மண்ணும் பெண்ணும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 996 
 

ஆற்றுப்படுகையில் கீற்றுக்களால் வேயப்பட்டிருந்த குடிசையில் இப்படிப்பட்ட பேரழகி இருப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை வேட்டைக்கு காட்டுக்குள் சென்றிருந்த மளவப்பேரரசின் சக்ரவர்த்தி மாதித்தன்.

“தாகம் எடுக்கிறது தண்ணீர் கிடைக்குமா?” என ஒரு சாதாரண பிரஜையைப்போல் மண்டியிட்டுக்கைகளை ஏந்தினார். தனியாக இருப்பதால் மனதில் பயத்தால் கைகள் நடுங்கியவளாக சுரைக்காய் குடுவையில் இருந்த ஆற்று நீரை அவரது கைகளில் ஊற்றினாள் மீனவன் மிகனின் மகள் காந்தாரை.

காந்தாரையின் அழகைப்பார்த்தவர்கள் அவளை ‘மன்னர் குல மங்கையாக இருப்பாளோ?’ என சந்தேகிப்பர். பேரழகியாக இருந்தாள். சாதாரண ஆட்கள் குடிசைப்பக்கம் வந்தாலே குலை நடுங்குவர். அதனால் இதுவரை யாரும் அவளை சீண்டியதுமில்லை, தொட்டுத்தீண்டியதுமில்லை. மன்னனோ அவளை வேண்டியபடியே தண்ணீரைப்பருகி விட்டு ஒரு முடிவுக்கு வந்தவராய் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

எத்தனையோ சுயம் வரங்களில் கலந்து தனக்குப்பிடிக்காவிட்டாலும் தன்னை இளவரசிகளுக்குப்பிடித்துப்போனதால் தற்போது அந்தப்புரத்தில் ஐம்பது பேருக்கு மேல் தனக்காகக்காத்திருந்தாலும், மகாராணிக்குரிய சாமுத்திரிகா லட்சணம் அவர்களில் ஒருவருக்குமில்லாததால் மேலும் சுயம்வரத்தில் அதற்க்குரிய இளவரசியை தேடிக்கொண்டிருந்தவருக்கு ஓர் ஏழையின் குடிசையில் தான் எதிர்பார்த்த பெண் இருப்பதைக்கண்டதும் மகிழ்ச்சியடைந்தார். சாதாரண ஒரு மீனவப்பெண்ணைக்கண்டதும் மன்னர் மயங்கிய செய்தி வீரர்கள் மூலம் நாடெங்கும் பரவியது.

இரவில் பஞ்சு மெத்தையிலும் உறக்கம் வர மறுத்து நெஞ்சு கணத்தது. ஐம்பது மனைவியரையும் வெறுத்தான். குடிசைப்பெண்ணிடம் மனம் தஞ்சம் புகுந்தது. ‘பகைவரும் கண்டு அஞ்சும் மாவீரன் கஞ்சிக்கும் வழியற்ற பெண்ணிடம் கெஞ்சி கேட்டு தண்ணீர் பருகியது கேவலமான செயல்’ என மந்திரி கூறியதைக்கண்டித்தார்.

“அப்படிப்பேச்கூடாது. அரண்மனைப்பெண்களெல்லாம் அப்சரஸ் கிடையாது. குடிசையில் வாழ்பவர்களை ஒதுக்கவும் முடியாது. அவளிடம் ஏதோ ஒன்று என்னை வசியப்படுத்துகிறது. விதி வசத்தால் வழி தவறிப்போன அரச வம்சமாகத்தான் இருக்க வாய்ப்புண்டு. வீரர்களை அனுப்பி அரண்மனைக்கு ராஜ மரியாதையுடன் அப்பெண்ணை அழைத்து வாருங்கள் என கட்டளையிட்டார் மன்னர்.

தன்னிடம் மண்டியிட்டு தண்ணீர் வாங்கிக்குடித்தவர் மன்னர் எனத்தெரிந்ததும் அரண்டு, மிரண்டு போனாள் காந்தாரை. கண்களில் தாரை, தாரையாகக்கண்ணீர் வடித்தாள். யார் கண்ணில் படக்கூடாது என இருந்தோமோ அவரது கண்களில் தன் மகள் பட்டு விட்டதை எண்ணி காந்தாரையின் பெற்றோரும் கண் கலங்கினர். ‘தங்களுக்கு மன்னருடைய படை வீரர்களால் என்ன துன்பம் நேரப்போகிறதோ?’ என பயந்தனர். 

படை வீரர்கள் பலர் குடிசை நோக்கி வருவதை ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து சொல்ல, அங்கிருந்த படகில் குடும்பத்துடன் ஏறி ஆற்றைக்கடந்து, அக்கரைக்கு சென்றவர்கள் மலைபகுதிக்குள் சென்று மறைந்தனர்.

வீரர்கள் வந்து பார்த்துவிட்டு குடிசையில் யாரும் இல்லாத செய்தியை மன்னருக்கு அனுப்பினர். அதைக்கேட்ட மன்னரும் கவலையுடன் மேலும் பல வீரர்களை அனுப்பி, அவர்கள் இருக்குமிடத்தை கண்டறியச்சொல்லிக்கட்டளையிட்டார். மன்னரும் மனதில் காந்தாரை மீது காதல் தீ பற்றி எரிய அரண்மனையில் நிலை கொள்ள முடியாமல் மாறு வேடத்தில் வீரர்களுடன் வீரராக தேடுதல் வேட்டைக்கு தானும் கிளம்பினார்.

மிருகங்கள் வாழும் காட்டிற்குள் மலை மீது மரத்தின் மீது பரண் அமைத்து காந்தாரையைத்தங்க வைத்தனர் அவளது பெற்றோர். இரவில் நரியின் ஊளையும், இரவும் பறவைகளின் அச்சத்தைத்தரும் சத்தங்களும், திடீர் சலசலப்புகளும் அவளைத்தூங்க விடாமல் தடுத்தன.

சில மிருகங்கள் மரத்துக்கு அடியில் படுத்துறங்கிய மான்களை வேட்டையாடின. 

பகல் பொழுதில் காட்டு வாசிகள் பலர் அந்த வழியாகச்சென்ற போது ஒரு வாலிபனின் பார்வை மட்டும் காந்தாரை மீது விழ, அவனது காந்தப்பார்வையிலிருந்து மறைந்து கொள்ள முயன்றவள் மரத்திலிருந்து கால் தவறி “ஐயோ” என அலறியபடி கீழே விழுந்ததில் உடலில் சாறுகாயமும், இடுப்பில் அடியும் பட்டதில் மயக்கமடைந்தாள். 

உணவுக்காக வெளியில் சென்ற பெற்றோரும் வந்து விட, ஆதி வாசிகளும் ஓடி வர காந்தாரைக்கு ஆதிவாசிகளில் வயதான வைத்தியன் ஒருவன் தனது குடுவையிலிருந்த மூலிகைத்தண்ணீரைத்தெளித்ததும் விழித்தாள். ஆதிவாசி வைத்தியன் அவளை சிகிச்சைக்காக தனது குடிசைக்கு அழைத்துச்சென்றான்.

இரண்டு நாட்கள் சிகிச்சையின் போது அந்த வாலிபன் காந்தாரையைக்கருணையுடன் பார்த்துக்கொண்டது அவளை மிகவும் கவர்ந்தது. ‘தன் அழகுக்கு ஏற்றவனாகவும், ஒரு வீரனைப்போலவும் இருந்ததால் எதிரிகளிடமிருந்து தன்னைப்பாதுகாக்க இவனால் தான் முடியும். இறைவனாக நம்மைக்காக்க இவனை அனுப்பியுள்ளார்.

பேசாமல் இவனையே திருமணம் செய்து கொண்டால் பாதுகாப்போடு எதிரி படை வீரர்களைப்பற்றி பயமின்றி வாழ்ந்து விடலாம்’ என நினைத்தவள் தன் பெற்றோரிடமும் கூற அவர்களும் ஒத்துக்கொண்டனர்.

ஆதி வாசி தலைவனிடம் காந்தாரையின் தந்தை தன் மகளின் விருப்பத்தைக்கூற, அளவு கடந்த மகிழ்ச்சியில் அனைவரும் பாடி ஆடினர். உடனே திருமணத்துக்கு அவர்களது குல வழக்கப்படி ஏற்பாடு செய்தனர். அவன் மளவ தேசத்து இலட்சினை கொண்ட ஒரு மோதிரத்தை அணிவித்த போது ‘ஒரு வேளை மன்னன் மாதித்தனே மாறு வேடத்தில் தன்னைத்திருமணம் செய்து கொள்ள வந்துள்ளாரோ..‌‌.?’ என பயம் கொண்டாள்.

அங்கிருந்த ஒரு காளி தெய்வத்தின் சிலை முன் திருமணம் நடந்தது. அடுத்த சில நாழிகை நேரத்தில் மளவப்பேரரசின் படைகள் இவர்களைச்சூழ்ந்து கொள்ள, வீரனோ எதிர்த்துப்போரிடாமல் சரணடைந்தது காந்தாரைக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ‘இவன் திருமணம் செய்து ‘கொள்ள’ வந்துள்ளவனா..‌.? திருமணம் செய்து ‘கொல்ல’ வந்துள்ளவனா…?’என சந்தேகித்து அதிர்ச்சியடைந்த அடுத்த விநாழிகை அவளைச்சிறைப்பிடித்து பல்லக்கில் ஏற்றிச்சென்றனர்.

பெரிய அரண்மனை…. சுற்றிலும் பணிப்பெண்கள்….பன்னீர் குளியல்…. வாசனை திரவியங்கள்…. பட்டு சேலை….பலவித நகைகள்… ஒரு மகாராணியாக காட்சியளித்தாள். மன்னரின் ஆசை நிறைவேறி விட்டதாகவே அரண்மனைப்பணியாட்கள் கருதினர். ‘வெட்டப்போகிற ஆட்டுக்கு மாலை போடுவது போல் இதையெல்லாம் செய்து நம்மைக்கொல்லப்போகிறார்களோ…?’ பயத்தால் நடுங்கினாள் காந்தாரை.

சற்று நேரத்தில் தன்னைத்திருமணம் செய்து கொண்ட ஆதி வாசி இளைஞன் உள்ளே வந்தான். மாறு வேடத்தில் சென்ற மன்னன் போட்டிருந்த ஆடைகளைக்களைந்த பணியாளர்கள் மன்னர் முதுகில் மீன் மச்சம் இருந்தது கண்டு அதிர்ந்தனர். அவர்களில் சிலர் மகிழ்ந்தனர்.

“ஆம். நீங்கள் நினைப்பது போல் மன்னர் மாதித்தன் இல்லை நான். ஆனால் இந்த தேசம் என்னுடையது. எனது பெயர் வளவன். இவள் எனது மாமன் மகள் காந்தாரை. மாதித்தனின் வம்சத்தினர் எங்களிடம் படை வீரர்களாக இருந்தவர்கள். சூழ்ச்சி செய்து ஆட்சியைப்பிடித்தார்கள். கௌரவர்களுக்கு பயந்து காட்டில் வாழ்ந்த பாண்டவர்களைப்போல படையின்றி காடுகளில் நாங்களும் ஆதிவாசிகளாக, மீன் பிடிப்பவர்களாக மறைந்து வாழ்ந்தோம். காந்தாரை மீது காதல் வெறி கொண்டு மாறு வேடத்தில் மன்னர் காட்டுக்குள் வந்ததை அறிந்து, அவரை ஈட்டியால் கொன்று அவரது வேசத்துடன் படைகளுக்குள் புகுந்து காந்தாரையை மணந்து இங்கு வந்துள்ளேன். இன்று முதல் மளவதேசத்துக்கு நானே சக்ரவர்த்தி” என்றார் ஒரு முழு வீரனாக வளவன்.

“எனக்குரிய மண்ணை எடுத்துக்கொண்டதற்கு கூட பொறுத்துக்கொண்டேன். எனக்குரிய பெண்ணை எடுத்துக்கொள்ள மன்னர் முயன்றதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இப்போது பெண்ணையும், மண்ணையும் ஒரு சேர அடைந்து விட்டேன்” எனக்கூறிய சக்ரவர்த்தி வளவனை மகாராணி காந்தாரை வாரி அணைத்து தன் மனபயத்தைப்போக்கிக்கொண்டு மகிழ்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *