அந்தி மயங்க முன்னான பொழுதுகளில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 11,031 
 
 

இப்போது அவனுக்கு அந்த மௌனத்தவிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. சாமத்தில் எழுந்து பாத்றூம் போகும்போது கண்ணாடியில் நரைக்க ஆரம்பித்திருக்கும் தலையை எதிர்ப்படுகையில் , கொஞ்சம் அதிகமாக கடையில் சாமான்களை வாங்கிவிட்டு அவற்றைத் தனியாக வீட்டுக்கு எடுத்துச்செல்;லும்போது மூச்சிரைக்கையில், இதன்ன வாலிபம் விடைபெறுவதை உணரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த வாழ்நாள் ப+ராவையும் வீணாகக் கழித்ததுவிட்டதுபோலொரு உணர்வு, பாதி கழிந்த வாழ்க்கையில் உருப்படியாய் எதையும் செய்யவில்லை, தற்போது எதையும் செய்துகொண்டிருக்கவுமில்லை…… இன்னும் கறி சோறு தின்று, ஊர்த்தொளவாரங்கள் பேசியதோட சரியென்றுதான் மீதிக்காலமும் கடந்துவிடப்போவதான தவிப்பு.

எர்ணெஸ்ட் ஹெமிங்வேயின் – த ஸ்நோஸ் ஒப் கிளிமஞ்சரோ- நாவலில் ஹரி என்றொருவன் மலைவாழ் உயிரினங்களை அவதானிப்பதற்காக ஆபிரிக்காவின் ஆளரவமற்ற மலைப் பிரதேசமொன்றில் லாண்ட் றோவர் வண்டியொன்றில் தன் காதலியோடு ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்துப்போய் முகாமிடுவான். அங்கே அவனுக்கு காலில் அரிப்பு ஏற்படவும் குருதிகசியும் வண்ணம் பலமாகவே சொறிந்துவிடுகிறான். அதுவே செப்டிக் ஆகியதோடு அதேசமயம் கங்கறீன் என்றொரு நோயாலும் தாக்கப்படுகிறான். அவன் கூட்டிச்சென்ற அரைவேக்காடு உள்ளுர்ச்சாரதி வண்டி இயந்திரத்தின் மசகு எண்ணை மட்டத்தைக் கவனியாது விட்டதால் அதன் பெயறிங் ஷிலீவ்ஸ் உருகிப்போய் வண்டியும் கெட்டுவிடுகிறது, உடனே திரும்பிவிடமுடியாத நிலமை . நாளாக ஆக அவனது காலின் உணர்வுகள் மரத்து விரல்கள் செத்து ஒவ்வொன்றாக கழன்றுவிழக்கூடிய அபாயம் ஏற்படுகிறது. அது எடுப்புத்தொலைபேசி வராத காலம். இருந்தாலுந்தான் உலங்குவானூர்தி ஆம்புலன்ஸையையெல்லாம் வரவழைத்துவிடமுடியாத நாடு தான்ஸானியா. அவன் தனக்கு ஏற்படவிருக்கும் மரணத்தையிட்டல்ல தான் செய்வதற்குத் திட்டமிட்டிருந்த பல்லாயிரம் பணிகளில் எதையுந்தான் நிறைவேற்றாமல் வெட்டியாக இறந்துபோகிறேனே என்றுதான் கலங்குவான்.

அங்கே தோளோடு தோள் சேர்த்துக் கூட்டமாகப்பறந்து செல்லும் நாரைகளின் நளினத்தையும், கழுத்தைக்குறுக்கி தலையை உள்ளிழுத்து இறகுகளுக்குள் புதைத்து வைத்துக்கொண்டிருக்கும் குருவிகளின் அழகையும், பரந்தும் நீண்டும் செல்லும் கிளிமஞ்சரோமலைத்தொடரின் பனிப்படிவில் சூரியக்கதிர்கள் பட்டுத்தெறிக்கும் ரம்யத்தையுங்கூட பதிவுசெய்யாமலே முடியகிறதே என்வாழ்க்கை என்றும் தவிப்பான்.

ஹரியின் தவிப்புக்கிணையான ஒரு தவிப்பு இப்போது கலாதரனுக்கும் அவ்வப்போது ஏற்படுகிறது. அவன் செய்யவேண்டுமென்று ஆசைப்பட்ட விஷயங்களும் மிச்சம் கனத்துந்தான் போச்சு. ஆனாலும் அவையெல்லாம் அவனது ஜீவிதக்கனவுகள்.

தமிழில் பேச்சுக்களையும், சொல்பவற்றையும் (டிக்டேசன்) மின்னியல் பதிவுகளாக்கவல்ல ஒரு நிரலி.
ஒரு சொடுக்கில் திரையில் தமிழ்வார்த்தையின் அர்த்தம் முழுவதையும் கொட்டிவிடவல்ல பரிப+ரண தமிழகராதி.

தமிழின் ஒவ்வொரு வார்த்தையை சீர்செய்யவும் அதன்; இலக்கணவிதிகளையுப் புரிந்துகொண்டு வசனங்களை செழுமை செய்யவல்ல ஒரு நிரலியும், மற்றும் மொழிபெயர்ப்புகளுக்கு கைகொடுக்கவல்ல சில நிரலிகளையும் சீர்மை பண்ணவேண்டும்.

தமிழிலிருந்து பிறமொழிகளுக்கும், பிறமொழிகளிலிருந்து தமிழுக்கும் கொண்டுவரவேண்டிய ஆயிரக்கணக்கான நூல்கள். எத்தனை பேர்கள் சேர்ந்துகொண்டு ஆற்றவேண்டிய மெகா பணி அது. தனியொருவன் என்னதான் சாதித்துவிடமுடியும். ஆனாலும் வெகு சிலவற்றையாவது இவனால் இதை இவன் முடிக்குமென்றாய்ந்து தேடி ஒப்படைத்து செய்விக்கவேண்டும். எல்லாம் இன்னும் கனவுகள்தான். ஆனாலும் மெல்லெமெல்ல மெய்ப்படவேணுமே. இயலாமையை நினைக்கையில் அப்போதே செத்துவிடவேணும்போல் இருக்கும்.

பரவாயில்லை இதுவென்ன உலகத்து இயற்கையையும் நடப்பையும் ஒரு முன்னூறு வருஷங்களுக்கு முன்னே தள்ளளிவிடுற முஸ்தீபா இது? என்னுடைய விஷயங்கள் என்பதால் எனக்கு அவை உயர்வாகத்தோணுதாக்கும், இன்னொருவன் இதை வேறொரு கோணத்தில் பார்த்து இது வெகு சாதாரணவிஷயம்யா என்றோ பைத்தியக்காரப்பயல் என்றோ சொல்லலாம். சமயங்களில் அப்படியுந்தான் நினைப்பு வருகிறது அவனுக்கு.

இலக்கியத்தில் என்று பார்த்தால் -புரியவில்லை- எனத்திரும்பி வந்த சிறு கதைகளைத் தனியாகத் தொகுத்து இரண்டு நூல்களாகப் போடவேணும்.

கணனியிலிருந்து எவர் கைங்கரியத்தாலோ வைரஸ் ஊடுருவித் துடைத்துவிட்டுப்போன நாவல்கள் மூன்றையும் திரும்ப எழுதியாக வேண்டும் என்பதை நினைக்கவும் அவன் உயிரில் களைப்பு ஏற்படுகிறது.

“ நீ உன் நாவல்களை மீளவும் குறிப்புகள் தயார் பண்ணி வைத்துக்கொண்டு ஒவ்வோர் அத்தியாயமாக ஒரு டேப் ரெகோர்டரில் பதிவு செய்துவிடு. அதைக் கணினியிலேற்றி நூலாக்கிவிடுவது என்பொறுப்பு ” என்கிறான் நண்பன் விந்தன். நிஜத்திலும் அவன் அதைச் செய்துமுடிப்பானோ அவன் அப்படித்தரும் நம்பிக்கை கேட்பதற்குச் சந்தோஷமாக இருக்கிறது. ”

தமிழ்நிரலிகள் விஷயத்தில் எவ்வளவோ உதவி செய்வதாகச் சொல்லியிருந்த சுஜாதாவும் சொல்லாமல் பறந்து விட்டார். சரி…………. மிச்சமுள்ளபேர்களோடு உலகம் இன்னும் உருண்டுகொண்டுதானே இருக்கிறது?

ஜெயமோகனும், பிரான்ஸ் கஃப்காவும் சமயத்தில் வந்து புத்துணர்ச்சியும் உற்சாகமும் தந்துகொண்டுதான் இருக்கின்றனர். தன் வாழ்நாளில் தான் எழுதியவற்றுள் ஒரு நாவலைக்கூட வெளியிடமுடியாமல்போன பிரான்ஸ் கஃப்கா தன் 46வது வயதில் இறக்கும் வரையில் சளைக்காமல் எழுதிக்கொண்டே இருந்தார். கடைசியில் காசநோய் கண்டு மரணம் நெருங்குவதை உணர்ந்தபோது (அப்போதெல்லாம் அந்நோய்க்கு மருந்தில்லை) தன் உற்ற நண்பன் மாக்ஸ் ப்றோட் என்பவரை அழைத்துத் தன் நாவல்கள் (னுநச Pசழணநளளஇ னுயள ளுஉhடழளளஇ னுநை ஏநசறயனெடரபெஇ னுயள ருசவநடை) அனைத்தையும் குவித்துக் கொழுத்திவிடச் சொல்லிக்கேட்டுக்கொண்டார். மாக்ஸ் ப்றோட் அவற்றைக் கொளுத்தாமல் விட்டதாலேயே இன்று எமக்கு பிரான்ஸ் கஃப்கா கிடைத்தார்.

ஜெயமோகன்கூட தன் விஷ்ணுபுரம் நாவலை பத்துதடவைகளுக்கு மேல் திருத்தியும் திருப்பியும் எழுதியதாகச் சொல்லியிருக்கிறார். அப்போதெல்லாம் அவருக்கு ஒரு கணினிமட்டும் இருந்திருந்தால் அவ்வேலை எவ்வளவு எளிதாக இருந்திருக்கும்? கலாதரனுக்கு தன் இலட்சியமோ கனவோ தான் செய்யவிரும்புபவைகளை எப்போ எதிலிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. அவை தீராத சரடாகத் தொடர்கின்றன. அட, தொடங்காமலே முடிவதாவது……….. சலிப்பாக வருகிறது.

கலாதரனுக்கு பணிவிடுப்புள்ள நாட்களில் அவனது நண்பர்கள்; அவன் வீட்டருகிலுள்ள எர்கெலென்ஸ்டாம் பார்க் பக்கமாகவுள்ள ஐரிஸ் பப்பிலோ அல்லது அவன் வீட்டிலோ மாலையில் கூடுவார்கள்.
சந்திப்பு வீட்டிலாயின் புதிதாக வந்திருக்கும் கர்நாடக இசையோ, இந்துஸ்தானி, கவால், கஜல், தென்னமரிக்க, ஆபிரிக்க இசை என்று ஏதாவது ஒன்று அங்கே பரவும். அதைப்பற்றிப் பேசுவார்கள் பேசுவார்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். அல்லது எம்மொழியிலாயினும் குறிப்பிடும்படியாக ஏதாவது படம் வந்திருந்தால் அதை அவனது ஹோம் வீடியோவில்ப் போட்டுப் பார்த்துவிட்டு விடியவிடிய விமர்சிப்பார்கள்.

“ ஒரு தூக்கணாங்குருவிக்கு சொந்தமாய் ஒரு ஓக்மரம் இருந்தது. அந்தமரத்துக்கு சொந்தமாய் ஒரு றிப்ட் என்றொரு பள்ளத்தாக்கும் இருந்தது. அப்பள்ளத்தாக்கு கிளிமஞ்சரோ மலைப்பகுதியிலிருந்தது. கிளிமஞ்சரோ மலையோ தான்ஸானியாவிலிருந்தது. தன்ஸானியா ஆபிரிக்காவின் மத்தியிலிருந்தது. அந்த குருவி ஒரு நாள் தன் கூட்டைவிட்டுப்பறந்து போச்சென்றால் அதுக்கு ஆபிரிக்காவைப் பிடிக்கவில்லையென்று அர்த்தமா………. என்று எழுதுவாய். எவன்பிரசுரிப்பான் அல்லது – ஊ-பாண் டூ ஊரெழு – கதையின் தலைப்பை சர்வதேச வாசகரை எண்ணி – சப்வே டூ சங்கானை – என்று மாத்துவதாய் சொன்னியே அதில கொழும்பில இருந்து ஆட்டோ ரூட்டில மூன்று மணிநேரம் பயணித்து யாழ்ப்பாணம் போய் அங்கிருந்து சங்கானைக்கு சப்வேயிலை போய்வந்தேனென்று எழுதினதுகூடச்சரிதான். ஒரு நூறுவருஷத்தில ஒரு வேளை அவை சாத்தியமாகலாம். கூடவே வல்லைவெளியில கொட்டிக்கிடந்த ஸ்நோவிலை ஸ்நோ போட்டை வைச்சு வழுக்கி செல்வச்சன்னிதிக்கும் அப்பிடியே வல்லிபுரக்கோவிலுக்கும் ஒரு ரவுண்ட் அடிச்சனெண்டு எழுதிறது கொஞ்சம் ஓவர். இதைத்தான் உச்சந்தலையில உள்ளியரைக்கிறதெங்கிறது. ”

“ 1925 இல ஆர் தர்.சி.கிளார்க் தரையில இருந்து ஏவப்படும் ஒரு உந்துகணையில் ஏறி மனிதன் வெகுவேகமாகப்பயணித்து ஒரு பிளாட்போம் மூலம் இந்த நூற்றாண்டில நிலவில இறங்குவான் என்று எழுதியபோது அவரை விநோதமாகப்பார்த்து மாமாக்கு மரை கழன்றுபோச்சு, அதுதான் விசர்க்கதையளா எடுத்தெடுத்து விடுகிறார் என்றவங்கள்…. அதிகம் ஏன் அதிவேகமாகச் சிறகடிக்கவல்ல ஒரு இயந்திரப் பறவையைத் தயாரித்து மனிதன் ஏன் பறக்கமுடியாதென்று சிந்தித்து முதன்முதலாக பறக்கும் மெஷின் என்று சொல்லி ஒரு புறோட்டோ டைப் ஏரோ பிளேனை கற்பனையாக வடிவமைத்த லியனார்டோ டாவின்ஸி ஒரு ஓவியர் விஞ்ஞானியே அல்ல. அவர் கொடுத்த அந்தச் கற்பனையின் முதற்கண்ணிதான் தொடர்ந்து றைட் பிறதேர்ஸை அந்த திசையில் மேலும் சிந்திக்கத்தூண்டியது. ”

“ சாத்தியமில்லாத விஷயங்களை எழுதினா உன்னைக் கனவுலவாதி என்று சொல்லாமல் பின்ன எப்படி…….. என்ன என்ன அட்லாண்டிக்கின் பனிமலையில ஒருபகுதியைப் பெயர்த்தெடுத்து அணுவோ அல்லது பிறிதொரு சக்திகொண்டோ கடல்ல வைச்சித்தள்ளிக்கொண்டு ஒரு மணியில நேரத்துக்குள்ள தமிழ்நாட்டுக்கு கொண்டுபோனா அங்கேயுள்ள தண்ணீர்ப்பஞ்சம் தீர்ந்திடுமாம். சக்கரங்கள் வெளிவரமுடியாத பிரச்சனையால் தரையிறங்கமுடியாமல் அவதிப்படும் விமானங்களுக்கு அதேவேகத்தில் ஓடக்கூடிய இறங்குதரையை நிர்மாணித்தால் பெல்லிலான்டிங் விபத்துக்களைத் தவிர்க்கலாமாம்…. கொம்றேட் சொல்றார்.”

“ இதுகள் ஒரு மனிதனின் ஆலோசனைகள் அல்ல, அவாவுதல்கள். புரிந்தால்சரி. ஆனால் ஒருத்தன் தனக்குத் தோன்றுபவற்றைச் சொல்லாதிருத்தலே முட்டாள்தனங்களிலெல்லாம் தலை. அவை சாத்தியமோ கனவோ………….. குறைந்தபட்ஷம் சுவைஞன் சிரித்துவிட்டாவது போகட்டன் . கவலை எனக்கா? ”

நாவல்களைத்தொடர்ந்து எழுதுவதில் அவனுக்கு ஆர்வமில்லாமல் போனதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. அதுவே ஒரு தனிக்கதை.

“ புலம் பெயர்நாடுகளில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு தணிக்கமுடியாத தமிழ்த்தாகம். படிப்பதற்கு தமிழ் நூல்களே அங்கு கிடைக்காமல் தவித்துப்போய் இருக்கிறார்கள் ‘ என்று தமிழகத்தில் நாடகத்துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஆய்வாளரும் கலைஞருமான ஒரு அன்பர் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.

பிரெஞ்சுப்புரட்சியின் இருநூறாவது ஆண்டு நிறைவை ஒட்டி பாரீஸ் நகர் எடுத்த அனைத்து உலகக்கலைகளின் மேளாவில் அவருக்கு தன் கலைக்குழுவினருடன் கலந்துகொள்ளும் ஒரு சந்தர்ப்பம் வாய்க்கிறது. அவருக்கும் தமிழ்த்தாகத்தால் தவித்திருக்கும் மக்களுக்கு தான் தமிழ்ச்சாந்தி செய்யக்கிடைத்த அற்புத சந்தர்ப்பமெனத் தோன்றியதோ அல்லது தமிழ்நூல்களை பாரீஸ{க்கு எடுத்துப்போனால் 50 ரூபா நூலுக்கு அப்படியே 50 பிரெஞ்ச் பிராங் கிடைக்குமென்று யாராவது ஞானப்பாலூட்டினார்களோ பாரீஸ{க்கு வரும்போது தமிழில் இதுவரையில் வெளிவந்தவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை எனக்கருதப்படும் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்புக்கள், கட்டுரைகள் என 150 நூல்களைத் தேர்வுசெய்து மொத்தமாக 2000 நூல்களை வாங்கி இரண்டு பெரிய பக்கேஸ் பெட்டிகளில் அடைத்துக்கொண்டு தன் குழுசகிதம் வந்து இறக்கினார்.

கோலாகலமான கலைகளின் மேளா முடிவுற்றபின்னால் அங்குள்ள சில நண்பர்களின் உதவியுடன் பாரீஸில் நடைபெற்ற ஆயிரம் தமிழர்கள் கூடவல்ல விழாவொன்றில் கடைவிரித்தார். வெட்கம் அங்கே 27 பிரதிகள்தான் விற்பனையாயிற்று. ஒரு நல்ல பாரீஸ்தமிழர் அக் கலைஞரின் ஏமாற்றத்தைப் புரிந்துகொண்டு
“ உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த இலாபம் எதுவும் கிடைக்கவில்லைத்தான். ஆனாலும் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள என்னால் உதவமுடியும் ” என்று கூறி அவரின் முதலீட்டுத்தொகையைக் கொடுத்து அவரை வழி அனுப்பிவைத்தார்.

மீதி நூல்கள் அங்கேசுற்றி இங்கேசுற்றி கடைசியாக சுவிற்சலாந்தில் இருக்கும ;கலாதரனின் நண்பனான மோகனின் கைகளில் ஒரு ஐயாயிரம் சுவிஸ் பிராங் வருமதிக்காக வந்து சேர்ந்தன. மோகனும் ஒவ்வொரு நூலிலும் ஒவ்வொரு பிரதிகள் எடுத்துக்கொண்டுபோய் “சுன்னாகச்சந்தை” யில் ( இது சூரிச்சில் ஒரு கடையின் பெயர்) பரவிவைத்துப் பார்த்திருக்கிறான். ஆறுமாதங்களாக ஒரு பிரதிகூட விற்பனையாகவில்லை. கடைக்கார இளவல் “ அண்ணன் இந்த புத்தகங்களுக்குப் பதிலாக 50 கிலோ புளி கொண்டுவந்து வைத்திருந்தீர்களென்றால் மீன் மரக்கறியோடை சேர்த்து எப்பவோ வித்துத்தள்ளியிருப்பன் ” என்று ஜோக்கடிக்கவும் நொந்துபோன மோகன் அவற்றைத் திருப்பி எடுத்துக்கொண்டுபோய் தன்வீட்டு பேஸ்மென்டில் தள்ளினான். அங்கும் அது இரண்டு மூன்று வருஷங்கள் இடையீடுகளற்றுத் தூங்கலாயிற்று.

கலாதரனும் எழுத்து புத்தகம் வெளியீடு என்று அலைகிறவனாதலால் மோகன் அவனுக்குப்போன் எடுக்கும் வேளைகளிலெல்லாம் தூங்குகின்ற அப்புத்தகங்கள்பற்றி எடுத்துச்சொல்லி நினைவ+ட்டிகொண்டிருந்தான். புத்தகங்கள் பற்றிக்கேட்கக்கேட்க இவனுக்கும் நடுமண்டையின் விதானத்தில் “கிர்கிர்கிர்” என்று கிறுகிறுக்கத் தொடங்கிற்று, இருப்புக்கொள்ளமுடியவில்லை. ஒரு கோடை விடுமுறையின்போது சூரிச்போய் அவனது பேஸ்மென்டைப்பார்த்தான். அட்டைப்பெட்டிகளிலும் தரையிலுமாக இறைந்து கிடந்த புத்தகங்களைப் பார்த்தவனுக்கோ அதிர்ச்சி.

அவனது கையில் வந்த முதல் நூலே தி.ஜானகிராமனின் “ மோகமுள். ” அடுத்தது சு.ராவின் ‘ ஜே.ஜே.சில குறிப்புகள்” வந்திருந்த 10 பிரதிகளில் எவையும் விலைபோகாமலிருந்தன. அடுத்த நூலை எடுத்துத் தூசு தட்டிப்பார்த்தான். மௌனியின் சிறுகதைகளின் தொகுப்பு. மௌனியின் நண்பன் சச்சிதானந்தன் மௌனி காலமான பிறகு வெளியிட்டது. அந்நூல் இப்போது ஆப் பிரிண்ட் . எங்குமே கிடைக்காது. அடுத்து சி.சு. செல்லப்பாவின் “வாடிவாசல்”. மதுரைப்பக்கத்தில் காணப்படும் ஜல்லிகட்டு விளையாட்டையும் அதன் நுட்பங்களையும் மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நாவல். அடுத்து தமிழின் முதலாவது நாவல் எனக்கொண்டாடப்படும் வேதநாயகம்பிள்ளையின் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்”, கலைஞரின் “குறளோவியம்” இன்னும் “ சங்கத்தமிழ்”, கு.சின்னப்பபாரதியின் “ தாகம் ”, யு.ஆர். அனந்தமூர்த்தியின் “சம்ஸ்காரா”, தியாகுவின் மொழிபெயர்ப்பில் கார்ள்மாக்ஸின் “டாஸ் கப்பிட்டல்” ஐந்து அடங்கன்களும், பழைய “கல்தூண்” பிரதிகள், ய+மா.வாசுகியின் “ரத்த உறவு,” மு.தளையசிங்கத்தின் “போர்ப்பறை” , உமாவரதராஜனின் “ உள்மன யாத்திரை” ரஞ்சகுமாரின் “ மோகவாசல் ” , பா.சிங்காரத்தின் “ புயலிலே ஒரு தோணி”, இராகுல சங்கிருத்தியானின் “வால்காவிலிருந்து கங்கைவரை” , நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்” , பாலகுமாரனின் “இரும்புக்குதிரை” , சுஜாதாவின் “கனவுத்தொழிற்சாலை” நீலபத்மநாபனின் “ தேரோடும் வீதி”, கிரியா வெளியிட்ட தற்காலத் தமிழகராதி, அனைத்திலுமே ஒவ்வொன்றும் 10 பிரதிகள் வரையில் இருந்தன. தொ.மு.சியின் மொழிபெயர்ப்புகளில் மாக்ஸிம் கோர்க்கியும் இன்னும் மொழிபெயர்ப்பில் பிரான்ஸ் கஃப்கா, அல்பேர்ஸ் காம்யு, தாஸ்தாயொவ்ஸ்கி, டால்ஸ் டாய், அன்டன் செகோவ், ஹேர்மன் ஹெஸ்ஸவும் லா.ச.ரா, எம். வி. வெங்கட்ராமன், அசோகமித்திரன், புதுமைப்பித்தன், தகழி, க.நா.சு, பிரமிள், கோணங்கி, சோ.தருமன், இமயம், அழகியபெரியவன், என இருப்பவர்களும், இறந்தவர்களுமாக அபேதமாக ஒரு சமர்க்களத்தைப் போலக் கலந்து தூசுமண்டிய தரையில் சிதறிக்கிடந்கோலம் கலாதரனுக்கு நெஞ்சைப் பிசைந்தது. அத்தனை எழுத்துப்பரப்பும் எவருக்கும் பயன்படாமல் ஒரு குளிர் நாட்டின் பேஸ்மெண்டில் விறைத்துக்கொண்டு அனாதரவாகக் கிடப்பதைப்n பார்ப்பதுவும் சோகம். “ சொர்க்கம் என்பது நூல்கள் நிறைந்த ஒரு இடமாகத்தானிருக்கும்” என்று சொன்னது யார் ஜோர்ஜ் லூயி போர்கேயா?

மோகனுக்கு அவற்றின் முடிப்புச் செலவைக் கொடுத்துவிட்டு “இலாபம் வந்தால் இருவரும் சமமாகவே பகிர்வோம்” என்று சொல்லிக்கொண்டு அவற்றை அள்ளிக் காரின் டிக்கியினுள் நிறைத்துத் திணித்து எடுத்து வந்தான். நூல்களின் பாரத்தில் பதிந்துபோயிருந்த காரைப்பார்த்ததும் திருமகள் “என்னப்பா ஏதும் அம்மி ஆட்டுக்கல்லுகள் ஏற்றிக்கொண்டாறியளோ” என்றாள் கிண்டலாக.

“ போடரில ஸொல்காரனும் (சுங்கம்) உதே மாதிரி என்ன கருங்கல்லோ கொண்டுபோறாய் என்றுதான் கேட்டவனப்பா………. எத்தனை பொய் சொல்லி எடுத்துவாறன் தெரியுமே. ”
டிக்கியைத் திறந்ததுந்தான் ஏதோ தலை சிதைந்துபோன ஒரு பிணத்தைப்பார்த்த மாதிரி அலறினாள்.

“ ஏற்கெனவே இருக்கிற இரண்டாயிரம் பிண்டங்களோட இதுகளையும் சேர்த்து வைச்சு நான் எங்கையப்பா மாரடிக்கிறது. ”

“ காள் காள் காள் ” என்றவளின் கூச்சல் ஓய்ந்தபாடாகக்காணோம்.

அவள் பக்கமும் நியாயம் இல்லாமலில்லை. வீட்டுக்கு உள்ளது 2 க்கு 4 மீட்டர் பேஸ்மென்ட் . அது ஏற்கனவே 20 வருஷ சஞ்சிகைகள், நூல்கள், வேறுஞ்சில தட்டுமுட்டுச்சாமான்களால் ஒரு மூஞ்சூறு மூக்கைக்கூட வைக்க முடியாதபடிக்கு நிறைந்து கிடக்கிறது.

“ அமங்களமாய் பேசாதையும் எல்லாம் விற்கச்சொல்லி மோகன் தந்தவன். ”

“ அத்தனை காசு புழங்குகிற சுவிஸில விக்கேலாதவொண்ட ஜெர்மனியில விக்கேலுமாமோ? ”

“ ஒரு முயற்சிதான். ஒரு நண்பனுக்கும் தமிழுக்கும் செய்யிற ஒரு சின்னச்சேவைதான்.”

இத்தனைக்கும் சுத்திக்கொண்டுபார்த்தால் மோகன் திருமகளுக்குச் உறவுக்காரனுங்கூட. கலாதரனின் இதுவன்ன இம்சைகளைத்தான் திருமகள் சகிக்க முடிந்தாலும் அவளின் விருப்பங்களை அவன் முற்றாக அலட்சியம் செய்துவிட்டுத் தான் நினைப்பவற்றையெல்லாம் செய்துமுடிப்பதைத்தான் அவளால் தாங்க முடிவதில்லை. கண்டிக்கப்போனால் “ ஏன் இப்ப உன்ரை வீட்டுச் சொத்தைக்கரைச்சுப் போட்டனோ? ” என்பான்.

கலாதரன் நடுக்கூடத்தில் புத்தகங்களைப் பரவுவதும் துடைப்பதும் பார்ப்பதுவும் அடுக்குவதுமாக இருந்ததால் கோலூன்றிப்பாய்தல் தெரியாத திருமகள் அவற்றைக் கடந்து செல்லச்சிரமப்பட்டாள்.

ஜெர்மனியின் பழையவீடுகளில் கழிப்பறை மாதிரி ஒரு குட்டாங்குட்டி அறை ஒன்று இருக்கும். அதை “ பேசன்கம்மர் ” என்பார்கள். அதாவது துடைப்பங்கள் மற்றும் கரிவாளி என்பன வைப்பதற்கான அறை. அப்படியான வீடொன்றில் தமிழர்கள் வாழ நேரின் அவ்வறையில் விபூதி, குங்குமம், சந்தனக்கும்பா, சாம்பிராணித்தட்டோடு சிவன், உமாதேவி, விநாயகர், முருகன், வேங்கடாசலபதி, ஐயப்பன் அனுமார்; ஆதியோர் காய்ந்த மாலைகள் சூடி மூச்சுமுட்டிக்கொண்டு வாடகையின்றி வதிய அனுமதிக்கப்பட்டிருப்பார்கள். அவ்வாறான திருமகளின் சுவாமி அறைக்குள் ஒரு அகிழான் போகக்கூடிய அகலத்திலொரு பாதையை மட்டும் விட்டுவிட்டு அத்தனை நூல்களையும் அடுக்கிவைக்க அனுமதித்தாள்.

திருமகளுடன் சேர்ந்து கௌரிவிரதம் இருக்கிற, சுமங்கலி பூசைக்குப் போகிற, மற்றும் மாதர் அணி வட்டப் பெண்கள் எல்லாருக்கும் போன் செய்து கலாதரனின் புதிய அழிச்சாட்டியத்தைப் பற்றிப்; புலம்பலானாள்.

“ அவனவன் இந்தியாவுக்குப்போனால் மனுஷி பிள்ளைகளுக்கு பட்டும் புடவையுமாய் கொண்டுவந்து இறக்குவாங்கள்……. இந்தாள் அள்ளிக் கொண்டுவாறது முழுக்கப் புத்தகங்களும் சங்கீத சிடி க்களுந்தான்.”
போதாக்குறைக்கு அவர்களில் சிலரும் “அதுக்குள்ள ராஜேஷ்குமார், ரமணிச்சந்திரனின் நாவல்கள் ஏதாவது இருக்கோவென்று பார்த்துச் சொல்றீரா ” என்று கேட்டும் அவள் புண்ணில் புளிந்திருக்கிறார்கள்.

வீட்டுக்குவந்த ஒரு விருந்தினருக்கு வாசிக்கட்டுமென்று “ வால்காவிலிருந்து கங்கைவரை ” பிரதியொன்றை அன்பளித்தான். அவர் அதை இரண்டு நாட்கள் கழித்து வீடு தேடிவந்து திருப்பிக் கொடுத்துவிட்டுப்போனார்.
“ நான் அதை உங்களுக்கு அன்பளிப்பாகத்தானே தந்தேன்…. அதுக்குள்ள வாசித்துவிட்டீர்களா ” என அவன் வியக்கவும் “அந்தச் சாத்தான் என்ர கடவுள் நம்பிக்கையையே ஆட்டப்பாக்குதப்பா…………… நீரே வைச்சுக்கொள்ளும் ” என்றார். கலாதரனுக்கும் அவற்றைவைத்துக்கொண்டு இனி என்ன செய்வதென்று தெரியவில்லை.

எப்படி விரட்டினாலும் அவன் நினைவுப்புலத்தினுள் பன்றிகளும் -முத்துக்களும் நுழைந்து உலவிக்கொண்டேயிருந்தன. “ பேப்பரில ஒரு விளம்பரம் விட்டுப்பார்தாலென்ன ” என்றான் விந்தன்.

“ எழுதிற ஆள் இப்ப புத்தக பிஸினெஸில இறங்கியிட்டார்போல என்றல்லோ ஒரு பேச்சுவரும். ”

“ அட கல்லாறுக்காரன் எழுத்தோட சைட்டாய் புத்தக பிசினெஸ{ம் செய்யிறவர்தானே. ”

“ இரண்டும் வௌ;வேறு விஷயங்களப்பா….. செய்யிறவை செய்யட்டும் நமக்கு ஒத்துவராது. ”

“ ஏதோ உன்னுடைய நன்மைக்குத்தான் சொன்னன். ”

நூல்கள் வாசிக்கும் பழக்கமிருக்குமென்று நம்பிய சிலரிடமும், இன்னும் தமிழ் செந்தமிழ் என்று கெம்புகிறவர்களிடமும், தெரிந்தவர்கள் சிலரிடமும் அந்நூல்கள் பற்றிப் போனில் பேசிப்பார்த்தான். ஒரு மறவராவது இரண்டு புத்தகங்களையாவது எனக்குந்தா என்றோ, அனுப்பிவைக்கும்படியோ கேட்கவேயில்லை.
“ ஆமோ அப்பிடியா………..அச்சச்சோ……சொச்சொச்சோ ” என்று விட்டுப் பேச்சை முடித்தார்கள்.

முன்புமொருமுறை அவனின் எழுத்தாள நண்பர் ஒருவர் தன்னுடைய 820 பக்க நாவலை தமிழகத்தில் வெளியிட்டபோது உதவி செய்வதாக நினைத்து அவரிடமிருந்து 25 நூல்களை அஞ்சலில் வருவித்தான். அவன் நண்பர் வட்டத்தில் அந்நூல் கவனிப்பாரற்றுப்போக ஒரு இலக்கியச்சந்திப்பில் வைத்து தெரிந்தவர்கள் செறிந்தவர் அனைவருக்கும் இலவசமாகக்கொடுத்து பதிலுக்கு 13 தாங்ஸ் , 7 டங்கெ , 5 மேர்ஸிகளுமாகப் பெற்றுக்கொண்டான்.

பெர்லின் ஸ்ரீமய+ரபதிமுருகன் கோவில் நிர்வாகிகளில் ஒருவர் மட்டும்

“அது விஷ்ணுபுராணம் என்கிறீர்களே அதில சைவர்களுக்கு அத்தனை நாட்டமிராதல்லோ ” எனவும்
“ இல்லை சாமி அது விஷ்ணு வழிபாட்டின் ஆரம்பம் பற்றி புதிய சிந்தனைகளை நாவல்போலச்சித்தரிக்கும் ஒரு வித்தியாசமான முயற்சியுங்கோ” என்றான்.

“ நாவலாக இல்லாமல் பெரியபுராணம், கந்தபுராணம், தேவார திருமுறைகளின்தொகுப்பு, நாயன்மார்கள் , மெய்யடியார்கள் வரலாறுகள் இப்பிடி ஏதாவது என்றால் கோவில் நூலகத்துக்கு வாங்கிப்போடலாமெண்டு பார்த்தன் ” என்றார்.

எட்டுக்கோடி தமிழர்களின் சாகரத்தில் ஒரு கனதியான நாவலின் ஆயிரம் பிரதிகள் விற்க 5 ஆண்டுகளாகும் என்று சொல்லப்படுவது ஒன்றும் பகிடியல்ல.

முதலில் நூல்கள் அனைத்தினதும் பட்டியல் ஒன்றைத் தயாரித்தான். பெயர் புலத்தில் வெளிவந்துகொண்டிருந்த ஐந்துபத்திரிகை ஆசிரியர்களுக்கும், பெயருக்கு எழுதிக்கொண்டிருப்பவர்கள் ஆறேழு பேருக்கும், இலக்கியச்சந்திப்புகளில் தலை காட்டுபவர்கள் எட்டுப்பேருக்குமாக பவ்பத்துப்பிரதிகள் பார்சல்செய்து கூடவே கையிருப்பிலுள்ள நூல்களின் பட்டியலையும் இணைத்து அந்நூல்களுக்கான இந்தியவிலையையும் அஞ்சல் செலவும் உள்ளிட இரண்டிலிருந்து மூன்று ஜெர்மன் மார்க்குகள்வரை விலையும் குறித்து அனுப்பிவைத்தான். -மனவோசை- சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியை சந்திரவதனா செல்வகுமாரன் மாத்திரம் நிலமையை சரிவரப்புரிந்துகொண்டு 36 ஜெ.மார்க்குகளுக்கான அஞ்சல்தலைகள் அனுப்பிவைத்தார். நூல்களைப் பெற்றுக்கொண்டவர்களுள் -மண்- சஞ்சிகையின் ஆசிரியர் சிவராஜா இரண்டு ஆண்டுகளின் பின்பு ஒரு சந்திப்பின்போதான கலந்துரையாடலில் நூல்கள் கிடைத்ததை ஒப்புக்கொண்டார். வேறு எப்பிரானோ பிராட்டியோ நூல்களைப்பெற்றுக்கொண்ட விஷயத்தையே இதுவரையில் ‘கலாதரனுக்குத் தெரிவிக்கவில்லை. அதன் சூக்குமதந்திரமாவது :- நூல்கள் கிடைத்ததைத் தெரிவித்தால் பணமும் அனுப்பவேணும். கமுக்கமாய் இருந்திட்டால் மச்சான் போஸ்டில தொலைஞ்சு போச்சாக்கும் என்று இருப்பார்தானே. ‚

“ நான் உங்கள் புத்தகங்களை நாடுப+ராவும் விநியோகித்துத்தாறன் ” என்று 100 பிரதிகளை வேண்டிச் சென்றதோடு அதை மறந்துவிட்ட கோபாரா ஞானம் என்கிற வியாபாரப்பிரகிருதி ஒருவர் ஒருமுறை சொன்னார்:
“ அண்ணை நீங்கள் பத்துப்பதினைந்து கதையளை ஒரே தொகுப்பில் கொண்டுவந்து மொத்தமான புத்தகங்களாகப் போடாமல் ஒரு இய+ரோவுக்கு விற்கிறமாதிரி ஒன்று இரண்டு கதையளை சின்னப்புத்தகமாய் அடித்தீர்களேயென்றால் நாங்கள் குமுதம், குங்குமம், விகடன், சூவிங்கம், பெப்பர்மிண்டோட கலந்து காஷ் கவுண்டரில வைத்தால் தமிழ் மகஸின்ஸ் வாங்கிற சில சனம் வாங்கும். பின்னயென்ன ஐந்து பத்து இய+ரோவெல்லாம் செலவு செய்யுதே புத்தகத்துக்கு………. அந்தக் காசுக்கு அரைக்கிலோ மங்குச்சூடைக்கருவாடு வாங்கிச்சென்றால் இரண்டுநாளைக்கு வைச்சுப்பின்னியெறியுமல்லே நம்ம சனம். நமீதாவை அழைத்து கல்லாவுக்குப்பக்கத்தில் இருத்திவைத்து வியாபாரம் வளர்க்கிற பயல்களெல்லாம் புத்திசொல்ல ஆரம்பித்தார்கள். அத்தோடு கலாதரனுக்கு அவனது நாவல் பற்றிய அடியீடும் திட்டங்களும் தூர விலகலாயின.

பாலு மகேந்திரா ஏர்போட் சீனுகளைக்கொஞ்சம் கம்மி பண்ணிக்கொடுங்க படமாக்கிடலாம் என்று சொன்ன கதையின் திரைக்கதையைக் கொஞ்சம் மாத்தியமைச்சு நானே படமாக்கினாலென்ன என்றும் கலாதரனுக்குப் புதிய யோசனைகளும் இப்போ இடையிடையே உதித்து மின்னுகின்றன.

அவன் நண்பர்களுக்கு அவனது படத்தயாரிப்பு யோசனைகளும் திட்டங்களும் முதலில் சும்மா சிரிப்பதற்குரிய விஷயங்களாக மட்டும் இருந்தன. அவன் பணம் புரட்டுறது, தயாரிப்பு பார்ட்னரைத் தேடுவதென்று சீரியஸாகவும் விந்தன் “ எதுக்கும் நீ முதல்ல ஒரு சைக்கியாட்டிஸ்டையும் பார்க்கிறது நல்லது ” என்று விநயமாகச் சொன்னான்.

பங்குனியில் பெரிசான பெண்ணுக்கு டிசெம்பரானாலும் பரவாயில்லை பெரிய ஹோல் எடுத்து விலாசமாய் சாமத்திய வீடொன்று செய்தேயாகவேணும், அல்லது மரியாதையாயிராது என்று அரிபட்டிபோட்டுக்கொண்டிருக்கும் திருமகளோடு வாழ்ந்துகொண்டு மனுஷன் கனவுகள் காண்பதுதான் எப்படி? அவன் எழுதுகையிலோ படிக்கையிலோ இணையத்தளங்களிலிருந்தோ , சவுண்ட் சிஸ்டம் வைத்துக்கொண்டோ ஹிந்துஸ்தானியோ, கர்நாடக இசையை வைத்தால் அவள் மற்ற அறைக்குப்போய் கதவைச்சாத்திக்கொண்டு படுத்துவிடுவாள். எப்போதாவது மனம் நெகிழ்வாக இருக்கும் வேளைகளில் தன் சினிமா ஆசையை மெல்ல அவிழ்ப்பான் கலாதரன். உடனே பதிலுக்கு வீடுநிலமெல்லாம் வித்துக்கொண்டுபோய் படம் எடுத்தழிந்த உமாவரதனின் கதையை எடுத்து அதற்கும் முன்வைப்பாள் திருமகள். அவற்றை படம் லபோரட்டரியால புறப்படமுதலே உலகத்தில கதைப்பஞ்சம் இருக்கிறமாதிரி இன்னொரு கொம்பனியொன்று அந்தக் கதையை வேகமாய் இறாஞ்சிக்கொண்டுபோய் இன்னொருபடத்தைச் சுட்டு வெளியிட்டுவிட மனுஷன் தலையில துண்டைப்போட்டுகொண்டு திரும்பேல்லையே. “ இதையே எத்தனை தரமப்பா எனக்குச் சொல்லிக்கொண்டிருப்பீர்? ” “ மூன்று பெண்குழந்தைகளை வைச்சிருக்கிற நமக்கு இதெல்லாம் ஆகிறகாரியமாப்பா? ”

“ அப்படியெண்டால் பிள்ளைகளுக்கெல்லாம் கலியாணமாகட்டும் பிறகு போய் இஷ்டத்துக்கு எத்தனை படமெண்டாலும் எடுங்கோ….. எந்த மடத்திலயென்டாலும் சேர்ந்து சங்கீர்த்தனம் பாடுங்கோ. நான் ஒண்டுஞ் சொல்லமாட்டன் ” மறுபுறம் புரண்டு படுத்துவிடுவாள்.

“ உமக்குத்தெரியுந்தானே………. பிளiளைகளுக்கு நான் சீதனம் வாங்கவும் மாட்டன், கொடுக்கவும் மாட்டனென்று. உனக்குப்போயும் கொப்பர் எதுக்குத்தான் திருமகள் என்று பெயர் வைத்தரோ? ”

கூடவே வினைக்கேடு மற்றும் கோமணத்துடன் சேர்ந்ததான ஒரு வசவும் வெளிப்படப்பார்க்கும் அடக்கிக்கொண்டுவிடுவான்.
அவன் கனவுகளின் திசைகள்கூட அவளுக்குப் புரியாது.

அவளைப்பொறுத்தவரையில் ஜெர்மனிக்குள் கால்வைத்து பத்து வருஷமாகாமலே அவனவன் நாஷனாலிட்டி, சொந்தவீடு , கார் என்று பவனி வருகையில் வந்து 20 வருஷங்களாகியும் கதை, கவிதை, இசை, தமிழ், நாடகம், புத்தகம் இப்போது மாற்று சினிமா என்று வெறும் வெள்ளிகள் மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் சாமர்த்தியம் போதாத ஒரு -பேமானி- அவன்.

அவனது சூழலில் இலக்கியம் சினிமா, சங்கீதம் என்று கலப்பதற்கு மிகவும் குறைவான நண்பர்களே இருந்தனர், “ என்ன கலாதரன் எங்கேயாவது நல்லவேலை சந்திச்சால் சொல்லும் என்ர செஃப் வரவர துண்டாய் சரியில்லப்பா………. வேலை மாறவேணும்.” என்று மாத்திரம் கேட்டுவிட்டு விலகும் நண்பர்களைக் கண்டதும் விலகியோடுவான்.

விந்தனது ஜாகை சற்றுத்தொலைவில்தான், ஆனாலும் அவன்தான் அடிக்கடிவந்து கலாதரனை வீட்டில் வந்துசந்திப்பவன். இன்னொரு கூட்டாளி கிரிதரன். விடுப்பு நாட்களில் விஸ்க்கி இருக்குமென்றால் கிறில்கோழி வாங்கிகொண்டு வருவான். சினிமாவென்றால் கொஞ்சம் சொதப்புவான். ஆனாலும் இன்னும் சிவாஜியைவிட்டால் சினிமாவே இல்லை என்று நம்பும்பேர்வழி. அப்பாவி ஆதலால் பொறுத்தாற்றலாம்.

ஜேசுதாசன் மற்றொருவன். இவன் தாயையும் தந்தையையும் ஒரே ஷெல்லில் இழந்த ஆறாத சோகத்தைச் சுமப்பவன். அந்த இழப்பின் வெளி துன்பம் தரும்போதெல்லாம் குடித்து அரற்றிக்கொண்டு திரிந்தவனை கலாதரன்தான் ஆற்றுப்படுத்திப்பேசி “ சிநேகிதனே மரித்தவர்கள் திரும்பப்போவதில்லையென்பது நீயும் நானும் அறிந்ததுதான்…… ஆனால் அவர்களின் நினைப்பிலிருந்து விடுபடமுடியாது தவிக்கும் உன் மனதை வேறு புதியவிஷயங்களில் திருப்பினால்…… மனம் கொஞ்சம்போலச் சமாதானமாவதை உணர்வாய். போய் தியானம் செய் சாந்திபெருகும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். எனக்குத்தெரிந்தது கொஞ்சம் மிய+சிக் கேட்டுப்பார். அது உன்னை புதிய புதிய வெளிகளுக்கு இட்டுச்செல்லும் ” என்று சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்து கர்நாடக, இந்துஸ்தானி, கஜல், க்வால், தும்ரி, ஜூகல்பந்திகள் என்று இசையின் அனைத்துச் சாத்தியங்களையும் வகைமாதிரிகளையும் போட்டுக்காட்டி அவற்றை இரசிக்கவும் கற்றுக்கொடுத்தான். எளிமையானவற்றையும் வித்தியாசமானவற்றையும் வாசிக்கப் பழகு. இந்தா குட்டி இளவரசனைப் படித்துப்பார் என்றெல்லாம் அவன் சேகரிப்பிலிருந்தவற்றுள் வித்தியாசமானவற்றை வாசிக்கக்கொடுத்துத் தன் உலகத்துள் இன்னொரு சகாவாக அழைத்து வந்தான். ஆனாலும் அவன் இருந்த விநோதமான உலகத்திலிருந்து அவனை முற்றாக மீட்டெடுக்க கலாதரனாலும் முடியவில்லை. ஐம்பதைக்கடந்த எந்தத் தம்பதியைப் பார்த்தாலும் அம்மா அப்பாவைப பாரத்தமாதிரியிருக்கு என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

இன்னும் சினிமா பற்றிய தெளிவுள்ள நண்பர்கள், தேடுதலும் வாசிப்புமுள்ள சிநேகிதர்கள், நாலுபேர் சேர்ந்து மனம் வைத்தால் சேர்ந்து ஒரு சினிமாவை தயாரிக்கக்கூடிய வசதியான கூட்டாளிகள், சும்மா விஸ்க்கி தெளித்துப்போக மட்டும் வரும் தோஷ்துகள் என ஒரு கூட்டம் இருந்து ‘சள்’ அடித்துக்கொண்டிருந்த ஒருமாலையில் கலாதரன் தன் படம்தயாரிக்கும் திட்டத்தை லேசாக எடுத்து வெளியிட்டான். அப்போது எல்லோரும் ஒரே குரலில் சொன்னது: “அது றிஸ்க்கான ஒரு விளையாடப்பா………சூதாட்டம் ஆனானப்பட்ட மலைகளே வழுக்கித் தலைகுப்புறக் கவுண்ட இடம். ”

வழுக்கிவிழுகிற இடம் கேட்கவா இந்தப் பயலுகளைக்கூப்பிட்டது. எல்லாரையும் துரத்தியடிக்கவேணும் போலிருந்தாலும் பொறுமை காத்துச்சொன்னான்:” என்ன ஹொலிவ+ட் றேஞ்சுக்குப்போறதே……நான் சொல்றது ஒரு லோ பட்ஜெட் மாற்று சினிமா. நட்டம் வந்தாலும் ஆளை ஒரேயடியா அமுக்காது.”

“ மாற்று சினிமா என்றால் என்னப்பா? ” கேட்டான் கிரிதரன்.

“ எல்லாமே புதுமைகளாகக் குவிந்திருக்காவிட்டாலும்…………….. குறைந்த பட்ஷம் செயற்கையான லவ் சீன்கள், நாயகிக்கு வலப்பக்கம் 20 ஆண்களும், நாயகனுக்கு இடப்பக்கம் 20 ஜட்டிப் பெண்களும் நின்றும் ஜிம்னாஸ்டிக் செய்யவோ, புலிமுகச்சிலந்தியும் வெண்தேளும் சேர்ந்து கொட்டினமாதிரி துடிக்கவோ மாட்டார்கள். நாயகனோ நாயகியோ ஒருவரின் மனதை மற்றவரிடம் தெரியப்படுத்திறதுக்கே சமயமும் தனிமையும் வேண்டி ஆண்டுக்கணக்காகத் தவம் கிடப்பாங்கள். ஆனா ‘லவ் ” என்ற ஒன்று வந்தவுடன திபுதிபுவென்று நாற்பது அம்பது சனம் எங்கே எதுக்கு எப்படி என்றெல்லாமில்லாம ஓடிவந்து குதிக்கும், குலுக்கும்…….. இந்தவகைச் சீனுகள் இருக்காது.

“ இந்தியாவில வருஷத்துக்கு ஆயிரம் படங்கள் வந்தும் இப்படியான கோணங்கி கோமாளித்தனக்களாலதான் ஒரு சர்வதேசப்படவிழாவின் படிகளையே நம்ம படங்கள் தொடமுடியாமலிருக்கு. எப்படிடா ஒத்திகையில்லாமல் இத்தனைபேரும் ஒரேமாதிரித்துடிக்கிறான் குலுக்கிறானென்று எந்த விமரிசகனோ ரசிகனோ கேட்பதுவுமில்லை.” இது விந்தன்.

“ இன்னும் தள்ளுவண்டிகள் அவைமேலே பரப்பப்பட்ட காய்கறிகள் ஒன்றும் சிதறிப்போகா. கலர்தண்ணிப்போத்தல்கள், காட்போட் பெட்டிகள், தகர டிரம்களுக்குத் தேவை இருக்காது. தடிதடியான தசைகள் புடைத்த வில்லன்களை என் ஐந்தரையடி நாயகன் தூக்கிப்போட்டுப் பந்தாடவோ அதைப்பார்த்து கதாநாயகி சொக்கிப்போகவோ மாட்டாள். கதாநாயகனில பட்டுவிடாமல் எவரும் லாவகமாய் கம்பு சுத்தமாட்டார்கள். நம்ப நாயகன் இரட்டைமாடிக்கட்டிடத்துக்கு ஜம்ப் பண்ணிப்பாய்ந்து வில்லனை அடித்து விழுத்தமாட்டான். அட்லீஸ்ட் இவ்வகை அவஸ்த்தைகள் இல்லாத ஒரு மாற்றுப்படம். அதென்னென்றால் சனங்களின் பொதுப்புத்தியில சினிமாவென்றால் அது நாடகம், நாட்டுக்கூத்துமாதிரி ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு என்கிற ஒரு எண்ணப்பபதிவு ஏற்பட்டுப்போச்சு. அதால இரண்டரை மணித்தியாலத்தையும் ஓட்ட அவன் எதையாவது செய்து தொலைக்கட்டுமென்று சகித்துக்கொண்டிருக்கும் போக்கு வளர்ந்துபோச்சு. இந்த நவீன காலத்தில வெளிவருகிற டிவி சீரியல்ஸைப் பார்க்கிறீங்கதானே எல்லாப்பாத்திரங்களுமே புல் மேக் அப்பிலதான் இயங்குகினம், நடுத்தரக் குடும்பக்கதையென்றாலும் அனைத்துப்பெண்களுமே சம்ப+ர்ண சொர்ண அலங்காரிகளாக பட்டும் புதுசும் கட்டிக்கொண்டு உக்கார்ந்திருக்கிறதை, சமையல் பண்றதை , தூங்கிறதை தமிழ்நாட்டின் கிராமம் நகர்ப்புறங்களிலிருந்து, லண்டன், பாரீஸ், ரொறொன்டோவரை விரவியுள்ள தமிழ்ச்சனங்கள் ஒரு முணுமுணுப்புமில்லாம பார்த்துக் கொண்டிருக்குது தானே? ”

“ வேறு வழியில்லாமல்தான் பார்க்குது…….. முன்ன சொன்னியே அப்பிடிச் சகிச்சுத்தான் பார்க்குது.” விந்தன் சொன்னான்.

“ 1936 இலிருந்து ஏழெட்டு சகாப்தமாக இந்த ஸ்டீரியோ டைப்பிக் அவஸ்தைகள் நமக்கு ஏன் எதுக்கென்று கேள்விகேட்க முனையாத ஒரு சமூகத்தின் அப்பாவிப் பிரதிநிதிகள் அவர்கள்.”

“ சனங்களை ஒரேயடியாகக்குறை சொல்லவும் முடியாது. வித்தியாசமான படங்களைத்தர இயக்குனர்கள் ஒருவரும் முனையவில்லையப்பா. போர்முலாவுக்குள்ள படம் எடுத்தாத்தான் லாபாம் கொழிக்காவிட்டாலும் போட்ட பணத்தையாவது திருப்பி எடுக்கலாம். கஷ்டப்பட்டுத்தேடிய பணத்தை வெட்டியா சினிமாவில கரைச்சுவிட யாருக்குத்தான் துணிச்சல் வரும்………. அப்சலூட் றிஸ்க்.” – ஜேசுதாசன்!

“ பரிசோதனைக்கு முயன்றவர்கள் பலரும் தோற்றுத்தானிருக்கிறார்கள். ‘வறுமையின் நிறம் சிவப்பு’ மூலம் கே.எஸ்.பாலச்சந்தர், ‘அவள் அப்பிடித்தான்’ ருத்ரையா, ‘மூன்றாம் பிறை’ ‘வீடு’ இவைகளால் பாலு மகேந்திரா இப்படி ஒருபட்டியலே இருக்கு. முதல் மரியாதை, நாயகன், மகாநதிகளும் சில ஜனரஞ்சக மசாலா சமாச்சாரங்களைச் சேர்த்துக்கொண்டதாலதான் தலை தப்பினவை. இந்த ஆண்டு வந்ததுகளுக்குள்ள ஓரளவுக்கென்றாலும் வித்தியாசமான கதை காட்சிகளோடிருந்த “வெய்யிலையோ” “பருத்திவீரனையோ” கூடப்பார்……… ஒரு கோஷ்ச்சண்டையோ, நெருக்கமான லவ் சீனோ சேர்க்காமல் அவர்களால அதைப் பண்ணமுடியவில்லை, ஜனரஞ்சக ரசிகனை தியேட்டருக்கு வரவழைக்காவிட்டால் கதை கந்தலாய்விடும். அவனைக் கவராத அம்சங்கள் உள்ளபடத்தை வாங்க எந்த விநியோகஸ்தனுமே வரமாட்டான். ஹே….ராம், மற்றும் சில காட்சிகள் செழுமைப்படுத்தியிருந்தால் உன்னதமான படைப்பாக வந்திருக்கக்கூடிய “கன்னத்தில் முத்தமிட்டால்” படங்களுக்கு நேர்ந்ததைப் பார்கவில்லையோ. தமிழகத்தில ஓடவே இல்லையாம்.”
விந்தன் இன்னும் நீண்ட பட்டியலை எடுத்துவைத்து விவாதித்தான்.

“ மலையாளத்தில் மாமூலிலிருந்து விலகின பல முயற்சிகள் இருக்கு……. இங்கிலீஷில் எடுக்கப்பட்ட மிஸ்டர் அன்ட் மிஸிஸ் அய்யர், சலாம் பொம்பே, தேவ்-டி, குலால், காமினே என்று நல்ல முயற்சிகள் அப்பப்ப செய்யப்பட்டுத்தானிருக்கு.

மிருணாள் சென்னுக்குப்பிறகு அபர்ணா சென்கூட நல்லாத்தான் பண்றார்………. ஆனால் அவை ஒன்றுமே பிரமாதமாய் ஓடவில்லை.

ஷியாம் பெனகல் எழுபதுகளில பூமிகா என்று ஒரு படம் எடுத்திருந்தார்.

ஒரு சினிமா நடிகையின் கதை. என்னதான் பணம் புகழ் என்று குவிந்தாலும் அவள் தன் அந்தரங்க வாழ்க்கையில நிம்மதியில்லாமல் அவஸ்த்தைப் பட்டுஅலைகிற ஒரு பாத்திரம். அதில் பூமிகாவாக ஸ்மீதா பட்டேல் வாழ்ந்திருந்தார். அதிஅற்புதம் என்று சொல்லக்கூடிய ஒரு வார்ப்பு. ஆனாலும் அதில் ஷியாம் போட்டதை எடுத்திருப்பாரோ சந்தேகமே. நடைமுறை இப்படியிருக்க சனங்கள் தங்கள் வழக்கமான இரசனைகளை உதறிப்போட்டு உன் புதுக்கோணங்கள் புதுப்பார்வைகளில மயங்கி ஒன்றிவிடுவார்கள் என்று முரண்டுபிடித்து நம்புவதைப் பைத்தியக்காரத்தனம் என்றுதான் சொல்வேன்.”

“ பார்க்கலாமே…………….”

“ சரி இப்போ நூறு நிமிஷங்கள் ஓடக்கூடிய வித்தியாசமான படம் ஒன்று இருக்கு, பார்க்கிறியளா? ”

“ பொறுங்கோ கீழேபோய் கியோஸ்கில ஏதாவது வாங்கிவாறன் ” என்று விட்டு கீழே இறங்கி ஓடிப்போன ஜேசுதாசன் ஒரு போத்தல் வொட்கா அப்ஸலூட்டும், ஸ்வெப்ஸ் ஜிஞ்சர் ஏலும், லெமென் ஜூஸ{ம், சிப்ஸ{ம் வாங்கிவந்தான்.

அப்படம் 1985வாக்கில் ஜெர்மன் தொலைக்காட்சி ஒன்றில் போனபோது கலாதரன் பதிவு செய்தது. படத்தின் ஆரம்பத்தில் ஜெர்மன் படந்தானே என்று சும்மாதான் பார்த்தான். படம் நகர நகர கமெராவின் கோணங்களும், ஓளி மற்றும் காட்சியமைப்பின் நுட்பங்களும் பாத்திர வார்ப்பும் இது கொஞ்சம் வித்தியாசமான படமாக இருக்கும்போல என்று தோன்றவும் உடனே அதைப்பதிவு செய்ய எத்தனித்தான். அவனிடம் அதை ஓளிப்பதிவு செய்வதற்கான மேலதிக காண்ஒளிப்பேழை ஒன்றுகூட இருக்கவில்லை. வருவது வரட்டும் என்றுவிட்டு இன்னொரு நண்பன் கொடுத்தவொரு மசாலாத்தமிழ்ப்பட பேழையை பின்னுக்குச்சுற்றிவிட்டு அதில் அப்படத்தை பதிவுசெய்யலானான். முதல் பத்து நிமிஷங்களையும் பதிவு செய்யாததின் நஷ்டம் முழுப்படத்தையும் பார்த்தபின்னாலேயே புரிந்தது. இதுவரையில் வேறெங்கேனும் அச்சித்திரத்தை மீளவொருகால் காணும் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லையாதலால் அப்படத்தின் இயக்குனர், தயாரித்த குழுமம் பற்றிய எந்த விபரமும் எவருக்கும் தெரியவில்லை. எல்லார் கைக்கும் வொட்கா வந்ததும் ஹோம் மூவி பிளாஸ்மா திரையில் படம் ஓடத்தொடங்கியது.

பத்து வயது இருக்கக்கூடிய ஒரு சிறுவன். அவனுக்குக்குள் தினமும் எதையாவது புதிது புதிதாக பார்க்கவேண்டுமென்று அதீததுடிப்பு. (இவ்வகை ஆர்வத்தை ஜெர்மனில் நேரபநைசபைமநவை என்பார்கள்) ஆதலால் அவனுக்கு ஒரேமாதிரியாக மாற்றங்களில்லாமல் தேய்ந்தபாதையில் சுற்றிச் சுற்றிச் சுழலும் இந்தவாழ்க்கை முறை அலுத்துப்போகிறது. தினமும் பள்ளிக்கூடம் போவதும் அங்கே ஒரே மாதிரியாகக் கணக்குகள் போடுவதும், பாடங்களை நெட்டுருப்போடுவதும், வீட்டுக்கு வந்ததும் தினமும் தூக்கம்-சாப்பாடு-படிப்பு, தூக்கம்-சாப்பாடு-படிப்பு என்று ஒரு வரைவுண்ட அதே சுழற்சி – நடைமுறை அயர்ச்சி ஏற்படுத்த சே…….. என்னடா இதுவென்று வாழ்க்கை என்று நொந்துபோகிறான். அவனுக்கு வீட்டுக்குப்போய் தினப்படி வாழ்வுச்சகடத்தோடு சுழலப்பிடிக்கவில்லை. ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டானதும் தன் வீடிருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் நடக்கத்தொடங்கிறான். நீண்டவீதிவழியே வெகுதூரம் நடந்து வந்தவனுக்கு எங்கே செல்வது என்ற ஒரு இலக்கு இருக்கவில்லையாதலால் எதிர்ப்படும் குறுக்குவீதிகளால் ஏதோ ஒரு திசையில் திரும்பியும் மடங்கியும் கால்கள் போனபடிக்குப் போய்க்கொண்டேயிருக்கிறான். இவ்வாறு நடந்து நடந்து நகரின் பல வீதிகளையும் தாண்டிச் செல்கையில் ஒரு பரந்த கால்பந்தாட்ட மைதானம் வருகிறது. அதன் வேலியைத்தாண்டிக் குதித்து உள்நுழைந்து அதன் குறுக்காகக் கடந்து செல்பவனுக்கு அங்கே காற்றழுத்தக் குறைவாலோ என்னவோ கைவிடப்பட்டிருக்கும் பந்து ஒன்று கண்ணில் படவும், தன் புத்தகப்பையை ஒரு பக்கமாக வைத்துவிட்டு சற்று நேரம் தனியாக அதை உதைத்து விளையாடுகிறான். அவ்விளையாட்டு அலுத்துப்போகவும் அதையும் போட்டுவிட்டுத் தொடர்ந்து நடக்கத் தொடங்குகிறான். நடந்து நடந்து பல திறந்த வளவுகளின் வேலிகளையும், பயன்படுத்தாது வெட்டையாகக் கிடக்கும் தரிசுநிலங்களைம் தாண்டிக்கொண்டு ஒரு ரோபோட்டைப்போல அவன் செல்கையில் அவன் ஒருநாளும் கண்டிராத அந்நகரின் முடுக்கில் இருக்கும் சேரிப்பகுதி ஒன்றுக்கு வந்து சேருகிறான். அவன் கண்களினூடே பார்ப்பதுபோன்று அவன் காணும் காட்சிகளை கமெரா கவிதை செய்கிறது. அங்கே ஓரிடத்தில் அவன் வயதையொத்த சிறுவர்கள் சிலரும், பத்துப்பதினைந்து வயதிருக்கக்கூடிய சற்றே பெரிய சிறுவர்களுமாக கொஞ்சப்பேர் சேர்ந்துகொண்டு பேஸ்போல் விளையாடுகிறர்கள். அதையும் நிதானமாக நின்று வேடிக்கை பார்க்கிறான். அவர்களில் எவருக்கும் பரிச்சயமில்லாதிருக்கும் அப்புதிய சிறுவனை அணுகிச்சிலர் நேர்முகம் காண முயல்கிறார்கள். அவர்களை எல்லாம் அவன் ஏதோ சொல்லி ஒதுக்கிவிடுகிறான். அந்தியும் மெல்லச் சாயத் தொடங்குகிறது. மீண்டும் நடக்கத்தொடங்குகிறான். நடந்து நடந்து செல்கையில் விபச்சாரத்தொழில் நடக்கும் பிரதேசம்போல் ஒரு முடுக்கு வருகிறது. அதையும் கடந்துகொண்டுபோகிறான். அநேகமாக ஒவ்வொருவீட்டின் வாசலிலும் பெண்கள் சிங்காரித்துக்கொண்டு நிற்பது அவனுக்கு ஏனென்றும் புரியுதில்லை. அவர்களை அவன் திரும்பித்திரும்பி வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்லவும் அவர்களில் ஒரு குறும்புக்காரி அவனைப்பார்த்து வேடிக்கைக்காகக் கண்ணடிக்கிறாள். அவனும் பெரியமனிதன் போல் நின்று நிதானித்து அவளுக்குப்பதில் கண்ணடித்துவிட்டு அப்பால் செல்கிறான். இன்னொருத்தி “ மெஸிய+ (ஆழளெநைரச) தனியா எங்கு போறாப்பல?”என்று விசாரிக்கிறாள். அவன் அவளுக்கு ஒரு ஊர்ப் பெயரைச்சொல்லவும் அவள் “ மெஸிய+ அதற்கு நீ எதிர்த்திசையில் அல்லவா போகவேணும்” என்கிறாள். “ ப்ச் ” என்று அவளை அலட்சியம் செய்துவிட்டு மேலே தன்பாட்டுக்கு நடக்கிறான் அவன். அடுத்த அடுத்த காட்சிகளில் அவனைக்காணாது அவன் பெற்றோர் தவிப்பதுவும் அவனது நண்பர்கள், ஆசிரியர்கள் வீடுகளுக்கெல்லாம் போன் செய்து விசாரிப்பதுவுமான காட்சிகள் வருகின்றன.

சிறுவன் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறான். இருளத்தொடங்குகிறது. மாலை மயங்குவதையும் இருள்கவிவதையும் கமெரா கவிதையாக வடிக்கிறது. கல்நார்க்கூரை வேயப்பட்டு ஒரு கிட்டங்கி அல்லது மரக்காலை போன்று தோற்றம் தரும் கட்டடம் இருந்த பாரிய வளவு ஒன்றினுள் நுழைகிறான். அவ்வளவினுள் முன் புறத்தில் ஒரு பக்கமாக பெரிய மரங்கள் அரிவதற்கோ அல்லது விற்பனைக்கோ அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவ்வெளியைத் தாண்டிச்சென்று அந்த நீண்ட பாரிய கொட்டகையின் வாசலில் போய் நிற்கின்றான்.

அதன் பெரிய இரும்புக்கதவுகள் சாத்தியிருக்கின்றன. அதை அவன் தள்ளித்திறக்கவும் ப+ட்டப்பட்டிருக்காத அக்கதவுகள் கிறீச்சிட்டுக்கொண்டு திறக்கின்றன. அதன் நீண்ட கூடத்தின் வழியே நடந்துபோகிறான். அதனுள்ளே தகரப்பீப்பாய்கள், இன்னும் கட்டுமானப் பணிகளுக்குத்தேவையான மரங்கள், பைப்புகள், ஏதேதோ பொருட்கள் அடைத்த மரப்பெட்டிகள் எல்லாம் உலோக கிராதிகளில் சீராக வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நடக்கையில் அங்கே யாரோ சுத்தியலால் ஏதோ ஒரு உலோகத்தைத்தட்டிகொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது. ஆர்வத்துடன் மேலே போனால் தடுப்பாக அடைக்கப் பட்டிருந்த ஒரு இடத்தில் ஒற்றை பெற்றோமக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் சிறிய தாடிவைத்துக்கொண்டு ஒல்லியாக டிரௌசர் பெனியன் மட்டும் அணிந்துகொண்டு உள்ளொடுங்கிய கன்னங்களுளோடு கஞ்சாபுகைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் ஒரு பழைய சக்ஸபோனை அதன் நெளிவுகளை சிறிய காஸ் உலையில் சூடாக்கித்தட்டி நிமிர்த்தி சரிசெய்துகொண்டிருக்கிறார். அவரது அச்சிறிய பட்டறையில் அவரைச்சுற்றி மேலும் ஹோர்ன், ரூபா, டிரம்பெட் அன்ன பல இசைக்கருவிகள் கிராதிகளில் தொங்கிகொண்டிருக்கின்றன. இவனைக்கண்டதும் அவர் தட்டிகொண்டிருந்ததை நிறுத்திவிட்டு இவனைக் கொஞ்ச நேரம் அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார். பின் இவனைப் பெரிய மனிதனாகப்பாவித்து சீர்செய்து கொண்டிருந்த வாத்தியத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு எழுந்து தன் கையை காற்சட்டையில் துடைத்துக்கொண்டு ‘ஹலோ’ என்று முகமனுடன் அவனிடம் வந்து “ என் பெயர் லியோன் இசைக்கருவிகள் பழுதுபார்க்கிறது” என்று அறிமுகம் செய்வார். மிகச்சிறியதாக அவர்களுக்குள் உரையாடல் நடக்கும். அப்போது பாஷை புரியாததால் என்ன பேசினர்களென்று புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் “ சற்றுநேரம் இருங்கள்” என்று மரியாதையுடன் இவனுக்கு ஒரு ஸ்டூலைக்காட்டிவிட்டு வெளியேறிப்போவார். மனிதன் பொலீஸ{க்குத்தான் போன் பண்ணப்போகிறாரோவென்று பார்த்தால் சற்றுநேரத்தில் கையில் இரண்டு பைகளுடன் திரும்பிவருவார். அதில் ஒன்றுள் அவருக்கான சிகரெட் பாக்கட் மற்றும் அவர் வேலைக்குத்தேவையான பற்றவைக்கும் ஈயம் போன்ற சில பொருட்களும், மற்றதில் சில சான்ட்விட்ச் பொட்டலங்களும் ஒறேஞ் ஜூஸ் பெட்டியும் இருக்கும். அவற்றைக்கொடுத்துத் தன் சிறிய விருந்தினனை நன்கு உபசரிப்பார். பையன் ஒரு சமப்பால் உறவினனிடம் வந்து இசகுபிசகாக மாட்டிவிட்டானோவென்று பயந்தால் சாப்பாடெல்லாம் ஆனபின் தாடிக்காரர் இவனுக்காய் சக்ஸபோனில் சில மெலடிகளையும் , குதூகலம் வழியும் மெட்டுக்களையும் வாசித்துக்காட்டுவார். குந்தி இருந்துகொண்டு அவற்றை இவன் மிகவும் ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில் இரட்டை நிழற்காட்சிகளாக இவன் பெற்றோர்கள் பொலீஸ{க்குப்போவதும் வருவதுமான காட்சிகள் மேல் நகரும்.

பின் அவரிடம் எப்போது விடைபெற்றானோ தொடர்ந்தும் இருட்டுக்குள்ளாக நடந்துகொண்டிருப்பான். தெளிவான வானத்தில் நிலவும் நட்ஷத்திரங்களும் ப+த்திருப்பதை ஆசையுடன் பார்ப்பான். படத்தின் காட்சிகள் எதுவுமே செட் போட்டு எடுக்கப்படவில்லை. அனைத்துமே இயற்கையான சூழலின் ஒளிப்பதிவு. ஒரு நகரத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் மிகையான ஒளிச்சேர்க்கைகள் எதுவுமில்லாமல் இயற்கையொளியில் பதிவுசெய்யப்பட்டிருந்தவிதம் பையனோடு சேர்ந்து நாமும் அந்த இரவில் அலைவதைப்போன்ற உணர்வையே ஏற்படுத்தியது. தொடர்ந்து ஓய்ச்சலின்றி நடப்பதால் கால்கள் வலியெடுக்கத்தொடங்கவும் ஒரு வீட்டின் படிக்கட்டில் வெளிச்சுவரோரமாய் உட்கார்ந்து ஓய்வெடுப்பான். உடனே கண்களைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்துவிடும். சுவரில் சாய்ந்து சற்றுத்தூங்கிப்பார்ப்பான், மிகவும் அசௌகரியமாக இருக்கும். தெரு தூங்குவதற்கு உவப்பான இடமல்ல என்பதுவும் தெளிந்துவிடும். தூக்கக்கலக்கத்துடன் எழுந்து மீண்டும் நடப்பான். ஒருவீட்டின் சுவரில் தொற்றி அதன் முதல் (கூரை) தளத்துக்குப்போய் பின்பக்கவாட்டில் இருந்த இரும்பு ஏணியின் துணையோடு மேலே ஏறி அவ்வீட்டின் மேற்கூரைத்தளத்துக்குச் சென்றுவிடுவான். அங்கு கிடக்கும் கன்வேஸ் படங்கொன்றில் சுருண்டுபடுத்து ஆழ்ந்து தூங்கிவிடுவான். இப்போது அவன் வீட்டில் பெற்றோரோடு தாத்தா பாட்டியும் வந்து சேர்ந்திருப்பார்கள். அவனது தாய் இருக்கும் அல்பங்கள் எல்லாவற்றையும் குடைந்து தேடி ஒரு அவனது தனிப்போட்டொவொன்றை எடுத்து வைத்துக்கொண்டு பொலீஸ{க்குப்போன் செய்து “அவனது போட்டோ ஒன்றை டிவியில் காண்மிக்கலாமா” என்று கேட்கிறார். போலீஸ் ஒபிஸர் ‘எதற்கும் இன்னும் கொஞ்சம் பொறுமையாக தைரியமாக இருங்கள், எப்படியும் கண்டுபிடித்துவிடுவோம்” என்பதாக அவளுக்கு ஆறுதல் கூறுகிறார். பொழுது மெல்ல விடியத்தொடங்குகிறது. மெல்ல வெளிச்சம் பரவுவதும் உயர்வான அவ் இடத்திலிருந்து மூடுபனியிலிருந்து அந்நகரம் முகிழ்த்து முகை அவிழ்ப்பதுவுமான காட்சிகளில் கமெரா முழுவதுமாக கவிதையாகவே பெய்யவும் பையன் எழுந்து வீட்டை நோக்கி நடக்கத்தொடங்குகிற காட்சியோடு படம் முடிகிறது.

அந்திக்கருக்கலின் சந்தி ஒளியும் உஷத்துக்காலத்தின் ரம்யமும் பனியும் இயற்கையும் அந்த ஒளிப்பதிவுமாக ஒரு அந்தியில் தொடங்கி விடியலில் முடிகின்ற அப்படம் முடிவடைந்த பிறகும் அனைவரும் அசைவற்று இருந்தனர்.

கலாதரன் சொன்னான்: “என்னைக் கேட்டால் இப்படத்திற்கு ப்றம் டஸ்க் டில் டோவுண் (குசழஅ னுரளம வுடைட னுயறn) என்று பெயர் தந்திருப்பேன். ஆனால் கூகிளில் தேடியபோது அப்பெயரிலும் 1996 ல் பிறிதொரு படம் வந்திருக்கு. இதையொத்த ஒரு உன்னத ஒளிப்பதிவை பின்னால 2003 இல் நான் பீட்டர் வெபரின்; கேர்ள் வித் எ பேர்ள் இயர் றிங்ல இல் மாத்திரம் பார்த்திருக்கிறேன். ”

“ இப்பிடியொரு படம் தமிழில எடுத்தால் எப்பிடியிருந்திருக்கும்? ”

“ எங்கட சனத்துக்கு படக்கதைகள் இதிகாசக்கதைகள் மாதிரி ஒன்றோடை ஒன்று கொழுவிக் கொழுவிச் சரடுமாதிரி நீண்டு நெடுத்திருக்கவேணும். உபகதைகளும் கொமெடி டிறாக்கும் எத்தனை தூரம் விலகிச்சென்றாலும் பரவாயில்லை.”

“ இப்படி ஒருபடம் தமிழில் எடுத்துப்போட்டால் படம் முடிந்தாலும் இது இடைவேளைதான் என்று சனம் தியேட்டரில குந்திக்கொண்டிருக்கும். ”

“ நீ நல்லகதை அமைப்பாய்தான் சந்தேகமில்லை. ஆனால் ஒரு வெற்றிப்படத்துக்கு நல்ல கதைமட்டுமே காரணமாக அமைவதில்லை. அது சினிமாவாகும்போது சொல்லவந்த கதையை வெளியும் தொய்வும் சோர்வுமில்லாமல் சொல்லவல்ல காட்சி அமைப்புக்கள், ஒளிப்பதிவு, பொருத்தமான இசையமைப்பு, படத்தொகுப்பு எல்லாஞ்சேர்ந்தும் தூக்கிவிட வேணுமப்பா. இதுக்கெல்லாம் அந்த பீல்டில நிறைய அனுபவம் பெறவேணும். ”

“ வெற்றிப்படமொன்றின் சூத்திரத்தைச் சரியாகத் தெரிந்த பிரமன் எவனாவது உலகத்தில இருக்கிறானா , சூதாட்ட நிலயமொன்றில போய் நிச்சயமாய் ஜெயிச்சுக்கொண்டுவரக் கூடிய ஒரு ஜெயப்பிரதாபன் எவனாது உலகத்தில இருக்கிறானா? ”

“ அதாவது, சினிமா என்றாலே றிஸ்க் ஃபக்டர் 99 வீதமுள்ள ஒரு ஒப்பறேசன் என்கிறதை ஒத்துக்கிறாய். நாங்கள் போடுற எஸ்டிமேசனுக்குள்ள ஒன்றும் நிக்காது அன்றாட விலைவாசியோட சேர்த்து எல்லாம் மேல மேலயே போகும். படம் ஊத்திச்சுதென்றால் தாங்கமாட்டாய் கண்ணா. உன் படம் நன்றாகவே வந்திட்டாலும் வழமைச் சூத்திரங்கலிருந்து விலகியிருக்கக்கூடியபடம் ஒன்றிலிருந்து போட்டகாசை எடுக்கேலுமோ என்கிறதை உரத்துச் சிந்திக்கவேணுமப்பா. இடியட் என்றால் யாரென்று அகராதியிலபார்………… வழமையான வட்டத்தில இருந்து விலகி ஓடுகிறவன் என்று இருக்கும். அவனுக்கு மண்கவ்வ மற்றவர்களைவிட சந்தர்ப்பங்கள் அதிகம்.” பல முன்னுதாரணங்களைக் அடுக்கிப் பயமுறுத்தினார்கள்.

மிஸ்டர் அன்ட் மிஸிஸ். அய்யர் உண்மையில் வெற்றிப்படமா தோல்விப்படமாவென விவாதித்தார்கள். கடைசியில் அபர்ணா சென்னையே கேட்டுவிடுவதென்று தீர்மானமாகி அவரிடம் போனில்
“ திருமணமானவளோ ஆகாதவளோ ஒரு பெண்ணுக்கு இனம் மொழி ஜாதி கோத்திரத்துக்கப்பால் கண்ணியமான ஒரு ஆடவன்மேல் எழக்கூடிய ஒரு ஆகஷிப்பை மிக நுட்பமாகப்பதிவு செய்திருக்கிறீர்கள் இதுவரை யாரும் அப்படிப்பண்ணியதே இல்லை……. மாம் ” என்றபோது அமைதியாக ஏற்றுக்கொண்டவர் படத்தின் நிதி விவகாரங்கள் பற்றி எதனையும் சொல்லாமல் விழுங்கினார். ஃபில்ம் , டெவலொப்பிங் பிரச்சனைகளெல்லாம் இப்போதில்லை. ஒரு எச். டி. 24 மூவிகமராவையே வாடகைக்கு எடுத்துத்தேவையான காட்சிகளை மூன்றுமாதத்தில் சுட்டுவிடலாந்தான். இசையோ, தொகுப்போகூட அத்தனை சிரமமான காரியமாக இராது. சிக்கல் ஏற்படக்கூடிய இடம் என்றால் விநியோகந்தான். என்னதான் தமிழ் படங்களின் விநியோகத்தளம் ஐரோப்பாவென்றாலும் தமிழ்நாட்டைவிட்டுவிட்டால் எப்படியொரு தமிழ்ப்படம் தமிழர்களிடையே விநியோகித்ததாக ஆகும்? விநியோகத்துறையில் அனுபவப்பட்ட சிலரை ஆலோசனையின் நிமித்தம் நாடினான். சிலர் தயாரிப்பில் இலங்கைத்தமிழரின் பெயர் இருக்கலாம், ஆனால் இயக்கத்தில் மாத்திரம் வேண்டாம் என்றனர். காரணம் அவர்கள் படங்கள் கத்துக்குட்டித்தனமாக இருக்கும் விலைபோகாதாம். ” நம்மவர் சிலர் தீய்ந்துபோன கருக்களிலும் வகைமாதிரி (வுலிiஉயட) களிலும் சுட்டுவைத்திருக்கும் பண்டங்கள்தான் அவர்கள் பயத்துக்கும் காரணம்.

“எழுதிறதைவிட்டு படமெடுக்கவாறாயென்றால் உனக்கு புகழ் மேல ஆசைவந்திட்டுதென்று அர்த்தம்.”

“பொழுதுபோக்கைவிட ஒரு நல்ல சினிமாமூலமா ஒரு சமூகத்தின் பிரச்சனைகளை ஆராயலாம், சனங்களை அறிவ+ட்டலாம், புதிய திசைகளில சிந்திக்க வைக்கலாம். அதுதான் என் ஆசை. ”

“ ஜெர்மனியில்பாதி தமிழ்நாட்டில்பாதி நடைபெறுகிற மாதிரியான உன் ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ கதைதான் சினிமாவுக்கு கச்சிதமாய் பொருந்திவரும் ” என்றனர் சில நண்பர்கள்.

பிரமாண்டங்கள் எல்லாம் முடியாது. ஒரு ஜில்மாஸ் குனே பிரான்ஸிலிருந்து எடுத்தமாதிரி குறைந்தபட்ஷம் இலங்கையில் தமிழர்களுடைய உண்மையான பிரச்சனை என்ன என்பதை பெர்லினிலிருந்து ஒரு எளிமையான சினிமாவாக எடுத்து முழு உலகத்துக்கும் புரியவைக்கலாம். சிற்றிலக்கியப்பத்திரிகைகள், இணையப்பத்திரிகைகள் என ஒரு குறிப்பிட்ட வாசகர்வட்டத்துள் நின்று எழுதிக்கொண்டிருப்பதை விடவும் தன் படைப்பு காட்சிக்குக்காட்சி பல ஆயிரக் கணக்கான ரசிகர்களால் ரசிக்கப்படும் சினிமாவாக மாறவேண்டும். சினிமாவின் திசையில் என் மனது ஈர்க்கப்படுகிற தென்றால் தன் மனம் புகழ்மேலும் மெல்ல ஆசைப்படுகிறதா என்றும் யோசித்தான்.

“முன்னணியிலை இருக்கிற ஒரு இசைக்கலைஞனின் ஒரு நாள் செயற்பாடுகளைப் படமாக்கினால் என்ன? ”

“ நல்லாயிருக்கும். ஆனால் ஒவ்வொருநாளும் எடுத்துவைச்சு நீதான் பார்த்துக்கொண்டு இருக்கவேணும். ”
அவன் “ஒரு சாஸ்த்திரீய இசைக்கலைஞன்” என்றதும் அவன் நண்பர்கள் திரும்பியிருந்து சிரித்தார்கள்.

காலச்சுவட்டிலை படித்தேன் பிரசன்னா ராமசாமி என்றொரு கலைஞர் “அடிக்கடி பாரீஸ{க்கும் பெர்லினுக்கும் வந்துபோவாரே அவர்தானே?” “அவர்தான் எழுத்து, தியேட்டர், நடனங்கள் என்று பல்துறை ஆர்வமும் அனுபவமும் உள்ளவர். அவர் சஞ்சய் சுப்பிரமணியத்தின் வாழ்வியல் அனுபவங்களை ஒன்றரை மணிநேரப்படமாக எடுத்தார். அவருக்கே தெரிந்திருந்தது அதை 2 மணி நேரப்படமாக ஆக்கியிருந்தாலும் தியேட்டர்களில் ஓட்டியிருக்கவே முடியாதென்று. ”

“தியேட்டரிலை ஓட்டாவிட்டால் விட்டதிலை பாதிகூடத்திரும்பிவராதே………. அவருக்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டது அவரால் முடிந்தது நினைத்ததை எடுத்து முடித்தார். உனக்கெல்லாம் ஏலுமா கண்ணா? ”
விந்தனுக்கு கலாதரன் சினிமா எடுப்பதில் விருப்பமே என்றாலும் “ இது எமக்கு கொஞ்சம் அகலக்கால் வைக்கிறவேலை மாதிரிப்படுகுது…… சினிமா பணம் மாத்திரமல்ல நிறைய ஆள் அணி அம்பாரம் தேவைப்படுகிற ஒரு சமாச்சாரம். “படப்பிடிப்பு பீல்டுக்குள்ள நிற்கக்கூடிய ஒவ்வொருத்தனும் பெரிய பெரிய பார்சல்களில் பிரியாணி தின்றே உன் முதலீட்டைக் கரைத்துவிடுவான்பா” என்று என்று சினிமாவில் ஊறிய சுஜாதாவே சொல்லியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் நிதானமாய் யோசி ” என்றான்.

தங்கள் வங்கியில் இருக்கும் பணத்தையே “ இவனுக்கு 24 வீத வட்டிக்கென்றால் நான் ஒரு இடத்திலிருந்து கொஞ்சம் காசு மாறித்தருவேன்” என்று சொன்னவர்கள்அவன் சினிமா எடுக்கப்போகிறான் என்றதும் தம் வாக்கை மறுதலித்துப் பின்வாங்கினார்கள். ஏ.வி.மெய்யப்பச்செட்டியாரே ஒருமுறை புதிதாகப்படம் தயாரிக்க வருகிறவர்களுக்கு ஒரு புத்திமதிமாதிரிச் சொன்னார். “உன்னிடம் 4 படங்கள் தயாரிக்கக்கூடிய பணமிருந்தால் மட்டும் ஒரு படத்தை சோதனையாக எடுத்துப்பார். வெற்றிகிடைச்சா அடுத்த படத்தை எடுக்கலாம். அல்லது விட்டிடலாம். அதைவிட்டு சொத்தைவித்து, வீட்டைவித்து, இருக்கக்கூடிய தங்கத்தை தொலைத்துப் படமெடுத்து அது புண்ணாச்சுன்னா அப்புறம் மீளமுடியாமப்போயிடுவே. சினிமாங்கிறது சூதாட்டம்பா. வெற்றி வரலாம், நிச்சயம் வந்திடும் என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. கலை இலட்சியம் கனவுங்கிறதெல்லாம் வெறுங்கதை.” ஒரு பெரும் அனுபவஸ்தனே சொல்கிறாரென்றால் சும்மாவா?

புத்தகங்கள் என்றால் சில ஆயிரங்கள்……….. சுதாகரித்துக்கொள்ளலாம்.

மியூசிக் சிடி யோ , டிவிடி சமாச்சாரமென்றால் சில லக்ஷங்கள்……… காலமெடுத்தாலும் ஒருவேளை மீண்டிடலாம். ஒரு சினிமா ஊத்திச்சென்றால் கோடிக்கணக்கில் நஷ்டங்கள் வரும் தாங்கமுடியாது. உலகில் அங்கீகரிக்கப்பட்ட கலைஞனாகும் ஆசை ஒருத்தனை திவாலாக்கிக் குட்டிச்சுவராக்கிவிடும்.

“ குமர்ப் பிள்ளைகளை வைத்துக்கொண்டு மனுஷன் அடிக்கிற கூத்தைப்பாருங்கோ ” ஊர் சேர்ந்து பரிகசிப்பதோடு தன்குடும்பமே தன்னை ஆயுளுக்கும் சபிக்கும், மன்னிக்காது. புகழ் பூத்த கலைஞனாக அல்லாமல் சாமானியனகவும் வாழ்ந்துவிடலாம். பிரச்சனையில்லை. ஒரு திவால் ஆசாமியாக சாலைநடைபாதையில் கூடாரம் வைத்துக்கொண்டு வாழநேருவதும் துன்பம். ஆழ்ந்த சிந்தனையின் பின் சினிமா எடுக்கும் எண்ணத்தை நோதலுடன் கைவிட்டான். கைவிட்ட பின்னாலும் ஓயமறுக்கும் ஒரு சுனாமி கபாலத்தின் உட்சுவரை எப்போதும் மொத்தியபடி.

இப்போதெல்லாம் அவன் சிந்தனைகள் சங்கீதசாகரத்துள் அலையாடுகின்றன. கலாதரனின் இசையார்வத்தை அறிந்த ஒரு நண்பர் இந்தியாபோய்விட்டு வரும்போது மதுரை ஜி. எஸ். மணி என்றொருவரின் முயற்சியில் அவரே பாடிவெளியிட்ட “கர்நாடக இசையும் சினிமாவும்” என்கிற இசைப்பேழைகளை வாங்கிவந்து கொடுத்தார்.

மதுரை ஜி. எஸ். மணிக்கு ஆழ்ந்த இசைஞானம் அத்தோடு அற்புதமான குரல்வளம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இசையமைப்பில் 7 வருடங்கள் உதவி செய்தவராம். இன்னும்தானே யாத்து இசையமைத்து ‘மானசபொய்கை’ என்கிற ஒரு ஆல்பமும் தயாரித்திருப்பதாகத் தெரிகிறது.

கர்நாடக சங்கீதத்தின் முதன்மை இராகங்கள் 72 இல் ஆனந்தபைரவி- பிருந்தாவனசாரங்கா- பாகேஸ்வரி- பாவனி- பிம்பிளாஸ்- சக்கரவாகம்- சாருகேசி – ஹிந்தோளம்- கல்யாணி- கானடா- கௌரிமனோஹரி- காம்போதி- கரஹரப்பிரியா- ஜோன்புரி- மோகனம்- கீரவாணி- பந்துவராளி அன்ன 24 ஜனரஞ்சக இராகங்க ளைத் தேர்ந்தெடுத்து அவை சினிமா சங்கீதத்தில் கர்நாடக இராகங்களின் அடிப்படையில் அமைந்த மெட்டுக்கள் எங்கெங்கே உள்ளன, எங்கெங்கே லேசாக மட்டும் லேசாகத் அங்கங்கே தொட்டுக்கொள்றாப்போல அமைக்கப்பட்டுள்ளன என்பதையும் அவ் இராகங்களையும் அவுட் – ஸ்கெட்ச் போட்டாற்போல தன் பாவம் ததும்பும் குரலில் அங்கங்கே சிறிது சிறிது பாடிக்காட்டி இருப்பார். அற்புதமாக இருக்கும்.

ஒவ்வொன்றும் 45 நிமிஷங்கள் கேட்கவல்ல மூன்று இசைப்பேழைகள் நிறையவும் ஒரு இன்ப அனுபவம். இருந்தும் அவ்வரிய முயற்சி இசைஞானியின் திருவாசகம் சிம்போனி அளவுக்குக்கூட சுவைஞரிடம் செல்லவில்லை. அவரது அரிய முயற்சியை தமிழ் இசை உலகத்தில் யாரும் கண்டுகொண்டதாகவோ பாராட்டியதாகவோ தெரியவில்லை. கலாதரன் ஓரளவு இசை முயற்சிகளை ரசிக்கக்கூடியவர்களிடம்; “மதுரை ஜி. எஸ். மணி என்றொருவர் ‘கர்நாடக இசையும் சினிமாவும்’ என்கிற ஒரு காசெட் வெளியிட்டிருக்காரே அற்புதமாயிருக்கு கேட்டுப்பார்த்தீர்களா………..?” என்று விசாரித்தால் உதட்டைப்பிதுக்கிவிட்டு “இல்லையே உங்களிடமிருந்தால் கொப்பி பண்ணிக்கொடுங்களேன் , கேட்கிறேன்” என்றுதான் சொன்னார்கள்.

அது ஒரு கோடை காலம். கலாதரனுக்கு அன்று பணிவிடுப்பு. அனேகமாக அவனது இசை இலக்கிய நண்பர்கள் கூடும் நாள். 5 லிட்டர் கிண்டில் பியர் பீப்பா ஒன்று வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தான். நண்பர்கள் வந்தபின்பு பியரையும் ஜி.எஸ். மணியையும் ஏககாலத்தில் ஓடவிட்டு அவர்களுடன் சேர்ந்து கேட்கும் குஷிக்காக காத்துக்கொண்டு ஜன்னலைத் திறந்துவைத்து வெளியே தெரியும் ரயில்பாதையில் திருத்த வேலைகள் நடைபெறுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவும் விந்தன் தன் மோட்டார் சைக்கிளில் வந்து ஸ்டான்ட் போடுவதைப் பார்த்தான். இங்கே வருஷத்தில் கோடைகாலத்தில் நாலைந்து மாசங்கள்; மாத்திரம் பைக் ஓட்டலாம் ஆதலால் இங்கு பொதுவாக தமிழர்கள் எவரும் மோட்டார்சைக்கிள் வைத்திருப்பதில்லை. விந்தன் விதிவிலக்கு. கிரிதரனும் ஜேசுதாஸ{ம் அன்று வருவதாகச்சொல்லியிருக்கிறார்கள். திருமகள் என்னதான் முனகினாலும் அவன் தோஸ்த்துக்களாவது அவனுக்கு ஏதாவது புத்தி சொல்லித்திருத்தமாட்டார்களா என்கிற நப்பாசையில் அவர்களை நல்லபடியே உபசரிப்பாள்.

“ இங்க நாங்கள் முதல்ல பார்க்க இருக்கிற ராகம் கல்யாணி.

நி ரி க ம த நி ரி ஸ……
ஸ ரி நி த ம க ரி நி……

இது ஒரு சம்பூர்ண ராகம். ஏழு சுரமும் ஒண்ணு மாத்தி ஒண்ணு வரும். இது ஒரு அவுஸ்பிசியஸ் ராகம். இதை வைச்சிண்டு சாகித்யம் பண்ணாத சாகித்யகர்த்தாக்களே இல்லேன்னுடலாம்.
எல்லா சிச்சுவேஸனுக்கும் பொருந்திவரக்கூடிய இந்த அற்புத
ராகத்தை திரைப்படங்களிலே எப்படியெல்லாம் கையாண்டிருக்கான்னு
பார்க்கலாம்.

சிந்தனை செய்மனமே…… செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமிமகனை சண்முகனை குகனை சிந்தனை செய்மனமே….

இதை கீழேயிருந்து ஆரம்பிச்சிருப்பா. இதையே எடுப்பிலேயே
மேல இருந்து ஆரம்பிக்கிறதுமுண்டு.

வாசுதேவ ஜெனிவிடலினை ஜீதவ்……
பாதி துனி கலதேவி….. வாசமாதி சுகபூஜி துணை
வாரி கலயன அதினிதல சுகுரு
வாசுதேவ ஜெனிவிடலினை

இதே கதியில இன்னொண்ணு

மன்னவன் வந்தானடி தோழி……..
மஞ்சத்திலே இருந்து என் நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி……..

இன்னொரு பாட்டு

முகத்தில் முகம் பார்க்கலாம் – விரல்
நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்….

உத்தம புத்ரன்கிற படத்தில ஒரு டூயட்கூட பண்ணியிருக்கா.

முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே
உள்ளமுறவாடுதுன் அன்பாலே-முல்லை மலர் மேலே
மின்னலுருவாகி மண்மேலே கன்னியைப்போலே
அன்னநடை பயிலக்கண்டேன் காதலினாலே

இதே கல்யாணியை இன்னிக்கு நாப்பதுவருஷத்துக்கு முன்னாடி
ஒரு மியூசிக் டைரக்டர் நியூ ஆங்கிள்ல பார்த்து புது ட்றீட்மென்டோட வித்யாசமா நூதனமா பண்ணியிருக்கார். ஆச்சர்யமா இருக்கும்.

நி ரி த ம க ரி ம ஸ நி என்ற வரிசையில ஸ ப ஸ வை எடுத்துண்டு இல்ல
கொஞ்சமா யூஸ் பண்ணிண்டு செய்திருக்கார் பாருங்கோ

நி ரி க ம த நி ரி….
ரி நி த ம க ரி நி…..

அங்கே கல்யாணின்ட நிறமே மாறிடுது.

துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே சோகம் பொல்லாதே
பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னே நீந்துவதால் பயனேது
சீறும்; புயலும் மழையும் சேர்ந்;தால் சின்னக்குடை தாங்காது

இன்னும் எத்தனையோவுண்டு. கணக்கில்லாம சொல்லிண்டே போகலாம்.

பொல்லாத்தனம் என்ன சொல்வேன் கண்ணா
போதும் மலர்க்கண்ணனே….
என்றொரு பாட்டு பெண் எங்கிற படத்தில.

இந்த ராகத்துக்கு வேகமும் ஜாஸ்தி…. ஆற்றலும் ஜாஸ்தி.

(தானத்தில் சதுஸ்ர திஸ்ர நடைகளிலே ஆலாபனை செய்கிறார்.)

இப்படி எல்லா வகைக்கும் வசைஞ்சு கொடுக்கவல்வ ராகம் கல்யாணி.
இப்படி வசைஞ்சு கொடுக்கவல்ல ராகங்களைத்தான் அநேகமா சினிமாவிலயம் யூஸ் பண்ணின்டிருப்பா. அப்படி ரொம்ப வளைஞ்சு
இசைஞ்சு கொடுக்கவல்ல இன்னொரு ராகந்தான் கானடாங்கிறது.

அந்த கானடாவை இப்போ பார்க்கலாம்.

ஸ நி ப த ப ம ப க த ம ரி ஸ….
ஸ நி ப த ப ம ப க த ம ரி ஸ….

சுரங்கள் நேராயில்லாம ஸிக் ஸாக்கவும் ஜம்பிளாவும் போகும்.
இந்த ஜம்பிள்தான் கானடாவின் தனி அழகு.
இது இயல்பிலயே கருணாரஸம் பொருந்திய ஒரு ராகம்.

சுகி யெவ்வரோ…. ராம நாம…. இது தியாகராஜ ஸ்வாமிகள்

அப்புறம்; ஸ்வாதித்திருநாள்

மா மவசதா ஜனனி…. மகிஷாசுரசூதனி – அம்ப
மா மவசதா ஜனனி….
சோமபிம்ப மனோகர சுமுகி தேவதாகில
காமதார நீரஜ…. சடாட்ஷர விலாஸினி
அம்ப மகிஷாசுர சூதனி
மா மவ சதா ஜனனி….

ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் ஜனரஞ்சகமாவே பாடுறார்

அலைபாயுதே கண்ணா……
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா….

அன்னைக்கு 40 வருஷத்துக்கு முன்னாடி ஒரு டைரக்டர்
மனோன்மணிங்கிற படத்துல பண்ணினார்

மனமோகனாங்க வதனி உனையே காணும் பாக்யம் வருமோ
என்னாசை மோகனாங்க வதனி
என்னையறியாமலே என்னுள்ளம் கொள்ளை போனதே
உனைமறந்தே இருக்க அறியேன் நான்
உருவெடுத்தே இந்த போர் தொடுத்தேன்
மனமோகனாங்க வதனி.

இப்போ சமீபத்ல சிந்துபைரவிங்ற படத்துல வருது
அதன் பல்லவியை மட்டும் பார்க்கலாம்.

பூமாலை வாங்கி வந்தேன் பூக்களில்லையே
தினந்தினம் பூமாலை வாங்கி வந்தேன் பூக்களில்லையே

இதேபோல மேல இருந்து ஆரம்பிக்கிற கானடாவுமுண்டு.

கொஞ்சும் சதங்கை ஒலிகேட்டேன்
கேட்குதம்மா ஒரு பாட்டு

நிநி தத பப மம கக ரிரி சச…..
அலைபாயுதே கண்ணா….

இதேபோல இன்னொரு மனோரம்யமான ராகம்
சாருகேசிங்கிறது.
ரொம்ப அபூர்வமான சம்பூர்ணமான ராகம். மேடையிலகூட பலகாலம்
யாராலும் அதிகம்; பாடப்படாமலே இருந்து வந்ததது.

இதன் ஆரோகண அவரோகணங்கள் ரொம்ப நேர்த்தியா இருக்கும்.

ஸ ரி க ம ப த நி ஸ
ஸ நி த ப ம க ரி ஸ நி ஸ த நி ரி ஸ……

கிருபயா பாலய சௌரே….
கருணாலவால….. தலுஷாவி ராம
கிருபயா பாலய சௌரே….

அப்பிடின்னு ஸ்வாதித்திருநாள் எப்போதே பாடியிருந்தாலும்
ஹரிதாஸ்ங்கிற படத்தில ஒரு இசையமைப்பாளர் முதன்முதலா இந்த ராகத்தில இசையமைக்கிறார் எம். கே. தியாகராஜபாகவதர் பாடியிருந்த
அந்தப் பாட்டை முழுத்தமிழ்நாடுமே பாடிச்சு.

மன்மதலீலையை வென்றாருண்டோ
என்மேல் உனக்கேனோ பாராமுகம்?

இந்த ராகத்துக்கு ஸ்வரவரிசையின் மத்திமபாகத்திலதான் லைஃப்பே.

தியாகையர் அதை உணர்ந்துண்டு பாடியிருப்பார்.

ஆட்டமோடி கலதே ராமையா…. மாட்ட
ஆட்ட மோடிகலதே ராமையா…. மாட்ட
ராமையா மாட்ட….

அப்பிடின்னு.

அதையே ஃபலோபண்ணி அதே இசையமைப்பாளர் சாரங்கதாரா என்கிற படத்தில மீண்டும் யூஸ் பண்றார்.

வஸந்தமுல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே
ஜாலமெல்லாம் நானறிவேனே வா வா ஓடிவா….

அத்தனை அழகான எளிமையான ஜனரஞ்சகமான ராகம் இந்த சாருகேசி.

ஸஸ நிநி தத பப மம ரிரி ஸஸ…………..
இதை காம்போதி என்கிறது.
ஹரிகாம்போதியில் இருந்து ஜனிச்சு பின்னால ஹரிகாம்போதியைவிட பொபுலராகிவிட்ட ராகம்.
அந்தக்காலத்தில எளிமையாக சாதாரணமாகப் பெண்கள்கூடப் பாடக்கூடியமாதிரி ஒரு பாட்டு தியாகராஜஸ்வாமிகள் பண்ணியிருக்கா…..

மா ஜானகி ஜெக பெடக………
மஹராஜுவை தி மாஜானகி……..

அப்புறம்……. கோபாலகிருஷ்ண பாரதியார்

என்னைமறுபடியும் கருவடையும் குழியுள்தள்ளி
வருத்தப்படுத்தவேண்டாம் பொன்னம்பலவா
உன் திருவடி சரணம் என்று நான் நம்பிவந்தேன்

எடுத்த ஜனனம் கணக்கெழுத தொலையாது
இரங்கி மகிழ்ந்து தேவரீர் வேணுமென்று கொடுத்த
மானிட ஜென்மம் வீணாகிப்போகுது
என் குறைதீர்ந்தபாடில்லையே
அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அரஹரா என்று சொன்னாலும் போதாதோ
அடுத்துவந்த என்னை….தள்ளலாகாது
தடுத்துவந்தருள சமயம் கோபாலகிருஷ்ணன்
சந்ததம் பணிந்து புகழ்ந்துபோற்றியுன்
திருவடிசரணம் என்றிங்கு நான் நம்பிவந்தேன்.

இப்படி மேலே சஞ்சாரம் பண்ணுவதுதான் காம்போதிக்கு லக்ஷணம். சினிமாவுல ஒரு பிறேக் சிச்சுவேசன்ல வைச்சோம்னா அற்புதமாயிருக்கும். அம்பிகாவதின்னு ஒரு படத்தில பாருங்கோ அதை ரொம்ப லாவகமா ஒரு பிட்டில வைச்சிருக்கா. அவா எடுப்பிலேயே மேல்ஸ்தாயிலேயே எடுத்துப்பாடுவா….

தமிழ் மாலைதனைச்சூடுவார்…….

தமிழ் மாலைதனைச் சூடுவார்
கொன்றைத் தளிர்மாலை
மலர்மாலை ஜெபமாலையுடன்
தந்த தமிழ்மாலை தனைச்சூடுவார்….

நாதஸ்வர வித்வான்கள் இதை எடுத்திட்டா ரொம்ப பிரியமா கற்பனைகள் கலந்து கலந்து வெகு விஸ்தாரமா வாசிப்பா…. முடிவே இருக்காது.

ஸ்வரப்பிரதாரங்களும் கம்பீரமும் நிறைந்த இந்த ராகம் கைலைநாதனுக்கு மிக உகந்ததில்லையா ஸ…ரி…க…ம…ப…த…நி…ஸ
ஸ…நி…த…ப…ம…க…ரி…ஸ இது ஹரகரப்பிரியா. சுத்த மத்திம ராகங்களுன்னு சொல்லப்படுற 36 ராகங்களில 22 வது மேளம்னு இதைச்சொல்லுவா. தியாகராஜஸ்வாமிகள் உருக்கமான ஒரு கீர்த்தனை ரொம்பத் தீனபாவம் வெளிப்பட அமைச்சிருக்கா.

சக்கனிராஜ மார்கமுமுண்டக
சஞ்சுவ புருஷ நேலக மானஸ…….

அப்புறம்

ராமா நீயடா…. ரேமர கிதுலகோ
ராமரோ நீ தெலிசுனா……….. தெரியுமான்னு கேட்கிறார்.

இதையே பலோ பாண்ணி சகுந்தலைன்னு ஒரு படத்தில ஒரு சிச்சுவேசன்ல்ல

எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன
தன்னை மறந்தென் மனம் துள்ளி விளையாடுதே
என்ன செய்வேன் லாகிரி கொண்டேன் போலும்
எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன

சதுஸ்வரகதியிலேயே இந்த ஹரகரப்பிரியா ஆதியிலிருந்து பாடப்பட்டாலும் கர்ணன் எங்கிற படத்திலே அந்த இசையமைப்பாளர் அதை
திஸ்ரகதியில பண்ணியிருப்பா ரம்யமா இருக்கும் பாருங்கோ.

மஹாராஜன் உலகை ஆளுவார்…………
இந்த மஹாராணி அவனை ஆளுவார்.”

கர்நாடக சங்கீதத்துக்கும் இந்துஸ்தானி சங்கீதத்துக்கும் சில ராகங்கள் பொதுவா உண்டு.
நாம சுபபந்துவராளிங்கிறதை அவா தோடிம்பா.
நம்ம கல்யாணியை அவ யெமென் என்பா.
அவாவ+ர் கலாவதி நம்மவ+ர் வலஜி.
அவங்க ஸ்ரீ ரஞ்ஜனி நம்ம பாகேஸ்வரி.
இரண்டுக்கும் ஸ்வரங்கள் ஒண்ணுதான், பாகேஸ்வரிக்கு எபோதாவது ஒரு பஞ்சமம் சேர்த்துப்பா.

இந்த பாகேஸ்வரி இருக்கே பாடுறவாளையும் சரி, கேட்கிறவாளையுஞ்சரி உருக்கிவிடவல்ல ராகம்.
அப்பேர்க்கொத்த கபாசிட்டி அந்த ராகத்துக்கு இருக்கு.

ஹரிகதை ஸொல்றவாளெல்லாம் கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை கண்டேன் ராகவான்னு இதைப்பாடும்போது பலர் கண்களில இருந்து ஜலமா கொட்டிண்டு கேட்டதை நான் பார்த்திருக்கேன். இதைப்புரிஞ்சுண்டுதான் அருணாசலக்கவிராயர் இந்தக் கீர்த்தனையைப் பண்ணீண்டார்.

கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன்…….. ராகவா- நான்
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன்……. ராகவா

அண்டரும் காணாத லங்காபுரியில்
அரவிந்தவேதாவை தரவந்த மாதாவை – கண்டேன்
பனிக்கால பாரீசம் போல நிறம் கூசி
பகலொருயுகமாக கழித்தாளே பிரயாசி
நினைத்தங்கே ராவணன் அந்நாள் வர
சீ சீ நில்லடா என்று ஏசி
தனித்துத் தன்னுயிர்தனைத் தான்விட மகராசி
சாரும்போதே நாணும் சமயமிதே வாசி
இனித்தாமதம் செயலாலாகா தென்றிடர்வீசி
ராமா ராமா ராமா என்றெதிர்பேசி……….. கண்டேன் ராகவா
கண்டேன் ராகவா கண்டேன் ராகவா கண்டேன் ராகவா.

இன்னும் மாயாபஜார்ங்கிற படத்துல

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
உனது தியானமே நானே மறவேன்
உயிரோவியமே உனையே பிரியேன்…….

அப்புறம் குலேபகாவலிங்கிற படத்துல

மயக்கும் மாலைப்பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
பன்னீர் தெளிக்க பனிபெய்யுமே
பசும்புல் படுக்க பாய்போடுமே
புன்னை மல்ரகள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே.
மயக்கும் மாலைப்பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்கவா…………

மூன்று ஒலிப்பேழைகளும் முழுவதுமாக ஓடிமுடியவும் அறையில் நிலவிய நிசப்தத்தை உடைத்துக் கிரிதரன் பேசினான்:

“அந்தக்காலத்தில சாதாரணமாகப் பெண்கள்கூடப் பாடக்கூடியமாதிரி எளிமையாக ஒருபாட்டு தியாகராஜசுவாமிகள் பண்ணியிருக்கா….. என்கிறாரே பெண்களென்றால் என்ன அத்தனை இளக்காரமா?”

“ உண்மையில ஆண்களைவிட பெண்களாலதான் லேசாக உச்ச ஸ்தாயிகளைத் தொட்டிடமுடியும், ஒரு லதா மங்கேஷ்கார் ஒரு பர்வீன் சுல்தானா ஒரு கிஷோரி அமொங்கர் போன்ற டுiஎiபெ டுநபநனௌ ஐ மறந்துவிடலாமா. ஜி.எஸ். மணி மறுக்கவில்லை மறந்திருப்பாரென்று நினைக்கிறன். ”
கலாதரன் ஜி. எஸ். மணிமேல் வந்திட்ட அபிமானத்தால் அவருக்காக வாதாடினான்.

கேட்பதற்கு இவ்வளவு ரம்மியமாக இருந்தும் அவ்வெளியீடு இசைரசிகர்களிடையேகூட செல்லாததுக்கு அவர்கள் பக்கமாக என்ன குறைகள் என்று இருக்கிறதென்று விவாதிக்கையில் ஒவ்வொருவரும் ஓரிரு கருத்துக்களைச் சொன்னார்கள்.

“ அக் கசெட்டுக்களை வெளியிட்ட இன்றெகோ என்கிற நிறுவனம் திருவாசகம் சிம்போனிக்குச் செய்யப்பட்ட விளம்பரத்தில் ஒருவீதத்தைக் கூடச்செய்திருக்காது. ”

“ 45 நிமிஷங்கள் கேட்கவல்ல 3 கசெட்டுக்களாக வெளியிட்டதுக்குப்பதில் 90 நிமிஷங்கள் கேட்கவல்ல 2 கசெட்டுக்களாகவோ , ஒரு சிடியாகவோ செய்திருக்கலாம். ”

“ வேறுயாருக்கும் செய்யத்தோன்றாத ஒரு அரிய முயற்சிதானென்றாலும் பாடல்கள் அனைத்தையும் ஜி. எஸ். மணியே பாடியிருப்பதால் தொடர்ந்து கேட்பவருக்கு ஏற்படும் சிறு அசதி. ”

திரை இசைப்பாடல்களில் அவருடன் சேர்ந்து பாடிய பெண்மணிக்கு ஸ்ருதிபிசகாமல் பாடும் வல்லபம் பாவம் எல்லாம் இருக்கிறதுதான். ஆனாலும் குரல் கரகரப்பாக இருக்கு இனிமை இல்லை.” கர்நாடக இராகங்களைப்பாடும்போது வயலினும் மிருதங்கமும் போதும்தான். ஆனால் சினிமாப்பாடல்களைப் பாடும்போது அவ்வவ்விசையமைப்பாளர்கள் பயன்படுத்தியபடியே ஷெனாய், கிளாரினெட், சக்ஸபோன் போன்ற மேற்கத்தைய இசைக்கருவிகளையோ குறைந்தபட்ஷம் ஒரு கீபோட்டையாவது பயன்படுத்தியிருக்கவேணும். சிக்கனம் நல்லதுதான் அவர் மிகவும் சிக்கனமானமுறையில் தன் ஒலிப்பதிவைச்செய்ததால் மிளிர்ந்திருக்கவல்ல பல சாத்தியங்கள் இல்லாது போய்விட்டன.”

ஆனாலும் ஜி. எஸ். மணியின் அந்த முயற்சியே அவனுள் இசையின் உன்னதவெளிப்பாட்டுக்கான புதிய புதிய சாத்தியங்களைப் பற்றிய கற்பனைகளைத் தூண்டிக்கொண்டிருந்தது.

“ ஒரு தனிக்கச்சேரியைக்கேட்பதைவிடவும் அந்த ஒலிப்பேழையைக் கேட்கையிலுள்ள ஈர்ப்பும் தித்திப்பும் அதிகமாயிருப்பது எதனாலென்றால் அதில் ராகங்கள் அனைத்துமே உள்ளங்கையில் நெய்க்கரண்டியால் தொட்டுவைத்த பஞ்சாமிர்தம்போல கொஞ்சமாக இருப்பதுதான். அவர் ராகத்தை ஆலாபனைபண்ணிக் கோடிகாட்டிவிட்டு பல்லவியை சிறிது பாடி நிறுத்துகையில் சுவைஞனுக்கு மீதியை சாகித்யத்தையும் கேட்கவேணும் என்கிற தாகமும் அதிகமாகிறது.”

“ இதே போன்றொரு இன்பத்தவிப்பை பிரசன்னா இராமசாமி இயக்கிய இன்னொரு படத்திலும் அனுபவிக்கலாம். ஒரு ஜெர்மன் தொலைக்காட்சிக்காகவோ , குழுமம் ஒன்றுக்காகவோ ஒரு பரதநாட்டியக்கலைஞரின் கலைவாழ்வின் வெட்டுமுகத்தைக் காண்பிப்பதுபோல சுகன்யாவை வைத்தொரு படம் பண்ணியிருப்பார். அங்கங்கே அவர் ஆடும் நடனங்களின் பகுதிகள் அலாரிப்பு, ஜதீஸ்வரம், வர்ணம், தரங்கம், தோடயமங்கலம், பதம், தில்லானா என்று அவ்வவ் உருப்படிகளின் நிறங்களை லேசாகத் தூவிச்செல்வார். அசத்தலாக இருக்கும்.”

கேட்ட எல்லோரையும் ஜி. எஸ். மணி பாதித்திருந்தார். தன்பொழுதும் முயற்சியும் வீண்போகவில்லையென்றே கலாதரன் எண்ணினான்.

கர்நாடக சங்கீதத்திலே மேளகர்த்தா எனப்படும் முதல் ராகங்கள் எழுபத்தியிரண்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆனால் அவை அத்தனையுமே கச்சேரிகளிலோ வேறெங்குமோ எப்போதும் பாடப்படுவதுமில்லை.
காலத்துக்குக்காலம் இசை வல்லவர்களால் வாக்கேயக்காரர்களால் முதல் அடிப்படை இராகங்களிலிருந்து ஆக்கிப் பரப்பப்பட்டிருக்கும் (கிளை) ஜன்னியராகங்களின் எண்ணிக்கையை எவருமே சரியாக வரையறை செய்துவிடமுடியாது.

என்றாலும் நவீன எம்பி3, எம்பி4 எனப்படும் புதியமுறையிலான ஒலிப்பதிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மதுரை ஜி. எஸ்.மணியினுடைய முயற்சியையே ஒரு கைட்- லைனாக வைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் புதுமையாக அனைத்து மேளகர்த்தா72 இராகங்களையும், முடிந்த அளவுக்கு ஜன்னிய இராகங்களையும், சில இனிமையான இந்துஸ்தானி இராகங்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு ப+ரணமான வெளியீடாக இரண்டே டிவிடி குறுவட்டுக்களில் கொண்டுவந்தால் என்னவென்று ஒரு எண்ணம் கலாதரனின் மனதில் பொறிக்கவும் அதை நண்பர்களிடையே வைத்தான்.

“அதுக்குத்தான் இப்போ ஏராளம் மிய+சிக் வெப்சைட்ஸ் வந்திட்டுதே? எந்த ராகம் கேட்கவேணுமெண்டாலும் ஒரு சொடுக்கில இரைஞ்சுகொண்டு வரும்பா. போதக்குறைக்கு அய்பொட், யு எஸ் பி ஸ்டிக்ஸ் றெகோடிங் என்று எத்தனையோ சமாச்சாரங்கள் வசதிகள் இருக்கு இப்போ.”

“ இருக்குத்தான் ஆனால் அதிலொன்றாலும் நாங்கள் கர்நாடக சங்கீதத்தையோ, இந்துஸ்தானியையோ ஒழுங்காகக் கேட்கமுடியாது தெரியுமே வியாபாரநோக்கிலான வெப்தளங்களில் கிறெடிட் கார்ட்மூலம் காசை அனுப்பி அவர்களின் உருப்படிகளை இறக்குமதி பண்ணிக்கேட்டால் தெரிஞ்சுபோகும் குவாலிட்டி.”

“ இலவசமாய் கேட்கக்கிடைக்கிற இசைஇணைவலைகளில ஒவ்வொரு உருப்படியினதும் ஒலியின் செறிவு, தரம் ஒவ்வொரு மாதிரியிருக்கு.

பழைய கிராமோபோனில கேட்கும்போது வர்றமாதிரி தொடர்ச்சியா ஒரு ‘ஹிஸ்’ சத்தம்வந்தபடியே இருக்கு. அப்பிடிச் சில தொழில்நுட்ப, தரக்குறைபாடுகள் இருந்தாலும் இருப்பதில மியூஸிக்இன்டியாடொட்;கொம், ராhகா டொட் கொம் என்கிற இரண்டு தளங்களும் பரவாயில்லை. ஏராளம் கர்நாடக, ஹிந்துஸ்தானி, பலமொழியிலான திரையிசைப்பாடல்களையும் அவர்கள்தான் வைத்திருக்கிறார்கள ;”.

தொடர்ந்து கலாதரன் சொன்னான்: “ ஒன்று……….வெப்தளக்காரர்களுக்கு இசைக்கலைஞர்களுக்கு, பக்கவாத்தியக்காரர்களுக்கு பணத்தை அள்ளியிறைத்து தாங்களே ஒலிப்பதிவுகளைச்செய்து வலையில் வைக்கக்கூடிய பொருளாதார பின்புலம் இருப்பதில்லை. அரசுகளோ, தனியார் அமைப்புகளோ இல்லை சுவைஞர்களோ அவர்களுக்கு எந்த நிதியுதவிகளும் செய்வதில்லை.

இரண்டு……….ஆனானப்பட்ட பத்திரிகைகளே இனையத்தளத்தில் எவரும் இலவசமாகப்படித்துவிடக்கூடியவகையில் தங்கள் பத்திரிகைகளை விரித்து வைத்திருக்கையில் இசைப்பிரபலங்கள் தங்கள் சுமார் ரகக்கச்சேரிகளைக்கூட இத்தளங்களுக்குத் தருவதில் காட்டும் தயக்கம்.
பல கலைஞர்கள் தங்கள் கச்சேரிகளை ஒளிப்பதிவு செய்யவே அனுமதிப்பதில்லை………தெரியுமோ , இசைரசிகர்கள் அதையே வைச்சு வைச்சுக்கேட்பாங்களாம் தங்களுக்குச் சான்ஸ் இல்லாமல் போயிடுமாம்.

இந்த இசைக்கலைஞர்கள் மட்டும் ஒத்துழைப்பார்களாயின் இருக்கிற இசைக்குழுமங்களில் ஏதாவதொன்று மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெறுகிற இசைக்கச்சேரிகள் அனைத்தையும் பதிவு செய்து குறுவட்டுக்களில் தந்திருக்காதா என்ன?

மூன்று………பொருளாதாரப் பின்னடைவால் இசைவெப்தளங்கள் தம்மைப் புதுப்பித்தல் அப்டேட்ஸ் செய்வதுகிடையாது. 1996 ல் என்னவென்ன கொம்பஸிசன்ஸ் இருந்ததோ இன்றைக்கும் அவைதான். புதிய கலைஞர்களுக்கும் அங்கே வாய்ப்புக்கள் இல்லை. அவர்களை உற்சாகப்படுத்தி நாம கொஞ்சம் பொருண்மியவுதவி பண்ணினால் மேற்கத்தைய இசைத்தளங்களுக்கு நிகராய் சுவைஞர்கள் ஒலிப்பதிவு செய்துகொள்ளும் வசதிகளோடும் அத்தளங்களை நாங்கள் இயங்க வைக்கலாம்.”

“ காலத்துக்குக்காலம் கொஞ்சும் சதங்கை, சங்கராபரணம், ஸ்வாதித்திருநாள், பைஜூ பாவ்ரா போன்ற படங்கள் வந்து இந்த ஓட்டம் ஓடுகிறதென்றால் மரபிசையின் ரசிகன் உலகம் முழுவதும் இருக்கிறான் என்றுதான் அர்த்தம்.”

“ அப்படியென்றால்…. கொம்றேட் வாட் எபவுட் பில்ம்ஸ் சச் ஆஸ் மீண்ட சொர்க்கம் அன்ட் காதலோவியம்? ” என்று கிடுக்கி போட்டார்கள் நண்பர்கள். நிறையப்பேசி விவாதித்து குறுவட்டுக்களில் கர்நாடக இசையையும் திரைஇசையும் கலந்து வெளியிடுவது நல்லதுதான் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஜேசுதாசன் அன்றைய கலந்துரைகளில் அதிகம் பங்குபற்றவில்லை. குசினியுள் பியரோடு கடிப்பதற்கு மீன்பொரிப்பதில் ‘பிஸி’யாக இருந்தான். இப்போ கொஞ்ச நாளா அவன் “ பீடி – சாராயம், சிகரெட் – விஸ்க்கி- கஞ்சா- ஹஷீஷ் மாதிரியே மனுஷன் இலக்கியம் – இசை என்று சொல்றதெல்லாம் ஒரு தற்காலிக லாகிரிதான், கற்பனையுலகம்…. ஊடோபியா, நிஜவாழ்க்கையில அதுகளால ஒண்ணும் பண்ணமுடியாது. லாகிரி தீர்ந்து வெளியே வாற மனுஷன் உலகத்தில சிரஞ்சீவியாயிருக்கிற பசி, தாகம், வறுமை, நோய், ரணம், வலிகளை சந்தித்தேயாகவேண்டும்……. விலகியெங்கும் தப்பிக்க முடியாது” என்றெல்லாம் போடுகிறான்.

யார் யாரையெல்லாம் பாடவைக்கலாமென்று விவாதித்ததில் கன இராகங்களைப் பெரிய வித்வான்களைக்கொண்டும் ஏனையவற்றை புதிய இளந்தலைமுறையினரைக்கொண்டும் பாடுவித்தால் கவர்ச்சியாகவும் இருக்குமென்று கருத்து வந்தது.

இராகங்கள் அனைத்தையும் விஸ்தாரமாகப்பாடவேண்டும். ஏறத்தாழ அனைத்து கர்நாடக சங்கீத இராகங்களையும் இரண்டே குறுவட்டில் கிடைக்க வைப்பதென்பது ஒரு கனவில் நிகழ்வதைப்போல் இருந்தது. அந்த மியுசிக்பீடியாவை மட்டும் வெற்றிகரமாக ஆக்கிடமுடிந்திட்டால் இசை இரசிகர்களுக்கு எப்படிப்பட்ட ஒரு வரப்பிரசாதம் அது.

“ இந்தக் கசெட்டுக்ளை ஒருத்தர் மூன்றுதடவைகள் முழுசாகக்கேட்டாப்போதும், அப்புறம் குறைந்தபட்ஷம் பத்து ராகங்களையாவது கண்டு பிடிக்கும் ஞானம் அவனுக்கு வந்திடும்.”

“ ஞானம் வந்து…………….?”

“ பிரபஞ்ச ராகங்கள் அனைத்தும் ஒரே குறுவட்டில் கிடைக்கவேணுமென்று மரபிசை இரசிகர்கள் எல்லோரும் ஏதோ தெருவில குறுக்காய் விழுந்து கிடந்து சத்தியாக்கிரகம் பண்றமாதிரிக் கிடக்கு உங்கட வேலைப்பாடு. இவ்வளவு பணத்தையும் காலத்தையும் உழைப்பையும் கொட்டிக் கர்நாடக சங்கீதத்தை டிவிடி குறுவட்டில திணிக்கிறதால உனக்கென்னப்பா லாபம்? நாட்டில உள்ள எரியிற பிரச்சனைகளில் இதுவும் ஒன்றா. நொன்ஸென்ஸ் இஸ் மான்ஸ் ஒன்லி பிறிவிலிஜ் ” என்றான் ஐந்தாவது பெக்கையும் காலிசெய்த ஜேஸ{தாசன்.

“ இது ஒரு கலைஞனுடைய இல்லையில்லை ஒரு சுவைஞனுடைய கனவுதானப்பா…. இப்ப எங்கிட்ட ஒரு சினைப்பர தந்தாகூட அதால குறிவைத்து ஒரு முயலைக்கூடக்கொல்லமுடியாது. இது முடியும். செய்யலாமில்ல?”

“ எழுதிறதைக்கேட்டாலும் அதைத்தான் என்னால ஈடுபாட்டோட செய்யேலும் எழுதிறன் என்கிறாய்.”

“ யாரால எதைச்செய்யமுடியுமோ அதைவிடாமல் செய்துகொண்டே இருக்க வேணும், அல்லது கெதியில வயசாயிடும். நிறைய விஷயங்களை உன் வாழ்க்கை அஜெண்டாவில சேர்த்துக்கொண்டால்தான் வாழ்க்கை சுறு சுறுப்பாயிருக்கும் அலுப்புத்தட்டாது. ஒருதரந்தானே வாழப்போறம். ஒரு நடிகனைப்பார்……. ஒரு படத்தில நடிச்சிட்டு போதுமென்று சுருண்டு படுத்தான் என்றால் காணாமல் போயிடுவான். அடுத்த படத்தை நாடி அவன்தான் போகவேணும். நிறைய செய்ய வெளிக்கிட்டா நிறைய நிறைய அனுபவங்கள் கிட்டும்.”

“ ஓகே ஓகே ஓகே வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.”

“சரி……..மதுரை ஜி. எஸ். மணியைக் கௌரவித்த மாதிரி இருக்கும் அவரைக்கூப்பிட்டு பெர்லினிலை கர்நாடக இசையும் திரை இசையும் கலந்த ஒரு கச்சேரி வைப்பமே?”

“ வைக்கலாம்……..நீயும் நானும் இருந்துகேட்க பெரிய அரங்கமெல்லாங்கூட வேண்டியிருக்காது ” என்றான் விந்தன்.

இசைக்கச்சேரி சம்பந்தப்பட்ட ஒரு பழைய பகிடியை கிரிதரன் ஞாபகப்படுத்தினான்.

“ இசைக்கச்சேரியொன்றில் இரசிகர்கள் அனைவருமே ஒவ்வொருவராய் கழன்றுவிட கச்சேரி முடிக்கும்வரை காத்திருந்த கடைசி ஆளை வித்துவான் விளித்து

“ நீ எதுக்கப்பா இருக்கிறாய் என்று கேட்டதுக்கு அவன் ” சார்…….. நீங்கள் அமர்ந்திருக்கிற கம்பளம் என்னோடது அதை எடுத்திட்டுப்போகணும்ல” என்றானாம்.

ஜெர்மனில் ஆபாசமான வார்த்தைகளைப் பாவித்துப் ஜேசுதாசன் சொன்ன பதில் பருமட்டான மொழிபெயர்ப்பில் இப்படியிருக்கும்.

“ சரி. முயங்கிற ஒவ்வொரு தடவையும் என்ன ஒரு குழந்தை பெத்துக்கிறதுக்காகவா முயங்கிறோம்….. அப்பிடியொரு முயங்கல்தான் இதுவும்.”

பியரின் மகத்துவத்தாலும் அவனது உடன்பாடின்மையாலும் அவன் தர்க்கத்தின் வெளிப்பாடு ஜெர்மனில் சற்றே திருகுப்பட்டு வந்தது.

“ வெறும் சினிமாப்பாடல்களை மட்டும் கேட்கும் ரசிகர்கள் சங்கீதத்தையும் சாஸ்த்திரீய சங்கீதத்துக்கப்பால் எட்டிப்பாராதவர்களைச் சினிமா சங்கீதத்தையும் கவனிக்க ஒரு வைக்கும் அனுபவம் கிடைக்குமல்லவா? ”

“ எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்குது……….. யுலொழற லழர யசந பழiபெ வழ pரவ ய டகைநடழபெ நயசநென pடரஅள iவெழ யn iஅயபiயெசல ஊயமந. சில கனவுகள் காண்பதற்குமட்டுந்தான் சுகமாய் இருக்கும்பா. வாழ்க மரபிசை, வாழ்க கலைகள்!” என்றுவிட்டு வீட்டுக்குப் போவதற்காக எழுந்தான் ஜேசுதாசன்.

“உன்னுடையபேர்லயே ஒரு சங்கீத ஜாம்பவானே இருக்கிறாரப்பா.”

“ அவர் இருக்கட்டும். நான் கிளம்பிறன் குட் நைட் போய்ஸ்.”

கலாதரனது கலை – இலக்கிய முயற்சிகளைச்சரியாக அறிந்திராவிட்டாலும் விடுமுறை நாட்களில் மாலை நேரங்களில் அவனுடன் சேர்ந்து அரட்டையடிக்கும் நண்பர்களில் பலர் இவன் சினிமாவைவிட்டுவிட்டு கர்நாடக இந்துஸ்தானி ராகங்கள் – அவற்றின் எளிமையாக்கம் – மெல்லிசை – சினிமாஇசை- பழைய புதிய கலைஞர்கள் டிவிடி குறுவெட்டுக்கள் என்றதும் சிலர் அவனோடான விஸ்க்கி மாலைகளையே துறக்கலாயினர்.

திருமகளுக்கும் கடவுள் என்று சொன்னால்

“ இல்லை இல்லை…..இல்லவேஇல்லை” என்று பெரியாரைவிடவும் சத்தமாக அலறும் இவன் இரவில் தனிமையில் இந்தி, சமஸ்கிருத பஜன்களையும், அவனுக்குப்பிடித்த பிருந்தாவனசாரங்கா , கல்யாணவசந்தம் , காபி, லலிதா, சாரமதி, சாருகேசி, திவ்ஜவந்தி, சாரங்காவில் கீர்த்தனைகளையும் , திவ்யபிரபந்தத்தையும் , திருப்புகழையும் கண்கள் பனிக்க, உதடுகள் துடிக்க, மனசு விம்ம விதிர்விதிர்க்கக் கேட்டுக்கொண்;டிருப்பதைக் கண்டுவியந்தாலும் விடமாட்டாள் கிண்டலடிப்பாள். “ கடவுள்தான் இல்லையே பின்;னே இப்பிடி உருகிறதும் மருகிறதும் எதுக்குங்க மாமா……….? ”

“ ம்ம்ம்ம்………..இந்த இசை என் பகுத்தறிவு கருத்தியல் தர்க்கங்கள் எதுக்குள்ளும் வகைப்படாத ஒரு இரசாயனத்தைத்தான் எனக்குள்ள நிகழ்த்துது. இசை கேட்பதற்காகவே எனக்கு இன்னும் கொஞ்சம் வாழத்தோணுதடா, அந்த மாயானுபவத்தை எனக்கு வார்த்தைகளில சொல்லத் தெரியல்லடா தங்கம்.”

தன் கனவுகளின் ஒன்றையாவது நிஜமாக்கும் செயலின் முதற்படியாக மதுரை ஜி. எஸ். மணியையே தொடர்பு கொண்டான் கலாதரன். தனது முயற்சி தான் எதிர்பார்த்த அளவுக்கு இரசிகர்களிடம் போகவில்லை என்பதையிட்டு அவருக்கு வருத்தம் இருந்ததாகவே தெரியவில்லை. இருந்தும் உற்சாகமாகப் பேசினார். “ தற்போது நிறையப் பேருக்கு இசைவகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன், வாழ்க்கை ஓடுகிறது ” என்றார். இவன் தனது விருப்பத்தை வெளியிட்டபோது அதை வரவேற்று அதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையுமே பண்ணித்தரத்தயாராக இருப்பதாகச்சொன்னார்.

இன்னும் தன்முயற்சியில் உதவக்கூடியவர்கள் என்று எண்ணிய தொலைக்காட்சி வானொலி ஊடக கலைஞர்கள் பலருடனும் அஞ்சல் மூலமும், மின் அஞ்சல்களிலும், போன்மூலமாகவும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். அகரவரிசையில் அனைத்து இந்திய தமிழிசை விற்பன்னர்களினதும், செவ்வியல் கலைஞர்களினதும், இலக்கியப் படைப்பாளர்களினதும் விபரக்கோவை, தொடர்புவிபரங்கள்; அடங்கிய வலைத்தளம் ஒன்றும் அமைக்கவேண்டும்.

விந்தனுக்கு பணியில் நீண்டவிடுப்பு எடுப்பதில் கொஞ்சம் சிக்கல்கள் இருந்தன. ஆதலால் விந்தனும் கிரிதரனும் குறுவட்டு வெளியிடும்போது வந்துசேர்வதாக ஏற்பாடு. கலாதரன் தனியாகவே தன் கலைப்பயணத்தை தமிழகத்தின் திசையில் ஆரம்பித்தான்.

அங்கு சென்றவுடன் தனது திட்டம் தொடர்பாக இணைவலைகளிலும், தினசரிகளிலும் விளம்பரம் செய்ததில் நல்லபலன் கிடைத்தது. ஆச்சரியப்படும் விதத்தில் தமிழ்நாடுதவிர கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலுமிருந்துகூட நூற்றுக்கணக்கில் கலைஞர்கள் தாமாகவே தொடர்புகொண்டார்கள்.

கே.ஜே. ஜேசுதாஸ் அவர்கள் அவனது நோக்கத்தைமெச்சி அவருடைய குரல்வங்கியின் பதிவுகளிலிருந்து பல குரல்களைப் போட்டுக்காட்டினார். அவற்றிலிருந்து ஆண்களும் பெண்களுமாக 15 பாடகர்களை தெரிவு செய்யமுடிந்தது.

திருச்சிவானொலியின் ஓய்வுபெற்ற கலைஞர் டி. ஆர். பாப்பாவும் சிலகலைஞர்களை அறிமுகம் செய்துவைத்தார். இன்னும் சப்த ஸ்வரம் ரமணன், ராகமாலிகா விஜய் ஆதிராஜ் ஆகியோர் தம் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பல இளங்கலைஞர்களை அறிமுகஞ்செய்துவைத்தனர்.
ஜி.எஸ். மணி, அனுராதா ஸ்ரீராம் , சஞ்சய் சுப்ரமணியம் , டி. வி. கோபாலகிருஷ்ணன், பிரசன்னா இராமசாமி இவர்களுடன் சில இசைப்பேராசிரியர்களும் ஆலோசனைகளோடு கலைஞர்களைத் தேர்வுசெய்வதிலும் உதவி செய்தனர். எமது நோக்கத்தை தெளிவாக புரிந்து கொண்ட இளம் கலைஞர்கள் பலரும் உற்சாகமாகவே உழைத்தனர்.

ஒரு ராகத்தையே 10 விதமாகப்பாடிக்காடும் திறமையுள்ள அபாரக்கலைஞர்களுடன் வேலை செய்வது கலாதரனுக்கு ஒரு இன்பானுபவமாகவே இருந்தது.

மிருதங்கவித்வான் ஸ்ரீ கிரிதர் பெர்லினுக்கு கோடைகாலங்களில் வந்து மிருதங்க வகுப்புகள் எடுப்பவர். கிரிதரனின் மகன் ஹரியும், கலாதரனின் மகன் தயாளனும் அவரிடம் சிறிதுகாலம் பயின்றுகொண்டிருந்தனர். அவருடன் ஏற்கெனவே இருந்த பழக்கத்தால் அவரை உரிமையுடன் அழைக்கவும் முழுப்பதிவுக்கும்தான் தானே வாசிக்கிறேன் என்றார்.

“ அட இப்படி ஒரு முயற்சி இங்க யாருக்கும் தோணலையே” என்றார் வாய்ப்பாட்டிலேயே ஜமாய்க்கவல்ல லால்குடி ஜெயராமன். “ என் பங்களிப்பு இல்லாமலா” என்றவர் தன் வகுப்புகளையெல்லாம் குறைத்துக்கொண்டு வந்து வயலின் வாசித்ததும் சிறப்பு.
இன்னும் பலமுன்னணிக் கலைஞர்களிடமும் பேசி ஒலிப்பதிவுக்கான தேதிகள் பெற்றாகிவிட்டன.

சங்கர நாராயணன் . டி.வி – சேஷகோபாலன் டி. என்
பாலமுரளி கிருஷ்ணா – ஜி. எஸ். மணி
ஜெயஸ்ரீ மஹாதேவன் – ஓ.எஸ். அருண்
சஞ்சய் சுப்பிரமணியம் – ரஞ்ஜினி காயத்திரி
சாருலதா மணி – எஸ்.பி. ராம்
கோயம்புத்தூர் பிரியா – டி. எம். கிருஷ்ணா.
ஜெயராமன்.டி.கே – நித்தியஸ்ரீ மகாதேவன்
மஹராஜபுரம் ஸ்ரீனிவாசன் – ஜமனேஷ் நாயர்
ஓ.எஸ். அருண் – சங்கரன் நம்ப+திரி
சந்தான கோபாலன் – கே. ஜே. ஜேசுதாஸ்
ராஜ்குமார் பாரதி – விஜயலக்ஷ்மி சுப்பிரமணியம்
வசுமதி பத்ரிநாதன் – அனுரா சாயிராம்
அனுராதா ஸ்ரீராம் – ஸ்ரீராம் பரசுராம்

சென்னையில் ஒரு சினிமா ஸ்டூடியோவின் ஒலிப்பதிவுக்கூடமும் இசைப்பதிவாளர்களும் தயார். ஒரு நாளைக்கு ஒரு கலைஞர். ஒவ்வொருவருக்கும் மூன்று அல்லது நான்கு இராகங்கள் என்று தேதிவைத்துக்கொண்டு ஒலிப்பதிவை ஆரம்பித்தனர். இக்கலைஞர்கள் ஒவொருவரும் தமக்கான மூன்று கனராகங்களை எடுத்துக்கொண்டு ஆரோகண – அவரோகணங்களைப்பாடி, எங்கு எப்படி நிரவல் செய்யலாம், கமகங்கள் எங்கு எந்த அளவிலிருந்தால் அழகாயிருக்கும் , எங்கெங்கு கற்பனாஸ்வரம் பாடலாமென்று விளக்கி அவற்றை விஸ்தாரமாகப்பாடினார்கள்.

டி.வி. சங்கரநாராயணனுக்கு அவர் பிரகாசிக்கும் ஹம்சாநந்தி, காபியை ஒதுக்கினோம். அவர் இராகத்தை விஸ்தாரமாகப் பாடிவிட்டு தொடர்ச்சியாக கொண்டல்வண்ணனை என்கிற திருப்பாணத்தாழ்வாரின் திவ்ய பிரபந்தம் ஒன்றை விருத்தமாப் பாடிவிட்டு பாபநாசம் சிவனின் “ஸ்ரீனிவாஸ திருவேங்கடமுடையானை”
க் குரலில் தீனபாவம் குழையக்குழையத் தொடர்ந்தார். சங்கரநாராயணன் அளவுக்கு ராமதாஸரே ஸ்ரீநிவாஸனோடு இத்தனை உருகியிருப்பாரோ சந்தேகமே அத்தனை உருக்கம் இறைஞ்சுதல் சரணாகதி.

அடுத்து விரிவான ஆலாபனையிலேயேதானும் நெக்குருகி கேட்டவர் அத்தனைபேரையும் நெகிழ்ச்சியானதொரு வியனுலகத்தில் சஞ்சரிக்கவைக்க சமகாலத்தில் இவரைப்போல் இன்னொருவர் இல்லையென்னும்படி காபியை ஆலாபனை செய்தார். ஆலாபனையின் உருக்கத்திலேயே “ எந்தோ சௌக்யமனினே ஜெபஜால….. எந்தோ ஏமோ எவருக்கு தெலிசு ” என்கிற தியாகராஜ ஸ்வாமிகள் உருப்படி யைத்தான் பாடப்போகிறாரென்பது தெரிந்துவிட்டது.
“ ஹே ராமா….. நீ வைகுந்தத்தில் சுகமாகத்தான் இருக்கிறாயா அல்லது உனக்கும் நாமறியாதபடி ஏதும் கஷ்டங்களுண்டோ என்னவோ. எவருக்குத்தான் தெரியும் ” என்று கரிசனைப்பட்டார். சரளமான
சங்கதிகள் அருவிமாதிரி குதித்து குதித்துவர என்னே ஒரு சுகானுபவம்!

வேகமான கமகங்களுக்கும் உச்ச ஸ்தாயிகளில் சஞ்சாரம் செய்யவும் வல்லவரான டி. என். சேஷகோபாலனுக்கு ஆபேரி. அவரும் இராகம் பாடிவிட்டு தியாகராஜ ஸ்வாமிகளின் “ நகுமோமு கனலேநீ ” யில்
கரைந்தார்.

மஹராஜபுரத்தார் அடிக்கடி கச்சேரிகளில் பாடிய ஸ்ரீ சுத்தானந்த பாரதியாரின் “ தேடிவருமுன்னே ஆடிவருகிறான் என் தேவாதி தேவனடி” என்கிற கீர்த்தனையை எஸ். பி. ராம் நெஞ்சைத்தொடுவதுபோல் பாடினார்.

உணர்ச்சிவசப்பட்ட லால்குடி ஜெயராமன் வயலினை மகளிடம் தந்துவிட்டு சாருகேசிராகத்தை அழகாக ஆலாபனைசெய்து தியாகராஜ சுவாமிகளின் “ஆடமோடி கலதே ராமையா” என்கிற கீர்த்தனையை அற்புதமாகப் பாடினார். இதுவரை
வயலின் வித்துவானாகவே அறிந்திருந்த அவரின் மந்திரக்குரல் கேட்பவரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. என்னே சுகம் என்னே சுகம், கேட்டாலன்றி அதை முழுவதும் வார்த்தை வயப்படுத்தமுடியாது.

ஜெயஸ்ரீ (பம்பாய்) மஹாதேவனுக்கு கானடாவைத்தந்தோம். அவரும் அம்புஜம் கிருஷ்ணாவின் “ என்ன சொல்லி அழைத்தால் நீ வருவாயோ- எளியேன் எந்தனை இனிது ஆட்கொள்ள ” என்கிற கீர்த்தனையை எடுத்துக்கொண்டார். அற்புதம் அதி அற்புதம்.

கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களிடம் கனராகமான தோடியைக் கொடுத்தோம். ராகம், தானம், பல்லவி பாடி விஸ்தாரமாக தனியாவர்த்தனம் செய்ததுடன் “ தேவகி சுதன் மாதவனே….. துதித்திடுவோம் தினம் ”
என்கிற கீர்த்தனையை பாடிமுடிக்கவும் சரியாக ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டார்.

விஜயலக்ஷ்மி சுப்ரமணியன் வலஜி, கரஹரப்பிரியா, காம்போதி ராகங்களைப் பாடினார்.
இன்னும் அவர் காபியில் அம்புஜம் கிருஷ்ணாவின் “ அரவிந்தப்பதமலர் நோகுமோ அடிமை எனக்கிரங்கி ஆட்கொள்ள வந்திடில் ” என்ற கீர்த்தனையை மஹாவிஷ்ணு முன்னாலேயே இருப்பதுபோன்ற பாவனையுடனேயே குழைவாராதலால் அவரை அக்கீர்த்தனையையும் பாட வைத்தோம்.

இன்னும் டி. எம். கிருஷ்ணா பீகாக்கில் கோபாலகிருஷ்ணபாரதியின் “ இரக்கம் வராமல் போனது என்ன காரணம்- என் ஸ்வாமிக்கு என்மீது இரக்கம் வராமல் போனதுஎன்னகாரணம்;? ” என்று இறைஞ்சினார்.

ஓ.எஸ்.அருண் ஜெயத்தேவரின் அஸ்டபதியை இந்துஸ்தானி, ஒரிய, கஜல், லக்னோ , கர்நாடக பாணிகள் என்று ஆறுவிதமாகப் பாடிக்காட்டினார்.

சில கலைஞர்கள் தாமாகவே நாலைந்து ராகங் களைப் பாடியதில் ஒரு விக்கினங்களும் நேராமல் அட்டவணை இட்டதுபோல் முதல் 19 நாட்களில் 69 இராகங்கள் பதிவு செய்தாகிவிட்டன.

ஒவ்வொரு இராகத்தையும் தொடர்ந்து இளம்பாடகர்களை அவ்வவிராகங்களில் அமைந்த பழைய சினிமாப்பாடல்கள், தனிப்பாடல்கள், பக்திப்பாடல்கள், கஜல், முடிந்த அளவுக்கு அங்கங்கே இந்துஸ்தானிப்பாடல்களையும் பாடவைத்து அதிஅற்புதமாக ஒலிப்பதிவுகள் செய்யப்பட்டன.

சிங்கப்பூரில் பணிபுரியும் ஈழத்து இசைக்கலைஞர் சி. பத்மலிங்கம் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. -திருமணம் ஒன்றுக்காக கொழும்புக்குப் புறப்படுகிறேன். ஒருவாரம் பொறுத்திருக்கமுடிந்தால் சென்னைவந்து நீங்கள் விரும்பும் இராகங்களைப் பாடித்தருகிறேன்.-

இவரும் ஒருவகையான கந்தர்வக்குரலின் சொந்தக்காரர். அவர் எதுபாடினாலும் சாகித்தியத்தை மனதில் வாங்கிக்கொண்டு குரலில் பாவத்தைப்பிழியப் பிழியத்தருவார். இன்னும் ஸ்வரப்பிரதாபங்களும் கமகங்களும் அலாதியாக இருக்கும். அவர் வருகைதரவிருப்பது குதூகலத்தை ஏற்படுத்தியது. சி.பத்மலிங்கத்தின் வருகைக்காக ஒலிப்பதிவில் சிறிய இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

அந்நாட்களிலும் சென்னையில் புதிதாக வந்திருக்கக்கூடிய இசைத்தட்டுக்கள் குறுவட்டுக்கள், பேழைகளைத்தேடி அலைந்தான். மைலாப்ப+ரில் சப்தஸ்வரா மிய+சிகல்ஸில் அவன் ஆர்வத்தோடு சங்கீத ஒலிநாடாப்பேழைகளையும், குறுவட்டுக்களையும் வாங்கிக்குவிக்கவும் “ சார்….. வியாபாரத்துக்கு எடுத்துப்போறீங்களா ” என்றார் கடையின் விற்பனையாள். அவர் கேள்வியை அலட்சியம் செய்துவிட்டு

“ சகாவே உங்ககிட்ட தியாகையர் பதுமை ஏதாவது செம்பிலயோ பித்தளையிலோ வார்த்ததோ, மரத்தில் செய்ததோ கிடைக்குமா” என்றான் கலாதரன். விற்பனையாளர் புரியாமல் விழிக்கவும் திரும்பவும் ஆங்கிலத்தில் கேட்டான். புதுச்சேரியில் ஒரு கடையில் பாரிஸ{ச்சாந்தில் செய்த எம்.ஜி.ஆர், அண்ணா, பாரதி, கண்ணனின் சிறு பதுமைகளைப் பார்த்திருந்தான் குட்டியாகப்பிள்ளையார்கள், இலிங்கங்கள், சூலங்கள், வேல்கள் செய்யும் கலைஞர்களுக்கு ஏன் இந்த யோசனை வருவதில்லை. இவர்கள் ஏன் தியாகையர், , தீட்ஷிதர், புரந்தரதாஸர், சுவாதித்திருநாள், பாபநாசம் சிவன், பெரியார், சிலைகளையும் கூடவே செய்து விற்பனை செய்யப்படாது.
விழிப்பு மாறாமலிருந்த விற்பனையாள் திடீரென்று “ இதோ உங்களுக்கு உதவக்கூடி சரியான பர்ஸன் வந்துகிட்டிருக்கார் சார்…….. இவர்கிட்ட கேளுங்க ” என்றுவீட்டு கலாதரனின் தோள்களுக்கு மேலாக பின்னால் கையைக் காட்டினார். அங்கே கடைவாசலில் டிவிஎஸ்-50 விசையுந்து ஒன்றில் வறுமையின் நிறம் சிவப்பு ப+ரணம் விஸ்வநாதனின் கெட் அப்பில் சந்தனமும் குங்குமமும் டூ இன் ஒன்னாய் சூடி, கௌரி மனோகரியை ரீங்கரித்துக்கொண்டுவந்த ஒருவர் உந்தை ஸ்டாண்டில் விட்டுவிட்டுப் படிகளில் மேலே ஏறிவந்தார். அவரிடம் விற்பனையாள்

“சார் நீங்க கேட்ட பிம்ஷன் ஜோஷி பஜன் கேசெட் வந்திருக்கே ”

எனவும் அவர் “சந்தோஷம்” என்றார். அதற்கான கிரயத்தைக்கொடுப்பதற்கு அவர் மடியில் சொருகியிருந்த பர்ஸை எடுக்கவும் விற்பனையாள் கலாதரனைக்காட்டி “ சார் இவர் ஏதோ தியாகையர் இமேஜ் கிடைக்குமான்னு கேட்கிறார் புரியல்ல”என்றபடி கலாதரனிடம் சார்கிட்டப் பேசுங்க ஹெல்ப் பண்ணுவார், இவருக்கு மிய+சிக் பத்திதெரியாதொண்ணுமில்ல என்றார்.

இவன் “வணக்கம் ” சொல்லவும் பெரியவர் “ வணக்கம்……சாருக்கு வெளிய+ர்போலத்தெரியுதே….. என்றுவிட்டு நெற்றியைச் சுருக்கி யோசித்துவிட்டு “ ஆமா நேத்து மிய+சிக் அகடெமியில டி.வி. சங்கரநராயணன்கூடப் பேசிட்டிருந்தது சார்தானே அது ” என்றார்.

“ நேத்து மிய+சிக் அகெடெமிப்பக்கமாப் போனேந்தான் ஆனால் டி.வி.சங்கரநரயணன்கூட பேசேல்லை. என்னை நீங்கள் சரஸ்வதி மிய+சிகல்ஸிலோ, ஆர்சிஏ ரெகோர்ட்ஸிலோ, ராஜா றேடியோவிலோகூடப் பார்த்திருக்கலாம் ” என்றான் கலாதரன்.

“ ஆமா ஆமா வாஸ்தவந்தான். சார் என்னதான் அப்படித் தேடிக்கிட்டிருக்கிறீங்க? ”

“ இப்போவந்து சார் ஜெர்மனியில எல்லாம் இதுபோல கிளாசிக் எல்.பிஸ், சி.டிஸ், டி.வி.டிஸ் விடியோ கசெட்ஸ் விக்கிற கடைகள்ல அவங்க நாட்டு சங்கீத மேதைகள், விற்பன்னர்கள் ஜெ. எஸ். பாக், மோசார்ட், பீத்தோ வன், வாக்னரன்ன மெகா வாக்கேயக்காரர்கள், கலஞர்களின் அரை-முழு உருவச்சிலைகள் மேசையிலோ அலமாரியிலோ வைக்கக்கூடிய அளவில் செம்பில், வெண்கலத்தில், சலவைக்கல்லில், மரத்தில் எல்லாம் வைத்திருப்பார்கள், வாங்கிக்கலாம்.

அதுமாதிரி இங்கேயும் நம்ப தியாகையர், புரந்தரதாஸர், தீட்ஷிதர், சுவாதித்திருநாள், பாபநாசசிவன் இவங்க பதுமைகள் ஏதாவது கிடைக்குமுங்களா?”

“ எல்லாமும் கிடைக்கும் கவலை விடுங்கோ……….. எல்லாம் சரியான ஆள்கிட்டதான் அந்தப்பிரம்மம் அனுப்பிவைச்சிட்டிருக்கு.”

அப்போது விற்பனையாளர் அவரிடம் ஒலிப்பேழையைக்கொடுத்தபடி சாருக்கு மிய+ஸிக் பத்தி தெரியாததொண்ணுமில்ல……..நீங்க வேணுங்கிற டிடெயில்ஸெல்லம் சார்கிட்ட கேட்டிடலாம் என்றான். ஒலிப்பேழையை வாங்கி வேஷ்டி மடியைச் சற்று நுகைத்து அதற்குட்சொருகிக்கொண்டே “ குவாலிட்டியெல்லாம் நல்லா இருக்குமில்லேப்பா” என்றார். “ எல்லாம் தரங்கிணி ப்றொடக்சன் சார்……… நெம்பர் ஒன்னா ஜோராயிருக்கும். ”

“ எனக்கென்ன றெகோடிங் பேட் குவாலிட்டின்னா…….. கொண்ணாந்து வீசிப்புடுவேன் ஆமா. சார் நீங்க என்கூடவாங்க ” என்றபடி தன்விசையுந்தை உருட்டத்தொடங்கினார். கலாதரன் மிகமோசமான சாலையின் நடைபாதையில் அவரோடு வாங்கிய ஒலிநாடாப் பேழைகளும் குறுவட்டுக்களும் நிறைந்த பிளாஸ்டிக் பைகளைச் சுமந்தபடி அரை மைல்தூரம் நடந்தான். இரண்டுமணி வெயிலுக்கு நடுத்தலையில் வியர்த்து முதுகால்வழிந்து கீழே இறங்கியது. பிரதான வீதிதான் ஆயினும் குன்றுங்குழியுமாய் மோசமாயிருந்தது. அதிகம் நடந்து பரிச்சயமிராத கலாதரனுக்கு அப்பாதையில் நடப்பது சிரமமாயிருந்தது. அவன் சிரமம் அறியாத அவரோ அவனைக் குடைந்தபடி வந்தார்.

“ சார் இத்தனை காசெட்ஸ் வாங்கிட்டுப்போறீங்களே……….என்ன வியாபாரத்துக்கா.”

“ இல்லைங்க எல்லாமுமே சொந்தப்பாவனைக்குத்தான் ”

“ அதில்ல இளையதலைமுறை ஆளுக கிளாஸிக்மிய+சிக் கேட்கறது அபூர்வமாகிட்டுவருதே….. அதனால கேட்டன். சார்
ரொம்பக் கேட்பீங்கபோல இருக்கு சாருக்கு என்ன கேரளாவுங்களா….. தமிழ் ஒரு வித்தியாசமாயிருக்கே. ”

“ இல்லைங்க, ஸ்ரீலங்கா.”

“ வெளிநாடுகளுக்கெல்லாம் போயிருக்கிறீங்களா. ”

“ இப்போ இருபதுவருஷமாய் ஒரு வெளிநாட்டிலதான் வாசம். ”

“அங்கே என்னபண்றீங்க.”

“ ஒரு கார் விற்பனைக்கொம்பனியில கார்களுக்கு பொலிஷ் போடறது. ”

“ அட போலிஸில இருக்கீங்களா. ”

“ ஆமா……….அதுதாங்க.”

“ சரி ”

“ சார்…… நான் ஒரு ஆட்டோவில வந்திர்றனே…. என்னாங்க வீதியெல்லாம் இத்தனை மோசமாயிருக்கு. ”

“ நீங்க டிசெம்பெர் வெள்ளத்தின்போது பார்த்திருக்கணுமே பத்துநாளா இங்ஙினை எல்லாம் முழங்கால் மட்டத்துக்கு வெள்ளம் இருந்துச்சு சார். ”

“ வடியாமலா.”

“ மடிப்பாக்கமெல்லாம் பாதிதண்ணில மூழ்கிடுச்சு. சச் எ புவர் டிறெயினேஜ் சிஸ்டம்; சார். ”

“ சரி நான் ஆட்டோவிலயே வந்திடுறேன்….. அட்ரஸை சொல்லுங்க.”

“ ஆட்டோ ஒண்ணும் வேண்டியதில்லை சார். இதோ இன்னும் ஜஸ்ட் ஹண்டிறட் மீட்டர்ஸ்தான் ”
என்றபடிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட்டிப்போனவர் கடைசியாக ஒரு சந்தில் இறங்கினார்.

ஒரே பதுமைகளாந்த்தான் வீட்டில் குவித்துவைத்திருப்பார்போல என்று எண்ணியபடி அவரைப்பின்தொடர்ந்தான்.

அந்தக் குச்சொழுங்கையில் பாதையை அடைத்தாற்போல ஒரு சிறு ஓலைக்கொட்டகை போடப்பட்டிருந்தது. அதன் மூலஸ்த்தானத்தில் விஜயகாந்த்தின் முழுப்படம் வைத்து , முகப்பில் விஜயகாந்த் இரசிகர் மன்றம் என்றிருந்தது. அருகில் ஒரு கரும்பலகையில் வெண்கட்டியால்

– அண்ணன் உங்களை வியாழன் அன்று மாலை சந்திக்கிறார், உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வருகை தருக – என்று எழுதியிருந்தது. “ என்னங்க இதெல்லாம்.”

“ எல்லாம் நம்ப பசங்க கூத்துதான்……. இருக்கட்டும் நீங்க வாங்க” என்று கூட்டிப்போனார்.

கடைசியில் ஒரு வீட்டின் முன்னால் தன் விசையுந்தை அதன் நிறுத்தியில் விட்டுவிட்டு டயர் செருப்பைக் கழற்றிவெளியில் விட்டுவிட்டு அருகிலிருந்த மஞ்சள் நெகிழிக்குடத்தைச் சரித்து கால்களைக் கழுவிக்கொண்டு உள்ளேபோனார்.

“ வாங்க சார் ” என்றபடி உள்ளே அழைத்துப்போனவர் கூடமாகவுமிருந்த அந்நடையில் நின்று உள்ளே “ சரய+… ”
என்று ஐந்து கட்டை ஸ்ருதியில் பிளிறினார். எவரும் வரவில்லை.

அக் கூடம் கூடத்திலொரு கால் ஒழுங்கையில் ஒரு கால் வைக்கும்படி நெருக்கமாக இருந்தாலும் உள்ளே சுத்தமாக இருந்தது வீடு.

கலாதரனும் காலணிகளை வெளியே விட்டுவிட்டே உள்ளே போனான்.

கூடத்தின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த கதிரையில் சைவப்பழமாக கண்ணாடியணிந்த ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தார். பக்கவாதமோ மூட்டு வலியோ அவர் அசையவோ எழுந்திருக்கவோ முயற்சிக்கவில்லை. பாட்டியைப்பார்த்து “ வணக்கம் ” என்றான். செவிகள் மந்தம்போலும் பேசாமிலிருந்தார். புன்னகைக்கவுமில்லை. ஒரு படக்கடையை விடவும் அதிகமாக அக்கூடத்தின் அனைத்துச்சுவர்களிலும் இராம-சீதா பட்டாபிஷேகம், அநுமன் சஞ்சீவிப்பர்வதத்துடன் பறந்துபோதல், சீதைஅக்கினிப்பிரவேசமன்ன சுவாமிகள் பலரும் படங்களாகத் தொங்கிகொண்டிருந்தனர். கலாதரன் எல்லாப்படங்களையும் ஆச்சர்யப்பட்டுப் பார்த்துக்கொண்டிருக்கவும் அவன் முகத்தை நோக்கிய பாட்டியின் தலையும் தன்னியக்கத் தொலைநோக்கியைப்போலத் திரும்பித் திரும்பிக்கொண்டிருந்தது. அத்தனை படங்களோடும் தஞ்சாவ+ர்பாணியில் வரையப்பட்ட தியாகையரும் தம்புராவுடன் ஒரு மூலையில் இருக்கவும் ஏதோ இவரிடம் விஷயம் இருக்கத்தான்வேணுமென்று சற்றே நம்பிக்கை வந்தது. ஒரு ஐந்து நிமிஷங்கள் கழிந்திருக்கும் கையில் ஒரு பிரேம் போட்ட ஒரு படத்தைத்துடைத்தபடி எடுத்துவந்தார் பெரியவர். கூட ஒரு சிறுமியும் வால்போலத் தொடர்ந்துவந்தாள். அவள்தான் சரயுவாக இருக்கவேணும் அவர் மகளோ பெயர்த்தியாகவோ இருக்கலாம். “ போ உள்ளே போய் அந்த மாமாவுக்கு மோர்கொண்டுவா” என்று அவளை உள்ளே விரட்டினார். அவள் போகமனமில்லாமல் நெளிந்து கொண்டு கூடத்தின் நிலையில் சாய்ந்துகொண்டு நின்றாள்.

அவளை அதட்டி உள்ளே அனுப்பிவிட்டு கையில் வைத்திருந்த அப்படத்தை அவனிடம் நீட்டி “ இது தாங்க அழகாயிருகில்ல ” என்று அவரே சான்றிதழும் வழங்கினார்.

வாங்கிப்பார்த்தான். தியாகப்பிரம்மம்தான். றோஸ்பிங் நிற சற்றின் துணியில் வரையப்பட்ட கோட்டோவியத்தின் மேல் சீகுயின்ஸ் வரிசையாக வைத்துத் தைக்கப் பட்டிருந்தது. 20 வருஷத்துக்குக்குறையாத பழசாக இருக்கவேணும். துணியின் நிறமே வெளிற்¢விட்டிருந்தது. கலாதரன் என்ன சொல்வானோவென்று அவன் முகத்தியே பார்த்துகொண்டிருந்தார். அவன் அப்படத்தைப்பற்றி அபிப்பிராயம் எதுவுஞ் சொல்லாமல் “ எனக்குத்தேவை தியாகையர் இமேஜ் சார், உலோகப்பதுமை. ” என்றான். அப்போதுதான் திருவாய் மலந்தார்.

“ இமேஜ் எல்லாம் எடுக்கமுடியாது சார். அதெல்லாம் தஞ்சாவ+ர்ப்பக்கம்போய் சிற்பிகளைப்பார்த்து சொல்லிவைத்துப் பண்ணினால்தான் உண்டு. முருகன் பிள்ளையார் லக்ஷ்மியென்றால் அண்ணா சாலையில ப+ம்புகார் போனாலே கிடைக்கும். தியாகையர் இமேஜெல்லாம் சாமானியத்துல கிடைக்காதுங்க.”

அப்போது சரயு நிக்கல் குவளையில் மோர் கொண்டு வந்தாள். அவனுக்கிருந்த தாகம் இன்னும் 4 குவளை மோர் குடித்தால்த்தான் அடங்கும் போலிருந்தது. அதற்குள் கிழவி உயிர்பெற்று “ அம்பி யாரு….தெரியலியே? ” என்றாள்.

“ ம்ம்ம்…………..சொன்னாத் தெரிஞ்சிடுமாக்கும் சும்மா இருக்கிறியாம்மா ” என்று அவரைச் சினந்துவிட்டுப் பெரியவர் “அப்போ இதை எடுத்துப் போகலீங்களா நீங்க……..வாணாமா? ” என்றார் இவனிடம்.
அவன் மௌனம் அவருக்கு புரியவும் சற்று யோசித்துக்கொண்டிருந்துவிட்டுச் சரேலென்று எங்கேயோவிருந்து ஒரு பழுப்புநிற அட்டையுள்ள ஒரு புத்தகத்தை உருவி எடுத்து வந்து அவனிடம் நீட்டி ‘வயலின் வாசிப்பது எப்படி’ன்னு ஒரு புக் போட்டிருக்கேன். சார் ஒரு 50 காப்பி எடுத்திட்டுப்போய் அங்கே உள்ளவாளுக்கு டிஸ்றிப+ட் செஞ்சீங்கன்னா அவங்க பசங்களுக்கு வயலின் கத்துக்க ரொம்ப ய+ஸ்ஃபுல்லாயிருக்கும். ”

அவனிடம் எதையாவது பண்ணிக்கொஞ்சம் பணம் பண்ணவேணுமென்று பெரியவர் குறியாகவிருப்பது எரிச்சலூட்டிற்றினாலும் ‘சரி புத்தகமாச்சே ஒருவருடைய உழைப்பாச்சே’என்று கையில் அதை வாங்கிப் பக்கங்களைப் புரட்டினான்.

நாதத்தின் உச்ச ஸ்தாயிகளைப் பேசவல்ல இந்த வாத்தியத்தின் அமைப்பை சிரசு, உந்திக்கமலம், பாதம் என ஒரு மனித உடலுடன் ஒப்பிடலாம். அதன் முதற்பக்கத்தில் ஒரு வயலின் படம் வரைந்து எப்போதும் அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்திருக்கும் தலைச்சுருள் திருடை (ஸ்குறோல்) எனப்படும், மற்றும் திருகுகள், தந்திகள், குதிரை அல்லது பாலம், விரற்பலகை, மேற்பலகை, தாங்கி, (எஃப்)நாததுளை, வில்லு அதன் ரோமம் என அதன் அங்கங்கள் பெயரிடப்பட்டிருந்தன.

அடுத்த பக்கங்களில்

முதலாவாது தந்தி பஞ்சமம் – இரண்டாவது தந்தி ஷட்ஜமம்,

மூணாவது தந்தி கீழ்பஞ்சமம் – நாலாவது தந்தி கீழ் ஷட்ஜமம். முதலாவது தந்தியில் வில்லை ஓட்டினோமாயின் பஞ்சமம் பேசும்.

கீழே கையால லேசாத்தொட்டு வாசிச்சால் சுத்த தைவதம் பேசும். இரண்டாவது தந்தியை வாசிச்சால் ஷட்ஜம் பேசும்

கீழே லேசாகத்தொட்டு வாசிச்சால் சுத்த ரிஷபம் பேசும் மூணாவது தந்தியை வாசிச்சால் கீழ் பஞ்சமமும்

கீழே தொட்டு வாசிச்சால் கீழ் தைவதமும் நாலாவது தந்தியை வாசிச்சால் கீழ் ஷட்ஜமும் பேசும்.

கீழே தொட்டு வாசிச்சால் கீழ் ரிஷபமும் பேசும்

அவர் பாஷையிலேயே அவரிடம் “ ஏன் சார்….. பசங்க இதையெல்லாம் கத்துண்டு வயலின் வாசிச்சுடமுடியுமா……….. ‘கார் ஓட்டக்கத்துக்கலாம்’ என்றுகூடத்தான் புக்ஸ் போட்டிருக்கான், அதை நீங்க வாங்கிப்படிச்சிட்டு ஒரு காரைவாங்கி ஜஸ்ட் ஸ்டார்ட் பண்ணி ஓட்டிடுவீங்களா? ”

பாராட்டை எதிர்பார்த்திருந்த பெரியவர் முகம் சடுதியில் சுருங்கியது. என்றாலும் அவரின் மோர்க்கடன் உறுத்தவும் பாக்கெட்டிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுக்களில் நான்கை எடுத்து அவரிடம் நீட்டி “ எனிகௌ திஸ் இஸ் ஃபோர் யுவர் கொன்சேர்ன்மெண்ட் அன்ட் ரொயில்” என்றான். சற்றும் எதிர்பார்த்திருக்காத தொகையை அவர் கண்கள் வருடியானதும் முகம் விகசித்தது.

“ எதுக்கும் நீங்க அடுத்தவாட்டி சென்னைக்கு வர்றப்ப ஜஸ்ட் எனக்கொரு லெட்டர் போட்டிடுங்கோ………தஞ்சாவ+ர்ல சிற்பிமாரு ஸ்தபதிகள்னு ரொம்பப்பேரு எனக்கு தெரிஞ்சவா இருக்கா. சாருக்கு வேணுங்கிறமாதிரிக்கு இமேஜோ சிலையோ எதுவானாலும் செஞ்சுரல்லாம்.”

“ நன்றி……….வணக்கம். ”

“ வணக்கம்……ஷேமமா இருங்கோ.”

கலாதரன் சென்னை வந்திருப்பதை எப்படியோ அறிந்துகொண்டு ‘தண்ணிக்குப்’ புகழ்பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளர் கம் கவிஞர் ஒருவரும் அவனைப் பழ-ஈ மாதிரிப் பின் தொடர்ந்து கொண்டிருந்தார்.

“ சார் நீங்க தொண்ணூத்தாறிலே ‘செம்மையில’ எழுதி மூணாவது இடம் என்று அறிவித்தாங்களே……….’சூரியன் வெளியே வரும்’ அப்பிடின்னு ஒரு கதை அது அற்புதமான ஒரு மோல்டிங்சார். அந்த லெவெலுக்கு இன்போமடிவா , டீப்பா உங்க பிரச்சனையை புரிஞ்சுண்டு கலாப+ர்வமா எழுதிறதுக்கு தமிழ்நாட்டில ஒருபயல் கிடையாதும்பேன். என்னா இந்தப் பார்ப்பானுவளுக்கு உங்க கதையை ஃபர்ஸ்டா தேர்ந்தெடுக்க மனசுவராது.”

“ தாங்ஸ்……வெறி கைண்ட் ஒப் ய+.”

ஏதோவொரு மட்டமான சிகரெட்டின் வீச்சம் அவர் பேசும்போதெல்லாம் கலாதரன் நாசியைத்தாக்கியது. போதாததுக்கு

“ சார்……….சிகரெட் பிடிக்கிறீங்களா” என்றார்.

“ ஓ………நோ, தாங்க்ஸ்.”

“ போறின் ஃப்ளேவரெல்லாம் இங்க லோக்கல்ல இருக்காது.”

“ இல்லை, நான் சிகரெட் பிடிப்பதே இல்லை சார்.”

“ எப்போதுமா.”

“ ஒரு பத்துவருஷமா இல்லை.”

“ எப்படி சார்?”

“ எல்லாம் மனந்தான.; ”

“ பின்னே என்ன சிகரெட் குடு குடுன்னு….. ஒடம்பா குதிக்குது. எல்லாம் இந்த இழவெடுத்த மனந்தான். நானும் இருபது வருஷமா இதை விட்டிடலாம்னு ‘ட்றை’ பண்ணிட்டித்தானிருக்கேன் முடியலை.”

“ நீங்க பலே கில்லாடி அழுத்தக்காரர் சார் எப்படி சார் சாதிச்சீங்க? ”

“ ஒரு பெண்கிட்ட வாக்குக் கொடுத்திட்டேன்.”

“ யாரு உங்க மனைவியா? ”

“ இல்லை என் தாயார்.”

“ அதுதானே பார்த்தேன்……………சரி. நமக்கு இப்போ என்ன கவலைன்னா…….. என் வீடொன்று கடனில மாள்ற நிலமையில போயிட்டிருக்கு சார். இந்த ஆண்டுக்கடைசியில் மீளல்லையின்னா ஏலம் போட்டு வித்துப்பிடுவான் சார். குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துரும். நம்ம மருமகப்பிள்ளை ஒருத்தர் டுபாயில கம்பிய+ட்டர் இஞ்சினியரா இருக்கார், அவரும் கொஞ்சம் ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்கார்…….. சாரும் பெரிய மனது பண்ணி ஒரு கைகொடுத்து ஒரு டூ லாக்ஸ் அப்பிடி உதவினீங்கன்னா…… அந்த வீட்டை மீண்டு பிழைச்சுக்குவேன். பார்தீங்களா சார் இங்க பேனாதூக்கிண்டவன் நிலமையை.”
அவருக்கு லேசான போதையிலும் கண்கள் பனித்து மின்னின.

சி.பத்மலிங்கம் வந்ததும் ஒரு முன்தயாரிப்பும் இல்லாமலே ஆபோகி, சாருகேசி, சண்முகப்பிரியா, கரஹரபிரியா, கௌரிமனோகரி, கானமூர்த்தி, ஸ்ரீரஞ்ஜினி, சாரமதி, லலிதா ஆகிய ராகங்களை ஒருவிரிவுரையே போலவும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தும் பிழிந்தும் கொடுத்தார். அவர்கள் நட்பும் அவரது ஆர்வமும் காரணமாக சிறுசன்மானத்தைக்கூட ஏற்க மறுத்தார். “ இம்முயற்சி சிறப்பாக வந்தாலே எனக்குப்போதும்.” சோதனையாகவோ புதுமையாகவோ யார் எதைச்செய்தாலும் அவரைப் பாராட்டுகின்ற மனம் அவருக்கு.

சில கலைஞர்கள் தாமறிந்த ஏனைய கலைஞர்களை அறிமுகப்படுத்த தயங்கினார்கள். ஜமனேஷ் நாயர் என்கிற வாய்ப் பாட்டுக்காரர் மாத்திரம் தனக்குப்பிடித்த சிறந்த பாடகர்கள் 15 பேர் வரையில் தொடர்பும் அறிமுகமும் செய்துவைத்தார். ஒரே நாள் அறிமுகத்தில் தம்மைத் தயார்பண்ணிக்கொண்டு வந்து பாடியவர்களும் உண்டு. சில கலைஞர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருந்தும் பெரிய சன்மானம் எதிர்பார்த்தார்கள். பெரிய பொட்டு வைத்துக்கொண்டு வருஷத்தில் பாதிநாட்கள் வெளிநாடுகளிலே சஞ்சரிக்கும் குள்ளமான பிரபலபாடகி தன் சன்மானத்தை இயூரோவில் கேட்டபோது சம்மதித்தான். ஆனால் அவர் வெகு சாதாரணமாக “இரண்டாயிரம் இயுரோ போதும்”; என்றபோதுதான் அவனுக்கு மயக்கம் வந்தது. ‘குறுவட்டுக்கள் விற்பனையாவதைப்பொறுத்து றோயல்டி தரலாம்’ என்றபோது “விற்பனை எப்படிப்போகிறது என்கிறதை நாம எப்படித்தெரிஞ்சுக்கிறது” என்றுறெல்லாம் சிலர் கிடுக்கி போட்டார்கள். 12 இலக்ஷம் முதலிடுபவனைவிட சில திறமைமிக்க கலைஞர்கள் தம் சன்மானத்தில் குறியாக இருந்தது முரண்நகை. கலைஞர்களில் சிலர் இந்த ஒலிப்பதிவுகளை எல்லாம் வெளிநாட்டில்கொண்டுபோய் ஏதோ மாயம் பண்ணிக்கோடிக்கணக்காகச் சம்பாதிக்கப்போகிறான் என்று நினைப்பது மாதிரியிருந்தது. இளங்கலைஞர்களில் பலர் இதயசுத்தியுடன் ஒத்துழைத்தார்கள். நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் பாடகர்கள் . வௌ;வேறு வாத்தியக் கலைஞர்கள். ஒலிப்பதிவுப்பொறியிலளர்கள், பல்வேறு ஒலிப்பதிவுக்கூடங்கள், நீண்ட ஒத்திகைகள், வாடகைவண்டியோட்டங்கள், ஹோட்டல்களிலிருந்து எடுப்புச்சாப்பாட்டுகளின் அணிவகுப்பெல்லாம்முடிய ஒரு சினிமாப் படமே எடுத்து முடித்த களைப்பு உண்டானது.

ஒவ்வொரு கனராகத்துக்கும் 45 நிமிஷங்களும் மற்றவற்றுக்கு 30 நிமிஷங்களுமாக மொத்தம் 100 இராகங்களையும் தொகுத்ததில் மொத்தமும் 60மணி நேர ஒலிப்பதிவு. 2 டிவிக்கள். மேலும் இரண்டு 4 ஜி – பைட்ஸிலான 2 யுஎஸ்பி – ஸ்டிக்குகளில் தயார் செய்யப்பட்டன. மியூசிக்இன்டியாஒன்லைன், ராகாடாட்கொம் போன்ற வலைப்பதிவுகளில் இருப்பவற்றைவிடவும் அதிகமான அற்புதமான பதிவுகள். கர்நாடகஇசை, இந்துஸ்தானி, மெல்லிசைக்கோலங்கள், சினிமாசங்கீதம் என்று அற்புதமாக மாறிமாறிக்கோர்த்து வெளிப்பட்ட முதல் குறுவட்டை சூட்டுடன் ஓடவிட்டுக்கேட்டபோது அவன் இதயம் ஒரு புதுவித லயத்துடன் துடித்தது. தன் கனவுகளில் ஒன்று நிஜமாகிய அதிசயம் ஆனந்தம். மியூசிக் அகெடமியில் மதுரை. ஜி. எஸ். மணி தலைமையில் சினிமா பிரபலங்கள் எவரும் இல்லாமல் எளிமையான வெளியீட்டுவிழா. விந்தனும் கிரிதரனும் சொன்னபடியே வெளியீட்டுவிழாவுக்கு வந்து இறங்கினர். நூறுபேர்வரையில் கலந்துகொண்டாலும் அன்று 30 குறுவட்டுக்களே விற்பனையாயின. விருந்து முடிந்தானதும் பலர் குறுவட்டுக்கள் விற்பனைசெய்யப்பட்ட பக்கம் திரும்பாமல் பக்கவாசலால் நழுவிப்போயினர்.

இந்தக் குறுவட்டுக்களின் வெளியீட்டுக்காக அவன் சென்னையில் தங்கியிருந்த மூன்றுமாத காலத்துள் கலாதரனுக்கும் சம்சாரத்துக்கும் தெறிச்சுப்போயிற்றென்றும், குடும்பத்தை விட்டிட்டு காசிக்குப் போய்விட்டானென்றும், சினிமா துணைநடிகை ஒருத்தியுடன் குடும்பம் நடத்திறானென்றும் பெர்லினில் உபகதைகள் பரவலாயின.

தினமும் நூற்றுக்கணக்கில் சினிமாப்பட டிவிடிக்கள், சிடிக்கள், இசைப்பேழைகளை விற்றுத்தள்ளும் சரஸ்வதி மிய+சிக்கல்ஸ் எனும் பிரபல நிறுவனத்துக்கு குறுவட்டுக்களின் விநியோகம் மற்றும் விற்பனையுரிமையைத் தந்திருந்தான். அங்கே இலாபம் நோக்கமில்லையாதலால் குறுவட்டுக்களுக்கு முன்னூறு ரூபாவே விலை வைத்தான். ஆறுமாதங்கள் கழிந்து இதுவரையில் 12 குறுவட்டுக்களே விற்பனையானதாக மின்னஞ்சல் எழுதினார்கள். “ நீங்கள் இவ்வட்டுகளுக்கான விளம்பரங்களை அதிகரித்தாலே விற்பனையையும் அதிகரிக்கமுடியும் என நம்பிக்கை கொள்கிறோம்” என்றும் அதில் அடிக்குறிப்புமிட்டிருந்தனர்.

ஆர்ஜெண்டினாவில் பிறந்து கிய+பா, பொலிவியாவின் விடுதலைக்காகவும், ஜெர்மானியனாக – ஜூதனாகப்பிறந்து பாலஸ்தீனத்தின் விடுதலைக்காகவும், சிங்களவனாகப்பிறந்து தமிழர்களின் மீதான ஒடுக்குவாரத்துக்கு எதிராகவும் குரல்கொடுக்கும் மாமனிதர்களையே கண்டுகொள்ளாத உலகத்தில் இது ஒன்றும் அதிசயமில்லை.

ஜேசுதாசன் இப்போது அவர்களுடன் இல்லை. இனி அவனைப் பற்றி இறந்தகாலத்தில்தான் பேசலாம். எதிலும் அவசரப்படுபவன் வாழ்க்கையிலிருந்தும் சீக்கிரமே விடைபெற்றுக்கொண்டுவிட்டான்.

– சில கனவுகள் காணமட்டும் சுகம் –

அவனது தத்துவார்த்த மன்றோ, தீர்க்கதரிசனமென்றோ எதுவாக வைத்துக்கொண்டாலும் ஜேசுதாசன் அன்று ஒரு உள்ளுணர்வார்ந்த புரிதலில்தான் அப்படிச்சொல்லியிருக்கிறான். அவன் சொல்லமுனைந்ததை வார்த்தை ஏற்றியவிதத்தில் இலக்கியநயம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் நிஜம்.

கலாதரன் இனி மேல் தன் நாவல்களை மீண்டும் எழுத ஆரம்பிப்பான்.
சென்னையின் மார்கழிமாதக் கச்சேரிகள் அனைத்தையையும்கூட அவன் ஆண்டுவரிசைப்படி குறுவட்டுகளில் கொண்டுவரலாம்.

மஹாகவி பாரதியின் அத்தனை படைப்புக்களையும் ஒவ்வொரு சொடுக்கில் கொண்டுவந்துபடிக்கக்கூடியதாக அவருக்கு ‘பாரதி மணிமண்டபம்’ என்றொரு பெரியஇணையத்தளம் மாலனின் வழிகாட்டலில் பல இலக்கிய ஆர்வலர்கள், மென்பொருள் வல்லுனர்களின் கூட்டுழைப்பால் உருவாகி வருகிறது. கலாதரன்கூட அதற்காக பாரதியின் கதைகள் சிலவற்றை மென் பிரதிகளாக ஆக்கித்தந்துள்ளான். தமிழின் சிறந்த படைப்புகள் எல்லாம் ஒரு சொடுக்கில் படிக்கக்கிடைக்கும் நாளும் வரும்.

இதேபோல் கலாதரன் தனது இசைச்சேகரங்களை மேலும் விசாலித்து ஒவ்வொரு இராகத்துக்கும் ஒருதொகுதியாக வகுத்து உலக இசைப்பிரியர்களுக்காக அனைத்தையும் நாளை ஒரு இலவச இணையமாதளத்தை நிர்மாணிக்கலாம். அதில் மஹா வாக்கேயக்காரர்களான தியாகராஜஸ்வாமிகள், முத்துஸ்வாமி தீட்ஷிதர், சியாமா சாஸ்திரிகள், அன்னமாச்சாரியார், புரந்தரதாஸர் , ஸ்வாதித்திருநாள், அருணாசலக்கவிராயர், பாரதிதாசன், மஹாகவி , முத்தையா பாகவதர், ஜெயத்தேவர் , முத்துத்தாண்டவர், கோபாலகிருஷ்ணபாரதி, ஊத்துக்காடர் , பாபநாசம் சிவன், அம்புஜம் கிருஷ்ணா , பெரியசாமி தூரன் என்று யாரை வேண்டுமானாலும் நினைத்த மாத்திரத்தில் உயிர் பெறவைக்கலாம்.

இன்னும் ஒவ்வொரு சொடுக்கில் எல்லோருக்கும் அடானாவும், ஆபேரியும் , பாவனியும், பிம்பிளாஸ், பீகாக், பேகடா, சாருகேசி, சாரமதி, தர்பார், திவ்ஜந்தி, மந்தாரி, மாளவி, தரங்கிணி, ரீதிகௌளை, ரஞ்ஜினி , ரேவதி, உசேனியோடு, யதுகுலகாம்போதியும் தவழ்ந்தும் இழைந்தும் வரலாம்.

வையத்தில் விதைப்பவர் தீராமல் என்றும் விதைத்துக்கொண்டே இருப்பர். விதைகள் முளைப்பதும் உழுப்பதும் விழும் மண்ணைப் பொறுத்த விஷயமல்லவா?

– 31.06.2008 – இப்படைப்பு மதுரை முனைவர் ஜி. எஸ். மணி அவர்களுக்கு சமர்ப்பணம்.

தமிழ்நாடு முன்னேற்ற எழுத்தாளர் சங்கத்தால் நடத்தப்பெற்ற ‘கந்தர்வன் ஞாபகார்த்தமாக சிறுகதைப்போட்டியில்’ இக்கதை (வெளிநாட்டினர் பிரிவு) இரண்டாவது பரிசைப் பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *