வனதேவியின் மைந்தர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 23, 2024
பார்வையிட்டோர்: 1,048 
 
 

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம்-16

சங்கொலி தீர்க்கமாகக் கேட்கிறது. டமடமடம வென்று பறை கொட்டும் இணைந்து கேட்கிறது.

“என்ன சமாசாரம்? ஏதேனும் புலியைக் கொன்றார்களா? காட்டுப் பன்றி வீழ்ந்ததா? விருந்துக் கொட்டா? வெற்றி விழாவா? எதற்கு இப்படிக் கொட்டுகிறார்கள்?…”

பெரியன்னையின் முகத்தில் ஒரு புறம் மகிழ்ச்சியொலி, ஒரு புறம் வெறுப்பு நிழலாடுகிறது. காதுகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“இவர்கள் சந்தோசம் தலைகால் புரியவில்லை என்றால் பறை கொட்டித் தீர்த்து விடும்…”

அருகே ஆரவாரங்கள் வருகையில், கார்காலம் முடிந்த பின், பசுமையில் பூரித்துத் தாய்மைக் கோலம் காட்டும் இயற்கையன்னையின் மாட்சி கோலோச்சும் சூழல் வரவேற்பளிக்கிறது.

“வாழ்க! சத்திய முனிவர் வாழ்க! நந்தபிரும்மசாரி வாழ்க!” தலைமேல் வாழைக்குலைகள் தெரிகின்றன; கருப்பந்தடிகள்; கனிகள், தானிய கூடைகள்…

ஓ… நந்தசுவாமியின் ரீம்… ரீம்… சுருதி ஒலிக்கிறது.

பூமகள் விரைந்து அவர்களை எதிர்கொள்ளச் செல்கிறாள்.

நந்தமுனி – உயர்ந்து உலர்ந்த மேனியுடன் – அருகே குட்டையாகக் கறுத்து குறுகிய சத்திய முனி… முடிமழித்த கோலம், இடையில் வெறும் கச்சை, முடியில் நார்ப்பாகை சுற்றியிருக்கிறார்.

பூமகள் குடுவையில் நீர் கொணர்ந்து வந்து அவர்களுடைய பாதங்களைக் கழுவி, ஆசி பெறுகிறாள். அவர்கள் உள்ளே பெரிய கொட்டகைக்கு வருகிறார்கள். பெரியன்னையினால் எழுந்திருக்க முடியவில்லை. சத்தியமுனியும், நந்தமுனியும் அவள் பாதங்களில் பணிந்து வணங்குகின்றனர்.

“தாயே, நலமாக இருக்கிறீர்களா?”

“இருக்கிறேன் சாமி. இது எனக்கு இன்னொரு பிறவி, மூன்றாவது பிறவி. இன்னும் எத்தனைப் பிறவிகள் சேர்ந்து இதே உடலில் வாழப் போகிறேனோ?”

“அன்னையே, ஒவ்வொரு பிறப்புக்கும் ஏதோ ஒரு காரண காரியம் இருக்கிறது. வாழ்க்கையில் நேரும் துன்பங்கள், முட்டல்கள், முடிச்சுகள், எல்லாவற்றையும் கடந்து, பிறவியின் பயனை விளங்கிக் கொள்வதுதான் வாழ்க்கையே. முன்னறியாத இடத்தில் அடி வைக்கும் போது, புதுமையின் கிளர்ச்சி. ஒரு புறம் துன்பமும் உண்டு; இன்பமும் உண்டு. துன்பங்களைத் தாங்கிக் கடக்கும் சக்தியும் எழுச்சியும் உள்ளத்தின் உள்ளே ஓர் இனிய அநுபவத்தைத் தரும். மேலெழுந்த வாரியான புலனின்பங்களில், சுயநலங்கள், பேராசைகள், அகங்காரங்கள் பிறக்கக்கூடும். அதுவே, அறியாமையாகிய திரையைப் போட்டு, உள்ளார்ந்த இன்பங்கள் எவை என்ற தெளிவில்லாமல் மறைத்து விடும்…”

சத்தியர் சொல்லிக் கொண்டே போகிறார்.

“சாமி, இங்கே தத்துவங்களுக்கு இடமில்லை; பொழுதுமில்லை. இந்த மக்கள், உடல் வருந்த உழைத்தாலே உணவு கொள்ளலாம். அந்த நிலையில் ஆடியும் பாடியும் மகிழ்வதே இன்பம். இந்தப் பூச்சிக்காட்டு நச்சுக் கொட்டை மக்களை இந்நாள் எப்படி நல்வழிக்குக் கொண்டு வந்து விட்டீர்கள்? சுவாமி, இவள்… இவள், இந்தப் பிறந்த மண்ணுக்கே வந்து சேருவாள் என்று நான்… எதிர்பார்த்தேனா?”

முதியவள் பூப்பிரிவது போன்று துயரத்தை வெளிப்படுத்தும் போது, பூமகள் வெலவெலத்துப் போகிறாள்.

சத்தியமுனி சற்றும் எதிர்பாரா வகையில் குனிந்து அவள் முதுகைத் தொட்டு, “வருந்தாதீர் தாயே! எல்லாமே நன்மைக்குத்தான் நடக்கிறது. நீங்கள் பேறு பெற்றவர்கள். துன்பங்கள் மனங்களைப் புடம் போட்டுப் பரிசுத்தமாக்குகின்றன. அதன் முடிவில் எய்தும் மகிழ்ச்சியில் களங்கமில்லை. மனித தருமம் என்பது, எல்லா உயிர்களும் நம்மைப் போன்றவையே என்ற ஒருமைப்பாட்டில் தழைக்கக் கூடியது. மனித சமுதாயத்தைக் கூறு போடும் எந்த தருமமும் எப்போதும் நிலைத்திருக்க முடியாது. மேலோட்டமாக எல்லாம் நன்மை போல் தெரிந்தாலும் உள் மட்டத்தில் கொந்தளிப்பும் அமைதியின்மையும் இருந்து கொண்டே இருக்கும். இந்தக் கானக சமுதாயத்தில், எல்லா உயிர்களும் நம் போல் என்ற இசைவை, இணக்கத்தைத் தோற்றுவிப்பதில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள்…”

அவர்களெல்லாரும் அமர, பாய்களை விரிக்கிறாள் லூ. யாவாலி ஆசிரமத்தைச் சேர்ந்த பிள்ளைகளும், பெண்களும் கொண்டு வந்த வரிசைகளை வைத்துவிட்டு, இரண்டு பிள்ளைகளையும் சூழ்ந்து கொள்கின்றனர்.

அப்போது, மாதுலனின் குழலோசை கேட்கிறது.

சம்பூகன் மூங்கில்களைத் தேர்ந்து, தீக்கங்கு கொண்டு கட்டுத் துவாரங்களை உருவாக்குகிறான்.

ஒவ்வொன்றாக மாதுலன் ஊதிப் பார்க்கிறான்.

பூமகள் குழலூதும் இசைஞர்களைப் பார்த்திருக்கிறாள், கேட்டிருக்கிறாள். ஆனால் அந்தக் குழலில் இசையை நாதமாக்க, ஒரு கலைப் பொருளாக்கும் அரிய செய் நுட்பத்தை இப்போதுதான் பார்க்கிறாள். நூல் பிரிசலை முறுக்கேற்றுவது; அதை ஆடையாக நெய்யும் நேர்த்தி, இயற்கை இந்த உலகில் எத்தனை இன்பங்களை இசைத்திருக்கிறதென்று எண்ணியவாறு, அவள் நிற்கையில் சத்தியமுனி கேட்கிறார்.

“இந்த அமுத இசையை இங்கே யார் இசைக்கிறார்கள்? நான் இந்தக் கானகம் விட்டுச் சென்று ஐந்து கோடைகளும் மாரிக்காலங்களும் கழிந்து விட்டன. எனக்குத் தெரிந்து குரலெடுத்து நந்தன் பாடுவது அமுத கானமாக இருக்கும். சம்பூகன்… சம்பூகனோ?”

“இப்போது ஊதுபவன் சம்பூகனில்லை சுவாமி. ஆனால் அவன் தான் இதை ஊதும் மாதுலனுக்குக் குழலை வாயில் வைத்து இசைக்கப் பயிற்றியவன்…”

நந்தபிரும்மசாரி இசை எங்கிருந்து வருகிறது என்று தேடுபவர் போல் பார்க்கிறார்.

“மாதுலன்… நெய்கியின் நான்காவது பிள்ளை. இதன் அப்பன் வேதவதியை வெள்ளத்தில் கடக்கும் போது, போய்விட்டான். முதல் மூன்று பெண்களில் ஒன்று மரித்துவிட்டது! இது வனதேவியின் வரமாக வந்திருக்கிறது. யாரேனும் அந்நியர் வருகிறார் என்றால் வெட்கப்பட்டு மறைவான்… அடி, சோமா, வாருணி! அவன் இங்கே தான் இருப்பான், அழைத்து வாருங்கள்!” என்று பெரியன்னை விவரிக்கிறாள்.

“அற்புதம். பூச்சிக்காட்டில் ஊனை உருக்கும் அமுத இசை பொழியும் சிறுவன்…” என்று அவர் வியந்து கொள்கிறார்.

பூமகளுக்கு வானிலே ஏதோ பறவைகள் பறப்பது போலும், வண்ண மலர்க் கலவைகள் வான்வெளியெங்கும் நிறைவது போலும், அமுதத்துளிகளை உடலின் ஒவ்வோர் அணுவும் நுகருவது போலும் தோன்றுகிறது. இந்தப் பண்… எப்படிப் பிறக்கிறது?… என்னென்னவோ கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், சொற்கள் உருவாகவில்லை. இங்கே பெண் விருப்பப்படி மகவைப் பெற்றுக் கொள்கிறாளே! யாரும் யாரையும் ஆக்கிரமிக்கும் இயல்பே இல்லை. மரங்கள் பருவத்தில் பொல்லென்று பூப்பது போல் அது இதழ் உதிர்த்துப் பிஞ்சுக்கு இடமளிப்பது போல் எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். போட்டியும், பொறாமையுமாக நஞ்சை வளர்த்துக் கொள்ளும் பெண் – ஆண் உறவுகள் இல்லை என்று காண்கிறாள். ‘நச்சுக் கொட்டை’கள் இருந்தன. அதை அவர்கள் தங்கள் சமுதாயத்தை அடிமையாக்காமல் காத்துக் கொள்ளவே பயன்படுத்தினார்கள். சத்தியமுனியின் வெளிச்சத்தில், அந்த அச்சமும் கரைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். மாதுலனை வாருணி அழைத்து வருகிறாள். அவள் அவன் தமக்கை. சிறுவனை அழைத்து முனிவர் அருகில் இருத்திக் கொள்கிறார். பிறகு அவன் கைக் குழலை வாங்கித் தம் இதழ்களில் வைத்து ஊதி ஒலி எழுப்புகிறார். நாதஒலி, ஓம் என்ற ஓசை போல் சுருள் அவிழ மெல்ல ஒலிக்கிறது! அப்போது, வனதேவியின் இரு பிள்ளைகளும் ஓடி வந்து முனிவரிடம், எனக்கு, எனக்கு என்று அந்தக் குழலைக் கேட்கிறார்கள்.

மாதுலனின் கச்சையில் இன்னமும் இரண்டு குழல்கள் இருக்கின்றன. முனிவர் அவர்கள் இருவரையும் தம் இரு மருங்கிலும் அமர்த்திக் கொண்டு குழல்களைக் கொடுக்கிறார்.

அவர்கள் இதழ்களில் வைத்து ஊதத் தெரியாமல் உண்ணும் பண்டம் போல் ரசிக்கிறார்கள்.

எல்லோருக்கும் சிரிப்பு வருகிறது.

சத்தியமுனிவர் அதை வாங்கி ஊதிக் காட்டுகிறார்.

உடனே பிடித்துக் கொண்டு இருவரும் வினோதமான ஓசைகளை எழுப்பி முயற்சி செய்கிறார்கள்.

பூமகள் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறாள்.

“சுவாமி! இந்தப் பிள்ளைகளைத் தாங்கள் ஏற்று, பூமியின் மைந்தர்கள் ஆக்க வேண்டும். வில்-அம்பு என்ற உயிர் வதைக் கருவிகளை இவர்கள் ஏந்துவதை விட, இவ்வாறு இசைபாடும் பாணராகச் சுதந்தர மனிதர்களாக உலவ வேண்டும். அன்றாட நியமங்களில் ஆதிக்கங்களும், கொலைச் செயலும் தலைதூக்கும் சூழல் இவர்களுக்கு அந்நியமாகவே இருக்கட்டும்… இங்கே, பச்சை மரங்களை யாரும் வெட்டுவதில்லை. வனவிலங்குகள் கூட இங்கே சத்திய நெறிக்கு உட்பட்டு இயங்குகின்றன. இப்பிள்ளைகளின் இயல்புக் குணங்கள் தலைநீட்டாத வகையில், இவர்களைத் தாங்களே ஏற்க வேண்டும். தளிர்களைக் கசக்குவதும், சிற்றுயிர்களைத் துன்புறுத்துவதும், ஈனக்குரலில் மகிழ்ச்சி கொள்வதும் என்னை மிகவும் சஞ்சலப்படச் செய்கின்றன. இவர்களுக்கு அறிவுக் கண்ணோடு, மனிதக் கண்களையும் திறந்துவிட வேண்டும் சுவாமி! நந்தமுனியும் பெரியன்னையும் குலம் கோத்திரம் அறியாத என்னை, அரச மாளிகைக்கு வந்து பேணினார்கள். அந்த நியமங்களுக்குள் நான் தொலைந்து விடாமல் மீட்டார்கள். இன்றும் இந்தக் கானகமே என் தாயகம்; இவர்களே என் மக்கள், உறவினர், எல்லாம், எல்லாம். எனவே என் பிள்ளைகளையும் இப்படியே தாங்கள் காத்தருள வேண்டும்!” என்று உணர்ச்சிவசப்பட்டு அவர் பாதங்களில் பணிகிறாள்.

அவர் அவளை மெல்ல எழுப்புகிறார்.

“மகளே, கவலைப்படாதே. நந்தன் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இங்கே அக்கரைக்கும் இக்கரைக்கும் முன்பு பகைமை இருந்தது. ஆனால் இவர்கள் சுயச்சார்பு பெற்றுவிட்டார்கள். தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவேற்றிக் கொண்டு கலந்த வாழ்வும் தெரிந்து கொண்டுவிட்டார்கள். மிதுனபுரிச் சாலியர், வேதபுரிச் சாலிய வணிகர், எல்லோரும் இங்கு வருகிறார்கள். இவர்களும், வனதேவியைப் பாலித்து அவள் கொடைகளை ஏற்று முரண்பாடில்லாமல் வாழ்கிறார்கள். பிறரை வருத்தாமல் இருப்பதுதான் இங்கு முதல் பாடமாக இருந்து வருகிறது… மகளே, நீ தைரியமாக இங்கு இருக்கலாம்…”

பிள்ளைகளைத் தழுவி உச்சிமோந்து, அவர்களிடம் ஆளுக்கொரு வாழைக்கனியைச் சீப்பிலிருந்து பிய்த்துக் கொடுக்கிறார்.

அப்போது எங்கோ மந்தையில் ஏதோ ஒரு தாய்ப் பசு “அம்மா…” என்று துன்பக் குரல் கொடுக்கும் ஒலி செவிகளில் விழுகிறது.

பூமகள் வில்லிலிருந்து விடுபடும் அம்பு போல் முற்றம் கடந்து, புதர்களுக்குள் புகுந்து குரல் வந்த திசை நோக்கி ஓடுகிறாள்.

புற்றரையில் ஐந்தாறு பசுக்கள் மலங்க மலங்க நிற்கின்றன. குரல் கொடுக்கும் பசுவின் கண்களில் ஈரம் தெரிகிறது.

ஆங்காங்கு மேயும் கன்றுகள், காளைகள் அஞ்சினாற் போல் மருண்டு வருகின்றன. அப்போதுதான் அவள் பார்க்கிறாள், கன்றொன்றைக் கவர்ந்து, ஒருவன் செல்வதும், சம்பூகன் துரத்திக் கொண்டு ஓடுவதும் தெரிகிறது.

“ஓ, இப்போதுதானே முனிவர், பகையும் வன்முறையும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்?”

அப்போது, சம்பூகன், கன்றைத் திரும்பத் தூக்கிக் கொண்டு திரும்புகிறான்.

அவன் எய்த அம்பு கன்றின் மேல் தைத்து இரத்தம் பெருகுகிறது.

“சம்பூகா? யார் செய்த வேலை இது?”

“ஒன்றுமில்லை தாயே! எதிர்க்கரையில் யாரோ பெரியவர்கள் வந்திருக்கிறார்கள். சீடப்பையன் ஒருவன் இங்கு வந்து விருந்துக்கு இதைக் கவர்ந்து செல்லத் துணிந்து அம்பெய்திருக்கிறான். அதே சாக்காகத் தூக்கிச் சென்றான். நான் நல்ல நேரமாகப் பார்த்தேன். அதே அம்பைப் பிடுங்கி எறிந்துவிட்டு மீட்டு வருகிறேன்.”

அதன் தாயிடம் விட்டுவிட்டு அது காயத்தை நக்குவதைப் பார்க்காமல், ஓடுகிறான். மூலிகைகள் எவற்றையோ தேடிக் கசக்கி வந்து அப்புகிறான்.

சற்றைக்கெல்லாம் கன்று தாயின் மடியை முட்டிப் பால் குடிக்கிறது. பூமகளுக்கு உடலே துடிக்கிறது.

அவள் இருந்திருக்கும் இத்தனை நாட்களில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததில்லை. இப்போது சத்தியமுனிவர் வந்து அடி வைத்ததும் இது நிகழ வேண்டுமா?

பசுவும் கன்றும் முற்றத்தில் வந்து நிற்கின்றன.

சம்பூகன் முனிவரைப் பணிந்து வணங்குகிறான்.

“மகனே, மறுபடியும் தொந்தரவா?..”

“இல்லை சுவாமி. தாய்ப்பசு குரல் கொடுத்ததும் நான் பார்த்துவிட்டேன். காயத்துக்கு மருந்து போட்டேன்.”

“அதுசரி, வேம்பு வன ஊரணிக் கரைக்குப் போயிருக்கிறாயா?”

“இல்லை சுவாமி!”

“அது குன்றின் மேலிருக்கிறது. அங்கு அபூர்வ மூலிகைகள் உண்டு. நச்சரவங்களும் மிகுதி. அங்கு நாம் சென்று சில மூலிகைகள் கொண்டு வருவோம். மாதுலனின் பார்வை வருமா என்று பார்ப்போம்…”

நந்தசுவாமி ஒற்றை நரம்பு யாழை மீட்டுகிறார்.

பாட்டுப் பிறக்கிறது.

“வானரங்கின் திரைவில குதாம்!
வானும் மண்ணும் துயில் நீங்குதாம்
வனதேவி கண் விழிக்கிறாள்…
வானும் மண்ணும் கண்விழிக்குதாம்.
வனதேவி அசைந்து மகிழ்கிறாள்
வானும் மண்ணும் இசைந்தியங்குதாம்
வனதேவி சாரல் பொழிகிறாள்…
வானும் மண்ணும் புதுமை பொலியுதாம்.
வனதேவி சுருதி கூட்டுறாள்…
வானும் மண்ணும் குழலிசைக்குதாம்…
வனதேவி யாழிசைக்கிறாள்…
வானும் மண்ணும் எழில்துலங்குதாம்…”

நந்தமணி கையில் ஒற்றை நாண் யாழுடன் எழுந்தாடுகிறார். பிள்ளைகள் கைகொட்டி ஆடிப்பாடுகின்றனர்.

“வனதேவி எங்கள் வனதேவி.
அவள் சுவாசம் – எங்கள் பசுமை
அவள் மகிமை – எங்கள் மகிமை.
ஓம் ஓம் ஓமென்று புகழ்ந்தாடுவோம்.
ஆம் ஆம் ஆமென்று குதித்தாடுவோம்…
துன்பமில்லை – துயரமில்லை.
அன்பு செய்வோம் – இன்பமுண்டு…
வனதேவி – எங்கள் வனதேவி…”

கன்றும் பசுவும் முற்றத்தில் அமைதியாக இக்காட்சியைக் காண்கின்றன. பூமகள் துயரங்கள் விலகிவிட்டதாக மகிழ்ச்சி கொள்கிறாள். பிள்ளைகள், கூடியிருந்த பெண்கள், எல்லோரும் உணவுண்டு, இளைப்பாறும் நேரம் அது.

புதர்களுக்குப் பின் சலசலப்பு… யார் யாரோ பேசுங் குரல்கள் செவியில் விழுகின்றன.

லூ வாய் மூடாமல் கண் மூடி உறங்குபவள், திடுக்கென்று எழுந்திருக்கிறாள். வாருணி எழுந்து ஓடுகிறாள்.

“சாமி யார் யாரோ வராங்க! யாரோ அந்தப் பக்கமிருந்து வாராங்க!”

“யாரு?”

சம்பூகன் முற்றம் தாண்டிச் செல்கிறான். பட்டுத் திரித்துக் கொண்டிருக்கும் நந்தசுவாமியும், பட்டிலவ மரத்தடியில் பஞ்சு திரிக்கும் சத்தியமுனியும் என்ன கலவரமென்றறிய விரைந்து முற்றத்துக்கு வருகிறார்கள். பூமகள் உணவுண்ட இடத்தைச் சுத்தம் செய்ய முனைந்திருக்கிறாள்.

“என்ன? வேதபுரிச் சாலியரா?…”

இல்லை. வந்தவர்கள் முப்புரிநூல் விளங்கும் அந்தணப் பிள்ளைகள். ஒரு சிறுவனைத் தூக்கி வந்திருக்கிறார்கள். அவன் விலாவில் அம்பு பாய்ந்து இருக்கிறது.

பூமிஜா திடுக்கிடுகிறாள்.

“யார்… யார் செய்தது?”

“இந்தக் குலம் கெட்ட பயல் இப்படி பிரும்மஹத்தி செய்திருக்கிறான்…” சம்பூகன் அருகில் சென்று அந்த அம்பை எடுக்கிறான். காயம் பெரிது இல்லை. அது பேருக்குத் தொத்தி, சிறிது காயம் விளைவித்துக் குருதிச் சிவப்பு தெரிகிறது.

“இதோ, இவன், இந்தச் சண்டாளன் செய்தான்!” என்று ஆங்காரத்துடன் கத்துகிறான் பெரியவனாகத் தோன்றும் அந்தணன். பூமிஜா குலை நடுங்க, செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

அத்தியாயம்-17

நகரமெருகு தெரியும் தோற்றம். அரையாடை, மேலாடை என்று விள்ளும் நாகரிகம். செவிகளில் குண்டலங்கள். குடுமி விளங்கும் நெற்றி பளபளக்கும் சினம். அடிக்கொருமுறை சண்டாளர், சண்டாளர் என்ற சொற்கள் தெரிக்கின்றன. சண்டாள குரு, சண்டாள முனி… அந்தணப் பிள்ளையை அம்பெய்திக் கொல்ல எத்தனைத் துணிச்சல்? தருமங்கள் செத்துவிட்டன. கேட்பார் இல்லை! இவர்கள் வேதமோ தவம், கவிபாடுவதும் தர்மதேவதையைக் காப்பாற்றவா? சத்தியமுனிக்கு முகம் சிவக்கிறது.

முன்னே வருகிறார்.

“அந்தணப் பிரபுக்களே! எங்கள் யாரிடமும் இதுபோன்று நுனியில் இரும்பு முனை கூர்த்த அம்பே இல்லையே? ஏன் அபாண்டமாகப் பழி சுமத்துகிறீர்கள்? எங்கள் சம்பூகனுக்கு, வில்லும் அம்பும் பரிசயமே இல்லையே? அவனுக்கு மூலிகைகள் தாம் தெரியும். அவன் உயிர்களைப் போக்க மாட்டான். அவன் மட்டுமல்ல, நாங்கள் உயிர்களை நேசிப்பவர்கள்! உங்கள் எல்லை கடந்து, பிள்ளைகள் கன்றைக் கொண்டு செல்ல, பசுக் கூட்டத்தில் அம்பெய்தியவர் யார்?…”

சத்தியமுனியின் இந்த விவரம் அவர்களைப் பின்னும் துள்ளச் செய்கிறது. “அது எங்கள் பசு; கன்றுகள். நீங்கள் தாம் எங்கள் பசுக்களைக் கவர்ந்து செல்வது வழக்கம். அரசரிடம் தானமாகப் பெற்ற பசுக்கள் இங்கே எப்படி வந்தன?…”

“எப்படி வந்தனவா? எங்கள் பசுக்கள் வனதேவியின் கொடை! நாங்கள் பசுங்கன்றுகளை எரியில் சுட்டுத் தின்பதில்லை!…” நந்தசுவாமிக்கும் முகம் சிவக்கிறது.

“பேசாதீர்கள்! நரமாமிசம் தின்னும் நீசகுலத்துக்குப் பரிந்து வரும் நீங்களும் அதே வழி தானே!… இதற்கெல்லாம் இப்படி முடிவு கட்ட முடியாது. எங்களுக்கும் தெரியும்! கோசல இளவரசர் மகுடாபிஷேகம் செய்து கொண்டு இராவணனைக் கொன்று அங்கே தருமராச்சியம் செய்யச் சென்ற போது வழங்கிய பசுக்கள் எங்களிடம் உள்ளன. அதே கோசல மன்னரிடம் உங்கள் அதர்மச் செயல்களை, அந்தணச் சிறுவனை அம்பால் தாக்கியதைச் சொல்லி நியாயம் கேட்போம்!” என்று சூளுரைத்துவிட்டு அவர்கள் செல்கின்றனர்.

பூமிஜா இடி விழுந்தாற் போல் நிலைகுலைந்து போகிறாள்.

தான் நின்ற இடத்தில் உள்ள இளமரத்தைப் பற்றிக் கொள்கிறாள். புதிய மாவிலைகள் அவள் முடியில் படுகின்றன.

அப்படி நடக்குமோ? தீங்கு வருமோ? இதெல்லாம் ஏன் நேருகின்றன.

“சம்பூகா? என்னப்பா நடந்தது? நம் பிள்ளைகள் பசுக்களைக் கவர்ந்து வந்தனரா?” என்று சத்தியர் கேட்கிறார்.

“சுவாமி, நம்மிடம் பசுக்கள் பெருகுகின்றன. ஏனென்றால் அவை கொல்லப்படாதவை என்று தாங்கள் தாமே சொல்லி இருக்கிறீர்கள்? அவர்களுடைய பசுக்கூட்டங்கள் பெருகுவதில்லை. இது வீணான வாதம்…” என்று நந்தமுனி விளக்குகிறார்.

சம்பூகன் முன் வந்து நடந்ததை விள்ளுகிறான். அவர்கள் அம்பெய்தார்கள். ஆறு தாண்டிப் படகில் வந்தார்கள். அம்புபட்ட கன்றைத் தூக்கிச் செல்கையில் பசு கதறியது. அவன் சென்று தைத்த அம்பை வீசி எறிந்து விட்டு, கன்றை மீட்டு மருந்து போட்டான். இதுதான் நடந்தது. அவன் யாரையும் தாக்கவில்லை.

பூமகளுக்குப் புரிகிறது. அந்த அம்பு விழுந்த வேகத்தில் அந்தப் பையனின் மீது காயம் ஏற்படுத்தி இருக்கலாம். இல்லையேல் இதை ஒரு காரணமாகக் காட்ட அவர்களே காயம் செய்து கொண்டிருக்கலாமோ?…

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, பூமகளுக்கு எப்போது என்ன வருமோ என்ற அச்சம் பற்றிக் கொள்கிறது. வழக்கம் போல் தான் எல்லாம் நடக்கின்றன. இவர்கள் தங்கி இருக்கும் குடில்களை வேடுவப் பிள்ளைகள் புதுப்பிக்கிறார்கள். அந்த நாட்களில் பெரியன்னையுடன் பூமகள் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வாழை வனத்துக்கப்பால் சத்திய முனிவர் இருக்கும் யாவாலி ஆசிரமம் செல்கிறார்கள். அங்கே புதிதாக நீண்ட சதுரங்களாகக் கூடங்கள், புதிய கூரை வேயப்பட்டு, சாணம் மெழுகப்பட்டு பச்சென்று துலங்குகின்றன. தீ அணையாமல் இருக்க, தனியாக ஒரு குடிலில் குண்டம் இருக்கிறது. அங்கே அவள் பல பழைய பொருட்களைப் பார்க்கிறாள். அரணிகடையும் கோல்… பழைய கல் உரல்… எல்லாம் அவர் தாய் பயன்படுத்திய பொருட்களாம்.

அன்னையின் சமாதி மேடாக இருக்கிறது. அதைச் சுற்றிலும் துளசிவனம். அங்கு அமர்ந்து பிள்ளைகள் செங்கதிர்த் தேவனை, தீக்கதிரை, காற்றை, விண்ணை, மண்ணைப் புகழ்ந்து பாடல்களை இசைக்கிறார்கள். கூடவே இவள் பிள்ளைகளும் மழலை சிந்துகின்றன. பின்னே ஓர் அழகிய தடாகம் இருக்கிறது. அதில் நீலரேகை ஓடும் தாமரைகள் மலர்ந்திருக்கின்றன.

அந்தத் தடாகத்தில் இருந்து நீர் கொண்டு வரும் போது ரீமு என்ற மூதாட்டி வருகிறாள். உடல் தளர்ந்து முடி நரைத்துக் கண்கள் சுருங்கி இருந்தாலும் பேச்சுத் தெளிவாக இருக்கிறது.

“குழந்தே… நீதான் வனதேவியா?… உன் பிள்ளைகளா இவர்கள்? ராசகுமாரர்களைப் போல் இருக்கிறார்கள். நீயும் ராசகுமாரிதான். இதே இடத்தில் முன்னே குருமாதாவாக ஒரு ராசகுமாரி வந்தாள். அவள் உன்னைப்போல் இருப்பாள்… அப்போதுதான், எனக்கு நினைப்பிருக்கிறது. ராசா வந்து இங்கே முதல்ல உழவோட்டுறார். நாங்கல்லாம், இங்கே ஏர் செல்வதை வேடிக்கை பார்த்து நிப்போம்… ராசா வராரு. ஆறுதாண்டி வராங்க. சனமோ சனம். ராசா தங்க ஏர் புடிச்சி உழுறப்ப…”

பூமகள் அந்தக் கிழவியின் முகத்தை உன்னிப்பாகப் பார்க்கிறாள். “பொட்டி… பொட்டி வந்திச்சி. அதில், பட்டுத்துணி வச்சி ஒரு அழவான புள்ள… ராசா கொண்டுட்டுப் போனாரு. அப்பல்லாம் அந்தக்காடு இந்தக்காடுன்னு போக்குவரத்தில்ல. இங்க வந்து நாங்க பாக்குறப்ப, குருமாதா இல்ல… அவுங்க மனிசப் பெறப்பே இல்ல. தேவதை வந்திருந்ததுன்னு சொல்லுவோம். அந்த தேவதைதான் மறுக்க புள்ளையா பூமிக்குள்ளாற போயிட்டாங்கன்னு சொல்லிக்கிட்டோம். வனதேவிக்குப் பூசை வச்சோம்… உன்ன மாதிரிதா அவங்க வந்தாங்க… நா ரொம்ப சின்னவ… இத இங்க உக்காந்து, பூவெல்லாம் பறிச்சி மாலை கட்டி எனக்குப் போடுவாங்க…”

அவளுக்கு உடல் சிலிர்க்கிறது.

“குருமாதான்னு சொன்னா… யாரு?”

“இந்த சாமிதா, இங்கக் கூட்டி வந்தாங்க. அவங்க தாய் சொல்லி இருந்தாங்க… வாழை வனத்தில் யானை வந்தது. அது மிதிச்சி அடக்கமாயிட்டாங்க. இங்கதா பொதச்சாங்க. எனக்கு அதெல்லாம் நினைப்பில்ல… சாமி வந்த பிறகு தான் நாங்கல்லாம் இங்க ஒண்ணா உக்காந்து பாடுவோம்…”

அன்னையின் குரல் கேட்கிறது. பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வருகிறாள்.

“யாரு… கிழவி?… நீங்க கருப்பந்தடி பயிர் பண்ணி இடிச்சுச்சாறு பண்ணி புளிப்பேத்தி பானகம் காய்ச்சுறீங்க?” என்று கேட்கிறாள். அவள் பொக்கைப் பல் தெரியச் சிரிக்கிறாள்.

“ஆமாம் பெரியம்மா… முன்னெல்லாம் இலுப்ப பூ நொதிக்க வச்சி எடுப்போம். இப்ப இதும் செய்யிறாங்க…”

“அதான் நீ குடிச்சிட்டு வந்து கதை சொல்லுற, நல்லாக் கதை சொல்லுவா.”

“எம்புள்ளங்களும் இதான் சொல்லும்…” முகமலர்ந்த சிரிப்பு…

“கருப்பந்தடி இருக்கா? ஒடிச்சி, இந்தப்புள்ளங்க பல்லுல கடிக்கக் கொண்டாயேன்?”

கிழவி திரும்பிப் போகிறாள்.

தன்னுடைய பிறப்பின் இரகசியம் தெரியக்கூடாதென்று இந்த அன்னை பாதுகாக்கிறாளோ?…

“பெரியம்மா அவளை ஏன் அனுப்பினீர்கள்? அவள் குருமாதா? தேவதை என்றெல்லாம் என்ன பேசினாள்?”

“குருமாதா என்று சொன்னது, குருமாதாவை – யாவாலி அம்மை. அடிமையின் மகன் குருவைத் தேடி குருகுல வாசம் முடித்துத் திரும்பி வரும் வரை இருந்தாள். அவர் வருவதற்குள் யானை மிதித்து அடக்கமானாள். அந்தக் கதையைச் சொன்னாள். குருமாதாவே பிறகு அரசர் மாளிகையில் வளர, பூமிக்குள் குழந்தையாகச் சென்றாள் என்று கதை சொல்கிறாள்…”

“பெரியம்மா, நீங்களும் இந்த இடத்துக்கு உரியவரில்லை. நீங்கள் எப்படிக் கானகத்துக்கு வந்தீர்கள்?”

“நீ எப்படி வந்திருக்கிறாயம்மா?…”

மெல்லிதழ்கள் துடிக்கின்றன. அவளைத் தழுவிக் கொள்கிறாள்.

“அரச மாளிகையில் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணைச் சுற்றியும் இப்படிச் சிலந்தி வலைகள் பின்னப்பட்டிருக்கும். சில சமயங்களில் ஒட்டடைகள் களையப்படும். இப்படிக் கானகத்தில் வந்து விழுபவர்கள் உண்டு. யாவாலி பட்டயம் போட்ட அடிமை. உத்தமமான ஒரு பிள்ளையை அவள் உருவாக்கினாள். அவன் ராச ஊழியம் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை; அரசனாக வேண்டும் என்றும் நினைக்கவில்லை; மனிதனாக்க வேண்டும்; அடிமைக்குலம், இழிக்குலம் என்ற நாண் அறுபட வேண்டும் என்று எண்ணினாள். முப்புரிநூலுக்கு இவனும் தகுதியாக வேண்டும் என்று வளர்த்தாள். அந்த மகன் முப்புரிநூல் இல்லாமலே, நல்ல மனிதர்களை உருவாக்குகிறான். முப்புரிநூலே அகங்காரத்தின் சின்னமாகி விட்டது. மகளே…”

பூமகள் பேசவில்லை.

தோல் மேடிட்ட இரணங்களைக் கிளறுவதில் என்ன பயன்?

ஏனெனில் இந்த இரணங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மிக ஆழமான அடித்தளம் கொண்டிருக்கின்றன. அவற்றை அசைப்பது, எளிதல்ல. இந்த ஆசிரமம் அவளுக்கு மிகவும் இசைந்ததாக, அச்சமே இல்லாத பாதுகாப்புடன் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு திங்கள் – மாறுதலுக்கு என்று வந்தவர்கள், குளிர்காலம் முழுவதும் தங்கி இருக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும், இங்கேயுள்ள வேடுவப் பிள்ளைகளுடனும் பெண்களுடனும் ஓடியாடி மழலை பேசி, பாடி, அந்தச் சூழலுக்கே உயிரூட்டுகிறார்கள்.

இளவேனில் துவக்கத்தில் புதிய தளிர்கள், புதிய அரும்புகள் கானகச் சூழலையே மாற்றுகின்றன. இணைதேடும் பறவைகள்; விலங்கினங்கள்… மண்ணே புதிய மணம் கொண்டு வீசுவது போன்ற மலர்கள் இதழ்களை உதிர்க்கின்றன. நள்ளிரவில் மலர்ந்து மணம் சொரிந்துவிட்டு, காலையில் மண்ணில் விழும் மலர்களை எடுத்துக் காலில் மிதிபடாதபடி பூமகள் சேகரிக்கிறாள். ‘நீங்கள் இந்த மனிதர்கள் காலடி படாத இடங்களில் உதிரக் கூடாதா?’ என்று ஒவ்வொரு மலரையும் கண்களில் ஒத்திக் கொள்கிறாள். வழித்தடம் முழுதும், பவள மல்லிகை, மரமல்லிகை மலர்கள் பொல்லென்று உதிரும் மாட்சியை அவள் இதுபோல் பார்க்கவில்லையா?…

கானகம் புதிதில்லை என்றாலும் அப்போது புதியதொரு பட்டாடை கொண்டு பழைய நினைவுகளை மூடிவிட்டுப் புதியவளாக இயங்குவதாக உணருகிறாள்.

ஒருநாள், முற்பகலில் அவள் இதுபோன்று மலர் சேகரிக்கும் நேரத்தில், திடுமென்று கருமையாகத் திரண்ட வானில் பளீரென்று மின்னுவது போல் ஒரு குலுக்கல் அவளுக்கு ஏற்படுகிறது. ஓர் அதிர்வு? என்ன ஓசை? இடியோசையா? இல்லையே? வில்லில் நாணேற்றி விடும் ஓசையா? அந்நாள் அவள் தந்தை பாதுகாத்து வைத்திருந்த வில்லை எடுத்து நிறுத்தி நாணை இழுத்து எழுப்பிய ஓசை… இப்படித்தானே இருந்தது? அவள் உள்ளமும் உடலும் பொல்லெனப் பூரித்த உணர்வு மறக்கக் கூடியதா என்ன? வானமே பூச்சொரிந்தாற் போல் உணர்ந்தாள். சுரமை, ஊர்மி எல்லாரும் அவளைக் கேலி செய்தார்கள். நாணம் கொண்டு முகம் மறைத்தாள்.

அவளுக்கு மணமாலையை உறுதி செய்த ஒலி அது. அடுத்து, அவள் எப்போது அந்த ஒலியைக் கேட்டாள்? காட்டில் இளையவனை, ‘போ’ என்று விரட்டினாளே, அப்போது அந்த ஒலி கேட்டது. அந்த நாண் இழுபடு ஓசை, அவளைக் கொண்டவனின் கையால் யாருக்கோ ஏற்படும் மரணம் என்று உணர்த்தியது. அவள் சூர்ப்பனகையாக இருப்பாளோ என்று கூட அப்போது பேதலித்தாள். இப்போது… அந்த நாண் இழுபடு ஓசையல்லாமல், வேறு எந்த அதிர்வு அவள் உள்ளுணர்வைக் குலுக்கிறது? பெரியன்னையிடம் ஓடி வருகிறாள். குழந்தைகள் இருவரும் பெரியன்னை திரிக்கும் நூலைச் சிக்கலாக்கி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அருகில் இரண்டு பெண்கள் மூங்கில் கிழித்துக் கூடை முடைகிறார்கள்.

“பெரியம்மா, இப்போது பூமி அதிர்ந்தாற் போல் ஓர் இடிமுழக்கம் கேட்கவில்லை?”

அவள் இவளை உற்றுப் பார்க்கிறாள்.

“இருக்கும். கோடையில் இப்படித் திடுமென்று எங்கேனும் வானம் கறுத்து இடிக்கும். எனக்குத்தான் செவிகள் மங்கலாகி விட்டன. ஏம்மா, பஞ்சமி? இடி இடித்தது?”

இவள் பற்களைக் கறுப்பாக்கிக் கொள்ளவில்லை. பளீரென்று சிரிக்கிறாள். “எங்கோ யானை கத்திச்சி… அதா. இங்க வராது!” என்று நிச்சயமாக அச்சமின்றி உரைக்கிறாள்.

“யானையின் பிளிறலா அது?…”

ஆம்; உண்மையாகவே யானையின் பிளிறல் கேட்கிறது. பஞ்சி கைவேலையை விட்டுவிட்டு முற்றம் கடந்து போகிறாள். காற்றுக்கு ஆடும் தளிர்போல் அவள் பெரியன்னை கையைப் பற்றிக் கொள்கிறாள்.

சற்றைக்கெல்லாம், சோமியும் கைவேலையைப் போட்டு விட்டு யாரையோ அழைத்தவாறு ஓடுகிறாள்.

சத்தியமுனி, செய்குளத்தைத் துப்புரவு செய்த கோலத்தோடு, “என்ன கலவரம்?” என்று வருகிறார். அவர் முகத்தில் இருந்து வியர்வை பெருகுகிறது.

“மகளே, குழந்தைகளுடன் குடிலுக்குப் போங்கள்” என்று கூறியவராய் அவர் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு செல்கையில், பசுவினங்கள் மணிகுலுங்க ஓடி வருகின்றன. பறவைகள் நேரமில்லா அந்த நேரத்தில் வானில் வட்டமிடுகின்றன. காடன், ஒலி, மாரி, ஆகிய வேடர் கூட்டம், வில் அம்புகள் ஏந்தியவர்களாய் வருகிறார்கள்.

“…எல்லோரும் நில்லுங்கள்! என்ன ஆயிற்று இப்போது?…”

“சாமி, ஏதோ ஆபத்து நடந்திருக்கு. யானைகள் இப்படிக் கத்தியதில்லை. பசு-பறவை எல்லாம் நிலைகுலையுமா? நம்ம கரும்புத் தடியத் தின்ன யானை வரும். நந்தமுனி ஒடிச்சிக் குடுப்பார். பிள்ளைங்க வாங்கிட்டுப் போறாப்புல போகும். இப்ப அதுங்க ஏன் ஆபத்து வந்தாப்புல அலறணும்?”

“சரி, நீங்க வில் அம்பப் போட்டுட்டுப் போயி என்னன்னு பாத்திட்டு வாங்க!”

அவளால் குடிலுக்குள் சென்று அமைதியாக இருக்க முடியவில்லை. சிறுவர்களைக் குடிலுக்குள் கட்டிப் போட முடியுமா? அவர்களால் நொடிப் பொழுது கூட அமைதி காக்க முடியாதே?

தபதபவென்று சிறுவர்கள் ஓடுவதை உணர்ந்தாற் போல் இவர்களும் வெளியே ஓடிப் புதர்களுக்கிடையில் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். அப்போது ஓர் அணில் குதித்துப் போகிறது. வால் நீண்ட குருவி புதரில் இருந்து ஓடுகிறது.

“வா… வா… விளையாடலாம்!” என்று பெரியவன் அழைக்கிறான்.

“அஜயா, விஜயா, இங்கே பாட்டன் பக்கம் வாருங்கள்!” என்று சத்தியர் அவர்களை அருகில் அழைத்துக் கொள்கிறார்.

பூமகளின் கலவர முகம் பார்த்துப் பெரியன்னை தேற்றுகிறாள்.

“ஒன்றும் நேராது. இந்த வனத்தில் எந்த அசம்பாவிதமும் நேராது. அமைதி கொள் மகளே…”

“இல்லை தாயே. இந்த ஓசை… எங்கோ ஒரு கொலை விழும் ஓசை. இந்தப் பிள்ளைகளுக்குப் பாட்டன், யானை தண்ணீர் குடிக்கும் ஓசை என்று ஓசை வந்த திக்கை நோக்கி அம்பெய்ததன் பயனாக, கண்ணில்லாப் பெற்றோரின் ஒரே மகன் மாண்டான். தொலைவில் இருந்து கண்காணாதபடி மந்திர வித்தையைப் பிரயோகித்து அம்பெய்தும் திறமை என்று பெருமை பேசுவார்கள்…”

இவள் பதை பதைக்கையில், முயல்கள், முள்ளம்பன்றிகள், ஏதோ நேர்ந்துவிட்டாற் போன்று பரபரப்புடன் புதர்களை விட்டு வெளியேறுகின்றன.

பூமகள் தன் நிலை மீறி முற்றம் கடந்து செல்கிறாள். பாம்புகள் ஊருகின்றன.

“வனதேவி! தாயே! அறியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருள்வீர்! இவர்கள் எல்லோரும் உன் மைந்தர். நிரபராதிகள் வீழக்கூடாது. என்னை உன் மடியில் கொண்டு சேர்த்து, பழியையும், பாவத்தையும் வாழ்நாள் முழுவதும் அநுபவிக்கிறாரே, அந்தத் தண்டனையே போதும். இன்னும் பழிபாவம் நேரிட வேண்டாம்…” என்று உள்ளூற இறைஞ்சுகிறாள்.

இடையே ஓர் ஆசைக் குறுத்தும் குறுகுறுக்கிறது.

“நான் தான், மண்ணாசை, கொல்லும் திறன், எல்லாம் துறந்து, வருகிறேன். தேவி, உன் விருப்பப்படியே வன்முறை இல்லை என்பதற்கடையாளமாக, அந்நாள் வில்லொடித்தது போல் ஒடித்தேன்” என்று சொல்ல வருகிறாரோ? படைகள், ஆடம்பரங்கள், பணியாளர், மனமழிக்கும் ஆசைகள் எதுவும் இல்லாமல் இயற்கையின் நியதிகளில் குறுக்கிடாமல் அன்பு கொண்டு வாழ முடியாதா?… இதோ உங்கள் மைந்தர்கள். முனிவர் இவர்களை அஜயன் – விஜயன் என்றழைக்கிறார். இங்கே வாழ்க்கை தான் வேள்வி. பகிர்ந்துண்ணும் மாண்பு. எவரையும் பட்டினி கிடக்க விடுவதில்லை. இங்கே வில்வித்தை, மல்யுத்தம் எல்லாம் தற்காப்புக்கு என்று தான் முனிவர் பயிற்றுவிக்கிறாராம். வேள்வி என்று சொல்லி, ஆவினங்களைக் கொன்று நிறைவேற்றுவதில்லை.

அவள் மனத்திரையில் மின்னற் கோடுகளாக இந்த வாசகங்கள் பளிச்சிடுகின்றன.

அவள் சோகமே உருவெடுத்தாற் போன்று நிற்கையில் பிள்ளைகள் ஓடி வருகிறார்கள். அவள் பாதங்களில் விழுந்து நீலன் கதறுகிறான்.

“…தேவி, வனதேவி? ஏனிப்படி ஆயிற்று? சம்பூகன்… சம்பூகன் போய்விட்டான். ஓர் அம்பு பாய்ந்து அவனை வீழ்த்திவிட்டது…”

பிள்ளைகள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள்.

அவள் அலறல் கானகமெங்கும் எதிரொலிக்கிறது.

அவள் தான் நிறைசூலியாக வனத்தில் தனியாக விடப் பட்ட போது கூட இவ்வாறு நிலை குலையவில்லை.

“இருக்காது, கூடாது… கூடாது” என்று கத்தியபடியே முனிவரை நோக்கி ஓடுகிறாள்.

அத்தியாயம்-18

கடலலைகள் பொங்கிப் பிரளயம் வருவது போலும், பூங்காக்கள் தீப்பற்றி எரிவது போலும் அந்த அமைதிப் பெட்டகம் கலங்கிப் போகிறது.

“சம்பூகன் இந்த உலகத்துக்கெல்லாம் உற்றவனாயிற்றே? அவனை அம்புபோட்டுக் கொன்றவர் யாரப்பா?”

“குருசாமி, நாங்கள் வனதேவிக்கு மங்களம் சொல்லி, ஆற்றோரம் கோரை பிடுங்கிக் கொண்டிருந்தோம். அங்கே சில தானியக் கதிர்களும் இருந்தன. சம்பூகன் அவற்றைக் கொய்வதற்காகக் குனிந்த போது விர்ரென்று கழுத்தில் அந்த அம்பு பாய்ந்து வந்து குத்தியது. உடனே வீழ்ந்து விட்டான். அது அக்கரையில் இருந்துதான் வந்தது சாமி!…”

“அன்னிக்கு அவங்க, சபதம் வச்சிட்டுப் போகல?… அந்தக் குடுமிக்காரங்க! பிராமண குலமாம். அவங்கதான் மந்திர அம்பை ஏவி இப்படிச் செய்திருக்காங்க… நாங்க நச்சுக் கொட்டை அம்பு செய்யக் கூடாதுன்னு சொன்னீங்க. கேட்டோம். இப்ப, நம்ம பசுவை அவங்க கொண்டு போனதை மீட்டோம். அதுக்கு இப்படி அநியாயம் செய்திருப்பது நியாயமா, குருசாமி!”

பூமகள் உறைந்து போயிருக்கிறாள். அது நடந்து வெகு நாட்கள் ஆயினவே?

“இந்தப் பாவத்தை, அவன் தான் செய்திருப்பான்…” என்று முணுமுணுக்கிறார்கள்.

பழிபாவச் சொல்லுக்கு இடம் தந்துவிட்டீரே! ஒரு குடம் பாலுக்கு ஒரு நஞ்சு போதும் என்பார்கள். உங்கள் சரிதையில் நஞ்சே பரவுவதைத் தடுக்க இயலாதவர்?… நாளை உங்கள் மைந்தர்கள் தேன் பிளிற்றும் மழலையில், ‘எங்கள் தந்தை’ எப்படி இருப்பார், அவர் எங்கே என்று கேட்காமலிருப்பார்களா? அவர்கள் கேட்கலாகாது, என்று அஞ்சித் தானே நான் வேடப்பிள்ளைகள், அவர்கள் குரு முனிவர் என்று ஆடியும் பாடியும் அவர்கள் ‘குலத்’ தொழிலை மறக்கச் செய்கிறேன்? இது நீசத்தனம் அன்றோ? நீர் தாடகையைக் கொன்ற வரலாற்றை நான் நம்பவில்லை. எனினும் தர்மம் என்று சொல்லப்பட்ட இனிப்புப் பூச்சை ஏற்றிருந்தேன். எது தர்மம் சுவாமி! அரக்கன் பிறன் மனையாளைக் கவர்ந்தான் என்று இகழ்ந்து, அந்த நகரையே அழித்து சிறை மீட்டதாகச் சொல்லி உங்கள் தர்மத்துக்காக என் மீது மீண்டும் பழி சுமத்தி நாடு கடத்தினீர். இப்போது, இந்தச் சம்பூகன்… யாருக்கும் தீங்கிழைக்காத பாலகன். அவன் உங்கள் எல்லைக்கு வந்தானா? உங்கள் உடமைகளைக் கவர்ந்தானா?…

பறந்து சென்று, சுமந்தரர் – குலகுரு முதலியோர் புடைசூழ வீற்றிருக்கும் மன்னன் முன் நியாயம் கேட்க வேண்டுமென்று குருதி கொந்தளிக்கிறது. இதுவரையிலும் பூமித்தாயின் மேனி அவளை உறுத்தியதில்லை. கல்லும் கரைய மென்மையாக வருடும் அடிகளை அவள் உணர்ந்திருக்கிறாள். இப்போதோ, முட்களும் கல்லும் குத்திக் கிழித்து குருதி பொசியும் பரபரப்பில் வருகிறாள். அவளே அவளுக்குப் புதியவளாகி இருக்கிறாள்.

அவளுக்கு மிகவும் பழக்கமான, நெருக்கமான, ஒன்றி அறியப்பட்ட முகங்கள்; வாசகங்கள்; வாடைகள்… எல்லாமே அந்நியமாகத் தோன்றுகின்றன. மாதுலன்… முடி வழுக்கையான அந்தப் பிள்ளை ஓய்ந்து ஒடிந்து மரத்தோடு சாய்ந்திருக்கிறான். குழல்கள் கீழே உயிர் இழந்த நிலையில் கிடக்கிறது. அவன் அன்னை பொங்கிப் பெரும் குரல் எடுத்து ஓலமிடுகிறாள்.

சம்பூகன் – பால்வடியும் வதனங்கள் – கண்களை மூடி மென் துயில் கொள்ளும் நிலையில்… அந்த மகிழ மரத்தின் வேர் மீது இலைப்படுக்கையில் வைத்திருக்கிறார்கள். கரிகுழல் கற்றைகள் முன் நெற்றியில் தவழ்கின்றன. சிறு மூக்கு… மென்மையான காதுகள். எலும்பு தெரியும் மார்பகம்… நந்தமுனி திரித்து பட்டு நூலில் கோத்த ஒற்றை உருத்திராக்க மணி.

பூமகள், தன் நிலை இழந்து ‘மகனே’ என்று அவன் மீது விழுந்து கதறுகிறாள். அண்டமே குலுங்குவது போல் உயிர்களனைத்தும் துடிக்கின்றன. இந்தத் துடிப்பை, அந்த க்ஷத்திரிய மன்னன், அவள் நாயகன் உணர்ந்திருக்க மாட்டானா? அவன் என்ன கல்லா?

அப்படி மேற்குலம் மட்டுமே வாழவேண்டும் என்ற ஒரு தர்மம் உண்டா? இந்த உலகில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவது தர்மம் என்றால், அந்த தர்மம் நிலைக்குமா?…

நந்தசாமி வருந்தித் துடிக்கும் அவள் தோள்பட்டையை மெல்லத் தொடுகிறார்.

“குழந்தாய், நீ வருந்தலாகாது. இந்த அநியாயம் நியாயமாகாது.”

“எந்தக் கொலைக்கும் நியாயம் கிடையாது. ஆறறிவு இல்லாத விலங்குகளுக்கு இயற்கை விதித்த கிரமப்படி இரையாகும் உயிர்களுக்கும் ஒரு நியதி இருக்கிறது. பசி இல்லாத போது, எந்த ஒரு விலங்கும் இன்னொரு விலங்குக்கு ஊறு செய்யாது. அதற்காகப் பழியும் வாங்காது… மகளே, தெம்பு கொள்…” சத்தியமுனி அவள் மைந்தர்களை அழைத்துக் கொண்டு வருகிறார். முதியவளும் மெள்ள நடந்து வருகிறாள்.

தங்கள் தாயின் வருத்தம் கண்ட மதலையர் அவளை மெல்ல வருடி, மழலை சிந்துகின்றனர்…

“சம்புகனுக்கு என்ன? ஏன் எல்லோரும் அழுகிறார்கள்?” இவள் இரு குழந்தைகளையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் பெருக முத்தமிடுகிறாள்.

“சம்பூகன் எழுந்திருக்க மாட்டான். கண்மணிகளே… அவன் பூதேவியுடன் ஐக்கியமாவான்…”

“ஏன்… ஏன்?…”

“நாங்கள் யாருமே அம்பெய்ய மாட்டோம். குருசாமி யாருமே அம்பு எய்யக் கூடாது என்று சொன்னார். அம்பு போன்ற முள்ளினால் பூமியைத் தான் கிளறுவோம். கரும்பு எங்களை விட உயரமாக வளர்ந்தது. அப்போது சம்பூகன், மாதுலன் குழலூதினால் வனதேவி சந்தோசப்பட்டு நிறைய மாங்கனி, கரும்பு, தேன் எல்லாம் தருவாள் என்றான். நாங்கள் முன்பெல்லாம் ஓணானைப் பிடித்துக் கல் தூக்கச் சொல்வோம்; நத்தைக் கூடுகளை உடைப்போம். அதெல்லாம் ஒன்றுமே செய்வதில்லை. எங்கிருந்து யார் அம்பு போட்டார்கள்? யார்… யார்… யார்…”

யார்… யார்… என்று அந்தக் கானகம் முழுவதும் எதிரொலிப்பது போல் அவளுக்குத் தோன்றுகிறது.

மௌனமாக நிற்கும் சத்திய முனிவரின் முன் விழுந்து பணிகிறாள்.

“எந்தையே, இந்தப் பாவம் செய்தவர் யாராக இருந்தாலும், அவரை அவர் செயலாகிய பாவமே தண்டிக்கட்டும்…”

கண்ணீர் முத்துக்கள் சிதறி அவர் காலடியில் வீழ்கின்றன.

அவர் அவளை எழுப்புகிறார். “மகளே, வருந்தாதே? இயற்கையை அழிக்கும் செயல்புரியும் எவருக்கும் அதுவே பிறவிப் பிணியாகும். சம்பூகனைக் கொல்வது அவர்கள் அந்தணர்களைக் காப்பாற்றும் தருமத்தில் பட்டது என்பார்கள்.”

“அவன் பிறப்பே, ஏதோ பாவத்தின் பயன் என்று அநாதையாக விட்டார்கள். நாம் அவனை மனிதனாக வாழ வைக்க முயன்றோம்… மூவுலகும் புகழ்வதாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு முடி மன்னன், இந்தக் குற்றமற்ற சிறுவனை வீழ்த்தியது, ஒரு சிங்கம் ஒரு சிற்றெரும்பைக் கண்டஞ்சி, அதை அறைந்து கொன்றாற் போல் இருக்கிறது… அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட வலிமையை விட, இந்தச் சிறுவனின் உயிராற்றல் ஆன்ம வலிமை கண்டஞ்சி, அழிக்க முற்பட்டிருக்கிறார்கள். வேதம், கல்வி, மேலாம் அறிவு, ஞானம், எல்லாம் பிறப்பினால் மேற்குலத் தந்தையின் வழி வந்தவருக்கே உரியது என்று தீர்த்துவிட்ட நியாயத்தை நான் உடைக்க முயன்றேன். இது என்னை நோக்கி வந்த அம்பு மகளே…”

“ஆயுதங்களால் உடலை அழிக்கலாம். ஆனால் இந்தச் சம்பூகன் விதைத்த விதைகள், பேராற்றலாக வளரும். மேலும் மேலும் வேறு உருவங்களில் கிளைத்துச் செழித்து வரும்…”

“சுவாமி, இந்தத் தத்துவங்கள் எதுவும் எனக்கு அமைதி தரவில்லை.”

“ஆமாம் குழந்தாய், அரசரவைகளில் போக போக்கியங்களைத் துய்த்துக் கொண்டு, பேசுவதற்குத்தான் தத்துவங்கள். இதற்கப்பால் இது, அதற்கப்பால் அது, ஏகம் பிரும்மம், மற்றதெல்லாம் மாயம் என்று பேசுவார்கள்; வாதம் செய்வார்கள்…”

உடனே பெரியன்னை, துயரம் வெடிக்க, “நிறை சூலியை வனத்துக்கு அனுப்புவார்கள். என்ன தத்துவம் வேண்டிக் கிடக்கிறது?… மகளே, அதை மறந்து விடு. அவர்களுக்கு அச்சம். ஏனெனில் மனசில் ஆசை என்ற கருப்பு இருக்கிறது. ஆசை, சாம்ராச்சிய ஆசை; ஆதிக்க ஆசை. ஆசை இல்லை என்றால் அச்சம் இல்லை. நந்தனைப் பார்; அபூர்வமான பிள்ளை; இந்தச் சம்பூகன் அப்படி வளர்ந்தான். இவர்களை… அழிக்க வேண்டும் என்று குலகுரு, மந்திரம் சொல்வார்; மன்னன் மதிப்பில்லாமல் கேட்பான்! ‘தாழ்ந்த குலப்பிள்ளைகள் மந்திரம் சொல்வதா? அந்தி தொழுவதா? சந்தி வந்தனம் செய்வதா?… இவர்கள் முற்பிறவியில் பாவம் செய்து, அதைத் தொலைக்க, தவ வாழ்வு வாழ்கிறார்கள். அந்தப் பாவங்கள் நம் குலத்தைத் தொத்திக் கொள்ளும் மன்னவா! நீ இந்த மந்திரம் செபித்து அஸ்திரம் எய்து, அவனை அழி; பிரும்ம குலத்தைக் காப்பாற்று” என்று ஓதியிருப்பான்! பூமகள் அந்த அன்னையின் சுடுசொற்களின் வீரியம் தாங்காமல் செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“எந்தையே, எது தருமம்? எது பாவம்? எது புண்ணியம்? எனக்கு எதுவுமே புரியவில்லை. ஒரு கால் இந்த மைந்தர்களை அவர்களிடம் கொண்டு செல்லவோ இந்த சூழ்ச்சிகள்?”

“குழம்பாதே, மகளே, நீ உறுதியாக இரு. சத்தியம் என்றுமே பொய்த்ததில்லை. அது கருக்கிருட்டில் மின்னலைப் போல் தன்னை விளக்கிக் காட்டும்!”

அழுது கொண்டே பிள்ளைகளும் நந்தமுனியும் சம்பூகனுக்கு இறுதிக்கடன் செய்கிறார்கள். வேதவதி ஆற்றில் இருந்து நீர் கொண்டு வந்து அவனை நீராட்டி, புதிய நார் ஆடையை அரைக் கச்சையாக்கி, அந்த மகிழ மரத்தடியிலேயே அவனை வைக்கக் குழி தோண்டுகிறார்கள். அந்த இடம் அவனுக்கு விருப்பமான இடம். அங்கே அமர்ந்துதான் குழலிசைப்பான். குழல்களில் துவாபாரம் செய்து ஊதிப் பார்ப்பான். அங்கே அமர்ந்து தான் வாழை நார் தூய்மை செய்து, நூல் நூற்று சுற்றி வைப்பான்…

வானவனும் இந்தப் பிள்ளைக்கு அஞ்சலி செய்வது போல் அந்தியின் துகில் கொண்டு போர்த்துகிறான். பசுந்துளிர்களையும் மலர்களையும் கொய்து அவன் உடலை மூடுகிறார்கள். அகழ்ந்த குழியில் அவனை இறக்கிய பிறகு அனைவரும் கதறியழுது, மேல் மண்ணைத் தூவுகிறார்கள். சத்தியமுனி தாய் மண்ணைப் புகழ்ந்து பாடுகிறார்.

“உயிர் கொடுத்த அன்னையே,
உனைப் போற்றுகிறோம்.
உயிர் தந்தனை; உண்டி தந்தனை;
மனம் தந்தனை; அறிவு தந்தனை
ஒளி ஈந்தனை; உறவு கொண்டனை
அன்பு தந்தனை; இன்பம் தந்தனை
இன்னல் தீர்த்தனை; வாழச் செய்தனை
இதோ உன் மைந்தன்; ஈரேழு வளர்ந்த பாலகன்.
உன் மடியில் இடுகிறோம்; அவன் துயிலட்டும்.
உறுத்தாமல், வருத்தாமல் துகில் கொண்டணைப்பாய்,
தாயே, தயாபதி, உனைப் போற்றுகிறோம்…”

சங்கம் கொண்டு ஊதுகிறார்கள். சிறுவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

“அம்மா, சம்புகன் வர மாட்டானா?”

குழந்தைகளின் கேள்விக்கு விடையளிக்க இயலாமல் அவர்களைத் தழுவிக் கொண்டு பூமகள் கண்ணீர் உகுக்கிறாள்.

“அஜயா, விஜயா, அதோ பார்!” என்று சத்தியர் சிறுவர்களைப் பற்றிக் கொண்டு வானத்தைக் காட்டுகிறார்.

வானில் ஒளித்தாரகை ஒன்று மின்னுகிறது.

“அதோ பார்த்தீர்களா? சம்பூகன் அங்கேயிருந்து நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பான்!”

நந்தமுனி குழலை எடுத்து மண்ணைத் தட்டித் துடைத்து, மாதுலனிடம் கொடுக்கிறார்.

“பையா, குழலூது; சம்பூகன் எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பான். இன்னும் இன்னும் இந்தத் தாயிடம் எண்ணில்லாச் சம்பூகர்கள் தோன்றுவார்கள். குழல் ஊது! குழல் ஊது! குழல் ஊது!”

மாதுலன் குழலை உதடுகளில் பொருத்தி இசைக்கிறான்.

சோகம் பிரவாகமாக அந்த இசையில் பொங்கி வருகிறது.

– தொடரும்…

– வனதேவியின் மைந்தர்கள் (நாவல்), முதல் பதிப்பு: ஆகஸ்டு 2001, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email
ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *