கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 26, 2023
பார்வையிட்டோர்: 2,656 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12

திட்டமிட்டபடியே மறுநாள் நள்ளிரவுக்கு மேல் முப்பதின்மரும் அவர்கள் தலைவனும் மரகதத் தேவர் கோயில் அருகே இருந்தனர். முன் வாசல் பூட்டப்பட்டிருந்தது. அங்கும் வெளி மதிலின் நான்கு முனைகளிலும் காவலர்கள் நின்றனர். அவர்கள் இவர்களைப் பார்த்துவிடாதிருக்க அமாவாசை இருள் துணை செய்தது. ஒருவர் முதுகில் ஒருவராக ஏறி மதிலைத் தாண்டி உள்ளே பூனை போல் குதித்தார்கள். 

‘ஆகா! சிவலோக நாதன் மட்டுமல்ல; மரகதத் தேவரும்தான் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்’ என்று எண்ணினான் கம்பன் மணியன். மரகதக் கல்லால் உருவாகியிருந்த திருமால் குடியிருந்த கருவறையின் பூட்டைத் தகர்க்க உடன் எடுத்து வந்திருந்த கடப்பாறையைப் பயன்படுத்தப் போனான் ஒருவன். அரவம் எழாதிருக்க அவனைத் தடுத்து நிறுத்தி வேறொரு தோழனுக்கு கம்பன் மணியன் சமிக்ஞை செய்ய, அவன் தனது குத்து வாளின் கூர் முனையைச் சாவித் துவாரத்தில் நிழைத்து இயக்க, ஓசைப்படாமல் பூட்டு திறந்து கொண்டது! உள்ளே நுழைந்த கம்பன் மணியன் மரகதத் தேவர் முன் சில கணங்கள் வணங்கி நின்று கண்மூடித் தியானித்தான். ‘மரகதத் தேவரே! அறத்துக்குத் தாங்கள் துணை நிற்பது உண்மையானால் இந்த முயற்சி வெற்றி பெறட்டும். அப்படி வெற்றி பெறுமேயானால் அருள்மொழி வர்மரின் அனுமதி பெற்று உம்மை இந்த அறம் பிறழ்ந்த நாட்டிலிருந்து சோழ தேசத்துக்கு எடுத்துச் செல்வேன். எனது சொந்த ஊரான திருப்பழனத்தில் உள்ள சிவன் கோயிலில் உம்மையும் எழுந்தருளச் செய்து அரியும் அயனும் ஒன்று என்று அனைவரும் உணரச் செய்வேன். நானும் அவ்வாறே நம்பி சிவனாரை மட்டுமின்றி உம்மையும் இன்று முதல் என்றும் துதிப்பேன்’ என்று பிரார்த்தித்தான். 

மரகதத் தேவர் வழி விட்டார். சுரங்கப் பாதையின் தொடக்கமும் முடிவும் கண்டான் கம்பன் மணியன். வண்டார் குழலி எழுதித் தன் மனத்தில் பதிந்திருந்த சித்திரத்தின்படி பாதை கண்டுபிடித்து முன் சென்றான். மற்ற தோழர்கள் பின்தொடர்ந்தனர். பூனைக் கால்களும் கண்களும் கொண்டவர்களாய் முன்னேறினர். 

சிறைக் கூடத்தின் பாதாளச் சிறைச்சாலைப் பகுதியில் காவல் பலமாக இருந்தது. எட்டிப் பார்த்ததில் குறைந்தபட்சம் பத்துப் பேரை எண்ண முடிந்தது. தீப்பந்தங்களின் ஒளி அதிகமில்லையானாலும் காவலருக்குப் போதிய அளவில் இருந்தது. மீட்க வந்தவர்களுக்கு மிகையாகத் தோன்றியது. ஓசைப்படாமல் இவர்களைத் தாக்கித் தீர்த்துக்கட்டலாம். ஆனால் இந்தக் கொட்டடிகளுள் எதில் சிவலோக நாதன் இருக்கிறான் என்பதை எப்படித் தீர்மானிப்பது? மிருதுவாக அழைத்துப் பார்க்கத்தான் வேண்டும். 

அச்சமயம் வெளியே அரவம் கேட்டது. “எங்கே அந்த அயோக்கியன்? பாதுகாப்பாய் இருக்கிறானா? அந்தத் திருட்டுப் பயலை விடுவிக்க முயற்சி நடப்பதாக மன்னருக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. அவனை நேரில் பார்த்துத் தப்பிவிடவில்லை என்று நான் உறுதி செய்துகொண்டு மன்னரிடம் திரும்ப வேண்டும்!” சிறையதிகாரி ஒருவனுடன் வெகு வேகமாய்ப் படி இறங்கி வருவது வண்டார் குழலிதான். குரலை மாற்றிக் கொண்டிருந்தாலும் கம்பன் மணியனுக்குப் புரிந்தது. குறித்த நேரத்தில் ஆண் உடையில் வந்துவிட்டாள். உயர் அதிகாரிக்குரிய முத்திரை மோதிரத்தைக் காட்டிச் சிறைச்சாலைத் தலைவனை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறாள்! 

“இதோ இந்தக் கொட்டடியில்தான் இருக்கிறான்” என்றான் சிறைச்சாலைத் தலைவன். 

“எங்கே! கதவைத் திறவுங்கள்! அவனை வெளியே இழுத்து வாருங்கள்! தீபத்தின் ஒளியில் பார்ப்போம்! ஆள் மாறாட்டம் நடந்திருக்கப் போகிறது!” 

உத்தரவுக்கிணங்கி கதவு திறக்கப்பட்டது. தள்ளாடிய ஒருவனைத் தரதரவென்று வெளியில் இழுத்து வந்தனர். தீப்பந்தங்களின் ஒளி கைதியின் கண்களைக் கூச வைத்தது. ‘இவனா சிவலோக நாதன்! பரதேசிக் கோலமும் அல்ல; பஞ்சத்து ஆண்டியுமல்ல. அதைவிடக் கேவலம்! பஞ்சடைந்த கண்கள், சிக்குப் பிடித்த கேசம், ஒடிந்து விழும் தேகம், கிழித்து நார் நாராகிக்கிடந்த ஆடை, சதைப் பற்றே சிறிதும் இல்லாது, எலும்பும் தோலுமாக இன்றோ நாளையோ மரணத்தைத் தழுவப் போகிறவனாக… என்ன பரிதாபம்!’ 

கையை உயர்த்தி விரலைச் சொடுக்கிச் சமிக்ஞை செய்துவிட்டுப் பாய்ந்தான் கம்பன் மணியன். தீப்பந்தங்களின் ஒளியில் உறுவிய வாள்கள் பளபளத்தன! இவர்களைக் கண்டதும் வண்டார் குழலி, “நான் சொன்னேனல்லவா! வந்துவிட்டார்கள்! தப்புவித்துக் கொண்டு போய்விடப் போகிறார்கள்!” என்று கத்தினாள். சிறைச்சாலைத் தலைவன் ஒரு கணம் குழம்பி நின்றவன் பிறகு தன் நிலை அடைந்தவனாய், “அடேய்! ஓடிவாருங்கள்! காவலர்களா! சீக்கிரம் ஓடி வாருங்கள்!” என்று மேலும் பலரை உதவிக்குக் கூவி அழைத்தான். பிறகுதான் நினைவு வந்தவன் போல் தன் தோளிலிருந்து தொங்கிய சிறு கொம்பு வாத்தியத்தை எடுத்து ஊதினான். திபுதிபுவென்று வேறு பலரும் ஓடிவரும் ஓசை கேட்டது. இதற்கிடையில் வாட்களும் வேல்களும் உறவாடும் சத்தமும் எழுந்தது. காவலரில் இருவரைத் தன் கரத்தாலேயே யமனுலகுக்கு அனுப்பிவிட்டு மற்றவர்களைத் தோழர்கள் கவனித்துக் கொள்ள விட்டுவிட்டுத் திரும்பினான் கம்பன் மணியன். 

அப்போது அவனைத் துணுக்குறச் செய்த ஒரு காட்சியைக் கண்டான். அடுத்தடுத்து இருந்த சிறைக் கொட்டடி வாசல்களுள் ஒன்றன் முன்னால் நின்று சுவரில் பொருத்தியிருந்த சக்கரம் போன்ற ஒரு விசையைத் திருக ஆரம்பித்திருந்தாள் ஆண் உடையில் உயர் அதிகாரி போலிருந்த வண்டார் குழலி. 

கம்பன் மணியனின் சிரத்தில் ஒரு மின்னல் பளிச்சிட்டது. ‘ஏன் இவள் அந்த விசையைத் திருக வேண்டும்? கொட்டடியினுள்ளே தரை பின்னுக்கு நகர்ந்துவிட அதனுள் இருக்கும் கைதி கீழே விழுந்து புலிக்குப் பலியாகவா? அத்தகைய ஏற்பாடு ஒவ்வொரு கொட்டடியிலும் இருப்பதாக இவளே என்னிடம் கூறி எச்சரிக்கவில்லையா? அப்படியானால்….? தன் எதிரே விடுவிக்கப்பட்டு இங்கு நடக்கும் யுத்தத்தைக் கண்டு நடுங்கி ஒடுங்கி கிடக்கும் இவன் சிவலோக நாதனே அல்ல! வேறு யாரைப் பற்றியோ சிறைச்சாலைத் தலைவனை வினவிக் கொண்டு வந்து இங்கு நாடகமாடியிருக்கிறாள்! எல்லாக் கைதிகளுமே பஞ்சத்து ஆண்டிகள் போலத்தான் காட்சியளிக்கப் போவதால் எனக்கு அடையாளம் புரியாது ஏமாந்துவிடுவேன் என்று எண்ணியிருக்கிறாள்! இப்போது சிவலோக நாதனைப் புலிக்கு இரையாக்கப் போகிறாள்! வஞ்சகி! சேரன் வென்றாலும் சோழன் வென்றாலும் இருவருக்குமே நல்லவளாக விளங்குவது இவள் திட்டம்! இந்த அமர்களத்தினிடையில் இவள் விசையைத் திருகுவதை நான் கவனிக்க மாட்டேன் என்பது இவள் எண்ணம்!’ 

இவ்வளவையும் கணப் பொழுதில் ஊகித்தவனாக ஒரு தீவட்டியைச் சுவரில் அதன் குமிழிலிருந்து உருவி எடுத்துக்கொண்டு பாய்ந்தான் கம்பன் மணியன். நொடிப் பொழுதில் அவள் கரத்தைத் தீண்டியது அவன் வாள். துடிதுடித்து அவள் அலறிக் கரத்தைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ள, தலைவனுக்கு உதவத் தாவி வந்த தோழனொருவன் உடனெடுத்து வந்திருந்த கடப்பாறையால் ஒரே வீச்சில் பூட்டினைத் தகர்த்தெறிய வேறோருவன் கதவைத் திறந்துவிட்டு மணியன் கரத்திலிருந்து தீவட்டியை வாங்கித் தூக்கிப் பிடித்து கொட்டடியினுள்ளே ஒளி பரப்ப, ஒரே பாய்ச்சலில் உள்ளே சென்று அங்கு ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தவனை விசுக்கென்று மூட்டையாக முதுகிலே தூக்கிக்கொண்டு எழுகையில் கொட்டடியின் தரை நகர்ந்து சிறிது சிறிதாகப் பின்னேறி மறைந்து வாய் பிளக்க ஆரம்பித்துவிட்டது! ஆகா! என்னுடைய வாள் அந்த பாதகியின் கரத்தைத் தீண்டு முன்னமே அவள் விசையை ஓரளவு இயக்கிவிட்டிருக்கிறாள் என்று எரிச்சலுடன் ஊகித்த கம்பன் மணியன் அதனாலேயே வெறியும் பலமும் அதிகரிக்கப்பட்டவனாய் இருந்த சிறிய இடத்தில் பதுங்கிப் பின் பாய்ந்தான். படிப்படியாக விரிவுப்பட்டு வந்த பிளவை முதுகுச் சுமையுடனேயே தாவித் தாண்டினான்; வெளியே வந்து குதித்தான். 

அச்சமயம் யாரும் சற்றும் எதிர்பாரத ஒரு காரியம் நடந்தது. அதுவரை வலக்கரத்தைக் கம்பன் மணியனின் வாள் ஆழ்ந்த வெட்டுக் காயத்தை ஏற்படுத்தியிருந்த இடத்தில் இடக் கரத்தால் பற்றிக் கொண்டு வேதனையில் ஒடுங்கிக் கிடந்த வண்டார் குழலி, இப்போது கம்பன் மணியனின் வெற்றி கண்டு பொறாமல் ஆத்திரமுற்று வெகு வேகமாக ஓடிவந்தாள் அவனை நோக்கி. கொட்டடிக்கு வெளியே வந்து குதித்தவன் தட்டுத் தடுமாறி எழுந்து ஒரு நிலைப்படு முன் தான் பலமாக அவன்மீது மோதி மறுபடியும் அவனைக் கொட்டடிக்குள்ளேயே தள்ளிவிட வேண்டும்; பாதாளத்தில் அவனும் அவன் சுமையும் விழுந்து புலிகளுக்கு இரையாக வேண்டும் என்பது அவள் நோக்கம் போலும். வெறித்தனமாக அவள் ஓடிவரக் கண்டு, “தலைவா, எச்சரிக்கை!” என்று ஒரு தோழன் குரல் கொடுக்க அதனைக்கேட்டு அபாயம் இன்னதென்பது கூட உணராமல் தற்காப்புக் கருதி தானியங்கு முறையில் மாற்றுத் திசையில் உருண்டு புரண்டு எழுந்து நின்றான் கம்பன் மணியன். ஒரு நொடிக்கு முன்பாக அவனிருந்த இடம் இப்போது வெற்றிடமாக இருக்க, அவனை நோக்கிக் கட்டுக்கடங்காக் கோபத்துடன் கண் மூடித்தனமாக விரைந்து வந்த வண்டார் குழலி தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது போகவே கொட்டடியின் வாயிலைத் தாண்டிப் படுகுழியின் எல்லையில் ஒரு கணம் தடுமாறிப் பின்னர் சமாளிக்க முடியாது ‘வீல்’ என்ற பீதி நிறைந்த கூச்சலோடு விழுந்தாள். அதை அடுத்து வண்டார் குழலியின் சிரம் தரையில் மோதிச் சிதறும் மடேர் என்ற ஓசையும் கேட்டது. அதைத் தொடர்ந்து பல புலிகளின் உறுமல் ஒலி அடிவாரத்திலிருந்து எழுந்தது. புலிகளுக்கு இருட்டில் கண் தெரியும். பசியும் தெரியும். சோழனின் கொடியில் கம்பீரமாக நடை பயிலும் புலி அது எலும்புக் கூட்டுடன் வண்டார் குழலியையும் உண்ணாமல் விட்டு வைக்கும்! 

“ஓடுங்கள்! தலைவா! ஓடுங்கள்! சிவலோக நாதனுடன் தப்புங்கள்!” என்று தலைவனுக்கு இப்போது தோழர்கள் கட்டளையிட்டனர். கொம்பொலி கேட்டு விரைந்து வந்தவர்கள் பலரையும் அவர்கள் எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருப்பதை இப்போதுதான் கவனித்தான் கம்பன் மணியன். அதிக நேரம் சமாளிக்க முடியாது என உணர்ந்தான். டணார், டணார் என்று வாட்கள் ஒன்றோடொன்று மோதியும் தழுவியும் பிரிந்தும் கூடியும் பொறி பறக்கச் செய்து கொண்டிருந்தன. இந்த ஆரவாரம் கேட்டு வேறு பல வீரரும் வரக்கூடும். தப்ப வேண்டியதுதான் என்று தீர்மானித்த கம்பன் மணியன், ‘ஒவ்வொருவராக இயன்றவரை என்னைப் பின் தொடருங்கள். எதிர்த்தபடியே பின்வாங்குங்கள்” என்று உத்தரவிட்டுவிட்டு மனிதச் சுமையை முதுகில் தாங்கியபடி சுரங்கப் பாதையை நோக்கி ஓடினான். 

மரகதத் தேவர் படிமத்தை மீண்டும் நகர்த்திச் சுரங்கப் பாதையை அடைக்கு முன்னர் மாண்டவர் போக மீண்டவர் தன்னையும் சேர்த்து இருபத்தைந்து பேர் என்று கணக்கெடுத்தான் கம்பன் மணியன். இவர்கள் தப்ப மற்ற ஆறு பேரும் அரணாய் நின்று உயிர்த் தியாகம் செய்து வீர சொர்க்கம் புகுந்திருந்தனர்.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *