(1911ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதிகாரம் 4-6 | அதிகாரம் 7-9 | அதிகாரம் 10-12
ஏழாம் அதிகாரம்
எதிர்ப்படுகை
நாகநாட்டரசியும் அவன் பாங்கிமாரும் ஏறியிருந்த குதிரை கள் மூன்றும் நல்லழகுவாய்ந்தவைகள். குமுதவல்லியின் மெல் லிய உடல் ஒழுங்கொடு கூடியதொன்றாயினும், நிறைந்த அழகு திகழும்படி போதுமானவரையில் உறுப்புகளின் அளவு திரண்டு உருவாகிய அவளது நீண்டவடிவானது, அவள் குதி ரைமேல் அமர்ந்த நிலையின் நயத்தாலும், அவளது செயற்கை யல்லா இயற்கை நடையின் சீரினாலும், அச்சிறந்த புரவியின் நடைகளுக்கு ஏற்ப அவள் துவண்டு தன்னை இசைவித்துக் கொள்ளும் நொய்மையாலும் பின்னும் மிக்க எழில் உடைத்தாய் விளங்கித் தோன்றுவதாயிற்று.
அவள் வழிப்பயணத்திற்கு ஏற்ற ஓர் அழகிய உடை அணிந்திருந்தாள். திறப்பாகவிட்டிருந்த உட்சட்டையானது பொற்சரிகை பின்னப்பட்டிருந்தது, – இச்சரிகை வேலையில் ஒரு பாகம் இவள் தானே தன் ஓய்வுநேரங்களிற் செய்தது, மற்றொரு பாகம் இவள் தோழிமாரின் திறமையானும் நுண்ணறிவா னுஞ் செய்யப்பட்டது. அதற்கு அடியிலே அணியப்பட் டிருந்த கீழ் ஆடையானது தொண்டைவரையிற் கட்டப்பட் டிருந்தது. அது வடிவத்திற் பொருந்திய அமைவினால் மார்பிற் றிரண்ட கோளவடிவை வரைபெறக்காட்டியது. உட்சட்டை யின் குறுகிய கைகளானவை, பால்போன்ற வெண்மைநிறத் தொடு வியப்பாக உருவமைந்த முன்கைகளைப் பெரும்பாலும் வெளியே காட்டின; அக்கையின் தெளிவான தோலோ நீல நரம்புகளின் மெல்லிய சுவடுகளைப் புலப்படக்காட்டியது. இடுப்பின்கீழ் உடுக்கப்பட்டு முழங்கால்வரையிற் றொக்கும் மேலாடையானது பெரிய பொற்சரிகைக் குச்சு உடையதான யிருந்தது; இதற்குக் கீழே உடுக்கப்பட்டிருந்த சிறுநிறமுள்ள நீண்ட பட்டாடைமேல் இஃது அணியப்பட்டிருந்தமையால் இஃது அவ்வுடுப்பின் அழகை மிகவுஞ் சிறப்பித்துக் காட்டுவதாயிற்று. மெல்லிய வெண் சல்லாவினாற் செய்யப்பட்ட முக் காட்டு ஆடையானது அவள் முடிமேலிருந்து முதுகின் கீழ்த் தொங்கியது – அது சிலவேளை வீசிய சிறுகாற்றிலே பறந்தது; சிலவேளை குதிரை உடம்பின்மேல் அலைஅலையாய் அழகுடன் மிதந்து கிடந்தது.
இளம்பெண்கள் இருவருந் தம் இளம்பெருமாட்டியின் உடையினும் விலை மிகக் குறைந்ததே உடுத்திருந்தார்களாயி னும், அவ்வுடை அழகிற்குறையாதாய் நாகரிகமும் நேர்த்தியும் வாய்ந்ததாயிருந்தது. குமுதவல்லியும் அவள் தோழிமாருஞ் சைவ சமயத்திற் சேர்ந்தவர்களா யிருந்தமையால், ஏனை வட நாட்டுப் பெண்களின் வழக்கம்போல் தம் முகங்களை முழு தும் முக்காட்டினால் மறைத்துக்கொள்ள வேண்டுமென்னும் ஏற்பாடு உடையவர்களாய் இல்லை என்பதை இதனைப் பயில் வோர் நினைவில் வைக்கவேண்டும்.
அவ்வழகிய பெருமாட்டியும் நல்ல தோற்றமுள்ள அவள் பாங்கிமார் இருவரும் ஆக மூவரும் நன்றாகச் சேணம் இடப் பட்ட குதிரைகளின்மேல் அமர்ந்து, தமக்குப் பின்றுணையாய்ப் படைதாங்கி வந்த நீலகிரி நாட்டுமக்கள் பன்னிருவரினின்றும் மிக வேறாய் விளங்கிய தோற்றமானது நிரம்பவும் மனத்திற்கு இனியதாயிருந்தது. சாவடியைவிட்டுப் புறப்பட்ட பிறகு, முதலிற் சில நாழிகை வழி வரையிற் குறிப்பிடத்தக்கது எதும் நிகழ வில்லை; ஆனாற், கடைசியாக நாகநாட்டரசியும் அவள் பாங்கிமாரும் ஐந்து நாழிகை நேரம் இளைப்பாறவும், அவர்கள் குதிரைகளை இளப்பாற்றவும், இப்போது வழித்துணையாக வந்தவர்கள் அவர்களைப் பிரிந்துபோகவும் வேண்டிய ஓரிடம் வந்து சேர்ந்தது. குமுதவல்லி இப்போது தன் பாங்கிமாரொடு மட்டும் பயணம் போவதா, அல்லது வேறொரு துணையைத் தேடிக்கொள்வதா என்று தீர்மானிக்க வேண்டியவளானாள். நாம் முன்னமே மொழிந்த காரணங்களைக்கொண்டு அவள் முந்திய ஏற்பாட்டின்படி நடக்க எண்ணங்கொண்டாள்: ஆனால், இந்தத் தங்குமிடத்தில் வந்த ஒரு செய்தியினால் அவள் தான் கொண்ட இவ்வெண்ணத்தை மாற்ற வேண்டியவளானாள்.
இச்செய்தி நல்லானைப்பற்றிய தன்று; மற்று இஃது அக் கொள்ளைக்காரனைவிடத் திகில் கொள்ளத்தக்க ஒருபகைவனைப் பற்றியதாகும். சுருங்கச் சொல்லுங்கால், அங்கே அடுத்துள்ள இடத்தில் வழிதப்பித்திரியும் ஒரு புலியானது தென்பட்டது. சுந்தராம்பாளும் ஞானாம்பாளும் இச்செய்தியைக்கேட்டுத் துய ரத்தொடு திடுக்கிட்டார்கள்; குமுதவல்லியுந் தான் அச்சமில் லாதவளாய் இருக்கவில்லை. ஆகவே, படைக்கலம் பூண்ட இரண்டு ஆண்மக்களை வழித்துணை கொள்ளும்படி தீர்மானஞ் செய்யப்பட்டது; இந்தஏற்பாடானது பிறகு முறையே கைக் கொள்ளப்பட்டது.
திரும்பவுங் குமுதவல்லி தன் பாங்கிமாரோடும், வழித் துணையாகக் கொள்ளப்பட்ட இரண்டு வலிய நீலகிரி நாட்டா ருடனும் பயணம் புறப்பட்டபோது ஏறக்குறையப் பிற்பகல் இருபத்திரண்டு நாழிகை யாயிற்று. இவ்வாண்மக்கள் இருவ ரும் உடம்பெங்கும் படைகள் தாங்கி வலிய குதிரைமேல் ஏறி யிருந்தார்கள்: அக்கொடிய விலங்கு கண்ணுக்கு எதிர்ப்பட்டால் உறையினின்றுங் கைத்துப்பாக்கிகளை இழுப்பதற்கு அவர்கள் தங் கைகளைச் சீராக வைத்திருந்தார்கள். அவர்கள் போன வழியானது அந்நாட்டின் அழகிய ஓரிடத்தின் ஊடே சென் றது. அங்கே பழங்களைச் சுமை சுமையாய்த் தாங்கிய மரங்க ளும், பழக்குலைகள் நிறைந்து பொறை மிகுந்த கொழுமையுள்ள கொடிமுந்திரிகளும் வழிகளுக்கு நிழலைத்தந்து இடுக்கு வழிக ளுக்குத் திரைமறைப்புப்போல் இருந்தன; இன்னும் அங்கே பச்சென்ற வரம்புகளின் பின்னே, அகன்ற பெரிய இடங்கள் பூசனிப்பழங்களாலுங் கொம்மட்டிப்பழங்களாலும் மூடப்பட் டிருந்தன. இது பலவகைப்பழங்களுந் தாமே வளர்ந்து செழிக் குங் காடாயிருந்தது!
கடைசியாகத் தங்கிய இடத்தினின்றும் அவர்கள் புறப் டு வந்தபிறகு இரண்டரை நாழிகை கழிந்தது; இச்சமயத் திற்சிறிது தொலைவிலிருந்து தாழ்ந்த உறுமல் ஒலியொன்று தொடர்பாய் வரக்கேட்டாற்போற் குமுதவல்லிக்குப்பட்டது; உடனே கடிவாளத்தைப் பிடித்துத் தன்குதிரையை நிறுத்திக் கொள்ளவே, சில அடி பின்னேயிருந்த அவள் பாங்கிமாரும் வழித்துணைவரும் ஒரு நொடியிற் கிட்டவந்து சேர்ந்தார்கள். சுந்தராம்பாளும் ஞானாம்பாளும் அவ்வாறே தீக்குறியான அவ் வோசையைக் கேட்டார்கள். அவர்கள் முகங்கள் திகிலால் வெளுப்புநிறம் அடைந்தன : ஆனால், அந்த நீலகிரி நாட்டார் இருவரும் விரைவில் அஞ்சாமொழிகள் சொல்லி, அப்பெண் மக்களைத் தமக்கு நடுவே நிறுத்திக்கொள்ளும் வகையில் தாம் நின்று கொண்டார்கள். அவர்கள் கைத்துப்பாக்கிகள் அவர்கள் கைகளில் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்தன; அவர்களின் சுருசுருப்பான கூரிய கண்களானவை சுற்றிலுந்தம் பார்வை யைச் செலுத்தின.
சில நொடிப்பொழுது வரையில் ஏதும் அரவம் இல்லா மல் இருந்தது; ஆனால், திடீரென்று ஊளைபோலவும் உறுமு தல் போலவும் அஞ்சத்தக்க ஓர் ஓசை உண்டாயிற்று. அதன் பிறகு மரங்களின் இடையே சர சர வென்றும் நெறு நெறு வென்றும் ஓர் ஓசை உடனே தொடர்ந்துவந்தது; கொடிமுந்திரி மறைப்பினின்றும் ஒரு பெரும் புலி கிட்ட இருந்த நீலகிரி நாட்டான்மேற் பாய்ந்தது. உடனே அவ்வாண்மகன் கையி லிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளும் வெடிதீர்ந்தமை கேட் டது. சுந்தராம்பாள் ஞானாம்பாள் இதழ்களிலிருந்து கீச்சென்று ஓர் ஒலி உண்டாயிற்று; குமுதவல்லியிடத்திருந்துகூடத் திகி லொடுகூடிய ஓர் ஒலி உண்டாயிற்று; இவர்கள் ஏறியிருந்த குதிரைகளோ அடக்கமுடியாதனவாயின. பொல்லாதகாலத் தாற் குதிரை மீதிருந்த ஒருவன் அதனினின்று புலியினாற் கீழே இழுக்கப்பட்டான்: அவனுதவிக்காக அவன் தோழன் கிட்டே ஓடினான்; ஆனால், அவ்விலங்கோ தன் பகைவரை ஒருவர்பின் னொருவராக வெல்வதற்குத் தீர்மானித்தாற்போல், தன் இரண்டாம் பகைவன்மேல் திகிலுறும்படி ஒரு குதியிற் பாய்ந்தது.
இந்தக்காட்சியானது பார்ப்பதற்கு மிகவுங் கொடுமையா யும் வெருவத்தக்கதாயும் இருந்தது. திரும்பவுங் கைத் துப் பாக்கிகளின் அதிர்வெடி கேட்டது; அக்கொடிய விலங்கானது காயப்படுத்தப்பட்டது; ஆனாலுங் கொல்லப்படவில்லை. மற்று, அது தான் பட்ட காயத்தினால் வெறிபிடித்துத் திகி லான சுருசுருப்பு உடையதாயிற்று. தன் குதிரையிலிருந்து இடியேறுண்டு தள்ளப்பட்டாற்போல் இரண்டாம் ஆளுங் கீழே இழுத்துப்போடப்பட்டான்; அப்போது குருதி ஒழுகும் வெறிகொண்ட குதிரைகள் இரண்டு ஊர்வோன் இல்லாதன வாய்க் காற்றினால் இறக்கை வாய்ந்தனபோற் பறந்து சென் றமை காணப்பட்டது. அதேநேரத்திற் குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் ஏறியிருந்த குதிரைகளும் அச்சமுற்று அடங்கா தனவாய்ப் பலமுகமாய் விரைந்து ஓடின. இங்கனம் எல்லாம் பெருந்தடுமாற்றமாய் இருப்பதற்கு நடுவே, கடிகாரத்தில் நிமி டங்காட்டும் முள் நிமிடங்களை அடுத்தடுத்துக் காட்டுவதுபோல ஒவ்வொன்றும் ஒன்றன்பி னொன்றாய்க் கடுகிவரும் இப் பொழுது மறுபடியுந் துப்பாக்கிகளின் வெடிகள் கேட்டன. அந்தப் புலியானது சாகுந் துன்பத்தில் ஊளைக்குரலொடு நிலத்தேகிடந்து புரண்டது; மறுபடியும் மற்றொரு குண்டு அவ்விலங்கின் மண்டைக்குள் நெறுநெறுவென்று தொளைத் துச் செல்லும்படி அவ்வளவு திட்டமாய்க் குறிவைத்துச் சுடப் பட்டது; அடுத்தாற்போல் மூன்றுபேர் குதிரைமேல் அவ் விடத்திற்கு விரைந்து வந்தார்கள்.
அதற்குட் குமுதவல்லி தன் குதிரையை முற்றுந் தன் வயத்தில் அடக்கிக்கொள்வதானாள்; அந்தக் கொடிய சண்டை நடந்த இடத்திற்கு நெடுந்தொலைவிலே அவள் இப்போது இருந்தாலும், இடர் ஒழிந்தது என்பதற்கு அறிகுறியாக முழக்கமிட்டுக் கூவுவோர் ஓசையைக்கேட்டனள். குதிரை ஊருந் திறத்தில் தந் தலைவியை எதிரவல்லவர்களான சுந்தராம் பாள் ஞானாம்பாள் இருவருந் தங் குதிரைகள் தம் உடைகள் சிறிது கீறுண்டு கிழியும்படி கொடிமுந்திரி அடர்ந்த இடங்க ளின் ஊடே விரைந்து சென்றாலும் அவற்றின்மேல் தமது இருக்கை கலையாதவண்ணம் அங்ஙனமே இருந்து கொண்டார் கள். அவர்கள் தங்கள் உயிரோடு தப்பிப்பிழைத்ததையும் இரண் டொரு கீறல்தவிர வேறு காயந் தம்உடம்பிற் படாமையையும் எண்ணிப் பார்க்கும்போது இஃது ஒருபொருட்டாகவைத்துச் சொல்லற்பாலதன்று.
உற்றநேரத்தில் அவ்விடத்திற்குக் குதிரைமேல்வந்த மூவ ரில் தலைவனானோன், தன் கூடவந்தோர் இருவருக்குஞ் சுருக் கெனச் சில கற்பித்துவிட்டு, இதற்குள் தமது தடுமாற்றம் நீங்கித் தேறி அந்தப்பாட்டையிற் சிறிது தொலைவிலே ஒன்று கூடி நின்ற குமுதவல்லியையும் அவள் பாங்கிமாரையும் எதிர் கொள்ளும்பொருட்டுக் குதிரையை முன்னே பாய்ச்சலிற் கொண்டுபோனான். அங்ஙனம் நயம்மிகுந்த வணக்கத்தோடுந் தேறுதல் மொழிகளோடும் அந்தப் பெண்மக்களை விரைந்து அணுகினவன் ஓர் அழகிய பௌத்த இளைஞனா யிருந்தான். நாகரிகமும் இனிய அழகும் வாய்ந்த இவ்விளைஞன் நீலலோ சனனேயன்றிப் பிறர் அல்லரென்றும், இவனுடன் வந்தோர் இருவருங் கேசரிவீரனும் வியாக்கியவீரனுமாவரென்றும் இத னைப் பயில்வோர்க்கு உடனே தெரிவித்திடுகின்றோம்.
திகிலைத்தரும் அச்சண்டையின் முடிவு குமுதவல்லியினா லும் அவள் பாங்கிமாராலுங் காணப்படாவிடினும், அது முடிந்துபோயிற்றென்பதை அவர்கள் ஏற்கெனவே தெரிந்து கொண்டார்கள்; இப்போது அவர்கள் இப்பெளத்த இளைஞன் சொல்லிய சொற்களிலிருந்து கடைசியாக இவன் கையினாலே தான் அப்புலி இறந்துபட்டதென்று தெரிந்தார்கள். குமுத வல்லி அவனுக்குத் தன் நன்றி மொழிகளைப் பொழிந்தாள்; கலக்கமும் ஐயமுங் கலந்த நோக்கத்தோடுஞ் சொல்லசைவோ டும் அவள் தன்பின் வழித்துணையாய் வந்த நீலகிரி நாட்டார் இருவர் வினைப்பயனையும்பற்றி உசாவினாள்.
அதற்கு நீலலோசனன், “இரங்கத்தக்க அவ்வாட்கள் மேற் பரபரப்பாக என் பார்வையைச் செலுத்திப்பார்த்தவரையில், நங்கைமீர், அவ்விருவரும் பிழைத்திருக்கின்றார்கள் என்று உங்கட்கு உறுதியுரை சொல்லக்கூடியவனானேன்: ஆனாலும், அவர்கள் மிகவும் இடரான வகையிற் சின்னபின்னப் படுத்தப் பட்டிருக்கின்றார்களென அஞ்சுகின்றேன். என் கூட வந்தவர் கள் இருவரும் அவர்களுக்குத் தம்மாற் கூடியமட்டும் உதவி செய்துகொண் டிருக்கின்றார்கள்; அவர்கள் காயங்களினின் றுஞ் செந்நீர் ஒழுகுவதை நீங்கள் பாராதிருக்கும்பொருட்டுந் திகிலான இந்நிகழ்ச்சியின் முடிவைத் தெரிவிக்கும்பொருட்டு யான் இங்ஙனம் முன்னே விரைந்து வந்தேன்.” என்று மறு மொழி புகன்றான்.
உடனே குமுதவல்லி காயப்பட்ட அம்மாந்தரிடத்து இரக்கமுங் கவலையும் மிக உடையவளாய், “ஐயன்மீர்,யானு என் தோழிமாரும் ஏதேனும் உதவிசெய்யக்கூடுமோ? என்ப தைச் சொல்லுங்கள். ஒருகால் உங்கள் ஆட்களைவிட யாங்கள் அக்காயங்களைத் திறம்படக் கட்டக்கூடுமே: ஏனென்றாற் பெண்பாலாராகிய எங்கட்கு அஃது உரியதொழிலன்றோ?’ என்று கூறினாள்.
”நங்கைமீர், என்னுடன் வந்தவர்கள் போர் நிகழ்ந்து இடங் களில் இருந்து பழக்கம் ஏறினவர்கள்; காயங்களைக் கட்டுவது அவர்களுக்குப் புதிய தொழில் அன்று. நான் திரும்பிவரும் வரையில் இங்கே தானே தங்கியிருக்க அன்புகூருங்கள். கெடுதி நேர்ந்த இடத்திற்கு யான் கடுகத் திரும்பிப் போகின் றேன்; சில நொடிப்பொழுதிலெல்லாம் யான் உங்களிடம் மறுபடியும் வந்து, நீங்கள் இரக்கம் வைத்துள்ள அம்மாந்தரின் நிலைமையை அறிவிக்கின்றேன்.” என்று நீலலோசனன் மறு மொழி கூறினான்.
மறுபடியும் பணிவொடு வணங்கி நீலலோசனன் தன் குதிரையைத் திருப்பிக் குமுதவல்லியையும் அவள் பாங்கிமாரையும் விட்டு அகன்று போயினான்.
அதன்பிறகு குமுதவல்லி, “சிறிதுநேரம் நாம் குதிரையை விட்டுக் கீழே இறங்குவோம். இரங்கத்தக்க அவ்வாட்கள் இருவரும் எல்லாவகையாலுஞ் செவ்வையாகப் பராமரிக்கப்படு கிறார்கள் என்பதை நாம் உறுதியாகத் தெரிந்துகொண்டால் அல்லாமல் நாம் பயணந் தொடங்கலாகாது. அதுவல்லாமலும் நங் குதிரைகள் எல்லாம் இன்னும் நடுநடுங்கிக்கொண் டிருக் கின்றன. இச் செழும்புல்லை அவைகள் மேயும்படி விட்டால், அஃது அவ்வேழை யுயிர்களை ஆற்றுவிக்கும்.” என்று நாக காட்டரசி கூறினாள்.
அவ்வாறே, குமுதவல்லி சுந்தராம்பாள் ஞானாம்பாள் மூவ ருங் குதிரையைவிட்டு இறங்கினார்கள்: அவர்களின் குதிரை கள் பாட்டையோரமாய்த் திரியும்படி விடப்பட்டன; ஏனெ னில், நுண்ணறிவும் நம்பிக்கையும் உள்ள அக்குதிரைகள் ஒவ் வொன்றுந் தந் தலைவி அழைக்கும்போது உடனே திரும்பி வரும் வழக்கம் உடையன. குமுதவல்லி தான் ஒரு கரைமேல் உட்கார்ந்துகொண்டு தன் றோழிப் பெண்களும் அவ்வாறே இளைப்பாறுகவென்று கைக்குறி காட்டினாள்.
“நல்ல காலமாயிற்று, அப்பௌத்த துரைமகனும் அவர் ஆட்களும் அந்நேரத்தில் வாலானது!” என்று நாகநாட்டரசி மொழிந்தாள்.
“எவ்வளவு அழகான இளைஞர் அவர்!” என்றாள் சுந்தராம்பாள்.
“அவர் பார்வையில் ஆண்மைமிக்கவரே! என்றாலும், இள மையும் அழகும் வாய்ந்தவர்!” என்று கூடச் சொன்னாள் ஞானாம்பாள்.
“பேசாதிருமின், சிறுமிகாள்! அவரது நல்ல தோற் றத்தைவிட அவரது ஆண்மையை எண்ணிப்பாருங்கள்; நாம் இப்போது தப்பிப்பிழைத்ததற்காகச் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதையும் எண் ணிப்பாருங்கள்.” என்று சிறிது கடுமையாகக் குமுதவல்லி பேசினாள்.
சிறிதுநேரம் பேசாமல் இருந்தார்கள். அப்போது குமுத வல்லி தன்னைப்படைத்த கடவுளுக்குத் தனக்குள்ளே வழிபாடு செலுத்தினாள்; மற்ற இருபெண்களும் அவள் உள்ளத்தில் நிகழ்வதை அறிந்து தாமும் அவ்வாறே செய்தார்கள்.
இப்போது நீலலோசனன் திரும்பிக் குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தான்; வந்தவன் சொன்னதாவது: “நங்கைமீர், உங்கள் வழித்துணை வர் அடைந்த காயங்கள் கொடியனவாயிருந்தாலும் உயிர்க்கு எதும் அச்சமில்லை யென்று மகிழ்ச்சியொடு தெரிவிக்கின் றேன். இந்தப் பாட்டையில் வந்து சேரும் ஒரு சிறுவழியாக வன்றோ யானும் என் ஆட்களும் நல்ல நேரத்தில் அவ்விடம் வந்துசேர்ந்தோம். அதோ தோன்றும் மரங்களால் மூடப்பட்டு அவற்றின் நடுவே ஒரு சிறு குடிசை இருக்கின்றது.காயப் பட்ட ஆட்களை அங்கே கொண்டுபோக வேண்டுமென்பது என் கருத்து; அவர்களை மிகவும் அன்பாய்ப் பார்ப்பதற்கு வேண்டிய கருவிகளை நிரம்பத் தந்து அவர்கள் அடைந்த காயங் களால் அவர்கள் சிறிதும் அழிவு உறாமற் செய்தன்றி அவர்களை விட்டு வரமாட்டேன் என்று உறுதியாய் நம்பி ஆறுதல் அடைமின்கள்!
“பெருமானே, தாங்கள் உண்மையாகக் காட்டிவருகின்ற அன்புடைமைக்கு ஆபிரம்வணக்கம்!’ என்று சொல்லி, “அவ் வாடவர்க்கு வேண்டுவனவெல்லாந் தொகுத்துத் தருவதுஞ், சிறிதுகாலம் என்னிடம் ஊழியஞ் செய்கையில் அவர்கள் அடைந்த துன்பங்களுக்குப் போதுமான அளவு ஈடு கொடுத்து உதவுவதும் என்னுடைய கடமை அல்லவோ? எனக்காகத் தாங்கள் ஐயம் பகிர்ந்து கொடுக்க ஒருப்படுவீர்களா?’ என்று குமுதவல்லி கேட்டாள்; அங்ஙனங் கேட்கையிலேயே, தனது பணப்பையினின்றும் பல பொன் நாணயங்களை எடுத்து, அவற்றை நாண் இனிமை கலந்த புன்முறுவலோடு நீலலோ சன்னிடம் நீட்டினாள்.
அந்தங்கையை முன்பின் முழுதும் அறியாதவனாயிருக் குந் தான், அவள் அடைந்த செலவுகளுக்காகத் தான் பொருள் செலுத்துவதா யிருக்கும் இதனைப் பற்றி வற்புறுத்துதல் தனக்கு மென்னடையுந் தகுதியும் ஆகாவெனப் பௌத்த இளைஞன் உடனே கண்டுகொண்டான்: ஆகவே, அப் பொன் நாணயங்களைத் தான் வாங்கிக்கொண்டபோது, “காயப்பட்ட அவ் வேழையாட்கள் இருவரையும் பற்றி யான் முதலிற் கொண்ட நோக்கத்தையும் நிறைவேற்றுதலிற் சிறிதுங் குறை யேன்; எனவே, அவர்கள் பெற்றுக்கொள்ளும் ஈடு இரட்டை நன்கொடையாகும்.” என்று கூறினான்.
இங்ஙனஞ் சொல்லிவிட்டு அங்கிருந்து மறுபடியும் அவன் குதிரைமேற் போக எழுந்தான்; அப்போது அவனுக்கு ஓர் எண்ணந்தோன்றவே, “நங்கைமீர், இப்போது நீங்கள் வழித் துணை இன்றி யிருத்தலால், யானும் என் ஆட்களும் எங்களால் இயன்றவளவு செய்துவரக்கூடிய காவலையும் பாதுகாப்பையுந் தாங்கள் ஏற்றுக்கொள்ள அருள் செய்வீர்களா? நாங்கள் நீல கிரியை நோக்கிப் பயணஞ்செல்பவர்களாய் நேர்ந்தோம்: காயப் பட்ட ஆடவரில் ஒருவன் சிறிதுமுன்னே சொன்ன சிலவற்றி லிருந்து, நீங்கள் செல்லவேண்டிய இடமும் அதுவேயெனத் தெரிந்தேன்.” என்று கூறினான்.
குமுதவல்லி ஏது விடை சொல்வதென்று சிறிது நேரந் தடைப்பட்டாள்: ஆனால், தன்றோழிமார்களைக் கண்நோக் கவே, அவர்கள் உருக்கமுடன் வேண்டிக்கொள்ளுங் குறிப் பொடு தன்னை உற்றுப்பார்த்தது கொண்டு இன்னது சொல்வ தென்று விரைவில் தீர்மானித்தாள்.
”ஐயனே, அஞ்சத்தக்க இந் நிகழ்ச்சியிலிருந்து யான் அடைந்த பழக்கமானது, தாங்கள் இவ்வளவு இரக்கத்தொடு செய்யும் உதவியை மறுத்தல், எனக்கு மடமையாய்முடியுமென் றும், நடுநடுங்கும் என் பணிப்பெண்களாகிய இவர்களது நிலை மையை எண்ணிப்பாராக் கொடுமையாய் முடியுமென்றும் எனக்குக் காட்டுகின்றது. ஆகையால், இவ்வுதவியை யான் நன்றியறிதலோடு ஏற்றுக்கொள்கின்றேன்.” என்று விடை பசுர்ந்தாள்.
தேவமாதின் அழகு வாய்ந்த அப்பெண்மணியின் தீர் மானத்தைத் தான் பெற்றுக்கொண்டபொழுது இளைய நீல லோசனன் தன் நெஞ்சத்துள் துணுக்கென ஒருமகிழ்ச்சி கொண்டான்: இங்ஙனம் எழுந்த உள்ளப் பெயர்ச்சியினைத் தகுதியான பணிவுடன் அடக்கிக் கொண்டவனாய், “நங்கை மீர், அம்மக்களை அக்குடிசைக்கு எடுத்துக்கொண்டுபோக உதவி செய்யும்பொருட்டு இப்போது விரைந்துபோகின்றேன். கட் டாயமாய் வேண்டிய அளவுக்குமேல் ஒரு நொடிப்பொழுதேனும் யான் அங்கு நீட்டித்திரேன் என்று உறுதியாய் நம்பி யிருங்கள்.” என்று கூறினான்.
மறுபடியும் அப்பௌத்த இளைஞன் கிளர்ச்சி மிகுந்த தன் குதிரைமேல் ஏறிப்போயினான்; அவன் காதுக்கெட்டும் வரை யிற்கடந்து சென்றபின், “அவ்வளவு உருக்கத்துடன் தரப்பட்ட வழித்துணையை நாம் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு செய் யக்கடவ தொன்றில்லை.” என்று குமுதவல்லி மொழிந்தாள்.
ஒரோவொருகால், தன் நினைவுகளின் கன்னிமைத் தூய தன்மையோடும், நெடுந்தொலைவில் இல்லா மேற்கணவாய் மலைகளின்மேல் எந்நேரமுந் தங்கியிருக்கும் பனிபோல் தூய தான தன்னுயிரின் இயற்கைக் கற்புடைமையோடும், அவ் விளங்கன்னிப்பெண், நீலலோசனனைப்பற்றி இன்னும் ஏதோ மிகுதியாய்க் காணவேண்டும் ஒருநினைவிலே மெய்யாகவே வெறுப்புறாத ஓர் உள்ளுறை எண்ணந் தன்னுள்ளே கொள்ளப் பெற்றாள். ஏனெனில், ஆண்பாலாருள் அழகால் மிக்கவ ரென்றும் பெண்பாலாருள் அழகால் மிக்கவரென்றும் நன்கு மதிக்கப்படும் இளையோர் இருவர், ஒருவர் ஒருவர்மாட்டு தா சிறிதேனும் ஒரு பற்று உண்டாகப்பெறாமல் இங்ஙனஞ் தற்செயலாய் ஒருங்கு கூட்டப்படுதல் இயலாததேயாம்.
நீலலோசனன் திரும்பி வரும்முன் ஏறக்குறைய இரண் டரை நாழிகை கழிந்தன; இப்பொழுது அவன் ஆட்கள் இரு வரும் அவன் பின்னே வந்தார்கள். அந்தப்பெருமாட்டியோடும் அவள் தோழிப்பெண்களோடுஞ் சேர்ந்து பயணம்போகும்படி ஏற்பாடுசெய்யப்பட்டதென்று முன்னமே அவன் அவர்கட்குத் தெரிவித்தான். இச்செய்தியை வியாக்கிரவீரன் மகிழ்வொடு கேட்டான்; ஏனென்றாற், பெண்பாலார் கூட்டத்திற் சேர்ந் திருப்பது அவனுக்கு இனியது: மற்றுக் கேசரிவீரனோ இத னைக்கேட்டதுந் தன் முகத்தின்மேல் துயரக்குறிப்பு உடைய வனானான். தன் இளம்பெருமான் பொய்ந்நெஞ்சுள்ள மற் றொரு மோகினிப் பேயின் கையில் அகப்பட்டால் என்செய்வ தென்று அஞ்சினான் : என்றாலும், இப்படிப்பட்ட நிலைமையில் தடுத்துச்சொல்வதற்கு அவன் அவ்வளவு இரக்கம் அற்றவன் அல்லன். அஞ்சத்தக்க இடரினின்றும், திகிலான மனக்கலக் கத்தினின்றும் இப்பொழுதுதான் தப்பிய ஆண்துணையில்லாப் பெண்கள் மூவருந் தாங்கள் இழந்துபோன வழித்துணைக்கு மாறாக வேறொரு வழித்துணையை உறுதிப்படுத்திக்கொள்ள ஆவல் உள்ளவராய் இருக்கக்கூடுமென்றும், மக்கள் உறவின் முறைக்கும் மக்கள் இயல்பின் முறைக்கும் இணங்க அவர்கள் அங்கனந் துணை நாடுதற்கு உரிமையுள்ளவர்களேயென்றும் அவன் இயற்கையாகவே உணர்ந்தான். ஆனால், நீலலோசன னும் அவன் ஆட்களுங், குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் இருந்த இடம் வந்து சேர்ந்தபோது, கேசரிவீரன் ஐயுற்றுப் பார்த்த பார்வை வரவாத் தெளிவடைந்தது; ஏனெனில், ஏதோ சொல்லமுடியாத இனிமையுங், களங்கமற்ற நெஞ்சக்குறிப்பும், ஒரு கவர்ச்சியும், அன்புங் குமுதவல்லியின் முகத்திலே காணப் பட்டமையால், எளிதில் நம்பாமையும் முன்னறிவும் உள்ள கேசரிவீரனுங்கூட அத்தெய்வமுகத்திலே எழுதப்பட்ட சான் றுக்கு இணங்காதவனாய் இருக்கக்கூடவில்லை. காமக்கொதிப் யுங் காமவிழைவும் உள்ள கருவிழியாளான மீனாம்பாளையுந், தூய்மையுங் கள்ளமின்மையும் ஆகிய ஒளியினாற் சூழப்பட்ட நீலவிழியாளான குமுதவல்லியையும், அவன் தன் மனத் துள்ளே விரைந்து ஒப்பிட்டுப்பார்த்தபோது, இவளைப்பற்றி அவன் உயர்ந்ததொரு நல்லெண்ணங் கொள்ளாமல் இருக்கக் கூடவில்லை. இன்னும், இவள் பாங்கிமார் இருவரிடத்துங் கரவில்லாத வெளிப்படையான திறந்த உள்ளத்தையும், நாண முடன் தாழ்மைநிறைந்த ஒழுக்கத்தையுங் கண்டபோது, த தன் இளம்பெருமான் இவர்கள் புதுஉறவைப் பெற்றதற்காக வருந் துதல் ஒழிந்தான்.மற்று, இத்தனை இனிமைவாய்ந்த இவர்கள், வழித்துணையாவது பாதுகாப்பாவது இல்லாமல் தனியே ஏக விடுதலாகாமையை நினைத்தபோது தன்னுள்ளே ஒருமகிழ்ச்சி யும் மனநிறைவும் உண்டாகப்பெற்றான்.
நீலலோசனன் குமுதவல்லியின் பக்கத்தே குதிரை ஊர்ந்து சென்றான். கேசரிவீரன் சுந்தராம்பாளுக்குத் துணை யாய் ஏகினான்; வியாக்கிரவீரன் ஞானாம்பாளுடன் தன்னை இணைப்படுத்திக்கொண்டான். மீனாம்பாள் குமுதவல்லி என் னும் இருவரின் இயற்கை மாறுபாட்டைப்பற்றிக் கேசரிவீரன் உள்ளத்தில் தோன்றியதுபோலவே, நீலலோசன னுள்ளத்தி லுந் தோன்றுவதாயிற்று. தன்நெஞ்சங் குமுதவல்லியினிடத்து விழைவுகூரத்தக்கதாக விளங்கிய இனிய அழகின் வயப்பட வேண்டுவதாயிருக்க, ஒருநொடிப்பொழுதேனும் அது மீனாம் பாள் அழகினால் மயக்கப்பட்டது என்னை என்று அவன் வியப் படைந்தான். அவன் மீனாம்பாளைக் கண்டபோது, குமுதவல் வியை இதற்குமுன் என்றும் பார்த்ததில்லை என்பதும், பெண் பாலாரில் அத்துணை நிகரற்ற வடிவம் ஒன்று உலகின்கண் உள்ளதெனக் கருதியதே இல்லை என்பதும் உண்மையே; ஆனால், இந்த எண்ணமுங்கூட, அவன் தான் சிறிது நேரமாயி னுங் கரியவிழிமீனாம்பாளின் காமங்கனிந்த மிக்க அழகினுக்கு வணங்கியதனால், தன்நெஞ்சமானது இப்போது தோழமை கொண்ட நங்கையின் தூய கன்னிமை அழகினுக்கே செலுத் துதற்கு உரிய வணக்கம் என்னுந் தூயமணத்திற்கு இடம் பெறத் தகுதி வாயாததாயிற்று என்னும் ஓர் உணர்ச்சியினின் றும் அவனை மாற்றமாட்டாதாயிற்று.
பொதுவான பலதிறச் செய்திகளைப்பற்றிப் பேசியபிறகு, குமுதவல்லி, “ஐயன்மீர், இந்தப்பக்கத்தில் வழிதப்பித் திரியுங் காட்டுவிலங்கு ஒன்றுமட்டுமே அஞ்சத்தக்க தாகாதென்று சொல்லக்கேட்டேன்.” என்றாள்.
“நங்கைமீர், உண்மையே? வேறு யாது இடர் உங்களுக்கு இவ் அச்சத்தை உண்டுபண்ணியது?’ என்று நீலலோசனன் வினவினான்.
“திகிலை உண்டாக்கும் நல்லானைத்தவிர வேறொன்றும் அன்று.’ எனக் குமுதவல்லி விடை பகர்ந்தாள்.
அதற்கு நீலலோசனன் “ஆ!” என்று உரத்துக்கூவினான்; இங்ஙனங் கூவிய ஓசை புதுமையாகத்தோன்றினதனால், ஓர் இமைப்பொழுது குமுதவல்லி அவனை உற்றுப்பாராமல் இருக் கக்கூடவில்லை. அழகிய அவ்விளம்பெண் கொண்ட திதிலை மிகுதிப்படுத்துதற்கு அஞ்சி உடனே அவன் “ஆம், அப்படிப்பட்டது ஒன்று யானுங் கேள்விப்பட்டேன்: ஆனாலும், நங்கை மீர், அஞ்சாதேயுங்கள்!” என்று கூறினான்.
“என்மட்டில், அதைப்பற்றி யான் சிறிதும் அஞ்சவில்லை; ஆகையால், நான் என் தோழிப்பெண்கள் மனத்திலுங் கல வரத்தை உண்டுபண்ணா திருந்துவிடுகின்றேன்.” என்று குமுதவல்லி தொடர்ந்து பேசினாள்.
“நங்கைமீர், நீங்கள் செய்வது நல்லது. தீமையும் இட ரும் வரும்முன் பாதிவழியிற் சென்றே அவற்றை எதிர் கொள்ள ஓடாமல், அவை வரும்போது எதிர்வதே தக்கது. நாளைக்கு நாம் நீலகிரியில் இருப்போம்; அங்கே போய்விட் டோமானால் அச்சஞ் சிறிதும் இல்லை.” என்று நீலலோசனன் மறுமொழி புகன்றான்.
மலையநாட்டின் தலைநகரான நீலகிரிக்குத் தான் இன்ன நோக்கத்தின் பொருட்டுப் போகவேண்டியுளது என்பதைப் பற்றி நீலலோசனனாவது குமுதவல்லியாவது சிறிதாயினும் ஒருவரோடொருவர் மறந்தும் பேசவில்லை. அவர்கள் ஒருவ ரைப்பற்றியொருவர் உசாவியதில் வெறும் பெயர் மட்டுந்தான் சொல்லிக்கொண்டார்கள். இவ்வளவிலுங்கூடச் சிலவற்றைச் சொல்லாமல் அடக்கி விட்டார்கள். நீலலோசனன் தான் அரசிளைஞன் என்பதைத் தெரிவித்திலன். குமுதவல்லியுந் தான் அரசி என்பதைத் தெரிவித்திலள். சில வகைகளால் இருவரும் இங்ஙனம் அடக்கமாய் இருந்தனர்; ஏனென்றால், இதனைப் பயில்வோர் ஏற்கெனவே தெரிந்தபடி இவ்விருவரும் மறைவாகப் பயணஞ் செய்யும்படிக்குந், தாம் மறைவாகச்செல் வது சிறிதுந் தெரியாதபடிக்கும் வற்புறுத்தப்பட்டார்கள்.
இப்போது மாலை இரண்டரை நாழிகை வேளை ஆயிற்று. தன்னிடத்திலிருந்து நீலகிரி நகரம் ஏறக்குறைய இருபத் தைந்து கல் தொலைவு அல்லது ஒரு நாட்பயணத்தி லுள்ளதும், அவ் விராப்பொழுதிற்குத் தாந் தங்கவேண்டியதுமான ஓர் ஊர் இவ்வழிப்போக்கர் பார்வைக்குத் தென்படலாயிற்று. நீலலோ சனனுங் குமுதவல்லியுந் தத்தம் துணைவர்க்குச் சிறிதுமுன்னே குதிரை ஊர்ந்து சென்றார்கள். அப்போது ஒன்று நேர்ந்தது.
இது பார்வைக்குப் புல்லியதொன்றாய்த் தோன்றினாலும், இத னால் விளைந்தவை முதன்மையானவைகள். பாட்டை ஓரத்தில் மனமிரங்கத்தக்க முதியோன் ஒருவனும் அவனைப்போலவே ஏழைமைவாய்ந்த முதியோள் ஒருத்தியும் உட்கார்ந்திருந்தனர்; இவர்கள் இருவரும் முடவர்கள்; இருவரும் உறுப்பு அற்றவர் கள்; இருவரும் ஐயம் ஏற்பார்க்குரிய கந்தைத்துணி கட்டியிருந் தார்கள். நீலலோசனனுங் குமுதவல்லியும் முன்சென்றபோது இவ்விருவரும் ஐயங் கேட்பதற்கு நொண்டி எதிரே வந்தனர். இவர்களின் இரக்கமான நிலைமையைப் பார்த்தபோது நம் இளைய தலைவனுந் தலைவியுமான இருவர்க்கும் ஒருங்கே இரக் கம் உண்டாயிற்று; ஆகவே, இருவருந் தமது பணப்பையை இழுத்தார்கள். குமுதவல்லி ஒரு பொன் நாணயத்தை முடத்தி கையில் வைத்தாள்; நீலலோசனனும் அவ்வாறே தளர்ந்த அம் முதியோனுக்கு உதவிபுரிந்தான். ஆனால், அவ்வமயத்தில் நீல லோசனன் குதிரையானது ஏதோ பதறி அசைந்தது; இதனால் அவன் பணப்பையி னுள்ளேயிருந்த சிலபொருள் நிலத்தே தவறிவிழுந்தன. நன்றி யறிவுள்ள அம்முதிய முடவர்கள் அவற்றைப் பொறுக்கி யெடுத்து உடையவனிடஞ் சேர்ப்பிக்க விரைந்தனர். ஆனால், அங்ஙனங் கீழேவிழுந்த பொன் நாணய வெள்ளி நாணயங்களுக்கு இடையிலே, பாம்பின் மினுக்கொளி போலக் குமுதவல்லியின் கண்களைத் திடீரெனக் கவர்ந்தது ஒன்று கிடந்தது. அஃது ஒரு கணையாழி !ஆம்,ஒரு வகை யான வேலைப்பாடு அமைந்ததாய் ஒரே சிவப்புக்கல் பதிக்கப் பட்ட ஒரு பொன் மோதிரம்! நீலலோசனன் மிகவிரைந்து அம்மோதிரத்தையும் அந்நாணயங்களையும் எடுத்துத் தன் பணப் பையினுள்ளே வைப்பானாயினான்; குமுதவல்லி கலக்கமுற்ற தன் பார்வையை அப்புறந் திருப்பிக்கொண்டாள்; அவள் நெஞ் சமோ நோய்ப்படுத்தும் உணர்வால் தாக்குண்டது!
அவள் உள்ளத்திற் பொல்லாத எண்ணங்கள் பல மின்ன லெனத் தோன்றின. நல்லானைப்பற்றி அந்தச்சாவடிக்காரன் தனக்குச் சொல்லிய ஒவ்வொன்றையும் அவள் நினைவுகூர்ந் தாள். அவன் இளைஞன்; அந்தச் சாவடிக்காரனுக்கு மசு னென்று சொல்லும்படி அவ்வள்வு இளைஞன்!அவனுக்குக் கரியதலைமயிரும் மீசையும் இருந்தன. அவன் உயரமாய் ஒல்லி யாயிருந்தான்; குமுதவல்லியுந் தான் தன் அறைக்குள் முக மறைப்பிட்டு வந்தவனைக் கீழ்க்கண்ணாற் பார்த்த பார்வையிலும் அவன் அப்படியே இருந்தானென நினைத்தாள். அவ்வகைக ளெல்லாம் நீலலோசனனிடம் ஒத்திருந்தன! அதுவல்லாமலும், நல்லான் பலவகையான கோலங்களும் பூண்பவன்; ஒருகால் துருக்கனைப்போலவும் மற்றொருகால் மலைநாடனைப்போலவும் உடை அணிபவன்; ஏனென்றால், தன் பொல்லாத நோக்கங் களை முடிப்பதற்கு அவன் செய்து பாராத சூழ்ச்சி இல்லை. சுருங்கச்சொல்லுமிடத்துக், குமுதவல்லி, தன் பக்கத்தே குதி ரைமேல் வருபவன் கள்வர்கூட்டத்தலைவனான கொடிய நல் லானையன்றிப் பிறர்அல்லர் என்னுந் திகிலும் வருத்தமும் மிக்கதோர் உறுதி எண்ணங் கொள்ளப்பெற்றாள்!
இரவலரிடம் நிகழ்ந்த இச் சிறு நிகழ்ச்சிக்குப்பின் அவ ளும் நீலலோசனனும் வழிச்செல்கையிற், சிறிது நேரம் அவள் முகம் அப்புறமாகவே திரும்பி இருந்தது. இந்த நேரத்திற் குள் அவள் தன் முகச்சாயலை அமைதிப்படுத்திக்கொண்டாள்; தன்னையுந் தானே தேற்றிக்கொண்டாள்.இனி,எப்படி நடந்து கொள்வதென்றுந் தன்னுள் தீர்மானித்துக் கொண்டாள்; ஏனெனில், உடனே ஏதும் பொல்லாங்கு நேராதென்று கண் டறிந்தாள். அந்தச் சிறுபட்டிக்காடு இப்போது அருகாமையில் வந்துவிட்டது; தன் தோழனும் அவன் துணைவருந் தனக்குந் தன் பாங்கிமார்க்கும் விரைவில் தீங்கு செய்யக் கருதியிருந்தனர் களாயின், ஊருக்கு நெடுந்தொலைவில் தனிமையாயிருந்த வெளிகளிலேயே அவ்வாறு செய்திருப்பார்களன்றோ?
அவள் கலக்கமில்லாத குரலிலே, “ஐயன்மீர், வாருங்கள், நாம் குதிரையை முடுக்கி முன் விடுவோம்!” என்றுரைத்தாள். அதற்கு நீலலோசனன், “நங்கைமீர், தங்கள் விருப்பப்படியே என்று நேசநயம் மிக்க மகிழ்ந்த குரலிற் கூறினான்; ஏனென் றாற், குமுதவல்லி இப்போது தன்னைப்பற்றிக்கொண்ட திகி லான எண்ணத்தை அவன் சிறிதும் அறியான்.
சிறிதுநேரத்திலெல்லாம் அச்சிறிய ஊரிற் போய்ச் சேர்க் தனர். அவ்வூரில் தட்டுக்கெட்ட ஒரு சாவடியும் ஆறு ஏழைக் குடிசைகளுஞ், சிறிது விலகியிருந்த ஒரு நல்ல வீடும் இருந் தன . அந்த வீட்டுக்குஉரியவன், அடுத்திருந்த ஒரு பஞ்சாலைக்கு உடையவனான ஒரு பணக்கார வணிகன். ஆவன். அந்த விடுதி யண்டை போனவுடனே, குமுதவல்லி அந்த நல்ல வீட்டுக்கு உடையவர் தனக்குந் தன்தோழிப்பெண்கட்கும் விடுதி தந்து உதவுவரா என்று கேட்டாள். அந்நேரத்தில் அப்பஞ்சாலைத் தலைவன் அவ்விடுதிக்கு எதிரிலே நின்றுகொண்டிருந்தான்; குமுதவல்லி குறிப்பிட்ட வீட்டுக்காரன் தானே என்று அவன் அறிவித்ததன் மேல், நீலலோசனன் அந்நங்கைக்கும் அவள் தோழிமார்க்கும் உதவியாகத், தானே அவனைப் பரிந்துகேட் டான். அந்த வீட்டுக்காரன் வெடுவெடுப்பான குணமுங் கை யிறுக்கமும் உடையவன். விடைகூற அவன் சிறிது தாழ்த் தான்; நீலலோசனன் அவன் இயற்கை இன்னதென உணர்ந்து, அவன் காதண்டை போய், “இந்த நங்கைக்கும் அவர் தோழிமார்க்குஞ் செய்யும் உதவியிற் பிசுனத்தனம் பண்ணாதீர்; அதற்காக நீர்பெற்றுக்கொள்ளும் நன்கொடை மிகுதியாகவே யிருக்கும்.’ என்று மெதுவாகச் சொன்னான்.
இங்ஙனஞ் சொல்லவே எல்லா ஏற்பாடும் ஆயிற்று; குமுத வல்லி கேட்டபடியெல்லாஞ் செய்ய அவ்வீட்டுக்காரன் மிக அன்போடு இணங்கினான். இன்னுந் தன் மனத்துள் நிகழ்வது இன்னதென்று சிறிதும் புலப்படுத்தாமற், பெருமுயற்சியொடு வெளிக்கு இன்சொல்லும் நன்னடையுங் காட்டிக் குமுதவல்லி யானவள் நீலலோசனனிடம் விடை பெற்றுக்கொண்டாள். அங்ஙனம் விடைபெறும் பொழுது, அவன் சொல்லியபடியே மறுநாட்காலையில் ஒன்று சேர்ந்து பயணம்போவதாக இணங்கி மறுமொழி கூறினாள். அவ்வாறே அவள் பாங்கிமாருஞ் சிறிது நேரத்திற் கென்று தாம் எண்ணிய விடையைக் கேசரிவீர னிடத்தும் வியாக்கிர வீரனிடத்தும் பெற்றுக்கொண்டார்கள். பௌத்தர்மூவருந் துப்புக்கெட்ட அச்சாவடியிலே விடுதி கொள் ளச் செல்கையிற், குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் அவ்வணிகன் பின்னே அவன் வீட்டுக்குப் போகும் ஓர் இடுக்கு வழியே சென்றார்கள்.
சிறிதுநேரத்திலெல்லாம் அவ்வீட்டண்டை போய்ச் சேர்ந் தார்கள். உடனே குமுதவல்லி, “பெண்காள், என் பிறகே வாருங்கள்! உங்கள் உயிர்பிழைக்க ஓடிவாருங்கள்,ஒடிவாருங் கள்!” என்று உரத்துக்கூவித் தன்குதிரையை விரைந்து பறக்க முடுக்கினாள்.
அவள் வாயிலிருந்து பிறந்த புதுமையான சொற்களா லும், வகைதெரியாமல் அவள் செல்லும் மிக்க விரைவினாலும் மனந் திகைத்துத் திகில் கொண்டார்களாயினுஞ், சுந்தராம்பாள் ஞானாம்பாள் இருவருந் தம்மை யறியாமலே அவள் செய்த படியேசெய்து தாமும் பின்றொடர்ந்தார்கள்.
அந்த முதியவணிகனோ அவர்களைப் பின்னே பார்த்துக் கொண்டு, இமையாக்கண்களோடுந் திறந்தவாயோடும் ஒன்றும் பேசாமல் வியப்புற்று நின்றான்; அவர்கள் தன்பார்வைக்கு எட்டாமல் மறைந்துபோனபின்னுஞ் சிறிதுநேரம் அவன் அவ்வாறே நின்றான்..
எட்டாம் அதிகாரம்
மலையதாட்டுவிதவை
தன் தோழிப்பெண்கள் இருவரும் பின்னேவரக் குமுத வல்லி விரைந்து ஓடினாள்; மூவரும் மிக்க விரைவொடு செல் லும்படி தங் குதிரைகளை முடுக்கினார்கள்; அந்தச் சிறுவழியே அவர்கள் கடுகிச் சென்றபோது அருகே யாராவது இருந்து பார்த்தால், அப்பெருமாட்டியும் அவள் தோழிப்பெண்களுங் குதிரையேற்றத்திற் காட்டிய திறமையை அவர் வியவாமல் இருக்கமுடியாது. நாகநாட்டரசி தாம் பெரியதோர் இரண்டகத் தில் அகப்பட்டுக்கொண்டதாக எண்ணிய இடத்தினின்றும் பறந்துவந்து இன்னவழியாய்த்தான் தாம் போவதென்றுஞ் சிறிதும் எண்ணாமலே அவர்கள் போயினார்கள்; மற்றொரு சிறுவழி வந்து குறுக்கிடும் ஓர் இடத்தண்டை வந்தபிறகு, தம்மைப் பின்றொடர்ந்து வருவார் உண்டானால், அவர்கள் தம்மை வந்து பிடித்துக்கொள்வதற்கு இடம் இல்லாதபடி, குமுதவல்லி வேண்டுமென்றே மறைவானவழி ஒன்றில் திரும்பிப்போனாள். கடைசியாக, அன்று பகல் நல்ல ஊழியஞ் செய்த அக்குதிரைகளானவை தமக்குண்டான வருத்தத்தை இனிது புலப்படுத்திக் காட்டவே, குமுதவல்லி தன் குதிரைக் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தாள்; அதைப்போலவே அவள் பாங்கிமாருஞ் செய்தார்கள். சில பொழுதிற் குதிரையின் நடையானது இன்னுங் குறைந்து மெதுநடை யாயிற்று; விரைந்தோடி வந்தமையால் முன்னே தெரிவிக்கக் கூடாத செய்திகளைக் குமுதவல்லி இப்போது சொல்லுதற்கு ஒழிவு பெற்றாள்; அவள் பாங்கிமாரோ அவற்றை எப்போது அவள் சொல்வாள் என்று உள்ளப்பதைப்போடு எதிர்பார்த்திருந்தார்கள்.
“பெண்காள், நான் இங்ஙனஞ் சடுதியில் வரலானதைப் பற்றி நீங்கள் திகைப்புந் திகிலும் அடைந்தீர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், நீங்கள் தப்பிப்பிழைத்த இடரைப்பற்றிச் சிறிதும் அறியமாட்டீர்கள். திடுக்கிடுஞ் செய்தி ஒன்றைக் கேட்கக் கருத்தாயிருங்கள். முதன்முதற் பேர்ஆண்மைச் தொழிலொடு கூடிய நடையுடையவன்போற் காணப்பட்டவ னும், உங்களால் அவ்வளவு வியந்து சொல்லப்பட்ட நல்லழகு வாய்ந்தவனும், நம்பிக்கையை வருவித்தற்கு உரிய சொல்லுஞ் செயலுங் காட்டினவனும் ஆன அந்த இளைஞன், சிறிது நல்ல நிலைமையிலுள்ள பௌத்தபெருமான் போல் உடைஅணிக் திருந்த அந்த இளைஞன், சுருங்கச்சொல்லுங்கால், வெருக் கொளத்தக்க நல்லானைத் தவிர வேறுபிறன் அல்லன்!” என்று குமுதவல்லி மொழிந்தாள்.
சுந்தராம்பாளும் ஞானாம்பாளுந் தாம் அடைந்த வியப்பைப் பற்றி ஒருசொற்கூடப் பேச வலியற்றவர்களானார்கள்; ஏக்கத் தினாலுந் திகிலினாலும் பேச்சு இழந்து இருந்தார்கள்.
“ஆம், பலநாழிகைகளாக வழித்துணை கொண்டு நாம் வழி மேற் போந்த அவ்விளைஞனே நேற்றிரவு நம் அறையினுள்ளே முகம் மறைத்துவந்து என்மோதிரத்தைக் கைப்பற்றிப் போன வன்!” என்று பின்னுந் தொடர்ந்து பேசினாள் குமுதவல்லி.
“ஆ! தெய்வமே! நேசப்பெருமாட்டி, இதனை நீங்கள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்று சுந்தராம்பாள் இப்போது பேசும் உணர்ச்சி வந்து வினவினாள்.
அதற்குக் குமுதவல்லி தாம் இரண்டு இரவலர்களைக் கண் டதையும், பெளத்த இளைஞன் தன்பணப்பையி னுள்ளிருந்த வற்றிற் சிலவற்றைத் தற்செயலாய்க் கீழ்வீழ்த்திவிட்ட செய்தி யையுந் தன் தோழிமார்க்கு நினைப்பூட்டினாள்.
அப்போதுதான் நான் என்மோதிரத்தைக் கண்டுகொண் டேன்; மாதர்காள், உடனே யான் வியப்புந் திகிலுங் கொண் டேன் என்பதை நீங்களே எளிதில் எண்ணிக்கொள்ளலாம். நான் மோதிரத்தைக் கீழ்க்கண்ணாற் பார்த்ததுபற்றி, நல்லான் ஐயங்கொள்ளாமல் இருக்கும்பொருட்டு என் முகத்தை விரை வில் அப்புறமாகத் திருப்பிக்கொண்டேன்; அவனது பிந்திய கடவடிக்கையினால் – அது முன்போலவே செவ்வையாய் இருந் த்து – யான் அதனைப்பார்க்கவில்லையென்று நம்பி அவன் தன் னுள் மகிழ்ந்துகொண்டான் என்பதைத் தீர அறிந்தேன்.” என்று குமுதவல்லி தொடர்ந்து உரைத்தாள்.
“அவ்வளவு இளம்பருவம் வாய்ந்தவன் அவ்வளவு பெருங் குற்றத்தைச் செய்தானென்று நினைக்க மனந் திடுக்கிடுகின் றதே!” என்றாள் சுந்தராம்பாள்.
“நாம் அவன் ஆட்களின் வழித்துணையால் அச்சமின்றி விருந்தோமென்று கருதினோமே!” என்று கூறினாள் ஞானாம்பாள்.
“அந்த மோதிரத்தைப்பற்றிய நிகழ்ச்சிக்கு முன்னே நடந்த ஒரு சிறுசெயல் உண்டு; அஃது ஒருநொடிநேரம் எனக்குப் புதுமையாகப்பட்டது. அந்தப் பாசாங்குக்காரப் பௌத்தனுடன் யான் பேசிக் கொண்டிருந்த போது, நல்லானைப் ற்றி ஏதோ ஒன்று சொன்னேன்; அப்போது அவன் புதிய தொருவகையாய் ஓர் ஓசையிடவே, யான் அவனை உற்றுப் பார்க்க வேண்டியதாயிற்று. அவன் பேர்பெற்ற கள்வர் தலைவ னாகத்தான் இருக்கக்கூடுமென்று அப்போது யான் சிறிதும் ஐயங் கொள்ளவில்லை. ஆ! அவன் என்னைப் பொய்த்துணை காட்டி ஏமாற்றப்பார்த்தான் என்பதை இப்போது நினைவுகூர் கின்றேன்! நல்லானைக் குறித்து என்னை அஞ்சவேண்டா மென்று கற்பித்தான்; என் பெண்களே, இன்றுபகலில் நமது பயணத்தில் அச்சமுறுத்தும் அக்கொள்ளைக்காரனைப்பற்றி நீங்கள் திதில் கொள்ளத்தக்க எதனையும் உங்களுக்கு யான் சொல் லாமலிருந்து விட்டேன் என்பதை யான் அவனுக்குத் தெரி வித்தபோது அவன் யான் செய்தது நல்லதென்று இசைந்தும் பேசினான். இனி அவ்வுண்மையை உங்களுக்கு மறைத்து வைக்க வேண்டியதில்லை; அவ்வுண்மை யாதெனிற்; சென்ற இரவு நாம் உறங்கியதும், எனது மோதிரக்கொள்ளை நடந் தேறியதுமான அந்தச் சாவடிக்கு உரியவனால் யான் பலவகை யாலும் முன்னறிவிக்கப்பட்டிருக்கின்றேன். ஆம், அதுமட்டு மன்று; நல்லானுடைய உருவ அடையாளங்களைப் பற்றியும் போதுமான அளவுக்குத் தெரிந்துகொண்டேன்; அதனால் அவன் தற்செயலாகக் கீழேவீழ்த்திய மோதிரத்தைக் கீழ்க் கண்ணாற்பார்த்த அப்பொழுதே, அவன்றான் என்பக்கத்திற் குதிரைமேல் வந்தவனென்று தெளிய உணரலானேன்.” என்று குமுதவல்லி மொழிந்தாள்.
“நேசப்பெருமாட்டி, நீங்கள் ஏன் இந்தச் செய்தியை அந்தப் பஞ்சாலைக்காரனுக்குச் சொல்லாமல் இருந்து விட்டீர் கள்?’ என்று சுந்தராம்பாள் வினவினாள். “அவன் தன் னுடைய ஆட்களை ஒன்றுசேர்த்துத், தன்குற்றங்களுக்கு உ உரிய ஒறுப்பினைப் பெறுங் குற்றவாளியாகக் கொடிய கல்லானைச் சிறை வைத்திருப்பானே.”
“ஆ, சுந்தராம்பாள்! சடுதியிற் பறந்தோடின என்னைப் பின்பற்றி வந்தநேரத்தில், நம்மைச் சூழ்ந்திருந்த இடர்களை எல்லாம் இன்னும் நீ உணர்ந்தாயில்லையே. அந்த வணிகன் நல்லானுக்கு ஆள் என்பதில் ஐயமே இல்லை; அல்லது எப்படியோ அவனுடன் சேர்ந்து புனைசுருட்டுப் பண்ணுகிறவனா யிருக்கவேண்டும். அந்தச் சிறிய ஊரிலுள்ள சிறு விடுதி யண்டை போனதும், அங்கே சிறிது தொலைவில் நாம் பார்த்த நேர்த்தியான கட்டிடத்திலே நாம் தங்குவதற்கு இடங் கிடைக் கக்கூடுமாவென்று யான் கேட்டதும், அப்போது அம் முதிய வணிகன் தானே அவ்விடத்திற்கு உரியவன் என்று முன் நின்று அறிவித்ததும், அந்தப் போலிப் பெளத்தன் எனக்காக இடையீடின்றிப் பரிந்து பேசுவதுபோல் உடனே அவனிடஞ் சென்று கேட்டதும் எல்லாம் நீ உன்னித்திலையோ?இன் னும், அப்போது அம்முதிய வணிகன், துணையற்ற பெண்கள் மூவர்க்குத் தீங்கு இழைத்தலைப்பற்றி இரக்கங்கொண்டவனாய்ப் போலுஞ் சிறிது தடங்கிநிற்க. அதற்குள் நல்லான் தலை குனிந்து ஏதோ அவன் காதில் முணுமுணுத்ததும், அதனால் உடனே அவ்வணிகன் தான் நடந்து கொள்ளவேண்டிய வகை இன்னதென உறுதி செய்யப்பட்டதும் நீ காண்கிலையோ?’ என்று குமுதவல்லி மறுமொழி தந்தாள்.
“ஆம், எம்பெருமாட்டி, இவையெல்லாம் உன்னித்தேன்.” என்று கூவினாள் சுந்தராம்பாள்.
“நானும் அப்படியே உன்னித்தேன்.” என்றாள் ஞானாம் பாள். “ஒ,சமயக்குரவர்களே! ஆனால், கான் அவற்றிற் சிறி தும் ஐயுறவு கொள்ளவில்லையே!-”
நடுவே குமுதவல்லி, “மாதர்காள், நாம் மிகவும் பாதுகாவ லாய் இருக்கின்றோம் என்று நினைத்திருக்கும்போதே, நாம் உண்மையில் இடர்களாற் சூழப்பட்டிருக்கும் வகை இந்த உலகத்தில் எப்படி நேர்கின்றது பாருங்கள்! நம்மை குறித்துக் கள்வர்கூட்டத் தலைவனுடைய நோக்கம் எதுவாயிருக்கலாம் என்று என்னால் அளவிடக்கூடவில்லை; ஆனால் அவன் ஏதோ மிகக் கொடியதுந் துயரமுள்ளதுமான இரண்டகஞ் செய்ய நினைத்தான் என்பதிற் சிறிதும் ஐயம் இல்லை. என்றாலும், நாம் தப்பிவந்ததைப்பற்றி நாமாக மகிழ்தலேபோதும்; பெண் காள், இப்போது நாம் இவ்விரவு தங்கியிருப்பதற்கு ஓர் இடம் எங்கே தேடுவதென்று நினைக்கவேண்டும்.” என்றுரைத்தாள்.
மாலைக்காலத்து இருள் வரவரச் சூழ்ந்து வரலாயிற்று; மசங்கற்பொழுது நாகநாட்டரசியையும் அவள் பாங்கிமார் இரு வரையுஞ் சூழ்ந்துகொண்டது; இவர்கள் சென்ற சிறுவழியா னது வீடுகள் காணப்படாத ஒரு வெளியின் ஊடே செல்லு வதாகத் தோன்றியது. குதிரைகளோ ஒவ்வொருநொடியுங் தமது இளைப்பைப் பலபல அடையாளங்களாற் காட்டுவனவா யின; அந்தநங்கையும் அவள்பாங்கிமாரும் அவ்வாறே மிகவுங் களைப்படைந்தனர். ஆகவே, அவர்கள் மெதுவாகச் செல்லலா யினர்; சிறிது நேரத்துள் அச்சிறுவழியானது ஓர் அகன்ற பாதையிற் போய்ச்சேர்ந்தது. அவர்கள் நீலகிரி நகரத்திற்கு நெருங்கிச் செல்கின்றார்களோ, அல்லது தாஞ் செல்லவேண் டிய அந்நகரத்தை விட்டு வரவா அகன்று விலகிப்போகின்றார் களோ என்பதைச் சிறிதும் அறியாதவர்களாய்க் கெடுதிக்குத் துணிந்தே அப்பாட்டை நெடுகச் சென்றார்கள். என்றாலும், அவ்வளவு நல்லவழியின் கிட்ட எங்கேனுஞ் சிலகுடியிருப்புகள் இருக்கவேண்டுமென்றும், அல்லது அது விரைவில் ஓர் ஊர்க் காயினும் நகரத்திற்காயினுங் கொண்டுபோய் விடுமென்றும் உறுதியாக எண்ணினார்கள்.
உடனே சிறிது தொலைவில் ஒரு விளக்கு வெளிச்சம் மினுக்கு மினுக்கென்று தோன்றக்கண்டார்கள்; சிறிது நேரத் தில் ஒரு குடியானவள் மனையகம் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே தனக்குந் தன் பாங்கிமார்க்கும் அவ்விரவு தங்குவதற்கு இடம் உதவும்படி குமுதவல்லி கேட்டாள்; தனது தோற்றத் தினால் அவ்விடத்திற்கு உரியவள் என்று காணப்பட்ட நடுத்தர அகவையினள் ஆன ஒரு மாது அவ்வேண்டுகோளுக்கு அன் புடன் இசைந்தாள். கூலியாள் ஒருவன் அழைக்கப்பட்டான். களைப்படைந்த குதிரைகள் பணையத்துக்குட் கொண்டு சேர்க் கப்பட்டன; தாழ்மையான தாயிருந்தாலும் நேர்த்தியான அம் மனையின் கூடத்து அறையிலே அங்ஙனமே களைப்புற்ற அவ் வழிப்போக்கர்களுக்குத் திறமான சாப்பாடு கொண்டுவந்து பரிமாறப்பட்டது.
குமுதவல்லி எண்ணியபடியே, அன்புடன் வந்து முதலிற் கதவுதிறந்த அம்மாது அவ்விடத்திற்கு உரியவள் என்று தெரிந் தது. அவள் ஒரு மலையநாட்டாள். ஆகையால், அவளிடத்திற் பேர் அழகின் அடையாளங்கள் இன்னும் இருந்தன; ஆனாலும், அவள் முகத்திலே கவலைக்குந் துன்பத்திற்கும் உரிய குறிகள் புலப்பட்டன. அவளோ ஒரு கைம்பெண்; முறையே பதி னேழு பத்தொன்பது அகவை உள்ளவர்களாய்ப், பலகைமேல் உணவு கொண்டுவந்து பரிமாறிய இரண்டு இனிய அழகு வாய்ந்த பெண்கள் அவளுக்குப் புதல்விகள். அவள் கணவன் தன் வயலிலே நடந்துகொண்டுபோம்பொழுது, ஒரு கரும்பாம் பினாற் கடிக்கப்பட்டுச் சில ஆண்டுகள் முன்னே இறந்துபோ யினான். அதுமுதல் அந்தக் காணியைப்பராமரிக்குங் கடமை முழுதும் அக் கைம்பெண்ணின் மேலதாயிற்று. ஆயினும், அவள் அதனைப் பயன்படும்படி நடத்திவந்தாள்; பொருள் அளவில் அவள் குறைசொல்வதற்கு ஒன்றும் ஏதுவில்லை.
உரையாடிக்கொண் டிருந்தபோது, நாகநாட்டரசி அவ்வன் புள்ள மாதைப்பற்றித் தெரிந்த வகைகள் இவ்வளவே. தன் னைப் பற்றியோ குமுதவல்லி தான் நீலகிரி நகரத்திற்குப் பயணம் போவதாகவுந், தான் வழிதப்பி வந்துவிட்டதனாலே தானுந் தன்தோழிமாரும் இவ்வுதவியைப் பெறவேண்டியதா யிற்று என்றும் மட்டுங் கூறினாள். அவள் சிறிதேனும் நல்லா னைக் குறித்துப் பேசவில்லை; ஏனென்றால், அஞ்சத்தக்க நல்லா னால் தான் துன்புறுத்தப்பட்ட செய்திகளை அவள் அவ்வீட்டுக் காரிக்கு எடுத்துச்சொன்னால், அக்கொள்ளைக்காரர் தலைவன் தன்னிடத்தில் விருந்தாய்வந்த அவளைத் தேடி வருவான் என் னும் அச்சத்தினால் இம்மாது தம்மை இங்கே தங்க விடமாட் டாள் என்று அஞ்சினாள். இந்த மலையநாட்டு மாதினிடமிருந்து குமுதவல்லி தெரிந்துகொண்ட ஒருசெய்தி மனத்திற்குத்தளர்ச் சியைத் தருவதாயிருந்தது. அது, தான் நீலகிரிக்கு முப்பத் தைந்துகல் தொலைவில் இருப்பதாகத்தெரிந்ததே; ஆகவே, தா னுந் தன் தோழிமார்களும் அப்பஞ்சாலைத்தலைவன் வீட்டுவாயிலி லிருந்து ஓடிவந்தமையால், அப்போது தமக்கும் அம்மலைய நாட்டுத் தலைநகருக்கும் இடையிலிருந்த வழியைத் தாம் இப் போது பின்னும் மிகுதிப்படுத்திக் கொண்டார்கள் என்பது புலனாயிற்று. ஆனாலும், இப்போது அகற்காகச் செய்யக்கூடி யது ஒன்றுமில்லை; மெய்யாகவே குமுதவல்லி, தாம் செவ்வை யாகத் தப்பிவந்ததை எண்ணுமிடத்து இதற்காக மனம் வருந்த லாகாதென்று உணர்ந்தாள்.
நாகநாட்டாசியானவள் அவ்வீட்டுக்காரியின் முகத்திலே காணப்பட்ட கவலை துயரங்களின் அடையாளத்தை உன்னி யாமல் இருக்கவில்லை; தன் கணவனை இழந்த வருத்தத்தின் வேறான மற்றொரு துயரத்தோடு அவை இயைந்தனவாய் இருக்கவேண்டுமென்று அவள் எண்ணாமலும் இருக்கக்கூட வில்லை: ஏனென்றால், கணவனை இழந்ததால் உண்டான துயர மானது, இவ்வளவு காலத்திற்குப்பிறகு கனிந்து சிவநேயமாக மாறி அமைதி பெற்றிருக்குமென்று மனத்தின்கண் எண்ணி னாள். அவளுக்கு இயற்கையாகவே உள்ள மேன்மைக்குணமா னது அவள் அதனைப்பற்றி ஏதுங் கேளாமல் தடைசெய்தது. ஆனாலும், அடிக்கடி அந்நல்லவளை இரக்கத்தோடும் பரிவோடும் மனத்திற் கருதினாள். இப்போது இம்மலையநாட்டுமாதின் புதல்விகள், அவ்வீட்டினுள்ளே சிறந்த படுக்கை அறையிற் குமுதவல்லி, சுந்தராம்பாள், ஞானாம்பாள் என்னும் மூவருக்கும் படுக்கைக்கு வேண்டிய வசதிகளை ஒழுங்கு படுத்தும்பொருட்டுக் கூடத்தறையினின்றும் போனவுடனே, இந்த நல்ல கைம் பெண்ணானவள் தானே தன் துயரமான தோற்றத்தைப்பற்றி விளக்கிச் சொல்லப்புகுந்தாள்.
இப்போது நம்மை விட்டுப்போன அருமையான அவ் விரண்டு பெண்கள் மட்டுமே எனக்குக் கடவுள் அருள்பண்ணின பிள்ளைகள் அல்லர். இரண்டு ஆண்டுகளாக எங்களுடன் இல் லாமலிருக்கிற மற்றொரு பெண்ணும் உண்டு. ”- என்று சொல் லும்போதே அக் கைம்பெண் அழுதாள்.
“அப்பெண் உண்மையில் இறந்துபோயிற்றோ?” என்று குமுதவல்லி இரக்கம் நிரம்பிய மெதுவான குரலிற் சொன்னாள்: இதுபோல் மனஇரக்கமானது இசையின் இனிமை கலந்த மெதுவான குரலிற் சொல்லப்படுதல் என்றும் அரிதரிது.
“இல்லை, அம்மா, அறிவும் அழகும் மிகுந்த என் மரகதத் தைக் கொண்டுபோனது சாக்காடு அன்று. அஃது ஒரு துயர மானகதை; என்றாலும், அதனை உங்களுக்குச் சொல்லுகிறேன். மரகதம் என் பெண்மக்கள் மூவரில் மூத்தவள்: அவளுக்கு ஆண்டு – இன்னும் அவள் உயிரோடு இருந்தால் – இப்போது இருபத்தொன்று ஆகும். ஒருவரைப் புகழ்ந்து பேசுவது எனக்கு இயற்கை அன்று; ஆனாலும், உண்மையைச்சொல்லு வது எனக்கு முதன்மையாய் இருக்கின்றது; இந்தச் சாய்ங்கா லம் உங்களை என் கண்கள் காணும் வரையில், இதற்குமுன் என் மரகதத்தைப்போல் அவ்வளவு அழகான ஒரு பெண்ணை நான் பார்த்ததேயில்லை.ஆம் – அவள் அழகாயிருந்தது போல வே கற்பொழுக்கம் உள்ளவளுமாய் இருந்தாள் – அன்புள்ள மகள் – அவளை அறிந்தவர்கள் எல்லாராலும் அவள் நேசிக்கப் பட்டாள். அப்படிப்பட்ட களஞ்சியம் போல்வாளைக் கைப்பற்று தற்கு எல்லாவகையிலுந் தகுதியுள்ளவனான இந்நாட்டுப் பணக் கார இளங்குடியானவன் ஒருவனுக்கு அவளை மணம் பொருத்து வதாக உறுதிசெய்திருந்தது. அம்மா, பாருங்கள்! என் கண வனை இழந்தபிறகுங்கூட நான் ஆறுதல் அடைதற்குப் பலவழி கள் இருந்தன ; எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல காலம் என்னும்படி பல குறிகளுங் காணப்பட்டன.” என்று அம்மலையக் கைம்பெண் விடைகூறினாள்.
இதனை மிகவுங் கருத்தாய்க் கேட்டுவந்த குமுதவல்லி, “உங்கள் சொற்களால் எனக்கு முன்னமே தெரிந்தபடி, இவை கள் பிறகு எங்ஙனம் அவ்வளவு முழுதுங் கெட்டுப்போயிருக்கக் கூடும்?” என்று வினவினாள்.
”அம்மா, அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்,” என்று தன் கன்னத்தில் ஒழுகின கண்ணீரைத் துடைத்துக்கொண் டே அம்மலையமாது மறுமொழிதந்தாள்; “அம்மா, ஒருகால் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; ஆண்டுதோறும் முகமதியர் இரமசான் என்று சொல்லப்படுஞ் சிறந்த ஒரு நோன்பை ஒரு திங்கள் வரையில் நோற்றுவருகிறார்களே.” என்று தொடர்ந்து உரைத்தாள்.
“நான் அதனைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.” என்று குமுதவல்லி கூறினாள்.
“நல்லது அம்மா, அந்த இரமசான் நோன்பு நோற்கிற போது – அல்லது அதன் முடிவில் உள்ள ஒரு வழக்கத்தைப் பற்றி நீங்கள் ஒரு வேளை தெரியாதிருக்கலாம். அதாவது: எங் கேனும் அகப்பட்ட அழகில் மிகச்சிறந்த ஒரு கன்னிப்பெண் ணைத் துருக்கி சுலுத்தானுக்குக் காணிக்கையாகக் கொண்டு போய் விடுவது தான். அதற்காக அடிமை விற்பவர்கள் இரமசா னுக்குச் சில திங்கள் முன்னாகவே அழகிய பெண்களை உன் னிப்பாய்த் தேடித்திரிவார்கள்; சுலுத்தானது உவளகத்திற்குத் தெரிந்தெடுக்கப்படும்படி மற்றவர்களைப் போட்டியிற் பின் னிடச்செய்யும் அத்தனை அழகுள்ள ஒரு கன்னியைத் தாம் பெறும் நல்வினை உடையவர்கள் ஆகலாம் என்பது அவர்களு டைய ஆவல்.” என்றாள் அக்கைம்பெண்.
“இஃது எனக்கு நன்றாய்த் தெரியும். மேற்கணவாய் மலை நாடுகளில் உள்ள அழகிய இளங் கன்னிப் பெண்கள் பலர் துருக்கி தேயத்துப் பெருஞ்செல்வர்களின் மகளிரில்லத்துக் குட் செல்ல விழைந்து தாமாகவே அடிமைவிற்கிறவர்களின் பின்னே காந்தாந்திநோபிள் என்னும் நகரத்திற்குப் போ வதைத் துயரமுடன் ஒப்புக்கொள்ளவேண்டியதே. இன்னுங் கொச்சி, குடகு,மலையநாடு, நாகநாடு முதலியவற்றிலுள்ள தாய் தந்தைமாருந் தம்புதல்விகளுக்கு உயர்ந்தநிலை தேடிக்கொடுக்கும் விழைவால் அடிமை விற்பவர்களிடந் தாமே தம் உரிமைப் புதல்வியரைக் கொடுத்துவிடுவது பின்னும் மிக்க வருத்தத் தொடு சொல்லவேண்டியதா யிருக்கின்றது.” என்று குமுத வல்லி மொழிந்தாள்.
“அவை எல்லாம் அவ்வளவும் உண்மை,அம்மா! இன் னும் என்ன,அடிமை விற்கும் அவர்கள் அடிக்கடி மாதரைக் கொள்ளை கொண்டு போகுங் கொடியவர்கள். அவர்கள் நடவடிக் கைகளாற் பறிகொடுத்த குடும்பத்தில் துயரமுங் கேடும் உண்டாகின்றன. என் தலையெழுத்தும் இதுவே, அம்மா.” என்று அம்மலையமாது மறுமொழி கூறினாள்.
இப்போது அவ்வேழைக் கைம்பெண்ணின் மனத்துயரத் தின் காரணம் இதுவென்று அறிந்தாளாய்க் குமுதவல்லி, “ஒ, இது கூடுமானதா! உங்கள் அழகிய மரகதம் அங்ஙனங் கொண்டு போக்கப்பட்டனளா?” என்று கூவினாள்.
“அஃது அப்படித்தான், அம்மா.” என்று மறுமொழி சொல்கையிலேயே தேம்பித் தேம்பி அழுதாள்; “இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒருநாள் அடிமை விற்பவன் ஒருவன், ஏராளமான குதிரைச்சாரியுடன் வந்து, உணவு எடுப்பதற்காக இந்த மனையகத்தில் தங்கினான். அவன் தன்னிடத்தே ஏறக் குறைய ஆறு அழகிய இளம் பெண்களை வைத்திருந்தான்- அவர்கள் எல்லாருங் காந்தாந்திநோபிள் நகரத்திற்குப் போவ தைப்பற்றி மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள். இன்னும் அவன், பார்வைக்குக் கொடுந்தோற்றம் உடையராய்ப் படைக் கலம்பூண்ட ஆறுபேர்களைக் கூட வைத்திருந்தான்.என் மரக தத்தின்மேல் அத்தீயவன் கண்கள் பட்டநாள் பொல்லாதநாள்! இப் பெண் தன் பேரழகின் பொலிவால் துருக்கி சுலுத்தா னுக்கு உகந்தவளாய் அவ்வரச நகரத்திலே தெரிந்தெடுக்கப் பட்டு, வரப்போகின்ற இரமசான் பண்டிகை முடிவிலே, அவருக் குக் காணிக்கையாக விடப்படுதற்கு இடம் இருக்கின்தென உறுதிமொழி சொல்லி, ஆகவே, அவளைத் தன்னொடுசேர்த்து விடுவதற்கு நான் உடன்படவேண்டு மென்று முதன்முதல் அவன் எனக்கு எடுத்துச் சொல்லத்துணிந்தான்.ஆனால்,நான் அவன் சொல்லிய ஏற்பாட்டை இகழ்ந்து சினத்தோடுந் திகி லோடும் மறுதலித்து விட்டேன். அம்மா, அப்போதுதான் அவன் கைக்கூலியாலும் வேண்டுதலாலுந் தான் பெற்றுக்கொள் ளக்கூடாததை வலிவுசெய்து அடையலானான். என் கூலியாட் கள் தொலைவில் வயலிலே இருந்தார்கள்: நானோ இங்கே என் மூன்று புதல்விமாரோடுங் காவல் அற்று இருந்தேன். அந்தத் தீயவன் என்னையும் என் இளைய புதல்விகள் இருவரையுங் காலுங்கையுங் கட்டிவிடும்படி தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டான்; நாங்கள் எவ்வளவோ தடுத்துங் கெஞ்சியும் அழுதும் அவர்கள் அப்படியே செய்துவிட்டார்கள். பிறகு, மரகதம் அலங்கோலமாய்த், துன்பத்தால் மெய்ம்மறந்துபோக, அவளைக் கொண்டுபோய் விட்டனர்! என்னையும் மிஞ்சின என் இரண்டு பெண்களையுங் கட்டவிழ்த்துவிட யாரும் இந்த மனையகத்திற்கு வரும்முன்னே அந்தக் குதிரைச்சாரி நெடுந்தொலைவு போ யிருக்கவேண்டும்.”
குமுதவல்லி அப் பெண்பிள்ளையின் கையைப் பிடித்து அதனை உண்மையான இரக்கத்துடன் அழுத்திக்கொண்டு, “ஓ! இவையெல்லாங் கொடுமையாயிருக்கின்றன! இவ்வாறு உங்கள் மரகதத்தை இழந்துபோனீர்களோ?’ என்று சொன்னாள்.
அதற்கு வருத்தம் மிக்க அம்மாது, “எப்போதுமே இழந்து போனேன். தானும் நாங்களும் உள்ளான இப்பொல்லாத கொள்ளையை அவளுக்கு மணமகனாக உறுதிசெய்யப்பட்டவன் தெரிந்தவுடனே, அவன் மனத்தை வருத்திய துன்பத்தை,ஓ! அம்மா, நீங்களே எண்ணிப்பாருங்கள்! என் மரகதத்தினிடத்தி லே அவனுக்கு இருந்த உண்மையான அன்புக்கு ஓர் அடை யாளம் உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்தக்குதிரைச் சாரி யைப் பின்றொடர்தற்காக அவன் படைக்கலம்பூண்ட தோழர் கூட்டத்தொடு புறப்பட்டான்: ஆனால் அதைப்பற்றி அவன் ஒரு செய்தியும் பெறக்கூடவில்லை; அவன் காந்தாந்திநோபிள் நகரத்திற்கும் பயணம் புறப்பட்டுப் போனான். ஆனாற், பல வகைப்பட்ட இடுக்கண்களும் இடரான நிகழ்ச்சிகளும் அவனை வழியிலே தடங்கல் பண்ணின ; ஆகையால் அவ்வரசநகரத்திற்கு மிகவுங் காலந்தாழ்த்துப் போனான். இரமசான்பண்டிகை முடிவு பெற்றது; வழக்கப்படி திருவிழாக்களுங், களியாட்டுகளும், வாணவேடிக்கைளுஞ், சிறந்த ஊர்கோலங்களும் அதனைப் பின் றொடர்ந்து நடந்தன. கடைசியாக ஆட்பலியும் நடந்தேறியது; முந்நூறு அழகியபெண்கள் நடுவிலே என்னுடைய மரகதம் சுலுத்தானுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் நிகரற்ற அழகியமணியாய்ப் பொறுக்கி எடுக்கப்பட்டாள். அவ்வேழை இளம்பையன் நெஞ்சம் உடைந்தவனாய்க் காந்தாந்திநோபிளை விட்டுவந்தான்; உரியகாலத்தே தன் வீடு வந்து சேர்ந்தான். ஆனால், ஐயோ! முன்னிருந்ததற்கு அவன் வடிவம் எவ்வளவு வேறுபட்டுப்போனான்! அம்மா,நான் அவனை அடிக்கடி பார்க் கிறேன்: ஆனால், திரும்பி வந்தது முதல் அவன் வாயில் ஒரு புன்சிரிப்பாயினும் வர நான் பார்க்கவில்லை. தானே இயங்கும் ஆற்றல் வாய்ந்த மெய்யான உயிர் ஏதும் இல்லாத ஒருபொறி தன் அமைப்பின் சூழ்ச்சியால் நடைபெறுதல் போல அவன் தன் அலுவல்மேற்போகிறான். என்மகள் சுலுத்தான் மனைவி யாகி யிருக்கலாம் என்பதில் தட்டில்லை: ஆனால், ஐயோ! இந் நேரம் அவள் மனம் முறிந்துபோகாவிட்டாலுங்கூட, வெளி மினுக்கான துயரநிலையிலேதான் அவள் இருக்கின்றாள் என்று எனக்குத் துணிவாய்த் தோன்றுகின்றது.” என்று கூறினாள்.
“அவளிடமிருந்து உங்களுக்கு ஒருசெய்தியுங் வாவில்லையா?” என்று குமுதவல்லி வினவினாள்.
“ஐயோ, இல்லையே!” என்று அக் கைம்பெண் விடை பகர்ந்தாள்.”ஒருதடவை ஒரு பெண்பிள்ளை காந்தாந்திநோபிளி லுள்ள அரசன் இல்லகத்துள் நுழைந்துவிட்டால், அவளுக்கும் வெளியேயுள்ள உலகத்திற்கும் நடுவிலே கடக்கமுடியாத ஒரு பெருந்தடை உண்டாய் விடுகின்றது. அவள் யார்க்குஞ் செய்தி விடுப்பதுங் கூடாது; மற்றவர்களிடமிருந்து ஒரு செய்தியும் பெற்றுக்கொள்வதுங் கூடாது. வேறிடங்களில் தான் விட்டு வந்த பெற்றோர்,உறவினர், நண்பர்கள் முதலான எல்லாரை யும் அவள் ஒழித்துவிடவேண்டும், ஆணையொடு மறுத்துவிட வேண்டும்; அவள் சைவசமயியாயிருந்தால் தான் கைக்கொண்ட சமயத்தையுங்கூட விட்டு விடுதல் வேண்டும். சுருக்கமாய்ச் சொன்னால், அம்மா, அவள் இன்னாரென்பதே தொலைந்துபோய் விட்டது; அவளிடத்திற் பற்றுதல் வைத்தவர்கள் அவளைப் பற்றி இனி ஒன்றுங் கேளாமலேபோகலாம். என் மரகதத்தின் தலையெழுத்தும் அப்படியேயாயிற்று. அம்மா, இப்போது, என் முகத்தின்மேல் அடையாளங்களாக அவ்வளவு ஆழ்ந்த கோடு கள் அவ்வருத்தத்தினால் எவ்வாறு உண்டாயின என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள்.”
குமுதவல்லியும் அவள் பாங்கிமார் இருவரும் அம்மலைய நாட்டு மாது சொல்லிய கதையிலே துயரமும் இரக்கமும் மிகுந்த ஒருபற்றுதல் கொள்ளப்பெற்றார்கள். அவளை ஆற்று வித்தற்கு அவர்கள் ஒரு சொல்லாயினும் பேச முயலவில்லை. னெனில், அங்கே ஆறுதலுக்கு இடம் ஒன்றும் இல்லை. திரும்ப நன்மையுண்டாமென்று அவர்கள் ஓர் எழுத்தாயினுஞ் சொல்லவுமில்லை: ஏனென்றால், மனவிருப்பே அவிந்து போயிற் றென்றும், அவ்விடரினின்றும் அவளை இனித்திருப்ப முடியா தென்றும் அவர்கள் அறிந்துகொண்டார்கள்.
“இலட்சக்கணக்கான குடிமக்களுக்கு எல்லாம்வல்ல அரச னாயிருக்கும் வல்லமையுள்ள சுலுத்தான் அவர்கள் தாம் இன்பம் நுகர்தற்பொருட்டுத், தாழ்ந்தோராயினுந் தம்மோடொத்த மக் கள் சிலர்மேல் எவ்வளவு பெருந்துயரத்தைச் சுமத்திவிடு கின்றார் என்பதைத் தாஞ் சிறிதும் நினைக்கின்றார் இல்லையே! இன்னும்,அம்மா, அவ்விளவரசன்றன் இன்பத்திற்காக மற்ற நாடுகளில் உள்ள குடும்பங்கள் – என் குடும்பம் ஆக்கப்பட்டது போல்! – பாழாக்கப்படுவது பின்னுந் துயரநிகழ்ச்சியாய் இருக் கின்றதே! அப்படி யிருந்தும், அவர் அமைதியும் இரக்கமும் உள்ள நல்ல மன்னன் என்றும், அவர் அருளும் அன்பும் நிறைந்தவரென்றுந், தாம் அவற்றை நீக்கிவிட எண்ணமுள்ள வராய் இருந்துந் தங் குடிமக்களின் அன்பிற்குப் பழுதாகும் என்று அஞ்சிப்பழக்க வழக்கங்கள் பலவற்றிற்கு இடந்தந்திருக் கிறார் என்றும் பேசிக்கொள்ளுகிறார்கள்.” என்று அம்மாது தொடர்ந்து கூறினாள்.
“ஒ! அவ்வாறாயின் அவரது வல்லமையால் யாதுபயன்? எவ்வளவு நன்மைசெய்யக் கூடுமோ அவ்வளவுஞ் செய்திலரா யின் தாஞ் செலுத்தும் அத்தனை வல்லமையும் என்னபய னுக்கு?” என்று குமுதவல்லி அவ்வம்மைக்கு நேர்ந்த இடுக் கணை நினைந்து அருவருப்பு மிக்க குரலிற் பேசினாள்.
“அம்மா, பேசாதேயுங்கள்!” என்று அவ்வம்மை மறு படியுந் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “என் புதல்வி கள் திரும்பிவருகிறார்கள், காணாமற்போன அவர்களின் அக்காளைப்பற்றி நான் அவர்களிடம் பேசுவதே இல்லை,” என்று சொன்னாள்.
அப்பெண்கள் அங்ஙனமே வந்தார்கள்; குமுதவல்லிக்கும் அவள் பாங்கிமார்க்கும் ஏற்படுத்தப்பட்ட அறைக்கு அவர்களை இப்போது அழைத்துச்சென்றார்கள். அங்கே நாகநாட்டாசி யானவள் சிறிது முன்னே தான்கேட்ட துயரமான வரலாற் றைப்பற்றித் தனக்கு உறக்கம் வந்து கூடும்வரையில் தன் பாங்கி மாரொடு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தாள்.
காலையில் அவர்கள் அறையை விட்டு வந்தபோது, அவ்வம் மையும் அவள் மகளிர் இருவருந் தாஞ் செய்தற்குரிய உதவி களைக் கூடுமானவரையில் ஏற்கும் வகையாய்ச் செய்துகொண் டிருப்பதைப்பார்த்தார்கள்: பல திறப்பட்ட உணவுகளுங், காணி யில் விளைந்தனவுங், கனிகளுங், குளிரப்பண்ணுங் குடிநீர்களுஞ் சாப்பாட்டுக்காகப்பலகைமேற் கொண்டுவந்து பரப்பப்பட்டன. குமுதவல்லி, அவ்வம்மையினிடத்துக், கூலிக்காரரிற் சிலரைப் படைக்கலந் தாங்கிய வழித்துணையாக் கூட்டிவிடுக்கும்படி கேட்க எண்ணினாள்; ஆனால், அக்கைம்பெண் தற்செயலாய்ப் பேசியதொன்றி லிருந்து அவர்கள் எல்லாருந் தமது விடுமுறை காளைக் களியாட்டிற் கழிக்கத் தொலைவிலுள்ள ஓரிடத்திற்குப் போயிருக்கின்றார்கள் என்று அறிந்துகொண்டமையால், நீல கிரி நகரத்தைநோக்கிச் செல்லும்வழியிற் காணப்படுஞ் சிற்றூர் களிலாவது நகர்களிலாவது தக்க துணையொன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்னுந் தீர்மானத்தினளவில் நாகநாட்டரசி தன்னை அமைதிசெய்துகொண்டாள்.
குமுதவல்லியும் அவள் பாங்கிமாருந் தாம் பெற்றுக் கொண்ட அன்பான உதவிக்காக நன்றிமொழிகளுங் கடமை களுஞ் சொல்லிவிட்டு, அக்கைம்பெண்ணி னிடத்தும் அவள் புதல்விமார் இருவரிடத்தும் விடை பெற்றுக்கொண்டார்கள். ஈரநெஞ்சத்தொடு செய்யப்பட்ட உதவிக்காகக் கைம்மாறு ஏதும் அம்மாது விரும்பாமலும் எதிர் பாராமலும் இருந்துங், குமுத வல்லி நேரம் பார்த்து, மறைவாய் இரண்டு பரிசுகளை அவ்விரு பெண்களுக்குங் கொடுத்தாள். திருப்பவும் இப்போது நம் அழகிய தலைவி தன் அன்புள்ள பாங்கிமாரொடு பயணஞ்செல்ல நாங் காண்கின்றாம்.
ஏறக்குறையக் கட்டாயமாய்க் குறிக்கவேண்டிய இரண் டொரு செய்திகளைத் தெரிவிக்க வேண்டியிருந்தும், இது வரையில் நாம் சொல்லிக்கொண்டு வந்ததை அவற்றிற்காக நடு வே நிறுத்தவில்லை; ஆகையால், இப்போது இடம்பெற்றமை யின் அதனைச் சொல்லிவிடுவாம். அப் பஞ்சாலைக்காரனது பீட் டண்டையிலிருந்து தான் கலவரமாய் ஓடிவந்த பிறகு, ஒழிவு கிடைத்தமையாற் குமுதவல்லி இப்போது தான் அச்சந்தரும் நல்லானைத்தவிரப் பிறன் அல்லன் எனத் தீர்மானமாக எண்ணிய அவ்விளம் பௌத்தனுடன் தான் சிறிது நேரங் கொண்ட பழக் கத்தைப்பற்றி நினைந்தபொழுது, தான் சிறிதுநேரமேனும்பற்று தல் வைத்த ஒருவன் அவ்வெண்ணத்திற்கு அங்ஙனம் எள்ளள வேனுந் தகுதியில்லாதவனாய்ப் போனதைப்பற்றி மிகுந்த வருத் தங் கொள்ளப்பெற்றாள். தத்தம் வகுப்புக்குரிய உடம்பின் பேரழகெல்லாம் முறையே ஒருங்கு திரண்டு உருவாகிய இரு வர், அங்ஙனந் தமக்குள் ஏதோ அத்தன்மைத்தாகிய பற்றுதல் கொள்ளப்பெறாது ஒருங்கு கூட்டப்படுதல் கூடாததேயாம் என்பதனை முன்னரே கூறிப்போந்தாம். குமுதவல்லியின் அளவுகடந்த வனப்பினாலும், அமைதியினாலும், அறிவினாலும் நீலலோசனன் உள்ளத்தில் எழுந்த எண்ணமானது ஏற்கென வே ஏதோ காதலொடு மிகவும் இனப்பட்டதொன்றாய் இருந் தது; ஆனால், அக்கன்னிப்பெண்ணோ மும்முரமில்லாத எண் ணங்களும் விரையாத குணமும் உடையவளாய் இருந்ததனாற் சிறிது பற்றுதலுணர்வுமட்டுக் கொள்ளப்பெற்றாள். தன் புத்தப் புதிய இளம்பருவ உணர்வுகளினிடையே, மக்கள் இயற்கை யில் நம்பிக்கைகொள்ள விழைந்த ஒருத்திக்கு அந்த நம்பிக்கை, நீலலோசனனிடத்தில் ஏமாற்றம் உற்றதுபோல், அவ்வளவு கொடுமையாக அதிர்ச்சி பெறுமானால் அல்லது அழிக்கப்படு மானால் பின்னும் அது வருந்தத்தக்கதாகவே யிருக்கும். ஆகவே, அங்ஙனமானதுபற்றி அவள் புலம்பியது ஒரு வியப்பன்று. அஞ்சத்தக்க நல்லான் தன்னொடு வழிப்பயணம் வந்ததைப்பற்றி நினைக்கையில் உண்டான திகிலினும் வியப்பினும் வேறாக, அவள், அத்தனை இளைஞனாய்க் கவர்ச்சிமிக்க நோக்கம் வாய்ந்த வனாய் இனிய நடை யுள்ளவனாய் உள்ள ஒருவன் திகிலையுங் கலவரத்தையுந் தருஞ் செய்கையுடையவன் ஆயதை நினைக்கும் போது தான் மனவெழுச்சி குன்றப்பெறுவது ஒருவியப்பன்று.
இனிக், குமுதவல்லியும் அவள் பாங்கிமாருந் தம் வழியே செல்வதைப்பற்றிக் கூறுவது விடுத்துச், சிறிதுநேரம் படிப்ப வர் கருத்தை மற்றவகைகளுக்குத் திருப்புகின்றோம். இந்த அதிகாரத்தை முடிப்பதற்கு முன்னே முதலாக நீலலோசன னிடந் திருப்புவோம். குமுதவல்லியைப் பிரிந்தபிறகு அவனை யும் அவன் துணைவர் கேசரிவீரன் வியாக்கிரவீரனையுந் துப்புக் கெட்ட அச்சாவடியிலே விட்டு வந்தோம். அப்பெளத்தர் மூவருந் தங் குதிரைகளைப் பணையத்துக்குள் விட்டபிறகு, அத்தனை எளிமையான அவ்விடத்திற் கிடைக்கக்கூடிய உணவை உண் பதற்கு உட்கார்ந்தார்கள். என்றாலும், நீலலோசனன் சிறிதே உண்டான்; அஃது அளவான அவ்வுணவு தனக்குச் சுவைப் படாமையால் அன்று; ஏனெனிற் செழுமையான அல்லது சுவைமிக்க உணவிலே அவன் அவா உடையவன் அல்லன்; ஆனால், அஃது அவன் உள்ளத்திற் குமுதவல்லியின் அழகிய வடிவம் நிறைந்திருந்ததனாலே யாம். மயங்கப்படுத்தும் அத் துணை அரிய அழகினை இதற்குமுன் அவன் கண்கள் எங்கும் பார்த்ததே இல்லை; தன் காதினுள் மெல்லெனப்புகுந்த அல்லது தன் நெஞ்சத்தினுள் முழுதும் ஆழ இன்னிசை பொழிந்த அவ் வளவு ஒலி யினிய குரலினை அவன் இதற்கு முன் கேட்டதே யில்லை. அந்நாளில் தமக்குமுன் எதிர்ப்பட்ட இனிய கூட்டுற வைப்பற்றிக்கேசரிவீரனும் வியாக்கிர வீரனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்; முந்தினவனான கேசரி வீரன் குமுதவல்லியின் வனப்பினால் தன் இளைந்தலைவன் நெஞ்சங் கலவரப்பட்ட குறித்துச் சிறிதுந் துயரம் அடையாமலே இருந்தான்.
ஆனால், திடீரென்று அம்மூவரும் உட்கார்ந்திருந்த அறை யின் கதவு – அச்சாவடியின் இடத்தின் அளவு நெருக்கமாய் இருந்தமையால் தலைவனும் அவன் ஆட்களும் வேறு வேறு இருத்தற்குத் தனித்தனி அறைகள் வகுக்கப்படவில்லை — திறக் கப்பட்டது ; அப்பஞ்சாலைத் தலைவன் உள்ளே வந்தான்.
“ஐயா, இளைஞரே, நல்ல பெண்கள்கூட்டத்தை என்னு டைய விருந்தோம்பலுக்குக் கள்ளமாய்ச் செலுத்தினீர்! நான் அடைந்த மானக்கேட்டிற்காக இவ்வூரிலுள்ள ஆறு நல்ல தடி யர்களை ஒன்று சேர்த்து, உம்மையும் உமக்குத் துணைவந்த இக் கள்வர்களையும் நன்றாய்ப் பழுக்கப்புடைத்தேனானால் என் மனம் ஆறும்! நீங்கள் நல்லொழுக்கம் உள்ளவர்கள் அல்லரென எனக்கு எண்ணந் தோன்றுகின்றது; இல்லாவிட்டால் அந்த மாதும் அவள் பாங்கிமாரும் அங்ஙனம் நடந்திருக்கமாட்டார் களே.’ என்று அவன் உரத்துக் கத்தினான்.
“இறுமாப்புமிக்க முதியோனே! என்ன பேசுகின்றாய்? என்று நீலலோசனன் துள்ளி எழுந்தான்.
அதற்குப் பஞ்சாலைக்காரன் கடுகடுப்பான பார்வையோடுங் குரலோடும், “என்ன பேசுகிறேனா? அந்தப்பெண்ணும் அவள் தோழிகளும் உங்களையொத்த பெளத்தர்களின் வழித்துணை ஆகாதெனக் கருதித் தாம் பிரிந்து போகவேண்டிய தக்கநோத் தை நாடியதற்கு ஏதோ நல்லகாரணம் இருந்ததாகல் வேண்டும்.” என்று மறுமொழி புகன்றான்.
“பிரிந்தாபோயினார்கள்?” என்று நீலலோசனன் திடு மெனக் கூவி, ”உன்னுடைய சொற்கள் எதனைக் குறிக்கின் றன்?” என வினவினான்.
அவர்கள் பறந்தோடிப்போனார்கள்.” என்று விடை பகர்ந்தான் பஞ்சாலைக்காரன்; “வீட்டண்டை போனதும் –”
ஓடியா போனார்கள்?” என்று நீலலோசனன் மறுபடி யுங் கூவினான்; அங்ஙனமே வியாக்கிர வீரனுங் கூவினான்; அப்போது கேசரிவீரன் பேசாதிருந்தாலுந் தன்பார்வையில் தானுற்ற வியப்பினைப் புலப்படுத்தினான்.
“ஆம், ஓடித்தான் போனார்கள் ” என்று திரும்பவும் பஞ் சாலைக்காரன் மறுமொழி புகன்றான்; “அங்ஙனம் அவர்கள் செய்ததற்குத் தக்ககாரணம் இருக்கவேண்டுமென்பதில் ஐயமில்லை.”
அப்பௌத்த இளைஞன் மிகவுங் கலவரம் அடைந்தவனாய் ஓ புத்தரே, சாரணர்களே!’ என்று ஓலமிட்டான் ; ”உம் முடைய வெடுவெடுப்பான குணமும் அன்பற்ற செய்கையுமே, அந்தங்கையும் அவள் பாங்கிமாரும் அவ்வுதவியை வேறிடத்திற் றேடிப் பெறும்படி அவர்களைத் துரத்திவிட்டன; ஐயமின்றி நீர் தாம் அவ்வுதவிக்கு விலை ஏற்படுத்தி வாணிகம் பண்ணினீரே!
“உமது விருப்பப்படி புத்தரையாவது அவர் சாரணரை யாவது ஆணையிட்டுக் கூப்பிட்டுக்கொள்ளும்; நானோ சைவசம யத்திற்குரிய அடியார்கள் எல்லாரும் அறிய ஆணையிட்டு நீர் பொய் பேசுகிறீர் என்று சொல்லுகின்றேன்! அந்தப்பெண்ணை யும் அவள் பாங்கிமாரையும் நான் என் வீட்டுக்கு எவ்வளவோ அன்புடன் அழைத்துப்போனேன்; போய் வீட்டுக்கதவைத் திறக்க யான் திரும்பவே, அவர்கள் வில்லினின்று அம்புகள் புறப்பட்டாற்போல் விரைந்து ஓடிப்போனார்கள். ‘பறந்து ஓடுங் கள் உங்கள் உயிர் தப்ப?” என்னுஞ் சொற்கள் அப்பெண்ணின் வாயினின்றும் ஒலித்தன! அவர்கள் ஓடியே போனார்கள்! குளம் பின் ஓசையாலல்லாமல் அவர்களுடைய குதிரைகள் தம் அடி கள் நிலத்தே பாவாதன் போலவே தோன்ற அத்தனை விசை யாய்ச் சென்றன.” என்று பஞ்சாலைக்காரன் திரும்பவும் பேசினான்.
அவ்வாடவன் வெடுவெடுப் புள்ளவனாய் இருந்தாலும், அவனது உயர்ந்த பெருந்தன்மையைப் பார்க்குமிடத்து, அவன் இக்கதையைச் சொல்லிய வகையில் ஏதோ பிசகாத உண்மை ஒன்று உண்டென்பது புலப்பட்டது. அது வல்லாமலும், நன் கொடை கிடைக்குமென்று உறுதிமொழி சொன்னவுடனே அவன் தான் உதவி செய்வதிற் போதுமான பெருமகிழ்ச்சி காட்டினதை நீலலோசனன் நினைவு கூர்ந்தான். இப்பொழுதோ குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் ஓடிப் போனமையால் அவன் தான் எதிர்பார்த்ததை இழந்துபோனான். ஆகவே அப் பௌத்த இளைஞன் அவன் சொல்லிய கதையில் ஐயுறவு கொள் ளக் கூடவில்லை ; அல்லது அக்கதை வேறுபடுத்தியாவது பிச காகவாவது சொல்லப்பட்டதென்று அவன் எண்ணக்கூடவுமில்லை. அவன் பஞ்சாலைக்காரனிடங் கடுமையாய்ப் பேசிய தனது நடையை மா ற்றி, அவனை அழைத்து மேசையின் அரு கே இருத்தி நடந்தவற்றைப்பற்றி நுணுக்கமாய்க்கேட்டான்; அப்பஞ்சாலைத் தலைவன் அக்கதையைத் திரும்பவும் அப்படியே மொழிந்தான்; அவன் பின்னுஞ் சேர்த்துக் கூறவேண்டுவ தொன்றும் இல்லை. குமுதவல்லியும் அவள் தோழிமாரும் போய்விட்டார்கள் என்பது தெளிவாகப் புலப்பட்டது; அவர் கள் அடைந்த பேர் அச்சத்திற்குக் காரணம் யாதென்று அவர் கள் ஒருங்கு கூடி ஆழநினைத்துஞ் சிறிதேனும் உய்த்தறிய வலியற்றவர்களானார்கள்.
மறுநாட் காலையில் அவ்வழகிய நங்கையொடு கூடி மறு படியும் பயணந் துவங்கக் குறித்த நீலலோசனன் எண்ணம் பாழ் பட்டது. தனது உயிரின் இன்பத்திற்கு இன்றியமையாத்தான் ஏதோ ஒன்றைத் தான் இழந்துவிட்டது போலவும், இதற்கு முன் எங்குந் துலக்கமாய் நகைகொண்டு விளங்கிய ஒரு தோற் றத்தின்மேற் கரிய முகிலானது தனது நிழலை வீசி மறைத்தது போலவும் அவன் எண்ணினான்; அன்றிரவு அப்பௌத்த இளை ஞன் துயர்மிகுந்த உள்ளத்தொடு படுக்கைக்குச்சென்றான்.
ஒன்பதாம் அதிகாரம்
கொள்ளைக்காரன் மனைவி
இப்போது நாம் நல்லானிடந் திரும்புதல்வேண்டும்.ஏனெ னில், அப்போது நேர்ந்த அச்செயலின் நிலைமைகளால் நாகநாட் டரசி அவ்வளவு வருந்துதற் கிடமான பிழையெண்ணங் கொள் ளப்பெற்றது இயற்கையே என்றாலும், இதனைப்பயில்வோர், உயர்ந்த ஒழுக்கமும் நற்குணமும் வாய்ந்த நீலலோசனனை அக் கொடிய கொள்ளைக்காரனோடு ஒன்று படுத்திய குமுதவல்லி யின் பிழையிற், சிறிதும் உடன்பட மாட்டார்களாதலால் என்க.
குமுதவல்லியினின்று அவளது மோதிரத்தைக் கவர்ந்து கொண்டமையால் தன்கருத்து இனிது நிறைவேறியபின், எவ் வாறு நல்லான் அச்சாவடியைவிட்டுச் சடுதியிற்போயினான் என் பதைச் சாவடிக்காரன் வாய்மொழியால் நாம் அறிந்துகொண் டாம். இருளனையும் மாதவனையுந் தான் விட்டு வந்ததும், நீல லோசனனையும் அவன் துணைவரையுந் தவறாமற் சிறைப்படுத் தும்பொருட்டுக் கோபுரத்திற்குத் தான் விடுத்த தன் கூட்டத்தார் கையில் அவர்கள் சிறைப்பட்ட செய்தியைத் தெரிந்துகொள்ளு தற்கு இப்போது அவன் எதிர்பார்த்ததுஞ், சில கல் தொலைவி லுள்ளதும் ஆன ஓர் இடத்திற்கு அவன் விரைந்து குதிரை ஊர்ந்து திரும்பிவந்தான்.மாதவனது உடையிற்றான் கொண்ட கோலத்தொடு சிறிதுநேரம் இல்லாதிருந்து, பிறகு தான் இப் போது திரும்பிவரும் இவ்விடத்திற் பௌத்தரைச் சிறை கொண்டு தன் கூட்டத்தார் வந்திருப்பர் என்றும் அவன் எதிர் பார்த்தான்.
இவ்விடத்திற்கு வந்ததும் நல்லான் அங்குள்ள தோப்பிற் குள் நுழைந்தான்; அவன் அங்குநின்று போனதும் அங்கே இயற்றப்பட்ட கூடாரத்தின் உள்ளேயிருந்து ஒருவிளக்கு ஒளிர்வதைக் கண்டான். உடனே, புல்லின்மேற் படுத்துக் கொண்டிருந்த இருளனும் மாதவனும் விரைந்தெழுந்து இவ னிடம் வந்து சேர்ந்தார்கள்; கள்வர்தலைவன் உள்ளக் கொதிப் புடன் “என்னசெய்தி?” என்று கேட்டான்.
அதற்கு இருளன் துயரத்தோடும், ‘பொல்லாத செய்தி சொல்லவேண்டியிருப்பதற்காக வருந்துகின்றேன்.” என்று விடைபகர்ந்தான்.
“கேடுகாலமே!” என்று சினம் நிறைந்த குரலொடு, “நான் கொண்ட பொல்லாத ஐயுறவின்படியே ஆயிற்று! நல்லது ஈது என்ன செய்தி? நம்முடைய ஆட்கள் எங்கே? அவர்கள் திரும்பி வந்தார்களா? மீனாம்பாள் எப்படியானாள்?” என நல்லான் உரத் திக்கூவினான்.
”மீனாம்பாள் பெருமாட்டி பாதுகாப்புடனேதான் இருக் கிறார்கள்.’ என்று இருளன் ஏதோ சொல்வதற்கு நல்ல செய்தி வாய்த்தது பற்றி மகிழ்ந்து விடை கூறினான்; “அவ்வம்மை அதோ அந்தக் கூடாரத்தில் இருக்கிறார்கள். பௌத்தர்களைப் பற்றியோ வென்றால், அவர்கள் மறுபடியும் நம்மைத் தப்பிப் போய் விட்டார்கள்.
“மறுபடியும் தப்பியா போய்விட்டார்கள்?” என்று நல் லான் இரைந்தான்: “முனிவர்கள் எல்லாரும் அறிய, நாம் எடுத்தமுயற்சிகளில் நாம் உணர்வுகெட்ட முழுமடையர்களாய் விட்டோம் என்று தெரிகிறது! குறைந்தமட்டில் நான் மட்டும் இல்லை; ஏனென்றால், நான் ஒருவனே முயற்சியில் வெற்றி அடைந்துவருகின்றேன்!”
“ஆ! சிறந்ததலைவனே தாங்கள் வெற்றி பெற்று வந்தீர் களா? என்றான் இருளன்; “ஏதோ அவ்வளவேனும் நல்லது தான்!”
“ஆம், ஏதோ நல்லதுதான்,” என்று நல்லான் விரைந்து விடைகூறினான்; “ஆனாலும், அஃது ஆகவேண்டியதிற் பாதி யே தான். நம்முடைய ஆட்கள் எங்கே இருக்கிறார்கள்?இன் னுஞ்சிறிது நேரத்திற் குமுதவல்லியையும் அவள் பாங்கிமாரை யும் வழிமறித்துப் பிடிக்கிறதற்காக அவர்கள் வேண்டப்படு வார்கள்.”
இந்த நேரத்திற் கூடாரத்தின் திரையானது அப்புறம் இழுக்கப்பட்டது; மீனாம்பாள் வெளியே வந்தாள்.
“என் மேன்மை மிக்க கணவனே!” என்று கூவிக் கொண்டு ஓடி நல்லானுடைய மார்பின் மேற் போய்விழுந்தாள்.
“என் அழகிய மீனாம்பாள்! காதலின் மிக்க என்மனைவி!’ என்று அத்தலைவன் கூவித், தான்காதலிக்கும் அவ்வழகிற் சிறந்த மங்கையைத் தன்மார்புற அணைத்துக்கொண்டான். இவ் விருவரும் பலகிழமைகளாகப் பிரிந்திருந்தமையால், இப்போது கூடிய கூட்டத்தில் உண்டான பெருங்களிப்பின்கண் ஆழ்ந்த வனாய் அவன் சில நேரந் தன் சூழல்களையுஞ் சூழ்ச்சிகளையும் மறந்திருந்தான்.
முதலிற் கிளைத்த அவ்வுணர்வின் கொந்தளிப்புத் தணிந்த வுடனே, மீனாம்பாள், “இருளன் மேற் குற்றஞ் சொல்லாதீர். நான் என்னாற்கூடியமட்டுஞ் செய்ததுபோலவே, அவனுந் தன் னாற் கூடிய அளவுஞ் செய்தான்; ஆயினும், அவ் விளம்பெளத் தனின் துணைவர்கள் ஏதோ ஐயப்பட்டார்கள்; அதனால் எல்லாம் பிக்கிப்போயின்.’ என்று மொழிந்தாள்.
நல்லான் தன் தோளின்மேற் சாய்ந்துகொண் டிருக்கும் அழகிற் சிறந்த தன் மனையாளோடுங் கூடாரத்துக்குட் போயி னான்; அவர்கள் இரட்டுத்துணி மேல்மறைப்பின் கீழ் உட்கார்ந் தார்கள்; காப்பிரிப்பெண்ணும் மலைநாட்டுப் பணிப்பெண்ணுஞ் சிறிது தொலைவில் ஊன்றப்பட்டிருந்த வேறொரு கூடாரத் தில் இருந்தார்கள். அதனால் நல்லானும் மீனாம்பாளும் ஒருங்கு தனியே யிருக்க இடம் பெற்றனர்.
“இப்போது நடந்தவற்றை யெல்லாஞ் சொல் என் மீனாம்பாள்.” என்றான் கள்வர் தலைவன்.
அங்ஙனமே அவள் நீலலோசனனிடத்தும் அவன் துணை வர்களிடத்துந் தான் செய்த துணிகரச் செயல்களை விரித் துரைப்பாளானாள்; அங்ஙனஞ் சொல்லுமிடத்துத், தான் அவ் விளம் பௌத்தனிடத்து அளவுக்கு மிஞ்சிக் காட்டிய காதலினி மைகள் அவ்வளவும் மெதுவே சொல்லாது விட்டு நெகிழ்ந்து போயினாள். பிறகு அவள் தான் வியாக்கிரவீரன் கையால் அடைந்த கடுஞ்செயல்களைச் சொல்லவந்தபோது, அவன் தன் னைக் காலுங்கையுஞ் சேர்த்துக்கட்டிச் சாய்வணையோடு எங் ஙனம் பிணித்து முடிந்தான் என்பதை எடுத்துக்கூறினாள்; இதனைக் கேட்டதும், நல்லான் “ஒரு பௌத்தனுடைய நாய்” என்று தான் பெயரிட்ட நீலலோசனன்றன் இளைய துணைவன் மேல் அச்சுறுத்துங் கொடுஞ் சொற்களையும் பழிவாங்கும் ஆணை மொழிகளையும் உரத்துக்கூவினான். நல்லான் விரைந்துபோக் கின ஆட்கள் கோபுரத்திற்கு வந்த பிறகு அல்லாமல் தான் கட்டவிழ்த்து விடப்படவில்லை என்று மீனாம்பாள் கூறலானாள். ஏனெனிற், பின்னே தெரிந்தபடி வீட்டுக்குரியவனும் அவ்வா றே காலுங்கையுங் கட்டப்பட்டுக் கிடந்தான்; குதிரைக்காரனும் பணையத்தில் உள்ள தன் அறையிற் கட்டப்பட்டு இருந்தான். அந்தப் பௌத்தர்கள் புறப்பட்டுப் போம்பொழுது கோபுரத்தின் பெரிய வாயிற்கதவு அவர்களால் திறந்து விடப்பட்டிருந்தது. நீலலோசனனையும் அவன் துணைவரையும் பிடிக்கவேண்டுவது மிகவும் முதன்மையானதென்று கருதி, அவர்களை நாடெங்குந் தேடிப்பார்க்கும் பொருட்டு அக்கொள்ளைக் கூட்டத்தாரைத் தான் போக்கியிருப்பதாகவுந், தாந் தேடிப்போகும் பொருள் அகப்பட்டால் அல்லாமல் – அன்றி அவர்களைக் கண்டுபிடிக்கும் எண்ணம் முழுதும் பாழ்பட்டாலல்லாமல், அவர்கள் திரும்பித் தந் தலைவனிடம் வரலாகாது எனவுந் தான் அறிவுறுத்தி யிருப் பதாக மீனாம்பாள் பின்னும் மொழிந்தாள். குதிரைமேற் சென்ற அவ்வாட்கள் நேடுநேரமாய் வராததற்குக் காரணம் இது தான். அவர்கள் தன்னை விடுதலைசெய்ய வரும்வரையில், தான் இரண்டரை நாழிகைக்குமேற் சாய்வணையொடு சேர்த்துக் காலுங்கையும் இறுகக் கட்டப்பட்டிருந்தமையால், தான் மிகவுங் களைத்து நோயாய்ப்போகவே, திரும்பவுந் தன்கணவனிடம் வந்துசேரப் பயணம் புறப்படும்முன், அந்தநாளின் பிற்பகலில் தான் நெடுநேரங் காலந்தாழ்க்கலாயிற் றெனவும் மீனாம்பாள் கூறிமுடித்தாள்.
அந்தப் பௌத்தர்களுக்கு மாறாய் எடுத்த துணிவுச் செயல் தவறியதைப்பற்றி நல்லான் மிகவும் மனம் அலைக்கழிந்தான்; என்றாலும், தன் ஆட்கள் அவர்களைத் தொடர்ந்து பற்றிக்கொள் வார்கள் என்னும் ஒரு சிறு நம்பிக்கை இன்னும் அவன் கொண் டிருந்தான்.
“காதலிற் சிறந்த மீனாம்பாள், யான் துவங்கியிருக்கும் இச்சூழ்ச்சியின் வகை முழுதும் யான் விடுத்த திருமுகத்தால் நீ தெரிந்திருக்கலாம்? அதில் நீ செய்யவேண்டுஞ் செயலும் நீ அறிந்திருக்கலாம்? இதன் பொருட்டாகவே, நீ பார்க்கச்சென்ற உன் உறவினர் வீட்டிலிருந்து உன்னை அவ்வளவு திடீரென்று வரவழைக்கலானேன்.” என்று அவன் தன் மனைவியை நோக் கிச் சொன்னான்.
“மேன்மை தங்கிய பெருமானே, யான் எல்லாவகைகளை யுந் தெரிந்து கொண்டேன்.” என்று மீனாம்பாள் தன் கண வனின் அழகிய முகத்தை அன்போடும் வியப்போடும் நோக்கினவளாய் விடை பகர்ந்தாள்; “ஆனாற், குமுதவல்லியைப் பற்றியோ”
“இதோ அவளது மோதிரம்!” என்று தன் வடிவத்தின் மேல் வெற்றிக்குறிப்புக் கிளர்ந்து தோன்ற நல்லான் மறுமொழி புகன்றான்; “நான் மட்டும் மேற்கொள்ளும் எந்தச்செயலிலும் நான் வெற்றி பெறுகின்றேன்!’
அதன் பிறகு, அவன் தான் இன்னும் அணிந்திருக்கும் அக்கோலத்துடன், அச்சாவடியிற் செய்த செய்கைகளை மீனாம் பாளுக்கு விளக்கமாய் எடுத்து உரைத்தான்; அவன் அவற்றைச் சொல்லி முடித்தவுடனே, அவன் மனையாள் “ஓ! என் அன் புள்ள காதலனே, ஒருவர் அறிந்தாலும் உயிர்க்கு இறுதியாய் முடியும் ஒருநகரத்தின் நடுவிலே நீர் புகுந்தது எவ்வளவு முரட்டுத்தனம்!” என்று கூவினாள்.
“நீ என்னிடத்தில் வைத்திருக்கும் பற்றுதலின் மிகுதி யைக் காட்டுதலால் இச்சொற்கள் என் காதிற்கு இனிமை தந் தாலும், என்காதலி, இத்தகைய அச்சத்திற்கு நீ இடங்கொடா தே.” என்று அவன் மறுமொழி கூறினான்; “இப்போது நான் அவ்வளவு நன்றாய் வெற்றிபெற்றுவந்த துணிவான செய்கை யை நான் துணிந்து செய்யவேண்டுவது எனக்குக் கட்டாயமாய் இருந்தது.என்றாலும்,மீனாம்பாள், நான் மிகவும் விழிப்பாய் திருந்தேன்!குமுதவல்லியிருந்த அறையிற் கட்டாயமாக இருக்க வேண்டியதற்கு மேல் ஒரு நொடிப்பொழுதுதானும் நான் தங்க வில்லை; அவள் அணிந்திருந்த மற்ற மணிகளை அகப்படுத்திக் கொள்ளவும்கூட நான் தங்கவில்லை; அணிகல மேசைமேல் ஏராளமாய்ப் பரப்பி வைக்கப்பட்ட அணிகலங்களைக்கூட எடுக்க நான் தங்கவில்லை. அதுவேயுமன்றி, இராக்காலத்திற் காவல் அற்று உறங்கும் பெண்கள் உள்ள அறைக்குள் நுழைந்தபோது, பதுங்கிச் செல்லும் இழிந்த திருடன்போல் யான் நடக்க வேண்டி வந்ததைப்பற்றி என்னையே யான் இகழ்ந்து கொள்ள வேண்டியவ னானேன் என்பதை வெளிவிட்டுச் சொல்லுகின் றேன். திறந்தபாட்டையிற் செவ்வையாகப் படைக்கலம் பூண்டு செல்லும் வழிப்போக்கர்களை மிகவுந் துணிகரமாய் எதிர்த்து வென்று கொள்ளை கொள்ளுஞ் செய்கைக்கும் இதற்கும் எவ் வளவு வேற்றுமை!”
‘ஆம், ஆம், என் பெருமானே, உங்கள் தொழிலிலுங்கூட ஆண்மையும் மறமும் இருக்கவேண்டியனவே!” என்று வியந்து கூறினாள் மீனாம்பாள்.
இங்ஙனம் இவ்விருவருந் தத்தம் நெறிதப்பிய நடவடிக் கைகளோடு ஒன்றுபட்ட எண்ணங்களை எல்லாம் உயர்த்திக் கொள்ளுதற் பொருட்டுந், தாந் தலையிட்ட தொழில்களுக்கு ஆண்மை என்னும் மேல் மினுக்குப் பூசுதற் பொருட்டும் மிக வருந்தி முயன்றார்கள். அது, தமது தாழ்வினை மறைக்க முயன்ற பொய்ப்பெருமையோ அன்று; தம்மைத்தாமே அமை திப்படுத்திக் கொள்ள முயன்ற மனச்சான்றின் ஐயுறவோ அது வும் அன்று; அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கும்போது அவர்கள் கண்களானவை அவர்தந் தீயசெய்கைகளின் கருத் தைத் தாம் உணர்ந்தமை புலப்படுத்துமாயின் அவர்கள் தம்முட் பாராட்டிய மிக்க அன்பு பழுது படுமெனவும், அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்து நன்குமதிப்புக் குறையப் பெறுவார்களா யின் அம்முறையே அவர்கள் அன்பானது தமது குற்றத்தை யுணரும் உணர்ச்சிவலியால் அழிவுபட்டுச் சுருங்கு மெனவும் அஞ்சிய அச்சமே அவர்கள் அவ்வாறு உயர்த்திப் பேசிக் கொண்டதற்குக் காரணமாகும்.
“நல்லதிப்போது, மீனாம்பாள்,” என்று நல்லான் பேசும் போதே சிறிது நிற்க, அப்போது அவ்விருவரின் கரிய கண் களும் ஆர்வத்தோடு ஒன்றை யொன்று நோக்கின; “குமுத வல்லியின் மோதிரம் உன்னகத்தில் உள்ளமையால் நாம் எடுத்த பெருமுயற்சியில் முதற்பாகம் பாதிக்குமேல் நிறைவேறிவிட் டது. என்காதலி, விடியற் காலையிலேயே நீ நீலகிரிக்குப் புறப் பட்டுப் போகலாம்; முன்னறிவோடும் இருக்கவேண்டியவனான சந்திரன் உன்னை உடனே வந்து காண்பன்; நீலலோசனன் வந்து சேர்ந்தனனா என்பதையும் அவன் உனக்குச் சொல்வன்; அப்படி அவன் வந்திருப்பானாயின், நீ உடனே காலந்தாழாது திரும்பி நமது மலையிலுள்ள வீட்டிற்கு வருவதைத் தவிர வேறொன்றுஞ் செய்யவேண்டியதில்லை; ஏனெனில் எல்லா ஏற்பாடும் பிசகிப்போய் இருக்கும். ஆனால், அவ்வாறின்றி, நீலலோசனன் நீலகிரியில் இல்லாவிட்டால், எல்லாஞ் செவ் வையாக இருக்கின்றனவெனவும், அவன் பிடிக்கப்பட்டிருக் கின்றான் எனவும், நமது மிகச் சிறந்த சூழ்ச்சியினை நிறை வேற்றுவித்தற்கு நான் உன்னிடங் கடுக வந்து சேர்வேனென வும் நீ முடிவு செய்துகொள்ளலாம்.”
“இனிக் குமுதவல்லியைப்பற்றி என்ன?” என்று மீனாம்பாள் வினவினாள்.
“இன்னுஞ் சில நாழிகைக்குள் நம்முடைய ஆட்கள் திரும்பிவரா விட்டால், நான் இருளனோடும் மாதவனோடுஞ் சேர்ந்து புறப்படவேண்டியிருக்கும்; நாங்கள் மூவருங் குமுத வல்லியையும் அவள் தோழிமாரையுஞ் சிறைப்படுத்த வேண்டும். அல்லது ஒருவேளை அவள் தனது மந்திரமோதிரங் காணாமற் போனதைத் தெரிந்துகொண்டால், தான் நீலகிரி நகரத்திற்குப் பயணம் போவது பயனற்றதென்று கருதித் துயரத்தோடுந் திரும்பி நாகநாட்டிற்குப் போகலாம்; அங்ஙனம் நேருமாயின் நமது நோக்கம் மிக எளிதிலே நிறைவேறும், அவளுக்குச் சிறி துந் தொல்லை கொடுக்கவேண்டியதிராது.” என்று நல்லான் மறுமொழி தந்தான்.
“பின் சொன்ன படியேதான் நிகழும் என்று நம்புகின் றேன். நல்லது, என் பெருமானே, இந்தத் துணிகரமான செய் கையில் நாம் வெற்றி பெற்றால் அடைவது இன்னது என்ப தனை எனக்குச் சொல்லும்.” என்று மீனாம்பாள் வினவினாள்.
“ஓ, அப்படியா,மீனாம்பாள். என்று தன் அழகிய கரிய கண்களிலே மனக்களிப்புப் பளீரென மின்னக்கூவித், “துணி கரச்செய்கையினை எழுப்புவதும்,மனக்கிளர்ச்சியினை உந்துவது மாயிருந்தாலுங், கலக்கத்தினையும் இடரினையும் விளைப்பதான வாழ்க்கையை இனி எனக்கு நடத்த வேண்டுவது இராது.ஆ, என்காதலி மீனாம்பாள்! நாம் தொலைவிலுள்ள ஏதேனும் ஒரு நகரத்திற்குப்போய், நம் முந்தின செய்கைகள் முற்றுந் தெரியா வண்ணம் அங்கே வேறுபெயர் வைத்துக்கொண்டு நம்மகத்தில் வருவதான எல்லையற்ற செல்வத்தைப் பயன்படுத்துக் கொண் டிருப்பது மிகநல்லது; அல்லது அப்படியல்லாவிட்டால் மீனாம்பாள், நாம் விரைவில் அடையப்போவதாகிய மறைமுக வழியிற் பெறப்படும் இனிய மலையவேலியின் கண் – தன்னிடத் துள்ளன வெல்லாம் ஏராளமாய் அமைதியும் அழகும் வாய் திருப்ப, என்றும் இளவேனிலே அரசிருப்ப, மாரிகாலத்தின் குளிரானது கானாது ஒழிய, தன் இனிய தனியிடங்களிற் புயற்காற்றே நுழைய மாட்டாதாக விளங்குந் தாமரை வேலி யின்கண் இருக்கை யமைத்துக்கொண்டு இவ்வுலகவாழ்வையே நாம் முற்றுந் துறந்து விடுவாமாக!” என்று நல்லான் இயம்பினான்.
“ஆ, அதுவே உண்மையான இன்பம்!” என்று தன் கண் வன் அவ்வளவு சொல்லாற்றலுடன் வரைந்த ஓவியத்தின் நிறைந்த அழகால் தன்னுயிர் கவரப்பட்டாற்போல் மீனாம்பாள் அடங்கின குரலில் விளம்பினாள்; அவள் அழகின் மிக்க தன் தலையை அக்கள்வர் தலைவன் தோள்மேற் சாய்த்துக்கொண்டு தன் சிறந்த கரிய விழிகளால் அவன் விழிகளை நோக்கினாள். “ஆம், அத்தானே.” என்று அவள் பின்னுந் தொடர்ந்து “பிந்தின முறையே எனக்கு இசைந்ததாக இருக்கின்றது.ஓ ! இந் நிலவுலகத்திலே துறக்க நாடென்னும் அதன்கண் உள்ள கொடிப்பந்தர்ச் சுற்றுகளின் இடையே திரிவதும், அதன் பழங் களைத் தின்பதும், அம்மலைய வேலியில் ஊறும் பளிங்கொத்த தெண்ணீரைப் பருகுவதும் உலகமங்கையின் கொடைப் பொரு ளெல்லாம் மிகவும் ஏராளமாய்ச் சொரியப்பட்டுக், குவிந் துயர்ந்த மலைக்குவடுகள் வைரச்சுவர்கள் எழுப்பினாற் போல் அரைப்பட்டிகையாய்ச் சூழ்ந்து காப்பத் தோன்றும் அவ்விளம் பொழிலிலே நம் முதற் றாய்தந்தையர் அடிச்சுவடுகளின் மேல் அடிவைத்துச் செல்வதும் எவ்வளவு இனிமையாயிருக்கும்!” என்று மொழிந்தாள்.
“என்றாலும்,” என்று நல்லான் புன் முறுவல் செய்து, “என் அழகிய மீனாம்பாள், நாம் தாமரை வேலியிலேயே தங்கி விட்டாமானால் நாம் அங்கே கண்டெடுக்கும் அளவற்ற பொற் குவியலை எவ்வாறு பயன் படுத்துவதென்று எனக்குத் தெரிய வில்லை.” என்று மறுமொழி புகன்றான்.
‘ஆ! நான் இன்னும் முடியச் சொல்லவில்லை!” என்று அக் கள்வர் தலைவன்றன் மனையாள் கூறினாள்; “சிலகாலம் இன்பம் நுகர்ந்தபின் அது தெவிட்டிப்போதலும், முழுதும் இனிதாய் ஆக்கப்பட்ட எவ்வகையான வாழ்க்கையிலும் உவர்ப் புத் தோன்றுதலும் மக்களியற்கைக்கு உரிய ஊழ்வினையாய் இருக்கின்றன.நாம் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றாம் என்றே எப்போதும் நினைத்துக்கொண்டு, எல்லாவகையான இன்பங்களும் நுகருதற்கு நமது செல்வம் உதவி யாகும்படி யான ஒரு சிறந்த நகரத்திலும், அச் செல்வம் முழுமைக்கும் பிறப்பிடமான அவ் வினிய வேலியிலும், ஆக நமது காலத்தை நாம் இரண்டுகூறிட்டுக் கொள்ளலாம் என்று என்னுள்ளே அங்ஙனம் புனைந்து பார்த்துக்கொண்டிருந்தேன், என் பெரு மானே. நகரவாழ்க்கையின் இன்பங்களுஞ் செழும்பொருள் நுகர்ச்சியுந் தெவிட்டிப்போனபின், சிலகாலம் நாம் அவ்விளம் பொழிலில் அமைந்த தனியிடங்களிற் போயிருக்கலாம்; அதன்பிற் சிலகாலங் கழித்துத் தாமரை வேலியின் மலைவரம்பு களுக்கு அப்பால் உள்ள களிப்பும் பரபரப்பும் பொருந்தின உலகின் இன்பங்களைத் துய்த்தற்குத் திரும்பவும் எழும் வேட் கையொடு நாம் மறுபடியும் வெளிப்புறப்படலாம்.”
இங்ஙனமாக நல்லானும் அவன்றன் அழகிற் சிறந்த மனை யாளும் ஒருங்கு அளவளாவிப் பேசிக்கொண் டிருந்தனர்; சிறு குழந்தையைப்போல் உறுதிப்படாதவற்றில் அவர்கள் வீண் எண்ணப் பாங்கு காட்டின ராயினும், வருங்காலத்தைப்பற்றின இனிய கனவின்கண் ஆழ்ந்திருந்த னராயினும், தமக்குள் இன் பத்தை விளைவிக்கவும், அவ்வளவு சொல் நயத்தோடும் புனைந் துரைத்த இன்பவாழ்வினைப் பெறுதற்குத் தம்மைத் தகுதி யுடையரெனத் தாம் உணர்ந்தாற் போற் பேசவும் அவர்கள் தமக் குள் மறுபடியும் முயன்றனர். விழித்திருந்து காணுங் காட்சி களைப்பற்றிப் பேசுவதுபோல், அவர்கள் அங்ஙனம் உரையா டின எல்லாவற்றையுந் தாம் மெய்யாகவே அடைதற்கு நல்ல நேரம் வாய்த்ததெனத் தம்முளே அவர்கள் எண்ணி மகிழ்ந்து கொண்டார்களென்பதும் ஆண்டே அறியற்பாற்று: ஏனென் றாற், பின்றொடருந் தன் ஆட்களுக்கு நீலலோசனன் கடைசி யாகத் தப்பிப் போய்விடுவா னென்றாவது, அவனும் அவன் துணைவர் இருவருந் தான் முதலில் விடுத்தவர்களை எளிதில் வென்றது போல் இரண்டாம்முறை விடுத்தவர்களையும் அவர் அங்ஙனம் வென்று விடுவாரென்றாவது நல்லான் எண்ணங் கொள்ள மாட்டாதவனானான்.
மறுநாள் விடியற் காலையில் நல்லானும் மீனாம்பாளும் மறுபடியுஞ் சிலநாட்பிரிந்திருக்க விடைபெற்றுக் கொண்டனர்; மீனாம்பாள், தன் மலைகாட்டுப் பணிப்பெண்ணுங் காப்பிரிமாதும் முன்போலவே தன் பின்னே வரப் பயணம் புறப்பட்டாள். அவர்கள் அங்ஙனம் புறப்பட்டுப்போன சிறிது நேரத்திற்குப் பிறகு, தனக்கே உரிய தன் உடுப்பை மறுபடியும் அணிந்து கொண்டவனான அக்கள்வர் தலைவன், பெளத்தர் மூவர்க்குப் பின்னே தொடர்ந்து விடுக்கப்பட்ட தன் ஆட்கள் வந்து சேரா மைகண்டு இருளனையும் மாதவனையுந் தன்பின்னே வரக்கற்பித் தான். அவர்கள் தங்கள் குதிரைகளின்மேல் ஏறிக்கொண்டு, ஒரு சுற்றுவழியாய்ப்போய்க், குமுதவல்லி ஓர் இரவு தங்கியிருந் ததும் நல்லான் அம்மோதிரத்தைக் கவர்ந்துகொண்டதுமான அந்த நகரத்தைத் தாண்டிவந்து சேர்ந்தார்கள். சேர்ந்து, நீலகிரி யை நோக்கிப் பயணம் போம்பொழுது, குமுதவல்லியும் அவள் பாங்கிமாருஞ் செல்லவேண்டிய பாட்டையோரமாய் உள்ள ஒரு தோப்பின் செறிந்த சூழல்களிலே அவனும் அவன் ஆட்கள் இருவரும் ஒளித்துக்கொண்டார்கள்; ஏனெனில், மோதிரங் காணாமற்போன பின்னும், அஞ்சத்தக்க நல்லான் அங்கே வந் திருந்தானென்பது அச்சாவடியில் திண்ணமாய்த் தெரிந்தபிற குங், குமுதவல்லி படைக்கலம் பூண்டாரை வழித்துணை கொண்டு ஏகுவாளென்பது கூடாத தன்றெனக் கொள்ளைத் தலைவன் எண்ணினானேனும், அவ்வழித்துணை அவ்வளவு பெரிதாக இருக்குமென்பது அவனுக்குச் சிறிதுந் தென்பட வில்லை. ஆகவே, தனது ஒளிப்பிடத்திலிருந்து நல்லான், குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் நன்கு படைக்கலம் பூண்ட வலிய ஆட்கள் பன்னிருவர் பின்னே வரக் குதிரைமேற் போதலைக் காண்டலுந், தான் எதற்குந்துணிந்த அஞ்சா நெஞ்சினனாயிருந் தும் அவ் வழித்துணைவரை எதிர்க்க அவன் துணியவில்லை. மாதவனோ நம்பிக்கையுள்ள உளவாளியாய் மிகத்தேர்ந்தவனே அல்லாமற், படைக்கலஞ் சுழற்றும் போராண்மையில் நம்பத் தக்கவன் அல்லன்; எனவே, தான் துணிந்து சண்டையில் தலை யிட்டுக்கொள்வானாயின் தானும் இருளனுமே போர்முனையைத் தாங்கவேண்டி வருமெனக் கள்வர்தலைவன் அறிந்தான். அஞ்சத் தக்க அம்மிஞ்சின கூட்டத்தோடு எதிர்ப்பது வெறிபிடித்த செயலாகுமேயன்றி வேறன்று; அதனால், நல்லான். அப்பெரு மாட்டியையும் அவள் தோழிமாரையும் அவர் வழித்துணைவரை யுந் தொல்லைப்படுத்தாமற் போகவிடலானான்.
இது நல்லானுக்கு மற்றுமொரு திகிலான ஏமாற்றமாய் முடிந்தது; அவனுடைய சூழ்ச்சிகளெல்லாம் பாழாய் விடுமென வும் அச்சுறுத்திற்று. ஏனென்றால், குமுதவல்லி நீலகிரிக்குச் சென்று சேர்ந்துவிடுவா ளாயின், நீலலோசனன் இடையே தன் கையில் அகப்பட்டுக்கொண்ட போதிலும், மீனாம்பாள் தன் னிடம் ஒப்புவிக்கப்பட்ட வினையினை முடிப்பது ஆகாதென்று அவன் கண்டான். கழிந்த இராநடுவில் தான் புறப்படும் நேரத் தில், அச்சாவடி முற்றத்தினுள்ளே அந்தக் குடகுநாட்டு வணி கனை நுழைவித்த தீவினைக்கு நல்லான் மிக நொந்து கொண் டான். ஏனெனின், அவ்வணிகன் தன்னைத் தெரிந்து கொண்டதனாலேதான், குமுதவல்லி அவ்வளவு அஞ்சத் தக்க வழித்துணைகொண்டு பயணம் போகலானாள் என்று அக்கள்வர் தலைவன் எண்ணினான். குமுதவல்லி சிறிது நேரத்தில் அவ் வழித்துணையை விட்டு விட்டு, வேறு தங்குமிடம் போகும் வரையிற் படைக்கலம் பூண்ட இரண்டு பெயரை மட்டுங் கூட் டிச்செல்வாள் என்பது அவனறிவிற் படாமற் போனது இயல் பேயாம். அவள் நடவடி க்கைகளில் அந்த வகையான ஒருமாறு தல் நிழுகமென அத்தலைவன் முன்னமே உணர்தலாவது உய்த் துணர்தலாவது செய்யக்கூடவில்லை; ஆகவே, அவன் எந்த வகையாக நடந்துகொள்வதென்று சிறிதுநேரங் கலக்கமுற்று நின்றான். என்றாலுந், திடீரென்று அவனுக்கு ஓர் எண்ணந் தட்டுப்பட்டது.
”நான் நீலகிரிக்குப்போய், யாரும் அங்கே வந்து சேர் வதற்கு முன்னமே சந்திரனிடம் எல்லாந் தெரிவித்து விட்டால் என்ன? அப்படிச் செய்வேனானால் எந்த வழியாலாவது நான் குமுதவல்லியைத் தொலைத்து விடலாம்: அல்லது, நீலலோ சனன் தன்னைத் தேடித்திரியும் என் ஆட்களைத் தப்பி வந்திருந் தானானாலும் அவனையும் அவ்வாறே செய்து விடலாம்! ஆம், இந்தப் படியே செய்யக்கடவேன்.”
இங்ஙனம் நல்லான் தனக்குள் தானே சூழ்ந்துகொண் டிருக்கையில், இருளனும் மாதவனும் பேசாமல் அவனைப் பார்த்துக் கொண்டே யிருந்தனர்; ஏனெனில், தங்கள் தலைவன் ஏதோ ஒரு சூழ்ச்சியினைத் தன் உள்ளத்தில் எண்ணிக்கொண் டிருக்கின்றானென்று அவர்கள் கண்டு கொண்டார்கள்.மற் றொரு முறையும் நல்லானும் மாதவனும் உடைமாற்றிக் கொண் டார்கள்; அதன்பிறகு, கள்வர் தலைவன் இருளனுக்குப் பல வகையான முறைகளைக் கற்பித்து, வேறு புதியநிகழ்ச்சிகள் தோன்றுமானால் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்ப தையும் அறிவுறுத்தினான். இருளனுந் தன்தலைவன் கற்பித்த வற்றை முற்றும் அறிந்துகொண்டான்; பெரிய பாட்டை யைக் கருத்தாக அகன்று, நீலகிரியைநோக்கி நல்லான் பயணம் புறப்பட்டான். எனவே, அவன் குமுதவல்லியைத் தொடர்ந்து பற்றவும் இல்லை, பௌத்தர் மூவரைச் சென்று எதிர்க்கவும் இல்லை என்பதை நாம் கண்டுகொண்டோம்.
காப்பிரிமாதுந் தன் அழகிய மலையநாட்டுப் பணிப்பெண் களும் பின்னேவர நீலகிரி நகரத்திற்கு அங்ஙனமே தான் பய ணம் புறப்படும் வேளையில் நாம் விட்டுவந்த மீனாம்பாளிடம் இப்போது நாம் திரும்புவோமாக. நீலலோசனனையும் அவன் துணைவரையுந் தாம் தற்செயலாகக் காணும்படி நேருமோ என் னும் அச்சத்தாற் பெரிய பாட்டையை விட்டுப்போவது இவர் கள் நோக்கத்திற்கும் இணங்கினதாய் இருந்தது. இடையிடையே தாமுந் தங் குதிரைகளும் இளைப்பாற இடங்கொடுத்துக் கொண்டு, அந்தப் பகல்முழுதும் அவர்கள் தொடர்ந்து வழிச் சென்றார்கள். சாய்ங்காலம் அணுகியவுடன் ஓர் ஊரிலே அங் குள்ளதொரு விடுதியில் தங்கினார்கள். மலையநாட்டுக் கைம் பெண் வாயினின்றுந் துயரமான கதையைக் கேட்டுக்கொண்டு குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் அம்மனையகத்திற் கழித்த அதே இரவுதான் இஃது என்று இதனைப்பயில்வோர் உணர் தல்வேண்டும். வழிநாட்காலையில் மீனாம்பாள் மறுபடியும் நீல கிரிக்குப் பயணந் துவங்கினாள். அத்தனை விரைவில் தன்கண வனும் அந்தமுகமாகவே செல்லும்படி நேருமென்பதை அவள் சிறிதும் உணரவில்லை. குமுதவல்லியும் அவள் தோழிகளும் நல்லான்கையில் அகப்பட்டிருப்பார்கள் என்பதில் அவள் ஐயப் படவில்லை. நீலலோசனனுந் தன் பின்னே தொடர்ந்து செலுத் தப்பட்ட ஆட்களால் அவ்வாறே பிடிப்பட்டிருப்பான் என்று ஆவலோடு எண்ணினாள். அங்ஙனம் அல்லாமல், அவன் நீலகிரி நகரத்திற்குப் போய்ச்சேரப் பெற்றிருப்பானானால், தான் அவ் விடத்திற்குச்செல்லும் பயணம் முற்றிலுஞ் சிதைவுபடும் என் றும் உணர்ந்தாள்.
உச்சிப்பொழுதிற் பகலவன் எப்போதினும் உள்ள புழுக் கத்தைவிட மிகுந்த புழுக்கத்தோடுந் தன் வெங்கதிர்களை அம் மலைநாட்டு நிலப்பகுதிகளின்மேற் சொரிவானாயினான் ; அந் நேரத்தில் மீனாம்பாளும் அவள் பணிப்பெண்களும், தங்குவ தற்கு மிகவும் இசைவாய்க் காணப்பட்ட ஓர் இடத்தண்டை வந்து சேர்ந்தனர். அவள் நீலலோசனனை எதிர்ப்பட்டதும், பல கல் தொலைவு உள்ளதுமான அந்தத்தெளிநீர் வேலியோடு அஃது ஒப்புமையுற்றுத் தோன்றியது. ஏனென்றால், நாம் இப்போது பேசுகின்ற இந்த இடத்தில் ஒருதெளிவான நீரோ டையானது பழம் நிரம்பின மரங்கள் நிழற்றும் மெல்லிய பசிய மேட்டு நிலத்தைக்கடந்து சிலுசிலுவென்று ஓடியது. அங்கே அவ்வாறே அவர்கள் தங்கினார்கள்; அந்தக் காப்பிரிப்பெண் ணின் இடத்தில் உள்ளதும் அவள் தன் குதிரைச் சேணத்தின் பின்புறத்திற் கட்டப்பட்டிருந்ததுமான ஒரு சிறு கைக்கூடாரம் விரைவில் விரித்து ஊன்றப்பட்டது. என்றாலும், மீனாம் பாள் அக்கூடாரத்தின் கீழ்க்கிடந்து இளைப்பாற விரும்ப வில்லை; அவள் அவ்வோடையின் ஓரத்தேயுள்ள புல்லின்மேல் உட்கார்ந்து பலவாறு எண்ணிக்கொண்டிருந்தாள். அத்தனை பற்றுதலோடுந் தான் காதலித்த தன் கணவனையும், மலைநாட் டின் தென்பகுதியில் நல்லபெயர் வாய்ந்த தன் இல்லத்தை அவன் பொருட்டுத் தான் விட்டுவந்ததையும் எண்ணினாள். சிலநாட்களுக்குமுன் தான் பார்க்கப் போயிருந்த தன்பெற் றோரையுந், தான் மணந்துகொண்ட அவன் அஞ்சத்தக்க நல்லா னே என்று அவர்கள் சிறிதும் ஐயுறாததையும் அங்ஙனமே அவள் எண்ணினாள். அவற்றின் பின் தானுந் தன்கணவனும் மேற்கொண்டிருக்கும் அரிய செயலைப்பற்றியும் நினைந்தாள்; அதனால்வரும் பயன் பயனின்மைகளையுங் கணக்கிட்டுப் பார்த் தாள்.
இவ்வாறு ஐந்து நாழிகைவரையில் மீனாம்பாள் அந்தத் தெளிநீரோடையின் பக்கத்தே இளைப்பாறிக் கிடந்தாள்; இனித் திரும்பப் பயணந்தொடங்குதல் தக்கதென்று அவள் எண்ணிய அந்நேரத்திற் குதிரைக் குளப்படிகளின் ஓசை அவள் செவியில் வந்து பட்டது. உடனே அவள் திடுக்கிட்டு எழுந்து தன்னை அம்மரச்செறிவின் இடையே மறைத்துக்கொண்டாள். கூடார மும் அவள் பணிப்பெண்களுங் கண்ணுக்குத் தென்படாமற் பசிய மரப்பந்தர் நடுவே யிருந்தார்கள். மீனாம்பாள் யார் வரு கிறார்கள் என்று தெரியநோக்கினாள். அந்தப் பௌத்தர் மூவ ரையும் எதிர்ப்படுவதில் அவள் சிறிதும் விருப்பமில்லாதிருந்த மையால் அவள் தன்னை இங்ஙனம் முன்னிசைத்துக்கொண் டதுபற்றி யாரும் வியப்படைதல் வேண்டாம்.
ஆனாற், குதிரைமேல் அணுகவந்தவர்கள் மூன்றுமாதர்கள். ஆகவே, மீனாம்பாள் தான் ஒளிந்திருந்த இடத்தைவிட்டு வெளி யே வந்தாள். அவள் அவர்கள் முகத்தைப் பார்க்கக்கூடவில்லை; வெயில் வெப்பத்தால் அவர்கள் முக்காட்டை முகத்தின்மேல் இழுத்திருந்தார்கள். என்றாலும், தன்பாங்கிமார் பின்னேவர முன்னேறிவந்த அந்நங்கையின் அழகிய வடிவு அவள் உள்ளத்திற் சென்று பதிந்தது. உடனே மீனாம்பாள் உள்ளத்தில் ஓ ஓர ஐயுறவு சடுதியிற்றோன்றியது. இவள் காகநாட்டரசியாய் இருக் கக்கூடுமோ? இவன் என்கணவன் பார்வைக்குத் தப்பிவந்தன ளோ? தற்செயலாகத்தான் இவள் என்வழியில் வந்து அகப் பட்டுக்கொண்டனளோ? ஆம், தன் றோழிமாரொடுவந்த இவள் குமுதவல்லியேதான். மீனாம்பாள் வேண்டுமென்றேவந்த சுற்று வழியும், முன்நாள்மாலைக்காலத்திற் பஞ்சாலைத்தலைவன் வீட் டின் அருகேயிருந்து குமுதவல்லி பறந்து விரைந்துவந்த அவ வழியும் அவர்களை அவ்வாறு ஒரே இடத்திற் கொண்டுவந்து விட்டன. நாகரிகமான உடை அணிந்த அழகிய மாது ஒருத்தி அவ்வோடையின் பசியகரைமேல் நிற்றலை நாகநாட்டரசி பார்த்த வுடனே நட்பின் முன் அடையாளமாகத் தன் முக்காட்டை அப் புறம் வாங்கினாள். மீனாம்பாள் தன்கணவனால் விரித்துரைக் கப்பட்ட புனைந்துரையொடு தனக்கு எதிரிலுந் தோன்றிய வியத்தக்க அவளது அழகினையுங்கண்டு, இப்போது தான் கண்ட அந்நங்கை நாகநாட்டரசியே என்பதில் எள்ளளவும் ஐய முறவில்லை.
“ஆ! ஏதோ தற்செயலாக நீ என் பெருந்தகைக்கணவனுக் குத் தப்பி வந்துவிட்டாய். ஆகையால் நான் உன்னை எதிர்ப்பட லானது நல்வினைப்பயன்றான். என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
மிகவும் விரும்பத்தக்க முகமனுரையுடன் ஒருநொடிப் பொழுதில் முன்வந்து எதிர்கொண்டு வாழ்த்திய அவ்வழகிய கங்கையின் உள்ளத்தில் இங்ஙனம் புரண்டுகொண்டிருந்த இரண்டகமான எண்ணங்களைப்பற்றிக் குமுதவல்லி ஒருசிறிது நேரமேனும் ஐயுறவுகொள்ளக் கூடவில்லை. குமுதவல்லியும், அவள்பாங்கிமாரும், விருந்தோம்பும் அம்மலையநாட்டுக் கைம் பெண்ணின் மனையகத்தை விட்டுவந்தபோது, தாங்கள் முத லிற் போய்ச்சேரும் ஊரிலாயினும் நகரிலாயினும் வழித் துணை பெற்றுக்கொள்ள எண்ணியிருந்தார்கள் என்பதைப் பயல்வோர் நினைவுகூர்வர். ஆனால், அவர்கள் அம்மலையநாட்டு மாதினாற் குறித்துக்காட்டப்பட்ட வழியை விட்டுத் தற்செயலாய்ப் பிக்கி வந்துவிட்டார்கள். அவர்கள் ஊரையாவது நகரை யாவது அடைந்திலர்; அவர்களும் அவர்கள் குதிரைகளும் உணவு கொள்ளவேண்டியவரானார்கள்; ஆகவே, தங்குதற்கு ஏற்ற ஓர் இடத்தை அவர்கள் நாடும் நேரத்தில் அவ்வோடை யின் கரை மருங்கில் மீனாம்பாளைக் கண்ணுற்றார்கள்.
தம்முடைய குதிரைகளினின்றுங் கடுகெனக் கீழ் இழிந்து தம்மைப்போலவே பெண்பாலரா யிருத்தலால் தங்கருத்துக்கு இயற்கையாகவே இணங்கின துணைவர் கிடைத்த இந்நேரத்தை அவர்கள் உடனே பயன்படுத்திக் கொண்டார்கள்.சுந்தராம் பாள் ஞானாம்பாள் இருவரும் அந்தக் காப்பிரிமாதொடு இருக் கலாயினர். மலைநாட்டுப்பணிப்பெண்ணோ சிறிது எட்டி மரப் பந்தரி னிடையே போயிருந்தனள். அழகிய குமுதவல்லியே விழுமிய மீனாம்பாள்பக்கத்தே அந்நீரோட்டத்தின் கரைமீது அமர்ந்தனள்.
ஆ! குமுதவல்லி!நீ இங்ஙனம் நினக்குத் துணைவியாகக் கொள்ளும் அவ்வழகியமாது, மாதரழகின் இரண்டுசிறந்த முத லாய் அங்குள்ள இருவரில் எவருடம்பிலே, தன்கொலைப்பற் களை ஊன்றல்வேண்டுமென ஐயுறவுகொண்டாற்போல் நின்று நின்று சிறிது தொலைவிற் புற்களின் ஊடே அரவம் இன்றிக் கரவாய் நுழைந்துவரும் அக்கரிய நச்சுப்பாம்பைப்போல், வஞ் சனையுடையள் என்பதை நீ சிறிதும் நினைந்தாய் இல்லையே!
– தொடரும்…
– குமுதவல்லி, நாகநாட்டரசி (முதல், இரண்டாம் பாகம்), முதற் பதிப்பு: 1911.
பல்லாவரம் பொதுநிலைக்கழக ஆசிரியர், மறைத்திருவாளர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகளால் இயற்றப்பட்டுப் பல்லாவரம் பொதுநிலைக்கழக நிலையத்திலுள்ள திருமுருகன் அச்சுக்கூடத்தில் (T.M.PRESS) அச்சிடப்பட்டது, ஜனவரி 1942.