வீரபாண்டிய கட்டபொம்மன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: December 10, 2022
பார்வையிட்டோர்: 6,091 
 
 

என்னால் முடிந்தது!

கட்டபொம்மன் சரித்திரத்தை அஸ்திவாரத்தடம் புர ளாது கோர்ப்பது எத்தனை சிரமமென்பது, அதில் ஈடுபட்டோர்க்குத்தான் தெரிதலாகும். அவ்வகையிலே யான் எந்த அளவு தேறியிருக்கிறேனென்பது-தூத்துக்குடி நகரத்தில் மட்டும் இந்நாடகம் ஆறு முறைகள் அமோக ஆரவாரத்துடன் நடைபெற்றிருக்கிறதென்பதிலிருந்து தெரிய ஏதுவாகும். இந் நாடக ஏடை நீங்கள் படிக்கத் துவங்கிவிட்டால் போதும்; கடைசி வாக்கியம் முடிய, நீங்கள் எவ்வுணர்ச்சியிலீடு பட்டு தத்தளித்தீர்களென்பதை உங்களுக்கே சொல்ல வராது! அந்த அளவிற்கு சுதந்திரச் சிறகடித்து ஓட்டமாய் ஓடும்!

– சா.சண்முகவேலு, நாடகாசிரியர்.

காட்சி 1 – 13 | காட்சி 14 – 33

மறை ஒலி

[நிகழ்ச்சியில் பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டையைக் காட்டி, மறைவாகத் திரைக்குப்பின் இருந்து பேசுதல்]

ஒலி: ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் உலகிலே அவதார புருஷர்கள் தோன்றி மறைகிறார்கள்! ஆம்!! அவர்களின் பரம்பரையிலே அவதரித்து, முடிதரித்து, தமிழ் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு, பலனற்று, வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டு, துடி துடித்து உயிர் நீத்த வீரப் பெருமன்னன் தான் “வீர பாண்டிய கட்டப்பொம்மன்”.

இவர், சுமார் 16-வருடங்களுக்கு முன்னால், பாஞ்சையை மிக வாஞ்சையோடு அரசாண்டு வரும் போது இருந்த கோட்டைதான் இந்தக் கோட்டை.. அன்று இருந்த நிலையில், இன்று இந்த இடம், கோட்டையின் அஸ்திவாரத்தைக்கூட காட்டாமல் மறைத்துக் கொண்டது, தேசத் துரோகிகளின் வஞ்சகத்திற்குப் பயந்து, அன்று ஆடல் பாடல்களையும், வேடிக்கை விநோதங்களையும் வீணாகானம் செய்துகொண்டிருந்த இந்த இடம் – இன்று ஒடை மரங்களையும், ஓநாய் ஊளைக் குரலையும் தான் உள்ளடக்கிக் கொண்டிருக் கிறது என்றால், அது நம் நாட்டைப் பொறுத்த துர திருஷ்டம் தான்.

நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த இந்நாளிலே, இந்நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு, பலனற்று, மாண்டுபோன, மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் ஞாபகமாக நினைவு நாள் கொண்டாடுவார்களா தியாகி கள்? வெள்ளையரின் குண்டுகளால் இடிந்து, சரிந்து மண்ணோடு மண்ணாக மறைந்து போன, பாஞ்சாலங்குறிச்சியை ஒரு பூஞ்சோலையாக மாற்றி, அதைச்சுற்றி கோட்டை ஒன்றைக்கட்டி, அதன் நடுவே “வீரபாண்டிய கட்டபொம்மன்” சிலை ஒன்றை நட்டு, “எட்டுத் திக்கும் புகழ்பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் இதுதான்” என்று வெட்டிமுரசு கொட்டும் நாள் வருமா? மாண்டுபோன இம்மன்னனின் ஆத்மா சாந்தியடையும் வகைக்காகவாவது தியாகிகள் இதைச் செய்வார்களா? செய்வார்களா இதை?

[பேச்சு முடிந்ததும், கோட்டை நிழலை நிறுத்தி, திருச்செந்தூர் கோபுர நிழலைக் காட்டி, மணி ஓசை கிளப்பி, பிறகு மணி மண்டப நிழலைக் காட்டி, மணி யோசை ஒலித்துக்கொண்டேயிருக்க, நிழல் மறைதல். மணியோசை லேசாக கேட்டுக்கொண்டேயிருக்கிறது]

காட்சி 1

இடம்: ஊர்ப்பொது வீதி

உறுப்பினர்: கணவன், மனைவி, ஒரு பையன்

நிலைமை: மூவரும் வீதியைப்பார்த்தபடி மகிழ்ச்சியுடன் வருகின்றனர்.

கணவன்: (மனைவியைப் பார்த்து) நம்ம நாடு நல்ல நாடு!

மனைவி: பஞ்சமே வராத பாரத நாடு, மச்சான் !

பையன்: தாத்தா! தாத்தா! என்ன தாத்தா இது விடாமே மணிச்சத்தம் கேட்குதே?

கணவன்: இதா! இதுதான் திருச்செந்தூரிலே முருகப்பெருமானுக்கு நடக்கிற காலை பூசையை, நம்ம கட்டபொம்மு மகாராசாவுக்கு தெரியப்படுத்த அடிக்கிற மணி! தெரிஞ்சுதா?

பையன்: போ தாத்தா! நீ பொய் சொல்றே!

மனைவி: ஆமாங்க, திருச்செந்தூரு எங்கேயிருக்கு, பாஞ்சாலங்குறிச்சி எங்கேயிருக்கு, ரெண்டுக்கும் எம்மாந்தூரமிருக்கு? அங்கே அடிக்கிற மணி இங்கே கேக்குதுன்னு பிள்ளையை ஏய்க்கிறீங்களே!

கணவன்: அட போக்கிரீங்களா! நம்ம ஆத்தா ஆணையா நிசமாகத்தான் சொல்றேன். (என்று இருவருடைய தலையிலும் கை வைத்து அடித்தல்)

மனைவி: ஆமா, அது எப்படி மச்சான் கேக்கும்?

கணவன்: கேக்கும்! கேக்கும்!! அதுக்குத் தாண்டி திருச் அதுக்குத்தாண்டி செந்தூரிலே இருந்து, நம்ம ராசா அரண்மனை வரைக்கும் கொஞ்ச கொஞ்ச தூரத்துக்கு ஒவ்வொரு மணியாகக் கெட்டியிருக்கிறாரு! முதல்லே முருகன் சந்நிதியிலே பூசை ஆரம் பிச்சதும், திருச்செந்தூரிலே முதல் மணி அடிக்கும். அந்த சத்தம் கேட்டு அடுத்த மணியடிக்கும். இப்படியே ஒவ்வொரு மணியா அடிச்சி, அடிச்சி அரண்மனை வரை கேக்கும். இந்த சத்தத்தை ராசா கேட்டு, ராசாவும் அரண்மனையிலே பூசை செய்வாரு! இப்பக்கூட பூசை செஞ்சிக்கிட்டுத்தான் இருப்பாரு.

(திருப்புக் காட்சி)

இடம்: கட்டபொம்மன் பூஜை அறை.

உறுப்பினர்: கட்டபொம்மன், சக்கம்மாள்.

நிலைமை: முருகப் பெருமான் விக்கிரகத் திற்கு முன் பாட்டுப்பாடி இருவரும் வணங்கிக்கொண்டிருக்கின்றனர். பாட்டு முடிந்ததும் மணியோசை கேட்டல்.

சக்கம்மாள்: சுவாமி! மணியோசை கேட்கின்றது. திருச் செந்தூரிலே முருகனுக்குப் பூஜை நடக்கிறது போலும்!

கட்டபொம்மன்: ஆம் தேவி! முருகனைப் பிரார்த்தித்துக் கொள்.

(இருவரும் கைகூப்பி வணங்குதல்)

கட்ட: ஏ! செங்கதிர்ச் செல்வனே! சேவற்கொடியோனே! உன்னருளால் இந்நாட்டு மக்கள் எந்நாளும் நல்வாழ்வு வாழ அருள்புரிய வேண்டும் பிரபு!

(சக்கம்மாள் தீபாராதனை காட்டி அரசரிடம் கொடுத்தல். அவர் அதைத்தொட்டு வணங்குதல்)

காட்சி 2

இடம்: அரசியல் அரங்கம்.

உறுப்பினர்: கட்டபொம்மன், ஊமைத்துரை, மந்திரி தானாபதி, சபையோர், புலவர்கள், வெண்சாமரை வீசும் பெண் கள், நடனமாது, ஆலன் துரை.

நிலைமை: சிம்மாசனத்தில் அரசர் கட்ட பொம்மன் அமர்ந்திருக்க நடன மாதுக் கள் நடன மாடுகின்றனர். நடனம் முடிந்ததும் சேவகன் ஒருவன் உள்ளே வந்து மகாராஜாவை வணங்கி நிற்கிறான்.

சேவகன்: மகாராஜா! வெள்ளையன் ஒருவன் வந்திருக்கிறான். அவனுக்கு கிழக்கிந்தியக் கம்பெனியாம்; சமூகத்தைப் பார்க்கணுங்களாம்.

கட்ட: யாரது? வெள்ளையனா! எங்கு வந்தான்? சரி, அழைத்து வா உள்ளே.

(சேவகன் வணங்கி விட்டுப் போகிறான்)

கட்ட: தானாபதியாரே! எட்டப்பர் இப்போது எப்படி இருக்கிறார்?

தானாபதி: அவர் கொட்டம் கொஞ்சம் அடங்கி விட்டது பிரபு!

(ஆலன்துரை சபையை நோக்கி வந்து ஆங்கில முறையில் வணங்குகிறான்)

கட்ட: வாரும்! நீர் யார்? எங்கு வந்தீர்?

ஆலன்: அரசே! வாணிபம் செய்வதில் நானிலத்தில் புகழ் பெற்றதும், காலாட்படை, குதிரைப்படை, துப்பாக்கிப்படை, பீரங்கிப்படை முதலியன கொண்டு-எதிரிகள் தொலைய வீரமுழக்கம் செய்து வெற்றி முரசு கொட்டும் தீரர்கள் பலர் நிறைந்ததுமான கிழக்கிந்தியக் கம்பெனி கிளைச்சங்கம் திருநெல்வேலியிலிருந்து வந்த தூதன் யான்! எதிரிகளுக்குக் காலனாம் என் பெயர் ஆலன்.

கட்ட: வெறும் வார்த்தை! தற்புகழ்ச்சி! வந்த காரியம் என்ன?

ஆலன்: அரசே! இத்தேசம் கம்பெனியாருடையது. ஏனையப் பாளையப்பட்டுக்காரர்கள் எல்லாம் குறையேதுமின்றி திறை செலுத்தி வருகின்றனர். ஆனால் தங்களது கப்பம் மட்டும் ஆண்டு ஆறு ஆகியும் இன்னும் வந்தபாடில்லை. தாங்கள் கம்பெனிக்கு கட்டவேண்டிய கப்பத்தை ஆண்டுக்கு ஆயிரம் பொன்னாக, ஆறுஆண்டுகளுக்கும் ஆராயிரம் பொன் கொடுத்து அடிபணிந்திருக்க வேண்டும் என்பது கம்பெனியாரின் கட்டளை.

கட்ட : நிறுத்து, உன் நிதானமற்ற வார்த்தைகளை! பொறுத்துப் பொறுத்துப் போனால் குணம் தெரியாது எதிர்த்து எதிர்த்துச் சீறுகின்றாய்! பாஞ்சாலங்குறிச்சியான் பயங்கொள்ளியல்ல; எதையும் பட்டவர்த்தனமாகப் பேசி முடிவு செய்துகொள்ளும் பட்டத்தரசன்! நன்றாயிருக்கிறது.. வரிகேட்க வந்த வகையை நினைக்குந்தோறும் சிரிப்புத்தான் வருகிறது. (சிரிப்பு) நாற்பத்தேழு தலைமுறையாக நாங்கள் இந்நாட்டை ஆண்டு வருகிறோம். யாரும் யாருக்கும் இதுவரை வரி செலுத்தின தில்லை. இப்போது எங்கிருந்தோ இங்கு வந்தவனுக்கு வரி!

ஆலன்: இப்போது இந்த நாடு எங்களுக்குச் சொந்தம்!

கட்ட : எந்த நாடு உங்களுக்குச் சொந்தம்? நீங்கள் பிறந்த நாடே உங்களுக்குச் சொந்தமில்லாமல், பிழைக்க வழியில்லாமல் அந்நிய நாட்டை அண்டிவந்து வியாபாரம் செய்ய வந்த வணிகனுக்கு வையகம் ஆளும் உரிமை! திறமை இருந்தால் என்னிடம் வரி வாங்கும் உரிமையைப் பார்த்துக் கொள்கிறேன். நீர் போம்.

ஆலன்: வீண் வார்த்தை பேசி வம்பு விளைவித்துக்கொள்ள வேண்டாம். கும்பினிப்படையை எதிர்ப்பது முடியாத காரியம். ஏன், இந்த ஆலன் ஒருவனே போதும், உங்கள் அனைவரையும் அழிக்க!

ஊமை: என்ன சொன்னாய்? நீ ஒருவனே போதுமா! முதலில் உன்னை முடித்துக்கட்டி விடுவேன். எச்சரிக்கை!

ஆலன்: ஆலன் காலன் என்பது நினைவிருக்கட்டும்!

ஊமை: ஆலன் காலனாகலாம்! ஆனால் அக்காலனையும் காலால் எட்டி உதைத்த வேலன் தந்தை இவ்வேந்தன் என்பதை மறந்துவிட வேண்டாம்!

ஆலன்: வீண் அட்டகாசம் வேண்டாம். வரிப்பணம் கொடுக்க முடியுமா, முடியாதா?

கட்ட : என்ன! வரிப்பணமா கேட்டாய்? வரிப்பணம் என்று கேட்ட உன் வாயை என் வாளுக்கு இரையாக வாங்கியிருப்பேன். ஆனால் தூதன் என்ற காரணத்தால் உன்னை சும்மா விட்டிருக்கிறேன். உயிர்மீது ஆசையிருந்தால் ஓடிவிடு இவ்விடத்தை விட்டு. தூது வந்தவனது உயிரை வாங்கிவிட்டான் என்னும் வன்பழிக்கு அஞ்சி இதுவரை பொறுத்திருந்தேன். உன் இனத்தோடு நீ சேர வேண்டுமென்ற எண்ணமிருந்தால், மரியாதையாகத் தப்பி ஓடி விடு! (ஆலன்போகத் தயங்குதல்)

கட்ட: என் தயங்குகிறாய்! உன்னை ஒருவரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள். தைரியமாகப் போ! (ஆலன் பயந்து மெதுவாகப் போதல்)

கட்ட: முன்னே போகச்சொல்லி பின்னே வந்து பேடித்தனமாக வெட்டி வீழ்த்தும் உங்களைப்போன்ற கோழையல்ல தமிழன! தைரியமாகப் போகலாம். போ! வரிப்பணம் எதுவும் கொடுக்க முடியாது என்று கண்டிப்பாகக் கூறி விடு.

காட்சி 3

இடம்: கம்பெனியார் சபை. (திருச்சி)

உறுப்பினர்: கலெக்டர் எட்வர்ட், வெபு துரை, ஜாக்ஸன் துரை, ஆலன் துரை.

நிலைமை: எட்வர்ட் துரையின் தலைமையில் சபை கூடியிருக்கிறது. ஆலன் துரை ஆங்கில முறையில் வணங்கி நிற்கிறான்.

எட்வர்ட்: வாரும் ஆலன்! போன காரியம் என்னவாயிற்று?

ஆலன்: கட்ட பொம்மனுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. வரி கேட்கப் போன என்னையும் வாளுக்கு இரையாக வாங்கிவிடுவேன் என்று பயமுறுத்திவிட்டான். இனி நாம் சும்மா இருப்பதில் பயனில்லை.

எட்: ஜாக்ஸன், என்ன செய்யலாம்?

ஜாக்: பாண்டியன்! அவனைச் சும்மாவிடக்கூடாது. வரிப்பணம் கேட்கப் போனவனையும் வாய்ப் பேச்சால் அடித்து விரட்டி விட்டான் வீணன். சுத்தப் பொய்யனாக இருக்கிறான். இவனை இப்பொழுதே அடக்காவிட்டால், கும்பினியார் நிலை குலைந்து போகவேண்டியதுதான். தன் நாட்டின் அருகே யுள்ள எட்டப்பன் என்பவனுக்கும் இவன் எவ்வளவோ தீங்கிழைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

வெபு: நானும் இதுவரை பார்த்ததில் கட்டபொம்மன் நல்ல வீரன் என்று தான் தெரிகிறது. அதனால் அவன் வரிப்பணம் கொடுக்காததும் குற்றமில்லை. அது வீரனின் இயல்புதான். அதிலும் இங்கு நாம் அரசாட்சி செலுத்தவேண்டுமென்றால் இவ்வீரனுடைய நட்பு நமக்கு அவசியம் வேண்டும். துணிந்து செய்தால் தொல்லைதான் வரும். அல்லலை அழைப்பது அழ கல்ல பிரபு ! இந்த விஷயத்தில் எதையும் யோசித்தே செய்யவேண்டும் என்பதே என் விருப்பம்.

ஆலன்: (திடீரென எழுந்து) ஜாக்ஸன் சொன்னது சரியான யுக்திதான். அதுவும் நல்லதே. நாம் நேரிடையாக எதிர்த்து நிற்கக்கூடாது.

எட்: நீங்கள் சொல்லும் கருத்துப்படி இங்கிருந்து நெல்லைக்கு கலெக்டராக ஒருவரை அனுப்பி, அன்பாய்ப் பேசி, உறவு உண்டாக்கி, உரிமையைப் பெறலாம் என்று எண்ணுகிறேன். சரிதானே?

வெபு: ஆமாம். கட்டபொம்மனை எதிர்த்து சதி செய்வதற்குத் தகுந்த ஜாக்ஸன் துரை நம்மிடம் இருக்கும் போது, அதைப் பற்றி நமக்கென்ன கவலை?

எட்: சபாஷ்! ஜாக்ஸனே அதற்குத் தகுதி வாய்ந்தவர். ஜாக்ஸன்! நீர்தான் இனி திருநெல்வேலியின் கலெக்டர். உமக்குத் துணையாக பெரிய பட்டாளம் ஒன்று தருகிறேன். நீர் சென்று பாண்டியனைக்கண்டு, முறையோடு பேசி, திறை வசூலிக்க ஏற்பாடு செய்யும்.

வாக்: கட்டளைக்கு கீழ்ப்படிகிறேன் (வணங்கி நிற்றல்)

காட்சி 4

இடம்: அரண்மனை.

உறுப்பினர்: கட்டபொம்மு, ஊமைத்துரை, தானாபதி, சேவகன்.

நிலைமை: எல்லோரும் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றனர். சேவகன் கட்டபொம்மனை வணங்கி, கடிதம் கொடுக்கிறான். கட்டபொம்மன் அவை படித்துப் பார்த்தல்.

கட்ட : மந்திரி! புதிதாக நெல்லைக்கு அதிபதியாக ஜாக்ஸன் என்பவரைக் கம்பெனியார் திருச்சியிலிருந்து அனுப்பியிருக்கிறார்கள். அவரைப் போய்ப் பார்க்க வேண்டுமாம்! அதிகாரத் தோரணை ஒன்றுமில்லை; அன்பனைப் போன்றுதான் கடிதம் வரைந்துள்ளார். போய்ப் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். உமது அபிப்பிராயம்?

தானாபதி: ஒஹோ ! சண்டைக்கு வந்த ‘சண்டப்பிரசண்டன்’ இப்போது சலாமிடுகிறான் போலும்! நல்லது; மகாராஜா போய்ப் பார்ப்பதும் நல்லதுதான். ஏதாவது ஓர் முடிவு செய்து கொள்ளலாமல்லவா!

கட்ட: (சேவகனைப் பார்த்து) இன்னும் ஒரு வாரத்தில் வந்து பார்ப்பதாகப் போய்ச் சொல்!

ஊமை: அண்ணா! இது என்ன மதியீனம்? தாங்கள் இப்போது. துணிந்து நிற்பது சரியென்று எனக்குத் தோன்றவில்லை.

கட்ட: தம்பி ! நீ சொல்வதன் நோக்கம்?

ஊமை: அண்ணா! நாடு விட்டு நாடு வந்து, நாடிப் பிழைக்கும் இந்த நாடோடிப் பயலை நாம் போய்ப்பார்ப்பதா? சே… சே…! நமக்கு இது அவமானம். இத்தனை காலமும் தங்களை வந்து சேவித்து செம்மையுற்றவர் பலரிருக்க, இந்த வண்மையற்றவனை நாம் போய் வணங்குவதா? வேண்டவே வேண்டாம்! இதனால் நமக்கு எவ்வளவு பெரிய தீமை வந்த போதிலும் பாதகமில்லை. அண்ணா! பிரியமிருந்தால் அவன் இங்கு வந்து பார்க்கட்டும்; இல்லையென்றால் நெல்லையிலேயே கிடைக்கட்டும். நாமேன் செல்ல வேண்டும்?

தானாபதி: இளவரசே! தாங்கள் கூறுவது சரிதான். ஆனாலும் புதிதாய் வந்த இவர்கள் நமது நிலையைத் தெரிந்து கொள்ள முடியுமா? அதனால் நம் பெருமை ஒன்றும் குன்றி விடாது அரசே! எனவே இம்முறை போய் வருவோம்.

ஊமை: அண்ணா! வழக்கத்திற்கு மாறாக இன்று நாம் புதுப்பழக்கத்தை உண்டுபண்ண வேண்டாம்.

கட்ட: தம்பி ! நீ சொல்வதை நான் மறுக்கத் தயாராக இல்லை. ஆனாலும் வருகிறேன் என்று கொடுத்த வாக்கு மாறுமே என்று தான் யோசிக்கிறேன். தம்பி! கொடுத்த வாக்கை நாம் எப்போதாவது மீறியதுண்டா? அதற்காகவாவது இம்முறை போய் வருவோம்.

ஊமை: அப்படியானால் சரியண்ணா! ஆனால் நாம் வெகு எச்சரிக்கையாகவே போக வேண்டும்.

கட்ட: மிகவும் மகிழ்ச்சி. மந்திரி! நெல்லையில் சென்று வெள்ளையனைக் காண பல்லக்கு தயாராகட்டும்.

தானா: ஆகட்டும் அரசே!

காட்சி 5

இடம்: இராமநாதபுரம், ராமலிங்க விலாசம்.

உறுப்பினர்: ஜாக்ஸன், கும்பினிப்படை, லியட், சேவகர்கள், கட்டபொம்மன், தானாபதி, ஊமைத்துரை.

[கட்டபொம்மனும் மற்றோரும் நெல்லை சென்று அங்கு ஜாக்ஸனைக் காணாமல் செய்தி யறிந்து இராமனாதபுரம் வருகிறார்கள்]

நிலைமை: ஜாக்ஸன் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். லியட் பக்கத்தில் இருக்கிறார். கும்பினி படைவீரர் ஓரத்தில் மறைந்திருத்தல். கட்டபொம்மன், ஊமைத்துரை, தானாதிபதி பிள்ளை ஜாக்ஸனை நோக்கி வரும்போது, சேவகன் தடுத்தல்.

சேவகன்: (கட்டபொம்மனை நோக்கி) தாங்கள் மட்டும் தான் துரையைக் கண்டு பேசலாம்.

[ஊமைத்துரை தன்னைத் தடுக்கும் சேவகர்களை தள்ளி விட்டு உள்ளே போதல்]

ஜாக்: வாருங்கள்! இப்படி அமருங்கள்! பாஞ்சாலங்குறிச்சியின் அரசர் நீர்தானே?

கட்ட: ஆம்! நான் தான்.

ஜாக். கட்டபொம்மன் என்பது…

கட்ட ஆம் ! அது என்னுடைய பெயர் தான்.

ஜாக்: ஒஹோ! நீர் தானா பாஞ்சாலங்குறிச்சியின் மன்னன். உம் மீது நிறைய புகார்கள் இருக்கின்றன. நான் உமக்கு முன்னால் எழுதிய கடிங்கள் எல்லாம் கிடைத்தனவா?

கட்ட: ஆம், கிடைத்தன.

ஜாக்: ஆனால் அடிக்கடி எங்களுக்கு நீர் சரியான பதில் எழுதவில்லையே, ஏன்?

கட்ட: பதில் எழுத வேண்டியதற்கு மட்டும் எழுதியிருக்கிறேன்.

ஜாக்: ஆத்தூர், ஆறுமங்கலம் எனும் அயன் கிராமங்கள் இரண்டையும் நீர் அடமாகக் கவர்ந்துகொண்டீரல்லவா! அதற்குக் காரணம்?

கட்ட: காரணம்! அதற்கான காரணத்தைப் பூரணமாக முன்னரே நான் அறிவித்திருக்கிறேன். அதிலும் என் எல்லைக்குள் இருக்கும் நாட்டை நான் காவல் புரிவதில் தவறு என்ன இருக்கிறது? உரிமையை உணர்ந்துதான் அதை உவந்து பாதுகாத்து வருகிறேன்.

ஜாக்: நீர் உமக்கு உரிமையான பாஞ்சாலங்குறிச்சியை பாதுகாக்கலாம்; வரி வசூலிக்கலாம்; கொள்ளையடிக்கலாம்; நெல்லை அள்ளலாம். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் புகுந்து கொடுமைகள் புரிந்து, ஆயுதங்கள் செரிந்து வரி வசூலித்திருக்கிறீர். இது மன்னிக்க முடியாத குற்றம்!

கட்ட: மன்னிக்க முடியாத குற்றம்! (எளனமாக) எது மன்னிக்க முடியாத குற்றம்? கட்டபொம்மனுக்குச் சொந்தமான அருங்குளம், சுப்பலாபுரத்தை எட்டப்பனுக்குத் தானம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் இல்லை; திருநெல்வேலியில் பேட்டி தருவதாகச் சொல்லி குற்றாலம், சிவகிரி, சேற்றூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பேறையூர், பவானி, பள்ளிமடை, கமுதி முதலிய இடமெல்லாம் இழுத்து, அலைத்து, அலைக்கழித்து, அலட்சியம் செய்தது மன்னிக்க முடியாத குற்றமில்லை; ஆனால் நீர் சென்ற விடமெல்லாம் நான் சென்று, நீர் சொன்னபடி யெல்லாம் நான் உம்மை வந்து பார்க்க வந்ததுதான் மன்னிக்க முடியாத குற்றமோ? நன்றாக இருக்கிறது உன் நாணயமற்ற வார்த்தை! குற்றம் என்று குறித்த உன் நாவை அப்பொழு குடலதிரப் பிய்த்து எறிந்திருப்பேன். ஆனால் நண்பர் டேவிஷன் துரைக்காக உன்னை விட்டு வைக்கிறேன். அயல் நாட்டுக் காகம் பறவாது கட்டப்பொம்மன் கோட்டையின் மேல் என்பது நினைவிருக்கட்டும்.

ஜாக்: எங்கிருந்து கொண்டு, யாரிடம் என்ன பேசுகிறோம் என்பது உமக்கு நினைவிருக்கட்டும்.

கட்ட: (சிரிப்பு) பயந்து, வீண் வார்த்தை பேசி பூச்சாண்டி காட்டவேண்டாம்; அழைத்த காரணமென்ன?

ஜாக்: நல்லது! நீர் எங்களுக்குக் கட்டவேண்டிய கிஸ்தியைக் கேட்டால் தர மறுக்கிறீர்; பாக்கியைக் கேட்க வந்தவரிடம், போக்குரைகள் ஆடிப் பொல்லாங்கு செய்திருக்கிறீர்; இது நல்லதல்ல. இனி வரிகளை ஒல்லையில் செலுத்தி வரவேண்டும். இல்லையேல் உமக்குப் பல தொல்லைகள் தொடரும். உள்ளதைச் சொல்லிவிட்டேன்; நல்லதை நாடிக்கொள்ளும்.

கட்ட: துரையே! பாண்டியனிடமா பயமுறுத்தல்? பாண்டியனிடத்தில் சொல்லும் ஒன்றுதான், கல்லும் ஒன்றுதான். அன்று சொன்ன பதில்தான் இன்றும். தானம் கொடு என்று கேட்டால் தருகிறேன். ஆனால் மானமிழந்து வரிப்பணமாக செப்புக்காசும் கொடுக்க முடியாது.

ஜாக்: தன்னிலை மறந்து பேசும் தமிழனே! பண்ணறிய ஏனையப் பாளையப்பட்டுக்காரர்கள் எல்லாம் பறை பறையாய் வரியைக் கட்டி வானுயர வாழ்ந்து வருகின்றனர். நீர் எம்மாத்திரம்!

கட்ட: உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கவும், கோள் சொல்லி குபேரனாகவும், அறியாமையில் மூழ்கி சுதந்திர ஆர்வமற்று அன்னியனுக்கு அடிவணங்கி வாழவும், எட்டப்பனைப் போல் சில கெட்ட பாளையப்பட்டுக்காரர்கள் விரும்பலாம். ஆனால் அவர்களைப்போல முகத்தில் கரியைப் பூசிக் கொள்ளும் முழுமூடனல்ல நான்; சுத்த வீரன் என்பது நினைவிருக்கட்டும்.

ஜாக்: ஆத்திரத்தில் அறிவிழக்க வேண்டாம். யோசித்து முடிவு சொல்லும்.

கட்ட. முடிவாகச் சொல்கிறேன்! வரி செலுத்தும் வழக்கம் எம் பரம்பரைக்கு அன்றுமில்லை, இன்றுமில்லை, இனி என்றுமே இல்லை.

ஜாக்: அடக்கும் உம் அறிவிலித்தனத்தை! நீர் மனத்திமிரோடு மதமதத்துப் பேசுகின்றீர். சங்க ஆணையின் பேரில் உம்மை நான் கைது செய்கிறேன். இனி இவ்விடத்தை விட்டு வெளியே போகக்கூடாது. யார் அங்கே? தளபதி லியட்டை வரச்சொல்.

(லியட் கட்டபொம்மனை கைதிசெய்ய வரும் போது கட்டபொம்மன் தன் உடைவாளை உருவி)

கட்ட: என்னைக் கைதுசெய்யத் துணிவுகொண்டவன் யார்?

[என்று சொல்லவும், லியட் தன் வாளை உருவி கட்டபொம்மனுடன் சண்டையிடுதல். இது சமயம் வெளியிலேயிருந்த கட்டபொம்மு சிப்பாய்களுக்கும் கும்பினி படைக்கும் போர் மூண்டு பலர் இறக்கின்றனர். போரில் லியட் கட்டபொம்மனால் குத்தப்பட்டு இறந்து விடுகிறான், ஜாக்ஸன் ஒளிந்து கொள்கிறார். கட்டபொம்மன் மாளிகையின் மேடைக்கு வந்து அங்கிருந்து ‘முத்துராமு’ என்ற புரவியின் மீது குதித்து தப்பிச்செல்கின்றார். ஆனால் தானாபதிப்பிள்ளை வஞ்சகமாக கைது செய்யப்படுகிறார். சண்டை முடிந்ததும் தானாபதி முன், ஒளிந்து கொண்டிருந்த ஜாக்ஸன் வந்து நின்று)

ஜாக்: எல்லாம் இவனால் வந்த விளைவுதான்! தானாபதிப் பிள்ளையாம் தானாபதிப் பிள்ளை! கடைசியில் நம் தளகர்த்தர் அல்லவா இறந்துவிட்டார். கும்பினியார்க்கு இனி என்ன பதில் சொல்வது? (சிறிதுநேரம் யோசித்துவிட்டு) சரி, இவனைக் கொண்டுபோய் சிறையிலடையுங்கள். நாளை திருச்சிக்கு விசாரணைக்குக் கொண்டுபோவோம்.

தானா: ஏ வெள்ளையனே! கெடு நினைவோடு கொடு வஞ்சம் புரிந்து படுப்பழியை வளர்த்துவிட்டு, இப்போது என் மீதா அடாப்பழியை சுமத்துகின்றாய்? நீ செய்தவினையே உன்னைச் சூழ்ந்து கொண்டது; எம்மரசர் வெகுண்டெழுந்தபொழுது அஞ்சி ஓடி ஒளிந்துவிட்டு, இப்போது என் பஞ்சுபோல் பறக்கின்றாய்? நெஞ்சில் கொஞ்சமேனும் உரமிருந்தால் ஏன் வஞ்சனை புரிகிறாய்?

ஜாக்: ஏ தானாபதி, நிறுத்து! உனக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?

தானா: தெரியுமே! மரண தண்டனையை விடப் பெரிய தண டனை எதுவும் கொடுக்க முடியாதென்று எனக்கு எனக்கு நன்றாகத் தெரியும். சண்டை செய்யத் திறமில்லாத உனக்கு வாய்ப் பேச்சு வேறா? ஒரு கை வீச்சுக்கு ஒன்பது தலை உருளும் எம் வேந்தர் வாள் வீச்சில் அகப்பட்டு வேதனை அடையாமல் இருந்தது உன் அதிர்ஷ்டம் தான். ஒடி ஒளிந்த உனக்கு வெட்கமில்லை? தூ…

ஜாக்: மூடு வாயை! (கன்னத்தில் அறைகிறான்)

தானா: ஏ, வெள்ளையனே ! நன்றாயிருக்கிறது உன் கெட்டிக் காரத்தனம். உனக்கு வீரமிருந்தால் கட்டை அவிழ்த்துவிட்டு வா பார்க்கலாம். கட்டிப் பிடித்துக்கொண்டு எட்டி அடிக் கும் உனக்கு வெட்கமில்லை. தூ…இனி ஒரு முறை உன் கை என்மேல் படுமாயின் உன் வம்சமே பூண்டற்றுப் போகும்படி செய்து விடுவேன்.

ஜாக்: கொண்டு போங்கள் இவனை.

(சிப்பாய்கள் தானாபதியை இழுத்துச் செல்லுதல்)

காட்சி 6

இடம் : திருச்சி நீதிமன்றம்.

உறுப்பினர்: ஜாக்ஸன், தானாபதி, எட் வர்ட், மற்ற துரைகள்.

நிலைமை: எட்வர்ட் துரை தலைமையில் சபை கூடியிருக்கிறது. தானாபதி குற்றவாளிக் கூண்டில் இருக்கிறார்.

எட்: (ஜாக்ஸனைப் பார்த்து) உமது வழக்கைச் சொல்லலாம்.

ஜாக்: அப்படியே! பாஞ்சாலங்குறிச்சி பாளையப்பட்டுக்காரனான கட்டபொம்மு, என்னைப்பேட்டி காண வரும் பாவனையில் நாலா யிரம் வீரர்களுடன் இராமநாதபுரம் இராமலிங்க விலாசத்தில் 9-9-1798 மாலை 5 மணிக்கு வந்து சந்தித்து, என்னுடன் வேண்டாத வார்த்தைகளெல்லாம் பேசி, நம்மையெல்லாம் ஏசி, போருக்குத் தயாராகிவிட்டான். வாள் எடுத்த கட்ட பொம்மனை தடுக்கச்சென்ற செயலாளர் லியட்டையும் வெட்டி வீழ்த்திவிட்டு கட்டபொம்மன் ஓடிவிட்டான். ஆனால் எல்லாவற்றிற்கும் காரணம் இதோ நிற்கும் இந்தத் தானாபதி தான்! எனவே இவருக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

எட் : சரி, நீர் போகலாம். தானாபதிப் பிள்ளை! இவற்றிற்கு இப்போது என்ன பதில் சொல்கிறீர்? கலெக்டர் சொன்னவை எல்லாம் எல்லாம் உண்மைதானா குற்றத்தை ஒப்புக் கொள்கிறீரா? அல்லது அதை ஏதாவது சாக்குச்சொல்லி மழுப்பப் போகின்றீரா?

தானா: துரை அவர்களே! இந்த நியாயசபையில் ஜாக்ஸன் துரை அவர்கள் இல்லாததையெல்லாம் கூறி என்னைக் குற்றவாளியாக்குகிறார். நடந்த உண்மை இதுதான். கேளுங்கள்! எம்மரசுக்கு ஜாக்ஸன் துரையிடமிருந்து தன்னை நெல்லையில் வந்து காணவேண்டுமென்று 16 -8-1798ல் கடிதம் வந்தது. மன்னரும் மனமொப்பி அங்கு போய்ப் பார்த்தார். ஆனால் அவர் அங்கிருந்து குற்றாலம் போயிருப்பதாகவும், அங்கு போய்ப் பார்க்க வேண்டுமென்றும் கேள்விப்பட்ட எமதரசர் அதற்கும் சம்மதித்து குற்றாலத்திற்குச் சென்றார். அங்கும் துரை இல்லை. அது சமயம் அவருடன் சென்ற எங்களுக்குச் சிறிது சந்தேகம் ஏற்பட்டது என்றாலும் சங்கத்தின் நீதியை நினைத்து, யாதொரு தீங்கும் நேராதென்று எண்ணி சிவகிரியில் இருப்பதாகக் கேள்விப்பட்டதும் அவர்களைக் காண அரசர் அங்கும் சென்றார். அங்கும் அவர் இல்லை. இப்படியே ஸ்ரீவில்லிப்புத்தூர், குற்றாலம், சிவகிரி, சேத்தூர், பவானி, பள்ளிமடை, கமுதி இன்னும் சில ஊர்களுக்கெல்லாம் அலைந்து முடிலில் இராமநாதபுரம் இராமலிங்க விலாசத்தில் துரைகள் இருப்பதாகத் தெரிந்து, எமதரசர் பரிவாரங்களுடன் அங்கும் சென்றார். ஆனால் அங்கு வாயில் காப்போன் எங்களைத் தடுத்து எமதரசரைத்தவிர மற்றொருவரும் உள்ளே போகக்கூடாது என்று கூறினான். சதி நடக்குமென்று முன்னரே தெரிந்த எங்களுக்கு எமதரசரை மட்டும் தனியேவிட மனமில்லாமல் அவனைத் தள்ளிவிட்டு நானும், தம்பி ஊமைத்துரை, வெள்ளையத்தேவன் ஆகியோரும் பின் தொடர்ந்து சென்றோம். வந்த அரசரை வரைமுறையின்றி வாய்பேசவே அவர் மனம் குமுறி எழுந்து வந்தார். வந்தவரைப்பற்றி இழுத்தார் துரை. அரசர் உடைவாளை உருவினார் – தடை செய்தோரை மீறிக் கீழே இறங்கிச் சென்று விட்டார். நான் செய்வதறியாது அங்கேயே நின்றுவிட்டேன். இவர் ஓடி ஓடி ஒளிந்து கொண்டார். நீதிமன்றமென்று நம்பி இங்கு உண்மையை உரைக்கிறேன். துரைகள் நியாயமனியாயத்திற்கு தக்க தீர்ப்பு கூறவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

எட்: உம்முடைய அரசருக்கு அவ்வளவு தைரியம் இருக்கிறதா, என்ன?

தானா: அவரை நீங்கள் நேரிலே பார்த்தால் அப்போது தெரியும் அந்த உண்மை.

எட்: அவரை இங்கு அழைத்தால் வருவாரா?

தானா : சமூகத்திலிருந்து கடிதம் போனால் உடனே வருவார், தடையேதும் இராது.

எட்: இடையே இன்னல் பல அடைந்தமையால் சந்தேகித்து ஒரு சமயம் வராமலும் இருக்கலாமல்லா?

தானா: ஆம்! அதற்கும் வழி இருக்கிறது.

எட்: என்ன வழி இருக்கிறது!

தானா: நானே நேரில்சென்று அழைத்து வரலாம்.

எட்: சரி, அப்படியானால் இரண்டு நாள் தங்கியிருந்து பிறகு சென்று அழைத்து வாரும்.

காட்சி 7

இடம்: ஒரு வீடு.

உறுப்பினர்: சிவத்தையா, மனைவி.

நிலைமை: இருவரும் பேசிக்கொண்டிருக் கிறார்கள்.

மனைவி: என்ன மச்சான், பணம் கிடைக்காதா?

சித்தையா: ஆ…! பணமா ? கொள்ளையடிக்கப் போகவேண்டியது தான்.

மனைவி: எனக்கென்ன! ஓங்க மகன் கலியாணத்தை நீங்க எப்படியும் நடத்துங்க.

சிவ: நான் பணங்கேக்காத இடமில்லை. என்னை என்ன செய்யச் சொல்றே?

மனைவி: நீங்க என்ன செய்வீங்களோ, எங்க போவீங்களோ? ஊர்ப்பந்தி வைக்காம கலியாணம் நடத்த உங்களுக்கு வெட்கமாயில்லை! ஒரு ஐம்பது வராகன் பொறட்ட முடியல்லே…பெரிய ஆம்பிள்ளையாட்டமா?

சிவ: உன் பேச்சைக் கேட்டா எனக்கும் தானாபதி கதிதான் கிடைக்கும்!

மனைவி: ஒங்க கெதிக்கு அவரு கெதி என்ன ரொம்ப கொறைஞ்சி போச்சோ?

சிவ: குறையலடி, குடிமுழுகிப்போச்சி !!

மனைவி: அப்படி என்ன மச்சான் விஷயம்?

சிவ: சரிதான்! சரிதான்! உனக்குத் தெரியாதா விஷயம்? கேளு. தானாபதிப்பிள்ளையை முன்னாலே ராமனாதபுரத்திலே புடிச்சு, திருச்சியிலே கொண்டுபோயி விசாரணை பண்ணி விடுதலை பண்ணினது தெரியுமில்ல?

மனைவி: தெரியும்! அதுக்குப் பிறகு நம்ம ராசாகூட, தானாபதி பிள்ளைகூட வெள்ளைக்காரங்களைப் பார்க்கப் போனதாகச் சொன்னாங்களே!

சிவ: ஆமா! ஆமா!! அதுதான். தானாபதியை அனுப்பி மகாராசாவை திருச்சினாப்பள்ளிக்கு கூட்டியாரச் சொன்ன வெள்ளைக்காரங்க, ராசா வந்ததும் அவர் உடம்பப்பாத்து பெருமூச்சு விட்டு அசந்துபோனாங்க! அப்புறம் வெள்ளைக் காரஙக வளத்துகிட்டு வந்த ஏழு பெரிய குதிரைகளைக் கொண்டாந்து அதிலே ஏறிச் சவாரி செய்யணுமுன்னு ராசா கிட்டே சொன்னாங்க.

மனைவி: ஆ! அப்புறம்?

சிவ: ராசாவுக்குத்தான் குதிரைச் சவாரின்னா போதுமே! அடங்காப் பிடாரியான அந்த ஏழு குதிரையையும் அடக்குடா அடக்குன்னு அடக்கினாரு. அவ்வளவுதான்! வெள்ளைக் காரங்க ஆச்சரியப்பட்டு பரிசாக் கொடுத்த பொன்னாலே செய்த வாள் ஒன்னைக் கையிலே வாங்கினாரு – குதிரையைக் கையிலே பிடிச்சாரு – நேரே இங்கே வந்து இறங்கிட்டாரு.

மனைவி: ஆகா!

சிவ: அதுக்கப்புறந்தான் தானாபதிக்குக் கொஞ்சம் மண்டை கனக்க ஆரம்பிச்சது.

மனைவி: ஏன் மச்சான் மண்டையிடியா?

சிவ: இல்லடி! அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாருன்னு அர்த்தம்!

மனைவி: அப்படி என்ன செஞ்சிட்டாரு ?

சிவ: செய்யுறது என்னடி! குடியவே கெடுத்துட்டாரு. அதாவது அந்நேரம் பாத்து தானாபதி மகனுக்கு கலியாணம் வந்தது. ராசாகிட்டே போயி நெல்லும் பொன்னும் கேட்டாரு – ராசாவும் கொடுத்தாரு. கொடுத்ததை வைச்சி நடத்தாமே, காணாதுன்னு பெண்டாட்டி சொன்னதைக் கேட்டு திருநெல்வேலிக்குப் போயி வெள்ளைக்காரங்க நெல்லை கொள்ளையடிச்சிட்டு கொலை செஞ்சுப்பிட்டு வந்துட்டான் அந்த மனுஷன்!

மனைவி: அட பாவி !

சிவ: புடிச்சதே சனியன் பொடதியிலே! எடுத்துக்கெல்லாம் இடஞ்சல்தான் இந்த மனுஷனாலே!

மனைவி: ஆமா மச்சான்! வெள்ளைக்காரங்க சும்மா விட்டாங்களா?

சிவ: அதானடி இப்ப சங்கடத்திலே நிக்கிது. எந்த நேரம்னு இல்லை, சண்டை வர்ரது.

மனைவி: அப்படியா? அதிருக்கட்டும், நம்ம ராசா இதைப்பத்தி தானாபதி பிள்ளைகிட்ட கேக்கலியா?

சிவ: அவருக்கெங்கடி தெரியுமிது?

மனைவி: ஏன் மச்சான் தெரியாது?

சிவ: நம்ம ராசா கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கலாம்னு ராணியோட வசந்த மண்டபத்திற்குப் போயி, கொஞ்சிக் கிட்டுல்லயிருக்காரு.

மனைவி: அப்படியா சங்கதி!

சிவ: ராக்காயி, நான் சொல்றதைக் கேளு! கலியாணத்தை முடிக்கவேண்டியது என் பொறுப்பு; காரியத்தைக் கவனிக்க வேண்டியது உன் பொறுப்பு. தெரிஞ்சுதா? நான் போயி கருப்பனை பாத்திட்டு வர்றேன்; நீ சமையல் செய்.

காட்சி 8

இடம்: நந்தவனம்.

உறுப்பினர்: கட்டபொம்மு, சக்கம்மாள்.

நிலைமை: சக்கம்மாள் தனிமையாக பாடிக் கொண்டிருக்கிறாள். அப்போது கட்டபொம்மனும் அங்கு வந்து சேர்கிறார்

கட்ட: சக்கம்மா! உன் ஆட்டமும், பாட்டும் அபாரம்!

சக்: ஹூம்.. கேலி செய்கிறீர்களாக்கும்!

கட்ட: உண்மையைச் சொன்னால் கேலியாகவா தோன்றுகிறது உனக்கு?

சக்: போதும் உங்கள் புகழ்ச்சி !

கட்ட: சக்கம்மா! உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் என் உள்ளத்திலே மகிழ்ச்சி ஏற்படும்போது, எப்படி உன்னைப்பற்றி புகழ்ச்சியோடு பேசாமல் இருக்கமுடியும்?

சக்: ஹூம்…… அப்புறம்!

கட்ட: அப்புறமா? சக்கம்மா, எத்தனையோ சேனாவீரர்களை எதிர்த்துப் போரிட்டபோதுகூட ஏற்படாத தளர்ச்சி,உன் வேல் விழிகளைக் கண்டதும் ஏனோ ஓர் கவர்ச்சி மயமாகி…

சக். அடேயப்பா! நானென்ன அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்?

கட்ட: நீ அழகாய் இருக்கிறாயோ அல்லது எப்படி இருக்கிறாயோ, என் சிந்தையைச் சதிராடச் செய்யும் வண்ண ஓவியமாக இருக்கிறாய் என்று தான் எனக்கு சொல்லத் தெரியும்.

சக்: போதும் உங்கள் பரிகாசம், நான் வருகிறேன்.

கட்ட: சக்கம்மா! ஏன் கோபப்படுகின்றாய்? இப்படி என் பக்கம் வா!

சக்: என்னவாம்?

கட்ட; என்னவா! சொல்கிறேன் வா. பார்த்தாயா, அதற்குள் கோபம் வந்துவிட்டது. பெண்களே இப்படித்தான். இதோ பார்! நீயே சொல். நீ அழகாயில்லாவிட்டால் நான் ஏன் உன்னைச் சுற்றிச்சுற்றி வட்டமிடுகிறேன்?

சக்: வண்டுகளும் தான் வட்டமிடுகின்றன

கட்ட: எதை வட்டமிடுகின்றன?

சக்: மலரை!

கட்ட: பூத்த புது மலர்களையா அல்லது வெறும் மலர்களையா?

சக்: தேனுள்ள பூவைத்தான் வண்டு நாடும்.

கட்ட: அப்படியானால் நானுன்னை நாடுவது தேனுக்காகத்தானே இருக்கவேண்டும்.

சக்: அடேயப்பா! உங்களை வெல்ல என்னால் முடியுமா? பெரிய பெரிய வெள்ளைப்படைகள் படும் பாட்டுக்கு நான் எம்மாத்திரம்!

கட்ட: நீ மாத்திரம் என்ன சாமான்யமானவளா? எதிரிகளைத் தூக்கி எறியும் என் கரங்கள் உன்னை வாரி அணைக்கத்தானே வட்டமிடுகின்றன. இதிலிருந்து தெரியவில்லையா நீ எப்படியிருக்கிறாய் என்று?

சக்: இந்த ஆண்களே இப்படித்தான்! ஏதாவது வேண்டாததைச் சொல்லி எங்களை அழவைப்பது, பிறகு பிரமாதமாக இல்லாததையெல்லாம் பேசிச் சிரிக்கவைப்பது.

கட்ட: சக்கம்மா! இன்று தான் நீ அந்த உண்மையைக் கண்டு கொண்டாய். சதா சிரித்துக்கொண்டேயிருந்தால் அந்த இன்பத்தின் எல்லை எது என்பதை அறியமுடியாதல்லவா! அதற்காகத்தான் சிரிப்பதும் அழுவதும்.

சக்: அதிருக்கட்டும் சுவாமி! நீங்கள் “அழுவதும்” என்று சொன்னவுடன் எனக்கொன்று ஞாபகத்திற்கு வந்தது.

கட்ட: என்னது?

சக்: நிர்வாகப் பொறுப்பையெல்லாம் தானாபதிப்பிள்ளை வசம் ஒப்புவித்துவிட்டுத் தாங்கள் வசந்தம் வந்து விட்டீர்களே; அவர் அதற்குத் தகுதிவாய்ந்தவர் தானா?

கட்ட : தகுதியை அறியாமலா தேவி, தானாபதியை விட்டு வந்தேன்!

சக் : இல்லை…… இல்லை, நான் ஒரு விதமாகக் கேள்விப்பட்டேன். அதனால்தான் கேட்கிறேன்.

கட்ட : எதை நீ கேள்விப்பட்டாய்?

சக்: ஏதோ ஒரு விதமாகக் கூறுகிறார்கள். திடீரென்று ஏதாவது சொல்லிவைத்தால் அதன் விளைவாக என்னவாகும்? எதற்கும் நாம் நேரில் சென்று வருவோமே?

கட்ட: சக்கம்மா! இருந்தாலும் நீ நல்ல புத்திசாலி. எதையோ சொல்லி எதையோ மறைத்துவிட்டாய், பார்த்தாயா! சரி வா! போகலாம்.

காட்சி 9

இடம்: கட்டபொம்மன் அரண்மனை.

உறுப்பினர்: கட்டபொம்மன், தானாபதி, பக்கட் துரை.

நிலைமை: கட்டபொம்மன் அங்குமிங்கும் அலைந்துகொண்டு கோபமாக பதியைப் பார்த்தல்.

கட்ட: உம்முடைய வீட்டில் உம் மகனுக்கு ஊர் அறியத் திருமணம் செய்து வைப்பதற்காக வேண்டி, இரண்டாயிரம் பொன்னும் நூற்றைம்பது கோட்டை நெல்லும், என் மனமார்ந்த வாழ்த்தும் கொடுத்தனுப்பினேன். பற்றாதெனக் கேட்டால் உமக்கு வற்றாது வாரிக் கொடுக்கும் மன்னன் நானிருக்க, சற்றேனும் மதியாது, நீர், அயலார்க்குரிய நெல்லை அநியாயமாய் அள்ளி வந்தீர்; கொலைகள் பல நிகழச் செய்தீர்; குறைகள் பல ஆக்கி வைத்தீர்; அசைவில் ஆண்மையுடன் இசை வளர்த்து வந்த இவ்வரசருக்கு ஓர் வசை வளர்த்து விட்டீர் பிள்ளையே! உம்மால் பெரிய தொல்லைதான்.

தானா: அரசே! மன்னிக்கவேண்டும். நான்…

கட்ட: என்ன நான் உம்மை நான் அறிவுடைய மரபில் பிறந்து அறிய பல நூல் படித்தவர் என்று எண்ணியிருந்தேன். ஆனால் படித்தும் ஓர் பயனற்ற பட்டாதாரியாகத்தான் இருக்கின்றீரே தவிர, பயன் படைக்கும் திட்டம் ஏதுவும் உம்மிடம் இல்லை. உம்மை ஒரு அறிஞர் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அது என்னை வறிஞன் ஆக்கத்தான் வழி செய்கிறதே தவிர வேறல்ல. நாட்டுக்குப் பல திட்டம் வகுக்கும் நல்லறிவாளர் என உம்மை மதித்திருந்தேன். ஆனால் உம் போக்கை மட்டும் பூர்த்தி செய்து கொள்ளும் புதுமையுடையவராகத் தான் இருக்கின்றீரே தவிர, பெருமையில்லை.

தானா: மகாராஜா! மன்னிக்கவேண்டும். நடந்ததைக் கொஞ்சம் கேட்க வேண்டும். நெல்லைக் கொள்ளையிட வேண்டுமென்ப தற்காக நான் அங்கு செல்லவில்லை. நெல்லை விலை பேசி கொள்முதல் செய்தேன். பிறகு அளந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த காவலாளிகள் நம்முடைய கம்பளங்களை வம்புக்கிழுத்து வாய்மதம் பேசினர். நிலை தெரியாமல் இகழ்ந்து பேசியதால் கலகம் மூண்டது; பழி விழுந்தது. ற்கனவே நாம் வரி கொடாமல் இருப்பதனால் நம்மை எந்த விதத்தில், எந்த நேரத்தில் தாக்கலாமென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த கும்பெனியார்கள், சமயம் வாய்த்ததும் சதி செய்து சண்டைக்கிழுத்தார்கள். இதில் குறை கூற நம்மிடத்தில் குற்றமில்லை மகாராஜா.

[சேவகன் ஒருவன் உள்ளே வந்து அரசரை வணங்கி]

சேவ: மகாராஜா! கும்பினிப் படையிலிருந்து பக்கட் துரை வந்திருக்கிறார். சமூகத்தைப் பார்க்கணுங்களாம்.

கட்ட: பக்கட் துரையா? வரச்சொல்.

[பக்கட் வருதல்]

கட்ட: வாருங்கள்! இப்படி உட்காருங்கள். என்ன விசேஷமாக வந்தீர்கள்?

பக்கட்: என்ன விசேஷமா? வினோதமான கேள்விதான். அது எங்கே உங்களுக்குத் தெரியப்போகிறது. அரசியலைப்பற்றி அக்கரை இருந்தால் தானே!

கட்ட: அரசியலைப்பற்றி அப்படி என்ன விஷயம்?

பக்கட்: அதைப்பற்றி நீர் ஆராய்ந்திருப்பீரேயானால், அதை அப்போதே தெரிந்திருக்கலாமே!

கட்ட: என் அரசியலில் குறுக்கிட உமக்கு அதிகாரம் கிடையாது. அதைப்பற்றி பேச உமக்கு யாதொரு சம்பந்தமும் இவ்லை.

பக்கட்: ஏன் இல்லை? உமது ஆட்சியில் தவறு நேர்ந்திருந்தால்…?

கட்ட: தவறுதல் யாருக்கும் சகஜம். அதைப்பற்றி இங்கு பிரச்சினை இல்லை.

பக்கட்: நீதி குலைந்திருந்தால்?

கட்ட: குலைவதா! அது எங்கள் பாண்டிய வம்சத்தின் பரம்பரைக்கே இல்லை.

பக்கட்: பாண்டிய வம்சமாம், பாண்டிய வம்சம்! எவ்வளவு பௌத்திரமான பாண்டிய வம்சம்.

கட்ட: என்ன சொன்னாய்? பாண்டிய வம்சத்தின் பரம்பரையைப் பற்றியா குறை கூறுகின்றாய்! பரதேசிப்பயலே, பாண்டியன் யார் தெரியுமா உனக்கு? அவன் பரம்பரை தெரியுமா உனக்கு? உனக்கு அவனைப்பற்றி பேச என்ன நேர்மை இருக்கிறது தான் இழைத்த தவறுக்காக தன் உயிரைத் தானே மாய்த்து மன்னுயிரைக் காத்த மாவேந்தன் பாண்டியன் பரம்பரையைப்பற்றி குறை கூற, உனக்கென்ன வரைமுறை இருக்கிறது? கன்றின் தாய் கேட்ட நீதிக்காக தன் சேயென்றும் பாராது, மண்ணில் தேர் ஓட்டி மைந்தனை மாழச் செய்த மனுநீதிச் சோழனின் தமிழ்க் குலத்தைக் குறைகூறும் உன்னிடத்தில் என்ன தனி நீதி இருக்கிறது? மதியற்ற மன்னர்களை மயக்கி, அவர்களின் மகுடத்தைப் பிடுங்கி பதவி காட்டி ஊரை ஏமாற்ற அணிவகுத்து நிற்பவர்கள் அல்லவா ஆங்கிலேயர்கள்?

பக்கட்: ஆம், தெரியாது தான்! சொன்னால் தானே தெரியும் – சொல்லுகிறேன். ஆங்கிலேயருக்குச் சொந்தமான நாட்டி லுள்ள அருங்குளம், சுப்பலாபுரத்தை எட்டப்பனுக்கு தான மாக வழங்கியதை தவறென சொல்லத் தெரிந்தது; பெருமை யுடன் பேட்டி காணவந்த ஜாக்ஸனை புறக்கணித்து அவ மதிக்கத் தெரிந்தது; அருமையுடன் வரவழைத்து அன் பளித்த கும்பினியை அதம் புரிந்த கொடுநிலைதான் தெரி யாதோ? நன்று நன்று, உம் நீதியின் நிர்வாகம்!

கட்ட: போதும், உமது பிரசங்கம்.

பக்கட்: நான் சொல்வது உமக்குப் பிரசங்கமாகத் தோன்றலாம். ஆனால் அது உம் அரசாங்கத்திற்கு ஊதப்படும் அபாயச்சங்கு என்பது மறந்துவிட வேண்டாம்.

அர: அந்த அபாயச்சங்குக்கு தக்க உபாயத்தை தேடிக்கொள்ளும் வகை எனக்குத் தெரியும்.

தானா: தேடிவந்த களைப்பால் தாங்கள் வாடியிருப்பீர்கள்! இப்படி உடகாருங்கள்.

பக்கட்: நான் இங்கு வந்தது சுகமாக உட்காரவல்ல! கம்பெனியாரின் நேரடியான கேள்விகளுக்கு பதில் கூறவேண்டும்.

கட்ட: அப்படி என்ன கேள்வி கேட்கப் போகின்றீர்?

பக்கட் : கம்பெனியார் அனுப்பியுள்ள பல கடிதங்களுக்குத் தாங்கள் ஒரு பதிலும் எழுதவில்லை. இது கம்பெனியை அலட்சியம் செய்வதாகும். இப்போது உங்களுக்கு மந்திரியாக இருக்கும் தானாபதிப்பிள்ளை கும்பினியாரை அடித்து மிதித்து, அவமதித்து கொலையும் கொள்ளையும் செய்து நெல்லையும் அள்ளி வந்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றம். ஏற்கெனவே தாங்கள் கொடுக்கவேண்டிய வரிப்பணம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. அதையும் கொடுத்த பாடில்லை. தாங்கள் ஒரு நேர்மையான நேர்மையான மன்னர் என்பதை அறிந்து தங்களை நேரில் கண்டு பேசி முடிவு செய்து கொண்டு வரும்படி கம்பெனியார் என்னை அனுப்பி வைத்தார்கள். இவைகளுக்கு தாங்கள் கூறும் பதில்?

கட்ட : துரையவர்களே! தங்கள் கடிதம் வந்ததும் நான் தானாப பிள்ளையை வரவழைத்து விசாரித்துப் பார்த்தேன். கம்பெனியார் நினைப்பது தவறு. நெல்லை கொள்ளையிட வேண்டு மென்பதற்காக பிள்ளை அங்கு செல்லவில்லை. இடையில் ஏற்பட்ட கலகத்தின் காரணம் பின்னர்தான் தெரிய வந்தது. நீங்கள் தடையேதுமில்லாமல் சென்று வாருங்கள். இனி இவ்விதம் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.

பக்கட்: பார்த்துக் கொண்டிருந்ததின் பலனைத்தான் அனுபவிக்கிறோமே! ஆறு ஆண்டுகளாக பொறுத்துப் போனதற்கு தாங்கள் கொடுத்த தகுந்த பரிசு தகுந்த பரிசு போதும். இனியும் பொறுக்க முடியாது. அம்பாரத்தில் இருந்த ஆயிரங்கோட்டை நெல்லையும் வம்பாக வாரியது ஒரு குற்றம்; கலகம் விளைவித்து கொலை புரிந்தது மற்றொரு குற்றம்; இது விஷயங்களுக்கு கடிதமெழுதியும் தாங்கள் பதில் எழுதாமல் கம்பெனியை அவமதித்தது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணமாக இருந்த தானாபதி பிள்ளையை கம்பெனியார் வசம் ஒப்புவித்து விட்டு நெல்லுக்கு விலையாக ரூ 3300ம், செய்த குற்றத்திற்கு தண்டனையாக ரூ 1000 அபராதமும் செலுத்தி கட்டவேண்டிய வரி பாக்கி 6000ம் பொன்னும் கட்டி கம்பெனியாரின் அடிபணிந்து நிற்கவேண்டும். இது கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆணை!

கட்ட : ஆணை! (சிரிப்பு) நீர் யானையை ஆணையிட்டு அடக்கலாம்; சேனையை சட்டம் வகுத்து ஒடுக்கலாம்; எட்டப்பனை அடி பணியக் செய்யலாம்; தொண்டைமானைத் தொண்டு செய்ய சொல்லலாம். ஆனால் இவ்வேந்தனைக் கொண்டுமட்டும் உமக்கு வேண்டுவதைச்செய்துகொள்ள ஒருக்காலும் முடியாது. உமது ஆணையையும் சேனையையும் ஆடிக்காற்றில் பறக்கடிக்கும் ஆண்மை எனக்குண்டு. நியாயத்திற்கு நியாயம் உண்டு. வேண்டுமானால் கொள்ளைபோன நெல்லுக்காக ரூ 3300ம், அபராதமாக ரூ 1000ம் தருகிறேன். போதாதென்றால் தானாபதியின் எடைக்கு எடை பொன்னும் தருகிறேன். பெற்றுக்கொண்டு போம்.

பக்கட்: அரசே! நெல்லின் விலையை மட்டும் நான் இங்கு வாங்க வரவில்லை. கொள்ளையில் நேர்ந்த கொலைக்கு பழிக்குப் பழி வாங்க வந்தேன். அதற்கு பிள்ளையின் தலை தான் பிணையாக உள்ளது. அதனால் அவரை என் கைவசம் ஒப்பிவிக்க வேண்டும். கொள்ளையும் கொலையும் செய்த அந்த கொடும் துரோகியை – கும்பினியின் குடிகெடுக்க முடிதரித்த உம் முதல் மந்திரியை முதல் பலியாக ஏற்க கம்பெனி காத்துக் கொண்டிருக்கிறது.

தானா: எதற்காக பிரபு காத்துக்கொண்டிருக்கிறது? எனககாகவா காத்துக்கொண்டிருக்கிறது? (ஏளனமாக) கொள்ளையிட்டேன்; கொலை செய்தேன்; கும்பினி ஆணையை அவமதித்தேன் என்பதற்காகத் தண்டனையா? அல்லது உம்மிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டு ஊதாரித்தனமாக நடந்து கொள்ளும் உறையூர் ஐமீன்தார் போல் நானும் நடவாமல் இருந்ததற்காகத் தண்டனையா?

இல்லையென்றால் வளர்த்துவிட்ட இந்நாட்டை- தாய்நாட்டைக் கைப்பற்ற வந்திருக்கும் சண்டாளனாகிய உனக்கும் உன் வர்க்கத்திற்கும் உடனிருந்து தன் தாயைக் காட்டிக்கொடுத்து ஊதாரித்தனமாக நடந்துகொள்ள ஊக்கமளிக்கும் ஆக்கம் படைத்த அயோக்கிய சிகாமணியாகிய எட்டப்பனைப்போல் நானும் எழுந்து நில்லாததற்காகத் தண்டனையா? இதில் எதற்காக பிரபு தண்டனை? தாய் மானம் போகும்போது தன் மானம் பெரிதென வாழும் தருதலைகள் நாங்களல்ல!

பக்கட்: நீ இல்லாவிட்டால் உன் தம்பி இருந்துவிட்டுப் போகிறான்!

கட்ட : தருதலைத் தம்பியைப்பற்றித் தனையனுக்கென்ன கவலை? பிறப்புரிமை சுதந்திரத்திற்காக நான் இங்கு துடித்துக் கொண்டிருக்கும்போது உனக்கு உதவிபுரிந்தானே, அவனா என் தம்பி? தமிழ் நாட்டிலே பிறந்துவிட்டானே என்பதற்காக வேண்டுமானால் எட்டப்பனை என் தம்பி என்று அழைக்கலாம். ஆனால், பிறந்த நாட்டை மறந்து, வந்த நாட்டானை விரைந்து – சிறந்தவனெனச் சீர்தூக்கிப் பேசி, அன்னியனுக்கு அடைப்பக்காரனாக ஆகி, அவன் ஆளுகையை மேவி, கைக்கூலி வாங்கிக்கொண்டு கடையோரம் கன்னிப் பெண்ணோடு காலம் கழிக்கும் கயவனல்ல என் தம்பி. வளர்த்துவானேன், உங்களின் தெத்துப் புத்திரனாகிய அவனைப்பற்றிப் பேச எனக்கு அவகாசமில்லை. பிள்ளையை ன்னோடு அனுப்பவும் முடியாது; வரிப்பணம் எதும் கொடுக்கவும் முடியாது. வேண்டுமானால் நெல்லுக்குள்ள தொகையை மட்டும் வாங்கிக்கொண்டு போம்.

பக்கட்: அநியாயமாய் நெல்லை அள்ளித் தொல்லை புரிந்த இக்கொடியோனுக்கு நீங்கள் இடம் கொடுக்கக்கூடாது. இவனுக்கு இடம் கொடுப்பதனால், உங்கள் சொந்த நாட்டிற்கே கேடு விளையும். என் வார்த்தையை நம்புங்கள். உங்கள் நலனைக் கருதியே இதைச் சொல்ல வந்தேன்.

கட்ட: என் நலனில் நீர் சிரத்தை காட்ட வேண்டிய காரணம்?

பக்கட்: பிறர் நலத்தைப் பேணி வளர்ப்பது கம்பெனியாரின் கடமையாதலால்…

கட்ட: நீங்கள் நினைக்கும் பிறர் நலம் எங்களது சுய உரிமையைப் மறிப்பதாக இருந்தால்?

பக்கட்: தேச உரிமை எல்லாம் கம்பெனியாருக்கே இருக்கும் போது சுய உரிமை என்ற உரிமை உங்களுக்கு ஏது?

கட்ட : அந்த உரிமை வந்த வழி ?

பக்கட் : கடன்பட்டதால் ஏற்பட்ட கதி !

கட்ட: கடன் பட்டவர்…?

பக்கட்: நவாப்!

கட்ட: உங்கள் உரிமைக்குள்ளாக வேண்டியவர்?

பக்கட்: நவாப்பும் அவரது ஆட்சியும் !

கட்ட: அப்படியானால் இங்கு வந்து உரிமை கொண்டாடுவதன் காரணம்?

பக்கட்: இத்தேசம் அவன் ஆளுகைக்குட்பட்டிருந்ததால்……

கட்ட : நிறுத்தும்; எத்தேசம் அவன் ஆளுகைக்குட்பட்டிருந்தது? திசைகாவல் புரிந்து, மகசூலைப்பிரித்து, வசூலில் பாதி அனுபவித்து வந்தவன் நான். நியாயப்படி ஏனையப் பாளையப் பட்டுக்காரர்களிடமிருந்து நீர் வாங்கும் வரியில், எனக்கும் பகுதிப் பங்கு உண்டு என்பதை மறந்து விடாதே! நவாப்பையே நயவஞ்சகம் செய்துவிட்டோம்-இனி இவர்கள் எம்மாத்திரம் என்ற இறுமாப்பா?

பக்கட்: நிறுத்தும்; வம்பு பேசவேண்டாம். தானாபதியை என்வசம் ஒப்புவிக்க முடியுமா, முடியாதா?

கட்ட : முடியாது!

பக்கட்: முடியாது! சிறைப்பிடித்துச் செல்வேன்!!

கட்ட: உன்னை அரை நொடியில் கொல்வேன். நீ இப்பொழுது ஒரு கூண்டுப்புலி. இனி ஒரு முறை நீ சிறைப்பிடிப்பேன் என்று சொன்னால், உன்னையும் உன் வர்க்கத்தையும் சின்னா பின்னம் செய்துவிடுவேன். மரியாதையாகத் தப்பி ஓடிவிடு. திறமையிருந்தால் பிள்ளையை சிறைப்பிடிக்கும் வலிமையை நான் பார்த்துக்கொள்கிறேன்.

பக்கட்: நல்லது! உனக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டது.

தானா: சரிதான் போடா, முடிவு காலம் யாருக்கு?

காட்சி 10

இடம்: கிழக்கிந்திய கம்பெனி திருச்சி கிளை.

உறுப்பினர்: பானர்மென், பக்கட், ஆலன், லார்டு எட்வர்ட், சேவகர்கள், இராமலிங்க முதலியார்.

நிலைமை: நடனமாது நடனமாட ஏனையோர் அவரவர் ஆசனத்தில் அமர்ந் திருக்க நடனம் நடந்துகொண்டிருக்கும் பொழுது சேவகன் தபால் ஒன்று கொண்டுவந்து எட்வர்டிடம் கொடுக்கிறான். எட்வர்ட் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார். நடனம் நடந்து கொண்டிருக்கும் போது, கடிதம் படித்து முடிந்ததும், கோபத்துடன் சபையை நோக்கி எட்வர்ட் கூறுகிறார்.

எட்: நிறுத்துங்கள். கட்டபொம்மனுக்கு மண்டைக்கர்வம் தலைக் கேறிவிட்டது. கம்பெனிக்கு இடையூறாக இனி எதையும் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டு, இப்போது பல அட்டூழியங்களைச் செய்திருக்கிறான். அவனை எளிதில் விடக் கூடாது. இராமலிங்க முதலியார், இதைப் படியுங்கள்.

[கடிதத்தை இராமலிங்க முதலியார் கையில் கொடுக்கிறார். அவர் அதை வாங்கிப் படிக்கிறார்]

ஊத்துமலை ஜமீன்
7-8-1799.

கனம் பொருந்திய கம்பெனியாருக்கு அநேக நமஸ்காரம். தங்கள் கட்டளையைத் தலைமேற்கொண்டு, கம்பெனிக்கு இதுவரை நாங்கள் யாதொரு தடையுமில் லாமல் கிஸ்தி செலுத்தி வருகிறோம். பாஞ்சாலங் குறிச்சி ஜமீன்தாராகிய கட்டபொம்மு நாயக்கர் மட்டும், இதுவரை கம்பெனி உத்தரவுக்குக் கட்டுப்படா மல் இருப்பதோடு, அடிக்கடி தானாபதிப் பிள்ளையைக் கொண்டு எங்களுக்குப் பல இடையூறுகளும் செய்து வருகிறார். உங்களுக்குத் தொண்டு செய்து கொண் டிருக்கும் சிவகிரி, ஊற்றுமலை, எட்டயாபுரம் ஆகிய ஜமீன்களைக் கட்டபொம்மன் பெரும் படையுடன் வந்து தாக்கப்போவதாக வேறு ஊரெல்லாம் வதந்தி யாக இருக்கிறது. இதைக்கேட்ட எங்களுக்கு ஒரே பயமாக இருக்கிறது. அவரைத்தட்டி ஒடுக்காவிடில் எங்களுக்கு குடியிருப்பில்லை; அல்லும் பகலும் அவரது தொல்லையில் அழுந்திக்கொண்டிருக்கும் எங்களை விரை வில் வந்து காக்கவேண்டும் என்று தங்கள் பாத பத் மங்களில் விழுந்து மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்
தங்கள் ஆணைக்குட்பட்ட,
சிவகிரி ஜமீன்: வீரபாகுபாண்டிய வன்னியனார்,
ஊற்றுமலை ஜமீன்; மருதப்ப தேவர்.
எட்டயாபுரம்: எட்டப்ப நாயக்கர்

[பக்கட் துரை சபையை நோக்கி வந்து எட்வர்ட் துரைக்கு வணக்கம் செலுத்தல்]

எட்: பக்கட்! கட்டபொம்மனுடைய கொட்டம் அளவிற்கு மிஞ்சிப் போய்விட்டதே!

பக்கட்: ஆமாம்! அதைப்பற்றித்தான் நானும் சொல்ல வந்தேன். இப்பொழுதே அவனை அடக்காவிடில் பின்னால் நாம் அவதிப் படவேண்டியது தான். தானாபதியை சிறைப்பிடிக்க அனுமதி கேட்கப்போன என்னையும், கம்பெனியையும் அவமதித்து அலட்சியம் செய்து விட்டான். நெல்லை கொள்ளை செய்வ தோடு அல்லாமல், வீரம் பேசி கம்பெனியை ஏசுகிறான். அ வனை உடனே ஒடுக்கவில்லையானால் இனி நாம் பல தொல்லைகளை அனுபவிக்க வேண்டியதுதான். பின்பு அவனை ஒடுக்குவது முடியாத காரியம்!

எட்: எது முடியாத காரியம்? பிரித்தாளும் சூழ்ச்சியில் நமக்கு ணையாக யாரிருக்கிறார்கள்? போதாததற்கு சிவகிரியான், ஊற்றுமலையான், எட்டயாபுரத்தான் ஆகிய மூன்று ஜமீன் தார்களுடைய பரிபூரண ஒத்துழைப்பும் இருக்கிறது. அவன் வர்க்கமே அவனைக் காட்டிக்கொடுக்க திட்டமிடும்போது, நம் வர்க்கம் ஏன் கோட்டைகட்டி வாழ முடியாது? முக்கியமாக எட்டப்ப நாயக்கருக்கு நாம் பெரும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். கட்டபொம்மனை ஒழித்துக்கட்டும் வகைக் காக, தன்னாலான உதவியைத் தான் எப்பொழுதும் செய்யக் காத்துக்கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார். எனவே, அவனை முதலில் முடித்துக் கட்டுவதற்கு வேண்டிய திட்ட மொன்றை வகுக்க வேண்டும். அதற்கு வேண்டிய யோசனை ஏதாவது உங்களால் சொல்ல முடியுமா?

[பானர்மென் எழுந்திருந்து]

பானர்: என்னால் சொல்ல முடியும்!

எட்: தீட்டியது, நல்ல திட்டம் தானே!

பானர்: திட்டம் நல்லதுதான் – ஆனால் அதை சட்ட பூர்வமாக அமுல் செய்ய வேண்டும்!

எட்: செய்து விட்டால் போகிறது!

பானர்: செய்து விடலாம். ஆனால் அதன் மார்க்கம் சரியல்ல வென்று.

எட்: மார்க்கம் எதுவாயிருந்தால் என்ன? நமது நோக்கம் நிறை வேறினால் போதும்.

பானர்: ஆமாம், போதும். ஆனால் பாருங்கள்,அதில் ஒரு சங்கட மிருக்கிறது.

எட்: அப்படி என்ன சங்கடம்?

பானர்: பிரமாதமாக அப்படி ஒன்றுமில்லை. இருந்தாலும் பார்ப்பவர்கள் பயங்கொள்ளி, பாபி, ஆண்மையற்றவன், நேர்மையற்றவன் அப்படி இப்படி என்று ஏதாவது குறை சொல்வார்களே என்றுதான் எண்ணுகிறேன்.

எட்: யார் என்ன சொன்னால் நமக்கென்ன, நண்பரே? நமக்கு ஆகவேண்டியது முதலாவது கட்டபொம்மனின் கொட்டம் ஒடுங்கவேண்டும்; எட்டுத்திசையும் நம் கொடி பறக்க எண்டிசை மன்னரும் நம்மை வந்து வணங்கவேண்டும். இதற்காக எதை வண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் செய்யத் தயங்காது நான் காத்துக் கொண்டிருக்கிறேன். தயங்காது நீர் உமது திட்டத்தை தெரியப்படுத்தும்.

பானர்: அப்படியானால் நாம் இப்பொழுதே வெற்றி அடைந்ததாக முடிவு செய்து கொள்ளலாம். சுருக்கமான முறை – திருத்தமான போக்கு வெற்றி அடைந்தே தீருவோம். நாம் தாமதமின்றி உடனே திருநெல்வேலிக்கு தளபதி ஒருவரை அனுப்பி கட்டபொம்மனுக்கு தாக்கல் இல்லாமலே, பெரும் படையுடன் சென்று இரவோடு இரவே படையெடுத்துத் தாக்கிக் கோட்டையைப் பிடிக்கவேண்டும். துணிந்து செய்ய வேண்டும். இதுவே எனது அபிப்பிராயமும், ஆசையும்!

பக்கட்: ஆம். அவர் சொல்வது அத்தனையும் சரியே. இல்லை யென்றால் அவனை எளிதில் வெல்வது முடியாத காரியம். சூழ்ச்சி செய்தாலன்றி அவ்வீரனை வீழ்ச்சியடையச் செய்ய ஒருக்காலும் முடியாது. அதற்குத் தகுந்த ஒரு தீரனை இங்கிருந்து அனுப்பி வைப்பதே நலம்.

எட்: அப்படியானால் அதற்குத் தகுதியானவர் ஜெனரல் பானர்மென்தான். பானர்மென், நீரே அங்கு சென்று எட்டப்பனைக்கண்டு பேசி அந்த நாட்டின் நிலைமையை நன்கறிந்து, பிள்ளையையும் பிடித்து, கட்டபொம்மனையும் கட்டி கைதியாக என் காலடியில் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். இந்தப் பொறுப்பை நீர் இதை எவ்வளவு திறமையாகச் செய்து முடிக்க வேண்டுமென்று நான் சொல்லி உமக்குத் தெரிய வேண்டியதில்லை. உமக்கு கம்பெனியின் சார்பாக அதற்சூரிய சகல உரிமைகளையும் கொடுத்திருக்கிறேன். இதற்காக நண்பர் பக்கட்டையும் வைத்து நம் புகழ் திக்கெட்டும் பரவ நீர் வெற்றியுடன் திரும்பி வாரும்.

(எட்வர்ட் பானர்மெனை கை குலுக்கி வீரவாள் ஒன்று கொடுக்கிறார், அப்படியே எல்லோரும் கை குலுக்குகிறார்கள்.)

காட்சி 11

இடம்: அரண்மனை.

உறுப்பினர்: கட்டபொம்மன், தானாபதி, ஊமைத்துரை, சேவகன்.

நிலைமை: தானாபதியும் சேவகனும் கட்ட பொம்மனை பார்க்க வருகிறார்கள்.

தானா: மகாராஜா! என்னை அழைத்து வரச் சொன்னீர்களாமே!

கட்ட: ஆம்.இதோ பாரும், இந்தக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறதென்று.

[அரசர் கடிதத்தைக் கொடுக்க தானாபதி பிள்ளை அதை வாங்கிப்படிக்கிறார்]

பாளையங்கோட்டை.,
20-8-1799

பாஞ்சாலங்குறிச்சி ஜமீன் கட்டபொம்முவுக்கு. கிழக்கிந்தியக் கம்பெனியின் தளபதி ஜெனரல் பானர்மேன் தெரிவித்துக் கொள்வது. கிழக்கிந்தியக் கம்பெனி சங்கத் தலைமை காரியாலயத்தார் சென்னையிலிருந்து என்னைப் பாளையங்கோட்டைக்குத் தளபதியாக சகல உரிமைகளோடும் அனுப்பியிருக்கிறார்கள். எனவே நமக்குள் இருக்கும் சச்சரவுகளை நீக்கிக் கொள்ளும் பொருட்டு நாம் கலந்து ஆலோசிக்க வேண்டியதிருப்பதால், தாங்கள் தவறாமல் பாளையங் கோட்டையில் வந்து என்னை பேட்டி கண்டு கொள்ளலாம்.

இங்ஙனம்,
பானர்மென்,
கிழக்கிந்தியக் கம்பெனி தளபதி,
பாளையங்கோட்டை

தானா: அரசே! இதில் எதோ சூது இருக்கின்றது. பகையாளியின் குடியை உறவாடிக் கெடு என்பது போல், நம்மை உறவு கொண்டாடி ஒழித்துக்கட்ட திட்டமிட்டிருக்கிறான். தாங்கள் அங்கு சென்றால் தங்களை அவன் கண்டிப்பாக சிறைப் பிடிப்பான்.

கட்ட : இதற்கு யோசனை?

ஊமை: நாமும் கடிதம் எழுதி அனுப்பிவிட்டால்?

தானா: வேண்டாம். சிறந்த தூதன் ஒருவனை அனுப்பி விஷயத்தை நேரில் தெரிந்து வருவதுதான் நல்லது.

ஊமை: ஆம்; அதுவும் சரியான யோசனை தான்.

கட்ட: அப்படியானால் அதற்குத் தகுதியாக யாரை அனுப்பி வைக்கலாம்?

ஊமை: அண்ணா! நானே நேரில் சென்று வருகிறேன். என்னைக் கண்டதும் அந்த வெள்ளைத் துரைகள் நடுநடுங்கிப் போகமாட்டார்களா?

தானா: மாட்டார்கள்; புலிக்கு வைத்த குறிக்கு புலிக்குட்டி வந்ததே என்று தள்ளிவிடவும் மாட்டார்கள்.

கட்ட: பிள்ளையே! உமது அபிப்பிராயம் தான் என்ன?

தானா: அரசே! வாய்ப்பேச்சிலும் வாள் வீச்சிலும் வலிமை நிறைந்த வன்னியனாரையே அனுப்பி வைக்கலாம். அவரே அதற்குச் சிறந்தவர்.

கட்ட: ஆம்! அவரே அதற்குத் தகுந்தவர். (சேவகனைக் கூப்பிட்டு) வன்னியரை உடனே அழைத்து வா.

சேவ: அப்படியே அரசே!

(சேவகன் போகிறான்)

ஊமை: அண்ணா! திருச்செந்தூரில் முருகப்பெருமானது விசேஷ நாள் நெருங்கிவிட்டது. நாம் போய் வரவேண்டாமா?

கட்ட: தம்பி! இப்போது நிலைமை சரியில்லை. நீ மட்டும் போய் முருகனை தரிசித்து வா. நான் இங்கேயே இருக்கிறேன்.

ஊமை: ஆகட்டும் அண்ணா! நான் வருகிறேன் (போதல்.வன்னியனார் கைகூப்பியபடி வந்து கட்டபொம்மனை வணங்குகிறார்.)

வன்: மகாராஜா! நமஸ்காரம்.

கட்ட: வன்னியனாரே! நீர் பாளையங்கோட்டை சென்று, எனக்கு வர சௌகரியம் இல்லை என்றும், உம்மிடமே எல்லா விஷயங் களையும் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நான் சொன்ன தாக பானர்மெனிடம் சொல்லவும்.

வன்: நல்லது அரசே! தமிழ்நாட்டின் தற்பாதுகாப்புக்காகத் தாய் நாட்டுத் தூதனாக போகும் முதல் பாக்கியம் எனக்கு கிடைத்ததற்காக நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

கட்ட: வன்னியனாரே! நீர் அங்கு செல்வதில் மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். உம்மைச் சிறைபிடிக்க அவர்கள் ஏதாவது சூழ்ச்சி செய்தாலும் செய்வார்கள். அபாயமில்லாமல் தப்பி உபாயத்தோடு திரும்பி வாரும். பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்.

வன்: நல்லது அரசே! நான் வருகிறேன். (போதல்)

கட்ட: தானாபதி! மற்றொரு ஒற்றனையும் பின்னால் அனுப்பி அங்கு நடக்கும் விபரத்தை அறிந்து வரச் சொல்லும்.

தானா: உத்தரவு.

காட்சி 12

இடம்: கும்பினியாரின் அரண்மனை.

உறுப்பினர்: ஜெனரல் பானர்மென், துரைகள், எட்டப்ப நாயக்கர், பக்கட், சேவகன், வன்னியனார்.

நிலைமை: எல்லோரும் உட்கார்ந்து கொண்டு பானம் அருந்துகிறார்கள். சேவகர் இருவரும் முன்னால் நிற்கிறார்கள்.

சேவ 1: (மற்றொரு சேவகனைப் பார்த்து) அடே, அங்கே பார்த்தியா?

சேவ 2: என்னத்த பார்க்க, திண்ணுகிட்டு இருக்காங்களே அவுங்க வாயையும், வவுத்தையும் பார்க்கச் சொல்றியா?

சேவ 1: அட தீவட்டி, அங்கே கோமுட்டி மாதிரி ஒருத்தன் இருக்கானே, அவனைப் பார்த்தியாண்ணே?

சேவ 2 அதான், வாயும் வவுறும் புடக்கத்திண்ணுகிட்டு இருக்காரே, அவருக்கென்ன?

சேவ 1: அவரு யாரு தெரியுமாடா உனக்கு?

சேவ 2: எவனோ இருந்துட்டுப் போறான். அதைப்பத்தி நமக் கென்னடா? ஒரு துளி பானத்துக்கு வழியில்லை…

சேவ 1: அதைத்தாண்டா நானும் சொல்ல வர்ரேன். ஒன்னை மாதிரியும் என்னை மாதிரியும் உண்மையா உழைக்கிறவனுக்கு இதுகாலமில்லை, தம்பி! அந்த தண்டச்சோத்து தடி ராமன் மாதிரி அவன் நாட்டுக்காரனுக்கே எதிரியா இருந்துக்கிட்டு, இங்கே திட்டம் போடுரானே இந்த எட்டப்பன், இவமாதிரி ஆளுங்களுக்குத்தான் இது காலம்.

சேவ 2: சரிதான் போடா, பெரிய உண்மையை கண்டு பிடிச்சிட்டான்! அவன் நாடுன்னு என்ன எழுதியா வச்சிருக்கு, சமய சந்தர்ப்பத்துக்கு ஏத்த மாதிரி எல்லா வேஷமும் போட்டுக்கிட்டு அப்படியே காலத்தைத்தள்ள வேண்டியது தாண்டா சரி! நீ வேணும்னாலும் பாரு, இப்ப இந்த எட்டப்பருக்கு எவ்வளவு மதிப்பு இருக்கு பார்த்தியா!

பானர்: (எழுந்திருந்து) இந்த விருந்தில் கலந்து கொண்ட எல்லோருக்கும் கம்பெனியின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக நமது புது நண்பர், நமது நலமே தனது நலம் எனப்பேணும் எட்டயாபுரம் ஜமீன் எட்டப்ப நாயக்கருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் மட்டும் என்ன, நமது கம்பெனியே கடமைப்பட்டிருக்கிறது! அவர் இதுவரையும் நமக்குச் செய்துள்ள உதவி, முக்கியமாக, கட்டபொம்மனைச் சிறை பிடித்துக்கொடுக்கத் தீட்டித் தந்த திட்டங்களும், அதற்காகத் தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் செய்யத் தயாராகக் காத்திருக்கும் அவரது தயாள குணமும் கம்பெனியார் அவருக்கு இருக்கும் அன்பும் ஒருக்காலும், ஒருவராலும் மறக்க முடியாத சரித்திரப் பிரசித்தமாய் விட்டது. தன் சொந்த இனத்தவருக்கு வஞ்சகம் புரிந்து, தன் தாய்நாட்டை நெஞ்சஞ் சாமல் நமக்குக்குக் காட்டிக்கொடுக்கிறான் என்று தவறாக சிலர் நண்பர் எட்டப்பரைக் கருதலாம். ஆனால் வருங்காலம் இந்த ஒரு கட்டபொம்மன் போல் எத்தனை பொம்மன்கள் அவதரித்தாலும் ஆட்சிசெய்வது கடினம் என்ற உண்மை நிலை உணர்ந்து தான், நமது ஆட்சியை நிலை நிறுத்தப் பாடுபடுகிறார். அதிலும் நமது ஆட்சியை அவரே விரும்புகிறார் என்றால், அது நமது ஆட்சியின் நீதியையும் நேர்மையையும் தான் எடுத்துக்காட்டுகிறது. தமிழ் நாட்டில் எட்டப்பர் ஒருவர் இருக்கிறாரே என்பதற்காகத்தான் கட்டபொம்மனுடைய கோட்டையும் இருக்கிறது. அவருக்கு நாம் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே இதுவரை அவர் செய்து வந்த சேவையோடு இனியும் மிக ஊக்கமாகப் பாடுபட்டு, கட்டபொம்மனை முடித்துக்கட்டும் இறுதி நாள் எது என்ற உண்மையையும் எடுத்துக் கூறுவார்கள் என்று நம்புகிறேன். அத்துடன் சிவகிரியாரும், புதுக்கோட்டையாரும் இதற்குப் பரிபூர்ண ஒத்துழைப்பு செய்வார்கள் என்று நம்புகிறேன். அவருக்கு கம்பெனியாரின் அன்புக்காணிக்கையாக இந்தப் பொன்மாலையைச் சூட்டுகிறேன்.

[பானர்மென் எட்டப்ப நாயக்கருக்கு மாலை சூட்டிக் கை குலுக்குகிறான்]

எட் : கனம் பொருந்திய துரை அவர்களுக்கும் மற்றும் கூடியுள்ள அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். துரை அவர்கள் என்னைப்பற்றியும், என் அருங்குணங்களைப்பற்றியும் உங்களிடம் அதிகமாகச் சொல்லி விட்டார்கள். இருந்தாலும் என்னை சிலர் தேசத்துரோ காட்டிக்கொடுக்கும் கயவன்; பயங்கொள்ளி என்றெல்லாம் அழகிய புனைப்பெயரிட்டு அழைக்கிறார்கள். அதுவும் என் செவிகளுக்கு இன்பமாகத்தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில் என்னைப்போன்ற ஜமீன் தார்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டுமானால், தாய் நாடு வாழவேண்டுமானால், நமக்குத் தகுதி வாய்த ஒரு தலைவன் வேண்டும். அந்தக் தலைவன் சகல வல்லமையும் பொருந்தியவனாகவும் இருக்க வேண்டும்.அப்படிப்பட்டவர்கள் ஆங்கிலேயர்களைத்தவிர வேறு யாருமல்லர். நம்மைக்காக்கும் தந்தை ஆங்கிலேயர்கள் தான். 5000 மைல்களுக்கப்பாலிருந்து நம்மை ஆளும் சக்தி படைத்த வெள்ளையர் ஆதிக்கத்துக்கு நாம் அடிபணிந்து, அவர்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு அஞ்சி, நடுங்கி நடந்து கொள்ளவேண்டியது நமது ஒவ்வொருவருடைய முக்கியமான கடமையாகும். எனவே என் உயிர் உள்ளளவும் நானும் என் பரம்பரையும் கம்பெனியாருக்கே உழைத்து ஊழியம் செய்வோ மென்று உறுதியாகக் கூறுகிறேன். (எல்லோரும் கை தட்டுதல்)

[சேவகன் ஒருவன் வந்து பானர்மெனை வணங்கி]

சேனா: சார்! பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தூதன் தூதன் ஒருவன் வந்திருக்கிறான்.

எட் : (நடுக்கத்துடன்) என்ன,பாஞ்சாலங்குறிச்சியிலிருந்தா?

பானர்: ஏன், பயமாயிருக்கிறதா உமக்கு?

எட்: (நாவு தடுமாற) ஹ…ஹ…இல்லை இல்லை. பக்கத்தில் நீங்கள் இருக்கும் பொழுது எனக்கென்ன பயம்? அவன் வரட்டும்.. நான் பார்த்துக்கொள்கிறேன்.

பானர்: அழைத்து வா! (சேவகன் போகிறான்) கட்டபொம்மனை அழைத்ததற்கு தூதனையா அனுப்பி இருக்கிறான்! மடையன்! நம்முடைய சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டுவிட்டான் போலிருக்கிறதே. பெரிய புத்திசாலிதான். தூதனா வருகிறான், இதுவும் நல்லதுதான் இன்றைக்கு இவனைச் சிறைப்பிடித்தால் நாளைக்கு அவன் படையெடுப்பான். பின்பு அவன் முடிதுறப்பதென்ன நடக்காத காரியமா? பாஞ்சாலங் குறிச்சியானை பரதேசியாக்கச் சரியான சந்தர்ப்பம்.

[வன்னியனார் சபையை நோக்கி வருதல்]

வன்: நமஸ்காரம் துரையே!

பானர்: யார் நீ? எங்கு வந்தாய்?

வன்: துரையே! தலை முறை தலை முறையாக தன்னிநிகரற்று – படைப்பலம் பெற்று வாஞ்சையை வளர்த்து, கோட்டையை வளர்த்து – கொடுஞ்சமர் புரிந்து, திக்கெட்டும் பரவ ஜெயக்கொடி நாட்டி, அன்னியராட்சியின் ஆதிக்கம் அலற ஆற்காட்டு நவாப் சாதிகான் தளர, திசைகாவல் புரிந்து மகசூலைப் பிரித்து, சின்ன நவாப் என்ற சிறப்புப்பெயர் பெற்று, மன்னாதி மன்னரெல்லாம் பணிய மணி முடிதரித்து மக்களின் மங்கள வாழ்வுக்காகப் பாஞ்சையை வாஞ்சையுடன் அரசாண்டுவரும் மன்னாதி மன்னர், வணங்காமுடி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவே எமதரசர், அவர் அனுப்பிய தூதன் யான். என் பெயர் வன்னியனார்.

பானர் : ஒஹோ…இவ்வளவு கனத்தவரா உங்கள் மகாராஜா? வருவதாக ஒரு வார்த்தை சொல்லி அனுப்பியிருக்கக்கூடாதா? (சிரிப்பு) என்ன விஷயமாக வந்தீர்களோ?

வன்: நீங்கள் வரச்சொல்லி எழுதியிருந்த கடிதத்தின் காரணமாக..

பானர்: நான் வரச் சொன்னது…

வன்: ஆம், மகாராஜாவைத்தான். அவர்களுக்கு வர சௌகரிய மில்லாததால் என்னை அனுப்பி வைத்தார்கள்.

பானர்: அப்படியானால், மகாராஜா பேச வேண்டியதைப் பூராவும் நீரே பேசுவீர் என்று சொல்லும்.

வன்: ஆம், கூடுமான வரையில்.

பானர்: அப்படியானால் மகாராஜாவின் பிரதிநிதியென்றே சொல்லும்.

வன்: ஆம், அப்படியே வைத்துக் கொள்ளுங்களேன்!

பானர்: வைத்துக் கொள்வதென்ன? வன்னியனாரே, உமக்கு வாழ நான் வகை செய்கிறேன் – நிறைய பணம் தருகிறேன். ஏன்? கும்பினியின் ஆதிக்கத்தில் உம்மை பாஞ்சையின் அரசனாகவே ஆக்கி விடுகிறேன் – என் வார்த்தையைக் கேட்டால்!

வன்: துரையே! பொன்னைக்காட்டி உன் போன்று மண் சேர்த்து வைத்திருக்கும் மானமிழந்தவனல்ல நான். மணணோடு மண்ணாவதானாலும் சரி, சரி, உ உன்னோடு னாடு இணங்க ஒருக் காலும் முடியாது.

பானர்: என்ன, என்னையா எதிர்த்துப் பேசுகிறாய்? வன்னியனாரே, நடுக்கடலிலே தீப்பற்றிக்கொண்ட கப்பலிலிருந்து தப்பித்துக்கொள்ள உமக்கு ஆசை இருக்கிறதா?

வன்: உன்னைக் கெடுக்கிறது உன் புத்தி! ஆயிரம் ஆயிரம் மக்களோடு அங்கே என் மன்னர் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் போது, கேவலம் என் உயிர் மட்டும் என்ன கரும்பா,தேனா அல்லது..

பானர்: எதுவாயிருந்தால் என்ன? இரண்டும் நல்ல ருசி உள்ளவை தானே! ஒரு சமயம், ருசி உள்ள பழத்தை எங்கே வெட்டிப் புசித்து விடுவார்களோ என்று பயப்படுகிறீரா வன்னியனாரே? உமக்கு அந்தவிதமான ஆபத்து ஒன்றும் ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை நம்பும்.

வன்: உன்னை நான் நம்புவதா! ஆங்கிலேயன் யார் தெரியுமா?

எட் : தெரியுமே! உன்னைச் சூரையாட வந்த வீரன் என்று

வன்: ஆம், நீ ஒரு கோழையாக இருக்கும்போது!! வீரர்களிடம் நேரிடையே போரிட முடியாது, எதிரிகளின் பின்னே வந்து பேடித்தனமாக வெட்டி வீழ்த்தும் கோழை, சூழ்ச்சிக்காரன், நயவஞ்சகன், இருக்கக் கொடுத்த இடத்தையும் படுக்கை மாக்கிய பாதகன் அல்லவா ஆங்கிலேயன்..

எட்: சரிதான் நிறுத்து. எல்லாம் தெரிந்தவன் போல…

வன்: ஆம், அது எங்கே உனக்குத் தெரியப்போகிறது! படித் தும் படித்தபடி நடக்கத்தெரியாதவனே, அது எங்கே உனக்குத் தெரியப் போகிறது? தம்பி ஆள்வது பொறுக்காமல், பகைவனிடம் கெஞ்சிக்கூத்தாடி, கும்பிட்டு, அவன் கொடியைக் கையில் எடுத்து ஊர் சுற்றித்திரியும் ஏவலாளியே – அது எங்கே உனக்குத் தெரியப்போகிறது? அவன் இட்ட எச்சில் உணவை உண்டு காலத்தைக் கழிக்கும் கயவனல்லவா நீ! தமிழகத்தை மறந்த நீயும் ஒரு தமிழனா ? மானம், சூடு, சொரணை உன்னிடம் இருந்தால் – ஸ்தானம் விட்டு ஸ்தானம் வந்து, தானம் கேட்கும் பாவனையில், மானமிழந்த மனிதனாக நீ வாழ்வாயா? சுதந்திர கோஷமிடும் சுதந்திர புருஷர்களையும், தாய் நாட்டு பக்தர்களையும், தேசத் தொண்டர்களையும், எதிர்த்து அடிக்கவரும் அன்னியன் வீட்டு அடிமையே! சுயாட்சி செய்துவரும் எங்களைத் தொலைக்க, நியாய அநியாயம் தெரியாது, எடுத்ததற்கெல்லாம் குறை கூறிக்கொண்டிருக்கும் நீதான் சாதித்துவிட்ட சேவை என்ன? முன்னோர்கள் தேடி வைத்த சொத்தை நிலை நாட்டத் தெரியாமல், அயல்நாட்டுக் கீதம்பாடி, ஆங்கிலேயனைப் பார், வெள்ளையனைப் பார்! பார் ! பார்!! என்றுதான் கூவிக்கொண்டிருக்கின்றாயே தவிர, செய்யும் காரியங்களுக்கெல்லாம் இடையூறு தான் கொண்டிருக்கின்றாயே தவிர, மேல் நாட்டின் மேன்மையைப் பற்றித் தெரிந்த நீதான் நம் நாட்டுக்கு செய்து வந்த சேவையென்ன? நாட்டின் நலனுக்காக நம் மன்னன் அங்கே அவதிப் பட்டுக் கொண்டிருக்கும்போது – நீ எதிரியின் பாட்டிலே, பாசறையிலே விருந்துண்டு விளையாடிக்கொண்டிருக்கிறாயே, இதுதான் நீ நாட்டுக்குச் செய்யும் நல்ல பணியோ? உன் போன்ற காட்டிக்கொடுக்கும் கயவர்கள் இந்நாட்டில் உள்ளளவும் ஒருக்காலும் மனித குலம் உய்ய முடியாது. முதலில் நீ ஒழியவேண்டும். அப்போதுதான் நாடு நலம் பெறும்.

எட்: சீ சீ… என்னைப்பற்றிப் பேச உனக்கு என்ன உரிமை இருக்கிறது?

வன்: பண்பு கெட்டவனே! நீ தமிழனாகப் பிறந்துவிட்ட உறவு இருக்கிறது. தமிழ்த்தாய் வயிற்றிலே நீ ஏன் தவறிப் பிறந்தாய்? தமிழ் நாட்டின் தலைவாசலிலே த லைமகன் வீரபாண்டியன் காவல்; மேல் நாட்டின் மேஜருக்கு, நீ இங்கே குற்றேவல்! தாயின் மணிக்கொடிக்கன்றி வேறொன்றுக்கும் லை வணங்காத தமிழரசு அங்கே; பேயின் இனக்கொடியைக் காமேந்தி ஊர் சுற்றித் திரியும் நீ இங்கே! ஐயாயிரம் மைல் களுக்கு அப்பால் இருந்து இவன் அனுப்பியா நீ உண்ண வேண்டும்? உன் நாட்டில் விளைவதென்ன மண்ணா?

எட் : சீ, துரோகி! போதும் உன் பிரசங்கம்!

வன்: யாரைப்பார்த்து துரோகி என்கிறாய்? அன்னியனுக்கு நாட்டை அடக்கம் செய்ய ஆலோசனை புரிய வந்த நீ துரோகியா நாட்டின் சுதந்திரத்திற்காக தூது வந்த நான் துரோகியா? “துரோகி” என்று கூறிய இவ்வார்த்தை மட்டும் எம் மன்னர் காதில் பட்டிருந்தால், இதற்குள் உன் தலை கீழே புரண்டிருக்கும்.

பானர் : (வேகமாக வந்து வன்னியனார் கன்னத்தில் படீர் என்று அடித்து) கேப்டன் டல்லாஸ்! இந்தப் புலிக்குட்டியைக் கொண்டுபோய் கூண்டில் அடையுங்கள்.

[சேவகர்கள் வந்து பிடித்துக்கொள்ளுதல்]

வன்: துரையே, இதுதான் உமது நீதியா? தூதனைப் பிடித்து சிறையிலடைப்பது தான் அரச தர்மமா?

பானர்: இழுத்துச் செல்லுங்கள் இவனை.

வன்: உனக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது. எம் மன்னவரை எதிர்த்து நின்றவர் இதுவரை எங்குமே இல்லை. மண்ணோடு மண்ணாவது மட்டும் திண்ணம்.

[இழுத்துச் செல்கிறார்கள்]

பானர்: என்ன எட்டப்பரே! வந்தவனை உபசரித்த முறை சரிதானா?

எட் : ஆஹா, சரியான உபசாரம், சரியான உபசாரம்!!

பானர்: அதிருக்கட்டும், இப்போது கட்டபொம்மன் நிலைமை என்ன என்பது உமக்குத் தெரியுமா?

எட்: ஆகா, படையெடுக்கத்தானே?

பானர்: ஆம், படையெடுக்கத்தான் – அப்பாதகனைத் தொலைக்கத்தான்.

எட்: சரியான முடிவு. தடையேதுமின்றி தாராளமாகச் செல்லலாம்.

பானர்: படையேதும் தன் பக்கம் வைத்திருப்பானோ அவன்?

எட்: அதேது துரையே அவனிடம் இப்போது?

யானர். தற்போதைய நிலை தான் என்ன எட்டப்பரே ?

எட்: சற்றேனும் மலையாமல் செல்லலாம். உறவினரும், தம்பி ஊமைத்துரையும் திருச்செந்தூருக்கு முருகன் விழாவிற்குப் போயிருக்கிறார்கள். மந்திரி தானாபதிப் பிள்ளையோ ஓய்வுக்காக ஆத்தூர் போயிருக்கிறார். கோட்டையிலே இப்போது ஒரு குஞ்சுகூட இருக்காது. உடனே சென்றால் அவனைத் தடையின்றி கட்டிவிடலாம். இது தான் தக்க சமயம். தாங்கள் தாமதம் செய்யக்கூடாது. உதவிக்கு நானும், என் படையும் வருகிறோம்.

பானர்: எட்டப்பரே ! உமது உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்.

எட்: செய்யலாம் துரையே, செய்யலாம்!

பானர்: என்ன அது?

எட்: உங்கள் பாதத்தின் கீழ் என்னை அந்த பாஞ்சாலங்குறிச்சிக்கு சிற்றரசனாக…நான் உங்கள் அடிமை…உங்களுக் காகவே உழைக்க உறுதிகொண்ட உங்கள்..

பானர்: எட்டப்பரே! இதை நீர் சொல்லியா நான் செய்ய வேண்டும். உலகில் என் ஆட்சி உள்ளளவும் பாஞ்சை உமக் குத்தான். எட்டப்பரே ! நீர் ஒன்றுக்கும் பயப்படவேண்டாம். உமக்கு வேண்டிய வசதிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். இன்று முதல் உமக்கு கம்பெனியாரின் பகதூர் பட்டம் கொடுத்திருக்கிறேன். இனி உம்மை பகதூர் எட்டப்ப நாயக்கர் என்று அழைக்கிறேன்.

எட்: தங்கள் கட்டளை என் பாக்கியம்!

பானர்: பகதூர் எட்டப்ப நாயக்கரே! நீர் உடனே சென்று படை திரட்டி வாரும். பாஞ்சாலங்குறிச்சியாரைப் படுகுழியில் புதைத்துவிடுவோம். கேப்டன் பக்கட்!

(பக்கட் எழுந்து நிற்கிறார்)

பானர்: பாஞ்சாலங் றிச்சியை நோக்கி நமது படைகள் புறப்படட்டும். அவனுக்கு எந்த விதமான அறிவிப்புமின்றி இன்று இரவு ஒன்பது மணிக்கு போர்! போர் !! போர் !!! (சிரிப்பு) கேப்டன் பக்கட்! அதோடு தானாபதியைப் பிடிப்பதற்காக, ஆத்தூருக்கு இருநூறு வீரர்களை அனுப்பி அவனைக் கைதியாக்கி என் காலடியில் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். தெரிந்ததா?

பக்கட்: அப்படியே செய்கிறேன்.

பானர்: நாளை மாலை சூரியன் அஸ்தமனமாவது போல் அவன் சாம்ராஜ்யமும் அஸ்தமனமாகும். அவன் கோட்டை தவிடு பொடியாகி, ஆண்களும் பெண்களும், பச்சிளங்குழந்தை களும் ஆ…ஒ… என்று ஓலமிட்டு பதறித் துடித்து உயிர் துறக்கும் பெருநாள்! நாளைய நான் ஒரு நன்னாள்!! ஆங் கிலேயரின் சரித்திரத்திலேயே பிரசித்தி பெற்ற ஒரு பொன்னாள்!!! தமிழனுக்கும் வெள்ளையனுக்கும் உரிமைப் போர் நடக்கும் முதல் நாள் !!!! இதுவரை யாரும் கண்டும், கேட்டுமிராத உயிர்வதை, உடல் வதை. கோட்டை வாயிலிலே தானாபதியின் தலை சித்ரவதை! (கோரச்சிரிப்பு) என் திறனை மதியாதானே, நாளை நீ சித்ரவதை! சித்ரவதை !!

காட்சி 13

இடம்: போர்க்கள மேடை.

உறுப்பினர்: கட்டபொம்மன், கெடிவெட் டூர் நாயக்கர், படைவீரர்கள், சேவகன், சிவத்தையா.

நிலைமை: படைவீரர்கள் சூழ அரசர் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது சேவகன் ஒருவன் ஓடி வருகிறான்.

சேவ: மகாராஜா! தூதுபோன வன்னியனாரைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டார்கள். விட்டார்கள். அதோடு நம்மீது படை யெடுத்து ஒரு பெரும் படை.. ஊருக்கு ஐந்தாவது மைலில் வளைத்துக்கொண்டது மகாராஜா !

கட்ட: ஆ ! அப்படியா?

சேவ: ஆம். இவ்வளவுக்கும் காரணம் எட்டப்ப நாயக்கர் தான். அவர் படைதான் முன்னால் நிற்கிறது.

கட்ட: எட்டப்பா, உன் புத்தி என்ன கெட்டுவிட்டதா? உன்னால் நாட்டை வளப்படுத்த முடியாவிட்டாலும், ஏன் இப்படி அலங்கோலமாக்குகிறாய்? மானமிழந்து அவனிடத்தில் மண்டியிட்டு வாழும் உன் வாழ்வும் ஒரு வாழ்வா? இதைவிட இரந்துண்பது மேலாயிற்றே! எட்டப்பா! உன் கொட்டத்தை அடக்குகிறேன், பார்! தமிழ் உறவால் ஒன்றுபட்ட நம் மிடையேயா உனது சாகசத்தைக் காட்டுகிறாய்? ஒன்று நீயும், உன் கொட்டமும் ஒழியவேண்டும். இன்றேல் நான் சுவர்க்கம் போகவேண்டும். (கோபமாக) வெள்ளையத் தேவரே! திரட்டும் இருக்கின்ற படைகளை! நீர் வடக்கு வாயிலிலும், ஆதனூர் ரணசிங்க நாயக்கரை தெற்கு வாயிலிலும், கொல்லங்கிணறு நாகண்ண நாயக்கரை கிழக்கு வாயிலிலும், முள்ளுப்பட்டி முத்தையா நாயக்கரை மேற்கு வாயிலிலும் அனுப்பி உரிமைப் போராக நடத்தி ஜெயக்கொடி நாட்டுங்கள்! வில்லாலர்களை ஏவி, வெள்ளையர்களின் தலை தெறிக்க ஓடச்செய்யுங்கள். தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்த வீரப் பெரு மக்களே! வீறுகொண்டெழுங்கள்! வீணர்களை வெட்டும் கள்! அன்னியர்களை அடக்குங்கள்! சுய உரிமையைப் பறிக்க வந்த இந்த சுதந்திர எதிரிகளின் தலைகளைச் சுக்கு நூறாக்கி காக்கைக ளு ளு க்கு கும், கழுகுகளுக்கும் இரையாகக் கொடுங்கள். இன்று நடக்கும் போர், சுதந்திரப் போர்! தமிழ்நாட்டின் தாய் மானத்தைக்காக்கும் தனி உரிமைப்போர்! தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் இதில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். வீரர்களே! உண்மையாக உங்கள் தாயை ஒருவன் அடமாகக் கவர்ந்து செல்ல, திடமாக முன் வந்து கை நீட்டி எட்டிப் பிடித்துக்கட்டி அணைக்கும் காட்சியை நீங்கள் கண்டால், உங்கள் மனம் படும்பாட்டை நீங்கள் நன்கு உணர்வீர்கள். குணங்கெட்ட செயலில் ஈடு பட்டவனை ஒழித்துக்கட்டுவதற்காக இன்றே புறப்படுங்கள்.

[கெடிவெட்டூர் நாயக்கர் பதட்டத்துடன் ஓடி வந்து]

கெடி: மாப்பிள்ளை !

கட்ட: என்ன மாமா! எதிரிகளால் தங்களுக்கு ஏதாவது இடையூறா?

கெடி: இல்லை மாப்பிள்ளை !

கட்ட : பின்? என்ன மாமா, தாங்கள் நடுங்குவதற்கு காரணம்?

கெடி: மாப்பிள்ளை! இல்லை…மகாராஜா ! நான் சொல்லுவதை தயவு செய்து கேட்கவேண்டும்.

கட்ட: அப்படி என்ன மாமா, நீங்கள் சொல்லப்போகிறீர்கள்? தைரியமாகச் சொல்லுங்கள்.

கெடி: மகாராஜா! உங்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அது எனக்கும் தானே?

கட்ட: ஆமாம். அதற்கென்ன?

கெடி: உங்களுக்கு தாய் மாமனாக நான் இருந்தும் தக்க சமயத்தில் உதவி செய்யாவிட்டால் நாளை உலகம் என்னைத் தூற்றத் தானே செய்யும்.

கட்ட: ஆம். யார் இல்லையென்றார்கள்?

கெடி: தேச நலனைக் காப்பது உங்கள் கடகை இருந்தாலும் உங்கள் நலனைப் பாதுகாப்பது என் கடன் அல்லவா?

கட்ட: ஆம். அது உங்கள் கடன்தான். அதற்கு இப்போது என்ன?

கெடி: மாப்பிள்ளை! நான் சொல்வதை நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும்.

கட்ட: சொல்லுங்கள் மாமா! பெரிய பீடிகை போடுகிறீர்களே!

கெடி: மகாராஜா! தம்பி ஊமைத்துரை திருச்செந்தூரிலிருந்து இன்னும் வரவில்லை. மந்திரி தானாபதிப்பிள்ளையோ தந்திரமாகத் தப்பி ஆத்தூர் போய்விட்டார். தாங்கள் இப்போது தனிமையாக இருக்கிறீர்கள். நமது படைகளோ, பல பக்கங்களிலும் சிதறிக்கிடக்கிறது. கோட்டைக்குள் இருக்கும் நமது படையைப் போல பல மடங்கு அதிகமாக, பீரங்கிப் படைகளுடன் எதிரி பானர்மென் கோட்டையைச் சுற்றிக்கொண்டான். இந்நிலையில் நாம் போர் செய்தால், வெற்றி அவன் பக்கம் என்பதற்கு சந்தேகமில்லை! நம்மைப் பொறுத்த நல்ல காலம் தானோ என்னவோ, ஜெனரல் பானர்மென் என்னை வரவழைத்து “தானாபதியைச் சிறைப்பிடித்துக் கொடுத்து, வரிப்பணத்தையும் கட்டிவிட்டால் யுத்தத்தை நிறுத்திக்கொள்கிறேன். நீர் போய் இரண்டரை நாழிகைக்குள் திரும்ப வேண்டும்” என்று என்னை இங்கு அனுப்பி வைத்தார். தயவு செய்து நீங்கள் யுத்தத்தை நிறுத்திக்கொண்டு சமாதானமாகப்போனால் அது எவ்வளவோ நல்லது. என் வார்த்தையைக் கேளுங்கள். தங்கள் வருகைக்காக துரைகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். வாருங்கள், போய் சமாதானம் செய்து கொள்ளலாம்.

கட்ட: மாமா! உங்களுக்கென்ன மதி மயங்கி விட்டதா? அல்லது எதிரியின் படையைக்கண்டு ஒடுங்கிவிட்டீர்களா? உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் போய் சுகமாகத் தூங்குங்கள்.

கெடி: மாப்பிள்ளை! அப்படிச் சொல்லக்கூடாது. நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப்பார்க்க வேண்டும்.

கட்ட: நினைத்துப் பார்த்துத்தான் சொல்லுகிறேன்.தூது சென்ற வன்னியனாரை தூதனென்றுகூடப் பாராமல் கைது செய்தான். தம்பியும், படையும் கோட்டையில் இல்லையென்பதை அறிந்தும், அறிவிப்பின்றி இரவோடு இரவாகப் படையெடுத் திருக்கிறான். இப்படியெல்லாம் செய்தால் பயந்து வந்து அவன் பாதத்தைப் பணிவேன் என்று எண்ணுகிறான். அது பலிக்காமல் போகவே, இப்போது தங்களைக்கொண்டு பய முறுத்தி காரியத்தைச் சாதித்துக்கொள்ள திட்டமிட்டிருக் கின்றான். தங்களை தூதனைப்போல் பாவனைக்குத்தான் அனுப்பியிருக்கிறானே தவிர, உண்மையில் என்னைக் கொல்ல வந்த காலனாகவே உங்களை உங்களை அவன் கருதியிருக் கிறான். இத்தனைக்கும் காரணம் யார் தெரியுமா, மாமா! அவன்தான், தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தானே துரோகி, அந்தத் தன்மானமற்ற எட்டப்பன் தான்! அவனைப் பார்த் துமா நீங்கள் சமாதானம் செய்ய வேண்டுமென்கிறீர்கள்? முதலில் அவன் ஒழியவேண்டும்.

கெடி: மகாராஜா! நீங்கள் ஒரே நோக்கமாய் இருப்பது சரியல்ல. எல்லோரையும் போல நாமும் நடந்து கொள்வது தான் நல் லது. அவர்களுக்கு இல்லாத குறையா நமக்கு மட்டும் வந்து விடப்போகிறது. நான் சொல்வதை..

கட்ட: என்ன நீர் சொல்வது? பேடியைப்போல அவன் காலடி யிலே போய் விழச் சொல்வது தானே ! முன் வைத்த காலை நான் ஒருக்காலும் பின் வைக்கமாட்டேன். தானாபதி பிள்ளையைச் சிறைப் பிடித்துக் கொடுக்கவும் முடியாது. இங்கு இருக்கும் இச் சிறு படைகளும், என் உள்ளத்தில் இருக்கும் சுதந்திர வீர உணர்ச்சியுமே எனக்குப் போது மானவை. பாண்டியன் பரம்பரையை, வீரப்பாண்டிய கட்ட பொம்மனை யார் என்று நாளை எனது வாள் அவனுக்குக் கூறும். (கெடி வெட்டூர் நாயக்கர் போகிறார், கட்ட பொம்மன் படை வீரர்களைப் பார்த்து) போர் முரக முழங்கட்டும்! சுதந்திர வீரர்களின் தாகத்தை நாளை அவன் காணட்டும். தமிழ் நாட்டில் பிறந்தவரின் உரிமையைக் காக்கும் போர்! போர்!! போர்!!!

மதமதத்த கைகளுக்கு நல்ல வேட்டை – தினவெடுக் கும் தோட்களுக்குத் தரும் ஒரு சிறந்த பயிற்சி-கணகணக்கும் வில்லுக்கும், உறையிலிருக்கும் வாளுக்கும் தக்க விருந்து-வையகத்தை ஓர் குடையின்கீழ் ஆளக் கணவு காணும் ஆங்கி லேயனுக்கும், தமிழகத்தைக் காத்து நிற்கும் தன்மானமுள்ள நமக்கும் நாளைப் போர்! உலகச்சரித்திரத்திலேயே உன் ன தமான இடம்பெறும் உரிமைப்போர் !! இன்றும் என்றும் கண்டும் கேட்டுமிராத கடும்போர் !!! கடும்போர் !!! பீரங்கிக் குண்டுகளை எதிர்த்து பாராங்கற்களை வீசி பலரைப்பதை பதைக்க வைக்கும் போர்! போரிலே வெற்றி இன்றேல் வீர சொர்க்கம். மார் பிலே குண்டேந்தி மாள்வோம் அல்லது வெற்றிமுரசு கொட்டி வாழ்வோம்! அன்னியன் அன்னியன் ஆட்சியை கையாலும் வாயாலும், தலையாலும் தூக்கிச் சுமக்கும் இந்தத் தான் தோன்றிகளைத் தரைமட்டமாக்கி விடுவோம்! தியாக உணர்ச்சிமிக்க திலகங்களே! பாண்டிய வம்சத்து பரம்பரை களே! பாஞ்சாலங்குறிச்சி பெற்றெடுத்த வீரர்களே ! நீங்கள் இந்தப் பாரத பூமியில் பிறந்து, வளர்ந்து பெருமிதப்பட்ட பெருமைக்காகவாவது, நான் ஒரு ஆங்கிலேயனையாவது கொல்லாமல் உயிர்துறக்கமாட்டேன் என்று திடசங்கல்பம் செய்து கொள்ளுங்கள். நம் உடலும், உள்ளமும், ரத்தமும் கொதிக்கும் கொதிப்பிலே அவர்களுடைய கொடுமைகளைப் போட்டு வதக்குங்கள். அவர்கள் தவிக்கத் தவிக்க இனி உன் தாய் நாட்டைத் தலையெடுத்தும் பாரேன் எனச் சொல்லும் படியாக சுதந்திர வெப்பத்தில் போட்டு வாட்டுங்கள்!

படைவீரன்: வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவுக்கு…

எல்லோரும்: ஜே!……

ப. வீரன்: வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவுக்கு… எல்: ஜே!……

ப. வீரன்: பார தநாடு …..

எல்: வாழ்க!

ப. வீரன்: அன்னியன் ஆட்சி…

எல்: ஒழிக!

ப. வீரன்: ஆங்கிலேயன் ஆட்சி…

எல்: ஒழிக!

ப. வீரன்: வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவுக்கு……

எல்: ஜே !…

– தொடரும்…

– வீரபாண்டிய கட்டபொம்மன், ரதி பதிப்பகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *