(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 07 | அத்தியாயம் 08 | அத்தியாயம் 09
என்றைய தினம் அருள்மொழி வர்மன் தரைப் படை சேர நாட்டின் எல்லையைக் கடந்து முன்னேறுமோ அதற்கு இரு தினங்களுக்குப் பிறகு சோழக் கடற்படைத் தளபதி காந்தளூர்ச் சாலையில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஏற்பாடாகியது. இந்த இரு முனைத் தாக்குதல்களுக்குமே காலக் கெடுக்கள் நிர்ணயிக்கப்பட்டன. அந்தக் காலக்கெடு தவறாமல் இருப்பதுதான் முக்கியம் என்று அனைவரும் உணர்ந்திருந்தனர். ஆனால் அதன்படி நடக்க முடியாது போகுமோ என்ற ஐயம் ஏற்பட்டது அருள்மொழி வர்மனுக்கு. தரை மார்க்கமாகப் பயணப்பட்ட அவனது பெரும் படை இடையில் பாண்டியன் அமரபுஜங்கனின் எதிர்ப்பினைச் சந்திக்க நேர்ந்தது.
அருள்மொழி படையெடுத்து வருகிறான் என்று அறிந்ததுமே நண்பன் அமரபுஜங்கனுக்குத் தூது அனுப்பினான் பாஸ்கர ரவிவர்மன். “நான் ஆயத்த நிலையில் இல்லை. முன்னேற்பாடுகளுக்கு எனக்கு இன்னும் சில காலம் தேவை. சோழனைத் தாமதப்படுத்த முடியுமா பார்க்கவும்.”
நண்பனின் கோரிக்கையை மறுத்தளிக்க முடியாமல் படையுடன் வந்தான் அமரபுஜங்கன். போரிட்டு வெல்வது நோக்கமல்ல. அது முடியாது; நடவாது என்பது அவனுக்குத் தெரியும். கூடியவரை தாமதப்படுத்துவதுதான் எண்ணம்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை அருள்மொழி. ஏற்கனவே நிர்ணயித்த காலக்கெடுக்கள் தவறக் கூடது என்பதில் குறியாக இருந்த அவன், அதே நேரத்தில் தன் படையினரை முழுமையாகப் பாண்டியனை முறியடிக்கப் பயன்படுத்தவும் விரும்பவில்லை. அதற்கு அவசியமும் இல்லை என உணர்ந்து ஒரு பகுதியினரைப் பயன்படுத்தினான். இன்னும் நீண்ட தூரப் பயணம் பாக்கியிருந்தது. அதன் பின் பெரும் போர் நடத்த வேண்டியிருந்தது. அனைத்துப் படையினரையும் களைப்புறச் செய்வதில் அர்த்தமில்லை.
அமரபுஜங்கனை எதிர்க்கின்ற படைக்குத் தலைமை தாங்கத் தனக்கு வாய்ப்பளிக்குமாறு வேண்டினான் கம்பன் மணியன்.
“பிரபோ! நீங்கள் நடத்திய வீர விளையாட்டுப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு அனைவரிலும் சிறந்த வீராதி வீரன் என்று பெயரெடுத்தேன். இருப்பினும் என்னையும் இப்போட்டிகளில் பரிசுகளும் பட்டங்களும் பெற்ற வேறு முப்பதின்மரையும் தாங்கள் நடத்துகின்ற விதம் புரியவேயில்லை. எங்களைக் கண்ணே போல் காத்துப் பொன்னே போல் போற்றவா அழைத்து வந்தீர்கள்? படைகளுக்குத் தலைமை தாங்கிக் களம் புக அனுமதியுங்கள்” என்றான் கம்பன் மணியன்.
“வீரனுக்குரிய மணியான வார்த்தைகளைப் பேசினாய்” என்று கம்பன் மணியனை மெச்சினான் அருள்மொழி. “நீ வீராதி வீரன் மட்டுமல்ல. புத்திசாதுர்யமும் உள்ளவன் என்பதை அந்த வீர விளையாட்டுக்களின் போதே நான் உணர்ந்து விட்டேன். அதனால்தான் அனைத்து வீரர்களிலும் நீயே ஒப்பற்றவன் என்று தேர்ந்தெடுத்தேன். மணியா! நீ மறந்திருக்க மாட்டாய். அன்றைய வீர விளையாட்டில் பல மல்யுத்த வீரர்களை மண்ணைக் கவ்வச் செய்த நீ கடைசியாக என்னையே சந்திக்க வேண்டியிருந்ததல்லவா?”
“ஆம் பிரபு! மன்னரே வீர விளையாட்டில் பங்கேற்க வருகிறார் என்று அறிந்தபோது நான் கொஞ்சம் கலங்கித்தான் போய்விட்டேன். மல்யுத்தத்தில் யாரை வென்றாலும் உங்களை வெற்றி காண முடியாதென்பது மல்லர்கள் அனைவருக்கும் தெரிந்த செய்திதானே! அந்தக் கலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுத் தன்னிகரற்று விளங்குபவராயிற்றே நீங்கள்!”
“கம்பன் மணியா! இங்கு நாம் தனித்திருக்கிறோம். தயங்காமல் பேசலாம். நீ அன்று மெய்யாலுமே என்னிடம் தோற்றாயா? தோற்றுப் போனது போல் நடித்தாய் அல்லவா? என்னை வீழ்த்திவிடுகிற நிலைக்கு வந்துவிட்ட நீ கடைசிக் கட்டத்தில் சோர்ந்து விட்டது போல் காட்டிக் கொண்டு சரிந்து விடவில்லையா? உண்மையைச் சொல்!”
“பிரபோ! தாங்கள் கூர்மதி கொண்டு அறியாத எந்த உண்மையை நான் கூறப்போகிறேன்!” என்றான் கம்பன் மணியன்.
“அந்தக் கணத்திலேயே உன் வீரத்தையும் புஜபல பராக்கிரமத்தையும் மட்டுமின்றி புத்திசாதுர்யத்தையும் நான் புரிந்து கொண்டேன். முரட்டு வீரத்துக்கு மட்டுமின்றி அந்த சமயோசித அறிவுக்கும் இந்தப் போரில் தேவையிருக்கிறது என்பதால் அன்றைய வீர விளையாட்டுக்களில் வென்ற முப்பது பேருக்கும் உன்னையே தலைவனாக்கினேன்.”
“பாக்கியசாலியானேன்; நன்றி நவில்கிறேன். ஆனால் அந்த வீரத்தையும் அறிவுக் கூர்மையையும் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளக் காணோமே!”
“உரிய நேரம் வரக் காத்திருக்கிறேன் மணியா!’ என்ற அருள்மொழி வர்மன் குந்தவையின் திட்டத்தை விவரித்தான்.
“வெளிப்படையான போரில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான வீரர்களை விட மீட்புப் பணியில் ஈடுபடப் போகிற உனது சின்னஞ் சிறு படையின் சாகசம்தான் முக்கியமானது. இந்தப் படையெடுப்பு முழு வெற்றி பெறப் போகிறதா அல்லது வெற்றிக்கிடையேயும் தோல்வியையே தழுவப் போகிறதா என்பது முப்பத்தோரு பேர்களைப் பொருத்திருக்கிறது! புரிகிறதா?”
“முற்றிலும் உணர்ந்து கொண்டேன் பிரபு. தாங்கள் என்னிடமும் என் முப்பது தோழர்களிடமும் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது!”
கம்பன் மணியன் பேசி முடிக்கு முன்னர் அரசருக்கு அவசரச் செய்தியுடன் பாசறைக்குள் நுழைந்தான் ஒரு படைத் தலைவன். “மன்னா!” என்று அழைத்துத் தடுமாறி நின்றான்.
“என்ன, சொல்லு!” ஆணை பிறந்தது.
“பாண்டியன் இரு முனை தாக்குதல் நடத்துவதாகத் தோன்றுகிறது. தென் திசையிலிருந்து இன்னொரு படை நம்மை நெருங்குகிறது. அவர்கள் ஏந்தி இருப்பதும் கயல் கொடிகளே! நமது முன்னணிச் சாரணர் அனுப்பிய அவசரச் செய்தி இது.”
“அமரபுஜங்கனுக்கு அவ்வளவு வலிமையா?” என்று ஒரு கணம் திகைத்த அருள்மொழி சட்டென்று ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். அவனது சுட்டு விரல் நெற்றியைத் தட்டுவது நின்றபோது “பாண்டியனின் மணிமுடிக்கு உரிமை கொண்டாடுவோர் ஒன்றுக்கு மேற்பட்டவர் உண்டு” என்ற வார்த்தைகள் அவன் கண்டத்திலிருந்து வெளி வந்தன. “கம்பன் மணியா! நீ என்ன நினைக்கிறாய்?”
“வரவேற்கப்பட வேண்டியவர்களை அவசரப்பட்டு எதிர்த்து விடக்கூடாது என்றுதான் நானும் கருதுகிறேன் பிரபோ” என்றான் கம்பன் மணியன்.
“தாக்குதலை நோக்கி எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் கயல் கொடிகள் சிலவேனும் அருகில் நெருங்கும்போது வெள்ளைக் கொடிகளாக மாறுகின்றனவா என்று பார்க்க வேண்டும்!”
“அப்படியானால் நீயே நேரில் சென்று நிலைமை இன்னதென்று அறிந்து வா” என்று அனுப்பினான் அருள்மொழி.
– தொடரும்…