அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-28
அத்தியாயம்-22
பூமகள் காலையில் வழக்கம் போல் முற்றம் குடில் சுத்தம் செய்துவிட்டுக் காலை வந்தனம் செய்யச் சென்றிருக்கும் பிள்ளைகளை எண்ணியவாறு, தயிர் கடைந்து கொண்டிருக்கிறாள். மரத்தில் கடைந்த அந்த மத்து, அழகாகக் குழிந்தும் நிமிர்ந்தும் வரைகளை உடையதாகவும், எட்டு மூலைகளை உடையதாகவும் இருக்கிறது. மிதுனபுரிக் கலைஞர்கள், இத்தகைய சாதனங்களை எப்படி உருவாக்குகிறார்கள்? இம்மாதிரியான பொருட்களை நந்தமுனி அவளுக்கு வாங்கி வந்து தருகிறார். அருமை மகளுக்குச் சீதனம்… ஒரு கால்… அவர்… ஒரு காலத்தில் அபசுரம் எழுப்பி இருப்பாரோ? நெஞ்சு உறுத்துகிறது. இல்லை. அபசுரம் இழைத்த நாணை நீக்கி, வேறு நாண் போட்டு எனக்கு, இந்த சுரம் எழுப்ப உயிர்ப்பிச்சை அளித்தவர் குருசுவாமி… இப்படி ஒரு நாள் பேச்சு வாக்கில் வந்தது செய்தி. நேர்ச்சைக் கடனுக்கு, மகனைப் பலி கொடுக்க இருந்த போது சத்தியர் மீட்டு, பாலகனைத் தமக்குரியவனாக்கிக் கொண்டாராம். காலை நிழல் நீண்டு விழுகிறது.
“மகளே! வெண்ணெய் திரண்டு விட்டதே! இன்னமும் என்ன யோசனை?” சத்திய முனிவரும் நந்தசுவாமியும் தான்.
அவள் உடனே எழுந்து கை கழுவிக் கொண்டு அவர்கள் முன் பணிந்து ஆசி கோருகிறாள்.
“எழுந்திரு மகளே, உனக்கு மங்களம் உண்டாகும். இந்த வனம் புனிதமானது…” இருக்கைப் பாய் விரிக்கிறாள். உள்ளே மூதாட்டி இருக்கிறாள்.
“பார்த்தீர்களா? குதிரையை இங்கு அனுப்பி மேலும் பதம் பார்க்கிறார்கள், இது நியாயமா? நீங்கள் தருமம் தெரிந்தவர்கள்… சொல்லுங்கள்?” அவள் முறையிடும் குரல் நைந்து போகிறது.
“வருந்தாதீர்கள் தாயே! எப்படிப் பார்த்தாலும் தருமம் நம் பக்கலில் இருக்கிறது…”
“என்ன தருமமோ? இந்தப் பிள்ளைகள், விவரம் புரியாத முரட்டுத் தனத்துடன் விளையாடப் புறப்பட்டாற் போல் குதிரையுடன் போகிறார்கள். அச்சமாக இருக்கிறது சுவாமி! விஜயன் அந்தக் குதிரை மீது ஏறிக் கொண்டு உலகை வலம் வருகிறேன் என்கிறான். அஜயன் அதை ஒரு தும்பு கொண்டு மரத்தில் கட்டு, யாரும் கொண்டு போகக் கூடாது என்று பாதுகாக்கிறான். நம் பிள்ளைகள் கபடற்றவர்கள். விருப்பம் போல் கானக முழுவதும் திரிவார்கள். மிதுனபுரியோடும் நமக்குப் பகை எதுவும் இல்லை. சம்பூகனுக்குப் பிறகு இத்தனை நாட்களில் நமக்கு அந்த கோத்திரக்காரர்களுடனும் மோதல் இல்லை. இப்போது, இந்தக் குதிரையினால் விபரீதம் வருமோ என்று அஞ்சுகிறேன் சுவாமி!”
“வராது, நம் எண்ணங்களில் களங்கம் இல்லை…”
“வெறும் குதிரை மட்டும் வந்திருக்குமா? பின்னே ஒரு படை வந்திருக்குமே?”
“ஆம் மகளே, கோசல மன்னன் சக்கரவர்த்தியாக வேண்டுமே? படைகள் நாலுபக்கங்களிலும் இருக்கும். குதிரையை ஆறு தாண்டி எவர் அனுப்பி இருப்பார்கள்? ஒன்று மட்டும் நிச்சயம். நம் பிள்ளைகள் என் ஆணையை மீறி வில் அம்பு எடுக்க மாட்டார்கள். ஆனால், மிதுனபுரிக்காரர்கள், இந்தப் பூச்சிக் காட்டு வேடர்களுடன் சேரும்படி, ஏதேனும் நிகழ்ந்தால்… அப்படி நிகழக்கூடாது என்று அஞ்சுகிறேன். ஏனெனில், இவர்களும் நச்சுக்கொட்டை – நரமாமிச பரம்பரையில் வந்தவர்கள். வழி திரும்புவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், சத்தியத்திலிருந்து அசத்தியத்துக்கு ஒரு நொடியில் சென்று விட முடியும்!… எதற்கும் நீ கவலைப்படாமல், கலக்கம் இல்லாமல் இருப்பாய். நான் அக்கரை சென்று, யாகக் குதிரையுடன் யார் வந்திருக்கிறார்கள், யாகம், யார் எங்கே செய்கிறார்கள் என்பன போன்ற விரிவான தகவல்களைப் பெற்று வருகிறேன்…”
அவர் விடை பெற்றுச் செல்கிறார் என்றாலும் பூமகளுக்கு அமைதி கூடவில்லை.
“கண்ணம்மா.”
முதியவளின் குரல் நடுங்குகிறது.
பூமகள் விரைந்து அவள் பக்கம் சென்று அன்புடன் அணைக்கிறாள்.
“உனக்கு ஏனம்மா இத்தனைச் சோதனைகள்? ஆறு தாண்டி அசுவமேதக் குதிரையை அனுப்பலாமா? உன்னிடமிருந்து பிள்ளைகளைக் கவர்ந்து செல்ல இது ஒரு தந்திரமா? குழந்தாய், உன் பிள்ளைகள் இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டு அரசாளும் பேறு பெற வேண்டாமா? தவறை உணர்ந்து உன்னையும் அழைத்துச் செல்வார்களோ?”
பூமகளுக்கு இதயம் வெடித்து விடும் போல் கனக்கிறது.
“தாயே, அப்படியானால் யாகத்துக்குப் பொற் பிரதிமை செய்து வைப்பார்களா?”
தாய் விக்கித்துப் போனாற் போல் அமர்ந்திருக்கிறாள்.
“பொற் பிரதிமையின் கையில் புல்லைக் கொடுத்தால் அது பெற்றுக் கொள்ளுமோ? இவர்களுக்கு உயிரில்லாத பொம்மை போதும்… இப்படி ஓர் அநீதி, பெண்ணுக்கு நடக்குமா? இவன் சக்கரவர்த்தி, குல குருக்கள், அமைச்சர் பிரதானிகள், பெண் மக்கள்… யாருக்குமே இதைக் கேட்க நாவில்லையா? ஒரு தாய் வயிற்றில் அவள் சதையில் ஊறி, அவள் நிணம் குடித்து, உருவானவர்கள் தாமே அத்தனை ஆண்களும்? அவர்கள் வித்தை ஏந்தவும் ஒரு பெண்தானே வேண்டி இருக்கிறது? அப்போது தங்கப் பிரதிமை உயிருடன் வேண்டும்! இதெல்லாம் என்ன யாகம்? உயிரில்லா யாகம்! பசுவை குதிரையைக் கொல்லும் யாகம்! தருமமா இது…?…”
பூமகள் இந்தச் சூனியமான நிலையில் இருந்து விடுபடுபவள் போல், பிள்ளைகளைத் தேடிச் செல்கிறாள். அப்போதுதான் அன்று தானிய அறுவடை நாள் என்று கூறியது நினைவுக்கு வருகிறது. பிள்ளைகள் விளை நிலத்தில் கதிர்கள் கொய்கிறார்கள். அஜயனும் விஜயனும் அந்தக் கூட்டத்தில் தனியாகத் தெரிகிறார்கள். உழைப்பினால் மேனி கறுத்தாலும், கூரிய நாசியும், உயரமும் அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று தோற்றம் விள்ளுகிறது.
ஆனால் இவர்கள் ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் அறுத்த கதிர்களை ஒரு புறம் அடுக்குகிறார்கள். புல்லியும், கவுந்தியும் பெரியவர்களாக நின்று கதிர்களில் இருந்து சிவந்த மணிகள் போன்ற தானியங்களைத் தட்டுகிறார்கள்.
பிள்ளைகள் கையில் அள்ளி இந்தப் பச்சைத் தானியத்தை வாயில் போட்டு மென்று கொண்டே பால் வழியும் கடைவாய்களுடன் உழைப்பின் பயனை, எடுக்கிறார்கள். மேலே பறவைக் கூட்டம் எனக்கு உனக்கு என்று கூச்சல் போடுகின்றன.
புல்லி ஒரு வைக்கோல் பிரியை ஆட்டி விரட்டுகிறாள்.
“இத இப்ப எல்லாத்தையுமா எடுப்போம்? நீங்க தின்ன மிச்சந்தான். எங்களுக்கு இது குடுக்கலேன்னா, உங்களையே புடிப்போம். ஓடிப் போங்க!” என்று அவற்றுடன் பேசுகிறான்.
“வனதேவி… வாங்க. இன்னைக்கு, இதெல்லாம் கொண்டு போட்டிட்டு, நாளைக்குப் பொங்கல்… எங்க முற்றத்தில், எல்லாரும் சந்தோசமா பூமிக்குப் படைச்சி, விருந்தாடுவோம்…”
பூமகள் சுற்று முற்றும் பார்க்கிறாள்.
“குதிரை எங்கே?… மாடுகள் மேயும் இடங்களில் இருக்குமோ?”
“மாடுகள் இங்கே இல்லை. இருந்தால் எல்லாத் தானியத்தையும் தின்று போடும். அங்கே விரட்டி விட்டிருக்கிறோம். குதிரையை, தோப்புப் பக்கம் கட்டிப் போட்டு, காவல் இருக்கிறாங்க. யாரோ சொன்னார்களாம், ராசா வந்திருக்கிறாரு. புடிச்சிட்டுப் போவாங்கன்னு. நம்ம இடத்துல அது வந்திருக்கு. வுடறதில்லைன்னு சொல்லி, அந்தப் பக்கத்துப் பிள்ளைங்க புடிச்சிக் கட்டிப் போட்டிருக்காங்களாம்…”
“யாரு அப்படிச் செய்தது? வீண் வம்பு? நந்தசுவாமி இல்லையா?”
“அவங்க இருக்காங்க. இந்தப் பூவன், குழலூதும் மாதுலன் எல்லாம் அங்கே தான் இருக்கிறாங்க…”
“அஜயா, விஜயா, எல்லோரும் போய் குதிரையை அவிழ்த்து விடுங்கள். அது எங்கே வேண்டுமானாலும் போகட்டும்! நமக்கெதற்கு?” அஜயனும் விஜயனும் மேனியில் படிந்த கதிர்களை, தொத்தும் வைக்கோல் துகள்களைத் தட்டிக் கொள்கிறார்கள். வாதுமை நிற மேனி கறுத்து மின்னுகிறது. அஜயனுக்கு விஜயன் சிறிது குட்டை. முக வடிவம் ஒரே மாதிரி; அவள் நாயகனை நினைவுபடுத்தும் விழிகள்; முகவாய்; காதுகள்…
நெஞ்சை யாரோ முறுக்கிப் பிழிவது போல் தோன்றுகிறது. ஆனால், பிள்ளைகளே, நீங்கள் உயர்ந்த வாழ்கிறீர்கள்; பிறர் உழைப்பில் ஆட்சி புரியவில்லை!
“அம்மா! நந்த சுவாமியே எங்களை இங்கே அனுப்பி வைத்தார். அரசகுமாரர் யாரோ வந்திருப்பதாகச் செய்தி வந்ததாம். அவர்கள் வந்தால் கட்டிப் போட்ட குதிரையை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் அங்கேயே காவல் இருக்கிறார். மாதுலன் குழலூத, அது சுகமாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்தது…”
“யாரிடமும் வில் அம்பு இல்லையே?”
“நாங்கள் குருசுவாமி சொல்லாமல் தொடுவோமா?”
அப்போது, சங்கொலி செவிகளில் விழுகிறது; பறையோசை கேட்கிறது. எல்லோரும் நிமிர்ந்து பார்க்கிறார்கள்.
“ராசா… பிள்ளைங்களா! தானியத்தைக் கூடையில் அள்ளுங்க!” எல்லோரும் விரைவாகக் கூடைகளில் அள்ளுகிறார்கள். தானியம் உதிர்க்காத கதிர்களைக் கட்டுகிறார்கள். ஏதோ ஓர் அபாயம் நம் உழைப்புப் பறி போகும் வகையில் வந்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.
பூமகளும், தங்கத் தட்டுகளில், அப்பமும், பாலன்னமும் வேறு பணியாரங்களும் அடுக்கிய காட்சியை நினைக்கிறாள். இப்படி உழைத்து, அந்த விளைவைத் தானே மேல் வருக்கம் ஒரு துன்பமும் அறியாமல் உண்ணுகிறது! தேனீக் கொட்டல்களுக்குத் தப்பித் தேன் சேகரித்தல்; காடு காடாகச் சென்று பட்டுக்கூடு சேகரித்தல்…
இவை எதுவும் அறியாத அறிவிலிகள், அசுவமேதம் செய்கிறார்கள்! இந்த இடத்தில் ஓர் அம்பு விழக்கூடாது. விழுந்தால் வனம் பற்றி எரியும்! முற்றம் முழுதுமாகத் தானியக் கதிர்கள் அடைந்து விடுகின்றன.
அவர்கள் நீராடி வரும் போது கூழ் சித்தமாக்கி, கனிகளுடனும் தேனுடனும் வைக்கிறாள். வேடர்குடியில் இருந்து அவித்த உணவும் வருகிறது. “நந்தசுவாமி, பூவன், மாதுலன் எல்லோருக்கும் யார் உணவு கொடுப்பார்கள்?”
விஜயனின் உச்சி மோர்ந்து நெற்றியில் முத்தம் வைக்கிறாள் அன்னை.
“நந்தசுவாமிக்கு, யாவாலி ஆசிரமத்துப் பெண்களும் ஆண்களும் எல்லாம் கொடுப்பார்கள். கவலைப்படாதீர்கள்!”
“பூமியில் எல்லாத் தானியங்களும் ஒட்ட எடுக்கவில்லை. ஒட்ட எடுத்தால் இரண்டு கூடை இருக்கும். நல்லா தீட்டிப் புடைத்து, இடிச்சி மாவாக்கி, கூழு கிளறிக் கொஞ்சம் வெல்லக்கட்டி கடிச்சிட்டா…” நாக்கை சப்புக் கொட்டுகிறது வருணி.
“ஒரு பானை கூழு பத்தாது!”
“முன்பெல்லாம் இந்தக் கூழே தெரியாது. நான் சின்னப்புள்ளயா இருக்கையில், புகையில் கட்டிப் போட்ட இறைச்சிதா. கடிச்சி இழுத்து தின்னுவம்…”
“வனதேவி, யாகக் குதிரைன்னா என்ன அது? வெள்ளையாக இருந்தா யாகக் குதிரையா?”
“எனக்குத் தெரியாது, புல்லி அக்கா!”
“வனதேவிக்குத் தெரியாதது இருக்குமா? பெரியம்மா, நீங்க சொல்லுங்கள்!”
“அது வர்ற எடமெல்லாம் ராசாக்கு சொந்தம்னு அர்த்தம். முதல்ல நச்சுக்கொட்ட அம்பு தயாரா வச்சிக்குங்க!” என்று பெரியம்மை கடித்துத் துப்பும்போது திக்கென்று பூமகள் குலுங்குகிறாள்.
“அய்யோ, அதெல்லாம் வாணாம்மா! நாம குதிரைய அவுத்துவிட்டாப் புடிச்சிட்டுப் போறாங்க. அது என்னமோ வழி தவறி வந்திட்டது…”
உழைப்பின் அயர்வில் அவர்கள் படுத்தவுடன் உறங்கிப் போகிறார்கள். வேடர்குடிப் பிள்ளைகள் சற்று எட்டி உள்ள தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று விட்டனர். புல்லி இங்கே தான் முற்றத்தில் உறங்குகிறாள். பசுக்கள் கொட்டிலுக்குள் திரும்பிப் படுத்து விட்டன. உறங்காத இரண்டே உயிர்கள்… அவளும் அன்னையுமே… அவர்களுக்குள் பேசிக் கொள்ள நிறைய இருக்கின்றன. ஆனால் பேச்சு எழவில்லை.
ஒரு சிறு அகல் விளக்கு குடிலின் மாடத்தில் எரிகிறது. கீழே மூதாட்டி கருணை போல் குந்திக் கொண்டு இருக்கிறார்கள். அருகில் வனதேவி, ஒரு புல் மெத்தை விரிப்பில் படுத்திருக்கிறாள். உறக்கம் பிடிக்கவில்லை. கடந்த காலத்துக் காட்சிகள்… படம் படமாக அவிழ்கின்றன. அவந்திகா, தேர் கிளம்பும் சமயத்தில் பெட்டியைத் தூக்கி வந்ததும், அப்படியே பார்வையில் இருந்து மறைந்ததும்… “அடி, சாமளி, ஏதேனும் நல்ல பண் பாடு என்றால் துக்கம் இசைக்கிறாயே?” என்று கடிந்த காட்சி… “அம்மா, இது, இளையராணி மாதா அனுப்பிய பானம், பருகினால் சுகமாக உறக்கம் வரும்…” பொற் கிண்ணத்தில் வந்த அந்தப் பானம்…
“மகளே, இந்த நேரத்தில் நீ துன்புறலாமா? நீ பட்டதெல்லாம் கனவு என்று மறந்துவிடு! இனி அதெல்லாமில்லை…” என்று இதம் கூறிய ராணி மாதா…
இவர்களெல்லோருக்கும் அவள் நிலைமை தெரியுமா?
அந்தப்புரம் என்ற கட்டை மீறிக் கொண்டு ஒருவரும் வெளியில் வர முடியாதா?… ஆற்றுக்கரை வேடர் குடியிருப்பில் ஒரு நாள் உறங்கினாளே?…
“செண்பக மலர் அலங்காரம் வேண்டாம்! மன்னர் காத்திருப்பார். நேரம் ஆகிறது!…”
துண்டு துண்டாய்க் காட்சிகள்… பேச்சொலிகள்… வழக்கமான பள்ளி எழுப்பும் பாட்டொலிகள்… அரண்மனையின் அலங்காரத்திரைகள், பளபளப்புகள், எல்லாமே ஒன்றுமில்லாத பொய்யாக விளக்கமாகிவிட்டன.
அவளைப் போல் குலம் கோத்திரம் அறியாத பெண்ணுக்கு மகாராணி மரியாதையா?
அடி வயிறோடு பற்றி எரிகிறது.
எழுந்து சென்று, குடிலுக்குள், மண் குடுவையில் இருந்து நீர் சரித்துப் பருகுகிறாள். முற்றத்தில் இருந்து பார்க்கையில் வானில் வாரி இறைத்தாற் போல் தாரகைகள் மின்னுகின்றன. கானகமே அமைதியில் உறங்குகிறது.
மீண்டும் படுத்துப் புரண்டு எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை. அமைதியைப் பிளந்து கொண்டு ஓர் அலறல் ஒலி கேட்கிறது. அவள் திடுக்கிட்டுக் குலுங்குகிறாள். குடிலின் பக்கம் ஓர் ஓநாய், வாயில் எதையோ கவ்விக் கொண்டு செல்கிறது. அது மானோ, ஆடோ, பசுவின் பகுதியோ என்று இரத்தம் உறைய நிற்கிறாள். மயில் கூட்டம் கூட்டமாகப் பறந்து ஓலம் இடுகிறது. மயில் அகவும்; அதன் ஓலமா இது? கானகமே குலுங்குவது போல் இந்த ஓலம் நெஞ்சைப் பிளக்கிறது. ஓநாய், மயிலையா கவ்விச் சென்றது? ஓநாய்… சம்பூகன் ஓநாய்க் குட்டிக்குப் பால் கொடுத்து வளர்த்தான். சம்பூகன்… அவளுக்கு அடி வயிற்றில் இருந்து சோகம் கிளர்ந்து வருகிறது. “அம்மா…” என்று துயரம் வெடிக்கக் கதறுகிறாள். ஆனால் என்ன சங்கடம்? குரலே வரவில்லையே?…
ஓ… இதுதான் மரணத்தின் பிடியோ?… என்னை விட்டு விடு… நானே உன் மடியில் அமைதி அடைகிறேன் தாயே…
“கண்ணம்மா… கண்ணம்மா!…”
அன்னையின் கை அவள் முகத்தில் படிகிறது. “மகளே, கெட்ட கனவு கண்டாயா?”
“புரண்டு புரண்டு துடித்தாயே!… நீ எதையோ நினைத்து அச்சம் கொண்டிருக்கிறாய். நந்தசுவாமியும், சத்திய முனிவரும் இருக்கையில் ஒரு துன்பமும் வராது. கிழக்கு வெளுத்து விட்டது. எழுந்திரு குழந்தாய்?…”
அவள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். பிள்ளைகள் எழுந்து காலைக்கடன் கழிக்கச் சென்று விட்டனர். புல்லி முற்றம் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள்.
இவளால் ஓநாய் வாயில் நிணம் கவ்விச் சென்ற காட்சியை மறக்க முடியவில்லை.
“தாயே எனக்கு நந்த முனிவரின் அருகே சென்று ஆசி பெறத் தோன்றுகிறது…”
“போகலாம். புல்லியையோ வருணியையோ அழைத்துச் செல். அவனே வருவான், மகளே என்று அழைத்துக் கொண்டு. நீராடி, கிழக்கே உதித்தவனைத் தொழுது வருமுன் பிள்ளைகள் வந்து விடுவார்கள். வருணியோ, புல்லியோ உணவு பக்குவம் செய்யட்டும். நீ அமைதியாக இரு, குழந்தாய்…”
அவள் எழுந்து நீர்க்கரைக்குச் செல்கிறாள். நீராடி வானவனின் கொடையை எண்ணி நீரை முகர்ந்து ஊற்றும் போது, அவள் முகத்தில் அவன் கதிர்கள் விழுந்து ஆசி கூறுகின்றன. தடாகத்தில் மலர்ந்திருக்கும் மலர்களைப் பறிக்க அவளுக்கு மனமில்லை. “வானவனுக்கு நீங்களே காணிக்கை! மகிழுங்கள்! நான் கொய்ய மாட்டேன்!” என்று உரையாடுவது போல் மனதை இலேசாக்கிக் கொள்கிறாள். புத்துயிர் பெற்று ஈர ஆடையுடன் அவள் திரும்பி வருகையில்… அவர்கள் முற்றத்தில் அந்த யாகக் குதிரை நிற்கிறது. அஜயன், விஜயன், மாதுலன், பூவன், நீலன், எல்லோரும் ஆரவாரம் செய்கின்றனர். குதிரை சதங்கை குலுங்கத் தலை அசைக்கிறது. தும்பு ஒன்றும் இணைத்திருக்கவில்லை.
“அம்மா! பாருங்கள்! குதிரை தானாக இங்கு வந்துவிட்டது! அதிகாலையிலேயே புறப்பட்டு நம் முற்றத்துக்கு வந்திருக்கிறது! மூத்தம்மையே, வந்து பாரும்! குதிரை… சூரியனார் தேர்க் குதிரைகளில் ஒன்று நம் முற்றத்துக்கு இறங்கி வந்திருக்கிறது! நம் விருந்தினர் இன்று இவர். புதிய தானியம் வைப்போமா?”
அஜயன் முதல் நாள் சேகரித்த தானிய மணிகளை ஒரு மூங்கிற்றட்டில் போட்டு வைக்கிறான்.
“உமக்கு முறை தெரியவில்லை! விருந்தினருக்கு, முதலில் கால் கழுவ நீர் தந்து உபசாரம் செய்ய வேண்டாமா?…” என்று விஜயன், நீர் முகர்ந்து வந்து அதன் கால்களில் விடப் போகிறான்.
“குதிரையாரே, குதிரையாரே வாரும்! எங்கள் விருந்தோம்பலை ஏற்று மகிழ வாரும்!”
இவன் பாடும் போது அது கால்களைத் தூக்கி உதறுகிறது.
விஜயன் பின் வாங்குகிறான்.
“அது பொல்லாத குதிரை; உதைத்தால் போய் விழுவாய்! கவனம்!” என்று நீலன் எச்சரிக்கிறான்.
தானியத்தைச் சுவைத்துத் தின்னுகிறது. அங்கேயே அது சாணமும் போடுகிறது.
கலங்கிப் போயிருக்கும் பூமகள், வேறு ஆடை மாற்றிக் கொண்டு குடிலின் பின்புறம் நடந்து செல்கிறாள். நந்தமுனியின் சுருதியோசை கேட்கிறது. அவரைத் தொடர்ந்து தாவரப் பசுமைகளினிடையே, அரண்மனைக் காவலரின் பாகைகள் தெரிகின்றன. வில்லும் அம்பும் தாங்கிய தோள்கள் அவள் குலை நடுங்கச் செய்கின்றன.
பின்னே… ஒரு பாலகன்… அஜயனையும் விஜயனையும் போன்ற வயதினன்… வருகிறான்.
பட்டாடை, முத்துச்சரங்கள் விளங்கும் மேலங்கி; செவிகளில் குண்டலங்கள். கற்றையான முடி பளபளத்துப் பிடரியில் புரள, முத்து மணிகள் தொங்கும் பாகை; அவளுக்கு மயிர்க்கூச்செறிகிறது.
இவன் யார்? ஊர்மியும் அப்போது கருவுற்றிருந்தாள். அவள் மகனோ? அந்தப் பாலகனை ஆரத்தழுவி மகிழும் கிளர்ச்சியில் முன் வருகிறாள்.
“மைந்தா! வாப்பா, நீ எந்த நாட்டைச் சேர்ந்த அரசிளங் குமரன்?” என்று வினவுகிறாள்.
நந்தமுனிக்கு கண்ணீர் வழிகிறது.
பையன் தயங்கி ஒதுங்கி நிற்கிறான்.
“இவளும் உன் அன்னையைப் போல்… வனதேவி அன்னை!… வனதேவி, குதிரையைத் தேடி வந்திருக்கிறார்கள்…”
“அப்படியா? அது இங்கே தான் முற்றத்தில் வந்து நிற்கிறது. உங்கள் குதிரையா? இந்த வில் அம்பெல்லாம் எதற்கு? அது சாதுவாக நிற்கிறது. யாரும் கட்டிப் போடவில்லை. அழைத்துச் செல்லுங்கள்!”
வானவனுக்கு நன்றி செலுத்துபவளாக அரசகுமாரனை அவள் முற்றத்துக்கு அழைத்து வருகிறாள்.
அத்தியாயம்-23
“கண்ணம்மா!…” என்று குடிலுக்குள் இருந்து நைந்த குரல் வருகிறது. நைந்திருந்தாலும், அதில் ஒரு தீர்மானம் ஒலிப்பதைப் பூமகள் உணருகிறாள். உடனே உள்ளே செல்கிறாள்.
“யாரம்மா?…”
“அ… அவர்கள்… குதிரைக்கு உரியவர்கள்!”
“யார், உன் நாயகனா? அவன் தம்பியா?”
“இருவரும் இல்லை. ஒரு பிள்ளை. நம் அஜயன் விஜயன் போல் ஒரு பிள்ளை…”
“படை வந்திருக்குமே?”
அவள் வாளாவிருக்கிறாள்.
“ஏனம்மா மவுனம் சாதிக்கிறாய்! வந்திருப்பவன் பட்டத்து இளவரசனா? உன் பிள்ளைகளின் உடம்பிலும் க்ஷத்திரிய ரத்தம் தான் ஓடுகிறது. நினைவில் வைத்துக் கொள்!”
“நான் என்ன செய்யட்டும் தாயே? அந்தப் பிள்ளை வில் அம்பு சுமக்கவில்லை. காவலர் மட்டும் இருவர் வந்திருக்கிறார்கள்.”
“நீ தலையிடாதே. எப்படியேனும் குதிரையைக் கொண்டு செல்வார்கள். ஒன்றுமே நடவாதது போல் இரு!”
“எப்படி?” என்று பூமகள் சிந்திக்கிறாள். வந்திருப்பவன் ஊர்மிளையின் மகன். அவள் சாயல், அப்படியே இருக்கிறது… ஊர்மி… கவடில்லாமல் இருப்பவள். அவள் பிள்ளை, அவன் வில்லும் அம்பும் இல்லாமல் தான் வந்திருக்கிறான். அவனைக் கூப்பிட்டு உட்கார வைத்து, நம் பிள்ளைகளுடன் ஒரு வாய் கூழோ, எதுவோ கொடுக்காமல் பாரா முகமாக இருக்கலாமா?
“கண்ணம்மா? நீ என்ன நினைக்கிறாய் என்று புரிகிறது. நீ இவர்களை உறவு கண்டு புதுப்பிக்கப் போகிறாயா? அவர்கள் தந்திரமாக உன் பிள்ளைகளை வெல்ல வந்திருக்கிறார்கள். கோத்திரம் தெரியாத பெண்ணின் வயிற்றுப் பிள்ளை பட்டத்து இளவரசனாக முடியாது…”
இந்த முதியவள் எதற்காக இன்னமும் இருக்கிறாளோ என்று கூட பூமகளுக்கு இப்போது தோன்றுகிறது.
“குதிரையை நாங்கள் கட்டிப் போடவில்லை. நீங்கள் அழைத்துச் செல்லலாம்” என்று நந்தமுனி கூறுகிறார்.
காவலர்களில் ஒருவன் குதிரையின் அருகில் சென்று அதன் பின்புறம் தட்ட முற்படுகிறான். மின்னல் வெட்டினாற் போல் இருக்கிறது. அடுத்த கணம் அவன் எங்கோ மரத்தில் சென்று மோதிச் சுருண்டு விழுகிறான். குதிரை ஓர் எழும்பு எழும்பிக் காற்றாய்ப் பறந்து தாவரப் பசுமைகளுக்கு அப்பால் செல்வதும் தெரிகிறது.
பூமகள் கண் கொட்டாமல் நிற்கையில் பிள்ளைகள் எல்லோரும் ஹோவென்று கைகொட்டிச் சிரிக்கின்றனர். அரசகுமாரனுக்கு முகம் கறுத்துச் சிறுக்கிறது. நந்தமுனிதான் அமைதியாக, “குதிரை சென்று விட்டது அரசகுமாரா, கூட்டிச் செல்லுங்கள்!” என்று கூறுகிறார். நீலனும் சாம்பனும் குதிரை உதைவிட்டதைப் போல் செய்து காட்டிச் சிரித்து மகிழ்கின்றனர். அரசகுமாரன், அந்தக் காவலனுடன் திரும்பிச் செல்கிறான்.
பூமகள் பெருமூச்செறிகிறாள்.
“பிள்ளைகளே, விளையாடியது போது! காலைக் கடன்களை முடியுங்கள்” என்று அவர்களைத் தூண்டி விட்ட பின் அவள் தன் பணிகளில் ஈடுபடுகிறாள். வழக்கம் போல் நீராடி, அகழ்ந்தெடுத்த கிழங்குகளைப் பக்குவம் செய்ய, அக்கினியை எழுந்தருளச் செய்ய முனைகிறாள். பிள்ளைகளும் அவளுடன் சேர்ந்து கொள்கிறார்கள். சுற்றியுள்ள மண்ணனைக்குள் தீக்குண்டம். பானை நீர், கிழங்கு, இந்த அக்கினி உயிர்களை வதைக்காது, வாழ வைக்கும்.
“சத்தியத்தின் நித்தியமாக ஒளிர்பவரே! ஒரு குழந்தை தந்தையை அணுகும் எளிமையுடன் அணுகுகிறோம். எங்களுக்கு நயந்து, எந்நாளும் அருள் பாலிப்பீராக! உங்கள் மக்கள் யாம்! எங்களை வாழ வைப்பீர்!”
குண்டத்தில் தீக்கங்குகள் மாணிக்கமாய் மின்னுகின்றன. பானையில் நீர் கொதித்துக் கிழங்குகள் வேகும் போது ஓர் இனிய மனம் கமழ்கிறது.
“இந்த வேள்வி பயனுடையதாகட்டும்!
இந்த வேள்வி அழிவில் இருந்து உயிர்களைக் காக்கட்டும்!
இந்த வேள்வி தீய எண்ணங்களைப் பொசுக்கட்டும்!”
மனசுக்கு இதமாக இருக்கிறது. ஒன்றும் நேரவில்லை. குதிரை தானாக வந்தது; தானாகவே அது இந்த எல்லையை விட்டுப் போய்விட்டது. பிள்ளைகள் காலைப் பசியாறி வழக்கம் போல் நந்தமுனிவருடன் செல்கிறார்கள். பூமகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதியவளை அழைத்துச் சென்று நீராட்டுகிறாள்.
“பெரியம்மா, அந்த அரசகுமாரனின் பெயர் கூடக் கேட்கவில்லை. ஆனால் அவன் ஊர்மிளையின் மகன் என்பதில் ஐயமேயில்லை. அந்தக் காதோரச் செம்மை, மோவாய், அகன்ற துருதுருத்த விழிகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன…”
“நீ வந்தவருக்கு விருந்து படைக்க நினைக்கிறாய், என் கண்ணம்மா! உனக்கு எத்தகைய மனசு! அதை அந்த வாயில்லாக் குதிரை கூடப் புரிந்து கொண்டிருக்கிறது! முற்றத்தில் நின்று உன்னை வணங்கிவிட்டு, அது… ஓடிவிட்டது…”
“வெறுமே ஓடவில்லை. காவலனை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு ஓடிற்று…”
“அப்படியா? அட அறிவிலிகளா! இது வனதேவி வாசம் செய்யும் மங்கள பூமி. இங்கே உங்கள் கரிச்சுவடுகளைப் பதிக்காதீர்கள் என்று உதைத்துத் தள்ளிவிட்டுப் போயிருக்கும்…!”
சிறுவர்கள் அன்றிரவு, குடிலுக்குத் திரும்பவில்லை.
அடுத்த நாளும் திரும்பவில்லை. அவர்கள் அப்படி இருப்பது சாதாரண வழக்கம் தான். யாவாலி ஆசிரமத்தில் தங்கி விடுவார்கள். இந்த வனத்தில் அவர்கள் எங்கு திரிந்தாலும் அச்சமில்லை. ஆனால், இப்போது ஒரு ‘முட்டு’ தடுக்கிறது. வேடுவர் குடியிருப்பின் பக்கம் கூட்டமாக இருக்கிறது.
“என்னம்மா?…”
“மாயன்… மாயன்” என்று எதையோ சொல்ல முன் வந்து விழுங்குகிறாள் புல்லி.
“மாயனுக்கென்ன?”
மாயன் கேலனுக்கும் மரிசிக்கும் பிறந்த மகன். அவனுக்கு ஒழுங்காகப் பேச்சு வராது. ஆனால் மிகவும் வலிமையுள்ள, முரட்டுத்தனமான பையன். இவர்களுடன் சேர்ந்து இருக்க மாட்டான். பச்சை நிணம் உண்பான் என்று அவர்களுக்குள்ளே மறைவாகப் பேசிக் கொண்டது இவள் செவிகளில் விழுந்திருக்கிறது. நந்தமுனி அவனுக்குப் பேச்சுச் சொல்லிக் கொடுக்க வேதவதி ஆற்றுக்கரைக்கு அழைத்துச் சென்று முயற்சி செய்கிறார் என்று சொல்வார்கள். அவன் பக்கம் ஒரு சிறு குழந்தையைத் தனியே கூட விட்டு வைத்திருக்க மாட்டார்களாம். அவன்.. அவனுக்கு என்ன?…
“ஒண்ணுமில்ல வனதேவி…” என்று மென்று விழுங்குவதை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது…
“யாரையேனும் அடிச்சிட்டானா?”
“அதெல்லாம் அவன் ஒண்ணும் செய்யிறதில்ல. இப்பல்லாம் நந்தசாமி சொல்லி, சொல்லி, வூட்டுல வச்சதுதான் தின்னுறான்…”
“பின் இந்தக் கலவரம் எதுக்கு?”
“பய நச்சுக்கொட்டை எடுத்து அம்புக்குப் பூசித் தயார் பண்ணுறான். அதால் குறி தவறாமல் அடிக்கிறான். ராசா படையைக் கொன்னு இழுத்திட்டு வருவேன்னு நிற்கிறான்.”
அவள் திகைத்து நிற்கிறாள்.
“ராசா படைதான் இல்லையே? குதிரை போய் விட்டதே?…”
“எங்கே போயிருக்குது? அது, புல்லாந்தரையில் மேயுது. அந்த ராசா புள்ள, படை எல்லாம் அங்குதா கூடாரம் போட்டிருக்காங்க, ஆத்துக்கு அந்தக்கரையில். குதிரை என்ன முடுக்கியும் நகராம நிக்கிதாம். இல்லாட்டி உதைத்துத் தள்ளுதாம்!” என்று சோமா விவரிக்கிறாள்.
“தெய்வமே!” என்று பூமகள் கலக்கத்துடன் வானைப் பார்க்கிறாள்.
“நம் பிள்ளைகள் யாரும் அதனால் தான் இங்கே வர வில்லையா?”
“எப்படி வருவார்கள் தேவி! இவர்கள் பின்னே தான் அந்தக் குதிரை வருதாமே? நந்தசாமி கூட இருக்காங்க. அதனால் நமக்கு எதுவும் வராது. இப்ப இந்த மாயன் ‘நச்சுக் கொட்டை அம்பு போட்டுத் துரத்துவேன். இல்லாது போனால் இவர்கள் இங்கே புகுந்து நம்மை அழிப்பார்கள்’ என்று ஒரே குறியில் இருக்கிறான். பாட்டா, அடிக்கக் கூட அடிச்சிட்டார். ஏலேய், உன்னுடைய பெண்டாட்டி, ரெண்டு பிள்ளைங்க சுகமா இருக்க வாணாமா? ரெட்டையாப் பொண்ணு பிறந்திருக்குங்க… இப்பவே அது முகம் பார்த்துப் பேசுதுங்க, இவ மரக்கட்ட போல் கிடந்தான்… நல்லவளவா, அழகா இருக்கு. நீங்க வந்து புத்தி சொல்லுங்க வனதேவி!” என்று அவள் பூமகளை அழைக்கிறாள்.
அவன் குடிலின் முன் ஓர் அழகிய மரம், வட்டமாகக் கிளை பரப்பி இருக்கிறது. மஞ்சள் மஞ்சளாகப் பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்து, அழகாக இருக்கிறது. சுத்தமாகப் பெருக்கிய மண் தரையில், கலயத்தில் நஞ்சு வைத்துக் கொண்டு, மாயன் கூரிய அம்பை இன்னமும் கூரியதாக்கிக் கொண்டிருக்கிறான்.
“வனதேவி… வனதேவி வாராங்க… டேய், எந்திருந்து கும்பிடு! கால் தொட்டுக் கும்பிடு! அந்த மிதி மண்ணை எடுத்து வச்சுக்க!” என்று அவனுடைய அன்னை நெட்டித் தள்ளுகிறாள். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. கூரிய அம்பு முனையை இன்னும் கூர்மையாக்குவதிலேயே முனைந்திருக்கிறான்…
“உள்ளே வாங்க வனதேவி! வாங்க…” என்று பெண்கள் அவளை ஒரு குடிலுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். மாட்டுக் கொம்பில் சீப்பு அராவிக் கொண்டிருந்த ஒரு வேடன், நிமிர்ந்து அவளுக்கு வணக்கம் சொல்கிறான். அந்தச் சீப்பு மிக அழகாக இருக்கிறது. மேலே கைப்பிடி ஒரு பூங்கொடிபோல் நேர்த்தியாக அமைக்கப்பட்ட சீப்பு.
‘ஓ, கைத்திறமை இங்கே எப்படி மலர்ந்திருக்கிறது!…’
அவள் வியந்து நிற்கையிலே அவளைப் பாயில் உட்காரச் செய்கிறார்கள் அந்தப் பெண்கள். கைவசமுள்ள புளிப்பிலந்தைக் கனிகளைக் கொண்டு வந்து உபசரிக்கிறார்கள். பிறகு, அந்தப் பெண் இரட்டைக் குழந்தைகளை அவள் மடியில் கொண்டு வந்து வைக்கிறார்கள். மடி கொள்ளவில்லை, ஒரு குழந்தைக்கே. குழந்தை அவளைப் பார்த்துச் சிரிக்கிறது. உள்ளமெல்லாம் பாலில் குளிர்ந்தாற் போல் மகிழ்கிறாள். இனிப்புப் பகுதிப் பழத்தைக் கையில் தொட்டு அதன் வாயில் வைக்கிறாள். இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன.
“வனதேவி, உங்களுக்கு இரண்டு பிள்ளைகள்… இவை இரண்டும் பெண்கள்…” என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்கச் சிரிக்கிறாள். வந்த வேலையே நினைக்கவில்லை. குதிரை இங்கே இருக்கிறது; மாயன் நச்சம்பு தயாரிக்கிறான். யார் சொல்லுக்கும் அவன் வளையவில்லை. இவள் மகிழ்ச்சிப் பாலைக் கருநிலா வந்து மூடிவிட்டது.
இந்த மக்கள் எளியர் தாம். ஆனால் இறுகினால் அசைக்க இயலாத இயல்புடையவர்கள். இனம் புரியாத அச்சம் அவளைப் பிள்ளைகளைத் தேடிச் செல்லச் செய்கிறது. ஆற்றுக்கரைப் புற்றரையில் தான் இருப்பதாக அவள் தெரிவித்ததை இலக்காக்கிக் கொண்டு செல்கிறாள். வானவன் சுள்ளென்று சுடுவதாகத் தோன்றுகிறது. புற்றரையில் எல்லோரும் உட்கார்ந்திருக்கிறார்கள். அரசகுமாரனுக்கு ஒரு பாதுகாவலன் குடை பிடிக்கிறான். குஞ்சம் தொங்கும் பட்டுக்குடை. அவள் புதல்வர்களுக்கும் அந்த மரியாதை உரியதே!…
பொங்கும் இதயத்துடன் அவள் அருகே செல்கிறாள். அரண்கட்டினாற் போல், தாழைப் புதர்கள் இருக்குமிடத்தில் அவள் நிற்கிறாள். அங்கிருந்து நான்கு முழத் தொலைவில் அரசகுமாரன் இருக்கிறான். அங்கிருந்து பார்க்கையில், எட்ட, குதிரை வெள்ளையாக நிற்பது தெரிகிறது. காவலர்கள் ஏழெட்டுப் பேர் இருக்கின்றனர். ஒருவன் மூட்டு முறிவில், பச்சிலை போட்டுக் கொண்டு குந்தி இருக்கிறான்.
அப்போது, பல வண்ணங்களுடைய கொண்டையுடன் வால் நீண்ட காட்டுச் சேவல் ஒன்று கண்கவரும் வகையில் பறந்து, ஓரத்தில் உள்ள மரத்தில் அமருகிறது.
“இந்த வனம் மிக அழகாக இருக்கிறது…” என்று அரசகுமாரன் கூறுகிறான்.
“உங்கள் அரண்மனைத் தோட்டத்தை விடவா?”
“… அரண்மனைத் தோட்டம் அழகுதான். அங்கு இப்படிச் சேவல், அழகாகப் பறந்து செல்லாது. கூட்டமாக மான்கள் போவதைப் பார்க்க முடியாது.”
அஜயன் புருவங்களைச் சுருக்கிக் கொண்டு பார்க்கிறான்.
“ஏன்? தோட்டத்துக்கப்பால் வனங்கள் இருந்தால் மான்கள் வரும் இல்லையா? இங்கே எல்லா விலங்குகளும் வரும்…”
“நீங்கள் வேட்டையாட மாட்டீர்களா?…”
“வீணாக எதற்கு வேட்டையாட வேண்டும்? மான்கள், பறவைகள் எல்லாமே அழகு… ஆனால் எப்போதேனும் வலை வைத்து, பன்றி அல்லது எருமை பிடிப்பார்கள். நாங்கள் வில் அம்பு வைத்து அடிக்க மாட்டோம்…”
“ஏன்? நீங்கள் வில் வித்தை பயிலவில்லையா? உங்கள் குரு என்று சொல்கிறீர்கள். நீங்கள் க்ஷத்திரியர் போலும் இருக்கிறீர்கள்; அந்தணர் போலும் பேசுகிறீர்கள். விசுவாமித்திரர் க்ஷத்திரியர்; அவர் ராஜருஷியானார். காயத்ரி மந்திரமே அவர் அருளிச் செய்தது. எங்கள் குல குரு உயர் குலம்…”
“அதனால் மான்களை வேட்டையாடச் சொல்லிக் கொடுப்பார்களா?” என்று அஜயன் கேட்கிறான்; விஜயன் சிரிக்கிறான். வேடப்பிள்ளைகள் எல்லோரும் சிரிக்கிறார்கள்.
காவலர்களில் ஒருவன் எழுந்து தரையைத் தட்டி உரக்கக் கத்துகிறான்.
“துட்ட வேடப்பிள்ளைகளே! எங்கள் அரசகுமாரன் சந்திர கேதுவையும், அரசகுலத்தையும் பழிப்பதே உங்கள் நோக்கமாக இருக்கிறது! நீங்கள் ஏழுலகும் புகழும் அயோத்தி மாமன்னரின் வழித்தோன்றலுடன் பேசுவதாக நினைவிருக்கட்டும். இப்போது எங்கள் யாகக் குதிரை இங்கே தடம் பதித்ததால், இந்த இடம் எங்கள் மாமன்னருக்கு உரியதாகிறது…” என்று கையில் உள்ள தண்டத்தினால் மீண்டும் தட்டுகிறான்.
குதிரையின் அருகில் நின்றிருந்த நந்தமுனி, யாழை மீட்டியவாறு வெளிப்பட்டு வருகிறார்.
“குதிரை தடம் பதித்தால் உங்களுக்குச் சொந்தமோ? அது என்ன சாத்திரம் ஐயா? நீங்கள் இங்கே வரும் முன்பே நாங்கள் தடம் பதித்து விட்டோம்! உங்கள் குதிரையின் குளம்படிகளை விட எங்கள் தடம் சிறந்தது. இந்த வனதேவியின் மைந்தர்கள் நாம்!…”
நந்தமுனி புன்னகை செய்கிறார்.
“அதெப்படி? நீங்கள் க்ஷத்திரிய குலமல்ல; அந்தணரும் அல்ல; முப்புரி நூல் இல்லை; வில் வித்தை பயிலவில்லை… பூமி சொந்தமோ?” சிரிப்பு ஏளனமாக ஒலிக்கிறது.
“ஏ, மூட அரசகுமாரா? யார் வில் வித்தை பயிலாதவர்கள்! எங்கள் குரு எங்களுக்குச் சகல வித்தைகளையும் கற்பித்துள்ளார். ஆனால் அந்த வித்தையை உயிர்க் கொல்லியாகப் பயன்படுத்த மாட்டோம்! நீங்கள் விளையாட்டுக்கு வேட்டையாடுவீர்கள்; கொல்வீர்கள்…”
விவாதம் கூர்மையாக முற்றுகிறது. ஆனால் இதில் நன்மை விளையும் என்று தோன்றவில்லை. கனி இனிமை; அதன் சதையில் முள் இருப்பதை நீக்கியாக வேண்டும்?
“க்ஷத்திரிய தர்மம் கொல்வதை அநுமதிக்கிறது. எங்கள் மாமன்னர், யாரும் இது நாள் கண்டிராத அளவில் பெரும் வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவர் பெருமையை அறியாமல் குதிரையை, மடக்கி வைத்திருக்கிறீர்கள்! நாங்கள் உங்களையே கட்டித் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டி இருக்கும்!”
“ஆஹாஹா…” என்று விஜயன் சிரிக்கிறான்.
“நாங்கள் குதிரையைக் கட்டியா போட்டிருக்கிறோம்? அதுவாக வந்தது. நீங்கள் கை வைத்ததால் உதைத்துத் தள்ளுகிறது. அந்தக் குதிரையை விரட்டி ஏவி விட்டதும் நீங்கள். இப்போது நாங்கள் மடக்கி இருக்கிறோம் என்று பழி சுமத்துகிறீர்கள்! உங்கள் தருமம் மிக நன்றாக இருக்கிறதைய்யா?…” என்று அஜயன் கேட்கும் போது பூமகள் பூரித்துப் போகிறாள்.
“குதிரையை ஓட்டிச் செல்ல முடியாத நீங்கள், எங்களைத் தூக்கிச் செல்லப் போவதாக அச்சுறுத்துகிறீர்கள்! என்ன நியாயமய்யா? உங்களுக்கு முடிந்தால் குதிரையைத் தூக்கிச் செல்லுங்கள்! அதை விடுத்து வீணாக நீங்கள் வேறு வழிகளில் இறங்கினால் நாங்கள் கையைக் கட்டிக் கொண்டிருக்க மாட்டோம்!…”
பூமகள் மறைவிடத்தில் இருந்து வருகிறாள்.
“வேண்டாம் குழந்தைகளே, நாம் நம்மிடம் செல்வோம், எழுந்திருங்கள். அவர்கள் குதிரையைப் பற்றிக் கொண்டு செல்லட்டும்!”
அவள் தன் மைந்தர்களையும் வேடப் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நடக்கிறாள். நந்தமுனி பாடுகிறார்; மாதுலன் குழலிசைக்கிறான். இரவு தீப ஒளியில், மகிழ்வுடன் உணவுண்டு, ஆடிப்பாடிக் களைத்து எல்லோரும் உறங்குகின்றனர். பூமகளும் துன்ப நினைவுகளைத் துடைத்து விட்டு உறங்குகிறாள்.
அத்தியாயம்-24
அதிகாலையில் புள்ளினங்களின் ஓசை கேட்டதும், அவள் குடத்தை எடுத்துக் கொண்டு தடாகக் கரைக்கு வருகிறாள்.
அங்கே, அவள் காண்பது மெய்யா?…
கண்களைத் துடைத்துக் கொண்டு பார்க்கிறாள். குதிரை.
‘நான் தான் வனதேவி’ என்று சொல்வது போல் அது கனைக்கிறது.
ஒரு பக்கம் மகிழ்ச்சி; ஒரு புறம் அச்சம்; அதோடு இணையும் கவலை… அவள் இதைத் தெரிவிக்கவில்லை என்றாலும் பிள்ளைகள் காணாமல் இருப்பார்களா?
மகிழ்ச்சி ஆரவாரம்; ஆட்டபாட்டங்களுடன் குதிரை வனத்தை வலம் வருகிறது.
“இந்தக் குதிரைக்கு க்ஷத்திரிய தருமம் பிடிக்கவில்லை…”
“பிள்ளைகளா, பேசாமல் ஆற்றுக்கரையில் இறக்கி விடுங்கள். இப்போது நீர் வற்றிச் சுருங்கிய இடத்தில் இறக்கி விட்டால் தாண்டி அக்கரை போய் விடும். நமக்கு எதற்கு வீணான வேதனைகள்!”
நந்தமுனியினால் எந்த ஒரு தீர்வையும் கொண்டு வர இயலவில்லை.
அன்று பகல், வனமே கலகலத்துப் போனாற் போல் பறவைக் கூட்டங்கள் கல்லடியோ வில்லடியோ பட்டாற் போல் விழுகின்றன. அமைதியாகக் கிடந்த நாகங்கள் அமைதி குலைந்தாற் போல் வெளியே நடமாடுகின்றன.
பூமகள் கனவு கண்டாளே, அது மெய்ப்பட்டு விட்டாற் போல் நடுங்குகிறாள். பிள்ளைகளைத் தேடியவாறு செல்கையில், பச்சைக்கிளி ஒன்று அவள் காலடியில் வீழ்கிறது. நெருப்பில் துவண்டாற் போல் விழுந்த அதை அவள் கையில் எடுத்துத் தடவுகிறாள். நெஞ்சம் பதைபதைக்க அவள் “அஜ்யா, விஜயா, நீலா!… புல்லி…” என்று கூவுகிறாள். இது வேனில் காலம். எங்கேனும் காட்டுத் தீயா? காட்டுத் தீ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் கண்டதில்லை. குடில்களனைத்தும் காய்ந்த புல்லினால் வேயப்பட்டவை. மரங்கள் எதுவும் மொட்டையாக இல்லை. பட்டிலவுகூடத் துளிர் விட்டிருக்கிறது. அது காய் வெடித்துப் பட்டிழைகளைப் பறக்க விடும்போது சிறுமியர் அதைச் சேகரித்து வருவார்கள். இப்போது அந்த மரத்தினும் செந்துளிர்… அவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே புறாக்கள், மைனாக்கள், காகங்கள் வீழ்கின்றன.
எங்கோ சிங்கம் உறுமுவது போல் ஒரு பேரோசை கேட்கிறது.
அப்போது அங்கே மாயன் எதிர்ப்படுகிறான்.
“மாயா? நீயா நச்சம்பு விட்டாய்?”
அவன் கையில் வில்லும் கூரம்பும் இருக்கின்றன.
“இனிமேல் தான் விடவேண்டும். என்ன செய்திருக்கிறார்கள் பார்த்தீரா வனதேவி? ‘மந்திர அஸ்திரம்’ என்று விட்டிருக்கிறார்கள். பேய் பிசாசுகள், பறவைகளைச் சாக அடிக்கின்றன. பசுக்கள் மூர்ச்சித்து விழுந்திருக்கின்றன…”
அவன் பேசுவது சாடையாகவே இருக்கிறது.
“நீ நச்சம்பா வைத்திருக்கிறாய்?”
“ஆமாம்…”
“வேண்டாம். நம்மவருக்கு அதனால் ஆபத்து வரும்…”
“வராது. அவர்களெல்லாரும், அருவிக்கரை தடாகத்தில் பத்திரமாக இருக்கிறார்கள். நான் ஒரே ஒரு அம்பு போட்டு இவர்களுக்கு நம்மை யாரென்று காட்டுவேன். வனதேவி! இதோ பாரும் பட்சி துடிதுடித்து விழுவதை?…”
கொத்தாகத் தேன் சிட்டுகள் புற்றரையில் விழுந்திருக்கின்றன.
“குதிரையை விரட்டி விடவில்லையா?”
“அது போக மறுக்கிறது… வனதேவி, அதை அறுத்து யாகம் செய்வார்களாம். அதற்கு அது தெரிந்துதான் போக மறுக்கிறது. இந்த உயிர்களுக்கெல்லாம், நம்மை விட முன்னுணர்வு…”
“சரி, நீ இப்போது யாரைக் கொல்லப் போகிறாய்?”
“யாரை என்று குறி இல்லை. ஆறு கடந்து அவர்கள் கூடாரத்துக்கு முன் நின்று கூப்பிடுவேன். ‘கோழை போல் பசு பட்சிகளைச் சாக அடிக்கும் ‘மந்திர அம்பு’ விட்டிருக்கிறாயே, என் எதிரே வா’ என்று கூப்பிடுவேன்…”
“வேண்டாம், மாயா, நான் சொல்வதைக் கேள்! சத்திய குரு வந்து விடுவார். அவர் வந்ததும் அவர் சொல் கேட்டு நடப்போம்!”
“அதற்குள் நம் வனம் அழியும். வனதேவி, என்னைத் தடுக்காதீர்கள்!”
அவன் விரைந்து போகிறான்.
பிள்ளைகளை அவள் தடுத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. நந்தமுனியோ, தனியிடத்தில் அமர்ந்து, ஒற்றை நாணை மீட்டிய மவுனத்துள் மூழ்குகிறார்.
பூமகள் முதியவளிடம் வந்து அரற்றுகிறாள்.
“அம்மா, மந்திர அஸ்திரம் பட்சியை அழிக்குமோ?”
“எனக்கென்னம்மா தெரியும்? நீதான் க்ஷத்திரிய நாயகனுடன் வாழ்ந்தவள். பெரிய பெரிய போர்களை, வதங்களை, ‘அஸ்திர’ சாகசங்களைக் கண்டிருக்கிறாய்!”
அவளுக்கு நினைவுக்கு வருகிறது. ஓர் அரக்கன், ஓடிச் சென்று கடலில் வீழ்ந்து வீழ்ந்து எழுந்தானாம். அப்படி அத்திரம் துரத்திச் சென்றதாம்… அது, தீயாய், வெப்பம் உமிழுமோ?…
மனம் பதைப்பதைக்கிறது. இந்தக் கவடறியாப் பிள்ளைகளின் மேனி கருகும் வெப்பத்தை உமிழும் அத்திர வித்தைகளை அவிழ்த்து விடுவார்களோ, தெய்வமே! வானத்தில் இருந்து ஆட்சி செய்யும் மாசக்தியே! நீ கொடுப்பது தானே வெப்பக்கதிர்? அது இவ்வாறு மனித நேயமற்ற செயல்களுக்கு உதவலாமோ? மந்திரமாக இருந்தால் அது பயன்படாதவாறு நீயே தடுப்பாய்? ஒரு மழையைப் பொழிவிப்பாய். குளிர் காற்றோடு எங்கள் உள்ளங்களைக் குளிரச் செய்வாய்…” என்று பலவாறு வேண்டி நிற்கிறாள். அன்று முழுவதும் அவள் தீயை உயிர்ப்பிக்கவில்லை. பிள்ளைகளுக்காக உணவு சேகரித்துப் பக்குவம் செய்யவில்லை.
வானில் கருமேகங்கள் கவிந்தாற் போல் ஒளி மங்குகிறது. ஒரே இறுக்கம். ஓர் இலை அசையவில்லை. ஓர் உயிரின் சலசலப்பும் தெரியவில்லை. நந்தமுனியைத் தேடி அவள் செல்கிறாள். அவர் மரத்தடியில் வீற்றிருந்த கோலத்தில் காணப்படவில்லை.
நீண்ட மவுனம்… நீண்ட நீண்ட நிழல்கள் தென்படவில்லை. கிழட்டுக் கத்யாயனியப் பசுவும், பெரியன்னையும் மூச்சுப் பேச்சின்றி முடங்கி இருக்கிறார்கள். அந்த அரக்கர் கோனுடனான போரின் போது கூட அவள் மனமழியவில்லையே? இப்போது… இது போரும் இல்லை… அமைதியும் இல்லை. போர்க்களத்துக்குப் பெண்கள் சென்றதாக அவள் அறிந்திருக்கவில்லை.
எனினும், உயிரின் ஒரு பகுதியாகவே உள்ள பிள்ளைகள் அவளிடம் இருந்து பறிக்கப் படுவார்களோ? இரவும் பகலுமாக ஒரு நாள் செல்கிறது. இருப்புக் கொள்ளவில்லை.
பூமகள் ஓடுகிறாள் வாழைவனம் தாண்டி, கருப்பஞ் சோலைகள் சின்னாபின்னமாக்கப்பட்ட பகுதிகள் கடந்து, பெரிய ஆலமரம்… அங்கே என்ன நடக்கிறது? அவள் காலடியில், அந்தி மங்கும் அந்த நேரத்தில் யாரோ விழுந்து கிடப்பது புலனாகிறது. நா அண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது. ஒரு காவலன் வீழ்ந்திருக்கிறான். எங்கு பார்த்தாலும் மரக்கிளைகள் முட்செடிகள் ஒடிந்து கிடக்கின்றன.
மங்கி வரும் பொழுதில் இனம் புரியாத ஒரு வேடப்பிள்ளை விரைந்து வருகிறான். அவள் கையைப் பற்றி இழுத்துச் செல்கிறான். “வனதேவி, அங்கே சண்டை நடக்கிறது. அவர்கள் அம்பு போட்டு நம் மாடுகளைக் கொன்று விட்டார்கள். நீலனும் மாலியும் மரங்களை ஒடித்து அவர்களை அடித்தார்கள். குருசுவாமி சொல்லாமல் வில் அம்பைத் தொடக்கூடாதல்லவா? இப்ப மாயன் அம்பு விட்டு எல்லோரையும் ஆற்றுக்கு அக்கரையில் துரத்தி விட்டான்… ஆற்றில் காவலர் ஒருவர் விழுந்து போய்விட்டார்…”
“அஜயன் விஜயன் எங்கே? நந்தசுவாமி போரிடச் சொன்னாரா?”
“நந்தசுவாமி படகில் அக்கரை செல்கிறார். அஜயனும் விஜயனும் அவருடன் செல்கின்றனர். அங்கே போய் நியாயம் பேசப் போகிறார்கள். வனதேவி, நம் பசுக்கள், கன்றுகள், காளைகள் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து அந்தக் காவலர்கள் கொல்கையில் நம்மால் கைகட்டிக் கொண்டு இருக்க முடியுமா?… அங்கே வந்து பாருங்கள்!”
அவன் அவளை அழைத்துச் செல்கிறான். மேய்ச்சல் இடம்… மங்கி வரும் இருளில், ஏதோ கனவுக் காட்சி போல் மாடுகள், உயிர் கொடுக்கும், உணவு கொடுக்கும், உழைப்பாளி மாடுகள் மலை மலையாகச் சாய்ந்து கிடக்க, காகங்கள் அவற்றின் மீது குந்திப் பறந்து சோகமாகக் கரையும் காட்சியைக் காண்கிறாள். ‘உம்மீது குந்தி இருந்து விருந்தாடுவோமே, உங்கள் உடல்களில் சிலிர்ப்போடும் போது எங்களுக்கும் அது ஓர் அநுபவமாக இருக்குமே. இப்போது உயிரோட்டம் இல்லாமல் விழுந்து விட்டீர்களே’ என்று அவை கரைவதாகத் தோன்றுகிறது. கண்ணீர் குருதி போல் பொங்குகிறது. குடிலுக்குத் திரும்பி வந்தவளின் விம்மல் ஒலி முதியவளை உலுக்குகிறது.
புல்லி வந்து ஒளித்திரி ஏற்றி வைக்கிறாள்.
“கண்ணம்மா, குழந்தாய்…” என்று அழைக்கும் குரல் நடுங்குகிறது.
“இந்நேரம் உன் பிள்ளைகள் யாரென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இவர்கள் பக்கம் குதிரை அவர்கள் விரட்டாமல் வந்ததும் நன்மைக்கே… இப்போது, உன் நாயகனோ, மைத்துனர்களோ வரக்கூடும். பிள்ளைகள் அவர்களுடன் ஒளிரட்டும்!” பூமகள் இறுகிப் போகிறாள்.
அந்த அழுத்தத்தினிடையே இருந்து சன்னமான நாண் எழுப்பினாற் போன்று உறுதியான குரல் ஒன்று ஒலிக்கிறது.
“தாயே, பெற்றவர் கை கழுவினர்; வளர்த்தவர் கை கழுவினார்; கணவர் கை கழுவினார். இப்போது, என் உதரத்தில் ஊறிய இவர்களை நான் அனுப்புவேனா? மாட்டேன், அவர்கள் என் உயிரின் உயிர்!”
மூதாட்டி வாஞ்சையுடன் அவள் முகத்தை இதமாகத் தடவுகிறாள்.
“உனக்கு உன் நாயகர், குழந்தைகளுடன் சேர வேண்டும் என்ற தாபம் இல்லையா?”
அவள் சிறிது நேரம் பேசவில்லை.
“அந்தத் தாபம் குளிர்ந்து சாம்பற் குவியலாகி நெடு நாட்களாகி விட்டன தாயே!”
ஊனுறக்கமின்றி அன்றிரவு பொழுது ஊர்ந்து செல்கிறது. அதிகாலைப் பொழுதில் யாரோ சங்கு ஊதுகிறார்கள். அது வெற்றி முழக்கச் சங்காக இல்லை. நரிகளின் ஊளையொலி போல் ஒலிக்கிறது. திடுக்கிட்டு அவள் வெளி வருமுன் பிள்ளைகளின் அரவம் கேட்கிறது. வேடுவப் பெண்களின் அலறலொலி உதயத்தின் கீழ்வானச் செம்மையை குருதிக் குளமாகக் காட்டுகிறது.
“என்ன அநியாயயம்மா! மாயன், நீலன், பூவன் எல்லோரும் மாண்டு மடிந்தார்கள். குரு ஏனம்மா, அம்பெடுக்க வேண்டாம் என்று சொன்னார்? அவர்கள் நம் விளை நிலங்களை அழித்தார்கள்…”
அவள் தன் இரு மைந்தர்களையும் தழுவிக் கொள்கிறாள். அப்போது அங்கே, அந்த யாகக் குதிரை, பட்டப் போர்வை கிழிக்கப்பட்டு, பொன்மாலை அகற்றப்பட்டு மங்கலமிழந்த நிலையில் வந்து கனைக்கிறது.
“ஏ குதிரையே! நீ வந்த வழியே திரும்பிச் செல்! எங்கள் அமைதியில் இப்படிப் புகுந்து கொலைக் களமாக்கினாயே! போய்விடு!” அவள் அதன் பின் பக்கத்தைப் பிடித்துத் தள்ளி விடுகிறாள்.
“அம்மா, மாயன், நூறு நூறாக அவர்கள் படையைக் கொன்று குவித்து விட்டான். நாங்கள் குரு சொல்லை மீறவில்லை. மரக்கொம்புகளையும் கற்களையுமே எறிந்து தற்காத்துக் கொண்டோம்…”
“நந்தசுவாமி எங்கே?…”
“அவர் ஆற்றங்கரையில் நின்று சந்திரகேதுவைப் பின் வாங்கச் சொன்னார். நம் முனிவர் தூது சென்றுள்ளார். வரும் வரையிலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடலாகாது என்று சொல்லிக் கொண்டிருந்த போது தான் மாயனின் நச்சம்பு, படையினரின் மீது பாய்ந்து கொன்றது. சந்திரகேது கூட மூர்ச்சையாகி விட்டான் என்று நளன் கூறினான். நாங்கள் ஆற்றிலிருந்து இக்கரை வந்து, ஓடி வருகிறோம்…”
“நந்தமுனி எங்கே?…”
அவள் மனம் கட்டுக்கடங்காமல் நின்று கனைக்கிறது.
பிள்ளைகள் விரைகின்றனர்.
அடுத்த கணம், “அம்மா…!” என்ற ஒலி கானகம் முழுதும் எதிரொலிக்கிறது.
உதயத்தின் கதிர், நந்தமுனிவரின் நிச்சலன முகத்தில் வீழ்கிறது.
– தொடரும்…
– வனதேவியின் மைந்தர்கள் (நாவல்), முதல் பதிப்பு: ஆகஸ்டு 2001, தாகம், சென்னை.