அந்தப் பதினேழு நாட்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 17, 2013
பார்வையிட்டோர்: 16,008 
 
 

அதிகாலை 4:30 மணி.

“ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்;” ஒலி எழுப்பிய அலாரத்தை நிற்பாட்டி விட்டுப் படுக்கையை விட்டு முகம் கழுவச் சென்றான் சுகந்தன். அந்தக் குரோசரிக் கடையில் மற்ற அறைகளில் படுத்திருப்பவர்களின் நித்திரை குழம்பக்கூடாது என்பதற்காகப் பூனை ஒன்று பதுங்கிப் பதுங்கிச் செல்வது போல் மிகவும் கவனமாகவே நடந்து சென்றான். ஆனால் மரப்பலகையால் போடப்பட்ட நிலத்தளம் என்பதால் மத்தளம் எழுப்பும் “தொம் தொம்” போன்ற சத்தம் அவன் நடக்கும்போது ஏற்படத்தான் செய்தது.

பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட மூன்றாம் ஆண்டு மாணவனாகிய சுகந்தனுக்கு விடுமுறை காலம். உண்மையில் இரண்டு மூன்று தினங்கட்கு முன்பே வீடு செல்ல யாழ்ப்பாணத்தை நோக்கி ரெயிலில் ஏறியிருக்க வேண்டும். அவனின் பல்கலைக்கழக நண்பர்கள் எல்லோரும் வீட்டுக்குச் சென்று விட்டார்கள்.

ஆனால் சுகந்தனுக்கு வீடு செல்ல நாட்டமில்லை. அதற்கான காரணம் அவனின் மன வைராக்கியம் தான். “சிலதைச் சாதித்து விட்டுத்தான் நான் இனி வீட்டுப்பக்கம் போகணும்” என்ற வெறி அவன் மனதில் குடி கொண்டிருந்தது. கடந்த இரண்டு வருடமாக இந்த விடயத்தில் இறுகிய மனத்துடன் விரதம் இருக்கின்றான் என்றுதான் கூற வேண்டும்.
அதற்கு வசதியாக சுகந்தனின் சிறு பராய நண்பன் சிவா குடும்பத்தினருக்கு கண்டியில் ஒரு குரோசரிக்கடை இருந்தது. விடுமுறை காலங்களில் சுகந்தன் அந்தக் கடையின் மேல் தளத்தில் உள்ள அறைகளில் தங்குவது வழக்கம். இம்முறையும், சுகந்தன் தனது பொருட்களுடன் வந்து அங்கு தங்கியிருந்தான். “மைச்சான் சுகந்தன் விடுமுறைக்கு வா, இங்கே தங்கலாம்” என்று கூப்பிட்டுத் தங்க வைப்பதில் சிவாவுக்கும் சந்தோ~ம்.

சிவாவின் சிறு வயது நட்பு தொடர்ந்து நீடிப்பது சுகந்தனுக்கும் பிடித்தது. சுகந்தனைப் பொறுத்த வரையில் நட்பு மிகவும் உசத்தியானது. பல்கலைக்கழகச் சூழலில் உன்னத நட்பைக் காணுவது அரிது என்பது அவன் எண்ணம். சிலரிடம் சுயநலப் போக்கான நட்பைக் கண்டு அவன் எரிச்சல் அடைவதும் உண்டு.

அவசரம் அவசரமாக குளியலையும் முடித்துக் கொண்டு புறப்படத் தயாரானான் சுகந்தன். நேரம் காலை 5:15 மணி ஆகி விட்டது. ஆழ்ந்த நித்திரையில் இருந்த சிவாவை உரிமையுடன் மெல்லத் தட்டி எழுப்பினான். “நான் போய் விட்டு வாரேன். கதவைப் பூட்ட நீதான் வரவேணும்” என்று சுகந்தன் கூறினான். நிலைமையைப் புரிந்து கொண்ட சிவா அரைத் தூக்கத்தோடு கீழே படியிறங்கி வந்து கதவைத் திறந்து சுகந்தனை வழியனுப்பி வைத்து விட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு திரும்பவும் போய்ப் படுத்து விட்டான்.

கண்டி வீதியில் விசாலமாகத் தோற்றமளித்த அந்தக் கடையிலிருந்து வெளியேறி விறு விறென்று நடந்து கொழும்பிற்குச் செல்லும் பிரத்தியேக பஸ்கள் வெளிக்கிடும் தரிப்பை நோக்கி நடந்தான் சுகந்தன்.
கொழும்பை நோக்கிச் செல்வதற்காக ஒரு பஸ் தயராக நின்றது. புத்தம் புதியதாகக் காட்சியளித்த அந்த பஸ்ஸின் கிளினர் “கொலம்பு கொட்டுவ, கொலம்பு கொட்டுவ”(கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை) என்று கூவி ஆள் சேர்த்துக் கொண்டிருந்தான். கொழும்புக்குப் போய் அன்று இரவுக்குள் திரும்பி வருவதுதான் சுகந்தனின் திட்டம்;. அதனால் அவனுக்கு அதிகமாக எதையும் கொண்டு போகவேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனாலும் அவன் தோளில் ஒரு நீல நிறத் துணிப்பை இருந்தது. அதற்குள் ஒரு அரைக்குடை, கணினிப் புத்தகம் இவற்றுடன் ஒரு பிளாஸ்ரிக் போத்தலில் தண்ணீர் என்பவை இருந்தன. பஸ் ஸ்ரொப்க்கு அருகில் இருந்த பெட்டிக் கடையில் ஒரு “மலிபன் லெமன் பவ் பிஸ்கட் பக்கற்” வாங்கித் தன் பையில் போட்டுக்கொண்டான். இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் கடித்து கொஞ்சம் தண்ணீரும் குடித்தால் அவனின் காலைச்சாப்பாடு முடிந்து விடும்.

பஸ்ஸில் ஏறிய சுகந்தன் யன்னல் பக்கச் சீற்றில் அமர்ந்து கொண்டான். மேலும் பலர் ஒவ்வொருவராக வந்து ஏறிக் கொண்டார்கள். பஸ்ஸில் உள்ள இருக்கைகள் நிறைந்து விட்டன.

காலை 5:40 மணிக்கெல்லாம் பஸ் கிளம்பி கொழும்பு நோக்கிப் பயணித்தது. கிளினர் பின் வரிசையில் இருந்து தன் வசூலைச் செய்து கொண்டு வந்தான்.

வேலை நாள் என்பதால் குடும்பத்துடன் பயணிப்பவர்கள் குறைவாக இருந்தது. அவரவர் தத்தமது வேலை அலுவல் காரணமாகத் தனியாகக் கொழும்பு செல்பவர்களாகத் தான் காணப்பட்டார்கள். காலை நேரமும் என்பதால் பஸ்ஸில் அமைதி நிலவியது. கிளினரின் குரல் மட்டும் இடைக்கிடை கேட்டுக் கொண்டீருந்தது.

காலை நேரம். வாகன நெரிசல் தெருக்களில் இல்லை. சில நிமிடங்களில் பஸ் பேராதனைச் சந்தியைக் கடந்து கொழும்பு நோக்கிச் சென்றது. பஸ்ஸில் இருந்தவர்களில் பலரும் கண்ணை மூடியவாறு குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார்கள். சுகந்தனால் நித்திரை கொள்ள முடியவில்லை. அவன் மனதில் பல விடயங்கள் அலை மோதிக் கொண்டிருந்தன. “எப்போதுதான் என் படிப்பு முடியும். எவ்வாறு எனக்குள்ள பொறுப்புக்களை நிறைவேற்றப் போகின்றேன்” என்றெல்லாம் பல கேள்விகள் அவன் மனதை ஆட்டிப் படைத்தன. அவன் குடும்பத்தின் பொருளாதார நிலைமை அவன் மனதை அவ்வப்போது துயருற வைக்கும் முக்கிய காரணி.

கண்டி கொழும்பு வீதியென்றால் வீதியில் ஏற்றம், இறக்கம் இருக்கும். சுழிவு வளைவுகள் சுமாராக இருக்கும். அதனால் பஸ் கொடுக்கும் அசைவுகளுக்கும், குலுக்கல்களுக்கும் இசைவு கொடுத்தவாறு அவன் பயணம் தொடர்ந்தது.

அந்த மினி பஸ் களனிப்பாலத்தையும் தாண்டி கொழும்பு மாநகர எல்லைக்குள் வந்தது. தூக்கம் போட்டவர்கள் எல்லாம் கண் முழித்து இறங்குவதற்கு உசாராகிக் கொண்டிருந்தார்கள்.

கடைசியாக கொழும்பு புகையிரத நிலையத்தை பஸ் வந்ததும் சுகந்தன் இறங்கிக் கொண்டான். அவன் போகவேண்டியது ஒரு சில யார் தூரத்தில் இருந்த கட்டிடத் திணைக்களத்திற்கே ஆகும். அடுத்த வருட விடுமுறை காலத்தில் வேலைசெய்வது பற்றியதாகத்தான் அவன் பிரயாண நோக்கம் இருந்தது.

ஒரு சில காலடிகளை எடுத்து வைத்தளவில் அங்கு நிலவிய குழப்பமான நிலை அவன் கண்ணில் பட்டது. ஆகாயத்தில் ஒரே புகைமண்டலமாகக் காட்சியளித்தது. ஏதோ தூரத்தில் தீப்பற்றி எரிகிறது என அந்தப் புகைமண்டலம் மூலம் ஊகிக்க முடிந்தது. அங்கும் இங்கும் சனங்கள் ஓடினார்கள். தெருவில் சென்ற தமிழர் சிலர் “கொழும்பில் கலவரம் எல்லாம் கொழுத்திறாங்க ஓடி ஒளியுங்கோ” என்று கூறிச் சென்றதைக் கேட்டதும் தான் நிலைமை என்ன என்பதை சுகந்தன் உணர்ந்தான். “ஐயோ கடவுளே மீண்டும் கலவரமா! நான் எங்கே போவேன்” என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

77ம் ஆண்டுக் கலவரத்தில் சுகந்தனின் அண்ணன் மயிரிழையில் உயிர்தப்பி வீடு வந்து சேர்ந்தது பற்றிய நினைவு அவன் மனதை விட்டு இன்னமும் நீங்கவில்லை. சுகந்தனுக்கு பயம் அதிகமானது. அந்தக் கலவரத்தில் நடந்தவை பற்றி நிறையவே செய்திகளாக வாசித்து அறிந்திருந்தான்.

சுகந்தன் கொழும்பிற்கு வரும்பொழுதில் அவன் தங்கும் உறவினர் வீடு வெள்ளவத்தையில் உள்ளது. பஸ் எடுத்து அங்கு போவோம் என நினைத்து பஸ் ஸ்ரொப்புக்கு ஓடினான். பஸ் ஓட்டமும் இல்லை என்பதை அறிந்தான். “என்ன செய்யலாம். ஓட்டோ எடுத்தாவது போகவேண்டியதுதான்” என நினைத்து ஓட்டோவை மறிக்கத் தொடங்கினான். அவர்களில் பலர் நிற்கவேயில்லை. சிலர் எங்கு போக வேண்டும் என்று அறிந்ததும் கையை விரித்தார்கள்.

ஏதோ கடவுள் செயலால் ஒரு ஓட்டோ நிற்கவே அதில் ஏறிக்கொண்டான். “மாத்தையா கொகேத யண்ட ஓன”(சார் எங்கே போகணும்) என ஓட்டோச் சாரதி கேட்க “மம வெள்ளவத்தை யண்டோன” (நான் வெள்ளவத்தை போகணும்) எனப் பதிலளித்தான். “பாய் பாய் வெள்ளவத்தை தங் யண்ட பாய். எகே ஹரி அமாறு” (முடியாது முடியாது வெள்ளவத்தைக்கு இப்போது போக முடியாது) என்று சொன்னான் ஓட்டோச் சாரதி.
அப்பொழுது சுகந்தனுக்கு கொட்டாஞ்சேனையில் உள்ள சுப்பிரமணியம் அங்கிள் வீடுதான் நினைவுக்கு வந்தது. கொழும்பிற்கு வரும்போது விசிற் பண்ணியிருக்கிறான். ஒரு நாளும் அவர்கள் வீட்டில் தங்கியது கிடையாது. “அங்காவது போவம். இடமும் கிட்டத்தானே” என தனக்குள் நினைத்துக் கொண்டு “ஹரி ஹரி கருணாகர கொட்டகேனட்ட யண்ட புளுவாங்த” (சரி சரி தயவுசெய்து கொட்டாஞ்சேனைக்கு போக முடியுமா) என ஓட்டோச் சாரதியிடம் கேட்டான். சுகந்தன் பேராதனைக்கு படிக்க வந்த பிறகு அவனுக்கு கொஞ்சம் சிங்களம் சரியோ பிழையோ கதைக்கும் துணிவு இருந்தது. “ஹரி யமு “ (சரி போவம்) என்றவாறு கொழும்புத் துறைமுகப் பக்கம் நோக்கி ஓட்டோவைச் செலுத்தினான் சாரதி. பிற்ற கோட்டே பகுதியில் காடையர் கடைகளை சூறையாடியதையும், அங்குள்ள பொருட்களை பலர் தூக்கிக் கொண்டு ஓடுவதையும் பார்த்த படி ஒரு விதமான அச்சத்துடன் ஓட்டோவில் இருந்தான் சுகந்தன். இடையில் எதிரே வந்த ஓட்டோவை மறித்துப் பேசிய ஓட்டோச் சாரதி கொட்டாஞ்சேனைக்கும் அவ்வழியால் போகமுடியாதென்பதை உணர்ந்து மருதானைப் பக்கம் நோக்கி ஓட்டோவைச் செலுத்தினான்.

சுகந்தனுக்கு மேலும் பதற்றமாக இருந்தது. “மாத்தையா ஹரி அமாறு மம கோமத்ஹரி கொட்டகேனட்ட யண்ட பலனுவா” (சார் சரியான கஷ்டம்) “கௌத ஹரி ஆவுத் ஒப கத்தாகரண்ட எப்பா” (யாரும் வந்தால் நீங்கள் கதைக்க வேண்டாம்) எனக் கூறியவாறு ஓட்டோவைச் செலுத்தினான். சுகந்தனும் பதிலுக்கு “ஹரி ஹரி” (சரி சரி) என்று கூறி தலையசைத்தான். “கடவுள் செயலால் ஒரு நல்ல ஓட்டோ சாரதி கிடைத்திருக்கின்றான்” என்று மனதிற்குள் எண்ணியவாறு இருந்தான் சுகந்தான். “முருகா முருகா” எனத் திரும்பத் திரும்பப் பிரார்த்தித்துக் கொண்டான்.

ஆனந்தாக் கல்லூரிப் பக்கமாகச் சென்ற போது பல இடங்களில் காடையர் ஓட்டோவை மறிக்கவும் “சிங்கள மாத்தையா எக்கனிக் அதிசயட்ட யண்ட ஓணலு” (சிங்கள சார் ஒருவர் அவசரமாக போக வேணுமாம்) என அவர்களுக்கு புத்திசாலித்தனமாகப் பதிலளித்து சுகந்தனைக் காப்பாற்றினான் சாரதி.

சுகந்தன் தெருவீதியெங்கும் பல கோரமான காட்சிகளையும் கண்ணுற்றான். கார்களைக் கொழுத்துகிறார்கள். இரத்தம் தோய்ந்த மீன் வெட்டும் கத்திகள், பொல்லுக்கள் சகிதம் தெரு வீதியில் நிற்கிறார்கள். வீதியில் போட்டுக் கதறக் கதற அடிக்கிறார்கள். சில தமிழர்கள் தப்பி ஓடுகிறார்கள். பல உடல்கள் தெருவில் கிடக்கின்றன. மனித உடலுறுப்புக்களும் சிதறிக் கிடந்தன. உடல்களை ரயர்கள் போட்டுக் கொழுத்துவதும் தெரிகிறது. மனித ஓலம் விண்ணைத் தொடுகிறது. ஒரே புகை மண்டலம். தீச் சுவாலை…. அப்பப்பா அவனுக்கு இப்படி ஒரு கொடுரத்தை கண்ணால் பார்க்கவே முடியவில்லை. சில வேளைகளில் கண்ணையும் மூடிக் கொண்டான்.

இதையெல்லாம் தாண்டி கொட்டாஞ்சேனையில் சுகந்தன் செல்ல விரும்பிய வீட்டு வாசலில் ஓட்டோ நின்றது. அந்தச் சாரதி சுகந்தனுக்கு ஓரு தெய்வமாக உயர்ந்து தென்பட்டான். “இப்படியும் ஒரு சிங்களவரா” என ஆச்சரியப்பட வைத்தது. சுகந்தன் சாரதியைப் பார்த்து “போமஸ்துதி” (மிக்க நன்றி) என்று கூறிக்கொண்டு காசையும் கொடுத்து விட்டு விடைபெற்றான். சாரதியின் முகம் “ஒரு உயிரை கொலைக்களத்தில் இருந்து காப்பாற்றி விட்டேன்” என்று நிம்மதியடைவதைக் காட்டிக்கொண்டது. உண்மைதான் அந்த உத்தம சாரதி சுகந்தனைக் காப்பாற்றியிருக்கா விட்டால் அவன் அன்று கடாப்பலியாக்கப் பட்டிருப்பான். அவன் உயிர் போயிருக்கும்’.

கொழும்பெங்கும் பரவியிருந்த கொடூரமான கலவரத்தில் இருந்து தப்பிக் கொள்ளும் கடைசி முயற்சியாக சுப்பிரமணியம் அங்கிள் வீட்டுக்குள் காலடி வைத்தான் சுகந்தன். வீட்டுக்குள் நுழைந்த சுகந்தனால் ஹோலில் யாரையும் காணமுடியாததால் குசினிப்பக்கமாக எட்டிப்பார்த்தான். இவனின் காலடிச் சத்தம் கேட்டதும் ஆமை தன் ஓட்டுக்குள் இருந்து தலையை வெளியே நீட்டுவது போல் யாரோ மெதுவாக எட்டிப் பார்த்ததும் “அங்கிள் நான் சுகந்தன் வந்திருக்கிறன்” எனக் குரல் கொடுத்தான். அவனின் குரலைக் கேட்ட சுப்பிரமணியம் அங்கிள் ஓடி வந்து “தம்பி சுகந்தன் எப்படி வந்தனீர்” என்று கேட்டபடி குசினிக்குள் ஒளியச் செய்தார். முழுக் குடும்பமும் குசினிக்குள் ஒளிந்திருப்பதை சுகந்தன் கண்டு நிலைமையைப் புரிந்து அவர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டான்.

எல்லோரும் அச்சத்துடன் காணப்பட்டனர். யாரும் எதுவும் பேசக்கூடிய நிலையில் இல்லை. இந்த நிலைமை ஒரு அரை மணி நேரம் நீடித்திருக்கும்.

ஹோலில் யாரே பேசும் சத்தம் கேட்டது. பொருட்கள் உடையும் சத்தமும் கேட்டது. “ஐயோ வந்திட்டாங்க கடவுளே” என எல்லோரும் பதறுவதைப் பார்த்த சுகந்தன் தானும் வாயில் “முருகா முருகா” என உச்சரித்துக் கொண்டான்.

தெருப்பக்கமாக சில சூட்டுச்சத்தங்கள் கேட்டன. பின்பு மயான அமைதி நிலவியது.

மெல்லமாக எட்டிப்பார்த்த சுப்பிரமணியம் அங்கிள் “பொலிஸ் வந்திருக்கு” என்று கூறிக்கொண்டு வெளியே வந்தார். பொந்துக்குள் இருந்து வரும் நண்டுக்கள் போல் ஒவ்வொருதராக எல்லோரும் வெளியே வந்தார்கள்.

வீட்டு வாசலில் ஒரு பொலீஸ் ஐPப் நின்றது. மூன்று பொலீஸ்களுடன் இன்ஸ்பெக்டர் காந்தனும் வந்திருப்பதாக அறிந்து கொண்டான் சுகந்தன். “உங்கடை நல்ல காலம் நாங்கள் வந்திட்டம். இல்லாவிடில் உங்கடை வீட்டை கொழுத்தியிருப்பாங்க. வீட்டிலை நிற்கவேண்டாம். உங்க உயிருக்கு ஆபத்து” என்று சொன்னார் இன்ஸ்பெக்டர். “கன வீடுகள் கொழுத்திட்டாங்க” என்று கூறியவாறு காடையர் வீடுகளைக் கொழுத்தக் கொண்டு வந்த பொருட்களைக் காட்டினார் இன்ஸ்பெக்டர்.
அதற்குப் பதிலளித்த சுப்பிரமணியம் “ நாங்கள் எங்கை போகிறதையா, எங்களை பொலிஸ் ஸ்ரேசனுக்குத் தான் கூட்டிச் செல்லுங்கள்” என்றார். “அங்கெல்லாம் கொண்டு போக நேரம் இல்லை வேணுமென்றால் கொச்சிக்கடைக் கோவிலில் இறக்கிறோம்” என்று கூறி எல்லோரையும் ஐpப்பில் ஏற்றினார்கள்.

வரும் வழியில் கூட சிங்கள காடையரின் அட்டகாசத்தை அவர்களால் பார்க்க முடிந்தது. கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வந்த தஞ்சம் அடைந்த முதல் அகதிகளாக அவர்கள் இருந்தார்கள். அந்த ஆலயத்தின் அர்ச்சகரும் குடும்பத்தினரும் தம்மிடம் இருந்த உணவைப் பரிமாறி அவர்களை ஆதரித்தார்கள். நேரம் செல்லச் செல்ல இவர்களைப் Nபுhல் பலரும் கொண்டு வரப்பட்டனர். ஆலயம் சனத்தால் நிரம்பி வழிந்தது. சாப்பாட்டுக்கு வழியேதும் இருக்க வில்லை.

பல இடங்களிலும் நடந்த கொடூரச் சம்பவங்களைப் பற்றி பலரும் பேசிக் கொண்டார்கள். கொள்ளையடிக்கப்பட்ட பிஸ்கட் போன்றவற்றை சிலர் ஆலயத்தின் மதிலின் மேலால் விற்றார்கள். இதைக் காசு கொடுத்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டனர் சிலர்.

வெலிக்கடைச் சிறையில் தமிழ் சிறைக்கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது பற்றியும் பேசிக்கொண்டனர்.

அடுத்த நாள் மாலையளவில் தான் கொஞ்சம் கொஞ்சமாக கொழும்பில் கலவரம் கட்டுப்படுத்தப்படுவதாக சிலர் பேசினர்.

77ம் ஆண்டுக் கலவரத்தை விட மோசமாம் என்றும் பலர் பேசியது சுகந்தன் காதில் விழுந்தது .மூன்று நாட்கள் ஓடி விட்டது. நாலாவது நாள் காலை அகதிகள் முகாம் திறந்துள்ளார்கள் எனப் பேச்சு அடிபட்டது. இராணுவ ரக்குகளில் ஏற்றி “சென்ற் பெனடிற் கொலிஐ;” அகதிமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறே சுகந்தனும் அந்த முகாமிற்குள் காலடி எடுத்து வைத்தான். பசி ஒரு புறம் வாட்டியது. இனி என்ன நிலைமை என்ற கவலையும் அவன் மனதைக் குடைந்தது. தமிழனாகப் பிறந்ததற்காக இவ்வளவு தண்டனையா எனச் சலித்துக் கொண்டான் சுகந்தன்.

அந்த முகாமுக்குள் காலடி எடுத்து வைத்து இரண்டு மணித்தியாலம் ஆவதற்குள் அந்த முகாமுள்ளும் காடையர் குண்டை வீசினர். எல்லோரும் கதறி ஓடினர். அதனால் அங்கு மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

சில தமிழ் முதலாளிகளும் அந்த முகாமில் இருந்தனர். அவர்களின் உதவியால் ஒரு நேர உணவைக் கொடுத்தார்கள். சுகந்தனுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு கிடைத்த உணவு அதுதான்.

மலசல கூட வசதி பெரும் மோசமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வசதிகளும் அங்கு அதிகரிக்கப்பட்டன. சுகந்தன் அகதி முகாம் வாழ்க்கையில் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டான். கண்டியில் இருந்து கொண்டு வந்த துணிப்பையுடன் முகாமில் வழங்கப்பட்ட உணவுக் கோப்பைகள் போன்றவற்றை தனது சொத்தாகச் சேர்த்துக் கொண்டான்.

அங்கு உயிர் தப்பி வந்தவர்களின் கதைகளையும், கொடூரமாகக் பலர் கொலை செய்யப்பட்ட எண்ணற்ற கதைகளைக் கேட்டு மனம் வருந்தினான். சுகந்தனைப் போல் கண்டியில் இருந்து கொழும்புக்கு வந்த பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டமை பற்றியும் சுகந்தன் காதில் விழுந்தது. சுகந்தனின் கதையைக் கேட்டு அறிந்து கொண்ட சிலர் “நீ உயிர் தப்பியதே பெரிய விடயம்” என்று கூறினார்கள்.

நாட்கள் கடந்தன. கப்பல் மூலம் அகதி முகாமில் இருந்தவர்களை சொந்த இடத்திற்கு அனுப்பத் தொடங்கினார்கள். நோய் வாய்ப்பட்டவர்கள், குழந்தைகளுடன் இருப்பவர்கள் என முக்கியத்துவம் கொடுத்து அனுப்பினார்கள். அகதி முகாமில் இல்லாது சிங்கள நண்பர்களின் உதவியோடு வெளியில் இருந்த பலரும் தமது செல்வாக்கால் கப்பல் முன்னுரிமை பெற்றுச் செல்லத் தொடங்கினார்கள்.

எந்த முன்னுரிமையும் பெற முடியாதவனாக 14ம் நாள் சுகந்தனுக்கு சரக்குக் கப்பலில் யாழ்ப்பாணம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அகதி முகாமில் கிடைத்த பிளாஸ்டிக் கோப்பை போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு கப்பலில் ஏறினான் சுகந்தன். அந்தச் சரக்குக் கப்பலிலும் மேல் தட்டில் இருக்கத்தான் இடம் கிடைத்தது. அலை பெரிதாக வரும்போது உப்பு நீரால் குளிப்பாட்டி விட்டிடும். இவ்வாறாக அடிக்கடி நனைவதும், பின் ஈரத்தை துடைப்பதாகவும் தான் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது.

சாப்பாடு ஒழுங்காக கொடுத்தாலும், கப்பலில் உள்ள மலசல கூட வசதிகளைப் பார்த்து சாப்பிடாமலே சுகந்தன் பிரயாணம் செய்தான்.
மேலும் திருகோணமலைப் பக்கமாக வரும்போது நடுக்கடலில் கப்பல் பழுதாகி விட்டது. “பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்” என்பது போல இருந்தது சுகந்தனின் நிலைமை. ஒரு நாள் பூராவும் கப்பல் நடுக்கடலில் நின்றது.

சுகந்தன் கண்டியில் இருந்து கொழும்பிற்கு புறப்பட்ட நாளிலிருந்து 17 வது நாளாகி விட்டது. காங்கேசன் துறைமுகத்தை கப்பல் பகல் நேரம் ஒருவாறு வந்தடைந்தது. ஏதோ ஒரு வேற்று நாட்டில் இருந்து அகதியாகி சொந்த நாட்டுக்கு வந்தது போன்ற நிலைதான் சுகந்தனுக்கு இருந்தது.
அங்கே தொண்டர்கள் நின்று உணவு வழங்கிச் சேவை புரிந்து கொண்டிருந்தார்கள். சுகந்தனின் பல்கலைக்கழக நண்பர்கள் சிலரும் தொண்டர்களாக நின்றனர். அவர்கள் சுகந்தனைக் கண்டதும் ஆச்சரியப்பட்டனர். அதன்பின் பஸ்ஸில் ஏறி சுகந்தன் தனது வீட்டுக்குச் சென்றான்.

அவனைக் காணும் வரையில் வீட்டாருக்கு அவன் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்த தகவல் கலவரம் தொடங்கிய அந்தக் காலை சுகந்தன் கண்டியில் இருந்து கொழும்பு சென்றதாகவும், அவ்வாறு சென்ற பலர் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்பதும் தான். அதனால் வீட்டில் சுகந்தனின் நிலையை எண்ணி மிகவும் பயந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பதினேழு நாட்களும் சுகந்தனின் வீடு ஒரு மரண வீடாகத்தான் இருந்தது. ஏதோ ஒரு வழியில் தெய்வாதீனமாக தப்பியிருக்கமாட்டானா என்ற ஒரு அங்கலாய்ப்புடன் இருந்தார்கள்.
சுகந்தனின் வருகை வீட்டில் எல்லோருக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. கண்கள் கலங்க எல்லோரும் சுகந்தனை கட்டித்தழுவிக் கொண்டனர். சுகந்தன் வீடு உயிர் தப்பி வந்துவிட்டாலும், எதையாவது சாதித்து விட்டுத்தான் வரவேண்டும் என்ற வைராக்கியத்தில் இருந்து தவறி விட்டேன் என்ற கவலை ஒரு புறம், இனி என்னதான் நடக்கப்போகிறது என்ற கவலை மறுபுறமாக வாட்டி வதைத்தது.

இடிமேல் இடியாக, கண்டியில் சுகந்தனின் நண்பனின் கடை எரிக்கப்பட்டு விட்டதாகவும், நண்பன் சிவாவும் யாழ்ப்பாணம் வந்து விட்டதாகவும் அறிந்தான். சுகந்தனின் அத்தனை பொருட்களும் எரிந்து விட்டன. முக்கியமாக அவன் சிறு வயது முதல் பல்கலைக்கழகம் வரை பெற்ற சான்றிதழ்கள், படங்கள் எல்லாம் எரிந்து விட்டதை எண்ணி மேலும் கவலைப்பட்டான். சுகந்தன் வாழ்வில் அந்தப் பதினேழு நாட்களில் எத்தனை சோதனைகள், இழப்புக்கள். சுகந்தனைப் போல் எத்தனையோ பேரின் வாழ்வில் நடந்த கொடூரங்கள், இழப்புக்கள் எத்தனை எத்தனை……

நன்றி : தமிழ் மிரர் பத்திரிகை, கனடா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *