நாகநாட்டரசி குமுதவல்லி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 738 
 
 

(1911ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாரம் 1-3 | அதிகாரம் 4-6 | அதிகாரம் 7-9

நாலாம் அதிகாரம்

கோபுரம்

விரைவில் அந்தச் சிறிய குடிசையண்டை எல்லாரும் போய்ச் சேர்ந்தார்கள்; அவ்விடத்திற் கிடைக்கக்கூடியதான ஒரே ஒரு விடுதியில் வழிப்போக்கரான இவர்கள் எல்லாருந் தங்கினார் கள். அவர்கள் குதிரைகளை விட்டுக் கீழே இறங்கினவுடன் வியாக்கிரவீரன் தன் தலைவன் பின்னே அவ்விடுதியினுள் நுழைந்தான். அவ்வாறே அப்பணிப்பெண்கள் இருவருந்தம் தலைவியின் பின்னே சென்றார்கள். கேசரிவீரனோ குதிரை களுக்குத் தீனி செவ்வையாக வைக்கப்படுகிறதா என்று பார்க்க வெளியிலேயே தங்கியிருந்தான்; ஏனென்றால், அவ்விடுதியில் இந்த ஆறுகுதிரைகளுக்குந் தீனிதர ஓராளுக்குமேல் இல்லை. நுண்ணிய அவ்விடுதியி லிருந்த அக்குதிரைக்காரன் பார்வையுஞ், சூழ்ச்சி வாய்ந்த முகமுஞ், சுருங்கின தோலு முடைய கிழவனாயிருந்தாலுந், தன் உணர் குறையாதவனாயுந் தன் றொழிலுக்குரிய எல்லாவற்றையுஞ் செய்வதற்குப் போது மான அளவு உடம்பிற் சுறுசுறுப்பு மிக்கவனாயும் இருந்தான். அவன் தன்கையில் ஒரு தீப்பந்தம் பிடித்துக்கொண்டு சென் றான். குதிரை நோட்டத்தில் தேர்ந்தவன் போலவுங், குதிரைகளில் மிகவும் நேர்த்தியானதொன்றைப் பார்க்க விரும்பினவன் போலவும் அவன் முதலில் அந்த ஆறுகுதிரைகளையும் உற்றுப் பிடித்துப் பார்த்தான். அவற்றில் ஒருகுதிரையை ஆராய்ந்து பார்க்கையில், அவன் வாயினின்றுந் திடீரென ஒரு வியப்புச் சொற்பிறந்தது. கேசரிவீரன் அவ்வியப்புச் சொல்லைக் கருதிய துங்குதிரைக்காரனைச் சிலகேள்விகள் கேட்டான். அவர்களின் உரையாட்டு இன்னதென்று நாம் இங்கே சொல்லல் வேண் டாம்: அவ்வுரையாட்டின் முடிவிற் கேசரிவீரன், “இச்செய்தி களை என் அரியநண்பனே, உயிரோடிருக்கும் வேறு எந்த உயி ருக்குஞ் சொல்லாதே! வாய்வாளாதிரு. நல்ல பருகுநீரில் நீ விரும்பியது எதுவாயினும் ஒரு சாடி வாங்கிவருதற்கு இதோ காசு இருக்கிறது எடுத்துக்கொள்.” என்று கூறினான் என்பது மட்டும் இங்கே சொல்லுதல் போதும். 

கேசரிவீரன் அவ்வளவு தாராளமாய்த் தன்கையில் வைத்த பணத்தைக் குதிரைக்காரன் எடுத்துக் கொண்டான்; பிறகு, குதிரைகள் தீனியூட்டப்பட்ட மிச்சம் ஒருநாழிகை வரையி லும், உலகியல் அறிந்த கேசரிவீரன் அக்கிழவன் பக்கத்தி லேயே யிருந்தான். திரும்பவுங் குதிரைகள் வழிப்போதற்கு ஒழுங்குபட்டவுடனே நம் வழிப்போக்கர்கள் அவற்றின் சேணத்தின் மேலேறிப் புறப்பட்டார்கள். இப்படி இவர்கள் முன்னே செல்லுகையிற் கேசரிவீரன் மறைபொருள் அடங்கியதான ஒரு பார்வையைக் குதிரைக்காரக் கிழவன்மேற் செலுத்தினான். 

இங்ஙனம் வழிநடந்து போகையிற், கேசரிவீரன் தன் இளைய தலைவனிடம் மறைவாகப் பேசப் பலகால்முயன்றும், அவனது முயற்சி பயன்படவில்லை. மற்றையோர் உன்னியாத படி இவன் அவனிடம் பேசக்கூடவில்லை; ஏனென்றால், நீல லோசனன் மீனாம்பாளிடம் இன்னும் முகமனுரை பேசிக் கொண்டு கூடவே சென்றான். இப்போது இவனே முழுமையும் பேசிக்கொண்டு சென்றான் – அக்குடிசையண்டை வருதற்கு முன் அவள் புகுவித்துப் பேசிய செய்தியையே திரும்பவும் பேசாதிருக்கும் பொருட்டு அவன் பலவகைப்பட்ட பொருள் களைப்பற்றிப் பேசிக்கொண்டே போயினான். அவ்விரவு தாம் தங்கவேண்டிய கோபுரத்திற்குச் செல்லுஞ் சிறிய வழி இவ் வாறு தொலைந்தது. 

இனி, அந்தக் கோபுரமோ நாற்கோணமாகக் கல்லினாற் கட் டப்பட்டிருந்தது; அதன்கட் சிறிய சாளரங்கள் அமைக்கப்பட் டிருந்தாலும், அது மங்கலாய் ஓவென்று தோன்றியது. ஆயி னும், அதன் தோற்றம் புதுமையாகவேனும் பொல்லாங்குடைய தாகவேனுங் காணப்படவில்லை; நாட்டுப் புறங்களில் இருக்கும் மலையநாட்டுத் தலைவர்களுங் குடியானவர்களும் இருக்கும் எளிய இருப்பிடத்தையே ஒத்திருந்தது. இந்தக் கோபுரத்திற்கு உடையவன் நிலங்கள் வைத்திருக்கும் ஒரு செல்வவான் என் றும், இறந்துபோன தன்றந்தைக்கு நேசன் என்றும், அவனுக் குப் பிள்ளையுமில்லை மனைவியும் இறந்தனள் என்றும், அவன் விருந்தினரை ஓம்புங் குணமுடையவ னாகையால் நமது வருகையை உவந்து ஏற்றுக்கொள்வான் என்றும் மீனாம்பாள் நீலலோசனனுக்குத் தெரிவித்தாள். ஆயினும், ஒருசாளரத்தில் ஒரு விளக்கு மட்டுந்தான் எரிந்துகொண்டிருந்தது; அதனால் அங்கே சிறப்பான உண்டாட்டு இருந்ததாக ஏதும் புலப்பட வில்லை. தானும் அம்மங்கையுந் தம்முடன் வந்தோரும் அக் கோபுரத்தண்டையிற் போனபோது நீலலோசனன் இதைக் குறித்துப் பேசினான்; அதன்மேல் மீனாம்பாள் தன் நேசரான முதியோர் அங்கேயில்லாமல் வெளியே போயிருக்கலாமென் றும், அவர் இல்லாததுபற்றி வீட்டிலுள்ளவர்கள் நம்மை விருந் தேற்றுப் பேணுதற்குச் சிறிதுந் தடையுண்டாக மாட்டாதென் றும் நீலலோசனனுக்குக் கூறினாள். 

அழகிற் சிறந்த அந்நங்கை முன்னறிந்து சொல்லிய படியே ஒவ்வொன்றுஞ் செவ்வையாக நடந்தன. அக்கோபுரத் தண்டையிற் சென்றவுடனே, நன்றாக உடை பூண்டு பார்வைக்கு நல்லனாய்த் தோன்றிய ஓர் ஏவற்காரனாற் கதவு திறக்கப்பட்டது; அவன் மீனாம்பாளைத் தெரிந்துகொண்டவுடனே மிக்க அடக் கத்தோடு அவளை வணங்கி வாழ்த்தினான்; பின் அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மறுமொழி சொல்வானாகித், தன் தலை வன் வெளியே போயிருக்கிறார் என்றும், என்றாலும் அவளும் அவள் தோழியருங் கூடவந்தோருங் கூடியவரையில் விருந் தோம்ப்ப்படுவர் என்றும் புகன்றான். 

அதன்பின் அவர்கள் கோபுரத்தினுள்ளே புகுந்தார்கள்; முற்றத்தின் நடுவிலே ஒருகுதிரைக்காரன் குதிரைகளையெல் லாம் நிறுத்திக்கொண்டான்; பார்வைக்கு நல்லதோற்றமுடைய னாய் வந்த ஏவற்காரன் அவனுக்குக் கூடவிருந்து உதவிசெய் தமையால் அவ்விடத்திற்கு இரண்டு ஆண்மக்களே இருந்தா ரென்பது தோன்றிற்று. என்றாலும், விருந்தினரை ஓம்பு தற்கு அங்கே வேறு இரண்டு பெண்மக்களும் இருந்தார்கள். மீனாம்பாளும் நீலலோசனனும் நல்லதோர் அறைக்கு அழைத் துக் கொள்ளப்பட்டார்கள்; மற்றுக் கேசரிவீரனும் வியாக்கிர வீரனும் அம்மங்கையின் பணிப்பெண்கள் இருவரும் வேறோர் அறைக்கு அழைத்துக் கொள்ளப்பட்டார்கள். 

அந்தப் பெளத்த இளைஞனும் மீனாம்பாளும் புகுந்த அறை யிலே மிகவுஞ் சிறந்த உணவு மிகுவிரைவிற் கொண்டுவந்து வைக்கப்பட்டது. பலவகையான பதமாய்ச் சமைத்த மான் இறைச்சியுஞ், சிறந்த காட்டுக் கோழிக்கறியும், மிகச் சுவைப்ப தான தாரக்கறியும், மீனும், வேட்டமாடிக் கொணர்ந்தவற் றின் இறைச்சியும் அங்கே தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. 

இனிய தின்பண்டங்களும் வைக்கப்பட்டிருந்தன. பருகுவதற் குத் தேநீர்களுங் கொடிமுந்திரிப் பழச்சாறும் இருந்தன. மேசையின் நடுவிலே காட்டுத்தேன் நிரப்பிய பீங்கான்றட்டு ஒன்று இருந்தது. மீனாம்பாள் உள்ளக்களிப்போடும் பணி வோடும் விருந்து பரிமாறுதற்குத் தலைப்பட்டாள்: சிறந்த முகம னுங் கவர்ச்சியும் வாய்ந்த நடையொடு தானே விருந்தோம்பு தற்கு முயன்றாள். இவள் இப்போது பேசிய திறமையும் இனி மையும் பொருந்திய மொழிகளாலும், இவள் காட்டிய மாயங்க ளாலும், இவளுடைய சில முரட்டுத்தனமான நெஞ்சழுத்தத் தைப்பற்றி முன் தான்கொண்ட நினைவையும் நீலலோசனன் மறந்துபோனான். தான் மயக்கந்தருவதில்லாக் குடிநீர்களையே அருந்துவது வழக்கமாயிருந்தாலும், அன்று வழிவந்த களைப்பி னைப் போக்குதற்கு நறவு அருந்துதல் கட்டாயமாயிருக்கின்ற தெனப் புன் சிரிப்பொடு சொல்லிக்கொண்டே மீனாம்பாள் தன் கிண்ணத்தில் அதனை நிரப்பினாள்; மேலுந், தன் நண்பரான அவ் வீட்டின்றலைவர் இல்லாத நேரத்தில் தானே அவனுக்கு விருந்து செய்ய நேர்ந்தமையால், விருந்தூட்டலின் பொருட்டுத் தானே அவனுக்கு அதனை முன்செய்து காட்டல் வேண்டும் என்றுஞ் சொல்லி, முத்துப்போன்ற தன் அழகிய பற்கள் மாசற்று விளங்க நகைத்தாள். இவ்வளவு உள்ளக்களிப்போடும் விருந்து உண்ணச் செய்வதை மறுத்தால் அது தன்பால் ஒப்புரவும் நாக ரிகமும் இல்லாநடையாய்க் காணப்படுமே என்று நீலலோசனன் உணர்ந்தான்; உடனே அவள் சொற்படியே தன் கிண்ணத்தை யும் எடுத்து நறவை நிரப்பினான். பிறகு, அக்கிண்ணத்திலுள்ள அதனைப் பருகினான்: பருகியவுடன் அவன் மிகவுங் களிப் பொடு சிரிக்கத் தொடங்கினான் – அவனது பேச்சு மிகுந்த சுறுசுறுப்புடையதாயிற்று: தானே மீனாம்பாளுக்கு முகமனுரை கள் மொழியக் கண்டான் – அவன் தன்னைத் தடுக்கமுயன்றான்; ஏனென்றால், அவள் தன்உள்ளத்தைச் சிறிதாயினுங் கவர்தற்கு உரிய இயல்பு வாய்ந்தவளாய் இல்லாததனால், தான் இங்ஙனம் நடப்பது மடமையும் பிழையும் ஆகுமென்று உணர்ந்தான். ஆனால், அவன் அறிவு குழம்பியது; தன் வாழ்நாளில் இம் முதல்முறைதான், தானே பொருளறியக்கூடாமற் பேசுந் தன் சொற்குப்பையிற் கிடந்து தடுமாறினான்; இவ்வாறு நிகழ்ந்ததை விட்டு வேறுபோக்கிடம் இல்லாமையா ற், கடைசியாக நடந்தது நடக்கட்டுமென்று ஒருவகையாய்த் துணிவுகொண் டிருந்தான். அவன் மூளையில் மயக்கமேறியது: பொன்னிறமான மூடுபனி தன்னை வந்து கவிவதுபோற் றோன்றியது; ஆயினும், மேசை யின் எதிர்ப்பக்கத்தே யிருந்த மீனாம்பாளின் ஒளிமிகுந்த கண் கள் காதல் நிரம்பினவாய்த் தன்னை அதன் ஊடு உற்றுநோக்கு வதைப் பார்த்தான். தான் விருந்தேற்றுப் பேணும் நிலையி லுள் ளதனால் அதனை முற்றுஞ் செய்வாள்போல, அங்கே பலகை மேற் செவ்வையாகப் பரப்பிவைத்த பொறுக்கான செழுந்தின் பண்டங்கள் அத்தனையும் அவன் உண்ணும்படி அவள் வற்புறுத் தினாள்; கடைசியாக அங்கு இருந்த காட்டுத்தேனையும் மிகுதி யாகப் பருகும்படி தானே அதனை அவனுக்கு எடுத்துக் கொடுத் தாள். இதற்கு முன் நீலலோசனன் அதனைச் சுவைத்துப்பார்த் ததே இல்லை. அது நாவுக்கு மிகவுஞ் சுவையுடையதா யிருந்தத னாலும், அவ்வீட்டுத் தலைவனுக்கு ஈடாக நின்று விருந்தேற்றுப் போற்றும் நிலையிலுள்ள அழகிய நங்கையின் கட்டாயத்தை மறுத் திடாமல் அதற்கு இணங்கவேண்டி யிருந்ததனாலும் அவன் இக் காட்டுத்தேனைப் பருகினான். தனக்குமுன் மூடுபனிபோற் றோன்றிய மங்கிய தோற்றமானது வாவர அவனை மிகுதியாகச் சூழ்வதுபோற் காணப்பட்டது – அதன் ஊடே அம்மங்கையின் விழிகள் அவனை உற்றுப் பார்த்தபோது, அவை மிகுதியும் விளக்கமுற்று வந்தன – அவன் அவளைப் பார்க்கப் பார்க்க அவள் சொல்லுக்கடங்கா அழகு உடையளாய்த் தோன்றினாள்; அவள் தன் இனிமைவாய்ந்த குரலோடும் ‘நீலலோசன, நீரே என் மனத்தாற் கருதப்பட்ட விழுப்பொருள் – நான் உம்மைக் காத லிக்கின்றேன்” என்று திடீரெனச் சொல்லியபோது அவனை ஒருவகையான மயக்கம்வந்து பற்றியது. 

அதற்குத் தான் ஏதுமறுமொழி சொன்னதென்பதை அவன் அறிந்திலன்: இதற்குப் பின்னும் அவன் அதனை நினைவுக்குக் கொண்டு வரக்கூடவில்லை – ஆயினும் மீனாம்பாள் நோக்கத்திற்கும் விருப்பத்திற்கும் இசைந்ததாகத், தான் ஏதாவது சொல்லி யிருக்கவேண்டும் என்னுங் கலங்கிய மங்கலுணர்ச்சி மட்டும் உடையனானான்; ஏனென்றால், “என் அன்புள்ள காதலனே, உமது சொல்லுறுதிக்கு ஈடாக இன்னும் ஒரு கிண் ணங் கொடிமுந்திரிப்பழச் சாற்றை அருந்தும், அருந்தும்!” என்று அவள் உரத்துக்கூவியதை அவன் தெளிவாக நினைவு கூர்ந்தான். 

அதன் பிறகு அவள் மேசையைச் சுற்றிப்போனாள்: திரும்பவும் அவன்கிட்ட வந்தாள் – அதன்பின் அவனது கிண் ணத்தில் அச்சாற்றை நிரப்பினாள்; அப்பாற் கீழேகுனிந்து அவன் தொடைப்புறத்தில் தொங்கவிட்டிருந்த கத்தியைத் தொட்டு, “இதோ உமது பக்கத்திலிருக்கும் இந்தக் கொடு வாளானது, நீர் சண்டைமுகத்தில் வெற்றி பெறும்படி கடவுளை வேண்டுபவளும், நீர் வெற்றிபெற்றுப் பெருஞ் சிறப்பொடு மீண்டுவருங்கால் நும்மைத் தன் வீட்டிலே இறுமாப்போடு எதிர் சென்று அழைப்பவளுமான நுங்காதலியின் பொருட்டு உறையி னின்றுங் கழிக்கப்படுவதாக! பெருந்தகைமை யுள்ள நீல லோசன, நீர் அணிந்திருக்கும் இந்தப் போர்ப்படையை என் னுடைய வாய்முத்தங்களால் தூய்தாக்குகின்றேன்.” என்று சொல்லிக்கொண்டே காதல் நிறைந்த தன் கண்களால் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். 

இங்ஙனம் பேசிக்கொண்டே மீனாம்பாள் இளைஞனான நீல லோசனன் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருக்குங் கொடுவாள் மேல் தன் அழகிய தலையைக் குனிந்தாள்; அதனைத் தன் மார்பில் அணைத்துக் கொண்டு தான் ஒரு சிறு பெண் போலவும் அது தான் விளையாடுங்கருவி போலவுங் கருதிச் சில நொடிநேரம் அதனொடு விளையாடுவது போற் காணப்பட்டாள். அதன்பிற் சடுதியிலே எழுந்துநின்று, “இப்போது, என் நீலலோசன, இக் கிண்ணத்திலுள்ள இச்சாற்றைப் பருகுவதால் நுமது சொல்லை உறுதிப்படுத்தும்.” என்று உரத்துக் கூவினாள். 

இளைஞனான அப்பெளத்தன் தன் அறிவு தன் வழியில் இல்லாதவனாயினான்: மதிமயக்கும் பல்வகை மந்திரக் கவர்ச்சியில் அகப்பட்டவனானான்: அவன் தலையிலும் நெஞ்சிலும் மயக் கம் ஏறியது; ஓர் அரக்கன் கையில் அகப்பட்ட பிள்ளையானது எப்படி வலிவிழந்து கிடக்குமோ, அப்படியே அவன் முழுதும் அந் நங்கையின் வழிப்பட்டுக் கிடந்தான். அவள் குரலொலி அவன் காதுகளுக்கு இசையொலிபோன் றிருந்தது: அவள் கண்கள் தன்கண்களை நோக்கியபோது அவை இயற்கையிலில் லாத மருட்டும் ஒளி உடையவாய்த் தோன்றின : அவன் தான் மாய முறைகளாற் சூழப்பட்டிருப்பதுபோல் உணர்ந்தான்; உடனே அவன் தன் கையை நீட்டி அவள் தந்த கிண்ணத்தை வாங்கிக்கொண்டான். அப்படி வாங்கின அதேநொடியில் தாமிருக்கும் அறைக்கதவு திடீரெனத் திறந்தது: உடனே மீனாம்பாள் சிலஅடிகள் பின்வைத்துக் குதித்தாள் – நீலலோ சனன் தான் இன்னுங் குடியாத அக்கிண்ணத்தை மேசைமேல் வைத்தான் – நம்பிக்கை யுள்ளவனான கேசரிவீரன் அவன் எதிரே வந்தான். 

அந்தப் பௌத்த இளைஞன் உடனே தன்னிருக்கையில் நின்றும் எழுந்தான் – இங்ஙனந் தான் எழுந்தது என்ன எண்ணத்தினா லென்பதைத் தானே அறிந்திலன் – நடுவில் இவ்வாறு வந்ததற்காகத் தன் ஏவற்காரனைக் கடிந்துகொள்ளுகிறதா, அல்லது தன்னை ஒரு பேரிடரில் உட்படுத்துவதாகத் தன் அறிவுக்குத் தென்பட்டு வருகின்ற இம் மாயமுறையினின்று தன்னை மீட்கவந்த அவனது வருகையை நல்லது என்று ஏற்றுக்கொள்ளுகிறதா, இன்னதென்று அவனுக்கு ஒன்றுந் தெரியவில்லை. அவன் எழுந்து எதிரே தள்ளாடினான்; கேசரி வீரன் தன்றோள்களில் அணைத்துக் கொள்ளாதிருந்தால் அவன் கீழே வீழ்ந்திருப்பான். நீலலோசனன் தன் உணர்வை இழந் தான், சுற்றிலும் உள்ள பொருள்கள் எல்லாம் அவனுக்கு வெறும் பாழாய்த் தோன்றின – திரும்பவும் அவனுக்கு அறிவு தோன்றி ஏதோ ஒரு புதிய நிகழ்ச்சி நேர்வதாக அறிவிக்கும் வரையில் அவனுக்கு அவையெல்லாம் வெறும் பாழாய்க் கிடந்தன. 

அவன் ஒரு கட்டிலின்மேற் படுத்துக் கிடந்தான்; அவ னிருந்த அறையில் ஒரு விளக்கு மினுக்கு மினுக்கென்று எரிந்துகொண் டிருந்தது; மேலும், அவன்மேற் குனிந்து கொண் டிருந்த ஓர் ஆடவனது நிழலால் அஃது இன்னும் இருளோவென் றிருந்தது. இந்த ஆள் தன்கையை நீலலோ சனன் தோள்மீது வைத்து அவனை எழுப்புதற்காகத் துடித்த குரலோடு, “அன்புள்ள பெருமானே, எழுந்திருங்கள்! பெரு மானே நீங்கள் எழுந்திடும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகின் றேன்!” என்று சொல்லி அவற்றை மெதுவாக அசைத்தான். 

நீலலோசனனுங் கட்டிலினின்று எழுந்திருப்பதற்கு முயன்றான்: ஆனால் தன் தலை ஈயக்கட்டிபோற் சுமையாயிருத் தலை உணர்ந்தான்: திரும்பவுந் தலையணைமேற் சாய்ந்து, அபின் தின்ற ஒருவனைப்போல் மங்கலாய் அரைவாசி மூடப்பட்ட கண்களோடும் பார்த்தான். தன்னையெழுப்ப முயல்வோன் இன்னானென்று கூட அவன் தெரிந்துகொள்ள முடியவில்லை. பெளத்தன்மேல் ஆணை, எழுந்திருங்கள்!” என்று அந்த ஆள் கூவினான்; இன்னும் விரைந்த குரலோடு, “அன்புகூர்ந்து எழுந்திருங்கள்! நீங்கள் பல்வகை இடர்களாற் சூழப்பட்டிருக் கிறீர்கள்!” என்று கூவினான். 

நீலலோசனன் றன் மூளையில் உண்டான குழப்பத்திற்குந் திகைப்பிற்கும் நடுவிலே, ஏதோ இன்னதென்று அறியப்படாத ஓரிடர் வரப்போகிறதென்னும் ஓர் உணர்ச்சிமட்டும் மெது வாகத் தோன்றிற்று; ஆகவே, பெரும்பாடுபட்டுத் தன்னையே தான் எழுப்பிக் கொண்டான். 

”என்ன! என் நன்றியுள்ள கேசரிவீரன் நீதானோ?” என்று கடைசியாகத் தன் மூத்த துணைவனைத் தெரிந்து கொண்டவன் போல் வினவினான். 

“ஆ! இதோ தண்ணீர்!” என்று கேசரிவீரன் சொல்லிக் கொண்டே கிட்ட இருந்த ஒரு மேசையண்டை விரைந்து போய் ஒரு கைக்குட்டையைத் தண்ணீரில் தோய்த்துக் கொண்டுவந்து தன் இளையதலைவனின் கொதிக்கும் நெற்றி மேற் கட்டினான். 

அதன்பிறகு ஒரு கிண்ணத்தில் தெளிவான தண்ணீரை நிரப்பி, அதனை நீலலோசனன் பருகும்படி வாயிற் கொடுத் தான். கேசரிவீரன் எதிர்பார்த்ததற்கு மேலாகவே அதனைப் பருகினதனால் விளைந்த நன்மைகள் மிகவிரைவில் மேம்பட்டுத் தோன்றின; சில நொடிகளில் நீலலோசனன் தன் முழு உணர்வுந் தனக்கு வரப்பெற்றான். அவன் சுற்றிலும் நோக் கினான்; விருந்தாட்டு நடந்த அறையில் இப்போது தான் இல்லை என்று கண்டான்; இப்போது தானிருப்பது ஒரு படுக்கையறை என்று தெரிந்து கொண்டான். 

“இன்னும் பொழுதிருக்கும்போதே நாம் இவ்விடத்தை விட்டு விரைந்து புறப்படுவம். ஏனெனில், எம்பெருமானே, நாம் இடர்களாற் சூழப்பட்டிருக்கின்றாம் என்பதனை யான் திரும்பவுஞ் சொல்லுகின்றேன்.” என்று கேசரிவீரன் கூறினான். 

“ஆ! உண்மையில் இங்கே இரண்டகம் நடந்திருக்கின்றதா?’ என்று சடுதியிற்கூறி, விருந்தாட்டு மேசையின் பக்கத்தே நிகழ்ந்த வெல்லாந் தன் மனத்திற் றிடீரென நினை வுக்குவரவே, “ஆம் – இங்கே அது நடந்திருக்கத்தான் வேண் டும்!” என்று நீலலோசனன் சொல்லுகையில், அவன்கை இயற்கையாகவே தன் கொடுவாட்பிடியை நாடியது. 

ஆ! நாடியும் என்னை! அதனை அவன் உறையினின்றும் இழுக்கக் கூடவேயில்லை. மிகுந்த வலிவோடு அதனைப் பிடித்து இழுத்தான்: ஆனாற் பயனில்லை! கத்தியின் இலையும். உறையும் உருகி ஒன்றாய்ப் போனதுபோல, அஃது அவ்வளவு அழுத்தமாக அதனுள்வைத்து இறுக்கப்பட்டிருந்தது. இப்படிச் செய்ததன் கருத்து என்னை? ஒருகாற் பார்த்த பார்வையே அம் மறைபொருள் இன்னதெனத் தெரிவிப்பதாயிற்று. அக்கத்தி யின் பிடியிலும் உறையின் மேற்பாகத்திலுஞ் சூழ்ச்சியாய்ச் சேர்க்கப்பட்டிருந்த ஓர் இரும்புக் கம்பியானது, அக்கத்தியை அசைய வொட்டாதபடி இறுக்கிவைப்பதாயிற்று. 

“அதனை நான் அவிழ்த்து விடுகிறேன். நாம் இந்தக் கோபுரத்தைவிட்டுப் புறப்படும் முன்னமே, நாம் மூவரும் இப்படைக்கலங்களைக் கையாளவேண்டியிருக்கும்.” என்று கேசரி வீரன் கூறினான். 

“வியாக்கிரவீரன் எங்கே?” என்று நீலலோசனன் வினவினான். 

இக் கேள்விகேட்டு முடிவதற்குள் அங்கே கதவு திறந்தது, வியாக்கிரவீரனே நேரில் வந்து தோன்றினான். 

“அவள் பாதுகாவலாக வைக்கப்பட்டிருக்கின்றாளா?” என்று கேசரிவீரன் கேட்டான்; இப்படிக் கேட்டபோது இவன் நடத்தையும் பேச்சும், இவன் தான் நன்றாய் அறிந்த அந்நேரத்தின் பரபரப்புக்குத் தக்கபடி சுறுசுறுப்பும் விரைவும் வாய்ந்திருந்தன. 

“ஆம், அவள் பாதுகாவலாக வைக்கப்பட்டிருக்கின்றாள் அந்தப் படிறியான பெண்பிள்ளை!” என்று வியாக்கிரவீரன் மறுமொழி புகன்றான். அமைந்த நோக்கமுள்ளவனான வீட்டுக் காரனும் மேற்கொண்டு ஏதுங் குறும்பு செய்யாவண்ணம் அவ் வாறே காலுங் கையுங் கட்டப்பட்டு வலிவிழந்து கிடக்கின்றான், இனி நாம் குதிரைக்காரனைத்தான் ஒரு கை பார்க்கவேண்டியிருக்கிறது.” 

உடனே கேசரிவீரன் விரைந்து “நாம் இந்தக் கோபுரத் தின் எல்லையைத் தாண்டிப்போவதற்கு முன்னே, நல்லான் தன் கொள்ளைக் கூட்டங்களோடும் வந்து மேற்பாய்ந்து விழாம லிருந்தால் மட்டுமே” என்று சேர்ந்து பேசினான். 

“ஆ! நல்லானா?” என நீலலோசனன் திடீரெனக் கூறி னான். “இது கூடுமானதா? அந்த நங்கை – அழகிய மீனாம்பாள்.” 

“வாருங்கள் பெருமானே!’ என்று கேசரிவீரன் உரத்துக் கூவி, “இப்போது இவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லப் பொழுது இல்லை! உங்கள் கொடுவாள் இப்போது கையாளத் தக்கதா யிருக்கிறது! வேண்டிய பொழுது அதனை எடுத்தாள உங்களுக்குப் பெளத்தன் வலிமை தரக்கடவன்!” என்று சொன்னான். 

“ஒ! நல்லது! எனக்கு வலிலிருக்கிறது. இப்போது நான் முன்போலவே ஆய்விட்டேன்!” என்று அப்பௌத்த இளைஞன் கூறினான். 

வியாக்கிரவீரன் கையில் வெளிச்சம் ஏந்திவர அவனும் அவன் உடன்வந்த உண்மையாளர் இருவரும் அறையை விட்டு வெளியே புறப்பட்டார்கள். விருந்தாட்டு நடந்தேறிய அறைக்குச் செல்லும் வழியின் எதிரே இவ்வறைக்க தவுந் திறப்பதாக நீலலோசனனுக்கு நினைவுவந்தது. அவ்விருந்தாட் டறையின் கதவு திறக்கப்பட்டபடியே யிருந்தது; அங்கே விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன; தின்பண்டங்கள் இனிய வாக வைக்கப்பட்டிருந்த பலகையானது முன் நீலலோசனன் அதன் பக்கத்தில் உட்கார்ந்தபோது இருந்தபடியே இருந்தது; இப்போது அவ்வறையினுள்ளே அவன் பார்வை நுழைந்த போது, மீனாம்பாள் காலுங் கையுங் கட்டப்பட்டுச் சாய்மான மெத்தைக் கட்டிலின்மேற் படுத்துக் கிடக்கவும், அங்கே அவ ளைச் சிறைப்படுத்துதற்கு வாய்ப்பாக அதனைச் சுற்றிலும் ஒரு கயிறு கட்டியிருக்கவுங் கண்டான். 

உடனே நீலலோசனன் தன் துணைவரை நோக்கி, “நீங் கள் ஏதோ அஞ்சத்தக்க பிழையான எண்ணத்தில் வருந்துவ தாகத் தெரிகின்றதே? இந்நங்கைக்குச் செய்த மானக்குறைச் சல் பெருந்திகிலை உண்டாக்குகின்றதே!” என்று கூறினான். 

“நீலலோசன – பெருமான் நீலலோசன!” என்று புலம் பற் குரலோடுங் கூவி, “நான் இவ்வாறு நடத்தப்படுதலைக் காண உமக்கு மனம் வந்ததா?” என்று மீனாம்பாள் உரத்துச் சொன்னாள். 

“வந்து விடுங்கள் பெருமானே! சாரணர்கள் மேல் ஆணை வந்து விடுங்கள்! நாங்கள் செய்வது இன்னதென்று எங்கட்குத் தெரியும்.” என்று கேசரிவீரன் சடுதியிற் கூறினான். 

இச்சொற்களைக் கேட்டதும் உண்மை தெரிந்து கொள்ளு தற்கு இப்போது நேரமில்லை யென்பது அந்தப் பெளத்த இளை ஞன் மனத்திற் பட்டது; உடனே அவன் மிகக்கடுகித் தன் துணைவர் பின்னே படிக்கட்டின்கீழ் இறங்கினான். அவர்கள் வீட்டு முற்றத்திற்குப் போய், அங்கிருந்து குதிரை நிலையத் திற் சென்று, அங்கே அதனை அடுத்த ஓர் அறையில் வைக் கோற் படுக்கைமேற் கிடந்து உறங்கின குதிரைக்காரனைப் பார்த்தார்கள். 

“இப்படிச் செய்வதைவிட இவ் வாளிடத்தில் நாம் வேறொன்றுஞ் செய்யவேண்டுவதில்லை” என்று கேசரிவீரன் சொல்லிக் கொண்டே அவ்வறைக்கதவை இழுத்துச் சாத்தித் தாழ்க்கோல் இட்டான். 

அந்த மூன்று குதிரைகளும் விரைவிற் சேணமுதலியன இடப்பட்டன; அதன்பின்பு அவைகள் வீட்டு முற்றத்திற்குச் செலுத்தப்பட்டன: உடனே வியாக்கிரவீரன் பருமனான ஒரு சாவியைக் கொண்டு வந்து பூட்டைத் திறந்து பெரியவாயிற் கதவுகளையும் மலாத் திறந்தான். அடுத்த நொடியில் இந்த மூன்று வழிப்போக்கர்களும் அந்தக் கோபுர எல்லையைத் தாண் டிப் போயினர்கள். 

“இப்போது நாம் நம் விருப்பப்படி செல்ல வேண்டியது தான். ஏனென்றால், ஏமாற்றிக்கொண்டுவரப்பட்ட நாம் இந்த மலைநாட்டிடங்களைப் பற்றிச் சிறிதும் அறியோமாகலின்’ என்று கேசரிவீரன் சொன்னான். 

அவ்விடத்தை விட்டு அவர்கள் கடுகிச் சென் றார்கள்; அவர்கள் அவ்வாறு குதிரைகளைக் கடுகச் செலுத்திக்கொண்டு சென்றமையால், நீலலோசனன் தான் தெரிந்து கொள்வதற்கு மிக்க ஆவலோடும் எதிர்பார்த்திருந்த செய்திகளைத் தெரிந்து கொள்ள இடமில்லாமற் போயிற்று. ஆயினும்,அவன் இன்னுந் தன் நினைவின் வழிப்பட்டே யிருந்தான். தான் வருங்காற் கோபுரத்தின்மேல் விருந்தாட்டறையின் கதவுகள் திறக்கப்பட் டிருந்தபோது, தன் துணைவர்கள் ஏதோ பிசகான எண்ணத்தால் தவறு செய்துவிட்டார்கள் என்று நடுங்கினனாயினும், அக் கோபுரத்திற்கு நல்லான் தன் கள்வர்கூட்டத்தோடும் வரப் போகிறானென்பதைத் தன்னவர் எப்படி யறிந்தார்கள் என்று தான் தெரிந்திலனாயினும், பின்னர்ச் சிறிதுநேரத்தில் எழுந்த ஆழ்ந்த எண்ணத்தினால் அவர்கள் செய்தது பொருத்தமாகத்தானிருக்க வேண்டுமென்றும், அங்கே ஏதோ இரண்டகம் நடந் திருக்க வேண்டுமென்றும் அவன் இனிதுணர்ந்தான். இன் னும், அந்நங்கை ஏதோ தீதான கருத்துக் கொண்டிருந்தாளென் பது, உறையினுள்ளே கொடுவாளானது இறுகப் பிணிக்கப்பட் உருந்தமையினாலேயே நன்கு விளங்கிற்று: பின்னும், அவள் எவ்வளவு சூழலாகத் தன்படைக்கலத்தைப் பயனற்றதாகச் செய் யும் இசைவான நேரத்தை நாடித், தன்பக்கத்தே உணாப்பொருள் நன்றாகப் பரப்பிய மேசையின் மேற் குனிந்து, தன் கொடுவாளை முத்தமிட்டு விளையாடுவாள் போல் மாயங் காட்டிய செய்கை முழுதும் நீலலோசனன் நினைவு கூர்ந்தான். 

அது மிகவும் இனியதோர் இராப்பொழுதா யிருந்தது; வானம் எங்கும் வான்மீன்கள் தொகுதி தொகுதியாக நிறைந்து, வெள்ளிய மதியினை இனிது பின்பற்றி நின்றன. அஃது ஏறக் குறையப் பகற் காலத்தைப் போல் அவ்வளவு வெளிச்சமுள்ள தாக இருந்தது; நீலலோசனனும் அவன் துணைவருங் குதிரை களைக் கடுகச் செலுத்திக் கொண்டு போகும் அங்குள்ள நிலத் தோற்றம் எல்லாம் வெண்மையான ஒளிவெள்ளத்தின்கண் முழுகினாற்போலத் தோன்றின. இங்ஙனம் ஒரு நாழிகை நேரம் வரையில் இவர்கள் கடிவாளத்தை இழுத்துப் பிடியாமலே குதிரையூர்ந்து சென்றார்கள் – கடைசியாக ஒரு பட்டினத்தின் கட்டிடங்கள் அவர்கள் காட்சிக்குத் தென்பட்டன. இன்னும் அவர்கள் அப்பட்டின எல்லையில் வரும்வரையிற் குதிரையின் கடுநடையைக் குறைக்கவேயில்லை: அவ்வெல்லைக்கு வந்தபிறகு தான் தாம் செவ்வனே வந்து சேர்ந்ததாக உணர்ந்தார்கள். சுருக் கில் வகையான ஒரு சத்திரத்தண்டை வந்து சேர்ந்தார்கள்: அச்சத்திரத்தி லுள்ளவர்க ளெல்லாரும் நெடுநேரத்திற்கு முன்னமே உறங்கப் போனார்களாயினும், புதியராய் வந்தவர்கள் கூப்பிட்டவுடனே எழுந்து வந்து உதவினார்கள். குதிரைகள் நிலையத்திற் சேர்ப்பிக்கப்பட்டன; நீலலோசனனுக்கும் அவன் துணைவர்களுக்கும் இசைவான தக்க அறைகள் ஒழுங்குசெய்து தாப்பட்டன. 

இப்போது கடைசியாக நீலலோசனன் தான் அறிந்து கொள்ளுதற்கு மிக விழைந்த செய்திகளைத் தெரியப்பெறுதற்கு நேரம் வாய்த்தமையால், அவைதம்மைத் தெரிந்து கொள்ளாமல் அவன் படுக்கைக்குச் செல்லக்கூடவில்லை. இராக்காலத்திடை யிலே கடுகக் குதிரையூர்ந்து வந்தமையால், நீலலோசனனிடஞ் சிறிது தங்கியிருந்த தூக்கமயக்கமும் பறந்துபோயிற்று; இழைந் தாற் போன்ற சிறிய தலைவலியைத் தவிரக் கட்குடி மயக்கத் தால் விளையுந் தீங்கு பிறிதொன்றும் அவன் அடையவில்லை. கேசரிவீரனும் வியாக்கிரவீரனும் அச்செய்திகளைத் தெரிவிப் பதற்கு விருப்பம் அற்றவ ரல்லர்; பிறகு, அச்சத்திரத்திற் றம் இளைய தலைவனுக்கென்று விடப்பட்ட அறையின் கண்ணே அவ்விருவரும் உறங்கச் செல்லுதற்குமுன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். 

“அஃதெப்படியோ நான் அறியேன், முதலிலிருந்தே அந்த நங்கையை நாம் தலைப்பட நேர்ந்ததில் எனக்கு விருப்பமே இல்லை. ஒருகால் நீலகிரி நகரத்திற்குச் செல்லும் பாட்டையில் நம்மை விடுவதாகப் பொய்கூறிய அச்சுடுமூஞ்சிக் குடியானவனைப் பற்றி யான் கொண்ட வீண் நம்பிக்கையாலும் ஐயுறவாலும் எனக்கு அஃது அப்படித் தோன்றியதோ, மாட் சிமை தங்கிய தாங்கள் யான் சொல்வதை மன்னிக்கவேண்டும். தாங்கள் துணைவருவதானால், தான் அதற்கு இசைவதாக அந்த நங்கை எளிதிலே இணங்கிக் குறிப்புக் காட்டியதில் ஏதோ ஒரு புதுமை யிருப்பதாக எனக்குத் தோன்றியது. மேலும், பெரு மானே, தங்களைத் தன்வழிப் படுத்துவதற்காக அவ்வம்மை தங் களைப் பார்த்த பார்வையும் என் கருத்தைவிட்டு அகன்றிலது. என்றாலுந், துணியப்படாத ஒருவகை மனக்கலக்கத்தைத் தவிர வேறு ஒன்றும் என் மனத்தில் தோன்றவில்லை – உண்மை யைச் சொல்லுமிடத்து, அதற்காக என்னையே நான் நொந்து கொள்ள வேண்டியவனா யிருக்கிறேன்; ஏனென்றால்,மாட் சிமை நிறைந்த தாங்கள் உலகத்தில் மிக விழிப்பாகவுள்ள மக்கள் வகுப்பில் என்னைச் சேர்த்திருக்கிறீர்களன்றோ?” என்று கேசரிவீரன் கூறினான். 

நீலலோசனன் புன்சிரிப்போடு, “என் நல்ல கேசரிவீர. பின்னுஞ் சொல்ல வேண்டுவதெல்லாஞ் சொல், நான் இது வரையிற் செய்ததைவிட, இனிமேல் உனது கருத்தான நடையை மிகவும் உன்னித்துச் செல்வேன்.” என்றான். 

வியாக்கிரவீரன் தன் தலைவன் உறிய முகமனுரையைப் பணிவோடு ஏற்றுப் பின்வருமாறு சொல்லப் புகுந்தான்:- 

“கோபுரத்திற்கு இரண்டரை நாழிகை குதிரையோட் டத்திலிருந்த சிறிய ஒரு குடிசையின் கண்ணே நாம் நம்முடைய குதிரைகளுக்குத் தீனிதருவதற்காகத் தங்கியதை மாட்சிமை நிறைந்த தாங்கள் நினைவுகூர்ந் திருக்கின்றீர்கள். அங்கிருந்த குதிரைப் பாகன் குதிரை நோட்டத்திற் கைதேர்ந்தவனும், நேர்த்தியான குதிரையைப் பாராட்டுகின்றவனும் ஆன சூழ்ச்சி மிக்க ஒரு கிழவன். அவன் தன் கையிற்கொண்டு வந்த வெளிச் சத்தினாலே குதிரைகளை ஆராய்ந்து பார்த்து வருகையில், அந்த நங்கை ஏறிவந்த அழகிய குதிரையின் பொம்மையிலே வைக் கப்பட்ட சுடுதழும்பைப் பார்த்தான்; உடனே, அவன் வாயில் வியப்போடுங்கூடிய சிலசொற்கள் சடுதியிற் பிறந்தன. உடனே யானும் அவனை என்னவென்று வினவினேன். முதன்முதல் அவன் என்மேல் ஐயப்பட்டான். மாட்சி நிறைந்த தாங்கள் இப்போது தெரிந்து சொள்ளப்போகுஞ் செய்திகளால், அப் படிப்பட்ட நிலைமையில் அவன் ஐயுறவு கொண்டது இயற்கை யேயாகும் என்பது விளங்கும். ஆயினும், நான் அக்குதிரைக் காரக் கிழவனுக்கு நாங்கள் உண்மையுள்ள மாந்தர்கள் என்று மெய்ப்பித்துக் காட்டினேன். அவனுக்குக் கைக்கூலி கொடுப் பதாகப் பின்னுஞ் சொல்லுறுதி செய்து, அவன் வாயினின்றே எல்லாச் செய்திகளுந் தெரிந்து கொண்டேன். சுருங்கச் சொல் லுங்கால், எம்பெருமானே, அந்த நங்கை ஏறிவந்த அழகிய குதிரை திருடர்தலைவனான நல்லானுக்கே உரியது.” 

உடனே நீலலோசனன்,” ஆ! என்று இறும்பூது உற்று, “அப்படியானால் அந்த நங்கை யார்?” என்று வினாவினான். 

“பெருமானே, எனக்கு அது தெரியாது. அவள் அவன் மனைவியாகவாவது, உடன் பிறந்தாளாகவாவது, அல்லது வைப்பாட்டியாகவாவது இருக்கலாம்; எனக்குத் தோன்றிய மட்டில் அவள் கடைசியிற் சொன்னபடியாகத் தான் இருக்கவேண்டும்; ஏனெனில், அவ்வளவு இரண்டகமாக நடப்பவள் நல்லொழுக் கத் துறைகளைக் கடைப்பிடிப்பாள் என்று எண்ண இ இட மில்லையே. அஃதெப்படியானாலும், அக்குதிரை, ஊரெங்குந் தெரிந்த கள்வர் தலைவனான நல்லானுக்கே உரிய தென்பதை அக்குதிரைக்காரக்கிழவன் தெரிந்து கொண்டது மெய்.ஆனால், அவன் அதனைத் தான் எவ்வாறு தெரிந்து கொண்டானென் பதைத் தானும் எனக்கு அறிவிக்கவில்லை; யானும் அதனைத் தெரிந்துகொள்ளக் கவலைப்படவில்லை. தனக்கும் நல்லானுக்கும் ஒருகால் உண்டான தொடர்பினைப் பிறரறியாமல் தன்மட்டில் வைத்திருக்க எண்ணினான் என்பதில் ஐயமில்லை.” என்றான் கேசரி வீரன். 

“நல்லது, அம்மறை பொருளை நீ தெரிந்து கொண்ட வுடனே, நீ எனக்கு அதனை அறிவியாதது எது காரணத்தால்?” என்று நீலலோசனன் கேட்டான். 

“ஆ, பெருமானே, தாங்கள் அந்நங்கை மீது அறிவுமயங்கி யிருந்தீர்கள் என்பதனை யான் காணவில்லையா? அவள் அழகி யாயும் நீங்கள் இளைஞராயும் இருந்தமையால் அஃது இயற்கை யேயாம் -” என்று கேசரி வீரன் மறுமொழி கூறுதற்குள்; 

நீலலோசனன் பதை பதைப்போடும், ‘புத்தன் அறிய நீ என்னைப் பிழைத்தறிந்தாய்! முதலிற் சிறிது நேரம் யான் மயங்கிய துண்டு – அல்லது யான் கலக்கமுற்ற துண்டு; ஆனால், அவள் பார்வையையும் வகையையும் யான் நோக்கிய அளவில் அவ்வுணர்ச்சி மறைந்து போயிற்று” என்றான். 

கேசரிவீரன் இடைமறித்து, “நல்லது, நல்லது பெரு மானே, ஏதோ யான் தங்களைத் தவறுதலாய் எண்ணினேன்- ஆயினும், ஒருபாதி யான் சொல்லிய துண்மை என்பதைத் தாங் களும் ஒப்புக்கொள்ள வேண்டியதே; ஏனென்றால், விருந் தாட்டு மேசையின் பக்கத்திலே தாங்கள் அவள் மாயத்தில் முழுதுங் கவரப்பட் டிருந்தீர்களன்றோ! என்றான். 

அதற்கு நீலலோசனன், “நாணத்தோடும் நான் அதனை ஒப்புக்கொள்ளுகின்றேன்.” என்று வெட்கமுற்று, “ஒரு கிண் ணங் கொடிமுந்திரிப் பழச்சாற்றை யான் பருகினேன்; அந் நங்கையும் அதனை அவ்வாறே பருகினாள்; எனினும், அக்காட்டு நறவை யான் பருகிய பின்னரேதான் என் பகுத்தறிவு குழம்ப லாயிற் றென்பதனை இப்போது நினைவு கூர்கின்றேன்.’ என்று மறுமொழி புகன்றான். 

“இம்மேற்கணவாய் மலைப்பக்கங்களில் தேனீக்கள் மயக் கந் தருந் தேனையே பூக்களினின்றும் உரிஞ்சுதலால், அத் தகைய தேனானது மக்களுடைய மூளையை மயங்கச் செய்வது ஒரு வியப்பன்று!” என்று கேசரிவீரன் கூறினான். 

”இம்மறைபொருளின் அந்தப்பாகம் இப்போது விளங்கி யது. கரவுள்ள அந்தப் பெண்ணானவள் அந்நறவை மிகுதியாக உண்ணும்படி என்னைக் கட்டாயப்படுத்தினாள். விருந்தோம்பு வாள்போல என்னை அவ்வளவு சூழலாகத் தான் செய்யுங் காரி யங்களுக்கு உடம்படுத்தினாள். அன்புகூர்ந்து கேசரிவீர மற் றுஞ் சொல்ல வேண்டுவதைச் சொல்.’ என்றான் நீல லோசனன். 

நன்றியுள்ள அத்துணைவன் முன்விட்டதிலிருந்து திரும்ப வுஞ் சொல்லப்புகுந்து: “மாட்சிமை நிறைந்ததாங்கள் அந்தப் பெண்ணின் மேல் நிரம்பவுங் காமுற்றதாக எண்ணினேனாயி னுங், குதிரைகள் தீனி யூட்டப்பட்ட குடிசையினின்றும் நாம் வந்தபிறகு தங்களுடன் மறைவிற் பேசப் பலகால் முயன்றேன் அஃதொன்றும் பயன்படாமற் போயிற்று. உண்மையைச் சொல்லுமிடத்துத் தங்களுடன் பேசுவதற்கு இடம் வாய்த்தா லுங்கூட அதனால் ஏதும் பயன் விளையாதென்றே அஞ்சினேன்; ஏனென்றால், யான் ஐயப்படுதலைப்பற்றித் தாங்கள் தங்கட்கு வழக்கமாயுள்ளபடி விளையாட்டாக நகையாடி விடுவீர்க ளென்றும், நல்லானுடைய குதிரை அம்மாதரிடம் வந்ததற்குப் பலவகையான காரணங்களைக் கற்பித்துக் கூறுவீர்களென்றுங் கருதினேன். எப்படியாயினும், ஒவ்வொன்றையும் உன்னித் துப்பார்த்துக் கருத்தாயிருப்பதற்குத் தீர்மானித்தேன். நாமும் அந்தக்கோபுரத்தில் வந்துசேர்ந்தோம். தாங்களும் அந்தமாதும் அங்கே விருந்தாட்டறைக்குப் போயினீர்கள். வியாக்கிரவீரனும் யானும் அம்மாதின் தோழிமார்களோடு விருந்துண்டு இருந் தோம். நாங்கள் உணவருந்தும்போது கொடிமுந்திரிப் பழச் சாறுங் காட்டுத்தேனும் எங்கட்குங் கொண்டுவந்து வைக்கப்பட் டன. ஆயினும், யான் காலம்வாய்த்தது கண்டு, அவ்விரண்டை யுந் தொடவேண்டாமென்று வியாக்கிர வீரன் காதிற் குசுகுசு வென்று சொல்லிவிட்டேன். அந்தப்பெண்களோ வென்றால் அவற்றைப் பருகும்படி எங்களைக் கட்டாயப் படுத்தினார்கள். நாங்கள் அவற்றை உண்ணோம் என்று மறுத்து விட்டபோது, அப்பெண்கள் ஏதுகாரணத்தால் என்று வினவுவதுபோலத் தம்மில் ஒருவரை ஒருவர் விரைந்து நோக்கியதை யான் கண்டு கொண்டேன். இங்ஙனம்,ஏதோ இரண்டகம் நடக்கப்போகிற தென்று கொண்ட என்ஐயம் வலுப்படுவதாயிற்று. கடைசியாக அந்தப்பெண்கள் தங்கள் தங்கள் அறையிற் படுக்கப்போனார்கள்; அவர்கள் அப்படிப் போனபிறகு வியாக்கிர வீரனிடம் என் ஐயங்களையும் அவற்றின் காரணங்களையும் எடுத்துக்கூறினேன். அதன்மேல், நாங்கள் காவலாய் விழித்திருக்க இசைந்தோம்; அப் பாற் குதிரையைப் பார்க்கிறதற்கென்று சாக்குக் காட்டிக், கோபுரத்துள் நடக்கப்போவதையெல்லாங் கண்டறிய அங்கே யுள்ள முற்றத்திற்குப் போனேன். குதிரை நிலையில் ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது; அதன் கிட்டப் போன போது சிலர் பேசிய ஒலி கேட்டது. யான் அஃதென்ன வென்று உற்றுக்கேட்டேன். அமைந்தநோக்கமுள்ள அவ் விடத்து வேலைக்காரன் குதிரைக்காரனிடம் பேசிக்கொண் டிருந்தான். அவர்கள் பேசுவதிலிருந்து போதுமான அளவுக்கு யான் ஒன்றுந் தெரிந்து கொள்ளக் கூடவில்லை. ஆயினும், யாங்கள் ஒருசூழ்ச்சியில் அகப்படுத்தப்பட்டேமென்றும், இரு ளன் என்னும் பெயருள்ள எவனோ ஒருவன் மிகவும் விரை வாகக் குதிரை ஏறி நல்லான் இருப்பிடங்களில் ஒன்றை நோக் கிப் போயினா னென்றும், அவனுடைய கொள்ளைக்கூட்டத் தாரின் ஒரு பிரிவு சிறிதுநேரத்தில் அந்தக்கோபுரத்திற்கு வருமென்றும்மட்டும் யான் தெரிந்துகொள்ள கூடிய அளவு அதனி னின்றும் உணர்ந்தேன். உடனே யான் வியாக்கிரவீரனிடந் திரும்பி வந்ததும், யாங்கள் விரைவிற் செய்யவேண்டுவன இவையென்று தீர்மானித்தேம். வரப்போகும் இரண்டகத் தைப்பற்றித் தாங்கள் உடனே அறிவிக்கப்படுதல் வேண்டும். யான் விருந்தாட்டறைக்கு ஏறிவந்து, பெருமானே, தாங்கள் அந்த மாயவலையினுள் அகப்பட்டிருத்தலைக் கண்டேன். யானே எல்லாவற்றையும் ஐயுற்றேன் என்னும்படியாய்ச் செல்வேனா னால், அங்கே உள்ளார்க்கு ஐயம் பிறந்து, தீப்பந்தம் முதலான குறிகளாலே கள்வர்கூட்டத்தைச் சடுதியில் வருவித்து நாம் தப் பிப்போகாவண்ணஞ் செய்துவிடுவார்கள் என்னும் அச்சத்தி னால், அம்மாதரிடத்திற் பணிவுடையேன் போல வெளிக்குக் காட்டித், தாங்கள் அளவுக்குமிஞ்சி நறவருந்தி விட்டீர்களென்று யான் கருதினேனாகமட்டும் அவள் நம்பச்செய்தேன். அவள் ஒரு படுக்கையறையைக்காட்டினாள். நான் படுக்கப்போகும் வரையில் அவள் அங்குதானே நின்றுகொண்டிருந்தாள். மறுபடியும் யான் வியாக்கிர வீரனிடஞ் சென்று, அவன் செய்ய வேண்டுவன இவையென்று தெரிவித்தேன்.” என்றான். 

இதன் தொடர்பாக உடனே வியாக்கிர வீரனுஞ் சில சொல்லப் புகுந்து, ‘நானும் உடனே அமைந்தநோக்க முள்ளவ னான வீட்டுவேலைக்காரனிடம்போய், அவன் ஓரிடத்தில் தனி மையாக வேலைசெய்து கொண்டிருத்தலைக் கண்டேன். உடனே அவனைப்பிடித்து அமுக்கிக் காலையுங் கையையுங் கட் டிப்போட்டு விட்டு, அவனது இடுப்புக் கச்சையிலிருந்த வாயிற் கதவின் சாவிகளை எடுத்துக்கொண்டு வந்தேன்” என்றான். 

அதைத் தொடர்ந்து கேசரிவீரன்: “யான் செய்ய வேண்டு வன இவையென்று வியாக்கிர வீரனிடஞ் சொல்லியபிற் சிறிது நேரத்திலெல்லாம், யான் தாங்கள் இருந்த அறைக்கு மெதுவாகப் பதுங்கிக் கொண்டுவந்தேன்; வழியில் அந்தப் பெண்ணை எதிர்ப்பட்டேன். என்னைப்போலவே அவளுந் தங்களறைக்கு வந்துகொண்டிருந்தாள் என்பது தோன்றியது. ஒரு நொடிப்பொழுது அவள் தடுமாற்றம் உடையவளாய்க் காணப் பட்டாள்; வியாக்கிர வீரன் கோபுரக்கதவுகளின் திறவுகோல் களை அகப்படுத்திக்கொண்டான் என்பது எனக்குத் திண்ண மாய்த் தெரிந்தமையால், யான்கண்ட சூழ்ச்சி செய்து முடிப் பதற்கு வாய்ப்புடையதாயிற்றெனக் கண்டேன். அதன்மேல் அப்பெண் எனது சிறையி லகப்பட்டாள் என்பதனை அவள் அறியச் செய்தேன்; உடனே அவள் தன்வாயால் உரத்துக் கூவத் தொடங்கியபோது, என் கையால் அவள் வாயைப் புதைத்தேன். அதேநேரத்தில் வியாக்கிரவீரனும் அங்கு வந்து சேர்ந்தான்; உடனே அவளை அவனிடம் ஒப்பித்தேன்; அதன் பிறகு தாங்களிருந்த அறையினுட் புகுந்து, தாங்கள் அமிழ்ந்திக் கிடந்த பெருமயக்கத்தினின்றுந் தங்களை எழுப்பினேன். அப் பால் நடந்தன வெல்லாந் தாங்கள் அறிவீர்கள்.” என்று கூறினான். 

இளைஞனான நீலலோசனன் தனக்கு அவர்கள் புரிந்த பேருதவிக்காகத் தன்துணைவர் இருவர்க்கும் உளங்கனிந்து நன்றி கூறினான். முதன்மையாய் நுண்ணறிவும் முன்னுணர் வும் பொருந்திய கேசரிவீரனது நடக்கையை அவன் மிகவியந்து கூறினான். அப்பால் தன் கட்டிலின்மேற் றுயில்கொள்ளப் போயினான் – சுருக்காக அவனை வந்து கவிந்த உறக்கத்திற் கொள்ளைக்காரர் உருவங்கள் முதன்மையுற்றெழுந்தன; பொன் னிறமான மூடுபனியின் ஊடே கரவினளான மீனாம்பாளின் அழகிற்சிறந்த முகமானது தோன்றிக் கரிய இறைகளோடுங் கூடின பெரிய வாள்விழிகளைத்திறந்து அவனைத் திரும்பவும் நோக்குவனபோல் தோன்றின.

ஐந்தாம் அதிகாரம்

நல்லான்

பிற்பகற் காலம், நேரமோ மிகவும் ஆயிற்று; நிழல்படர்ந்த ஓரிடத்தில் இரண்டுபேர் புல்லின்மேற் சாய்ந்துகொண் டிருந் தார்கள். அவர்க ளிருவரும் ஒருவரையொருவர் விலகிச் சிறிது சேய்மையில் இருந்தமையால், ஒருவன் மற்றையோனை விடத் தாழ்ந்த நிலையிலுள்ளான் என்பது குறிப்பிக்கப்பட்டதாயிற்று. இருவருங் கள்வர்க்கு உரிய உடை அணிந்திருந்தனர்; என்றா லும், ஒருவன் அணிந்திருந்தது மற்றையோனதை விட மிக்க விலைபெற்றதா யிருந்தது. இங்கே மறைபொருளாய் வைக்கத் தக்கது ஒன்றுமில்லையாகையால்,உயர்ந்தவன் என்று சொல் லப்பட்டோன் நல்லானேயன்றிப் பிறர் அல்லர் என்றுந் தாழ்ந்தவன் என்று சொல்லப்பட்டோன் இருளனேயன்றிப் பிறரல்லர் என்றும் அறிவிக்கின்றோம். மேற்கணவாய் மலைச் சரிவில் இருக்குங் காடுகளின் நடுவே உள்ள கூடாரத்திற் சந்தி ரன் என்னும் இளைஞன் ஒருவன் உள்ளேபோய்க் கள்வர்தலை வன் ஒருவனைக்கண்டான் என்று முன்னமே யாங் கூறியதை இது பயில்வோர் மறந்திருக்கமாட்டார்கள்; அந்தக் கள்வர் தலை வனே அஞ்சத்தக்க இந் நல்லான் என்று அவர்கள் அறிவார்களாக. 

இருளன் என்பவனொடுசேர்ந்து நல்லான் இப்போது புல் லின்மேற் சாய்ந்துகொண்டிருக்கும் இந்த இடமானது, மேற் சொல்லிய காட்டுக்கு மிகவும் நெடுந்தொலைவில் உள்ளது.இவ களுடைய சுற்றுக்குழற் றுப்பாக்கிகள் இவர்கள் பக்கத்திற் கிடந் தன; இவர்களுடைய குதிரைகள் அருகாமையிற் புல்மேய்ந்து கொண் டிருந்தன; இவர்கள் இங்கே தனிமையாக இருப்பது போற் காணப்பட்டனர். அடுத்தாற் போல் உள்ள மரங்களின் நடுவிற் கூடாரம் ஏதும் அமைக்கப்படாமையால், இவர்கள் இவ் விடத்தில் நெடுநேரந் தங்கியிருக்குங் கருத்தில்லாதவர்போற் காணப்பட்டார்கள். 

எண்ணிய எண்ணங்கள் தம் விருப்பப்படி நடந்தேறாமை பற்றி நல்லானுடைய அழகியமுகத்தில் ஒருவகையான துயரக் குறி தோன்றியது; இவன் ஏவல் ஆளான இருளனோ தன் தலைவன் எப்போதும்போல இப்போது தன்னைப்பற்றி உயர் வாக நினைக்கவில்லை என்பதனை உணர்ந்தான்போல் மனத் தளர்வுங் கலக்கமும் உள்ளவனாய்க் காணப்பட்டான். இவர்கட் குள் இதற்குமுன் எத்தகைய உரையாட்டு நடந்ததோ ; இப் போது இவர்கள் நெடுநேரம் வாய்பேசாது சும்மா இருந்தார்கள்; கடைசியாக நல்லான் தானே வாய்திறந்து பேசுவானாயினான்; இவன் முதலிற் பேசும்போது வெடுவெடுப்பான குறியோடும், பொறுமையில்லா உடம்பாட்டத்தோடும் பேசினான். 

“இருளா, நீயும் உன் கூடவந்தோர் ஐவரும் பௌத்தர் மூவரால் முழுத்தோல்வி பெற்ற கதையை நீ சொல்லக்கேட் கும்போது யான் விழித்திருக்கின்றேன் என்று என்னையே நான் இப்போது நம்பக்கூடவில்லை; ஈதெல்லாம் எனக்கு ஒரு கனவுபோற் றோன்றுகின்றது எனத் திரும்பத்திரும்ப யான் சொல்லவேண்டுமா?” என்று நல்லான் என்னுங் கொள்ளைக் கூட்டத்தலைவன் கூறினான். 

“எங்கள் துப்பாக்கிகளைக் கையாளவேண்டிய வழியைப் பற்றி நீங்கள் இட்டகட்டளை முதலிலிருந்தே சாவிற் கேதுவா யிற்றென்பதைத் தங்கட்கு விளங்கச் சொன்னேனே.” என்று இருளன் விடை பகர்ந்தான். 

“அப்படியானால் அந்தத் துப்பாக்கிகளை நீ பயன்படுத்தி யிருக்க வேண்டும். உயிராகவோ பிணமாகவோ நீலலோசனன் என்னும் அரசிளைஞனைக் கொண்டுவரும்படி கேட்டேன். அவ னைச் சிறைபடுத்தி என் கையகப் படுத்துவதையே யான் மேலாக எண்ணினேன் என்பதும் உனக்குச் சொன்னேனே; ஏனென்றால், அவன் எனக்கு ஏதொரு தீங்குஞ் செய்யாமை யானும், என் வாழ்நாளில் அவனை யான் கண்ட தில்லாமை யானும், நான் பச்சை இரத்தம் ஒழுகக் கொல்லுங் கொலை காரன் அல்லனாகலானும், தக்ககாரணம் இன்றி ஓர் ஆண்மக னுயிரைப் போக்குவதில் எனக்கு விருப்பமில்லாமையானும் என்பது. ஆயினும், அப்படிப்பட்ட இடரான நிலையில் முதன் மையாய்த் தன்னைக் காக்கவேண்டுவது நேர்ந்தபொழுதில்” என்று கொடுஞ் சினத்தோடும் நல்லான் சொல்லி முடிப்பதற் குள்; இருளன் சிறிது வெகுண்டு பதறித், “தலைவனே யான் சொல்லுவதைக் கேளுங்கள்! என் ஆட்களிற் சிலர் துப்பாக்கி களை எடுத்துச்சுட்டார்கள்: ஆனால், அது சிறிது பிந்திப் போயிற்று – அவர்கள் மிகவுங் கொடுமையாய்ப் புண்படுத்தப் பட்டுப் புறப்பட்டு ஓடிப்போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார் கள். சண்டை நடந்த இடத்திற்கு நெடுந் தொலைவிலில்லாத நில வறையொன்றிலே அவர்கள் கிடக்கிறார்கள் – அவ்விடத்திற்கு உதவிக்காகச் சிலரை விடுத்திருக்கின்றே னென்பது தாங்கள் முன்னம் அறிந்ததே. என்னைப்பற்றியோ வென்றால், இதற்கு முன் எனதுபழக்கத்திற் கண்டறியாத வகையாய் நடந்த அச் சண்டையில் எனக்குத் துன்பமாக முடிந்ததென்பதைத் தெரி வித்துக் கொள்ளுவதற்கு யான் தாழவில்லை. மிகத் தொல்லைப் பட்டு யான் தப்பிப் பிழைத்தேன்; ஆனாலும், போதுமான தொலைவிலிருந்துகொண்டு என் துப்பாக்கியினாற் சுட்டு அவ் விளைய நீலலோசனனைப் பிடித்துக்கொண்டாவது வரக்கூடு மென்று யான் எண்ணியும் அதிலும் யான் தவறிப்போனேன். தகுதியுடையீர், தங்களின்கீழ் யான் படைத்தலைவனாயிருக்கக் கிடைத்த நாள் முதல் இம்முறைதான் தோல்வியடையலா னேன். இதற்காகத் தாங்கள் போதுமான அளவுக்கு என் மேல் வசைமொழிகளை நிரப்பிவிட்டீர்கள்.” என்று கூறினான். 

நல்லான் ஆழநினைந்துபார்த்து ஏதும் மறுமொழி சொல்லாதிருந்தான். 

மறுபடியும் இருளன், “புகழ்நிறைந்ததலைவனே, யான் இந்தத் தோல்வியினால் வந்த தாழ்வுகளுக்கு ஆளாகிவிட்டேன் என்பதையும், அவனைப்பற்றி உங்கள் எண்ணம் எதுவாயிருந் தாலும் நீங்கள் நீலலோசனனைச் செவ்வையாய்ப் பார்த்துவிட்ட பிறகு அவன் என்னொடு படுசண்டை செய்யும்படி தூண்டத் தக்க நேரத்தை விரைந்து எதிர்பார்த்திருக்கின்றேன் என்ப தையும் உணர்ந்து மனம் ஆறுதல் அடையுங்கள். ஏனென்றால், எனது பெயருக்குவந்த களங்கத்தை அவ்விளம் பௌத்த னுடைய இரத்தத்தாற் கழுவினாலன்றித் திரும்பவும் யான் ஒரு துணிந்தகள்வனென்று தலையெடுக்கமாட்டேன். பெரு மானே, கடைசியாகத் தங்கள் ஏற்பாட்டின்படி நடப்பதற்கு ஏதுந் தீங்கு உண்டாகவில்லை: ஏனெனில், இந்நேரம் இளைய நீலலோசனன், பிரித்துச்செலுத்தப்பட்ட நம் ஆட்களின் கையிற் சிறையாய் அகப்பட்டிருப்பான் என்பதில் ஐயமில்லை.” என்று சொன்னான். 

“என்றாலும், இதிலுங்கூட மனம் எனக்கு ஐயுறவாகத் தான் இருக்கின்றது: ஏனென்றால், நீ எண்ணுகிறபடியுஞ் சொல்லுகிறபடியும் நடந்திருந்தால், அச்செய்தி சிலநாழிகைக்கு முன்னமே நம்மிடம் எட்டாதது ஏன்? மீனாம்பாள் பெரு மாட்டி நமக்கு நயமான செய்தியைத் தெரிவிப்பதிற் காலந் தாழ்ப்பவள் அல்லளே – ” என்று நல்லான் இணைந்து பேசினான். 

”அச்செய்தியைத் தெரிவிப்பதிற் காலந் தாழ்த்தமைக்குத் தக்க காரணம் இப்போதே தெரியவரும் என்பதில் ஐயமில்லை; ஏனெனில், நமது சூழ்ச்சி முழுதும் மிகவுந்திருத்தமாக ஒழுங்கு படுத்தப்பட்டமையால் அது தவறுமென்பது கூடாதகாரியம்.” என இருளன் மறுமொழி பகர்ந்தான். 

“ஆ! நாம் சுழற்றுப்பாக்கியினையும் வாளினையுங் கீழ் எறிந்துவிட்டுச் சூழ்ச்சி வகைகளிலும் நுண்ணிய நினைவுகளி லும் நுழைந்ததே, நாம் நமக்குரிய இயற்கையைக் கடந்ததாகும் என்று நினைக்கின்றேன். இப்படிப்பட்ட சண்டையிடுவதில் எனக்குச் சிறிதுந் திறமை இல்லை. வன்று நல்லான் திடுமென மொழிந்தான். 

“என்றாலுந், தலைவனே நம்முடைய சூழ்ச்சிகள் மிகவும் நன்றாக ஆழ்ந்துபார்த்து அமைக்கப்பட்டனவேயாகும் என்ப தைத் திரும்பவுஞ் சொல்கின்றேன். ஆனால், அச் சூழ்ச்சி வகைகளை யான் தங்களுக்கு முதலிற் சொல்லியபோது நீங்கள் அவற்றைப் பொறுமையொடு கேட்கவில்லை; ஆகவே, இப் போதும் அவற்றை நீங்கள் அறிந்து கொள்ளாவிட்டால் அதற்காக நான் வியப்படைய வேண்டுவதில்லை.” என்று இருளன் உறுத்திச் சொன்னான். 

அதற்கு அத்தலைவன் ஏளனமாய், “அப்படியானால் நீ எங் கனம் இவ்வளவு உயர்ந்த ஏற்பாட்டைச் செய்தனை என்பதும், நீ அடைந்த தோல்வியை இஃது எவ்வாறு மாற்றுமென்பதும் உன் வழக்கப்படியே விளக்கமாக எடுத்துச்சொல். ஒரு வேளை சொல்வது எனக்கு நன்மைதருமென்று நம்புகின்றேன்- என்றாலும், இப்பொழுது நீ சொல்லுவதொன்றும் எனக்கு விருப்பமாய் இராது என்று ஒளியாமற் சொல்லுகிறேன்.” என்றான். 

“அவ்வகைகளை எடுத்துச் சொல்வ தென்றால் நான் தோல்வி அடைந்தது முதற்கொண்டு சொல்லவேண்டும்,- பெருமை மிக்க தலைவனே, இத்தோல்வியைப்பற்றித் தாங்கள் ஏதோ இரக்கமின்றி அடிக்கடி குறிப்பிட்டுக் குத்திச்சொல்லு கிறீர்களே.” என்று இருளன் எதிர்மொழி புகன்றான். 

தன் கீழவனான இவன் கொழுப்பேறிப் பேசுவதாக நல் லான் எண்ணமுற்று, இருளன்மேல் இறுமாப்புடன் பார்த்த ஆணவப் பார்வையின் கொடுமையை இங்கே எடுத்துச்சொல்வ தென்றால் அது முடியாது. 

உடனே அந்தப் படைத்தலைவன் தாழ்மை காட்டின வனாய்த், ‘தங்களுக்கு வருத்தம் உண்டு பண்ணினேனாயின் அதனை மன்னிக்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகின் றேன். இப்போது அவைகளை விளங்கத் தெரிவித்துக் கொள்ளு கின்றேன். சண்டை முடிந்துபோனதுங், காயப்பட்ட என் ஆட்கள் இருவரோடும் ஓடிப்போனேன்; அவர்களை அக்குகையி னுட் கருத்தாய்க் கிடத்தியபின், யான் பின்னும் விரைந்து செல்வதானேன். எனது குதிரையின் விரைந்து ஒட்டத்தைக் கொண்டு, யாரும் பின்றொடர்தற்கு ஆகாத அத்தனை தொலை வில் வந்துவிட்டேனென்றும் எண்ணியறிந்தேன். அந்தப் பௌத்தர்கள் பின்றொடரமுயன்றதாகவும் ஏதுந்தெரியவில்லை: தாங்கள் அடைந்த வெற்றியளவில் அவர்கள் மகிழ்ந்து நின்று விட்டது இயற்கைதான். தன் உறவினர்களைப் போய்ப் பார்த்துத் திரும்பி வரும்வழியில் இடையே தங்குவதற்காக மீனாம்பாள் பெருமாட்டி கோபுரத்தை நோக்கிச் செல்வ தாக முன்னமே எனக்குச் செய்தி எட்டியது. அஃதல்லாம் லும், மீனாம்பாள் பெருமாட்டியின் ஒத்து உழைப்பின்றித் தாங் கள் எந்தக்காரியத்திலும் புகுவதில்லை என்பதும் பெருமானே யான் அறிவேன். மீனாம்பாள் பெருமாட்டி வரும் வழியில் இளைய நீலலோசனனைப் போம்படி செய்விக்க வழிசெய்ய வல் லேனாயின், நீலகிரிக்கு நேரே செல்லும் பாட்டையினின்றும் அவனைத் தவறுவித்து, அவ்வம்மை அவனை மயக்கி, அதற்கு நெடிது விலகியுள்ள கோபுரத்திற் கொண்டுபோய்ச் சேர்த்து விடுவார்கள் என்றும், யான் தங்களிடந் திரும்பிச்சேர்ந்து தங்க ளிடம் உள்ள ஆட்களை விடுத்து அப்பௌத்தர் தலைவனையும் அவனைச் சேர்ந்தோரையும் பிடித்துக்கொள்ளுதற்கு வேண்டப் படுஞ் சில நாழிகைநேரம் வரையில் அவ்வம்மை அவனை அங் கேயே நிறுத்தி வைக்கக்கூடுமென்றும் எனக்கு ஓர் எண்ணந் தோன்றியது” என்று கூறினான். 

“நல்லது, இச்சூழ்ச்சியினை எண்ணிமுடித்ததிற் சிறிதுந் தப்பு இல்லை; ஆனால், அதனைச் செய்து முடிப்பதோட” என்று நல்லான் சொல்ல; 

அதற்குள் இடைமறித்து இருளன் சொல்வானாயினான்: “புகழ்நிறைந்த தலைவனே, கேளுங்கள் மற்ற வரலாறுகளையும். முன் பின் அறியாத இடத்தில் வழிப்போவோர் தாந்தாம் செல் லுதற்கு உரியவழி யாது எனக் கட்டாயம் வினாவுதற்கு இட மாக மூன்று பாட்டைகள் பிரியும் ஓர் இசைப்பில் யான் குடி யானவனைப்போல் உடையணிந்து போய் இருந்தேன். அங்கே யான் எண்ணியபடியே நேரலாயிற்று. மீனாம்பாள் பெரு மாட்டி தன்பாங்கிமாரோடும் இளைப்பாறும் இடம் இதுவென முன்னமே உறுதியாகத் தெரிந்துகொண்டு, அங்கேபோகும் ஓர் இடுக்குவழியில் அவர்களைப் போக்கினேன். மீனாம்பாள் பெருமாட்டியுடன் விரைவாய் யான் கலந்துபேசியபோது, அவ் வம்மை யான் குறித்துக்காட்டிய ஏற்பாட்டில் ஒருப்பட்டு நடக்க இசைந்தார் என்பதை யான் சொல்லவும் வேண்டுமோ?”

நல்லான், “அதைப்பற்றி ஐயம் இல்லை!” என்று உரத்துச் சொல்லி, “அதன் பிறகு, அவ் வழிப்போக்கர்களை அங்ஙனஞ் செம்மையாய் ஏமாற்றி–” என்று கேட்க, 

இருளன், உடனே யான் கோபுரத்திற்குக் கடுகெனச் சென்று நடக்கவேண்டுவன இவையென்று கற்பித்தேன், பிறகு அங்கேயிருந்து ஒரே பாய்ச்சலாய்க் கிளம்பி, மறம்மிக்க என் தலைவனையும், ஆண்மைமிக்க எங்கள் ஆட்களில் அறுவரை யும் இவ்விடங் காணலாமென்று வந்தேன்.” என்று விடை பகர்ந்தான். 

அதற்கு நல்லான், “எனக்குரிய வேலையாக யானே வரைந்து கொண்ட முதன்மையான காரியத்தை முடிக்கும் பொருட்டு நமது மலைக்கோட்டையினின்று இங்கே யான் கூட்டிவந்து அவ்வாண்மையாளர் அறுவரையும், உன் சொற் படியே கோபுரத்தில் அவரைச் சிறைப்படுத்துதற்கு விரைவாக யான் செலுத்திவிடலானேன். அதோ உள்ள பாட்டைநெடுக நாகநாட்டாசி பயணம் வருவள் என்னுஞ்செய்தி இன்னும் ஒரு கொடிப்பொழுதில் எனக்குவரலாம்; என் ஆண்மையாளர் தக்க நேரத்தில் திரும்பிவந்து சேராவிட்டால், அவளை யான் சிறைப் படுத்துவது எப்படிக்கூடும்?” என்று மறுமொழி கூறினான்.

அழகிற் சிறந்த நாகநாட்டரசி பெண்களை மட்டுந் துணைக் கொண்டு பயணமாக வந்தால், புகழ்மிக்க தலைவனே, அவர் களைச் சிறைப்படுத்தி மலைக்குக் கொண்டுபோக நீங்களும் நானுமே போதும்” என்று இருளன் சொன்னான். 

“நாகநாட்டரசி குமுதவல்லி, இளைஞனான சந்திரன் சொல் லிய சொற்களைக்கேளாமல், ஏறக்குறைய வலிமையிற் சிறந்த ஆண்மக்களைத் துணையாகப் பின்னே கொண்டுவந்தால் என் செய்வது?” என்று நல்லான் இணைந்து வினவினான். 

அதுகேட்டு இருளன், “உண்மைதான்! தங்கள் ஏற்பாடு களைப்பற்றித் தாங்கள் சிறிதேனும் எனக்குச் சொல்ல அருள் புரிந்தீர்க ளில்லையாதலால், இதைப்பற்றி என்கருத்து ஏதுஞ் சொல்லவாவது நடக்க வேண்டிய முறை தெரிவிக்கவாவது கூடாதவனாய் இருக்கிறேன்.” என்று பணிவொடு கூறினான். 

அது கேட்டு நல்லான் செருக்கு மிக்க பார்வையோடு, “என் கீழ் ஏவலரிடமிருந்து கருத்துரையாவது அறிவுரையா வது வேண்டுகில்லேன்; நான் கட்டளையிடுவேன் – அதற்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடக்கக்கடவர். என்றாலும்,” என்று பிறகு சிறிது அமைந்த குரலொடு, “நீயும் உன் கூட்டத்தாரும், மேற்கரையிலிருந்து நீலகிரிக்குப் போகும் நீலலோசனனையும் அவன் துணைவரையுஞ் சிறைப்படுத்தும் வண்ணம் ஒருபக்கம் போக்கப்பட்டபோது, யான் என் கூட்டத்தாரோடு நாகநாட்டி லிருந்து நீலகிரிக்குப் போகுங் குமுதவல்லியையும் அவளுடன் வருவோரையுஞ் சிறைப்படுத்துவதற்கு இந்தஇடத்தில் வந்து பதி விருந்தேன் என்பதை அப்பொழுதே உனக்குச் சொல்லியிருக் கின்றேன். இதற்குமேல் நன்றாகச் செய்யக்கூடிய ஏற்பாடு ஒன்றுமில்லை; அப்படி யிருந்தும் அச் சூழ்ச்சிகள் நிலைகுலைந்து போயின. இருளா, உன்கூட்டத்தார் அழிந்து ஒழிந்தமையால், உன்னால் ஆகாது தவறிய காரியத்தை முடிப்பித்தற்கு என் னவரைக் கோபுரத்திற்கு விடுக்கலானேன்.” என்று உரைத்தான். 

”தலைவனே, நீலலோசனன் இந்நேரங் கோபுரத்திற் றவ றாமற் சிறைவைக்கப்பட் டிருப்பான் என்று நம்புவோமாக. ஆயின், நாகாட்டரசியின்பொருட்டு யான் செய்யக்கூடியது ஒன்றுமில்லையா? அந்தப்பாட்டையின் கிட்டப்போய்ப் பதி விருந்து பார்க்கட்டுமா?” என்று இருளன் கேட்டான். 

“அப்பாட்டையிற் பதிவு இருத்திப்பாராது அவ்வளவுக்கு யான் முன்னறிவு இன்றி இருப்பேன் என்று நீ எண்ணுகின் றாயா? ஆ! இதோ நான் பதிவுபார்க்கவைத்தவன் குதிரைமேல் வருகின்றான்!” என்று நல்லான் இடைமொழிந்து சொன்னான். 

இங்ஙனஞ் சொல்லிக்கொண்டே நல்லான் துள்ளி எழும்பி னான் – அதுகண்டு உடனே இருளனும் அவ்வண்ணமே செய் தான்; பிறகு சிறிது நேரத்திலெல்லாம் ஒருவன் மலைய நாட்டார்க்குரிய உடுப்பு அணிந்தவனாய்த் தன் குதிரையை அவ் விடத்திற்கு விரைவாகச் செலுத்திவந்தான். 

“என்னசெய்தி கொண்டுவந்தாய் மாதவா?” என்று அக் கள்வர் தலைவன் ஆவலோடும் வினவினான். 

“ஒருவகையில் நல்ல செய்தியே,” என்று குதிரையி லிருந்து கீழே குதித்திடும்போதே சொல்லிக்கொண்டு, பின் னும், மற்றொருவகையில் நன்மையில்லாததே” என்று அத் தூதுவன் கூறினான். 

அதனை விளக்கமாய்ச்சொல்.” என்று உடனே நல்லான் மொழிந்திட்டான். 

“பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன; தலைவனே, நீங்கள் எனக்குச் சொன்ன வகைப்படியே அழகிற்சிறந்த இளம்பெண் ஒருத்தி, இங்கிருந்து இரண்டரை நாழிகை தொலைவிலுள்ள அகன்றபாட்டைநெடுக மிகவிரைவாய்க் குதிரைமேற்போனாள்; அவளைப்போலவே குதிரைமேற்கொண்ட அழகிய பெண்கள் இருவரும் அவள் பின்னே போயினர். சிறிதுநேரம் யான் அவர்களைப் பதிவிருந்து பார்த்தேன்: அந்தப்பாட்டையிலேயே போவதற்குமாறாக, அவர்கள் சடுதியில் இடதுபக்கமாய்த் திரும் பினார்கள்.” என்று மாதவன் சொன்னான். 

“ஆ! தீமொழியே!” என்று நல்லான் உரத்துக்கூவி, “அந்தச் சிறிய ஊரைநோக்கிப் போவதற்குமாறாக அவர்கள் நக ரத்திற்குச்சென்று விடுதிகொள்வார்கள்போ லிருக்கின்றதே! அச்சிறிய ஊரிலுள்ள சாவடியிற் போய்த் தங்குவார்க ளாயின், அவர்களைச் சிறைப்படுத்துவது திண்ணம்: நகரத்திலானால் அவர்கள் காவலாய் இருந்திடுவர் – அதுவல்லாமலும், அவர்கள் தங்குஞ் சாவடித்தலைவனோ காசுபறிப்பதில் திறமை வாய்ந்தவ னாகையால் மறுநாட்காலையில் அவர்கள் புறப்படும்போது தக்க துணையொடு செல்லும்படி அவர்களுக்கு எடுத்துச்சொல்லு வான் என்பதுந் திண்ணம். அவன் தன்னிடத்திற் பெருந்திர ளாக உள்ள மக்களும் மருமக்கள்மார்களும் அவர்களுக்கு வழித் துணையாகச்சென்று பொற்காசு பெறல்வேண்டி, நல்லானைப் பற்றிய நடுக்கமுள்ள கதைகளை மெல்லியல்புள்ள அவர்களுக்கு நிரம்பவும் எடுத்துச்சொல்வானே!’ என்று வருத்தத்தோடும் பேசினான். 

யாது செய்வதென்று தெரியாமல் திகைப்புற்று அக்கள்வர் தலைவன் வருத்தமிக்க நிலையுடையான்போற் சிறிதுநேரம் அங் கும் இங்குமாய் நடந்தான். இப்படிப்பட்ட நிலைமையில் தாம் ஏதுஞ் சூழ்ச்சி சொல்லக் கூடியவர்களாய் இருந்தாலும், இருள னும் மாதவனும் இவன் குணம்மாறுதலடைந்த இப்பொழுதில் வலிந்து ஒரு சொல்லேனுஞ் சொல்லத் துணிவில்லாதவர்கள் ளாய், அவனை உற்றுப் பார்த்துக்கொண்டே யிருந்தனர். 

“ஒவ்வொன்றுந் தவறுதலாய்ப்போ கின்றதே!” என்று நல்லான் தனக்குள் முணுமுணுத்தவனாய், “அவன் எனக்குச் சுருக்கமாய்ச் சொல்லிக் கொண்டு வந்த துன்பமான சூழ்ச்சியில் எனக்கு விருப்பமில்லாமையை யான் சந்திரனுக்குத் தெரியச் சொன்னது தக்க காரணங்கள் இல்லாமையான் அன்று. ஆ! எனக்கு ஒன்று தட்டுப்படுகின்றது. நல்லது! மறைவாக வைக் கப்பட்டிருக்கும் அளவிறந்த பொருட்டிகளை அடைதற்கு அரிய திறவுகோலாயிருப்பதும், நாகநாட்டரசி எப்போதுந் தன் னிடத்திலேயே வைத்திருப்பதுமான பொறியையாவது கைப் பற்றிக் கொள்ளுகிறேன்! அதன்பின், அவள் தொடர்புபட்ட மட்டில், நடப்பவை நடக்கட்டுமென்று விட்டிருப்பேனாக! என்று சொல்லிக் கொண்டான். 

ஏதோ ஒரு முதன்மையான சூழ்ச்சியைக்கருதி மனத்தை வலுப்படுத்திக் கொண்டவனாய், நல்லான் திடீரென மாதவன் பக்கமாய்த்திரும்பி, “எனக்கு உன் உடையைத்தந்து என்னதை நீ மாற்றி எடுத்துக்கொள்.” என்றான். 

மாதவன் கள்வன் அல்லன்; அப்பக்கங்கள் பலவிடங் களில் நல்லானால் ஏற்படுத்தப்படுங் காரியங்களைத் திறமையாக நடத்துவாருள் ஒருவனாவன். தன் தலைவன் சொன்னதற்கு உடனே இணங்கி, அவன் இவனோடு தன்னுடையை மாற்றிக் கொண்டான். நல்லான் மலையநாட்டில் நடுநிலை வாழ்க்கையி லுள்ளாரின் உடையில் விரைந்து தோன்றினான்: இவன் தன் னிடத்திற் படைக்கலங்கள் வைத்திருப்பதாக வெளிக்குக் காணப்படாவிட்டாலுந், தான் புதிதாக அணிந்துகொண்ட உள் அரைச்சட்டையின் கீழே கைத்துப்பாக்கியினையுங் குத்துவாளினையுஞ் செவ்வையாகச் செருகிவைத்திருந்தான். தென்புற மாய்ப் பலநாழிகை தொலைவிலுள்ள கோபுரத்திற்கு விடுக்கப் பட்ட தன் ஆட்கள் விரைவில் மீளுவர் என்று எண்ணி, இருள னிடத்திற் சில ஏற்பாடுகளைச் சொல்லிவிட்டுத், தனது பரிமா விலுந் தாழ்ந்ததாயிருந்தமையால் தான் இப்போது கொண்ட தாழ்ந்த கோலத்திற்கு இசைவாயிருக்குமென்று கருதி மாதவன் குதிரைமேல் ஏறிப் புறப்பட்டான். 

மாலைக்காலத்து மங்கற்பொழுது வரவர மிகுந்து வரலா யிற்று; அப்போது நல்லான் முன்சொன்ன வகையாய் மாறு கோலம் பூண்டு, மாதவனால் முன்னமே அறிவிக்கப்பட்டபடி நாகநாட்டரசியும் அவள்பாங்கிமார் இருவருஞ் சென்ற பட்டி னத்தே வந்து சேர்ந்தான். தன்னை யாருந் தெரிந்துகொள்ள மாட்டார்களென்று தான் திண்ணமாய் உணர்ந்தமையால், நல் லான் முதன்மையான சாவடிக்கு நேரே சென்று, தனக்குந் தன் குதிரைக்கும் விடுதி ஏற்பாடு பண்ணும்படி கேட்டான்; தனது குதிரைக்குச் செவ்வையாகத் தீனி முதலியன வைக்கப் பட்டனவா என்று பார்க்கச்செல்வான்போல், இவன் குதிரை நிலையத்திற்குட் சென்றான்; நாகநாட்டரசி குமுதவல்லியும் அவள் பாங்கிமார் இருவரும் ஊர்ந்துவந்த குதிரைகளின் உறுப்பு அடையாளத்தை மாதவன் தனக்கு அறிவித்தபடியே, அங்கே கட்டப்பட்ட மூன்று அழகிய குதிரைகளும் உடையனவாய் இருக்கக்கண்டான். இவ்வாறு, தான் காணவேண்டியவர்கள் அந்தச் சாவடியிலேயே இருக்கின்றார்கள் எனக் கள்வர்தலைவன் ஐயமின்றித் துணிந்தான். 

இவன் தனக்குத் தனிமையான ஓர் அறை வேண்டுமெனக் கேட்டு வாங்கிக்கொண்டான்; பிறகு தனக்கு இராச்சாப்பாடு கொணர்ந்து வட்டித்த சமையலாள் வாயினின்றே, குமுதவல்லி யையும் அவள் பாங்கிமாரையும் பற்றித் தான் கட்டாயந் தெரிந் துகொள்ள வேண்டியிருந்த சில சிறிய உண்மைகளை வரச் செய்தான். தனக்குச் சிறிதும் பற்றில்லாத செய்திகளைக் குறித்துப் பேசுவான் போல், முன்நினைவின்றி வெறும் பேச் சாகப் பேசும் வகையில் வைத்து இவ்வளவும் எளிதாகத் தெரிந்துகொண்டான். சாப்பாட்டு விடுதியில் உள்ளார்க்கு உரிய இயற்கைப்படியே அவ்வேவற்காரனும் மிகவும் பேச்சுக்காரனா யிருந்தான். இங்ஙனந் தான் தேடிப்போந்த பெருமாட்டி ஒரு வாறு ஒளிவாய் வழிப்பயணம் போய்க்கொண் டிருக்கின்றாள் என்பதனைக் கள்வர்தலைவன் கண்டுகொண்டான்; ஆனால், அவ் ஏவற்காரன் குமுதவல்லியின் மேனிலைமையின் மெய்ம்மை யைப்பற்றி ஐயுறவு கொண்டவன் அல்லாமையால், அவனுக்கு அப்பெருமாட்டி மறைவாய்ச் செல்லுகின்றாளென்பது தெரி யாது; ஆனால், நல்லானே இவ்வலாறுகளை யெல்லாஞ் சந்திர னிடந் தெரிந்துகொண்டான். குமுதவல்லியும் அவள் பாங்கி மாரும் அச் சாவடியிற் றங்கியிருக்கும் அறைகளின் உளவுகளை முன்போலவே இவன் தெளிவாய்த் தெரிந்து கொண்டான். 

ஐந்துநாழிகை சென்றன: நள்ளிரவு ஆகும் நேரமாயிருக் தது; அச்சாவடி ஓசை அவிந்து அமைதியாயிருந்தது. இட் போது நல்லான் தான் பூண்டிருந்த மாதவன் உள்ளரைச்சட்டை யின் கறுப்புக்கரையில் ஒரு துண்டைக் கிழித் தெடுத்தான்; அங்ஙனங் கிழித்த துண்டிற் கண்கள் பார்ப்பதற்கு இரண்டு துளைகள் செய்து, பிறகு அதனை முகமறைப்பாக அணிந்து கொண்டு, தானிருந்த அறையைவிட்டுத் திருட்டுத்தனமாய்ப் புறப்பட்டான். புறப்பட்டு நாகநாட்டாசியும் அவள் தோழிமா ரும் இருக்கும் அறை வரிசைகளுக்குப் போகுஞ் சிறிய நடை யறையில் வந்துசேர்ந்தான். அங்கே ஒரு விளக்கு எரிந்து கொண் டிருந்தது: ஆனால், அக்கள்வர் தலைவன் அது வெறு மையாய் இருக்கக்கண்டான். உட்கதவிற் காதைவைத்து உற் றுக் கேட்டான். அங்கே தூங்குகிறவர்கள் முறையாக மெதுவே தாழ்த்துவிடும் மூச்சைத்தவிர மற்றெல்லாம் அமைதியாக இரு தது. நல்லான் தனது முகமூடியை முகத்தின்மேல் இப்போது பொருத்திக்கொண்டு, உறையினின்றுங் குத்துவாளைக்கழித்து எடுத்துப்பிடித்தவனாய், மேற்கட்டி இட்ட தளிமத்தின்மேல் அழகிய குமுதவல்லியும் அப்படுக்கையின் பக்கத்தே சாய்வு அணைமேல் அவள் தோழிமார் இருவரும் உறங்கிக்கொண் டிருக்கும் அறையினுள் திருட்டுத்தனமாய் நுழைந்தான். 

ஆறாம் அதிகாரம்

நாகநாட்டரசி

முதன் முதல் நல்லான் அவ்வறையினுள்ளே நோக்கிய போது, அவன் கண்களின் எதிரே தோன்றிய காட்சியானது மிகவும் அழகியதொன்றாய் இருந்தது. அந்தச் சாவடியிலுள்ள சிறந்த அறை வரிசைகளுள் இந்த அறை சேர்ந்ததாயிருந்தமை யால் இதுவும் நேர்த்தியாகவே ஒப்பனைசெய்து வைக்கப்பட் டிருந்தது. மலையநாட்டு வழக்கப்படி அந்தப் படுக்கையானது நிலமட்டத்துக்குமேல் ஏறக்குறைய இரண்டடி உயரம் உயர்த் தப்பட் டிருந்தது; கட்டிலோ அழகாகச் செதுக்கப்பட்ட நொய் தான மரத்தாற் செய்யப்பட்டிருந்தது. அதன் மீது மேற்கட்டி ஒன்று ஏற்றப்பட்டிருந்தது; அதனினின்றும் நீலப்பட்டுத் திரை ஒன்று தொங்கவிட் டிருந்தது. கதிரொளிப்பட்டினால் உறையிடப்பட்ட மெத்தையுந் தலையணைகளும் மிகப்பருத்தவை களாயிருந்தன. இத்தகையதான கட்டிலின்மேல் நமது கதைத் தலைவியான நாகநாட்டரசி பள்ளிகொண்டிருந்தனள்; இவ ளுக்கு வாய்த்திருந்த எங்குமில்லாப் பேர் அழகின் பொலிவால் இவளுக்குக் குழதவல்லி என்னும் பெயர் வழங்கி வரலாயிற்று. 

இவள் நேர்த்தியான ஒற்றையாடை மட்டும் மேலே அணிந்திருந்தாள்; ஏனென்றால், நம் இந்தியநாட்டுப் பெண்கள் இராக்காலத்தில் ஆடையை முழுதுங் களைந்துவிடுவதில்லை; பகற்காலத்தில் வழக்கத்துக்கு இணங்கித் திருத்தமாக உடுக்கும் உடைக்கு ஈடாக, இரவில் நொய்தாகத்துவளுந் தளர்ந்த ஆடை யைச் சுற்றிக்கொள்வர். அவ்வறையினுள் எரிந்துகொண் டிருந்த விளக்கானது, அக்கட்டிலின் மேற் சாய்ந்திருக்கும் அழ கிய உருவின்மேல் தன் கொழுஞ்சுடரின் செழுங்கதிர்களைச் சொரிந்தது; மெல்லிய ஆடையாற் சுற்றப்பட்டிருந்த அவ்வழ கிய உருவானது, திரைகளினின்று விழுங் கரிய நிழலின் அண்டை டையிலே, தன்மேல் வெளிச்சம்படுதலால் மிக்க விளக்க முடன் தோன்றுவதாயிற்று. மேலும், அவ்விளக்கொளியானது நாகநாட்டரசியின் அருமையான முக அமைப்பை இனிது விளக்கியதொடு, வழுவறத் திருந்தி இருக்கும் அவளுருவின் அமைவினையும் அவள் நிறத்தின் மெல்லிய இயலினையுந் தெளித் துக்காட்டியது. இவளுக்கு இப்போது அகவை ஏறக்குறையப் பதினேழு ; ஆனால், இவள் வடிவின் திரண்ட வளர்ச்சியைப் பார்த்தால் ஆண்டு பத்தொன்பதென்று மட்டும் மதிப்பிடக் கூடியதாயிருக்கும். கன்னங்கறேல் என்று பளபளப்பாயிருக் கும் இவளது செழுங்கூந்தலானது அழகிய தலை வைத்திருந்த அணையின்மேற் கற்றை கற்றையாய்த் துவண்டு மிளிர்ந்து கிடந் தது : இவள் புருவங்களோ, பலபடியாலும் மிகக் கறுத்துத், துகிலிகையால் மெல்லென எழுதப்பட்டனபோல் எழிலுடன் வளைந்து, வழுவழுப்பான பொட்டுகளின் மினுமினுவெனும் நிறத்தை விளங்கக்காட்டின. மூடப்பட்டிருந்த கண் இதழ்கள் பரியனவாயிருந்தமையால் தம்மால் உள்மறைக் கப்பட்ட கோளங்களின் பருமனைத் தெரிவுறுத்தின; புருவங் களைக் காட்டினும் பின்னுங் கருமையாயிருந்த இறைப்பைமயிர் விளிம்புகளானவை, தாஞ் சார்ந்திருந்த கன்னங்களின் களங்க மற்ற தூயவெண்ணிறத்தொடு மாறுபட்டு விளங்கின. கடற் சிப்பியிற் பிறக்கும் முத்தின் கண் உள்ள பளபளப்போடு அழ கிய தெளிவும் உடையதாயிருந்தமையால், அகத்திற்றோன்றும் உணர்வின் அசைவினால் அழகிய முகத்தின்கண் வருவிக்கப் படுஞ் சிவப்பினைத் தோன்றக்காட்டுந் தூய மறுவற்ற இவளது தோலிலே துலங்கின நிறத்தைத், தாமரையின் மெல்லிய செந் நிறத்தொடு சேர்த்துக்குழைத்த வெள்ளல்லியின் ஒளிமிக்க வெண்மைநிறம் என்று மட்டும் புனைந்து உரைக்கலாம். இவ ளுடைய கன்னங்கள். இளம்பருவத்தின் புத்தப்புதுமைக்கும் நலத்திற்கும் இணங்கப் போதுமான அளவு திரண்டு உருண்டு இருந்தனவே யல்லாமல், முகத்தின் முட்டைவடிவான அழ கைச் சிறிதும் பழுதுபடுத்தவில்லை. நெற்றியானது மட் டாகவே உயர்ந்திருந்தது – மூக்கு மிகவும் நேராக அந்நெற்றி யொடு பொருந்தியிருந்தது. வாயோ உலகத்திற் பார்க்கப்பட்ட மிக இனிய பொருள்களுள் இனியதாய் இருந்தது; அஃது அகலமின்றி ஒடுங்கி மேல்இதழ் கீழ்இதழினும் மிகப்பருத்து இருந்தது; அவ்விதழ்கள் இரண்டுஞ் சிறிது அகன்றபோது, மிகச்சிவந்த இனியகொழும்பழம் ஒன்று வெடித்து உள்ளே அமைந்த தூய வெள்ளிய விதைகளை அவ்வெடிப்பின் வழியே காட்டுவது போன்று இருந்தன. மோவாய் வேண்டுமளவுக்கு நீண்டு, அங்ஙனமே முகத்தின் முட்டை வடிவுக்கு நிரம்பப் பொருந்தி இளகி வட்டமுற்று இருந்தது; இவள் உறங்கும் பொழுதும் இவளது அழகிய முகத்தின் பொதுவான தோற்ற மானது கள்ள மறியா மிகவுந் தூய கவர்ச்சித்தன்மையை ஒளி ரக்காட்டியது. 

இவள் தலையின் அழகில் எவ்வகையான குற்றமேனுங் களங்கமேனும் இல்லை. எல்லாம் முழுத்திருத்தத்தோடும் வயங் கின; சிறியனவாய் மெல்லென மடிந்த காதுகளுங்கூடக் கல் லிற் செதுக்கி யமைத்தாற்போல் திருத்தம்பெற்றிருந்தன. கழுத்தானது மெருகிட்ட வெண்பழுப்புக் கற்போல் துலங் கியதே யல்லாமல், விளக்கமில்லாச் சலவைக்கல்லின் வெண்மை வாய்ந்ததாக இருக்கவில்லை; அதன் நிறம் உறைபனிபோல் தூய தாய் இருந்தாலும், பனியின்கண் உள்ள குளிர்ச்சி அதனிடத் தில்லை; அதனைப்பார்த்த கண்களுக்கு அது மெல்லென அனன்று காட்டியது. தொண்டை வரையிற் சுற்றப்பட்டிருந்த மெல்லிய ஆடையானது தன்னுள் நாணத்தோடும் பொதிந்து வைத்த மார்பின் திரண்ட பொருள் வடிவைத் தெரித்துக்காட் டியது. ஓர் அழகிய கையானது கட்டிலின் ஓரத்தின்மேற் றுவண்டு கிடந்தது. 

இனி, இப்படுக்கையின் தலைப்பக்கத்திலே மெத்தையிட்ட குறிச்சியில் ஓர் இளம் பெண் இருந்த வண்ணமாய் உறங்கினள்; மற்றொருத்தி அதன் கால்மாட்டில் அப்படியே மற்றொரு குறிச்சியில் உறங்கினள். இவ்விளம் பெண்கள் இருவருந் தந் தலைவிக்கேற்ற அழகு வாய்ந்தவர்களாய் இருந்தமையாற், கட்டி லின்மேற் றுயில்கொள்ளும் மிக மேம்பட்ட தெய்வமொன் றைப் பாதுகாத்திருக்கும்படி வைக்கப்பட்ட வேறிரண்டு சிறு கந்தருவப்பெண்கள் தூக்கத்தால் மயக்குண்டு கிடந்தனரோ என்று சொல்லும் வகையாய்த் தோன்றினர். 

நல்லான் அவ்வறையினுள் எட்டிப்பார்த்தபோது அவன் கண்ணெதிரே தோன்றிய காட்சி அத்தனை அழகுவாய்ந்ததா யிருந்தது! இதுதான் முதன் முதல் இவன் குமுதவல்லியைப் பார்த்தது; இவளுக்குக் குமுதவல்லியெனும் பெயர் மெய் யாகவே மிகவுந் தகுதியான தொன்றேயாம் என்னும் எண்ணம் இவன் உள்ளத்தில் உடனே தோன்றியது. இவன் நெஞ்ச மானது வேறு ஒருத்திக்கு உருக்கத்தோடு உண்மையாகவே தரப்பட்டதாய் இருந்தாலும், அக்கட்டிலின்மேல் அரைவரிசை யாகச் சாய்ந்திருக்கும் உருவின் மிக உயர்ந்த அழகைக் கண்ட தும் அதனாற் கவரப்பட்டுச் சிறிதுநேரம் மயங்கினான். இம் மண்ணுலகத்திற் றோன்றிய வடிவத்தையன்றி, ஏதோ மேலுல கத்திலிருந்து வந்த ஓர் அழகியதோற்றத்தைத் தான் உண்மை யிலே காண்பதாகச் சிறிதுநேரம் நல்லான் எண்ணினான்; அவ் வளவுக்கு இவ்வுருவின் மேல்வரைகள் எல்லாந் துவண்டு நீண்டு மெல்லியனவாய் இருந்தமையே யன்றியும், முகத்திலும் எல்லை யற்ற பேர் எழில் குடிகொண்டு விளங்கியது. 

நல்லான் அரவம் உண்டாகாமல் மெல்ல அவ்வறையின் கதவைத் திறந்த நேரத்திற் குமுதவல்லி உண்மையிலே நல்ல தூக்கத்தில் இருந்தனள். ஆனால், அவ்விளம் பெருமாட்டி நெடுநேரம் அந்தத் தூக்கத்தாற் கவரப்பட்டிருந்தவள் அல்லள்; அஃது ஆழ்ந்ததுயில் அன்று; கனவொடுகலந்து உறக்கத்தின் றன்மை யுடையதாய் இருந்தது. கதவு திறக்கப்பட்டமையால் அவள் திடுக்கிடவும் இல்லை. ஒருகால் அவள் ஓசையொன்றுங் கேட்கத்தான் இல்லையோ: ஆனால், ஏதோ புதுமையாக வழக் கத்திலில்லாதது நடக்கிற தென்னும் ஓர்உணர்வு மட்டும் விரை வாக அவள் உள்ளத்தில் வந்து நுழைவதாயிற்று. உறக்கத்திற் கும் விழிப்பிற்கும் நடுவே மனமானது தன்னைச்சூழ நடப் பதைத் தெளிவின்றி மங்கலாய் உணர்வதும், அங்ஙனம் உணரி னும் அது மெய்யோ பொய்யோ என்று வரையறுக்கக்கூடாத வகையாய் அவ்வுணர்வு தெளிவின்றி மங்கலாய் இருப்பதும் போன்ற நிலையைப் படிப்பவரிற் பெரும்பாலார் தமது பழக்கத் திற் கண்டிருக்கலாம். அந்நேரத்திற் குமுதவல்லியின் மன நிலை யும் அவ்வாறாகவே இருந்தது: ஆனால், அவள் வரவர விழிக்கத் துவங்கிச் சிறிதே கண்களைத்திறந்தாள் – மிகவுஞ் சிறுகத் திறந் தமையால் உள்ளேயுள்ள அழகிய கோளங்கள் தம் அகத்தே வரைந்து வைத்த ஒளியில் ஒரு கதிர்மட்டுமே வெளியே விளங் கியது. ஆகவே, இங்ஙனந் திறந்தது மிகவுஞ் சிறிதாயிருந்தத னால் இது நல்லான் கருத்தில் தென்படாமலே போயிற்று; ஆனால், அது தன்னருகில் வந்திருக்கும் அச்சம்மிகுந்த பெரிய தோர் இடரின் தன்மையைக் குமுதவல்லிக்குக் காட்டிவிடப் போதுமானதாயிருந்தது. 

இவள் தன் ஆண்டிற்கும் பெண்டன்மைக்கும் ஏற்ப மெல் லியல்பு எல்லாம் உடையவளாயிருந்துஞ், சடுதியில் நிகழும் நிகழ்ச்சியிலேனுங் கடுமையான இடர்ப்பாடுகளிலேனுந் தனது மனத்துணிவை இதற்குமுன் ஆராய்ச்சியாக எங்குங் காட்டிப் பார்த்தவள் அல்லள் – என்றாலும், இப்போது குமுதவல்லி ஒரு நொடிப்பொழுதில் திருவுளச்செயலாய் ஒரு மனத்துணிவினால் உந்தப்பட்டாள். முகத்தை மறைத்துக்கொண்டு கையில் வாட் படைப்பிடித்தவனாய் ஒருவன் தன் அறையினுள் திருட்டுத்தன மாய்ப் புகுந்திருக்கின்றான் என்பது மனத்திற்பட்ட அந்த நேரமே, அவள் திடீரென முற்றும் விழித்துக்கொண்டாள். ஆயினும், தன் கண்களை மூடியபடியே திறவாதிருந்தாள். அங்கே நடப்பதை அவள் உணர்ந்தாளென்று அறியும்படி அவள் திடுக்கிட்டு எழுந்திருக்கவும் இல்லை, அப்பக்கம் இப்பக் கம் அசையவும் இல்லை,அதனொடு, தான் மூச்சுவிட்டுக் கொண் டிருந்த முறையைக்கூட அவள் சிறிதாயினுந் தடைசெய்யவும் இல்லை, மாற்றவும் இல்லை. 

மின்னல் தோன்றி மறைவதைப்போலப் பலவகைப்பட்ட எண்ணங்கள் மிகவிரைவாய் அவள் உள்ளத்தில் ஊடுருவிப் போயின. கூக்குரலிட்டால் அந்த விடுதியில் உள்ளவர்கள் அவளுதவிக்கு வரக்கூடுமாயினும், அவள் இருந்த அறைகள் சிறிது ஒதுப்புறமாய்த் தனித்து இருந்தமையால், அவள் எவ்வளவு கூவினாலும் அஃது அங்குள்ளவர் காதுகளுக்கு எட்ட மாட்டாது: மற்றுந், தன் இதழ்களிலிருந்து அங்ஙனம் ஓசை புறப்படும் அப்பொழுதே தன்னுயிர்க்கு இறுதியாயும் முடியும்! எனவும் அவள் அறிந்தாள். ஆகவே, தான் தூங்குவதுபோற் பாசாங்கு பண்ணுதலே அவள் தப்பிப் பிழைப்பதற்கு வழி . முக மறைப்பொடுவந்த அவன் கொள்ளையிடுவதற்கே வந்தான் என் பது, அவன் திருட்டுத்தனமாக உள்நுழைந்தமையானும், அறைக்குள் உள்ளவர்கள் எல்லாருந் தூங்குகிறார்களா என்று தான் திட்டமாய்த் தெரிந்துகொள்ளும் பொருட்டு நிற்பது போல் அவன் கதவண்டையிற் சிறிதுநேரம் மிகவும் விழிப்பாக நின்றமையானும் இனிது விளங்குவதாயிற்று. முகமறைப் பிட்டு அறையுள் நுழைந்தவன் அங்ஙனஞ் சிறிதுநேரம் நின்ற தற்குக் காரணம், உருவெளித்தோற்றம் போல் அளவுகடந்த தன் அழகின் காட்சியேயென்று, பெண்களுக்குரிய வீம்புங் கள்ளமும் முற்றும் இல்லாக் குமுதவல்லி சிறிதாயினும் நினைந்திலள். 

இங்ஙனம் நாகநாட்டாசி உற்றநேரத்தில் அருமையான மனவலிமை காட்டினதை இதனைப்படிப்பவர் தெரிந்து கொண் டனர்; இத்தகைய வியத்தகு செய்கை தனது தனித்த நிலையை உணர்ந்து தன்னைக்கைவிட்ட உணர்ச்சியால் மட்டுமே வருவ தாகும். நல்லான் முற்றும் வஞ்சிக்கப்பட்டவன் ஆனான் : குமுத வல்லி இன்னுந் தூங்குகிறாள் என்றே அவன் மெய்யாக நினைந் தான். ஓசைசெய்யாமல் அவன் கட்டிலண்டைவந்தான். இதிற் சிலநொடிகள் சென்றன, – பறந்துபோகும் இச்சிறியதோ ரிமைப்பொழுதில் ஓர் ஆடவனுக்கு ஆறு மூச்சு ஓட்டங்களே நடைபெறக்கூடும்; என்றாலும் இவை குமுதவல்லிக்குப் பல ஊழிகளாய்த் தோன்றின. முகமறைப்பிட்டவன் கிட்டவே வந்திட்டான். இப்போது அணுவளவுகூடக் குமுதவல்லி தன் கண்ணிதழ்களைத் திறக்கத் துணியவில்லை; ஏனென்றாற் கண் விழிக்கும் அடையாளஞ் சிறிதாயினுங் காணப்பட்டால் தன் மேல் உடனே ஆழ்த்துவதற்கு இசைந்தவண்ணமாய் அவன் கையிற் குத்துவாள் பிடிக்கப்பட்டிருக்கிற தென்பதை அவள் இயற்கையுணர்ச்சியால் தெரிந்தாள். உலகநடைகளிற் சிறிதும் பழக்கம் இல்லாதவளுந், தனது மனத்துணிவை இதற்குமுன் காட்டி வழக்கப்படாதவளும் ஆன இளங்குமுதவல்லி, எந்தக் காலத்திலேனும் எந்த இடத்திலேனும் இப்படிப்பட்ட நேரங் களில் ஆண்மைகாட்டிய ஒரு மறமகளுக்குப் பெருமைதருதற் கான நிறைந்த நிலையிலே தனது மனவலிமையை இங்ஙனம் உறுதிப்படுத்திக் காட்டியது மிக வியப்பாயிருந்தது. 

இன்னும் அவள் உறங்குவதுபோலவே காணப்பட்டாள். இன்னும் நல்லான் கட்டிலை அணுகிப் போயினான். அவன் அவள்மேற் குனிந்து நோக்கினான்: அவன் விடும் மூச்சானது அவள் கன்னங்களின்மேல் வீசியது. ஓ தெய்வமே! அவளது உயிரைப் போக்கவா அவன் எண்ணினான்? ஓர் அழகிய கை கட்டிலின் ஓரத்தின் மேற் றுவண்டுகிடந்ததென முன்னமே மொழிந்திட்டோம்: மெழுகுதிரியை ஒத்த அவள் விரல்கள் ஒன்றின்மேல், ஒரே ஒரு கல் அழுத்திப் புதுமையாகவும் ஒருவகையான வேலைத்திறம் வாய்ந்ததாகவுஞ் செய்யப்பட்ட ஒற்றைமோதிரம் இடப்பட்டு இருந்தது. இதில் அழுத்தப்பட் டிருந்தது சிவப்புக்கல்: அதன்மேற் சுழி ஒன்று செதுக்கப்பட் டிருந்தது. முகமறைத்து நுழைந்தவன் விரல்களானவை அந்த மோதிரத்தை மெல்லெனத்தொட்டன. மணிக்கலம் ஒன்று அழகுபெறச்செய்த அவ்வழகியகையில் அஃதிருந்த இடத்தி னின்றும் அதனை அவன் மெதுவாகத் கழற்றத் தொடங்கினான். 

குமுதவல்லிக்கு இதுதான் மிகவும் நிலைகலக்கும் நேரமாய் இருந்தது. அணிகலங்கள் கழற்றிவைத்த மேசைமேல் விலை மிக்க மணிகள் இருந்தன: கிடைத்தற்கரிய முத்துமாலை யொன்று அவள் கழுத்திற் சூழப்பட்டிருந்தது; அவளது மற் றைக்கையிலோ விலையுயர்ந்த மோதிரங்கள் பல அணியப்பட் டிருந்தன. முகமறைத்த கள்வன் இவற்றை யெல்லாம் எடுத் துக்கொண்டிருக்கலாம், குமுதவல்லியுந் தான் உயிர் பிழைத் ததை எண்ணிப்பார்த்து அவற்றை இழந்தமைக்காக நகையாடி யிருப்பள். ஆனால், இந்த ஒருமோதிரத்தை – அதற்குள்ள இயல் பான விலையைக் காட்டினும் மிகவும் பெரிதாய் அவளால் நன்கு மதிக்கப்பட்டிருந்த இந்த மோதிரத்தைச் – சில காரணங்கள் பற்றி மந்திரக்கெவிட்டுக்குச் செலுத்தும் வணக்கமெல்லாம் அவளாற் செலுத்தப்பட்டுவந்த இந்தமணிக்கலத்தை – அவ ளிடத்தினின்றும் பறித்துக்கொள்வ தென்றால்,ஓ! அஃது இதுகாறும் அவள் தன்னுள் அடக்கிவைத்திருந்த கூக்குர லொலியை அவள் இதழ்களினின்றும் வெளிப்படுத்துதற்குப் போதுமானதாம் அன்றோ! அப்படியிருந்தும், அவள் இன்னுந் தன் மனவுறுதியை விடாமற் பிடித்திருந்தாள்: அவள் அசைய வில்லை – தூக்கத்திற்கு உரிய அடையாளங்களுள் ஒன்றான உயிர்ப்பு முறையினின்று மாறவும் இல்லை. இந்தக் கொள்ளைக் காரன் தன்னைக் கொலைகாரனாகச் செய்து கொள்ளவேண்டுவ தும் அகத்தியம் எனக் கருதுவனாயின் திகிலான தன்றொழி லைச் செய்வதற்குக் குத்துவாள் ஒன்று அருகாமையில் இரு கிறதென்பதை அவள் தெரிந்தாள். ஒருவேளை, ஓர் இமை கொட்டும் நேரங் குமுதவல்லியின் கன்னத்தில் நிறம் மாறி யிருக்கலாம். அப்படி நிகழ்ந்ததானால் அது நல்லானாற் காணக் கூடாதபடி அவ்வளவு புல்லிதாய் இருந்திருக்கவேண்டும்; அல் லது, அவன் அதனைக் குமுதவல்லியின் முகத்தின்மேற் பட்ட விளக்கொளியின் அசைவாக எண்ணியிருக்க வேண்டும். 

மோதிரமானது அவள் கையினின்றுங் கழற்றப்பட்டு விட்டது; அக்கொள்ளைக்காரனின் உடையிலிருந்து மெல் லென உண்டான சரசர என்னும் ஓசையால் தன் கட்டி லின் பக்கத்தேயிருந்து அவன் போகின்றான் என்பதனை அவள் அறியலானாள். இப்போது அவள் தன் கண்மடல்களை மிகவுஞ் சிறுகத் தூக்குவதற்குத் துணிவு கொண்டாள் நல்லானுடைய நீண்ட உருவத்தைத் தனது கீழ்க்கண்ணாற் சிறிது பார்த்தாள்; மறுபடியும் அவளைப்பார்க்க அவன் திரும்புவதற்குள், அவடன் கரிய இறைவிளிம்புகளானவை னத்தின்மேற் றங்கியிருந்தன. அவன் தனக்குப்பின்னே கதவை மெதுவாகச் சாத்துதலையுங் காதிற் கேட்டாள்; பின் னுஞ் சிலநொடிகள் செல்ல, அவ்வறை வரிசைகளுக்குப் புறம்பே யுள்ள வாயிற் படியை அவன் தாண்டிச் சென்றிருப்பான் என உறுதி கொண்டாள். இப்போது அவள் இடரி னின்றும் விலகினாள்; இடுக்கண் ஒழிந்தது! திகில் மிக்க அந் நிகழ்ச்சி நடந்தேறுங்காறும் அவளைத் தாங்கிவந்த வியப்பான மனவலிமையானது, இப்போது ஒரு நொடிப் பொழுதில் இற் றுப்போயினது; உணர்வுகளைக் கட்டி ஆண்ட அத்தெய்வ வலிமையானது பிறகு அங்ஙனம் அவ்வளவுக்கும் மறுதலைப் பட்டு நெகிழ்ந்து போதல் இயற்கையே யாகும். அதன் பின்னே, நாகநாட்டரசி தன் குரலை எழுப்பித் தன் பாங்கிமார் களை விழிப்பிக்க நினைந்த அந்நேரத்தே சடுதியில் ஒருகளைப் பானது அவளை வந்து பற்றியது – அவள் உணர்வு இழந்து மன இருளிற் புதைந்து கிடந்தாள். 

அங்ஙனம் பல நாழிகை நேரம் அவள் கிடந்தாள்; ஏனெ னில், அவளுக்குத் திரும்பவும் உணர்வு வரத் தொடங்கிய பொழுது விளக்கானது அவிக்கப்பட் டிருந்தது – சாளரங் களின் வழியாயுந் திரைகளின் நடுவேயுள்ள திறப்பின் வழி யாயும் பகலவன் கதிர்கள் புகுந்து துலங்கின. மிகவும் இளைப் படையச்செய்து கிடக்கையிலே கிடத்திவிட்ட தீய கனவி னின்றும் எழுந்திருப்பாள்போற் குமுதவல்லி சிறிது சிறி தாகக் கண்விழித்தாள். கலக்கம் அடைந்த தன் நினைவுகளை அதனினின்று மீட்கவுந், தன் எண்ணங்களை ஒன்று சேர்க்க வும் மாட்டாதவளாய் அவள் நெடுநேரம் அசைவின்றிக் கிடந் தாள். கடைசியாக அவை யெல்லாங் கனவு அல்ல என்னும் ஐயுறவு அவள் உள்ளத்தில் நுழையலாயிற்று; என்றாலும், நெடுநேரந் தியங்கிக்கிடந்ததன் பய பனாக அவள் மிகவுஞ் சோர்வு அடைந்தவளாயும் ஆவிதளர்ந்தவளாயும் இருந்தமை யால், இடம் பெயர்ந்து பார்ப்பதற்கே சில நொடிகள் கழிந் தன; அங்ஙனம் பார்த்திருப்பாளானால் அஃது ஐயமெல்லாம் நீக் கிக், கண்டது கனவு அன்று என மெய்ப்பித்திருக்கும். அப்படி யிருந்தாலுங் கடைசியாக அவள் தனது கையைத்தூக்கிப் பார்த்தாள்: மோதிரம் போய்விட்டது! 

முன்னாட் பயணத்தின் களைப்பினால் இன்னும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன் பாங்கிமார்களை இப்போது எழுப்பிவிட்டாள்; கலவரமானது ஏதோ நடந்திருக்கிறது என அவ்விரு பெண்களும் அச்சம் உற்றார்கள்: ஏனெனில், தங்கள் தலைவியின் குரல் ஒலி கலக்கமும் வெருட்சியும் நிறைந்திருந் தது. அவர்கள் அவளிடம் பறந்து ஓடினார்கள்: உடல்நலத் தின் குறியாகச் செந்தாமரை வண்ணமானது அல்லி மலரின் விளங்கு நிறத்தொடு கலந்து கனிந்து மெல்லெனத் தோயப் பெற்ற அவளது முகத்திலே வெளிறின நிறத்தைக் காண்ட லும் பெருந் திகில் அடையப்பெற்றார்கள். தெய்வப் பேரின் பமே ஆழ்ந்து குடிகொளப்பெற்றவைபோலக் காணப்படும் அவள் தன் பருத்த அழகிய நீல விழிகளுங்கூட, இதற்கு முன் அப்பாங்கிமார் என்றும் பார்த்திராத ஒரு பொல்லாத தோற் றத்தை இப்போது உடையதாயிருந்தது. கலங்கியசொல்லி லும், வருத்தம் மிக்க சொல்லசைவிலும், முறை பிறழ்ந்த சொற்றொடர்களிலும் நடந்த கதையைக் குமுதவல்லி சொல் லக்கூடியவளானாள்; அவ்வாறு அதனைச் சொல்லிக்கொண்டு வருகையிற் சுந்தராம்பாள் ஞானாம்பாள் இருவரும் பெருந் திகிலோடும், ஐயுறவோடும், அச்சங் கலந்த ஆவலோடும் அதனை உற்றுக்கேட்டுவந்தார்கள். குமுதவல்லி சொல்லிய சொற்களி லிருந்து அவள் தனக்குள்ள உரிமைப்பொருள்கள் எல்லா வற்றையும்விட இழந்துபோன அம்மோதிரத்தை மிக்கதோர் அரும்பொருளாக மதித்திருந்தாள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளலானார்கள். இதற்குமுன் அவள் அம்மோதிரத்தைச் சுட்டி ஏதும் பேசக் கேட்டது இல்லாமையால், இச்செய்தி அப்பெண்களுக்கு முழுதும் புதிதாய் இருந்தது: உண்மை யிலே அவர்கள் நினைப்பிடக்கூடிய வரையிற் சில நாட்களுக்கு முன்னேதான் தங்கள் தலைவியின் விரலிலே அவர்கள் அத னைப் பார்த்ததுமாகும். சுந்தராம்பாள் ஞானாம்பாள் இருவருந் தந் தலைவியினிடத்து மிக்க பற்றுதல் உடையவர்களாதலால், அவள் முகமறைத்து வந்த கள்வன் வாளுக்குத் தப்பிப் பிழைத் ததைப் பற்றி நெஞ்சங்கரைந்து வாழ்த்துரை சொரிந்தார்கள்: அவளுயிரைத் தப்புவித்ததாகிய அந்த மனவலிமையைப் பற் றியுங் கலக்கம் மிக்க இறும்பூதுடன் வியந்து பேசினார்கள். 

அவ்விரு பெண்களில் மூத்தவளும், மான் விழிபோல் மெல்லென்ற கரியநிறங் கலந்த பருத்தவிழிகளொடு கருங் கூந்தலும் வாய்ந்த அழகியாளும் ஆன சுந்தராம்பாள் தன் தலைவியை நோக்கிப், “பெருமாட்டியார் மறுபடியும் அக்கீழ் மகனைத் தெரிந்துகொள்ளக் கூடுமே?” என்று வினாயினாள்.

“இல்லை- அவன் முகத்தை நான் பார்க்கவில்லை, அவன் உடம்பு நீண்டிருந்தது – யான் மதிப்பிடக்கூடும் அளவில் ஒல்லியாகவே இருந்தான்.” என்று குமுதவல்லி மறுமொழி கூறினாள். 

“எங் கோமாட்டி, அவன் உடுப்பு?” என்று பரபரப்பாய் இடையிட்டு வினாவினாள், மேற்கணவாய் மலைநாட்டு மகளிர்க் குள்ள அரிய வனப்பின்படி நெளிபட்ட கூந்தலுங் கருவிளம் பூப் போன்ற கண்களும் வாய்ந்த அழகிய ஞானாம்பாள் என் னும் இளம் பெண். 

அதற்கு நாகநாட்டரசி,”நான் அதனை விளக்கமாக விரித் துச் சொல்லக்கூடவில்லை.” என்று விடைகூறிப், பின்னும், ”என்றாலும், அது நீலகிரி நாட்டான் உடைபோலிருந்த தென்று நினைக்கின்றேன் – இல்லை! இன்னதென்று என்னாற் சொல்லக்கூட வில்லை!” என்று, குழம்பிய தன் நினைவு களை ஒழுங்குபடுத்துவாள்போல் அழகின்மிக்க கையாற் புருவத் தைத் தடவிக்கொண்டே கூட்டிச் சொன்னாள். 

சுந்தராம்பாள் நினைவிழந்த இறும்பூதோடும் எண்ணம் மிக்கவளாய், ”அவன் யாராய் இருக்கக்கூடும்?” என்றுகேட் டாள்: பிறகு திடீரென ஒரு நினைவு தோன்றினவளாய் அணி கலமேசையண்டை விரைந்து போய், ‘இல்லை! பெருமாட்டி யார் சொன்ன வண்ணமே தங்கள் மோதிரத்தை யன்றி வேறொன்றையும் அவன் எடுத்துக்கொண்டு போகவில்லை!” என வியந்து சொன்னாள். 

“அவன் பொதுவான கள்வனாய் இருக்க முடியாது, என்று ஞானாம்பாள் மனத்திற் படும்படி மொழிந்தாள். “அவ னுக்கு ஏதோ வேறே நோக்கம் இருந்திருக்க வேண்டும்”

“ஆம்! திண்ணமாய் அவன் வெறுங்கொள்ளையிடும் எண் ணத்தைத்தவிர வேறு நோக்கம் உள்ளவனாகத்தான் இருக்க வேண்டும்!” என்று குமுதவல்லி உரத்துச்சொன்னாள். “இந்த எண்ணம் எனக்கு முன்னே படவில்லை. இஃது என்ன கருத்துப்பற்றி இருக்கக்கூடும்? இந்த மோதிரம் – இந்த அதே மோதிரம் அவ்வாறு ஆவதற்கு -‘ என்று சொல்லியவள், தன் மனத்தில் நிகழ்வதைத் தன் பாங்கிமார்க்குத் தெரியப்படுத்த விருப்பம் இல்லாதவள் போல் இடையிலே பேச்சை நிறுத்திக் கொண்டாள்; பின்னும் ஆழ நினைந்து பார்த்தாள். 

”நாங் கூக்குரலிடுவோம்!” என்றாள் சுந்தராம்பாள் என் னுங் கருங்குழலாள். “ஒரு வேளை அந்தக் கொள்ளைக்காரன் இன்னும் இந்த விடுதியிலேயே இருக்கலாம்!” 

அதற்கு, “ஆம்!” என்று, இக்கலவரத்தால் அவிழ்ந்து அழகிய தன் முகத்தை மறைத்த நெளிக்கூந்தலை விலக்கிக் கொண்டே ஞானாம்பாள் கூவினாள்: ‘மணியகாரரை அழைப் பிக்க வேண்டும்! தேடிப்பார்த்து ஆராய்தல் வேண்டும்!” 

இங்ஙனஞ் சொல்லிக்கொண்டே தன் பாங்கிமார் இருவ ருங் கதவைத்திறக்க ஓடியபோது, ‘நில்லுங்கள்!” எனக் குமுத வல்லி விரைந்து மொழிந்தாள். ”சிறிது நினைந்துபார்த்தால் இதன்பொருட்டு ஏதும் முயற்சிசெய்யத் துவங்கல் பயன்படா தென்பது நமது அறிவுக்குத்தோன்றும். இப்போது விடிந்து ஐந்து நாழிகை ஆயின.” என்று சாளரத்தின் வழித்தோன்றிய வெயிலைப் பார்த்தவளாய்ப் பின்னும், ‘பகலவன் ஏற்கெனவே கீழ்பாற் கிளம்பிப் பலநாழிகை ஆய்விட்டன; அந்தக்கொள்ளைக் காரன் சென்றஇரவில் இந்த விடுதியினுள் இருந்தானாயின், இந்நேரம் அவன் இதனைவிட்டு நெடுந்தொலைவு போய்விட்டான் என்பதைத் திண்ணமாய் அறிமின்கள்!” எனத்தொடர்ந்து உரைத்தாள். 

“அப்படியானால் இழந்த மோதிரத்தை வெளிப்படுத்துதற் குப் பெருமாட்டியார் ஒன்றுஞ் செய்யப்போகிற தில்லையா?” என்று சுந்தராம்பாள் வினவினாள். தம் இளம்பெருமாட்டி இப்போது எழுந்து உட்கார்ந்திருந்த கட்டிலண்டை தன்றோழியுந் தானுமாகத் திரும்பிவருகையில் ஞானாம்பாள் ‘குற்றவாளி யைச் சிறை செய்வதற்கு?’ எனச் சேர்ந்து வினவினாள். 

“அது பயன் படாதாகும் என அஞ்சுகின்றேன் – இல்லை, பின்னும் உறுதியாகவே நம்புகின்றேன். யான் சொல்வதை அமைதியொடு கேளுங்கள். என்னிடத்தினின்று அந்த மோதி ரத்தைக் கவர்ந்துகொண்டு போனதைப்பார்த்தால், அவன் யாரா யிருந்தாலும் ஏதோ ஆழமான கருத்துடையவனாய் இருக்க வேண்டும்; அவன் கருத்து இன்னதென்று யானே அறிந்து கொள்ளக்கூடவும் இல்லை, உய்த்தறியவும் முடியவில்லை பாருங் கள்! அவன் எவ்வளவு விழிப்பொடு வந்திருக்கின்றான்! அவ னது முகத்தின் மேலோ ஒருமறைப்பு – அவன் நடவடிக்கை களோ மிகவும் மறை பொருளான கள்ளத்தனத்தொடு கூடி யவை – அவன் அப்பொழுது அணிந்திருந்த உடுப்பே அப் போதைக்குக் கொண்டதன்றி மறுபடி எக்காலத்தும் அணி யாத வெறுங்கோலமே போலும்! ஆகையால் தன்கருத்து முற் றுப்பெற்றவுடனே இங்கே சிறிதுந் தங்காது தன்னைப் பாது காத்துக்கொண்டு போக அவன் தவறமாட்டான் என்பதை உண்மையாய் நம்பியிருங்கள்.” என்று குமுதவல்லி துயரம் மிக்க சொற்களோடும் பார்வையோடும் மொழிந்திட்டாள். 

சுந்தராம்பாள் ஞானாம்பாள் இருவருங் குமுதவல்லி சொல் லியவற்றின் உண்மையைச் சோர்வுற்ற தமது பார்வையால் ஒப்புக்கொண்டு காட்டினர். 

“என் அன்புள்ள பெண்களே, யாரும் என்னை உன்னி யாதவண்ணம் யான் வழிச் செல்கின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் – ” என்று நாக நாட்டரசி பின்னுந் தொடர்ந்தாள். 

“ஒ! தக்க ஆண்டுணையொடு வழிச்செல்லும்படி யான் கழறியதைப் பெருமாட்டியார் பின்பற்றத் திருவுளஞ் செய் திருந்தால்!” என்று சுந்தராம்பாள் உரத்துச் சொன்னாள். 

உடனே ஞானாம்பாள், “முதன்மையாய் அத்தனை நெடுந் தொலைவு!” என்று நடு நுழைந்து கூறினாள். இப்போது நிகழ்ந்த இடரைக் குறித்துப் பார்க்கும்போது, தன் பாங்கிமார் கள்ளமின்றிச் சொல்லிய சொற்களைப்பற்றிக் குமுதவல்லி புன்முறுவல் செய்து, ‘ஒரு படைமுழுதுமே நமக்கு வழித் துணையாக வந்தாலும், உண்மையில் வலுகட்டாயமாக அன்றி மிகவும் இரண்டகமான சூழ்ச்சியால் விளைந்த இப்பொல்லாங்கி னின்றும் என்னைப் பாதுகாப்பதற்கு அது போதுமென்று எனக்குத் தோன்றவில்லை.” என்றாள். 

“இந்த விடுதிக்காரருக்கு அது நடந்த வரலாற்றைச்சொல் வது நல்லதென்று பெருமாட்டியார் கருதவில்லையோ?” என்று சுந்தராம்பாள் கேட்டாள். 

“அதைப்பற்றி உன்னுடன் நான் பேசலாமென்றிருந்த பொழுதில், நீ நடுவே உன் கருத்தைச் சொல்லலானாய்.என்னை இன்னாரெனப் பிறர் அறியாதபடி யான் மறைவாகச் செல்வது எனது நோக்கத்திற்கு இணங்கின தாகு மென்பதை யான் முன்னமே உனக்கு நினைவூட்டத் தொடங்கினேன்; இனி, என்னைப் பிறர் ஏதுஞ் சுட்டிக் கருதும்படி செய்துகொள்ள விருப்பம் இல்லாதவளாய் இருக்கின்றேன். ஆகையால், உனது கருத்தைத் தழுவி இந்த விடுதியின் தலைவருக்கு எனது குறையை அறிவிப்பேனாபின், அவர் உடனே தமது இடத் தின் பெயரைக் காப்பாற்றுவதற்காக இதனைத் தீர ஆராய வேண்டுமென்று கட்டாயப் படுத்துவார்: மணியகாரர் இவ ருதவிக்காக அழைக்கப்படுவர் – இந்தக் கணையாழியைக் குறிப் பாய்க் கைப்பற்றுதற்குக் காரணமாய்நின்ற கருத்தின் உளவை வெளிப்படுத்துதற்காகத் திருடினவன் யாராயிருக்கலாம் என்று என்னைக் கேள்விமேற்கேள்வி கேட்பார்கள் – இப்படிப்பட்ட ஆராய்வுகளின் ஊடே செல்ல யான் சிறிதும் விரும்பவில்லை. எனவே, எல்லாவற்றையும் ஆழ்ந்து சூழுங்கால், எனக்கு நேர்ந்த துன்பத்தை யார்க்குந் தெரிவியாமற் சும்மா இருப் பதே நல்லது.” என்று மறுமொழி கூறினாள். 

“என்றாலும், என் அன்புள்ள செல்வியே, இதனைப் பொறுத்து இருத்தல் அரிதே யாம்!” என்று சொல்லிக் கொண்டே சுந்தராம்பாள் குமுதவல்லியின் கையை எடுத்து அன்போடும் வணக்கத்தோடுந் தன் இதழ்களில் அழுந்த முத்தம்வைத்தாள். 

“ஆம், அரிது தான்!” என்று கூடச்சொல்லிக்கொண்டே ஞானாம்பாள் குமுதவல்லியின் மற்றைக்கையை எடுத்து அங் ஙனமே முத்தம் வைத்தாள். 

”அஃது அரிதாயிருந்தாலும், நமக்கு வேறுவழி யில் லாமையால் அப்படித்தான் செய்யவேண்டி யிருக்கின்றது.’ என்று குமுதவல்லி சேர்ந்து பேசினாள். “ஆகையால், என் இளம் பெண்களே, இந்தக் கெடுதியை எந்த உயிருக்குஞ் சொல்லாதிருக்கும்படி யான் உங்களுக்குக் கட்டளையிடுகின் றேன். நீலகிரிக்கு நாம் நம் வழியே தொடர்ந்து செல்வோம். நாம் இப்போது கற்றுக்கொண்ட பாடமானது இனி நம்மை இன்னும் விழிப்பாய் இருக்கும்படி செய்யும்” என்று சொல் லியதும், அவள் பாங்கிமார் தந் தலைவியை ஒப்பனை செய்தற்கு வேண்டுவன ஒழுங்கு பண்ணப் போனார்கள். உடனே குமுத வல்லி தனக்குள் ஆராய்ந்து பார்த்து மெல்லியகுரலில், ”அந்தோ! இப்போது அக் கணையாழியினை இழந்து விட்டமை யால் மறைமுகமான இவ்வழிச்செலவின் நோக்கமும் இழக்கப் பட்டுப்போமே! என்றாலும், நான்விடாமல் முயன்று பார்க்க வேண்டும்: யான் அந்த மோதிரத்தை யார்கையிற் கொடுக்கும் படி கட்டளையிடப்பட்டேனோ அவருக்கு என்னிடத்திலிருந்து அது தவறிப்போன தீவினையை யான் விளக்கமாய்ச் சொல்ல லாம் என்று நினைக்கின்றேன்.” என்று சொல்லிக் கொண் டாள். 

இச் சொற்கள் மிக மெதுவான குரலிற் சொல்லப்பட் டமையால் அவ்வறையின் கடைசியிலே வெவ்வேறு மூலைகளி லிருந்த சுந்தராம்பாள் ஞானாம்பாள் செவிகளுக்கு அவை எட்ட வில்லை. சென்ற இரவின் திகிலான நிகழ்ச்சிக்குப்பின் வந்த நீண்ட அயர்ச்சிக் களைப்பினின்றும் இப்போது குமுதவல்லி மிகவும் நலம்பெற்றமையாற், சிதறுண்ட தன் மனமுயற்சி களைத் திரும்பவும் ஒன்று கூட்டத் தன்னால் ஆனமட்டும் முயன்றாள். 

பிறகு தான் பூணவேண்டுவன வெல்லாம் முற்றும் பூண் டாள் – காலை யுணவு உட்கொள்ளப்பட்டது – புறப்படுத்தற்குக் குதிரைகளை ஒழுங்கு செய்யும்படி கட்டளை தரப்பட்டது. ஆனால் அச்சாவடித் தலைவனோ இப்போது எதிரேவந்து, தகுந்த பணிவுடன் தன் அழகிய விருந்தினருக்குத் தான் சொல்ல வேண்டி யிருப்பதைச் சொல்லும் வண்ணம் விடை தரும்படி கேட்டான். குமுதவல்லி அவனைப் பேசும்படி கட்டளை கொடுத் தாள்; அப்படிக்கொடுக்கையிற் சிறிது கவலையும் ஐயுறவுங் கொண்டாள்; ஏனென்றால், இனி வெளிவருஞ் செய்தி முன் னாள் இரவின் நிகழ்ச்சியொடு தொடர்புபட்டதாய் இருக்கக் கூடு மென்று எண்ணினாள். 

”நான் கேள்விப்பட்டபடி, பெருமாட்டி, தாங்கள் தங்கள் பாங்கிமாரொடு மட்டும் வழிப்போகக் குறித்திருக்கிறீர்களோ? அங்ஙனஞ் செல்வது அறிவுடைமைக்குச் சிறிதும் பொருந்தா தென்றும், உண்மையாகவே அது பேரிடராய் முடியும் என் றுந் தங்களுக்கு யான் தாழ்மையாகத் தெரிவித்துக் கொள்ளு கின்றேன்.” என்று அந்த விடுதிக்காரன் தொடர்ந்து பேசி னான். 

”அதனை விளக்கமாய்ச் சொல்லும்” என்று குமுதவல்லி மிகுந்த பதைபதைப்போடுங் கூறினாள். 

உடனே சாவடித்தலைவன் சொல்வானாயினன்: “ஒரு வகையில் மலைநாடனென்றாலும் மற்றொருவகையில் வழிப் றிகாரனான ஓர் ஆளைப்பற்றித் தாங்கள் எப்போதாயினுங்கேள் விப்பட்டிருக்கின்றீர்களா? அவன் மலைநாடனென்ற வகையில் நமக்கு இயற்கைப் பகைவர்களான சோழநாட்டார்க்கு மிகுந்த தீமை செய்துவருதல்போலவே, கொள்ளைக்காரன் என்ற வகையில் அவ்வளவுக்கு மிகுந்த துன்பத்தைத் தன் சொந்த நாட் டார்க்குஞ் செய்துவருகின்றான். தன் படைக்கலங்களை நமக்கு எதிராகவே சிலநேரங்களில் திருப்பிவிடும் அத்தகைய மறவ னுதவியை நாம் வேண்டாமலே இருந்துவிடக் கூடுமே.” 

“திண்ணமாய் நீர் நல்லானைப்பற்றித்தான் பேசுகின்றீர்.” என்று குமுதவல்லி சொன்னாள். 

இதற்குச் சாவடித்தலைவன் இணைந்து பேசுவானாய், ”வேறு யாரையும் அன்று, பெருமாட்டி, அவனும் அவனது இழிந்த மறக்கூட்டமும் இந்தப்பக்கங்களில் அடிக்கடி வருவ தில்லை, என்றாலும் -” என்று முடிப்பதற்குள், குமுதவல்லி தன் கதுப்புகள் வெளிறப்பெற்றவளாய், “அச்சந்தரும் நல்லா னுஞ் சூறையிடும் அவன் ஆட்களும் இந்த நாடுகளில் வந்து இப் போது தொல்லை கொடுக்கிறார்கள் என்பது உண்மையா?” என்று கூவிக்கூறினாள். 

“பெருமாட்டி, அது மெய்தான்.” என்று சாவடிக்காரன் விடைபகர்ந்தான். 

“எனினும், ஒரு குறிப்பிட்ட பாதைவழியே நான் பய ணம் போனால் ஒருபடையைத் துணைகூட்டிவந்ததுபோல அவ னது கொள்ளைக்குத் தப்பலாம் என்று உறுத்திச் சொல்லக் கேட்டேன். இல்லை, இன்னும் படைக்கலம் பூண்டோரைத் துணைகூட்டிச் செல்வது வேண்டற்பால தன்று எனவுஞ் சொல்லக்கேட்டேன்; அதனாலேதான் நான் பாக்கிமா ரொடு பயணம்போகக் கண்டீர். இவ்வுறுதி மொழிகளை என் னிடம் புகன்றவன் நீலகிரியினின்றும் வந்த ஓர்இளைஞன் ஆவன்,- அவன் நன்மையே கருதுபவன், நம்பிக்கையுள்ளவன் என் று நினைப்பதற்கு நல்ல காரணங்கள் உண்டு; எனது வீட் டுக்கு என்னிடம் அவன் வந்தபோது அவனிடம் நம்பகமான செய்தி ஒன்று கொடுக்கப்பட் டிருந்தது. அவன் நீலகிரியில் நிலையாய் இருப்பவன் ஆதலால் வழிப்பறிகாரர் தலைவனான நல்லானுடைய வழக்கமான பழக்கங்களைப் பற்றி அவன் செவவையாகத் தெரிந்திருக்க வேண்டுமென்று யான் எண்ணி னேன்; தொலைவிலுள்ள வேற்று நாட்டில் இருக்கும் நானோ நிலைப்படாத ஊரார் பேச்சைக்கொண்டும் பரும்படியான செய்தி களைக் கொண்டும் அவன் பழக்கங்களைப்பற்றிச் சிறிது தெரிந் திருக்கின்றேன்.” எனக் குமுதவல்லி கூறினாள். 

“பெருமாட்டி, உங்களுக்கு அறிவித்தவன் தான் எண் ணியபடி பேசினான் என்பதில் ஐயமில்லை: தான் பிறந்த மலை களின் நடுவிலேயே வழக்கமாய்த் தங்கியிருந்து கொண்டு அதற்கு அருகாமையில் வருங் தனது இரைமேற் பாய்ந்து அதனை அடித்துக்கொண்டு போகுங் கழுகைப் போன்றவன் நல்லானாகையால், பெரும்பாலும் அவன் உண்மையே பேசி னான். என்றாலும், அக் கழுகு சிலகாலங்களில் மேற்கணவாய் மலைகளைவிட்டு நெடுந்தொலைவு பறந்து போய்ப் பச்சென்று கொழுமையாய் இருக்குந் திறந்த வெளிகளில் மேய்ந்துகொண் டிருக்கும் ஆட்டுக்குட்டியை இறாஞ்சிப் போதலும் உண்டு. அப் படியே நல்லானுஞ் செய்வதுண்டு. அவன் ஆட்களிற் சிலர் சென்ற இரண்டொரு நாளாய் இந்தப்பக்கங்களிற் காணப்பட் டார்கள். பெருமாட்டி, இன்னும் என்ன சொல்வது – திடுக் கிடாதேயுங்கள் – திகில் கொள்ளாதேயுங்கள் – இடர் ஒழிந்து போயிற்று! நல்லான்” என்று சாவடித்தலைவன் தான் சொல் லுஞ்செய்திக்கு இணங்கச் செய்துங் காட்டுவோனாய் மெது வான குரலிற் பின்னும், “நல்லான் இந்த விடுதியினுள்ளே நேற்றிரவு தங்கியிருந்தான்!” என்று மறுமொழி கூறினான். 

திடுக்கிடவேண்டாம் எனவுந் திகிற்படவேண்டா மென வும் அங்ஙனம் மனவுருக்கத்தொடு கேட்டுக்கொள்ளப் பட்டா லும், அழகிற் சிறந்த குமுதவல்லி கதுமென மிகவுந் திடுக்கிட் டாள், பெருந்திகிலானது அவள் முகத்தின்மேற் புலப்பட்டுத் தோன்றியது. சாவடிக்காரன் அச்செய்தியை அறிவித்த அந்த நேரத்திலேயே அவள் உள்ளத்தில் ஓர் எண்ணந் தோன்றியது. தன் அறைக்குள் முகமறைத்து வந்தவன் கிலிபிடிக்கப் பண் ணுங் கொள்ளைக்காரனாய் இருக்கக்கூடுமா? என்பதே அது. 

“தாங்கள் அமர்ந்திருக்க வேண்டுமென யான் தங்களைக் செஞ்சிக் கேட்டும், பெருமாட்டி, தாங்கள் இங்ஙனந் திடுக்கிட் டது ஒ ஒருவியப்பன்று; ஏனென்றால், அவ்வளவு அஞ்சத்தக்க ஓர் ஆள் இக்கட்டிடத்தினுள்ளே தங்கியிருந்தான் என்பதை எண்ணிப்பார்த்தால் அஃது ஒரு பெருந்திகிலான செய்கை யாகத்தான் இருக்கும்!” என்று விடுதிக்காரன் திரும்பவும் அதனை எடுத்துப் பேசினான். 

உடனே குமுதவல்லி விரைந்து, ‘அவன் எப்படி இருப் பான் என்பதை எனக்குச் சொல்லிக்காட்டும். உம்மாற் கூடிய வரையில் நுட்பமாக அவனை முடிமுதல் அடிகாறுந் தெளி வாய்ச் சொல்லிக்காட்டும்; ஏனெனில், அலுவலின் பொருட்டு வழிநடையாய்ப் போவார் எவர்க்கும் அச்செய்தி மிகவும் பயனுடையதாயிருக்கலாம்.” என்று கூறினாள். 

“நானே அவனைச் செவ்வையாகப் பார்த்ததில்லை, பெரு மாட்டி, ஆனாலும் நான் இவ்வளவு உங்களுக்குச் சொல்லக் கூடும் – அவன் தீத்தொழிலில் முதிர்ந்தவனாயிருந்தாலும் ஆண் டில் இளையவனே – காற்பத்தைந்து அகவை யுள்ளவனாகிய நான் அவனுக்குத் தகப்பன் என்று சொல்லக் கூடியதா யிருக் கும். பிறகு, அவன் உடம்பின் தோற்றத்திலோ நீண்டு ஒல் லியா யிருப்பான் – அவன் மயிர் கறுப்பாயிருக்கும் – அவன் கண்கள் நேர்த்தியாயிருக்கும்; அவன் – ஆம் எனக்கு நினை விருக்கிறது – அவன் மீசை வைத்திருக்கின்றான்.” என்று சாவடிக்காரன் மறுமொழி புகன்றான். 

குமுதவல்லி தில்கொண்ட குரலில்,”உயரமாய் – ஒல்லி யாய் — கரியமயிரோடு” என்று சொல்லிக்கொண்டே, “நல்லது நேற்றிரவு அவன் இங்கேயிருந்தபோது எவ்வாறு உடை அணிக் திருந்தான்?” என்று விரைந்து கேட்டாள். 

அதற்கு அவ் விடுதிக்காரன் சொல்லுவான்: ‘உண்மை யிலே நான் அவன் உடையை நுணுக்கமாய்க் குறிப்பிட்டுப் பார்க்கவில்லை; என்றாலும், யான் நினைவிடக்கூடியமட்டில் அது பொதுவாகவும் எளியதாகவும் இருந்தது. என்றாலும், நீங் கள் யாரையேனும் பார்க்கும்படி நேர்ந்து வேறுகாரணங்களால் அவனை நல்லான் என்று ஐயுறவருமானால் அவன் உடையைக் கண்டு ஏமாறிப்போகாதீர்கள்: ஏனென்றால், மலைமேலிருந்து பாய்ந்து தன் இரையை இறாஞ்சிக் கொண்டு போகுங் கழுகின் விரைவையுந் தன்னை எதிர்த்தோருடன் சண்டையிடும் பொழுது புலியின் வலிவையும் நல்லான் உடையனாயிருப்பது போலவே, நேரம் வாய்த்தபோது தனது இரண்டகத்தைக் காட்டும்படியான நரிக்குள்ள சூழ்ச்சியும் அவனுக்கு உண்டு. ஆகவே, எல்லா வகையான கோலங்களும் அவன் கையி லிருக்கின்றன: அவன் மலைப்பாங்குகளில் இருக்கும்பொழுது கள்வனைப்போற் கோலம் பூண்டவனாய் இருக்கலாம்: ஆனால், நகரங்களுக்குப் போம்போதோ ஏழைக்குடியானவனைப்போலவும் இருக்கலாம். 

அஃதன்றியும், இன்னும் அவன் ஒரு துருக்கனைப் போலவும் பறங்கிவணிகனைப்போலவும் – பாரசீகனைப்போலவும் அல்லது யூதனைப்போலவுங் கூடக் கோலம் பூண்டு வருவான் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள். சுருக்கமாய்ச் சொல்லுமிடத்துப் பெருமாட்டி, பலமுறைகளில் என்காதுகளுக்கு எட்டிய வற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லுவேனானால்-‘” என்று சொல்லி முடிவதற்குள் நடுவே குமுதவல்லி, “உமது சாவடிக்கு அவன் எந்த நோக்கத்துடன் வந்திருக்கலாம் என்று நினைக் கின்றீர்?” என்று வினவினாள். 

அதற்குச் சாவடிக்காரன்,’பெருமாட்டி, அதனை யார் சொல்லமுடியும்? ஒருகாற் சிறிதுநேரம் இளைப்பாறவும் உணவு கொள்ளவும் வந்திருக்கலாம். ஒருவேளை வீட்டிலேயே ஏதாவது பறித்துக்கொண்டு போகக்கூடுமா என்று பார்க்கவும் வந்திருக்க லாம்; அல்லது ஒருகாற் பலதிறப்பட்ட பயணக்காரர் கூட்டங் களும் இன்றைக்கு எந்த முகமாகப் போவார்களென்று தெரிந்து கொண்டு அவர்களைப் பின் றொடர்தற்கும் வந்திருக்கலாம்; பின்னதுதான் பெரும்பாலும் நம்பத்தக்கதா யிருக்கின்றது. ஆ! அவன் தான் என்றுமட்டும் நான் தெரிந்தேனானால் அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குத் தாப்படும் பரிசானது இவ் வாண்டில் எனக்குவரும் ஊதியத்தை மிகுதிப்படுத்துவதாயிருக் கும் – காலம் நன்றாயில்லை என்பதைப் பார்க்கும்போது-” என்று உலகிலுள்ளவர்கள் எல்லாரும் வழக்கமாய் முறையிட்டுக் கொள்வதான காலநிலைமையைப்பற்றி அவன் விரித்துப்பேசப் புகுந்த அப்பொழுது; 

நடுவே குமுதவல்லி, “அவன் புறப்பட்டுப் போன பிறகு நீர் தங்கவைத்தவன் கள்வர் தலைவனான நல்லானே என்று எப்படிக் கண்டுகொண்டீர்?” என்று வினவினாள். 

‘”அந்தப்புலையன்! ஒரு வழியிலன்றிப் பலவழியிற் பிறர்க் குத் துன்பந்தரத் தெரிந்திருக்கின்றான். பெருமாட்டி, தங்கள் அறைக்கு மிகவும் எட்டியிராத தன் அறையிலிருந்தும் அவன் பாதியிரவிலே கீழ் இறங்கிக் குதிரைப்பணைக்கு விரைந்து போய்க் குதிரைக்காரனைத் தட்டிஎழுப்பித் தன்குதிரைக்குச் சேணம் இட்டு அவன் புறப்படுதற்கு ஒழுங்கு பண்ணினதை எண்ணிப்பாருங்கள். ஆயினும், அவன் எனக்குத் தரவேண்டிய தொகைக்கு மேலே மிச்சமாகப் பணத்தைத் தன் மேசைமேல் வைத்துவிட்டுப் போனான் என்று ஒத்துக்கொள்ளுகிறேன். சாவடிமுற்றத்திலே அவன் தன் குதிரைமேல் ஏறுந்தறுவாயில் ஒரு வழிப்போக்கன் உள்ளே வந்தான்; இவன் குடகுநாட்டு வணிகனாய் இருக்கவேண்டுமென்று எண்ணுகிறேன்; இவன் நேரங் கழித்து வந்தமையால் தன்னை ஏற்றுக்கொள்ளுதற்குச் சிலர் விழித்திருப்பதைப்பற்றி ஒருவாறு மகிழ்ச்சி அடைந்தான். ஆனால், அவ்வேழை வணிகன் பந்த வெளிச்சத்தினாற்,புறப் பட்டுப்போகும் விருந்தினன் முகச்சாயலைப் பார்த்தவுடனே ஆ!எப்படி நடுநடுங்கினான்! அவனோ பறந்துபோயினான்,அவன் குதிரைக் குளப்படிகள் தெரு நெடுகக் கடகடவென்று விரைந்து ஓசையிட்டன; அவ்வோசை நெடுந்தொலைவில் அவிந்துபோன பிறகுதான் நடுக்க முற்ற அவ்வணிகன் நல்லான் என்னும் பெயரைக் குழறலுடன் சொல்ல வலிவுபெற்றான்.” என்று அவ்விடுதிக்காரன் உரத்துச்சொன்னான். 

குமுதவல்லி ஆழ்ந்த நினைவோடும், “ஆ! அவன் அங்ஙனம் பாதி யிரவிலா போயினான்!” என்று கூறிப் பின்னுந் தனக் குள்ளே “அப்படித்தான் இருக்கவேண்டுமென யான் கருதி னேன்.” என்று சொல்லிக் கொண்டாள். 

“நல்லது பெருமாட்டி” என்று பேச்சுக்காரனான அவ் விடுதிக்காரன் பேசத் தொடர்ந்தான், “கேட்டவர்களுக்கு நடுக்கத்தை உண்டாக்கும் நல்லான் என்று குதிரைக்காரன் தெரிந்தவுடனே, புறப்பட்டுப்போன அவ்விருந்தினனுக்குப் பின்னால் அவன் கூக்குரல் இடுவதற்கு நேரம் ஆகிவிட்டது; ஆகவே, என்னையும் என் ஊழியக்காரர்களையும் உடனே கூவி எழுப்பி அதனை அறிவிப்பது தேவையில்லை என்று அவன் எண்ணினான். ஆனால், விடிந்தவுடன் நேர்ந்தது இன்னதென அறிவிக்கப்பட்டேன்; உடனே யான் முதலிற் செய்த காரியம் அக்கள்வர் தலைவன் தங்கியிருந்த அறைக்குக் கடுகப்போனதே. அவன் எதனையும் எடுத்துக்கொண்டு போகவில்லை, மேசை மேல் அகலமான ஒரு பொன் துண்டு வைக்கப்பட்டிருந்தது.” 

இப்போது குமுதவல்லி தன்னறைக்கு முகமறைப்பு இட்டு வந்தவன் அஞ்சத்தக்க நல்லானைத் தவிர வேறுயாரும் அல்லர் எனச் சிறிதும் ஐயமின்றித் தெளிந்தாள்; நடுக்கத்தை யுண்டாக்கும் அக் கொள்ளைகாரனிடத்தில் தான் அகப்பட் டிருந்ததனை நினைக்கவே அவளுக்கு மிக்கநடுக்கம் உண்டா யிற்று. ஆனாலும், முன்னமே அவள் தன் தோழிமார்க்கு விளங்கப்பண்ணின காரணங்களால், நிகழ்ந்ததையேனும் மோதி ரம் இழந்ததையேனுஞ் சாவடிக்காரனுக்குச் சொல்வது தக்க தென்று அவள் எண்ணவில்லை: அப்படிச் சொல்லியிருப்பா ளானால் அவன் ஐயமின்றி அதனை அறமன்றத்திற்குக் கொண்டுவரும்படி வற்புறுத்துவான்; அதனால் மிகுதியாய்ப் பணங்கொடுக்குங் குமுதவல்லியானவள் தன் சாவடியிலே பல நாட்கள் தங்கியிருக்க நேரும் என்னும் நோக்கமும் அவனை அவ்வாறு செய்யும்படி தூண்டும். 

நல்லான் அவ்விடுதிக்கு வந்ததைப்பற்றிக் குமுதவல்லி எவ்வளவு வருந்தலானாள் என்பதைச் சிறிதும் அறியாதவனாய் அவன் பின்னும் பேசுவானாயினான்: “ஆகையாற், பெருமாட்டி, ஓர் அஞ்சலிடம் போகும்வரையில் தாங்கள் தக்க வழித்துணை யோடு ஏகுவது நலமாமென்று உங்களுக்குத் தோன்றுகின்ற தன்றோ: அதன்பிறகு உங்களுக்கு இசைவாயிருந்தால் உங்கள் தோழிமார்களொடு நீங்கள் தனியே செல்லலாம். ஏனென்றால், நல்லான் இப்போது ஏதேனுந் தங்களுக்குத் தீங்கு இழைக்க எண்ணியிருந்தானானால், இங்கிருந்து சிறிது தொலைவான இடத்திற்கு அப்பால் அவன் தன் பதிவிடத்திலிருந்து நீங்கள் கல்ல துணையொடு செல்வதைப் பார்த்தவுடனே அவன் தன் எண்ணத்தை மாற்றிவிடுவான்.” 

குமுதவல்லியோ தன்னைச் சுட்டி அக்கள்வர் தலைவன் ஏதேனும் முடிவான நோக்கங் கொண்டிருப்பான் என்று உண் சமையிலே ஒன்றும் நினைக்கவில்லை; அவன் நோக்கம் எதுவாய் இருந்தாலும் அம்மோதிரத்தை அவன் தன் அகப்படுத்திக் கொண்ட அப்பொழுதே அது நிறைவேறிவிட்டதென அவள் எண்ணினாள். ஏனெனில், அவள் இப்போது தன்னிடம் வைத் திருந்து பொருள்களையெல்லாம் அவன் கொள்ளை கொண்டு போக வேண்டுமெனக் கருதி யிருந்தானாயின், அவன் அவள் அறையினுட் புகுந்து அவள் உறங்குவதாக எண்ணிய சென்ற இரவைக் காண்டினும் வேறு நல்ல பொழுது அவனுக்கு எங்ங னங் வாய்க்கக்கூடும்? ஆகவே, அதைப்பற்றி அவளுக்கு இனி அச்சமில்லையாயினும், வழித்துணையைக் குறித்துச் சாவடிக்கா ரன் சொல்லிய வேண்டுகோளுக்கு அவள் இணங்கினாள். தான் செல்வம் மிகுதியும் உடையவளாதலால் அதன் செலவை அவள் ஒரு பொருட்படுத்தவில்லை. மேலும், அத்தகைய முன்னறி விப்பை அவள் புறக்கணித்தால் அஃது ஒரு புதுமையாய்க் காணப்படும் எனவும் அஞ்சினாள். ஆதலால், அவள் அதற்கு உடன்பட்டு மறுமொழி புகன்றாள்; அச்சாவடித் தலைவனும் வேண்டு மேற்பாடுகளைச் செய்வித்தற்கு விரைந்து போனான். 

குமுதவல்லிக்கும் அவ்விடுதிக்காரனுக்கும் இடையே நிகழ்ந்த இவ்வுரையாட்டு நடையறையிலே நடந்தது; அப்போது தோழிமார் இருவருந் திரும்பவும் பயணந் தொடங்குதற்கு வேண்டுவனவற்றை முடிக்கும் பொருட்டுப் படுக்கையறையிலே அலுவலா யிருந்தனர். ஆகையால், அவ்விருபெண்களும் நாம் இங்கெழுதிய உரையாட்டை ஒட்டுக்கேட்கவில்லை; குமுத வல்லியும் நல்லானைப்பற்றித் தான் கேட்டவற்றில் ஓர் எழுத் தாயினுஞ் சொல்லி அவர்களை அச்சுறுத்தலாகாது எனத் தீர்மா னஞ் செய்துகொண்டாள். அவள் அவர்களிடந் திரும்பிச் சேர்ந்தவுடன், தனது வழி செல்லும் அம்முகமாகவே, முதல் ஆறுநாழிகை வழி படைக்கலம் பூண்ட துணைவர் போவதால், தானும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளக் கருதுவதாக மட்டும் அவர்களுக்குச் சொன்னாள். 

நன்கு படைக்கலம் பூண்ட பன்னிரண்டு ஆட்கள் சாவடிக் காரனால் இவ்வழித்துணைக்கென்று வகுக்கப்பட்டார்கள், இவர்கள் பெற்றுக்கொள்ளும் வருமானத்தில் திட்டமாய் மூன்றிலொரு பங்கு தனக்குரியதென்று ஒப்பந்தஞ் செய்து கொண்ட காரண தாற், கூடியமட்டில் துணைவர் தொகையை மிகுதிப் படுத்துவதில் அவன் கருத்துக் கொண்டிருந்தான். இங்ஙனந் துணைவர் பின்வரக் குமுதவல்லி தன்பாங்கிமார் இருவரோடும் நீலகிரியை நோக்கிப் பயணம் புறப்பட்டாள்.

– தொடரும்…

– குமுதவல்லி, நாகநாட்டரசி (முதல், இரண்டாம் பாகம்), முதற் பதிப்பு: 1911.
பல்லாவரம் பொதுநிலைக்கழக ஆசிரியர், மறைத்திருவாளர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகளால் இயற்றப்பட்டுப் பல்லாவரம் பொதுநிலைக்கழக நிலையத்திலுள்ள திருமுருகன் அச்சுக்கூடத்தில் (T.M.PRESS) அச்சிடப்பட்டது, ஜனவரி 1942.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *