வென்றிலன் என்றபோதும் –

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 8, 2023
பார்வையிட்டோர்: 1,310 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வென்றிலன் என்றபோதும் வேதமுள்ளளவும் யானும்
நின்றுளன் அன்றோ.. 
-கம்பரா. யுத்தகாண்டம், 

1 

பாடி வீட்டின் திட்டி வாசல் நிலை தட்டி வளைந்து நிமிர்ந்த வில்லின் நாண் வீறாப்புடன் நாத ஜங்காரம் செய்தது. 

நாணொலி கேட்ட தருமன் திடுக்கிட்டுப் போனான். பயத்தின் பீதி கம்பீரத்தில் பதுங்க எண்ணித் தவித்தது. “யாரது? கர்ணனா?” என்று வாய்விட்டுக் கேட்டுவிட் டான். எனினும் கேள்வியில் நாடி விழுந்து போயிருந்தது. கர்ணனிடம் தோற்றோடி வந்ததால் ஏற்பட்ட பயமும் பேதலிப்பும் நாக்கைக் கட்டிப்போட்டிருந்தன. 

“கர்ணன் இல்லை; அவன் காலன்” என்று கூறிக் கொண்டே, தோளிலிருந்து நழுவிய காண்டீபத்தை இழுத் துப் போட்டுக்கொண்டான் அர்ஜுனன். 

“நீயா, அவசரத்தில் -” என்று இழுத்த தருமன் பட் டென்று நாக்கைக் கடித்துக்கொண்டான். எனினும், முகத்தில் பேயறைந்தாற்போல் சவக்களை படர்ந்திருந்தது. நெஞ்சில் திமிறிய பீதியைப் புதைத்துவிட நினைத்த தருமன், அர்ஜுனா, கர்ணன் தொலைந்தானா?” என்று ஆத்திரத் துடன் கேட்டான். 

அண்ணனுடைய படபடப்பைக் கண்டு அர்ஜுனனின் உதடுகளில் புன்னகை வளைந்தது. “தொலையப் போகிறான். அதுவும் என் கையால்!” என்று கம்பீரமாகக் கூறி விட்டு, பக்கத்தில் கிடந்த ஆசனத்தில் அமர்ந்தான். 

எதிர்பார்த்த பதிலுக்கு எதிர்ப் பதில் கிடைத்ததும் தருமனுக்கு நிதானம் தவறியது. “கர்ணனைக் கொல்லு முன் பாசறையில் உனக்கு என்ன வேலை?” என்று எரிந்து விழுந்தான். குரலில் கரகரப்பும் உக்கிரமான ஆங்காரமும் கலந்திருந்தன. 

“வந்து-தங்களைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று தான்” என்று இழுத்தான் அர்ஜுனன். 

“என்னை எதற்காகப் பார்க்கவேண்டும்? வில்லேந்தத் தெம்பில்லை என்று சொல்லேன். பேடி! பேடிக்கு யுத்த வளப்பம் எப்படித் தெரியும்?” என்று சீறினான். அன்றைய தோல்வி தருமனின் நிதானத்தையும் மனத்தெளிவையும் மழுங்க அடித்திருந்தது. 

அர்ஜுனனுக்குத் தமையனின் சுடுசொல் அஸ்திரம் போல் தைத்தது. போருக்குச் செல்லுமுன் தமையனின் ஆசீர்வாதம் பெற்றுச்செல்ல வந்தவனுக்கு அண்ணனின் அலட்சியத்தைத் தாங்க முடியவில்லை. 

“நானா பேடி? தங்களைப்போல் களத்தைவிட்டு ஓடி வந்து, பாசறையில் பதுங்கிக் கிடக்கவில்லையே” என்று நிதானங்குலையாத குரலில் சொன்னான். 

அர்ஜுனனின் பதில் தருமனின் மனநிலையைக் காலை வாரிவிட்டது:”கர்ணனும் உன்னைப்போல் வில்லைத்தானே ஏந்துகிறான். பெண் வேட்டைக்காரனுக்குப் போர்முறை என்ன தெரியும்?” 

“அண்ணா! கரும்புக்கு அர்ஜுனன் பணிந்து விடுவான். ஆனால், கர்ணனின் கைவில்லுக்கு அர்ஜுனனும் பணிய மாட்டான். காண்டீபமும் பணியாது!” என்று கத்தினான் அர்ஜுனன். 

“போடா, உன் காண்டீபமும், நீயும். அன்று துரியோதனன் சபையில் ‘தனுவுண்டு காண்டீபம் அதன் பேர்!’ என்று சொல்லமட்டும் தெரிந்ததா? ஆண்மையற்றவனே!” என்று எதிர்த்தான் அண்ணன். 

“ஆம். அன்று பாஞ்சாலியைத் துகிலுரியும்போது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தீர்களே. இன்று கர்ண னுடைய அம்புக்கு அஞ்சி, பாசறையில் வந்து பதுங்கிக் கிடக்கிறீர்களே. உங்களுடைய தருமந்தான் இன்று எங் களைத் தட்டழிய விட்டிருக்கிறதே. இவை போதாதா?” 

திரௌபதியைப் பற்றிக் கிளறாதே. அவள் என் மனைவி – நம் மனைவி!” 

“கட்டிய மனைவியைக் காப்பாற்ற முடியாதவருக்கு மனைவி வேறா?” 

“அர்ஜுனா!” என்று முகத்தை நெரித்தான் தருமன். அர்ஜுனன் ஏறிட்டுப் பார்த்தான். அர்ஜுனனின் கை தன்னையுமறியாமல் காண்டீபத்தை இறுகப் பற்றி யது. பழைய நினைப்பில் நெஞ்சம் தயங்கியது; பதில் வரவில்லை. 

தருமனும் அயர்ந்து விட்டான். என்றைக்கோ செய்து விட்ட பாபத்தின் குறுகுறுப்பு நெஞ்சைக் குடைந்தது. பாண்டு வம்சமே நிர்மூலமாகட்டும். திரௌபதியை எத்தனை தடவை யாயினும் பங்கப்படுத்தட்டும். கௌர வர் கூட்டமே ஆட்சி செலுத்தட்டும். பாண்டு மரபில் ஒரு பேடியும் வாழ்ந்தால்-” என்று சலித்துப்போய் முனகி னான் தருமன். 

அர்ஜுனன் நிதானத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு, “அண்ணா, இன்றைய தோல்வி தங்கள் நிதானத்தை நிலை குலைத்திருக்கிறது. கர்ணன் மடிவது நிச்சயம். காண்டீ பத்தின் சேவைக்கு கர்ணனின் ரத்தந்தான் கடைசி ஆகுதி” என்றான். 

“போதும் உன் பேச்சு” என்று சினந்துகொண்டு எழுந்தான் தருமன். 

அர்ஜுனனுக்கு நிதானத்தின் பிடி தளர்ந்து விடும் போலிருந்தது. ‘அண்ணா’ என்று அழைக்க வாயெடுத்தான். 

“என்னை அண்ணன் என்று அழைக்காதே. இங்கிருந்து போகிறாயா, இல்லையா?’ என்று சினந்து குமுறினான் தருமன். 

அர்ஜுனன் எழுந்தான். அவனையுமறியாமல் அவன் காண்டீபமே “போதும். கண்களில் நீர் நிரம்பியது. தொலைந்து போகட்டும். தங்களுடைய உதாசீனக் கொதிப் பைவிட, கர்ணனின் பாணம் குளிர்ந்துதானிருக்கும்” என்று கூறிவிட்டு, காண்டீபத்தை எடுத்து முழங்காலில் கொடுத்து முறிக்கப் போனான். 

தருமன் அதைத் தடுக்கவில்லை. விறைப்புடன் நின் றான். மனசில் அத்தனை வெறி. 

“அர்ஜுனா!” 

அந்தக் குரல் காதில் விழுந்ததும் அர்ஜுனன் திடுக்கிட்டுப் போனான். நிமிர்ந்து பார்த்தான். வாசல் நடை கடந்து உள்ளே நுழைந்த கண்ணன் அர்ஜுனன் கையை எட்டிப் பிடித்தான். 

”உனக்கென்ன, பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்றான் கண்ணன். 

“எனக்கு மட்டுமில்லை, பாண்டவர்களுக்கே பைத்தியம் பிடித்துவிட்டது!” என்று கத்தினான் அர்ஜுனன். 

தருமனின் விறைப்பையும் அர்ஜுனனின் விரக்தியை யும் கணத்தில் உணர்ந்துகொண்டான் கண்ணன். 

“தருமா, என்ன நடந்தது?” என்று தருமன் தோளைத் தடவிக்கொண்டே கேட்டான். தருமன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. 

அர்ஜுனனே பதில் சொன்னான். “கண்ணா, போதும் இந்த யுத்தம். பீமனுடைய சபதமும் திரௌபதியின் 
கூந்தலும் முடிக்கப்பெறாமலே போகட்டும். இத்தனை நிந் னைக்குப் பிறகும் காண்டீபத்தைக் கைதொடவே கூசுகிறது” என்று கூறிவிட்டு, காண்டீபத்தை விட்டெறிந்தான். 

தரையில் விழுந்த காண்டீபம் அடிபட்ட பாம்பைப் போலத் துள்ளியெழுந்து படுத்தது. 

“அர்ஜுனா, என்ன இது?” என்று கூறிக்கொண்டே துவண்டு கிடந்த காண்டீபத்தைக் குனிந்து எடுத்தான் கண்ணன். பிறகு, “தருமபுத்திரா, யுத்தத்துக்குச் செல்லு முன் உன்னிடம் ஆசிபெற்று வரும்படி அர்ஜூனனை நான் தான் அனுப்பினேன். ஆசிபெற வந்தவனிடம் இப்படியா நடந்துகொள்வது?” என்று நயமாய்ச் சொன்னான். 

“கண்ணா, உன் வியாக்கியானமே தேவையில்லை என்று பேச்சைச் சுருக்கினான் தருமன். எனினும் குரலில் விறைப்பு குறைந்து தருமனுக்கு தலையும் தொங்கிப் போய் விட்டது. 

“அர்ஜுனா, தருமனுக்குத் தோல்வி வெறி குலைய வில்லை.சரி,நாம் போகலாம். இதோ பிடி வில்லை” என்று கூறினான். 

அர்ஜுனன் கை நீட்டவே மறுத்தான். 

“பிடி வில்லை!” என்று கடுமையாகச் சொன்னான் கண்ணன். 

“முடியாது. என் கை கூசுகிறது” என்றான் அர்ஜுனன். 

கண்ணனுக்கு அர்ஜுனனின் அலட்சியம் கோபத்தைக் கிளறியது. 

“அர்ஜுனா, அன்று நான் போதித்ததையெல்லாம் மறந்து விட்டாயா? இதோ,பிடி வில்லை. உன் குருவின் ஆக்ஞை. காண்டீபத்தைப் பிடி!” என்று ஆணையிட்டான், 

“வில்லை ஏந்தக் கற்றுக் கொடுத்தவர்தான் விரோதி வாய் விட்டாரே. இன்னும் என்ன இருக்கிறது?” 

“துரோணருக்கும் மகத்தானவன் நான். நான் உன் ஆத்ம குரு. நீ என் அடிமை.”

‘‘கண்ணா, பகைவன் யாராயிருந்தாலும் பார்க்கக் கூடாது என்றாயே. இன்று உடன் பிறந்த தமையனே என்னை விரோதிக்கும்போது?” 

“கர்ணன்…” என்று எடுத்த வார்த்தையைக் கண்ணன் விழுங்கிவிட்டான். பிறகு, “அர்ஜுனா, உனக்கு இன்னும் தெளிவேயில்லை. எல்லாவற்றிற்கும் காரண காரியம் நான். கடமையைச் செய்வதே உன் தொழில். அதன் பலனை அறிய உனக்கு அதிகாரம் கிடையாது.” 

அர்ஜுனன் தயங்கினான். 

“என் கடமைதான் என்ன?” என்று சலித்துக் கேட் டான். 

“கர்ணனைக் கொல்வது” என்றான் கண்ணன். பிறகு அர்ஜுனனைத் தட்டிக்கொடுத்து “வா, புறப்படு” என்று அழைத்தான். 

அவனையுமறியாமல் அவன் கை காண்டீபத்தை மீண்டும் பற்றிக்கொண்டது. 

“தருமா!” என்றான் கண்ணன். தருமனோ திரும்பக் கூடவில்லை. 

“அர்ஜுனா, உனக்கு நான்தான் சர்வமும். தருமனுக்கு இன்னும் வெறி தணியவில்லை. வா, போகலாம்” என்று இழுத்தான். 

காண்டீபத்தின் கழன்றுபோன நாணை ஏற்றினான் அர்ஜுனன். நாணேற்றிய விசைப்பில் நரம்பு முறைத்துத் தொனித்தது. 

கண்ணன் அர்ஜுனனை கைப்பிடியாக இழுத்துக் கொண்டே நடந்தான். வாசல் நடை கழிந்து வெளியில் செல்லவும் ‘அர்ஜுனா!” என்ற தருமனின் குரல் காதுகளில் விழுந்தது. 

கண்ணன் சிரித்தான். அர்ஜுனன் கழுத்தைக்கூடத் திருப்பவில்லை. 

2 – திரௌபதி 

அரண்மனை மேன்மாட முன்றிலில் நின்று அர்த்த மற்று வானைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மனசில் கவலை கள் மோதி மோதி நெஞ்சம் மரத்துப் போயிருந்தது. இறுகிப்போன இதயத்துக்குள்ளிருந்து குறுகுறுக்கும் நப் பாசையும், ஒதுக்கமுடியாத துயரத்தின் உறுத்தலும் என்னை நிலை கொள்ள விடாமல் அலட்டின. எனினும், கண்ணீர் சிந்தவோ, வாய் விட்டு அழுது நெஞ்சின் பளுவைக் குறைக் கவோ மனசில் தெம்பும் திறனும் இல்லை. 

காரணம் அன்றைய போர். ஒரு புறம் கர்ணன், என் காதலன்; மறுபுறம் அர்ஜுனன், என் கணவன். இருவரும் போர் புரிகிறார்கள். இருவரில் யார் விழுவார்கள்? அவர் கள் வீழ்ச்சியைப் பொறுத்துத்தான் என் வாழ்க்கையும் இருக்கிறது – இப்படியெல்லாம் நெஞ்சக் குகையில் எண் ணங்கள் வெந்து கொண்டிருந்தன. 

தூரத்தில் சங்கும் தாரையும் பயங்கரமாக ஒலித்தன. கிழிபட்டு வழிவிடும் காற்றில் வேகங் குறையாது ஹூங் காரிக்கும் அஸ்திரங்களின் ஓசையும் கேட்டது. எனினும் காது மரத்துவிடவில்லை. 

திடீரென்று ‘அப்பா, மகனே!’ என்று அலறும் சப்தம் காதில் விழுந்தது – அதுவும் எங்கள் அரண்மனையிலிருந்து! மாடத்திலிருந்து கீழே குனிந்து பார்த்தேன். குந்தி தேவி தலைவிரிகோலமாய் ‘அப்பா, மகனே!’ என்று கதறிக் கொண்டு ஓடினார். அந்தப் பரிதாபக் குரல் என் நெஞ்சில் பாய்ந்து அழுந்தியது. மகன்! – அர்ஜுனமகாராஜாதான் – இறந்துபட்டார் என்று மனசில் பட்டது. உடனேயே மனைவி என்ற பாந்தம் மனசைக் கொந்திற்று. குபீலென அழ நினைத்தேன். ஆனால் திறனில்லை. ஒன்றும் புரியாமல் நின்றேன். கணத்துக்குள் மாடமே நிலைபெயர்ந்து தாழ்வ தாக உணர்ந்தேன். அவ்வளவு மயக்கம். மாடத்தைவிட்டு இறங்கி, களத்தை நேரில் காண எண்ணினேன். இறங்கினேன். ஓடினேன். ஆனால் வழியில் எதிர்ப்பட்ட தாதி என்னைத் தடுத்து நிறுத்தினாள் : “அம்மா, எங்கு ஓடுகிறீர்கள்?”

“களத்திற்கு” என்றேன் நிர்விசாரமாய். 

“ஏனம்மா, அர்ஜுன ராஜா ஜெயித்துவிட்டார். கர்ணன் இறந்துவிட்டார்!” என்று கூறினாள் அவள். 

மனசில் விழுந்திருந்த முடிவிற்கு மாற்ற முரைக்கக்  கேட்டதும் என்னால் தாங்கவே முடியவில்லை. கர்ணன் இறந்துபோனார். அர்ஜுனன் இறக்கவில்லை. எனினும் குந்திதேவி ‘மகனே!’ என்று ஓடியதன் அர்த்தம்? ஒருவேளை இருவருமே…… 

‘இருவருமே’ என்ற உணர்ச்சி மனசில் பட்டதும் தலை தெறித்துச் சிதறுவது போலிருந்தது. 

களத்துக்கு வைத்த கால்கள் குளிர்ந்துவிட்டன. மயக் கம் போட்டு விழுந்துவிடுவேனோ என்ற பயம் நெஞ்சை வளைத்தது. அப்படியே அரண்மனைக்குள் ஓடிவந்து படுக் கையில் விழுந்தேன். விழுந்த வேகத்தில் நெஞ்சு திறந்து கொண்டதுபோல் இருந்தது. அழுவதைத் தடுக்க முடிய வில்லை. அழுதேன். யாருக்காக, எதற்காக என்பதையெல் லாம் உணர மனசில் தெளிவு இல்லை. 

கர்ணனின் மரணச் செய்தி மனசை ஊமையடியாய் அடித்துக் கிடத்திவிட்டது. அடி விழுந்த மனசில் நினைத்து நினைத்து எழும் வேதனை யுணர்வில் பழைய கனவு நினைவு கள் வடிவாகித் தேய்ந்து கரைந்து உருமாறிக் கொண்டிருந் தன. பூர்வ நினைவுகளை மறந்துவிடும் பாக்கியம் பெற்று விட்டால், இன்று நான் சிந்தனை முடுக்கில் சுற்றிச் சுழலும் சூத்திரப் பாவையாயிருக்க வேண்டியிராதே! 

இளமையில் அப்பா என்னிடம் வரும்போதெல்லாம் அர்ஜுனனைப்பற்றியே வருணித்துக் கொண்டிருப்பார். எனக்கு வயசு வரும் முன்னமே, என்னிடம், “கிருஷ்ணை, நீ யாரைக் கலியாணம் செய்துகொள்ளப் போகிறாய் தெரியுமா? அர்ஜுனனைத்தான். அவனுக்கென்றே உன்னை வளர்த்து வருகிறேன்” என்பார். ஆனால் அர்ஜுனனின் அழகைப்பற்றி நான் கற்பனை செய்துகொள்ளும் போதெல் லாம் உள்ளுக்குள்ளே குறுகுறுப்பும் இன்பக் கிளுகிளுப்பும் ஏற்பட்டாலுங்கூட, அப்பாவை முறியடித்து வெற்றி கண் டவர் என்னும்போது என்னையறியாமல் அவர்மீது குரோத உணர்ச்சிதான் ஏற்படும். 

அண்ணன் திருஷ்டதும்யுனனுக்கோ அர்ஜுனன் என் றால் பிடிக்கவே பிடிக்காது. அவனோ எப்போது பார்த் தாலும் துரியோதனனின் பராக்கிரமத்தைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பான். நான் அத்தினபுரி ராணி யாகிவிட வேண்டுமென்று அவனுக்கு ஒரே ஆசை. 

எனினும், அப்பா சிறு வயசிலிருந்தே விதைத்து வந்த அர்ஜுனனைப்பற்றிய எண்ணம் மனசில் உறுத்திக்கொண்டே தானிருந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகையில் வெந்து மடிந்தார்கள் என்ற செய்தி எட்டி யதும், அப்பாவுக்கு இடி விழுந்தாற் போலாய்விட்டது. எனக்கோ அர்ஜூனனும் எரிந்து சாம்பலாய்ப்போனார் என் பதைக் கேட்கவே சகிக்க முடியவில்லை. அரக்கு மாளிகை தகனச் செய்தியோடு அர்ஜுனன்மீது எனக்கிருந்த குரோத உணர்ச்சியும் வெந்து மடிந்தது. அர்ஜுனனின் மரணம் எனக்கு ஒரு பேய்க்கனவாகப்பட்டது. ஆனால் அந்தச் செய்தி, அர்ஜுனர் மறைந்தார் என்ற அழியாத உணர்ச்சி, மனசில் ‘தனிமை’யைச் சிருஷ்டித்துவிட்டது. சுயம்வரம் என்று கேட்டபோது மனசில் மீண்டும் தெம்பு எழுந்தது. பிடிப்பற்று, தாவுவதற்குக் கொம்பற்றுத் தவிக்கும் எனக்கு, சுயம்வரம் என்ற காரணத்தால் ஒரு பற்றுக்கோடு கிடைக்காதா?’ என்றுதான் நினைத்தேன். 

சுயம்வர மண்டபத்தில் வந்து நின்றபோது, அதுவும் எனக்கும் மணமகனுக்கும் இடையே வில்லையிட்ட அப்பா வின் கிருத்திருமத்தை நினைக்கும்போது, நான் கடைசி வரைக் கன்னியாகவே இருந்துவிட நேருமோ என்ற பயம் அலட்டியது. வில்லையும், லட்சியத்தையும் ஒதுக்கிவிட்டு என்னைக்கொண்டே சுயம்வரம் தேடச் சொல்லியிருந்தால், எனக்கிருந்த மனநிலையில் கர்ணனுக்குத்தான் மாலையிட்டிருப்பேன். 

மேலும், அர்ஜுனனுக்குப்பின் கர்ணன் ஒருவரால் தான் அந்த லட்சியத்தை அடிக்க முடியும் என்று பலரும் கூறிவந்த சொல், மண்டபத்துக்கு வருமுன்னமே கர்ணனைப் பற்றி மானசீகமாகக் கற்பனை செய்யத் தூண்டியிருந்தது. என்னை அடைவதற்குரிய பந்தயத்தில் ஒருவரும் வெற்றி யடைய மாட்டார்கள் என்றுதான் நினைத்தேன். வில்லை நாணேற்றவே திறனற்றவர்கள் மத்தியிலிருந்து கர்ணன் எழுந்து வந்து வில்லை அநாயாசமாகத் தூக்கி நிறுத்தி நாணேற்றிய சாமர்த்தியம் இன்றும் என் கண்முன் நிற் கிறது. கர்ணன் ஒருவர்தான் வில்லை நாணேற்றினார். அப் போதே என் கைமாலையும் நானும் ஏனோ துடியாய்த் துடித்தோம். 

கர்ணன் வில்லையும் வளைத்தார்.இன்னும் அரைக்கணத்தில் எனக்கு அவர் கணவராகி விடுவார் என்று எண்ணினேன். எல்லோரும் அப்படித்தான் நினைத்திருக்கவேண்டும். ஆனால், அந்தப் பாழும் வில்லோ துள்ளித் திமிறி கர்ணனைத் தட்டி வாரிவிட்டது. கர்ணன் ஏற்றிய வில்லின் நாணும் சுழன்று விழுந்து சுருண்டது. கர்ணனும் தோற்றார். 

அர்ஜுனனுக்குப் பின் கர்ணன் – அவருக்கும் இந்தக் கதி! என் கதியும் அந்த வில்லோடு இணைந்து விட்டதா என்று உள்ளம் தடுமாறிற்று. 

இந்த வேளையில் தான் பார்ப்பன வேஷம் பூண்டிருந்த அர்ஜுனன் எழுந்து அண்ணனிடம் அனுமதி கேட்டார். அர்ஜுனன் எழுந்ததும் சபையே வாய்விட்டு நகைக்க ஆரம் பிந்து விட்டது. வரிந்து கட்டிய பட்டத்தாரும், அரையில் இறக்கி முடிந்த துண்டுமாய் எழுந்து நின்ற அவர் வேஷத் தைக் கண்டு எனக்கும் சிரிப்பு வந்தது. கர்ணன் வளைக் காத வில்லை இந்தப் பிராமணனா வளைக்கப் போகிறான் என்று எண்ணியபோது மனம் குதித்தாலும், கர்ணனின் தோல்வியின் உறுத்தல் நிற்கவில்லை. 

ஆனால் அர்ஜுனனோ எவ்விதச் சிரமுமின்றி வில்லை நாணேற்றினார்; வளைத்தார். நிபந்தனைப்படி குறித்த லட்சியத்தையும் அடித்து விட்டார்! 

வாய்விட்டுச் சிரித்துக்கொண்ட மண்டபம் முழுவதும் மௌனத்தில் சமாதி யடைந்தது. எனக்கு என்னை உணரச் சக்தியில்லை. பக்கத்தில் நின்ற திருஷ்டதும்யுனனை நிமிர்ந்து, பார்த்தேன். அவன் தலை தொங்கிப் போயிருந்தது. 

நான் அர்ஜுனனைப் பார்த்தேன். அவருடைய பார்ப் பன வேஷம் என் கண்களை மழுக்கியது. 

அர்ஜுனன் சபையை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு ண்ணனைப் பார்த்து, ‘துருபத குமாரா” என்று அருமையாக அழைத்தார். 

குனிந்த தலை நிமிர்ந்து அண்ணன் என்னைப் பார்த்தான். பிறகு வாய் திறந்து சொன்னான்: “கிருஷ்ணை, அவருக்கு மாலையிடு.”

கையிலுள்ள மாலை நடுங்கி பூக்கள் உதிர்ந்தன. எனி னும் அவருக்கு மாலையிட்டேன். மாலையிட்டுவிட்டு கர்ணன் இருந்த பக்கம் திரும்பினேன். அங்கு அவரைக் காணவில்லை. 

சபை கலைந்தது. நானும் அர்ஜுனனுடன் நடந்தேன். சகோதரர் நால்வரும் பின்னே வந்தனர். குயவர் சேரி சென்றதும், புத்திரர் சொன்ன சொல்லுக்கு, ‘ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று குந்தி தேவி கூறியதும், நான் மீண்டும் மனமுடைந்தேன். குந்தி தேவியின் அறியா வார்த்தை இது என்று நானும் அப்போது நம்பினேன். ஆனால், இன்று கர்ணனின் ஜென்ம ரகசியம் வெளியான இன்றுதான் குந்திதேவியின் அந்தச் சொல் மிகவும் நிறுத் துச் சொன்ன சொல்லாகத் தோன்றுகிறது. 

‘ஐவருக்கும்’ என்றவுடன் என் நெஞ்சம் நடுங்கியது. அரண்மனைக்கு வந்தபின் அப்பா குந்தியின் முடிவைப் பல மாக எதிர்த்தார். தருமரோ தம் தாயின் நாவில் அதருமமே உதிக்காது என்று வாதித்தார். அப்பாவின் ஆட்சேபம் நிலைக்கவில்லை. 

ஐவருக்கும் நான் பத்தினியானேன். 

எனக்கு வாய்த்த ஐந்து கணவர்களும் என்னிடம் நடந்துகொண்ட விதம்தான் என்னைக் கர்ணனைப் பற்றிய சிந்தனைக்கு மீண்டும் இழுத்துச் சென்றது. இந்த ஐவருக் கும் மேலாக கர்ணனிடம்தான் எனக்கு மனசு ஒட்டக் கூடிய பாசம் இருந்தது. 

தருமபுத்திரன் ஒரு ரிஷிப் பிறவி. அவருக்கு மனைவி என்றால் சதி என்ற தெய்வீகப் பொருள். அவர் பள்ளி யறையில் வைத்துக்கொண்டுகூட, திடீரென்று நீதி சாஸ் திரம் போதிக்க ஆரம்பித்து விடுவார். பீமரோ காத லுக்கோ சல்லாபத்துக்கோ ஏற்றவரில்லை. இடிம்பைதான் அவருக்குச் சரியான மனைவி. வில்லை முறித்து என்னை மணந்த அர்ஜுனனுக்கு நான் பலரில் ஒருத்தி. அவருக்குச் சமயத் தில் ஒருத்தி வேண்டும். அது திரௌபதியானாலும், சுபத் திரையானாலும் ஒன்றுதான். நகுல சகதேவர்கள் என் கண்ணுக்கு கணவர்களாகவே தோன்றவில்லை. மதினியின் அன்பு அரவணைப்பில் ஒதுங்க எண்ணும் மைத்துனக் குஞ்சு களாகத்தான் தோன்றினர். 

இதனால் தான் இந்த ஐவரில் எவர்மேலும் அன்பு செலுத்த முடியவில்லை.உலகமும்,அவர்களும் என் பரிவையும் பச்சாத் தாபத்தையும் எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளட்டும். எனினும், எனக்கு கர்ணன் மேல்தான் நேர்மையான அன்பு படர்ந்திருந்தது. கர்ணன் நினைவுதான் என் இளமையைக்கூடக் கட்டுக் குலைக்காமல் காத்து வந்தது. இன்று கர்ணன் மடிந்தார். அப்படியானால் ஒட்டிக்கொண்டிருந்த என் வாழ்க்கைக் கனவும் இன்றோடு உதிர்ந்தது என்றுதான் கொள்ளவேண்டுமா?… 

படுக்கையில் படுத்து விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தேன். சுற்றுப்புறச் சூழ்நிலையைப்பற்றிய நினைவுகூட இல்லாமல் அழுதேன். திறந்து வைத்த நெஞ்சின் வழியாய் கட்டிக்கிடந்த சோகமெல்லாம் பீறியடித்தது. அழுவதில் சுகமிருந்தது; அழுதேன். 

“அம்மா, அம்மா!” என்று தாதி அழைத்த குரல் கேட்டது. 

கண்ணைத் துடைத்தவாறே எழுந்தேன். பக்கத்தில் தாதி நின்று கொண்டிருந்தாள். அவளிடம் என்னவென்று கேட்கக்கூடத் தெம்பில்லை; கழுத்தை மட்டும் நிமிர்த்தினேன். அவள் சொன்னாள்: 

“அர்ஜுன மகாராஜா வந்திருக்கிறார்.” 

“அர்ஜுனரா?’ என்றேன். 

அதற்குள் அர்ஜுனனே வாசலில் வந்து நின்றார்.. வெற்றி விஜயனாக வந்த வெறியில் என்னை வந்து அணைந்து கொள்வார் என்றுதான் நினைத்தேன். நானும் அவரை உற்சாகத்தோடு வரவேற்பேன் என்றுதான் அவரும் எதிர் பார்த்திருப்பார். 

இரண்டும் நடக்கவில்லை. அர்ஜுனன் வாசலிலேயே நின்றார். முகத்தில் களை இல்லை; ஆளை மயக்கும் புன்சிரிப்பு இல்லை. கர்ணனைக் கொன்ற களிப்பு இல்லை. நின்றார். நெடுமரம்போல் நின்றார். நான் அவர் பக்கம் சென்றேன். திரௌபதி, நீயும் அழுதாயா?…நான்தான் பாபி!’ என்றார் அவர். 

“பகையை முடிப்பது பாபமா?” என்றேன். 

“கண்ணன் களத்தில் உபதேசித்தது ஏன் என்று இப் போதுதான் புரிகிறது. கர்ணனைக் கொன்று விட்டேன். ஆனால் கர்ணன் என் அண்ணன்!” 

“அண்ணனா?” என்று அலறிவிட்டேன் நான். 

“ஆம், குந்திதேவியின் தலைப்புத்திரன். பிருதைக்கு துர்வாச முனிவர் உபதேசித்த மந்திரத்தை விஷப்பரீட்சை செய்ததன் விளைவு கர்ணன். அவன் தேர்ப்பாகன் மகனல்ல; சூரிய புத்திரன். நான் கிடந்த கருப்பையில்தான் அவனும் கிடந்திருக்கிறான். அவன் என் அண்ணன்! உடன் பிறந்த அண்ணன்!” என்று சொல்லிக்கொண்டே போனார் அர்ஜுனன். 

எனக்குத் தலை கிறங்கியது. “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றேன். 

“எப்படியா? குந்திமாதா களத்தில் கர்ணனை மடிமேல் போட்டுக்கொண்டு ஊரறியக் கதறுகிறாளே. உனக்குத் தெரியுமா?” என்றார். 

“கர்ணன் குந்தி புத்திரன்” என்று முணுமுணுத்தது என் வாய். 

“கண்ணனுக்கும் இந்த இரகசியம் முன்னமேயே தெரி யுமா?” என்று கேட்டேன். எனக்குத் துகிலளித்த கண்ண னுக்கு, கர்ணனை நான் விரும்புகிறேன் என்ற ரகசியமும் ஆதியிலிருந்தே தெரியும். குந்தியின் ரகசியமும் தெரிந் திருந்தால் – என்று என் உள்ளம் எண்ணிற்று. 

‘கண்ணனுக்கும் தெரியும். அதனால்தானே எனக்கு உபதேசம் பண்ணியிருக்கிறான்” என்றார் அர்ஜுனன். 

”பாவி!” என்று வாய்விட்டுக் கத்திவிட்டேன் நான். “கண்ணன் மட்டுமல்ல. குந்தி, நான் எல்லோருமே பாவிகள்” என்றார் அர்ஜுனன். 

”பாவி!” – என் வாய் மீண்டும் புலம்பியது. “திரௌபதி. நான் வருகிறேன்” என்று கிளம்பினார் அர்ஜுனன், நான் தடுக்கவில்லை. 

என் உள்ளத்தில் இத்தனை நாளும் மூடி மூடி வைத்த ‘பாபத்தின்’ உருவம் பிரம்மாண்டமாயிற்று; பயமுறுத் திற்று. ஐவருக்கும் மூத்தவர் கர்ணன்; பாண்டவர்களின் சகோதரர்; குந்தி புத்திரர். அப்படியானால், என் அதிர்ஷ் டம் ஒரு விரற்கடை தூரத்தில்தான் தவறிப் போயிருக் கிறது. கர்ணனை நானும் மணந்திருக்கக் கூடும். சிந்தனை யின் அலைமோதலை என்னால் தாங்க முடியவில்லை. அழுவதை என்னால் தடுக்க முடியவில்லை. மனசில் நினைத்து நினைத்து தலைதூக்கும் ஒரே எண்ணம்: 

‘கர்ணன் மட்டும் இப்போது உயிர் பெற்றெழுந்து வந்துவிட்டால்? அப்போதுதான் எனக்குச் சாந்தி பிறக்கும்!’ 

3 – தருமன் 

“கர்ணனுடைய பராக்கிரமத்துக்கும், நேர்மைக்கும், வள்ளண்மைக்கும் அவன் எங்களில் ஒருவனாக இருந் தால் -” என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி ஏற்படுவது உண்டு. 

எனினும் அவன் என் விரோதி; இன்று எங்களை போர் முகத்தில் எதிர்த்து நிற்பவன். 

அர்ஜுனனை உதாசீனம் செய்தது தவறுதான். ‘பேடி!’ – கொஞ்சமும் யோசிக்காமல்தான் கூறிவிட்டேன். கண்ணன் மட்டும் வந்திராவிட்டால் குருக்ஷேத்திரமே வேறு விதமாய் மாறியிருக்கும். அன்று கர்ணனிடம் தோற்று வந்ததால் ஏற்பட்ட பீதியின் மூட்டத்தில் என் அறிவு மயக்கம் போட்டுவிட்டது. இல்லாவிடில் அப்படி நடந்திருக்கவே மாட்டேன். 

கர்ணனும் மானுடன்தான். அவனை வெல்ல முடிய வில்லையென்றால்? அன்று திரௌபதியின் சுயம்வரத்திலும் கர்ணன் விழுந்து விட்டான். ஆனால் இன்றும் அர்ஜுன னுடைய காண்டீபத்தின் முன் விழுந்துவிடுவான் என்பது என்ன நிச்சயம்? ஆனால், கண்ணன் கைகொடுத்து உதவும் போது அர்ஜுனன் ஜெயித்தே தீருவான். ஜெயித்து விடு வான். 

தூரத்தில் ஏங்கிக்கொண்டிருந்த சங்கின் ஒலி பயங்கர மாக விரிந்து ஹூங்காரமாகச் சிலிர்த்தது. சங்கநாதத்தின் முழக்கத்தோடு தாரைகளின் ஓசையும் முழங்கிச் சங்க மித்து உள்ளத்தை உலுப்பிற்று. 

“பாஞ்ச சன்யமா முழங்குகிறது? வெற்றி முழக்கமா?…… அர்ஜுனன் ஜெயித்துவிட்டானா?…… கர்ணன் விழுந்தானா? பாண்டவர்களின் கலி விழுந்ததா?” 

நான் திகைத்தேன். 

பயத்தின் அலைகள் தேய்ந்து இற்று ஆச்சர்யத்தில் வடி வாகிக் கரைந்தன. தூரத்திலே தெரியும் அந்திவானத்தின் மேகக் கூட்டத்தின் ரத்தக் கொழுப்பு உள்ளத்தில் ஆத் திரத்தையும் வெறியையும் ஊட்டிற்று. எழுந்தேன். 

‘‘அரசே!’’ 

“யாரது?” என்று கேட்டுக்கொண்டே திரும்பினேன். வாயிலில் நின்றுகொண்டிருந்த வீரன் சொன்னான். கர்ணன் விழுந்துபட்டார்!”-வார்த்தைகள் முக்கித் திணறிப் பிறந்தன. “கர்ணன் இறந்தானா?’ என்று கேட் டேன். ரதத்திலேறிக் களத்துக்கு விரைந்தேன். 

களம் அமைதியாயிருந்தது. கர்ணன் விழுந்துபட் டான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டேன். கர்ணனைக் கண்டேன். 

கர்ணன் இன்னும் சாகவில்லை. தேர்க்காலின் அடியில் வர்மத்தில் பாய்ந்த வாளியைப் பிடித்தவாறு கிடந்தான். கர்ணனின் குனித்த வில் தேர்ப் பாதங்களில் சிக்கிக் கிடந் தது. மார்பில் புரண்ட மாலைகளை நனைத்து ரத்தம் பரவிப் பாய்ந்தது. முகம் வெளிறி, கண்களில் பூப்படர ஆரம் பித்திருந்தது. போர் வேகத்தில் சுவாச கோசங்கள் பெயர்ந்து மூக்கு வழியாக ரத்தம் வழிந்தோடிக்கொண் டிருந்தது. உலர்ந்த உதடுகளில் சாம்பல் படர்ந்தது. நெளியும் மலைப்பாம்பைப்போல் திரளும் புஜக் கோளங் களும், சுவாசமும் தளர்ந்து கொண்டிருந்தன. 

கண்கள் ஒளி மங்கி பூக்க ஆரம்பித்தபோதிலும், ஆழங் காணாத ஏக்கமும் வேதனையும் கண் கறுப்பில் பிரதிபலித்தன. 

அவனால் பேச முடியவில்லை. திடீரென்று கூட்டத் தைப் பிளந்துகொண்டு ஓடி வந்தது ஓர் உயிர்.வந்த வேகத்தில் விழுந்து கிடந்த கர்ணன்மேல் விழுந்தது, அந்த ஜீவன். 

“அம்மா, வந்துவிட்டாயா?” என்று வாய் திறந்து கூவினான், கர்ணன். வேதனை நெரிந்த உதடுகளில் புன்னகை குனித்தது. 

“அப்பா மகனே” என்று அலறினாள் அவள். 

”யாரது? கர்ணனின் தாயா? தேர்ப்பாகன் -‘” என்று சிந்திப்பதற்குள் அவளே நிமிர்ந்தாள். “கர்ணா, அன்று உனக்குத் தந்த வரத்தை மறந்துவிடவில்லை. இதோ, என் நெஞ்சின் பாரமும் உன் ஆவலும் தணியட்டும்” என்று கூறிக்கொண்டே கர்ணனுக்கு ஸ்தன்ய பானம் செய்தாள் அவள். 

நிமிர்ந்தவளைப் பார்த்தேன். அவள் என் தாய் குந்தி! என் தாய் குந்திதேவிதானா, கர்ணனின் தாய்?… 

அர்ஜுனன், பீமன், தம்பியர் எல்லோருமே திகைத் தனர். நான் நடுங்கிவிட்டேன். கண்ணனும் நின்றான். சிலையாய் நின்றான். 

குந்திமாதா மனப்பாரம் குறையும் வரையிலும் பிரலாபித்தாள், அழுதாள், அலறினாள், விழுந்தாள், புரண்டாள்! 

‘கர்ணன் குந்தி புத்திரன்; சூரிய புத்திரன், என் அண்ணன்!’- இவ்வளவும் புரிந்துவிட்டது. 

“அண்ணா!” என்று கர்ணனின் காலடியில் விழுந்தேன். அதற்குள் கர்ணன் இறந்துவிட்டான். என் தலைக் கிரீடம் தழுவி உருண்டு அந்தச் சடலத்தின் காலடியில் புரண்டது. 

கர்ணன் என் சகோதரன், குந்தியின் புதல்வன் – இந்த உண்மை என் மனசைப் பிய்த்துக் குடைந்தது. 

கர்ணன் என் விரோதி; எனினும் என் அண்ணன்! 

“கடைசியில் சகோதர ஹத்திதானா பாண்டவர்களைச் சூழ வேண்டும்? கர்ணன் மட்டும் உயிரோடிருந்தால், இந்த ராஜ்யத்தையே அவன் காலடியில் அர்ப்பணிப் பேனே!” என்று எண்ணினேன். பக்கத்தில் கண்ணன் நின்றான். நான் அவனைப் பார்த்தேன். அவன் சொன்னான்: 

“தருமா, வருந்தாதே. கர்ணன் கதை முடிந்தது!”

4 – கண்ணன் 

யார் கதை முடிந்தது? 

என் கதைதான். 

மகாபாரதம் என் கதை. 

களரவ பாண்டவ மரப்பாச்சிகளுக்கு நான்தான் சூத்திரதாரன். அவர்களை நான்தான் ஆட்டம் கண்டேன்; நானும் ஆடினேன். இந்திரன், விதுரன், குந்தி,தருமன், திரௌபதி, துரியோதனன் எல்லோருமே என் கைப் பொம்மைகள். 

என் மன விகாசத்தின் பரந்த வெளிதான் குருக்ஷேத் திரம். அதில் இரு சக்திகள் மோதின. அதற்கு பாரத வம்சம் எல்லாம் கருவிகள் -கர்ணன் மத்திய பாத்திரம். 

குந்தி இளமையில் செய்துவிட்ட பாபத்தைப் புதைத்து விட எண்ணினாள். கர்மாவின் கழுத்தை நெரித்துவிட நினைத்தாள். ஆனால், இன்று அது மீண்டும் தலை நீட்டி, அவள் உள்ளத்தையே பலி கொண்டது. ஜென்ம ஜென் மாந்திரத்துக்கும் கர்மா தன்னைத் தொடரும் என்பதை, அன்று – பிருதையாக இருந்த அன்று – குந்தியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. 

அர்ஜுனனின் மமதை கர்ணனின் மறைவோடு மடிந்தே தீரும். திரௌபதி – பாவம்!அவளும் கர்ணனை உள்ளத்தினுள்ளேயே, கொன்று விடவேண்டியதுதான். 

குந்தியின் பாவம், திரௌபதியின் காதல், அர்ஜு னனின் கர்வம், தருமனின் மடமை, துரியனின் கயமை எல்லாம் கர்ணனின் மரணத்தோடு மாயவேண்டியவை தாம். 

கீதை உபதேசத்தைப் பெற்றவன் அர்ஜுனன்தான். ஆனால் கீதா போதனையின் கண்கண்ட சாதனைச் சாட்சி இந்தக் குருக்ஷேத்திரம்! 

குருக்ஷேத்திரத்தில் விளையாடியவர்கள் எல்லோரும் என்னுள் அடங்கியவர்கள். நானே ஆட்டுவித்தேன். நானே ஆடினேன். 

கொன்றவனும் நான், கொல்லப்பட்டவனும் நான். இதுதான் என் அலகிலா விளையாட்டு! 

5 – அர்ஜுனன் 

கர்ணன் என் அண்ணன்; என் எதிரி. 

இந்த உணர்ச்சியை என்னால் லகுவில் ஒதுக்கிவிட முடியவில்லை. காரண காரியங்களுக்கு மூலமான கண்ணனின் விளையாட்டு என்று மானசீக பக்குவத்தோடு கர்ணனின் மரணத்தை விலக்கிவிடவும் முடியவில்லை. 

கர்ணன் என் எதிரி. இளமை முதல் அவனைப் அகைத்தே வந்திருக்கிறேன். இருவர் கையிலும் வில்லேறிய நாளிலிருந்து ஒருவருக்கொருவர் விரோதிதான். 

இன்று நான் கர்ணனைக் கொன்று விட்டேன். எனினும் அவனை நான் வென்றதாகவே எண்ண முடியவில்லை. 

கர்ணனின் மரணத்துக்காக இந்திரனும் கண்ணனும் அவனிடம் பிச்சை ஏற்கவேண்டி யிருந்தது. தான் பெற்ற பிள்ளையிடம் தாய்மையுணர்ச்சியைக் காட்டி ஏமாற்றி, நாகாஸ்திரப் பிரயோகத்துக்கு, குந்தி தடை விதிக்க வேண்டியிருந்தது. கடோத்கஜனை இந்தச் சூதில் பணயம் வைத்து வெட்டுக் கொடுக்க வேண்டி வந்தது. 

கர்ணனைக் கொன்றுவிட்டேன். எனினும் வெற்றி எனக்கல்ல. ஆவைப் பறிகொடுத்த அந்தணன் சாபமும், குந்தியின் வரமும், இந்திரனின் பிச்சையும், கடோத்கஜம் பணயமும் கர்ணனை நிராயுதனாக்கி விட்டன. 

நான் வெற்றி யடைந்தேனாம்! 

பாரதம் முடிந்துவிட்டதாம்! 

வளைந்து நிமிர்ந்து உயிர்களை வதைத்த காண்டீபம் கர்ணனின் ரத்தத்துக்காகத் தவம் கிடந்தது. எனினும் காண்டீபத்துக்குப் புகழ் கர்ணன் புகழேதான். 

கர்ணன் இல்லாவிட்டால் காண்டீபம் ஏது? அர்ஜுனன் எங்கே? எனக்கு வில்லுக்கு விஜயன் என்ற பெயரும் ஏது? கர்ணன் புகழை இன்று நான் என் புகழாக்கிக்கொண்டேன். ஆனால் இதற்கு இத்தனை பேரின் உதவியா? 

இன்று காண்டீபம் அயர்ந்து கிடக்கிறது. கர்ணனின் வாழ்வுதான் காண்டீபத்தின் வாழ்வு. கர்ணன் இறந்தால், காண்டீபமும் தானாகவே இறந்துபடும். கர்ணன் போன்ற எதிர்க்குறி இல்லாவிட்டால், காண்டீபத்தை வைத்துக் கொண்டு வேட்டையா ஆடுவது? கர்ணனின் மரணத் தோடு காண்டீபத்தின் நாணும் அறுந்தது ; அதன் வாழ்வும் அறுந்தது. 

காண்டீபம் வாழ வேண்டுமென்றால் கர்ணன் வாழ வேண்டும். கர்ணன் வாழ்ந்தால்தான் நான் வாழ முடியும். இல்லையெனில், நான் வில்லும் சுமக்கப் பிறந்தவன்தான்! 

குருக்ஷேத்திரக் களத்தின் ரத்தச் சேறு காய்ந்து கருகி, மண்ணோடு மண்ணாய்ப் போய்விட்டது. நரிகளும் கழுகுகளும் குகைகளிலும் வனங்களிலும் அடங்கிவிட்டன. கீறிப் பிளவுபட்ட பூமியில் அக்கினிக் கொதிப்பு அடங்கி, ஊற்றுக்கள் சுரந்தன. கலங்கிய ஆகாசத்தின் மூட்டம் தெளிந்து, வானம் நிர்மலமாயிற்று. 

இன்று இந்திரப் பிரஸ்தத்தில் தருமன் ராஜ்ய மேற்றுக் கொள்கிறான். 

பிதுர்க்களுக்குக் கடன் செய்து கண்ணீர் சிந்திய தருமனுடைய அதே கைகளில் இன்று மகுடாபிஷேக தீர்த்தம் வழிந்தோடியது. அன்று கர்ணனின் காலடியில் உருண்டோடி மண்ணில் புரண்ட கிரீடம் இன்று தருமனின் சிரசில் ஏறியிருந்தது. 

தருமன் இன்று பாரதத்தின் அரசன். ஏகசக்கராதிபதி. 

முடிசூடி அமர்ந்திருந்த தருமபுத்திரன் சந்நிதியில் குறுநில மன்னர்களும், சிற்றரசர்களும் தங்கள் காணிக்கைகளைச்  செலுத்தினார்கள். வைரங்கள், ரத்தினங்கள், முத்துக்கள், பட்டு, தந்தம் – என்னவெல்லாமோ குவிந்து கொண்டே இருந்தன. 

குந்தி புத்திரனை ஆசீர்வதித்தாள். கண்ணன் பாராட்டினான். தம்பியர் ஒவ்வொருவரும் அண்ணன் திருவடியில் வந்தனம் செலுத்தினர். கடைசியில் அர்ஜுனன் வந்தான். கையில் நாணவிழ்த்த காண்டீபமும் இருந்தது. வந்தவன் வணங்கவில்லை; நின்றான். 

“அர்ஜுனா, ஏன் வாடியிருக்கிறாய்?” என்று தருமராஜா கேட்டான். 

“அன்று பாசறையில் தாங்கள் பேசியது ஞாபக் மிருக்கிறதா?” 

“கர்ணன் கொலையை நினைக்கிறாயா?” 

“ஆம். காண்டீபத்தின் சேவைக்கு கடைசி ஆகுதி கர்ணன் என்றேனே. காண்டீபம் குனிந்து நிமிர்ந்தது கர்ணனும் மாண்டான்!” என்றான் அர்ஜுனன். 

“பழம் வினையை ஏன் நினைவுக்கிழுக்கிறாய்?” 

“அண்ணா, உங்களுக்குத் தமையன் இறந்தானே என்ற வருத்தம். எனினும் தம்பியர் நாங்கள் இருக்கிறோம். குந்தி மாதாவுக்கு தலைப் புத்திரன் மடிந்தானே என்ற துயரம். எனினும் ஐவர் இருக்கிறோம். ஆனால் எனக்கோ ஒரே எதிரி. அவன் போய் விட்டான். காண்டீபத்தின் வலிமைக்குப் பதில் சொல்லக் கூடியவன் கர்ணன் ஒரே ஒருவன்தான். அவன் போய்விட்டான். இன்று நான் தனியன்! தனியன்” என்று கதறினான் அர்ஜுனன். 

தருமன் திகைத்தான். 

தன்னைத் தேற்றிக்கொண்ட அர்ஜுனன் “யுதிஷ்டிரா, தங்கள் முன்னிலையில் இதோ என் கைக் காண்டீபத்தை அர்ப்பணித்து விடுகிறேன்” என்றான். 

தருமன் சிந்தித்தான். அர்ஜுனன் இன்னும் தன் பகைமை உணர்ச்சியைக் கொல்லவில்லை என்று ஆத்திரப் பட்டான். அர்ஜுனனுடைய உண்மையான வீர உணர்ச் சியை அவனால் உணர முடியவில்லை. 

தருமன் தன்முன் வைத்த காண்டீபத்தை கோபத் தோடு எடுத்து விட்டெறிந்து விட்டுச் சொன்னான்: 

“தரும சாம்ராஜ்யத்தில், வில்லுக்கு வேலையேது?”

பக்கத்து மண்டபக்காலில் மோதிக் கீழே விழுந்தது, காண்டீபம். அதில் நாணின் நாத ஜங்காரம் இல்லை, விறைப்பு இல்லை; வீரியம் இல்லை; உயிர்ப்பும் இல்லை. 

பக்சத்தில் நின்ற கண்ணன் சிரித்தது மாத்திரமே கேட்டது. 

– 1946 – ரகுநாதன் கதைகள் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *