குறுநில மன்னரான பரமனின் மனம் படபடத்தது.
‘எனது பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக மணமகனை சக்கரவர்த்தி எவ்வாறு முடிவு செய்யலாம்? தனது பேரரசின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றவர் நாடுகளை கட்டுப்படுத்துவது போல் மற்றவர் மனங்களை கட்டுப்படுத்த நினைப்பது, அபகரிக்க நினைப்பது அதிகார துஷ்பிரயோகம் ஆகாதா?’ அரசபையில் உதாரணமாக சில சரித்திர விசயங்களை சாஸ்திரங்களாக ஆதாரம் காட்டி தனது வெறுப்பையும், மறுப்பையும் துணிந்து தனக்கு பேசும் சந்தர்ப்பம் கொடுத்த போது பேசினார்.
“பிடிவாதக்காரியான சத்தியவதியின் நியாயமற்ற பேராசையை நிறைவேற்றிக்கொடுக்க உதவிய பீஷ்மரின் இரக்க குணமுள்ள முடிவின் செயலானது அரச ராஜ்ஜியங்களின் இளவரசிகளின் நியாயமான ஆசைகளை நிறைவேறாமல் தடுக்கும் அரக்க குணமுள்ள முடிவுகளுக்கு அவரை இழுத்துச்சென்று விட்டதன் விளைவினால் உருவான சாபங்களே முடிவில் குரு சேத்திர யுத்தம் நடந்து ஒட்டு மொத்த நாட்டின் பேரழிவு ஏற்படக்காரணமாகி விட்டது. அஸ்தினாபுரத்து அரண்மனை இளவரசர்களுக்கு வாழ்க்கைப்பட்ட அனைவரும் அதிகார பயத்துக்கு உட்பட்டே மணம் முடிக்க சம்மதித்தனரே தவிர, அன்பின் நயத்துக்கு கட்டுப்பட்டு அல்ல. அதிகாரத்தால், பிடிவாதத்தால் அடிபணிய வைப்பதென்பது சம்மந்தப்பட்டவர்களின் இயலாமையால் வரும் மனக்குமுறல்களால் ஏற்படும் சாபங்களின் வலிமையால் நாட்டின் அஸ்திவாரத்தையே பெயர்த்து விடும் என்பதற்கு மகாபாரதம் எனும் இதிகாசமே சான்றாகும். எனவே மணக்க விருப்பம் கொள்ளாத எனது மகள் இளவரசி மகதாவை தங்களது புதல்வன் இளவரசன் மங்கதனுக்கு அரசபையிலேயே பலர் மத்தியில் பெண் கேட்டு என்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டீர்கள் சக்ரவர்த்தி….” பல நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மகத பேரரசின் சக்கரவர்த்தி மார்த்தாண்டனிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொண்டார் கதம்ப நாட்டின் குறுநில மன்னர் பரமன்.
“சக்கரவர்த்தியின் விருப்பத்தை அவரது சபையிலேயே நிந்தித்து பேசும் தைரியத்தை உமக்கு கொடுத்தது யார்? உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் மிகக்கடுமையான தண்டனையை ஏற்க நேரும்” என மந்திரி சுகதன் பேசியதற்கு அங்கு கூடியிருந்த மற்ற குறுநில மன்னர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
“ஒரு மன்னரின் மகளை அவர் குறுநில மன்னரானாலும் மணக்க சில சட்டதிட்டங்கள் உள்ளன. முறையாக சுயம்வரம் அறிவித்து முறைப்படி அழைப்பு கொடுத்தனுப்பிய பின் இளவரசியின் விருப்பப்படி தனது மணவாளனைத்தேர்ந்தெடுப்பார். அதை சுயம்வரத்தில் கலந்து கொண்டவர்கள் ஏற்றுக்கொள்வது மரபு. அதை விடுத்து சர்வாதிகாரத்தைக்கையிலெடுத்து அடிமையைப்போல் பெண்களை அபகரித்து, மன்னரின் அந்தப்புரத்தை அலங்கரிக்க நினைத்தால் நறுமணப்புகையை மனதில் பகை வளர்ந்து சிதைத்து விடும்” என கதம்ப சிற்றரசின் நட்பு நாடான குதம்ப நாட்டு அரசன் குரவன் பேசியதைக்கேட்டு சபை அதிர்ந்தது.
இரண்டு மன்னர்களின் பேச்சில் நியாயம் இருப்பினும் சக்கரவர்த்தியின் விருப்பத்துக்கு மாறாகப்பேசியிருக்கக்கூடாது என சில நாடுகளின் அரசர்கள் பேசினர். ‘பணிந்து பேசாமல் துணிந்து பேசியிருக்கக்கூடாதோ…? எதுவானாலும் மகளின் நலன்கருதி இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம் ‘ என மனதில் உறுதி கொண்டு சக்கரவர்த்தியின் விருந்தைப்புறக்கணித்து தன் பரிவாரங்களுடன் கதம்ப நாட்டிற்கு விரைந்தார் பரமன்.
‘தங்களது பேச்சு மிகச்சரியானது, நியாயமானது….’ என கூறிய மகளை உச்சி முகர்ந்து தனது மகிழ்வைத்தெரிவித்தார். மன்னர் பரமன் தன் ஒரே மகளான இருபது வயதின் இளமைப்பருவத்தைக்கடந்து கொண்டிருக்கும் இளவரசி மகதாவை கலைகள் பல கற்க வைத்தவர். கடந்த முறை நடந்த போரை வழிநடத்திச்சென்று எதிரிகளை விரட்டியடித்து நாட்டிற்கான வெற்றிக்கனியைப்பறித்து தன் தந்தையிடம் சமர்ப்பித்தவள். இந்த வெற்றியைக்கேள்விப்பட்டுத்தான் மகதாவை தனது மருமகளாக்கிவிட வேண்டும் என துடித்தார் சக்கரவர்த்தி. ஆனால் அவரது மகனான இளவரசன் மங்கதனோ பல விவாககங்களைப்புரிந்து அந்தப்புரமே கதியென சுகபோகங்களை தனதாக்கி வாழ்பவர். பரமனோ மணம் என்பது அவள் மனம் விரும்பியபடியே நடக்க வேண்டும். அவளது விருப்பத்துக்கு மாறான விவாகம் நடந்து அவளது எதிர்காலம் சூனியமாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
மகதாவிற்கு பல நாட்கள் உறக்கம் பறி போனது. தனது தந்தையின் கவலைக்கு காரணமான மகதப்பேரரசை தமது வீரத்தால் வசப்படுத்தி, சக்கரவர்த்தியின் சர்வாதிகாரத்தை அடக்கி வைக்க வேண்டும் என திட்டமிட்டாள். சக்கரவர்த்தியால் பாதிக்கப்பட்ட பல குறு நில மன்னர்களுக்கு தமது நாட்டு ஒற்றர்கள் மூலம் செய்தி அனுப்பி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மகதா எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவதாக உறுதியளித்தனர்.
தமது படை வீரர்களில் திறமை மிக்க ஒருவரை புதிய தளபதியாக அறிவித்து பேரரசை எதிர்த்து போரை அறிவித்தாள். சக்கரவர்த்தியே மகதாவின் செயலைக்கண்டு அச்சம் கொண்டார். தமக்குப்பின் தன் மகன் அரசனாகப்போவதில்லை. பல திருமணங்களை அவன் செய்திருந்தாலும் அழகிற்கு முக்யத்துவம் கொடுத்தானே தவிர ஆட்சிக்கு முக்யத்துவம் கொடுத்து முன்னோர்களைப்போல குறு நில மன்னர்களின் இளவரசிகளை மணக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தாலாவது தற்போது போரில் வெல்ல மருமகனுக்காக திரண்டு வருவர். அதனால் எதிரிகள் மிரண்டு பின் வாங்குவர். குழப்பத்தில் ஆழ்ந்தவர் வயது மூப்பின் சோர்வால் யுத்தத்தில் இருக்கும் தளபதிக்கு சில செய்திகளை அனுப்பி விட்டு உறங்கிப்போனார்.
நடு இரவில் முரசொலி கேட்டு மனபயம் கொண்டவர் செய்தி கொண்டுவந்த வீரனிடம் ஓலையை வாங்கி தானே படித்தவருக்கு மயக்கம் வந்ததும், அரண்மனை வைத்தியர் தன் வைத்தியத்தால் அவரது உடல் நிலையை சீராக்கியதும் சுய நினைவு வந்து எழுந்து அமர்ந்த போது அவரெதிரில் அவரது படைகளை வீழ்த்தி வெற்றிவாகை சூடி அரண்மனைக்குள் பிரவேசித்த மகதா. வேகமாக சக்கரவர்த்தியிடம் வந்து தன் மனம் விரும்பிய, விரைவில் மணக்கப்போகிற, தற்போதைய வெற்றிக்கு துணை நின்ற தளபதி சிங்கதனுடன் ஆசீர்வாதம் பெற்ற போது ஆனந்தக்கண்ணீருடன் மகதாவை வாழ்த்தியவர் யாரும் எதிர்பாராத விதமாக தளபதியை கட்டியணைத்து கண்ணீர் விட்டார்.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் கானகத்துக்கு வேட்டையாடச்சென்ற போது அங்கிருந்த ஆதிவாசிப்பெண்ணின் அழகில் மயங்கி பல நாட்கள் அரண்மனைக்கு வராமல் கட்டுண்டு கிடந்தவரை அவரது தந்தை அழைத்து வந்து குறுநில மன்னர் ஒருவரின் மகளை மணம் முடித்ததில் மங்கதன் பிறந்தான். ஆதி வாசி பெண்ணிற்கு அதற்கு முன்னரே சிங்கதன் பிறந்த செய்தியறிந்து அவர்களைக்கான மாறு வேடத்தில் சென்ற போது அவர்களை நாடு கடத்தியிருந்த தன் தந்தையின் செயலை எண்ணி மிகவும் வருந்தினார். தனக்குப்பிறகு மகதப்பேரரசை ஆள தகுதியானவர் இல்லையென வருந்திய நேரத்தில் யுத்தத்தின் தோல்வி செய்தியால் அதிர்ந்து மயங்கினாலும் முடிவில் வெற்றிச்செய்தி ஒன்று வருமென எதிர்பார்க்காதவர், தற்போது தன் பேரரசையே போரில் வென்று தன்னைக்காண வந்த தனது முதல் மகன் சிங்கதனிடம் நாட்டை ஒப்படைத்ததோடு,கதம்ப நாட்டின் இளவரசியும், தனது மருமகளாகவேண்டுமென ஆசைப்பட்ட அதே மகதாவை மருமகளாக தன் மகனுக்கு மணம் முடித்து மகாராணியாக்கி அவளது தந்தை பரமனின் கவலையைப்போக்கியதோடு தன் விருப்பப்படியான விவாகமும் நடைபெற்றதில் பூரண மகிழ்ச்சி கொண்டார் மகதச்சக்கரவர்த்தி மார்த்தாண்டன்.