அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம்-4
“தேவி, மன்னர் இன்று மாலை செண்பகக் குளக்கரையில் தோட்டத்துக்கு வருகிறாராம். சேதி சொல்லச் சொன்னார்…”
அவந்திகா பூமகளின் கூந்தலில் தைலம் பூசிக் கொண்டிருக்கிறாள். செய்தி கொண்டு வந்தவள் சலவைக்காரனின் மகள், கனகாவோ ஏதோ பெயர். கறுப்பிதான். அழகான நீண்ட கண்கள். பருத்த தனங்கள், தோள்கள். இவள் போட்டுக் கொண்டிருக்கும் மணிமாலைகள் மேடேறி இறங்குவதை உறுத்துப் பார்க்கும் அவந்திகா, “மன்னர் உன்னிடம் சொல்லி அனுப்பினாரா? மன்னருக்குக் கவரி போடச் சென்றாயா?” என்று சொற்களைக் கடித்துத் துப்புகிறாள்.
“…ஐயோ இல்லையம்மா, பெரிய மகாராணியார் சொல்லி அனுப்பினார். நான் ஏன் அங்கெல்லாம் போகிறேன்?…”
“சரி போ…”
பூமகள் அவள் செல்லும் திசையையே நோக்குகிறாள்.
‘மன்னருக்கு, மனைவியை வந்து நேரில் மாளிகையில் பார்க்க முடியவில்லையா? இந்த ஏற்பாடு மகாராணியால் செய்யப்பட்டதா? மன்னருக்குச் சுயசிந்தனை இல்லையா? சடாமுடி குலகுருவோ, வேறு யாரோ சொன்னால் மட்டுமே கைபிடித்த மனையாளைப் பார்க்க – செண்பகத் தோட்டத்துக்கு வர வேண்டுமா?’
இவள் மனசுக்குள் கேட்டுக் கொண்ட வினாக்களுக்கு எதிரொலியே போல், அவந்திகா, “மகாராணி மாதா, மகன் இந்த மாளிகைக்கு வரவேண்டாம் என்று நினைக்கிறாரா?” என்று கேட்டுக் கொண்டே சிக்கெடுத்த முடியை விரலில் சுற்றிக் கொள்கிறாள்.
“அதில்லை, செண்பகத் தோட்டம், குளக்கரை, அதன் மீன்கள், அன்னப்பறவைகள், அவருக்கு மனங்கவர்ந்த இடங்கள். அதனால் நேராக வந்து அங்கே மகிழ்ந்திருக்கலாம் என்று எண்ணுவாராக இருக்கும். எது எப்படியானாலும் நாம் செய்குளத்துக்குப் போகிறோம். அங்குதான் நீராடல். அங்கே இப்போது நீர் வெதவெதப்பாக உடலுக்கு இதமாக இருக்கும். அவந்திகா, வேதபுரி பக்கம் இப்படி வெந்நீர்க் குளங்கள் யட்சவனத்தில் பக்கத்தில் பக்கத்தில் வெந்நீரூற்றும், குளிரருவியும் இருக்கும் அதிசயம் அற்புதம்…”
“இங்கும் கோமுகி ஊற்று இருக்கிறதாம். மூன்று ஊற்றுகளில் நீராட வசதி இருக்குமாம்.”
“அங்கு ஒரு நாள் எல்லோருமாகப் போகலாம். ஊர்மிளா தேவி, சுதாதேவி, ராணி மாதாக்கள் எல்லோருமே போகலாம். இந்த நேரத்தில் தேவை எதுவானாலும் நிறைவேற்ற வேண்டும்…”
“அவந்திகா, என்ன தான் உயர்வுகள் இங்கு இருந்தாலும் நம் வேதபுரி மாளிகையின் தாமரைக்குளம் போல் இங்கு இல்லை…”
“அது எனக்குத் தெரிந்து, மன்னர் வெட்டி நேர்த்தியாகக் கட்டிய குளம். பளிங்கு போல் தரையும் கொத்துக் கொத்தாக வண்ண வண்ணங்களாக மீன்களும் தெரியும். இக்குளத்தின் ஓரங்களில் தாமரை மலர்கள் நிறைந்து இருக்கும். செந்தாமரை, வெண்தாமரை மாறி மாறி மலர்ந்திருக்கும்… பிறகு, நீங்கள் வந்த பிறகு, குளத்தைச் சுற்றிச் செவ்வரளி கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும். உங்களுக்கு நினைவிருக்குமே?”
“நினைவா?…”
பூமகள் நினைவில் ஆழ்ந்து போகிறாள். நந்தமுனியின் விரலைப் பற்றிக் கொண்டு அவள் நடந்த காலம்… கால்களைப் பளிங்கு நீரில் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பாள். நந்தமுனி கல் படியில் உட்கார்ந்து ஒற்றை நாண் மீட்டிப் பாடுவார்.
“நீரும் நிலமும்
வானும் கானும்
கிளியும் கீரியும்
குயிலும் மயிலும்
எல்லாம் எல்லாம் நான்… நான்…
எல்லாம் நானா?”
“ஆமாம். நினைத்துப் பார் குழந்தை? மீன் உன் காலை முத்தமிட்டுப் பார்க்கிறதே ஏன்? நீ தண்ணீரைத் தொட்டுப் பார்க்கிறாயே, ஏன்? வெயிலில் கை வைத்துப் பார்க்கிறாயே, ஏன்? எல்லாவற்றிலும் உயிர்த்துடிப்பு இருக்கிறது.” “இந்தக் கல்லில்?” என்று படித்துறைக் கல்லைக் காட்டுவாள்.
“ஆம் இருக்கிறது. நீ செவிகளை வைத்துப் பார் தெரியும்…”
“நந்த சாமி, என் அம்மா பூமிக்கு என்னைத் தெரியுமோ இப்போது?”
“ஓ! நிச்சயமாகத் தெரியும்!…”
“பின் ஏன் என் அம்மா, ஊர்மி, சுதா இவர்களுடைய அம்மாவைப் போல் முகம், முடி, உடம்பு, கை, கால் என்று நடந்து வரவில்லை?”
“வருகிறாளே? பூமித்தாய்… ரொம்ப ரொம்பப் பெரியவள். இந்த நீர் நீ தொடும் போது எப்படி இருக்கிறது? மீன் எப்படி இருக்கிறது? நீ சிரிக்கும் அழகைப் பார்க்கத்தான் இப்படி எல்லாம் மாறி உன்னைக் கவருகிறாள். அரளிப் பூவில், தாமரைப் பூக்களில், பெரிய இலைகளில் பனித்துளிகளில் மயிலின் சிறகுகளில் எல்லாவற்றிலும் தாய் இருக்கிறாள். அவள் சிறு குஞ்சாக உன்னுள்ளும் இருக்கிறாள்…”
“எனக்கு என் அம்மாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது…”
“ஓ! நிச்சயமாகப் பார்ப்பாய், ஒரு நாள்…”
“எப்போது?…” என்று ஒருவகையான பிடிவாத ஆவலுடன் அவள் சிணுங்குவாள்.
“நீ இவ்வளவு உயரம் வளர்ந்த பிறகு!” என்று தன் தலை உயரத்துக்கு அவர் கைகளை உயர்த்துவார்…
அவ்வளவு உயரம் வளர்ந்த பின்னரும் அவள் கனவுகள் மட்டுமே வளர்ந்தன. அவள் பிறப்பின் இரகசியம் புகைக்குள் பொதிந்த சுடர் போல் அவளுக்கு எட்டவில்லை.
பூமை கணவருடன் கானகத்தில் வாழ்ந்த நாட்களில், மர உரிகளை வேடுவர்கள் கொண்டு வருவார்கள். குளிரும் மழையுமாக இருந்த நாட்களில், அந்த ஆடைகள் போதுமானதாக இருக்காது. இளையவர் முனி கூடங்களில் இருந்து ஆடைகள் வாங்கி வருவார். முனி வருக்கத்துக்கு க்ஷத்திரிய மன்னர்கள் வாரி வாரி வழங்குவார்களே? கம்பளி ஆடைகள், மெல்லிய தோலாடைகள், சில பட்டாடைகள் என்று அணிந்து கொள்வாள். அருவிகளிலோ தடாகத்திலோ நீராடும் போது, நீரின் மடியே தாய் மடிபோல் தோன்றும். “தாயே! நீதான் என்னை ஈன்றாயா? உன் முகம் எப்படி இருக்கும்?” என்று நீரினுள் தன்னைப் பார்ப்பாள். இந்த நீரின் மென்மை, உன் கரங்களா? இந்தக் குளிர்மை, உன் புன்னகையா? அதிகாலையில் வந்து தொடும் போது வெதுவெதுப்பாக இருக்கிறாயே, அது உன் மேனியில் என் கை தொடும் போது எழும் வாஞ்சையா?
பூத்திருக்கும் தாமரைகள், உன் கண்களா?
தாயே? உன் உயிருடன் கலந்த என் தந்தையே உன் மணாளரா? என்னை எடுத்து வளர்த்த தந்தை உன் மணாளரா?… ஊர்மி என்னை விடப் பெரியவள் என்று சொல்லுகிறார்கள். நீ ஒருகால் அரண்மனைப் பணிப்பெண்ணாக இருந்தாயோ? நானும் அடிமைப் பெண்ணாக ஊழியம் செய்யலாகாது என்று என்னை மன்னர் உழவோட்டும் மண்ணில் விடுத்தாயோ? மன்னர் அதற்குப் பிறகு மேழி பிடிக்கச் செல்லவே இல்லையாம்! அவந்திகாவும் விமலையும் வாசனைப் பொடிகளும் துடைக்கும் துண்டுகளும் கூந்தலை ஆற்றிக் கொள்ளும் தூபக் கலசங்களும் கொண்டு வருகிறார்கள். இந்தச் செய்குளம் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கல்படித்துறையைச் சுற்றிலும் மலர்ச்செடிகள் வண்ண வண்ணமாகப் பூத்திருக்கின்றன. இவற்றுக்கு வாசனை இல்லை. அருகில் உடைமாற்றும், கூந்தல் ஆற்றிக் கொண்டு இளைப்பாறும் மண்டபம். இந்தச் செய்குளத்தை அரண்போல் பசுங்கொடிகளும் முட்புதர்களும் காக்கின்றன. மாமன்னர் தேவியர் நீராடும் இடம் அல்லவா?
குளப்படிகளில் பூமை மட்டுமே இறங்குகையில் அவந்திகாவும் விமலையும் மேலே நிற்கிறார்கள்.
நீர் மித வெப்பமாக இந்தப் பின்பனிக் காலத்துக்கு இதமாக இருக்கிறது. பூமியில் இருந்து வரும் மித வெப்ப ஊற்றில் நிரம்பும் குளம். இந்த நீரையே மடைவெட்டி இன்னொரு குளத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். பிறகு அது கானகப் பாதையில் சென்று பரவிவிடும்.
முதுவேனில் பருவத்தில், இங்கே ஊற்றே இருக்காது. இந்தப் பூமகள் நீராட, பூமிதேவி, நீராட்டி விடுகிறாள்.
முழங்கால் அளவே ஆழம். அடியில் சுட்ட செங்கல் பாவிய தளம். கழுத்து வரை அமிழ்ந்து கொள்கிறாள். நீர் மேல் கூந்தலைப் பரவவிடுகிறாள்.
வயிற்றில் சிசுவின் சலனம். அவள் மேனியில் சுகமான ஓர் அனுபவத்தைப் பரவ விடுகிறது.
‘தாயே! உனக்கும் நான் வயிற்றில் இருக்கும் போது இப்படி உணர்ந்தாயா? நீ என்னைப் பூமியில் விடும்போது, உனக்குச் சோகமாக இல்லையா? அந்தச் சோகங்களே மீண்டும் என்னுருவில் உயிர்க்கின்றனவோ?’
இதமான வெம்மையில் மின்னல்கள் போல் கதிர்கள்…
ஒரு கால் அவந்திகாவே என் அன்னையோ? அவள் மார்பில் பாலருந்த விதி எப்படி விட்டது?
நரைத்த முடியை உச்சியில் சுற்றிக் கொண்டு நந்த பிரும்மசாரியுடன் வரும் பெரியன்னை. ஒற்றை ஆடையை மார்புக்கு மேலும் முழங்காலோடும் சுற்றிக் கொண்டு வருவாளே, கால்களில் முரட்டுத்தோல் செருப்பு அணிந்து இலைப் பொதிகளில் அவளுக்குப் பரிசில் கொண்டு வருவாளே, அந்த முதியவள் யார்?
வேடுவர்கள் தயாரித்த கொம்புச் சீப்பினால் அவள் அடர்ந்த முடியை வாருவாள். காட்டுப் பூக்களை விதம் விதமாகத் தொகுத்து இணைத்து மலர்க்கிரீடம் சூட்டி, கன்னத்தை வழித்து திருஷ்டி கழிப்பாள். முத்தமிடுவாள். சில நாட்களில் ஊர்மி, சுதா, பணிப்பெண் தோழிகள் எல்லோருடனும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது, அவள் வருவாள் இவளை மட்டும் அணைத்து முத்தமிடுவாள். முத்துச் சிவப்புப் பழங்களோ, வெண்ணெய் இனிப்புப் பழங்களோ, கருநாவல் கனிகளோ, இலைகளில் வைத்து எல்லோருக்கும் கொடுப்பாள்.
ஊர்மிக்கு அவளைக் கண்டால் பிடிக்காது. ஏன், அரண்மனையில் இருந்த வேறு பல செவிலியருக்கும் அவளைப் பிடிக்காது. அவள் வந்து விட்டால், அவர்கள், “வாடி நாம் போய் தனியே விளையாடலாம்!” என்று, அவளை மட்டும் விட்டு விட்டு வேறு பக்கம் போய் விடுவார்கள். அந்த அம்மை கொடுக்கும் கனிகளையோ, தேன் சுளைகளையோ, தொடமாட்டார்கள்.
ஒரு நாள் சுரமா அதற்குரிய காரணம் ஒன்று கூறினாள்.
“அவள் வேடுவப் பெண் மட்டுமல்ல, நரமாமிசம் உண்பவள். நம்மைப் போன்ற இளம் பெண்களை இப்படி ஏதேனும் கொடுத்து மயக்கிக் கானக நடுவில் கொண்டு சென்று, கிழித்து…”
அவள் சொல்லும் போதே பூமகளுக்கு உடல் நடுங்கியது. அன்றிரவு, அவள் அவந்திகாவின் அருகில் படுத்திருக்கையில் அவள் முகம் தோன்றிற்று… உச்சியில் முடி சுற்றிக் கொண்டு அந்தம்மை “நான் தான் உன் அம்மை… உன்னை மண்ணில் விட்டேன். இப்போது எனக்குப் பசி. நீ வேண்டும்…” என்று கோரைப் புற்கள் போன்ற நகங்களை அவள் முதுகில் பதிக்கிறாள்.
பூமை ‘அம்மா’ என்று அலறும் போது அவந்திகா தான் திடுக்கிட்டுத் தட்டுகிறாள்…
“குழந்தாய் கனவு கண்டாயா? இதோ பாரு அவந்திகா, இருக்கேம்மா?”
“அம்மா… அம்மா… யாரு?”
“அம்மா தா… அம்மா இதோ இருக்காங்க. கூட்டி வரேன்…”
சற்று நேரத்தில் அப்பா வந்தார். பெரிய ராணி வந்தார்.
“என்னம்மா?… இதோ… இதோ அம்மா…”
மங்கலான வெளிச்சத்தில் நரை தாடி தெரியத் தந்தை. அம்மா, ராணி… குழலவிழ, கண்கள் சுருங்க… கன்னத்தில் கறுப்புப் புள்ளியுடன்…
“இது ஊர்மியின் அம்மா…”
“அப்பா, என் அம்மா, அரக்கியா? நரமாமிசம் சாப்பிடுவாளா?” அப்பா அவள் கூந்தலைத் தடவி மென்மையாக உச்சி முகர்ந்தார். அம்மா, ராணி மாதா அவளை மடியில் கிடத்திக் கொண்டாள்.
“யாரோ இல்லாத பொல்லாத கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள்! பயந்து போயிருக்கிறாள் குழந்தை!”
“உன் அம்மா, விண்ணில் இருந்து வந்தவள். தெய்வம் உன்னைப் பெற்று இந்த மாதா மடியில் தவழவிட்டுப் போனாள். நீ தெய்வ மகள்…”
“அப்பா, அரக்கர் அம்மா எப்படி இருப்பார்கள்? சுரமை சொல்கிறாள், அவர்கள் விரும்பிய வடிவம் எடுப்பார்களாம். அழகான தாய் போல் வந்து, எங்களைப் போல் குழந்தைகளைத் தூக்கிச் சென்று வள்ளிக்கிழங்கைக் கடித்துத் தின்பது போல் தின்பார்களாம்!”
“சிவ சிவ…! குழந்தாய், அதெல்லாம் பொய்! சுரமாவை நான் தண்டிக்கப் போகிறேன்! கதைகளில் தான் அப்படியெல்லாம் வரும்… நீ தூங்கம்மா! அவந்திகா, குழந்தையை அருகில் அணைத்துக் கொண்டு படு.” அவளை அவர் தூக்கிக் கட்டிலில் பஞ்சணையில் கிடத்தியது இப்போது நடந்தாற் போல் இருக்கிறது.
அவந்திகா தன் உருண்டையான, உறுதியான கைகளால் அணைத்துக் கொண்டதும், அந்த வெம்மையின் இதம் பரவியதும் நினைவில் உயிர்க்கிறது.
அடுத்த சில நாட்களில் அந்தப் பெரியம்மா, தனியாகவே வந்தாள். தோட்டத்தில் அவந்திகா, அவளுக்குப் பொற்கிண்ணத்தில் பாலும் சோறும் ஊட்டிக் கொண்டிருந்தாள்.
ஆடை மடிப்பில் இருந்து ஏதோ ஓர் ஓலையினால் முடைந்த சிறு பையை எடுத்தாள். அந்த ஓலைப்பை நிறைய அவளுக்கு மிகவும் பிடித்த வெண்ணெய்க் கனிகள் இருந்தன.
“சோறுண்ட பின் பழம்…”
தின்று முடியுமுன் பூமகளின் இதழ்கள், கன்னங்களிலெல்லாம் அந்தச் சோறு ஒட்டியிருக்கும். குளத்துப்படியில் வைத்து அவள் வாயைக் கழுவுவார்கள். அந்தக் கொட்டைகளையும் கழுவுவாள். எண்ணெய் தடவினாற் போன்று பளபளவென்று, வழுவழுப்பாக இருக்கும்.
பிறகு கல்பாவிய தரையில் அந்த விதைகளை ஒரு கோலமாக வைப்பார்கள். அன்றும் இந்த விளையாட்டை ஆடுகையில், பெரியம்மா, வண்ண வண்ணச் சிறுமலர்களைப் பறித்து வந்து விதைக்கொட்டை வடிவுக்கு உயிரூட்டினாள். அழகிய தாமரைப்பூ உருவாயிருந்தது. புற்களில் பூத்திருந்த ஊதா நிறச் சிறு பூக்களைக் கொண்டு வந்து அந்தப் பெரிய தாமரையை உருவாக்கினாள்.
அப்போது திடீரென்று அவள் கேட்டாள்,
“பெரியம்மா? நீங்கள் அரக்கரா?”
அவர் ஒரு கணம் திகைத்ததும் நினைவில் உயிர்க்கிறது.
“அப்படி ஒன்றும் கிடையாது குழந்தை! எல்லாரும் மனித குலம் தான்…”
“அரக்கர்களுக்கு நரமாமிச ஆசை வந்து, கோரைப் பற்களும் குரூர வடிவமும் வந்து விடுமாம். அப்போது அவர்கள் அழகான பெண்கள் போல் வந்து குழந்தைகளைத் தூக்கிச் சென்று ஒடித்து கடித்துத் தின்பார்களாம். சுரமை இல்லை சுரமை, அவள் சொன்னாள். அவளுடைய அம்மா அப்படிச் சொன்னாளாம். சுரமை எங்களுடன் விளையாடுவாள். மணிக்கல்லை மேலே போட்டு கீழே மூன்று தட்டு தட்டும் வரை அது கீழே வராமலிருக்கும்…”
“அப்படி எல்லாம் இல்லை குழந்தை. முன்பு எப்போதோ அப்படி மனிதர்களும் ஓநாய், புலிகள் போல் பற்களுடன் பிறந்திருப்பார்கள். ஏனெனில், அப்போது உணவைச் சமைத்துச் சாப்பிட அவர்களுக்குத் தெரியவில்லை. பிறகு மனிதர்கள் அறிவால் எத்தனையோ கற்றுக் கொண்டு விட்டார்கள். தானியங்கள், நெய், தேன், பால் எல்லாம் நமக்குக் கிடைக்கின்றன. அதனால், யாருக்கும் அப்படிக் குரூரம் வராது. வேறு வேறு வடிவம் எடுக்க முடியாது. வேடம் போட்டுக் கொண்டு நாடகம் தான் ஆடுவார்கள். அதுவும், பெண்கள் அரக்கியர்கள் வடிவம் மாறி குழந்தைகளைத் தூக்கிச் சென்று தின்பதெல்லாம் முழுப் பொய். ஏன் தெரியுமா?”
“ஏன்?…”
“அவள் பெரியவளாவாள், அவளை ஒரு நல்ல மனிதன் திருமணம் செய்து கொள்வான். அன்போடு இருப்பார்கள். அப்போது அவளும் கருப்பம் தரிப்பாள். அவள் வயிற்றில் ஒரு குழந்தை உயிர்க்கும். அவள் உலகம் முழுவதையும், அன்பாய், தாய் போல் நினைப்பாள்…”
அவளுக்கு நீரின் வெம்மையில் உடல் முழுவதும் ஒரு பரவசச் சிலிர்ப்பு பரவுகிறது.
‘அம்மா! உனக்கு நான் வயிற்றில் இருக்கும் போது, இப்படி உணரவில்லையா? ஏன்? உலகம் முழுவதையும் தாங்கும் தாய் போன்ற பரிவு வரவில்லையா? ஏன்? அதனால் தான் பூமியில் விட்டாயோ?…’
இன்னொரு நாளின் நினைவு உள்ளத்திரையில் படிகிறது.
ஊர்மி, சுதா, சுரடை, எல்லோருடனும் கண்ணாமூச்சி ஆடினார்கள். முதிய சண்டி அவள் கண்களைப் பொத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது, பெரியம்மா தோட்டத்துக்கு வந்து விட்டார். முரட்டுச் செருப்பொலி கேட்டதுமே, சண்டியின் பிடி தளர்ந்தது.
“இந்த ராட்சசி, இப்படிக் குழந்தைகளை வந்து வந்து கெடுக்கிறாள். இவள் கபடம் மன்னருக்கும் தெரியவில்லை; மாதாவுக்கும் தெரியவில்லை!…” என்று முணுமுணுத்து, உரத்த குரலில், “அடியே சுரமா? எல்லாரையும் உள்ளே கூட்டிச் செல்! பனிக்காற்று உடலுக்கு நல்லதல்ல. கண்ட காட்டுப் பழங்களையும் வாங்கிக் கொள்ளாதீர்கள்!” என்று எச்சரித்தாள்.
ஆனால் பெரியம்மா தயங்கவில்லை.
“குழந்தைகளா, அத்தையுடன் கண்ணாமூச்சி விளையாடுறீங்களா? என்னையும் சேத்துக்குங்கம்மா!” என்று அருகில் வந்து அவளைப் பற்றி குனிந்து உச்சி முகர்ந்து கண்ணேறு கழித்தாள்.
சண்டியை நேராகப் பார்த்துப் புன்னகை செய்தாள்.
“என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா? நான் அரக்கி என்ற பயமா? அப்படி ஒரு தனிக்குலம் இல்லை தாயே! கொன்று தின்னும் புலியும் விஷம் கக்கும் பாம்பும் கூட அரக்க குலம் இல்லை; உயிர்க்குலம் நாமெல்லாரும் மனிதர்குலம். நம்மிடத்தில் ‘அரக்கர், தேவர்’ என்ற இரண்டு குலங்களும் ஒளிந்திருக்கின்றன. நாம் பயப்படும் போது, கோபப்படும் போது, பொறாமைப்படும் போது, பேராசை கொள்ளும் போது, அடுத்தவருக்குத் தீங்கு நினைக்கும் போது, நமக்குள் இருக்கும் அரக்கர் வெளிபபடுவார். ஆனால், இன்னொருவர் தேவர் ஒளிந்திருக்கிறாரே, அவரால் இந்த அரக்கரைத் தலையில் தட்டி அடக்கிவிட, அன்பு அதுதான் சத்தியம், அதுதான் இம்சை செய்யாமை… இந்த ஆயுதத்தை அந்த அரக்கருக்கு நினைவுறுத்தி, “சாந்தமடை அரக்கா, நீயும் தேவராகி விடுவாய்!” என்று அமுக்கி விடுவார்…” என்று கதை போல் அந்த அம்மை சொல்லும் போது, அவை அமுத மொழிகளாகவே இருக்கும்.
“அப்படியானால், நம் உள்ளே இரண்டு பேர் எப்போதும் இருக்கிறார்களா?”
“ஆம் கண்ணே! அரக்கருக்கு நாம் தீனி போட்டால் அவர் உரிமை பெற்று விடுவார். பொறாமை, இம்சை, பேராசை, சுயநலம், இதெல்லாம் அவர் தீனிகள். இதனால் நமக்கு மகிழ்ச்சியே வராது; சிரிக்கவே மாட்டோம்… தூக்கத்தில் கூட கெட்ட கனவுகள் வரும்… அதனால் அன்பு பெருக, யாருக்கும் தீங்கு நினைக்காமல், சுயநலம் பாராட்டாமல் மற்றவர் சந்தோஷம் பெரியதாக எண்ணினால், அரக்கர் எழும்பவே மாட்டார். உணவு இல்லையெனில் எப்படித் தலை தூக்க முடியும்! குழந்தைகளே, தின்ன வரும் புலி கூட சத்தியத்துக்குக் கட்டுப் படும்; அன்பின் வடிவமாகும்!”
“எப்படி?…”
“ஒரு கதை சொல்லட்டுமா?”
“சொல்லுங்கள் பெரியம்மா!”
“இது கதை இல்லை. உண்மையில் நடந்ததுதான்.
ஒரு சமயம் ஒரு புலிக்குப் பசித்தது. அந்தப் பசியைப் போக்கிக் கொள்ள அதன் கண்களுக்கு ஒரு மிருகம் கூட அகப்படவில்லை. பசியரக்கன் அதன் உள்ளே எழும்பியதால் அதற்குக் கோபத்தைத்தான் தீனியாக்க முடிந்தது. ஆத்திரத்துடன் உறுமிக் கொண்டு வருகிறது. அப்போது ஆற்றுக்கரைப் புற்றடத்தில் வெள்ளை வெளேரென்று ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. புலி உடனே ஒரே எழும்பு எழும்பிப் பாய முனைந்தது. சாதாரணமாக யாருக்கும் அப்போது என்ன தோன்றும்?… அச்சம்… அச்சம் தான் தோன்றும். முன்பே சொன்னேனில்லையா? அச்சமும் ஒரு வகையில் அரக்கனுக்குக் கொடி பிடிக்கும் குணம் தான். அது வந்தால் மனசு குழம்பிப் போகும். நகரக் கூடத் தெரியாது. உடனே அழிவு தான். புலியின் வாய்க்குள் போவதற்குத் தப்பி, பசு ஓட முயற்சி செய்யவில்லை. மாறாக, நிலைத்து நேராகப் புலியைப் பார்த்து, “நண்பரே!” என்று கூப்பிட்டது. “கொஞ்சம் நில்லுங்கள். நான் உமக்கு உணவாவதில் ஒரு தடையும் இல்லை. நீங்கள் உங்கள் குட்டிகளை விட்டு, உணவு தேட வந்திருக்கிறீர்கள். எனக்கு உங்கள் பசி உங்கள் தாபம் எல்லாம் புரிகிறது… எனவே ஒரே ஒரு விண்ணப்பம்” என்று இறைஞ்சியது.
“என்ன அது?” என்று புலி உறுமிற்று.
“ஆற்றுக்கு அக்கரையில் என் கன்று நிற்கிறது. அங்கே எனக்கு உணவு கிடைக்காததால், அதற்கு வேண்டிய பால் என்னிடம் சுரக்கவில்லை. இந்த ஆற்றைக் கடந்து வரும் வலிமை அதன் கால்களுக்கு இல்லை. நான் இங்கே வயிறார மேய்ந்து விட்டு அக்கரை சென்று கன்றுக்குப் பால் கொடுக்க வேண்டும். அது தானாக உணவு கொள்ளும் வரையில் அதற்கு உணவூட்டிப் பாவிப்பது தாயாகிய என் கடமை. இந்த உலகத்தில் பெண்ணாகப் பிறந்து தாயாகும் பேறு பெற்றவர் அனைவரும் இதை உணருவார்கள். இந்தப் பூமியே நம் அனைவருக்கும் தாய். இந்தப் புல்லை, தாவர உயிர்களைத் தந்து எங்களைப் பாலிக்கிறார்கள். பூச்சி, புழு, பறவை, மான், முதலிய விலங்குகள் எல்லாமும் அப்படி ஓர் அன்பு வளையத்தில் இயங்குகின்றன. என் கன்றை நான் எப்படிப் பார்க்கிறேனோ, அப்படியே உங்களையும் பார்க்கிறேன். ஆதலால் நீங்கள், எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் அக்கரை சென்று, என் கன்றுக்குப் பாலூட்டிவிட்டு உங்களிடம் வருவேன்… நீங்கள் உங்கள் பசியைப் போக்கிக் கொள்ளலாம்; குட்டிகளின் பசியையும் தீர்க்கலாம்” என்றது பசி.
அதற்குப் புலி, “நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்பதை நான் எப்படி நம்புவேன்?…” என்று கேட்டது.
“நீங்கள் என்னைத் தொடர்ந்து வந்து பாருங்கள். நிச்சயமாக நான் வாக்குத் தவற மாட்டேன். இது சத்தியம்” என்று வாக்குக் கொடுத்தது பசு. “இந்த உலகை வாழ வைப்பதே சத்தியம் தான். மழையும், காற்றும், வெயிலும், ஆறும், பசுமையும் சத்தியத்தினால் தான் நிலைக்கின்றன. வான வீதியில் உதிக்கும் சூரியன் சத்தியம். சத்தியம் செத்தால் எல்லாம் அழியும். என் கன்றுக்குப் பால் ஊட்டிவிட்டு நான் திரும்பி வந்து உணவாவதால் அழிந்து விட மாட்டேன். என் கன்று அந்த சத்தியத்தால் வளரும். எனவே என்னை நம்புங்கள்” என்று வாக்குக் கொடுத்து விட்டு அக்கரை சென்றது பசு.
புலி, எதுவும் செய்ய இயலாமல் நின்றது. பாய முற்பட்ட அதன் அரக்க வேகம் கட்டுப்பட்டு விட்டது. அக்கரையில் பசு, கன்றை முகர்ந்து நக்கிக் கொடுத்துப் பாலூட்டியது. “குழந்தாய், அக்கரையில் ஒரு புலியின் பசி தீர்க்க நான் வாக்குக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். சற்று நேரத்தில் நான் இரையாகப் போகிறேன். நீ நன்கு பசியாறி, தானாக உணவு தேடிக் கொள்ள உறுதி கொள். சத்தியம் தவறாமல் வாழ்க்கையில் கருணை வடிவாக நில்” என்று, அதை முகர்ந்து ஆசி கூறிவிட்டுப் பசு புலியை நோக்கி ஆறு கடந்து வந்தது.
“புலியே, என்னை உணவாக்கிக் கொண்டு பசியாறுங்கள்!” என்றது. புலி உடனே, “பசுவே, நீ சத்தியத்தின் வடிவம். என்னுள் கிளர்ந்த பசி அடங்கி விட்டது. பசி இல்லாத போது நான் யாரையும் கொல்ல மாட்டேன்” என்று கூறிவிட்டு உடனே திரும்பி விட்டது.
“எப்படி கதை?”
அந்தக் கதை எத்துணை உயிர்ப்புடன் அவளுடைய மனதை ஆட்கொண்டது! பசுவாகவும் புலியாகவும், சித்திர விளையாட்டு விளையாடியிருக்கிறாள். கோசல அரசகுமாரர் அந்தப் பழைய வில்லை ஒடித்து விட்டார் என்ற சேதி கேட்ட போது, அந்தப் புலி திரும்பிப் போய் விட்டதை நினைத்துக் கண்ணீர் துளிக்க மகிழ்ந்தாளே!…
“தேவி…! மன்னர் தங்கள் மாளிகைக்கு வருகை தந்துள்ளார்!” படிகளின் மேல், பூஞ்செடிகளுக்கிடையே இருந்து தெரிவிப்பவள்… ஜலஜை.
அம்பு மானின் மீது பாய்ந்து விட்டாற் போன்ற குலுக்கலுடன் அவள் எழுந்திருக்கிறாள்.
அத்தியாயம்-5
நீரில் இருந்து வெளி வந்தவளை, கை பற்றி அழைத்து வருகிறாள் அவந்திகா.
‘மன்னர் தோட்டத்தில் வந்து சந்திப்பார் என்றார்கள். இப்போது மாளிகை என்று இவள் சேதி சொல்கிறாள்! என்ன மாயமோ!’ அவந்திகா, விரைந்து கூந்தலின் ஈரத்தைப் போக்க மெல்லிய பருத்தித் துண்டினால் துடைத்து எடுக்கிறாள். தூபப்புகை காட்டி, வாசனைகள் ஏற்றிக் கூந்தலைச் சிங்காரம் செய்கிறாள். பின்னல் போட முடியாது. மேலும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் பின்னல் போடலாகாது. நீண்டு அடர்ந்து இடுப்புக்குக் கீழ் வரும் கூந்தலை ஈரம் ஒத்தி வெவ்வேறாக்கி விடுவதே பிரயாசம்.
பூமகளோ பரபரக்கிறாள். “போதும் அவந்திகா, அப்படியே முடிந்து விடு…”
முத்துச்சரங்களைச் சுற்றி ஒருவாறு கூந்தல் அலங்காரம் நிறைவேறுகிறது. “வனதேவியைப் போல் மலர்ச்சரங்களைக் கைகளிலும் கழுத்திலும் சூட்டி விடுகிறேன். கனத்த ஆபரணங்கள் வேண்டாம்!” என்று அவந்திகா மேனியில் மகரந்தப் பொடி தூவி, பட்டாடைக்கு மேல் மலர்ச்சரங்களைத் தொங்க விட்டு அழகு பார்க்கிறாள்.
அப்போது, பணிப்பெண்கள் செண்பகத் தோட்டத்தின் பக்கம், பட்டுத்துண்டு மூடிய தட்டங்களைச் சுமந்து செல்வதை விமலை பார்த்து விட்டு விரைந்து வருகிறாள்.
“தேவி! மன்னர் செண்பகத் தோட்டத்துப் பக்கம் தான் செல்கிறார் போல் இருக்கிறது. உணவுப் பொருட்கள், கனி வகைகள் எல்லாம் அங்கே கொண்டு செல்கிறார்களே?”
“நான் மாளிகைக்கே செல்கிறேன். அங்கே வந்திருக்கிறார் என்று தானே இவள் சொன்னாள்?”
பூமகள் விடுவிடென்று கல் பாவிய பாதையில் நடக்கிறாள். மாளிகையின் பின் வாசல் பூம்பந்தலின் கீழ் மன்னர் நிற்கிறார். சற்று எட்ட, ஜலஜை, சாமளி இருவரும் நிற்கின்றனர். சுலபாக் கிழவி மன்னருக்கு வரவேற்பு வாசகம் சொல்லி நடுங்கும் குரலில் பாடுகிறாள்.
“கோசல குமாரருக்கு மங்களம், குவலய வேந்தருக்கு மங்களம், அரக்கர் குலம் அழித்தவர்க்கு மங்களம், அவனியாளும் மன்னருக்கு மங்களம்…”
அவளையும் அருகில் இருத்தி ஆரத்தி எடுத்து, கண்ணேறு கழித்து, அந்தக் கிழவி சடங்கு செய்கிறாள்.
பூமகளுக்கு இதொன்றுமே உவப்பாக இல்லை. மன்னர் என்றால் இப்படியா? ஓர் அந்தரங்க – நேர்ச்சொல் உரைக்கவும் இடமில்லாத அரண்மனைக் கட்டுப்பாடுகள்!…
“தேவி, நீராடப் போயிருந்தாயா?”
“அதுதான் தெரிகிறதே?” என்று முகத்தில் சுணக்கம் காட்டுகிறாள். “உங்கள் அரச நெறிகள், கட்டுப்பாடுகள் எல்லாம் அந்த அவையோடு இருக்கலாம். சொந்த மனைவியுடன் இரண்டு பேச்சுப் பேசக் கூட இவ்வளவு விதிகள் – வரைமுறைகளா?”
அவள் உரத்த குரலில் கேட்கவில்லை. தலை குனிகிறாள். மன்னர் அவள் மென் கரத்தைப் பற்றுகிறார்…
“இரண்டு மூன்று நாட்களாக எனக்கு இங்கு வர வேண்டும் என்று உள்ளம் விரும்பவும், இயலாதபடி அலுவல்கள். மகாராணி இந்த மன்னரான அடியவனை மன்னிக்க வேண்டும்…”
காதோடு சொல்லும் இவ்வார்த்தைகளில் அவள் முகத்தில் வெம்மை ஏறுகிறது.
“செண்பகத் தோட்டத்துக்குப் போகலாமா? உனக்குத் தான் அந்தக் குளத்தில் வந்திறங்கும் பறவைகளை அன்னங்களைப் பார்க்க மிகவும் பிடிக்குமே? நாம் மகிழ்ந்த கோதாவரிக் கரைத் தோட்டங்களைப் போல் சரயு ஆறு வரையிலும் தோப்பாக, தோட்டங்களாக அமைத்து விடலாம். அதே மாதிரி பொய்கைகள், யானைக் குட்டிகள்…”
“அரச காரியம் பற்றிப் பேதையான எனக்கு எதுவும் தெரியாதுதான்… என்றாலும், தந்தையிடம் அநுபவம் பெற்ற மூத்த அமைச்சர் பிரான், சுமந்திரர் கவனிக்க மாட்டாரா?…”
“தேவி, அவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றனவே. பதினான்கு ஆண்டுகளில் பத்து மாதங்கள் தானே உன்னை விட்டுப் பிரிந்து இருந்தேன்?…”
‘பத்து மாதங்கள் தவிர…’ அந்தச் சொல் பொன் ஊசியாகக் குத்துகிறது. அவந்திகா அங்கே நிற்கும் பணிப்பெண்களை குறிப்பாக ஜலஜையை, விரட்டுகிறாள். “இப்போது எதற்கு நீங்கள் மன்னருக்கும் மகாராணிக்கும் இடையில்! அவரவர் வேலையைப் பாருங்கள்!”
பூமைக்கு மன்னருடைய கை, தொட்டுணர்வு, குளிர்ச்சியாக இருக்கிறது. வழி நெடுக அவள் எதையும் பார்க்கவில்லை. பேசவுமில்லை. காட்டில் இருந்த அந்தக் காலத்தில், வில்லையும் அம்பையும் சுமந்து திரிந்தீர்கள். இப்போது அரசாங்க காரியம்…
ஒரு மனிதராக… சாதாரண மனிதரின் ஆசாபாசங்கள் உங்களிடம் இல்லையோ?
மனதுக்குள் மூர்க்கமாக எழும் பாம்புகளைப் போல் இவ்வினாக்கள் சீறுகின்றன.
அடங்கு… அடங்கு… அடங்கு மனமே!… அடங்கு!
மெல்லிய பட்டுத் தைத்த தோல் காலணிகளை அவள் அணிந்திருக்கிறாள். செண்பகத் தோட்டத்தின் பறவையொலிகள் மிக இனிமையாகக் கேட்கின்றன. ஒரு மகிழ மரம் கிளைகளை வீசிக் கொண்டு, ‘நான் இங்கே உங்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்து ஆளாக இருக்கிறேன்!’ என்று தன் பழம் பெருமையை சாற்றிக் கொண்டு அவர்களை ஆசிர்வதிப்பது போல் மலர்களைச் சொரிகிறது.
“என்ன வாசனை? இதற்கு ஏன் செண்பகத் தோட்டம் என்று பெயர்?” என்று வியந்து அதன் அடியிலுள்ள மேடையில் அவள் அமருகிறாள்.
“அதைப் பற்றி நானும் கேட்டேன். எங்கள் மூதாதையர் ஒரு பெண்ணை விரும்பினாராம். அவர் இந்த மரத்தடியில் தான் அவளைச் சந்திப்பாராம். மகிழ்ந்திருப்பாராம். அவள் கருவுற்று மகப்பேறு பெறாமல் இறந்து போனாளாம். அவள் பெயர் செண்பகவல்லி. அதனால் அவள் பெயரை இந்தத் தோட்டத்துக்கு வைத்து, மேற்கே செண்பக மலர்கள் சொரியும் மரங்களை நட்டாராம்…”
“அப்படியானால், இந்த மரத்தடியில்…” என்று சொல்ல வருபவள் நாவைக் கடித்துக் கொள்கிறாள்.
மன்னர் அவள் கையை அழுத்தமாகப் பற்றுகிறார்.
“பிரியமானவளே, நாம் எப்போதும் போல் அன்னப் பொய்கைக்குப் போவோம். வட்ட வடிவப் படிகளில் அமர்ந்து பறவைகளைப் பார்ப்போம்…”
அவர்கள் அங்கே வந்து, சுத்தம் செய்து விரிப்புகள் போடப்பட்ட இருக்கைப் படிகளில் அமர்ந்து கொள்கின்றனர்.
இதமான மஞ்சள் வெயில் அவர்களுக்குப் பொன் பட்டுப் போர்த்துகிறது.
வெள்ளை அன்னங்கள் உலவும் அழகைப் பார்த்துக் கொண்டே, மன்னர் அவள் கரத்தைத் தன் மடியில் வைத்து, அந்தத் தொட்டுணர்வை அநுபவித்தவாறே, “பிரியமானவளே, உன்னை நான் மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். என் கடமையை நான் மறக்கவில்லை. இந்த வம்சத்தின் கொடியை நீ உன்னுள் தாங்குகிறாய். உனக்கு எந்த ஆசை இருந்தாலும் அதை நான் நிறைவேற்ற வேண்டும். அன்புக்கினியவளே, காமரூபத்தில் இருந்து வந்த பட்டு வணிகர்கள் கொண்டு வந்த ஆடைகள் மிக நன்றாக இருந்தன. அன்னையிடம் அனுப்பி உனக்குச் சேர்க்கச் சொன்னேன். உனக்குப் பிடித்ததா?” என்று கேட்கிறார்.
“உம்…” என்று முத்துதிர்க்கிறாள்.
மனசுக்குள், இங்கும் நேர்முகப் பரிமாறல் இல்லையா என்ற வினா உயிர்க்கிறது. ஒரு தம்பி, ஒரு வானரன், ஒரு வேடன்… இப்போது அன்னை… அன்னை சொல்லித்தான் இங்கு என் ஆவலைத் தீர்த்து வைக்க வந்திருக்கிறீர்?
“என் மீது கோபமா தேவி?” மன்னர் தணிந்து அவள் முகவாயைத் தன் பக்கம் திருப்புகையில் எங்கிருந்தோ அவள் வளர்த்த தத்தம்மா அவள் தோளில் வந்து குந்துகிறது.
“மகாராணி! மகாராஜா! மகாராணிக்கு மங்களம்!”
அவள் அதைக் கையிலேந்தி இருக்கையில், “மகாராணி! மகாராசாவிடம் கோபிக்கக் கூடாது. மன்னர்… பாவம்” என்று குறும்பு செய்கிறது.
அப்போது, ஜலஜை கனிகளையும், உண்ணும் பண்டங்களையும் அவர்கள் அருகில் கொண்டு வைக்கிறாள். தாம்பூலத் தட்டும் வருகிறது.
“ஜலஜா… ஜலஜா… பூனைக்கண்ணு…” என்று கிளிப் பேசுகிறது.
“சீ!” என்று அவள் விரட்டுகிறாள்.
மன்னர் அவளை அப்பால் போகும்படி சைகை காட்டுகிறார். அவள் செல்லுமுன் கிளியும் பறந்து செல்கிறது.
“இது பொல்லாத கிளி…”
“ஏன்?”
“நம் இருவருக்கிடையில் குறுக்கிடுகிறதே?”
“புத்திசாலிக்கிளி. ஒரு நாள் என் முற்றத்தில் இது அடிபட்டு விழுந்தது. பாலும் பழமும் ஊட்டி வளர்த்து பேசப் பயிற்றுவித்தேன். இது இப்போது சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இல்லாமல் ஏதேதோ சொல்கிறது. எங்கெங்கோ கேட்டவற்றையெல்லாம் கோவையாக அடுக்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறது…”
“சொல்லப் போனால் எல்லா உயிர்களுக்கும் அவை அவைக்குரிய மொழிகள் உண்டு. இளைய மாதாவின் தகப்பனாருக்கு அத்துணை மொழிகளும் தெரியுமாம். ஆனால் அவற்றை வெளியில் உரைப்பது அவற்றின் தனி உரிமையில் மனிதர் தலையிடுவது போன்று குற்றமே. அதனால் தான் எல்லோரும் ஒற்றுமையாக அவரவர் தருமத்தைப் பாலித்து வாழ வேண்டும். இல்லையேல் ஆபத்தை விளைவிக்கும் என்று ஆன்றோர் எச்சரித்திருக்கிறார்கள்…”
அவளுக்கு அவர் பேச்சில் மகிழ்ச்சி தோன்றவில்லை.
அவரவர் தருமம் என்றால் என்ன? க்ஷத்திரியனுக்குக் கொல்லும் தருமம், அதுதானே?… என் கையைப் பற்றியிருக்கும் இந்தக் கரம், எளியோரைப் பாதுகாக்கும் ஆதரவுக் கரம் என்று நம்புகிறேன். ஆனால் இது, பெண், விலங்கு, மனிதர் என்று பாகுபாடில்லாமல் கொன்று குவித்திருக்கிறது. அரக்கர்களைக் கொல்லுவது தான் க்ஷத்திரிய தருமம் என்றால், அந்த வன்முறை உயிர் வாழத் தேவையா? என் குலத்துக்கு வரும் இழுக்கைப் போக்கவே அரக்கர் குலமழித்தேன்…
இந்தச் சொற்கள் மின்னலாய் தோன்ற, அவள் தன் செம்பஞ்சுக் குழம்பு ஏறிய மலர்க்கரங்களை விடுவித்துக் கொள்கிறாள்.
அவள் பேசாமல் தலை குனிந்திருக்கும் கோலம் அவருக்கு உவப்பாக இருக்காது. உறுத்தட்டும், உறுத்தட்டும் என்று செவ்விதழ்களைப் பிரிக்காமலே அமர்ந்திருக்கிறாள். தட்டில் இருக்கும் பட்டுத்துண்டை நீக்கியதும், நெய் அப்பத்தின் மணம் நாசியில் ஏறுகிறது. பாலடைக் கட்டி தானிய மாவினால் செய்த உப்புப் பண்டம்…
அப்பத் துண்டை விண்டு அவள் வாயருகில் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து ஊடலுக்குத் தன்னைச் சித்தமாக்கிக் கொள்கிறாள். ஆனால் நடந்தது வேறு.
ஒரு பாலடைத் துண்டை எடுத்து அவர் குளத்தில் விட்டெறிய, அதை நீர் மட்டத்துக்கு மேல் ஒரு மீன் வந்து கவ்வ முயலுகையில் மேலே பறந்தாற் போல் வந்த ஒரு பறவை அதைக் கவ்வி, அதன் பெட்டைக்குக் கொண்டு செல்ல முங்கி மீனை எடுத்து மேலே போட, அதன் இணை இலாகவமாக அதைப் பற்றிக் கொள்கிறது.
மன்னர் கலகலவென்று சிரிக்கிறார்.
பெண் அன்னம் முன்னே செல்ல, ஆண் தன் சிறகுகளை மெல்ல நீரில் அடித்தாற் போல் அதனுடன் உரசிக் கொண்டு சல்லாபம் செய்கிறது. பெண் குபுக்கென்று நீரில் மூழ்கிச் சிறிது அப்பால் செல்கிறது. மீண்டும் மன்னர் ஒரு பாலடைத் துண்டை தூக்கிப் போட, ஒரு மீன் எழும்பி அது ஒரு வெண் பறவைக்குப் பலியாகிறது.
“… இது என்ன உயிர் விளையாட்டு? பாவம்!”
“… நீ பேச வேண்டும் என்று தான் சீண்டினேன். தேவிக்கு என் மீது மிகவும் அதிகமான கோபம் என்று தெரிகிறது. நான் என்ன செய்யட்டும்? மீண்டும் நான் நாட்டை விட்டு உன்னிடம் வரவேண்டுமானால், என்னை விட மாட்டார்களே?…”
“ஏன் இப்படி உயிர்க் கொலை செய்ய வேண்டும் பாலடையைக் காட்டி?”
“அம்மம்ம… நான் அந்த அன்னத்துக்கு உணவல்லவோ அளித்தேன்? சரி, பிரியமானவளே, என்னைத் தண்டித்து விடு!” என்று அவள் செவிகளோடு கூறி அவளைத் தன் மார்பில் இழுத்துச் சார்த்திக் கொள்கிறார். அவள் நாணமுற்ற முகத்தை அந்த மார்பில் பதித்துக் கொள்கிறாள். மன்னரின் நெஞ்சத் துடிப்பை அவளால் உணர முடிகிறது.
“அன்புக்கினியவளே, எனக்கு எப்போதும் உன் நினைவுதான். நான் விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும், அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் போதும், இந்தத் துடிப்பு உன் பெயரையே உட்கொண்டு சுவாசிக்கிறது. தேவி, கேள்!…”
“அப்படியானால், அன்று ‘உனக்காக நான் அரக்கரை வெல்லக் கடல் கடந்து வரவில்லை’ என்று சொன்னதெல்லாம்…”
வார்த்தைகள் குத்திட்டு நிற்கின்றன.
ஆனால் அவர் அந்தச் சொற்களால் அவள் இதயத்தைச் சுட்டு அக்கினி குண்டத்தில் இறக்கினாலும், அவள் அவர் இதயம் நோகும்படியான சொல்லம்புகளை வெளியாக்க மாட்டாள்.
அவளை வளர்த்த தந்தை கூறினாரே! “மகளே!… தந்தை தாய் தெரியாமல் என் கையில் வந்த உன் அழகுக்கும் குணத்துக்கும் பண்பு நலங்களுக்கும் மேன்மையுடன் உன்னை ஏற்றிப் போற்றிக் காப்பாற்றக் கூடிய அரச குமாரனை எப்படித் தேடுவேன் என்று கவலை கொண்டேன். ஆனால் சில விநாடிகளில் அந்தப் பெருங்கவலையைத் தீர்த்து வைத்தாய். வில்லின் கீழ் புகுந்த பறவைக் குஞ்சு வெளியே பறந்து வர இயலாமல் தவித்த போது, அநாயசமாக அதை உன் கருணைக் கரத்தால் தூக்கி, விடுவித்தாய். அந்த வில்லை எடுத்து நாணேற்றுபவனே உனக்கு மணாளன் என்று தீர்மானித்தேன். விசுவாமித்திர மகரிஷி பையன்களைக் கூட்டி வந்தார். சொந்த மகள், வளர்ப்பு மகள், தம்பி மக்கள் எல்லோருக்குமே மணமாலை நாள் கூடிவிட்டது. தாய்-தந்தை குலம் கோத்திரம் தெரியாத உன்னை அயோத்தி மன்னர் ஏற்றுக் கொண்டதே பெருமைக்குரிய செயல். இனி அவர் – உன் மணாளனே, தாய், தந்தை, குரு, தெய்வம் எல்லாமுமாகிறார். அவர் இருக்குமிடமே உனக்கு மேலான இடம்…” என்று மொழிந்த உரைகள்…
எல்லாம் இவரே… இவர் உடமை, அவள். உடமைப் பொருள்… இப்போது அவள் வயிற்றில் உருவாகியிருக்கும் உயிரும் அவர் உடமை. அவள் நெற்றியை மெல்ல வருடிக் கொண்ட அவர், “பிரியே, உன் முகம் ஏன் வாட்ட முற்றிருக்கிறது?… உடல் நலமில்லையா?” என்று கேட்கிறார்.
அவள் எதைச் சொல்வாள்?
“இல்லையே?”
“உன்னைக் காண ஒரு முனி வந்திருந்தாராமே?…”
அவள் விருட்டென்று தலை தூக்குகிறாள்.
“சுவாமி, அவரைத் தாங்கள் பார்த்தீர்களா?”
“பார்த்தேன் என்று சொல்லவில்லையே! யாரந்த முனிவர்? அந்தப் பெரியவரை நான் வந்து வணங்கி நிற்பேனே? எனக்கு ஏன் சொல்லி அனுப்பவில்லை? யார் தேவி, அவர்?”
“தாங்கள் பார்க்கவில்லை என்றால், அவர் வந்ததை யார் தங்களிடம் தெரிவித்தார்கள்?…”
“ஒரு பணிப்பெண்… மூத்த அன்னையின் மாளிகைப் பெண். இப்போது கூட இங்கே நின்றிருந்தாளே? அவள் தான் நான் வரும் போது முனிவர் ஒருவர் வந்திருந்தார் என்று தெரிவித்தாள்…”
“ஓ, பணிப்பெண்கள் இது போன்ற செய்திகளைக் கூட மன்னரிடம் தெரிவிப்பார்களா?…”
“இல்லை. அன்று நான் கேட்டேன், தேவி நலமாக இருக்கிறாளா என்று. அதற்கு அவள், அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். தோட்டத்து மாமரத்தடியில் ஒரு முனிவர் வந்திருக்கிறார். அவரை உபசரித்துக் கொண்டிருந்தார் என்றாள். எனக்கு இப்போதுதான் நினைவுக்கு வந்தது, கேட்டேன்.”
“… ஓ… அப்படியா? அவள் பார்த்தாளோ?” என்று அவள் ஆறுதல் கொள்கிறாள்.
“முனி மக்கள் எவராக இருந்தாலும், வாயில் வழி வருவார்கள். வரவேற்று உபசரிப்பதற்காக நானே வந்து எதிர் கொள்வேன். இவர் யாரோ, எனக்குத் தெரியாமல் போயிற்றே என்று எண்ணினேன் தேவி…”
இந்தப் பேச்சில் என்ன குத்தல்…? இவள் கபட வேடம் தரித்து வந்து கவர்ந்து சென்ற இலங்கை மன்னனை உபசரித்ததைச் சொல்லிக் காட்டுகிறாரோ?…
“சுவாமி, இவர் முனியுமல்ல, தாங்கள் நினைக்கும்படியான குலத்தவருமல்ல. பெற்றவர் முகம் அறியாத என்னை என் தந்தை மேழி பிடித்த போது கண்டெடுத்த வனத்தில் சிறுவராக அந்தச் சம்பவத்தைப் பார்த்தாராம். ஒற்றை நாண் யாழ் மீட்டி அற்புதமாகப் பாடுவார். என்னைக் காண வேதபுரி அரண்மனைத் தோட்டத்துக்கு வருவார். பாட்டும் கதையும் சொல்லித் தருவார். மகிழ்ச்சியுடன் அந்த இளமைப் பருவம் கழிந்தது. என்னுடைய குணங்களில் ஏதேனும் நலன்கள் படிந்திருக்கின்றன என்றால், அந்த பிரும்மசாரியின் பழக்கம் தான். அவர் தாம் என்னைக் காண வந்திருந்தார். வேதபுரியில் என் வளர்ப்புத் தந்தையும் இதையே சொல்லி அழைத்திருக்கிறார். ‘மன்னரே, நான் தத்துவம் அறிந்த வித்தகனல்ல; கவி பாடும் குரவனுமல்ல… இந்தக் குழந்தையைப் பார்க்க வந்தேன்; போகிறேன். மன்னர் அவையில் வந்து நிற்க எனக்கு எந்த முகாந்தரமும் இல்லை’ என்பார்… இப்போதும் அதையே சொல்லிவிட்டுப் போனார் அரசே!”
மன்னர் சில விநாடிகள் வாளாவிருக்கையில் அவள் மேலும் தொடருகிறாள். “சுவாமி, எனக்கு ஓர் ஆசை உண்டு. அதை நிறைவேற்றுவீர்களா?” அவளை மார்போடு அணைத்து கூந்தலை வருடியபடி, “பிரியே, இந்தச் சமயத்தில் நிச்சயமாக உன் ஆசையை நிறைவேற்றுவேன். அந்த முனி வருக்கத்தை அழைத்து, நான் பெருமைப்படுத்துவேன். வேடுவர்களாகவும், அடிமையின் மக்களாகவும் இருந்தவர்கள், ஆன்மானுபவம் பெற்று, வனத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் உபநயனம் செய்து வைக்கும் முனிவர் ஒருவர் பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. அவர்களை இங்கு அழைத்து உலக நன்மைகளுக்காக பெரிய வேள்வி நடத்த ஏற்பாடு செய்வோம்… சரியா தேவி?”
“வேள்வி நடத்துவது, தங்கள் சித்தம். ஆனால் என் ஆசை அதுவல்ல, சுவாமி!”
“பின் என்ன ஆசை? தயங்காமல் சொல் தேவி! இந்த அயோத்தி மன்னன், உன் பிரிய நாயகன், உன் கோரிக்கையை நிறைவேற்ற உலகின் எந்த மூலையில் இருக்கும் பொருளாக இருந்தாலும் கொண்டு வருவான். சொல் தேவி!”
“உலகில் எந்த மூலைக்கும் தாங்கள் செல்ல வேண்டாம் சுவாமி! நாம் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தோம் ஆனால் நான் உதயமான இடத்தை இன்று வரை தரிசிக்கவில்லை. வேடுவ மக்கள், மன்னருடன் பிறந்தவர் போல் தோழமை காட்டுகிறார்கள். ஆனால் நான் உதயமான இடத்தில் இருந்து ஒரு மூதாட்டி இந்த பிரும்மசாரிச் சிறுவருடன் என்னைக் காண வந்து அன்பைப் பொழிவாள். அந்தக் கானக மக்களிடையே சென்று நான் உறவாடவில்லை. அந்த மூதாட்டி, மார்க்க முனி ஆசிரமத்தில் நெடுங்காலம் இருந்திருக்கிறாராம். என்னை இந்த அவந்திகாவுக்கு மேல் தாய்க்குத் தாயாகச் சீராட்டிக் கதைகள் சொல்லி விளையாட்டுக் காட்டி மகிழ்விப்பார். அவர் இப்போது மிகவும் நலிந்து முதுமையில் தளர்ந்து நடக்க முடியாமல் இருக்கிறாராம். அவரைச் சென்று பார்த்து, இந்த அரண்மனை மாளிகையில் என்னுடன் அழைத்து வர ஆசை. ஆனால் அவரும் இந்த நந்த பிரும்மசாரி – முனியைப் போல் அரண்மனைக்குள் வர மாட்டார். என்றாலும், நம் குலக் கொடியை நான் தாங்கியிருக்கும் இந்த நேரத்தில் நாம் இருவரும் சென்று பார்த்து அழைத்தால் வருவார். இதுதான் சுவாமி என் ஆசை!”
“பிரியே, நிச்சயமாக உன் ஆசை நிறைவேறும். விரைவில் உன் விருப்பத்தை நான் பூர்த்தி செய்வேன்…”
அத்தியாயம்-6
மன்னர் வாக்குக் கொடுத்து விட்டார். மகிழ்ச்சியில் பூமையின் உள்ளம் சிறகடித்துப் பறக்கிறது. ஏதேதோ எண்ணங்களிலும் கற்பனைகளிலும் அவள் அந்த மகிழ்ச்சியை அநுபவிக்கையில் மன்னர் அந்தச் சந்திப்புக்குப் பிறகு மூன்று நாட்களான பின்னரும் மாளிகையில் உணவு கொள்ள வரவில்லை என்பது உறுத்தவில்லை. அதற்குக் காரணம் உண்டு. அவள் தாவர உணவும் தானியப் பண்டங்களையும் உண்ணும் சீமாட்டி; அவரோ க்ஷத்திரியருக்குரிய ராஜச உணவை உண்பவர். கானகத்தில் இருந்த நாட்களில், இருவருக்கும் இந்த உணவுப் பழக்கங்கள் நெருடும். அவரே மான் கறி சமைத்து இலைத் தொன்னையில் வைத்து அவளை உண்ணச் சொல்வார். அவளுக்கு விருப்பம் இருக்காது. பிறகு தேடித் திரிந்து அவளுக்காக மாங்கனி தேங்கனி என்று கொண்டு வருவார்.
“நீ இந்த உணவில் மிக மெலிந்து போனாய்; தன் மனையாளைப் பாதுகாத்து, அவளுக்கு உணவு தேடிக் கொடுக்கக் கையாலாகதாவன் என்று உன் தந்தை என்னை இகழ்வார், தேவி!” என்பார்.
“என் தந்தை நிச்சயமாக அப்படிச் சொல்ல மாட்டார். குலம் கோத்திரம் தெரியாத என்னை மனமுவந்து ஏற்றுக் கொண்டீர். ‘அந்த நன்றிப் பெருக்கை நீ எப்போதும் காட்ட வேண்டும்’ என்று தான் எனக்கு அறிவுரை கூறினார்” என்று சொல்லும் போது நா தழு தழுக்கும். இப்போதும் அந்த அறிவுரையை எண்ணிக் கரைந்தவாறு, முற்றத்தில் வந்திருக்கும் பறவைகளுக்குத் தானிய மணிகளை இறைக்கிறாள்.
“குலகுரு… சதானந்தர் வருகிறார், தேவி!…”
விமலைதான் அறிவிக்கிறாள்.
வேதபுரித் தந்தையின் குலகுரு…
“இங்கே வருகிறாரா?”
“பெரிய ராணி மாதாவின் அரண்மனைப் பக்கம் மன்னர், இளையவர், எல்லோருடனும் வந்து கொண்டிருந்தார்…”
அவள் மனசில் மெல்லிய சலனங்கள் தோன்றுகின்றன. அவற்றைத் தவிர்ப்பவள் போல், சிறு சிறு குருவிகள் தானிய மணிகளைக் கொத்தி உண்பதும், விர்ரென்று பூம்பந்தலின் மேல் பறந்து செல்வதும், மூக்குடன் மூக்காய் உரசிச் சரசமாடுவதும் கண்டு அந்தக் காட்சிகளில் ஒன்றியிருக்கிறாள். இங்கு வரும் ஒவ்வொரு பறவை இணையும் இவளுக்குப் பரிச்சயமானது. கழுத்தில் கறுப்புப் புள்ளிகள், பிடரியில் சிவப்புக் கோலம், அடிவயிற்றின் பஞ்சு வெண்மை, பறக்கும் போது பூச்சக்கரம் போல் தெரியும் வண்ணக்கோலம்… அனைத்திலும் மனம் பறி கொடுத்திருக்கிறாள். ஒரு வகையில், இந்தக் கூட்டுச் சிறை அரண்மனைக் கிளிக்கு, வெளியே சென்று வரும் இந்தப் பறவைகளின் தோழமை மிகுந்த ஆறுதல் தருகிறது… இவை எங்கெங்கே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன என்பதை ஆவலுடன் கவனிக்கிறாள். தாயும் தந்தையுமாகச் சிட்டுக் குருவிகள் ஓடி ஓடி உணவு கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டும் போது அவற்றின் கூச்சல் இன்ப வாரிதியாகச் செவிகளில் விழுகின்றன.
அந்தக் குஞ்சுகள்… இறகு முளைக்காத குஞ்சுகளுக்கு வாயே உடலாக இருப்பது போல் தோன்றுகிறது…
இவள் பூம்பந்தலின் மூலையில் இந்த உணவூட்டும் காட்சியில் ஒன்றி இருக்கையில், அவந்திகா வருகிறாள்.
“தேவி, குலகுரு சதானந்தர் வந்திருக்கிறார்…”
பூமை கண்களைத் திருப்பவில்லை.
“ஸீமந்த முகூர்த்தம் குறித்துக் கேட்க வந்திருப்பதாகத் தெரிகிறது…”
அவள் முகத்தில் வெம்மை பரவுகிறது.
“அவந்திகா, ஆண் பறவை அடைக் காக்குமா?”
அவந்திகாவின் பார்வை அவளை ஊடுருவுகிறது.
“தெரியவில்லையே தேவி, பெண்களே கருவைச் சுமக்கிறார்கள். பறவைகளிலும் பெண் பறவையின் உயிர்ச்சூட்டில் குஞ்சு வெளிவருமாக நினைக்கிறேன்.”
“மனிதர்களோடு பறவைகளை ஒப்பிட வேண்டாம். பறவைகளை மட்டும் கேட்டேன்.”
“தெரிகிறது. மனிதர், விலங்கு, பறவை எல்லா உயிர்களிலும் ஆண் – பெண் பிரிவுகள் பொதுவானவைதானே?”
“ஊர்வன வெல்லாம் பூமிக்குள் முட்டை வைக்கின்றன. பூமித்தாய் அடைகாத்து உயிர் கொடுக்கிறாள்… இல்லை…?”
“தாங்கள் சொல்வது சரிதான் தேவி…”
அவளுக்கு அப்போது பெரியம்மா நினைவு வருகிறது.
அவள் தளிர்நடை பழகுப் பருவத்தில் அவர் அவளைத் தோளில் ஏற்றிக் கொள்வார். மரம், செடி, கொடிகள் எல்லாவற்றையும் காட்டிக் கதை சொல்வார். ஒரு கதை… பூமி வானில் இருக்கும் நட்சத்திரத்தை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. “நீ கீழிறங்கி வர மாட்டாயா?…” என்று கேட்டது. நட்சத்திரத்தால் எப்படி வர முடியும்? அது கீழே வந்தால் பூதலம் பற்றி எரியாதா? ஆனாலும் நட்சத்திரத்துக்கு, பூமித்தாய்க்கு மகளாக அவள் மடியில் தவழ வேண்டும் என்று ஆசை இருந்தது. நட்சத்திரத்தின் கோடானு கோடி அணுத் துகளில் ஒன்று அன்பாய்க் குளிர்ந்து, பூமிக்குள் இறங்கியது. பூமித்தாய் அழகிய பெட்டிக்குள் மெத்தையாய் மாறினாள். அந்தப் பூவை ஏந்தினாள். மூன்றே முக்கால் நாழிகையில் ஓர் அழகிய குழந்தை பெட்டிக்குள் உயிர்த்தது. உன் தந்தை செய்த தவத்தால், நீ அவர் கரத்தில் வந்தாய்…
இந்தக் கதை அவளுக்கு அப்போது எவ்வளவு பெருமையாக இருந்தது?
இந்தப் பெருமைகளை, ‘குலம் கோத்திரம் தெரியாத’ என்று சொல்லைப் போட்டு அவரே அழித்து விட்டார்!…
அரவம் கேட்கிறது. பணிப்பெண்கள் வரிசைகளுடன் வருகிறார்கள். பூமை, பாதசரம் சிலுங்க, சுதானந்தரை எதிர்கொள்ளச் செல்கிறாள்.
அவள் கண்கள் வந்திருந்தவர்களில் மன்னரைத் தேடுகிறது. இளையவர்… ஊர்மியின் கணவர் தாம் வணக்கம் தெரிவிக்கிறார். அவள் தந்தையின் குலகுருவுக்குப் பாதங்களைக் கழுவி மலர் தூவி வணங்குகிறாள். உபசரித்து மாளிகைக்குள் அழைத்துச் செல்கிறாள்.
“குழந்தாய், மங்களம் உண்டாகட்டும்! நலமாக இருக்கிறாயா? தாயாக இருக்கும் உன்னையும், உன் தங்கையரையும் கண்டு வர, ஸீமந்த முகூர்த்தம் பற்றிச் சேதி அறிய உன் தந்தை என்னை அனுப்பி வைத்தார். முகம் வாட்டமாக இருக்கிறதே? உடலும் உள்ளமும் நலமாக இருக்கிறாயா, குழந்தாய்? மன்னருக்கு உன்னைப் பற்றியே கவலை. என்னைக் குறிப்பாக அதற்கே அனுப்பி வைத்தார்… இங்கே அன்னையரின் அரவணைப்பில் மன்னரின் அருகாமையில் நீ இந்த வம்சத்துக்கான மகனைப் பெற்றுப் புகழும் பெருமையும் அடைவாய். உனக்கு இனி ஒரு குறையும் வராது…”
“வணக்கத்துடன் வழிபடுகிறேன், குருவே. தங்கள் ஆசிகளே என் பேறு. மன்னரிடம் நான் உதித்த வேதவதியாற்றுக் கரை பூமிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மக்களைக் கண்டு, சில நாட்கள் தங்கி வர வேண்டும் என்று சொன்னேன். மன்னர் விரைவில் என்னை அங்கெல்லாம் அழைத்துச் சென்று என் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக வாக்களித்திருக்கிறார் சுவாமி!”
“உன் தந்தை மன்னரிடம் தெரிவிப்பேன். அவர் மகளையும் மருமகனையும் வரவேற்க மிகவும் மகிழ்ச்சி கொள்வார்… உனக்கு அழகிய பட்டாடைகளை, ஆபரணங்களை, ராணி மாதா அனுப்பியுள்ளார். வசந்த விழா வருகிறதல்லவா?”
“ஊர்மிளாவும் இளையவரும், சுதாவும், மாண்டவியும் கூட வசந்த விழாவுக்கு அங்கு வருவார்களா குருவே?”
கேட்டுக் கொண்டே அடிமைகள் சுமந்து வந்த மரப்பெட்டியை இறக்கிப் பட்டாடைகளையும் முத்துச் சரங்களையும் விதவிதமான காதணிகளையும் பூமகள் பார்க்கிறாள்.
தாமரையின் இள நீலச் சிவப்பு வண்ணத்தில் சரிகைக் கொடிகள் ஓடும் பட்டாடை மிகமிக மென்மையான துகில்…
அவள் கைவிரல்களால் அதைத் தொட்டுப் பார்த்து, “வேதபுரிச் சாலியர் நெய்ததா சுவாமி? மிக மிக அருமை…!” என்று வியக்கிறாள்.
“ஆமாம்; சீனம், சாவகம், புட்பகம் ஆகிய தொலைநாட்டு வணிகரெல்லாம் நம் வேதபுரிச் சாலியரின் இந்தக் கைநேர்த்தியைக் கண்டு வியக்கின்றனர். இந்த ஆடை, தாயாக இருக்கும் பூமகளுக்கென்று சிறப்பாக நெய்யப்பட்டது. வேதபுரித் திருமகளாக நீ வந்த நாட்களில் இருந்தே அந்த நகருக்கு ஒரு புதிய செழிப்பும் பெருமையும் வந்து விட்டது. திருமகள் மைந்தரைப் பெற்று எடுத்துக் கொண்டு தாயாக அங்கு வரவேண்டும். இது தந்தையின் ஆசை” சிறு முள் விரலில் பட்டாற் போல் முகம் சுருங்கி, உடனே அது சுவடு தெரியாமல் மறைகிறது. “வேதபுரியில் சுரமை, வினதை, எல்லோரும் நலமா சுவாமி? தாயார் எப்படி இருக்கிறார்கள்? நாங்கள் விளையாடும் பூந்தோட்டத்தில், ஒரு பவள மல்லிகை மரம் இருக்குமே? அது இன்னமும் நன்றாக இருக்கிறதா?” அதன் மலர்கள் நள்ளிரவில் பூத்துத் தோட்டமெங்கும் வாசனை பரப்பி, சாளரத்தின் ஊடே வந்து என்னிடம் கொஞ்சும். அந்த மலர்களை நார் கொண்டு நான் கோத்து வைப்பேன். பவளச் சரட்டில் முத்துக் கோத்தாற் போல் கூம்பு கூம்பாக அந்த மலர்கள் இருக்கும். “ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறாய்? இதழகற்றிச் சிரிக்க மாட்டாயா?” என்று பேசுவாள். அந்த மரத்தின் பூச்சிறப்பு அது… குலகுரு கண்களில் நீர் மல்க, அவள் உச்சியை வருடி ஆசிர்வதிக்கிறார். “குழந்தாய், அந்த மரமும் உன்னிடம் தன் அன்பைத் தெரிவிக்கிறது. உன்னை உன் மைந்தருடன் வரவேற்கக் காத்திருக்கிறது?” என்று தெரிவிக்கிறார்.
அவள் மீண்டும் பணிந்து எழுகிறாள்.
அவர்களைப் பின் தொடர்ந்து தோட்டம் வரையிலும் செல்கிறாள்.
சற்று முன் வரை நெல்மணிகளைக் கொத்திக் கொண்டு ஆரவாரித்த குருவிகள் இல்லை! பொழுது சாயும் நேரம். புற்றடத்தில் மெல்லடிகள் தோய நடந்து மரமேடைக்கு வருகிறாள்.
கிளி பறந்து வந்து அவள் தோள்களில் அமருகிறது.
“தத்தம்மா?…” என்று கையிலேந்திக் கொஞ்சுகிறாள்.
“மன்னர்… மன்னர்…”
“பொய் சொல்லாதே? மன்னர் எங்கே வருகிறார்? அவர் தாம் வருவதை மறந்து போனாரே? மன்னாதி மன்னர்… அந்தப்புரத்தைக் கண்ணாலும் பார்க்க நேரமில்லை?”
அந்தப் பொல்லாத கிளி விர்ரென்று பறந்து சென்று கொடி படர்ந்த புதர் ஒன்றில் அமர்ந்து கொள்கிறது. கொவ்வைக் கனிகளும் இலைகளுமாய் உள்ள சுவர் போன்ற புதர். அவள் எழுந்து செல்கிறாள். கிளியின் மூக்குக்கும் கொவ்வைக் கனிகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஒரு கனியைக் கொத்தி உண்ணுகிறது.
“தத்தம்மா? நீயும் கோபிக்கிறாயா? நீ பொய் சொல்லவில்லை. வா?” கிளி மறுபடியும் அவள் தோளில் வந்து அமருகிறது.
“சரி… மன்னர் எங்கே? பார்த்தாயா?”
“மன்னர்… ஜலஜா…”
“என்ன உளறல்? ஜலஜாவா?” என்று அவள் அதட்டுகிறாள்.
“ஆம். நான் பார்த்தேன். ஜலஜா மன்னர்…”
“எங்கே? நீ மட்டும் பொய் சொன்னால்…?”
அது மெல்லப் பறப்பதும் அவள் தோளில் அமருவதுமாக அழைத்துச் செல்கிறது.
இனம் தெரியாத மனவெழுச்சியில் படபடப்பு உண்டாகிறது. செவிகள் குப்பென்று அடைப்பது போல் இருக்கிறது.
மல்லிகைப் பந்தலின் பக்கம் ஓர் இளங்கதம்ப மரம் நிற்கிறது. அதன் கிளைகளில் பறவைகள் அவள் வரவுக்குக் கட்டியம் கூறுபவை போல் காச்மூச்சென்று கத்துகின்றன. கீழெல்லாம் உதிர்ந்த மலர்கள்… பறவை எச்சங்கள்… சருகுகள்… அங்கே சிவப்பாக வெற்றிலைத் தம்பலம் எச்சில்… யாரோ துப்பியிருக்க வேண்டும். சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த இளமரம் புதியது. மல்லிகைப் பந்தல் பழையது… “இங்கே தான்…”
“இளவரசரா?…”
“மன்னர் உமிழ்ந்தது. அவள் கொண்டு வந்து இங்கே கொட்டினாள்.”
அந்தக் கிளியைப் பற்றி அதட்டத் துடிக்கிறாள்.
ஆனால், கிளி அவளுக்கு மிகுந்த நெருக்கம்.
“தத்தம்மா, மன்னர் உணவுக் கூடத்துக்கு வந்திருக்கிறாரா, பார்?” என்பாள்.
அது பார்த்து வந்து சொல்லும்.
கொலு மண்டபத்தில் மன்னர் இருக்கிறாரா, யார் யார் வந்து பார்க்கிறார்கள் என்று வந்து சொல்லும்.
மன்னர் தனியாக இருந்தால் அது சிறகடித்துப் பறந்து வந்து காதோடு இழையும். அவள் கையிலேந்தி இதம் செய்வாள். அதற்குப் பெருமை பிடிபடாது. சிறகடித்துப் பறந்து வந்து சில நாட்களில் அவள் மடியில் வந்து இறங்கும். உடனே அவள் பற்ற முடியாத உயரத்தில் போய்க் குந்தும். மூக்கை வளைத்து அழகு பார்த்துக் கொள்ளும். சிறகுகள் உப்ப, பூரிப்பது போல் காட்டும்.
“ஓகோ? மன்னர் உன்னைக் கையிலெடுத்துக் கொஞ்சினாரா? சரி, நீ அங்கேயே இருந்து கொள்! வரவேண்டாம் தத்தம்மா!” என்பாள். “ஏன் உங்களுக்குக் கோபம் வருகிறது, ராணியம்மா? நானா அவர் தோளிலோ மடியிலோ சென்றமர்ந்தேன்? என் அருமைத் தோழிக்கு நான் தீங்கு செய்வேனா? அவர் தாம் கையை வீசி என்னைப் பற்றினார். எனக்கு ஒரே…” என்று நாணிக்கோணும்.
“சரி, சரி, இங்கு நீ நாடகம் நடிக்காதே, பிறகு என்ன நடந்தது சொல்?”
“நாடகம் நடிக்காதே என்று சொல்லி விட்டுக் கதை கேட்கிறீர்களே? நான் கதையா சொல்கிறேன்?”
“சரி இல்லை, பிறகு என்ன நடந்தது?”
“என்ன நடந்தது? எனக்குச் சொல்ல வெட்கமாக இருக்கிறது.”
“சரி, சொல்ல வேண்டாம், போய் விடு!”
“நீ என்னைக் கையில் எடுத்து, கன்னத்தோடு இழைய விடு. அவர் என்ன சொன்னார் என்று சொல்வேன்.”
“தத்தம்மா, நீ சாகசக்காரி. உன்னை இனி கூட்டில் தான் அடைக்க வேண்டும்.”
“உக்கும்… கூட்டில் எனக்கு ஏது இடம்? அதுதான் ஏற்கெனவே மன்னர் இருக்கிறாரே?”
“நீ ரொம்பப் பொல்லாதவள். உனக்கு வாய் அதிகமாகி விட்டது. மன்னரை நானா கூட்டுக்குள் அடைத்திருக்கிறேன்?”
“ஆமாம். இங்கெல்லாம் அப்படித்தான் சொல்கிறார்கள். அந்தப்புர விடுதி என்று ஒன்று இருப்பதையே அவர் அறியவில்லையாம். இதற்குள் எந்த மன்னர் பரம்பரையிலும் இப்படி ஒரே பத்தினி என்று இருந்ததில்லையாம்!”
“ஓகோ!” என்று கேட்கும் போது பொய்க் கோபம் வந்தாலும் உள்ளத்தில் பெருமை துளும்புமே?…
இப்போது?
அவள் பறவை எச்சங்கள், அசுத்தங்களைப் பொருட்படுத்தாமல் அங்கு நிற்கிறாள்… கடலலையே ஓய்ந்து விட்டாற் போன்ற அமைதி நிலவுகிறது. கிளியைக் கையில் எடுத்து அதன் மேனியைத் தடவிக் கொடுக்கிறாள்.
“தத்தம்மா, என்ன நடந்ததென்று சொல்ல மாட்டாயா? ஜலஜா அவரைத் தனிமையில் சந்தித்தாளா, இங்கு? பறவைகள் எச்சமிட்டனவா? அவர் வெற்றிலைத் தம்பலத்தைத் துப்பி விட்டுப் போனாரா?”
“முதலில் மன்னர் மட்டுமே இங்கு கவலையுடன் இருந்தார். அவர் கையில் ஓர் அடுக்கு மல்லிகை இருந்தது… ஒவ்வோர் இதழாக எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்…”
பூமையின் உயிர் நரம்பில் முள் குத்தியிட்டாற் போல் துடிப்பு ஏற்படுகிறது. வலக்கண் துடிக்கிறது; இதழோரங்கள் துடிக்கின்றன.
“அப்போதுதான் அவள்… ஜலஜா பூனைக்கண் வந்தது…” பூமை துடிப்புத் தெரியாமலிருக்க வலக்கையால் அந்தக் கண்ணை மூடிக் கொள்கிறாள். அரக்கர் கோன் சிறையில் இருந்து மீண்ட மகிழ்ச்சியில் மன்னரைப் பார்க்கப் போகிறோம் என்ற செய்தி வந்ததும் அந்த அரக்கர் குல மூதாட்டி அவளை அருவியில் நீராடச் செய்து, எப்படி எல்லாம் அலங்கரித்தாள்? புத்தாடை கொணர்ந்து அணிவித்தாள், இளம் பச்சை நிறம். அப்போது… இப்படித்தான் இருந்தது. வலக்கண் துடித்தது. “இது ஆனந்தமில்லையடி பெண்ணே, உன் முன் நெருப்புக் குண்டம் இருக்கிறது…” என்று அறிவித்த சூசகம்… கண்களில் நீர் கோக்கிறது. தத்தம்மாவை எடுத்துக் கன்னத்தோடு இழைய விட்டுக் கொள்கிறாள். கண்ணீர்த் துளி அதன் சிறகில் படுகிறது. “மகாராணி, அதெல்லாம் நடக்காது. கூட்டுக் கதவை டொக் டொக் கென்று தட்டினால் திறக்குமா? கூட்டில் இடம் கிடைக்காது. ஆனால்… அது வருத்தமில்லை. அவள் அவதூறு பேசினாள். பூனை… பெற்றவரால் மறுக்கப்பட்டு, குலம் கோத்திரம் அறியாதவளுக்காக மன்னர் வருத்தப்படலாமா? அப்படி உயர்குல மங்கையாக இருந்தால் அரக்கர் வேந்தனுடன் தேரில் சென்று இறங்கும் வரை உயிர் தரித்திருப்பாளா? தாங்கள் பார்க்கும் போது அன்றலர்ந்த மலராக ஆபரணங்கள் சூடி வந்திருப்பாளா? அவள் உயர் குல மங்கையாக இருந்தால் உங்களுடன் கானகம் ஏகி, அங்கும் உங்களுக்கும் இளையவருக்கும் அவளைப் பாதுகாக்கும் பெருஞ்சுமையை வைத்திருப்பாளா? இங்கேயே தங்கி ஊனை ஒடுக்கித் தவமியற்றியிருப்பார்.”
“‘…சுவாமி, தங்களையே நினைத்து ஊனுறக்கம் விட்டுப் பித்தியானேன். தாங்கள் என்னை மறுத்தால் நான் உயிர்த்தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை…’ என்று அவர் கால்களில் வீழ்ந்தாள்.”
பூமகள் நடுநடுங்கிப் போகிறாள்.
கானகத்தில் மூக்கறுபட்டவள் நினைவு வருகிறது. அந்நாள் இவர்கள் கையில் ஆயுதம் இருந்தது. கூரான கல், வில்… அம்பு…
மாளிகையில் ஆயுதம் தரித்த படைகள் இருக்கும்… எனவே அவரே கொடுஞ் செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டாராக இருக்கும்.
“தத்தம்மா? என்ன நடந்தது?…”
“ஒன்றும் நடக்கவில்லை. எழுந்து போய்விட்டார்.”
“அவள்…”
“அவள் புருஷன், அந்தத் துணி வெளுப்பவன் அவளைத் தேடி வந்தான். நையப் புடைத்தான். அவன் துப்பிய எச்சில்…”
அமைதி கூடவில்லை.
“தத்தம்மா, நீ நல்ல செய்தி கொண்டு வருவாய். இப்போது நீ எனக்குத் தோழியாக இல்லை…!”
“இது நல்ல சேதி மகாராணி. மன்னரின் இதயத்தில் உங்களைத் தவிர வேறு எவருக்கும் இடமில்லை!”
கிளி பறந்து செல்கிறது.
– தொடரும்…
– வனதேவியின் மைந்தர்கள் (நாவல்), முதல் பதிப்பு: ஆகஸ்டு 2001, தாகம், சென்னை.