கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 10,743 
 

அடிபட்டவர் கை அணைக்குமா?

பிரபா எங்கடா? இன்னுமா வரலே?”

அலட்சியமாகப் பதிலளித்தான் மகன். “ரெண்டு பஸ் மாத்தி வர கொஞ்சம் முந்திப் பிந்திதான் ஆகும். அதான் சமைச்சு வெச்சுட்டுப் போயிருக்கா, இல்லே?”

கிழவருக்கு என்னமோபோல் இருந்தது. ஏதோ கரிசனத்தில் கேட்டதாகத்தான் அவர் நினைத்தார். ஆனால், `தன் பெண்டாட்டியை அப்பா என்ன குறை சொல்வது?’ என்ற எரிச்சலுடன் இவன் வக்காலத்து வாங்குகிறானே!

ஐந்து மணிக்கு வேலை முடிகிறது. இப்படியா ஒருத்தி வீட்டு நினைப்பே இல்லாது, ஏழரை மணிக்குமேல் ஆகியும், ஊர் சுற்றிக்கொண்டிருப்பாள்!

ஒரு குடும்பப் பெண் சந்தியா காலத்தில் குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டாம்? பின் எப்படி லட்சுமி வீட்டுக்குள் நுழைவாள்?

சே! தன்னோடு வாழ்ந்த நாற்பத்து ஐந்து வருடத் தாம்பத்தியத்தில் என்றாவது இப்படி ஒரு அநியாயம் பண்ணியிருப்பாளா அன்னம்மா? பாவம், ஒரே ஒரு தடவைதான் சின்னத் தப்புப் பண்ணிவிட்டாள்!

அந்த நிகழ்ச்சியின் ஞாபகம் இப்போது சற்று பெருமையாகவும், இனம் புரியாத தாபத்தையும் உண்டாக்கியது.

அண்ணி முறுக்கு பிழிய வரச் சொன்னாங்க. மத்தியானம் திரும்பி வந்துடுவேங்க. போகட்டுமா?” காலையிலேயே அவருடைய உத்தரவைப் பெற்றுத்தான் சென்றிருந்தாள் அன்னம்மா.

சாயந்திரம் இவர் வந்தபோது, அவள் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று தெரிந்ததும் ஆத்திரம் பீறிட்டது. மத்தியானம் வந்துவிடுவதாகத்தானே சொல்லிப் போனாள்? அது என்ன, அண்ணன் வீட்டில் சீராடல் வேண்டிக் கிடக்கிறது, வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்குத் தண்ணி கலக்கிக் கொடுக்க வேண்டுமே என்ற அக்கறைகூட இல்லாமல்!

ஏதோ அனாதரவாக விடப்பட்டதுபோல பயம், கலக்கம். ஒவ்வொரு முறை சுவர்க்கடிகாரத்தில் கண் பதிந்தபோதும், இவருடைய வெப்பம் அதிகரித்தது.

ஒரு வழியாக, எட்டு மணிக்கு வாடகைக்காரில் வந்து இறங்கினாள் மனைவி. “எவனோடடி சுத்திட்டு வர்றே?” தெருக்கதவை மறைத்தபடி இவர்.

எதிர்பாராத அதிர்ச்சியில் அவளுக்கு வாயடைத்துப்போயிற்று.

எண்ணெய்ப் புகை பொறுக்க முடியாது, வாந்தியும், மயக்கமுமாக இருந்ததை எங்கே சொல்லவிட்டார்! இரவு முழுவதும், வார்த்தைகளாலேயே குதறி எடுத்தார். அவள் எந்தவித எதிர்ப்பும் காட்டாது, எல்லா அவமானங்களையும் ஏற்றது அவருக்குத் திருப்தியாக இருந்தது.

இதுபோல பல சம்பவங்கள்.

பிரபா வரபோதே பசியோட வருவா, பாவம்! எல்லாத்தையும் சுட வைக்கணும்,” என்றபடி, உள்ளே போனான் பாலு.

கிழவர் உதட்டைச் சுழித்துக்கொண்டார்.

அடுப்பின்மேல் சீனிச்சட்டியை (வாணலி) வைத்தவன், பேச்சுக்குரல் கேட்டு, காஸ் அடுப்பைச் சிறியதாக எரியவிட்டு, அவசரமாக வெளியே வந்தான்.

அவன் பயந்தபடியே, “ஏம்மா? மழையும் சாரலுமா இருக்கில்ல? ஏதாவது கனமான புடவையைக் கட்டிட்டுப் போயிருக்கக் கூடாது?” என்றவாறு மருமகளை வரவேற்றுக் கொண்டிருந்தார் கிழவர்.

`இப்படி உடல் தெரிய நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு, அதிலும், தலைப்பை ஒற்றையாக விட்டுக்கொண்டு இருக்கிறாயே! எல்லாத் தடியன்களுடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்குமா?’ என்று மனதுக்குள் அவர் திட்டிக்கொண்டது அவளுக்கா புரியாது!

எதுவும் பேசாது, மாமனாரை முழுவதாக ஏறிட்டுப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, உள்ளே போக யத்தனித்தாள். கணவனைக் கண்டதும், அவளது புன்னகை விரிந்தது. “சாப்பாட்டைச் சுட வைச்சுட்டீங்களா? அப்பாடி! பசி கொல்லுது,” என்றபடி சாப்பாட்டு மேசைமுன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.

கிழவரின் உணர்ச்சிகள் கொந்தளித்தன.

ஆண்பிள்ளையாய் லட்சணமாய், தான் அவனுடைய அம்மாவை `வைக்க வேண்டிய இடத்தில்’ வைத்திருந்ததைப் பார்த்து வளர்ந்திருந்த பிள்ளை! இன்று பெண்டாட்டிக்குக் குடை பிடிக்கிறான்!

இந்தக் காலத்துப் பயலுகளே மோசம்! வெட்கம் கெட்டவனுங்க!

கிழவரின் கைகள் இறுகி, வலித்தன.

அப்பா! சாப்பிட வர்றீங்களா?”

ஏதோ, இப்போதாவது அப்பா ஞாபகம் வந்ததே!

எந்தக் காலத்தில் அவர் சாப்பிடுமுன் அவர் மனைவி சாப்பிட்டு இருக்கிறாள்! கல்யாணத்தன்று மட்டும், `சம்பிரதாயம்’ என்ற பெயரில், இருவரையும் ஒன்றாக உட்காரச் சொல்லி, சாப்பிட வைத்தார்கள்.

ஹூம்! காலம்தான் எவ்வளவு கெட்டுவிட்டது! இன்று, இந்த சின்னப்பெண் முதலில் உட்கார்ந்துகொண்டு, அதிகாரமாய் சாப்பிடுகிறது, வீட்டுக்குப் பெரியவன் நான் — ஒரு ஆண்பிள்ளை — பசியோடு இருப்பேனே என்கிற பயமோ, மரியாதையோ கொஞ்சமும் இல்லாமல்!

வேண்டாவெறுப்புடன் உள்ளே போனவருக்கு, கையை மட்டும் கழுவிவிட்டு பிரபா சாப்பிட்டுக்கொண்டிருந்தது கண்ணை உறுத்தியது. அடக்க மாட்டாது, “ஏம்மா, பிரபா! வெளியில அலைஞ்சுட்டு வந்தது கசகசன்னு இல்லே? குளிச்சிருக்கலாமே!” என்று அவளைக் கேட்டபோது, தன்மேலேயே கோபம் எழுந்தது. கேவலம், ஒரு பெண்ணுக்கு மரியாதை கொடுத்துப் பேசவேண்டி வந்துவிட்டதே என்று குன்றிப்போனர்.

பட்டென்று அவள் புத்தியில் உறைக்கிறமாதிரி, `பொம்பளையா, லட்சணமா, வீட்டுக்கு வந்ததும் புருஷனையும், மாமனாரையும் கவனிச்சுக்கறதை விட்டுட்டு, இப்படி ஊர் சுத்திட்டு, அதிலும் வெக்கமில்லாம, கட்டின புருஷனையே வீட்டு வேலை செய்ய விட்டுட்டு, என்னமோ மகாராணிமாதிரி சாப்பிட ஒக்காந்துட்டியே! எழுந்திருடி, சரிதான்!’ என்று பொரியத் துடித்தார்.

ஆனால், `மகன்’ என்ற பெயரில் யமன் அல்லவோ அவருக்கு வாய்த்திருந்தான்! கல்யாணம் ஆவதற்கு முன்பே அவருக்கு வாய்ப்பூட்டு போட்டிருந்தான்: `நீங்க ஒங்க காலத்தையே நெனைச்சுக்கிட்டு, வர்றவளையும் விரட்டிக்கிட்டு இருக்காதீங்க. எனக்குப் பிடிக்காது!’

சிறு வயதிலேயே முரடன் அவன். அன்னம்மா சாம்பாரில் அதிகமாக உப்பு போட்டுவிட்ட குற்றத்துக்காக அவளை அடிக்க இவர் கையை ஓங்க, பதினாறு வயதுப் பையனாக இருந்த அவன், ஓங்கிய கையை இறுகப் பிடித்துக்கொண்டு, `அம்மாமேல இன்னொரு தடவை ஒங்க கை பட்டுச்சோ.., அதை வெட்டி எறிஞ்சுடுவேன், ஆமாம்!’ என்று உறுமியவன் ஆயிற்றே!

வயதான காலத்தில், வருவாயோ, வேறு போக்கிடமோ இல்லாத நிலையில், இவனைப் பகைத்துக்கொண்டால், யாருக்கு நஷ்டம்?

தலையை அளவுக்கு மீறி குனிந்தபடி சாப்பிடுவதாகப் பாவனை செய்தாலும், அந்தத் தம்பதியரிடையே உண்டான சங்கேதக் குறிப்புகளும், கண் சிமிட்டலும் அவருக்குத் தெரியாமல் போகவில்லை.

தன் தாம்பத்தியத்தில் மட்டும் ஏன் இப்படி — நினைத்து, நினைத்து ஆனந்தப்படும்படி — எதுவுமே நிகழவில்லை?

அன்னம்மா ஏன் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒத்துழைக்கவில்லை? மற்ற எல்லா விதத்திலும் அனுசரித்துப்போனாளே?

`உங்களால் என் உணர்ச்சிகளைக் கிளற முடியாது!’ என்ற வீம்பு பிடித்தவள்போல், மரக்கட்டையாய் படுக்கையில் கிடந்த மனைவி அவருடைய ஆண்மைக்கே சவால் விடுவது போலிருந்தது. அவளுடைய அப்போக்கு பொறுக்காதுதானே நொந்த மனதுக்கு ஆறுதல் தேடி, கண்ட பெண்களை நாடிப் போனார்!

அப்பெண்களும் அவரது ஸ்பரிசத்துக்காக ஏங்கிக் காத்திருந்ததுபோல் நடந்துகொண்டது தான் அள்ளிக் கொடுத்த காசுக்குரிய நடிப்பாக இருக்கும் என்று அவர் நம்பத் தயாராக இல்லை. இதமாகத்தான் இருந்தது.

தனக்கு மனைவியாக வாய்த்தது பெண் ஜன்மமே இல்லை என்று குமுறினார். அவள்மேல் விளைந்த இளக்காரமும், அது தோற்றுவித்த பலாத்காரமும் மேலும் வலுப்பட்டன.

கை கழுவியபடியே பிரபா திரும்பினாள். “இன்னிக்கு ஒரு வேடிக்கை,” என்று கணவனிடம் ஆரம்பித்தாள். “எங்கூட வேலை செய்யற ஜெயா இல்லே, அவ வீட்டுக்குப் போன் பண்ணினா — பிள்ளைகூட பேச. அதுக்கு மூணு வயசு. அம்மாகூட பேசமாட்டேன்னு அது அடம் பிடிக்க, இவ திரும்பத் திரும்ப போன் போட்டுக் கெஞ்ச..!” பிரபாவுக்குச் சிரிப்பு பொங்கி வந்தது.

அதிஷ்யமா இருக்கே!” வாயில் போட்டிருந்த கவளத்தை விழுங்காமலே அவளுடைய கதையில் ஆர்வம் காட்டினான் பாலு.

ஆமா!” நொடித்தாள். “கண்டிப்பு என்கிற பேரிலே இவ ஓயாம அந்தப் பையனை அடிப்பாளாம்.அதை எங்க எல்லார்கிட்டேயும் தினமும் பெருமையா சொல்லிக்கறது இருக்கே! இப்ப இவளுக்கு வேணும்கிறபோது, `ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக்க’ன்னா?”

கிழவருக்குச் சட்டென்று புரையேறியது.

இந்தச் சின்ன விஷயம் ஏன் தனக்குப் புரியாமல் போய்விட்டது? பெற்ற குழந்தையாக இருந்தால் என்ன, கட்டிய மனைவியாக இருந்தால்தான் என்ன, அன்பை நாம் முதலில் கொடுத்தால்தானே அதைத் திரும்பப் பெறமுடியும்!

மனைவியின் போக்கை நிர்ணயித்ததே தான்தான் என்று புரிந்தபோது, அந்த வேதனை அவ்வயோதிகர் முகத்தில் படர்ந்தது. அடிவயிற்றிலிருந்து இரும ஆரம்பித்தார்.

மெதுவாச் சாப்பிடுங்க, மாமா,” என்றாள் பிரபா கனிவுடன். “சாப்பிடறபோது நான் பேசியிருக்கக்கூடாது!”

(நயனம், 1993, மின்னூல் தொகுப்பு ,வல்லமை.காம்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *