கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 906 
 
 

 (1924ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அதிகாரம் 5-6 | அதிகாரம் 7-9

அதிகாரம்-7

காலங்கள் சென்றன! 

பாரியின் பறம்பு மலை மட்டுமல்லாது, சேர சோழ பாண்டிய மண்டலங்களும் அமைதியாகவே இருந்தன. போர் முகத்துக்கு தேவையில்லாத ஒரு நிம்மதியும் மக்கள் வாழ்க்கையில் இருந்தது. 

வீரர்களின் வாட்களும் வேல்களும் ஆங்காங்கே தூங்கிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகளுக்கு முன்னாலே படிந்திருந்த குருதி மட்டுமே அதில் இருந்ததே தவிர, புதிய குருதியின் நாற்றம் அந்த வேல்களிலோ, வாட்களிலோ இல்லை. 

மாந்தரின் வாழ்க்கை இவ்வளவு அமைதியாக இருக்கவேண்டும் என்றுதான் மன்னர்கள் விரும்பினார்கள். ஆனால், நாள்தோறும் வருகின்ற புலவர்கள் அது சேரன் அவையாயினும், சோழன் அவையாயினும், பாண்டியன் அவையாயினும், எந்த அவையிலும் பாரியைப் பற்றியே பாடத் தொடங்கினார்கள். 

இதுவே, நாட்டுடைய நிம்மதியை கெடுப்பதற்குப் போதுமானதாக, ஒரு புலவனுக்குக்கூட தோன்றிற்று. “நீங்கள் பாரியைப் பற்றிப் பாடப் பாட மற்றவர்களுடைய மன எரிச்சலையே அதிகப்படுத்திக் கொண்டு போகிறீர்கள்” என்று அந்தப் புலவன், மற்றப் புலவர்களை எச்சரித்தான்.

“எவ்வளவு தான் அவர்கள் ஆத்திரமுற்ற போதிலும், சொல்ல வேண்டியவற்றை சொல்லிவிட வேண்டியதுதான் பாவலன் வேலை” என்று புலவர்கள் அதை ஒதுக்கி விட்டார்கள். 

எந்த அவையில் போய் நின்றாலும் கூட “பாரி போல், நீயும் வழங்க வேண்டும் மன்னா!” என்று கேட்டார்கள். 

“பாரியைப் போல் நீயும் வாழவேண்டும்” என்று வாழ்த்தினார்கள். 

“பாரியின் நாட்டைப் போல், உன் நாடும் வளர்வதாக” என்றார்கள். 

முன்னூறு கிராமங்களை மட்டுமேகொண்ட ஒரு மலையை, ஒரு மாபெரும் நாடு வாழ்வதற்கு, காரணமாகக் காட்டினார்கள். கேட்கக் கேட்க மன்னர்கள் அனைவருக்கும் கோபமும் மூண்டது. ‘என்ன இவனுக்கு இந்த வாழ்வு?’ என்ற போட்டி பொறாமை உணர்வும் மூண்டது. 

வானவரையனுக்கும் கதலிக்கும் திருமணமாகி ஆண்டுகள் ஏழு முடிந்த நிலை. அவர்களது. வாழ்க்கையும், அமைதியும், இனிமையும் நிரம்பி நீர் நிறைந்த நதி மெதுவாகச் செல்லுவதுபோல் சென்று கொண்டிருந்தது. 

அழகான ஆண் குழந்தை ஒன்றுக்கு எடுத்த எடுப்பிலேயே தாயான கதலி, அந்தக் குழந்தைக்கு ஆறு வயதாவதைக் கண்ணால் கண்டு கொண்டிருந்தாள். 

தலைவாரிப் பூச்சூட்டி, அந்த மகனை அழகு பார்ப்பதிலேயே அவள் நேரத்தைச் செலவழித்தாள். இன்னும் ஒரு மகனையோ, மகளையோ, ஈன்றெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்கு இல்லை. தனக்கு இரண்டு மக்கள் இருப்பதாகவே அவள் கருதினாள். ஒன்று தன்னுடைய கணவன். மற்றொன்று, தன்னுடைய மைந்தன். அந்த இரண்டு பேர்களையும் அரவணைத்து அன்பாக கொண்டு செலுத்துவதிலேயே தனது இல்லறம் நடந்தால் போதும் என்று முடிவு கட்டி வாழ்ந்தாள். 

தன் மலை மீது இப்படி ஒரு குலமகள் வாழ்கிறாள் என்பதையே காவியமாகக் கருதினார், பாரி மன்னர். 

பாரியுடைய அவைக்களப் புலவர் கபிலர். இமயம் முதல் குமரி வரை நாடு முழுமையும் சுற்றி விட்டு, அன்றுதான் திரும்பியிருந்தார், பறம்பு மலைக்கு. 

ஆண்டுகள் எட்டு கழித்து, அவர் திரும்பி வந்தவுடனே அவரைப் பார்த்தார் பாரி மன்னர். முதன் முதலில் கேட்ட கேள்வி, “நம்முடைய மலைக்கு புதிய மகள் வந்திருக்கிறாளே பார்த்தீர்களா?” 

“மகளா, மலைக்கு வருபவள் மருமகளாகத் தானே இருக்க முடியும்” என்றார் கபிலர். 

“ஏற்கனவே, இருமக்கள் எனக்கு இருக்கிறார்கள். மூன்றாவது ஒரு மகள் வாய்த்திருக்கிறாள்! அவள் தான் இந்தப் பாரிமலையின் கொடிபோல் படர்ந்து நிற்கிறாள். கடந்த ஏழு ஆண்டு காலமாக. அவள் வந்ததில் இருந்து, இந்தப் பாரி மலையில் வசந்த காலங்கள் வசந்த காலமாகவும், வெயில் காலங்கள் வெயில் காலங்களாகவும், மழைக் காலங்கள் மழைக் காலங்களாகவும், பருவம் தப்பாமல் இயங்குகின்றன. பத்து நாட்கள் தவறுகின்ற பருவங்கள் கூட இப்போது தப்புவது இல்லை” என்றெல்லாம் புகழ்ந்தார் பாரி மன்னர். 

“நீயே புகழ்கின்றாய் என்றால், அவள் எப்படி இருப்பாள் என்பதை எண்ணிப் பார்க்க என்னால் முடிகிறது, மன்னவா! அவளை நான் பார்க்க வேண்டும்” என்றார் கபிலர். 

அங்கவையும் சங்கவையும் கபிலரிடம் வந்து, “தாத்தா அந்த இடத்திற்கு நாங்கள் உங்களை அழைத்துச் செல்கிறோம்” என்றார்கள். 

“நீங்கள் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஐயாவைப் பார்க்க நாங்களே வந்திருக்கிறோம்” என்று சொல்லிய படியே உள்ளே நுழைந்தான் வானவரையன். 

“என்ன, வானவரையா! என்ன உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா?” என்று கேட்டார் கபிலர். 

ஓங்கி சிரித்தார் மாமன்னர் பாரி. “இங்கே, ஒரு மகள் வந்திருக்கிறாள் என்று நான் சொன்ன போதே அது வானவரையன் மனைவி என்று எண்ணிப்பார்க்க உங்களால் முடியவில்லையா?” 

“அவ்வளவு தூரம் என் சிந்தனை ஓடவில்லை. மன்னா! வானவரையனுக்கு அப்படி ஒருத்தி வாய்க்க வேண்டும் என்றுதான் கருதினேனே யொழிய அவனுக்கே இவள் வாய்த்திருப்பாள் என்பதை நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை!” 

“இது ஒரு உற்சாகமான நிலைதான். எங்கே இருவரும் பக்கம் பக்கமாக நில்லுங்கள், பார்க்கலாம்” என்று கதலியையும் வானவரையனையும் பக்கத்தில் இருக்கச் சொன்னார். நடுவிலே நின்ற அவர்களது சிறுவன், புலவரது காலில் விழுந்து வணங்கினான்.

“இந்த வயதிலேயே எவ்வளவு பணிவு எவ்வளவு அன்பு: இந்தக் குழந்தை எதிர்காலத்தில் மிகச் சிறந்த குழந்தையாக இருக்கும்” என்று அவர் வாழ்த்து உரைத்தார். 

அப்போது வெளியிலே ஆரவாரம் கேட்டது. “இவ்வளவு பெரிய ஆரவாரம் வேறு யாருக்கும் எழுவது இல்லையே, அவ்வைப் பிராட்டியார் மீண்டும் வருகின்றாரோ” என்றார் கபிலர். 

“அதை மட்டும் உங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறதா” என்று கேட்டார் பாரி. 

“அவ்வை வரும்போதுதான் இவ்வளவு ஆரவாரம் இருக்கும்” என்றார் கபிலர். 

உள்ளே அவ்வையே நுழைந்தாள். “எப்படிக் கபிலரே உமக்கு அது தெரியும்” என்று கேட்டார் அவ்வை. 

“எந்த அவையில் போனாலும் இந்தக் கிழவி தானே முன்னாலே வந்து நிற்கிறாள். மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு இவள்தானே தன்னுடைய வரலாற்றைப் படைக்கிறாள். அதனால் இங்கே வந்ததும் அவளால் எழுந்த ஆரவாரமாகத் தான் இருக்க முடியும் என்று நான் எண்ணினேன்” என்றார் கபிலர். 

“முருகா! கபில முனிவரது புலமை எனக்குப் புரிகிறது. அவ்வையைப் பற்றி இப்படி ஒரு கருத்தை யாரேனும் ஒருவர் சொல்ல வேண்டும் என்றால், அவருக்கு அளவு கடந்த துணிச்சல் இருக்க வேண்டும். அந்த அளவு கடந்த துணிச்சல் யாருக்கும் வரவேண்டும் என்றால், அவர்கள் பாரியின் பக்கத்தில் இருக்க வேண்டும். அதனாலேதான் கபில மகாமுனி இவ்வளவு துணிச்சலோடு இப்படிச் சொல்லுகிறார்” என்றார் அவ்வை பிராட்டியார். 

“பாருங்கள், மன்னவா! அவ்வையாரைப் பற்றிப் பேசத் துணிச்சல் வேண்டுமாம்! அவ்வளவு தூரம் அவரது புலமை நிமிர்ந்து நிற்கிறது” என்றார் கபிலர். 

பாரி மன்னர் சிரித்தார்! 

அந்தச் சிரிப்புதான், அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி. அடுத்த பேச்சைத் தொடங்குவதற்கு இடையிலே ஒரு சிரிப்பைத் திரையாகப் போடுவது பாரி மன்னர் வழக்கம் அல்லவா! 

“தாயே! இதோ, நிற்பது யார் தெரியுமா? கதலி, என்னுடைய மலைக்கு வந்திருக்கும் மருமகள்.ஆனால் எனக்கு மகள். வானவரையனின் மனைவி. சோழன் தளபதி செங்கணானின் தங்கை. இப்படி ஒரு குலமகளை, இந்த நாடு எந்தக் காலத்திலும் சந்தித்தது இல்லை. இந்த மலை எந்த யுகத்திலேயும் சந்தித்தது இல்லை” என்று எல்லாம் பலபடப் புகழ்ந்தார், பாரி. 

அவ்வையார் அவளையே பார்த்தார். 

மெதுவாகக் கதலியின் அருகிலே வந்த அவ்வையார், “என்னை நன்றாகப் பார். இதற்கு முன்னால் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். 

“பார்த்திருக்கிறேன் பாட்டி. சோழ மண்டலத்திற்கு நீங்கள் வந்தபோது, நான் உங்கள் அருகிலேயே இருந்திருக்கிறேன். உங்களுக்கு நானே பரிமாறியிருக்கிறேன்.” 

“இருக்கும்! இருக்கும்! உன்னுடைய பணிவையும் உன்னுடைய குணத்தையும் பார்க்கும்போது, இந்த மலைக்குக் கிடைத்த பெரும் பரிசு நீதான் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் அவ்வையார். 

தலைகுனிந்தபடியே நின்றாள், கதலி. 

“நீங்கள் எதைக் கேளுங்கள் தாயே, அவள் பதில் சொல்ல மாட்டாள். இந்த மலைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இந்த மலையினுடைய வாழை மரங்களும், அணில்களும், கிளிகளும் பேசிய அளவு கூட அவள் இதுவரையிலும் பேசியது இல்லை’ என்றார் பாரி மன்னர். 

கபிலர் மீண்டும் அவள் அருகிலே வந்து, “கதலி, மன்னர் உன்னைப் புகழ்வதைப் பார்த்தால், இதுவரையிலே என் மீதும், அவ்வையார் மீதும் இருந்த மரியாதை அவருக்குக் குறைந்து வருவது போல தோன்றுகிறது” என்றார். 

“ஐய்யோ! அப்படிச் சொல்லாதீர்கள். உங்கள் இருவரையும் கொண்டேதான் இந்தத் தமிழ் நிலங்கள் முழுவதும் வாழ்கின்றன” என்றாள் கதலி. 

“ஒருவரை ஒருவர் புகழ்ந்து உரைத்துக் கொண்டிருப்பதிலேயே பொழுது போய்க்கொண்டிருக்கிறது. எல்லோரும் விருந்துக்குப் போகலாம்” என்றார் பாரி மன்னர். 

“பாரியின் மாளிகைக்கு எப்போது வந்தாலும் விருந்து காத்துக் கொண்டே இருக்கிறது. விருந்து எங்கே காத்திருக்கிறதோ, அங்குதானே போவீர்கள்” என்றார் கபிலர். 

“ம்! விருந்தோடு அனுப்புகிறானோ இல்லை வெறுங்கையோடு அனுப்புகிறானோ என்னவோ” என்று நிறுத்தி நிறுத்தி சொன்னார் அவ்வையார். 

“பாரி எப்போதும் வெறுங்கையோடு அனுப்ப மாட்டார்” என்றார் கபிலர். 

“நீங்கள் இருவருமே பேசி முடித்து, என்னிடம் இருந்து பறித்துக்கொண்டு போவீர்கள் போல் இருக்கிறதே” என்றார் பாரி. 

“முடிந்தால் அதையும் கூடச் செய்வோம், கொடுப்பவனைப் பாடுவதுதான் புலவர்களின் குல வழக்கம்” என்று சிரித்தார், கபிலர். 

விருந்து நடந்தபோது, கதலியும் அங்கவையும் சங்கவையும் பரிமாறினார்கள். 

புலவர் பெருமக்களைக் காண்பதில் கதலி பெரு மகிழ்வுற்றாள். 

பெரும் பொற்கிழி ஒன்றினை எடுத்து அவ்வையாரின் கையிலே கொடுத்தார் பாரி மன்னர் 

“அவ்வைப் பிராட்டியாரே! நீங்கள் இங்கேயே தங்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். 

“மன்னவா! வருகின்ற அனைவரும் இங்கேயே தங்குவதென்றால், இந்த மலை போதாதே” என்றார் அவ்வைப் பிராட்டி. 

“அவ்வையாரைப் போல அனைவரும் இருப்பார்களேயானால், இந்த மலை இடம் கொடுக்கும்” என்றார் பாரி மன்னர். 

“மன்னிக்க வேண்டும். நான் இங்கிருந்து நேரே திருக்கோவிலூருக்குச் செல்லவேண்டும். அங்கே, காரி மன்னன் எனக்காகக் காத்திருப்பான்” என்றார் அவ்வையார். 

அந்தப் பொற்கிழியைப் பெற்றுக் கொண்டு, அவ்வையார் செல்லும்போது, பொழுது நன்றாக இருட்டிவிட்டது. 

“ஐயோ, இந்த நேரத்தில் அவ்வையார் தனியாக செல்லுகிறார்களே, கூட நீங்கள் செல்லுங்களேன்” என்றாள் கதலி. 

வானவரையன் பாரியைப் பார்த்து, “நானும் போகட்டுமா, மன்னவா” என்று கேட்டான். 

“இல்லை தளபதி, நீ போகவேண்டாம்” என்றார் அவர். 

“என்ன கோபமோ, பாரி மன்னருக்கு” என்று பயந்து கொண்டேயிருந்தாள் கதலி. 

அவ்வையார் மலையை விட்டு இறங்கி, காட்டு வழியே சென்று கொண்டிருக்கும் போது, ஒரு காவலன் கூட அவர் துணைக்குப் போகவில்லை. 

மடமட வென்று பின்னால் ஒரு புரவி ஓடிவரும் சத்தம் அவருக்குக் கேட்டது. 

எந்தப் புரவியென்று திரும்பிப் பார்த்தார் அவ்வையார். 

வேலும் கையுமாக ஒரு வீரன் அதிலே உட் கார்ந்திருந்தான். 

“ஏ! கிழவி, கையில் என்ன? கொடு அந்தப் பையை” என்று வேலைக் காட்டினான். 

“அடப்பாவி! பறம்புக்கு பகலில் மட்டும் தான் அரசா? இரவிலே அரசு இல்லையா? யார் நீ?” என்று கேட்டார், அவ்வையார். 

“எதுவும் பேசாதே, அதை என்னிடம் கொடு” என்று பறித்துக் கொண்டான், அவன். 

பறித்துக்கொண்டு, புரவி திரும்பி ஓடுவதைப் பார்த்தபடி நின்ற அவ்வை, “ச்சீ பாரியுடைய நாட்டிலேயா இவ்வளவு திருட்டும் கயமையும் அவலமும்…? பாரி! பாரி!” என்று கூவியபடி, மீண்டும் மலையில் ஓடினார் அவ்வை. 

பாரி அங்கே தூங்கவில்லை. மண்டபத்திலேயே நின்று கொண்டிருந்தார். 

“பாரி மன்னா! உனக்குப் பகலில் தான் செங்கோலா? இரவில் உனக்கு செங்கோல் இல்லையா?”

“ஏன்?” 

“நான் போகின்ற வழியில் நீ கொடுத்த பொற் கிழியை, ஒரு திருடன் பறித்தானே! இது உனக்கு வெட்கமாக இல்லையா? எங்கே நல்லரசு இல்லையோ அங்கு தானே கள்வர்கள் மலிவார்கள். நீ நல்லரசு நடத்தவில்லை என்று நிரூபிக்கப்படுகிறது” என்றார் அவ்வை. 

“ஆமாம்! நான் நடத்தவில்லை நல்லரசு. நீங்கள் இங்கே இருந்து அந்த அரசை எப்படி நடத்த வேண்டும் என்று கூற வேண்டும். அல்லவா?” என்றார் பாரி. 

“நான் இங்கே இருக்க முடியாது!”

“நீங்கள் இங்கே இருக்க முடியாது என்றால், இதுதான் நடக்கும்” என்றார் அவர். 

“நீ ஏதோ, மனதில் களவு வைத்துப் பேசுகின்றாய். இந்தத் திருட்டு நடந்ததற்குக் காரணம் என்ன? யார் திருடியது என்று உன்னால் கண்டு பிடிக்க முடியுமா…?” என்று கேட்டார் அவர். 

“கொஞ்சம் இருங்கள் தாயே” உள்ளே ஓடினார் பாரி. திரும்பி அவர் வந்த போது பார்த்தாள், வேலும் கையுமாக அதே அதே திருடன் நின்று கொண்டிருந்தான். 

“பாரி, நீயா! என்னிடம் திருடியது, ஏன்? உன்னிடம் இல்லையென்றால் கொடுக்காமலேயே அனுப்பி இருக்கலாமே… ஏன் திருடினாய்?” என்று கேட்டார் அவ்வை. 

“இல்லை, திருடினால்தானே நீங்கள் திரும்ப வருவீர்கள் என்பதற்காகத் திருடினேன்” என்றார் வள்ளல் பாரி 

சிரித்தார் அவ்வையார். 

“எங்கே அன்பு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றதோ அங்கேதான் மனித உயிர்கள் நீண்ட காலம் வாழ முடியும். நான் இங்கேயே இன்னும் சில நாட்கள் இருந்துவிட்டு விடை பெறுகிறேன்!” என்று அங்கேயே உட்கார்ந்தார் அவ்வையார். 

உட்கார்ந்த அவரை, கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு போனாள், கதலி 

“எங்கே அம்மா?” என்று கேட்டார் அவ்வையார். 

“என்னுடைய இல்லத்திற்கு” என்றாள் கதலி. “நான் இந்த மாளிகை மண்டபத்திலேயே இருக்கிறேன். இந்த விருந்து எனக்கு ஒத்து வரும். நாளைக் காலையில் மன்னவன் மனம் மாறினால் நான் உடனே திருக்கோயிலூருக்குப் போக வசதியாக இருக்கும்” என்றாள். 

அவ்வையை அங்கு விட்டு விட்டுச் செல்வதே கதலிக்கு கவலையாக இருந்தது. 

வானவரையன், “நாளை நானும் கூடப் போகிறேன். திருக்கோவிலூரில் அவ்வைப் பிராட்டியாரை விட்டு விட்டு வருகிறேன்” என்று வாக்குறுதி அளித்த பிறகுதான் கதலி தன் இல்லம் சென்றாள்.

மன்னவன் பாரிக்கு, ஒரு மன நிம்மதி. அன்றைய இரவை அவ்வையார். அங்கேயே கழிக்கிறார் என்பதிலே…. 

அதிகாரம்-8

நாடெல்லாம் மாதம் மும்மாரி என்றால் நாட்டிலுள்ள புலவர்களின் நாவெல்லாம் நாளுக்கு மூன்று முறை “பாரி பாரி பாரி” என்று கூறிக் கொண்டே இருந்தன. 

எவ்வளவு காலத்திற்குத்தான் இந்தப் புகழை மற்றவர்கள் தாங்கிக் கொள்ள முடியும்? தங்களுக்கு இல்லாத புகழ் மற்றவர்களுக்கு வரும்போது, அந்தத் தகுதி உடையவர்கள் தான் அவர்கள் என்றாலும், தகுதியற்றவர்கள், அவர்கள் மீது ஆத்திரப்படுவது இயற்கை. 

ஆனால் மாமன்னர்களாக வாழ்ந்த சேரரும் சோழரும் பாண்டியரும் ஒரு மலையவேளைப் பற்றி, புலவர்கள் பேசுகிறார்கள், அவன் மீது இவ்வளவு பாடுகிறார்கள், நாட்டு மக்கள் அனைவருமே அவனைப் போற்றிப் புகழ்கிறார்கள் என்று எண்ணி யெண்ணி நொந்தார்கள். 

வில்லும், புலியும், கயலும் பறக்கும் நாடுகள் இப்படி ஒரு மானக்கேட்டை எப்படித் தாங்கிக் கொள்வதென்று முதன் முதலில் மடல் அனுப்பியவன் பாண்டிய மன்னன். காரணம், பாண்டிய நாட்டின் உட்பகுதியாகத்தான், மலையவேள் பாரி மன்னன் மலைநாடு இருந்து வந்தது. 

பாண்டியனே, சேரனுக்கு ஒரு மடலும், சோழனுக்கு ஒரு மடலும் தீட்டினான். 

சேரன் அதனைக் கண்ணுற்று, ஒரு மடல் தீட்டினான். 

இரண்டு பேருடைய மடல்களைக் கண்ட பிறகு. ஏற்கனவே உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்த சோழனின் பொறாமை உணர்வு தலை தூக்க ஆரம்பித்தது. 

“மீண்டும் பாரி தலைவனென உயர்ந்து விடுவானானால் எவ்வளவு ஞானம் பெற்ற முனிவனும் கூட தாங்கிக் கொள்ள மாட்டானே! என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? படையெடுப்பைத் தவிர வேறு வழியில்லை” என்று முழங்கினான் சோழ மன்னன். 

எவன் இதுவரை உள்ளத்துக்கு உள்ளேயே மூடி மூடி வைத்தானோ, அவனே இப்போது துடித்தான். 

நீண்ட நாட்களாகவே இப்படி வெடிக்க வேண்டுமென ஆசை கொண்டிருந்தான் பாண்டியன். அவனுக்கு தூபம் போட்டு கொண்டிருந்தவன் சேரன். 

ஆனாலும், அதற்குச் சம்மதம் சொல்லாமல் இருந்தது சோழன்தான். அந்தச் சோழனும் இப்போது சேர்ந்து விட்டதால், படையெடுப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது. 

“செங்கணான், நாம் பறம்பு மலையின்மீது படையெடுக்கிறோம்” என்றான் சோழன். 

“நல்லது மன்னவா” என்று அந்த ஆணையை ஏற்றுக் கொண்டான், செங்கணான். 

ஏற்றுக் கொண்ட மாத்திரத்திலேயே அவனது மனதில் சுருக்கென்று தைத்தது, அங்கே இருக்கின்ற தளபதி தன்னுடைய மைத்துனன் அல்லவா என்று. 

ஆனால், போர் என்று வரும்போது, சொந்த பந்தங்களைப் பார்க்க முடியாதே ? போர்க்களத்தில் ஒப்பாரி வைக்க முடியாதே ? மன்னவன், “போர் !” என்றால், “நடத்துகிறேன்” என்று சொல்ல வேண்டியவன் அல்லவா தளபதி! 

அப்படியே சொல்லி விட்டான் செங்கணான். 

“பறம்பு மலையின் மீது போர் என்றால் நாம் தனியாகவே தொடுத்தால் வெற்றி நம் கையில்தான். ஆனால், இதிலே பாண்டியனும் சேரனும் சேர்ந்திருக்கின்றார்கள். போர் என்று படைகள் போனால், மூன்று நாழிகைகளில் பறம்பு மலையைப் பிடித்து விடலாம். அவ்வளவுதான்! சில நாழிகை வேலை தான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் சோழன். 

நாழிகை ஆனாலும், நாளானாலும், ஆண்டுக் கணக்காகவே ஆனாலும், அதற்கு ஆனாலும், அதற்கு உடன்பட்டு போரை நடத்தவேண்டியவனே தளபதி. “மன்னவா! நீங்கள் எப்படி ஆணையிடுகிறீர்களோ அப்படியே நான் நடக்கத் தயார்” என்றான் செங்கணான். 

“ஆணை என்ன? இதுதான். எப்போது புறப்படப் போகிறோம் என்பதற்கு காலநேரம் தேவையில்லை. போருக்குப் போகிறவர்கள் கால நேரம் பார்த்தாக வேண்டும் என்றாலும், இதிலே காலநேரம் தேவையில்லை. காரணம், வெற்றி நமக்குத்தான் என்ற முடிவோடு புறப்படுகிறோம். அங்கே போய்ச் சேரும் முன்பே வெற்றி வழியிலேயே வந்தாலும் வரும்” என்று சிரித்தான் சோழ மன்னன். 

செங்கணானுக்கு உள்ளூர ஒரு திகைப்பு. ‘எவ்வளவு உன்னதமான நண்பனாகப் பாரி மன்னனுக்கு விளங்கினார் நமது சோழ மன்னர். அவருடைய மனமே இப்படி ஆகிவிட்டதே? தன்னை விட ஒருவன் உயர்ந்து வருகிறான் என்றால், சாதாரணமான மனிதர்கள் மட்டுமல்ல, சக்கரவர்த்திகளே கூட அப்படித்தான் மாறுவார்கள் போல இருக்கிறது’ என்று, எண்ணி எண்ணி ஆச்சரியப் பட்டான் செங்கணான் 

முதலில் வஞ்சிப் படை உறந்தைக்கு வருவது என்றும், இரண்டு படையும் சேர்ந்து, மதுரைக்குச் செல்வதென்றும்,மூன்று படைகளும் சேர்ந்து பறம்பு மலையை முற்றுகை இடுவதென்றும் முடிவாயிற்று. 

இந்த மூன்று படைகளுக்கும் பொதுத் தளபதியாக யாராவது வேண்டாமா? 

வேண்டும் என்று சோழன் கருதினான். 

சோழன் யாரை விரும்புகிறானோ. அவனையே வைத்துக் கொள்ளலாம் என்று சேரனும் பாண்டியனும் அவனுக்கு மடல் எழுதினார்கள். 

மூவேந்தருக்கும் ஒரு தளபதியாக செங்கணான் நியமிக்கப்பட்டான். 

செங்கணானை நியமிக்கவேண்டும் என்பது தான் சோழ மன்னனுடைய விருப்பமாகும். 

செங்கணானின் திறமையில் அவனுக்கு இருந்த நம்பிக்கை மட்டுமல்ல காரணம். ‘இந்தக் களத்தில் அவன் எப்படி நடந்து கொள்கிறான்? சோழ நாட்டிற்கு விசுவாசமாகவா? இல்லை, தங்கையை மணம் முடித்துக் கொடுத்த பறம்பு மலைக்கு விசுவாசமாகவா’ என்று அறிந்து கொள்ள அவன் விரும்பினான் 

ஆனால், செங்கணான், மிகவும் உறுதியாகவும் நேர்மையாகவும், ‘எங்கே நான் தளபதியோ அங்கே தான் விசுவாசம்’ என்று முடிவுகட்டிக்கொண்டான். 

முக்கொடி தாங்கிய, சேரநாட்டுப் படைகள் கடல் அலையென உறந்தைக்கு வந்து சேர்ந்தன. இரண்டு கடல்கள் சங்கமித்தது போல் இரண்டு நாட்டுப் படைகளும், மதுரைக்கு வந்து சேர்ந்தன. மதுரையில் மூன்றும் ஒன்றாகக் கலந்தவுடனேயே, பாரி மன்னருக்கு ஒரு தூது அனுப்பப்பட்டது. 

மலையிலே பாரி, மூவேந்தரையும் அவமானப்படுத்தும் வகையில் பலமுறை நடந்து கொண்டதாகவும், ஆயினும் அதுவரையில், தாங்கள் பொறுத்துக் கொண்டிருந்ததாகவும், இனி பொறுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், தாங்கள் மூவரும் படை எடுத்து வருவதாகவும், உடனடியாக, அவர் தன் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், அந்த மடல் கூறிற்று. 

மடலைக் கொண்டு வந்த தூதுவன், கையைக் கட்டிக்கொண்டு, பாரியைப் பார்த்துக் கொண்டு நின்றான்! அவனும் முன்னாலே பாரியிடம் ஏதாவது இபற்றானோ என்னவோ! 

அவனுடைய கண்கள் கண்ணீரைச் சிந்தி இந்த மலையின் மீதா படையெடுப்பு? இந்த மலை யாருக்கு என்ன பாவம் செய்தது? எதுவும் செய்யவில்லையே! வாரி வாரிக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் செய்யாத, எந்தப் பாவத்தையும் அறியாத, இந்த உன்னத மலைக்கு, இந்தப் போரா ? யுத்தகளமா? இரத்தக் களறியா ? என்றெல்லாம் மன்னவன் எண்ணுவதற்கு முன்னாலேயே எண்ணியவன், மடல் கொண்டு வந்த தூதுவன். 

மடலைச் சற்று உரக்கப் படித்தான் மாமன்னன் பாரி! கேட்டுக் கொண்டிருந்தான், வானவரையன்.

“படையெடுப்பா? நம் மீதா? நல்லது மன்னவா. வெகு நாட்களாகத் தூங்கிக் கிடந்த வேலுக்கு, வேலை வரவேண்டும் என்பது மூவேந் தரின் விருப்பம்போலும். வேல் தாங்கிய, வாள் தாங்கிய வீரர்கள் நம்முடைய வீரர்கள். அவர்கள் என்றும் எதற்கும் அஞ்சியது இல்லை. மரணமே வருவது ஆயினும் மானத்தை விட்டுவிடச் சம்மதிக்க மாட்டார்கள், மலை வாழ் மக்கள். 

“பாரியுடைய பறம்பு மலை, அள்ளிக் கொடுத்த அணைத்த மலை! மலை! அனைவரையும் வெள்ளம் போல் வந்தவர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்த மலை! உள்ளம் கனிய, உதடு சிரிக்க கள்ளம் கபடமின்றி, உலகத்தை வரவேற்ற மலை ! 

“இந்த மலைக்கு ஒரு கேடு என்றால், இந்த மலை நாட்டு தேவதை அவர்களைக் கவனித்துக் கொள்வாள். அந்த தேவதையுடைய தலைமையிலே தான், நாம் அந்தப் படைகளைச் சந்திக்கின்றோம். வானவரையன் மிகச் தளபதி சிறியவன் தான். சாதாரணமானவன் தான்! ஆனால், வருகின்ற படை எவ்வளவு பெரியதாயினும் அங்கே, அவனுடைய சடலம் ஊர்வலம் போகுமே தவிர அவனுடைய சடலத்தைக் காணாமல் அந்தப் படை இந்த மலையின் மீது ஏற முடியாது” என்று சூளுரைத்தான். 

“அறிவேன், வானவரையா! ஆனால் நான் யாருக்கும் பகையாக இருந்தது இல்லை! யாரையும் கெடுத்தது இல்லை! எந்த நாடும் அழிய வேண்டும் என்று விரும்பியதில்லை! இந்தப் போர் வந்தே தீருமானால், அதைச் சந்திக்க வேண்டியவர்களிலே முதலானவன் நான்தான். 

“நீ இதுவரையில் ஓய்வு எடுத்தது போதும். நம்முடைய படைகளைத் திரட்டு, அவரவர் குடும்பத்தாரிடையே சொல்லி விட்டு, மலையை விட்டு கீழ் இறங்கு. அனைவரும் மலையைச் சுற்றிலும் நிற்குமாறு ஆணை இடு” என்றார் பாரி மன்னர். 

தளபதி தலை தாழ்ந்து வணங்கிச் சென்ற பிறகு, கலங்கினார் பாரி. கடன் பட்டோர் நெஞ்சம் போலக் கலங்கினான். தோற்றுப் போவோமோ என்ற கவலையால் அல்ல, கெடுதல் எதுவும் செய்யா மல் நல்லதையே செய்து கொண்டிருக்கும் ஒருவனுக் குக் கூட இந்த இடையூறுகள் வந்துதான் தீரும் என்றால் மக்கள் நல்லது செய்வதற்கே அஞ்சுவார்களே என்றே அவர் சிந்தித்தார். மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் நாம் என்ன தீங்கு செய்தோம்? 

சரி, நீண்ட காலம் ஒருவன் உன்னதமான புகழில் வாழ்ந்து கொண்டிருப்பானானால், அவனுடைய முடிவு இப்படித்தான் வரும் என்று அவரும் முடிவு கட்டினார். 

கை தட்டினார். அங்கவையும் சங்கவையும் வந்தார்கள். 

“அம்மா! மலையின் மீது போர் வருகிறது. மூவேந்தரும் போர் தொடுத்து இருக்கிறார்கள். நான் உங்களைக் கபிலர் மகா முனியிடம் ஒப்படைக் கிறேன். 

“போரின் முடிவு நன்றாக இருக்குமானால், நீங்கள் இந்த மலைக்கு திரும்பி வரலாம். இல்லை, அது தவறாக இருக்குமானால், நீங்கள் அவருடனேயே வாழுங்கள். அவர் எப்படி ஆணையிடுகிறாரோ, அப்படியே நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்” என்றார் பாரி. 

கலக்கத்தோடு “அப்பா” என்றாள் அங்கவை. 

“இதிலே பேசுவதற்கு என்னம்மா இருக்கிறது? இதுதான் நடந்து தீரப் போகிறது என்று முடிவான பிறகு அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று தீர்மானித்து ஒரு முடிவு கட்டுவதுதான் அறிவாளிகளுடைய வேலையாகும். அதைத்தான் நானும் செய்கிறேன். 

“கபிலரோடு உங்களை மலையை விட்டுக் கீழே இப்போதே அனுப்புகிறேன். பகைவர்களுடைய படை மலையை முற்றுகை இடுவதற்கு முன்பே நீங்கள் போய்விடுவதுதான் உங்களுடைய மானத்திற்கும், இந்த மலையுடைய மரியாதைக்கும் உகந்தது ஆகும்” என்றார் பாரி. 

“இல்லை அப்பா, உங்களுக்கு ஏதேனும் ஒரு முடிவு என்றால் அதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்” என்றாள் சங்கவை. 

“இவையெல்லாம் எந்த நல்ல மக்களும் பேசக் கூடிய விஷயங்கள்தான். ஆனால், இப்படிப் பேசுவதால் மட்டுமே நீங்கள் அதைச் செய்துவிட வேண்டும் என்று நான் விரும்ப மாட்டேன். 

“பாரியுடைய குலம் வாழ்கிறது என்று சொல்வதற்கு இரண்டு பெண் மக்கள் தான் இருக்கிறார்கள். அவர்களை ஓர் இல்லத்தில் சேர்த்து, கபில மகாமுனி ஒரு விளக்கு ஏற்றி வைப்பாரானால் பாரியுடைய வம்சம் தழைத்தோங்கி நிற்கும். பாரியுடைய முடிவு எப்படி நேருமானாலும், அவன் பேரைச் சொல் வதற்கு பெண்கள் வம்சமாவது இருக்கட்டுமே! நீங்கள் தயாராகுங்கள்! கபில முனியை அழைத்து நான் பேசுகிறேன்” என்றார் பாரி. 

கண்ணீரோடு அவர்கள் தங்களுடைய உடமைகளை எடுக்கப் புறப்பட்டார்கள். 

அழைப்பின் பேரில் கபில மகாமுனி உள்ளே வந்தார். 

“கபிலரே! எல்லாச் செய்திகளும் உங்களுக்குத் தெரியும். இது பொறாமையால் வந்த படையெடுப்புத் தான் என்றாலும், இதனைத் தாங்கித் தீரவேண்டியவனே நான். இந்தப் படையெடுப்புக்கு அஞ்சி நான் மலையை விட்டுக் கீழே இறங்கி ஓட முடியாது. படையெடுப்பு வந்து விட்டதே என்பதற்காக தூது விட்டு சரண் அடையவும் முடியாது. ஆகவே, நான் அடுத்து நடக்க வேண்டிய காரியத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். 

“போரின் முடிவு எதுவாயினும், என் பெண் மக்களின் எதிர்காலம் உங்கள் கையில். அந்த இரண்டு பேர்தான் என் வாழ்க்கையில் நீக்க முடியாத பந்தங்கள்! அவர்களைக் கண் போல் காத்து வந்து, எந்தக் காலத்தில் எது செய்ய வேண்டுமோ அதனைச் செய்து கொடுத்து, அவர்களுடைய எதிர் காலத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்றார் பாரி. 

மூவேந்தர்கள் ஏன் படையெடுக்கிறார்கள் என்றெல்லாம் கபிலமுனி கேள்வி தொடுக்கவில்லை. அவர் அறிவார், என்றேனும் இது நடக்கப் போகிறது என்று. 

ஏனென்றால், சேரனையும் பாண்டியனையும் பார்த்து அவரும் இதே பாடலைப் பாடி இருக்கிறார். ஒளவையும் இதே பாடலைப் பாடியிருக்கிறார் பாரியைப் பற்றிப் பாடாத புலவனே இல்லை அல்லவா! என்றேனும் ஒருநாள் இம்மூவேந்தரும் இந்த முடிவுக்கு வருவார்கள் என்று எண்ணியிருந்தவர் அல்லவா கபில மகாமுனி! 

“நல்லது பாரி, நீ கலங்காதே! மரணமே வருமானாலும், மகத்தான பெரும் புகழை பாரிக்கு ஈட்டித் தரும். உன் மக்களைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை” எனச் சொல்லி, அப்பொழுதே, தங்களுடைய உடமையோடு வந்த அங்கவையையும், சங்கவையையும் கைத்தாங்கலாகப்பற்றிக் கொண்டார். 

“அப்பா!” என்று கதறினாள் அங்கவை. 

பாரி கலங்கவில்லை. கண்ணீர் வடிக்கவில்லை.

”மகளே, நீங்கள் வாழ்கிறீர்கள் என்ற எண்ணம் ஒன்றே எனக்குப் போதும். என்னுடைய மரணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. மூவேந்தரையும் நான் வென்றுவிடுவேன் என்று, வீரம் பேசுவது சுலபம். ஆனால் வெல்லக்கூடிய நிலையிலே, அவர்களுடைய படைபலம் தளர்ந்ததும் இல்லை. நம்முடைய படைபலம் வளர்ந்ததும் இல்லை. ஒரு மலை எவ்வளவுக்குத் தாங்குமோ அவ்வளவுக்குத் தான், படையை நான் வைத்திருக்கிறேன். மூவேந் தரும் கடல் அலைபோல் வைத்திருக்கிறார்கள். எதிரி யுடைய பலத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது. இது இறுதிப் போர் என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. நீங்கள் அமைதியாக இருங்கள். முனிவரிடம் அன்பாக இருங்கள். இனி நாங்கள் ஏழையாகவே வாழவேண்டியிருக்குமோ என்று கண்ணீர் வடிக்காதீர்கள். எப்படியும் நீங்கள் வாழ்வதற்கு ஒரு வழி, நான் உங்களுக்குச் சொல்லியே வந்திருக்கிறேன். ஏனென்றால், எந்த நாளிலேயும் யாருக்கும் எந்த முடிவும் வரலாம் என்பதனை நானும் அறிந்து இருக்கிறேன், உங்களுக்கும் கற்றுக் கொடுத்தேன். ஆ! புறப்படு! ஆ! புறப்படு!” என்றார், பாரி. 

நின்று கொண்டேயிருந்தார்கள், அங்கவையும் சங்கவையும்.”படை, வரும் முன்பே புறப்படுங்கள்” என்றார். பாரி. 

அவர்கள் விடைபெற்று வெளியே சென்றபோது பாரியுடைய இதயம் வெடித்துப் பூமியிலே வந்து விழுந்தது போல் இருந்தது. அதைத் தேடுகிறவர் போல பூமியையே பார்த்து முன்னும் பின்னுமாக அவர் நடக்கத் தலைப்பட்டார். 

இங்கே பாரி நடந்துகொண்டிருந்தபோது அங்கே வேங்கை போல சீறிக் கொண்டிருந்தாள் கதலி. கணவரிடம் இருந்து செய்தியை அறிந்து, ‘”அப்படியா, படை வருகிறதா? மூவேந்தர் படையா? என் அண்ணன் தளபதியா, நன்று! நன்று! அவர் கள் வரட்டும் இங்கே. பாரி படை தோற்றுப் போகு. மானாலும், அண்ணன் களத்திலே எப்படி இருக் கிறார் ? ஆடவராக நின்று தன் மைத்துனனை எப்படிச் சந்திக்கிறார் ? அள்ளி அள்ளிக் கொடுத்த பாரியை, அவர் கொல்லுவதற்கு, எப்படித் துணிகிறார் ? என்பதை நான் பார்க்கிறேன். அந்த மூவேந்தருடைய விற்கொடியும், புலிக்கொடியும் மீன் கொடியும் இந்த மலையின் மீது பறந்து மாமன்னர் பாரியை நாங்கள் கொன்றுவிட்டோம் என்று சொல்லுமானால், அவர்கள் உலகத்தின் பழி பாவங்கள் முழுவதற்கும் ஆளாவார்கள். எனக்குத் தெரியும், வரட்டும் இங்கே!” என்று முழங்கினாள், கதலி. 

அவள் போட்ட ஓசையில் எங்கே அவள் இதயம் வெடித்து விடுமோ என்று பயந்தான் வானவரையன். 

“கதலி, சற்று மெதுவாகப் பேசு. உனக்கு உடல் நிலை சரியில்லை. சற்று மெதுவாகப் பேசு” என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டான். 

இனி “இனி உடலைப் பற்றி என்ன கவலை? மானத்தைப் பற்றியே கவலை. என் மானம், உங்கள் மானம் அல்ல. இந்தப் பறம்பு மலையின் மானம். இது என் தாய் வீடு, என் தாய் பாரி. இதைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை. நானும், நீங்களும் இது வரையிலே வாழ்ந்த வாழ்க்கை, உலகத்தில் உள்ள தெய்வங்கள் கூட வாழ்ந்து இருக்க முடியாது. அந்த அற்புதமான வாழ்க்கையை நான் வாழ்ந்து முடித்துவிட்டேன். இனி நான் காண வேண்டியது, உலகம் புகழக் கூடிய மரபா? மானத்தில் ஒருவனை உலகம் புகழுமானால், அவர் வாழ்ந்ததே நியாய மாகிவிடும்! தைரியமாக இருங்கள்!” என்று அவனை தைரியப்படுத்தினாள் கதலி. 

அவன் சிரித்தான். 

“மரணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு தானே, ஒருவன் தளபதி ஆக முடியும். கதலி, நான் கவலைப்படவில்லை. உன் அண்ணனைப் போர்க் களத்தில் சந்திக்கும்போது, மைத்துனனாக சந்திக்க மாட்டேன். ஒரு நாட்டினுடைய தளபதியாக நான் நின்று, இன்னொரு நாட்டின் தளபதியை வரவேற்பது போல், வரவேற்பேன்” என்றான். 

“நன்று! அப்படிச் சொல்லுங்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும். அதை நான் செய்வேன், இந்த மலை நாட்டின் தளபதி நீங்கள் மட்டுமல்ல. இனி நானும் தான்” என்று கதறினாள். 

“கதலி!” அவனுடைய குரல் ஓசை, அந்த மலை இனம் முழுவதையும் எதிரொலித்தது! அந்த ஓசைக்கு மேலே மற்றொரு ஓசையும் கேட்டது. 

அதுதான் மூவேந்தருடைய படை வரும் ஓசை! 

அதிகாரம்-9

கழுத்து நிறைய சங்கு மாலைகள்! காதிலும் சங்குத்தோடு! சுருட்டிவிடப்பட்ட கூந்தல்; மார்புக்குக் கச்சை. கீழே ஒரு சிறிய ஆடை- இவற்றோடு இருந்த பாரியுடைய மகளிர், பாரிமலைப் பெண்டிர் அனைவரும் கையில் வேல் ஏந்தி நின்றார்கள். 

“மடிவதாயின் அனைவரும் மடிவோம்; வாழ்வதாயின் அனைவரும் வாழ்வோம்”; என்பதே அவர் களது குரலாக இருந்தது. 

பதினாறு ஆண்டுகள் கூட செல்லாத இளம் பருவப் பிஞ்சுகள் எல்லாம் கையில் வேலேந்தி நின்ற காட்சி, பாரியை மெய்சிலிர்க்க வைத்தது. 

“உங்களை நான் வளர்த்தது இந்தக் களத்தில் மடிய வைக்கத்தானா?” என்று அவர் கேட்டார். 

“மடிவதாயின் அனைவரும் மடிவோம்; பாரியுடைய பறம்பு பாலையாகக் கிடக்கும்போது, அந்த பாலைவனத்தின் மீது மூவேந்தர் படை வரட்டும்” என்று அவர்கள் முழங்கினார்கள். 

அத்தனை பேரையும் பார்த்தபடியே பாரி மன்னன் மலையின் உச்சியில் நின்று, அடிப்பரப்பைப் பார்த்தார். அடிப்பரப்பிலே அவரது படையும் இருக்கிறது. அவர்கள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தார்கள். மூவேந்தர் படை வருவது கண்ணுக்குத் தெரிந்தது. அந்தப் படை மலையின் அடிவாரத்தில் வந்து சேரும்போது, அதனுடைய கடைசிப் பகுதி, மதுரையிலே இருக்கும் என்கின்ற அளவுக்கு மிகப் பிரமாண்டமானதாக இருந்தது. அவ்வளவு மாபெரும் படையைச் சந்தித்தும் கூட, ஒரு முடிவுக்கு வந்து விட்டவர்கள், அந்த முடிவின் மீதே கண்ணாக இருப்பார்களே தவிர, அதன் மீது புதிய கேள்விக் குறிகளைப் போட மாட்டார்கள். அப்படித்தான் பாரி இருந்தார். 

மலையை நோக்கிப் படைகள் வந்தன. 

பாரியின் படை அவற்றை எதிர்கொண்டு வியூகம் வகுத்து நின்றது. 

“என்ன? உங்கள் மன்னர் சரண் அடைந்து விட்டாரா? இல்லையா?” என்பது போல பாதையில் மூவேந்தரின் தளபதி செங்கணான் தேர் நேரே வந்து நின்றது, நின்று கொண்டு இருந்த வானவரையனின் தேருக்கு எதிரே. 

“கேள்வி கேட்க வந்திருக்கிறீர்களா மைத்துனரே?” என்று கேட்டான், வானவரையன்.

“இல்லை; மைத்துனர் எப்படி இருக்கிறார் என்று பார்த்துப் போக வந்தேன்” என்றான் செங்கணான். 

“மலைநாட்டுக்கு விசுவாசமாக, பிறந்த தாயகத்துக்கு உறுதியாக, நெஞ்சிலே வஞ்சமில்லாமல் கள்ளம் கபடம் இல்லாமல், பிறர் மலையை அபகரிக்காமல்,  உள்ளத்தில் உயர்ந்தவனாக இருந்து கொண்டிருக்கிறாரே, உங்கள் மைத்துனர், நீங்கள் எப்படி?” என்று கேட்டான் வானவரையன். 

“முடிவு தெரிந்துமா ?” என்று சிரித்தான் செங்கணான். 

“தெரிந்துதானே களத்திற்கு வந்து இருக்கிறேன்” என்றான் வானவரையன். 

“முடிவு தெரியும் அல்லவா?” என்று கேட்டான் செங்கணான். 

”ஆம்!” என்று கம்பீரமாகச் சிரித்தான் வானவரையன். 

“நான் கலங்குகிறேன், என் தங்கையின் வாழ்வு கருதி” என்றான் செங்கணான். 

“அவள் கலங்குவது, மலை நாட்டின் மலைய வேள் பாரியின் வாழ்வு பற்றி” என்று சிரித்தான், வானவரையன். 

“இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள்” என்ற தூரத்தே நின்ற சோழனுக்குத் தோன்றிற்றோ என்னவோ! “ம்” என்று சங்கு முழங்கினான். 

செங்கணான் வில்லை எடுத்தான். 

தானும் வில்லை எடுத்தான், வானவரையன். 

இருவருடைய கணைகளும் மாறி மாறிப் பறந்தன! வானவரையனது கணை நேராகவே சென்றது. நேரிய மலைநாட்டு மகன் அல்லவா. நேருக்கு நேராகவே சென்றது! கீழேயும் மேலேயுமாகச் சென்ற செங்கணானுடைய கணை. கடைசியாக ஒன்று, வானவரையனுடைய கழுத்திலே பாய்ந்தது. 

“கதலி” என்ற வார்த்தையும், “மன்னா” என்ற வார்த்தையும் வெளிவந்தன. 

அப்படியும் ஒரு கணையை மீண்டும் செலுத்தினான்.  அடுத்த கணை அவன் மார்பில் புகுந்தது. புகுந்து வெளியிலே வந்தது. மார்பில் தான் புகுந்தது. கணை என்ற மனமகிழ்ச்சியோடு, அவன் தேரிலே இருந்து கீழே விழுந்தான். 

தேரிலே இருந்து அவன் கீழே விழுவதைப் பார்த்த படைகள் அத்தனையும் வெகுவேகமாக களத்திற்குள் புகுந்து போராட ஆரம்பித்தன! மூவேந்தர் படைகளோடு மோதின. மூவேந்தர் படைகள் மிகக் கடுமையாக எதிர்த்தன. 

அளவிலே பெரியதாக இருந்தாலும், உள்ளத்துறுதியிலே பெரியதாக இருந்த பாரியின் வீரர்களை சந்திப்பதில் அவர்களுக்கு கடினமாகத்தான் இருந்தது. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, இரவு வந்து விட்டது என்று அவர்கள் அமைதி கொண்டார்கள். 

அந்த இரவிலே, அவர்களுடைய சடலங்களை அவரவர்கள் எடுத்துப் போகலாம் என்ற போர் நியதிப்படி, மலையில் இருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் கீழே இறங்கி வந்தன. அந்த வண்டிகள் ஒவ்வொன்றும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, சடலங்களுக்கு இடையே தங்களுடைய உறவினர்களைத் தேடினர், வண்டியிலே தேடிய வந்தவர்கள். உறவினர்களில் வானவரையனது சடலம் ஒன்று. 

அந்த சடலத்தை ஏற்றிக்கொண்டு முதல் வண்டி பறந்தது. அந்த வண்டி மலையின் மீது ஏறிப்போகும் போது, அதை வரவேற்க கதலி தயாராக இருந்தாள். 

“ஐயோ! என் உயிரே, நீங்கள் மறைந்து விட்டீர்களா?” என்றெல்லாம் அவள் புலம்ப வில்லை. அவள் தன்னுடைய கணவனை எதிர் பார்த்தா அங்கு நின்றாள்? இல்லை. ஒரு சடலம் வரும். எவ்வளவு விரைவில் அது அது வருகிறதோ, அவ்வளவு விரைவில் தான் அடுத்த வேலையைப் பார்க்கலாம் என அவள் கருதினாள். 

அந்த சடலம். உள்ளே கொண்டு வந்து வைக்கப் பட்டது. அதன் மீது மலர் மாலைகள் சாத்தி, திரும்பிப் பார்த்தாள். 

பாரி மன்னர் நின்றார்! அப்படியே ஓடிவந்து சடலத்தைக் கட்டித் தழுவிக் கொண்டார். 

“கதலி, உன் மங்கலத்தை நீ இழந்ததற்கு, நான்தானே காரணம்” என்றார். 

“இல்லை, மன்னவா…என் மங்கலம், இன்னும் பலரது மங்கலம் பறிக்கப்பட்டதற்கு மூவேந்தரே காரணம், என்றும் மாறா பழி சுமக்கப் போகிறார்கள், இந்த மூவேந்தர்கள். உலகின் புகழ் சூழ்ந்த மூவேந்தர்கள், பழி சுமந்தது இந்த ஒன்றிலேதான் என்ற வரலாறு நடக்கப் போகிறது. இந்த மரணத்தில் நான் அஞ்சி விடவில்லை! ஏனென்றால், இந்த மரணத்தைத் தொடர்ந்து நாங்கள் வாழப் போகிறோம் என்று இருந்தால்தானே?” என்றாள். 

“என்ன செய்யப் போகிறாய் கதலி” என்று கேட்டார் பாரி. 

”ஒன்றுமில்லை” என்று தன் மகனை அழைத் தாள்! வாரி முடித்தாள். பொட்டு வைத்தாள். நகைகள் அணிவித்தாள். கையிலே வேலைக் கொடுத்தாள்! “ஏறி உட்கார், பொழுது விடியும் வரை அதிலே இரு. பொழுது விடிந்தவுடன் முதல் தேர் உன்னுடையதாக இருக்க வேண்டும்.”

“ஐயகோ! இந்த இளம் பிஞ்சையா நீ அனுப்பப் போகிறாய்?” என்று கெஞ்சினார் பாரி. 

“தந்தை இறந்து போனால், அடுத்து போக வேண்டியவன் மகனே! அந்த மகன் இல்லை யென்றால், தாய்” என்றாள் அவள். 

“இல்லை அம்மா! நான் போகிறேன் களத் திற்கு, இவன் உன் குலவிளக்காக நின்று என்றும் ஒளி வீசட்டும்” என்றார் பாரி மன்னர். 

“மன்னா! கணவன் இறந்து, மலையின் முடியும் முடிந்து – நீங்களும் அழிந்த பிற்பாடு எனக்கு என்ன குலம்? அதற்கு எதற்கு விளக்கு?” என்றாள் அவள். 

அவள் பேசப் பேச, பாரி அவள் கால்களிலேயே விழுந்து விடுவார் போல் இருந்தது. 

தாயகத்தின் மீதும், தன் மீதும் இவ்வளவு அன்பு செலுத்தும் ஒருத்தியை, அவர் பார்த்த படியே நின்று கொண்டிருந்தார். 

“மகளே! நான் பெற்ற மக்களைவிட, நீயே பெருமகள்; நீயே தலைமகள் ; நீயே என் குலமகள். பாரி மலையில் பறக்கும் கொடி தலைசாய்ந்து விட்டாலும், பாரி மலையில் பறந்த இந்தக் கொடியின் புகழும் பெயரும் என்றும் நிலைத்து இருக்கும். உனக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?” என்றார். 

“ஏதும் வேண்டாம் மன்னவா! உங்களுடைய முடிவு நேராமல், இந்த மலையைக் காப்பாற்ற கடைசியாக ஏதேனும் ஒரு வழியிருக்குமா என்று தான் யோசிக்கிறேன். அது சரணாகதி அல்ல! தூது விடுவதும் அல்ல. போர்க்களத்திலே எல்லாப் பெண்களையும் கொண்டு நிறுத்தி, முந்நூறு கிராமத்து மக்களையும் கொண்டு வந்து நிறுத்தி, ‘இவ்வளவு பேரும் அழிந்த பிற்பாடுமா இங்கே நீங்கள் ஆளப்போகிறீர்கள்?’ என்று யாராவது ஒரு புலவர் சொன்னால், மன்னர்களது காதில் ஏறாதா என்று பார்க்கிறேன்” என்றாள் அவள். 

பாரி மன்னர் சிரித்தார். 

“அவ்வளவையும் கேட்ட பின்னால்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார் பாரி மன்னர். 

“இல்லை, எனக்கு இருந்த சிறிய ஆசைதான் அது. அந்த ஆசையை வெளிப்படுத்தி, அடுத்து ஒருவரைக் கவனிக்கத் தயாராக இருக்கிறேன். மன்னா! உங்களை இழக்கப் போகிறேனே என்பது தான் எனக்குக் கவலையே தவிர, என் குலம் அழியப் போகிறதே என்பது அல்ல என் கவலை” என்றாள் அவள். 

“இல்லை அம்மா! நாளைப் போருக்கு நானே போகிறேன்’ என்றார் பாரி. 

“இல்லை, என் மகன் போவான், பின்னாலே நானும் போவேன். அதன் பிறகுதான் நீங்கள் போக வேண்டும்” என்றாள் அவள். 

பாரி மன்னர் அவளிடம் விடைபெற விரும்ப வில்லை. விடைபெற்றால், அவளை மரணத்திற்கு அனுப்புவதாக அல்லவா முடியும். அங்கிருந்து வெளியே நடந்தார். குளிர்ந்த அந்த மலையின் காற்று இப்போது கொதித்தது 

“நன்மை செய்தார்க்கு எல்லாம் இதே முடிவா? நல்லவர்க்கு எல்லாம் இதுதான் முடிவா?” என்று யாரோ, எங்கேயோ கேட்பது அவர் காதில் விழுந்தது. 

மன்னர் மாளிகைக்குள் நுழைந்தார். உலாவிக் கொண்டே இருந்தார். மறுநாள் பொழுது விடியும் வரை, அவர் உலாவிக் கொண்டே இருந்தார். 

அதிகாலையில், நேரே, கதலியின் வீட்டிற்கு மீண்டும் வந்தார். 

தேரிலே உட்கார்ந்து இருந்த சிறுவன் புறப்படும் போது, கீழே இறங்கி, மன்னரது காலில் விழுந்து, வணங்கி, வேலையும், வில்லையும், கணையையும் அவரிடம் கொடுத்து, திரும்பப் பெற்றுக் கொண்டு, “போகிறேன் மன்னவா!” என்று விடைபெற்றான். 

அவன் விடைபெறும்போது, “ம்! போய் வா!” என்றார் கம்பீரமாக. 

அப்போது அவள் அழவில்லை. பாரியும் கலங்க வில்லை. 

மலையின் அணில்கூட மூவேந்தரை எதிர்த்துப் போராடும் என்பதை அவர் கண்டார். 

“இனி என்ன? ஆனந்தமாக மரணத்தைத் தழுவலாம்” என்பதுபோல அவருக்குத் தோன்றிற்று. 

மகன் போவதைப் பார்த்துக் கொண்டேயிருந்து, பிறகு வீட்டிற்குள்ளே வந்தாள் கதலி. 

அந்த வீட்டின் வாசலை மெதுவாகத் தொட்டு வணங்கிவிட்டு, திரும்பி நடந்தார் பாரி. 

அடுத்து பாரியின் படைக்கு யார் தலைமை தாங்கி வருகிறார் என்று தூரத்தில் நின்று பார்த்தபடியே நின்றான் செங்கணான். 

தேர் வருவதும், தேருக்குப் பின்னால் புரவிகள் வருவதும் அவன் கண்ணுக்குத் தெரிந்தது. 

யாரது தேரில் என்று கூர்ந்து பார்த்தான். தேர் அவனை நெருங்கியபோதுதான் ஏழு வயதுச் சிறுவன் அதிலே அமர்ந்து இருப்பது தெரிந்தது. இவனா! இவனா தளபதி, என்று அவனுக்கு சிரிப்பு, திகைப்பு, கவலை, கண்ணீர் என்று ஒன்பது சுதிகளும் ஒன்று கூடிவந்தன. 

“தம்பி! நீயா நீயா வந்திருக்கிறாய்” என்று கேட்டான் அவன். 

“வேறு யார் வருவார்கள்? நான் தான் வந்திருக்கிறேன்” என்றான் இளஞ் சிறுவன். 

“உன் தந்தையே மடிந்த இடத்தில் நீயா  வெல்லப் போகிறாய்?” என்று கேட்டான் செங்கணான். 

“பல நேரங்களில் சிறு அணில் செய்கின்ற காரியத்தை பெரிய யானைகள் செய்ய முடியாது” என்றான் சிறுவன். 

“இவ்வளவு அழகாகப் பேசுகிறாயே, பால் மணம் மாறாத இந்தப் பருவத்தில், படுகளத்தில் நீ மடிந்து தான் தீரவேண்டுமா? உன் தாய்க்கும் இதுதான் விருப்பமா?” என்று கேட்டான் செங்கணான். 

”ஆம்! இந்த மலைக்காக, இந்த மலையினுடைய மானத்திற்காக, எங்கள் மாமன்னர் பாரிக்காக, அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்து போன அவர் கைகளுக்காக, நானல்ல என்னை விடச் சிறிய மழலைகூட உங்களை எதிர்த்துப் போராடும்” என்றான். 

“இல்லை, தம்பி. நீ போய்விடு. ஏதோ தவறாக உன்னை இங்கே அனுப்பிவிட்டார்கள்” என்றான் செங்கணான். 

சிரித்தான் சிறுவன். “பெரிய மனிதர்கள் கூட விவரம் தெரியாமல் பேசுகிறார்கள் என்பதை இப்போதுதான் நான் கண்டேன். இவ்வளவு திட்டவட்டமாகவும் தெளிவாகவும், தேரில் ஏறி, படைவீரர்கள் புடைசூழ இங்கே நான் வந்திருக்கிறேன். யாரோ தெரியாமல் அனுப்பி விட்டிருப்பதாக கதை சொல்கிறீர்கள். எடுங்கள் வில்லை, விடுங்கள் கணையை” என்றான் இளஞ் சிறுவன், 

தூரத்தில் இவர்களது உரையாடலைக் கவனித்துக்கொண்டு இருந்த சேர மன்னன், மெதுவாக சோழ மன்னனிடம் போய், “இவன் என்ன குலமுறை காட்டுகிறானா உங்களது தளபதி?” என்று கேட்டார். 

“இல்லை, என்னதான் குலமுறை கிளம்பினாலும், அவன், நடத்த வேண்டிய காரியத்தை நடத்தியே தீருவான்” என்றான் சோழ மன்னன். 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, இங்கே கணைகள் பறந்தன. பறந்த கணையில் மூன்றாவது கணையே, அந்த இளம் பிஞ்சு, இளஞ் சிறுவனின் உயிரைக் குடித்தது. 

“அம்மா! மன்னா!” என்ற குரலோடு அந்த இளஞ் சிறுவன் களத்திலே விழுந்தான். 

“தம்பீ” என்று கதறினான் செங்கணான். 

அவனைத் தம்பி என்று அழைப்பதா ? மருமகன் என்று அழைப்பதா எதுவுமே புரியவில்லை செங்கணானுக்கு. அவனோடு சமமான தளபதியாக அல்லவா மாண்டிருக்கிறான். 

கண்ணீரை அவனால் அடக்க முடியவில்லை. ‘தனக்கு மருமகனாக வரவேண்டியவன், இளம் பிஞ்சு, தன்னாலே கொல்லப்பட்டு விட்டதே’ என்று களத்திலேயே அவன் கண்ணீர் வடித்துவிட்டான். அதை மன்னர்கள் காணாமல் இருக்க மறைத்துக் கொண்டான். 

அப்படியே அந்த சடலத்தைத் தாங்கிய, ரதம் பட்டப் பகலிலேயே மலையின்மீது ஏறிச் சென்று கொண்டு இருந்தது! நூறு வீரர்கள் தொடர்ந்து ஓ! தளபதி திரும்பிப் போகிறார்! சென்றார்கள். படைகள் ஓடுகின்றன ! தோற்றுவிட்டன! என்று மூவேந்தர்களும் கொக்கரித்தார்கள். 

அந்த ரதம் நேரே ஓடிப்போய் அங்கே கதலி வீட்டு முன்னால் நின்றது. 

இரவில் மட்டுமே மகனை எதிர்பார்த்த கதலி, இப்போது பகலிலேயே தன் மகனுடைய சடலம் வந்திருக்கிறது என்று, அதனை வாரி எடுத்து, சில பூக்களை அவன்மீது வைத்து போற்றிப் புகழ்ந்து, ”மகனே! ஏழு வயதில் நாட்டுக்காக மாண்டவன் நீ ஒருவன்தான்” என்றாள். 

அந்த சடலத்தை வெளியிலே கொண்டுபோய் இல்லாமல் தன் வீட்டிலேயே புதைக்க மனம் புதைக்கப் போவதாகவும், அதன்மீது பாலை ஊற்றி பாரி மலையுடைய கொடியை அதன் மீது போட்டு, அதற்கு மரியாதை செய்யப் போவதாகவும் அவள் தனக்குத் தானே பேசிக் கொண்டாள். 

“பாரிக்கு இந்தச் செய்தியை சொல்லாவிடில் மன்னவன் கலங்குவான்” என்று கூட வந்திருந்த வீரர்கள் எல்லாம் கூறினார்கள். 

கதலி அன்றைய பொழுதுக்கே தான் தளபதியாகப் போவதாக முடிவு கட்டி கவசங்களை எடுத்து அணிந்து கொண்டாள். வில்லை எடுத்தாள். வேலை எடுத்தாள். அனைத்தையும் கையிலே தாங்கித் தேரில் ஏறி அமர்ந்தாள். எதிர்ப்பட்டான் ஒரு சந்நியாசி. “அம்மா! தங்கள் கையில் உள்ள வாளையும்,வேலையும் எனக்கு யாசகமாகத் தர வேண்டும். நீங்கள் வள்ளல் மலையைச் சேர்ந்தவர்கள், கேட்ட உடனேயே கொடுப்பவர்கள். அதைக் கொடுத்தால்தான் என் குழந்தை பிழைக்குமாம். தண்ணீரிலே வேலையும் வாளையும் அந்த நனைத்து அந்தத் தண்ணீரிலே ஏழு நாட்களுக்கு குளிப்பாட்டினால்தான், அந்தக் குழந்தை பிழைக்குமாம். மருத்துவர் சொல்கிறார். ஆகவே, அதைக் கொடுங்கள்” என்று கேட்கிறான். 

“போருக்குப் போகிற நேரத்தில், அந்த ‘வாளை’ கேட்க வந்திருக்கும் நீ யார்? கொடுக்க முடியாது என்று சொல்லவும் முடியாது இந்த மலையுடைய சட்டம் ஆயிற்றே! நான் கொடுத்தே தீர வேண்டியவள் ஆகவும் இருக்கிறேன். படை நடத்தி தீர வேண்டியவள் ஆகவும் இருக்கிறேன். நீ யார்?” என்று கேட்டாள் கதலி. 

“இல்லை! நான் ஒரு ஏழை ! என் மகன் சாகக் கிடக்கிறான். கொடுங்கள்” என்று கெஞ்சினான். 

கண்ணீரோடு வாளையும், வேலையும் அவன் கையிலே கொடுத்தாள், கதலி. 

அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டான் வழிப் போக்கன். தன்னை மறைத்து வந்த அங்கியையும் தாடியையும் எடுத்தான். 

அங்கே, பாரி மன்னர் நின்றார். 

“மகளே! மடிவெதென்றால், உனக்கு முன்னாலே நான் மடிய வேண்டும். உன் சடலத்தைப் பார்த்த பிறகு நான் மறையக் கூடாது” என்றார்.

கதலி ஓடினாள்! “மன்னா…” என்று கதறினாள். 

மாளிகைக்குள்ளே நுழைந்து, கவசங்களை அணிந்துகொண்ட உடனேயே, மூன்று சந்நியாசிகள் அவர் முன்னாலே எதிர்ப்பட்டார்கள். 

“மன்னன் வாழ்க! மாமன்னன் வாழ்க! பாரி மன்னன் வாழ்க!” என்றார்கள். 

“யார் நீங்கள்…?” 

“வெளியூரில் இருந்து வருகிறோம். நாங்கள் பரதேசிகள். எங்களுக்கு வாழ்க்கையில் எதுவுமே இல்லை.” 

“யாம் என்ன செய்ய வேண்டும் ?” 

“எங்களை எதிரிகள் சூழ்ந்து வருகிறார்கள். அவர்களைக் கொன்று அழிப்பதற்கு, உன் கையிலே உள்ள வேலையும், வாளையும் எங்களுக்கு யாசகமாக கொடுக்க வேண்டும்” என்றார்கள். 

“இந்த நேரத்தில் வந்து என்னிடம் கேட்கின்றீர்களே; நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லையே?” 

“நாங்கள் யாருமல்ல, வேறு ஊர் சந்நியாசிகள், துறவிகள், உலகத்தைத் துறந்தவர்கள்” என்றார்கள் அவர்கள். 

பெரும் போராட்டத்திற்குப் பிறகு, அந்த வாளையும், வேலையும், அவர்கள் கையிலே கொடுத்து விட்டு வேறு வாள் எடுப்பதற்கு உள்ளே திரும்பினான் பாரி. 

பின்னாலே இருந்து ஒரு வேல், அவன் மீது பாய்ந்தது. 

எந்தவிதச் சத்தமும் இல்லாமல் திரும்பிப் பார்த்தார் பாரி. 

“யார் நீங்கள் ?” என்றார் பாரி. 

அவர்கள் சிரித்தார்கள். 

“நாங்கள் மூவேந்தர்கள். இந்த மலையின் மீது எங்கள் வாளாலேயே, எங்களாலேயே, நீ சாக வேண்டும் என்று இங்கே வந்தோம்” என்றார்கள்.

“ஐயோ! நீங்களா?” என்றார் பாரி.

“தோற்றுப்போனவனை பின்புறமாய் தாக்குவது மூவேந்தருக்கு அழகா…? தமிழ் மரபையே பாழாக்கிவிட்டீர்களே ! போர்க்களத்திற்கு புதிய இலக்கணம் வகுத்துவிட்டீர்களே! ஐயோ….” 

“உங்களை எல்லாம் வல்ல இறைவன் மன்னிப்பான்.  மன்னிப்பான்” என்று சொல்லிக் கொண்டே நிலத்தில் சாய்ந்தார் பாரி. “ஓ…” வென்று ஒரு  சிரிப்புச் சத்தம் கேட்டது. 

மலையின்மீது, ஒரு மகா காளி ருத்திர வடிவத்தில் அங்கேயும், இங்கேயும் அலைமோதி, “மாமனைன் பாரி வாழ்க! மாமன்னன் பாரி வாழ்க!” என்று கூச்சலிட்டபடியே கீழே இறங்கி ஓடினாள். 

கீழே இறங்கி ஓடிய அந்த தேவதையைத் தொடர்ந்து ஊர்ப் பெண்கள் எல்லாம் ஓடினார்கள். அப்போதுதான், மூவேந்தர்களுடைய புரவிகள் அவர்களைக் கடந்தன. அத்தனைபேரும் அந்த புரவிகளுக்கு வழிவிட்டு, ஒரே வார்த்தைதான் சொன்னார் “நாங்கள் தான் பெண்களாகப் பிறந்தோம் என்று நினைத்தோம். மன்னியுங்கள்! எங்களை விட அற்புதமான பெண்கள் நீங்கள்.”

மூவேந்தரும் தலைகுனிந்தபடியே, கீழே இறங்கினார்கள். 

பாரியின் பறம்பு மலை, பாலைவனமாகக் காட்சி அளித்தது! 

ஓடிச்சென்ற பெண்மணிகள் அனைவரும் மாபெரிய குண்டம் ஒன்றினை ஏற்படுத்தி, விறகை அடுக்கி, நெருப்பைப் பற்றவைத்து, அதன் மீது ஒவ்வொருவராக விழுந்தார்கள். 

பாரிமலையில், யாரும் மிச்சம் இருக்கக் கூடாது. என்று கடைசியாக விழுந்தவள், கதலி. 

“கதலி” என்று கடைசியாக ஒரு குரல் கேட்டது. 

அதுதான் வெற்றி முழக்கம் செய்ய வேண்டிய அவளுடைய அண்ணன் செங்கணானின் குரல். 

முடிந்தது.

– பாரிமலைக் கொடி (நாவல்), முதற் பதிப்பு: 1993, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *