுவதும் அவர்களின் குரல் எதிரொலித்து அடங்கியது.

தொண்டையைச் சற்றுச் செருமிக்கொண்ட சிதம்பரக் கோனார், “முதலாச் சாதனை பண்ணி, ஊர்ப் பெருமையை உயர்த்தி, டாக்டருக்குப் படிக்கிற பாக்கியத்தை அடைஞ்சிருக்கான். அவன் டாக்டரானால் நம்ப ஊருக்கே பெருமை! நாட்டுக்கும் நல்லது. அப்படி அவன் டாக்டராய் வர்றதை எல்லாரும் விரும்புறீங்கல்ல?” என்று கேட்டார்.

“ஆமாம், விரும்புறோம்” என்று சந்தோசமாய் ஆமோதித்தது கூட்டம்.

“அப்ப, பகடையாவே பண்ண முடியாததை நாம்ப பண்ணணும். டாக்டராக்கணும்.”

“அதுக்குப் பணம்?” என்று ஒரு குரல் வினா எழுப்பியது,

“அதான் நம்ப கிட்டே லட்சம் லட்சமாய்ப் பணம் இருக்கே. கோவில் திருப்பணிக்குன்னு சிறுகச் சிறுகச் சேர்த்து வச்சிருக்கிறோமில்ல. அதை வச்சுப் படிக்க வைப்போம்” என்றார் சிதம்பரக் கோனார்.

“ஐயையோ, அது அம்மன் பணம்! அதை எடுக்கிறது தப்பு” என்றது ஒரு குரல்.

“தப்புத்தான், ஆனால் ஒரு நல்லது நடக்கணும்கிறதுக்காக ஊரே கூடி நின்னு பண்ற தப்புத்தானே! இதை அம்மனே மன்னிச்சு, நமக்கெல்லாம் ஆசியும் வழங்கிருவா. அதனாலே அவனை டாக்டர் ஆக்கிருவோம்…” என்றார் நிதானமான குரலில்.

அம்மன் கொண்டாடியே இப்படிக் கூறியதும் எல்லோரும் திகைத்தனர். அவனைப் படிக்க வைப்பதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை. அம்மன் பணமல்லவா என்பதுதான் உறுத்தியது.

“அப்ப கோவில் திருப்பணி?”

“நாமெல்லாம் இப்ப கைகால் தடித்தோட தான் இருக்கோம். அம்மன் இனிமேலும் நம்மை இப்படியே வச்சிருப்பா. இன்னமும் சம்பாதிப்போம். இப்ப போலவே சிறுசேமிப்புல சேர்ந்து சேமிப்போம். இன்னும் அஞ்சு வருசம் தானே! அப்புறம் ‘ஒகோ’ன்னு திருப்பணியைச் செய்துறலாம். அம்மன் திரிகால ஞானி. எல்லாம் அறிஞ்சவ. எல்லாத்தியும் நடத்துறவ.

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!’
– ன்னு மகாகவி பாரதியின் நாவிலே நின்னு அம்மனே அருள்வாக்குத் தந்திருக்கா. அதைத்தான் இப்ப நாம்ப பண்ணப் போறோம். இன்னும் அஞ்சே வருஷத்துல அம்மனோட மனம் குளிர கோவில் கட்டவும் போறோம். இதுல எல்லாருக்கும் சம்மதம்தானே!”

சிதம்பரக் கோனார் கேட்டார்.

உடனடியாக எவரும் பதில் கூறவில்லை.

கனத்த மௌனமே நிலவியது.

அந்த மௌனமானது அங்கே அபிப்ராய பேதங்கள் இருப்பதாய் அவரை அனுமானிக்க வைத்தது.

“இதைத் தப்புன்னு யாரும் எண்ண வேணாம். இந்த அஞ்சு வருசமாச் சேர்த்த பணத்தை கல்வித் தெய்வத்திற்குக் காணிக்கை ஆக்குவோம். ஏழைப் பகடை ஒருத்தன் கல்விமானாய் உயர உதவி செய்வோம். அடுத்தாப்ல அஞ்சு வருசத்துல சேர்ற தொகையை அம்மன் கோவில் திருப்பணிக்குப் பயன்படுத்திறலாம். ஒருத்தரால் முடியாததைப் பலர் கூடிப் பண்ணுவோம். சிறு துளி பெருவெள்ளமாச்சே! இப்படிச் செய்றதிலே யாருக்காச்சும் ஆட்சேபணை உண்டும்ன்னாச் சொல்லுங்க.”

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனரே அல்லாமல், யாரும் எதுவும் கூறவில்லை.

அவரது விளக்கமான பேச்சினால், சிலரிடம் மட்டும் எழுந்த மாற்று அபிப்ராயங்களும், பொல பொலவென்று உலர்ந்து காற்றுடன் கலந்து காணாமற் போயின.

குருசாமி கண்கள் குளமாகி நின்றான்.

பெரிய மனம் கொண்ட புதுப்பட்டி கிராம மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட குலத்து ஒருவனை டாக்டராக்கிப் பார்க்கிற பேறு சித்தித்தது.

– பெப்ரவரி 2018 – வை.மு.கோதைநாயகி நினைவுச் சிறுகதைப் போட்டி, இரண்டாம் ஆண்டு, இரண்டாம் பரிசு ரூ.3000 பெரும் கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *