அது வரை… மூடி மூடி வைத்துக் கொண்டிருந்த மேகம் பொத்துக் கொண்டு பொழியத் துவங்கியது. எடுத்ததுமே வேகமான மழைக்குள் தன்னை சிதறத் தொடங்கியிருந்தது. வந்த கூட்டம் ஆங்காங்கே வேகவேகமாய் கலைந்தது….அவளோ தான் என்பது போல.
“என்ன…..வீட்டுக்கு போயி.. கால் நனைச்சிட்டுதான் வீட்டுக்கு போகனுமா… அதெல்லாம் அந்தகாலம்பா.. மழை வேற… இப்பவே குளிச்ச மாதிரிதான் இருக்கு.. இப்படியே கிளம்பறேன்” என்றபடியே ஓர் உறவு மெல்ல யாரோ காதில் சொல்வது போல சத்தமாக சொல்லி விட்டு நகர்ந்தது. சில உறவு…. பொதுவாக…..”ம்.. முடிஞ்சது…. இனி நான் எதுக்கு இங்க” என்பது போல கையை சேர்த்து உதறுவதாக தட்டி விட்டு…. ஒட்டி இருந்த பிசுபிசுப்பான மண் துகள்களை….மழையோடு கரைத்தபடியே யாரின் பதிலுக்கும் காத்திராமல்….தலையை மழைக்கு குனிவதாக நினைத்துக் கொண்டு வேறு திசையில்… ஓடி சென்று திசை முடிந்தாற்போல வளைந்த இடத்தில் குழுமியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றது.. அது ஊரில் சாவன்று அதிகமாக விற்பனையாகும் தேநீர் கடை.
மழை நச நசக்க ஆரம்பித்திருந்தது. மழையோடு… மெல்ல நடந்து கொண்டிருந்த அகிலனுக்கு…. மனதுக்குள் வெடித்துக் கொண்டிருந்த துளிகளில்…இறுக்கம் இறுகி… கரையா நிகழ்வென.. இருந்தது…அவனின் தனித்த நடை. கனத்த அவனின் மௌனத்தை அந்த கனமழை அடித்து நொறுக்குவதாக நம்பினான். உடன் வந்த கூட்டம் முன்னும் பின்னும் நடந்து சிதறி.. யாருக்கும் யாரும் தொடர்பில் இல்லை என்பது போல நடை தொடர்ந்து கொண்டிருந்தது.. சற்று முன் நடந்த அந்த இறுதி யாத்திரையின் இறுதி கணங்கள். அவனுக்கு நடை தளர்ந்தது. தளர வேண்டும்… இப்போதே தூங்கி விட வேண்டும் போல உணர்ந்தான்.
இதே சாலையில் எத்தனை மழை நாளில்.. குடையை தனக்கு தள்ளி பிடித்துபடி தன் முதுகு நனைய…….இடப்பக்க உடல் முழுக்க நனைய… நடந்திருப்பார்… அப்பா.
ஏனோ அவனின் சிந்தனை நடுங்கியது. மரணத்தைப் போல… மாற்று சிந்தனை வேறொன்று இல்லை போல தான் தோன்றியது அப்போது. மழை வலுத்தது…. இடி வெளுத்தது.
பூமி தன்னை போர்த்திக் கொண்டதை போல நம்பியது அவனின் மூளை. மழை கடந்தவனாக…தொப்பலாக நனைவதை விரும்பியவனாக வேகமாய் வீட்டுக்குள் சென்றவன்… யாருடைய முகத்தையும் பார்க்க வலுவின்றி தானாகவே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டான். அந்த சிறிய வீடு மனிதர்களால் நிறைந்திருந்தது….கிட்டத்தட்ட… கடந்த பத்து நாட்களாகவே வீடு நிறைவதும்.. பின் குறைவதும்… சலிப்பும்… சமாதானமும்… விடுமுறைக்கு கெஞ்சிய முனகலும்…..விடுமுறை இல்லை என்ற குரல்களும்…அலைக் கற்றை பிழையென அந்த வீட்டை சுற்றிக் கொண்டிருந்தது….. இப்போது கூட்டம் மெல்ல மெல்ல இதற்கெனவே காத்திருந்ததைப் போல கலைந்து கொண்டிருந்தது.
சரி மரணம் அப்படித்தான் என்பதாக வழக்கம் போல சில உறவுகள் மழைக்குள்ளும் தங்கள் வீடு நோக்கி புறப்பட்டார்கள்.. சொல்லிக் கொள்ளாமல். மனதுக்குள் படர்ந்த பனி மூட்டத்தை துடைக்க மனமின்றி.. வெறித்த நிகழ்வுகளை உத்திரத்தில் பார்த்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தான்…அவன் அப்பா அப்படித்தான் சாய்ந்து கொண்டிருப்பார் என்று திடீரென வந்த ஞாபகம் அவனுள் ஓர் எறும்பின் வரிசையாக நகர்ந்தது. எங்கோ சென்ற தூரத்தை எல்லாம் கட்டி இழுத்து வந்த வீட்டின் கதகதப்பு தேவையாய் இருந்த நேரத்தில் சுழன்ற கண்களில் அவனின் தங்கை மகள் கையில் இருந்த அலைபேசி செவ்வகமாய் ஓடியது. படக்கென நினைவில் தூண்டில் விழ இன்னும் கண்களை தீவிரப் படுத்தினான். அதில் சற்று நேரத்துக்கு முன்…..அப்பாவின் சடலம் கிடத்தியிருந்ததை எப்படியோ படம் பிடித்திருக்கிறாள். அவனுக்கு சட்டென அந்த அலைபேசியை வாங்கி பார்க்க தோன்றியது. ஆனாலும்… பார்த்துக் கொண்டே இருக்க….. அந்த சிறுமிக்கு என்ன புரிந்ததோ… அவனிடம் தானாகவே அலைபேசியை நீட்டினாள். புன்னகைத்ததை போல நம்பிய முகத்தோடு.. இறுக்கம் தளர்ந்து வாங்கி பார்த்தான். கண்கள் மட்டும் அலை பேசியில்… ஓடிக் கொண்டிருந்த இறுதி நேர அப்பாவின் கிடப்பை நகர்த்திக் கொண்டிருந்தது.
சிறுவயதில் அப்பா தூங்கையில்… அம்மாவோடு சேர்ந்து சற்று நேரம் உற்றுப் பார்த்து மெல்ல சிரித்துக் கொள்வது ஞாபகம் வந்தது. மெல்ல சிரிப்பது போல ஓர் முகம் மாட்டிக் கொள்ள தோன்றியது அப்போது.
படக்கென்று அலைபேசி திரையில்… மாலைகளோடு படுத்திருந்த அப்பா… மெல்ல… கண்கள் சிமிட்டுவதை காண முடிந்த நேரத்தில்.. படக்கென்று பெருமூச்சோடு எழுந்தமர்ந்தவன்… பேய் அடித்ததைப் போல… நடுங்கினான். அந்த வீடு முழுக்க மழை வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போவதான ஓர் உள்வாங்கலின்.. நீட்சியென மீண்டும் பின் வந்து நகர்த்தினான் ஒளித் திரையை. அப்போதும் அப்பாவின் அதே கண்கள் அப்படியே சிமிட்டின.
‘பத்து நாளா இழுத்துகிட்டு இருக்கு… இந்த ஜீவன் போய்ட்டாதான் நிம்மதி….”- மூலையில்…. கிடந்த அத்தையின் நடுக்கம் கலந்த நேற்றைய குரல்… இப்போது மூர்க்கமாக தீர்க்கமாக கேட்டது. சுற்றிலும் வரத் துவங்கி விட்ட இறுக்கத்தின் நகர்தலை கலைந்து கொண்டு எழுந்து வேகமாய் வீட்டை விட்டு வெளியேறி ஓடத் துவங்கினான் அகிலன். ஒரு ஒரு மரணத்தை துரத்தும் வேகம்.
அது பேய் மழை என்பது உண்மைதான் போல. மரம் ஆட… வெளி நகர…. வழி மறந்த மழையின் ஆட்டம்… அத்துமீறும் ஒளிப் பிரழ்வுகளென அந்த இருட்டில் தத்துவங்கள்…. இறந்து கொண்டிருந்தன….சொல்லி வைத்தாற்போல. ஓட்டம்…. உடை பட்ட நடுக்கமென நடையாய் மாறி.. பின் மூச்சிரைக்கும் பயமாய் நெளிந்தது. மூளை ஸ்தம்பித்த நொடிகளை பிடிக்க முடியா காற்றின் கரைதல் வேகமாய் விதியை சம்மட்டி கொண்டு தாக்குவதாய் உணர்ந்தான்.
எப்படி இது சாத்தியம்….? “இந்த உலகில்.. எல்லாமே சாத்தியம்….எதுவுமே சாத்தியம் இல்லாததை போல”- என்று அப்பாவின் குடித்த பொழுதுகளின் உலர்தல் நினைவுக்கு வந்தன. ஓர் எழுத்தாளன் படும் அத்தனை அவஸ்தைகளையும் புத்தகங்களாக எழுத்துக்களாக தன் தலைமேட்டில் வைத்திருந்த அப்பா கடைசியாக எழுதிய கவிதை என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆசை அப்போது வந்தது. அவரின் உலகத்தில்… எல்லாமே கவிதைகள்தான்… எல்லாமே கதைகள்தான். கதா பாத்திரங்களின் நிழலைப் பின் தொடரும் நாடகத்தில் அவரின் தூரங்கள்….சிறகுகளாலான வானத்தின் திறவுகள். அவர் சிமிட்டிய கண்களின் அர்த்தத்தில் இன்னும் ஜனிக்க முடியாத கவிதையாக அவரின் மரணம் இருந்திருக்கும். அவன் வெறி பிடித்த அவரின் பறவையைப் போல பறந்தான்… பாதம் முட்டாத பாதையில்….. பயம்… முட்டிக் கொண்டிருந்தது.
மயான அமைதியை அரிசி இறைத்து கலைப்பது போல.. இருந்தது.. ஒரு சாய்த்து விழுந்து கொண்டிருந்த மழை. இரவின் தொடக்க வேளை.. இருந்தும்… இருட்டின் சாயம் கொஞ்சம் அதிகம்தான். ஆங்காங்கே பெயருக்கு எரிந்து கொண்டிருந்த மின்சார விளக்கில்…. சாவை செரிக்காத பூச்சிகள் சுற்றிக் கொண்டும்.. பற்றிக் கொண்டுமிருந்தன. வேகத்தின் வேகத்தை கூட்டி இன்னும் வேகமாய் பல மண்மேடுகள் தாண்டி… தனித்துக் கிடந்த அப்பாவின் குழி மேட்டுக்கு முன் நின்றான்… அடித்துக் கொண்டிருந்த மழையில்… மேடு கரைந்து பூமியோடு சரிந்து கொண்டிருந்தது. மாலைகள்… கசிங்கி.. வாசத்தின் நுகர்வுகளை… மெல்ல இழந்து கொண்டிருந்தன. எரிய விட்டுப் போன மெழுகுவர்த்திகள் எப்போதோ அணைந்திருக்க வேண்டும். அவருக்கு படைக்கப்பட்ட இதர பொருள்களோடு அவரின் பேனாவும் இடம் மாறிக் கிடந்தது.
சுற்றிலும்.. இருள் ஒரு பேயைப் போல அந்த இடத்தை சூழ…மழை மரணத்தை எட்டிப் பார்க்க வந்த கத்தி துகள்களென குதிக்க….மனதுக்குள் மூளை விரிந்த சதுர செவ்வகத்தில்.. அப்பாவின் கண் அசைவு சடலம் ஒரு கணம் வந்து போனது. வேகம் வெறியாகி கைகளால் ஒரு நாயைப் போல அப்பாவின் குழியை பறிக்கத் துவங்கினான். அவனின் பெருமூச்சும்.. உடல் அசைவும்.. இரவைக் கிழிக்கும்…..பின்னிரவு சப்தமென….. பறிக்கும் ஒவ்வொரு கை மண்ணுக்கும் ஒரு வித உத்வேகம் கொண்ட ஈனக் குரல்….அடித்தொண்டையில் இருந்து அழுத்திக் கொண்டு மேலெழுந்தது. அத்தனை மழையிலும் வியர்த்து ஒழுகியது…. உடலில் இருந்து துக்கம் வெக்கையென வெளியேறிக் கொண்டேயிருந்தது. ஒரு வித திக் திக்… உணர்வுக்குள் கம்பளி பூச்சியை ஊர விட்டது…தன் உடல் திறந்து பார்த்துக் கொண்டிருந்த இரவின் சாட்சிக் கண்கள்.
குழித் தட்டுப்பாடு கொண்ட மயானம் அது. கொஞ்சம் தோண்டியதுமே…. வேறு ஒரு சடலம் மண்வெட்டியில் படர… சட்டென குழி தோண்டியவன்…. நிறுத்தி விட்டு விஷயத்தை காதுக்குள் காதாக கூற….. விஷயத்தை காதோடு மூடி விட்டு……. அப்பாவை அதற்கு மேல் வைத்து மூடி விட்டதும் அவன் அறிந்ததுதான். மழையும் சேர்ந்து குழி பறித்து விட……தோண்ட ஆரம்பித்து சற்று நேரத்தில் அப்பாவின் பெட்டி அகப்பட்டு விட்டது. அவரை கிறிஸ்துவ பெட்டியில் வைத்துதான் அடக்கம் செய்ய வேண்டும் என ஒரு பத்து வருடங்களுக்கு முன் “நியந்தா” என்று தலைப்பிட்டு அவர் எழுதிய ஒரு கவிதை வெளிப்படுத்தியிருந்தது. அது குறித்து அம்மாவும் கேட்டதில்லை. அவனும் கேட்டதில்லை. ஆனால் அவர் மரணப் படுக்கையில் மிதந்து கொண்டிருக்கும் போதே அப்படிப் பட்ட பெட்டியில்தான் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டான். காரணம் இல்லாத மாதிரியும் காரியம் இருக்கும். அது அப்படித்தான் என்று சில கவிதைகளை முடிக்காமலே விட்டிருப்பார். அப்படியே அவனும் விட்டு விட்டான். எல்லாக் கேள்விக்கும் பதில் தேவை இல்லை என்பதும் அவர் கற்றுக் கொடுத்ததே.
இம்முறை பூமி யோனியைத் திறந்து கொண்டு பிறந்து வருவதைப் போல அப்பா…வின் பெட்டி ஒரு பயங்கர உண்மையை எடுத்துக் கொண்டு மூச்சடிக்கி மேலே வருவதைப் போல உணர்ந்தான். கறுத்த மெல்லிய துணியால்.. சூழப்பட்ட பெட்டி….மிகப் பெரிய அச்சத்தை…. மிகச் சிறிய வாழ்வாக்கி…. நீண்டு செதுக்கி வடிவமாக்கி விட்டதைப் போல ஒரு முறை பார்த்தான். ஏனோ பார்த்து முடியாத தூரங்களை உள்ளடக்கியதாக அப்பாவின் பெட்டி…..ஒரு குழந்தையைப் போல அவனின் உடலில் சரிந்து கொண்டு தழுவியது. அது பசிக்கு அழும் வயிற்றை முன்னால் தூக்கிக் கொண்டு வருவது போல இருந்தது. சிமிட்டாத கண்களால் அன்னிச்சையாய் மயானத்தை அமர்ந்தவாறே ஒரு முறை பார்த்தான்..மற்ற குழிகளில்… மயான அமைதி.. கவனம் சிதறிய வானத்தை ஒரு முறை அண்ணாந்து பார்த்துக் கொண்டான். குழிக்குள் இருந்த ஒரு காலை இன்னும் ஸ்திரமாக்கி நிறுத்திக் கொண்டான். பக்கத்தில் கிடந்த இரும்பு கம்பியைக் கொஞ்சம் எட்டி எடுத்து பெட்டியில் அடித்திருந்த ஆணியை நெம்பி கொஞ்சம் கொஞ்சமாக கழற்றினான். அருகில் கிடந்த கல்லும் உதவியது. வெறி கொண்ட உடலில் பலம் கொண்டது கைகள் என்று அவனையே நம்ப வைத்தது… குருதி சொட்ட சொட்ட அவன் பிடுங்கிக் கொண்டிருந்த ஆணி. இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பது போல தெரிய தொடங்கியது அப்பாவின் முகம். கண்களை அப்பாவின் முகம் முழுக்க உடல் முழுக்க சுழல விட்டான். சற்று தூரத்தில் மினுங்கிக் கொண்டிருந்த மஞ்சள் நிற மின்சார வெளிச்சம்.. மயானத்தின் சாயலை சற்று மாற்றி விட்டதாக நம்பினான். இன்னும் இன்னும் கூர்ந்து கவனித்தான்….அப்பாவின் முகத்தில்… ஓயாமல் சிந்திக்கும் முகம் எங்கே என்று.
அவன் கண்கள் அப்பாவின் கண்களையே கவனித்தன. நிகழ்வுகளின் நிகழ்த்துக் கலை அதுவான ஒரு நேரத்தில் அப்படியாக நடந்து விட்டது…. அப்படித்தான்…..அப்பாவின் கேள்விகள் போல. ஆம்…..மின்னல் பளிச்சிட்ட ஒரு கணத்தின் தொடர்ச்சியாய்….பட படவென வந்து விட்ட இடியின் பிரளயத்தில்.. பூமியே இரண்டானதைப் போல… உணர்ந்த ஒரு தருணத்தில்…அப்பாவின் கண்கள் மெல்ல அங்கும் இங்கும் ஒரு முறை சுழன்றது. திக்கென்று தூக்கிப் போட்ட கரப்பான் பூச்சியின் மல்லாக்க விழுந்த மனநிலையை அனுபவித்தான். அவன் உடல் நடுங்கி எடை கூடியது. மூளைக்குள் மீண்டும் ஒரு மடிப்பு தனை சுருக்கிக் கொண்டதை போல தடுமாறினான். அவனின் இதயம் நின்று தொடரும் கணத்தை மிக துல்லியமாக அளவிட்ட அவனின் நடுக்கம் அவனை சுற்றியும்…. அதிர்வுகளாக வெளிப்பட்டன. அவனின் கண்கள் ஒரு முறை இருட்டி பின் வெளிச்சத்துக்கு வந்தன. திரும்ப திரும்ப அவனின் கேள்வி…கேள்வியாகவே அவனை சுழன்றது.
அப்படி என்றால் அந்த காணொளி உண்மையே…அப்பாவின் உயிரின் கடைசி சொட்டு இன்னும் அடங்கவில்லை. அது இன்னமும் மரணத்தை முழுதாக உள்வாங்கவில்லை. அது அவரின் கண்களுக்குள் சுழன்று கொண்டேயிருக்கிறது. அதற்குள் இந்த ஊரும் உறவும்… சுற்றமும்…. முற்றமும்…அன்பும்…..கோபமும்….வாழ்வும்….சாவும்…..படுக்கையும்…. கடைசி நடுக்கமும்…அப்பாவை மயானம் கொண்டு வந்து விட்டிருக்கிறது… முழுதாக சாகவும் விடாத துரத்தல்களை எங்கனம் எதிர்கொள்வது. இப்போது என்ன செய்வது…. என்னதான் செய்வது……?
மருத்துவர்களாலும் கைவிடப் பட்டு…. எல்லாக் கடவுளர்களாலும்…கண்டுக்காமல் விடப் பட்ட அப்பாவை இனி செய்ய முடியும்…… இந்த உலகை காட்டிக் கொடுத்த அப்பாவின் உலகமே வேறு. அது பறவைகளாலும்…..கனவுகளாலும்…..கவிதைகளாலும்…. நிறைக்கப்பட்ட பூமி. சாமக் காடுகளாலும்… தீரா பனிகளாலும் நிரம்பப்பட்ட காற்று மண்டலம். அவரின் உலகத்தில் கதவுகளே இருந்ததில்லை. முடிவெடுக்க முடியாத நிலைக்குள் நிலையில்லாத உயிர் சுமக்கும் பட்சியின் பெரும்பசியைப் போல ஏங்கிய ஆழ் மனதின் வெடிப்புகளை அடைக்கவும் மறந்து…..அலைபேசியை எடுத்து மனைவிக்கு போன் செய்தான். கவனத்தின் பேரமைதியை கலைத்துக் கொண்டு மிகப் பெரிய மரணத்தின் கதறலென…அழை மொழி சப்தம் போய்க் கொண்டிருக்க…. மழை இன்னும் வேகமெடுத்தது…. அப்பாவின் திரைக் கதையைப் போலவே. அப்பாவின் முகத்தில் விழுந்த மழைத் துளிகளை தன் பின்னுடல் காட்டி மறைத்தான். சொர்க்கத்தின் பிடிகளை அவன் நழுவ விட்டுக் கொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான்.
மனைவி அலைபேசியை எடுத்ததும் என்ன சொல்ல…என்ன சொல்ல முடியும்?……அப்பா சாகவில்லை என்றா…..?….இது கனவு மாதிரி இருக்கும்….. காட்சிப் பிழை…..என்பதை எங்கனம் விளக்க….. யாரிடம் கூறி யாரை வரச் சொல்ல…….?….வந்து…. அப்பாவை மீண்டும் வீட்டுக்கு எடுத்து செல்லவா…. எடுத்து சென்று அவரின் தீரா வலிகளின் புதிரில் அவரை மீண்டும் அலைய விடவா…….? கை அன்னிச்சையாக மனைவிக்கு சென்ற அலைபேசி அழைப்பை நிறுத்தியது.
ஒன்றும் புரியாமல் நிஜம் எது நிழல் எது என்று புரியாத கணத்தில் அவன் மீண்டும் மீண்டும் தன் அப்பாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்… அது ஒரு பூரண மரணத்தை வேண்டிக் கொண்டிருப்பது போல இருந்தது. முதன் முறையாக ஒரு மரணத்தை அப்பாவிடம் வேண்டத் தோன்றியது. இந்த வாழ்வு…. இந்த எழுத்து… இந்த கவிதை… இந்த உறவு… இந்த உலகம் அவருக்கு தந்துவிடாத மரணத்தை அவன் வேண்டி நின்றான். நிம்மதியாக முழுதாக மரணிக்க வேண்டிய ஒரு நிலையை அவருக்கு தர வேண்டி அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்… அத்தனை கனத்த மௌனத்தில் இன்னும் பூதாகரமாக தெரிந்தார் அப்பா. அவனை சுற்றி பாசத்தாலும்.. நேசத்தாலும்… சொல்லாமல் விட்ட அன்பின் நிலைப்பாடுகளாலும் அவன் மெல்ல அவனுக்கும் அப்பாவுக்கும் இடையே உள்ள மாயத்தின் கோடுகளை அழித்துக் கொண்டே வருவது போல உணர்ந்தான். உலகமே அவனை உற்று நோக்குவதாக ஒரு கொலை செய்வதைப் போல அவனே நம்பினான். சாகாத அப்பாவை மண்ணுக்குள் எப்படி வைக்க என்று புலம்பி பாம்பின் நாக்காய் அவனின் தலை சுழன்றது. அப்பாவின் மரணத்துக்கு காத்துக் கிடக்கும் நொடிகளை நடுங்கியபடியே கடந்தான்.
கணங்களை… பிணமாகி பார்த்துக் கொண்டே இருந்தான். அவனின் நேரம்… எங்கோ நின்று விட்டதாக வெறித்திருந்தான். அப்பாவை இறுகிய மனதோடு மெல்ல உலுக்கிப் பார்த்தான். நெஞ்சில் காது வைத்துக் கேட்டான். கையில்.. கழுத்தில் நரம்பின் துடிப்பு இருக்கிறதா என்று சோதித்தான். அவனின் உடலோடு அப்பாவின் உடலும் நடுங்கவதாக நம்பினான். தூங்கும் அப்பாவின்….. முகத்தை சிறு வயதில் உற்றுப் பார்ப்பது போல பார்த்தான். அவர் இப்போதும் தூங்குவதாக நம்பட்டுமே என்று தன் மனதை வேண்டிக் கொண்டே அப்பாவின் முகத்தில்… நெற்றியில்…யாருமறியாத முத்தங்களை பதித்தான்.. கடைசியாக முத்தம் கொடுத்து 25 வருடங்கள் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்…மிகப் பெரிய வெற்றிடம் கடப்பவனாக.
படக்கென்று அவரின் விழிகள் ஒரு முறை திறந்தன. கண்களில் மேல் மழைத் துளிகள் பட்டும் அந்தக் கண்கள் அதன் பிறகு மூடவே இல்லை….
“அந்தக் கண்களின் வசீகரம் அப்போதும் குறையவே இல்லை…’ என்று மென் புன்னகையோடு பார்த்தான் அகிலன். பூரண மரணத்தின் வாசம் அவனை சுற்றிலும் அப்பாவாய் வீசியது.
மழை நின்றிருந்தது…….
கண்கள் மூடி துக்கத்தை ஒன்று சேர்த்து அவரின் முழு மரணத்தை ஒப்புக் கொண்டான். இப்போதுதான் அப்பாவின் முழு மரணம் நிகழ்ந்திருப்பதை உணர்ந்தபடியே மீண்டும் பெட்டிக்குள் வைத்து ஆணியை அடித்தான். மண்ணைத் தள்ளி பெட்டியை மூடினான். நிதானமாக அப்பாவின் குழியை மண்ணை சேர்த்து சேர்த்து பிண மேடாக்கினான். எழுந்து… ஒரு முறை குழியை பார்த்து விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி வீடு நோக்கி நடக்கத் துவங்கினான்.
வழியில்…அவனை அறியாமல் அவனை மீறி உடைந்து கத்தி அழத் துவங்கி இருந்தான்… வழி நெடுக மிட்டாய்க்கு அடம் பிடிக்கும் ஒரு சிறுவனைப் போல கண்கள் தேய்த்துக் கொண்டு அழுதபடியே போய்க் கொண்டிருந்தான். அது சற்று முன் பெய்த மழையை விட சத்தமாக….வேகமாக இருந்தது.