கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 1,895 
 
 

முன்னுரை

இதற்கு முன் சத்திய வேள்வி என்ற புதினத்தை எழுதினேன். அது வாசகர், திறனாய்வாளரால் பெரிதும் வரவேற்கப்பட்டிருக்கிறது. வேதப் பாடல்கள், உபநிடத கதைகள், இராமாயண இதிகாசம் ஆகியவற்றில் காணப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு புனையப் பெற்ற நவீனம் அது. சில வரலாறுகளின் ஆதாரங்களில் நெருப்புத்துண்டு போன்று உண்மை சுடும். வயிரம் பாய்ந்த மரம் இறுகிக் கரியாகி, ஒளியை வாரி வீசும் மணியை உள்ளடக்குவது போன்று, உண்மையும் மறுக்க முடியாததாக ஒளிரும். மாமன்னர் சனகர், ஏரோட்டிய போது, உழுமுனையில் கண்டெடுத்த பெண் குழந்தை இராமயண மகா காவியத்தின் நாயகியாகிறாள். இராமாயண காவியம், சக்கரவர்த்தித் திருமகன் இராமசந்திரனின் பெருமை மிகு வரலாற்றைச் சொல்வதாக ஏற்றி வைக்கப்பட்டாலும், காவியத்தின் ஆதார சுருதியாகத் திகழ்பவள் நாயகி சீதைதான். இவள் மண்ணிலே கிடைத்தவள். குலம், கோத்திரம் விளக்கும் பெற்றோர் அறியாதவள். பூமித்தாய், நிணமும் குருதியுமாக ஒரு சிசுவைப் பிரசவிக்க முடியுமா? இது அறிவுக்குப் பொருந்தாத ஒரு கற்பனையே. அலங்காரமான இந்தக் கற்பனை, கசப்பான ஓர் உண்மையைப் பொதித்து வைக்கப் பயன்பட்டிருக்கிறது. இந்த எண்ண ஓட்டமே, பூமியில் கிடைத்த பெண் சிசுவுக்கு, பிறப்பென்ற ஓர் ஆதி கட்டம் உண்டென்று புனையத் துணிவளித்தது. அந்தக் கால சமுதாயத்தில் நால்வகை வருணம் அழுத்தமாகக் கூறு போடவில்லை என்றாலும் வருண தருமங்கள் மிக அழுத்தமாகத் தம் ஆதிக்கத்தைப் பெண் மக்களின் வாழ்க்கையிலும் உணர்வுகளிலும் பதிக்க, மன்னராதிக்கம் துணையாக இருந்தது எனலாம். நூற்றுக்கணக்கான, பணிப்பெண்டிரும், போக மகளிரான அந்தப்புர நாயகியரும், செவிலியரும் எவ்வாறு உருவாயினர்? இதே போல் ஆண் அடிமைகளும் இருந்தனர் என்றாலும், பெண் மக்கள் போல் எந்த உரிமையும் அற்ற பரந்த எல்லைகளில் அவர்களின் சேவை இருந்ததில்லை. உடலால் அவர்கள் ஆணினம் முகர்ந்து பார்க்கவோ, கசக்கி எறியவோ ஆட்படும் போது, எந்த எதிரொலியும் எழுப்ப இயலாதவர்களாகவே உட்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே குலம் கோத்திரம் அறியாதவர்கள். தந்தை வழி முத்திரைக்கு அப்பால் உதித்தவர்கள். பெண் குழந்தைகள் அரச மாளிகைகளில், பிரபுக்களின் – மேல் வருணத்தாரின் மனைகளில், கணிகையர் விடுதிகளில், உல்லாசம் அநுபவிக்கக்கூடிய பொது இடங்களில் ஊழியம் செய்ய விலைப்படுத்தப்பட்டனர். அரசர்கள், மேல் வருண ருஷி முனிவர்களுக்கு இந்தப் பெண்களை, பசுக்களையும் பொன்னையும் வழங்குவது போல், தானமாக வழங்கினர். இத்தகைய அடிமைகளின் தொடர்பினால் உயர் வருண ருஷித் தந்தைக்கு மகன்கள் உண்டானால், அவர்கள் ஏற்றம் பெறுவதும் இருந்தது. ஆனால் இந்த ஆண்மக்களும் பெரும்பாலும் உபநயனம் பெறும் உரிமை இல்லாதவராகவே இருந்தனர் என்றே தெரிய வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெண் பிறந்து விட்டால், அவள் ‘அடிமை’ என்றே விதிக்கப் பெற்றாள். அழகிய பெண்ணாக இருந்து விட்டால், மன்னர்களும், பிரபுக்களும் அந்தப்புரக் கிளிகளாகக் கொள்வர். அவர்களில் எவருக்கேனும் ஒரு ‘வாரிசு’ உதயமாகும் என்ற நிலைமை எய்தினால் போட்டி, பொறாமையில் அவள் சுருண்டு போவாள். சந்ததியைப் பெற்றுத் தர இயலாத பட்ட மகிஷிகளின் ஆணைகள் அந்தப் பேதைப் பெண்ணைக் காட்டுக்கு அனுப்பவும் செய்தன. அந்த வாரிசு உண்மையில் மன்னருடையதாக இல்லாமல் மன்னர் குடும்பத் தொடர்புடையவருடைய சந்ததியாக இருந்தாலும் கூட அவள் மன்னருக்குரிய ‘அந்தப்புரத்தில்’ இருந்த குற்றத்துக்காக நாடு கடத்தப்படுவாள்.

தசரத மன்னர், நூற்றுக்கணக்கான அந்தப்புரப் பெண்களை ‘ஆண்டு’ வந்தார். அவர் இறந்த போது, அத்தனை மனைவியரும் கதறித் துடித்தனர் என்ற செய்தி வருகிறது. ‘பட்ட மகிஷி’களான தேவியருக்கும் சந்ததி உருவாகவில்லை. எனினும் மன்னனின் ‘ஆண்மை’ குறித்த கரும்புள்ளி எந்த இடத்திலும் வரவில்லை. மாறாக ‘யாகம்’ என்ற சடங்கும், ‘யாக புருடன்’ வேள்வித் தீயில் தோன்றி, பாயசம் கொணர்ந்து தேவியர் பருகச் செய்தான் என்று மாயப்புதிரும் புனையப் பெறுகிறது. மிதிலாபுரி மன்னருக்குப் பெண் சந்ததி இருந்தது. அந்த மன்னரின் அந்தப்புரக் கிளி ஒருத்தி கருவுற்றதும், அவள் சந்ததியைத் தந்துவிடக் கூடுமோ என்ற அச்சத்தில் மற்றவர்களால் கானகத்துக்கு அனுப்பப் பெறுகிறாள். அந்தத் தாயின் மகன் வழித் தோன்றலாக வந்த பெண் குழந்தையை அந்த அன்னையே, அரசன் ஏரோட்டும் பூமியில் பொதித்து வைத்தாள் என்று நான் கற்பனை செய்தேன். ‘சத்திய வேள்வி’ இச்செய்திகளைக் கொண்ட நவீனம்.

அதே பூமகள், இராமசந்திரனின் கரம் பற்றிய நாயகியான பின், தொடரும் வரலாறே, இந்தப் புனைவு. இவள் இராம கதையின் நாயகியாகும் வகையில், இராமசந்திரனின் கல்யாண குணங்களை மிகச் சிறப்பாக ஒளிரச் செய்யும் வகையில், பொற்கூட்டுப் பின்புலமாக உருவாக்கப் பெற்றிருக்கிறாள். இந்தப் பின்புலம், கரும்புள்ளிகள் உள்ள வயிரத்தையும், தன்னுள் அப்புள்ளிகளை ஏற்று விழுங்கி, அந்த வயிர மணிக்கு மேலும் கண்பறிக்கும் வண்ண ஒளிக் கதிர்களைக் கூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வகையில் இந்தக் காவியம், சீதையின் கதையாகவே விரிந்தாலும், இது இராமயணம் என்றே சிறப்பிக்கப்படுகிறது.

‘குலம் கோத்திரம்’ அறியாத இந்தப் பெண்ணுக்கு, எந்த வகையில் உரிய மணவாளனைத் தேட முடியும் என்று சனக மன்னன் கவலைப்பட்டிருக்கிறான். வில் இங்கே ஒரு காரணமாக அமைகிறது. வில் உடைந்தது. நாயகன் கிடைத்தான். குலம் கோத்திரம் கேட்காமல், மன்னனின் வளர்ப்பு மகளை, பேரழகும் பொறுமையுமே வடிவாகத் திகழ்ந்த கன்னியைக் கைபிடித்தான். அவள் நாயகனுடன் செல்லும் போது, வழியனுப்பி வைக்கும் தந்தை, தான் கவலைப்பட்டதையும், அது ஆதவனைக் கண்ட பனியாகக் கரைந்து ஓர் ஒப்பற்ற அரசகுமாரனை மருகராகக் கிடைக்கப் பெற்றதையும் எடுத்துரைத்து, “மகளே, உன்னை ஓர் உயரிய நாயகருக்கு உரித்தாக்கி விட்டேன். இனி இந்த நாயகரே உனக்கு எல்லாமும். ‘அன்னை, தந்தை, குரு, தெய்வம்’ எல்லாமுமாக ஆகிறார். இவர் இருக்குமிடமே உனக்கு உரிய இடம்” என்று உரைத்து ஆசி வழங்குகிறார்.

பெற்றோர், பிறந்த இடத்து உறவுகள் எல்லாமே ஒரு பெண்ணுக்கு மேலே போர்த்துக் கொண்ட பாதுகாப்புகள் போன்றவை; ‘மணாளர் என்று ஒருவர் உறவான பின், அந்தப் பாசங்கள் கழற்றி விடப்பட வேண்டும்’ என்பதே இன்று வரையிலும் இந்தியப் பெண்ணின் ‘தருமமா’கப் பாலிக்கப்பட்டு வருகிறது. திருமணம் தான் அவள் வாழ்வை உறுதி செய்கிறது.

பூமகள் ஒரு நாயகரைச் சேர்ந்துவிட்டாள். நாயகன் மாதா – பிதாவின் வாக்கிய பரிபாலனம் செய்ய, வனம் ஏகும் போது, இவள் தங்குவாளா? இவளுக்கு ஏது பிறந்த இடம்? ‘இராமன் இருக்குமிடமே அயோத்தி’ என்ற மரபு வழக்குக்கு ஆதாரமாக வனம் ஏகினாள்.

வனத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், இவள் கற்புக்கு நெருப்புக் கண்டம் வைத்தது.

இராமன், அரக்க வேந்தனைக் கொன்று, இவளை மீட்க வந்த போது என்ன சொன்னான்?

“அரக்கர் மாளிகையில் அறுசுவை உணவுண்டு உயிர் துறந்தாயில்லை. கடல் கடந்து வந்து அரக்கரைக் கொன்றது, உன்னை மீட்டு அழைத்துச் செல்வதற்காக இல்லை. வீரனின் மீது விழுந்து விட்ட பழியைப் போக்கிக் கொள்வதற்காகவே இலங்கையை வென்றேன்?”

‘வீரம்’ என்பது பழி தீர்க்கும் வன்மத்தில் விளைவதா? யாருக்கு யார் மீது பழி?

இத்தகைய சொற்களால் அந்த அருந்தவக் கொழுந்தைச் சுட்டதுடன் அவன் நிற்கவில்லை.

அவளை எரிபுகச் செய்கிறான். இத்துடன் முடிந்ததா, பழியும் சந்தேகமும்?

ஊர் திரும்பி, முடிசூட்டிக் கொண்ட பின், தன்னால் கருவுற்ற நாயகியின் மீது எங்கோ ஒலித்த தீச்சொல்லின் கருநிழல் விழுந்ததென்று கானகத்துக்கு விரட்டினான். இது வெறும் நாடு கடத்தலா? எரிபுகுந்து புடம் போட்ட சொக்கத் தங்கமாக வெளியே வந்த நாயகியை – கருவுற்ற செல்வியை, மீண்டும் உயிருடன் கொளுத்தும் துரோகச் செயல் அல்லவோ? இந்தச் செயலின் பின்னே கற்பிக்கப்படும் ‘தொத்தல்’ நியாயத்தை யாரால் ஏற்க முடியும்?

இப்படி ஒரு நிகழ்வு, ஆதிகவியின் இதிகாசத்தில் இடம் பெற வேண்டுமா? ஆதிகவியின் நோக்கம் யாதாக இருக்க முடியும்?

தமிழ்க் காவியத்தைக் கம்பன் ஆதிகவியை ஒட்டியே புனைந்தாலும், மகுடாபிஷேகத்துடன் கதையை முடித்துக் கொண்டது அரிய சிறப்பாகும்.

இராமனுடைய அரசில் ஓர் ஆண் சலவைத் தொழிலாளியின் பேச்சுக்குக் கூட இத்துணை கனம் உண்டு; அந்தப் பளு நிறைசூலியை நிராதரவாக வனத்துக்கு அனுப்புமளவுக்கு நாயகனின் மனச்சான்றை அழித்துவிடும் வலிமை வாய்ந்தது என்பது விளக்கமாகிறது. இந்த நீதி தருமம், சாதாரணமான மக்கள் எவரும் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை.

வால்மீகி மகரிஷி இந்த மகா காவியத்தை இயற்றியதன் நோக்கம் யாதாக இருக்கும் என்பதைக் கூடத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கிரௌஞ்ச பட்சிகளில் ஆணை வேடன் கொன்றான்; பெண் சோகம் தாங்காமல் கதறியது. இந்தச் சோகத்தைக் கண்டதும் மனம் தாளாமல் அவர் வேடனைச் சுடு சொற்கள் கொண்டு சபித்தார். அப்போது வெளி வந்த அந்த சுலோகமே இவருடைய கவித்துவத்திற்கான தோற்றுவாய் என்று சொல்லப்படுகிறது.

பெண் பட்சியின் துயரம் சீதையின் துயராக மாற்றப் படுகிறதா? ஆனால், அது இயல்பாக இல்லையே?

பெண் துயரப்படுவதற்கே பிறக்கிறாள். ஆனால் ஆண் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை அல்லவோ இந்தக் காவியம் எதிரொலிக்கிறது? இன்னும் நுட்பமாக நோக்கினால், ஆண் நாயகன், ஓர் இலட்சிய மாதிரியாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் புலப்படுகிறது. பாரதத்தில் வரும் கண்ணனைப் போல் இவன் மூன்றாம் வருணத்தவன் அல்ல; அதருமத்தை அதரும வழியைக் கையாண்டு வெல்லலாம் என்று துணிந்தவன்; பல பெண்டிருக்கு லோலனாகச் சித்தரிக்கப் பட்டவன் அவன்.

ஆனால் இந்த நாயகன் இலட்சிய புருடன், க்ஷத்திரிய வித்து; சக்கரவர்த்தித் திருமகன்; ருஷி முனிவர்களின் கண்ணுக்குக் கண்ணாக ஒழுகுபவன். மேல் வருண வருக்கமே இவனுடைய சமுதாயம். அந்தணப் பிள்ளை பிழைக்க, அந்தணனல்லாத சம்பூகன் கொலை செய்யப் படுகிறான். அவன் முற்பிறவியில் பாவம் செய்துவிட்டு, பாவம் தீரத் தவம் செய்கிறான் என்று கொலைக்குக் காரணம் சொல்லப்படுகிறது. இந்தத் தரும நியாயங்கள் க்ஷத்திரிய குலத்தை மேன்மைப்படுத்தக் கூடியவை. உத்தர இராமாயணத்தில், சீதையை நாடு கடத்திய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, க்ஷத்திரிய மன்னரின் தர்ம நியாயங்கள் ஒவ்வொன்றாக விளக்கப்படுகின்றன. ‘அசுவமேதம்’ ஏகாதிபத்திய நியாயத்தைத் தெளிவாக்குகிறது. அசுரன் என்ற காரணமே, ‘லவணாசுரன்’ போன்ற மன்னர்களின் பராக்கிரமம் வீழ்த்தப்படுவதற்குரிய நியாயமாகிறது.

மேலும் இத்தரும நியாயங்கள் வன்முறையாலேயே நிலை நாட்டப்படுகின்றன.

நிறை சூலியான மனைவியை, குரூரமாக வனத்துக்கு அனுப்பும் முறையிலேயே அது தெளிவாகிறது. இந்தச் செயல், அவதார புருடன் என்று கொண்டாடப்படுவதற்குரிய மன்னனுக்குரியதல்ல. இதற்கெல்லாம் ஒரே காரணம், சீதையின் குலம் கோத்திரம் தெரியாத பிறப்பே என்று கொள்ளலாம். வருண தர்மமும், ஆண் ஆதிக்கமும், பெண்ணை ஓர் அடிமை நிலையிலும் இழிந்து, தருமம் என்ற விலங்கால் பிணித்து வைத்த நிலை துலங்குகிறது. வால்மீகி முனிவர், இராமரிடம் அவர் மைந்தர்களைக் காட்டி, “இராமா, இவர்கள் உன் மைந்தர்களே… சீதை அப்பழுக்கற்ற செல்வி. இவர்களை ஏற்றுக் கொள்” என்று ஒப்படைக்க முனைந்த போதும் இராமன் தயங்குகிறான்.

அந்த நிலையிலும் இராமன் சீதையிடம் சான்று கோருவது, க்ஷத்திரிய அரக்கத் தனத்தின் உச்சநிலையை விள்ளுகிறது.

“இன்னும் எவ்வாறு நான் சான்று காட்டுவேன்?” என்று சீதை முறையிடுகையில் பூமி பிளக்கிறது. உள்ளிருந்து ஒரு நேர்த்தியான ஆசனம் வந்து அவளை ஏந்திக் கொள்ள, பூமிக்கடியில் அவள் செல்கிறாள். பூமிப் பிளவு மூடிக் கொள்கிறது என்று நாடகப் பாணியில் சீதையின் முடிவு விவரிக்கப்படுகிறது.

பின்னர் இராமர் அந்த இரு மைந்தர்களையும் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டு நாடு திரும்புவதாக இராமாயண வரலாறு இயம்புகிறது.

அரக்கன் மாளிகையில் பத்து மாதங்கள் இருந்த காரணத்தால் அவள் மாசு படிந்தவளானாள். எந்த அக்கினியாலும் அவள் மாசை அழிக்க முடியவில்லை. ஆனால் அவள் பெற்ற குழந்தைகள், ஆண்மக்கள் அரசுக்கு உரிய சந்ததியினராக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.

பவபூதி – எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழி நாடகாசிரியர். வால்மீகியின் முடிவை இவர் ஏற்றிருக்கவில்லை. ‘உத்தர ராம சரிதம்’ என்ற நாடகத்தின் வாயிலாக, அந்த முடிவை மாற்றியமைத்தது மட்டுமின்றி, தம்மை உறுத்தும் வேறு சில செய்திகளையும் வெளியிட்டிருக்கிறார். சம்பூகனைக் கொலை செய்யுமுன் இராமர், “வலதுகரமே, நீ வேதியன் மகனை வாழ்விக்க, சூத்திர முனிவர் மீது உடைவாளை வீசுவாய்? நிறை சூலி சீதையை வனமனுப்பியவன் அங்கமல்லவா? உனக்கு கருணை ஏது?” என்று நெஞ்சோடு கடிந்து கொண்டதாக எழுதியுள்ளார். அது மட்டுமன்று; வால்மீகி ஆசிரமத்துச் சீடர்கள் நகைச்சுவை மேலிட ருஷி – தாடிகள் வரும்போது, பசுங்கன்றுகள் விழுங்கப்படுகின்றன என்று பேசிக் கொள்வதாகச் சித்திரிக்கின்றனர்.

அவருடைய நாடகத்தில் அந்தண முனி ஆதிக்கங்களுக்கு எதிரான குரல் இழையோடுகிறது.

இவருடைய நாடக முடிவில் சீதையைப் பூமி விழுங்கவில்லை. மன்னருடன் தாயும் மைந்தர்களும் சேர்ந்து விடுகின்றனர். சீதை உயிர்க்குலத்தை வாழ வைக்கும் செல்வி. அஹிம்சை வடிவானவள். இராமன் வனமேகும் போது வில்லும் அம்பும் கொண்டு வருவது எதற்கு என்று வினவிய பெருமாட்டி. எனது இந்தப் பார்வையே சீதையை ஒரு புதிய வடிவில் இசைக்கிறது. இவள் தன் மவுனத்தால் இராமனைத் தலைகுனியச் செய்கிறாள். அஹிம்சையின் ஆற்றல் சொல்லற்கரியதாகும். கடப்பாரைக்கு நெக்குவிடாத பாறையும் பசுமரத்து வேருக்குப் பிளவு படும் அன்றோ? சீதையின் ஆற்றல் ஆரவாரமற்றது. அது ஆழத்தில் பாய்ந்து தீமையைச் சுட்டெரிக்கவல்லது. என் சீதை இத்தகைய ஆற்றலை அகத்தே கொண்டு வனத்தையே அன்பு மயமாக ஆளுகை செய்யும் தாய். அவள் பூமிக்குள் செல்லவில்லை. அவள் மைந்தர்களும் அரசன் பின் செல்லவில்லை.

இந்தப் புனைவு ஏற்கெனவே நிலை நிறுத்தப்பட்ட பிம்பங்களைத் தகர்க்கலாம். அப்படியானால் நான் என் நோக்கில் வெற்றி பெற்றதாகக் கருதுவேன்.

எப்போதும் போல் இந்த “வனதேவியின் மைந்தர்கள்” நூலையும், தாகம் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். இடைவிடாமல் எனது நூல்களை வெளியிட்டு வரும் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இந்தப் புதிய முயற்சியை வாசகர் முன் வைக்கிறேன்.

வணக்கம் ராஜம் கிருஷ்ணன்
5-5-2001


அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

பனிக்காலத்து வெயில் உடலுக்கும் உள்ளத்துக்கும் தேனாய், தீஞ்சுவையாய், இங்கிதமளிக்கக் கூடியதுதான். ஆனாலும் பூமகளுக்கு அப்படி ஓர் இனிமை படியவில்லை. மாளிகையின் மேலடுக்குச் சாளரத்தின் சல்லாத் திரையை தளிர் விரல்களால் நீக்கி, கீழே மாளிகையின் பின்புறத்தின் விரிந்த சுற்றுச் சூழலில் பார்வையைப் பதிக்கிறாள்.

பனிக்காலத்தில் பசுமை இத்துணை அழகாகத் தென்பட்டதாக நினைவில் வரவில்லை. புல்வெளிகள்… பசுங்குவியல்களில் நட்சத்திரம் பதிந்தாற் போன்று பூம்புதர்கள்… மாமரங்கள். இந்தா இந்தா என்று கதிரவனுக்குக் காணிக்கையாக்கும் அரும்புக் கொத்துகள்… விரிந்து தெரியும் சிவப்பும் நீலமுமான அரவிந்தத் தடாகம்… அதில் வெண் மலர்கள் போல் தெரியும் அன்னங்கள்.

எல்லாம் பார்த்துப் பார்த்து, மாளிகையைச் சேர்ந்த உழைப்பாளர் உருவாக்கியிருக்கும் அந்தப்புரத் தோட்டம். எட்டி ஓர் ஆலமரம். அதைச் சுற்றி அழகிய மேடை உண்டு. அங்கே மன்னரும் அவளும் சந்தித்துப் பேசுவதுண்டு. கானகம் செல்லுமுன்பு, அவள் பேதைப்பருவ அறியாமைகள் அகல, மன்னரின் அன்புப் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட இடம். அதை நினைக்கும் போது இப்போது, மெய் சிலிர்க்கிறது. பூம்பட்டு மேலாடையை நழுவாமல் பற்றிக் கொள்கிறாள்.

“தேவி!…”

“உச்சிப் போது தாண்டி நேரமாகி விட்டது. உணவு சித்தமாகி, ஆறிப் போகிறது…”

அவள் திரும்பிப் பார்க்கிறாள்.

கைகழுவக் கலமும் நீரும் ஏந்தி நிற்கும் பணிப் பெண்.

பணிப்பெண்ணா? முன் நெற்றிக் கூந்தல் நரை பட்டையாகத் தெரிகிறது.

நெற்றியிலும், கன்னங்களிலும் மோவாயிலும், காலமும் உழைப்பும் சேர்ந்து கீறிய கீறல்கள்…

வெறும் காலமும் உழைப்பும் மட்டுமா? மன இறுக்கமும் கூடத்தான்.

இடுப்பில் ஓராடை; வெளுத்துச் சாயம் போன ஆடை. மாளிகை எசமானிகள் உடுத்துக் கழித்த ஆடை… மார்பை மூடும் கச்சைகளும் கூட இவர்களுக்கு இல்லை. ஆனால் அவந்திகா, அவள் அன்னை. அவள் பால் குடித்த மார்பகங்களைத் துகில் கொண்டு மூட அவள் முனைந்து வெற்றி பெற்றிருக்கிறாள். மாளிகைச் சாளரங்கள் கூட உயர்துகில் அணிகின்றன. என் அவந்திகாவுக்கு மேலாடை வேண்டும் என்று, விவரம் தெரிந்த நாளில் அவள் தந்தையிடம் கேட்டு அந்த மேலாடை உரிமையைப் பெற்றுத் தந்தாள்.

அவந்திகா நீர்ச் சொம்பைக் கீழே வைத்து விட்டு ஒரு கையால் அவள் முக மலரைப் பரிவுடன் தொட்டு, முன் நெற்றிச்சுரி குழலை ஒதுக்குகிறாள். “தேவி, நேரம் மிகவாகியிருக்கிறது. பாருங்கள், நிழல்கள் நீண்டு விழுகின்றன. இந்த நிலையில் உணவு கொள்ளாமல் இருக்கலாகாது, தேவி…”

அவளை மெதுவாகப் பற்றி எழுப்பி, நீர்ச் செம்பை எடுத்து, கழுவும் கலத்தைப் பிடித்து, அவள் மென்கரங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவச் செய்கிறாள். இன்னொரு பணிப்பெண் வந்து, அந்தக் கலங்களை வாங்கிச் செல்ல, அவந்திகா மெல்லிய பட்டுத்துகிலால் அவள் கரங்களைத் துடைக்கிறாள். செம்பஞ்சுக் குழம்பின் பட்டுச் சிவப்பு தெரியும் மலர்க்கேசரங்கள் போன்ற விரல்கள்…

“அவந்திகா, மன்னர் உணவு கொண்டாரா?”

“மன்னர் உணவு மண்டபத்துக்கு வரவேயில்லை, தேவி; குலகுரு, மந்திரிபிரதானிகளுடன் அரசாங்க யோசனைகளில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். பல ஆண்டுகள் மன்னனில்லாத நாட்டில் எத்தனையோ அலுவல்கள் இருக்கலாமல்லவா?…”

‘இளையவர் ஆட்சி புரியவில்லையா அவந்திகா? உணவு கொள்ளக்கூட வர இயலாத அளவுக்கு என்ன யோசனைகளாம்?’

பூமகள் கேட்கவில்லை.

இளையவர்… நிழல் போல் தொடரும் இளையவரும் உனவு கொள்ளவில்லையா? ஊர்மிளையைச் சந்திக்கவில்லையா? ராணி மாதாவின் மாளிகைப் பக்கம் செல்லவில்லையா?

அடுக்கடுக்காக வினாக்கள் மின்னுகின்றன. ஆனால் சொற்களாக உயிர்க்கவில்லை.

விமலை, விசயை, இருவரும் பின்னே உணவுத் தட்டுகள், கிண்ணங்கள், அமரும் பாய் ஆகியவற்றுடன் வந்து கடை பரப்புகிறார்கள். அவந்திகா, அவளைப் பரிவுடன் பற்றி, மென்மையாக கோரை கொண்டு மெத்தென்று முடையப் பெற்ற சித்திரப்பாயில் அமர்த்துகிறாள்.

பெரிய வாழையிலைகளைப் பரப்பி, அதில் உணவுப் பண்டங்களை வைக்கிறார்கள். மிளகும் உப்பும் கூட்டித் தயாரித்த நெய்யமுது; மாதுளங்காய்த் துவையல், தயிர் பிசைந்த சுவையமுது; கீரையும் பருப்பும் கூட்டிய மசியல், இனிப்புக் கூட்டிய புளிப்புப் பச்சடி…

“எனக்குப் பசியே இல்லை, தாயே!”

“மகளே? பசி இல்லை என்று இருக்கலாமா? இன்னோர் உயிரைத் தாங்கி நிற்கும் அன்னை நீங்கள். இந்த மாதுளங்காயும், புளிப்பும் இனிப்புமான பச்சடியும் ருசிக்கு ஆரோக்கியமாக இருக்கும்… உண்ணுங்கள் தேவி!”

“ஏனோ தெரியவில்லை அவந்திகா, எனக்குப் பசியும் இல்லை, ருசியும் இல்லை…”

அப்போது சாமளி ஒரு பொற்கிண்ணத்தில் பானம் எடுத்துக் கொண்டு விரைந்து வருகிறாள். இவள் கேகய அரசகுமாரியான இளைய ராணி மாதாவின் அந்தப்புரப் பணிப்பெண்.

“தேவி, ராணி மாதா, இதைத் தாமே தயாரித்து, மகாராணிக்குக் கொடுத்தனுப்பியுள்ளார்…”

அவந்திகா ஓர் இலையால் மூடப்பெற்ற அந்தப் பொற் கிண்ணத்தைக் கையில் வாங்கி முகர்ந்து பார்க்கிறாள். இந்தப் பூமகள், மதுவின் வாசனையே நுகராதவள். புலால் உணவை வெறுக்கும் பூதேவி இவள். இவளுக்கு உணவு தயாரிக்கவே இங்கே சிறப்பாக அநுபவம் பெற்ற ஊழியப் பெண்கள் இருக்கிறார்கள். கேகயகுமாரியான ராணி மாதாவின் மீது அவந்திகாவுக்கு அளவு கடந்த நம்பிக்கையும் பரிவும் அன்பும் உண்டு. இந்தப் பானத்தில், இஞ்சியும் புளிப்பும் தேனும் கலந்திருப்பதை இரண்டு துளிகள் கையில் விட்டுச் சுவைத்த பின் கண்டு கொள்கிறாள்.

“தேவி! ராணிமாதா சகல கலைகளிலும் வல்லவர். பதினான்கு ஆண்டுகள் தாங்கள் கானகத்தில் இருந்த காலத்து மன்னர் வர்க்கத்தினரால் கசக்கி எறியப்பட்டு அந்தப்புர அறைகளில் சிறையிருந்த அத்தனை பெண்களுக்கும் வெளிச்சமும் வாழ்வும் கொடுக்க எத்தனை கலைகள் பயிற்றுவித்தார்!… இது கரும்புச்சாறும், இஞ்சியும், புளிப்புக்கனியும் சிறிது தேனும் கூட்டிய பானம். சிறிது அருந்துங்கள். பசி எடுக்கும்…”

பூமகள் கிண்ணத்தை வாங்கி பானத்தை அருந்துகிறாள்.

உண்மையாகவே நாவுக்கு ஆரோக்யமான ருசி… புளிப்பும் இஞ்சிச் சுவையும், இனிப்பும்… மந்தித்துப் போன நாவில் நீர் சுரக்கும் நயமும்…

இளைய ராணி மாதாவுக்குத்தான் எத்துணை அன்பான இதயம்? கல்லைப் போல் ஊரார் பழியையும் உலகோர் சாபங்களையும் மட்டும் வாங்கிக் கொள்ளவில்லை; பெற்ற மகனாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட அபாக்கியவதி… இதை நினைக்கும் போது கண்கள் பனிக்கின்றன.

“தேவி, குழந்தாய், இஞ்சிச்சுவை காரமாக இருக்கிறதா?…”

அவளுடைய மென் துகில் கொண்டு கலங்கிய விழிகளை ஒத்துகிறாள் அவந்திகா. தன் உணர்ச்சிகளை விழுங்கிக் கொள்ளும் முகமாகக் கண்களைச் சிறிது மூடிக் கொள்கிறாள்…

உணவு கொண்ட பின் மற்ற பணிப்பெண்கள் சுத்தம் செய்துவிட்டு அகல்கின்றனர்.

“அவந்திகா, மன்னர் ஏன் முன் போல் இங்கே வருவதில்லை? அப்படி என்ன அரசாங்க அலுவல்கள்?”

“பெண்களாகிய எமக்கென்ன தெரியும்? தேவி, இரண்டே கவளம் தான் உணவு கொண்டிருக்கிறீர்கள். உடல் வெளுத்து, இளைத்து விட்டது. ராணி மாதா எங்களைத் தாம் குறை சொல்வார்கள்…”

பூமகள் தன் மனச்சுமையை எப்படி வெளியிடுவாள்? அரக்கர்கோனின் அந்தப்புரத் தோட்டத்தில் அவள் நெருப்பு வளையத்துள் சிறையிருந்த போது கூட, இத்துணை மனச்சுமை இருக்கவில்லை போல் தோன்றுகிறது… இந்நாட்களில் மிக அதிகமாக ஒரு வெறுமை அவளை ஆட் கொண்டிருக்கிறது. இத்தனை வசதிகளும் பணியாளரும், தன்னை அன்னைக்கு அன்னை போல் மடியிலிருந்து, மார்புப்பால் கொடுத்து வளர்த்த செவிலியும் கூட உணர்ந்து கொள்ள முடியாத, பகிர்ந்து கொள்ள முடியாத சுமையாகக் கனக்கிறது.

அவளை உணவு கொண்ட களைப்புத் தீர, மஞ்சத்தில் இருத்துகிறாள் அவந்திகா. நந்தினி மயில்தோகை விசிறியுடன் வருகிறாள்.

இதை மென்மையாக மேனியில் தடவும் போது உறக்கம் வரும்; மன அமைதி கிட்டும் என்பது அவந்திகாவின் அநுமானம்.

அப்போது, வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு விமலை ஓடி வருகிறாள். நந்தினி விசிறியை வைத்துவிட்டு, உமிழும் எச்சிற் தம்பலத்தைக் கொண்டு வருகிறாள்.

“ஓ! எனக்குத்தான் எத்தனை மறதி, தேவி! வெற்றிலை மடித்துக் கொடுக்கும் நினைவே இல்லை…”

அவந்திகா தன்னையே கடிந்து கொண்டு, வெற்றிலைகளை எடுத்துத் துடைத்து, வாசனைப் பொருட்கள் சுண்ணம் சேர்த்து, மடித்து அவளிடம் தருகிறாள். அவள் மனதில், அந்த ஆலமரத்து மேடையில், அவள் புக்ககம் வந்த புதிதில், மருட்சியை நீக்கும் வகையில் மென்மையாகச் சரசமாடியதும், வெற்றிலை மடித்துத் தந்ததும் நினைவுக்கு வருகிறது.

இந்த வெற்றிலை கசக்கிறது.

கானகத்தில் வெற்றிலை பாக்கு எதுவும் இல்லை. ஆனால் மிகுந்த மணமுள்ள மூலிகைகள் உண்டு. ஒரு வித வாசனைப் புல்… அது புத்துணர்ச்சி தரும்.

பணிப்பெண்… நந்தினி, அருகில் எச்சிற் கலத்தை ஏந்தி நிற்கிறாள். மாநிறமுள்ள இளம் பெண். முடியை இறுகக் கோதி உச்சியில் முடிந்திருக்கிறாள். அகன்ற கண்கள், நெற்றியில் முக்கோணம் போல் பச்சைக்குத்து. செவிகளில், வெண்மையான நெட்டிக் குழைகள். மார்பகங்கள் மொட்டுப் போல் குவிந்து, கஞ்சுகத்தின் இறுக்கத்தை விள்ளுகின்றன. முன்பெல்லாம் இந்த அரண்மனைப் பணிப்பெண்கள் கஞ்சுகம் அணிய மாட்டார்களாம். மேலாடையும் கிடையாது. இதெல்லாம் இளையா ராணி மாதாவின் சீராக்க நடவடிக்கைகளாம். இதனாலேயே ஏனைய மாதாக்களுக்கு இவளைப் பிடிக்காது போலும்!

நந்தினியின் கழுத்தில் ஒரு மண் பவழ மாலை தவழ்கிறது…

அரக்கர் கோன் மாளிகையின் அடிமைப் பெண்களும் மேலாடை, கஞ்சுகம் போன்ற எதுவும் அணிந்திருக்கவில்லை. உயர்குலப் பெண்களுக்கு மட்டுமே அந்த உரிமைகள் உண்டு… பணிப்பெண்களாகிய அடிமைகள் கழுத்தில் ஏராளமான சங்கு மாலைகளையும், அழகிய சிப்பிகளிலும் மணிகளிலும் செய்த அணி பணிகளையும் அணிந்திருப்பார்கள். கூந்தலைச் சிறு சிறு பின்னல்களாகப் பின்னி அழகு செய்து கொண்டிருப்பார்கள். இடையில் தார்பாய்ச்சாமல் முழங்கால் வரை மட்டுமே வரும் ஆடை அணிந்து, அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிய காட்சிகள் எல்லாம் இப்போது மனக்கண்களில் வருகின்றன.

கானகத்தில் இருக்கையில் வஞ்சமகள் ஒருத்தி அவள் நாயகனை மயக்க வந்து நடமாடியதும் உயிர்க்கிறது.

எத்துணை அழகாக இருந்தாள்? மான், மயில், புறா எல்லா உயிர்களின் சாயல்களையும் கொண்டிருந்தாள். “முனிகுமாரா! பிறவி எடுத்ததன் பயனை இன்றே உணர்ந்தேன். என்னை ஏற்றுக் கொள்வீர்!” என்று அருகில் வந்து அவள் அமர்ந்ததற்கு இளையவர் கொடுத்த தண்டனை! மூக்கையும் செவிகளையும் கூர்ந்த ஆயுதத்தால் அரிய அவள் இரத்தம் சொரியத் துடிதுடித்து ஓடிய காட்சியில் அவள் அடிவயிறு சில்லிட்டுப் போயிற்று. அச்சம்… மானைக் கொன்று உணவு பக்குவம் செய்து தருவார்கள். கொல்லும் குரூரம் தவிர்க்கும் அச்சம் தான் அவளை அன்று அந்த மானை உயிருடன் பிடித்துத் தரக் கேட்கச் செய்தது.

அது மாய மானாக இருந்தாலும் அன்பு செலுத்தி வளர்த்தால் தீய எண்ணம் மாயுமே என்று பேதையாக நினைத்தாள். பிடிவாதமாகப் பிடித்துத் தரவேண்டினாள்… ஆனால், என்னவெல்லாம் நடந்து விட்டது!

“தேவி, வெற்றிலையை மெல்லாமல் துப்பிவிட்டீர்களே?” என்று எச்சிற் கலத்தைப் பார்த்தபடி அவந்திகா கேட்கிறாள்.

“எனக்கு எதுவும் இப்போது பிடிக்கவில்லை தாயே!”

‘தாயே’ என்று சொல்லும் போது குரல் தழுதழுக்கிறது… இவள் தாய் தான். ஆனால் பணிப்பெண்ணாகிய அடிமை…

“நீங்கள் எல்லாரும் போங்கள். தேவி சற்று தனிமையில் இளைப்பாறட்டும்” என்று அவந்திகா அவர்களை அப்புறப்படுத்துகிறார்கள்.

பூமகளை மெல்ல மஞ்சத்தில் சாய்த்தவாறு, துகில் கொண்டு மேலே போர்த்துகிறாள்.

இதமாக நெற்றியை வருடுகிறாள்.

“…தாயே, மன்னர் இந்தப் பக்கம் வந்து மூன்று நாட்களாகின்றன…”

நெஞ்சம் பொறாமல் வரும் சொற்கள்…

“தேவி, இதற்காகவா வருந்துகிறீர்கள்? அரசாங்கக் காரியங்கள் என்றால் அவ்வளவு எளிதா? இப்போது, தங்கள் பதி என்பதுடன், இந்த நிலையில் தங்களுக்கு அமைதியும் ஓய்வும் வேண்டும் என்ற கடமை உணர்வும் கட்டிப்போடும்… கண்களை மூடிச் சற்றே உறங்குங்கள்…”

ஆனால் அமைதி வரவில்லை.

அவள் இட்டிருந்த நெருப்பு வளையத்தை அவர் அறிந்திருப்பாரா? திரிசடை மட்டுமே இதமாக அவளைப் புரிந்து கொண்டவள். மற்றவர் எவரேனும் இலங்கை வேந்தனின் பராக்கிரமங்களின் புகழ்பாடி அவளை மனம் கொள்ளச் செய்ய வந்தால், உயிரை விட்டு விடுவாள் என்பதே அந்த வளையம். அவ்வளையத்தை உயிர்ப்பித்து அவர்களை அச்சுறுத்தி வைத்திருந்தவள் திரிசடைதான். அக்காலத்தில் அசோகவனத்தின் எழிலார்ந்த அருவிக் கரையில் தன் பதியுடன் கோதாவரிக் கரையில் கழித்த இனிய பொழுதை உன்னுவாள். அந்தக் காற்றும், அருவி நீருமே அவளுக்கு அன்னமும் பருகு நீருமாய் இருந்தன. அசைக்க முடியாத நம்பிக்கையால் கோட்டை ஒன்று கட்டி இருந்தாள். அதனுள், ஒரு சிறு திரியிட்டு ஒளித்தீபம் ஏற்றி வைத்திருந்தாள்… பத்து மாதங்கள்…

அவளுடைய நம்பிக்கைக் கோட்டை தகரவில்லை. அவள் பதி வந்து, இலங்கையில் வெற்றிக் கொடியை ஏற்றி வைத்தார். ஆனால்… ஆனால்… அவள் ஏற்றி வைத்திருந்தாளே, சிறு திரிகொண்டு ஒளித் தீபம்…? அதை அவர் அணைத்து விட்டார்.

அவள் விம்மி விம்மி அழுகிறாள். தோள்கள் குலுங்க அழுகிறாள்… அவந்திகா பதறிப் போகிறாள்.

“தேவி? தேவி!… நான் அருகிருக்கையில், மகாராணிக்கு என்ன துயரம் வந்தது?…”

குளிர் நீர் கொண்டு முகத்தைத் துடைக்கிறாள்.

“தீபம் அணைந்துவிட்டது, தாயே? தீபம்… சிறு திரி இட்ட தீபம்…”

“எந்த தீபம்…? எது? ஓ, மாடத்தில் இருக்கும் தூங்கா விளக்கா? அடீ விமலை? விசயை?…” என்று அவந்திகா குரலெடுத்துக் கூறிக் கொண்டு போகிறாள்.

அப்போது, ஒற்றை நாண் தம்பூரின் சுருதி செவியில் ஒலிக்கிறது. ஒற்றை நாண்… தம்பூரு…

பரபரப்புடன் அவள் இறங்கி, சாளரத் திரையை அகற்றி வெளியே பார்க்கிறாள்.

அத்தியாயம்-2

ஒற்றை நாணின் மீட்டல்.

கிய்… கிய்… கிய்… கில்… ரீம்… ரீம்…

இது ஏதேனும் வண்டின் ரீங்காரமோ?

அந்த மீட்டொலி அவள் செவிகளில் நிறைந்து, நாடி நரம்பெல்லாம் பரவுவதாக உடல் புல்லரிக்கிறது. நினைவுகளில் முன்னறியாத ஓர் ஆனந்தம்.

“அவந்திகா?… ஏதோ ஓர் இசை கேட்கவில்லை?”

“இசையா?”

அவள் புருவம் சுருக்குகிறாள். வந்தியும் மாதுரியும் ஏதேனும் இசை பயின்று கொண்டிருப்பார்கள். அரண்மனையில் நடனமாடுபவள் வந்தி. அவர்கள் பயிலும் இடம் இங்கே இல்லையே? அதுவும் இந்தப் பிற்பகல் நேரத்தில் அழைத்தாலொழிய எவரும் யாழை எடுத்துக் கொண்டு வர மாட்டார்களே?

“…தெரியவில்லையே தேவி?”

“ரீம்… ரீம்… ரீம்…” சுருதி துல்லியமாகக் கேட்கிறது. பாடலின் சொற்கள் புரியவில்லை. ஆனால் இசை, அவளைச் சிலிர்க்க வைக்கும் இசை… பூமகள் சாளரத்தின் வழியே கீழே தோட்டமெங்கும் பார்வையால் துழாவுகிறாள். அந்த நாதம், அவளை அற்புதமாகக் கழித்த கனவுலகுக்குக் கொண்டு செல்கிறது.

ஆம்… மரக்கிளைகளின் பசுமைக் குவியல்களிடையே சத்தியத்தின் குறுத்துப் போல் ஓர் உருவம் தெரிகிறது.

நினைவுக் குவியல்களில் மின்னல் அடித்தாற் போல் பாடலின் வரிகள் உயிர்க்கின்றன.

“தாயே, தருநிழலே, குளிர் முகிலே…”

இந்தப் பாட்டுக்குரியவர்…

அவள் பிஞ்சுப் பாதம் பதித்தோடும் ஐந்து வயசுச் சிறுமியாகிறாள்.

பாத சரங்கள் ஒலிக்க, படிகள் இறங்கி, கீழ்த்தளத்து முற்றத்துக்கு வருகையில், அந்த ஒற்றை நாண் இசைக்கருவிக்குரியவர் செய் குளம் தாண்டி வருகிறார்.

உச்சியில் முடிந்த முடி; அடர்த்தி தெரியாத தாடி. எலும்பு தெரியும் வெற்று மேனி. வற்றி மெலிந்த முகத்தின் கண்களில் எத்தகைய அமைதியொளி! மகிழ்ச்சிப் பெருக்கு அவளை ஆட்கொள்கிறது.

அவர் கண்களை மூடியிருக்கிறார். சொற்கள் வரவில்லை. விரல் மட்டும் அந்த ஒற்றை நாணை மீட்டுகிறது.

“நீ தந்தையின் மகள் தான்; என் தாய் உன் தாயல்ல. உன் தாய் பூமி தான். அதனால் தான் நீ பூமை, பூமகள் என்று பெயர் பெற்றாய்… கணவர் கானேறியதும், அவள் தாய் வீடு சென்றாள். ஆனால் உன் தந்தை உனக்குக் கூறிய அறிவுரை… உன் நாயகர் இருக்கும் இடம் தானம்மா, உனக்குத் தலை நகரம், மாளிகை எல்லாம்…! உனக்கு இனி அவர் தாம் சகலமும்…” தந்தையின் சொற்கள் காரணம் தெரியாமல் செவிகளில் மோதுகின்றன. அவள் “சுவாமி!” என்று கண்ணீர் மல்க அவர் பாதங்களில் பணிகிறாள். “குழந்தாய், எழுந்திரம்மா, நலமாக இருக்கிறாயா?…”

அவர் காலடித்துகளைச் சிரத்தில் அணிந்தவாறே, மகிழ்ச்சி பொங்கும் குரலில் “அவந்திகா, தெரியவில்லை? நந்தசுவாமி, நந்த பிரும்மசாரி… என் தாய் இவர்… நீ ஒரு தாய், இவர் ஒரு தாய்… இன்னும், சுவாமி, பெரியம்மா, அம்மம்மா… அவர் சுகமாக இருக்கிறாரா?… ஊர்மிக்கு ஒரு தாய்தான். எனக்கோ எத்தனை பேர் என்று விரல் மடக்குவேனே?… குழந்தை, பூதலம் உனக்குத் தாய்… நீ பூமிக்குத் தாய் என்பீர்களே?…” என்றெல்லாம் மடைதிறக்கிறாள். அவந்திகா அருகில் வந்து அவரைப் பணிகிறாள். “சுவாமி, உள்ளே வரவேண்டும். இந்தச் சமயத்தில் தாங்கள் தெய்வத்திருவருளே போல் வந்திருக்கிறீர்கள். குழந்தையை ஆசீர்வதியுங்கள் சுவாமி.”

“சுவாமி, எத்தனை நாட்கள்! தாங்கள் அன்று கண்ட வடிவமாகவே இருக்கிறீர்கள். என் மனம் சஞ்சலப்படும் நேரத்தில் சஞ்சீவியாக வந்தீர்கள். இந்த இடம் பேறு பெற்றது. சுவாமி! ஓ கங்கைக் கரையிலும், தண்டகாரணியத்திலும், சிறையிருந்த அரக்கர் மாளிகையை ஒட்டிய சோலைகளிலும், எத்தனை முறைகள் தாங்கள் வந்துவிட மாட்டீர்களா என்று நெஞ்சு ஏங்கியது!… சுவாமி, வாருங்கள்…”

தன்னை மறந்து, பூம்பந்தலின் பக்கம் இருக்கும் நீர்க்கலத்தில் இருந்து நீர் மொண்டு வருகிறாள். பூம்பந்தரின் மேடையில் சருகுகளை அகற்றி இருக்கையைச் சித்தமாக்குகிறாள் அவந்திகா. நடந்து நடந்து மெலிந்து புழுதி படிந்த பாதங்களைக் கழுவ, பொற்றாலம் வருகிறது. பூமகள் அந்தப் பாதங்களைக் கழுவும் போது, அவர் கண்கள் கசிகின்றன. புன்னகையுடன் அவள் உச்சியில் கை வைத்து ஆசி மொழிகிறார். “தாயே, என் பாவங்கள் கழுவப் படுகின்றன. என் அன்னையால்… நீ பூமகள், பூதலத்தின் அன்னை…”

“இமயத்தின் மடியில், கங்கை பெருகிவரும் சரிவுகளில் பனிபடர்ந்த சூழலில் பலகாலம் இருந்துவிட்டேன். இந்த மகளின் நினைவு, இந்த அன்னையின் நினைவு, என்னை உந்தித் தள்ளிக் கொண்டு வந்துவிட்டது. பல செய்திகள் கேள்விப்பட்டேன் அம்மா!”

அவர் குரல் கரகரக்கிறது.

அவள் துணுக்குறுகிறாள்.

‘அரண்மனை வாயிலில் மன்னரின் காவலர் தடுத்தனரோ? அதனால் தான், பின்புறம் கானகத்து வழியில் அந்தப்புரச் சோலையினூடே வருகிறாரோ?’ பேதை இப்படியே நினைத்துக் குறுகி நிற்கிறாள்.

“நான் மன்னரையோ, அரசியையோ பார்க்க வரவில்லையே? எனக்கு அயோத்தியின் மாமன்னர் அவையில் வந்து நிற்பதற்குத் தகுதியான புலமையோ, ஆன்மிக – வேதாந்தங்களில் வல்லமையோ, இல்லையம்மா! வேதபுரி அரண்மனைத் தோட்டத்தில், பறவைகளுடனும், மான், பசு, முயல், அணில் என்ற உயினினங்களுடனும் தோழமை கொண்டு உலகை அன்பால் ஆளவந்ததொரு சிறுமியை நினைத்துக் கொண்டு வந்தேன். அந்தச் சிறுமி, அரண்மனையின் பெருந்தோளர்களினால் தூக்க இயலாத மூதாதையர் வில்லை, அனாயசமாகத் தூக்கி அடிபட்டு விழுந்ததொரு கிளிக் குஞ்சைக் கையிலெடுத்து, தன் அன்பு வருடலாலேயே உயிர்ப்பித்த அதிசயம் கண்டிருக்கிறேன். தாய்-தந்தை தெரியாத இந்தக் குழந்தைக்குரிய மணாளனை எப்படித் தேடுவேன் என்று உன்னை வளர்த்த தந்தையின் கவலையை நீ எப்படித் தீர்த்து வைத்தாய்!…”

“சுவாமி, நான் பேதையாக இங்கேயே அதர வைத்தேனே! உள்ளே வாருங்கள்!” இன்ன செய்வதென்றறியாதவர் போல் தன் பட்டு மேலாடைத் துகிலால் அவர் பாதங்களைத் துடைக்கிறாள் பூமகள். மலர்த்தட்டை ஏந்தி விரைந்து வருகிறாள் விமலை…

மணமிகுந்த சம்பங்கி, பன்னீர் மலர்கள்.

“உள்ளே வரவேண்டும், சுவாமி!…”

அந்த இசைக்கருவியை, கையில் எடுத்துக் கொள்கிறாள்.

“குழந்தாய், இந்த இடமே நன்றாக இருக்கிறது. இதுவே என் அன்னையின் இடம்… எத்துணை அழகான வேலைகள்! செய்குளங்கள்…! உன் மன்னரின் வீரச் செயல்கள் பற்றிக் கேட்டேன். கடல் கடந்து அரக்கர் குலத்தை அழித்து, உன்னை மீட்ட பெருமை – புகழ் எட்டுத் திக்கிலும் பரவி இருக்கிறது தாயே!…”

அவள் மலர் முகம் முள் தைத்தாற் போன்று சோர்ந்து வாடுகிறது.

“நான் கண்டு அறிந்த செல்வி, மாசு மறு ஒட்டாத நெருப்பு. ஈரேழ் உலகும் போற்றக்கூடிய ஒரு மனிதரின் நாயகி. இந்த மனிதர், அந்த மாமணியை நெருப்புக் குண்டலத்தில் இட்டுப் பரிசோதித்தார் என்ற செய்தி பொய்யாகத்தானிருக்கும் என்று கருதினேன்.”

இந்த மக்கள் தாம் எப்படி மணலைக் கயிறாகத் திரிக்கிறார்கள்! கொடிய நஞ்சுப் பாம்பு என்று அச்சுறுத்துகிறார்கள்!…

அவள் இதயத்தை முறுக்கிப் பிழிவது போல் இருக்கிறது. அவள் ஏற்றி வைத்திருந்த திரி அணைந்து போனதை எப்படிச் சொல்வாள்?

“அவந்திகா! உள்ளே எல்லாத் திரிகளையும் ஏற்றச் சொல்வாய்! சுவாமி. அமுது கொள்ள உள்ளே வரவேண்டும்…”

அவந்திகா, ‘இந்நேரத்தில் திரிகளை ஏற்றச் சொல்’ என்ற ஆணையை ஏற்கத் திகைப்பது புரியவுமில்லை. புரியாமலுமில்லை.

“குழந்தாய், எனக்கு உள்ளே வருவதைக் காட்டிலும் இந்த இருக்கையே மனம் நிறைந்த ஆறுதலைத் தருகிறது. உன் முகம் பார்த்த மகிழ்ச்சியே போதும். நீ படைக்கும் அமுது எனக்குக் கிடைத்தற்கரிய இன்னமுது. இங்கேயே அதைக் கொள்கிறேன் மகளே!”

மாதுளை, கொய்யா, வாழை ஆகிய கனிகள் திருத்தப்பட்டு உணவுக் கலத்தில் கொண்டு வரப்படுகின்றன. தேன், பால், பருகுநீர் வருகின்றன. சுவை மிகுந்த வெண்ணெய்க் கனி பிளந்தாற் போன்று விரித்து வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே கறுப்பு விதைகள். இடை முழுதும் வெண்ணெயில் தேன் பெய்த சுவையுள்ள சதை.

அவள் ஒவ்வொன்றாக அவர் கையில் எடுத்து வைக்கு முன் அவர், தன் சுருதி மீட்டும் குடுவையில் இருந்து ஒரு புதையல் போன்ற பொருளை எடுக்கிறார். சிவப்பும் கறுப்புமாகக் கல்லிழைத்த குணுக்குப் போன்ற கனிக்கொத்து.

“மகளே! உனக்கு நான் எப்போதும் கொண்டு வரும் பரிசு…” அவள் ஆவலோடு அதை நாவில் வைத்து ருசிக்கிறாள். கண்ணீர் இனிப்பும் கரிப்புமாக வழிகிறது.

“தந்தையே, தாயே, எத்தனையோ இடங்களில் அலைந்து விட்டோம். இந்தச் சுவையை நான் உணர்ந்ததில்லை. பெரியம்மா, கைநிறையக் கொண்டு வருவார்கள். தம் ஆடை மடியில் புதையலாக வைத்துத் தருவார்கள். அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தம் வைப்பேன். ஊர்மி கேட்டால் ஒன்று கூடக் கொடுக்க மாட்டேன். ஆடையை விரித்து அதில் அந்த பழங்களைச் சித்திரம் போல் வைத்து ஒவ்வொன்றாக ருசிப்பேன்.”

“சுவாமி, என்னைக் குஞ்சம்மை என்று கூப்பிடும் அந்தத் தாயை எப்படிப் பார்ப்பேன்? நான் மணமாகி மன்னருடன் இரதத்தில் புறப்படும் நேரத்தில் இந்தக் கனியுடன் ஓடோடி வந்தார். எனக்கு இறங்கி ஓடிச் சென்று, அறியாப் பருவத்தில் செய்ததுபோல் ஆடையை விரித்துச் சித்திரமாக வைத்து அக்கனிகளை, அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கொண்டே உண்ண வேண்டும் என்று தோன்றிற்று. ‘ம்… நேரமாகிறது. இரதத்தை ஓட்டப்பா!’ என்று மாமன்னர் ஆணையிட குதிரைகள் பறந்து சென்றன…”

அவளுடைய ஆற்றாமை பொல பொலவென்ற சொற்களாகக் கொட்டுகிறது. “மகளே, பெரியம்மை, உன்னை எப்போதும் நினைவு கூறுகிறாள். ‘அவள் சக்கரவர்த்தி மருமகள், திருமகள், இப்போது, இந்தப் பஞ்சை யார்?’ என்பாள். ஆனாலும் மிகுந்த மகிழ்ச்சிதான் உள்ளூர. இப்போது நானும் யாவாலி ஆசிரமம் விட்டு வெகுகாலமாகிவிட்டது. நான் அங்குதான் போகிறேன். உன் செய்தி எல்லாம் சொல்வேன்!”

“சுவாமி… நான் பெரியன்னையை எப்போதும் நினைத்துக் கொள்வேன். அவர் அப்படி ஓர் உயர்ந்த தோற்றம் உடையவர். அசோக வனத்தில், எனக்குத் துணை போல் வந்த பெண்களில் ஒருவர் அப்படிப் பெரியன்னை போலவே இருப்பார். அவர் என்னிடம் வாய்திறந்து மற்றவர் போல் அரக்க மன்னனின் புகழ் பாட மாட்டார். என்னை எட்ட இருந்து பார்த்துக் கொண்டே இருப்பார்.

வயதானதால் கூந்தல் நரைத்திருக்கும். விரித்துக் கொண்டிருப்பார். கைகளில் காப்புகளும் மார்பில் மணிமாலைகளும் அணிந்திருப்பார்.

ஒருநாள் அவரே அருகில் வந்து, “பெண்ணே, மன்னர் ஆணைக்காக மட்டும் நான் இங்குக் காவல் இருக்கவில்லை. உன்னைப் போல் ஒரு மகள் வேண்டும் என்று நான் பல காலமாக விரும்பி இருந்தேன். நீ எங்கேனும் உயிரை மாய்த்துக் கொண்டு விடுவாயோ என்ற அச்சமே என்னை இங்கே இருத்தி வைக்கிறது. உன் கூந்தலை வாரி முடித்து மலர் அலங்காரம் செய்து நல்ல உடை உடுத்தி, உணவு கொடுத்து நான் மகிழ வேண்டும்… நீயோ தவமிருக்கிறாய். ஒரு பெண்ணின் தூய்மை, அவளால் குலைக்கப்படுவதில்லை. ஆணே அதற்குக் காரணம். இந்த மன்னனைச் சேர எத்தனை பெண்களோ விரும்பி வந்திருக்கிறார்கள். ஆனால் மன்னனோ, உன்னை அடைய ஆசைப் படுகிறான். உன்னை அணுகி விடாதபடி நெருப்பு வளையம் தடுக்கிறது” என்று சொன்னாள்… எனக்கு அவள் பெரியம்மை தானோ, ஏதோ ஓர் அசாதாரண சக்தி அவளை என்னிடம் கொண்டு வந்து விட்டிருக்கிறதோ என்று தோன்றும்…”

“ஓ அவள் தான் தம்பி வீடணன் மகளா, குழந்தாய்?”

“இல்லை சுவாமி. அவள் இளையவள். திரிசடை மூன்று பின்னல்கள் போட்டு அழகாக முடிந்திருப்பாள். என் அருகில் வளையம் தாண்டி வரும் ஒரே பெண். அந்த அரக்கர் குலப் பெண்கள் எல்லோருமே அழகானவர்கள்…” என்று சொல்லி வரும் போது, தாடகை நினைவு வர, வெண்ணைய்க் கனியை அவள் அவருக்கு உண்ணக் கொடுக்க, அவர், வெண்ணெய்க் கனியைப் பிட்டு அங்கையில் வைக்கிறார்.

உண்வு கொள்ளல் நீளும் பொழுதில், பணிப் பெண்கள் ஆங்காங்கு கொத்த்க் கொத்தாக நிற்பதை அவள் கருத்தில் கொள்ளவில்லை.

“குழந்தாய், பெரியம்மையை நான் கண்டு இந்தச் செய்தியைச் சொன்னால் பேரானந்தமடைவாள்…”

“சுவாமி, நீங்கள் சொல்வீர்கள், குரு சத்திய முனிவர் பற்றி, அவர் தாம் என் தந்தையை அந்த வனத்தில் உழவு செய்ய அழைத்தார், ஏரோட்டுகையில் நான் கிடைத்தேன் என்று. எனக்கு அந்த இடம், அந்த முனிவரின் ஆசிரமம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசை. எங்கெங்கோ கானகங்களில் சென்று வாழ்ந்தோம். கடல் கடந்தும் பாவியானேன். ஆனால் எனக்குப் பிறவி கொடுத்த தாய் மண்ணை இன்னமும் தரிசிக்கவில்லையே?…”

அவள் முகம் மின்னுகிறது! அந்த ஒளியில் உணர்ச்சியின் நிழல்கள் ஆடுவதை அவர் கவனிக்கிறாரோ என்று தலை குனிந்து கொள்கிறாள். அவந்திகா முன் வருகிறாள்.

“சுவாமி, இந்த மாதிரியான பருவத்தில் தாய் வீடு செல்ல ஆசைப்படுவது இயல்பு என்று சொல்வார்கள். தேவியின் விருப்பம் நிறைவேற வேண்டும், ஆசி மொழியுங்கள்!…”

பூமகளுக்கு ஆசுவாசமாக இருக்கிறது. அவந்திகாவின் அன்பில் நெகிழ்ந்து போகிறாள்.

“குழந்தாய்! மாமன்னரும், உன் அத்தைமாராகிய தாயரும், இந்த அரண்மனையின் அநுகூலங்களையும் வழிகளையும் விட்டு விட்டு, காட்டுக்கு அனுப்பச் சம்மதிப்பார்களா… சத்திய முனிவர் இன்னும், காட்டு மக்களுக்கு நலம் கருதும் பயன் செய்யும் நல்ல நல்ல வேள்விகளை மேற்கொண்டிருக்கிறார். தாயே, நீ கட்டாயமாக வந்து பார்க்கத்தான் வேண்டும். யாவாலி ஆசிரமத்தின் எல்லையில் அக்காலத்தில் நான் சிறுவனாக இருந்த நாட்களில் பூச்சிக்காடு என்ற வனம் இருந்தது. அங்கு மிகுதியாகப் பட்டுப் பூச்சிகள் கூடு கட்டும். அதை எடுக்க நகரங்களில் இருந்து சாலியர் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஆனால், பூச்சிக்காட்டு மக்கள் அக்காலத்தில் ‘நரமாமிசம்’ கொள்பவர்களாக இருந்தார்கள். பூச்சிக்கூடுகள் அறுந்து அறுந்து காற்றிலே பறந்து எங்கள் எல்லைக்குள்ளும் வரும். இங்கும் ஒரு காலத்தில் எத்தனையோ வன்முறைகள் இருந்தன. அக்கரை முனி குமாரர்கள், அரச குலத்தோர் இங்கு வந்து பசுக்கூட்டங்களைக் கவர்ந்து செல்வர். வியாபாரிகளை மடக்கி இவர்கள் கொலை கொள்ளை என்று ஈடுபடுவார்கள். அதெல்லாம் பழங்கதை. வாழை வனத்தை யானைக் கூட்டம் கூட அழிப்பதில்லை. முறை வைத்துக் கொண்டு உண்டு விட்டுப் போகும். ஒரு மரத்தின் விழலில் வாழும் எத்தனையோ ஜீவராசிகளைப் போல் வாழப் பயிற்றுவிக்கிறார் சத்தியமுனி. பயிர்த்தொழில் பயிற்றுவித்தார். பிறகும் எத்தனையோ சிக்கல்கள். எல்லாம் உனக்கு, என் நிலம், உன் நிலம் என்ற சண்டைகள் வரும். ஆனால் எப்படியும் மக்களை நல்வழிப்படுத்தும் அமைதி முறையில் அவருக்கு அளவில்லாத நம்பிக்கை. மகளே, நான் முன்பே தீர்த்த யாத்திரை என்று கிளம்பி இமயத்தின் அடிவரையிலே தங்கிவிட்டேன்… இப்போது எனக்கு விடை கொடு. நான் சென்று செய்தி சொல்வேன். உன்னையும் மன்னரையும் அழைத்துச் செல்ல வருவேன்… இதை விட எங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி… பணி என்ன இருக்கிறது?”

“சுவாமி! நீங்கள் இப்படித் தோட்டத்தில் வந்து விட்டு மன்னரைக் காணாமல் மரியாதைக் குரியவரை வரவேற்கும் பண்பை எனக்கு மறுத்து விட்டுப் போகலாமா? அந்நாட்களில் நான் விவரம் புரியாத சிறுமி; தந்தை என்னிடம் தங்களை உள்ளே அவைக்கு அழைத்து வரச் சொல்வார். எனக்கு அந்த அவை நாகரிகம் எதுவும் பிடிக்காது. தங்களுடன் அணிகளைத் தொட்டுப் பார்ப்பதும், கிளிகளுடன் கொஞ்சிப் பேசவும், புறாக்கள் வரும் அழகைப் பார்த்து ரசிக்கவும் கற்றேன். ஒரு சமயம் பெரிய பாம்பைத் தொட்டுத் தடவிக் கொடுக்கச் சொன்னீர்கள். ‘மகளே, அச்சம் கூடாது. அதற்கும் அச்சம், உன்னிடம் வராது’ என்றீர்கள். தடவிக் கொடுத்தேன். குளிர்ந்திருந்தது. பிறகு கூட ஓடிப் போகாமல் நாம் பேசுவதை, பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு அதனால் தானோ போலும் வனவாசம் என்ற அச்சமே இல்லை.”

“‘உன் நண்பரை உள்ளே அழைத்து வர வேண்டாமா மகளே? உள்ளே அழைத்து உபசரிக்க வேண்டாம்?’ என்று தந்தை நம் இருவரையும் கண்டபோது மொழிந்தார். நீங்கள் சிரித்துக் கொண்டே, ‘உபசாரமா? இவளே, இந்தக் குழந்தையே என் தாய். இதை விட என்ன உபசாரம்’ என்றீர்கள். நினைவு இருக்கிறதா, சுவாமி?”

“குழந்தாய், நான் கற்ற அறிவாளி அல்ல… கவிபாடும் குரவரும் அல்ல. எனக்கு எந்த நாகரிகமும் தெரியாது. ஒரு காட்டு மனிதன். இந்த வாழ்வுப் பிச்சையே எனக்கு ஒரு தாயின் அருளால் வாய்த்தது. அந்த வடிவத்தை இந்தத் தாய் குழந்தை உருவில் உணருகிறேன். எனக்கு விடை கொடு குழந்தாய்?”

“சுவாமி, மன்னர் உங்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார். வனவாசத்தில் அவர்கள் பலரைக் கண்டிருக்கிறார்கள். சபரி என்ற மூதாட்டி அவர்களை உபசரித்ததைச் சொல்வார். அப்போது கூடத் தங்களையோ பெரியன்னையையோ காணவில்லை என்று ஆறுதலடைந்தேன். ஏனெனில் எனக்கு நேர்ந்த விபத்தைத் தாங்கள் அறிந்திராதது எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் இப்போது, என் இளவயதுத் தோழர், என் குரு, என் காப்பாளர் என்று கூறி மகிழ்ச்சி கொள்வேன். திருமணத்தின் போது கூடத் தங்களை மன்னருக்குக் காட்டி மகிழ, வாய்க்கவில்லை.”

அவர் அன்பு நிறைந்த விழிகளால் அவளை நோக்கியவாறு வாளா விருக்கிறார்.

அவள் மனப்பரப்பில் தலை தூக்கும் ஆசை இதுதான்.

வனத்துக்கு இவருடன் அனுப்பி வைக்க மாட்டாரா? மூன்று நாட்களாக இங்கே வர நேரமில்லாத மன்னர், இவளை அழைத்துக் கொண்டு அவர்களை எல்லாம் காண வனத்துக்குச் செல்வாரோ?… ஆனால்… இப்போது இப்படிக் கேட்டால்… தாய்வீட்டுக்கு… தாய்வீடுதானே அந்த வனம்?

“குழந்தாய், என்னம்மா தயக்கம்? எனக்கு விடை கொடு! நான் பெரியம்மையிடம் சொல்வேன். குஞ்சுப் பெண் மகாராணியாக வளர்ந்துவிட்டாள், நம்மை அழைத்திருக்கிறாள், போகலாம் என்று கூட்டி வருவேன்…”

“…சுவாமி, மன்னரிடம் அனுமதி பெற்று நான் இப்போதே உங்களுடன் வரலாமல்லவா? மன்னர், அரசாங்க அலுவல்களால் ஓய்வாக நேரம் ஒதுக்கவே முடியாதவராக இருக்கிறார். இன்று உணவு மண்டபத்துக்கும் கூட வரவில்லை.” அவர் புன்னகை செய்கிறார்.

“அப்படித்தானம்மா இருக்கும். நாடாளும் மன்னர் என்றால் எத்தனை பொறுப்புகள், கடமைகள்? தவிர, இந்த ஆண்டி, சக்கரவர்த்தித் திருமகளின் தேவியை, தாயாக இருக்கும் திருமகளை நான் அழைத்துச் செல்வதா? மன்னரே, எல்லாப் பரிவாரங்களுடன் தேவியை அழைத்து வந்து அவள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார். நாங்கள் எதிர்பார்த்து இருப்போம் விடை கொடு, தாயே?”

அவருடைய கரம், அவள் உச்சியில் பதிகிறது. வாழ்த்தி விடை பெறுகிறார்.

அடுத்த கணம் அவர் திரும்பிச் செல்கிறார். ரீம்… ரீம்… ரீம்… என்ற சுருதி ஒலிக்கிறது. அந்த சுருதியில் எழும் கீதம்… அது என்ன கீதம்? பறவைகளின் இன்னொலி, அணிலின் குரல், வண்டின் ரீங்காரம்… பாம்பின் சீறல்… யானையின் பிளிறல், நாயின் செல்லக் குலைப்பு… எல்லாம்… எல்லாம் புவியின் இசை. பூமகளின் சுவாசமாகிய சுருதியில் எழும் கீதங்கள்… யாரோ குழலூதுகிறார்கள் யார்…?

சூரியனின் வெப்பம் தணிந்த கதிர் அவள் மீது விழுகிறது.

அவந்திகா தோட்டத்துக்குள் ஆடுகளை ஓட்டி வந்து விட்ட பையனை விரட்ட ஓடுகிறாள். அவன் தான் குழல் ஊதியிருப்பான்.

அவன் ஆடுகளை விரட்ட, அவை மே, மே என்று கத்துகின்றன.

அபசுரம்…

“அவந்திகா!”

“தேவி!…”

“வாயில்லாப் பிராணிகள். ஏன் விரட்டி அடிக்கிறீர்? பையன் குழலூதினானா? அவனை அழைத்து வா?”

“அத்துணை பூஞ்செடிகளையும் மேய்ந்து விட்டன, தேவி. பையன் குழலூதுவதில் கவனிக்கவில்லை. வேண்டாம், தேவி. அவன் அப்போதே அஞ்சி ஓடிவிட்டான்!”

அப்போது சாமளி ஓடி வருகிறாள்.

“மூத்த மகாராணியார், தங்களைக் காண ஒரு பட்டு வணிகரை அனுப்பியுள்ளார்!…”

அவள் திரும்புகிறாள். ஆனால் ஏனோ உள்ளம் கனக்கிறது.

அத்தியாயம்-3

பட்டு வணிகர் குட்டையாக, கறுத்த நிறமுடையவராக இருக்கிறார். கூர்த்த நாசியில்லை. முகத்தை நன்கு மழித்துக் கொண்டு, நெற்றியில் செஞ்சந்தனம் தரித்திருக்கிறார். மேனியில் பாலாடை வண்ணத்தில் மெல்லிய அங்கி அணிந்து தார்பாய்ச்சிய ஆடையும் அணிந்துள்ளார். கழுத்தில், உருத்திராட்சமும், தங்கமும் முத்தும் இசைந்த மாலைகளை அணிந்திருக்கிறார். தலைப்பாகையை ஓர் அடிமை வைத்திருக்கிறான்.

“மகாராணிக்கு மங்களம்!” என்று அவளை வணங்குகிறார், அந்த முதிய வணிகர்.

நாலைந்து அடிமைகள், பொதிகளை இறக்குவதற்கு விமலையும் சாமளியும் பாய்களை விரிக்கின்றனர். உயர்ந்த வேலைப்பாடு செய்த பூம்பட்டு மெத்தை இருக்கையை மகாராணிக்கு இடுகின்றனர்.

அவள் அமரும் போது, வணிகருக்கும் ஓர் இருக்கையை இடுகின்றனர். மூட்டைகளைப் பிரித்து, அவர்கள் கடை பரப்புகிறார்கள்.

ஆகா! என்ன நேர்த்தியான நெசவு! மென்மை… பளபளப்பு… கடல் நீலம், கிளிப்பச்சை, அந்தி வானம், மாந்தளிர்… என்று பல பல வண்ணங்கள் கண்களைக் கொள்ளை கொள்கின்றன. ஆடைகளின் சருகுகளில், முந்திகளில், எத்துணை வண்ணக் கோலங்கள்! பூங்கொத்துகள், அன்னபட்சிகள், சங்குகள், கொடியோடும் மலர்ச்செண்டுகள், இவை பட்டு நெசவா, சரிகை இழைகளா? இவற்றை உருவாக்கிய கலைஞர் மானுடர் தாமா?

கண்ணிமைக்கவும் மறந்து அந்தக் கண்காட்சியில் சொக்கி நிற்கின்றனர்.

“இவ்வளவு நேர்த்தியாக நெய்யும் சாலியர், வேதபுரிக்காரர்களா? காசியா?…”

அவந்திகா தான் அந்த பிரமிப்பைச் சலனப்படுத்துகிறாள்.

“இல்லை தாயே, காமரூபம். நாங்கள் காடுகளில் இருந்து பட்டுக் கூடுகள் கொண்டு வருவதில்லை. பட்டுப் பண்ணையே வைத்திருக்கிறோம். நேர்த்தியான பட்டு உற்பத்தி செய்யும் பண்ணை எங்களுடையது. அற்புதமான கலைஞர்கள் எங்கள் பண்ணையில் இருக்கிறார்கள். பொற் சரிகை காசியில் இருந்து தருவிப்போம். வேதபுரிச் சாலியர் தொழிலில் பிரசித்தம். நேர்த்தியான தறிகளை, இப்போது மிதுனபுரித் தொழிலாளர் உருவாக்கியுள்ளனர். இழைகளில் புகுந்து, செல்லும் குருவி கண்களுக்குப் பிரமிப்பூட்டும். மூலிகைகளில் இருந்து சாயம் தயாரிப்போம். தேவி, இந்த விலை மதிப்பற்ற ஆடைகள், மகாராணிக்கே காணிக்கையாகக் கொண்டு வந்துள்ளோம்…” பூமகள் அசையாமல் ஏதோ கனவுக் காட்சியில் மிதக்கும் உணர்வுடன் அமர்ந்திருக்கிறாள்.

‘இந்த இளம் பச்சை ஆடை, பெரியம்மைக்கு என் பரிசாக இருக்கும். அவள் உயரம், நரைக் கூந்தல், அந்த கம்பீரம்… இதை அவள் மீது நான் சென்று போர்த்தும் போது… என்ன செய்வார்? அன்று பிஞ்சுப் பருவத்தில் அவளை அணைத்து முத்தமிட்டு மகிழ்வது போல் மகிழ்வாரோ?’ அந்த மென்மையான தொட்டுணர்வை இப்போதே அநுபவித்து விட்டாற் போன்று குதுகுதுக்கிறது இதயம்…

“கண்ணே, நீ ஓர் அரசகுமாரனை மணந்து செல்லும் போது, இந்தப் பெரியம்மையை நினைப்பாயோ? தேரில் உன் பதியுடன் நீ தலைகுனிந்து நாணம் காக்கும் போது, இந்த அம்மையை நினைவு கொள்வாயோ?” என்று அந்த அம்மையின் மார்பில் முகம் பதிக்காத குறுகுறுப்பு அவளை வதை செய்கிறது. இதற்குப் பரிகாரம் தேட வேண்டும். இந்த நேரத்தில், அவளைத் தவிர யாரே தாய் போல் இருக்க முடியும்?

எப்படியும் நந்த முனி சுவாமி, அந்த அம்மையை அழைத்து வருவார். அப்போது, இத்தனை வரிசைகளுடன் அவளை வரவேற்பேன். இந்த அரண்மனை அவருக்கு உரித்தாகும். பேரப்பிள்ளையைக் கண்டு மகிழ்வார்; என் சிறு உள்ளம் மகிழப் பாடிய பாடல்களை அவர்களுக்குப் பாடுவார்!

அந்த ஆடையைத் தடவிப் பார்த்துக் கொண்டே கற்பனையில் ஆழ்ந்து விட்ட மகாராணியின் சிந்தையை, அவந்திகா தான் நினைவுலகுக்கு இழுத்து வருகிறாள்.

“தேவி, இந்த மாந்துளிர் வண்ணமும் கடல் பச்சை நிறமும் உங்களுக்கு மிகவும் இசைவாக இருக்கும்…”

நிமிர்ந்து பார்க்கும் பூமகளின் பார்வையில் ஜலஜை படுகிறாள். எடுப்பான சிவப்பு, பூனைக் கண் விழிகள், செம்பட்டைச் சுருள் முடி. இவள் மூத்த மகாராணியின் மாளிகைப் பணிப் பெண். மகாராணி இவளை மன்னருக்குக் குற்றேவல் செய்ய அனுப்பி வைப்பதாக சாமளியும், விமலையும் பேசிக் கொண்டது நினைவுக்கு வருகிறது.

“ஜலஜை மன்னர் எங்கு இருக்கிறார்?”

இப்படி ஒரு பணிப்பெண்ணிடம் கேட்க நாணமாக இருக்கிறது. அப்போது எங்கிருந்தோ தத்தம்மா பறந்து வந்து அவள் தோள்களில் அமருகிறது.

“மகாராணி… மகாராணி மங்களம்…”

அவள் அதைக் கையில் பற்றி முத்தமிடுகிறாள்.

“இங்கே பட்டாடை கடை விரித்திருக்கிறது, தத்தம்மா. உனக்குப் பட்டும் வேண்டாம். ஆடையும் வேண்டாம். நீ இங்கே எந்தக் குறும்பும் செய்யாமல் பறந்து போய்விட்டு அப்புறமாக வா! இல்லாவிட்டால் அவந்திகா உன்னைக் கூண்டில் பிடித்துப் போட்டு விடுவாள்?”

“அவந்திகா, அவந்திகா!” என்று அவள் தோள்களில் குதித்து ஒரு கொத்தலைச் செல்லமாகப் பரிசளித்து விட்டுப் பறந்து போகிறது, தத்தம்மா.

“அபூர்வமாக இருக்கிறது, இந்தக் கிளி பார்த்தீர்களா? மகாராணியின் வளர்ப்புக் கிளியா? இதன் உடல் வண்ணம் பஞ்சவர்ணக் கிளியை விட நேர்த்தியானது. ஒரு மாதிரி இள நீலம் தெரியும் பசுமை. இந்த ஆடையின் வண்ணம் பாருங்கள்!”

“வணிகரே, இதே போல் எனக்கு இன்னொரு ஆடை நெய்து வாருங்கள்…”

“நிச்சயமாகத் தருவோம். ஆனால் ஓராண்டாகும். ஏனெனில் இந்தப் பட்டுக்கூடு, இயற்கையிலேயே இத்தகைய நிறம் கொண்டிருக்கும். எப்போதும் கிடைக்காது. அபூர்வமாகவே கிடைக்கும். அதனாலேயே விலை மதிப்பற்றது. மகாராணி கேட்பதால் நிச்சயமாக அடுத்த பருவத்தில் கொண்டு வருவோம்…”

வேறு யாரும் எதுவும் கூறு முன், ஜலஜை, “வணிகரே, மகாராணி, இந்த நிலையில் கேட்கும் போது, அடுத்த பருவம் என்று சொல்கிறீரே? ராணி மாதா என்ன சொல்லி அனுப்பி வைத்தார்? இவை அனைத்தும் எம் பரிசாகக் கொடுத்து விட்டு இன்னும் என்ன விரும்பினாலும் கேட்டு வாரும் என்று தானே சொன்னார்? சக்கரவர்த்தியின் தேவியாருடன் பேசுவதான நினைவில் ஆம் – சொல்ல வேண்டாமா?” வணிகரின் முகம் இறுகிப் போகிறது.

பூமகள் துணுக்குறுகிறாள். இந்தப் பணிப் பெண் எதனால் இவ்வாறு பேசுகிறாள்? அவர் கூறுவதில் என்ன தவறு?

“சரி வணிகரே, உங்களுக்கு மிகவும் நன்றி. அற்புதமான கலைஞரின் படைப்புகள் இவை. தெய்வாம்சம் பொருந்திய விரல்களால் மட்டுமே இப்படிப் படைக்க முடியும். நான் மிகவும் நேசிக்கும் ஓர் அன்னைக்கு இது போல் ஓர் ஆடை வேண்டுமென்று விரும்புகிறேன். உரிய பருவத்தில் நெய்து கொண்டு வந்தாலே போதும். அந்தக் கலைஞர்களை நான் பாராட்டுகிறேன்…”

“அவந்திகா, வணிகரிடம் தனியாக ஓர் ஆயிரம் பொன் பரிசு கொடுக்கச் சொன்னதாகப் பெற்றுக் கொடுப்பாய்!” என்று முடிக்கிறாள். அவந்திகா ஜலஜையை உறுத்துப் பார்த்துவிட்டுச் செல்கிறாள்.

பணிப்பெண்கள் குசுகுசுவென்று பேசிக் கொண்டு செல்ல வணிகர் விடை பெறுகிறார். அடிமைகள் ஆடைகளை மீண்டும் அடுக்க, விமலை அவற்றை உள்ளறையில் உள்ள மரப்பெட்டிகளில், பூந்தாதுப் பொடிகளின் நறுமணம் கமழும் அறைகளில் வைக்கிறார்கள்.

“ஜலஜை, மன்னர் ராணி மாதாவின் மாளிகையில் இருக்கிறாரா?”

“மாளிகையின் கீழ்ப்புறத்துத் தாழ்வரையில் அமர்ந்து அமைச்சருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் அங்குதான் நான் உணவு கொண்டு போனேன்…”

“சரி, நீ போகலாம்…”

“மகாராணிக்கு மங்களம்…”

பட்டாடைகளைப் பத்திரமாக வைத்துவிட்டுப் பணியாள அடிமைகள் சென்று விட்டனர். விமலையும் சாமளியும் மட்டுமே இருக்கின்றனர். விமலை ஏதோ ஒரு விளக்கைப் பளபளப்பாக்கிக் கொண்டிருக்கிறாள். அது நாய்த்தோல் என்று கூறினார்கள். நாய்… வேட்டைக்கு மனிதருக்குத் துணையாகும் நாய். நன்றி மறவாத பிராணி. காட்டு நாய் கூட வீட்டு நாயாக மாறி இருப்பதை அவள் அநுபவித்திருக்கிறாள். வாலை ஆட்டி வரும், உணவு வகைகளைப் போடுவாள். காகம், நாய், இரண்டுமே பங்கு போட்டுக் கொள்ளும். அத்தகைய நாயின் தோல், பளிங்கையும், பொன்னையும் மினுமினுப்பாக்குகிறது! வேடுவப் பெண்கள் இவ்வாறு தோல்களை உரித்துப் பதமாக்கிக் கொண்டு வருவார்கள். அடிமைப் பெண்கள் இது போன்ற பணிகளைச் செய்து, முனிவருக்கும் வசதியாக உடுக்க, இருக்க, படுக்க, தோல்கள் தயாரிப்பார்கள்…

எதை எதையோ மனம் நினைக்கிறது. நந்தமுனி வந்து உள்ளே முகிழ்ந்திருந்த ஆசைக்கனலுக்கு உயிரூட்டி விட்டார்…

“தேவி?…”

அவந்திகா இவள் முகத்தைப் பார்த்துத் துணுக்குற்றாற் போல் அழைக்கிறாள். கண்ணிதழ்கள் ஈரம் கோத்திருக்கின்றன.

“தேவி, என்ன இது?… மன்னர் வருவார்.” ஆதரவாக அவள் பூம்பட்டாடை நுனி கொண்டே கண்ணிதழ்களை ஒத்தி எடுக்கிறாள்.

“அவந்திகா, அந்த ஜலஜை, யவன மகளோ?”

“எந்த அடிமை மகளோ? சிறுக்கி. பூனைக் கண்காரிகளே கபடர்கள். மனசுக்குள் பெரிய அழகி என்ற கர்வம். மூத்த மகாராணிக்கும் சிறிதும் இங்கிதம் தெரியவில்லை. இவளைத் துணி வெளுக்க, பாண்டம் சுத்தம் செய்ய அனுப்ப வேண்டியதுதானே? இல்லையேல் சமையற்கட்டில் அறுக்கவோ, தேய்க்கவோ, இடிக்கவோ, புடைக்கவோ வைத்துக் கொள்ளட்டும். இளைய மகாராணிக்கு அவளைக் கட்டோடு பிடிக்காது. மன்னருக்கும் அமைச்சருக்கும் இவளிடம் உணவு கொடுத்து அனுப்புகிறார். அத்துடனா? எச்சிற்கலம், தாம்பூலத்தட்டு எல்லாம் இவள் கொண்டு போகிறாள். கவரி வீசவும், எச்சிற்கலம் ஏந்தவும் இவள் அருகில் நிற்க வேண்டுமா? மன்னரைப் பார்த்தால் ஒரு சிரிப்பு; நெளிப்பு; ஒய்யாரம். படியேறி வருகையில் இவள் பாதம் கழுவ முன்வருவது சரியாகவா இருக்கிறது. இந்த மன்னர் சத்திய வாக்கைக் கடைப்பிடிப்பவரல்லவா? அவரிடம் சென்று சீண்டினால், அவளல்லவோ துரும்பாகப் பற்றி எரிவாள்? இவரென்ன அந்தப்புரத்தில் சிறைக்கூடம் கட்டிப் பட்சிகளை சிறகொடித்து அடைத்திருக்கிறாரா?… சக்கரவர்த்தி மகாராஜாவின் சிறைக்கூடத்தையே இளைய மகாராணி திறந்து, அந்தச் சுவர்களை இடித்து, விடுதலை செய்து விட்டாரே? இந்த ஜலஜைக்கு முதலில் ஒரு சம்பந்தக்காரன் குதிரைக்காரன் வந்தான். அவன் குதிரை தள்ளியதில் இடுப்பொடிந்து மாண்டான். இப்போது இவளுக்கு ஒரு வயசுக்குழந்தை இருக்கிறது. சலவைக்காரர் சந்திரிதான் புருசன். இவள் அவனோடு துறைக்குப் போக வேண்டியவள் தானே? தாய் வீட்டில் என்ன வேலை?… மகாராணி இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா?…”

அவந்திகா பேசிக் கொண்டே போகிறாள். அந்த வார்த்தைகளுள் பொதிந்த காரம் நெருப்புப் பொறிகள் போல் மென்மையான உணர்வில் பதிகின்றன. “இல்லை, தேவி. நான் தான் கேட்கிறேன். மன்னருக்குப் பணி செய்ய, எதற்காக இத்தகைய இளசுகளை அனுப்ப வேண்டும்? என் போன்ற மூத்த பெண்கள் இல்லையா? பல் விழுந்தவள், சதை சுருங்கியவள், முடி நரைத்தவள் என்றால், ஒரு மகனைப் போல் வாஞ்சையுடன் பழகுவாள், பணி செய்வாள். தோல் சுருங்கிய காலத்தில் ஒரு பிடிப்பு என்று பக்தியுடன் எல்லாம் செய்வாள்…”

சாதாரணமாக இப்படி அவந்திகா ஏதேனும் பேசினால் பூமகளுக்குச் சிரிப்பு வந்து விடும். நேராக விஷயத்துக்கு வராமல், தொடாமல், பொருளை உணர்த்திவிடும் தனித்தன்மை உண்டு அவளிடம்.

“இந்த ஜலஜையின் தாயார் கணிகை மகளா?”

“யார் கண்டார்கள்? எல்லாம் ஒரு பொழுது மோகம். அது தீர்ந்ததும் சிறகுகள் முறியும். இந்த மோகம் அரசனுக்கில்லாமல் ஆண்டிக்கு வந்து ஒரு பிள்ளையைப் பெற்றிருந்தால் காட்டில் பிள்ளையுடன் அலைந்து கொண்டிருப்பாள். ஆண்டியே மன்னன் நிழலை அண்டுபவன் ஆயிற்றே! பிள்ளையானால் உபநயனம் இல்லாமல் குற்றேவல் செய்யும். பெண்ணானால் ஓர் அடிமை வருக்கத்தைப் பெருக்கும். காட்டுக்கு வேட்டைக்கு வரும் அரசன் எவனேனும் முகர்ந்து பார்த்து, கருப்பையை நிரப்புவான். தேவி, இந்தச் சனியன் பிடித்தவர்கள் பேச்சு இப்போது எதற்கு? நானே மன்னரைப் பார்த்தேன்… உங்களைப் பற்றி விசாரித்தார். ‘பட்டாடைகள் நன்றாக இருக்கின்றனவா? உன் தேவியை நீ இரு கண்களைப் போல் இந்த நேரத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும்! என்ன விரும்பினாலும் இச்சமயம் கொடுக்கக் கடமைப்பட்டவன். நீ வந்து என்னிடம் தெரிவிக்க வேண்டும். தேவி எக்காரணம் கொண்டும் இந்தச் சமயத்தில் வாட்டமுறலாகாது. கோசல நாட்டின் இந்தச் சூரிய குலத்தில் கொழுந்தைத் தாங்கி இருக்கிறாள். அவளை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்!’ என்று சொன்னார்.”

பூமகள் அவந்திகாவை உறுத்துப் பார்க்கிறாள்.

‘இவளுக்குத்தான் எத்தனை அன்பு? உண்மையாகவே மன்னர் இதெல்லாம் சொன்னாரா? நிசமா? நம்பலாமா?’

“அவந்திகா! நீ பார்க்கும் போதும் ராஜாங்க ஆலோசனை மண்டபத்தில்தான் இருந்தாரா? இன்னும் யாரெல்லாம் இருந்தார்கள்? இளையவர்கள் இருந்தார்களா?”

“ஆமாம். இளையவர்கள் இல்லை. இளைய மகாராணியிடம் மன்னரை வரச் சொல்லிக் கேட்டு விட்டு வந்தேன். தேவி… நீங்கள் என் மடியில் வளர்ந்த குழந்தை. நீங்கள் மனம் சஞ்சலப்பட என்னால் பார்க்க முடியுமா?…” அவந்திக்காவுக்குக் குரல் கரகரக்கிறது.

பூமையின் நெஞ்சம் விம்மித் தணிகிறது.

அவந்திகாவின் மார்பில் தலைசாய்த்துக் கொண்டு உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறாள்.

“தேவி, எனக்கு என்ன பயம் தெரியுமா? காட்டிலே அரக்கர் தங்கை வந்து சீண்டிய போது அவள் மூக்கையும் காதையும் இளையவர் அரிந்தார். அதனாலேயே தேவியை அரக்கன் பழிவாங்கச் சிறையில் இருத்தக் கொண்டு போனான். அது போல் இவள் ஏதேனும் தெரியாமல் விட்டில் பூச்சி போல் நெருங்க, அதனால் இந்தச் சமயத்தில் ஏதேனும் அவம் நேர்ந்து விடக் கூடாதல்லவா?… தேவி, இது குறித்து மகாராணியிடம் நான் எச்சரிக்கை செய்ய முடியாது. இளைய மகாராணி, அன்பானவர். எங்களை மனிதர்களாய் மதிக்கிறவர். மற்ற இருவரும் அப்படி இல்லை. அவர்களுக்கு நான் வெறும் அடிமைப் பெண். பூமகளுடன் வந்த அடிமை. என்னால் எதையும் சொல்ல முடியாது; செய்ய முடியாது. தாங்கள் இது குறித்து, அன்பாகப் பழகும் இளைய மகாராணியிடம் எடுத்துச் சொல்லலாம்…”

அவள் முடியை அன்புடன் கோதிக் கொண்டே அவந்திகா பேசுவது, பூமகளின் இதயத்துள்ளே ஒளிந்திருக்கும் அபசுரத்தை மெல்ல மீட்டி விட்டாற் போலிருக்கிறது. யாழின் நாண் தளர்ந்து விட்டால் இப்படித்தான் ஒலிக்கும். நாண் தளர்ந்து கிடக்கிறது. அதற்கு எப்படி முறுக்கேற்றுவது?

அவள் பதி, … சத்திய வாக்கை மீறாதவர் தாமே?

பத்து மாதங்கள் அவள் சருகும் நீரும் காற்றும் உணவாகக் கொண்டு உயிர் தரித்திருந்தாள். அந்தப் பத்து மாதங்களும் அக்கினி வளையம் கடந்து வந்திராத அரக்கர் கோனின் புகழும் குறைந்தது அல்ல! என்றாலும் அவள் அக்கினி குண்டத்தில் இறங்கி வெளிவந்தாள். ஆனால்… அவள் பதி… அவர் அவளைப் போல் சிறையிருந்தாரா? வேடப் பெண்கள், அசுர குலப் பெண்கள், கிஷ்கிந்தையின் வானர குலப் பெண்கள் யாருமே அவர் மீது மையல் கொண்டிருக்கவில்லையா? அரக்கர் கோன் நெஞ்சில் இவள் புகுந்தது, இவள் குற்றம் என்றால்…? ஒரு விம்மல் உடைந்து கண்ணீர் கொப்புளிக்கிறது.

அவந்திகா குலுங்குகிறாள்.

“தேவி… தேவி… என்ன இது?…”

கண்ணீரைத் துடைக்கிறாள். ஆறுதல் செய்கிறாள்.

“சாமளி, கொஞ்சம் கனிச்சாறு கொண்டு வாம்மா. பலவீனம், சரியாக உணவருந்தவில்லை…”

விமலை உறுத்துப் பார்க்கையில் சாமளி ஓடுகிறாள்.

“தேவி, வந்து கட்டிலில் ஆறுதலாக இளைப்பாருங்கள்…”

அவந்திகா அவளை மெல்ல அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்துகிறாள். கனிச்சாறு வருகிறது. பொற்கிண்ணத்தில் ஊற்றிக் கொடுக்கிறாள்.

“இது மதுவா?…”

“இல்லை மகளே, இந்த மாளிகையில் மது இல்லை. இது புளிப்புக் கனியின் சாறு. கரும்பு வெல்லம் கலந்தது. இஞ்சி சேர்த்தது; பருகுங்கள்; ஆரோக்கியமாக இருக்கும்…”

ஒரு வாய் வாங்கி அருந்துகிறாள்.

“அவந்திகா, ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். என்னை மாசு பற்றியிருக்குமோ என்று சந்தேகப்பட்டாரே, அதுபோல்… நானும் படலாம் அல்லவா? ஏன் எனில், அரசர்கள், க்ஷத்திரியர்கள் பல பெண்களைத் தொட்டுக் கன்னிமை குலைக்கலாம். இது மன்னர் குலத்துக்குப் பெருமையும் கூட! அவர் தந்தையைப் போல் இருக்கமாட்டார், இல்லை என்று நம்புகிறோம். ஆனாலும் விருப்பம் தெரிவிக்காத பெண்களைக் குலைத்து ஒதுக்குவதும், விருப்பம் தெரிவித்த பெண்களை மானபங்கம் செய்வதும் ஏறக்குறைய ஒரே மாதிரிதானே?…”

அவந்திகா உறுத்துப் பார்க்கிறாள்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் தேவி?… எப்படி இருந்தாலும், அரக்கர் குலத்தில் பிறந்தாலும், அந்தண குலத்தில் பிறந்தாலும், மன்னர் குலத்தில் பிறந்தாலும் பெண் ஒரு போகத்துக்குரிய பண்டம் தானே? ஆண்கள் முகர்ந்து பார்ப்பதில்தான் பெண் நிறைவடைகிறாள். ஒரு தாயாகும் பேறு கிடைக்கிறது. கணிகையரும், விலை மகளிரும் ஆடவர்களின் இச்சைகளை நிறைவேற்றுவதற்காகவே, பல வித்தைகளைக் கற்றிருந்தாலும், ஒரு மகவு தன் மார்பில் பாலருந்தித் தன்னைப் பிறந்த நேரத்தின் பயனை அநுபவிக்கச் செய்யும் பேறில் அல்லவோ வாழ்கிறார்கள்?… அந்தப்புரங்களில் ஒழுங்கற்ற நாற்றுகள் என்றால், கணிகையர், விலைமகளிர், கரும்பைப் பிழிந்து உறிஞ்சிச் சக்கையாக எறிவது போல் அல்லவோ துப்பப் படுகின்றனர்? மகளே, வேதபுரியின் கணிகையர் வீதிகளின் முகப்பில், சத்திரங்களில் அப்படித் துப்பப் பெற்ற மூதாட்டிகளை நான் இளம் பருவத்தில் பார்த்ததுண்டு. கணிகை வீட்டு அடிமையாக என்னை விலை கொடுத்து வாங்க எவரும் வரவில்லை. என் தாய், என்னை அரண்மனைப் பணிக்கு விற்றாள்…”

அவந்திகாவின் கண்ணீரைப் பூமகள் துடைக்கிறாள்.

“தாயே, இந்தத் துன்பமான கதைகள் வேண்டாம்… விமலையைக் கூப்பிடு. அவள் ஏதேனும் பாட்டுப் பாடட்டும்…”

பூமகள் திரும்பிக் கண்களை மூடிக் கொள்கிறாள். மாலைப் பொழுது இறங்கும் நேரம். யார் யாழ் மீட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

கூவிடுவாய் – பூங்குயிலே…
கூவிடுவாய் – கூவிடுவாய்!
தேன்சுனையில் திளைத்தனையோ,
தீயின் வெம்மை சகித்தனையோ!
வானுலகின் இனிமையெல்லாம்
வாரி வாரிப் பருகினையோ?

கூவிடுவாய்… பூங்குயிலே!
கூவிடுவாய்!
அன்புக்கடல் கடைந்து வந்த
அமுதம் நிரப்பி வந்தனையோ?
என்புருகும் சோகமெல்லாம்
இழைத்து ஒலி நீட்டுவையோ?

எங்கோ ஓர் உலகுக்கு அந்தச் சோகம் அவளைக் கொண்டு செல்கிறது. கண்களை மெள்ள விரித்துப் பார்க்கிறாள்… யார் யாழிசைத்துப் பாடுகிறார்கள்?

யாருமில்லை. திரைச்சீலைகள் வெளி உலகை மறைக்கும் வண்ணம் இழுத்து விடப்பட்டிருக்கின்றன…

அவள் கண்களை உள்ளங்கைகளால் ஒத்திக் கொண்டு மீண்டும் பார்க்கிறாள். கட்டிலைச் சுற்றிய திரைச்சீலைகளை ஒதுக்குகிறாள்.

மாடத்தில் ஓர் அகல் விளக்கு எரிகிறது.

அவள் அருந்திய கனிச்சாறு கீழே சிந்திய இடத்தில் எறும்புகள் தெரிகின்றன.

சிறை மீட்டு மகாராணியாகக் கொண்டு வந்து இங்கே சிறைப்படுத்தி விட்டார் போன்று மனம் ஏன் பேதலிக்கிறது?

இவளுக்கு இப்போது என்ன குறை? மன்னரின் மீது இவளுக்கு அவநம்பிக்கையா? ஏதோ ஓர் உண்மை சிக்கென்று பிடிபட எட்டாமல் வழுவிப் போவது போல் தோன்றுகிறது.

‘அப்படி என்ன ராஜாங்க காரியம்? தலை போகும் காரியம்? இளையவர்கள் இப்படி இருக்கிறார்களா? காட்டில் இருந்த போது மட்டும் என்ன நிம்மதி? எப்போதும் வில்லும் அம்புமாகத் திரிந்தார்கள். அதனால்தானே பகையும் விரோதங்களும் கொலைகளும் நிகழ்ந்தன! ஜனஸ்தானக் காட்டில் அரக்கர்கள் இருந்தால் இவர்களுக்கென்ன? அவர்களும் காட்டிலே எதையேனும் கொன்று தின்று வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள். மகரிஷிகள் சாபம் இட்டு விடுவார்கள் என்று இந்த மன்னர்கள் நடுநடுங்குவதாம்! இவர்கள் எதற்காக ஆயிரக்கணக்கில் உயிர் வதை செய்யும் யாகங்கள் நடத்த வேண்டும்?’

கேள்விகள் மேலும் மேலும் எழ, கிணறு ஆழம் காண முடியாமல் போகிறது. உள்ளே நிச்சயம் தரை இருக்கும். அதைத் தொட்டுக் காட்டும் போது இதயமே குத்துண்டாற் போல் நோகும்.

சக்கரவர்த்தி, இளைய குமாரர்களைத் தாய் மாமன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மூத்தவள் பெற்ற பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்ய நிச்சயித்தது நியாயமா?

நியாயமில்லைதான். அதுவும் அந்த மந்தரைப் பாட்டிக்கு என்ன விரோதம்?… அவந்திகாவைப் போல் ராணி மாதாவை எடுத்து வளர்த்தவள். அக்காலத்தில் அவர் தந்தை கேகய மன்னர், ஏதோ ஓர் அற்ப காரணத்துக்கா, குழந்தைகளின் தாயைக் காட்டில் விட்டு விட்டு வந்தாராம். என்ன கொடுமை?

அரசகுமாரியைத் தாய் போல் அன்பைப் பொழிந்து வளர்த்த அம்மை வயதான காலத்தில் இடுப்பு வளையக் கூன் விழுந்த கூனியானாள். அவளைப் பூமகள் பார்த்திருக்கிறாள். தலை தரையைத் தொட்டுவிடுமோ என்ற அளவில் ஒரு குச்சியை ஊன்றிக் கொண்டு எழும்பி நடப்பாள்.

அவளுக்கு இந்த மூத்த இளவரசர் மீது என்ன விரோதம்?

சின்னஞ்சிறு இளவரசர், அந்தக் கூனை முதுகில் வில் மண் உருண்டை வைத்து அடிப்பாராம். கூனல் நிமிரவில்லை. ஆனால் வலி… அது நல்ல எண்ணத்துடன் எய்யப்பட்ட உருண்டை அல்லவே? கேலியில் விளைந்த விளையாட்டல்லவோ? வயசு இரண்டு தலை முறை மூத்திருந்தாலும், அடிமை – பணிக்கிழவி. அவளுக்கு முதுகு மட்டும் வலிக்கவில்லை. நெஞ்சும் வலித்திருக்கும். மன்னரிடம் வரம் கேட்கச் சொல்லிப் பழி தீர்த்துக் கொண்டாள்…

அவந்திகாவை, இப்போது அவளுக்குப் பிறக்கப் போகும் பிள்ளை இப்படி உதாசீனம் செய்தால்…

அவள் கை தன்னையறியாமல் வயிற்றைத் தொட்டுப் பார்க்கிறது.

…ஓ க்ஷத்திரிய வித்து… வில் அம்புடன் பிறக்குமோ?… குப்பென்று வேர்க்கிறது.

“தேவி!… என்ன இது? நீங்கள் உறங்கவில்லையா? ஏனிப்படி முகமெல்லாம் வேர்த்திருக்கிறது? யாரடி, விமலை? தீபத்தில் எண்ணெய் இல்லை… பார்க்க வேண்டாமா?”

அவந்திகாவின் தொட்டுணர்வில் கசிந்து போகிறாள்.

அவள் கையை மெலிந்த விரல்களால் முகத்தில் தடவிக் கொள்கிறாள்.

“அவந்திகா, உன்னை நான் எப்போதும் விடமாட்டேன்! நீ என் தாய்!”

– தொடரும்…

– வனதேவியின் மைந்தர்கள் (நாவல்), முதல் பதிப்பு: ஆகஸ்டு 2001, தாகம், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email
ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *