கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 24 
 
 

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகில் சாளுவ நாயக்கன் பட்டணம் என்று ஓர் ஊர் இருக்கிறது. இந்த ஊருக்குப் பெயர் ஏற்படக் காரணமான சாளுவ நாயக்கர் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை இந்தக் கதையில் காண்போம்.

விசயநகரப் பேரரசின் ஆட்சி தமிழ் நாட்டிலும் பரவியிருந்த காலத்தில் அவ்வரசனின் தென்னாட்டுப் பிரதிநிதிகளாகப் பலர் அங்கிருந்து அனுப்பப்பட்டிருந்தனர். ஆட்சிப் பொறுப்பையும், பிற செயல்களையும் அங்கங்கே தங்கி நிர்வாகம் செய்ய இந்தப் பிரதிநிதிகள் பயன்பட்டனர். சாளுவ நாயக்கர் இப்படிப்பட்ட வகையில் பயன்படத்தென்னாட்டில் வந்து தங்கியிருந்த காலத்தில் தத்துவப் பிரகாசர் என்றொரு புலவர் இருந்தார். அவருக்குச் சைவ சமயத்திலே அளவற்ற பற்று உண்டு. திருஞான சம்பந்தர் என்றால் தம் உயிரினும் இனிதாகக் கருதுபவர். தன்மானப் பண்புமிகுதியாக உள்ள புலவர் அவர்.

அருள் வலிமையால் கவி பாடும் ஆற்றலும் சமயப் பற்றும் மிகுந்த தத்துவப் பிரகாசருக்கு இலக்கணமும், மொழி மரபும் தெரியாதென்று சொல்லிப் புரளி பண்ணி அவரை வம்புக்கு இழுத்தார்கள் சிலர். அப்போதெல்லாம் சுடச்சுடப் பாட்டிலேயே பதில் சொல்லி அந்த வம்பர்களை மடக்கினார் அவர்.

தத்துவப் பிரகாசருக்குத் துணிச்சலும் துடுக்குத் தனமும் அதிகம். எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னனுக்கு முன்னால் கொண்டுபோய் விட்டாலும் உண்மையைக் கூசாமல் குழையாமல் கன்னத்தில் அறைவது போல் சொல்லி விடுவார். இதனால் புலமைத் துறையில் அவருக்கு ஏற்பட்ட – பகைகளும் எண்ணற்றவைதாம். சாளுவ நாயக்கரைச் சந்திக்க வேண்டுமென்று தத்துவப் பிரகாசருக்கு வெகுநாட்களாக ஓர் ஆசை இருந்தது. ஒருநாள் மாலை நேரத்தில் புறப்பட்டுப் போய்ச் சாளுவ . நாயக்கருடைய மாளிகையை அடைந்தார் அவர். அரசப் பிரதிநிதி வசிக்கும் மாளிகை என்றால் சாதாரணமாகவா இருக்கும்? அங்கே ஆடம்பர ஆரவாரங்களுக்கு ஒன்றும் குறைவே இல்லை…

பழுத்த மரம் மேட்டிலிருந்தால் என்ன? பள்ளத்தில் இருந்தால் என்ன? அதை நாடிச் சென்றால்தானே பறவைக்குப் பசி தீரும். புலமை வாழ்க்கையும் அத்தகையதுதானே? ஆடம்பர ஆரவாரங்களைப் பார்த்துக் கூச்சப்பட்டுக் கொண்டு சும்மா இருந்துவிட்டால் வயிறு நிறையுமா?

தத்துவப் பிரகாசருக்குத்தான் கூச்சம் இருந்ததே இல்லையே. துணிவாகப் போனார். சாளுவ நாயக்கரைச் சந்தித்தார். சிரிக்கச் சிரிக்கப் பேசினார். அளவளாவினார். இலக்கியக் கருத்துக்களைக் கடல் மடை திறந்தாற்போல் அள்ளிவிட்டார்.

ஆனால் தத்துவப்பிரகாசர் சிரித்துக் கலகலப்பாகப் பழகிய அளவுக்குச் சாளுவ நாயக்கர் பழகவில்லை . அளவாகச் சிரித்து அளவாகப் பேசித் தமது பதவியின் பெருமையையும் பணத்தின் பெருமையையும் நினைவு வைத்துக் கொண்டே பழகினார். தத்துவப் பிரகாசருக்கு அது வேதனை தந்தது.

சமயம் வரட்டும் சரியானபடி சொல்லிக்காட்டி விடுகிறேன் என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டே வெளியில் வேறுபாடு தெரியாமல் பழகினார் தத்துவப்பிரகாசர்.

அன்றிரவு சாளுவ நாயக்கர் மாளிகையிலேயே அவர் உணவு உண்டார். புலவர் தம் அருகே அமர்ந்து உண்ணத் தகுதியற்றவர் என்று காட்டிக் கொள்வது போல் நடந்து கொண்டார் நாயக்கர். தத்துவப் பிரகாசருக்குத் தன்மானக் கொதிப்பு முள்ளாகக் குத்தியது. பொறுமையைக் கடைப்பிடித்தார். புலவர் உண்டு முடிந்ததும், “உங்களுக்குப் படுத்துக் கொள்வதற்காகத் தனி வீடு ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் அங்கேயே போய்ப் படுத்துக்கொள்ளலாம். நாம் மறுபடியும் நாளை காலையில் சந்திக்கலாம்” என்றார் சாளுவ நாயக்கர். புலவருடைய மனவேதனை முன்னிலும் அதிகமாயிற்று.

சாளுவ நாயக்கர் ஒரு காவற்காரனைக் கூப்பிட்டு, “அடே புலவரை அழைத்துக் கொண்டுபோய் அவருக்காக ஏற்பாடு செய்திருக்கும் வீட்டில் படுக்கச் செய்ய வேண்டிய வசதிகள் செய்து கொடு” என்று உத்தரவிட்டு விட்டார். காவற்காரன் தத்துவப் பிரகாசரை அழைத்துக் கொண்டு போனான்.

தாம் படுத்துக் கொள்ளும் விடுதியாக ஏற்பாடு செய்திருந்த வீட்டைப் பார்த்தாரோ இல்லையோ, தத்துவப்பிரகாசருடைய கொதிப்பு முன்னிலும் நான்கு மடங்காகியது.

வீட்டைச் சுற்றிப் பார்த்தார். வீடா அது? ஏதோ ஒரு பாழடைந்த கட்டிடம். காலைத் தரைமேல் வைக்க வேண்டுமே என்று அசிங்கப்படுகிற அளவு புழுதி . கும்பல் கும்பலாக மூட்டைப்பூச்சி அடைந்திருந்தது. அந்த வீட்டிலிருக்கும் அவ்வளவு மூட்டைப் பூச்சியையும் ஒன்று சேர்த்தால் ஒரு கலத்துக்கு மேல் தேறும் போலிருந்தது. வீட்டின் முக்கால் பகுதி நிறைந்திருந்த பொருள் புழுதி . எஞ்சிய கால் பகுதியில் மூட்டைப்பூச்சி. இடிந்த சுவர்கள். காரை பரியும் மேல் விட்டம். புலவருக்குப் படுப்பதற்காகப் போட்டிருந்த பாய்களோ கிழிந்து அழுக்கேறியவை. தலையணைகள் வைக்கோல் திணித்துச் செய்யப்பட்ட பீற்றல் தலையணைகள்; தையல் கிழிந்திருந்ததால் குச்சி குச்சியாக வைக்கோல் துருத்திக் கொண்டிருந்தது தலையணைகளில்.

புலவர் தத்துவப்பிரகாசர் தன் உடன் வந்த காவற்காரனைப் பார்த்துக் கேட்டார் – “ஏனப்பா! நாயக்கர் எனக்காக அரும்பாடுபட்டு இந்த அருமையான வீட்டைத் தயார் செய்தார் போலிருக்கிறது. இதோ ஒரு பாட்டு எழுதிக் கொடுக்கிறேன். அதைக் கொண்டுபோய்ச் சாளுவ நாயக்கரிடம் கொடுத்துவிடு. அதோடு வீட்டையும் பூட்டிச் சாவியையும் கொண்டு போய்க் கொடுத்துவிடலாம். நான் இங்கே படுக்கப்போவதில்லை. ஊருக்குப் போய்விட்டு வருகிறேன் என்று அவரிடம் சொல்.”

தத்துவப் பிரகாசருடைய பேச்சிலிருந்த கோபக் குமுறலைக் கண்டு காவற்காரன் பயந்து விட்டான்.

“மூட்டை கலம்; புழுதி முக்காலும் சுத்தப்பாழ்
வீட்டை விடுதியாய் விட்டாயே – போட்ட
தடுக்கெல்லாம் பீறல் தலையணையோ வைக்கோல்
படுக்கலாமோ சொல்லப் பா.”
(பெருந்தொகை 1640)

உள்ளத்தில் பொங்கிய கொதிப்பின் வேதனை ஓலையில் வடிந்து உருப்பெற்றது.

“கொண்டு போய் உன் எஜமானன் முகத்தில் விட்டெறி ” என்று பாட்டெழுதிய ஓலையையும், வீட்டின் சாவியையும் சேர்த்துக் காவற்காரன் முன்னால் வீசி எறிந்துவிட்டு அன்றிரவே துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு ஊர் திரும்பினார் தத்துவப் பிரகாசர்.

தன் பெருமை தாழும்போது எதையும் தூக்கியெறிந்து பேசிவிட்டு நிமிர்ந்து நடக்கும் இத்தகைய நிலை ஒவ்வொரு அறிவாளியின் வாழ்விலும் ஒரு கணமாவது வந்து போகும் நிகழ்ச்சிதான்.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *