வனதேவியின் மைந்தர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 21, 2024
பார்வையிட்டோர்: 1,269 
 
 

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம்-13

நந்தமுனி, அவள் முகத்தில் அந்த ஆற்று நீரைக் கைகளில் முகர்ந்து வந்து, துடைக்கிறார். புளிப்பும் இனிப்புமான கனிகளை அவள் உண்ணக் கொடுக்கிறார். யானைகள் ஆற்றில் இறங்கிச் செல்கின்றன.

எல்லாம் கனவு போல் தோன்றுகிறது.

“சுவாமி, இங்குதான் என் தந்தை ஏர் பிடித்து உழுதாரோ?”

“ஆற்றுக்கு அக்கரை. நாம் பார்ப்போம். அந்த இடத்தில் இப்போது தானிய வயல்கள் விரிந்திருக்கின்றன. அப்பால் வாழை வனத்துக்கு யானைகள் செல்கின்றன. அதையும் கடந்தால், சத்தியமுனியின் இருக்கை, வேடர் குடில்கள் வரும். யாவாலி அம்மை இருந்த ஆசிரமம். இக்கரையில் சிறிது தொலைவு சென்றால், மார்க்க முனியிருந்த ஆசிரமம் தெரியும். அவர் இப்போது இல்லை. அவர் இருந்த இடத்தில் தான் பெரியன்னை இருந்தார், முன்பு. எனக்குக் கூட நினைவு தெரியாத நாட்கள் அவை. இப்போது, நாம் தங்கப் போவது, பூச்சிக்காடு என்று முன்பு அழைக்கப்பட்ட வனப்பகுதி. பெரியம்மை அங்கே செல்கிறார்… கிழக்கே சென்றால் மிதுனபுரி…”

இவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஓர் ஒற்றை ஓடம் வருகிறது. முனி கைதட்டி அழைக்கிறார்.

மாநிற முகம்; அரையில் வெறும் நார்க்கச்சை. முடியை மேலே முடிந்த கோலம், மீசை முளைக்காத பாலகன். அவன் தான் துடுப்புப் போட்டு வருகிறான்.

“சம்பூகா? தேவியை அக்கரை கொண்டு செல்ல வேண்டும். பெரியம்மா நலமா? நீ மிதுனபுரிக்கா போய் வருகிறாய்?”

“ஆமாம் சுவாமி. அங்கே படைத்தலைவருக்கு, மஞ்சள் பரவும் நோய் வந்துவிட்டது. மூன்று நாட்களாய்ச் சென்று அவருக்குப் பணி செய்து விட்டு வருகிறேன். நிறையப் பேருக்கு இந்த நோய் வந்துவிட்டது சுவாமி!”

“இனி எல்லாரும் நலமடைவார்கள். நீ வாழ்க! சம்பூகா, உன் தொண்டு அரியது. நீ அருள் பெற்ற பாலகன்…”

அவர்கள் உரையாடலில் பூமகள் மகிழ்ச்சியடைகிறாள்.

“சுவாமி, இந்தச் சிறுவன் வைத்தியனா?”

“இவன் அரண்யானியின் அருள் பெற்றவன். எந்த நோயானாலும், இவன் மூலிகை கொண்டு சென்றாலே நோய் தீரும். மூலிகைக்கும் இவன் கைக்கும் ஓர் அரிய தொடர்பு உள்ளது; அமைதி கிடைக்கும்…”

“ஆச்சரியமாக இருக்கிறது சுவாமி. இவன் பெயர்… என்ன சொன்னீர்கள்?”

“சம்பூகன். மிதுனபுரியைச் சேர்ந்த வணிகர் வீட்டு வாயிலில் குழந்தையாகக் கிடந்தான். இவனைச் சத்திய முனி தளர்நடைப் பருவத்தில் கொண்டு வந்தார். யாரோ அந்தணர் பார்த்து, இந்தப் பிள்ளை முற்பிறவியில் பலரைக் கொன்று பாவத்தின் பயனாக வந்திருக்கிறான். இவனை உங்கள் வீட்டில் ஏற்றால் நாசம் வரும் என்றாராம்! சத்திய முனிவர் எடுத்து வந்தார். வந்த புதிதில் பேச்சு வராது. செய்கையாகவே உலகம் அறிந்தான். இப்போதும் மிகக் குறைவாகவே பேசுவான்.

மனசுக்குள் கொக்கி போல் வினா எழும்புகிறது.

குழந்தை பிறந்ததும் இப்படியும் சோதிடம் கூறுவரோ? அதற்காகப் பெற்ற பிள்ளையை அநாதையாக விடுவதோ? அழிவு என்றால், யாருக்கு எப்படி வரும்?

“சுவாமி! சத்திய முனிவரை நான் பார்க்க வேண்டும். வணங்க வேண்டும்; ஆசி பெற வேண்டும்…”

படகில் ஆறு தாண்டி அவர்கள் கரையேறுகிறார்கள். வேடர்குலச் சிறுவர் சிறுமியர் சிலர் கண்டு சேதி சொல்ல ஓடிப் போகிறார்கள். இருள் இன்னுமும் ஒளியைத் துடைத்து விழுங்கவில்லை.

என்றாலும் அவர்கள் வந்ததை அறிந்த சிறுவர் பலர் பந்தம் கொளுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள்.

ஏதோ ஒரு தேவதையைப் பார்ப்பது போல், வியப்பு மலர அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள். நந்தபிரும்மசாரி, அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசுவது புரிகிறது. அவர்கள் அவள் முன் வணங்கி, ‘வனராணிக்கு மங்களம்’ என்று முகமன் கூறுகிறார்கள். அவர்கள் யாரும் அரைக்கச்சைக்கு மேல் ஆடை அணிந்திருக்கவில்லை. பெண்களும் ஆண்களும் – சிறுவர் சிறுமியர் வேறுபாடு தெரியவில்லை. ஒரு சிறு பையன் அம்மணமாக அவளைக் கண்களை இடுக்கிக் கொண்டு கூர்ந்து நோக்குகிறான். அடுத்த கணம், அவன் கையில் கவண்கல் போல் ஓர் ஆயுதம் இருப்பதை அவள் பார்த்து விடுகிறாள்.

அதற்குள் அந்தச் சிறுவனின் தாய் போன்ற அம்மை வந்து அதைப் பறித்து எங்கோ வீசுகிறாள்.

அந்தப் பெண்மணி சிரிக்கிறாள். பற்கள் கருப்பு. நெற்றி மோவாய் நெடுக பச்சைக்குத்துக் கோலம்…

ஓ, இவர்களுக்கெல்லாம் ஒன்றும் கொண்டு வராமல் வந்திருக்கிறேனே…! என்று தன்னைச் சபித்துக் கொள்கிறாள்.

நிறையப் பெண்கள் அவர்கள் வழியில் எதிர்ப்பட்டு குலவை இட்டு வரவேற்புச் செய்து அழைத்துச் செல்கின்றனர்.

வளர்ப்பு நாய்கள் குரைக்கின்றன.

ஒரு வேடுவப் பெண் அவற்றை அதட்டி அமர்த்துகிறாள்.

நன்றாகத் துப்புரவு செய்யப்பட்ட பெரிய முற்றம். அரண்போல் மணமலர் சொரியும் மரங்கள்; செடி கொடிகள் புல்வேய்ந்த நீண்ட சதுரமான ஒரு கூடம் தெரிகிறது. அருகில் சிறிய இரண்டு குடில்கள்… நந்தசுவாமி அவளை ஒரு குடிலுக்குள் அழைத்துச் செல்கிறார். குனிந்து அவர் முன் சென்று அவளையும் உள்ளே வரச் செய்கிறார். ஓர் அகல் சுடர்விட்டு எரிகிறது. கோரைப் பாய் விரிப்பில் நிழலுருவமாகத் தெரிபவர்… எடுப்பான நாசி; அகன்ற நெற்றி; நூலிழைப் போல் வெண் கூந்தல் விரிந்து தோள்களில் விழுந்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே உருவம். தன் கையைப் பற்றி அவளை அழைத்துக் கொண்டு மரம், செடி, கொடி என்று காட்டிக் கதை சொன்ன அதே அன்னை… ஆனால், முகத்தில் காலம் இட்ட கோடுகள், கிறுக்கல்கள், அவள் வாழ்க்கையின் புதிர்போல் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றன.

முதியவளின் கண்களில் ஒளி திரண்டு கூர்மையாகிறது.

“அம்மா…!” என்று பூமகள் அவள் பாதம் தொட்டுப் பணிகிறாள்.

“தாயே, உங்களுக்குத் தேவையான சஞ்சீவனி – இனி உங்களுக்கு, அலுப்பும் ஆயாசமும் இருக்கலாகாது!”

“எனக்குப் புரியவில்லையே, நந்தா? அயோத்தி மன்னனின் பட்டத்து அரசியா? அவளா இந்தக் கானகத்துக் குடிலில் வந்திருக்கிறாள்? பதினான்காண்டுகள் கானகத்தில் இருந்ததும், மாற்றான் தோட்டத்தில் சிறை இருந்ததும் காற்று வாக்கில் செய்திகள் வந்தன. வேதபுரிச் சாலியர் வந்து சொன்னார்கள். அந்த என் குழந்தையா இங்கு வந்திருக்கிறாள்? என்னைக் கூட்டிச் செல்லுங்கள் என்று தானே சொன்னேன்? மறுபடியும் கானகமா? அதுவும் இந்த நிலையில்…” அவள் கூந்தலை அன்புடன் தடவி, “பயணத்தில் களைத்திருப்பாய். தேர்ப்பாதை கூடச் சரியாக இருக்காதே? மன்னர் வெளியிலிருக்கிறாரா? அயோத்தியின் பட்டத்து அரசி, இங்கே வந்திருக்கிறாய், மகளே, நான் என்ன பேறு பெற்றேன்!” என்று தழுவி முத்தமிடுகிறாள்.

“திருமணத்துக்குப் புறப்பட்டு வரவேண்டும் என்று வந்தவளால் பார்க்க முடியவில்லை. நீ மன்னரோடு தேரில் கிளம்பும் போதுதான் வந்து பார்த்தேன். குழந்தாய், தேரை விட்டிறங்கி இந்தத் தாய் அன்போடு உனக்குப் பிரியமான கனிகளை இலைப்பையில் போட்டுத் தந்தேனே…”

கண்ணீர் பெருகுகிறது. அவளால் விம்மலை அடக்க முடியவில்லை.

“மன்னர் வரவில்லை. தாயே, நான்… நான் இனி இங்குதான் இருப்பேன். எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாத துன்பம், குலம் கோத்திரம் அறியாத இந்த அபலைக்கு நேரிட்டிருக்கிறது. ஆனால், அம்மா, இதுவே இனி என் இடம். என் குழந்தைக்கும் இதுவே வாழ்விடம்…”

பெரியம்மை பதறிப் போகிறாள். என்றாலும் சுதாரித்துக் கொள்கிறாள்.

“என் கண்ணம்மா, என் வாழ்நாள் ஏன் நீண்டு போகிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் நான் மிகப்பெரிய ஒரு காரணத்துக்காக உயிர் வாழ்ந்திருக்கிறேன்… குழந்தாய், இந்த இடம், உன்னை அன்பு மயமாக அணைத்துக் கொள்ளும்…” என்று மடியில் அவளைச் சாத்திக் கொள்கிறாள். அன்னை மடி… அன்னை மடி…

“என்னை நாடு கடத்தினீர்; ஆனால் நான் பெறற்கரிய பேறு பெற்று விட்டேன். மாளிகைச் சிறையில் இருந்து, இந்த இதமான இடத்துக்குக் கொண்டு சேர்த்த உமக்கு நன்றி…” என்று மனசோடு கூறிக் கொள்கிறாள்.

சலசலவென்று நீரோடும் ஓசையில் செவிகள் நனைவது போன்ற உணர்வில் திளைக்கிறாள். உடல் முழுவதும் ஏற்படும் சிலிர்ப்பில், கனத்த போர்வையை மேலே போர்த்து விடுவது போன்ற இதம். இது உறக்கமா, விழிப்பு நிலையா? அவள் கர்ப்பத்துச் சிசுவாகி விட்டாளா? உண்மையா? உண்மைதானா? ஒரு கால் அவள் ஓர் உயிரை வெளியாக்கி ஜனனியாகி விட்டாளா?

அவள் விருட்டென்று எழுந்திருக்கிறாள்.

“தாயே, இந்த விளைநிலம் எந்தக் குலத்துக்கு உரியது?” அவளையறியாமல் அவள் கை மணி வயிற்றில் படிகிறது.

“கண்ணம்மா, விளை நிலங்களுக்குக் குலமேது? அது உயிர்களைப் பிறப்பித்து, வித்துக்கு வீரியம் அளிக்கிறது. அனைத்து மலங்களையும் உட்கொண்டு மேலும் மேலும் புனிதமாகிறது. புனிதமாகும், புனிதமாக்கும் மாட்சிமை உடையது. அதுவே முழு முதற்குலம்…”

“பின் பிரும்மகுலம், க்ஷத்திரிய குலம் என்றெல்லாம் எப்படி வருகிறது?…”

“குழந்தாய், குலங்களை விளைநிலம் தோற்றுவிப்பதில்லை. பேராசை தோற்றுவிக்கிறது. காமம, குரோதம், லோபம் ஆகிய புன்மைக் குணங்கள் தோற்றுவிக்கின்றன. இந்தப் புன்மைக் குணங்களால் ஆண் விளை நிலத்தை அரவணைக்காமல் ஆக்கிரமிக்கிறான். சுயநலங்களும் பேராசையும், இரணகளரியும் இரத்தம் பெருகும் கொடுமைகளும் விளையக் காரணமாகின்றன.”

“என் செல்வமே, இந்த இடத்தில் அகங்கார ஆதிக்கங்களும் அடிமைத்தனத்தின் சிறுமைகளும் இல்லை. இங்கே மிகப்பெரிய மதில் சுவர்கள் இல்லை. காவலுக்கு என்ற பணியாளரும் இல்லை. எம்மிடம் உள்ள செல்வங்கள் பலருக்கும் பயன்படுவதால் மேலும் பெருகக் கூடியவை. நீ இங்கு நலமாக இருப்பாய்; உன் உதரத்தில் கண்வளரும் உயிர், இந்தக் குடிலை மட்டுமல்ல; இந்த வனத்தையே பாவனமாக்கட்டும். துன்ப நினைவுகள் இங்கே அன்பின் ஆட்சியில் அழிந்து போகும்…”

உண்மையிலேயே இந்தவனம், இங்கு வாழும் மக்கள், விலங்குகள், அனைத்துமே ஓர் அபூர்வமான இசையை அவளுள் இசைக்கின்றன. யாவாலி ஆசிரமத்தில் இருந்து பிள்ளைகளும், பெண்களும் வருகிறார்கள். சத்தியமுனிவர் தீர்த்த யாத்திரை சென்று இருக்கிறாராம். உழு நிலங்களில் அவர்கள் தானியம் விளைவிக்கிறார்கள். மரங்களில் பரண் கட்டிக் கொண்டு தானியங்களைக் கொத்த வரும் பறவைகளை விரட்டுகிறார்கள். ஆனால் அடுத்து வீழ்த்துவதில்லை…

அடுத்த நாள் அவர்கள் அருகிலிருந்த ஓர் அருவிக்கு நீராடச் செல்கிறார்கள். வழியெல்லாம் மூலிகைகளின் நறுமணம் உற்சாகமளிக்கிறது. குன்று போல் மேடாக அமைந்த அடர்ந்த கானகப் பகுதியில் செல்லும் போது அச்சம் தெரியவில்லை.

“வனதேவியே எங்கள் முன் வந்தாற் போல் இருக்கிறது” என்று சொல்லும் வேடுவப் பெண்ணின் பெயர் உலும்பி என்று சொன்னாள். ஆனால் உலு என்று பெரியன்னை அழைத்தாள். பாதங்களில் மணிக்கற்கள் உறுத்தாமலிருக்க, இளந்தோலினால் செய்யப்பட்ட காலணிகளை அவளுக்கு அளித்திருக்கிறார்கள். செல்லும் வழியில் பசும் குவியல்களாக ஒரே மாதிரியான செடிகளும் மரங்களும் தென்படுகின்றன. அவற்றில் சிலவற்றில் இளமஞ்சள் நிறத்திலும், வெண்மையாகவும் மலர்களோ, முட்டைகளோ என்று புரிந்து கொள்ள முடியாத விசித்திர மலர்களைப் பார்க்கிறாள்… தோளில் பெரிய பிரப்பங்கூடைகளில், அவற்றைச் சேமிக்கும் சிலரையும் பார்க்கிறாள்.

“அவர்கள், மிதுனபுரிச் சாலியர். இவைதாம், பட்டுக் கூடுகள். அரசர்கள், பெருமக்கள் விரும்பி வாங்கும் பட்டாடைகள் நெய்வார்கள்.”

உலு இந்தச் செய்திகளைக் கண்களை உருட்டியும், கைகளை அசைத்தும் சாடையாகத் தெரிவித்தாலும் அவள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால் புரிந்து கொள்கிறாள். வேடர் குடியில் இருந்து இளவட்டப் பெண்கள், குன்பி, மரீசி, ரீமு என்று பலரும் வருகிறார்கள். அரையில் வெறும் கச்சையணிந்து இருக்கும் இப்பெண்கள், நறுமண இலைகளைக் கொணர்ந்து கல்லில் தேய்த்து நீராடச் செய்கிறார்கள்.

“முன்பு இந்த வனத்துக்கு யாருமே வரமாட்டார்கள். யாரேனும் வந்தால்… நஞ்சு தோய்ந்த அம்பை எய்து விடுவார்கள். குறி தவறாமல் போய் விழும். ஆள் அங்கேயே விழுந்து இறப்பர்…”

“ஏன்?…”

“ஏனென்றால், ராசாக்கள் வந்து எங்களைப் பிடிச்சிப் போராங்க.”

“எதற்கு?…”

கண்களை அகற்றி, “உங்களுக்குத் தெரியாது?” என்று கேட்கிறாள்.

“அரண்மனைக்குக் கொண்டு போவாங்க” என்று சொல்லி, வெட்டுவது போலும் குத்துவது போலும் சைகை செய்கிறாள்.

“எதற்கு?”

“எதற்கு? யானை, ஆடு, மாடு, எல்லாம் புடிச்சிட்டுப் போறாப்பல எங்களையும் கொண்டு போவாங்க. இந்த எல்லையிலேந்து ஒருத்தர் கூடப் போனதில்ல. நச்சுக்கொட்டை காட்டுகிறேன் பார்…!” என்று அடர்ந்த புல் பகுதியில் முழங்கால் மறையும் பசுமைக்குள் அடி வைத்து ஒரு வேர், கொட்டை இரண்டும் கொண்டு வருகிறாள். “இதை அரைத்து, ஒரு மூங்கில் குடுவையில் வைத்திருப்போம். அம்பில் தோய்த்து விடுவோம்… எங்கள் பிள்ளைகளில் சின்னஞ்சிறிசு கூடக் கவண்கல் குறி தவறாமல் விடும்…”

அப்போது அவளுக்கு முதல் நாளைய வரவேற்பில் ஒரு சிறுவன் கையில் அதைக் கண்ட நினைவு வருகிறது.

“இப்போதும் அடிப்பார்களா உலூ?…”

“முன்னே நடந்திச்சி. மிதுனபுரிலேந்தும் வேதபுரிலேந்தும் யாரும் வரமாட்டார்கள். இந்த பட்டுக்கூடுகள் அறுந்து பறந்து கிடக்கும். பூச்சிகள் பறக்கும். யாரேனும் திருட்டுத்தனமாக அறுந்து தொங்கும் இழைகளை எடுக்க வரும் போது அம்பு பாயும்…”

“உங்களுக்கு இப்போது எப்படித் தைரியம் வந்தது?”

“சத்தியமுனிவர்… ஒருநாள் அவரையே அடித்துவிட்டார்கள். அப்படியும் அவர் திரும்பத் திரும்ப வ்ந்தார். அப்படியெல்லாம் யாரையும் யாரும் பிடிச்சிட்டுப் போக விடமாட்டோம்னு சொன்னாங்க. இப்ப அந்தக் காடு, இந்தக் காடு எல்லாம் ஒண்ணாப் போச்சி. சாலியர் வந்து இதெல்லாம் கொண்டு போவாங்க. நாங்களும் மிதுனபுரிச் சந்தைக்குப் போவோம். வேணுங்கிற சாமானெல்லாம் கிடைக்கும். பானை, துடுப்பு, தட்டு, இந்த மூங்கில் வெட்டிக் கூடை பண்ணுவோம்… பெரிய சந்தை. நந்தசாமிக்கு அதான் ஊராம். அங்கே கூட வயசான ராணியம்மா இருக்காங்களாம்…”

இவள் பேச்சில் சைகையே மிஞ்சி இருப்பதால் கொச்சை மொழியையும் புரிந்து கொள்கிறாள். இந்த மரங்கள், செடிகளை நட்டு வளர்த்திருக்கிறார்கள்… இவர்கள் எல்லோரும் காட்டும் அன்பு, அரண்மனைக்குள் அவள் கண்டிருந்த மகாராணி பணிப்பெண் அன்பு அல்ல. இவர்களுடன் கூட்டமாக உணவு கொள்வதே புதுமையாக இருக்கிறது.

பெரிய பானையில் பொங்கிய தானிய உணவு. அவித்த கிழங்கோ, மீனோ தெரியாத ஒரு மசியல். தேனில் பிசைந்த மாவு… எல்லோரும் கையில் தேக்கிலையோ வாழை இலையோ, ஏதாவதோர் இலையை வைத்துக் கொண்டு, சமமாக லூவோ, குல்பியோ போடுகிறார்கள். குடுவையில் நல்ல நீர்…

இது மீனா, இறைச்சியா என்றறியாமலே அவள் உண்ணுகிறாள். பகிர்ந்து உண்ணுதல். பிள்ளைகளும் அவளிடம் வந்து வாங்கிக் கொள்கிறார்கள்…

பெரியம்மா, வனதேவிக்குப் புட்டு செய்து கொடுக்கச் சொன்னார். ராக்கன் வேதவதியில் இருந்து பெரிய மீன் பிடித்து வந்தான்… அரண்மனையில் இது போல் இருக்குமா?

கவளம் நெஞ்சில் சிக்கிப் புரையேறிக் கொள்கிறது.

பெரியம்மா அவள் உச்சியை மெல்லத் தட்டி குடுவை நீரைக் குடிக்கச் செய்கிறாள்.

“அரண்மனையில் யாரோ நினைப்பார்கள்!” சொல்லிச் சிரிக்கிறாள்.

“பெரியம்மா… அரண்மனையில் இந்த மாதிரி உணவு கிடைக்குமா என்று கேட்டாளே? நிச்சயமாக கிடைக்காது. இந்த மகாராணிக்கு ஒரு சிறு குழந்தைக்கு, சமையலறை ராதையின் பஞ்சைக் குழந்தைக்கு ஒரு விள்ளல் விண்டு கொடுக்க முடியாது. அங்கு அன்பு இல்லை. முள் வேலிகள்; முட் சுவர்கள். பெரியம்மா, இவர்கள் முன்பு நச்சம்பு போட்டு வெளியாட்களைக் கொன்று விடுவார்களாமே?”

“ஆமாம். முள் வேலிகளுக்கிடையில் இருந்து ஊழியம் செய்வதைக் காட்டிலும் தன்மானத்துடன் பட்டினி அநுபவிக்கலாம் என்று நினைத்தார்கள். வெளியாள் தென்பட்டால் கொன்று இழுத்து வந்து, அவன் எலும்புகளை மட்டுமே இக்காட்டின் அரணாகப் போட்டு விடுவார்கள். அந்த இடத்தில் தான் நீ இருக்கிறாய்… இங்கே தான் இந்த அன்பு விளைந்திருக்கிறது…”

பூமகள் எதுவுமே சொல்லத் தோன்றாதவளாக இருக்கிறாள்.

அத்தியாயம்-14

வசந்தத்துக்குப் பின் தொடர்ந்த வெப்பம் முடிவு பெறுகிறது. புதிய மழையின் இளஞ்சாரலில் வனமே புத்தாடை புனைந்து பூரிக்கிறது. சீதளக்காற்று மெல்ல மயில் தோகை கொண்டு வருடுகிறது. பூமகள் நிறை சூலியாக, குடிலுக்கு வெளியே உள்ள கல் இருக்கையில் அமர்ந்து, வயிரச்சுடர் போல், நீர்த்துளிகளிடையே ஊடுருவும் கதிர்களைப் பார்த்துப் பரவசப்படுகிறாள். அப்போது, வேடுவர் குடியில் இருந்து, விதவிதமான உணவு வகைகளைக் கொண்டு வந்து, ஆண்களும் பெண்களும் அந்த நீண்ட கொட்டடியில் வைக்கின்றனர். இளம் பெண்கள் எல்லோரும் முடி சீவி, மலர் சூடிச் சிங்காரித்துக் கொண்டிருக்கின்றனர். மிதுனபுரிச் சந்தையில் வாங்கிய வண்ணமேற்றிய நார் ஆடைகளை முழங்காலில் இருந்து மார்பு மூடும் வகையில், உடுத்த பெருமை பொங்க, நாணம் பாலிக்கின்றனர்.

‘கிடுவி’ என்ற மூதாட்டி, பல்வேறு மலர்களைத் தொடுத்த மாலை ஒன்றைக் கொண்டு வந்து பூமகளின் கழுத்தில் சூட்டுகிறாள். எல்லோரும் குலவை இடுகிறார்கள். விரிந்தலையும் முடியில் சேர்த்து மலர்ச்சரங்களைச் சுற்றி அழகு செய்கிறாள் உருமு.

பெரியம்மை எழுந்து வந்து அவள் முகமண்டலத்தைக் கைகளால் தடவி, சில சிவந்த கனிகளைச் சுற்றிக் கண்ணேறு படாமல் கழிக்கிறாள்.

பெண்களும் ஆண்களும் வட்டமாக நின்று பாடல் இசைக்கிறார்கள். ஓரமாக அமர்ந்திருக்கும் முதிய ஆண்களும், பெண்களும், மடியில் குழந்தைகளை வைத்துக் கொண்டும் அந்தப் பாடலில் கலந்து கொள்கின்றனர்.

பூமகளுக்கு அப் பாடல், விழா எதுவும் புரியத்தானில்லை.

முதல் நாள் வரையிலும் யாரும் எதுவும் சொல்லவில்லை.

“இதெல்லாம் என்ன பெரியம்மா?”

“முதல் சாரல், மழை வரும் போது கொண்டாடுவார்கள். இப்போது, வனதேவி வந்திருப்பதன் மகிழ்ச்சி…”

கன்னங்களில் வெம்மை படரும் நாணத்துடன் அவள் அந்த சோதிச் சுடரின் கதிர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

முதல் நாள், உணவு கொண்டிருக்கையில் ‘கிடுவி’ என்ற அந்த முதியவள் கனவு கண்டதை வந்து கூறினாள்.

“வன தேவிக்கு ரெண்டு புள்ள இருப்பதாகக் கனவு வந்தது. எங்க பக்கம் ஒரு புது வாழக்குலை… பூ தள்ளி இருக்கு. அது தங்கமா மின்னுது. நான் எல்லாரையும் கூட்டிட்டு வந்து காட்டுறேன். குலை பிரிஞ்சி, பூ உதிர்ந்து, பிஞ்சு வந்து முகிழ்க்கும். ஆனா இது… நா தங்கமாதிரி இருக்கேன்னு கைவச்சப்ப, மடல் பிரிஞ்சி ரெண்டு பெரிய பழம் தெரியுது. அப்ப மரம் பேசுது ‘கிடுவி, எடுத்து வச்சிக்க, வனதேவி குடுக்கிறேன். உங்களுக்கு ராசாவூட்டு ஆளுங்க வந்து கொண்டு போயிடாம, பத்திரமா வச்சிக்குங்க. இந்த வனத்துக்கு மங்களம் வரும்…’னு மரம் பேசிச்சி… சரின்னு, நா, வனதேவியக் கும்பிட்டு, அந்தப் பழத்துல கை வைக்கேன். என்ன அதிசயம்? ரெண்டு ரெண்டு புள்ளங்க. தங்கமா, அழகின்னா அத்தினி அழகு. எடுத்து இந்தப் பக்கம் ஒண்ணு, அந்தப் பக்கம் ஒண்ணு இடுக்கிக்கிறேன். குதிக்கிறேன். கூத்தாடுறேன். வாய்க்கு வந்ததெல்லாம் பாடுறேன். புள்ளங்க கக்கு கக்குன்னு சிரிக்குதுங்க. இடுப்பிலேயே குதிக்கிதுங்க… நான் சிரிக்கிறேன், குதிக்கிறேன்…. அப்பத்தான், இந்த ஆளு வந்து கத்துது… ‘ஏ கிடுவி! என்ன ஆச்சி! குதிச்சிக் குதிச்சிச் சிரிக்கிற? கனவா? உனக்குக் கிறுக்கிப் பிடிச்சிச்சா? உடம்பத் தூக்கி தம்தம்முனு போடுற?…’ அப்பத்தா எனக்கு அது கனான்னு புரிஞ்சிச்சி…”

“கெனவா? பாட்டிக்குக் கருப்பஞ்சாறு உள்ளே போயிரிச்சி. அதான் தங்க தங்கமா கெனா வருது! மிதுனபுரிச் சந்தையிலே போயி, அஞ்சு குடுவ வாங்கி வந்திருக்கு. நாம செய்யிற சாரம் இப்படி வராது!” என்று இளைஞன் ஒருவன் சிரிக்கிறான். இப்போதும் குடுவைகளில் இலுப்பை மதுவோ, தானிய மதுவோ வைத்திருக்கிறார்கள்.

ஆட்டமும் பாட்டமும் நிகழ்கையில், பூமகள் தன்னை மறந்திருக்கிறாள். கிடுவி கனவில், ‘அந்த இரண்டையும் நீயே பறித்து வைத்துக் கொள். ராசா வீட்டு ஆளுகள் வந்து கொண்டு போகப் போகிறார்கள்’ என்ற செய்தி மட்டும், பாயசத்தில் படியும் துரும்பாக உறுத்துகிறது. இந்த மனிதர்களின் அன்பும் அரவணைப்பும் அவளுக்கு எந்நாளும் இருக்கும். அவளையே உதறியவர்கள், அவள் பிள்ளையைச் சொந்தம் கொண்டாட முடியுமா?..

பெரிய இலைகளில், உணவை வைத்து முதலில் அவளுக்குக் கொடுக்கிறார்கள். குடுவை மதுவில் ஓர் அகப்பையில் ஊற்றி அவளைப் பருகச் சொல்கிறார்கள். அவள் மறுப்புக் காட்டிய போது, பெரியம்மை அருகில் வந்து, “சிறிது எடுத்துக் கொள் தாயே, உனக்கு நல்லது. உடம்பு தளர்ந்து கொடுக்கும்” என்று அருந்தச் செய்கிறாள்.

இங்கே விருந்து நடைபெறும் வேளையில் சம்பூகனும் குழலூதி வருகிறான். பூமகள் அருகே அந்த இசை கேட்கையில் மனம் ஒன்றிப் போகிறது. அந்த இசையில் உடலசைப்பும் ஆட்ட பாட்டமும் அடங்குகிறது. கண்களில் நீர் துளிக்கும் உருக்கம் அது. யாரையோ? எதற்கோ? இருக்கும் சிறு பிள்ளைகளில் கண்பார்வையற்ற ஒரு பிள்ளை அமர்ந்திருக்கிறது. முடியே இல்லை, வழுக்கை. கண்பார்வை இல்லை. “அரிவியின் பிள்ளையைப் பாரு! அது அந்தப் பாட்டுக்கு எழுந்து அந்தப் பக்கம் போகிறது!”

பூமரத்தின் பக்கம் உட்கார்ந்து குழலூதும் சம்பூகன், அந்தப் பிள்ளையை அழைத்து அருகில் அமர்த்திக் கொள்கிறான்.

இப்போது அந்த இசை கேட்டு அந்தச் சிறு உடல் அசைகிறது. கைகள் பரபரக்கின்றன.

“இந்தச் சிறுவனுக்கு எப்படி இப்படிப் பாட வருது?”

“நந்தசுவாமி சொல்லிக் கொடுத்தாங்க. சாமி அருள் இது. இப்படி ஒரு குழல் ஊதல் யாருமே ஊதி கேட்டதில்லை…” என்று முதியவன் ஒருவன் சொல்கிறான்.

ஒரே மகிழ்ச்சிப் பெருக்கு, பரவசம்.

பொழுது சாயத் தொடங்கும் போது, திமுதிமுவென்று யார் யாரோ ஓடி வரும் ஓசை கேட்கிறது.

சத்தியமுனி வருகிறாரா?… அந்தப் பக்கத்துப் பிள்ளைகள் அல்லவோ ஓடி வருகிறார்கள்!

இரைக்க இரைக்க ஓடி வரும் இளைஞன் “அக்கரையில் ராசா படை கொண்டிட்டு வராங்க! அல்லாம் வில்லம்பு எடுத்து வச்சிருங்க!” என்கிறான்.

கொல்லென்று அமைதி படிகிறது.

அவள் சில்லிட்டுப் போனாற் போல் குலுங்குகிறாள்.

“அட, துப்புக்கெட்ட பயலே? யாரடா ராசா படை இங்கே கொண்டு வரது? நந்தசாமி இல்ல?” என்று பெரியம்மை கேட்கிறாள்.

“நந்தசாமி அக்கரையில் இருக்காங்க. ஆனா, யானை, குதிரை, தேரு, படை, குடை எல்லாம் போகுது. நாம் எதுக்கும் கருத்தா இருக்கணுமில்ல? எப்பவுமின்னா யாரும் இங்க வரமாட்டாங்க. இப்ப அப்படி இல்ல பாருங்க?”

“எப்போதும் போல் இல்லாம, இப்ப என்ன வந்திட்டது? போடா, போ! வீணாக அதுவும் இதுவும் சொல்லி நீ காட்டுத் தீ கீளப்பாதே. நந்தசாமி அங்க இருக்காங்க இல்ல? ஒரு படை இங்க ஆறு தாண்டாது. நமக்குக் காவல் ஆறு. நெஞ்சுலே கவடு வச்சி வாரவங்கள, அது காவு வாங்கும். அதும், வனதேவிக்கு எந்த ஒரு ஆபத்தும் வராம, அந்தத் தாய் காப்பாத்துவா!”

அவள் உள்ளூற அமைதி குலைகிறாள்.

“முன்பு வனம் சென்றவர்களைத் திருப்பி அழைக்க, கைகேயி மைந்தன் வந்தாரே, அப்படி அந்தத் தாய் இவரை அனுப்பி இருப்பாளோ?…”

“ஏன் பெரியம்மா? என்ன கொடி, என்ன தேசத்து ராசா, எதுக்கு வந்தாங்கன்னு கேளுங்க!”

“நீ கவலையே படாதே கண்ணம்மா, அவர்கள் யாரும் இங்கே வர மாட்டார்கள். இந்த அரச குலத்தைப் பற்றி நான் நன்றாக அறிவேன்…”

“மாட்டார்களா?”

அவள் விழிகளில் நீர் மல்குகிறது.

அவ்வளவு இரக்கமற்றவர்களா? தமக்குத் தெரியாமல் நிகழ்ந்து விட்ட இந்தக் கொலை பாதகம் போன்ற செயலுக்கு யாருமே வருந்தி, பரிகாரம் செய்ய வரமாட்டார்களா?… எப்படியானாலும் இந்த நிலையில் அவள் நாடு திரும்ப முடியுமோ? எப்படியும் அவள் பிள்ளை பெற்று எடுத்துக் கொண்டு நாடு திரும்பும் நேரம் வராமலே போய் விடுமோ?

எரிபுகுந்து பரிசுத்தமான பின், மன்னரின் வித்தைத்தானே அவள் மணி வயிறு தாங்கி இருக்கிறது? குலக்கொடி, வம்சம் தழைக்க வந்த வாரிசு, பட்டத்துக்குரிய இளவரசு என்றெல்லாம் சிறப்புடைய உயிரை அல்லவோ அவள் தாங்கி இருக்கிறாள்?…

எப்படியும் ஒரு நாள் தவறை உணர்ந்து அவர்கள் வராமலிருக்க மாட்டார்கள். போகும் போது, கிடுவிக் கிழவி, லூ, எல்லோரையும் அழைத்துச் செல்ல வேண்டும். இவர்கள் மாளிகைச் சிறப்புகளைப் பார்த்தால் எத்தனை அதிசயப் படுவார்கள்! பட்டாடைகளும் பணியாரங்களும் கொடுத்து மகிழ்விக்க, நன்றி தெரிவிக்க, அவளுக்கும் ஒரு சந்தர்ப்பம் வரவேண்டுமே?

இந்தச் செய்தி அங்கிருந்த மகிழ்ச்சிக் கூட்டத்தின் சூழலைப் பாதித்து விட்டது. உணவுண்ட பின் எஞ்சியவற்றை எடுத்து வைத்து விட்டு இடங்களைக் கும்பாவும், சதிரியும் சுத்தம் செய்கிறார்கள். மற்றவர்கள் கலைந்து போகிறார்கள். சம்பூகன் இவற்றை கவனிக்கவேயில்லை. ஓர் இலையைப் பறித்து ஊதல் செய்து, குருட்டுப் பையனின் இதழ்களில் பொருத்தி ஊதச் செய்கிறான். ஓசை வரும் இன்பத்தில் குழந்தை மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறான். சூழலின் கனம் அவர்களைப் பாதிக்கவில்லை.

ஆனால், சற்றைக்கெல்லம் வேடர் குடிப் பிள்ளைகள், தோல் பொருந்திய தப்பட்டைகளைத் தட்டிக் கொண்டும் கூச்சல் போட்டுக் கொண்டும் ஆற்றை நோக்கிப் படை செல்கிறார்கள். வில் அம்பும் காணப்படுகின்றன. பூமகள் மெல்ல எழுந்து முற்றம் கடந்து பசுங்குவியல்களுக்கிடையே செல்லும் பிள்ளைகளைப் பார்க்கிறாள். பம்பைச் சத்தம் காதைப் பிளப்பது போல் தோன்றுகிறது.

“அம்மா… அம்மா… அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்! அவர்கள் நச்சம்புகளை எய்துவிடப் போகிறார்கள்! தாயே!…” குரல் வெடித்து வருகிறது. அவள் அங்கேயே புற்றரையில் சாய்கிறாள். சாய்பவளை லூ ஓடி வந்து தாங்கிக் கொள்கிறாள். எந்தத் துணியும் மறைக்காத மார்பகம், உண்ட உணவு – மது எல்லாம் குழம்பும் ஒரு மணம் வீசும் மேனி.

“அவங்க இங்கே வரமாட்டாங்க, வனதேவி. நமக்கு ஓராபத்தும் வராது. பயப்படாம வாம்மா. நந்தசாமி அவங்க யாரையும் வரவிடமாட்டார்!” அவள் நிமிர்ந்து, கறுத்த பற்கள் தெரியும் பச்சைக்குத்து முகத்தைப் பார்க்கிறாள். “அவர்கள் மேல், நச்சம்பு விட வேண்டாம் என்று சொல்லுங்கள் தாயே! வேண்டாம்…”

“ஓ, அதுதானா? இப்ப ஏது? இவங்க யாருக்கும் அந்த நஞ்சு ஏதும் தெரியாது. இப்ப அந்தச் செடியும் இல்ல. சத்தியமுனிவரும் சம்பூகனும் இப்ப மருந்துக்குத்தான் எல்லாச் செடியும் வச்சிருக்காங்க! இங்க, தாயே, பாம்பு கூடக் கடிக்காது இருக்கணும்ங்கறதுக்காக வச்சிருக்கு. அதில்லன்னா, அத்தையும் அடிச்சிக் கொன்னு போடுவோம். அழிச்சிடுவம். சத்தியசாமி அதும் வாயிலேந்து விசம் எடுத்து, ஒருக்க தீராத நோயைத் தீர்த்து வச்சாங்க. இங்க எல்லாம் நல்லபடியா இருக்கத்தான் சாமி படைச்சிருக்குது. நீ கலங்காத தாயி…”

லூ… லூ… நீயும் என் அன்னையா?…

அவள் கழுத்தைச் சுற்றி இதமாகக் கைகளை வைத்துக் கொள்கிறாள்.

அஞ்சியபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இருள் கவியும் நேரத்தில் நந்தசுவாமி அவளைப் பார்க்கத் தம்பூரை இசைத்துக் கொண்டே வருகிறார். பூமகள் ஒளிச்சுடரின் முன், அன்னையைத் தொழுகிறாள்.

ஆதிநாயகன் அன்னையே போற்றி;
அகிலம் விளங்கும் அருளே போற்றி!
சோதிச் சுடரின் சக்தியே போற்றி;
சொல்லொணாத நற்சுவையே போற்றி!…
இன்பத்துடிப்பினில் துன்பம் வைத்தனை;
துன்பவலியிலும் இன்பம் வைத்தனை!
புரிந்தவை யனைத்தும் பூடகமாயின.
பூடகமெல்லாம் புரிந்து போயின!
போற்றி போற்றி பூதலத்தாயே!
ஆதிநாயகன் அம்மை உனையே
சரணடைந்தேன்…

வெறும் ரீம் ரீம் ஒலி மட்டுமே கேட்கிறது.

அவள் சட்டென்று நிமிருகிறாள். “சுவாமி வணங்குகிறேன்” என்று நெற்றி நிலம் தோய வணங்குகிறாள்.

பெரியன்னை மூலையில் இருந்து குரல் கொடுக்கிறாள்.

“யாரப்பா அரசர் படை? அவர்கள் தாமா?”

“ஆமாம் தாயே. கடைசி இளவலுக்குப் பட்டாபிஷேகம் செய்து மேற்கே அனுப்பியிருக்கிறார்கள்…”

“ஓ, எந்த சத்துருக்களை வெல்லப் போகிறான்? இன்னும் அசுரப் படைகள் இவர்கள் சங்காரம் செய்யக் காத்திருக்கிறார்களா?”

“லவணனோ, பவணனோ… ஒரு பெரிய கடப்பாறை போன்ற சூலாயுதம் வைத்திருக்கிறானாம். இவர்களுக்கு அச்சம் வந்து விட்டது. அதனால் முன் கூட்டியே பட்டாபிசேகம் செய்து எல்லா விமரிசைகளுடனும் புறப்பட்டுச் செல்கிறார்கள். அவன் உறங்கும்போதோ எப்போதோ அந்த ஆயுதத்தை இவர்கள் அபகரித்து அவனைக் கொன்ற பின், அந்த ஊருக்கு நன்மை பிறக்கும். அந்த அரசகுலம் அங்குத் தழைக்கும்…”

“அப்பாடா…” என்று பெரியன்னை பெருமூச்சு விடுகிறாள். “அக்கரையோடு… அவர்கள் சென்று, வேதம் வல்லார் முனி ஆசிரமங்கள் எதிலேனும் தங்குவார்கள். இங்கே எதற்கு வரப்போகிறான்!”

பூமகளுக்கு ஒவ்வொரு சொல்லும் இடி கொள்வது போல் வேதனையைத் தோற்றுவிக்கிறது.

இவளை நாடு கடத்திய மறுகணமே சாம்ராச்சிய ஆசையா? அதற்குத்தான் இவள் தடையாக இருந்தாளா?

ஆமாம்; அண்ணனை வெல்லுமுன் தம்பி விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கவில்லையா?

இந்தத் தம்பி தனக்கொரு ராச்சியம் உரித்தாக்கிக் கொள்ள ஓர் அசுர ஊரை நோக்கிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டு போகிறாரோ?

அவர்களுக்கு அவள் இங்கிருப்பது தெரியுமோ? அறிவார்களோ? அந்த ஊருக்குச் செல்லும் வழி இதுதானோ?

அவள் பேசவில்லை. இந்தப் பிள்ளைகளைப் போல் அவர்களும் நச்சம்பு வைத்திருந்தால்…?

ஏன் இவளுக்குத் துடிக்கிறது? அவர்கள் தவறு செய்தால் இவளுக்கென்ன? ஏன்? இவளைக் காட்டுக்கு அனுப்பவில்லை என்றால், இவளால் அவர்கள் செய்யும் போர்களைத் தடுத்து நிறுத்த முடியுமா? முடியாது. ஏனெனில் எல்லாம் குலகுரு என்ற பெயருடன் அங்கு வீற்றிருக்கும் சடாமகுடதாரிகளின் யோசனைகளாகவே இருக்கும்.

இவளால் அமைதியாக இருக்க முடியாது என்று தெரிந்தோ என்னவோ… பெரியம்மா இவளுக்கு அந்த மூலிகைப் பானத்தைக் கொடுக்கச் செய்கிறாள். உறங்கிப் போகிறாள்.

விடியற்காலையில், நோவு நொம்பரம் எதுவும் இன்றி அவள் தாயாகிறாள்… லூ தான் மருத்துவம் செய்கிறாள். ஏதோ எண்ணெய் கொண்டுத் தடவி, எந்த ஒரு துன்பமும் தெரியாத வண்ணம் ஒரு சேயை வெளிக் கொணர்ந்தாள். அடுத்து இன்னொரு சேய்… இரண்டும் வெவ்வேறு கொடியுடைய இரட்டை. வேடர் குடியே திரண்டு வந்து மகிழ்ச்சிக் குலவை இடுகிறது.

கண்களைத் திறந்து சிசுக்களின் மேனி துடைத்து அவள் மார்பில் ஒரு சிசுவை வைக்கிறாள்.

பட்டு மலரின் மென்மையுடன் மூடிய சிறு கைகளுடனும் நீண்ட பாதங்களுடனும் கருகருவென்று முடியுடனும் மெல்லிய இதழ்கள் அவள் அமுதம் பருகத் துடிக்கும் போது…

அவள் பெண்மையின் உயர் முடியேறி நிற்கிறாள். இன்பம் துன்பம் இரண்டும் கலந்த ஒரு பேரின்பம்… தாய்… அவள் ஒரு தாய்… இரண்டு மக்கள்… ஒன்று வெண்மை மேவிய தந்த நிறம். மற்றது செம்மை மேவிய நிறம். ஒன்று வாளிப்பாக இருக்கிறது; மற்றது சற்றே மெலிந்து இருக்கிறது. லூ லூ லூ… என்று பெண்கள் ஓடி வந்து குலவை இடுகிறார்கள். மிதுனபுரியில் இருந்து பெற்று வந்த கரும்புக் கட்டியைக் கிள்ளி வாயில் வைக்கிறாள் பெரியன்னை.

இளங் காலை நேரத்தில் கொட்டும் முழக்குமாகப் பிள்ளைகள் பிறந்ததை அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

“வனதேவி தாயானாள் மங்களம்
மக்கள் இரண்டு பெற்றெடுத்தாள் மங்களம்
ஈ எறும்பு ஈறாக, ஊரும் உலகம் அறியட்டும்
காக்கைக் குருவி கருடப்புள், அத்தனையும் அறியட்டும்!
யானை முதல் சிங்கம் வரை, வனம் வாழ்வோர் அறியட்டும்.
வானைத் தொடும் மாமரங்கள் செடி கொடிகள் பூண்டு வரை,
தேவியை வாழ்த்தட்டும்; பூமகளை வாழ்த்தட்டும்…
வான்கதிரோன் வாழ்த்தட்டும்; நிலவும் நீரும் வாழ்த்தட்டும்”

கரவொலியும் வாழ்த்தொலியும் கானகமெங்கும் பரவும் போது, பூமகள், நிறை இன்பப் பரவசத்தில் கண்களை மூடுகிறாள்; நித்திரையில் ஆழ்கிறாள்.

அத்தியாயம்-15

பூமிஜா குடிலைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அவள் பிள்ளைகள், இப்போது தளர் நடை நடந்து, பெரியன்னைக்கு ஓயாமல் தொல்லை கொடுக்கிறார்கள். குடிலுக்குள் ஓசைப் படாமல் அவர்கள் குற்றி வைத்த தானியத்தை இரைத்து அதில் நீரோ, சிறுநீரோ பெய்து வைத்திருக்கிறார்கள். பெரியன்னைக்குப் பார்வை துல்லியமாக இல்லை. வேடுவமக்கள் சோமாவோ, மோரியோ அவர்களைத் தூக்கிச் சென்று விடுவார்கள். பெரியன்னைக்கு அந்த வட்டத்திலேயே பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று விருப்பம். பூமகள் இப்போதெல்லாம், ஒரு சாதாரணப் பெண்ணாக, பக்கத்தில் குளத்தில் இருந்து நீர் கொண்டு வருவதும், தானியம் குற்றுவதும், புடைப்பதும், வீட்டுத் தீக்குத் தேவையான பொருட்கள் சேகரிப்பதும், கன்று காலிகளைப் பேணுவதும், எல்லோருடனும் கூடி வாழ்வதும், பொருந்தி விட்டது. அவளுக்குத் தேவையான தானியங்கள், கனிகள், போதாத நேரங்களில் வேறு உணவு, எல்லாம் கொண்டு வருகிறார்கள். மிதுனபுரியில் இருந்து, நார் ஆடைகளோ, பஞ்சு நூலாடைகளோ வருகின்றன. அவளை ‘வனதேவி’ என்று தெய்வாம்சம் பொருந்திய தேவியாகப் போற்றுகின்றனர்.

ஈரம்பட்ட தானியத்தைக் கழுவி, ஒரு முறத்தில் போட்டு வைக்கிறாள். வானம் மூடுவதும் திறப்பதுமாக இருக்கிறது. மழைக்காலத்தின் இறுதி இன்னும் எட்டவில்லை. எப்போது வேண்டுமானாலும் கொட்டலாம். இங்கே சடங்கு செய்து அக்கினி மூட்டுபவர் இல்லை. அடுப்புச் சாம்பற் குவியலில் எப்போதும் நெருப்பைக் காப்பாற்ற வேண்டும். சாணத்தினால் செய்யப்பட்ட எரி முட்டைகள், சருகுகள், சுள்ளிகள் ஆகிய்வற்றை மழை நாட்களில் பாதுகாப்பது மிகக்கடினம். காரியோ, மாரியோ கட்டை கடைந்தோ கல்லில் தீப்பொறி உண்டாக்கியோ அவளுக்கு உதவிகள் செய்வார்கள். இல்லையேல், லூவோ சோமாவோ, அவளுக்கும் அன்னைக்கும் எப்படியோ உணவு தயாரித்துக் கொடுக்கிறார்கள்.

பூச்சிகள் இழை கொண்டு தவக்கூடு படைக்கும். பின்னர் தவம் கலைய சிறகுடன் வெளிவரும் போது, அந்த இழைகளும் அறுந்து குலையும்.

அவற்றைப் பிள்ளைகள் சேகரித்து வருவார்கள். பெரியன்னை ஒரு ‘தக்ளி’யில் அதைத் திரிப்பாள். அந்த வித்தையைப் பூமகளும் கற்று மிகவும் ஆர்வமுடன் நூல் திரிக்கிறாள். மிதுனபுரிச் சந்தைக்குப் பிள்ளைகள் அவற்றை எடுத்துச் செல்வார்கள்.

“அடீ கண்ணம்மா! இப்படி ஒரு துட்டப் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாய்! வந்து பார்!”

பெரியம்மை முன்பெல்லாம் பேசவே மாட்டாராம்! இப்போது கத்திக் கத்திக் குரல் மிகப் பெரியதாக ஒலிக்கிறது. இந்த முதிய வயசில், அவளுக்கு நடுக்கம் கூட இல்லை.

“என்ன ஆயிற்று?” என்று ஓடி வருகிறாள்.

ஒரு கரும்பறவை, கீழே தீனமாகக் குரல் கொடுத்துத் துடிக்கிறது. இவள் பிள்ளைகள் கையில் ஆளுக்கொரு குச்சியுடன் நிற்கின்றனர். இருவர் கைகளிலும், கள்ளிக்குச்சிகள். அவள் அடுப்புத் தீக்குச் சேமித்து வைத்தது.

அந்தப் பறவை, குயில் குஞ்சு போலிருக்கிறது.

“பாரடி! இந்தக் குஞ்சு குயில் போல் இருக்கு. காக்கைக் கூட்டில் இருந்தது. காக்கைச் சனியன்கள் குஞ்சு பொரித்து வளர்த்த பிறகு தன் இனமில்லை என்று தள்ளிவிட்டிருக்கு போல. இது தீனமாகக் கத்துது. உன் பிள்ளைகள் ரெண்டும் அதை இன்னும் அடிச்சுக் கொல்லுதுங்க!” என்று குச்சியைப் பிடுங்கி எறிகிறாள். குச்சி போன ஆத்திரத்தில் ஒல்லியான பிள்ளை அவளை அடிக்கக் கை ஓங்குகிறது. ஒல்லிதான் மூத்தது. குண்டு இளையதாம். அதுதான் முதலில் வந்தது.

பூமகள் பரபரப்புடன் கூடை போன்ற ஒரு மூங்கில் தட்டைக் கொண்டு வந்து, இலை சருகுகளைப் போட்டு அப்பறவையைப் பக்குவமாக எடுத்து வருகிறாள். தடவிக் கொடுக்கிறாள்; இதம் செய்கிறாள். சிறகொடிந்த நிலையில் தொங்குவது போல் காயம்.

“பெரியம்மா, நீங்கள் கொஞ்சம் பார்த்துக் கொண்டிருங்கள். சம்பூகனைக் கூட்டி வருகிறேன்! அவன் வந்தால் நிச்சயமாகப் பறவையைப் பிழைக்க வைத்து விடுவான்!”

“முதலில் இந்த துஷ்டப் பிள்ளைகளின் கையைக் கட்டிப் போடு! க்ஷத்திரிய வித்து… தானாக வருகிறது… கொலைத் தொழில்… அது பரிதாபமாகக் கத்துகிறது. இதுங்க ரெண்டும் மாறி மாறி அடிச்சிச் சிரிச்சுக் கும்மாளி போடுதுங்க! உன் வயிற்றில் போய் இதுங்க பிறந்ததே!”

இரண்டு பேரையும் இழுத்து வருகிறாள் பெரியன்னை. இரண்டும் பெருங்குரல் எடுத்து அழுகின்றன. சிறுகுடிலின் பக்கம் முறத்தில் தானியம் உலர வைத்திருக்கிறார்கள். இந்தப் பெருங்குரலின் ஓசையில், புல் பறித்துக் கொண்டிருந்த கோமா ஓடி வருகிறாள். பருத்த தனங்கள் அசைய, பிள்ளை பெற்றதன் அடையாளமான வரிகள் தெரிய, மரவுரி நழுவ அவள் “ஏன் புள்ளைய அடிக்கிறீங்க!” என்று வருகிறாள். “சோமா, நீ முதலில் உன் இடுப்புக் கச்சையை ஒழுங்காகக் கட்டு! இந்த வாண்டுகளுக்கு அப்புறம் பரிந்து வா! இது காக்கைக் கூட்டத்துக் குயில்களில்லை. குயில் கூட்டத்துக் காக்கைகள்! உக்காருங்க, இங்கே! எழுந்திருந்தா அடிச்சிடுவேன்!” என்று அதட்டி, ஒரு மரத்தடியில் உட்கார வைக்கிறாள்.

“சோமா, நல்லவேளை, நீ வந்தாய், போய் எங்கிருந்தாலும் சம்பூகனைக் கூட்டி வா! அவன் தொட்டாலே இந்தப் பறவை எழுந்து விடும்…”

“வனதேவிக்கு மேலா? என்ன ஆச்சு, என்ன பறவை?… பறவை சோர்ந்து கிடக்கிறது. அதன் இதயத் துடிப்பைப் பார்க்கும் போதே உணர முடிகிறது.”

“காக்கா கூட்டுல முட்ட வக்கிற கரும் பறவை. பெரிசான பிறகு நம் இனமில்லன்னு த்ள்ளிவிடும். அதுக்குப் பெரியம்மா ஏன் பிள்ளைங்களைக் கோவிக்கணும்?”

“கோவிக்கணுமா? ஆளுக்கொரு குச்சியெடுத்திட்டு அதை அடிச்சி வதைக்கிறாங்க. அது ஈனமாக் கத்துறதப் பார்த்துச் சிரிக்கிதுங்க! அதே போல் இதுங்கள அடிச்சி, அந்த வலி என்னன்னு தெரிய வைக்கணுமில்ல?”

சோமா அவர்கள் இருவரையும் இரண்டு இடுப்பிலும் இடுக்கிக் கொண்டு கன்னங்களில் முத்தம் வைக்கிறாள்.

“புள்ளங்களுக்கு என்ன தெரியும்? அது கத்தறது வேடிக்கையாக இருக்கும்…”

பூமகள் விருவிரென்று புதர்கள் கடந்து செல்கிறாள். குயில் கூட்டத்தில் பட்ட காக்கைகளா அவள் பிள்ளைகள்? இங்கு பொருந்தாத பிள்ளைகளா?… எது குயில் கூட்டம், எது காக்கைக் கூட்டம்? குயிலுமில்லை, காக்கையுமில்லை… ‘க்ஷத்திரிய வித்து! மேல் குல வித்து!’ என்று அவள் இதயத்தில் அடி விழுவது போல் பெரியன்னையின் சுடுமொழி சுடுகின்றது.

வாயைக் குவித்துக் கொண்டு “சம்பூகா!” என்று கத்துகிறாள். அன்று துன்பம் அவளைச் சூழ்ந்து கவ்விய போது நந்தசுவாமியை நினைத்த போது வந்தாரே, அந்த சந்தர்ப்பத்தை நினைத்துக் கொள்கிறாள். மனதின் ஒரு பக்கம் அந்தப் பறவையின் இதயம் துடிப்பது போல் உணர்வு படிகிறது.

“சம்பூகா…! எங்கிருந்தாலும் வா!…”

விர்ரென்று ஒரு சாரல் விசிறியடிக்கிறது. உடல் சிலிர்க்கிறது.

பறவை அடிப்பட்டதை விட, அந்த இளங்குறுத்துகளின் செய்கை அவளை அதிகமாக நோக வைக்கிறது. ‘க்ஷத்திரிய வித்து!… கொலைக்கு நியாயம் கற்பிக்கும் அறிவு இந்த மதலைக்கு வளரும். இப்போது அந்த அறிவு இல்லை…’

எங்கிருந்தோ குழலோசை கேட்கிறது. மனசில் தெம்பு தலைதூக்குகிறது. சுரங்கள் புரியாத இசை… ஆம், இது கண் பார்வையில்லாத முடியில் ரோமம் இல்லாத, ஒரு சிறுவன். அவனுக்கு இவள் மாதுலன் என்று பெயர் வைத்திருக்கிறாள். “மாதுலன்! மாதுலா? சம்பூகனைக் கண்டாயா?”

“இதோ இருக்கிறேன், வனதேவி?…”

“எங்கே?…”

புதர்களுக்குள்ளிருந்து வெளிப்படுவது போல் வெளிப்படுகிறார்கள்.

மாதுலன் ஊதுகிறான்.

சம்பூகனின் கையில் ஒரு நாய்க்குட்டி…

“சம்பூகா? அது நாய்க்குட்டியா?… வாலும் முகமும்…”

வால் அடர்ந்தாற் போல் இருக்கிறது. கண்கள் சிறு கங்கு போல் தெரிகின்றன. முகத்தில் ஒரு வித்தியாசம் தெரிகிறது.

“இது நாயா?…”

“தெரியவில்லை வனதேவி. ஏதோ பிராணி கடித்துக் கழுத்தில் காயம். பச்சிலை போட்டேன். வனதேவி, என்னைக் கூப்பிட்டீர்களே?…”

“வா, உனக்கு ஒரு வேலை இருக்கிறது…”

அவன் வரும்போது மாதுலன் ஊதிக் கொண்டும் ஆடிக் கொண்டும் வருகிறான்.

அந்தப் பிராணி செவிகள் நிலைத்திருக்க அந்த ஓசையைக் கேட்பது போல் இருக்கிறது.

அவள் முகமலர்ச்சியுடன் விரைந்து வந்து நீண்ட கொட்டகையில் கூடையில் வைத்த கரும்பறவையைக் காட்டுகிறாள்.

சம்பூகன் அங்கே அந்த நாய்க்குட்டியை வைத்துவிட்டு, விரைந்து செல்கிறான். அந்த நேரமெல்லாம் மாதுலன் குழலூதிக் கொண்டிருக்கிறான்.

அப்போது, சோமா இரண்டு குழந்தைகளையும் அங்கே கொண்டு வந்து உட்கார வைக்கிறாள். மாதுலன் ஊதுவதை இரண்டும் அசையாமல் பார்க்கின்றன. பூமகள் மெய்ம்மறந்து போகிறாள். “மாதுலா, இந்தப் பிள்ளைகளின் பக்கம் வந்து ஊதுகிறாயா? எவ்வளவு சுகமாக ஊதுகிறாய்? உன் இதயத்து ஏக்கமல்லவா, இப்படி ஒலிக்கிறது? உயிர்கள் அனைத்தையும் அணைக்கும் ஏக்கமா இது?” முடியில் ரோமமில்லாத பார்வையற்ற ஒரு சிறுவன்… இவனை அரசகுலத்தவர், முகத்தில் விழிக்கக் கூடாத அபாக்கியவான் என்று இகழ்வார்கள். ஆனால், இவன் வணக்கத்துக்குரியவன். இந்தக் குழலை இவன் வாயில் பொருத்தி, இவனுடைய நெஞ்சின் அலைகளை நாதமாக்கிய பிள்ளை சம்பூகன். அந்தச் சடாமகுட குல குருக்களைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்த குரு…

அவள் கண்கள் பசைக்கின்றன. சம்பூகன் மூலிகை கொண்டு வந்து காயத்தில் வைக்கிறான்.

மாதுலன் இசை பொழிகிறான். மறுநாளே கரும்பறவை தெம்புடன் தலை நிமிர்த்தி, சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கிறது. அந்த நாய்க்குட்டி, தத்தித் தத்தி, விளையாடுகிறது. ஒடிந்த காலும், கடிபட்ட கழுத்தும் இன்னும் முழுதுமாகத் தேறவில்லை.

லூ வருகிறாள். “வனதேவி! இந்தக் குட்டியை இங்கு யார் கொண்டு வந்தார்கள்?…”

“ஏனம்மா? சம்பூகன் தான், பாவம் கடிபட்ட இந்தக் குட்டியைக் கொண்டு வந்திருக்கிறான். நாய்தானே இது? இந்தப் பறவை பார், இது கூடப் பறக்க முயற்சி செய்கிறது. மாதுலனின் குழலோசையில் நோயும் துன்பமும் ரணமும் கூடக் குணமாகிறது, லூ!”

“அது சரி, ஆனால் இது வெறும் நாயல்ல. ஓநாய். இதற்குக் கருணை காட்டுவது சரியல்ல. இது பெரிசானா பிள்ளைகளைக் கவ்விட்டுப் போகும்! ஏய்! அத்த முதல்ல கொண்டு ஆத்தோடு போட்டுட்டு வா! இல்லாட்டி மூங்கிக் காட்டுக்கு அப்பால் தூக்கி எறி!”

பூமகளுக்குத் தன் சிறுமிப் பருவத்தில் அரக்கர் வேறு உருவம் எடுத்துப் பிள்ளைகளைத் தூக்கிச் சென்று தின்பார்கள் என்று கேட்ட செய்தி நினைவில் வருகிறது. அதே அறியாமை, தன் பிள்ளைகளுக்கு ஏதேனும் தீங்கு வருமோ என்ற அச்சமாக அவள் தெளிவை மறைக்கிறது.

“ஆமாம் சம்பூகா! அதனதன் இனம் முதிர்ந்ததும், அதன் வாசனையைக் காட்டும். நாய் தான் நாம் வளர்க்கிறோம். அது நன்றி காட்டுகிறது. மந்தைகளுக்குக் காவலாக இருக்கிறது. இது அப்படியிருந்தால்… இருக்குமா?”

“தேவி, கொஞ்சம் வலிமை வந்ததும் அதுவே ஓடி விடும். நீங்கள் அஞ்ச வேண்டாம். ஏனெனில் இது அண்டி வாழும் மிருகம் அல்ல… ” என்று சம்பூகன் முற்றும் உணர்ந்தவனாக உறுதி கூறுகிறான்.

பிள்ளைகள் மாதுலன் அருகில், இசைக்கு வசப்பட்டவர்கள் போல் அமைதியாக இருக்கிறார்கள்.

மாதுலன் தன் கைகளால் அவர்கள் முகத்தை, மேனியை வருடுகிறான். பிறகு, தன் குழலை அவர்கள் வாயில் வைக்கிறான்.

குழந்தைகள் அரும்புப் பற்களைக் காட்டிச் சிரித்து மகிழ்கிறார்கள்.

பெரியன்னை கட்டியணைத்து முத்தமிடுகிறாள்.

“நீங்கள் இந்த இடத்தில் இருந்து அன்பால் உலகாள வேண்டும்” என்று ஆசி மொழிகிறாள்.

சூழலும், வாழ்முறையும், இயல்பை மாற்றுமா? குழந்தைகளின் முரட்டுத் தனத்தை மாற்றுவதில், பெரியன்னை மிகக் கருத்தாக இருக்கிறாள். பூமகளுக்கு இது மிகவும் உகப்பாக இருக்கிறது. தானியத்தை உரலில் இட்டு அவள் மெதுவாகக் குத்துகிறாள்.

மர உலக்கையின் ஓசை நயத்துக்கேற்ப பிள்ளைகள் கை கொட்டி ஆடும்படி பெரியன்னை பாடுகிறாள்.

கை கொட்டு ராசா, கை கொட்டு!
காட்டு சனமெல்லாம் கை கொட்டு!
வானத்துச் சந்திரன் கை கொட்டு!
வண்ணம் குலுங்கக் கை கொட்டு…

குழந்தைகள் இருவரில் குண்டுப் பையன் தொந்தி சரியக் குலுங்குகிறான். சதைப் பிடிப்பில்லாதவனோ, எழும்பி எழும்பிக் குதிக்கிறான். பூமியில் சிற்றடி பதிகையிலேயே துள்ளும் அழகு காணக் காணப் பரவசம் அடைகிறாள்.

“கண்ணம்மா, உனக்கு, அரண்மனையில் தங்கத் தொட்டிலில் பஞ்சணையில், பணிப்பெண்கள் கொஞ்சித் தாலாட்டுப் பாட, அரையில் கிண்கிணியும், முடியில் முத்துச்சரமும், கைவளை, கால் சதங்கை குலுங்க, இந்தப் பிள்ளைகள் வளர வேண்டியவர்களாயிற்றே, காட்டு வேடர்களிடையே, இப்படி வளர்கிறார்களே என்ற வருத்தம் இருக்கிறதா அம்மா?” இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்திராத பூமிஜா ஒரு கணம் திகைக்கிறாள். வினோதமான உணர்வுகள் அவள் நெஞ்சுக் குழியில் திரண்டு வருகின்றன. அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

“நீ குழந்தை பெற்ற நாள் காலையில் அவன் இங்கு வந்தான்” பெரியன்னை தக்ளியை உருட்டியவாறு, அவளை நிமிர்ந்து பாராமலே மெதுவாகச் சொல்கிறாள்.

திடுக்கிட்டவளாகப் பூமகள் அவளை ஏறிட்டு நோக்குகிறாள். அவன் என்றால் யார்? மன்னரா? இளவரசா? அன்று யாரோ படை கொண்டு செல்கிறார், பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள் என்று செய்தி கொண்டு வந்தார்களே? அதெல்லாம் உண்மையா? வினாக்கள் எழும்புகின்றன. ஆனால் அவள் நாவில் உயிர்க்கவில்லை.

“அவன் தான், இளைய மைத்துனன், அசுரன் யாரையோ கொல்ல, மகுடாபிஷேகம் செய்து கொண்டு போகும் வழியில், இங்கே பெண்கள் குலவையிட்டு சோபனம் பாடினார்களாம். யாருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேட்டு வந்தான். ‘காட்டில் யாருக்கோ குழந்தை பிறந்தால் யாரோ இளவரசனுக்கு என்ன வேலை? போய் வா!’ என்றேன்.”

“‘நான் கோசல நாட்டு இளவரசன். இங்கே வனதேவி பிள்ளை பெற்றாள் என்று பாடினார்களே’ என்றான். ‘எந்த இளவரசனுக்கும் இங்கே ஒரு வேலையுமில்லை, மூக்கை நுழைக்க. இந்தப் பூச்சிக் காட்டுக் குடிமக்கள் நச்சம்பு விடுவார்கள். உங்கள் ஜிரும்பகாஸ்திரங்கள் இங்குப் பலிக்காது. போ. ஏதேனும் விபரீதம் நிகழ்ந்து விடும் என்று எச்சரித்தேன்” என்று அமைதியாகப் பேசும் பெரியன்னையைப் பார்த்த வண்ணம் அவள் சிலையாக நிற்கிறாள்.

“நீ அப்போது உறக்க மயக்கத்தில் இருந்தாய். அவர்கள் ஏதோ எச்சிலைத் துப்புவது போல் துப்பிய பின், இங்கென்ன வேலை? இப்போது அந்த அரசுப் போகமும் மன்னர் உறவுகளும் நீ துப்பிய எச்சில் கண்ணம்மா?”

அவளுக்கு ஏனோ தெரியவில்லை, உடல் நடுங்குகிறது.

– தொடரும்…

– வனதேவியின் மைந்தர்கள் (நாவல்), முதல் பதிப்பு: ஆகஸ்டு 2001, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email
ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *