(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சோழ நாட்டில் உறையூரில் கிள்ளிவள்வன் என்ற சோழ அரசன் செங்கோல் ஒச்சி வந்தான். அவனுக்குத் தமிழ்ப் புலவரிடம் மிக்க அன்பு. எந்தக் காரியம் இருந்தாலும் அதை விட்டு விட்டுத் தமிழ்ப் புலவர்களுக்கு உபசாரம் செய்வான். அவனைச் சார்ந்தவர்களும் அரண்மனைக்கு எந்தத் தமிழ்ப் புலவர் வந்தாலும் வரவேற்று, உபசரித்து, அரசனிடம் அழைத்துச் செல்வார்கள்.
ஐயூர் என்பது சிறிய ஊர். அங்கே ஒரு புலவர் இருந்தார். அவர் பெரிய புலவர் பெருங் கவிஞர். ஆனால் காலில்லா முடவர். அவர் தம் விருப்பப்படி பல இடங்களுக்குச் செல்ல முடியா விட்டாலும், அவருடைய பாட்டு பல ஊர்களுக்குச் சென்று பரவியது. அவற்றைக் கண்ட மக்கள் அவற்றில் உள்ள சுவையை உணர்ந்து, புலவரைப் பாராட்டினார்கள். ஐயூர்ப் புலவர் என்றே யாவரும் அவரை அழைத்தார்கள். அவருக்குப் பெற்றேர் வைத்த பெயரை யாரும் சொல்வதில்லை! அவ்வளவு மரியாதை அவரிடம்; கடைசியில் அவருடைய சொந்தப் பெயரே மறைந்துபோயிற்று. ஐயூர் கிழார் அல்லது ஐயூர் முடவனார் என்றே அவரை எல்லோரும் குறிப்பிட்டுப் பேசினார்கள். கால் முடம் என்பதனால் அவருக்கு எந்த விதமான குறைபாடும் இருக்கவில்லை, அவராகச் செய்துகொண்ட தல்லவே அது குணத்தில் குறைபாடு இருந்தால் இழிவாக நினைப்பார்கள். அங்கக் குறைவினால் ஒருவரை இழிவாகச் சொல்லுவது அக்காலத்து மக்களுக்கு வழக்கம் இல்லை. ஐயூர் முடவனார் என்று வழங்கும்போது மரியாதையாகவே சொன்னர்கள்.
புலவருக்கு வெளியூர்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. எவ்வளவுதான் சிறந்த புலவராக இருந்தாலும் பெரிய அரசர்களின் சபைகளுக்குச் சென்று, மற்றப் புலவர்களோடு சேர்ந்துகொண்டு தம்முடைய புலமையைக் காட்டினால்தான் பெருமை வளரும்; அவருக்கும் திருப்தி உண்டாகும்.
சிறிய ஊரில் அடைந்துகொண்டிருப்பதை அந்தப் புலவர் விரும்பவில்லை. அவரை யாரேனும் புலவர்கள் வந்து பார்த்துப் போவார்கள். தமிழ் காட்டில் இன்ன இன்ன மன்னர் இப்படி இப்படி இருக்கிறார்கள் என்ற செய்தி அவர்கள் மூலமாக அவருக்குத் தெரிய வந்தது. உறையூரில் இருந்த கிள்ளிவளவனுடைய பெருமையை அவர் அறிந்துகொண்டார்.
பொன்னும் பொருளும் குவித்துக்கொண்டு வாழவேண்டும் என்று அவர் விரும்பவில்லை. ஆயினும் இன்றியமையாத பொருள்களுக்குக் குறைவு இல்லாமல் வாழவேண்டும் என்பது அவர் ஆசை. வெளியூர்களுக்குச் சென்று, நாலு செல்வர்களைப் பார்த்துத் தம் புலமையைப் புலப்படுத்தினால்தானே பரிசு கிடைக்கும். பரிசு மட்டுமா? புகழும் உண்டாகும் அல்லவா? தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டியர்கள், தமிழ்ப் புலவர்களேப் பாதுகாத்துப் புகழ்பெற்றார்கள். அங்கங்கே சிற்றரசர்கள் பலர் இருந்தார்கள். செல்வர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் எல்லாரையும் போய்ப் பார்ப்பது, உடல் வலிமையுடைய புலவர்களுக்கே அரிய காரியம். முடவராகிய புலவர் எப்படிப் பலரிடம் போய்வர முடியும்!
பேசாமல் இருப்பதனாலும் அவர் வறுமை நிலை மாறாது. சோழனிடம் சென்று அவனைப் பாடினால் அவன் பரிசளிப்பான். அதை வைத்துக்கொண்டு வாழலாம்; மற்றவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சோழ மன்னன் உறையூரில் இருக்கிறான். அங்கே போக அவரால் முடியுமா? வண்டி ஏறிப் போனால் போகலாம். வண்டி ஒன்றை அமைத்துக் கொண்டால் அவருக்கு எவ்வளவோ செளகரியமாக இருக்கும்.
அவருடைய விருப்பத்தை அறிந்து உள்ளூர்ச் செல்வர்களும் வேறு சிலரும் அவருக்கு ஓர் அழகிய வண்டியைப் பண்ணித் தந்தார்கள். வண்டியிற் பூட்ட மாடு வேண்டுமே! அதையும் அவர்களிடமே கேட்கப் புலவர் விரும்பவில்லை. வேறு யாரிடமேனும் சொல்லி வண்டிமாடு வாங்கலாம் என்று எண்ணினார்.
அக் காலத்தில், அவர் ஊருக்கு அருகில் தோன்றி யென்னும் மலைக்கு அருகில் தாமான் என்ற சிற்றரசன் ஒருவன் இருந்தான். தோன்றி மலைக்குச் சொந்தக்காரன் ஆகையால் அவலைத் தோன்றிக்கோன் என்று மக்கள் வழங்கினார்கள். அவனை அணுகித் தமக்கு ஒரு நல்ல காளைமாட்டைக் கொடுக்க வேண்டுமென்று கேட்கலாம் என்று புலவர் நினைத்தார். வேறு ஒருவருடைய வண்டியில் ஏறிக்கொண்டு தாமானிடம் போனர்.
அவன் புலவரை வரவேற்று உபசரித்தான்.
“உங்களைப்பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன். நேரே பார்த்ததில்லை. உடம்பு மிகவும் இளைப்பாக இருக்கிறதே!” என்றான்.
“நாள்தோறும் உணவு உண்டால் உடம்பு நன்றாக இருக்கும்” என்றார் புலவர்.
“உணவு உண்ண முடியாதபடி வயிற்றில் ஏதாவது நோய் உண்டோ?” என்று கேட்டான் தோன்றிக்கோன்.
“வயிற்றில் பசி என்ற நோய் இருக்கிறது. அதற்கு மருந்து தினமும் கிடைப்பதில்லை. ஒருவேளை உணவு கிடைத்தால் அடுத்த வேளை கிடைப்பதில்லை: பட்டினிதான். இந்த வறுமை நிலையில் உடம்பு இளைப்பது வியப்பல்லவே?”.
இதைக் கேட்டுத் தாமானின் உள்ளம் உருகியது. அவருக்கு உடனே நல்ல விருந்தளித்து இளைப்பாறச் சொன்னான். புலவர், தாம் வந்த காரியத்தைச் சொல்லத் தொடங்கினர். “என் வறுமையைப் போக்க வழி என்ன என்று யோசித்தேன். கிள்ளிவளவன் புலவர்களுக்கு வாரி வாரி வழங்குவதாகக் கேள்வியுற்றேன். அவனை அடைந்து, என் வறுமையையும் புலமையையும் புலப்படுத்தினால் வறுமை ஒழியும், புலமை வளரும் என்று கினேக் கிறேன். என்னிடம் ஒரு வண்டி இருக்கிறது. அதில் பூட்ட எருது இல்லை. நீ ஒரு காளைமாட்டை வழங்கினால் வண்டியேறி உறைபூருக்குச் செல்வது எளிதாக இருக்கும். வேறு பொருளைக் கேட்டு, உனக்குத் தொல்லை கொடுக்க விரும்பவில்லை” என்றார்.
தாமான் அதைக் கேட்டான். முன்பே அவர் நிலையை அறிக்திருந்தால் உபகாரம் செய்திருக்கலாமே என்று எண்ணி இரங்கினான்.
“இப்போதே உறையூருக்குப் போகவேண்டுமா? இன்னும் சில நாட்கள் இங்கே தங்கிச் செல்லலாமே!” என்றான். புலவர் அவன் விருப்பப்படியே தங்கினார். தாமான் அவருடைய கவிகளைக் கேட்டு இன்புற்றான்.
ஒரு நாள் புலவர் விடை கேட்டார். “உங்களுக்கு வேண்டியது விடைதானே?” என்று சொல்லி ஒரு நல்ல எருதைக் கொண்டுவந்து நிறுத்தினான். விடை என்பதற்குக் காளை மாடு என்றும் ஒரு பொருள் உண்டு. “இது போதுமா?” என்று கேட்டான். “போதும்” என்றார் புலவர்.
“இதை நீங்கள் வாங்கிக்கொண்டு போவதானல் ஒரு காரியம் செய்யவேண்டும்.”
“என்ன?” என்று கேட்டார் புலவர்.
“பசுமாடுகளும் தருகிறேன். அவற்றையும் அழைத்துச் செல்லவேண்டும். அதோ பாருங்கள், அந்த மந்தையை உங்களுக்கு வழங்கிவிட்டேன்” என்று தாமான் தோன்றிக்கோன் சொன்னதைக் கேட்ட புலவர், பிரமித்துப் போய்விட்டார்.
“என்ன! இவ்வளவுமா எனக்கு” என்று கேட்டார்.
“உங்கள் புலமைக்கு இன்னும் கொடுக்கலாம். என் நிலைமைக்கு இவ்வளவுதான் முடிந்தது” என்று அந்த வள்ளல் பணிவோடு சொன்னான்.
ஐயூர் முடவனார் வாயடைத்துப் போனார். அவர் கேட்டது என்ன? அவன் கொடுப்பது என்ன?
அந்தக் காலத்தில் பசுக்களையே செல்வமாக நம்பியிருந்தார்கள். புலவர் இப்போது கோதனம் பெற்றார். அவற்றைக் கொண்டு சென்றார், அவ்வளவையும் அவர் என்ன செய்வார்! அவற்றைப் பிறருக்கு விற்று, உணவுப் பொருள்களே வாங்கினார். பல மாதங்கள் குறைவின்றி வாழ அப்பண்டங்கள் உதவின. இடையில் ஒரு நாள் தாமான் அளித்த மாட்டை, வண்டியிற் கட்டி அதில் ஏறி உறையூரை அடைந்தார். கிள்ளிவளவனைக் கண்டு அளவளாவினர்.
“இவ்வளவு காலமாக நீங்கள் இங்கே வரவில்லையே!” என்று சோழன் கேட்டான்.
“அதற்கு ஒரு தாமான் தயை வேண்டியிருந்தது” என்று சொல்லி, அவனைப்பற்றிச் சொன்னார்.
ஆயிரம் யானை தந்தாலும் அந்த முடவருக்கு ஒரு காளை மாட்டால் உண்டான நன்மை கிடைக்குமா? இதை உணர்ந்த சோழ மன்னனும் தாமானைப் பாராட்டினான்.
அன்று முதல் ஐயூர் முடவனார், கிள்ளிவளவனுடைய அன்பையும் கொடையையும் பெற்றுச் சிறந்து விளங்கலானர்.
– கவிஞர் கதை, கலைமகள் வெளியீடு
அருமை…