வனதேவியின் மைந்தர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 19, 2024
பார்வையிட்டோர்: 1,378 
 
 

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10

அரண்மனையின் வெளிவாயிலில் தான் இரதங்கள் வந்து நிற்பது வழக்கம். உள்ளே அந்தப்புர மாளிகைகளுக்குச் செல்லும் முற்றத்தில் பல்லக்கு மட்டுமே வரும். ஆனால் இரதம் உள்ளே வந்திருக்கிறதென்று சொல்லிவிட்டு, “உடனே வர வேண்டும்” என்று அவர் முன்னே விரைந்து நடக்கிறார். சிறிது தொலைவு சென்றதும் திரும்பிப் பார்த்து உறுதி செய்து கொண்டு நடக்கிறார்.

கோசலாதேவியின் மாளிகைக்குத்தான் செல்வார். மன்னர் அங்கேதான் இருப்பாராக இருக்கும்… அவளுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மிகவும் கோபமாக இருப்பாரோ என்று உள்ளுணர்வில் ஒரு கலக்கம் படிகிறது. இது… இவர் செய்வது, தமையனின் ஆணையா? தமையனில்லை; கணவர் என்ற உறவும் இல்லை… மன்னர் மாமன்னர் ஆணை… இந்தச் சூழலிலும் அவளுக்குச் சிரிப்பு வரும் போல இருக்கிறது.

கானகத்தில் வாழ்ந்த போது மான் இறைச்சி பதம் செய்து அவளுக்கு ஊட்டவே முன் வருவார். அவள் மறுப்பாள்… “இங்கே வேறு நல்ல உணவு கிடையாது. வெறும் புல்லையும் சருகையும் உண்டு நீ தேய்ந்தால், ஏற்கெனவே நூலிழை போல் இருக்கும் இடை முற்றிலும் தேய்ந்து விட, நீ இரு தண்டுகளாகிப் போவாய். மனைவியை வைத்துக் காப்பாற்றத் தெரியாத மன்னன் என்ற அவப்புகழை எனக்கு நீ பெற்றுத்தரப் போகிறாயா, பூமிஜா?…” என்பார். “எனக்கு வேண்டாம் என்று மறுக்கிறேன். நீங்கள் என்ன செய்வீர்கள்!” என்று அவள் பிடிவாதமாக அந்த உணவை ஒதுக்குவாள். உடனே கணவர் என்ற காப்பாள உறை கழன்று விழும். ‘மன்னர் ஆணை!’ என்ற கத்தி வெளிப்படும். “மன்னன்… நான் மன்னன் ஆணையிடுகிறேன். காலத்துக்கும் நீ அடி பணிய வேண்டும். பூமகளே!” என்று குரலை உயர்த்துவார்.

அவள் அப்போது அந்தக் குரலை விளையாட்டாகக் கருதிக் கலகலவென்று சிரிப்பாள்.

ஆனால், சிரிக்கக்கூடிய குரல் அல்ல அது.

அவளை அனற்குழியில் இறங்கச் செய்த குரல். ஆணை அது… அதை அப்போது அவள் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் இப்போது?

அவளை அவர் வெளி வாயிலுக்கு அல்லவோ அழைத்துச் செல்கிறார்? அச்சம் இனம் புரியாமல் நெஞ்சில் பரவுகிறது.

முதுகாலைப் பொழுது, மாளிகையின் அனைத்துப் பகுதிகளும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரம். வாயிற் காப்பவர்கள், பணிப்பெண்கள், ஏவலர்கள் அனைவரும் தத்தம் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நேரம். குஞ்சு குழந்தைகள் முதல் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருக்கும். அவள் வெளியே தென்பட்டால் ‘மகாராணிக்கு மங்களம்’ என்று வாழ்த்தி வணங்கும் குரல் ஒலிக்கும்…

ஆனால் சூழல் விறிச்சிட்டுக் கிடக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்து விட்டதோ?…

துடிப்பு கட்டுக்கடங்காமல் போகிறது.

அவரைக் குரலெடுத்துக் கூப்பிடவும் முடியவில்லை. அத்துணை தொலைவில் தன்னை இருத்திக் கொண்டிருக்கிறார். வரிக்கொம்பில் ஒற்றைக் காகம் ஒன்று சோகமாகக் கரைகிறது…

வாயில்… வாயிலில் தேர் நிற்கிறது. அதில் பூமாலை அலங்காரங்கள் எதுவும் இல்லை. தேரை ஓட்டும் பாகனாக… மன்னரோ, வேறு எவரோ இல்லை. மன்னர் அதில் அமர்ந்திருக்கவில்லை.

நால்வர் அமரும் பெரிய தேர். உச்சியில் மன்னர் செல்லும் போது பறக்கும் கொடியும் இல்லை. ஓரங்களில் கட்டப்பட்ட மணிகள், வெயிலில் பளபளக்கின்றன. அப்போது தான் அவள் கூர்ந்து பார்க்கிறாள். வெண்புரவிகளின் கயிற்றைப் பற்றிக் கொண்டு சுமந்திரர் நிற்கிறார். ஏதோ கனவில் நிகழ்வது போல் இருக்கிறது.

“தேவி, ஏறி அமரலாமே?…”

அவள் ஏறுவதற்கான படிகள் தாழ்ந்து பாதம் தாங்குகின்றன.

“மன்னர் வரவில்லையா?”

இளையவர் அதற்கு விடையிறுக்காமல் எங்கோ பார்க்கிறார்.

“நான் மட்டுமா போகிறேன்?”

“தாங்கள் ஆசையைத் தெரிவித்தீர்களே?”

“ஆனால் தனிமையில் இல்லையே?”

“மன்னரின் ஆணை; நான் செயலாற்றுகிறேன்.”

“இருக்கட்டும் நான் ராணிமாதாக்களை வணங்கிச் சொல்லிக் கொள்ள வேண்டாமா? அதற்கு முனி ஆசிரமங்களுக்கு, வேடர் குடிகளுக்கு ஆடைகள், தானியங்கள் பரிசிலாகக் கொண்டு செல்ல வேண்டுமே?” அவள் குரலுக்கு எதிரொலி இல்லை. சுமந்திரர் தேரைக் கிளப்பி விடுகிறார். அவள் முகம் தெரியாதபடி இளையவர் காவல் போல் அமர்ந்திருக்கிறார். மிகப் பெரிய பெட்டியை அவந்திகாவும், விமலையும் சுமந்து கொண்டு விரைந்து வருவது தெரிகிறது. ஆனால் அவளுக்கு ஒலி எழுப்ப முடியவில்லை. நகர வீதிகளைக் கடந்து குதிரைகள் பாய்ந்து செல்கின்றன. அவளுக்கு உடலும் உள்ளமும் குலுங்குகின்றன. நெஞ்சம் வாய்க்கு வந்துவிடும் போல் குலுக்கம். ஒரு மிகப்பெரிய இருள் பந்தாக வந்து எந்தக் குலுக்கலுக்கும் அசையாமல் அவளை விழுங்கி விட்டதாகத் தோன்றுகிறது.

குதிரைகள் குளம்படி ஓசை மட்டுமே ஒலிக்கிறது. குலுக்கல்… உடல், உள்ளம்… தனக்குள் இருக்கும் உயிர்… அதற்கும் அதிர்ச்சி ஏற்படுமோ? தன் மலர்க் கரத்தால் வயிற்றைப் பற்றிக் கொள்கிறாள்… உயிர்த் துடிப்புகள் மவுனமாகி விட்டனவோ?… இல்லை… இது, ஒரு விளையாட்டாகவும் இருக்கலாம். மன்னர் கோமதி நதிக்கரையில் காத்திருப்பார். முனி மக்களுக்குரிய பரிசிற் பொருட்களைச் சுமந்து முன்னமே தேர்கள் சென்றிருக்கலாம். அவளை எதற்காக அவர் இந்நிலையில் சோதிக்க வேண்டும்?… ஒரு கால் ஊர்மியின் விளையாட்டோ? ஊர்மியும் வருகிறாளோ? சதானந்தர் வந்திருந்தாரே? ஊர்மியை அழைத்துச் செல்லப் போகிறாரா? ஸீமந்த முகூர்த்தம் என்றார்கள்?…

ஊர்மிளையின் நினைவு வந்ததும் சிறிது ஆறுதலாக இருக்கிறது. இருக்கட்டும் இருக்கட்டும். இந்தப் போக்கிரிதான் இதற்கெல்லாம் காரணமா?… ஆனால் இந்தச் சுமந்திரர் அன்று எங்களை நாடு கடத்தத் தேரோட்டி வந்தாற் போல் எதற்கு வருகிறார்? பெண்கள் விஷயத்தில் இவர் எதற்கு மூக்கை நுழைக்க வேண்டும்?… சுமந்திரர்… முப்பாட்டன் காலத்து மந்திரி. பிடரியில் நரை தெரிய சாயம் மங்கிய பாகை… செவிகளில் குண்டலங்கள் இல்லை; முதுமையே செவிகளை இழிந்து தொங்கச் செய்து விட்டது. மலையே அசைந்தாலும் பேச்சு வராது… பெரிய மன்னருக்கு, சக்கரவர்த்திக்கு – இப்போதைய மன்னருக்கு – இவர் மகனுக்கு இருப்பாரோ? மெய்க்காப்பாளர், அமைச்சர், ஆலோசகர், தேர்ப்பாகன்…

அப்போது ஊரே இவர்கள் பின் அழுது கொண்டு வந்தது. ஆற்றின் கரையில் மக்கள் உறங்கச் சென்ற நேரம் பார்த்து இரவுக்கிரவே இவர்களை ஆறு கடக்க ஏற்பாடு செய்தார். அப்போது அதெல்லாம் விளையாட்டுப் போல் உற்சாகமாக இருந்தது.

ஆற்றங்கரை தெரிகிறது.

ஊர்மியோ, மன்னரோ, எங்கு இருப்பார்கள்?

ஆற்றில் அதிக வெள்ளப் பெருக்கில்லை. ஆற்றின் கரையில் உள்ள வயல்களைக் கடந்து தேர் செல்கையில் ஆங்காங்கு முற்றிய தானியக் கதிர்களைக் கொத்த வரும் பறவைகளின் மீது கவண் கற்கள் எறியும் உழவர் குடிப்பிள்ளைகளை அவள் பார்க்கிறாள். இவர்கள் தேரைப் பார்த்துவிட்டு ஆங்காங்கு தென்படும் சிறுவர்கள், பெண் மக்கள் வியப்புடன் கண்களை அகல விரிக்கிறார்கள்.

“ஏய்… மகாராணி! மகாராணி! ராஜா…!”

நிலத்தில் வேலை செய்யும் பெண்கள் சரேலென்று மார்பு மறைய, தலை குனிகிறார்கள்.

“மகாராணிக்கு மங்களம்…”

அரவங்கள் மடிந்து போகின்றன. வானமே சல்லென்று கவிழ்ந்து விட்டாற் போல், தோன்றுகிறது. ரொட்டி விள்ளலும் பாற் கஞ்சியும் நெஞ்சிலேயே குழம்புகின்றன. இத்தனை நேரமாகியும் இத்தனை குலுங்கலிலும் அது சீரணமாக ஏன் குடலுக்கு இறங்கவில்லை? அவள் புளிப்புக் காய்க்கு ஆசைப்பட்ட போது மரங்கள் பூக்கவில்லை. இப்போது பிஞ்சும் காயுமாக மரங்கள். பொன்னிறக் கனிகளைக் குரங்குகள் கடித்துப் போடுகின்றன… அணில்கள் கண்களில் படவில்லை…

இளையவரும் சுமந்திரரும் கூடப் பேசவில்லை.

ஆற்றில் நீர் மிகக் குறைவாக இருக்கும் பக்கம் தேர்ச்சக்கரம் இறங்கிச் செல்கிறது. நடுவில் மணல் திட்டில் சக்கரம் புதைகிறது. இளையவர் இறங்கித் தள்ளுகிறார். பிறகு புல்லும் புதர்களும் உடைய இடங்கள். ஆறு கடந்து விட்டார்கள்… எங்கே? எங்கே போகிறார்கள்? யாரோ எப்போதோ கட்டிய மண் குடில்கள்; பிரிந்த கூரைகள். தேர் வருவதைக் கண்ணுற்ற வேடர்கள் சிலர் ஓடி வருகின்றனர். தேர் நிற்கவில்லை. அவர்கள் மேனி குறுக்கி, வாய் பொத்தி, தேருடன் விரைந்து தொடருகின்றன. அந்தி சாயும் நேரம். மாடுகளை மேய்த்துத் திரும்பும் சிறுவர் வியப்புடன் அவளையும் இளையவரையும் மாறி மாறிப் பார்க்கின்றனர். தேர் நிற்கிறது; குதிரைகள் கனைக்கின்றன. சுமந்திரர் தட்டிக் கொடுக்கிறார்.

“பிள்ளைகளா, பக்கத்தில் தங்குமிடம் இருக்கிறதா?”

“இருக்குங்க மகாராசா! நேராகப் போனால் சாமி ஆசிரமங்கள் இருக்கும்…”

வேடர் குடிமகன் ஒருவன் விரைந்து வருகிறான்.

“சாமி, வாங்க… நம்ம பக்கம் நல்ல இடம் இருக்கு. ரா தங்கி, இளைப்பாறிப் போகலாம்…”

குதிரைகள் மெதுவாகச் செல்கின்றன. முட்டு முட்டாக வேடர் குடில்கள். மரங்களில் தோல்கள் தொங்குகின்றன. நிணம் பொசுங்கும் வாடை… பறவை இறகுகளின் குவியல்கள்… கண்டியைப் போல் ஒரு குழந்தை அம்மணமாக வருகிறது.

தேரைக் கண்டதும் நாய்கள் குரைக்கின்றன.

தீப்பந்தங்களுடன் பலர் வருகின்றனர். தேர் நிற்கிறது.

பூமகளை ஒரு வேடுவ மகள் கை கொடுத்து, அணைத்து இறங்கச் செய்கிறாள்.

“மகாராணி! வாங்க! அடிமை ரீமு நான்…”

தீக்கொழுந்தின் வெளிச்சத்தில், அவள் முன் முடி நரைத்து, முன்பற்கள் விழுந்து கோலம் இணக்கமாகத் தெரிகிறது.

“என்ன சந்தோசமான ராத்திரி… மகாராணி…”

மெள்ள அணைத்து அவளை நடத்திச் செல்கிறார்கள்.

பந்தங்கள் வழி காட்டுகின்றன. ஆடுகள் கத்தும் வரவேற்பொலி குலவையிடும் வரவேற்பு.

தோலாடை விரிப்பில் அமர்த்து முன், குடுவையில் நீர் கொண்டு வருகிறார்கள் பெண்கள். இருளில், சுளுந்து வெளிச்சங்களில் இணக்கமான அன்பு முகங்கள்… கால்களைக் கழுவி விடுகிறார்கள். முகம் துடைக்கச் செய்கிறார்கள். புத்துணர்வு கூடுகிறது.

இதுதான் என் பிறந்த வீடோ? பிரசவத்துக்கு இந்தத் தாய்வீட்டுக்கு மன்னர் அனுப்பி இருக்கிறாரோ?

முகத்தைக் கழுவிக் கொண்ட பின் வாயில் நீரூற்றிக் கொப்பளித்ததை ஏந்த ஒரு மண் தாலம் வருகிறது.

ஓங்கரித்து வரும் புரட்டல் அடங்கி, சமனமாகிறது.

அங்கிருந்து இதமாகப் புல் பரப்பிய இன்னொரு குடிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கனிகளைச் சுமந்து ஒரு வேடுவப் பெண் வருகிறாள். பிரப்பந்தட்டில், அரிந்த மாங்கனிகள், இருக்கின்றன. அவள் குனிந்து வைக்கையில், வேடுவருக்கே உரிய ஒரு வாடை வீசுகிறது.

மன்னர் முன்பு தங்களுக்கு ஒரு வேடுவக் கிழவி, கடித்துக் கடித்து ருசி பார்த்த கனிகளைத் தந்து உபசரித்ததை விவரித்த வரலாறு நினைவில் முட்டுகிறது. இவரும் கிழவிதான். முன்பற்கள் இல்லை. தாடையோரம் ஒரு பல் தொத்திக் கொண்டு இருக்கிறது. முடி உதிர்ந்து முன் மண்டை தெரிகிறது. இழிந்த செவிகள். மார்பகம் பையாகத் தொங்குகிறது. அரையில் அதிகப்படியாக ஒரு நார் ஆடை மானம் மறைக்கிறது.

அவள் இவள் பட்டுப் போன்ற கூந்தலைத் தேய்ந்த கரத்தால் மென்மையாகத் தடவி, “தேவி, உங்களுக்கு வணக்கம்” என்று கரைகிறாள். இது வணக்கமா? வாழ்த்தா? பூமகளின் நெஞ்சம் உருகுகிறது.

“மகாராணி, பயணத்தில் களைத்திருக்கிறீர்கள். இந்தக் கனிகளை உண்டு இங்கே படுத்து இளைப்பாறுங்கள். எங்கள் குலதெய்வம் வந்தாற் போல் வந்திருக்கிறீர்கள்…” என்று பொருள் பட கொச்சை மொழியில் தழுதழுக்கிறாள் அந்த அம்மை.

அந்தக் கனிகள், புளிப்பும், இனிப்பும் கலந்ததாக, நாரும் தோலுமாக இருந்தாலும், அவர்கள் அன்பு அவளுக்கு அமுதமாக அந்த உணவை மாற்றி விடுகிறது. ஒரு குடுவையில், காரசாரமான விறுவிறுப்பான பானம் ஒன்று கொண்டு வந்து தருகிறார்கள். அவள் அதை அருந்திய பின் அந்தப் புல் படுக்கையில் தலை சாய்க்கிறாள். சற்றைக்கெல்லாம் கண்கள் சுழல, உறக்கம் வந்து விடுகிறது.

கனவுகளே இல்லாத உறக்கம். எங்கோ ஆனந்தம் தாலாட்டும் அமைதி. அன்னை மடி என்பது இதுதானோ? என் அன்னை… என் தாய் என்னைப் பத்து மாதங்கள் வைத்துப் பேணிய மணி வயிறு. எனக்கு உயிரும், நிணமும், அறிவும், பிரக்ஞையும் அளித்த கோயில், எனக்கு ஆதாரமுண்டு; எனக்கு நிலையான உணர்வு உண்டு. அதெல்லாம் தந்தவள் அம்மை. அம்மையே, தாங்கள் என் தந்தையறியாமல் என்னைப் பெற்றெடுத்தீரோ? தாயே என்னை உன்னதமான குலத்தில் சேர்க்க, மன்னர் உழும் இடத்தில் என்னைக் கிடத்தினீரோ, அதற்காக என்னைத் துறந்தீரோ?… தாயே, நான் வேடுவகுல மகளாகவே இருந்திருப்பேனே? மன்னரின் மாளிகைப் பஞ்சணைகள் முள் முடிச்சுகள் நிரம்பியவை. அந்தப் பளபளப்பும் பட்டு மென்மைகளும் ஒளியும் குளிர்ச்சியும் கூடியவை அல்ல. மனிதருக்கு மனிதர் வேலி போடும், தனிமைப்படுத்தும் முட்கள்… அரக்கர் வேந்தனின் மாளிகைத் தோட்டம் மட்டுமே சிறையன்று. மன்னர் குடிகள் எல்லாமே பெண்களுக்குச் சிறைதான்… என்னை அந்தச் சிறையில் இருந்து மீட்டு வர, தாயே, எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தைத் தந்தீரோ?…

டகடகடகங்கென்று ஓசை அதிர்கிறது. ஓ… யாரோ அரசகுமாரர் வேட்டைக்கு வந்துள்ளார். நான்கு முழ நீளமுள்ள வேங்கைப் புலி, பெண் புலியை அம்பெய்து வீழ்த்தி விட்டார். அதற்கான வெற்றிக் கொட்டு…

யாருக்கு… யாருக்கு வெற்றி! அந்தப் புலி இரையெடுத்துக் குடும்பம் புலர்த்தும்! அது தப்பா?…

ஏய்… போதும்… போதுமப்பா! போதும்.

யாரோ சிரிக்கிறார்கள்.

பட்டென்று விழிப்பு வருகிறது. அவள் கண்களை மலர மலரக் கொட்டிக் கொண்டும், அங்கையினால் அழுத்திக் கொண்டும் தெளிவு துலங்கப் பார்க்கிறாள். கிழக்கு வெளுத்து உதயவானின் செம்மையும் கரைந்து வருகிறது.

“இவ்வளவு நேரமா தூங்கி விட்டேன்?”

“மன்னித்துக் கொள்ளுங்கள், மகாராணி? ராஜா, காலையில் வந்து, கங்கை கடந்து செல்ல வேண்டும் என்று அழைத்தார். தாங்கள் அயர்ந்து உறங்கினீர்கள்…”

திரை விலகி, நினைவுகள் குவிகின்றன.

அவள் கண்கள் அங்குக் கூடியிருந்த முகங்களில் யாரையோ தேடுகிறது. அந்த அம்மை, அவள் அன்னை போல் இதம் செய்த அம்மை எங்கே?

“அவர் எங்கே? எனக்குக் கனிகள் அரிந்து கொடுத்து, இதமாகக் கால்களைப் பிடித்து விட்ட அன்னை, எங்கே?”

“இவள் தான்… ரீமு…”

“தாயே, நான் தான் கொடுத்தேன்…”

முடியுல் பறவை இறகுகளைச் செருகிக் கொண்டு மோவாயில் முக்கட்டி போல் பச்சைக் குத்துடன் ஓர் இளம் பெண் முத்து நகை சிந்துகிறாள்.

“என் அம்மா… நான் தங்களுக்குக் குடுவையில் குடிக்கப் பானம் கொண்டு வந்தேன்…”

அவர்கள் எல்லோரையும் அணைந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.

“நீங்கள் அன்னை, தமக்கை, தங்கை, எல்லா எல்லா உறவுகளும் எனக்கு இங்கே இருக்கின்றன. நான் இப்போது எதற்கு, எங்குச் செல்ல வேண்டும்!”

ஆனால் கேட்க நா எழும்பவில்லை. “மன்னர் ஆணையை, இளையவர் நிறைவேற்றுகிறார். யாரேனும் சடாமுடி முனி வர்க்கங்களைப் பணிந்து ஆசி பெற்று வர வேண்டும்!”

அவள் அவர்களிடம் பிரியா விடை பெறுகிறாள்.

கங்கை… குறுகலாகத் தெரிகிறது. படகோட்டி ஒருவன் சிறு படகைத் தயாராக வைத்திருக்கிறான். அக்கரை கரும்பச்சைக் கானகம் என்று அடர்த்தியாக விள்ளுகிறது.

சுமந்திரர் படகில் ஏறவில்லை. இளையவர் மட்டுமே இருக்கிறார். காலை நேரத்து வெளிச்சம் சிற்றலைகளில் பிரதிபலிப்பது வாழ்க்கையின் கருமைகள் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையாக உள்ளத்தில் படிகிறது. ஆழங்காணாத கிணற்றில் தன் கையைக் கொண்டு தரைக்காகத் துழாவுவது போல் எதிர்க்கரையை வெறித்துப் பார்க்கிறாள்.

அக்கரையில் மனித அரவமே தெரியவில்லை. ஒன்றிரண்டு பறவைகள், வெண் கொக்குகள், பறந்து செல்கின்றன… பெரிய அடர்ந்த மரங்கள். கதம்ப மரங்கள். ஓங்கி உயர்ந்த மருத மரங்கள். அவர் இறங்கி முன்னே செல்கிறார். அவளைத் தொடர்ந்து வரப் பணிப்பது போல் நின்று நின்று பார்த்துச் செல்கிறார். குற்றிச் செடிகள்; ஒற்றையடிப் பாதைகள். மா, ஆல், அத்தி என்று பல்வேறு மரங்கள்; கானகத்துக்கே உரிய மணங்கள். பல்வேறு பறவைகள் இவள் வரவுக்குக் கட்டியம் கூறுபவை போல் வெவ்வேறு குரல்களில் ஒலி எழுப்புகின்றன.

மிகப்பெரிய ஆலமரம் ஒன்று பெரிய பெரிய விழுதுகளுடன் அங்கே பரந்திருக்கிறது.

“ஆகா! ஏதோ மன்னர் அரண்மனை போல் இல்லை?” பூமகள், முதன் முதலாக எழுப்பும் குரல் அது. இளையவர் நிற்கிறார்.

“ஆம், தேவி! இனி இதுவே தங்கள் அரண்மனை!” பச்சை மரத்தில் ஒரு கத்தி செருகினாற் போன்று அந்த விடை பதிகிறது. அவள் சட்டென்று அந்த முகத்தில், அந்தக் குரலில் செருகப்பட்ட இரகசியத்தைப் பற்றிக் கொள்கிறாள். இதுகாறும் இழைந்த இழை, அறுந்து தொங்குகிறது.

“இது மன்னர் ஆணை. தேவி என்னை வேறெதுவும் தாங்கள் கேட்காமல் மன்னித்தருளுங்கள்!”

அவள் முகம் இருண்டு போகிறது.

திரும்பிச் செல்கிறான்.

அத்தியாயம்-11

அவன் செல்வதையே அவள் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். கண்கள் அவன் வரிவடிவக் கோட்டில் தன்னுணர்வின்றி ஒன்றுகின்றன. இளையவர்… இளையவர்…

அந்நாளில் மானின் பின் அதைக் கொல்லச் சென்ற அண்ணனுக்குத் துணை போகாத இளையவன். அண்ணன் அதைக் கொல்லுமுன், அதை அவர் அம்பிலிருந்து காப்பாற்று என்று போகச் சொன்னாள். இளையவன் மறுத்தான். இவனுக்கென்று ஒரு தனி எண்ணம் கிடையாது. அண்ணன் கொலை செய்வதை ஆதரிப்பவன். அவன் நிழல்… அவள் ஆத்திரத்துடன் போ… போ… போ! ஏன் இங்கே நிற்கிறாய்? எனக்கு காவலா? எனக்கு நீ காவலா, அல்லது சமயம் பார்த்திருக்கிறாயா என்று தீச்சொல்லை உமிழ்ந்தாள். அந்தத் தீச்சொல்லும் அவனை விரட்டவில்லை. ஒரு கோட்டைப் போட்டுவிட்டுச் சென்றான்.

“நீ என்ன எனக்குக் கோடு போடுவது! நான் உன் அடிமையா! கானகம் என்னுடையது; என் அன்னை மடி; நான் எங்கும் திரிவேன்” என்று அந்தக் கோட்டை அழித்தாள்.

இன்று எந்தக் கோடும் இல்லை. அவன் போகிறான்.

அவன் கையில் வில்லும் அம்பும் இல்லை.

அண்ணன் அரக்கர்களை அழித்து விட்டான். எனவே கானகம் அபாயமற்றது என்று நினைத்தானா? கானகம் அவளுடையது; ஆசைப்பட்டாள்; கொண்டு வந்து விட்டிருக்கிறான்… ஆசை… கருவுற்றவள், நிறை சூலியாக இருக்கும் போது ஆசையை நிறைவேற்ற தன்னந்தனியாக… அனுப்பி வைத்திருக்கிறான்…

அவளுக்கு உடலில் சிலிர்ப்பு உண்டாகிறது.

கானகம்… தண்டனையா? அடிமைப் பெண்களும் அறுசுவை உண்டியும், பஞ்சணை இனிமைகளும் இல்லாத கானகமும், தனிமையும் தண்டனை என்று மெய்ப்பித்திருக்கிறார்களா?

அவந்திகா! சாமளி! பெட்டியைத் தூக்கிக் கொண்டு மகாராணியைப் பரிசில்களுடன் அனுப்பி வைக்க வந்தீர்களே! உங்கள் மகாராணி நாடு கடத்தப்பட்டிருக்கிறாள்… பேதைப் பெண்களா! உங்கள் மகாராணி இனி மகாராணி இல்லை. முழுதுமான பேதை. நீங்கள் இனி யாருக்கு ஊழியம் செய்யப் போவீர்கள்?

அவளுடைய இந்த எண்ண மின்னல்கள், மதுக்குடம் பொங்கிவரும் நுரை போன்ற சிரிப்பாய்ப் பொங்கி வருகிறது; அவள் உரக்கச் சிரிக்கிறாள். அந்தக் காட்டில் பெரிய மாளிகை போல் விழுது பரப்பி நின்ற ஆலமரத்தினடியில், அங்குக் குடியிருந்த பல்வேறு உயிரினங்களின் அரவங்களும் அடங்கி விட, இவளுடைய சிரிப்பு மட்டும் நெடுநேரம் இவளுக்கு ஒலிப்பதாக உணருகிறாள். அந்தச் சிரிப்பு அவளுக்கே அந்நியமாகப் படுகிறது. அவள் சிரிப்பை நிறுத்தியதும் அங்கிருந்த பறவைக் கூட்டங்கள் சிறகடித்து வட்டமாகப் பறக்கின்றன. தங்கள் தங்கள் மொழியில் கூச்சல் போடுகின்றன. ஆலமரப் பொந்தில் சுருண்டு கிடந்த கருநாகம் ஒன்று விருவிரென்று வெளியே வந்து, குடை விரிப்பது போல் படம் எடுத்து அவளுக்குச் சற்று எட்டிய தொலைவில் முகம் காட்டி வரவேற்பு அளிக்கிறது.

சற்று எட்ட, கூட்டமாகச் செல்லும் மானினம், அவள் அங்கு இருப்பதைக் கண்டு விட்ட நிலையில் கூட்டத்தோடு நின்று பார்க்கிறது.

இப்போது அவளுக்கு இன்னும் சிரிப்பு பொங்கி வருகிறது.

“தோழிகளே, தோழர்களே, வாருங்கள் இங்கு வில், அம்பு, வாள், ஈட்டி, கவண்கல் எதுவும் கிடையாது. என்னை நம்புங்கள்… நான், நான் மட்டுமே இங்குள்ளேன்!”

அவள் சருகுகள் கால்களில் மிதிபடும் மெல்லோசை கேட்க, மான் கூட்டத்தின் அருகே சென்று ஒரு குட்டி மானைப் பற்றித் தன் மென் கரங்களால் தடவிக் கொடுக்கிறாள். அதன் கழுத்தோடு அணைந்து இதம் அநுபவிக்கிறாள். அதன் உறவுக்குழு, அவளால் ஆபத்தொன்றுமில்லை என்றுணர்ந்து அருகில் உள்ள தடாகக்கரைக்கு நகருகிறது. இவளும் தடாகக் கரைக்கு வருகிறாள். எத்தனை நீர்ப்பறவைகள்! அன்னப் பறவைகள் – சிவந்த மூக்கும் வெண் தூவிகளுமாக… ஒற்றைக்கால் தவமிருக்கும், கொக்கு முனிகள்… கதிரவனைப் பார்த்து மலர்ந்து நேயம் அநுபவிக்கும் தாமரைகள்… நீலரேகை ஓடும் செந்தாமரைகள். வட்டவட்டமான இலைகளில் முத்துக்கள் இழைவதும் சிதறுவதுமான கோலங்கள்… வண்டினம் வந்தமர்ந்து தேன் நுகரும் ஆரவாரங்கள்.

பூமகள், அருகில் ஓடும் ஒரு மரத்து வேர்த்தண்டில் அமர்ந்து தடாகத்தில் கால்களை நனைத்துக் கொள்கிறாள். பளிங்கு போன்ற நீர்… மீன்கள் அவள் பொற்பாதங்களில் மொய்த்து, பாதசேவை செய்கின்றன.

“அடி, தோழிகளா, போதுமடி சல்லாபமும் சேவையும்! நான் தன்னந்தனியாக வந்திருக்கிறேன். புதுமணப்பெண் அல்ல, குறுகுறுத்து நாணுவதற்கு?” என்று கூறிக் கொண்டு கரங்களால் நீரை அள்ளி எடுத்து அவற்றை விரட்டுகிறாள். அது பெரிய தடாகம். மான்கள் எட்ட எதிர்க்கரைக்கு நகர்ந்து போகின்றன. அருகே, புதரிலிருந்து வெளிப்படும் கரடி ஒன்று, சட்டென்று நீரைக் கலக்கிக் கொண்டு மூழ்கி, எழும்புகையில் அதன் வாயில் ஒரு பெரிய மீன் சிக்கி இருக்கிறது.

இவள் கலீரென்று சிரிக்க, அது திடுக்கிட்டாற் போல் அதிர, மீன் நழுவித் தண்ணீரில் விழுகிறது.

“… கரடி மாமி? உனக்குப் பழமில்லையா? புற்றாஞ்சோறு இல்லையா? தேனில்லையா? ஏன், பாவம், மீனைப் பிடித்து வதைக்கிறீர்கள்?” என்று அருகில் சென்று அதன் தலையைத் தடவிக் கொடுக்கிறாள். பொச பொசவென்ற முடி நனைந்திருக்கிறது. பட்டுப்போல் மென்மையாக உணருகிறாள்.

“ஓ! உனக்கும் மசக்கையா? அதனால் தான் மீன் பிடிக்க வந்தாயா?… எனக்கும் மசக்கை ஆசை; ஆனால் இப்போதுதான் மன்னர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்…”

இவள் கைச்சுகத்தில் அந்தக் கரடி கட்டுப்பட்டாற் போல் நிற்கிறது. “உனக்கு மன்னர் இருக்கிறாரா?… இருக்கமாட்டார். இருந்திருந்தால் உன்னைக் காடு கடத்தி, நாட்டு மனிதர்களிடம் அனுப்பி வைத்திருப்பாராக இருக்கும். மாற்றான் வீடு, சிறை, அக்கினிகுண்டம், ஆண்டான், அடிமை எதுவும் இல்லாத உங்கள் உலகம் எனக்குப் பாதுகாப்பானதுதானே?…”

வெயில் ஏறுவது உறைக்காமல் குளிர்ச்சியின் பாயல் படிகிறது. இதமான ஒலிகளும், நீரும் நிழலும், ஒளியும் அவளுக்கு இதமான தாலாட்டுப்போல் சூழலோடு ஒன்ற வைத்து பேரின்பப்படிகளில் ஏற்றுகின்றன. கரடி மீண்டும் மீன் பிடிக்க நீரில் முழ்குகிறது.

ஓர் எறும்புச்சாரி, வாயில் வெண்மையாக எதையோ கவ்விக் கொண்டு மரத்தின் மேல் ஏறுகிறது. அவள் நிமிர்ந்து பார்க்கிறாள். இது என்ன மரம்? அரசா? இலைகள் சிறியவை; சூரிய ஒளியில் துளிர்கள் வெள்ளிக்காசுகள் போல் மின்னுகின்றன; நீரில் நிழல்கள் ஜாலம் செய்கின்றன. சரசரவென்று பறவைகளின் இறக்கைகள் படபடக்கும் ஓசை கேட்கிறது. மரக்கிளைகள் குலுங்குகின்றன. சிவப்பும் மஞ்சளுமாகக் கனிகள் இரைகின்றன…

ஓ…? அநுமனின் குலத்தாரோ?

அநுமன் செய்தி அனுப்பியிருப்பானோ? அந்தக் கனிகளைப் பொறுக்கி முன் மரத்தின் மேல் நிமிர்ந்து பார்க்கிறாள். அந்தக் குரங்கு, குட்டியை மடியில் இடுக்கிக் கொண்டு தாவித்தாவிப் போகிறது. மரத்துக்கு மரம் தாவிச் செல்கின்றன. பல குரங்குகள். அவள் காத்துக் காத்து அருகே செல்கிறாள். எந்தச் சேதியும் யாரும் அனுப்பவில்லை. குரங்கினம் அப்பால் சென்று விட்டது.

கீழே செங்காயாகக் கிடக்கும் கனி ஒன்றை எடுத்துக் கடிக்கிறாள். விருவிரென்று இனிப்பும் துவர்ப்புமாக ஒரு சுவை ஆரோக்கியமாகப் பரவுகிறது. நந்தமுனியின் நினைவு வருகிறது.

அவர் இப்போது எங்கே இருப்பார்?… அவர் இங்கே இப்போது வந்தால் எத்துணை நன்றாக இருக்கும்? அப்போது ஓசைப்படாமல் அவள் தோளில் வந்திறங்குகிறது ஒரு கிளி.

அவள் கையிலிருக்கும் செங்கனியைக் கொத்துகிறது.

“தத்தம்மா! தத்தம்மா? என் உயிர்த்தோழி தத்தம்மா தானா? எனக்கு இது கனவல்லவே?…”

அது அந்தக் கனியை உண்ணவில்லை. கொத்திக் கொத்தித் திருவிப் போடுகிறது.

“என் தத்தம்மா இல்லை. ஆனாலும், நீ என் தோழியாக வந்திருக்கிறாய். என் தனிமையைப் போக்குவாய். உனக்கு நான் கதைகள் சொல்வேன்; பாடல்கள் இசைப்பேன். உன்னைக் கூட்டில் அடைக்கும் சாதியில் பட்டவளல்ல நான். நான் பூமகள்… பூமிஜா, உன் பிரியமான தோழி. சொல்லு!” என்று அதைத் தடவிக் கொடுக்கிறாள்.

“ஏய், உன்னை நான் தத்தம்மா என்றே கூப்பிடுகிறேன். ஏன் குரலே காட்டாமலிருக்கிறாய்! ஊமையா நீ? பறவைகளில் ஊமை உண்டா? நீ என் தத்தம்மா போலவே இருக்கிறாய். அது ஒரு நாள் காயம்பட்டு வீழ்ந்தது. அதை எடுத்து இதம் செய்தேன். தோழியாக்கிக் கொண்டேன். மன்னர் பெயரைச் சொல்லப் பழக்கினேன். பேச்சுப் பழக்கினேன். பிறகு ஒருநாள் அது மன்னர் பெயரைச் சொல்ல மறுத்து விட்டது. ‘மன்னர் பெயரை நான் ஏன் சொல்ல வேண்டும்? நீதான் எனக்குத் தோழி, எல்லாம் தருகிற தாய். உன் பேரைத்தான் சொல்வேன். பூமிஜா – பூமிஜா – பூமகள் – பூமகள்… என்று எப்போதும் பேசும்.”

இவள் கூறி முடித்துக் கன்னத்தோடு பட வைக்கையில் கண்களில் இருந்து வெம்பனி உருகி வழிகிறது.

“தத்தம்மா, தத்தம்மா… நீ… நீயா…? நீயா…? ஆம், உன் அடிவயிற்றில் வடு…” என்று தடவுகிறாள்.

“தத்தம்மா? நீ காட்டுப் பூனைக்கு விருந்தாகி விட்டாய் என்றார்கள்… எங்கேயடி போயிருந்தாய்? ஊர் சுற்றி விட்டு என்னைத் தேடிக் கண்டுபிடித்தாயா? தத்தம்மா?”

அதை மார்போடு அணைத்துக் கொள்கிறாள். கன்னத்து வெம்பனியில் சிறகு நனைகிறது.

“பூமிஜா, தாயே, எனக்கு உன்னைப் பார்க்க தாளவில்லை. அநியாயம் நடக்கிறது. அந்தப் பெரிய அரண்மனையில் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியாது. அந்த ஜலஜை, நஞ்சருந்தித் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்…” ஒரு கணம் உலகத்துத் துடிப்புகளே நின்று விட்டாற் போன்று அவள் திகைக்கிறாள்.

“ஆம், நச்சரளி விதையருந்தி மாண்டு கிடந்தாள். நீங்கள் வனவிருந்தாடச் சென்றீர்களே அப்போது. அன்று காலையில்…”

“அதனால் தான் எங்களை அவசரமாக அனுப்பி வைத்தார்களா, தத்தம்மா?”

“இருக்கும்… ‘என்னால் இப்பிறவியில் உங்களை அடைய முடியவில்லை, அடுத்த பிறவியில் உங்களை அடைவேன்…’ என்றாளாம். இந்தப் பேச்சு அனைத்துப் பணிப்பெண்கள் வாயிலும் அரைபட்டது. அரக்கனின் நெஞ்சில் தகாத இச்சை பிறந்த குற்றம் உங்களுக்குத் தண்டனையாயிற்று. சிறையிருந்தீர்கள். எரி புகுந்தீர்கள். சத்தியத்தை நிரூபித்தீர்கள். இப்போது அதே புள்ளி விழுந்திருக்கிறது. சத்தியத்தை நிரூபிக்க வேண்டும்?”

“தத்தம்மா!”

நெஞ்சிலிருந்து வெடித்து வரும் அலறல் போல் ஒலிக்கிறது.

“தாயே, உங்களுக்குக் கோபம் வரும். அந்த ஜலஜாவின் புருசன், துணி வெளுப்பவன், அவளை வெகுண்டு கடிந்தானாம். உன் சரிதை எனக்குத் தெரியும்; வராதே என்றானாம். அவள் வ்ந்து முறையிட்டு விட்டு, மாண்டு போனாள். அப்போது, மன்னர் எந்த வகையில் நியாயம் செய்ய வேண்டும்?”

எந்த வகையில்…? அக்கினி குண்டமும் நாடு கடத்தலும் பெண்ணுக்கு மட்டுமா?

“தாயே, தங்களைப் பார்க்குந்தோறும் அவர்களுக்கு மனச்சாட்சி கூர்முள்ளாக உறுத்தும். எனக்கு உயிர்வாழவே பிடிக்கவில்லை. காட்டுப் பூனை கவ்வட்டும் என்று நானே வலியச் சென்றேன். அது என்னைத் தோட்டம் வரைக்கும் கொண்டு சென்ற பின் அஞ்சி விட்டு விட்டது. பிறகு…”

அவள் மனதில் கரும் படலத்தில் வரும் மங்கிய காட்சிகளாக இளையவன் வந்ததும் ஆணை என்றதும், கிழட்டுச் சுமந்திரர் தேரோட்டியதும் வருகின்றன.

முள் உறுத்தாமலிருக்க, சத்தியத்தைக் கொல்வதா? எது சத்தியம்? எது முள்? முள்ளை மறைக்க முள் படலத்தையே அதன் மீது போடுவதா? இளையவருக்கு, நான் இந்த அநியாயம் செய்ய மாட்டேன் என்று சொல்ல அறிவு இல்லையா? அன்னை கைகேயிக்கு இது தெரியுமா? கிழட்டு மந்திரிக்கு நியாய உணர்வே செத்து விட்டதா? ஊர் மக்கள் இதை ஒத்துக் கொள்கின்றனரா?…

ஒருகால் இவள் குலம் கோத்திரம் அறியாத அநாதை என்பதால் இந்த நியாயம் செல்லுபடியாகிறதோ?

ஜலஜாவின் முகம் கண்களில் தெரிகிறது.

பெண்ணொருத்திக்கு ஓர் ஆண்மகனை விரும்ப உரிமை கிடையாது. அன்று மூக்கையும் செவியையும் அரிந்தார்கள். பெண் கொலைக்கு இவர்கள் கூசியதில்லையே? பொன்னிறமான சுருண்ட கூந்தலும்… பளிங்கு விழிகளும், பொன் மேனியுமாக உலவிய ஜலஜையின் மீது அளவிறந்த இரக்கம் மேலிடுகிறது.

…அடிப்பாவிப் பெண்ணே! உயிர் உனக்கு அவ்வளவு எளிதாகி விட்டதா?

தத்தம்மா ஒரு வட்டம் சுற்றி விட்டு அவள் முன் வந்து அமருகிறது.

“நான் தோட்டத்தில் தான் இருந்தேன். உன் சுவாசக்காற்று இழையும் இடமாகப் பறந்து வந்தேன். உன் கவடறியாத துயரத்தில், நானும் பங்கு கொண்டு தேரின் பின்புறமும், படகின் பின் விளிம்பிலும் ஒளிந்து வந்தேன். எனக்கு இளவரசரைக் குத்திக் காயப்படுத்த வேண்டும் என்று வெறியே ஏற்பட்டது. ஆனாலும் உனக்குப் பதட்டம் ஏற்படக்கூடாதே என்று பொறுத்தேன்…”

மன்னர் செய்த இந்த அநியாயத்தின் நிழல், காலமெல்லாம் ஒளி பாய்ச்சினாலும் போகாது.

அவள் துயரத்தை விழுங்கிக் கொண்டு சிலையாய் இறுகினாற் போல் அமர்ந்து இருக்கிறாள்.

அகலிகை நினைவுக்கு வருகிறாள். சதானந்தரின் தாய்… அவள் மீது பாவத்தின் கருநிழல் படிந்தது; முனிவர் விட்டுச் சென்றார். கல்லாய் இறுகினாற் போல் வாழ்ந்தாளாம் அவள். மன்னர் வந்ததும் எழுந்து வந்து, திரும்பி வந்த முனிவரையும் சேர்ந்து பணிந்தாளாம். கல்லைப் போல் கிடந்தவள் உம்மைக் கண்டதும் இளகி வந்தாளாம். கதை சொல்கிறார்கள். இப்போது… அந்த கோதம முனியையும் மிஞ்சி விட்டீரே?

தத்தம்மா, பறந்து பறந்து கனிகளைக் கொத்தி வந்து அவள் மடியில் போடுகிறது.

“மகாராணிக்கு நான் தான் உணவு கொடுக்கிறேன்.”

“தத்தம்மா! நீ இருக்கையில் எனக்கென்ன அச்சம்?…” என்று கரையோர தடாகத்து நீரில் முகத்தையும் கைகால்களையும் கழுவிப் புதுமை செய்து கொள்கிறாள்.

நேரம் குறுகி, அந்திச் செக்கர் பரவுகிறது. பறவைகளின் ஆரவாரங்கள் அடங்க, இரவில் உலவும் இனங்கள் கானகத்தைத் தங்கள் ஆட்சியில் கொண்டு வருகின்றன.

“தத்தம்மா, எனக்கு வனத்தில் ஒரு பயமுமில்லை. இங்கேயே இளைப்பாறுவேன். நீ ஒரு உதவி செய்ய வேண்டும்” என்று கோருகிறாள்.

“சொல்லுங்கள் மகாராணி, நான் உயிர் பிழைத்திருப்பது அதற்காகவே…”

“இங்கே கங்கை தாண்டி வடக்கே வந்திருக்கிறார்கள். எனக்கு வடக்கா, தெற்கா, கிழக்கா எதுவும் புரியவில்லை. வேதவதிக் கரையில் யாவாலி அம்மை ஆசிரமத்தில் ஓர் அம்மை இருக்கிறார். நந்தமுனி… நந்த பிரும்மசாரி – அவரை உனக்கும் தெரிந்திருக்கலாம். நம் மாளிகைத் தோட்டத்துக்கு ஒற்றை நாண் தம்புராவை மீட்டிப் பாடிக் கொண்டு வருவார். அரண்யானி அன்னையைப் புகழ்ந்து பாடுவார். அவரிடம் சென்று நீ என் செய்தி தெரிவிக்க வேண்டும். செய்வாயா தத்தம்மா?”

“நிச்சயமாக. நான் அவர் எப்படியும் இங்கு வரச் செய்வேன். மகாராணி – மங்களம். சுகமாக உறங்குவீர்…”

அத்தியாயம்-12

நினைவுகள் பாலாய்க் குளிர்ந்து, பனியாய் உருகி, நெஞ்சு நிறைந்தாற் போல் புளகம் சூடுகின்றன. தெய்வீக இசையா இது? பறவைகளில் கூட்டுக் கலவையொலிகளா? பசிய மரங்களின் பெரிய பெரிய இலைகளில் நீர்த்துளிகள்… அவற்றில் கதிரொளி பட்டுச் சுடர் தெறிக்கிறது… அந்தச் சுடர் அவள் கண்களில் குளிர்ச்சியாக வருகிறது. இத்தகைய வாசக் கலவையை அவள் எங்கும், எப்போதும் நுகர்ந்ததாகப் புரியவில்லை. அரண்மனையின் கஸ்தூரி, சந்தனம், அகில் போன்ற வாசனைகளை அவள் நுகர்ந்திருக்கிறாள். அன்னத்தூவிகளின் பஞ்சணையில் நறுமண மலர்களின் மென்மையான இதழ்களை அவள் உணர்ந்திருக்கிறாள். ஆனால், இங்கே, காட்சி, செவிப்புலன், நுகர்புலன் எல்லாமே இணைந்து முன்பின் அறிந்திராத ஓர் இலயத்துள் அவளை ஒன்றச் செய்திருக்கின்றன. இதுவே மானுடப் பிறவி எடுத்திருப்பதனால் எய்தக் கூடிய வீடு பேறோ? இது கணமோ? யுகமோ? அவள் மானோ? மயிலோ? கரடியோ? மீனோ? தத்தம்மாவோ? தாமரைத் தண்டோ? பாடித்திரியும் சிறு வண்டோ?… எல்லாம் எல்லாம் அவள்…

அவள் அன்னையாகப் போகிறாள். அவள் குழந்தை. அன்னை மடியில், அவள்; குழந்தை…

ஓரிடத்தில் கங்கை நடுவே அவள் இருக்கிறாள்; பல்லக்கில் அவள் அசைந்து செல்கையில் தத்தம்மா தோளில் இருந்து மழலை பேசுகிறது. அதன் இனிமை ததும்புகிறது. சொல் புரியவில்லை. அந்தப் புரியாத மழலையைக் காலமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

“தேவி! பொழுது புலர்ந்து விட்டது; பூபாளம் இசைக்கிறார்கள். கண் மலருங்கள்!” அவந்திகாவின் குரல்…

“இனிய இலயங்களில் ஒன்றி இருக்கிறேன். அவந்திகா, எனக்கு மாளிகைச் சட்டதிட்டங்கள் எதுவும் வேண்டாம்!”

“மன்னர் வந்து காத்திருக்கிறார், தேவி! அவசரச் செய்தி போல் இருக்கிறது!”

அவள் திடுக்கிட்டுக் கண் விழிக்கிறாள். உணர்வுகள் கலைகின்றன.

அவள் கானகத்தில் புல் படுக்கையில் கண்ணயர்ந்திருக்கிறாள். காலை இளம்பரிதியின் கிரணங்கள் இதமாக அவளுக்கு முகமன் கூறுகின்றன. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.

பறவைகள் அவளுக்கு உதய கீதமிசைக்கின்றன. “தத்தம்மா…” என்று கண்களை மேலே நிமிர்த்திப் பார்க்கிறாள்.

தத்தம்மாவைக் காணவில்லை.

தடாகக் கரையோரம்… உச்சியில் முடிந்த முடியும் வற்றி உலர்ந்த மேனியும், ஒற்றை நாண் யாழுமாக… “டொய்… டொய்… நீ…ம்…ரீம்…” சரக்கென்று எழுந்திருக்கிறாள். “நேசமுள்ளாரை நெஞ்சிலே நினைத்தாலே, போதும்…” “எந்தையே என்னை வாழ்த்துங்கள்…” புற்றரையில் ஒரு முரட்டுக் காலணியுடன் நடந்து வரும் அவர் முன் பணிகிறாள். நீர் முத்துக்கள் அந்தக் காலணியின் இடைப்பட்ட மெலிந்த பாதங்களுக்கு அணிகளாய் வீழ்கின்றன.

அவர் அவளை மெல்லத் தோள்களைப் பற்றி எழுப்புகிறார்.

“நீ மங்களச் செல்வி; ஆற்றுக் கரையில் உன் கிளி எனக்குச் சேதி கூறிற்று. உன் மீது எந்த மாசும் ஒட்டாது. உனக்கு எந்தத் துயரும் வராது, தாயே. உன் அருள் நெஞ்சில் எந்தச் சோகத்தின் நிழலும் கரையும்… வா, குழந்தாய்?”

“சுவாமி, மன்னருடன் கானகம் வந்த நாட்களில், உங்களை எங்கேனும் சந்திப்பேனோ என்று நாள்தோறும் நினைப்பேன். பல நாட்கள், காதம் காதமாக நடந்தோம். அப்போதெல்லாம் நீங்கள் காணக் கிடைக்கவில்லை. இப்போது, என் உள்ளார்ந்த தாபமே தங்களை இங்கே கொண்டு வந்து விட்டது. பெரியம்மா நலமாக இருக்கிறாரா? என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் சுவாமி!”

“நிச்சயமாக அங்கே தான் செல்கிறோம். உண்மையில், நீ சொன்னதை மனசில் எண்ணிக் கொண்டு, மன்னரையும் கண்டு உங்களை அழைத்துச் செல்லவே நான் வந்து கொண்டிருந்தேன். ஓடக்காரர் ஒருவர், காலையில் தான் இளவரசரும் மகாராணியும் ஆறு கடந்து சென்றார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். புரியவில்லை. உடனே உன் கிளி ‘உண்மை, உண்மை’ என்று சொல்லிப் பறந்து சென்றது.”

தடாக நீரில் புதுமை பெற்று, கனிகளைப் பறித்துப் பசியாறிக் கொண்டு அவர்கள் நடக்கிறார்கள். பூமைக்குக் களைப்பே தெரியவில்லை. வழியெல்லாம், சிறுமிப் பருவ நினைவுகளை மகிழ்ச்சி பொங்கப் புதுப்பித்தவளாய் அவருடன் நடக்கிறாள். பசியாறக் கனிகளுக்குப் பஞ்சமில்லை. மேலாடை, உள்ளாடைகள் தவிர, அணிகளில்லாத நிலையில், அந்தக் கோமகள் கருவுற்ற நிலையில், அற்பமான இன்னல்கள் என்ற அவற்றை வென்ற வண்ணம் நடக்கிறாள். வழியில் வேடர் குடில்கள் வருகின்றன.

அவர்கள் இந்தப் பூமகளுக்கு மாற்று மரவுரிகளும் தோலாடைகளும் தருகிறார்கள். பட்டாடைகள் தூய்மை பெற்று, மீண்டும் அவள் இடையில் இசைகின்றன. “உங்களுக்கெல்லாம் நான் ஆடைகள் எடுத்து வைத்தேன். என் விதி இப்படி ஆயிற்றே” என்ற சோகம் முக சந்திரனின் நிழலாகப் படிகிறது.

அவர்கள் பதமான இறைச்சி உணவும், இலுப்பைப் பூவின் மதுவும் தருகிறார்கள். அவள் இன்ன உணவென்று தெரியாமலே அவற்றைக் கொண்டு, களைப்பும் சோர்வும் மாறுகிறாள். பிரியா விடை பெற்று, தாயை, தன் தாயிடத்தைக் காண மீண்டும் பயணம் புறப்படுகிறாள்.

வானாளவும் மரங்கள், பெரிய பெரிய இலைகள், சுற்றிச் சுற்றிக் கொடிகள் மூலிகை மணங்கள்… புற்றரையில் குளிர்ச்சி படிந்திருக்கிறது.

அங்கிருந்து பார்க்கையில், ஏதோ நிலத்தில் கருமேகம் படை திரண்டு வந்தாற் போல் தோன்றுகிறது.

அங்கேயே நின்று உற்றுப் பார்க்கிறாள்.

அது யானைக் கூட்டம்… தலைவன் குஞ்சு குழந்தைக் குடும்பங்கள் ஆண், பெண் என்று செல்கின்றன.

அமைதியாக அவை செல்வதைக் கண்டு அவள் வியப்படைகிறாள். இவை எத்துணை ஒற்றுமையாகச் செல்கிறன? முன்னால் செல்லும் யானை தும்பிக்கையில் தான் செல்லும் இடம் – தரைப்பகுதி உறுதியுடன் கூடிய நிலமா, அல்லது, பத்திரமில்லாமல் கால் வைத்த உடன் உள்ளே இழுக்கும் பொறியா என்று சோதிப்பது போல் பார்த்துக் கொண்டே செல்வதைப் பார்க்கிறாள்.

“மனிதர்… அதுவும் மன்னர்கள் எத்துணைக் கொடியவர்கள்! இந்த விலங்குகளைத் தந்திரமாகப் பிடித்து, இவர்களுடைய மண்ணாசைக்குப் பலியாக, போரிடப் பழக்குகிறார்கள். மதுவைக் குடிக்கச் செய்து பகை மன்னரின் கோட்டைச் சுவர்களைத் தகர்க்கச் சொல்வார்களாம்! அப்படியா சுவாமி!”

நந்தமுனி புன்னகை செய்கிறார்.

“அதைப் பற்றி நாம் ஏன் இப்போது சிந்திக்க வேண்டும். நாமும் இப்போது அந்த யானைக் கூட்டத்தோடு போகிறோம். நமக்கு அவர்கள் நண்பர்கள். அவர்கள் எங்கே போகிறார்கள் தெரியுமா?”

“எங்கே?…”

“நாம் எங்கே போக வேண்டுமோ அங்கே தான் போகிறார்கள். வாழை வனம்.”

“வாழை வனத்தில் யானை புகுந்து அழிக்குமா?”

“யானைகள் அழிக்காது. யானைகளோ வேறு விலங்குகளோ வனங்களை அழிக்கா. மனிதர் தாம் அழிப்பவர். யானைகள் உணவு இந்தந்தக் கால இடைவெளியில் கொள்ளலாம் என்ற உணர்வு அவைகளுக்கு உண்டு. வாழை வனம் வந்து இந்த மந்தை இப்போது உண்டு சென்றால், மீண்டும் ஒரு பருவம் வந்த பின் வரும் போது செழித்திருக்கும். யானைகள் உண்டு வனங்கள் அழிந்ததாக வரலாறே இல்லை. முன்பு ஒரு முறை மிதுனபுரி மன்னன் அவ்வனத்தை அழித்தார் என்பார்கள். யானைகள் வருவதைத் தடுக்க முடியவில்லை. நாம் அவைகளுக்குத் தீமை செய்யவோ, கிடங்கில் தள்ளிப் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து அடிமைகளாக்கவோ முயலுகிறோம் என்றால் காடு கொள்ளாமல் பிளிறி, நாசம் செய்யும். எத்தனைக் கயிறுகள் கட்டினாலும் அறுத்து விடும். மனிதர் கிட்ட வரவொட்டாமல் குதித்து, அறைந்து கொல்லும். ஏன், குட்டியைப் பற்றி விடுவார்களோ என்று தாய் குட்டியைக் கூடக் கொன்று விடும். அதுவும் உண்ணாமல் இருந்து மடியும். மனிதர் செய்யும் பாவங்களில் தலையாயது இத்தகைய பிராணிகளை அடிமையாக்குவது தான்!…”

“என்னை அது பற்றிச் சிந்திக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு தாங்கள் பேசுகிறீர்களே?”

“இல்லையம்மா…”

“வையம் குளிர்ந்தெழ, கான்பசுங்குடை விரிய, நெஞ்சில் அன்பு சுரக்கும்; பஞ்சமில்லை; பசியுமில்லை.”

ஒற்றை நாணின் ஒலியில் வையமே ஒன்றுவது போல் தோன்றுகிறது. எங்கோ வானவெளியில் சஞ்சரிப்பது போல் அவள் காற்றைப் போல் இலேசாகிறாள். பூமகள் பயிற்சி பெற்ற யானைகளின் அணி வகுப்பைப் பார்த்திருக்கிறாள்.

பொன்னின் முகபடாம் தரித்த பட்டத்து யானை மீது பொற்பீடப் பட்டு ஆசனத்தில் அவள் ஏறி அமர்ந்து ஊர்வலம் வந்திருக்கிறாள். இப்போது அதை எல்லாம் நினைத்து உள்ளூற நாணி, வருத்தம் கொள்கிறாள்.

அருகில் வரும் போதுதான், யானைகளின் முதுகுகளில் படிந்த செம்புழுதியும், ஒருவித வாசமும், இவை திருந்தா யானைகள் என்ற உணர்வைத் தருகின்றன. முரட்டுத்தனமாக ஒன்றையொன்று விஞ்சிக் கொண்டு முன்னேறிச் செல்கின்றன. ஒரு தாய் யானை, சிறு குட்டியை இரண்டு கால்களுக்கிடையில் பாதுகாப்பது போல் நடந்து செல்லும் விந்தையைப் பார்க்கிறாள். முன்னே செல்லும் கரிய கொம்பன், தலைவன் போலும்! அது முன்னே சென்று, சிறிது நேரத்துக்கொரு முறை திரும்பிப் பார்த்து நின்று கூட்டம் தொடருகிறதா என்று பார்க்கிறது.

மான் கூட்டமும் இப்படித்தான் ஒரு தலைவர், அல்லது மன்னர், வழிகாட்டலில் எதிர்ப்புகளை, இன்னல்களை வென்று முன்னேறி, உணவு தேடிப் பசியாறி, இனம் பெருக்கி…

அவள் அம்மையின் அரவணைப்பில் அபாயம் அறியாமல் திமிறிச் செல்லும் குட்டியையே பார்க்கிறாள். அந்தக் குட்டியைப் பற்றி அதைக் கொஞ்ச வேண்டும் போல் இருக்கிறது.

“அந்தக் குட்டியை நான் தொட்டுக் கொஞ்சலாமா, சுவாமி?”

அவர் சிரிக்கிறார். பிறகு அவளைப் பற்றி அருகே அழைத்துச் சென்று தாய் யானையைத் தொடச் செய்கிறார். அவள் பரவசமடைகிறாள். யானைக் கூட்டமே நிற்கிறது. முதலில் சென்ற கொம்பன் திரும்பிப் பார்க்கிறது. அப்போது, நாடி நரம்புகளில் அச்சத்தின் குளிர் திரி ஓடச் சிலிர்க்கிறாள்.

காட்டு யானைக் கூட்டத்தின் இடையே புகுவது சரியன்று; மனிதர்கள் அருகில் கண்டால் இழுத்துத் தள்ளி மிதித்துக் கொல்லும் என்று சொல்வார்கள். கோதாவரிக் கரையில் யானைகள் நீர் குடிக்க வரும். அப்போது, அவள் நாயகர் எச்சரித்து, இளையவரை வில்-அம்புடன் நிற்கச் செய்வார்.

அருகில் இருந்து அக்கூட்டத்தைப் பார்த்தவாரே, குட்டியானையைக் குனிந்து தடவிக் கொடுக்கிறாள். அப்போது தான் கூட்டத்தில் நான்கைந்து யானைக் கன்றுகள் இருப்பது தெரிகிறது. ஆண்கன்று ஒன்று முளைத்த கொம்புடன் மற்றவரை நெட்டித் தள்ளுகிறது. தும்பிக்கை வளைத்து ஆட்டம் ஆடித் தன் துருதுருப்பை வெளியாக்குகிறது. குடுகுடென்று அது ஓடி, ஏதோ ஒரு கிளையை ஒடித்து வாயில் திணித்துக் கொள்கிறது. அதன் தாயோ, தந்தையோ, அதன் வாயைப் பற்றி இழுத்து, ‘ஏய் சும்மா இரு’ என்று மிரட்டுகிறது.

பூமகள் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு அந்தக் குட்டியானையைத் தடவிய வண்ணம் இருக்கிறாள்.

அப்போது நந்தமுனி, “கஜராஜா!” என்று குரல் கொடுக்க்றார். முன்னே சென்ற கொம்பன் திரும்பிப் பார்க்க, நந்தமுனி அதன் அருகில் செல்கிறார். குறும்பு செய்யும் கன்று குடுகுடுவென்று வருகிறது. குட்டி ஒன்று தாயின் மடியை முட்டுகிறது; செல்லமாகக் குரல் கொடுக்கிறது ஒரு கிழட்டு யானை. முன்னே வந்த தலைமைக் கொம்பனுடன் உராய்கிறது.

நந்தமுனி கொம்பனைத் தட்டிக் கொடுக்கிறார். அது துதிக்கையை நீட்டுகிறது. அவர் இரண்டுக் கனிகளை முடிந்து அரைக்கச்சில் வைத்திருக்கிறார். அதைக் கொடுக்கிறார்.

யானை அதை வாங்கி வாயில் போட்டுக் கொள்கிறது. பிறகு, தழைத்து குனிந்து, முன் காலை மடித்து, படி போல் நீட்டுகிறது.

“குழந்தாய், இந்தக் கொம்பன் ஒன்றும் செய்யாது, ஏறிக்கொள்…”

அவள் கையைப் பற்றி வந்து, துதிக்கையைத் தடவிக் கொடுக்கச் சொல்கிறார். முன்னங்காலைத் தடவி விட, இன்னம் இன்னம் என்று காட்டுகிறது. பிறகு நன்றாக அமர, முதுகைத் தடவி விடுகிறாள்.

“பார்த்தாயா மகளே? இவற்றுக்கு நம் அன்பு வேண்டும். ஆனால் நாம் அன்பு செய்யாமல் கொலை வெறி ஊட்டுகிறோம். நாசம் செய்யத் தூண்டுகிறோம். ஒவ்வோர் உயிரும் வாழத்தான் உயிர்க்கிறது; உண்டு இனம் பெருக்கி, மடிந்து உயிர்ச்சங்கிலியை மாயாமல் வைக்கிறது. இதுதான் இயற்கை நமக்குச் சொல்லித் தரும் பாடம்…”

“மத்தா, கஜராஜா, இவளை முதுகிலேற்றி வருகிராயா? உன்னால் முடியுமே? பலவீனருக்கு உதவுவது உன் தர்மமாயிற்றே?”

பூமகளுக்கு, என்றுமில்லாமல் ஓர் உவகை மலர்கிறது. அடிமனதில் கனத்தோடு கூடிய ஒரு மரியாதை மேவுகிறது. அதன் முதுகில் ஏறி அமருகிறாள். “மத்தா, உன் குறும்பையோ, ஆட்ட பாட்டத்தையோ தாங்க மாட்டாள். ஓர் உயிரைச் சுமக்கிறாள். கவனமாகச் செல்…” என்று உரைக்கிறார்.

அது அடி எடுத்து வைக்கையில் அவள் அஞ்சி அதன் பிடரியைப் பற்றிக் கொள்கிறாள். மரக்கிளையில் ஊஞ்சலாடுவது போலும் குலுங்குவது போலும் விழுந்து விடுவது போலும் அச்சம் பரபரக்கிறது. மத்தன் அவளை ஏற்றி இருக்கும் உற்சாகத்தில் கர்வம் கொண்டு நடந்து செல்வது போல் தோன்றுகிறது. நந்தமுனி பின் தங்கிவிட்டார்.

இவள் “சுவாமி, சுவாமி!” என்று குரல் கொடுக்கிறாள். புல்வெளிகள் கடந்து, மரங்கள், பறவைகள் மரங்களின் உயரத்தில் பறக்கும் ஓசைகள், எல்லாமே அச்சமூட்டுகின்றன.

வழியில் மரக்கிளைகளை ஒடித்து அவை உண்ணுகின்றன. பூமகளுக்கு இறங்கி விடலாம் போல் இருக்கிறது.

“அஞ்சாதே குழந்தாய், உனக்கு ஓர் அபாயமும் வராது. உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராது…”

அவர் எவ்வளவு கூறியும் பூமகளுக்கு அமைதி வரவில்லை. இது என்ன விளையாட்டு? மானைப் பிடித்துத் தரச் சொன்னேன், கொன்று விடக்கூடாதென்று. அது போல் யானைக்கன்றிடம் சிநேகம் பாராட்டியது இந்த விளைவுக்கு ஆதாரமாகி விட்டதே? விதியின் சூழ்ச்சியா?

இன்னும் என்ன விதியின் சூழ்ச்சி இருக்கிறது?

திடமாக இரு, மனமே! நந்தமுனி, காப்பாளர். இந்த நேரத்தில் நேயமுடன் வந்த மாமனிதர்… அவர் சொல்வதில் சத்தியம் உண்டு.

யானைகள் அந்திசாயும் நேரத்தில் ஓர் ஆற்றங்கரைக்கு வருகின்றன. கரை முழுவதும் வரிசையாகச் செவ்வரளிப் பூக்கள்…

அந்தச் சூரியனின் ஒளியில் அந்த ஆறு பொன்னாய்த் தகதகக்க ஓர் அற்புத உலகம் அவள் கண் முன் விரிகிறது.

“இறங்கலாமம்மா! நம் இடம் வந்து விட்டோம். இதுவே வேதவதி ஆறு…!”

அவள் இறங்க வசதியாக, மத்தன் குனிந்து தழைந்து, காலை மடித்து, அவள் பாதம் ஏந்துகிறான். அவள் இறங்குகிறாள்.

ஒரு கணம் உலகமே சுழல்வது போல் தோன்றுகிறது. கண்களை மூடிக் கொள்கிறாள். என் இடம்… வேதவதிக்கரை. என் தாய் மண்… தாயே உனக்கு வணக்கம்… நான் அநாதை இல்லை…

உணர்ச்சிகள் கொப்புளிக்க அவள் விம்மி அழுகிறாள்.

– தொடரும்…

– வனதேவியின் மைந்தர்கள் (நாவல்), முதல் பதிப்பு: ஆகஸ்டு 2001, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email
ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *