நன்னனும் நங்கையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 5, 2024
பார்வையிட்டோர்: 633 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சங்ககாலம் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட காலம். அந்தக் காலத்தில் இப்பொழுது வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கம் என்ற ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளை ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் நன்னன் என்பதாகும். இந்த நன்னன் ஆண்ட காலத்தில் ஓர் இரங்கத்தக்க நிகழ்ச்சி நடந்தது. 

நன்னன் என்ற அந்த மன்னனுக்குச் சொந்தமான ஓர் அரண்மனைத் தோட்டம் இருந்தது அந்தத் தோட்டம் வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஆற்றின் கரையிலே அழகாக அமைந்திருந்தது. அந்தத் தோட்டத் தில் வகை வகையான மரங்கள்! மாமரங்கள், பலா மரங்கள், வாழைமரங்கள், கொய்யாமரங்கள் முதலிய கனிதரும் மரங்கள் அந்தத் தோட்டத்தில் நிறைந் திருந்தன! வானை முட்டி வளர்ந்திருந்த தென்னை மரங்களும், கமுகு மரங்களும் கண்ணிற்கு நல்ல காட்சி வழங்கின! அந்தத் தோட்டம் பச்சைப் பசேலென்று பசுமையாகத் தெரிந்தது. ஆற்றங்கரையில் அமைந் திருந்ததால் நல்ல வளமாகவும் செழிப்பாகவும் இருந்தது. அத்தந்த மரங்கள் கனி கொடுக்கும்பொழுதும் மரங்களில் நல்ல காய்ப்புக் கண்டு கொத்துக் கொத்தாகப் பழங்கள் பழுத்துத் தொங்கின. பலாப்பழங்கள் வேரிலும், அடிமரத்திலும், கிளைகளிலும் பழுத்து நிறைந்து அந்தக் தோட்டத்திற்கே நல்ல மணத்தைத் தந்துகொண் டிருந்தன! வாழைக்குலைகள் நிலம் நோக்கிக் கிடந்தன. கொய்யா மரங்களில் அணில்கள் பழங்களைக் கொத்தித் தின்று இங்கு மங்கும் ஓடிக் கொண்டிருந்தன! ஆக அந்தத் தோட்டத்தைக் காண்பதற்குக் கண் கோடி வேண்டும். ஆனால் அந்தத் தோட்டத்தினுள் யாரும் செல்ல முடியாது. தோட்டத்தைச் சுற்றிலும் நன்றாக வேலி போடப்பட்டு காவற்காரர்கள் பகலும் இரவும் காத்து வந்தார்கள். அரசன் நன்னன் எப்பொழுதாவது வருவான். வந்து தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்வான். அரசாங்க அலுவல்களிலிருந்து விடுதலை பெற்ற உணர்வு தோன்றும், அவனுக்கு அந்தத் தோட்டத்திற்கு வந்து விட்டால்! எனவே அவன் அந்தத் தோட்டத்தைப் பெரிதும் விரும்பிவந்தான். அதிலும் மாமரங்கள் அவனுடைய காவல் மரங்கள்! அவற்றின்மேல் அவன் தன் உயிரையே வைத்திருந்தான்! 

அந்த ஊர்ப்பெண்கள் நாள்தோறும் ஆற்றங் கரைக்குப் போவார்கள், இடுப்பில் குடம் ஏந்திக்கொண்டு அழகு நடை போட்டுக்கொண்டு போவார்கள்! நேரம் போவதுகூடத் தெரியாமல் நீச்சலடித்து விளையாடுவார் கள். அவர்களின் செந்தாமரைக் கண்கள் நன்கு சிவக்கும் வரையிலும் குளிப்பார்கள். ஆசைதீரக் குளிக்கவேண்டும் என்று நினைத்து மகிழ்ச்சியோடு குளிக்க வருவார்கள். ஆனால் குளித்து முடித்து வீட்டிற்குத் தண்ணீர்க் குடத்தை இடுப்பில் வைத்துத் திரும்பும்பொழுது அவர்கள் ஆசை தீர்ந்திருக்காது. நாளைக்கு எப்பொழுது வருவோம் வந்து மகிழ்ச்சியுடன் நீராடுவோம் என்பதிலேயே இருக்கும்! 

ஒரு நாள்! 

நல்ல இளவேனிற் காலம்! பங்குனி மாதத்திலே இலையையுதிர்த்துவிட்ட மரங்கள் எல்லாம் மீண்டும் மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன. தவழ்ந்து வந்த காற்றில் மலர்களின் மணம் மிதந்து வந்தது. ஆற்றில் ‘சலசல வென நீர் தெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. 

ஆற்றைநோக்கி எழிலி மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தாள். அவளுக்கு வயது பன்னிரண்டு இருக்கும். நல்ல களை பொருத்திய முகம்; ஆழ்ந்து அகன்ற கரிய நீலக் கண்கள், குமிழ் மூக்கு, கரும் பாம்பென நீண்ட சடை, அவள் செல்வக்குடியில் பிறந்தவள், அவள் பெற்றோர்களுக்கு அவள் ஒரே பெண்தான்! தவங்கிடந்து பிறந்த ஒரே ஒரு செல்வ மகள் அவள்! இன்று வீட்டை விட்டுப் புறப்படவே நாழிகையாகி விட்டது அவளுக்கு. எனவே அவள் தோழிகள் இதற்கு முன்னரே ஆற்றங் கரைக்குப் போய்விட்டிருப்பார்கள். எனவே அவள் பரபரப்போடு நடந்தாள்! ஆற்றங்கரையை நெருங்க நெருங்க அவள் வேகம் மிகுதிப்பட்டது! அவளைத் தூரத்தே கண்டுவிட்டதும் ஆற்றில் மகிழ்ச்சியோடு குளித்துக்கொண்டிருந்த அவள் தோழிகள் ஆரவாரத் தோடு வரவேற்றார்கள். அந்தத் தோழியர் கூட்டத்தின் தலைமை எழிலுக்குத்தான்! எழிலி இல்லாவிட்டால் அந்தத் தோழியர் கூட்டத்தில் நிறைவு ஏற்படாது. எனவே எழிலியை அவர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்த தில் ஒன்றும் வியப்பில்லை! 

எழிலி ஆற்றில் அவர்களோடு அமிழ்ந்து அமிழ்ந்து குதித்தாள். ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் கரை எங்கும் எதிரொலித்தது! 

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. குளித்துவிட்டு எழலாம் என்று எழுந்தாள் எழிலி. அப்பொழுது ஆற்றங்கரை ஓரத்திலிருந்த அரசன் நன்னனுக்குச் சொந்தமானத் தோப்பிலிருந்து ஒரு மாங்காய் அவளுக் கருகில் ‘தொப்’பென்று விழுந்தது. மாங்காய் என்றால் எழிலுக்குக் கொள்ளை ஆசை! எனவே எதையும் யோசி யாமல் உடனே கடித்துத் தின்னத் தொடங்கிவிட்டாள். 

‘அடியே, எழிலி! என்ன வேலை செய்தாய்” என்று அவள் தோழிகள் கத்தியதுகூட அவள் செவியில் விழவில்லை. ஆனால் வலுவான முரட்டுக்கரம் ஒன்று அவள் கையைப் பற்றியபொழுதுதான் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அரசனின் தோட்டத்துக் காவற்காரர்கள் பலர் கரையில் நிற்பதையும் அவர்களில் யமகிங்கரனான ஒருவன் தன் கையைப்பற்றியிருப்பதையும் கண்டாள். இதுவரை மகிழ்ச்சியோடு அவளோடு ஆற்றில் குளித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த தோழிகள் எல்லாம் பயத்தால் ‘வெடவெட’ வென்று நடுங்கி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் அதட்டி மிரட்டிவிட்டுக் காவல்சாரன் எழிலியைட்பற்றி அரசன் நன்னனிடம் [ அழைத்துச் சென்றுவிட்டான். இதுவரை பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த தோழிகள் ஊர்நோக்கி ஓடினார்கள், எழிலியின் பெற்றோர்களிடம் இந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்கு! 

மறுநாள் அவை கூடியது. அரசனோ கொடுஞ்சீற்றத் துடன் அரியாசனத்தில் அமர்ந்திருந்தான். அமைச்சர், சேனைத்தலைவர், நகரமாந்தர் முதலியோர் அவரவர்களுக் குரிய இடங்களில் அமர்ந்திருந்தனர். எழிலியின் பெற்றோர்கள் அடக்க வொடுக்சமாக ஒரு பக்கமாக, என்ன நிகழுமோ என்ற அச்சத்தில் நடுங்கி நின்றனர். எழிலியின்மேல் குற்றம் சாட்டப்பட்டது. அரசன் உயி ருக்கும்மேலாக மதித்துவரும் காவல்மரமான மாமரத்தின் காயினைத் தின்றுவிட்ட குற்றம் எழிலியினுடையது. குற்றத்திற்குத் தூக்குத்தண்டனை வழங்கினான் கொடுங் கோலனான நன்னன். 

தீர்ப்பைக் கேட்டுக் கதறியழுதனர்; பெற்றோர். அவையே வியப்பில் ஆழ்ந்தது, அடுத்த நிமிடம் எழிலிக் காக இரங்கத் தொடங்கியது. ‘அதைத்தவிர வேறு என்ன செய்துவிட முடியும் அவர்களால்! நன்னன் கொடுங் கோன்மைதான் நாடு அறிந்ததாயிற்றே! 

ஓர் எளிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று கேட்பதற்கு அவையில் கூடியிருந்த எவருக்கும் துணிவில்லை, திராணியில்லை! 

எழிலியின் பெற்றோர் எண்பத்தோரு யானைகளைத் தண்ட த்திற்குரிய பொருள்களாகக் கொடுக்கமுன் வந்தார்கள். எழிலியை எப்படியாவது உயிர்த்தண்டனை யிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று துடித்தார்கள். ஆனால் அரசன் மறுத்துவிட்டான். 

அடுத்து எழிலியின் எடைக்கு எடை பொன்பாவை செய்து தருவதாகச் சொன்னாரிகள். அந்தக் காலத்தில் இவ்வாறு குற்றஞ்செய்தவர்கள் எடைக்கு எடை பொன்னைத் தண்டமாகத் தந்தால் அவர்களை விடுதலை செய்துவிடுவார்கள். 

இதனையும் அரசன் நன்னன் மறுத்துவிட்டான் அவன்தான் என்றோ இரக்கத்தைத்துறந்த அரக்கனாகி விட்டானே! 

எனவே யாராலும் எழிலியைக் காப்பாற்ற முடியாமற் போய்விட்டது. கொடுங் கோன்மையின் கோரக் கரங்கள் அவள் உயிரைப் பறித்துக்கொண்டன! 

இந்தக் கொடுஞ்செயலைக்கேள்வியற்றனர் சோழர்கள். அவர்கள் நீதிக்குப் பெயர் போனவர்கள். எனவே, அடாது இழிசெயல் செய்த நன்னன் நாட்டின்மீது படை யெடுத்துச் சென்று, அந்த மாமரங்களை வெட்டி வீழ்த்தி அவனையும் இறுதியில் அழித்தனர். 

இந்த நிகழச்சியினைப் பரணர் என்ற பழம்பெரும் புலவர் குறுந்தொகை என்ற சங்கத் தமிழ் நூலில் பாட்டாகப் பாடியுள்ளார்! 

இதிலிருந்து பிஞ்சு நெஞ்சை அஞ்சாது கொன்ற நன்னன் இறுதியில் அழிந்து பட்டான் என்பது தெரிய வருகிறதல்லவா? அன்பும் அருளும் தாம் என்றும் வாழும்! 

“மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போகிய
ஒன்றுமொழிக் கோசர் போல 
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே” 
– குறுந்தொகை : 73 

– அலை தந்த ஆறுதல், முதற் பதிப்பு: டிசம்பர் 1991, பாரி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *