அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24
அத்தியாயம்-19
“செங்கதிர்த் தேவனை வந்தனை செய்வோம்…
எங்கள் உள்ளங்களில் ஒளி பரவட்டும்!
மங்கல ஒளியோய், மலர்களின் நாயக!
எங்கள் மனங்களின் மலங்கள் அகற்றுவீர்!
எங்கள் செயல்களில் வந்து விளங்குவீர்!
எங்கள் சொற்களில் இனிமை கூட்டுவீர்…”
வேடப்பிள்ளைகளோடு அவள் பிள்ளைகள் காலை வணக்கம் பாடும் போது, பூமகளின் மனம் விம்முகிறது. சம்பூகனின் மறைவு ஏற்படுத்திய வடு காய்ந்து, ஒன்பது வேனில்கள் கடந்திருக்கின்றன. வேடப்பிள்ளைகளைப் போன்றே இவர்களும் முடியை உச்சியில் முடிந்து கொண்டு, அரைக் கச்சையுடன் கனிகளைச் சேகரித்தும், தானியங்கள் விளைவிக்கும் பூமியில் பணி செய்தும், ஆடியும் பாடியும் திரிந்தாலும், இவர்கள் தோற்றம் தனியாகவே தெரிகிறது. மொட்டை மாதுலனும் இவர்களுடன் திரிகிறான். அவனுக்குச் சிறிது கண்பார்வையும் கூடியிருக்கிறது. அவர்கள் காலை வந்தனம் பாடும் போது பூமகள், இவர்களுக்கான காலை உணவைச் சித்தமாக்குகிறாள்.
இளவேனில் மரங்கள் செடிகளெல்லாம் புதிய தளிர்களையும் அரும்புகளையும் சூடித் திகழ்கிறது. பனிக்குளிர் கரைந்து மனோகரமான காலை மலர்ந்து விண்ணவன் புகழ் பாடுகிறது.
தானிய மாவில் கூழ் செய்து, பிள்ளைகளுக்கெல்லாம் அவள் இலைக் கிண்ணங்களில் வார்க்கிறாள். கிழங்குகளைச் சுட்டு வைத்திருக்கிறாள்.
“இன்று குருசுவாமி, எங்களை வேம்பு வனத்துக்கு அழைத்திருக்கிறார். அங்கு ஒரு பொறி சுழலும். அதைக் கண்ணால் பார்க்காமல் சுழலும் ஓசையைக் கேட்டவாறே அம்பெய்து வீழ்த்த வேண்டும். அசையும் போது குறிபார்க்க வேண்டும்…”
அஜயன் இதைக் கூறும் போது பூமகள் திடுக்கிடுகிறாள்.
“முனிவர் – உங்கள் குரு, அப்படியா பயிற்சி கொடுக்கிறார்?”
“ஆமாம்! யந்திரம் – காற்றசையும் போது சுழலும். அப்போது அதில் பொருத்தப்பட்ட பறை அதிரும். அந்த ஓசை எங்கிருந்து வருகிறதோ அதை மனதில் கொண்டு எய்வோம். நேற்று, பறவை பறப்பது போல் ஒரு பஞ்சுப் பிரதிமை செய்து மரங்களிடையே வைத்து அசைத்து, எப்படிக் குறிபார்க்க வேண்டும் என்று கற்பித்தார். அம்மா, அஜயன் குறி விழவில்லை. நான் தான் வீழ்த்தினேன்!” என்று விஜயன் பெருமைப் பூரிக்க பேசுகிறான்.
“குழந்தைகளே, நீங்கள் வில் வித்தை பயிலுங்கள். ஆனால் இந்த மாதிரியான விளையாட்டுக்கள் வேண்டாம்! ஓசை வந்த பக்கம் எய்வது தவறான செயல்… அத்துடன் இந்த வில்வித்தை யாரையும் அழிப்பதற்குப் பயன்படாது. வெறும் தற்காப்பு வித்தை தான். இயற்கை அம்மை இதற்காக நம்மைப் படைக்கவில்லை. இயற்கையில் எந்தப் படைப்பையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் குருசாமி இப்படிச் சொல்லித்தானே உங்களுக்கு வித்தை பயிற்றுகிறார்?…”
“ஆமாம், அவர் சொல்லாமல் நாங்கள் ஆயுதங்களைத் தொடவே கூடாது என்று சொல்லி இருக்கிறார்…”
“அதை நீங்கள் உறுதியாகக் காக்க வேண்டும். இந்த உறுதியினால், தீங்கு விளைவிக்க வரும் எதிரியோ, பகைவரோ கூட அம்பைக் கீழே போட்டுவிடுவார். போரும் அழிவும், இருவரும் மோதுவதாலேயே நேரிடுகிறது. நெருப்புப் பிடிக்கும் போது, காற்று வீசினால் அது பல இடங்களுக்குப் பரவும். அழிவு நிகழக் காரணமாக இருக்கலாகாது… நந்தசுவாமி மதயானையைக் கூட சாந்தமாக்கும் தன்மை படைத்திருக்கிறார். நாம் காட்டில் எப்படி வாழ்கிறோம். அந்த விலங்குகளும் நாமும் ஒருவருக்கொருவர் அச்சமில்லாமல் இருப்பதால் தான்…” தன் இதயத்தையே வெளிக்காட்டும்படி அவள் மைந்தருக்கு உரைக்கிறாள்.
“இப்போது சொல்லுங்கள்… குருசுவாமி தாமே உங்களுக்கு இந்த விளையாட்டு வித்தை பயிற்றுகிறாரா?”
விஜயனின் பார்வை தாழ்ந்து நோக்குகிறது.
“வனதேவி, இந்த மாதிரி ஓசையைக் கேட்டே அம்பெய்த முடியும் என்று அஜயன் சொன்னதால் குருசுவாமி இதைச் செய்து பார்க்கலாம் என்றார். அந்தப் பொறி போல் செய்யவும் விஜயனுக்கும் அவனுக்கும் அவர் கற்பித்தார். அந்தப் பொறி மெல்லிய நாராலான பொம்மை. அதை இன்று சரியாக அவர் அமைத்திருப்பார். அதுதான் ஒரே ஆவல்…” நீலன் உடல் பரபரக்க, கண்கள் இடுங்க மகிழ்ச்சியுடன் புதுமையை அநுபவிக்கிறான்.
“நாங்கள் மிதுனபுரிச் சந்தைக்குப் போனபோது அங்கு இப்படி ஒன்று வேடிக்கையாக வைத்திருந்தார்கள். அம்மா, அப்போது அங்கு தமனகன் என்ற காவலாளி இதைப் பற்றிச் சொன்னான். அங்கே படை வீரர்களுக்கு அதை நிறுத்தி வைத்து, வில்-அம்புப் பயிற்சி சொல்வார்களாம். அப்போது, இந்த மாதிரி ஒரு பொறி பற்றியும் சொன்னான். முனிவரிடம் விஜயன் கேட்டான். அவர் அதைச் செய்து, வித்தையும் கற்கலாம், வேம்பு வனத்துக்கு வாருங்கள் என்றார்…”
பிள்ளைகள் விடை பெற்றுச் செல்கின்றனர்.
பூமகள் கவலையிலாழ்கிறாள்.
பிள்ளைகள் குமரப்பருவம் உடையும் வேகத்தில் இருக்கிறார்கள்.
“கண்ணம்மா, க்ஷத்திரிய வித்து!” என்று பெரியன்னை பேச்சுக்குப் பேச்சு நினைவூட்டுவது செவியில் ஒலிக்கிறது.
வானவன் வெண் கொற்றக் குடை பிடித்து உச்சிக்கு ஏறும் நேரம். பூமகள் பிள்ளைகள் உணட பின் கலங்களைச் சுத்தம் செய்யவும் மனமில்லாமல் நிற்கிறாள்.
லூ, உருமு, சோமா ஆகியோர் சில கொட்டைகளைக் கூடைகளில் சேகரித்துக் கொண்டு வருகிறார்கள். கிடுவிக் கிழவி மண்ணில் மடிந்து விட்டாள். உருமுவுக்கு இப்போது ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். லூவின் பிள்ளைக்கே இரண்டு சந்ததியை அவள் தந்திருக்கிறாள். சோமாவின் மகள் சென்ற திங்களில் குமரியானாள். இவர்கள் கொட்டைகளைக் கொண்டு வந்து உடைப்பார்கள். அவற்றில் விதைப் பருப்பு உண்ணவும் நன்றாக இருக்கும். மீதமானவற்றை மிதுனபுரி வணிகரிடம் கொடுத்து, மாற்றாக வேண்டும் பொருட்களைப் பெற்று வருகிறார்கள். தோல், மிக முக்கியமான வாணிபப் பொருள்.
“பெரியம்மா, இன்றைக்குப் பெரிய மீன் கொண்டு வந்தாங்க, ரெய்கி புட்டு அவிச்சி எடுத்து வரும். பிள்ளைகள் அந்திக்கு வரும்போது, இன்றைக்கு விருந்தாடலாம். நல்ல நிலா இருக்கும்…”
“அடியே, நல்ல நிலான்னு சொல்லி ஊரியும், பாமுவும் மிதுனபுரிக் கரும்புச் சரக்கைக் குடத்தில் கொண்டு வந்து வார்க்கக்கூடாது! அதெல்லாம் உங்கள் குடிகளில் வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் மனம், அறிவு திரிய நீங்கள் எல்லாவற்றையும் ஊற்றிவிடுவீர்கள்! ஏதோ பதினாரு ஆனால் அவர்களே தீர்மானிப்பார்கள். சத்தியரோ, நந்தமுனியோ அதெல்லாம் பாவிப்பதில்லை. அறிவு மயங்கக்கூடாது!”
கொட்டை உடைக்கும் ஓசையும், அவர்கள் கைகளில் போட்டிருக்கும் மணிகள் சேர்த்த வளையல்கள் செய்யும் ஓசையும் மட்டுமே கேட்கின்றன.
காத்யாயனிப் பசு, மூன்று ஈற்றுகள் பெற்றெடுத்து, பாட்டியாகிவிட்டது. அதைப் பிற பசுக்களுடன் ஓட்டி விட்ட போது, அது குட்டையில் கால் தடுக்கிச் சரிந்துவிட்டது. அதனால் அதற்கு ஒரு கால் சிறிது ஊனமாகி இருக்கிறது. அதற்கு மூலிகை வைத்தியம் செய்து, புல்லும் நீரும் வைக்கிறாள். மர நிழலில் அது படுத்து அசை போடுகிறது.
சரசரவென்று குளம்படிகளின் ஓசை கேட்கிறது. பொதி சுமந்த கழுதைகள் பாதையில் தெரிகின்றன. வேதபுரிச் சாலியர், பட்டுக்கூடு சேகரித்துக் கொண்டு செல்கிறார்கள் போலும்?… வேதபுரிச் சாலியர்… அறிமுகமான சச்சலர்…
“வனதேவிக்கு மங்களம்! பெரியம்மா இருக்கிறாரா?…” ‘வேதபுரி’ என்று சொல்லைக் கேட்டதும் உடல் புல்லரிக்கிறது. முன்பெல்லாம் பருவந்தோறும் வருவார்கள். இப்போதெல்லாம் பட்டுக்கூடுகளை, இந்த வேடர்களே சேகரித்து மிதுனபுரிச் சந்தைக்குக் கொண்டு செல்கிறார்கள்.
“வேதபுரியில் மன்னர் நலமா?”
“ஆம், வனதேவி, மன்னர் நலம்…”
தாடி, மீசை, முடி நரைத்த கச்சலர், அவள் இங்கு வந்த நாட்களாக வருபவர் தாம். பெரியன்னை அவரை ஓரிரு நாட்கள் தங்க வைத்து விடுவார். மற்றவர் கூடுகள் சேகரித்து வருவார்கள். இவர் வரும்போது, தானிய மூட்டை வரும்; ஆடைகளும் கூட வரும். சில சமயங்களில் தடாகக் கரையில் அமர்ந்து பெரியன்னை பேசுவதைக் கண்டிருக்கிறாள். தன் பிறப்பைப் பற்றியே ஏதோ சில உண்மைகள் பட்டு இழைகள் போல் சங்கேதங்களால் மறைக்கப் பட்டிருப்பதாக எண்ணுவாள். இப்போது அவள் நிறைவாக, அமைதியாக இருப்பதால் அந்த சந்தேகங்கள் எவையும் அவளுடைய ஆர்வத்தைத் தூண்டுபவையாக இல்லை.
“பெரியம்மை, கச்சலன் வந்திருக்கிறேன்…!”
மரத்தடியில் புற்றரையில் இருக்கும் பெரியன்னை பார்வையை நிமிர்த்திப் பார்க்கிறாள்.
“யாரோ, ராசா வூட்டு ஆள் போல்” என்று லூ சாடை காட்டுகிறாள். வாய்கள் மூட, நா உள்ளே அமைதி காக்க, கொட்டை உடைபடும் மெல்லோசை மட்டும் கேட்கிறது.
“உருமு, வந்தவருக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடு…”
“இல்லை தாயே, தடாகக் கரையில் எல்லாம் செய்து கொண்டு இளைப்பாறி வருகிறோம். கொஞ்சம் தானியம் கொண்டு வந்திருக்கிறோம். இங்கே கொண்டு வருவார்கள்…”
அவர் சொல்லி முடிக்கு முன், தானிய மூட்டைகளைச் சுமந்து இரண்டு ஆட்கள் அங்கே வந்து, நீள் சதுரக் கொட்டடியில் இறக்குகிறார்கள்.
“அது சரி, நான் சொன்ன விசயம்…?” பெரியன்னையின் குரல் இறங்குகிறது.
“சொன்னேன். குரு சதானந்தரைப் பார்த்தேன். அவர்கள் இப்போது அதிகமாகப் பரபரப்பாக இருக்கிறார்கள். அயோத்தியில் பெரிய யாகம் செய்ய ஏற்பாடெல்லாம் நடக்கிறது. ராசகுமாரி ஊர்மிளா, மாண்டவி எல்லாரும் வந்து போனார்கள். அரசகுமாரர்களுக்கு எல்லாம் பயிற்சி குருகுல வாசம் முடியப் போகிறதாம். கொண்டாடப் போகிறார்கள்.”
அவள் ஆவல் ஊறிய விதையில் எழும்பும் முளைபோல் நிமிர்ந்து கொள்கிறது…
குருகுல வாசம்… எல்லோருக்கும் பிள்ளைகள்… “என் பிள்ளைகளும் குருகுல வாசம் செய்கிறார்கள். நாடு பிடிப்பதற்கல்ல…” ஓரக்கண்ணால் அவர்கள் பக்கம் பார்த்தவாறு, பூமகள், வேடுவப் பெண்களுடன் கொட்டை உடைக்கும் பணியில் ஈடுபடுகிறாள்.
“இந்தப் பருப்பை அரைத்துக் கூழாக்கி, உண்டால் பசி தெரியுதே இல்ல. இந்தத் தடவை, அருவிக்கு பின்ன தொலை தூரம் போயிப் பார்த்தால் குரங்கு கடிச்சிப் போட்ட கொட்டை நிறையக் கிடந்தது. எல்லாம் வாரிக்கட்டிட்டு வந்திருக்காளுவ. அதான் இங்க எடுத்திட்டு வந்தோம். வனதேவிக்கு, காட்டுக்கறி, பன்னி, மானு, எதுவும்தான் ஆகாது. கொண்டைக்கோழி, மயில், குயில் இதெல்லாம் இப்பப் பிள்ளைகள் பாத்து ஆடுறாங்க, பாடுறாங்க, ரசிக்கிறாங்க. முன்ன திருவி எறிந்திட்டு, சுட்டுத் தின்னுவம். ஒருக்க, மிதுனபுரி ஆளு, உப்புக் கொண்டாந்தான். அதைப் போட்டு சாப்பிட்டா ருசின்னு சொல்றாங்க. அதென்ன ருசி? கடல்ல மீனு ருசியாம். அதெல்லாம் நமுக்கு எதுக்கு? இங்கே தலைமுறை தலைமுறையா பசி போக சாப்புடல? உசிர் வாழல? புள்ள பெறல? கிழங்கு புளிக்க வச்சிக் குடிக்கிறதுதா. ஆனா, இப்பதா புதுசு புதுசா, ருசி…”
லூவுக்கு நா எதையேனும் பேசித் தீர்க்க வேண்டும். சில சமயங்களில் அது இதமாக இருக்காது. இப்போது இந்தப் பேச்சு, மனதை இலேசாகச் செய்கிறது…
கச்சலன் எழுந்து செல்லுமுன் அவளைப் பார்க்க வருகிறான்.
“வனதேவிக்கு மங்களம். பிள்ளைகள் எங்கே தேவி?”
அவள் இமைகளை உயர்த்தாமலே, “குருகுல வாசம் செய்பவர்கள் இங்கே இருப்பார்களா?” என்று வினவுகிறாள்.
“…ஓ… ஆம்.” கச்சலன் மன்னிப்புக் கேட்கிறான்.
“மன்னிப்பு எதற்கு? அரசகுமாரர்களுக்கும் அந்தணர்குலக் கொழுந்துகளுக்கும் மட்டும் குருகுல வாசம் என்பது சட்டமில்லையே? இந்த வன சமூகத்தில் எல்லாரும் சமம், சொல்லப் போனால் இந்த வன சமூகம் தான், அரசகுலங்களையும் அந்தண குலங்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் மன்னர், எங்களுக்குப் பிச்சை போடுவது போன்ற இந்தத் தானிய மூட்டைகளை அனுப்புவது எங்கள் தன்மானத்தைக் குத்துவது போல் இருக்கிறது. எனவே, இவற்றை நீங்கள் எடுத்துச் செல்லாலாம் கச்சலரே?”
“அபசாரம், அபசாரம்! வனதேவியின் மனம் வருந்தும்படி, நான் எதுவும் பேசவில்லையே? வனதேவி, நீங்கள் வழங்குகிறீர்கள்; இந்தக் கொடைக்கு நன்றியாகச் சிறு காணிக்கை போல் இவை. வனதேவி இங்கே வந்த பிறகு, இந்த வனமே எப்படி மாறிவிட்டது? எனக்குத் தெரிந்து இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில், இங்கே பஞ்சமில்லை; ஆற்று வெள்ளமில்லை; காட்டுத்தீ இல்லை; சூறைக்காற்று இல்லை. அதது, அததன் தருமப்படி இயங்கும் ஒழுங்கில் உலகம் தழைக்கிறது…” அவர் பணிந்து விடை பெறும் வரை அவள் பேசவில்லை; இவர்கள் சென்ற பிறகு, பெரியன்னையின் நா வாளாவிருக்காது. தானே செய்தி வெளிவரும் என்று பூமகள் எதிர்பார்க்கிறாள்.
வேடுவப் பெண்கள் கொட்டைகளை உடைத்துப் பருப்புகளைத் தனியாகக் கொண்டு குடிலுக்குள் வைக்கிறார்கள். பிறகு தோடுகளை ஒரு பக்கம் குவிக்கிறார்கள். பொழுது சாய்கிறது.
பெரியன்னை இப்போதெல்லாம் மிகச் சிறிதளவே உணவு கொள்கிறாள். ஒரே நேரம் தான்.
இருந்த இடத்திலேயே அமர்ந்திருக்கிறாள். நூல் நூற்பதோ, திரிப்பதோ செய்ய இயலவில்லை. ஆனால் தடாகக் கரையில் சென்று, நீரை முகர்ந்து ஊற்றிக் கொள்வது மட்டும் குறையவில்லை. முகம் சுருங்கி, உடல் சுருங்கி, குறுகி, முன் முடி வழுக்கையாகி…
இவள் பிறப்பு, வளர்ப்பு எப்படியோ?
நானும் ஒரு பிள்ளையை இக்கானகத்தில் வளர்த்தேன் என்ற பேச்சு வாயில் இருந்து வந்திருக்கிறது. அது குறும்புகள் செய்யாதாம். தாய் சொன்னதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்குமாம்.
அந்தப் பிள்ளை எங்கே? அதன் தந்தை யார்?
அடிமைப் பெண்ணுக்குப் பிள்ளையேது, பெண்ணேது? உறவே கிடையாது என்ற சொல் ஒரு நாள் பொதுக்கென்று நழுவி வந்தது.
மன்னர் மரபுகளைக் கடித்துத் துப்பும் வெறுப்பு இவளிடம் வெளிப்படுகிறது. ஆனாலும் இவள் வேதபுரிக்காரி. வேதபுரி அரண்மனையில் சேடி போல் இருந்தவளோ? ஜலஜாவைப் போல் பேரழகியாக இருந்திருப்பாள். யாரோ ஒரு பிரபு இளைஞன் இவளைக் கருவுறச் செய்தானோ? அல்லது…
சுரீரென்று ஓர் உண்மை மின்னல் போல் சுடுகிறது.
இவள் அந்தப்புரக் கிளிகளில் ஒருத்தியோ? முறையற்ற சந்ததி உருவாகிறது என்று வனத்திற்கு அனுப்பி இருப்பார்களோ? அவன் படைவீரர்களில் ஒருவனாகி எந்தப் போரிலேனும் இறந்திருப்பானோ?… ஒருகால்… இவள் அவன் சந்ததியோ?… இவள் அன்னை ஓர் அடிமைப் பெண்ணோ?… மின்னல்களாய் மண்டைக் கனக்கிறது. சத்திய முனிவரின் ஆசிரமத்தில் மகவைப் பெற்று இறந்தாளோ? மன்னர் அரண்மனைக்கு இவளைக் கொண்டு சேர்க்கச் சூழ்ச்சி செய்திருப்பாளோ இந்த அன்னை?
மேக மூட்டங்கள் பளிச் பளிச் சென்று விலகுவன போல் இருக்கிறது.
“பெரியம்மா…!” என்ற குரல் தழுதழுக்கிறது.
“சிறிது கூழருந்துங்கள் தாயே!…”
உட்கார்ந்து அவள் கையைப் பற்றுகையில் பூமகளின் விழிகள் நனைகின்றன.
“யாகம் செய்கிறார்களாம், யாகம்? யாகத்துக்குப் பொருட்கள் சேகரிக்கிறார்களாம்… உன் தந்தை.. தந்தை, ஒரு தடவை இங்கே வந்து இந்த மகளை, இந்தப் பேரப்பிள்ளைகளைக் காண வரவேண்டும் என்று நினைக்கவில்லையே அம்மா? ஏன்? ஏன்? தானியம் அனுப்புகிறான்… யாருக்கு வேண்டும் இந்தத் தானியம், இந்தப் பட்டாடைகள்? கொண்டு உன் பிள்ளைகளை வேதவதியில் கொட்டச் சொல்!…”
“அம்மா…! அம்மா… அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அவர் என்னை அந்தப் பிஞ்சுப் பருவத்தில் அன்னையைப் போல் மடியில் இருத்தி வளர்த்தவர். தாயும் தந்தையுமாகத் திகழ்ந்தவர்…”
“இருக்கலாமடி, பெண்ணே. உலகு பொறுக்காத ஓர் அநியாயம் உன்னை இங்கே கொண்டு விட்டிருக்கிறதே? அதை ஏற்கிறானா அந்த மன்னன்? இப்போது, அவன் ‘அசுவமேதம்’ செய்யப் போகிறானாம்! பத்தினி இல்லாத மன்னன், யாகம் செய்கிறானாம்! சத்தியங்களைக் கொன்ற பிறகு யாகம் என்ன யாகம்? எனக்கு நெஞ்சு கொதிக்குதடி, மகளே…” என்று அந்த அன்னை கதறுகிறாள்.
பிள்ளைகள், அந்தி நேரத்துச் சூரியக் கொழுந்துகள் போல் நண்பர் புடைசூழ ஆர்ப்பரித்துக் கொண்டு வருகிறார்கள். கழுத்தில் கட்டிய மணிகள் அசைய கன்று காலிகள் வருகின்றன. மாதுலனின் இனிய குழலிசையின் ஓசை, துயரங்களைத் துடைக்கிறது.
அத்தியாயம்-20
தானிய மணிகளை உரலில் இருந்து எடுத்து, அஜயன் வாரி இறைக்கிறான். குருவிகள், மைனாக்கள், புறாக்கள், என்று பல வண்ணங்களில், செண்டுகட்டினாற் போன்று வந்து குந்தி அந்த மணிகளைக் கொத்துகின்றன. அவை மகிழ்ச்சியில் வெளியிடும் குரலொலியும் ஏதோ ஓர் இனிய ஒலிச் செண்டாக இன்ப மூட்டுகிறது.
“எத்தனை அழகான பறவைகள்! அம்மா! வந்து பாருங்கள்” அஜயன் தாயைக் கூவி அழைக்கும் போது, விஜயன் சிரிக்கிறான்.
“அதோ பார்த்தாயா, மரத்தின் மேல்? ஒரு ‘மூப்பு’ பார்த்துக் கொண்டு இருக்கிறது. நீ செய்யும் இந்தத் தானம், அந்த ‘மூப்பு’க்குக் கொண்டாட்டமாக இருக்கிறது! லபக்கென்று குதித்து ஒரு கொத்தாக வாயில் கவ்விக் கொண்டு செல்ல நல்ல சந்தர்ப்பம் கொடுக்கிறீர் அல்லவா?”
“ஓ… அதெல்லாம் நம் அன்னை இருக்கும் இந்த இடத்தில் நடக்காது. அதனால் தான் நான் தைரியமாக இந்தப் பறவைகளுக்கு விருந்து வைக்கிறேன்.”
“அப்படியா? நம் அன்னை ஏதேனும் மந்திர – தந்திரம் வைத்திருக்கிறார்களா? அப்படியெல்லாம் நடக்காது என்று நீர் உறுதி மொழி வைக்க! அன்றொரு நாள் இதே இடத்தில் தான் இங்கு வந்து குந்திய கிளியை, இதே போல் ஒரு ‘நாமதாரி’ மூப்பு லபக்கென்று விழுங்கிச் சீரணம் செய்தது.”
“அப்போது ஒருகால் நம் அன்னை இங்கே இருந்திருக்க மாட்டார். அவர் சுவாசக்காற்று இங்கே கலந்திருக்காது…”
“இந்த விதண்டா வாதம் தேவையில்லை. நீர் என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஒரு விஷயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.” அஜயன் மிகவும் கூர்மையாக முகத்தை வைத்துக் கொள்வதைப் பூமகள் குடிலின் வாயில் ஓரம் நின்று பார்க்கிறாள். அவளுக்குச் சிரிப்பு வருகிறது.
மெல்ல நழுவிக் குடிலின் பக்கம் புதிதாகக் கன்று போட்ட பசுவுக்குப் புல் வைக்கிறாள்.
“அதென்ன, இரண்டு பக்கம்?”
“அம்மா இருக்குமிடத்தில் வன் கொலை நடக்காதென்றீர். அதற்கு இன்னொரு பக்கம் உண்டென்றேன்.”
“இன்னொரு பக்கம் என்று ஒன்றும் கிடையாது. நடக்காது என்றால் நடக்காது. உண்மை, சத்தியம் என்றால் முழுமை. இதை எடுத்தாலும் குறைத்தாலும் முழுமையே. உண்மை; சத்தியம்; தூய்மை…”
“எனக்குப் புரியவில்லை.”
“புரியவில்லை என்றால் இந்த மரமண்டை தமனகனிடம் கேள்! மிதுனபுரியில் இருந்து வந்தானே, காவலன், அவனிடம்…”
“நீர் தாம் இப்போது எனக்கு விளங்கத் தெரியாத மரமண்டை போல் பேசுகிறீர்!…”
இவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கையில் மரத்தில் இருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கிழட்டு நாமதாரிப் பூனை, கரகரவென்றிரங்கி நொடிப் பொழுதில் ஒரு புறாவைக் கவ்விச் சென்றுவிட்டது. அது சென்றதைப் பார்த்த பூமகள் திடுக்கிடுகிறாள். விஜயனின் சிரிப்பொலி கேட்கிறது.
“உம் சத்தியத்தைப் பூனை கவ்விக் கொண்டு சென்று விட்டது?”
அஜயன் எத்தகைய சலனமுமின்றி அதே கூர்மையுடன் விடையிறுக்கிறான். “இதுவும் சத்தியமே. அந்தப் பூனை பசியாக இருந்திருக்கும். அது மூப்பினால் ஓடியாடி இரை பிடிக்க முடியாது. பறவைக்குத் தானியம் தூவியதால், பறவைகள் சேர்ந்து வந்தன. அவற்றில் ஒன்று பூனையின் பசிக்குமாகிறது. எனவே, இதுவே சத்தியம் தான்!”
“ஒரு பறவையை யமனிடம் இருந்து உம்மால் காப்பாற்ற முடியவில்லை. இதை ஒத்துக் கொள்ளுங்கள். பின் எதற்காக, நமது குருநாதர் வில் – அம்பு, போர்ப் பயிற்சி என்று கற்பித்திருக்கிறார்? வில் – அம்பு – வித்தை இந்த மாதிரியான நேரங்களில் பயன்படவில்லை என்றால், விரோதிகளிடம் இருந்து எப்படி மக்களைக் காப்பாற்ற முடியும்?”
“விரோதிகள் என்பவர் இருந்தால் தானே, அந்தச் சங்கடம் வரும்?” விஜயன் கேலியாகச் சிரிக்கிறான்.
“இது மிக நல்ல யோசனைதான். அப்படியானால் குருநாதர், நமக்கு ‘மந்திர அஸ்திரம்’ என்ற வித்தையையும் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லையே?”
“தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பயன்படுத்த வேண்டியதில்லை; பறவைகளும், விலங்குகளும் நமக்குப் பகைவர்கள் இல்லை. நம்மைப் போன்று அறிவு பெற்ற மனிதர், தங்கள், சினம், பேராசை ஆகிய தீக்குணங்கள் மேலிட, மற்றவரை அழிக்க அத்தகைய வித்தையைப் பயன்படுத்தி நிரபராதிகளை அழிக்க முன் வரும் போது நாம் அவற்றைப் பயன்படுத்தி, சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும். அதுவும் நம் குருநாதர், அனுமதிக்கும் போதுதான்…”
“சரி, ஒத்துக் கொள்கிறேன் – நமக்குள் இப்போது சண்டை எதற்கு?” என்று விஜயன் இறங்கி வருகையில் பூமகள் குடில் மறைவில் இருந்து வெளிப்பட்டு வருகிறாள்.
“அம்மா, நமக்கு விரோதிகள் இருக்கின்றனரா?”
விஜயனின் வினாவில் ஒரு கணம் அவள் தடுமாறிப் போகிறாள்.
ஆனால் அஜயனே இதற்கு மறுமொழி கூறுகிறான்.
“எல்லோருக்கும் இதம் நினைக்கும் அம்மா இருக்கையில் எங்கிருந்து விரோதிகள் வருவார்கள்?… இல்லையா அம்மா?”
“அக்கரையில் இருக்கும் குருகுலத்து அந்தணப் பிள்ளைகள் சிலர் நாங்கள் விளை நிலங்களில் ஏர் பிடிக்கையில் ஏளனமாகச் சிரித்தார்கள். நாங்கள் அந்தண குலத்துக்கும் க்ஷத்திரிய குலத்துக்கும் பொருந்தாத நீசர்களாம். அப்படி என்றால் என்ன அம்மா?” விஜயனின் இந்த வினாவுக்கும் அவள் மவுனமாக இருக்கிறாள்.
“அம்மா! நாங்கள் எல்லோரும் உணவு சேகரிக்கின்றோம். தாங்கள் அதை எல்லாம் நாம் சுவையாக உண்ணும்படி பக்குவம் செய்து தருகிறீர்கள். வேள்வித் தீயில் இட்டு, அதன் விளைவான மிச்சத்தை உண்பதுதான் அந்தண தருமமாம். நாம் உபநயனம் செய்து வைக்கத் தகுதி இல்லாதவராம்!”
அவள் முகத்தில் சூடேறுகிறது.
“குழந்தைகளே, அவர்கள் சொல்லும் வேள்வி, கொல்லும் செயல். சத்திய முனிவரும், நந்த சுவாமியும் மேற்கொண்டு நம்மையும் ஈடுபடுத்தும் வாழ்க்கையே வேள்விதான். வேள்வி என்பது ஓம குண்டத்தில் போடும் சமித்துகளும் உயிர்ப்பிண்டங்களும் அல்ல. நல்ல உணவைப் பக்குவப்படுத்துவதும் வேள்வித் தீதான். அதை நாம் காத்து வைக்கிறோம். அதே தீ, நமது நல் ஒழுக்கங்களாகிய சமித்துகளால் நம்முள் எப்போதும் அணையாமல் நம்மைப் பாதுகாக்கிறது. அது நம் உணவைச் செரிக்கச் செய்கிறது. நமக்கு ஆற்றலைத் தருகிறது. அது நமக்கு அறிவைத் தருகிறது. அது நமக்கு நல்ல தெளிவைத் தருகிறது; வீரியத்தையும் தருகிறது. அந்த ஒளி என்றும் அணையாமல் இருக்க, மேலும் மேலும் நம்மைப் புதுப்பித்துக் கொள்வோம். மூர்க்கத்தனம், பேராசை, சினம் எல்லாவற்றையும் அத்தீயில் இட்டுப் பொசுக்கிக் கொள்வோம். வேள்வி என்பது வெறும் சடங்குகளில் இல்லை. அன்றாடம் காலை, மாலைகளில், வானத்து தேவனையும், காற்றையும் மண்ணையும் நாம் தொழுதேற்றி நிற்பது, இந்த வேள்விக்கு ஆதாரசுருதிகள். ‘காயத்ரி’ மந்திரத்தை எவரும் உச்சரித்து அறிவொளியும் வீரியமும் நல்கும் தேவனை வழிபடலாம். நம் சித்தத்தைத் தூய்மையாக்கிக் கொள்ள, முப்புரி நூல் அடையாளம் எதற்கு? நம்முள் இச்சக்திகளை எழுந்தருளச் செய்து ஆற்றலைப் பெற அடையாளம் எதற்கு?…”
அன்னையின் குரலில் அவர்கள் கட்டுண்டவர்களாய் இருக்கிறார்கள். கச்சலன் வந்து சென்று, இரண்டு பருவங்கள் கடந்து விட்டன. மாரிக் காலம் முடிந்து, பனிமலர்கள் பூக்கும் பருவம். ஆனால் இந்தச் சூழலில், எது இளவேனில், எது முதுவேனில் எதுவும் தெரிவதில்லை. முன்பு, பிள்ளைகள் சுவைத்துத் துப்பிய மாங்கொட்டைகளில் இரண்டு இந்நாள் இளமரங்களாகப் பூரித்து, பூக்குலைகளுடன் பொலிகின்றன.
பிள்ளைகள் இருவரும், கூரைக்குப் புல் சேகரிக்கக் கிளம்புகின்றனர். பெரியன்னை வருகிறார்.
“தனியாக எங்கே செல்கிறீர்கள் குழந்தைகளே?… நீலன், கேசு, மாதுலன் யாரையும் காணவில்லை?”
“அவர்கள் தேனெடுக்கப் போயிருக்கிறார்கள் பெரியம்மா…”
“மாதுலனுமா?” என்று விழியைச் சரித்துக் கொண்டு பார்க்கிறார். அவள் உடல் அந்த வெயிலிலும் குளிரில் இருப்பது போல் நடுங்குவது தெரிகிறது.
“ஏன் இப்படி நடுங்குகிறீர்கள், தாயே! அம்மம்மா… இப்போது, குளத்தில் நீராடினீர்களா?”
“நான் தனியாக இல்லையடி பெண்ணே, புல்லி இருந்தாள். உடலெல்லாம் புழுதியாக இருந்தது. அழுக்குப் போக நீராடினேன். நீர் பட்டதும் இதமாக இருந்தது…”
பூமகள் விரைந்து உள்ளே சென்று, உலர்ந்ததோர் ஆடையைக் கொண்டு வருகிறாள். அவளை மெல்ல அழைத்துச் சென்று, ஆடையை மாற்றச் சொல்கிறாள். பிறகு ஈர ஆடையைப் பிழிந்து, ஓரத்து மரக் கிளையில் போடுகிறாள்.
“கண்ணம்மா, பிள்ளைகளை எங்கும் போகச் சொல்லாதே! நம் கண்முன்னே இருக்கட்டும்…”
“நீங்கள் அஞ்ச வேண்டாம் பெரியம்மா. அவர்கள் குழந்தைகள் இல்லை. யாரும் தூக்கிச் செல்ல. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது நான் ஊமையாகிறேன்…”
முதியவர் நிமிர்ந்து பார்க்கின்றார். கனிந்த பழத்தின் விதைகள் போல் முதிர்ந்த விழிகள் ஒளிருகின்றன. “என்ன பேசிக் கொள்கிறார்கள்?”
“அந்தண குலம், க்ஷத்திரிய குலம் என்பதெல்லாம் எப்படி என்று பேசிக் கொண்டார்கள். சத்திய முனிவருக்கும் நந்த சுவாமிக்கும் உபநயனம் செய்து வைக்கத் தகுதி இல்லை என்று அக்கரை குருகுலக் கொழுந்துகள் சொன்னார்களாம். என்னிடம் கேட்டார்கள்.”
“ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடிக்கச் சொல்லி வைத்தார்களா?…”
தாயின் இழிந்து தொங்கும் செவிகளைப் பார்த்த வண்ணம் நிற்கிறாள். கன்னங்கள் வற்றி… சப்பிய மாங்கொட்டையாய்த் தலையும், அகன்ற நெற்றியும்… எந்த இரகசியத்தைக் கட்டிக் காக்கின்றன?
“அடி, கண்ணம்மா, புல்லின் ஆண், பெரிய பன்றி அடித்துக் கட்டிக் கொண்டு போகிறான். வலையில் விழுந்தது என்றான்… அவன் சொன்ன சேதி கேட்டதிலிருந்து எனக்கு வெலவெலத்து வருகிறது. கச்சலன் வந்த போது அரசல் பொரசலாகக் கேள்விப்பட்டது, நிசந்தான். யாகம் செய்கிறார்களாம், யாகம். மந்திரம் சொல்லி நீர் தெளித்துக் குதிரையை விரட்டியாயிற்றாம். அந்தக் குதிரை அடி வைத்த மண்ணெல்லாம் அவர்களுக்குச் சொந்தம். மிதுனபுரிப் பக்கம் வந்திருக்கிறதாம். அவர்கள் கோட்டைக் கதவுகளை மூடி விரட்டி விட்டார்களாம். என்ன அநியாயம் பாரடி?” அவள் எதுவும் பேசவில்லை.
“இந்தப் பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளுடன் தேனெடுக்கப் போகிறோம் என்று நின்றார்கள். உடம்பெல்லாம் பச்சிலையைப் பூசிக் கொண்டு தேனெடுக்கப் போவது விளையாட்டாக இருக்கிறது… எனக்கென்னமோ இன்று அனுப்ப வேண்டாம் என்று தோன்றிற்று. அடுத்த முறை போகலாம் என்றேன்…” என்று காரணம் புரியாமல் மழுப்புகிறாள்.
இவளுடைய அடிமனதில் கச்சலர் கூறிய ‘யாகம்’ மனதில் படிந்து இருக்கிறது. இப்போது கேள்விப்பட்டிருக்கும் செய்தி…?
யாகக் குதிரையுடன் ஒரு படையும் வரும்…
“அவன் வேறு என்னவெல்லாமோ உளறுகிறான். யாகம் செய்யும் ராசாவுக்கு ராணி இல்லையாம். ராணியைப் போல் தங்கத்தால் ஒரு பிரதிமை செய்து வைத்திருக்கிறார்களாம். பெரிய பெரிய ரிசி முனிவர்கள், ராசாக்கள், எல்லாரும் கூடிச் செய்யும் யாகமாம். ஒரு வருசம் ஆகுமாம்…” முதியவள் முணுமுணுத்துவிட்டு அவளைப் பார்க்கத் தலை நிமிருகிறாள். “என்னது? தாயே? என் தந்தைக்குப் பட்டத்தரசி இருக்கிறார்களே? ஊர்மிளியின் தாயார்? அவர் எதற்குப் பொற் பிரதிமை செய்து வைக்க வேண்டும்?…”
அன்னை பேசவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு புற்றரைக்கு நகர்ந்து போகிறாள்.
மாதுலன் குழலூதிக் கொண்டு வருகிறான். அஜயன், விஜயன், நீலன், காந்தன் எல்லோரும் வருகிறார்கள். அரிந்த புல் கட்டைக் கூரை பின்னுவதற்கு வசதியான இடத்தில் போடுகிறார்கள்.
“நாம் நீராடி வருவோம்… அம்மா, இன்றைக்கு நாங்கள் எல்லோரும் இங்கு உணவு கொள்ளவில்லை. சாந்தன் வீட்டுக்குப் போகிறோம்…” உடலைத் தட்டிக் கொண்டு ஆடிப்பாடிக் கொண்டு குளக்கரைக்குச் செல்கிறார்கள்.
பூமகளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. மலைகள் கரைவது போலும், ஆறுகள் பொங்குவது போலும் கடல் ஊரை அழிப்பது போலும் மனசுக்குள் விவரிக்க இயலாத அச்சம் கிளர்ந்து அவளை ஆட்கொள்ளுகிறது.
“கண்ணம்மா? பிள்ளைகள் எங்கே போகிறார்கள்?”
“சாந்தன் கூட்டிப் போகிறான். யாவாலி ஆசிரமத்துப் பக்கம் போகிறார்கள். மானோ, மீனோ எதுவோ சமைத்து இருப்பார்கள். சத்தியரும், நந்த முனியும் அங்கே தானே இருப்பார்கள்? அவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா?”
“… அடியே கண்ணம்மா, உனக்கு, அரண்மனையில், இளவரசுப் பட்டம் கட்டி நாடாள வேண்டிய பிள்ளைகளை இங்கே வேடக் கூட்டத்துடன் வைத்திருக்கிறோம் என்ற மன வருத்தம் இருக்கிறதா? சொல்!”
இறுகிப் போன உணர்வுகளைப் பெரியம்மா தூண்டில் கொக்கிப் போட்டு நெம்புவது போல் வேதனை தோன்றுகிறது.
ஒருகால் மந்திரக் குதிரை இங்கு வந்துவிட்டால்? வராது என்று என்ன நிச்சயம்? இந்தப் பிள்ளைகளுக்குத் தந்தையைப் பற்றி விவரங்களைக் கூறாமல் எத்தனை நாட்கள் இரகசியமாக வைத்திருக்க முடியும்?…
தாய்-தந்தை இவளை மண்ணில் விட்டார்கள்; வளர்த்தவர், உனக்குச் சகலமும் நாயகனே என்று தாரை வார்த்துக் கொடுத்தார். அவரோ உன் பந்தம் வேண்டாம் என்று வனத்துக்கனுப்பிக் கை கழுவிக் கொண்டார்.
இவள் தன் வயிற்றில் பேணி வளர்த்தாலும், குமரப் பருவத்து எழுச்சியில், அரும்பி மலருவது, அந்த வித்தின் ‘பௌருசம்’ அல்லவோ? குதிரையின் வாலைப் பற்றிக் கொண்டு அடி பணிந்து போய் விடுவார்களோ? உடல் நினைக்கவே நடுங்குகிறது.
அந்நாள் கானகத்தில் இவள் நிராதரவாக விடுபட்ட போது இவளை முத்தை ஏந்தும் சிப்பி போல் காத்துக் கொண்டு வந்தாரே, அந்த நந்த முனி என்ன சொல்வார்!
எது நீதி? எது அநீதி?
அவள் முதியவளுக்கு இலைக் கிண்ணத்தில் கூழ் கொண்டு வந்து வைக்கிறாள். கிழங்குக் கூழ், ஒரு துண்டு இனிப்புக் கட்டியும் வைத்துவிட்டு,
“அம்மா, நான் இப்போது, சத்தியமுனிவரையும் நந்த சுவாமியையும் பார்த்து விட்டு வருகிறேன். போகும் போது புல்லியோ, கும்பியோ தென்பட்டால் இங்கே வந்து இருக்கச் சொல்கிறேன்… வரட்டுமா?” என்று நிற்கிறாள்.
அப்போது, கூட்டமாகத் தேனெடுக்கச் சென்ற பிள்ளைகள் வரும் கலகலப்புக் கேட்கிறது. மரங்களுக்கும் புதர்களுக்கும் இடையில் எங்கேனும் உறங்கிவிட்டு மறுநாள் பகலிலோ, மாலையிலோ தானே திரும்புவார்கள்?…
அவர்களை எதிர் கொள்ள பூமகள் விரைகிறாள்.
அவர்கள் மூங்கில் குழாய்களில் தேன் கொண்டு வரவில்லை. வெற்றுக் குழாய் கயிறு என்று சென்ற கோலத்திலேயே காட்சியளிக்கிறார்கள்.
“வனதேவி… நாங்கள் ஓர் அதிசயம் பார்த்தோம்…”
மீசை அரும்பிவிட்ட பூவன், ஐம்பின்னல் போட்டிருக்கும் சிறுபிள்ளை, ரெங்கியின் மகளின் மகள், எல்லோரும் ஒரே குரலில், “குதிரை வந்திருக்குது… குதிரை..!” என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
இந்த வனங்களில் குதிரை என்ற பிராணி கிடையாது. அவர்கள் வரும் போது கூட தேர்களில் காளைகள் கட்டி இழுப்பதாகவே சொல்லியிருக்கிறார்கள்.
“மிதுனபுரியில் இருந்து வந்ததா?”
“இல்லை வனதேவி! இது வெள்ளைக்குதிரை. பசு மாட்டை, காளையை விடப் பெரிசு. குச்சமாக… பெரிய வால்…” என்று இரண்டு கைகளை நீட்டி, நிமிர்த்திச் சைகையாகவும் சொல்கிறார்கள். கழுத்தில் மணியாரம் போட்டிருக்கிறதாம். ஒரு பட்டுப் போர்வை போர்த்து, கால்களில் பொன் மின்ன அது நடந்து வருகிறதாம்.
தலையை அப்படியும் இப்படியும் ஆட்டி அது வருவதைச் சோமன் விவரிக்கிறான்.
“எங்கே வந்திருக்கிறது?”
“கிழக்கே… வேம்புவனம் தாண்டி மலை போல் மேடாக இருக்குமே, அங்கே தான் நாங்கள் பாறைத்தேன் எடுக்கப் போனோம். அங்கே ஆற்றுப் பக்கம் புல் தரையில் அது மேய்ந்து கொண்டிருந்தது. நாங்கள் கிட்டச் சென்று தொட்டுப் பார்க்கலாம் என்று போனோமா? அது ஓர் உதை விட்டது… யாரு. இவன் தான்! பின்னே போய்ச் சுகமாக உட்கார்ந்திட்டான்…” என்று பூவனைக் காட்டிச் சோமன் சிரிக்கிறான்…
“இல்லை வனதேவி. அது என்னை விரட்டவில்லை. அங்கே ஒரு குரங்கு வந்தது. அதை விரட்டியது. வனதேவி, அந்தக் குதிரை, ராசா வீட்டுக் குதிரையா?” என்று பூவன் கேட்கிறான். அவள் கலவரமடைகிறாள்.
அத்தியாயம்-21
பூமகளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
“வாருங்கள். நாம் சத்திய முனியிடம் போய்ச் சொல்வோம். அஜயன், விஜயன், நீலன் எல்லோரும் அங்குதான் போயிருக்கிறார்கள்…”
அவர்கள் செல்கிறார்கள். வாழை வனத்தின் குறுக்கே நடந்து செல்கின்றனர். உச்சிக்கு வந்த பகலவன் மேற்கே சாயும் தருணம். கானகத்தின் ஆரவாரங்கள் இனிமையான சில ஓசைகளுள் அடங்கும் நேரம்.
ஆசிரமத்தில் பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்கள். நந்தமுனி மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஓர் ஆட்டம் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். மரங்களின் மேலிருந்து பிள்ளைகள் பறவை போலும், விலங்குகள் போலவும் ஓசை எழுப்புகிறார்கள்.
எந்தப் பறவை எந்த மரத்தில் இருந்து ஓசை எழுப்புகிறது என்று கீழிருக்கும் பிள்ளை சொல்ல வேண்டும். அவன் பார்வை மறைக்கப் பட்டிருக்கிறது.
ஒரே காலத்தில், பல்வேறு பறவைக் குரல்கள் ஒலிக்கின்றன.
பையன் இங்கும் அங்கும் ஓடுகிறான். அஜயன் தான்.
இதோ நாகண வாய்ப்புள்… இதோ, நீலகண்டப் பறவை.
இதோ… இதோ இதுதான் செம்போத்து…
“ஹி ஹி… ஹி… ஈ… ஈ…” என்ற ஒலி விசித்திரமாகக் கேட்கிறது.
மகிழமரக் கிளையில் அவள் பார்க்கிறாள். விஜயன்.
“இது ஒன்றும் பறவை இல்லை!”
“பொய்… பறப்பது எதுவும் பறவை தானே?”
“ஒத்துக் கொள்ள முடியாது. ஈ… ஈ… என்ற ஒலி, குதிரைக் கனைப்பு” என்று அஜயன் கண் கட்டை அவிழ்த்துப் போடுகிறான்.
“குதிரை பறக்குமோ?…”
“ஏன் பறக்காது? அந்த அசுவமேதக் குதிரை பறந்துதானே நம் வனத்துக்கு வந்து இறங்கி இருக்கிறது?”
பூமகள் அடுத்த அடியை எடுத்து வைக்காமல் மரத்தோடு சாய்ந்து நிற்கிறாள்.
“குதிரை பறப்பது என்பது புரளி. அப்படியே பறந்தாலும் ஈ… ஈ… என்று கனைக்காது, விர் விர்ரென்று பெரிய சிறகுகளை அடித்துக் கொண்டு நீண்ட ஒலி எழுப்புமாக இருக்கும்!”
“சரி அப்படியே வைத்துக் கொள்வோம். அது எப்படி ஆறு தாண்டி, நமது வனத்துக்குள் வந்தது?”
“நீந்தி வந்திருக்கும்!…”
“அதன் மேலுள்ள பட்டுப் போர்வை, நனையவில்லை, கலையவில்லை, உடம்பு நனைந்திருக்கவில்லை…”
“சூரியனின் ஒளியில் ஈரம் காணாமல் போகும் என்பது கூடவா தெரியாது?”
“அஜயா, விஜயா, அந்தப் பக்கம் இருந்து ஓடத்தில் ஏற்றி, இங்கே கொண்டு விட்டிருக்கலாம் இல்லையா?” என்று நீலன் கூறுகிறான்.
“எதற்கு அப்படி விட வேண்டும்? யார் விட்டிருப்பார்கள்?”
“மிதுனபுரிக்கப்பால் ராசா படை வந்திருக்குதாம். நேத்தே எங்க அப்பன் பார்த்துச் சொன்னார். மிதுனபுரி போய், தோல் கொடுத்து விட்டு, பெரிய பானை வாங்கிட்டு வரப் போனார். அப்ப குதிரை, யானை, கொடி, குடை, எல்லாம் பார்த்தாராம். கோட்டைக்கு வெளியே, பெரிய மரத்தடியில் கூரை கட்டி அங்கு ராசா இருந்தாராம்!”
“மிதனபுரிக் கோட்டைக்குள் போக அங்கே இடமே இல்லையாம். ‘தோலை எல்லாம் ராசாவின் ஆளுங்களே வாங்கிட்டு, தங்கக்காசு குடுத்தாங்களாம். எங்காயா சண்டை போட்டுது. தோலைக் கொண்டு குடுத்திரே, பானையிலே கூழு பண்ணுவோம், புளிக்க வைப்போம். இந்தக் காசில என்ன பண்ண? வேதவதியில் கொண்டு வீசு’ன்னு கத்தினாங்க…”
“ராசன்னா தங்கக் காசுங்கதா சாப்புடுவாங்களா?”
ஒரு பொடிப்பயல் மென்று ‘அம் அம்’ என்று உண்பதைப் போல் கேலி செய்கிறான். எல்லோரும் அதையே செய்து சிரிக்கிறார்கள்.
“அப்பாடா…” என்று விஜயன் வயிற்றைத் தடவி ஏப்பம் விடுகிறான்.
அப்போதுதான் அவள் அங்கு இருப்பதைப் பிள்ளைகள் பார்க்கிறார்கள்.
மரங்களில் உள்ள பிள்ளைகள் அவளை வந்து சூழ்கிறார்கள். “அம்மா…! நாங்கள் அந்தக் குதிரையைப் பார்க்கப் போகிறோம்! இதோ இந்த மாயன் பார்த்து விட்டானாம். கதை கதையாகச் சொல்கிறான். வெண்மையாகப் பால் நுரை போல் இருக்கிறதாம். கறுப்பு மூக்காம். பச்சைப் பசேலென்று மொத்தை மொத்தையாகச் சாணி போடுகிறதாம்!” என்று விஜயன் இரு கைகளாலும் அதன் அளவைக் காட்ட கொல்லென்று எல்லோரும் சிரிக்கிறார்கள்.
“எங்கே இருக்கிறதாம், அது?”
“வேம்பு வனத்து அருகில் புல் தரையில் மேய்கிறதாம்…”
“அதன் பின் யாரும் உரியவர்கள் வரவில்லையா?”
“யாரும் இல்லை வனதேவி. அவர்கள் அந்தக் குதிரையை அதன் கால் போன போக்கில் மேய விடுவார்களாம். அது தடம்பதித்த இடமெல்லாம் அரசருக்குச் சொந்தமாம்?”
“அதெப்படி நாம் நடக்கும் இடத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்? நாம் இங்கே நடமாடுகிறோம்; உணவு சேகரிக்கிறோம்; படுத்து உறங்குகிறோம். இது வனதேவிக்கு உரிய இடம். அந்த வனதேவிதான் இவர்கள் என்று எங்கள் குடியில் எல்லோரும் சொல்கிறார்கள். நாம் எல்லோரும் வனதேவியின் பிள்ளைகள். அவர்கள் இங்கு வந்தால் நம்மை மகிழ்ச்சியாக இருக்க விடமாட்டார்கள்!”
“அதெப்படி குதிரையை விரட்டிவிட்டு ஒன்றுமறியாத நம் இடத்தை ராசா பறிப்பது?”
“மந்திரம் போட்டிருக்கிறார்கள் சடா முடி முனிவர்கள்… மந்திர சக்தியில் நெருப்பு எரியும்; வெள்ளம் வரும்; காற்று அடிக்கும்.”
“…முன்னே சம்பூகன் இறந்தது நினைவிருக்கா?” என்று பூவன் கேட்கிறான்.
சம்பூகன் பெயர் கேட்டதுமே அவள் நடுநடுங்கிப் போகிறாள்.
“அம்மா நாம் எல்லோரும் அங்கே போய்ப் பார்க்கிறோம்! பூவன், காட்டுகிறாயா?” விஜயனுக்குத்தான் துருதுருப்பு.
நந்தமுனி ஒற்றை யாழின் சுருதி இல்லாமலே வருகிறார். அது மவுனமாகத் தொங்குகிறது.
பிள்ளைகள் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.
“குருசுவாமி, யாகக்குதிரை வந்திருக்கிறது! நாங்கள் போய்ப் பார்க்க வேண்டும்!”
“பார்க்கலாமே? அதைச் சுற்றி நின்று கொண்டு பாட்டுப் பாடுவோம். அது வந்த வழியே போகிறதா என்று பார்ப்போம்!”
இது நல்ல முடிவாக அவளுக்குத் தோன்றுகிறது…
பிள்ளைகள் கூறிய இடத்தைக் குறிப்பாக நோக்கி அவர்கள் நடக்கிறார்கள். அவர்களுக்கு நன்கு பரிசயமான தாவரங்கள்; பறவைகள்; சிறு விலங்குகள்; நீர் நிலைகள்…
வேம்பு வனத்தில் புதிய சாணம் இருக்கிறது.
“ஓ! இங்குதான் அது வந்திருக்கிறது! இது அதன் சாணம் தான்!” என்று அதன் மேலேறிக் குதிக்கிறான் மாயன்.
“இல்லை… இது போன்ற சாணம் இதுவரையில் இந்தக் காட்டில் நான் பார்த்ததில்லை…” என்று உடன் வந்த இளம் பெண் கும்பி கூறுகிறாள்.
புற்றரை பசுமையாக ஆற்றுக்கரை வரை விரிந்து கிடக்கிறது.
ஆனால் அங்கு எந்தக் குதிரையும் மேயவில்லை. இவர்கள் ஆற்றுக்கரையின் ஓரம் அடர்ந்த கோரைப் புற்கள், புதர்கள் இடையிலெல்லாம் குதிரைக்காகத் தேடுகிறார்கள். அது தென்படவில்லை. காட்டுப் பன்றிகள், எருமைகள், மான்கள் கூடத் தென்படுகின்றன. தேடி வந்த குதிரை இல்லை.
“நான் அந்தக் குதிரையைப் பிடித்து அதன் முதுகில் ஏறிச் சவாரி செய்ய ஆசைப்பட்டேன்…”
“அது பின்னங்காலால் உதைக்க முடியாதபடி நாங்கள் பிடித்துக் கொள்வோம்!”
“இந்தக் காட்டில் எத்தனையோ மிருகங்கள் இருக்கின்றன. குதிரைகள்… அதுவும் வெள்ளைக் குதிரைகள் தென்படவே இல்லையே?…”
“முன்பே வந்து ராசாவின் ஆட்கள் வலை வைத்துப் பிடித்துப் போயிருப்பார்கள்!”
“அந்த வெள்ளைக் குதிரை, சூரிய ராசாவின் தேரில் பூட்டிய குதிரை போல் இருந்தது!”
ஆற்றோரமாக அவர்கள் நடந்து வருகிறார்கள். மாதுலன் குழலிசைக்க, நாதமுனி ஒற்றை நாணை மீட்ட அவர்கள் குதிரையை வரவேற்கச் செல்வது போல் நடப்பதாக அவளுக்குப் படுகிறது.
“எனக்கு அந்தக் குதிரையில் ஏறி இந்தப் பூமண்டலம் முழுதும் ஒரு சுற்று வர வேண்டும் என்று தோன்றுகிறது…” என்று விஜயன் வழியில் பட்ட கருப்பந்தடிகளை உடைத்துக் கொண்டு கூறுகிறான்.
கரும்புத் துண்டுகள் கடிபடுவது போல், குதிரை பற்றிய கற்பனைகளும் சுவைக்கப்படுகின்றன. “ஒரு கால் மாயன் சொன்னாற் போல் அது பறந்து அக்கரை போய்விட்டிருக்கும்!”
“அதெல்லாமில்லை, இவர்கள் அப்படியே தூங்கி, கனவு கண்டிருப்பார்கள். குதிரை துரத்தி வருவதாக நினைத்துத் தேனெடுக்காமல் ஓடி வந்திருப்பார்கள்!”
“இல்லை அஜயா? நாங்கள் இரண்டு கண்களாலும் பார்த்தோம்! அது உதைத்ததில் எனக்குப் பாரும், காயத்தை!”
“ஒரு கால் இங்கே வரவேற்பு இருக்காது என்று ஆற்றின் மேல் பறந்து அது மிதுனபுரிப் பக்கம் போயிருக்கும்!”
“அங்கே தமனகனோ, சரபனோ உள்ளே விடாமல் கோட்டைக் கதவுகளை அடைத்திருப்பார்கள். அது அவ்வளவு உயரக் கோட்டைச் சுவர் மேல் பறக்க முடியுமா?… அப்படி உள்ளே போனால், தேவதைக்குப் பலியாகும்!” நந்தமுனி ஒற்றை நாண் அதிரும்படி மீட்டுகிறார்.
“பிள்ளைகளே, இந்தக் குதிரைப் பேச்சை விட்டு இப்போது எல்லோரும் பாடிக் கொண்டே நம் இருப்பிடம் போகலாம்! இந்தக் காட்டுக்கு எத்தனையோ பேர் நமக்கு நண்பர்களாக வருகிறார்கள். அப்படி அதுவும் வந்து விட்டுப் போகட்டுமே?… பாடுங்கள்…” அவர் ஒற்றை நாணை மீட்டுகிறார்.
“வனதேவி பெற்ற மைந்தர்கள் யாம்…
அவள் மடியில் நாங்கள் வாழ்கின்றோம்”
ஏற்றமும் இறக்கமுமாகக் குரல்கள் ஒலிக்கின்றன.
“தன தானியங்கள் அவள் தருவாள்!
தளரா உழைப்பை யாம் தருவோம்!
அத்திர சாத்திரம் அறிந்தாலும்,
ஆருக்கும் தீம்புகள் செய்யோம் யாம்!
கோத்திர குலங்கள் எமக்கில்லை.
குண தேவி பெற்ற மைந்தர்கள் யாம்…”
மனசுக்கு இதமாக இருக்கிறது. திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டே அவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு வருகிறார்கள்.
அங்கே இலுப்பை மரத்தின் அடியில்… வெண்மையாக, பசுவோ? காத்யாயனிப் பசுவுக்கு இப்படி வாலில்லை.
அஜயனும் விஜயனும் பிள்ளைகளும் கூச்சல் போட்டு ஆரவாரம் செய்கிறார்கள்…
“அதோ… நம் குடிலுக்குப் பக்கத்தில், குதிரை, நம்மைத் தேடி வந்திருக்கிறது. நாம் அதைத் தேடிப் போயிருக்கிறோம்!”
ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் அச்சம் மறந்து அஜயன் ஓடுகிறான்.
விஜயன் அவனை முந்திக் கொண்டு அதன் முதுகில் கை வைக்கிறான்.
அது உடலை ஒரு குலுக்குக் குலுக்குகிறது. வண்ணப் பட்டுத்துண்டு போர்த்து, தோல் வாரால் பிணித்திருக்கும் முதுகு வானவில்லின் ஏழு நிறங்கள் கொண்டாற் போன்று கண்களைக் கவருவதுடன், ‘அருகே வந்து தொடாதீர்கள், நான் எட்டி உதைப்பேன்’ என்று அச்சுறுத்துவது போலும் இருக்கிறது.
இவர்கள் பின்னே நகர, பூமகள் எச்சரிக்கை செய்கிறாள்.
“பிள்ளைகளே, நீங்கள் யாரும் அருகிலே போகாதீர்கள். சத்திய முனிவர் யோசனையின்படி நாம் நடப்போம்…”
“குருசாமி மூலிகை தேடி மலைப்பக்கம் போனார். நத்தியின் குழந்தைக்கு இரண்டு கால்களும் பின்னினாற் போல் நிற்க முடியவில்லை. அதற்காக ஒரு மூலிகை கொண்டு வரச் சென்று நான்கு நாட்களாகின்றன. கூடவே சிங்கனும் போயிருக்கிறான்…” என்று அவர் செய்தி தெரிவிக்கிறார்.
இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, குதிரை பொன்மின்ன, பின் கால்களால் பூமியைச் சீய்க்கிறது.
“குளம்புக்குப் பூண் கட்டியிருக்கிறார்களா?” விஜயன் கேட்கிறான்.
“அறியேன், குழந்தாய்… நீ அருகில் போகாதே!”
“இதை நமக்கே வைத்துக் கொண்டால் என்ன?… இப்போது கூட இதன் முதுகில் நான் தாவி ஏறி அமர்ந்து விடுவேன்…”
அவன் இளமுகத்தில் ஆவல் மின்னுகிறது.
“குழந்தைகளே, இது யாகக் குதிரை. இதை ஏவியவர்கள் எங்கேனும் மறைந்து இருப்பார்கள். அவர்களால் நமக்கு வீணான சங்கடம் உண்டாகும். இதை மெள்ள அப்பால் துரத்தி விடுவோம். நீங்கள்… ஒரு கூடையில் தானியமோ, புல்லோ காட்டுங்கள். அது அந்தப் பக்கம் நகரும்…” என்று அப்போது மெல்ல பெரியன்னை வருகிறாள்.
“நீங்கள் எல்லோரும் எதற்கு இப்படி அதைச் சூழ்ந்து ஆரவாரம் செய்கிறீர்கள்? இருந்து விட்டுப் போகட்டும்! கண்ணம்மா, பொழுது சாய்ந்து அந்தி வேளையாகிறது. அவரவர் வீண் விவாதம் செய்யாமல் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். அந்தி வந்தனம் செய்து விட்டு, இருப்பதை உண்டு, உறங்குமுன் உட்கார்ந்து யோசனை செய்யுங்கள்… போங்கள்!”
அவள் குரலுக்கு அனைவரும் கட்டுப்பட்டாலும், அஜயன் மட்டும் அன்னையின் காதோடு, “அதற்கு அடைக்கலம் என்று பெரியன்னை ஏன் சொன்னார்? அதை யார் கொல்ல வந்தார்கள்?” என்று வினவுகிறான்.
“மேதாவி அண்ணா, மிதுனபுரிக்காரியின் கோபத்துக்குத் தப்பி இங்கே வந்திருக்கிறது! புரிகிறதா? இதை எந்த தேசத்து மன்னர் ஏவி விட்டிருந்தாலும், அவர்கள் எவ்வளவு பராக்கிரமசாலிகளானாலும், மிதுனபுரி எப்போதும் தலை வணங்காது. அவர்கள் சுதந்திரமானவர்கள்; நண்பருக்கு நண்பர்கள்!”
விஜயன் இவ்வாறு கூறுவது அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.
– தொடரும்…
– வனதேவியின் மைந்தர்கள் (நாவல்), முதல் பதிப்பு: ஆகஸ்டு 2001, தாகம், சென்னை.