வனதேவியின் மைந்தர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 1,425 
 
 

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

“மகளே, நாம் அதிகாலை நேரத்தில் கிளம்பி, கோமுகி ஊற்றுக்குச் செல்கிறோம். ராணி மாதாக்கள் அங்கே உங்களுக்கு வனவிருந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தேவையான பொருட்கள் எல்லாம் அங்கே கொண்டு செல்கிறார்கள் பணியாளர்…”

அவளுக்கு உற்சாகம் முகிழ்க்கிறது.

“யார்? பெரியன்னையா? மன்னரும் வருகிறாரா?”

“பெரிய மாதா சொன்னதாகத் தெரியவில்லை. இளைய மாதாவின் ஏற்பாடுதான். சுமித்ரா தேவியம்மையும் வருகிறார்கள். தாங்கள், இளவரசி ஊர்மிளா, சுதா, எல்லோருடனும் பணிப்பெண்கள், ஏவலர், பாதுகாவலாக வில்லேந்தி மிக இளைய குமாரர், சத்ருக்னர் எல்லோரும் செல்கிறோம்…” எழும்பிய உற்சாகம் சப்பென்று வடிந்து போகிறது.

“அவந்திகா? எனக்காக நீ ஓர் உதவி செய்வாயா?”

“நீங்கள் மகாராணி, உங்களுக்குப் பாலூட்டும் பாக்கியத்தைக் கொடுத்து, என்னை இன்றும் பாதுகாத்து, சிகரத்தில் வைக்கிறீர்கள். என்னிடம் நீங்கள் உதவி என்று கோரலாமா, தேவி? ஆணையிடுங்கள்!”

“அந்தப் பணிப்பெண்ணை… அவள் தான், பூனைக்கண்ணி, அவளை இரகசியமாக என்னிடம் கூட்டி வா, யாருக்கும் தெரியக்கூடாது. ஏனெனில் மன்னரின் மீது எந்தக் களங்கத்தின் நிழலும் படியலாகாது. ஊர்மி, சுதா, மாதாக்கள், யார் செவிகளுக்கும் அரசல் புரசலாகக் கூடப் போய்விடக் கூடாது, அவந்திகா!” அவள் சிறிது நேரம் பேசவில்லை.

“நான் கேட்கிறேன், வெற்றிலை மடித்துக் கொடுக்க, கவரி வீச, உடைகள் எடுத்துத் தர, உணவு கொண்டு வைக்க, மன்னர் இளவரசர் மாளிகைகளில் பணிப்பெண்கள் எதற்கு? வேண்டுமானால் தீபமேற்றி விட்டுப் போகட்டும். ஆடவரே பணியாளனாக இருக்கலாமே?”

“மகாராணி இந்தக் கருத்தை ராணி மாதா – ஏன் மன்னரிடமே சொல்லலாமே?”

“அந்தப்புரக் கிளிகளுக்கு விடுதலை என்று சொல்கிறார்கள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தானே?… அவந்திகா அன்று குளக்கரையில் சந்தித்த பிறகு, மன்னர் என்னைக் காண வரவில்லை. உணவு மண்டபத்தில் பார்த்தும் பாராமலும் போய் விடுகிறார். நானே இன்று, அமுது பரிமாறினேன். நிமிர்ந்து பார்த்து விட்டு, “நீ எதற்கு இந்தப் பணி எல்லாம் செய்ய வேண்டும்? நீ போய் ஓய்வு கொள்” என்றார். எனக்கு… துயரம்… சொல்லும் போதே நெஞ்சு முட்டுகிறது. இப்படி அவர் முன்பு இருந்ததேயில்லை. அவந்திகா… மன்னர் பத்தரை மாற்றுத் தங்கம். அப்படியும் என் மனம் அலைபாய்கிறது. என் மாமியார் எத்துணை பொறுமை காத்து இருப்பார்கள்? அரக்க வேந்தனின் பட்டத்து ராணியை நினைத்துப் பார்க்கிறேன். அத்தனைப் பெண்களும் மங்கலங்கள் இழந்து, காப்பாரில்லாமல் அழிந்தார்கள். மன்னனின் வீரதீர பராக்கிரமங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆயிற்று. என் மாமன், சக்கரவர்த்திப் பெருமானுக்கு இத்தகைய இறுதி நேர்ந்திருக்குமா? ஒரே மனைவியாக இருந்திருந்தால்…?”

அவந்திகா, இவள் நெஞ்சை நீவி இதம் செய்கிறாள்.

“ஆறுதல் கொள்ளுங்கள் மகாராணி, ஒரு உயிரை உங்களுள் தாங்கும் இந்த நேரத்தில் இத்தகைய வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்கலாகாது. கிளி சொன்ன செய்திகள் வெறும் அபத்தம். தாங்கள் அதற்குப் பாலூட்டி, மொழி சொல்லிப் பழக்கினீர்கள். சென்ற பிறவியில் அது தந்திரக்கார நரியாக இருந்திருக்கும். என்ன பேச்சுத் திறமை இருந்தாலும், அதற்கு நம்மைப் போல் அறிவு ஏது? விடுங்கள்! அது உங்களைக் கிண்டி விளையாடுகிறது” என்று அவந்திகா எத்துணை ஆறுதல் மொழிந்தும் சஞ்சல மேகங்கள் அகலவில்லை.

கருவுற்ற மகளிரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் கோமுகி ஊற்றுப் பக்கம் வனவிருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பூமிஜா இதுநாள் வரையிலும் இந்த இடத்தைப் பார்த்திருக்கவில்லை. வேதபுரிப்பக்கம் உள்ள வெந்நீரூற்றுகள் அவளுக்குத் தெரியும். “கொதிக்கும் நீரே வரும். இங்கே அப்படி இருக்குமா?”

“தெரியாது மகாராணி, சொல்லிக் கேட்டதுதான்…”

“பதினான்கு ஆண்டுகள் இந்த மாளிகை அடிமையாக நீ என்ன செய்தாய்?”

“உண்ணுகிறோம்; உறங்குகிறோம்; மூச்சு விடுகிறோம். அப்படி ஒரு வாழ்வு. இளைய மாதா, கேகய ராணி, எத்தனை கலைகள் தெரிந்தவர்? நூல் நூற்பதிலிருந்து, வண்ணப் பொடிகள் தயாரிப்பது வரை அத்தனையிலும் வல்லவர். அவருக்குத் தாம் ராணிமாதா என்ற எண்ணமே கிடையாது. அவரில்லை என்றால், நானும் எங்கோ வழிதவறிய தாய்ப் பசுவாகச் சென்று மாண்டிருப்பேன்!…”

வேதபுரியைச் சார்ந்த இடங்கள், குன்று போலும் மேடு பள்ளங்களுமாக இருக்கும். இந்த இடங்கள் அப்படி இல்லை. வீரர்கள் காளை வண்டிகளை ஓட்டிக் கொண்டு வருகிறார்கள். அதில் பணிப்பெண்கள், ஆடல் பாடல் கருவிகள் இருக்கின்றன. ஒரு சிவிகையில் பூமையும் ஊர்மியும் அமர்ந்திருக்கின்றனர். இன்னொன்றில், சுதாவும், சுமத்திராதேவியும் அமர்ந்துள்ளனர். இன்னொரு ராணிமாதா, சுரமையுடன் வேறொரு சிவிகையில் பயணம் செய்கிறார். சில காவல் வீரர் தொடர, தேரில் சத்ருக்னர் பின்னே வருகிறார்.

சிவிகை சுமப்போரின் ஆஹீம்… ஆஹீம் என்ற ஒலி அவள் செவிகளில் விழுகின்றன. மாட்டு வண்டிப் பலகையில் பணிப்பெண்கள் ஏதேதோ பேசி வருகிறார்கள் என்று புரிகிறது. சாமளியின் சிரிப்பொலி கேட்கிறது. இந்தப் பட்டாளத்தில் ஜலஜை இடம் பெறவில்லை. மூத்த மகாராணியும் இல்லை. ஸீமந்த வைபவத்துக்கு ஏற்பாடுகள் செய்கின்றனராம்.

உடன் இருக்கும் ஊர்மி இப்போது வாய் மூடி மௌனியாக இருக்கிறாள். கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தபடியே உறங்குகிறாள்…

அதிகாலையில் யார் எழுந்திருப்பார்கள்?

காட்டு வழியில் செல்லும் போது பூமை, திரைச்சீலையை ஒதுக்கிப் பார்க்கிறாள். காட்டுக்கே ஒரு வாசனை உண்டு. மரங்களின் மணம், மூலிகைகளின் மணம். வனவிலங்குகள் எதிர்ப்படாத வண்ணம் ஊதுகுழலால் ஊதிக் கொண்டும், தப்பட்டை கொட்டிக் கொண்டும் பணியாட்கள் செல்ல, அசைந்து அசைந்து சிவிகையில் செல்வது ஊர்மிக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கண்களை விழித்துக் கொண்டு பல்லக்குத் தூக்கிகளின் மூச்சுக்கேற்ப தாளம் தட்டுகிறார். ‘மன்னரும் இளையவரும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? எப்போது பார்த்தாலும் என்னதான் அரசாங்கமோ!… மாண்டவி வரக்கூடாதா? அவள் மகா தபஸ்வி போல் இப்போதுதான், விரதம், தானம், தவம் என்று மைத்துனரைப் பிரியாமல் இருக்க வழி தேடிக் கொள்வாள், அவர்கள் இட்ட பணியைச் செய்பவள்!…’

“இதுவும் ஒரு விதத்தில் சுதாவுக்கு நல்ல பேறாக வாய்த்திருக்கிறது…”

பூமை எதுவும் பேசவில்லை.

“எப்போது பார்த்தாலும் என்னம்மா யோசனை? பேசாமல் நான் ராணிமாதாவுடன் உட்கார்ந்திருக்கலாம்…”

சிணுங்களும் சீண்டலுமாக அவள் தொடர, பயணத்தின் இறுதிக் கட்டம் வரும் போது, முற்பகல் நேரமாகிறது.

அவர்களை வரவேற்க வேடுவப் பெண்கள் தேனும் மீனும் காணிக்கைப் பொருட்களாகக் கொண்டு வருகிறார்கள். காட்டுப் புற்களால் வேயப்பட்ட தாழ்வரைகளில் அவர்கள் அமர இருக்கைகள் தயாராக இருக்கின்றன. அரசகுலப் பெண்கள் அமரவும், இளைப்பாறவும், விளையாடி மகிழவும் ஆடல் பாடல்களில் ஈடுபடவும், கானகம் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்துக்கு வெகு அருகில் தான் கோமுகம் போல் செதுக்கப்பட்ட பாறை வளைவில் இருந்து ஊற்று வெளிப்படுகிறது. நீர் இதமான, மிதமான சூட்டுடன் பெருகி வந்து அருகிலுள்ள தாமரை வடிவிலான செய்குளத்தை நிறைக்கிறது.

சற்று எட்ட பெரும் விழுதுகளை ஊன்றிக் கொண்டு கணக்கிட முடியாத வயதென்று இயம்பிக் கொண்டு ஓர் ஆலமரம் இருக்கிறது.

அந்த மரத்தில் இருந்து வரும் பறவைக் கூச்சல் பூமிஜாவைப் பரவசம் கொள்ளச் செய்கிறது. ஒரு கிளிக் கூட்டம் சிவ்வென்று பறந்து செல்கிறது.

“எத்தனை பெரிய மரம்? இது போன்ற மரங்கள் நான் கண்டதில்லை!”

“நீங்கள் சுற்றி வந்த தண்டகாரணியத்தில் கூடவா?”

“இல்லை…”

“அதோ அதுதான் நீலகண்டப் பறவை. கழுத்து நீலமாக இருக்கிறது பார்!”

“இன்னும் கொஞ்சம் நடந்தால், பெரிய ஏரி இருக்கிறது. தேவி! அங்குப் பல்வேறு வகைப் பறவைகளைப் பார்க்கலாம்!”

“நாம் ஏரிக்கரைப் பக்கம் போகலாமா, ஊர்மி?”

“அம்மாடி! என்னால் இப்ப நடக்க முடியாது… அத்துடன் இப்போது நாம் ஊற்று நீரில் நீராடுவோம். பிறகு பசி ஆறுவோம்… உண்ணுவோம்… உறங்குவோம்” என்று சைகையால் அபிநயிக்கிறாள்.

“இந்த மூன்றைத் தவிர வேறு எதுவும் நம் வாழ்க்கையில் கிடையாதா?”

பூமை எதுவும் பேசவில்லை.

அவந்திகா எண்ணெய்க் கிண்ணங்களுடன் வருகிறாள்.

“அவந்திகா? இந்த ஆலமரத்துக்கு எத்தனை வயசிருக்கும்?”

“…மகாராஜா வயசிருக்கும்?”

ஊர்மிளா உதட்டைப் பிதுக்கி, பூமிஜாவைப் பார்க்கிறாள். மன்னரின் வித்தியாப்பியாச காலத்தில் அவர் கையால் நட்ட மரமாக இருக்கலாம்.

பேசிக் கொண்டே பரிமளங்களை அவிழ்க்கிறார்கள். உடலெங்கும் மணக்கும் மூலிகைப் பொடிகளைப் பூசிக் கொண்டு இதமான வெந்நீர் ஊற்றில் அரச குலப் பெண்கள் நீராட, பணிப் பெண்கள் கரையில் தூபகலசங்களைக் கொண்டு வந்து கூந்தலைத் துடைத்து உலர்த்திப் பிடிக்கச் செய்கின்றனர். ஊர்மிக்குச் சுருண்ட கூந்தல், அலையலையாகப் புரள்கிறது. சுதாவுக்கும் பூமிஜாவைப் போன்றே நீண்ட கூந்தல். பூமிஜாவுக்கு மிக அடர்ந்த கூந்தல். இடுப்புக்குக் கீழ், பின்புறம் மறைய விழுகிறது.

கால்களில் செம்பஞ்சுக் குழம்பை இறகில் தேய்த்து, சாமளி கோலம் செய்கிறாள். அரும்பரும்பாகக் கோலத்தின் நடுவே ஓர் அழகிய மயிலின் ஓவியம் விரிகிறது.

மயில் கண்முன் உயிர்த்தாற் போல் இருக்கிறது. “சாமளி இந்தக் கலையை எங்கு, யாரிடம் கற்றாய்?”

“யார் கற்றுக் கொடுப்பது? பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டேன். இந்த மயில், கிளி, குயில் எல்லாம் நினைத்த மாத்திரத்தில் பறந்து சென்று எங்கோ மரக்கொம்பில் முகப்பில் உட்காருகின்றன. நமக்கு முடியவில்லை. ஏதோ குறைந்த பட்சம் அவற்றைச் சித்திரத்தில் வரையலாமே. என் தாயார், தாமரை, மாங்கனி, மாதுளை என்று வரைவாள்…”

“அது கிடக்கட்டும், சாமளி, உன் கால்களில் நீ இப்படி அழகு செய்து கொள்வாயா?” அவள் இல்லையென்று தலையை அசைப்பதுடன் செயலில் கண்ணாக இருக்கிறாள்.

“நான் கேட்டேனே, ஏன் சாமளி? நீ உன்னை அழகுபடுத்திக் கொள்ள மாட்டாயா?”

அவள் தலை நிமிராமல், கையில் பற்றிய இறகுடன் “நான் அரசமகளா?… பிரபு வருக்கமா? அல்லது… அழகு செய்து கொண்டு ஆடவரைக் கவரும் வருக்கமா? இந்தக் கலையின் விலை என் வாழ்க்கை.”

“அப்படி என்றால்?”

“தேவி, அவள் எதையோ பிதற்றுகிறாள். அழகு செய்தது போதும். காலையில் இருந்து கனிச்சாறு கூட உள்ளே போகவில்லை. சாமளி, உன் கடையைக் கட்டு!” என்று அவந்திகா அவளை அனுப்புகிறாள். அவள் சிணுங்கி அவற்றை எடுத்துப் பெட்டிக்குள் வைக்கிறாள். அப்போது, கொட்டென்று ஒரு பெரிய பறவை கழுத்தறுப்பட்டாற் போல் அங்கு வீழ்கிறது. பறவைப் பட்டாளமே சோகக் குரல் கொடுக்க பெரும் அமளி உண்டாகிறது.

“இது என்ன விபரீதம்? இங்கே யார் பறவையை அடித்து வீழ்த்தினார்கள்? மகாராணியின் முன் அது வீழ்கிறது? யார்…?”

பூமகள் துணுக்குற்று அதைத் தாங்குகிறாள். சாம்பலும் நீலமும் கலந்த கழுத்தில் புள்ளிகள்… சிவந்த சிறு மூக்கு, கால்கள், வெண்மை அடி வயிறு. “என்ன அழகு! இதை இப்போது யார் எதற்காக அடித்தார்கள்?”

ஊர்மி சிரிக்கிறாள். “விருந்துக்குத்தான். அந்தக் குதிரைக்காரர்தான் வெறும் வில் – உருண்டை கொண்டு அடித்தார். என்ன குறி.”

அவள் கண்கள் நெருப்புக் கோளமாகி விட்டாற் போன்று நிற்கிறாள்.

“விருந்துக்கா?”

“ஆம் தேவி. கருவுள்ள பெண்களுக்கு இதன் ஊனைப் பக்குவம் செய்து கொடுப்பது வழக்கமாம்! முக்கியமாக இங்கு வன விருந்துக்கு வருவதன் பொருளே, இத்தகைய அபூர்வமான பறவைகள், மூலிகைகளுக்காகத்தான்!”

கபடில்லாத உற்சாககங்கள் தீப்பற்றி எரிந்தாற் போல் இருக்கின்றன.

“அரக்கர் ராச்சியத்தில் கூட இப்படிக் கொடுமை நடக்கவில்லை! உயிர்கொலை தவிர, உங்கள் சந்தோஷங்கள் வேறு கிடையாதா? ஐயோ! ஆணும் பெண்ணுமாய்க் கூடுகட்டு, குஞ்சு பொரித்து, அதற்கு உணவூட்டும் பறவை இனம்…” என்று அவள் தன்னை மறந்து புலம்புகிறாள்.

ஆட்டமும் பாட்டமும், சிரிப்பும் களை கட்டவில்லை.

“தேவி, ராணிமாதா உத்தரவில் இது நடந்தது. இது வழக்கம் தான். மான், மீன் பறவை வீழ்த்திய பணியாளன் பாதம் பணிந்து மன்னிப்புக் கேட்கிறான்.”

“அவந்திகா, எனக்கு இன்று எந்த உணவும் வேண்டாம். இந்தச் சூழலே பிடிக்கவில்லை. என்னைத் தனியாக விடுங்கள்…”

தாழ்வரையில் ஓர் ஓரமான இருக்கையில் சென்று சாய்கிறாள் பூமகள்.

அடுத்து, கானகத்தில் காய்ந்த விறகுகள் சுள்ளிகளைக் கல்லைக் கூட்டி அடுப்பாக்கி எரிய விட்டு உணவு தயாரிக்கும் கோலாகலம் நடக்கிறது. பூமகள் கண்களை மூடிக் கொள்கிறாள். இப்போது வலது கண் துடிப்பது போல் இருக்கிறது. இடது கண் துடித்தது; இலங்கைச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது. ஆனால் என்ன? எத்தனையோ கண்டங்கள்; நெருப்புக் குண்டங்கள். அவள் மகிழ்ச்சியின் துளிகளில் நனைந்து தாயாகப் போகிறாள். ஆனாலும் மகிழ்ச்சி என்ற முழுமையில் அவள் மனம் நனையவில்லை. வாழ்க்கை என்பதே இப்படி மேடு பள்ளங்கள் தானோ? அவள் மாமியார், அவந்திகா, சாமளி… ஜலஜா…

அவளுக்கு ஏதேனும் கெடுதல் நேர்ந்து விடுமோ? பெண்ணாகப் பிறந்தவள் ஆசை கொள்ளலாகாதா? மன்னரின் இதயத்தைப் பிடித்து, குன்றேற வேண்டும் என்று ஆசை கொண்டது தவறா? ஆனால் அவருக்கென்று ஒரு மனைவியும், அவளுக்கென்று ஒரு நாயகனும் இருக்கையில்… என்ன? அவள் ஒருவனின் உடமை. அடிமையானவளுக்கு நாயகனை மீறி நாட்டம் தோன்றுவது சரியல்ல. நாட்டம் தோன்றவில்லை என்றாலும், பத்து மாதங்கள் அவன் நிழலில் இருந்த காரணமே அவளை மாசுபடுத்தி விட்டதே? அந்த சலவைக்காரன் அவளை நெருப்பில் இறக்கி இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

ஊர்மி கூந்தல் அலைய, காரசாரமாக நெய்யில் பொரித்த இறைச்சித் துண்டத்தைக் கடித்துக் கொண்டு வருகிறாள். அவள் முகத்தில் பளபளப்பு மின்னுகிறது. பொங்கும் மார்பகம் தெரியாமல் தொள தொளவென்று ஓர் இளம்பச்சை ஆடை அணிந்திருக்கிறாள்.

“அக்கா, உனக்கு இனி போகும் போதும் வரும் போதும் முன்னே இருவர் கவரி வீசி வர வேண்டும்” என்று சிரிக்கிறாள்.

சொல்லிவிட்டு, கையில் மீதி இருந்த எலும்புத் துண்டை வீசி எறிய, அதை ஒரு காகம் கொத்திச் செல்கிறது.

“அக்கா, மன்னிக்கவும், நான் ஏதேனும் தப்பாகச் சொல்லி விட்டேனா?”

“இல்லை ஊர்மி, என்னால் இந்த உலக வழக்கங்களைப் புரிந்து கொள்ள, ஒத்துக் கொள்ள முடியவில்லை…”

சுதாவும் அங்கே வருகிறாள்.

“கருப்பஞ்சாறு சேர்த்த பொங்கல் மிக நன்றாக இருக்கிறது அக்கா. இன்று உபவாசமா? மன்னர் வரவில்லை என்று கோபமா?” என்று கிண்டுகிறாள்.

“உனக்கென்னம்மா! பேசுவாய்! உன்னுடையவரை உன் மேலாடை முடிச்சில் கோத்து வைத்திருக்கிறாயல்லவா? நாங்கள் தாம் ஏமாளிகள். உன் இன்னோர் அக்கா, விரதம், தவம் என்று தன் நாயகரை அங்கு இங்குத் திரும்ப விடாமல் கட்டிப் போட்டு விட்டாள். நானும் பூமையுமே ஏமாளிகள்!”

பூமகள் செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“போதுமடி குற்றம் சுமத்தலெல்லாம்! என்னை இப்போது தனியே விட்டு விட்டுப் போங்கள்!”

அப்போது சுமித்ரா தேவி, ராணிமாதா அங்கு வருகிறாள்.

“ஒத்தவன் – ஓரகத்தி என்ற காய்ச்சல் வர இடமில்லாமல் சகோதரிகளாக என் மருமக்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தேன். இங்கே என்ன பலத்த வாக்குவாதம்…? உணவு கொள்ள வாருங்கள். இலை விரித்து எல்லாம் பரிமாறக் காத்திருக்கிறார்கள். வெந்நீர் ஊற்றில் ‘தைல’ நீராட்டு முடிந்து வெறும் வயிற்றுடன் இருக்கக் கூடாது; பூமா… வாம்மா!”

“அம்மா, அவர்கள் உணவு கொள்ளட்டும். எனக்குப் பசியே இல்லை.”

“ஓ… இது நன்றாயிருக்கிறது! நீலன் சமையல் மூக்கை இழுக்கிறது. ஏதேதோ வாசனைகள் சேர்த்து, பக்குவம் செய்து இருக்கிறான். எழுந்திரு மகளே, வா… இந்த நேரம், உயிர்க்கருவைப் பாலிக்க இரு மடங்கு உணவு கொள்ள வேண்டும்…”

“தாயே, எனக்கு இந்த ஊன் உணவு எதுவும் பிடிக்கவில்லையே?”

“தெரியும், உனக்கென்று பாலமுதம், கீரை, காய்கள், கனிகள், வியஞ்சனங்கள், உப்பிட்ட கிழங்கு, எல்லாம் செய்திருக்கிறோம். அவந்திகா, மகாராணியைக் கூட்டிச் சென்று பரிமாறு. காட்டுக் கறிவேப்பிலை என்ன மணம்? புளியும் மிளகும் கூட்டி, அரைத்து, மாவில் செய்த ரொட்டியில் தடவி, அற்புதமான பக்குவம் செய்திருக்கிறாள்…”

பெரிய வேம்பு கிளை பரப்பும் இடத்தில், பாய் விரித்து அவளுக்கு அமுது படைக்கிறார்கள். கேகய குமாரி மாதாவும் அவளுடன் சாத்துவிக உணவு கொள்கிறாள். உணவு கொண்ட அசதியில், அவள் அதே இடத்தில் இளைப்பாறுகிறாள். இலைகள் எடுத்துத் துப்புரவு செய்த பின் அதே இடத்தில், அவள் ஒரு பஞ்சணையை வைத்துச் சாய்ந்தவாறு, அப்படியே உறங்கிப் போகிறாள்.

அந்தக் கானகச் சூழலில் அமைதித்திரை சுருள் அவிழ்ந்து வீழ்கிறது. ஏதேதோ ஒலியோவியங்கள் அவள் செவிகளில் தீட்டப்படுகின்றன. குக் குக் குக் என்ற ஓர் ஒலி, கிர்… கிர்…ரென்று யாழ் நரம்பை இழுத்து மீட்டும் ஒலி… ஆனால் இது நந்த சுவாமியின் ஒற்றை நாண் ஒலி இல்லை என்று உள்ளுணர்வு பதிக்கிறது. பூமகள் தன் இடையில் உள்ள பட்டாடையை விரித்துக் கொண்டு அதில் முத்துக்களைக் குவிக்கிறாள்! பரப்புகிறாள். விரல்களால் அளைந்து சிறுமி போல் விளையாடுகிறாள். அப்போது நீல கண்டப் புறா ஒன்று வந்து அங்கே இறங்குகிறது. அது ஒவ்வொரு முத்தாகக் கொத்தி, அடுக்கி வைக்கிறது. கோபுரம் போல் அடுக்கி வைக்கிறது. அடி பரவலாக உச்சி கூம்பாக வருகையில் ஏழு முத்துக்கள்; பிற்கு மூன்று, உச்சியில் ஒன்று…

பூமைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைக் கையில் எடுத்துத் தடவிக் கொடுக்கிறாள்… “உனக்குப் பாலும் பழமும் கொடுக்கிறேன்… வா!” என்று அதைக் கையிலேந்தி மாளிகைக்குள் வருகிறாள்.

“அவந்திகா! பொற்கிண்ணத்தில் பாலும் பழமும் கொண்டா!” அவந்திகா பதறினாற் போல், “தேவி! இது தத்தம்மா இல்லை. இதைப் பழமும் பாலும் கொடுத்து வளர்க்க முடியாது. இது சிறு பூச்சி, விலங்குகள் தின்னும் க்ஷத்திரியப் பறவை!…”

“பொய்! இது எவ்வளவு அழகாக முத்துக்கோபுரம் கட்டி இருக்கிறது? இது ஊன் உண்ணும் கொலைப் பறவை இல்லை.”

ஆனால் அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அது அவள் முன் கையைக் கூரிய அலகினால் குத்திவிட்டுப் பறந்து உயர வானில் மறைகிறது. குத்திய இடத்தில் சிவப்பாய்… குங்குமச் சிவப்பாய்க் குருதி…

“கொலைகாரப் பறவை; நான் சொன்னேன், கேட்டீர்களா?…”

“என் முத்துக்கள்… மு… முத்துக்கள்.”

அவள் பெருங்குரலெடுத்து அழுகிறாள். ஆனால் ஓசை வரவில்லை.

“மகளே… மகளே! என்னம்மா?…”

குளிர்ந்த நீரின் இதம் கண்களில் படுகிறது. அவள் மெல்லக் கண்களை விழிக்கிறாள். மார்பு விம்மித் தணிகிறது.

அருகிலே, ராணிமாதா இருவரும், அவந்திகாவுடன் குனிந்து பார்க்கின்றனர். அவளுக்கு நாணமாக இருக்கிறது.

“கனவாம்மா? உணவு கொண்டு தாம்பூலம் கூடச் சுவைக்காமல் உறங்கி விட்டாய்…”

இன்னும் அந்தப் பறவை கண் முன் நிற்கிறது.

அத்தியாயம்-8

தாரை தப்பட்டை ஒலி வலுக்கிறது. அவர்கள் நகரின் வாயிலுள் நுழைகிறார்கள். ‘வேட்டைக்குச் சென்று திரும்பும் இளவரசர் வாழ்க! பட்டத்து அரசி வாழ்க! ராஜமாதாக்கள் வாழ்க! இளவரசிகள் வாழ்க!…’

வேட்டை மிருகமான ஒரு வேங்கைப் புலியைச் சுமந்து முன்னே செல்லும் தட்டு வண்டிச் சக்கரங்கள் கிறீச் கிறீச் சென்று ஒலிக்கின்றன. பூமைக்கு அது, இனிய இசையின் அபசுரமாகச் செவிகளில் விழுகிறது.

இப்போது அருகில் அவந்திகாவை அமர்த்தியிருக்கிறாள் கேகயத்துச் சீமாட்டி. பூமை செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“இளவரசர் வேட்டைக்கு வந்தாரா, எங்களுக்குத் துணையாக வந்தாரா அவந்திகா?”

“இரண்டுந்தான். இந்தக் கொடிய வேங்கைப் புலி அரசரின் ஓர் அம்பில் சாய்ந்து விட்டது. பெண் புலியாம். நான்கு முழம் இருக்கிறதாம்!”

“ஐயோ, பாவம், அது இவர்களுக்கு என்ன தீங்கு செய்தது? அதன் மாமிசமும் தின்பார்களா?”

“மகாராணி நீங்கள் பச்சைக் குழந்தையாக இருக்கிறீர்கள். மகரிஷிகளுக்குப் புலித் தோலாடை – ஆசனங்கள் எப்படிக் கிடைக்கும்? மேலும், இந்தப் புலிகளைப் பெருக விட்டால் ஊருக்குள் நுழைந்து மனித வேட்டையாடாதா?”

அவள் பேசவில்லை.

அரண்மனைக்குள் நுழைகையில் மங்கல வாழ்த்துகளின் பேரொலி செவிகளை நிறைக்கிறது.

வாயிலில் இவர்களை வரவேற்க மாமன்னர் தலைகாட்டவில்லை. அவர் அன்னை மட்டும் முகம் காட்டி “நலமாக வந்தீர்களா? ஓய்வு எடுத்துக் கொள் மகளே!” என்று வாழ்த்தி விட்டுத் திரும்புகிறாள்.

இவள் மாளிகையில் பெண்கள் மங்கள ஆரத்தி எடுத்து, கண்ணேறு படாமல் கழிக்கிறார்கள்.

ஊர்மி, சுதா எல்லோரும் அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்று விட்டார்கள். முற்பகல் தாண்டும் நேரம், வெயில் தீவிரமாக அடிக்கிறது.

தன் மாளிகைத் தோட்டத்துப் பசுமைகள் வாடினாற் போன்று காட்சி அளிக்கின்றன. இரண்டு நாட்கள் மட்டுமே சென்றிருக்கின்றன. ஏதோ நெடுங்காலம் வெளியே சென்று விட்டுத் திரும்புவது போல் இருக்கிறது.

முதியவளான கணிகை பத்மினி, தன் நடுங்கும் குரலில்,

“சீர்மேவும் கோசலத்தின் நாயகனின்
தோள் தழுவும் தூமணியே!
பார்புகழும் மாமன்னன், பார்த்திபன் தன்
கண்மணியே…”

என்று பாடி ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகம் இடுகிறாள்.

ஆனால் இதெல்லாம் உண்மையல்ல என்ற மந்திரம் ஒன்று உள்ளே மெள்ள ஒலிக்கிறது.

வாசவி சமையற்கட்டிலிருந்து அகன்ற பாண்டத்தில் வெதுவெதுப்பான நீர் கொண்டு வருகிறாள்.

தாழ்வரையில் கால்களை முற்றத்தில் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்த பூமகளின் பாதங்களில் சாமளி வரைந்த மயில் சிரிக்கிறது. அவந்திகா, கால்களைக் கழுவ வந்தவள் சற்றே நிற்கிறாள்.

“இத்துணை அழகுக் கலையை மன்னர் பார்த்து மகிழ வேண்டாமா? இந்தத் திருப்பாதங்களில், பொன்னின் சரங்களும், வண்ணச் சித்திரங்களும், மன்னரல்லவோ கண்டு மகிழ வேண்டும்?”

வாசவி வாளாவிருக்கிறாள். “சாமளி எங்கே?… அவளை அனுப்பி, மகாராணி அழைத்து வரச் சொன்னார் என்று சொல்லலாமா?”

வாசவி விருட்டென்று உள்ளே செல்கிறாள்.

உள்ளிருந்து, ராதையின் ஐந்து பிராயச் சிறுமி கண்டி அழுத முகத்துடன் வந்து மகாராணியின் முன் அழுது கொண்டே பணிகிறது.

பூமகள் பதறிப் போகிறாள். சிறுமி விம்மி விம்மி அழுகையில் பூமகள் அக் குழந்தையைத் தூக்கிக் கண்களைத் துடைக்கிறாள்.

“ஏனடி பெண்களா? இதெல்லாம் என்ன நாடகம்? அழுக்கும் சளியுமாக இவளை இங்கே அனுப்பி…?” என்று அவந்திகா அதட்டுகிறாள்.

ராதை அந்த அதட்டலைப் பொருட்படுத்தவில்லை.

“ஏண்டி, சனியனே? சொல்லித் தொலையேன்? நீ செய்த செயலுக்கு நானே உன்னை வெட்டி அடுப்பில் போடுவேன்!”

“அம்மம்மா! உங்கள் வாயில் இம்மாதிரி வார்த்தைகளைக் கேட்கவோ நான் வந்தேன்? குழந்தையை ஏன் வருட்டுகிறீர்? என்ன நடந்து விட்டது?”

“மகாராணி! நாங்கள் எதைச் சொல்ல? கிளிக் கூட்டைத் திறந்து விட்டு அதைப் பூனைக்கு விருந்தாக்கி விட்டாள்!”

“எந்தக் கிளிக்கூடு? தத்தம்மா எப்போதும் கூட்டில் இருக்காதே?” அதுவும்… மாளிகையில் அவள் இல்லாத நேரத்தில், கூட்டில் வந்து அமர்ந்ததா?

“ஆம் தேவி. நேற்று முன்னிரவில் வந்தது. தேவி இல்லையே என்று அதற்குப் பாலும் பழமும் வைத்துக் கூட்டில் அடைத்தேன். இந்தச் சனியன் காலையில் அதைத் திறந்து விட்டிருக்கிறாள்! எங்கிருந்தோ ஒரு நாமதாரிப் பூனை குதித்துக் கவ்விக் கொண்டு போய் விட்டது!”

மனதில் இடி விழுந்தாற் போல் பூமை குலுங்கிப் போகிறாள்.

“என் தத்தம்மாவா?”

“அதுதான்…”

“இருக்காது. அது வேறு கிளியாக இருக்கும்…”

மனசுக்குள் அவளே ஆறுதல் செய்து கொள்கிறாள்.

ஆனால் குழந்தை அழுது கொண்டே, “அது மூக்கால் தட்டி, திறந்து விடு திறந்துவிடுன்னு கொஞ்சிச்சி…” என்று தன் செய்கையின் நியாயத்தை விளக்குகிறாள்.

வலக்கண் துடித்தது. வளர்த்த கிளி… நெஞ்சம் கலந்த தோழி போன்ற பறவை, பூனைக்கு விருந்தா?…

“பூனைக்கண்ணி” என்று அக்கிளி கூறிய சொல் நெஞ்சைப் பிடிக்கிறது.

என்ன ஓர் ஒற்றுமை? இந்த மாளிகையில் இது வரையிலும் இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்ததே இல்லையே? சமையற்கட்டில் மீன் திருத்தும் போது பூனைகள் வரும். அவள் சாடை மாடையாகப் பார்த்து வெறுப்பைப் புலப்படுத்தி இருக்கிறாள்.

பூனைக்குப் பாலோ மீனோ கொடுப்பதுதானே? கூட்டில் இருக்கும் பால் கிண்ணத்தை நக்கி விட்டுப் போக வந்ததோ?

பச்சைக்கிளி… அவள் தத்தம்மா… தெய்வமே? இது எந்த நிகழ்வுக்கு அறிகுறி?

“நீசகுலத்தாளே, பூனை பற்றிய சேதியை உடனே வந்தவிழ்க்கிறாள்?”

“இல்லை தாயே, எப்படி இந்த விபரீதம் நேர்ந்ததென்றே தெரியவில்லை. நம் அரண்மனைப் பூனை இல்லை இது. நம் பூனைகள் இங்கே கிளிகளோடு சல்லாபம் செய்யும். இரை கொள்ளாது. இது எப்படி எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. முழங்கால் உயரம் இருந்தது… நாமநாமமாக… புலிக்குட்டி போல் இருந்தது…” என்று அஞ்சிய வண்ணம் ராதை விவரிக்கிறாள்.

“போதும், இப்போது யாரும் இதைப் பற்றிப் பேச வேண்டாம். தேவி, பயணக்களைப்பில் சோர்ந்திருக்கிறீர்கள் வெதுவெதுப்பாக நீராடி, சிறிது உணவு கொண்டு உறங்குங்கள். மாலையில் மன்னர் நிச்சயமாக வருவார்…” என்று அவள் மனமறிந்து அவந்திகா இதம் சொல்கிறாள்.

உடல் அசதி தீர நீராடுகிறாள். துடைத்து, முடி காய வைத்துக் கொண்டே உணவு கொண்டு வருகிறாள். பால் கஞ்சி, கீரை வெண்டை, கத்திரி, பூசணி காய் வகைகளும் பருப்பும் சேர்த்த ஒரு கூட்டு, மிளகு சேர்த்த காரமான ஒரு சாறு… உணவு அவந்திகாவே தயாரித்துக் கொண்டு வந்து அருந்தச் செய்கிறாள். அறையை இருட்டாக்கி, திரைச் சீலைகளை இழுத்து விட்டு, பஞ்சணையில் அவளைப் படுக்கச் செய்கிறாள்.

பூமை சிறிது நேரத்தில் உறங்கிப் போகிறாள். மனதில் ஒன்றுமே இல்லை… நடப்பது நடக்கட்டும். ஆம், நடப்பது நடக்கட்டும்… என்ற உறுதியை அவள் பற்றிக் கொண்டிருக்கிறாள்.

ஆழ்ந்த உறக்கம், கனவுகளும் காட்சிகளும் தோன்றாத உறக்கம் விழிப்பு வரும் போது எங்கோ மணி அடிக்கிறது… மணி… விடியற்காலையில் அருணோதயத்துக்கு முகமன் கூறும் மணி அல்லவோ இது!…

பூமகள் மெள்ளக் கண்களை அகற்றுகிறாள்.

படுக்கையைச் சுற்றி மெல்லிய வலைச் சீலையை விலக்கிப் பார்க்கிறாள். மாடத்தில் மினுக் மினுக் கென்று ஓர் அகல் வெளிச்சம் காட்டுகிறது. அவந்திகா கீழே அயர்ந்து உறங்குகிறாள். அவளுடைய தளர்ந்த சுருக்கம் விழுந்த கை, அதைத் தலைக்கு அணையாகக் கொண்டு ஒரு கோரைப் பாயில் உறங்குகிறாள். வெளியே அரவம் கேட்கிறது…

“மகாராணிக்கு மங்களம்…” என்று சொல்லிவிட்டு, கிழட்டுக் குரல்,

“செம்மை பூத்தது வானம்…
செந்தாமரைகள் அலர்ந்தன.
செகம்புகழ் மன்னரின் பட்டத்து அரசியே,
கண் மலர்ந்தருள்வீர்…”

என்று பள்ளியெழுச்சி பாடுகிறது.

தாம் எப்போது படுத்தோம் என்று சிந்தனை செய்கிறாள். கூடவே, மன்னர் இரவு வந்து பார்த்துவிட்டுப் போயிருப்பாரோ என்ற இழப்புணர்வும் அடிவயிற்றில் குழி பறிப்பது போன்ற வேதனையைத் தோற்றுவிக்கிறது.

“யாரங்கே…?”

“மங்களம், மகாராணிக்கு. சாமளி…”

சலத்தில் நீரேந்தி வருகிறாள்.

“சாமளி, மன்னர் இரவு வந்தாரா?…”

அவள்… “இல்லையே?” என்று கூறு முன் அவந்திகா விருட்டென்று எழுந்திருக்கிறாள்.

“நீ கண்டாயா? நீ உன் புருசனைப் பார்க்க ஓடி விட்டாய். அவன் எந்தப் பொம்புள பின் ஓடுகிறானோ என்ற கவலையில். இங்கே மகாராணி இல்லை என்ற நினைப்பில் நீ எதையும் கவனித்திருக்க மாட்டாய். நான் உன்னையே முதலில் நேற்று வந்ததில் இருந்து பார்க்கவில்லை. இப்போது மன்னர் வந்தாரா என்று கேட்டால், இல்லை என்று பார்த்தாற் போல் சொல்கிறாய்! மன்னர் ராத்திரி வந்தார். என்னிடம் விசாரித்தார். நலமாகத்தானே இருக்கிறாள் என்று கேட்டார். நான் சொன்னேன். தூங்கட்டும், எழுப்ப வேண்டாம், காலையில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுப் போனார். இத்தனை நடந்து இருக்கிறது, இவள் மன்னர் வரவில்லை என்கிறாள். இங்குத் தீபச் சுடர் தட்டிக் கரிந்து போனாலும் அதைத் தூண்டி எண்ணெய் விட நாதி இல்லை. பேசுகிறார்கள் கூடிக் கூடி!”

பூமகளுக்கு அவந்திகாவின் பேச்சு ஏன் இயல்பாகத் தோன்றவில்லை?

சாமளி இங்கு தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் கூறியது ஏன் உண்மையாக இருக்கலாகாது?

ஊடே கிளியைப் பூனை கவ்வும் தோற்றம் சிந்தனையில் வேலாய்ப் பாய்கிறது. தத்தம்மா, என் தத்தம்மா, சத்தியம், அதையா பூனை கவ்வி விட்டது? திடீரென்று நினைவு வந்தாற் போல், “அந்தப் பணிப்பெண்ணைக் கூட்டி வா என்று சொன்னேனே, அவந்திகா? நினைவிருக்கிறதா? கூட்டி வாயேன்!” என்று மெல்லிய குரலில் நினைவூட்டுகிறாள்.

“யார் தேவி? பூவாடை நெய்யும் ஒண்ரைக் கண் பிந்துவா?…” அவந்திகாவும் வேண்டுமென்றே தாண்டிச் செல்வதாகப் படுகிறது.

“இல்லை… அவள்… பெரிய ராணி மாளிகையில் செம்பட்டை முடி…” அப்போது, “வாழ்க! வாழ்க! இளவரசர் வாழ்க! மூத்த இளவரசர் வாழ்க!” என்ற வாழ்த்தொலிகள் கேட்கின்றன.

பூமை வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் விரைந்து கீழே படியிறங்கி வருகையில் முன்முற்ற வாயிலைச் சுத்தம் செய்யும் பணியாளர் திகைத்தாற் போல் பரபரத்து ஒதுங்குகின்றனர். அவந்திகா விரைந்து வந்து அவள் தோளைத் தொடுகிறாள்.

“பதற்றம் வேண்டாம் மகாராணி! மன்னர் பார்த்து வரச் சொல்லி இருப்பார். அதனால் தான் ஆரவாரமின்றி வருகிறார்…”

“இருக்கட்டும் இளையவரை நான் வரவேற்க வேண்டாமா?”

முன்முற்றத்துக்கு அவர் வந்து விடுகிறார். இவள் முகமலர அவருக்கு முகமன் கூறி வரவேற்கு முன் அவர் சிரம் குனிய அவள் பாதம் பணிகிறார்.

“அரசியாரை இளையவன் வணங்குகிறேன்!”

அவர் குரல் ஏனிப்படி நடுங்குகிறது? முகத்திலும் ஏனிப்படி வாட்டம்?

“மன்னர் நலம் தானே, தம்பி? நேற்று வந்திருந்தாராம். நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்ததால் எழுப்ப வேண்டாம் என்று திரும்பி விட்டாராம்!”

“தேவி, தாங்கள் கானகத்தில் முனிவர் ஆசிரமங்களில் சென்று தங்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்களாம். அதை நிறைவேற்றி விட வேண்டும் என்று மன்னர் விரும்புகிறார். என்னை இப்போதே பயணத்துக்குச் சித்தமாகத் தேரைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். நான் மன்னர் பேச்சை ஆணையாக ஏற்று வந்துள்ளேன்…” எந்த நெகிழ்ச்சியுமில்லாத குரல்.

“அவந்திகா!…” மகிழ்ச்சி வெள்ளத்தில் கண்ணீர் முத்துக்களாக உதிர்கின்றன.

“அடி! சாமளி! விமலை! இளவரசர் வந்திருக்கிறார், உபசரியுங்கள். அருந்துவதற்குப் பானம் கொண்டு வாருங்கள்…” என்று ஆரவாரிக்கிறாள்.

ஆசைப்பட்ட இடங்கள்… வேதவதிக்கரை… அவள் பிறவி எடுத்த பூமி, அங்குள்ள மக்கள்… நந்தமுனி, பெரியம்மா… அவந்திகாவுக்கு உவப்பாகப் படவில்லை.

“இது என்ன அவசரம்? இப்போது தான் ஒரு பயணம் முடிந்து வந்திருக்கிறீர்கள்? என்ன பரபரப்பு?”

கால் கழுவ நீரும், இருக்கையும், கனிச்சாறும் ஏந்தி வரும் பணிப்பெண்கள் முற்றத்தில் இளவரசனைக் காணாமல் திகைக்கிறார்கள்.

“மன்னர் தாமே வந்து இதைச் சொல்லக்கூடாதா? இளையவர் ஏதோ காலில் கஞ்சியைக் கொட்டிக் கொண்ட வேகத்தில் ஓடுகிறாரே?”

“அவந்திகா, நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இப்போது ஏதும் குறை சொல்ல வேண்டாம். மன்னர் என் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். அதுவே பேறு. அவருக்குப் பயணத்துக்கு முன் அநேக அலுவல்கள் இருக்கும். தம்பியை அனுப்பியுள்ளார். எனக்கென்ன ஓய்வு? ஓய்வு, ஓய்வு, ஓய்வு! நான் என்ன வேலை செய்தேன்? நீர் கொண்டு வந்தேனா? குற்றினேனா? இடித்தேனா? புடைத்தேனா? உணவு பக்குவம் செய்தேனா? இப்போது நான் விரைந்து சித்தமாக வேண்டும்” என்று பரபரக்கிறாள்.

அவந்திகா மவுனமாகிறாள்.

அத்தியாயம்-9

அவளுடைய உடலில் புதிய சக்தி வந்து விட்டாற் போலிருக்கிறது. பட்டாடைகள், அணிபணிகள் வைத்திருக்கும் மரப்பெட்டிகளைத் திறக்கிறாள். வண்ண வண்ணங்களாகக் கண்களுக்கு விருந்தாய்க் கலைப்படைப்புகள்… பெருந்தேவி அன்னைக்கு, இந்தப் பட்டாடை; இந்தக் கம்பளிப் போர்வை. நந்த முனிவருக்கு ஒரு கம்பளி ஆடை. வேடுவப் பெண்களுக்குச் சில ஆடைகள். கஞ்சுகங்கள். இங்கே இந்தப் பெண்களைப் போலில்லாமல்… அவர்கள் சுதந்தரமானவர்கள்… கானகம் செல்கையில், மன்னரைக் காண மீனும் தேனுமாக உபசரித்த படகுக்காரன், அவன் மனைவியின் குஞ்சு குழந்தைகள் கண்முன் பவனி வருகிறார்கள்… சிறை மீண்டு வருகையில் வேடுவப் பெண்கள் – தோலாடையும் மணிமாலையும் அணிந்து வந்த காட்சி தெரிகிறது. ஒரு குழந்தை வெண்முத்துப் பற்களைக் காட்டச் சிரித்த வசீகரத்தில் அவள் அருகே சென்று தொட்டணைத்தாள். அந்த மக்கள் கூட்டத்துக்கே உரித்தான வாடை – மறந்து போயிற்று. மூக்கில் ஒரு வளையத்துடன் அந்தப் பெண் குழந்தையின் முகம் தெரிகிறது. மகாராணி தொட்டதை எண்ணி, அவர்கள் மேலும் மேலும் பரவசப் பட்டதை நினைத்தவாறே, ஆடைகளை, அணிகலன்களைப் பொறுக்கி எடுத்துச் செல்லவிருக்கும் பெட்டியில் வைக்கிறாள்…

“அவந்திகா, நான் விரைந்து நீராட வேண்டும். மன்னர் அருகில் இப்படி உறக்க சோம்பேறியாக இருந்தால் பரிகசிப்பார்…”

அவந்திகா வாசனைப் பொடிகள், தைலம், சீப்பு, ஆகியவற்றுடன் நீராடும் முற்றத்துக்கு அவளை அழைத்துச் செல்கிறாள்.

பூமகளுக்குப் பரபரப்பில் என்ன பேசுகிறாள் என்பதே உணர்வில் படியவில்லை. சொற்கள் தன்னிச்சையாக நாவில் எழும்பி உயிர்க்கின்றன.

சுடுநீரில் போதுமான வெம்மை ஏறவில்லை.

“போதும் அவந்திகா! கூந்தலை நனைக்க வேண்டாம்!” எல்லாம் விரைவில் முடிகிறது.

“கூந்தல் சிங்காரத்துக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதே. அவர் விரைந்து வந்து விடுவார். பொறுமை கிடையாது! ‘இந்தப் பெண்களே இப்படித்தான் அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கி விட்டால் நேரம் தெரியாது’ என்பார்! நாங்கள் விரைவில் சென்றாலே பொழுது போகு முன் நல்ல இடத்தில் இரவைக் கழிக்க முடியும்… போகும் வழியில் யாரேனும் முனி ஆசிரமத்தில் தான் தங்குவோம். கோமதி ஆற்றின் கரையில் இப்போதெல்லாம் அடர்ந்த காடுகளே இல்லை. விளை நிலங்களாகிவிட்டன. இப்போது என்ன விதைத்திருப்பார்கள்…?” அவந்திகாவுக்கு மென்மையான கை. அவள் கூந்தலைச் சிக்கெடுத்துச் சீராக்கக் கை வைக்கும் போது இதமாக உறக்கம் வந்துவிடும். கூந்தலை, மூன்றாக, நான்காக வகுத்து, சிறு பின்னல்கள் போட்டு, சுற்றிக்கட்டி, முத்துக்களும், பொன்னாபரணங்களுமாக அழகு செய்வாள். வண்ண மலரச்சரங்களாலும் அழகு செய்வாள். இந்த அலங்காரங்கள் முன்பு செய்யத் தெரியாது. பதினான்கு ஆண்டுக்காலம், இந்த அரண்மனையில், இளைய மாமி, கேகய அரசகுமாரியிடம் கற்றுக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெருமாட்டி அறுபத்து நான்கு கலைகளிலும் தேர்ச்சி பெற்றவராம்.

செண்பக மலர்களைக் கொண்டு வந்து கொட்டுகிறாள்.

“செண்பகச் சரங்கள் சுற்றும் கூந்தல் சிங்காரமா? அவந்திகா, இதற்கு வெகுநேரம் ஆகுமே? அவந்திகா வேண்டாம்… ஒவ்வொரு காலிலும் மலர்களைச் செருகி பின்னல்களை நாகபட வடிவில் எடுத்துக் கட்டுவதற்குள் பொழுது போய்விடும்…”

“தேவி, மன்னர் பார்த்து மகிழ வேண்டாமா? இந்த அலங்காரங்களை, நான் எப்போது யாருக்குச் செய்து காட்ட முடியும்?…”

“போதும். நாங்கள் இப்போது, புனிதப் பயணம் போல் முனி ஆசிரமங்களுக்குப் போகிறோம். கொலு மண்டபத்துக்குப் போகவில்லை. இப்போது தவசிகளின் மனவடக்கம் பாலிக்க வேண்டும்! இப்படியெல்லாம் அலங்கரித்துக் கொண்டு போனால், மன்னர் என்னைத் தீண்டக் கூட மாட்டார்…”

“தேவி!” என்று அவந்திகா உரக்கக் கூவுகையில் பூமகள் நாவைக் கடித்துக் கொள்கிறாள்.

… உடல் குலுங்குவது போல் ஓர் அதிர்ச்சி. அவளையும் மீறி விழுந்து விட்ட சொல்லா அது?…

“அவந்திகா? என்ன சொன்னேன்? எதற்காக அப்படி அலறினீர்?”

“அலறினேனா? இல்லை. நீங்கள் அசைந்தீர்கள். சீப்பின் கூரிய பல் முனைப்பட்டு வருந்தப் போகிறதே என்ற அச்சத்தால் உரத்துக் கூவிவிட்டேன்.”

“மன்னர் தீண்டமாட்டார் என்ற சொல் எப்படி வந்தது?…” என்று பேதையாகப் புலம்புகிறாள்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது மன்னருடன் ஆசைப்பட்டதற்கு ஏற்பப் போகப் போகிறீர்கள். அந்த வருத்தமெல்லாம் ஆதவனைக் கண்ட பனியாகக் கரைந்து விடும்; எழுந்திருங்கள், குலதெய்வத்தைத் தொழுது உணவு கொள்ளச் சித்தமாகுங்கள். தேர் வந்துவிடும். மன்னர் உணவு கொண்டு தான் வருவாராக இருக்கும்… ராதை உணவு கொண்டு வருவாள். நான் சென்று தாங்கள் கொண்டு செல்லும் பொருட்கள், ஆடைகளைப் பெட்டியில் எடுத்து வைத்துவிட்டு வருகிறேன்!”

அவந்திகா விரைகிறாள்.

பூமை, குலதெய்வமாகிய தேவன் இருக்கும் மாடத்தின் முன், தாமரை மலர்களை வைத்துக் கண்மூடி அருள் வேண்டுகிறாள். வணங்குகிறாள். தூபம் புகைகிறது; தீபம் சுடர் பொலிகிறது.

“தேவனே, இந்தக் குலக்கொடிக்குத் தங்கள் ஆசியை அருளுங்கள். வம்சம் தழைக்க, ஒரு செல்வனை அருளுவீர்!”

பட்டாடை சரசரக்க, ஊஞ்சலில் போடப்பட்ட இருக்கையில் வந்து அமருகிறாள். முன்றிலில் இரண்டு அணில்கள் கீச்சுக் கீச்சென்று கூவிக்கொண்டே ஒன்றை ஒன்று துரத்துகிறது. கிளிக்கூண்டுகளில் கிளிகள் இல்லை. எப்போதும் எல்லாவற்றையும் திறந்து விடுவாள். அவை விருப்பம் போல் வந்தமர்ந்து பணிப்பெண்கள் வைக்கும் பால்-பழம் அருந்தும். இவளுடைய தத்தம்மா இல்லை… அது இருக்கும். பூனை கவ்வியது அவள் தத்தம்மா இல்லை…

அப்போது அங்கே கண்டி வந்து எட்டிப் பார்க்கிறது. இடையில் வண்ணம் தெரியாத ஒரு சிறு துண்டு ஆடை அழுக்கும் சளியும் துடைக்கப் பெறாத முகம். பிரிந்த தலை.

“குழந்தை இங்கு வா!”

இவள் அழைத்த குரல் கேட்டதுதான் தாமதம், அவள் விரைந்து உள்ளே சமையற்கட்டுக்குள் மறைகிறாள்.

ராதை தட்டில், உணவுக் கலங்களை ஏந்தி வருகிறாள்.

நெய் மணக்கும் அப்பம் போல் சேர்த்த பொரிக்கஞ்சி, இனிய கனிகள்… இலை விரித்து, அதில் அப்பங்களை, ஆவி மணக்கும் இனிய பண்டங்களை எடுத்து வைக்கிறாள்.

“ராதை, உன் மகள் கண்டியைக் கூப்பிடு? எட்டிப் பார்த்துவிட்டு ஓடுகிறது. நான் கூப்பிட்டால் பயமா?”

“தேவி, நீங்கள் மன்னருடன் புறப்படும் நேரம். அவள் எதற்கு? அந்தச் சோம்பேறியை மீனைத் தேய்த்துக் கழுவச் சொன்னேன். ஒரு வேலை செய்வதில்லை. இங்கே வேடிக்கை பார்க்க முற்றத்துக்கு வருகிறாள். தேவி, இது கிழங்குமாவில் செய்த அப்பம். ருசி பாருங்கள்!”

பூமகள் அப்பத்தை விண்டு சிறிது சுவைக்கிறாள்.

“மிக ருசியாக இருக்கிறது. நீ குழந்தையை இங்கே கூப்பிடு!”

அவள் சொல்வதற்கு முன் கண்டி, அவசரமாக முகத்தை நீரில் துடைத்துக் கொண்ட கையுடன் சிரித்த வண்ணமாக வருகிறாள்.

“அடி தரித்திரம்! போடி! இங்கே ஏன் வந்தாய்? மனசுக்குள் பெரிய அரசுகுமாரி என்ற நினைப்பு?” என்று ராதை குழந்தையை அடித்து விரட்ட, அவள் அழும் குரல் செவிகளில் துன்ப ஒலியாக விழுகிறது.

“ராதை?” என்று கடுமையாக பூமை எச்சரிக்கிறாள்.

“எதற்கு உன் கோபத்தைக் குழந்தையின் மீது காட்டுகிறாய்? இந்த, உன் அப்பமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்! என் முன் உனக்கு இத்துணை கடுமை காட்ட, உன் மனசில் ஏன் அவ்வளவு வெறுப்பு?”

“தேவி!” என்று நிலந்தோய ராதை பணிந்து எழுகிறாள். அவள் மேலே போட்டிருக்கும் துண்டு ஆடை நிலத்தில் வீழ்கிறது.

“மன்னிக்க வேண்டும். தாங்கள் அவளிடம் காட்டும் அன்பும் சலுகையும் மற்றவர்களின் பொறாமையைத் தூண்டி விடும்! ஏழை அடிமைகளுக்குப் பெருந்தன்மை கிடையாது!”

அவளுடைய சொற்கள் சுருக்சுருக்கென்று ஊசிகள் போல் தைக்கின்றன.

“ஏழையாவது, அடிமையாவது? என் செவிகள் கேட்க, இந்த அரண்மனையில் இப்படிப் பேசாதே ராதை! அப்படிப் பார்க்கப் போனால் நானும் குலம் கோத்திரம் அறியாத அநாதையே!”

“சிவ சிவ… நான் மகாராணியைக் குற்றம் சொல்வேனா? அவரவர் அவரவர் இடத்தில் பொருந்தி இருப்பதே உகந்தது. ஊர்க்குருவி, ஊர்க்குருவிதான். கருடப்பறவை கருடப்பறவைதான். உயர்ந்த குலத்தில் உதித்த, சாம்ராச்சிய அதிபதியின் பட்டத்துராணி தாங்கள். தங்களுக்குப் பூரண சந்திரன் போல் ஒரு மகன் பிறக்க வேண்டும். இந்த அழுக்குப் பண்டத்தை மடியில் வைத்துக் கொஞ்சுவது பொருந்துமா? இந்த ஏழைகளின் நெஞ்சில், பட்டாடைகள், முத்துக்கள், பாலன்னங்கள், பஞ்சணைகள் என்றெல்லாம் ஆசைகளை வளரவிடலாமா? கல்திரிகையில் கலம் தானியம் கட்டி இழுத்து மாவாக்க வேண்டும்… மணி மணியாக தானியம் குற்றி உமி போகப் புடைத்து வைக்க வேண்டும்… ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?…”

அவளுடைய நெஞ்சை இனந்தெரியாத சுமை அழுத்துகிறது.

அந்தப் பருவத்தில், அரண்மனைத் தோட்டத்தில் தான் ஆடிப்பாடி மகிழ்ந்ததை நினைவூட்டிக் கொள்கிறாள்.

உணவு இறங்கவில்லை.

கை கழுவ நீரும் தாலமும் ஏந்தி வருகிறாள்.

“உனக்கு எத்தனை குழந்தைகள்?”

“இரண்டு பிள்ளைகள்…”

“அவர்கள் குருகுல வாசம் செய்கிறார்களா?”

“எங்களுக்கேதம்மா குருகுல வாசம்? அப்பனுடன் உழுவதற்குப் போகிறான். இளையவன் ஆறு வயசு. கொட்டில் சுத்தம் செய்யும். ஆடு மேய்க்கும். இவள் அவனுக்கும் இளையவள். வீட்டில் தனியாக இருந்தால் ஓடிப் போய்விடும்.”

“ஏன் ராதை, உங்கள் பிள்ளைகள் குருகுல வாசம் செய்யக்கூடாதா?” அவள் சிரிக்கிறாள். வெறுமை பளிச்சிடுகிறது.

“மன்னர் ஆட்சியில் வாழ்கிறோம். நேரத்துக்குச் சோறு, ஏதோ பணி கிடைக்கிறது. மந்திரக் கல்வியும் தந்திரப் போரும் உயர்ந்த குலத்தோருக்கே உண்டு…”

பூமை கைகழுவவும் மறந்து சிந்தையில் ஆழ்கிறாள்.

எத்துணை உண்மை? மந்திரக் கல்வி… தந்திரப் போர்…

இதெல்லாம் யாரிடமிருந்து யாரைக் காப்பாற்ற?

மன்னர்கள் யாரிடமிருந்து யாரைக் காப்பாற்ற வில்லும் அம்பும் சுமந்து திரிய வேண்டும்?

இவள் பிள்ளைக்கும் வில் வித்தை பயிற்றுவிப்பார்கள். நீ உன் அரசைக் காப்பாற்றப் பகைவர்களை அழிக்க வேண்டும். யார் பகைவர்கள்? பகைவர்கள் எப்படித் தோன்றுகிறார்கள். முனிவர்களுக்கு அரக்கர்கள் எப்படிப் பகைவர்களானார்கள்?

சுற்றிச் சுற்றி ஒரே இடத்தில் வந்து நிற்கிறாள். அதை விட்டு வெளியே வர முடியவில்லை.

திடீரென்று ஓர் அச்சம் புகுந்து கொள்கிறது. இப்போது மன்னரும் இவளும் மட்டும் கானகத்துக்குச் செல்லும் போது, முனிவர்களின் ஆசிரமங்களில் தங்கும் போது, ஆபத்து நேரிடாது என்பது என்ன நிச்சயம்?

பகைமை கொடியது… ஒரு கால் யாரேனும் மன்னரைத் தூக்கிச் சென்றால் அவள் என்ன செய்வாள்?

இவளுக்கு இளைய ராஜாமாதா போல் தேரோட்டத் தெரியாது. அம்பெய்யத் தெரியாது. ஈ எறும்பைக் கூடக் கொல்ல மாட்டாள்… ஆனால் அந்த அன்னை அவ்வளவு தேர்ந்தவளாக இருந்ததாலேயே மாமன்னரைக் காப்பாற்றினாள். அதுவே பல குழப்பங்களுக்கு அடித்தலமாயிற்று. இரண்டு வரங்கள்… புத்திர சோக சாபம்…

கையில் வில்லும் அம்பும் இருந்தாலே கொலை வெறி வந்து விடுமோ? இல்லாது போனால், அந்த மாமன்னர் கண்ணால் பார்க்காத ஒரு விலங்கை, அது தண்ணீர் குடிப்பதாக அநுமானித்து, ஓசை வந்த இடம் நோக்கிக் கொலைகார அம்பை எய்வாரா? அந்த யானையைக் கொல்லலாகாது என்று ஏன் நினைக்கவில்லை? தெய்வம் தந்த கானகம்; தெய்வம் தந்த நீர்நிலை; தெய்வம் தந்த உயிர். இன்னாருக்கு இன்ன உணவு இயற்கை நியதி. இதெல்லாம் மெத்தக் கல்வி பயின்றிருந்த மாமன்னருக்கு ஏன் தெரியவில்லை? குருட்டுப் பெற்றோரின் ஒரே மகனை அந்த அம்பு கொலை செய்தது. எந்த ஒரு கொலைக்கும் பின் விளைவு இல்லாமல் இருக்காது!… இப்போது… ஏன் மனம் குழம்புகிறது?

“அம்மா? ஏனிப்படி வாட்டமாக அமர்ந்திருக்கிறீர்கள்? அரச மாதாக்களை வணங்கி ஆசி பெற வேண்டாமா?.. அவந்திகா இன்னமும் பெட்டிகளைச் சித்தமாக்குகிறார். பிறகு என்னைக் கோபிப்பார். மன்னர் வந்துவிட்டார் என்றால்…”

இவள் சொல்லி முடிக்கு முன், நிழல் தெரிகிறது. பட்டாடை அசையும் மெல்லொலி…

இளையவர்… தம்பிதான்.

கோபமா, அல்லது துக்கமா?

முகம் ஏன் கடுமை பாய்ந்த அமைதியில் ஆழ்ந்து போயிருக்கிறது? சினம், துயரம், இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை இந்த முகத்தில் காண முடியாது.

“தேவி, இரதம் முற்றத்தில் வந்து நிற்கிறது. வந்து ஏறுங்கள்!”

அவள் உள்ளத்தின் எதிர்பார்ப்புகள் வண்ணமிழக்கின்றன.

“இதோ…”

அவள் எழுந்து அவனைப் பின் தொடருகிறாள்.

– தொடரும்…

– வனதேவியின் மைந்தர்கள் (நாவல்), முதல் பதிப்பு: ஆகஸ்டு 2001, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email
ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *