பெரிய மாயன் பொட்டல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 19,169 
 
 

மங்கலக்குறிஞ்சி ஊரைச் சுற்றி அழகிய மலைத்தொடர்களும் பச்சைப்பசேரெனத் தோன்றிய வயல் வெளிகளும் சோலைகளும் பழத் தோட்டங்களும் நிறைய இருந்தன. ஆனால், இவற்றையெல்லாம்விட ஊருக்குக் கிழக்கேமலையடி வாரத்தில் வெட்ட வெளியாய்த் தோன்றிய அந்தச் சின்னஞ் சிறு பொட்டல்தான் என் மனத்தை அதிகமாகக் கவர்ந்தது.

இதனால் என்னுடைய ரஸிகத்தன்மையைப் பற்றி நேயர்கள் சந்தேகிக்க வேண்டாம். இயற்கை அழகின் நடுவே திருஷ்டி கழித்தது போலச் சூனியமாய் நின்ற அந்தப் பொட்டலின் பெயரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்ட கதையும்தான் என் மனத்தைக் கவர்வதற்குக் காரணமாக இருந்தன.

வெள்ளை நிறத்தில் உவர்மண் பரப்பாகப் பரந்து கிடந்த அந்தப் பொட்டலில் புல், பூண்டு கூட முளைப்பதில்லை. முதன் முதலாக நான் மங்கலக்குறிஞ்சிக்குப் போனபோது அந்தப் பொட்டலைப்பற்றி அவ்வூர்வாசி ஒருவரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.

அவர், அதற்குப் பெயர் ‘பெரிய மாயன் பொட்டல்’ என்று எனக்குக் கூறினார். அந்தப் பெயர் என் மனத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கிற்று.

“இவ்வளவு அழகான ஊரில் மலைச் சிகரங்களுக்கும், மரகதப் பசும் பாய்களை விரித்தாற் போன்ற வயல் வெளிகளுக்கும் இடையே இந்தப் பொட்டல் விகாரமாக இருக்கின்றதே? இதில் ஏதாவது மரம், செடி, கொடிகளை, நட்டு வளர்த்தால் என்ன? ஒரு பார்க் அமைத்தாலும் நன்றாக இருக்குமே? உங்கள் ஊர்ப் பஞ்சாயத்துப் போர்டார் இதைக் கவனித்துச் செய்யக் கூடாதா?’ என்று அவ்வூர் வாசியிடம் கேட்டேன் நான்.

அவர் சிரித்துக்கொண்டே எனக்குப் பதில் கூறினார். அது பெரியமாயன் செத்த இடம். தப்பித் தவறிக் கள்ளிச் செடிகூட அங்கே முளைக்காதே! இன்றைக்கு நேற்றா அது இப்படி இருக்கிறது? நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் தலைமுறையிலே அது இப்படிக் கிடக்கிறது. பாவம்; பஞ்சாயத்துப் போர்டார் என்ன செய்ய முடியும்? அந்தப் பொட்டலைப் பற்றிய கதையும் இந்த ஊர் ஐதீகமும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் நீங்கள் என்னைக் கேட்டிருக்கவே மாட்டீர்கள்.

“வாஸ்தவம்தான் எனக்கு அந்த விவரம் தெரியாதாகை யால் உங்களிடம் கேட்டேன். தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமை!” – நான் அந்த மனிதரின் வாயைக் கிளறினேன். அப்போது அந்த மங்கலக் குறிஞ்சி வாசியிடம் நான் கேள்விப் பட்டதைத்தான் இப்போது இங்கே விவரித்து எழுதுகிறேன். இது ஒரு ரஸமான கதை.

***

மங்கலக்குறிஞ்சி ஒரு பள்ளத்தாக்குப் பிரதேசம். ஊரின் கீழ்ப்புறம் பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்போல இருந்த மலைத்தொடர் நீர்ப்பாசன வசதிக்கும் இயற்கை வளத்துக்கும் இருப்பிடமாக இருந்ததுபோல் கொள்ளைக் காரர்கள் பதுங்கி வாழ்வதற்கும் இடமாக இருந்தது.

மங்கலக் குறிஞ்சியைப்போலவே அந்தப் பள்ளத்தாக்கில் இன்னும் நான்கைந்து வளமான சிற்றுரர்கள் இருந்தன. மலை மேல் எங்கோ மறைந்து வசித்து வந்த ஒரு கொள்ளைக் கூட்டம் இந்த ஊர்களில் அடிக்கடி தன் கை வரிசையைக் காட்டி வந்தது. அப்போது-அதாவது இந்தக் கதை நடந்த தலைமுறையில் மங்கலக்குறிஞ்சியும் அதைச் சேர்ந்த ஊர்களும் ஜமீன் ஆட்சியில் இருந்தன.

இருண்ட அமாவாசை இரவுகளில் மலைமேலிருந்து தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் இறங்குவதும் நினைத்தபடி உயிர்களையும் பொருள்களையும் சூரையாடிவிட்டுப் போவதும் வழக்கமாக இருந்தது. கிங்கரர்களாயிருந்த ஈவிரக்கமில்லாக் கொள்ளைக்காரர்களிடம் மக்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை.

அப்போது ஜமீன்தாராக இருந்த விஜயாலய மருதப்பத் தேவர் குடியும் கூத்துமாக ஜமீன் மாளிகையை விட்டு வெளியேறாமல் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்ததனால் கொள்ளைக்காரர்களை எதிர்க்கவோ, அடக்கவோ, வலுவான எதிர்ப்பு இல்லாமல் போயிற்று.

சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கிவிட்டால் உயிரும், பொருளும், நிச்சயமில்லை என்று சொல்லும்படியாக இருந்தது. யார் யாருக்கு,உயிர் போகுமோ? யார் யாருடைய வீடு நெருப்புக்கு இரையாகுமோ? – ஒன்றும் உறுதியாக எண்ணுவதற்கும் இல்லை; சொல்லுவதற்கும் இல்லை. கொள்ளைக்காரர்கள் எங்கிருந்து எந்தத் திசை நோக்கி வருவார்கள்? எப்போது வருவார்கள்? எத்தனைபேர் வருவார்கள்? என்னென்ன கொடுமைகளைச் செய்துவிட்டுப் போவார்கள்?-இவைகளில் எதுவுமே அனுமானத்துக்கோ, சிந்தனைக்கோ, எட்டாத விஷயமாகத்தான் இருந்தது.

திடீரென்று ஊருக்கு மேற்கிலோ, கிழக்கிலோ, இருளின் நடுவே புத்து இருபது தீவட்டிகள் தெரியும். அதைத் தொடர்ந்து குதிரைகள் தடதடவென்று ஓடி வருகிற ஓசை கேட்கும். உடனே ஊரில் அத்தனை வீடுகளிலும் கதவடைக்கும் ஒசையும் அதையடுத்துச் சுடுகாட்டு அமைதியும் நிலவும். பின் அந்த இருள் செறிந்த இரவில் யார் யாருக்குப் பறிபோக வேண்டுமென்றிருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் பறிபோகும்.

உயிர், உடைமை, கற்பு, எது கிடைத்தாலும் பறித்துக் கொள்ளத் தவறுவதில்லை, அந்தக் கொள்ளைக்காரர்கள் கூட்டத்துக்கும் அதன் அக்கிரமங்களுக்கும் தலைமை வகித்து நடத்தும் அயோக்கியன் ஒருவன் இருக்கிறான் என்பது எல்லோருக்கும் தெரியும். அவன் யாரென்றுதான் தெரியாது!

ஆனால் அயோக்கியன் தன் கூட்டத்தோடு வருவதும் கொள்ளையடித்துக் கொண்டு போவதும் ஒரு பெரிய மாயப் புதிராக இருந்ததே ஒழிய இனம் விளங்கவில்லை. அவனைப் பார்க்காமலேயே, அவன் இன்னாரென்று தெரிந்துகொள்ளாமலே ‘அவன் பெரிய மாயன்’, ‘அவன் பெரிய மாயன்’ என்று ஊரில் அவனைச் சொல்லிப் பழகி விட்டார்கள். இதன் விளைவாக முகம் தெரியாத அந்தத் திவட்டிக் கொள்ளைத் தலைவனுக்கும் பெரிய மாயன் என்ற பெயரே ஊரில் நிலைத்துவிட்டது. அவனுடைய பெயர் பொருத்தமாகத் தான் இருந்தது.

ஜமீன்தார் கவனிக்கவில்லை என்றால் மக்களுமா சும்மா இருந்து விடுவார்கள்? சிலரைப் பல நாள் ஏமாற்றலாம்: பலரைச் சில நாள் ஏமாற்றலாம் எல்லோரையுமே எப்போதுமே, ஏமாற்றி விட முடியுமா? வீடு வாசல், மாடு, மனை, சொத்து, சுகம் இவைகளெல்லாம் தொடர்ந்து பறிபோய்க் கொண்டே இருந்தால் யாருக்குத்தான் ஆவேசம் வராது?

ஜமீன்தாரிடம் முறையிட்டுப் பார்த்தார்கள். அவர் அந்த முறையீட்டை அக்கறையுடன் கேட்டதாகவே தெரிய வில்லை. மேலுக்கு ஏதேதோ சாக்குப் போக்குகளைக் கூறினார். பாராமுகமாக நடந்து கொண்டார்.

“அந்தக் கொள்ளைக் கூட்டம் கொலைக்கு அஞ்சாதது. நாம் வீணாக அவர்களை எதிர்த்து முரண்டினோமானால் நமக்குத்தான் கஷ்டங்கள் அதிகமாகும். பேசாமல் இந்த, அசட்டு எண்ணத்தை இப்போதே விட்டு விடுங்கள். எல்லாம். தானாகவே கொஞ்ச நாளில் ஒய்ந்துவிடும்” என்று பதில் கூறினார் ஜமீன்தார் விஜயாலய மருதப்பத் தேவர்.

அவருடைய பதில் எல்லோருக்கும் அதிருப்தியை உண்டாக்கியதோடல்லாமல் ஆத்திரத்தையும் உண்டாகிற்று.

ஜமீன்தாருக்கென்ன! இதுவரை அவருடைய ஜமீன் சொத்துக்களிலோ, ஜமீன் மாளிகைக்குள்ளிருந்தோ, ஒரு சிறு துரும்பு கூடத் தீவட்டிக் கொள்ளைக்காரர்களால் களவாடப் பட்டதில்லை. செளக்கியமாக ஊரைப் பற்றிய கவலையே இல்லாமல் வாழ்கிறார்! ‘ஊரார் எக்கேடு கெட்டால் அதைப் பற்றி அவருக்கென்ன கவலை?’ என்று அங்கங்கே ஜனங்களிடம் ‘கசமுசல்’ கிளம்பி விட்டது. தீவட்டிக் கொள்ளைக்காரர்களிடம் இருந்த ஆத்திரத்தை விட ஜமீன்தார் மேல் தான் இப்போது ஊாரரின் ஆத்திரம் பெருகியிருந்தது.

ஊரில் வாய்ப் பேச்சிலும் காரியத் திறமையிலும் புத்திக் கூர்மையிலும் சிறந்த தலைக்கட்டு ஒருவர் இருந்தார். மங்கலக் குறிஞ்சியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. பலருக்கு அவரிடம் மதிப்பும் விசுவாசமும் இருந்ததனால் அவர் சொன்னபடி செய்யத் தயாராயிருந்தார்கள். அவர் தான் தெய்வச் சிலைத் தேவர். ஊரில் தீவட்டிக் கொள்ளைக்காரர்களின் நடமாட்டமும், தொல்லையும் பெருகப் பெருக அதை உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டுமென்று முயன்ற பெருமை அவருக்கு உண்டு.

தெய்வச் சிலைத் தேவருக்கு வயது ஏறக்குறைய ஐம்பதுக்கு மேலேதான் இருக்கும். ஆள் என்னவோ இருபத்தைந்து வயதுக் கட்டிளங் காளை மாதிரிதான் ஒடியாடித் திரிவார். கட்டுமஸ்தான தேகமும், வைரம் பாய்ந்த நெஞ்சும் உடையவர் அவர். தீமையை அஞ்சாமல் தனித்து நின்று எதிர்க்கும் துணிவு அவருக்கு உண்டு. தெய்வச் சிலையார் ஒரு காரியத்தில் தலையிடுகிறார் என்றால் அந்தக் காரியத்தைப் பற்றி நினைக்க ஜமீன்தாருக்கே குலை நடுக்கம்தான். கையில் பிச்சுவாக் கத்தியுடன் அவர் நிமிர்ந்து நின்றால் மதுரை வீரசாமியின் பிரம்மாண்டமான சிலையைக் கண்ணெதிரில் நேரே உயிரோடு பார்ப்பது போலிருக்கும். நல்ல உயரமான ஆகிருதி, ஆண் சிங்கம் ஒன்று பிடரியைச் சிலிர்த்துக் கொண்டு நிமிர்ந்து முழக்கி நிற்பது போன்ற உடல் அமைப்பு. நீண்ட வள்ர்ந்த தலை

முடியைக் கொப்பரைத் தேங்காய்ப் பருமனுக்குக் கோணல் கொண்டையாக வாரி முடிந்திருப்பார். அடர்ந்து வளர்ந்த நீண்ட புருவங்களின் கீழே கூரிய விழிகள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி வாய்ந்தவை. நீண்டு அகன்று பரந்த நெற்றியில் புருவங்கள் சந்திக்கும் கூடுவாய்க்கு மேலும் முன் நெற்றிக்குக் கீழும் வட்ட வடிவமாக ஒரு சந்தனப் பொட்டு விளங்கும். வெட்டரிவாள் நுனிகளைப்போன்ற மீசை அவருடைய முகத்தின் கம்பீரத்திற்கும் ஆண்மைக்கும். தனிச்சோபை அளித்தது.

மனிதரைப் பார்த்துவிட்டால் இவருக்கா ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும்? என்று வியப்ப்டைய நேரிடுமே ஒழிய நம்ப முடியாது விஜயாலய மருதப்பத் தேவரின் தகப்பனார் காலத்தில் ஜமீன் காரியஸ்தராக இருந்தார். தெய்வச்சிலையார். விஜயாலய மருதப்பத் தேவர் பட்டத்துக்கு வந்த பின்பும் சில காலம் அவரே காரியஸ்தராக இருந்தார். நாளடைவில் இளைய ஜமீன்தாரின் போக்கு விடலைத்தனமாக ஒழுங்கற்றிருப்பதையறிந்து கண்டிக்க முயன்றார். ஆனால், இளைய ஜமீன்தார் தெய்வச்சிலையாருடைய கண்டிப்பையோ, அறிவுரைகளையோ, சிறிதும் பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்தாமல் இருந்திருந்தால் கூடப் பரவாயில்லை. அவமானமும் அலட்சியமும் செய்யத் தலைப்பட்டார்.

தெய்வச்சிலையார் உயிரைவிட மானத்தையும் நேர்மை ஒழுக்கங்களையும் பெரிதாக மதிப்பவர். இளைய ஜமீன்தாரின் போக்குக்கும் தமக்கும் ஒத்துக்கொள்ளாது என்று உணர்ந்து காரியஸ்தர் பதவியிலிருந்து தாமாகவே விலகிக்கொண்டு விட்டார்.

அத்தகைய பழம்பெரும் வீரபுருஷர் இப்போது ஜனங்களின் பரிபூரணமான ஆதரவோடு தம்மால் முடியாதததைச் செய்யப் போகிறார் என்று கேள்விப்பட்டபோது ஜமீன்தாருக்கு அசூயை குமுறியது. நல்லது செய்யப் பொறுக்காத மனம் அவருக்கு. பிறர் செய்தாலும் அதைப் பொறுக்க மாட்டார். மங்கலக்குறிஞ்சியில் மட்டுமன்றிச் சுற்றுப்புறங்களில் இருந்த பிற ஜமீன் கிராமங்களிலும் இளைய ஜமீன்தாரைப்பற்றி இருந்த நம்பிக்கை முற்றிலும் அழிந்து விட்டது.

“தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் எங்கள் விடுவாசல், மனைவி மக்களைச் சூரையாடுகிறார்கள். இருட்டிவிட்டால் ஜமீன் கிராமங்களில் கொள்ளைத்தொல்லை சகிக்க முடிய வில்லை. இதற்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்கள்!” என்று புரிதாபத்தோடு முறையிடுபவர்களிடம், “சரிதான் உங்களுக்கு வேறு வேலை இல்லை. இதெல்லாம் சகஜம். இதற்குத் தான் இவ்வளவு பிரமாதமாக முறையிட ஓடிவந்துவிட்டீர்களோ? கொள்ளைக்காரர்கள் வந்தால் அதற்கு மீஜனும் ஜமீன்தாரும் என்ன செய்ய முடியுமாம்? எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டுதான் காலத்ன்தக் கடத்த வேண்டும்?” என்று நிராதரவான கல்மனத்தோடு பதில் சொல்லுகிற ஜமீன்தாரிடம் யார்தான் நம்பிக்கை வைக்க முடியும்?

நம்பிக்கை இழந்த ஜனங்களுக்கு நம்பிக்கையை வைப்பதற்கு ஒருபுகலிடம் தேவையாக இருந்தது. தெய்வச்சிலையார் அந்தப் புகலிடத்தை அளித்தார். தெய்வச்சிலையார் ஜனங்களின் ஆதரவோடு கொள்ளைக்காரர்களை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்ற செய்தி இளைய ஜமீன்தாருக்கு எட்டியது.

ஜமீன்தார் விஜயாலய மருதப்பத் தேவரிடமிருந்து தாம் உடனே தெய்வச்சிலையாரைச் சந்தித்துப் பேச விரும்புவதாக அதிகாரத் தோரணையில் உத்தரவு வந்தது. அந்த உத்தரவைக் கேட்டதும் தெய்வச்சிலையாருக்கு ஏற்பட்ட கோபத்தில் ‘வரமுடியாது’ என்று மறுத்திருப்பார். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்ததில் போய் என்ன விஷயம் என்றுதான் கேட்டுவிட்டு வருவோமே என்று தோன்றியது. தெய்வச்சிலையார் ஜமீன் மாளிகைக்குப் போனார், இளைய ஜமீன்தாரைச் சந்திப்பதற்காக.

ஜமீன்தாரிடமிருந்து அழைப்பு வந்ததும் தெய்வச் சிலையார் அதனை ஏற்றுக்கொண்டு சந்திக்கச் சென்றதும் பரமரகசியமாய் நடந்தன. சந்திக்க உத்தர விட்டவரையும் சந்திக்கச் சென்றவரையும் தவிர வேறு எவருக்கும் தெரியாது.

“சமூகத்தில் கூப்பிட்டு அனுப்பினீர்களாமே? இதோ வந்திருக்கிறேன்”-தெய்வச் சிலையார் ஜமீன்தாருக்கு முன் சென்று அவரை வணங்கிவிட்டு அடக்க ஒடுக்கமாக இப்படிக் கேட்டார். ஜமீன்தார் பதில் வணக்கம் செய்யவில்லை. தமக்கு முன் அடக்க ஒடுக்கமாக வணங்கி நின்ற அந்த முது பெரும் வீரரை அலட்சியமும் கடுகடுப்பும் தோன்ற ஏறிட்டுப் பார்த்தார்.

“நீங்கள்தான் தீவட்டிக் கொள்ளைக்காரர்களை அடக்கக் கிளம்பியிருக்கும் சூரப் புலியோ! ஜனங்களைக் கூடத் தயார் செய்கிறீர்களாமே?”

“தாங்களும் தங்கள் ஜமீன் அதிகாரமும் செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத காரியத்தை என் போன்ற தொண்டனும் ஜனங்களுமாவது செய்ய முயல்கிறோம். இதற்காக எங்களை வாழ்த்திப் பாராட்டவேண்டிய திருக்கத் தாங்கள் ஆத்திரப்படுவதின் அர்த்தம் விளங்கவில்லை” -தெய்வச் சிலையர் சற்று அமுத்தலாகவே பதில் கூறினார்.

“என் தகப்பனார் காலத்திலிருந்து இந்த அரண்மனை உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறீர்கள். இதற்குச் செலுத்த வேண்டிய நன்றியைக் கேட்கிறேன். இந்தக் கொள்ளைக் காரர்களைப் பிடிக்கும் முயற்சியில் நீங்கள் தலையிடுவதை இப்பேர்தே நிறுத்திவிட வேண்டும்…”

“அரண்மனைக்கு நான் செலுத்த வேண்டிய நன்றிக்கும். கொள்ளைக்காரர்களைப் பிடிப்பதற்கும் என்ன சம்பந்தம்? பார்க்கப்போனால் நீங்கள் பட்டத்துக்கு வந்ததிலிருந்து “ஜமீன் கிராமங்களுக்கு இடைவிடாமல் தொல்லை கொடுக்கும் இந்தக் கொள்ளைக்காரர்களை நான் பிடிக்க முயல்கிறேனே! அதுவே உங்களுக்கு நான் செலுத்தும் பெரிய நன்றி, அல்லவா?”

“தெய்வச்சிலைத் தேவரே! எனக்கு உம்மோடு அதிகம் பேசிக்கொண்டிருக்க நேரம் இல்லை. நான் பட்டத்துக்கு வந்ததிலிருந்து நீங்கள் பலவிதத்தில் என்ன்ோடு ஒத்துழைக்க மறுக்கிறீர்கள். உங்களுக்கு வயது ஐம்பதுக்கு மேல் ஆகி விட்டது. வயதுக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ள வேண்டாம். அவ்வளவு தான் இப்போது என்னால் எச்சரிக்க முடியும்.”

“என் உயிரைவிட மங்கலக்குறிஞ்சி. மக்களின் வாழ்வு பெரிது. காளான் முளைத்தது போல் முளைத்து ஜமீன் கிராமங்களைச் சூறையாடிக்கொண்டிருக்கும் பெரிய மாயன் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்காமல் போனால் என். பெயர் தெய்வச்சிலைத் தேவர் இல்லை. எனக்குத்தான் வயசாகி விட்டது என் தைரியத்துக்கு இன்னும் வயசாகவில்லை.”

“நான் சொல்கிறேன்: நீர் இதைச் செய்யக்கூடாது. நான் ஜமீன்தார்; நீர் எனது பிரஜை; என் கட்டளையை மீறி விடுகிற அளவுக்கு உமக்குத் துணிவு வந்துவிட்டதா?”

“நேற்று வரை அவ்வளவு துணிவு இல்லை! இன்று இங்கே, இப்போது இளைய ஜமீன்தாரின் பேச்சைக் கேட்டதும்தான் அந்தத் துணிவும் வந்துவிட்டது…”

“என்ன? உமக்கு அவ்வளவு திமிரா?” “அது என்னிடமில்லை ஜமீன்தார்வாளிடம்தான் இப்போது உற்பத்தி ஆகிக்கொண்டிருக்கிறாற் போலத் தோன்றுகிறது -”

தெய்வச் சிலையார் பயத்தையும் பக்தியையும் அறவே விட்டு விட்டார். கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த ஜமீன்தாரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்.

“சரி! இளைய ஜமீன்தாருக்கு என் வணக்கம் வருகிறேன்”-தெய்வச் சிலையார் திரும்பினார். திரும்பினவர் அப்படியே திகைத்துப் போய் நின்றார். அவர் திரும்பிச் செல்லவேண்டிய வழியை மறித்துக் கொண்டு கழியும் கையுமாக ஐந்தாறுபேர் நின்று கொண்டிருந்தனர்.

அவருடைய திகைப்பைப் பார்த்து ஜமீன்தார் கலகல. வென்று சிரித்தார். “பார்த்தீர்களா தெய்வச் சிலைத் தேவரே! என்னோடு பகைத்துக் கொண்டு நிற்பவர்களை நான் எப்போதுமே வெளியில் தப்பிச் செல்லவிடுவதில்லை.”

கழியும் கையுமாக நின்ற ஐந்தாறு முரடர்களும் தெய்வச்சிலைத் தேவரைச் சுற்றிச் சக்கரவியூகமாக வளைத்து வெளியேற முடியாமல் தடுக்கும் பாவனையில் நின்றனர். ஜமீன்தார் தன்னை இரகசியமாகக் கூப்பிட்டனுப்பியது எதற்காக என்று இப்போதுதான் தேவருக்கு மெல்ல விளங்கியது. ஆனாலும் அவர் இவ்வளவு பெரிய ஆபத்தை, எதிர்பார்க்கவில்லை. தனியே வந்தவனை ஆள்விட்டு மறித்துக்கொள்ளும் அளவுக்கு வஞ்சகராகவோ, கிராதகராகவோ, இருப்பாரென்று ஜமீன்தாரைப் பற்றி அவர் எண்ணவில்லை.

தெய்வச்சிலைத் தேவரின் கண்கள் சிவந்தன். மீசை கிளர்ந்து துடித்தது. “நீங்கள் எல்லோரும் ஆண் பிள்ளைகள் தானா? மறக்குடியில் பிறந்தவர்கள்தானா? சேலைகட்டிய பெண்கள் கூடச்செய்ய வெட்கப்படும் காரியத்தைச் செய்கிறீர்களே!”

“நிறுத்தும் தேவரே! நிறுத்தும்.இப்போது உம்முடைய கோபமோ, ஆத்திரமோ, எதுவும் இங்கே பலிக்காது! நான் எதைச் செய்யக்கூடாது என்கிறேனோ அதைச் ‘செய்தே தீருவேன்’ என்கிறீர் நீர்! இன்னொரு முறை கேட்கிறேன். நீர் இந்த முயற்சியை இந்த நிமிஷத்தோடு விட்டுவிட்டால் உம்முடைய வழி உமக்காகத் திறந்திருக்கிறது. இல்லையானால்..?”

“இல்லையானால். என்ன செய்துவிடுகிறீர்கள்?” – ஜமீன் கட்டிடமே கிடுகிடுத்துப் போகும்படியான இரைந்த குரலில் கேட்டார் தேவர்.

“செய்வதென்ன? இந்தத் தடியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கையில் தடிகளும் இருக்கின்றன. இவர்களுக்கு நடுவில் நீங்களும் இருக்கிறீர்கள். உங்களை என்ன செய்ய வேண்டுமென்று இவர்களுக்குக் கட்டளையிட நானும் இருக் கிறேன். இத்தனைக்கும் மேலாக வாசற்கதவு அடைத்திருக்கிறது…” ஜமீன்தார் விஷமத்தனமாகப் பேசினார். விஷமத்தனமாகச் சிரித்தார்.

“என் கையில் தெம்பும் இருக்கிறது. அதையும் மறந்துவிட வேண்டாம்!” – தேவர் சீறினார்.

“தேவரே! வீணாகத் துள்ள வேண்டாம். இப்பொழுது நீர் ஒரு செத்த பாம்பு; முடியுமானால் உம்முடைய தெம்பைக் காட்டிப் பார்க்கலாமே?”

“என் தெம்பைக் காட்டுவதற்கு ஜமீன்தார்வாளின் உத்தரவு எனக்குத் தேவை இல்லை” – இப்படிச் சொல்லிக் கொண்டே ஜமீன்தார்மேல் பாய்ந்தார் தெய்வச்சிலையார்.

அந்தப் பாய்ச்சல் மின்னல் வெட்டும் வேகத்தில் நடந்து விட்டது. மறுகணம் தேவர் கைப் பிச்சுவாவின் நுனி ஜமீன் தாரின் கழுத்துக்கருகே வருடிக்கொண்டிருந்தது. தடியும் கையுமாக நின்று கொண்டிருந்த முரடர்கள். “ஆ! என்ன துணிச்சல்” என்று. அலறிக்கொண்டே தேவர்மேல் பாய்ந்தனர். தேவர் கூச்சல் கேட்டார் :

“அப்படியே நில்லுங்கள்! உங்களில் யாராவது கொஞ்சம் அசைந்தாலும் போதும். இந்தக் கத்தியை இப்படியே ஜமீன்தாரின் நெஞ்சுக் குழியில் சொருகிவிடுவேன். ஜமீன்தார். பிழைக்கவேண்டுமானால் நீங்கள் அசையாதீர்கள்…”

ஜமீன்தாரின் முகம் வெளிறியது. கண் விழிகள் மிரண்டு பிதுங்கின. உடல் வெடவெடவென்று நடுங்கிற்று. தடியுடன் நின்றவர்கள் ஆடாமல் அசையாமல் அடித்து வைத்த சிலை

களாய் நின்ற இடத்திலேயே நின்றனர். திகைப்பினாலும் பயத்தினாலும் எதிர்பாராத நிகழ்ச்சியாலும் என்ன செய்வ தென்றே அவர்களுக்குப் புரியவில்லை.

“இதுதான் என்னுடைய தெம்பு! – அதாவது ஐம்பது. வயதுக்கிழவனின் தெம்பு! இளைய ஜமீன்தாரவர்கள் விருப்பப் படி இதை இங்கே காட்டிவிட்டேன்…”

“தெம்பில்லை! இது வஞ்சகம்.” – பயத்தினால் அடித் தொண்டையிலிருந்து வெளிவந்து ஜமீன்தாரின் குரல்.

“அப்படித்தான் வைத்துக்கொண்டாலும் உங்கள் வஞ்சகத்தை விடவா பெரிது இது?” – தெய்வச்சிலையாரின் கத்தி ஜமீன்தாரின் கழுத்தை துணியால் தடவிக்கொடுத்தது, பளபளவென்று தீட்டப்பட்டிருந்த அந்தக் கத்தியின் ஒளி ஜமீன்தாரின் சிவந்த சருமத்தில் வெள்ளை நிழலாக ‘டால’ டித்துக் கொண்டிருந்தது.

“ம்ம்ம்! ஜமீன்தாரே! உம்முடைய ஆட்களைக் கம்பு களைக் கீழே போடச் சொல்லும். கீழே போட்டுவிட்டுத் திரும்பிப் பாராமல் போய் வாசற் கதவைத் திறக்கச் சொல்லும்…”

“சொல்லாவிட்டால்…”

“இந்தப்பிச்சுவா உமது கழுத்தை ஆழம் பார்க்கும்!” சொல்லிக்கொண்டே கத்தியைக் கழுத்தில் இலேசாக அழுத்திக் காட்டினார் தேவர். ஜமீன்தாருக்கு மூச்சுத் திணறியது. உண்மையிலேயே அவர் பயந்து போய்விட்டார். தேவர் சொன்னபடியே கழிகளைக் கீழே போட்டுவிட்டு வாசற் கதவுகளைத் திறந்துவிடுமாறு தம் ஆட்களுக்குச் சைகை செய்தார். அவர்கள் கழிகளைக் கீழே போட்டுவிட்டுப் போய்க் கதவைத் திறந்தனர். வெளியேறிச் செல்வதற்குள் மீண்டும் தம்மை அந்த ஆட்கள் மறிக்கக் கூடாது என்பதற்காகத் தெய்வச் சிலையார் கழுத்தருகில் வைத்த கத்தியை எடுக்காமலே ஜமீன்தாரையும் வாயில்வரை நடத்தி இழுத்துக்கொண்டு போனார். ஜமீன் மாளிகையிலிருந்து வீதியில் இறங்கும்

பிரதானவாயில் வந்ததோ, இல்லையோ, “ஜமீன்தார்வாள்!” நான் நல்லது செய்கின்றவன். இனி இம்மாதிரி அபாயகரமான முறையில் என்னோடு விளையாடினர்களோ, உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமில்லை” – என்று கூறி அவரைத் தன் பிடியிலிருந்து உதறிவிட்டுத் தெருவில் பாய்ந்தார்.

ஜன நடமாட்டமுள்ள வீதியில் இறங்கிய பின் வெளிப்படையாக ஜமீன்தாரால் என்ன செய்ய முடியும்? அவர் மனத்திற்குள், கிழட்டுப் பினமே! இன்றைக்கு எங்களை ஏமாற்றி விட்டுத் தப்பிவிட்டாய்! என்றாவது ஒருநாள் உன்னைத். தீர்த்துக் கட்டாமல் விடப் போவதில்லை என்று கறுவிக் கொண்டார். அதைத் தவிர அவர் அப்போது வேறு என்ன தான் செய்யமுடியும்?

அரண்மனையிலிருந்து தப்பி வந்த தெய்வச் சிலைபார். பல விஷயங்களைச் சிந்தித்து ஒன்றும் தெளிவாகப் புரியாமல் ஒரே குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.

தீவட்டிக் கொள்ளைக்காரரைப் பிடிக்கத் தாமே முயற்சி. செய்ய வேண்டிய ஜமீன்தார் வேண்டுமென்றே சும்மா இருக்கிறார். ஜனங்களின் உதவியால் என்னைப் போன்ற ஒருவன் அந்த முயற்சியில் ஈடுபட்டால் இரகசியமாகக் கூப்பிட்டு அது கூடாதென்று மிரட்டுகிறார். இந்த விஷயம் ஒரு புதிராக அல்லவா இருக்கிறது? இந்த முயற்சியில் எனக்கு வெற்றி கிடைத்துவிட்டால், ஜமீன்தாரால் கூட முடியவில்லை. அதைத் தெய்வச்சிலைத் தேவர் செய்துவிட்டார் என்று. ஜனங்கள் பேசுவார்களே என்பதற்காகப் பயப்படுகிறாரோ? அப்படியானால் அவரும் அவருடைய ஆட்களும் என்னோடு உதவியாக இருந்து வெற்றியில் தங்களுக்கும் பங்கு தேடிக் கொள்ளட்டுமே! நான் அதை வேண்டாமென்றா சொல்லி விடப் போகிறேன்? எதற்காக இந்த வஞ்சகம்? இரகசியமாகக் கூப்பிடுவது, கருத்துக்கு இசையாவிட்டால் ஆட்களைவிட்டு அடிக்க முயல்வது! நாணயமான ஜமீன் பரம்பரையில் பிறந்த ஜமீன்தார் செய்யக்கூடிய காரியங்களா இவை? இந்த விஜயாலய மருதப்பனுடைய வாழ்வே ஒரு சூழ்ச்சிப் புதிராகத்

தான் இருக்கிறது. எப்படியும் இதை உடைக்காமல் விடக்கூடாது கொலையும் கொள்ளையுமாக மங்கலக்குறிஞ்சியை அமங்கலக்குறிஞ்சியாக்கிக் கொண்டிருக்கும் தீவட்டிக் கொள்ளைக்காரன் பெரிய மாயனைக் கண்டுபிடித்துவிட்டால் இந்த ஜமீன்தாரின் புதிர் தெரிந்துவிடும். ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கப் போனால் ஜமீன்தாருக்கும் பெரிய மாயனுக்கும் ஏதோ அந்தரங்கத் தொடர்புகூட இருந்தாலும் இருக்கும். இவ்வாறு சந்தேகப்படுவதற்கு முகாந்திரங்கள் நிறைய இருக்கின்றன.

இளைய ஜமீன்தார் பட்டத்துக்கு வந்த ஓரிரண்டு மாதங்களுக்குப் பின்தான் இந்தத் தீவட்டிக் கொள்ளைக் கூட்டம் மங்கலக்குறிஞ்சியில் அட்டகாசம் புரியத் தொடங்கிற்று. அன்றிலிருந்து ஜமீன்தார் அதை ஒடுக்க முடியவில்லை. என்னைப்போல யாராவது முயன்றாலும் தடுக்கிறார்; பய முறுத்துகிறார். தீவட்டிக் கொள்ளைக்காரர்களும் இதுவரையில் ஜமீன் மாளிகையிலிருந்தோ, ஜமீன் சொத்துக்களிலிருந்தோ, ஒரு சிறு களவுகூடச் செய்ததாகத் தெரியவில்லை. அவர்கள் கொள்ளையடிப்பதெல்லாம் ஊரிலிருந்தும் ஊர் மக்களிடமிருந்தும்தான். தீவ்ட்டிக்கொள்ளை மங்கலக் குறிஞ்சி ஜமீன் எல்லையைச் சேர்ந்த ஊர்களில் மட்டும் நடந்ததே ஒழிய வேறெங்கும் இல்லை. இதை எல்லாம் ஒரு சேர வைத்து மொத்தமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது கண்ணுக்குத் தெரியாத சூழ்ச்சியின் பயங்கர உருவம் ஒன்று மறைந்திருப்பதுபோல் தோன்றுகிறது.

தெய்வச்சிலைத் தேவர் சிந்தித்தார். இப்போது அவருக்கு இரட்டை எதிர்ப்பு. கொள்ளைக்காரப் பெரிய மாயனைக் கண்டுபிடிக்க முயல்வதனால் அவன் எதிர்ப்பு: ஜமீன்தாரிடம் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் அவருடைய மறைமுகமான பயங்கர எதிர்ப்பு. இந்த இரு எதிர்ப்புக்கு இடையேயும் அவரும் அவரது ஆட்களும் தங்கள் முயற்சியை நிறுத்தி விடவில்லை.

அன்று அமாவாசைக்கு முதல் நாள். அம்மாவாசையன்றும், அதற்கு முன் இரண்டு நாட்களும், பின் இரண்டு நாட்களும், ஊரில் தீவட்டிக் கொள்ளைக்காரர்களின் வரவு நிச்சயம். இந்த முறை அமாவாசை வந்தபோது தெய்வச் சிலைத்தேவரும் அவருடைய ஆட்களும் விழிப்பாக இருந்தனர். இந்த ஐந்து நாட்களில் பெரிய மாயன் கூட்டத்தைப் பற்றி முக்கியமான தடையம் ஏதாவது கிடைக்கும்படி செய்துவிடவேண்டும் என்பது, தேவரின் உறுதியான ஆசை! மலையடிவாரத்துப் புதர்களிலிருந்துதான் பெரியமாயன் கூட்டத்தார் கிளம்பி வருவதாக ஊரில் ஒரு வதந்தி வெகு நாட்களாக நிலவி வந்தது. இந்த வதந்தி மெய்யா, பொய்யா என்பதற்கு நேரில் பார்த்து ஆதாரம் கண்டவர்கள் எவருமில்லை.

ஊரில் வீதிக்கு வீதி தேவையான காவலுக்கு ஏற்பாடு செய்துவிட்டுத் தெய்வச் சிலைத் தேவரும் வேறு சில முக்கிய மான ஆட்களும் மலையடிவாரத்திற்குச் சென்றனர். மலை மேலிருந்தோ அடிவாரத்திலிருந்தோ, ஊருக்குள் இறங்கி வருவதற்குப் பலவழிகள் இருந்தன. தெய்வச் சிலையாரும் அவரோடு போனவர்களும் தனித் தனியே பிரிந்து வழிக்கு ஒருவர் வீதம் இருளில் மறைந்து பதுங்கி வேவு பார்த்தனர். எப்படியும் அன்றிரவிற்குள் கொள்ளைக்காரர்கள் வருகிற வழி, போகிற வழி, முதலிய விவரங்களைத் தெரிந்து கொண்டுவிட்டால், மறுநாள் வழியை மறித்துத் தாக்கி அவர்களைப் பிடிக்க வசதியாக ஏற்பாடு செய்துவிடலாம் என்பது தேவரின் திட்டம்.

அமாவாசை இருள் எங்கும் மைக் குழம்பாகக் கப்பிக் கிடந்தது. மலையடிவாரத்துப் புதர்களின் அடர்த்தியில் இருட்டு இன்னும் பயங்கரமாக இருந்தது. சிள் வண்டுகளின் ‘கீஇஇ, கீஇஇ’ என்ற ரீங்காரம் இருளின் பயங்கரத்துக்குச் சுருதி கூட்டிக்கொண்டிருந்தது. இடையிடையே கோட்டான்களின் அலறல், நரிகளின் ஊளை, பறவைகள் சிறகடிக்கும் ஒலி, எல்லாமாகச் சேர்ந்து இருள் என்ற சாம்ராஜ்யத்தில் பயங்கரம் என்ற ஆட்சியை ஸ்தாபிதம் செய்தன.

தெய்வச் சிலைத் தேவர் பதுங்கியிருந்த இடம் மற்றெல்லாவற்றையும்விடக் கேந்திரமானது. மலையும் அடிவாரமும் சந்திக்கின்ற இடத்தில் இடிபாடுகளோடு சிதிலமடைந்த ஒரு ஐயனார் கோவில், பழைய காலத்தில் ‘வையந்தொழுவார் கோயில்’ என்று அதற்குப் பெயர். ஐயனார். கோவில்தான். சிதைந்திருந்தது. அரைப்பனை உயரத்துக்குப் பிரம்மாண்டமாக வெள்ளைப் பூச்சுடன் நின்ற ஐயனார் கோவில். குதிரை இன்னும்புத்தம் புதிதுபோல அழியாமல் சிதையாமல் இருந்தது. அடியிலுள்ள துவாரத்தின் வழியாக உள்ளே நுழையலாமானல் குதிரையின் உடலுக்குள் பத்துவேர் தாராளமாகக் கால் நீட்டி உட்காரலாம். அவ்வளவு பெரிது. இந்தக் குதிரையின் கீழ்ப்புறம் மலையிலிருந்து ஊருக்குள் செல்லும் பிரதானமான காட்டுச்சாலை அமைந்திருந்தது. ஐயனார்கோவில் குதிரைக்குக் குடைபிடிப்பது போல அடர்ந்து வளர்ந்த வாகை மரம் ஒன்று நெடிதுயர்ந்து நின்றது.

தெய்வக் சிலைத்தேவர் இந்த வாகை மரத்தின் மேலேறி அடர்ந்து வளர்ந்திருந்த இதன் கிளைகளுக்கு இடையே ஓரிடத்தில் வேல், கம்பு சகிதம் மறைந்து உட்கார்ந்து வேவு பார்த்துக்கொண்டிருந்தார். மரக்கிளையில் அவர் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்து காலைக் கீழே: தொங்கவிட்டால் காற்பாதங்கள் ஐயனார் குதிரையின் தலையில் இடிக்கும்.

இரவு முதல் ஜாமம் கழித்துவிட்டது. ஒரு துப்பும் துலங்க வில்லை. நேரம் ஆக மலைக்குளிர் ஊசி குத்துவது போல் ஜில்லென்று உடம்பில் உறைத்தது. கண் இமைகள் மெல்லச் சோர்ந்தன. இனிமேல் இங்குக் காத்திருப்பதில் பயனில்லை. என்று தேவர் எண்ணியபோது வாகை மரத்துப் பொந்தில் கோட்டான் இரண்டு மூன்று முறை தொடர்ந்து கத்தியது: சிறகுகளைப் படபடவென்று அடித்துக்கொண்டது.

கீழே காய்ந்த சரகுகளில் தடதடவென்று யாரோ சிலர் வேகமாக நடந்துவரும் ஒசை அடுத்துக் கேட்டது. ‘கசமுச’ வென்று பேச்சுக் குரல்களும் கேட்டன. தேவர் உஷாரானார். காதுகளையும் கண்களையும் தீட்டிக் கூர்மை யாக்கிக் கொண்டார். மரக்கிளைகளை மெல்ல விலக்கிக் கொண்டு கீழே பார்த்தார். கண்களில் பார்க்கும் சக்தியை எவ்வளவு தீட்சண்யமாக்கிக் கொண்டாலும் கீழே மொத்தமாக ஆட்கள் நிற்பதுமட்டும் தெரிந்ததே தவிர இன்னார், இன்னார் குதிரையின் பக்கத்தில் நிற்கிறார்கள் என்று இனம் புரியவில்லை. கும்பலாகப் பத்துப் பன்னிரண்டுபேர் நிற்பது தெரிந்தது. தோற்றத்திலிருந்து ஒவ்வொரு ஆளும் ஏறக் குறைய ஒரு பீமசேனனுக்குச் சமமாக இருப்பான் போல். தோன்றியது.

பொறுமையிழந்துவிடாமல் மேலும் கூர்ந்து கவனித்தார், தெய்வச்சிலைத் தேவர்.

குதிரையின் அடிப்பாகத்தில் இருந்த சிறு துவாரத்தின் வழியே ஒரு ஆள் உள்ளே நுழைந்தான். வெளியே யிருந்தவர்களிடம் எதையோ கொண்டுவந்து கொடுத்தான். ஒருமுறை இரண்டு முறை, மூன்று முறை, குதிரையிள் உடலுக்குள்ளிருந்து எவையோ சில பொருள்களை வெளியே எடுத்துவைத்தான் அவன். அவை என்னவென்று. இருட்டில் தெரிய வில்லை.

அடுத்து இரண்டு சிக்கி முக்கிக் கற்களுக்கு இடையே பஞ்சுத் துணுக்கை வைத்துத் தட்டுகிற ஓசை கேட்டது. நெருப்புப் பொறிகள் பஞ்சில் பற்றின. குதிரையின் கீழே இருந்த ஒரு அகல் விளக்தை ஏற்றினர்.

கும்மிருட்டில் சட்டென்று விளக்கு ஒளி படரவும் தெய்வச்சிலைத் தேவர் வாகை மரக் கிளைகளுக்கிடையே தம்மை நன்றாக மறைத்துக்கொண்டார். பின்பு மேலும் தொடர்ந்து கவனித்தார். அவர் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அந்த நடுங்கும் குளிரிலும்கூட உடம்பு வேர்த்துவிடும் போலிருந்தது.

கீழே ஐயனார் குதிரையின் அருகில் விளக்கொளியில் மரக் கைப்பிடியோடு கூடிய தீவட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. களிம்பேறிய பித்தளைக் குடம் நிறைய எண்ணெய் பக்கத்தில் இருந்தது. துணிக்கந்தை பந்தமாகச் சுற்றப்பட்டிருந்த தீவட்டிகளின் துனியைக் குடத்தில் முழுக்கி எடுத்து விளக்கின் உதவியால் கொளுத்திக் கொண்டார்கள். எண்ணெயின் வாடை மூக்கைக் கமறச் செய்து குமட்டியது. அது இலுப்பெண்ணெயாக இருக்க வேண்டுமென்று தேவர் அனுமானித்துக்கொண்டார்.

நன்றாக உற்றுப் பார்த்த்போது தேவருக்குப் பகீரென்றது! காரணம்? கீழே நின்றுகொண்டிருந்த பத்துப் பன்னிரண்டு பேர்களில் ஐந்தாறுபேர் ஏற்கெனவே அவருக்கு அறிமுகமானவர்களாக இருந்ததுதான். ஆம்; அந்த ஐந்தாறு பேர் வேறெருவரும் இல்லை: ஜமீன் மாளிகையில் தடியும் கையுமாக அவரை வழி மறித்துக்கொண்ட அதே முரடர்கள் தாம். வியப்பைச் சமாளித்துத் தாங்கிக் கொண்டே தொடர்ந்து கவனித்தார் அவர்.

ஏறக்குறைய பதினெட்டுத் தீவட்டிகள் இருக்கலாம் அத்தனையையும் கொளுத்திக் கீழே தரையில் செங்குத்தாக நட்டிருந்தார்கள். துணியோடு இலுப்பெண்ணையும் சேர்ந்து மேலே வந்த கரிப் புகைக்குக் கேட்கவா வேண்டும். குழகுழவென்று மேலே வந்த கரிப்புகை மரக்கிள்ையிலிருந்த தேவரை மூச்சு முட்டிப்போய்த் திணற அடித்தது. எப்படியோ கஷ்டப்பட்டுச் சகித்துக்கொண்டார். கண் பார்வைக்கு மட்டும் இடைவெளி கத்திரித்து விடப்பட்ட ஒரு வகைக் கறுப்பு அங்கியை அவர்கள் அணிவதைத் தேவர் கவனித்தார்.

அந்த அமாவாசை இருளில் பாழடைந்த ஐயனார். கோவிலின் அருகே மங்கிய அகல் விளக்கின் ஒளியில் கரிப் புகைக்கும் தீவட்டிகளோடு அம்மாதிரி உடையுடன் அவர்களை வேறு யாராவது கண்டிருந்தால் “ஐயையோ பெரிய பெரிய கரும்பூதங்களும் கொள்ளிவாய்ப் பிசாசுகளும் அல்லவா அணிவகுத்து நிற்கின்றன?” என்று மிரண்டு ஓடிப் போயிருப்பார்கள். மனோதிடத்தில் குலையாதவராகிய தெய்வச்சிலைத் தேவராக இருந்ததனால்தான் அவரால் அதை மரக்கிளையின் இடுக்கு வழியாகப் பார்த்துக் கொண் டிருக்க முடிந்தது.

‘அந்தப் பன்னிரண்டு பேரில் ஒருவன்தான் பெரிய மாயனா? அல்லது அவன் வேறு எங்காவது இருக்கிறானா?’ என்று தேவர் மனத்தில் ஒரு சந்தகம் எழுந்தது. கீழே இருப்பவர்கள் சிரித்தும் கேலி செய்தும் கும்மாளமடித்ததைப் பார்த்தால் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாகிய பெரிய மாயன் அப்போது அங்கே அந்தக் கூட்டத்தில் இருக்க முடியாது என்று ஒருவழியாகத் தமது சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டார் தேவர்.

கீழே அகல் விளக்கை அணைத்துவிட்டுத் தீவட்டி சகித மிருந்தவர்கள் புறப்பட்டுவிட்டனர். தீவட்டிகள் சிறிது தொலைவு சென்றதும் ஐயனார் கோவிலும், குதிரையும். வாகை மரமும், பழையபடி அந்தகாரத்தில் மூழ்கின. தீவட்டிகளும், உருவங்களும், மலையடிவாரத்திலிருந்து மேற்குப் புறமாக ஊருக்குள் செல்லும் கொடி வழியின் குறுகலான பாதையில் நடந்துகொண்டிருப்பதை அவர் மரத்திலிருந்தே பார்த்தார்.

சுற்றி வளைத்து அடிமரத்தின் வழியே கீழே இறங்க அதிக நேரமாகுமென்று அப்படியே கிளையிலிருந்து குதிரையின் தலைமேல் பாதங்களை ஊன்றிக் கீழே இறங்கினார் தேவர். தலையிலிருந்து கீழே தரையில் குதித்தபோது வாகை மரத்து ஆந்தை மீண்டும் குரூரமாக அலறியது.

“சனியனே! உனக்கு வாய் அடைக்காதா?” என்று அதைச் சபித்துக் கொண்டே தீவட்டிகளின் ஒளிப்புள்ளிகளையே இருளில் குறியாக வைத்து அந்த வழியில் அதிக வேகமின்றியும் அதிக மெதுவின்றியும் பதுங்கிப் பதுங்கிப் பின் தொடர்ந்தார்.

தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் பத்து கெஜம் முன்னாலும் தேவர் பத்து கெஜம் பின்னாலுமாகச் சென்று கொண்டிருந்தனர். புதர்களிலும், செடி கொடிகளிலும், ஒளிந்து, ஒளிந்து, அவர்கள் திரும்பிப் பார்த்துவிடாமலும், அதி ஜாக்கிரதையாகப் பின் தொடர்ந்தார்.

தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்போதே திடீரென்று குதிரைகள் கனைக்கும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவர் அப்படியே திகைத்துப் போய் வழியோரத்துப் புதரில் பம்மிப் பதுங்கிக்கொண்டார். அந்தக் குறுகிய வழியில் வரிசையாகக் குதிரைகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஒரே ஒரு குதிரையில் மட்டும் இவர்களை எதிர் பார்த்துக் கொண்டு இவர்கள் மாதிரியே கரும்பூதம் போன்ற உடையணிந்து ஒருவன் காத்திருந்தான். தீவட்டியோடு போனவர்கள் அவனிடம் நடந்து கொண்ட விதத்திலிருந்து அவன்தான் அந்தக் கொள்ளைக்கூட்டத்தின் தலைவனான பெரிய மாயனாக இருக்க வேண்டுமென்று தேவருக்குத் தோன்றியது. எல்லோரும் தீவட்டிகளோடு குதிரைமேல் ஏறிக்கொண்டனர். உற்றுப் பார்த்தபோது எல்லாக்குதிரைகளும் ஜமீன் மாளிகையைச் சேர்ந்தவை போல் தோன்றின.

‘ஜமீனை சேர்ந்த ஆட்கள், ஜமீனைச் சேர்ந்த குதிரைகள், கொள்ளைக்காரர்களை ஜமீன்தார் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது, தம்மை இரகசியமாகக் கூப்பிட்டுக் கொள்ளைக்காரர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடத் கூடாதென்று தடுத்தது-இதற்கெல்லாம் என்ன தொடர்பு?, என்ன காரணம்? என்ன அர்த்தம்?’ – தேவருக்கு எல்லாம் ஒரே புதிராகத் தோன்றின. ஒன்றுமே தெளிவாக விளங்க. வில்லை.

அவர் இவ்வாறு மனம் குழம்பிக்கொண்டிருந்த போது குதிரைகள் தடதடவென்ற காலடிச் சத்தத்துடன் ஊரை நோக்கிச் சென்றன. ‘இதுவரை தெரிந்த தடையங்கள் போதும்; இனி இவர்களைப் பின்பற்றவும் முடியாது’ பின் பற்றுவதனால் பயனுமில்லை! நடக்க வேண்டியவற்றை நாளை இரவில் கவனித்துக் கொள்ளலாம்’ – என்று தமக்குள் தீர்மானித்துக்கொண்டு வந்த வழியே திரும்பி நடந்தார், தெய்வச் சிலைத் தேவர்.

மலையடிவாரத்துக்கு வேவு பார்க்க வந்திருந்த மற்ற ஆட்கள் தேவரை எதிர்பார்த்து ஒரு இடத்தில் காத்துக் கொண்டிருந்தார்கள். தேவர் ஐயனார் கோவில் வழியாக அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். தாங்கள் போன இடங்களில் கொள்ளைக்காரர்களைப் பற்றி ஒரு உளவும் கிடைக்கவில்லை என்று அவர்கள் வருத்தத்தோடு கூறினார்கள்.

“பரவாயில்லை! அதனால் கவலைப்படாதீர்கள். கிடைக்க வேண்டிய எல்லா உளவுகளும் அநேகமாக நான் போன இடத்திலேயே கிடைத்துவிட்டன. நாளை இரவு இத்தனை நாழிகைக்கெல்லாம் பெரிய மாயன் கோஷ்டியைக் கூண்டோடு பிடித்து விடலாம்.”

“எப்படி? எப்படி? இவ்வளவு சீக்கிரத்தில் அகப்பட்டு விடுவார்களா?” என்று ஒவ்வொருவரும் தாங்க முடியாத ஆவலுடன் தேவரைக் கேட்டனர். அவ்ர்கள் எல்லோரும் மங்கலக் குறிஞ்சியின் நலனில் உண்மையாகவே அக்கரை உள்ளவர்கள்.

தெய்வச் சிலையார் அவர்கள் யாவரையும் அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டுத் தம்முடைய திட்டத்தை விவரிக்கலானார்:-

“நாளை நடுப் பகலிலிருந்து நம்முடைய வேலைத் திட்டங்கள் தொடங்குகின்றன. மலையடிவாரத்து ஐயனார் கோவிலில் இரகசியமாக நாளைக்கு உச்சிப்போதில் நாம் சந்திக்கவேண்டும். தீவட்டிக் கொள்ளைக் கூட்டத்தைப் பற்றிய சில மர்மங்கள் இன்னும் பெரிய புதிராகத்தான் இருக்கின்றன. அந்தப் புதிர்கள் வெளியாகும்போது நீங்களும், நானும், இந்த ஜமீனும் மட்டும் அல்லாமல் அக்கம் பக்கத் திலுள்ள சகல ஊர்களும் நாடு நகரங்களும்கூட மூக்கில் விரலை வைக்க நேரிடலாம்! எல்லாம் நாளை இரவு மூன்றாம் ஜாமம் முடிவதற்குள் அம்பலமாகி விடும். நம்முடைய திட்டத்தில் மிக முக்கியமான அம்சம் பெரிய மாயனையும் அவன் கோஷ்டியாரையும் மொத்தமாகப் பிடித்துவிட வேண்டுமென்பது- ஆனால் தீவட்டிக் கொள்ளைக்காரர்களோ வாயு வேகத்தில் செல்லவல்ல குதிரைகளில் வந்து போகிறார்கள். நம் கையில் அவர்கள் சிக்க வேண்டுமானால் அதற்கு மிக நுணுக்கமானதோர். தந்திர்த்தை நாம் கையாள வேண்டும்.

“என்ன தந்திரம்? அதை முதலில் சொல்லுங்கள். எப்படி யும் செய்தே தீருவோம்!” -கேட்டுக் கொண்டிருந்தவர்கள் குறுக்கிட்டனர்.

“பிரமாதமாக ஒன்றும் இல்லை! நாளை உச்சி. வேளைக்குள் முப்பது கலம் கேழ்வரகும், முந்நூறு ஒலைப் பாய்களும் தயார் செய்து வைக்க வேண்டும். கேழ்வரகும், நன்கு காய்ந்த தானியமாகவும் ஒலைப் பாய்கள் சன்னமாக மழ மழவென்று கரடுமுரடில்லாமல் பின்னப்பட்டனவாகவும் இருக்கவேண்டும்”-தேவர் இப்படிக் கூறியவுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் சிரிப்பை அடக்கமுடியாமல் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர்.

“கேழ்வரகும் ஒலைப் பாயுமா? இதென்னி வேடிக்கையாக இருக்கிறது! தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப் பிடிக்கக் கேழ்வரகும் ஒலைப் பாயும் எதற்கு?”

“வேண்டும் என்றால் வேண்டும். நான் வயதானவன்; அனுபவஸ்தன். என்னை நம்புவதாக இருந்தால் நான் சொல்லுகிறபடி கேளுங்கள். காரணமில்லாமல், பயனில்லாமல் எனக்கு எதையும் சொல்லத் தெரியாது.”

“சரி! அதற்கென்ன? ஒலைப் பாய்க்கும் கேழ்வரகுக்குமா நம் ஊரில் பஞ்சம்? நீங்கள் சொல்கிறபடியே தயார் செய்து விடுகிறோம். மேலே சொல்லுங்கள்”- அவர்கள் அவர் வேண்டுகோளுக்கு இணங்கியபின் மேலும் அவர் தமது திட்டங்களைத் தொடர்ந்து கூறுவதற்குத் தொடங்கினார்.

“இந்தக் காரியங்களை எல்லாம நாம் பரம ரகசியமாகச் செய்யவேண்டும். சிலம்பம் வீச நன்றாகத் தெரிந்த வாலிபர்களாக ஒரு ஐம்பது வாலிபர்களையும் தயார் செய்யவேண்டும். மீண்டும் நான் வற்புறுத்திச் சொல்ல ஆசைப்படுகிறேன். எல்லாமே காதும் காதும் வைத்தாற்போலத்தான் நடக்க வேண்டும். நீங்கள் நினைப்பதுபோல கொள்ளைக்காரர்கள் எங்கிருந்தோ வந்து போகவில்லை. நமக்கு மிக அருகிலிருந்தே நம்மிடம் வந்து தொல்லை கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நம் ஏற்பாடுகள் கொஞ்சம் அவர்கள் செவிக்கு எட்டினாலும் ஆபத்து. எல்லாத் திட்டங்களும் பாழாய்ப்போய்விடும். நான் கூறியவைகளோடு நாளை நடுப்பகலில் நாம் ஐயனார் கோவில் வாசலில் இரகசியமாகச் சந்திப்போம். நடக்கவேண்டியவற்றைப் பின்பு அங்கே கவனிக்கலாம். இன்றிரவும் கொள்ளைக்காரர்கள் குதிரை மேலேறித் தீவட்டிகள் சகிதமாக ஊருக்குள்தான் போயிருக் கிறார்கள். இன்று நாம் பலமான கட்டுக் காவலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்திருப்பதால் ஊரில் அதிகமாகச் சேதம் இருக்காது, எதற்கும் போய்ப் பார்க்கலாம்; வாருங்கள்!”

தெய்வச்சிலைத் தேவர் கிளம்பினார். மற்றவர்களும் கிளம்பினார்கள். அப்போது இரவு மூன்றாம் ஜாமத்துக்கும். மேல் ஆகியிருந்தது. அமாவாசை இருட்டில் காட்டுப் புதர் சுளின் வழியே ஊருக்கு நடந்து செல்வது கடினமாக இருந்தது. எப்படியோ தட்டுத் தடுமாறிப் போய்ச் சேர்ந்தார்கள். ஊரில் கொள்ளைச் சேதமும் நெருப்புச் சேதமும் அதிகம் இருக்காது என்று அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகக் கட்டுக் காவலையும் மீறி அதிகச் சேதத்தையே விளைவித்துச் சென்றிருந்தனர்-தீவட்டிக் கொள்ளைக்காரர்கள். இந்த அதிர்ச்சியில் அவர்கள் ஆத்திரம் உறுதிப்பட்டது. மறுநாள் எப்படியும் அந்த அக்கிரமக்காரக் கும்பலை வேரறுக்காமல் விடுவதில்லை என்ற பிரதிக்ஞையோடுதான் ஒவ்வொரு வரும் உறங்கச் சென்றனர்.

***

மறுநாள் பொழுது விடிந்தது. சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் அதே சமயத்தில் படு இரகசியமாகவும் கேழ்வரகும் ஒலைப்பாயும் தயாராயின. சிலம்பக் கழி வீசுவதில் வல்ல வாலிபர்கள் கூட்டமும் சேர்க்கப்பட்டுவிட்டது.

பகல் உச்சிப் போதுக்குத் தெய்வச் சிலைத் தேவரும் மற்ற முக்சியமான ஆட்களும் ஐயனார் கோவிலில் சந்தித்தார்கள் முதல் வேலையாகக் குதிரையின் உடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தீவட்டிகள், இலுப்பெண்ணெய்க் குடம், கறுப்பு அங்கிகள் எல்லாவற்றையும் அங்கிருந்து அப்புறப் படுத்தி வேறு இடத்தில் கொண்டுபோய் ஒளித்து வைக்க ஏற்பாடு செய்தார். அப்போது அந்தக் கறுப்பு அங்கிகளில் ஒரே ஒரு அங்கியை மட்டும் அவர் யாருக்குந் தெரியாமல் தம் வசம் மறைத்து வைத்துக்கொண்டார்.

ஐயனார் கோவிலுக்கு மேற்கே தீவட்டிக் கொள்ளைக் காரர்கள் குதிரைமீதேறி ஊருக்குள் பிரவேசிக்கும் குறுகிய கொடி வழியில் முந்நூறு கெஜ தூரத்திற்கு, கெஜம் ஒன்றுக்கு ஒரு பாய் வீதம் எல்லாப் பாய்களையும் நெருக்கமாக விரித்து அவற்றின்மேல் பரவலாகக் கேழ்வரகைச் சிதறிவிடும்படி செய்தார். பின் சிலம்பு வீரர்கள் ஐம்பது பேரோடு சாதாரண ஆட்கள் ஐம்பது பேரையும் சேர்த்து நூறு ஆட்களையும் மூன்று கெஜத்துக்கு ஒரு ஆளாக வழியோரப் புதரில் பதுங்கி ஒளிந்திருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. கொள்ளைக் காரர்களின் எண்ணிக்கை இருபது இருபத்தைந்திற்குள்தான் என்றாலும் குதிரைமேல் வரும் அந்த முரடர்களை மடக்கி வளைத்துப் பிடிப்பதற்கு அதிகமான ஆட்கள் வேண்டும் என்பதற்காகத் தோதாக நூறு ஆட்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தனர். சந்தர்ப்பவசத்தால் கொள்ளைக்காரர்களில் யாரைக் கொல்ல நேர்ந்தாலும் சிவப்புக் குதிரைமேல தீவட்டிக் பிடிக்காமல் வெறுங்கையோடு உட்கார்ந்திருக்கும் ஆளை மட்டும் எப்படியாவது உயிரோடு பிடித்துவிட வேண்டும் என்பது தேவரின் கட்டளை. ஏனென்றால் அந்த ஆள்தான் கூட்டத்தின் தலைவனான பெரிய மாயன் என்று கருதப்பட்டான்.

குதிரைகள் ஒலைப்பாயில் சிதறிய கேழ்வரகின்மேல் செல்லும்போது சறுக்கிச் சறுக்கிக் கீழே விழும். அந்தச் சமயம் பார்த்து மறைந்திருந்த வீரர்கள் பாய்ந்து மடக்கிக்கொள்ள வேண்டும் என்பது ஏற்பாடு. இந்த ஏற்பாடு மறைந்திருந்த வீரர்களுக்கும் முன்பாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பெரிய மாயன் பிடிபட்டால் ‘என்ன காரணத்தைக் கொண்டும் தெய்வச் சிலையாருடைய அநுமதியின்றி அவனது முகமூடியைக் கிழித்து அவன் யாரென்று தெரிந்துகொள்ள எவரும் முயலக்கூடாது’-என்பது எல்லோருக்கும் எச்சரிக்கப் பட்டிருந்தது.

இருட்டியதும் மேற்படி ஏற்பாடுகளை எல்லாம்.தேவர் முறைப்படி செய்துவிட்டு முதல் நாள் போலவே வாகை மரக் கிளையில் ஏறிப் பதுங்கிக்கொண்டார். அவரைத் தவிர அங்கு வேறெவரும் இல்லை.

எல்லோரையும் அனுப்பிவிட்டுத் தம் திட்டத்தைச் சரி பார்ப்பதற்காகவே தேவர் வாகை மரத்தில் தங்கியிருந்தார்.

உரிய நேரத்தில் அன்றைக்கும் கொள்ளைக்காரர்கள் வந்தனர். வழக்கம்போல் ஒருவன் குதிரையின் உடலுக்குள் நுழைந்தான். அடுத்த கணம் “ஐயையோ மோசம் போய் விட்டது!” என்று அலறிக்கொண்டே வெளியில் வந்தான். தேவர் மரத்தின் மேலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்ன? என்ன? ஏன்? உள்ளே இல்லையா?” மற்றவர் கள் ஆவலோடு கேட்டனர்.

“குதிரை மோசம் செய்துவிட்டது.”

“குதிரையாவது மோசம் செய்கிறதாவது? என்னடா உளறுகிறாய்?”

“உள்ளே தீவட்டி, எண்ணெய்க்குடம், அங்கிகள், ஒன்றுமே காணவில்லை!”

“காணவில்லையா? என்ன ஆச்சர்யம்: கொள்ளைக்காரர்களிடமே கொள்ளையடிப்பவர்கள் கிளம்பிவிட்டார்களா?”

“எல்லாம் அந்தத் தெய்வச்சிலைக்கிழவன் செய்த வேலை யாகத்தான் இருக்கும், அந்தக் கிழட்டுப்பயல் மட்டும் இப்போது என் கையில் அகப்பட்டால்.. ?” – இப்படிச் சொல்லியவாறே பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டு முஷ்டியை மடக்கிக் கட்டினான் ஒரு முரடன்.

மரத்தின்மேலிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த தெயிவச்சிலையாருக்கு உடல் ஒரு குலுக்குக் குலுக்கி ஓய்ந்தது.

“அது என்னப்பா மரக்கிளை குலுங்குகிறது?”

தெய்வச்சிலையாருக்கு நாக்கு ஒட்டிக்கொண்டது. நெஞ்சு அசுர வேகத்தில் அடித்துக்கொண்டது!

“அட நீ ஒருத்தன்! காற்றுக்கு மரம் ஆடினால் அது ஒரு வேடிக்கையா? இப்பொழுது நாம் புறப்பட வேண்டுமே? அங்கே அவர் குதிரைகளோடு காத்துக்கொண்டிருப்பார். அதற்கு முதலில் வழி சொல்லுங்கள்.”

நல்லவேளை! மரம் ஆடியதைப்பற்றி அதற்குமேல் பேச்சுத் தொடரவில்லை. தேவர் பிழைத்தார்.

சீக்கிரமே வேறு தீவட்டிகள் தயார் செய்துகொண்டு புறப்பட அவர்கள் முடிவுசெய்தனர். ‘உடை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தீவட்டிகளையாவது தயார் செய்து கொண்டு போவோம்’ -என்பது அவர்கள் எண்ணம்போலும், ஒருவன் எண்ணெய் கொண்டுவரப் போனான். இன்னொருவன் கந்தல் துணிகளும் தீ மூட்டுவதற்கு கல்லும் கொண்டுவரப் புறப்பட்டான்.

மூன்றாமவன் தீவட்டிக்கான மரக் கைப்பிடிகளைத் தயார் செய்வதற்காக வெட்டரிவாளும் கையுமாக வாகை மரத்தில் ஏறினான். தேவர் திடுக்கிட்டார். கைவசமிருந்த கறுப்பு அங்கிக்குள் மெல்ல உடலை நுழைத்துக்கொண்டு கிளைகளிடையே நன்றாக மறைந்துகொண்டார். தம் உடை வெள்ளையாக இருப்பதனால் மரத்தின்மேல் ஏறுபவனுக்குத் தெரிந்துவிடக்கூடாதே என்பத்ற்காகத்தான் அவர் முன் ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக்கொண்டிருந்த கறுப்பு அங்கியில் மறைந்து கொண்டார்.

அந்தப் பாழாய்ப்போன வாகை மரத்தில் எத்தனையோ கிளைகள் இருந்தன. ஆனால், ஏறியவன் தேவர் உட்கார்ந் திருந்த கிளையை நோக்கியே வந்தான். கிளைக்குத்தான் வந்தான்! தொலைந்துபோகிறது என்றால் அவன் வெட்டிய கொம்பும் தேவர் கை பிடித்துக் கொண்டிருந்தது.”

எந்தக் கொம்பின் கைப்பிடி பலத்தில் தேவர் மரக் கிளையில் பதுங்கியிருந்தாரோ அந்தக் கொம்பின் அடியில் அவனுடைய அரிவாள் சதக் சதக் என்று பாய்ந்துகொண் டிருந்தது. இன்னும் நாலைந்து வெட்டு விழுந்தால் கொம் பேர்டு தேவரும் கீழே விழ வேண்டியதுதான். நல்ல இருட்டு. வந்தது வரட்டுமென்று துணிந்து கிளைமேல் நின்று வெட்டிக்கொண்டிருப்பவனின் வலது காலைத் தமது வலது காலால் வேகமாக இடறிவிட்டார் தேவர்.

அவன் அடுத்த விநாடி, “ஐயையோ! அப்பா மரத்தில் பிசாசு காலை இடறிவிடுகிறதே” என்று அலறிக் கொண்டே நிலைகுலைந்து போய்ப் பொத்தென்று கீழே குதித்தான். அவன் கையிலிருந்த அரிவாள் நழுவி தேவருடைய வலது காவில் சிராய்த்துவிட்டுக் கீழே விழுந்தது.

“பிசாசாவது ஒன்றாவது? எங்கே பார்க்கலாம்! ஏறுங்கடா மரத்திலே” பத்துப் பன்னிரண்டு பேர் மொத்தமாக வாகை மரத்தில் ஏறவும் தேவர் நடுநடுங்கிப் போனார்.

‘உயிர் பிழைக்க வேண்டுமானால் இனிமேல் கீழே குதித்து ஓடுவதைத் தவிர வேறுவழியில்லை’ – என்று அவர் மனத்திலே பட்டுவிட்டது.

அடுத்த கணம் குதிரையின் தலை வழியாகக் கீழே குதித்து மேற்கு நோக்கித் தலை தெறிக்க ஓடத் தொடங்கினார். மரத்திலேறினவர்களும் கீழே குதித்து விரட்டினர். முதல் முதலில் மரத்திலிருந்து அரிவாளோடு குதித்தவன் மட்டும் எழுந்து நடக்க முடியர்மல் கால் பிசகிக் கீழே விழுந்து கிடந்தான். மற்றவர்கள் அத்தனை பேரும் தேவரைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தனர். அவர் ஓட: அவர்கள் துரத்த, நேரம் கழிந்துகொண்டிருந்தது.

கொள்ளைக்காரர்களின் தலைவன் ‘பெரிய மாயன்’ தன் ஆட்களுக்காகக் குதிரைகளோடு காத்திருக்கிற இடம் வரை அவர் ஓடி வந்துவிட்டார். குதிரைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததனால் அவர் ஓடுவதற்கு வழி இல்லை. துரத்துபவர்கள் அருகில் நெருங்கிவிட்டனர். தாம் என்ன செய்யலாம் என்றே அவருக்கு விளங்கவில்லை. எதிர்ப்புறம் குதிரைமேல் பெரிய மாயன் உட்கார்ந்துகொண்டிருக்கிறான். பின்புறம் துரத்துபவர்கள் நெருங்கிவிட்டார்கள். தாம் கொள்ளைக்காரர்கள் வழக்கமாக அணிந்து கொள்ளும் உடையில் இருந்ததை எண்ணியதும் சட்டென்று அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது. முதலில் பெரிய மாயன் ஏறிக் கொண்டிருந்த குதிரை நின்றுகொண்டிருந்தது அடுத்திருந்த குதிரைகள் வரிசையாகச் சவாரிக்குத் தயாராக நின்று கொண்டிருந்தன. இரண்டாவதாக நின்ற குதிரையில் தாவி ஏறிக்கொண்டார் தேவர். அவருடைய உடையினால் பெரிய மாயன் சந்தேகம் கொள்ளவில்லை.

“என்ன? மற்றவர்கள் எங்கே? நீ மட்டும் ஏன் ஓடி வருகிறாய்?”-பெரிய மாயன் அதிகார தோரணையில். கேட்டான். அந்தக் குரலைக் கேட்டதும் தெய்வச்சிலையாருக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது! ஆகா இது யாருடைய குரல்? எவ்வளவு பயங்கரமான உண்மை?-அவருக்கு மயிர்க் கூச்செறிந்தது.

பின்னால் ஆட்கள் கூச்ச்லும் கூப்பாடுமாகத் துரத்தி வருவதைக் கேட்டு அந்த அதிர்ச்சியில் முதல் இரண்டு குதிரைகளும் கிளம்பிவிட்டன. முன்னால் பெரிய மாயனின் சிவப்புக் குதிரை. அடுத்துத் தேவரின் குதிரை. துரத்திவந்தவர்களும் மற்றக் குதிரைகளை மடக்கி ஏறிக்கொண்டு விட்டனர். முன்னால் பெரிய மாயனின் குதிரை.

பின்னால் வரிசையாகத் துரத்துகிறவர்களின் குதிரை நடுவில் தேவர் ஏறிய குதிரை அகப்பட்டுக் கொண்டது. நல்ல இருட்டு ஒருவரிடமும் தீவட்டி இல்லை. எல்லாக் குதிரைகளும் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தன. பின்னால் துரத்தி வந்தவர்களின் கூச்சல் மட்டும் ஒயவில்லை.

ஆயிற்று! இதோ ஒலைப்பாயில் கேழ்வரகு தூவியிருக்கும். இடம் நெருங்கி விட்டது. தேவர் குதிரையிலிருந்து குதித்து விட நினைத்தார், முடியவில்லை. திடீரென்று என்ன நினைத்துக் கொண்டாரோ அந்தக் கறுப்பு அங்கியைத் தம் உடலிலிருந்து உருவி எறிந்துவிட்டார்.

தடதடவென்று ஒலைப்பாயில் குதிரைகள் நடந்தன. அடுத்த கணம் பொத்துப்பொத்தென்று சறுக்கி விழுந்தன. லாடங்களை வழுக்கச் செய்து எழுந்திருக்க முடியாமல் குதிரைகளைச் சறுக்கி வீழ்த்தியது கேழ்வரகு. தேவர் கீழே உருண்டார். குதிரைகள் சில அவருடைய நெஞ்சிலும் மார் பிலும் மாறி மாறி மிதித்துக்கொண்டு சென்றன. அவருக்குப் பிரக்ஞை தவறிவிட்டது. எத்தனை குதிரைகளின் மிதியைத் தான் ஒரு வயதானவர் பொறுக்க முடியும்?

மறுபடி அவருக்குப் பிரக்ஞை வந்தபோது தாம் ஊர்ச் சாவடியில் கிடத்தப்பட்டிருப்பதை உணர்ந்தார். சாவடித். தூண்களில் கொள்ளைக்காரர்கள் வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தனர், முக்கியமான ஆளை மட்டும் காண, வில்லை.

“பெரிய மாயன் எங்கே?”- அவர் ஆவலோடு கேட்டார்.

“இருட்டிலே குதிரைக் காலிலே மிதிபட்டுக் கறுப்பு. முகமூடி அணிந்த ஒரு ஆள் அங்கேயே இறந்திட்டார். இந்தக் கொள்ளைக்காரர்களை விசாரித்ததில் அவர்தான் பெரிய மாயன் என்று சொல்லுகிறார்கள். உங்கள் முதல் விருப்பப்படி அவரை உயிரோடு பிடிக்க முடியவில்லை.

இரண்டாவது விருப்பப்படி உங்கள் அனும்தியின்றி முக மூடியைக் கழற்றி ஆளைப்பார்க்கக் கூடாதென்று அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டோம்…”

“உங்கள் ஜமீன்தார் விஜயாலய மருதப்பத்தேவரைச் செத்த பின்பாவது நீங்கள் மன்னிப்பீர்களா? அவருடைய பாவம் பெரியது. மிகவும் பயங்கரமானது. வேலியே பயிரை மேய்ந்து அழித்த பாவம் அது. பொருளாசை யாரைத்தான் விட்டது? இல்லாதவன் ஆசைப்பட்டால் அது இயற்கை. ஆனால் அரசனே கொள்ளைக்காரன் வேஷம் போட்டால் அது எவ்வளவுநாள் பலிக்கும்? பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுத்தானே. ஆகவுேண்டும்?”

“நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே-?” — போங்கள்! போய் முகமூடியைக் கழற்றிப் பாருங்கள். பெரிய மாயன் யார் என்று புரியும் புரிந்து கொண்டபின் ஆச்சரியப்பட்டால்தான் அது உங்கள் தவறு. அவனை அந்த இடத்திலேயே அடக்கம் செய்துவிடுங்கள். அவனுடைய பாவ சரீரம் மறுபடியும் இந்த ஊரெல்லையில் நுழைய வேண்டாம். அந்த இடத்தில் ஐயனார் கோவிலிலிருந்து ஊர்வரை காட்டை அழித்துப் பொட்டலாக்கி விட்டால் கூட நல்லது. இதுதான் தெய்வச்சிலையாருடைய இறுதி வேண்டுகோளாக அமைந்தது. இதன் பிறகு சில நாழிகைகளில் அந்த மகா வீரபுருஷரும் அமர பதவி அடைந்தார். அத்தனை குதிரைகள் மிதித்தும் அதுவரை அவர் உயிர் உடலில் தங்கியிருந்ததே புண்ணிய பலன்தான்.

விஜயாலய மருதப்பத் தேவர்தான் பெரிய மாயன்என்று அறிந்தபோது ஜனங்களுக்கு ஏற்பட்ட அருவருப்பு இவ்வளவென்று சொல்லி முடியாது. காறி உமிழ்ந்தும் கல்லால் எறிந்தும் அந்தப் பெரிய மாயனை அடக்கம் செய்தனர். தேவர் வேண்டுகோளின்படி ஐயனார் கோவிலிலிருந்து ஊர் எல்லைவரை காட்டை அழித்துப் பொட்டலாக்கினர்.

– மூவரை வென்றான், மூன்றாம் பதிப்பு : ஏப்ரல், 1994, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *