கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 22, 2024
பார்வையிட்டோர்: 1,260 
 
 

(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம்-10

போர்க்களம்! 

விசுவநாதன் சண்டமாருதம்போல் சுழன்று கொண்டிருந்தான். அவனுடைய ஒவ்வொரு அசைவும் விஜய நகரப் படைக்குப் புதிய ரத்தம் பாய்ச்சியது. அங்கமிழந்த வர்கள்கூட, தள்ளாடிக் கொண்டே போரிட்டார்கள். 

திடீரென்று சுல்தான் படைக்குள் ஒரு பரபரப்பு ஏற் பட்டது. யாருக்கும் எதுவும் விளங்கவில்லை. விஜயநகர யானைப்படையில் இருந்த ஒருவன் வேகமாக ஓடி வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த விசுவநாதனிடம்,”சுல்தான் அமர்ந்திருந்த யானை சுல்தானைக் கீழே தள்ளிவிட்டு மதம் பிடித்து ஓடுகிறது!” என்று கூறினான். விசுவநாதனுக்கு நம்பிக்கையில்லை. அவன் உறுதிப்படுத்து முன் சுல்தான் படை கலைந்து ஓடத் தலைப்பட்டுவிட்டது. யானையிலிருந்து விழுந்த சுல்தானை மகமதிய வீரர்கள் அணைத்துத் தூக்கி குதிரையில் ஏற்றிக்கொண்டு காற்றாய்ப் பறந்தார்கள். விசுவநாதன் இந்தக் காட்சியைக் கண்ணால் பார்த்தான். விசுவநாதன் போர் அனுபவம் மிகுந்தவன்; மகமதியப் படை சுல்தான் விழுந்ததும், தன்னம்பிக்கை இழந்து விட்டது என்று நினைத்தான். யானை மதம் பிடித்து ஓடிவிட்டால் விஜயநகருக்கு வெற்றி கிடைக்காது என்பது அவன் எண்ணம். சுல்தான் களத்திற்கே வராது இருந்தால்கூட மகமதியப்படை வெற்றி பெற்றிருக்கக்கூடும், என்று அவன் உள்ளொளி இசை பாடியது. 

நொடிப் பொழுதுக்குள் பொழுதுக்குள் மகமதியர் நிலம் வெறிச் சென்றாகிவிட்டது. பிணங்கள், விளைந்த கழனியைப் போல் சாய்ந்து கிடந்தன. 

விஜயநகரப் படைக்குத் தலைமை தாங்கி வந்த சிங்கராயன் வெற்றிப் பண்ணைத் தொடங்கி வைத்தான். வானதிர முழக்கம் கேட்டது. 

விசுவநாதன் அந்த வெற்றிப் பண்ணின் முதலடியை பாடிவிட்டு குதிரையிலேறினான். குதிரை பீஜப்பூர் கோட்டைப் பக்கமாகக் கிளம்ப படைவீரர்கள் அனைவரும். விசுவநாதன் படைக்கு முன்னின்று அணிவகுத்துச் செல்லப் போகிறான் என்றுதான் நினைத்தார்கள். 

விசுவநாதன் அரண்மனைக்குள்ளிருந்த ரகசியச் சிறைக்குள் நுழைந்தான். காவலர்கள் யாருமில்லை. எல்லாக் கொட்டடிகளும் திறந்து கிடந்தன. ஒன்பதாவது கொட் டடியில் மட்டும் ஒரு பிரேதம் கிடந்தது. விசுவநாதனுக்குப் பாதி உயிர் போய்விட்டது. சற்று முன்பு போர்க்களத்தில் திரண்டிருந்த வீரமெல்லாம், எங்கோ ஓடி ஒளிந்துவிட்டது. ஆவலுடன் அந்தப் பிரேதத்தைத் தூக்கினான். தலையைக் காணவில்லை. அதுவெறும் முண்டமாக இருந்தது. அதுவும் இஸ்லாமியப் பெண்ணாக இருந்தது. விசுவநாதன் குழம்பி நின்றான். அதற்குள் சிங்கராயனும் அவனுடன் இரண்டு போர் வீரர்களும் அங்கு வந்துவிட்டார்கள். 

“விசுவநாதா எங்கே இளவரசியார்?” – சிங்கராயன் கேட்டான். 

“நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று விசுவ நாதன் பதில் கூறினான். 

சிங்கராயன் ஓடிப்போய் அந்த உருவத்தைப் புரட்டினான்.  

“விசுவநாதா! மறைக்காதே! இது யாருடைய பிணம் தெரியுமா? பாவி! தலையை மறைத்துவிட்டால் பெயரைக் கூற முடியாது என்று நினைத்தாயா? உன்னுடைய உயிரைக் காக்க என்னுடைய உயிரைக் கொய்து விட்டாயடா கொலை காரா! என் ஆருயிர் காதலி கங்காவைக் கொலை செய்து விட்டாயே? துன்மார்க்கா! எங்கே இவள் தலை? புதைக்கப் போகும் போ தாவது அவள் முகத்தைப் பார்த்துவிட்டுப் போகிறேன்” என்று கதறினான் சிங்கராயன். சிங்கராயன். யாருக்கும் இரக்கப்பட்டதில்லை. அன்று கண்ணீரைக் கொட்டினான். அவன் யாரையும் புகழ்ந்ததில்லை. அன்று அவள் அழகை வர்ணித்தான். அவன் விழிகள் நாகம் போல் ஆடின. 

சற்று நேரத்திற்குப் பின் விஜயநகரப் படை கோட்டைக் குள் புகுந்துவிட்டது. அரண்மனை முழுதும் புழுதிப்படலம் படர்ந்தது. பீஜப்பூர் கோட்டையையே படு சூரணமாக்க வேண்டும் என்ற வெறியுணர்ச்சியோடு புகுந்த விஜயநகரப் படைக்கு விசுவநாதன் – சிங்கராயன் சொல்லாட்டம் பெருந் தடையாகப் போய்விட்டது. 

வாக்குவாதம் குறைந்து பலப்பரீட்சை தொடங்கப் போகும் வேளை நெருங்கிக்கொண்டே வந்தது. சிங்கராய னுக்கு அவனது புஜபலத்தில் நம்பிக்கை இல்லை; அவனுக்கு ஒரு புதிய யுக்தி பிறந்தது. 

“விசுவநாதா, உன்னை நான் கைது செய்கிறேன்” என் றான் சிங்கராயன். 

“என்னையா?” என்று அலட்சியமாகக் கேட்டான் விசுவ நாதன். 

“ஆமாம். உன்னைத்தான்; நான்தான் படைக்குத் தலைவன். அதிகாரம் எனக்குத்தான் இருக்கிறது. நான் புறப்படும் போது நீ சிறையில் இருந்தாய். சிறையிலிருந்த இளவரசியை மறைத்த குற்றத்திற்காகவும் கங்காவைக் கொன்ற குற்றத் திற்காகவும் நான் உன்னைக் கைது செய்கிறேன்.உனக்கு உன் நீதியில் நம்பிக்கை இருந்தால் விஜயநகர ராஜசபை யில் விடுதலை பெற முயற்சி செய்” என்று கனல் கக்கினான் சிங்கராயன். 

விசுவநாதன் பதில் பேச விரும்பவில்லை. போர்ச் சட்டங் கள் விசித்திரமானவை. சில நேரங்களில் அது எய்தவனையே கொன்றுவிடும். 

கல்யாண ஊர்வலத்தில் மணமகனைக் கைது செய்து அழைத்து வருவதைப்போல் வெற்றிவீரனான விசுவநாதன் குற்றவாளியாக அழைத்து வரப்பட்டான். அணிவகுப்பில் எழுச்சியில்லை. வெற்றி முழக்கத்தில் வீரமில்லை.செத்தவன் கையில் பூச்செண்டைக் கொடுத்தது போல் ஒவ்வொரு வீரனும் கடனுக்காக வாளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள். 

வெற்றிச் செய்தி கிடைத்த ராயர், நகர் முழுதும் இனிப்புகள் வழங்கினார். அரசாங்க ஊழியர்களுக்கெல்லாம் புத்தாடை தந்தார். 

துங்கபத்திராவின் தென்கரையில் விருதுடன் வரும் தாய்நாட்டுச் செல்வங்களுக்கு கோலாகலமான வரவேற் பளிக்கக் காத்திருந்தார். 

படை வருவது கண்ணுக்குத் தெரிந்தது. வெற்றிப்பண் ஆடி அசைந்து வருவது அவர் காதுகளில் மோதிற்று. 

படை துங்கபத்திரையின் மணற் படுகையில் வந்து கொண்டிருந்தது. மன்னர் பல்லக்கிலிருந்து இறங்கி ரோஜா மாலையைக் கையிலெடுத்துக்கொண்டு நின்றார். அவரது கண்கள் துங்கபத்திரையைத் தேடிக்கொண்டிருந்தது. 


“சிங்கராயா! என்மனம் எரிகிறது. என் கங்காவை நான் பட்டத்தரசியாக்கீப் பார்க்கத் துடித்தேன். அவளு டைய பால்ய மனத்தில் அந்த ஆசையை வேலியிட்டு வளர்த் தேன். யார் போட்ட சாபமோ என் குடும்பம் கவிழ்ந்து விட்டது. அவளுடைய ஆத்மா ஒருபோதும் சாந்தி அடை யாது, சிங்கராயரே!” என்று கண்ணீர் வடித்தார் துர்ஜதி. பாவம் அவருடைய பேச்சில் பழைய ஆணவம் இல்லை. சொல் உச்சரிப்பில் அரவத்தின் நெளிவைக் காணோம். 

“நடந்ததைப் பற்றி இனி எண்ணிப் பார்த்துப் பயன் விளையப் போவதில்லை. நமது கண்களில் கண்ணீரைக் கண்டால் எதிரியின் நாக்கில் நீர் சுரக்கும். 

“எவ்வளவுக் கெவ்வளவு நாம் நமது தோல்வியை விழுங்கிப் பேசுகிறாமோ அவ்வளவுக்கவ்வளவு எதிரியும் பயப்படுவான். உங்களுக்கு நான் உபதேசிக்க வேண்டி யதில்லை. உங்களுக்குச் சிரிப்பவர்களை அழ வைக்கும் கலை தெரியும்; அழுபவர்களைச் சிரிக்க வைக்கும் சூட்சுமம் தெரியும். நீங்கள் கலங்கலாமா? நீங்கள் அரசியல் தலைவர்! அரசியல் ஞானி! உங்களுக்குப் பந்தம், பாசம் இருக்காது என்று நினைத்தேன். நீங்களே அழுதால், நீங்களே கலங்கினால், நீங்களே சோர்ந்தால் என்னைப் போன்றவர்களுக்கு எப்படித்தான் பொது வாழ்க்கையில் பற்று ஏற்படும்?” என்று மீண்டும் மீண்டும், துரிதமாகத் திருகினான் சிங்க ராயன்.

துர்ஜதியின் ரத்தத்தில் புது வேகம் கிளம்பியது. பழைய துர்ஜதியாக உருவெடுத்தார். கண்கள் படமெடுத்தன. நெற்றி அப்பளம் போல் பொரிந்து விரிந்தது. 

‘தளபதியாரே! இதில் நமக்குச் சரியான நீதி கிடைக்க வில்லையென்றால் இந்த நாட்டுக்குச் சனியன் பிடித்து விட்டதாக அர்த்தம். மன்னர் என்றால் மகேசுவர ருக்குச் சமம் என்று எழுதிவைத்தது யார்? நாம்தானே! குற்றவாளி ருசுவோடு அகப்பட்டிருக்கும் போது தண்டிக்க வேண்டியதுதானே முறை!” துர்ஜதிக்கு ஆத்திரம் பொங்கியது. 

“உண்மைதான்! இந்த வழக்கில் நாம் தோற்று அவன் வென்றால் நமக்கு, வேறு வினைவேண்டாம். இத்தனை காலமும் நாம் மறைமுகமாகவே எதிர்த்து வந்தோம். இப்போது பகிரங்கமாகவே எதிர்க்கத் தலைப்பட்டு விட்டோம். இன் னொன்று, மண்டலேசுவரர் நாகமருக்குத் தெரியாமல் இவ்வளவு வேலைகளும் நடைபெற்று வருகின்றன. நாளை அவருக்கு எட்டினால் அது வேறு தொல்லை. அது கரடி. எங்கு போனாலும் விடாது. விசுவநாதன் மீதுள்ள குற்றச் சாட்டுகளை எத்தனை நாளைக்கு ரகசியமாக வைக்க முடியும்? அப்படி வைப்பதே நமக்குப் பலவீனம் என்கிறேன்.ஒருவன் குற்றம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவனை மக்கள் மத்தியில் குற்றவாளியாக்கிக் காட்டினால்தான் அவன் மீது மக்களுக்குத் தவறான எண்ணம் பிறக்கும்! ஒரு நிரபராதி யைப் பலமுறை இழுத்துப்பிடித்தால் மக்களுக்கே அவன்மீது நம்பிக்கை ஏற்படும். நாம் ஆரம்பத்திலேயே இதைச் செய் யத் தவறிவிட்டோம். அடுத்த நாள் விசாரணையின்போது இதை நாம் தெரிவித்தே ஆகவேண்டும்” என்றான் சிங்கராயன். ஆனால் இதை துர்ஐதி ஏற்கவில்லை. 

11 

இது பாண்டியன் பதி! விஜயநகரப் பேரரசின் ராஜப் பிரதிநிதியாக பெருமதிப்புக்குரிய மண்டலேசுவரர் நாகம நாயக்கர் பதவி ஏ ஏற்றபிறகு உள்நாட்டுக் குழப்பங்கள் ஒழிந்தன. சோழ மன்னர்களின் சூளுரைகள் மறைந்தன. ஒரு காலத்தில் பாண்டியனைப் பார்த்து கொக்கரித்தவர்கள், எச்சரிக்கை விடுத்தவர்கள் பாண்டியன் தலைநகரத்துக்கு நாகமர் வந்தபிறகு குழம்பித் தவித்தார்கள். மேலைக் கடற் கரை ஓரத்தில் கொற்றம் நடத்திய சேரர்கள் நாகமர் புகழ் கேட்டு அவர் தம் வீரம் கேட்டு பெருமூச்சு விட்டார் கள். 

நாகமர் விஜயநகரப் பேரரசின் கட்டளை பெற்று சோழ மன்னனை முறியடித்து பாண்டியனுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்தார். நாட்டை மீளப்பெற்ற பாண்டியன் நாகம ரைப் போற்றிப் புகழ்ந்தான். சரியாசனம் கொடுத்துக் கெளரவித்தான். நீதிபதி பாண்டியன் கொற்றத்தை எதிர்ப்போரை நாகமரின் நிழலைக் காட்டி விரட்டினர். விஜய நகரப் பேரரசின் வலிமையோடு பாண்டிய மண்டலம் அவ்வளவு கீர்த்தி பெற்றிருந்தது. 


நாகம நாயக்கர் அவருடைய சின்ன வயதிலிருந்தே பந்த பாசத்தையெல்லாம் அறுத்துக் கொண்டவர். அவரு டைய வாழ்நாளிற் பெரும் பகுதி போர்க்களத்திலேயே கழிந்தது. அவருக்கு ஏற்பட்ட புகழில் வாழ்த்தொலி களில் எல்லாவற்றையும் மறந்தவர். தான் ஒரு நாட்டின் மன்னரையே மிரட்டக் கூடிய அளவுக்கு செல்வாக்குள்ள பிரிதிநிதியாக வருவோமென்று அவர் நினைக்கவில்லை. புகழ்ப் போதையில் மனிதர்கள் வாழ்க்கைப்பாதையையே மறந்து விடுகிறார்கள். போதை குறையக் குறையத் திருத்திக் கொள்ளத்தவறிய சிறுபிழைகள்கூட பெரும் மலைகளாக உருவெடுத்து இறுதிக் கட்டத்தில் பாதையின் குறுக்கே நின்று மறியல் செய்யுமென்பதை புகழ் விரும்பிகள் மறந்து விடுகிறார்கள். தளபதி நாகமநாயக்கர் எவ்வளவுதான் புஜ பல மிக்கவராக இருந்தாலும் தென்னாட்டின் போர் நிகழ்ச்சி கள் அவருக்கு மகாமண்டலேசுவரர் என்ற மகுடத்தை சூட்டினாலும் அவரிடம் ஒரே ஒரு குறை இருந்தது. மதுரை மாநகரம் அவருக்கு அளித்த சிறப்பில் மயங்கி அவருடைய ஒரே மகனான விசுவநாத நாயக்கனை விஜயநகரத்தில் தத்த ளிக்க விட்டது நாகமரின் பெருந்தவறுதான். கோட்டைக் குள்ளேயே குழப்பத்தை விளைவித்து நாட்டைக் கேலிக் கூத்தாக்கும் பண்புகெட்ட நிகழ்ச்சிகளைச் சரித்திரத்தில் இடம்பெறச் செய்துவிட்டது. திறை கட்ட மறுத்தோரின் உடல்களை மண்ணிலே புரளும்படி செய்து வெற்றி முர சறைந்த வீரர்க்கு வீரரான நாகமநாயக்கர் அவருடைய பெருமிதமான சரித்திரத்தில் தென்னாட்டு மக்களின் ஏக்கத்தை கலந்து கொண்டு விட்டார். 

உலகம் நன்மையை மதிக்கிறது; தியாகத்தைப் போற்றுகிறது; வீரத்தை மெச்சுகிறது. ஆனால் இவற்றை யெல்லாம் கணத்தில் மறந்து விடுகிறது. பத்து நன்மைகளை நொடிப் பொழுதில் மறந்து விடுகின்ற மனித சமுதாயம் ஒரு தீமையைச் சாகும் வரையில் மறப்பதில்லை. வள்ளலின் கொடைத் தன்மை அழிகிறது. அவனுடைய அங்கயினம் குறைவாகப் பேசப்படுகிறது. கவிஞனின் புலமை எடுபடுவ தில்லை; அவனுடைய குடித்தனம் இகழப்படுகிறது. மாவீரன் நாகம நாயக்கன் இல்லாவிட்டால் – அவரிடத்திலே வீர வலிமை தோன்றியிராவிட்டால் -தென்னாட்டு வரலாற் றிலே கிருஷ்ணதேவராயருக்கு இடமில்லை; அவருக்கென்று ஒரு சரித்திரமில்லை. அவருடைய சந்ததிக்கு வாரிசு உரிமை இல்லை. ‘கொண்ட வீடு’ முற்றுகை பெற்றது; ரெய்ச்சூர் படையெடுப்பு புகழ் பெற்றது; நாகம நாயக்கரால்தான்; ஆண்டு பலவாக பீஜப்பூர் சுல்தான் பீதி கொண்டிருந்ததும் நாகமநாயக்கர் பிரதம தளபதியாய் இருந்தால்தான்! தன்னுடைய உதிரத்தினால் – தோள் வலிமையால் – போர்ச் சாதுர்யத்தினால் – விஜயநகரத்திற்கு அழியாத புகழைச் சேர்த்துக் கொடுத்த நாகமர், கட்டிய மாளிகையை இடிக்க விரும்பிய கொத்தனாரைப் போல், எழுதிய காவியத்தை எரிக்கத் துணிந்த புலவரைப் போல், விஜயநகரத்தின் மேல் நாகமரே படை எடுக்கும் காலமும் வந்துவிட்டது. 


ஒரு நாள் இரவு! துணைவி மங்கம்மாளுடன் வைகை நதியின் ஓரத்தே உள்ள விருந்தினர் மாளிகையில் உரை யாடிக் கொண்டிருந்தார் நாகமர். பீஜப்பூர் சுல்தான் மீது போர் தொடுக்கத் தனிப்படையுடன் சென்ற விசுவநாதன் என்ன ஆனான் என்பதை அறிய மங்கம்மாள் துடித்துக் கொண்டிருந்தாள்.விசுவநாத நாயக்களைப் பற்றிய தகவல் களை எவ்வளவுதான் விஜயநகர சாம்ராஜ்யம் மூடி வைத்தும் பயனில்லாமல் போய்விட்டது. பல காதங்களுக்கு அப்பால் விசுவநாத நாயக்கனைச் சுற்றிப் பிணைந்திருந்த ஒரு முக்கியமான தகவல் அவனுடைய தந்தையையும், தாயையும் துணுக்குறச் செய்யும் வகையில் அன்றிரவு அவர் களுக்கு எட்டியது. அதுவும் ஓர் ஓலை வாயிலாகக் கிட்டியது. 

புகழ் திரு. மண்டலேசுவரர் அவர்களின் மேலான கவனத் திற்கு, தங்கள் பாலும் தங்கள் திருக்குமாரர் பாலும் அழி யாத நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருக்கும் ஓர் ஏழை யின் ஓலை அது. 

என்னுடைய முன்னோர்கள் காலந்தொட்டு தங்களுடைய உழைப்பை அவர்கள் மூலமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களுடைய மகன் இன்று உழைத்து வருகின்ற உழைப்பும் எளிதானதன்று. ஆனால் புவனமெல்லாம் புகழ் பெற்றிருக் கும் விஜயநகரப் பேரரசு அவற்றை நினைத்துப் பார்க்கத் தவறிவிட்டது. 

விஜயநகரத்திற்குத் தெற்கே நெடுந் தொலைவில் தாங்கள் இருப்பதால் திட்டமிட்டே சில காரியங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. அதனால் விஜயநகரத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க நியாய மில்லை. 

விஜயநகர சாம்ராஜ்யத்தின் இரண்டாவது நூற்றாண்டு விழாவை ஒட்டி அங்கு நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் வெற்றிபெற்ற பீஜப்பூர் இளவரசன், துங்கபத்திரையைக் கடத்திக் கொண்டு போனதும், அதற்குப் பதிலாக சதிகாரர் களின் தூண்டுதலின் பேரில் தங்களது அருமை மைந்தன் விசுவநாத நாயக்கன், எவருக்கும் தெரியாமல் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டிருந்ததும் உங்களுக்குத் தெரியாது. 

பின்னர் உண்மை அறிந்த மன்னர் விஜயநகரத்திற்கும் பீஜப்பூருக்கும் போர் நடந்த காலத்தில் விசுவநாதநாயக்க ரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு படையெடுத்துப் போகும் படி கூறியதும் உங்களுக்குத் தெரியாது.இத்தனை தொல்லை களுக்கு இடையே பிறந்த பொன்னாட்டின் மானம் காப்பதற் காக வீரப் பணிபுரிந்த விசுவநாதர் மீது கொலைக் குற்றத் தைச் சுமத்தி, இன்று வழக்கம் போல் ரகசியப் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள். பதினாயிரம் குதிரை வீரர்களுக்கு அதிபதியாய் விளங்கிய விசுவநாதர் இன்று வாழ்விழந்து, மாவீரன் என்ற பொலிவையும் இழந்து பொல்லாத கொட்டடிக்குள் அடைபட்டுக் கிடக்கிறார். அவரால் கொல்லப்பட்டவர்கள் பலர். அவரால் வெல்லப் பட்ட நாடுகள் அநேகம். ஆனால், ‘இன்று அவர் வாழ்ந்த மண்ணில், வளர்ந்த மண்ணில் அவருக்கு அடங்கியவர்கள் மத்தியில் ஏது மற்றவராய் வைக்கப்பட்டிருக்கிறார். சதிகாரர்களால் முடுக்கி விட்டப்பட்ட மன்னர் இந்தத் தகவல் எந்தக் காரணம் தொட்டும் மதுரையிலிருக்கும் தங்களுக்கு எட்டிவிடக்கூடாதெனக் கட்டளை பிறப்பித்திருக்கிறார். காலதாமதம் செய்தால் உங்களுடைய ஒரே மகனை – குலவிளக்கை – கொற்றம் காக்கப் பிறந்தவரை இழந்து பரிதவிக்க நேரிடும். 

இங்ஙனம், 
உறவினன். 

ஓய்ந்து கிடந்த மண்டலேசுவரர் இதயம் கொந் தளித்தது. அருகிலிருந்த தாய் உள்ளம் வடித்த கண்ணீர் அதைப் பொங்கி எழச் செய்தது. உலகத்தைக் கடித்துத் தின்று விடுவதைப் போல் முகத்தைச் சுளித்தார். பெருமூச்சு விட்டவண்ணம் 30 ஆண்டுகாலமாக தன்னுடன் குடும்பபாரம் நடத்திவரும் மனைவி மங்கம்மாவைப் பார்த்தார். பெற்றமனம் கலங்கி இருந்தது. அவள் முகமெல்லாம் வியர்வை பூத்து நின்றது. எதிரே கிருஷ்ண தேவராயர் வந்தால் குத்திச் சரித்துவிடும் பெண்புலியைப் போல் மாறி இருந்தது. 

நாகமநாயக்கர் வேகமாக மாடத்தைவிட்டுக் கீழே இறங்கினார். அவர் மெளனமாகப் போனால் ஏதாவது விபரீதம் நடக்குமென்று மங்கம்மாவுக்குத் தெரியும். அவளும் பின் தொடர்ந்தாள். கீழ்வீட்டுத் தாழ்வாரத்தில் நாகமர் நடந்து கொண்டே இருந்தார். நிலவு வந்தது! தன்னுடைய தண்ணொளியை இரவெல்லாம் பெய்வித்தது. தூ விக்கிடந்த நட்சத்திரங்கள் நாழிகைக்கு ஒன்றாக எரிந்து விழுந்து கொண்டிருந்தன. மங்கம்மா தூண்மறைவில் நின் று கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் மலையருவி களாக இருந்தன. நாகமர் நடையை நிறுத்தவில்லை. கோபம் தணிந்தபாடில்லை; சிந்தனை ஓயவில்லை; அவர் உலாத்திக்கொண்டே இருந்தார். மனிதனின் கவனம் வேறு பக்கத்தில் இருக்கும் போது அவனுக்குக் களைப்புத் தெரிவ தில்லை. தோல் சுரணையற்றுப் போய்விடுகிறது. இல்லா விட்டால் இரவு முழுதும் அவர் நடந்து கொண்டே இருப்பாரா! 

பொழுது விடிந்தது. அன்றைய சூரியன் பாண்டிய மன்னனுக்குக் கூற்றுவனாக உதித்தது. நேற்று வரை நெஞ்சார தழுவிச் சென்ற நாகமர் இன்று காலை இடி போல் முழக்கமிட்டு கொக்கரிப்பார் என்று பாண்டியன் எதிர் பார்த்திருக்க மாட்டானல்லவா! 

பாண்டிய மன்னன் இறைவணக்கம் முடித்துக் கொண்டு பரிவாரங்கள் புடைசூழ கொலுமண்டபத்திலிருந்தான். விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய வழக்குகள் ஏராளமாக இருந்தன. நாகமர் வருகைக்காகவே அவன் காத்திருந்தான். ஏனெனில் குற்றம் புரிந்துவிட்டு கொற்றவன் முன்னால் நீலிக் கண்ணீர் வடிக்கும் நெறிகெட்ட மனிதர்களை மிரள வைக்கும் பேராற்றல் நாகமநாயக்கர் உருவத்தில் புதையுண்டு கிடந்தது. 

சபை கலையப்போகும் நேரம் வந்துவிட்டது. பாரதத் தில் வரும் பீமனைப் போல் நாகமர் நெஞ்சை விரித்த வண்ணம் சபாமண்டபத்தில் நுழைந்தார். 

மன்னர் அவர் தோற்றத்தில் மாற்றங்கண்டார். பார்வை யில் கனலைப் பார்த்தார். தானே முதலில் பேச ஆரம்பித்தார். 

“என்ன நாகமரே! இவ்வளவு தாமதம்? இல்லத்தில் அனைவரும் நலம்தானே! பேரரசின் நிலைகுன்றவில்லையே!” என்றான் பாண்டியன். 

“என்னைப் போன்ற பலமிகுந்த பல்லக்குகள் இருக்கும் போது, அதில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு என்ன குறை ஏற்படப்போகிறது? தக்காணத்தின் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்தைப் பார்க்கப் போகிறீர்கள் மன்னா! நான் நினைக்காதது நடந்துவிட்டது. எந்த மன்னனுடைய பரிபால னத்திற்குச் சக்தியை எல்லாம் விரயம் செய்தேனோ, அந்த பரிபாலனத்தை நிர்மூலமாக்கத் துணிந்து விட்டேன். யாரைத் தெய்வமென்று பூஜித்தேனோ அந்தத் தெய்வத்தை உடைத்துத் தூளாக்கத் தீர்மானித்து விட்டேன். நேற்று வரை நான் அன்னியருக்குக் கூற்றுவன். இன்று, நன்றி கெட்ட உற்றாருக்கும் கூற்றுவன்.” – நாகம நாயக்கர் பொறி பறக்கப் பேசினார். அவர் உடல் நடுங்கிற்று. புருவங்கள் ஏறி இயங்கின. 

“நாகமரே! எங்கோ பேச வேண்டியதை பாண்டியன் சபையில் பேசுகிறீர்கள். குடிபடைகள் அரசுக்குத் தரும் மரியாதையைக் கெடுக்க முனைகிறீர்கள்! பன்னெடுங்கால மாக கண்ணெனக் காத்துவரும் பாண்டிய நாட்டின் கீர்த்தியை அழிக்கப்பார்க்கிறீர்கள். நீங்கள் மாவீரர்தான்; மகாமண்டலேசுவரர்தான். ஆனால் இங்கே நீங்கள் வெறும் ராஜப்பிரதிநிதி என்பதை மறந்து விடாதீர்கள்.” பாண்டியன் சற்றுக் கோபமாகவே பதிலிறுத்தான். 

நாகம நாயக்கர் பாண்டியன் கோபத்தைப் பொருட் படுத்தவில்லை. 

“பாண்டியமன்னா! நன்றி கெட்டவாரிசின் தலை மகனே! யாருடைய பலத்தில் இந்த சிங்காதனத்தைப் பெற்றாய்? ஓடோடி வந்து ஒப்பாரி வைத்து ஓலமிட்டதை மறந்து விட்டாயா? அன்று நான் மறுத்திருந்தால் இன்று உன் பிணம் புதைந்த இடம் தெரியாமல் போயிருக்கும்” நாகம் நாயக்கர் அடுக்கிக்கொண்டேபோனார். மன்னர் முகம் சிவந்தது. 

“கவனமாக கேளும்! நான் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ராஜப்பிரதிநிதி. பாண்டிய நாடு கட்டியங் கூறி நித்திய வாழ்க்கை நடந்த வேண்டிய இழிநிலையில் இருக்கிறது. என்னுடைய கோட்டில்தான் நீர் நடக்க வேண்டும். என்னுடைய பேச்சைத்தான் நீர் கேட்கவேண்டும். பெயரளவிலே தான் நீர் மன்னர். நான் உம்மை ஆட்டிவைக்கும் சூத்திரக் கயிறு. நீர் என்னுடைய கட்டளையை மீறினால் நான் விதிக் கும் தண்டனையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். நான் யார் தெரியுமா? கிருஷ்ணதேவராயரின் வலக்கரம். முகமதிய மன்னர்களுக்கு என்னைக் கண்டால் சிம்ம சொப்பனம்.நீர் எனக்குத் துரும்பு. தனலோடு பகைத்துக் கொள்ளாதீர்! உமக்கு இந்தச் சிம்மாசனத்தின் மீது மோகம் இருக்கு மானால், நான் வலிய இழுக்கும் இந்தப் போருக்கு நீர் தூண்டுகோலாக இருக்க வேண்டும். எந்தப் பேரரசை நாள் விரோதி என்று கருதுகிறோனோ அந்தப் பேரரசுக்கு தூபமிட்டு என்மீது கொதித்தெழச் செய்ய வேண்டும்.” 

“நாகமரே!” பாண்டிய மன்னன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு வார்த்தை பேசினான். 

“வேல் பாய்ந்த வேங்கை பேசுகிறது மன்னா! நாற்புறத் திலும் வாள் வலிமையால் விஜயநகர சாம்ராஜ்யத்தின் எல்லைக் கோடுகளை மாற்றிக் கிழித்துக் கொடுத்தவன் வேதனையோடு பேசுகிறேன்; பீஜப்பூர் சுல்தானை வீழ்த்தி, அவனுடைய கோட்டை கொத்தளங்களைச் சாய்த்து விஜய நகரத்திற்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த வீர வாலிபன் விசுவநாதநாயக்கனின் தந்தை பேசுகிறேன்; உமக்குத் தைரியமிருக்குமானால் இன்றே விஜயநகரத்திற்கு ஓடும். ராஜப்பிரதிநிதியாக வந்த நாகம் நாயக்கன் மதுரைக்கு நானே ராஜா என்று பிரகடனப் படுத்திவிட்ட தாகச் சொல்லும் ”- நாகமர் பேசும்போது அவருடைய இருதயம் எரிமலையாய் இருந்தது. 

பாண்டிய மன்னன் திகிலடைந்தான்! அவனுக்குச் சூடு தட்டியது. சிம்மாசனத்தை விட்டு எழுந்தான். 

“நாகமரே! இது எட்டுத் திக்கும் புகழ் பெற்ற பாண்டியன் கொலு பீடம். இங்கே உமது மிரட்டலுக்கு இடமில்லை. யாரிடம் பகை தீர்த்துக் கொள்ள வேண்டுமோ அங்கே போய்க் கர்ஜனை செய்யும்” என்றான் பாண்டியன். 

நாகம நாயக்கர் சிரித்தார். அந்தச் சிரிப்பில் அமைதி இருந்தாலும் வீரம் மறைந்து கிடந்தது. 

”மதுரை மன்னா! யாரிடம் பகை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்பதை நான் அறிவேன். ஆனால் அதற்கு யாரைத் தூது அனுப்புவது என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.’ 

“என்ன! நானா தூதன்? நான் பாண்டிய மன்னன்!” 

“நீரா மன்னர்! நீரா இந்த நாட்டின் அதிபதி! உன்னை எதிர்த்த சோழனை நான்தான் வென்றேன். கவனமிருக்கட்டும். நீர் எனது அடிமை.” 

நாகம நாயக்கர் இவ்வாறு குறிப்பிட்டவுடன் சபையில் ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களெல்லாம் மன்னரின் புகழ்பாடி ஏந்திப் பிழைப்பவர்கள். நாகம் நாயக்கர், அவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார். அடுத்த கணம் யாருக்கும் தெரியா வண்ணம் பக்கத்தில் நின்ற படைத் தலைவனுக்குச் சாடை காண்பித்தார். பெரும் படை ஒன்று குபு குபு வென்று சபா மண்டபத்திற்குள் நுழைந்தது. கொக்கரித்த பாண்டியன் சபையை விட்டு ஓடினான். அவனைத் தொடர்ந்து அவனது நண்பர்களும் நாலா பக்கங்களிலும் சிதறினார்கள். கொலு மண்டபத்தில் ஒரே அமளி. 

12 

பாண்டிய மன்னன் விஜயநகரம் விரைந்து சக்கரவர்த்தி யாரிடம் அழுது புலம்பினான். ராயருக்குப் பாண்டியன் கூற்றில் நம்பிக்கை இல்லை. ‘நாகம நாயக்கரா விஜயநகரோடு போர் தொடுக்கப் போகிறார்’ என்று அவர் சந்தேகப்பட்டார். 

அரண்மனையின் அவசரச் சங்கு ஒலித்தது.அஷ்டகஜங் கள் அரண்மனைக்கு ஓடிவந்தார்கள்.மன்னர் முகத்தில் சிறிது அச்சம் குடி கொண்டிருந்தது.பேரரசின் அச்சு முறிந்து விடுமோ என்ற பயம் அவர் மனத்தில் அரும்பி இருந்தது. பெரும்புலவர் பெத்தன்னா அடிக்கொரு முறை ஆறுதல் சொன்னார் என்றாலும் மன்னர் தெளிவு பெறவில்லை.அவர் கவலை தீர்ந்தபாடில்லை. நாகம நாயக்கர் கையை உயர்த்தினால் நாடே அவர் பக்கம் சேர்ந்து விடவும் கூடும் என்ற அதிர்ச்சி ஒரு புறம் அவர் உள்ளத்தைக் குடைந்துகொண்டிருந்தது. நாகமநாயக்கர் போர் தொடுத்தால் பாதுகாப்பிற்கு என்ன செய்வது என்பது பற்றி ஆலோசனை நடைபெற்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசினார்கள். நாகமர் ஒரு போதும் படையெடுக்க மாட்டாரென்று, புலவர் தலைவர் பெத்தன்னா மட்டும் வலியுறுத்திப் பேசினார். ஆனால் துர்ஜதிக்கு அந்தக் கருத்தில் உடன்பாடில்லை. அவருக்கு ஆத்திரம் பீரிட்டுக் கிளம்பியது. அதே நேரத்தில் அவருடைய திட்டத்திலிருந்து நழுவி விடவில்லை. நாகம் நாயக்கர் திடீரென்று விஜயநகர் மீதுபடையெடுத்து வெற்றி பெற்றுவிட்டால் விசுவநாத நாயக்கன் விடுதலையடைந்து தன்னைப் பலிகொண்டு விடுவான் என்று பயந்தார். மன்னரி டத்தில் அதை வெளிப்படையாகச் சொல்லவும் அவர் மனம் குன்றியது. வழக்கமான அவருடைய புத்திக் கூர்மை லோசனைக் குழுவையே ஆட்டங்காண வைத்துவிட்டது. 

“மன்னர் பிரான் அவர்கள் கவனத்திற்கு ஒரு விண்ணப்பம். நாகமநாயக்கர் விஜயநகர் மீது போர் தொடுக்க மாட்டார் என்று பெத்தன்ன கூறுவதை நான் பலமாக எதிர்க்கிறேன். நம்முடைய ராஜாங்க கூட்டுத் திட்டத்தை ஒருவர் மீறிவிட்டார் என்றால், அவர் நம்முடைய கோபத்தை வெற்றி கொள்ளத்தக்க பின்பலத்தோடு இருக்கிறார் என்றுதான் பொருள். நாம் இப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர் நம்முடைய பேரரசைத் துச்சமெனக் கருதக் கூடும். வீடு புகுந்துள்ள விஷநாகத்தைக் கொன்று விடத்தவறினால் விஷநாகம் நம்மைத் தீண்டிவிடும்”- என்று துர்ஜதி தன்னுடைய வாதத்தை உறுதிப்படுத்தினார். 

மறுநாள் காலை அரசியல் மன்றத்தில் மதுரைமீது வேறு படையெடுக்கும் பிரச்சினை பற்றி பலத்த கருத்து பாடுகள் கிளம்பின. அப்போதும் புலவர் பெத்தன்னா வழக்கம் போல் தணிந்த குரலில் பேசினார். ‘நாகமரோடு பகைத்துக் கொள்வதைக் காட்டிலும் அவர் மதுரைக்கு மன்னரானதை நாம் அங்கீகரித்து விடுவதே ராஜதந்திர மாகும்” என்று அவர் குறிப்பிட்டார். மன்னரின் உதடுகள் துடித்தன. 

ஆக்கிரமிப்பை அங்கீகரிப்பது கோழைத்தனம். அண்டிக் கேட்டிருந்தால் அன்புடன் அளித்திருப்போம்.” மன்னர் பேசிமுடித்து விட்டு பெத்தன்னாவைச் சிறுத்து பார்த்தார். ராஜபார்வையை ஏற்றுக் கொள்ள பெத்தன்னாவுக்குச் சக்தியில்லை. மன்னர் கருத்துக்கு அவர் இசைந்து விட்டார். துர்ஜதிக்கு இதயம் குளிர்ந்தது. தன்னுடைய திட்டத்தினால் விசுவநாத நாயக்கனின் எதிர்காலம் தகர்ந்து விடப்போகிறது என்று கனவு கண்டார் அவர். 

சபை கலைந்தது. துர்ஜதியும் சிங்கராயனும் இருட்டு வந்த பிறகு துங்கபத்திரையின் மணற் பரப்பில் சந்தித் தார்கள். சிங்கராயன் முகத்தில் களை இல்லை. பொழுது விடிந்தால் நடக்கவிருக்கும் பேராபத்திற்குப் பலியாக விருக்கும் பிரேத மனிதனைப்போல் இருந்தான். அவனுடைய பேச்சாலும் நடவடிக்கையாலும் சாவதற்குத் தேதி குறித்து விட்டு வந்தவனைப்போல் தென்பட்டான். ஏதோ ஒருவித பயம் அவனுடைய இருதயத்தை உலுக்கிக் கொண்டிருந்தது. அதனால் அவனுடைய பேச்சில் தெளிவில்லை. 

தொனியில் உணர்ச்சி இல்லை. துர்ஜதியை சந்திப்பதென்றால் உற்சாகத்துடன் வருபவன் அன்று கடமைக்காகவே வந்து, கடமைக் காகவே பேசுவதுபோல் தவித்துக் கொண்டிருந்தான். 

துர்ஜதிக்கு இவை அனைத்தும் புரியாமலில்லை. முக பாவத்தைப் பார்த்து மன ஆழத்தை அறியும் மகா புத்திசாலி அவர். 

“சிங்கராயரே! நீங்கள் மனம் தளர்ந்திருக்கிறீர்கள். உங்களுடைய எண்ணம் மயானத்தை வட்டமிட்டுக் கொண் டிருக்கிறது. உணவு கொள்ளுமுன் அஜீரணத்தைப் பற்றிக் கவலைப்படுவது போர்வீரர்களுக்கு அழகல்ல. மன்னர் கட்டளையிட்டால் மதுரையிலிருக்கும் புலியோடு பொருத வேண்டுமே என்று கவலைப்படுகிறீர். கவலை இருக்க வேண்டியதுதான். அந்தக் கவலை பயமாக உருவெடுக்கக் கூடாது.”துர்ஜதி போதனை செய்யத் தொடங்கினார். அது வரை சரியாசனத்தில் இருந்து பேசிய சிங்கராயன் திடீரென்று அவனையுமறியாமல் எழுந்து நின்றான். பல் வீனத்தை வெளிப்படுத்திக்கொண்டவன் மனத்தில் அடிமைத் தனம் புகுந்து விடுகிறது. கடன்பட்டவனைப்போல் கைதளர்ந்து போகிறான். துர்ஜதி, ஆசனத்தை விட்டு எழுந்து போய் சிங்கராயனைத் தட்டிக்கொடுத்தார். “இப்போதுதான் நம்முடைய சதி புத்துயிர் பெறவேண்டும். எதிரியின் பலத்தைப் பிளந்து அவர்களுக்குச் சக்தியில் லாமல் செய்யவேண்டும். நம்முடைய முதல் எதிரி விசுவநாத நாயக்கன். அவனுடைய வீழ்ச்சியில்தான் நம்முடைய கொண்டாட்டம் அடங்கிக் கிடக்கிறது. இந்த நேரத்தில் அவனைச் சிறையிலே வைத்திருந்தால் அவன் தந்தைக்கும் நல்லவனாகி சக்கரவர்த்தி ராயருக்கும் நல்லவனாகி விடுவான். நல்லவனைப் பொல்லாதவனாக்க அவனால் தாங்க முடியாத பொறுப்பை அவனிடம் கொடுக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே வந்த துர்ஜதி, திடீரென்று உரக்கப் பேசியதை நிறுத்திவிட்டு சுற்றுமுற்றும் பார்த்து சிங்க ராயனின் காதருகில் போய் ஏதோ ரகசியமாகச் சொன் னார். சிங்கராயனின் முகத்தில் புது ரத்தம் சுரந்தது. இருவரும் பலமாகச் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பொலி துங்கபத்திரையின் படுகையில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த நீர் நிலைகளில் பட்டுத் தெரித்தது. ஆனால் அந்த ஓசையை எதிர்த்து யாரோ பதில் குரல் கொடுப்பதுபோல் அவர்கள் இருவருக்கும் உணர்ச்சி தட்டுப்பட்டது. பயந்த நிலையில் சிங்கராயன் வாளை உருவிக்கொண்டு முன்னே நடந்தான். 

நதிக்கு நடுவே ஒரு திட்டு. அது ஒரு அடர்ந்த தாழம் புதர். முற்றிப்போன மரங்களும், புதிய இள மரங்களு மாக நிறைந்து, அந்த மணல்மேடு திட்டாக மாறியிருந்தது. நச்சுப் பிராணிகள் உயிரைக் குடிக்கும் விலங்குகள் ஒளிந்து கிடந்தாலும் தெரியாது. அவ்வளவு அடர்த்தியாக இறுகப்பிணைந்து இருந்தது, அந்தத் தாழம்புதர். 

சிங்கராயனும், துர்ஜதியும் அந்தப் புதரை நெருங்கி விட்டார்கள். அவர்கள் கண்களுக்கு ஓர் உருவம் மணலில் படுத்திருப்பது போல் தோன்றியது. இவர்களைப் பார்த்ததும் அந்த உருவம் எழுந்து நின்றது. சிங்கராயன் உரத்த குரலில் அந்த உருவத்தை மிரட்டினான். இளமை குன்றாத வசீகரத் தோற்றமுடைய வாலிபனைப் போல் அந்த உருவம் திகழ்ந்தது. 

“நான் எதைச் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு செயல்பட முனைந்தேனோ அதே காரியத்தை நீங்கள் இரு வரும் செய்து முடிக்கத் தீர்மானித்திருப்பது கேட்டு என் மனம் இன்பத்தில் திளைத்தது. சற்று முன்பு நீங்கள் இரு வரும் பேசிக்கொண்டிருந்ததைக் காதாரக் கேட்டேன். நல்ல வனைப் போல் வேடமிட்டு நடித்து வந்த விசுவநாதன் ராஜ குடும்பத்தை மட்டுமல்லாமல் சாம்ராஜ்ஜியத்தின் கௌரவத் தையே அழிக்கத் திட்டமிட்டிருக்கிறான் என்ற உண்மையை சில நாட்களுக்கு முன்பே அறிந்து கொண்டேன்” என்று அந்த அழகு வாலிபன் தெரிவித்ததும். துர்ஜதிக்கு ஏற்பட்ட பூரிப்புக்கு அளவே இல்லை. சிறு பிள்ளையாக இருந்தால் துள்ளிக் குதித்திருப்பார்; பெண்ணாயிருந்தால் நாட்டியமே ஆடியிருப்பார். அத்துணை இன்பம் அவருக்கு. 

“சிங்கராயரே, நமது திருப்பணிக்கு இந்த இளைஞன் பெரிதும் பயன்படுவான். இவன் விசுவநாதனை நம்பி மோச மடைந்திருக்கிறான். இவனது குற்றச் சாட்டுக்களையும் நமது குற்றச்சாட்டுகளோடு சேர்த்துக் கொள்ளலாம்!” என்று தெம்புடன் தெரிவித்தார் துர்ஜதி. அந்தக் கருத்தை முழு மனசுடன் ஏற்றுக் கொள்ள சிங்கராயன் அந்த வாலிபனைத் தழுவி நகர் பக்கமாக அழைத்து வந்தான். வரும்போது மூவருமே எவ்வளவோ பேசினார்கள். இடையிடையே பல இடங்களில் பலமாகச் சிரித்தார்கள். ஆனால் அந்த இளைஞன் எந்தத் தகவலையும் உதிர்த்துவிடவில்லை. முத்துக் கலிங்கன் – என்று அவனுடைய பெயரைத் தெரிவிக்கவே அவன் அரை நாழிகை பிகு செய்துவிட்டான். 

துர்ஜதிக்கும் சிங்கராயனுக்கும் பயம் தெளிந்து சிறிது தெம்பும் பிறந்தது. துர்ஜதி முத்துக்கலிங்கனை அவரது மாளிகைக்கு அழைத்துப் போய்விட்டார். துர்ஜதியின் அடுத்த திட்டத்திற்கு முத்துக்கலிங்கன் பயன்படுவான் என்று அவர் நினைத்துக் கொண்டார். 


வீம்புச் சண்டைக்கு வித்தூன்றிய நாகம நாயக்கர் படை பலத்தைப் பெருக்குவதில் அதிகக் கவனம் செலுத்தி வந்தார். பாண்டியனுக்கு ஆதரவாக மதுரையில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டுவிடாமல் பொது மக்களுக்கு சலுகைகள் காட்டினார். யாருக்கும் கப்பம் கட்டாமல் மதுரை தனி உரிமையுடன் வாழ்வதற்காகவேதான் பாண்டியனை அடித் துத் துரத்தியதாகப் பிரகடனப் படுத்தினார். நாகமருக்கு மதுரையில் எதிர்ப்பில்லை. அவரைக் கண்டு பயந்து வாய் மூடிக் கிடந்தவர்களைக் காட்டிலும் அவரது அன்புக்குக் கட் டுப்பட்டவர்களே அதிகமாக இருந்தார்கள். நாகமர் சரித்தி ரத்தில் இது பெருமைக்குரிய செயலில்லையா? ஒரு மன்னனை எதிர்த்து அவனது சபையிலிருந்த ஒரு ராஜப்பிரதிநிதி கிளர்ச்சி செய்ததை எவரும் எதிர்க்கவில்லை; அதற்கு மாறாக வரவேற்றார்கள் என்றால் அதற்குக் காரணம் அந்த மன்னன் ஆளத் தெரியாதவனாக இருந்திருக்க வேண்டும். எப்படியோ நாகமர் சக்கரவர்த்தியோடு போர் தொடுக்கத் தயாராகி விட்டார். விஜயநகரத்தினால் தனக்குப் பெருமையா அல்லது தன்னால் தான் விஜயநகருக்குப் பெருமையா என்பதை அறிய அவர் துடியாய் துடித்துக்கொண்டிருந்தார். இத்தனை காலமும் அவர் கலந்து கொண்ட சண்டைகள் பொது நலத்திற்காகத் தொடுக்கப்பட்டவை. பொல்லாத ராஜாக்களை முறியடித்து நல்ல அரசுகளை உண்டாக்குவதற்காக ஏற்பட்டவை. ஆனால் இப்போது நடக்கப்போகும். போர் நாகமரின் சுயநலத் திற்காக என்று கூற முடியாவிட்டாலும், அவருடைய பலத் தைப் பரிசோதித்துப் பார்க்கத் தீர்மானித்துவிடக் கூடா தென்றாலும், ஒரு பேரரசின் அநியாய நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்த்தெழுந்த யுத்தம் என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். 

மதுரை மாநகரம் போர்க்கோலம் பூண்டுவிட்டது. போக போக்கியங்களில் திளைத்துக் கிடந்தவர்கள்கூட மதுரையின் விடுதலைக்கு ஆயுதந் தாங்கத் துணிந்தார்கள். நாகமர் ஊட்டிய விடுதலைப்பாடம் அவர் ஒரு அந்நியர் என்ற வேற்றுணர்ச்சியையே மதுரை மக்களின் உள்ளங் களிலிருந்து பிரித்து எடுத்துவிட்டது. 

விஜயநகரப்படை தன்னுடன் போருக்குத் தயாராகி வருமானால் அந்தப் படைக்குத்தலைமை தாங்கிவரத் தகுதி யுடையவனாக சிங்கராயன் ஒருவன்தான் இருக்கிறான். அவன் தன்னுடன் எதிர்நின்று போர்தொடுக்கக் கிஞ்சித்தும் தகுதியில்லாதவன் என்று நாகமர் நினைத்து நினைத்துச் சிரித் தார். ஒரே நாளில் விஜயநகரப் படை புறங்காட்டி ஓடப் போகிறது; கட்டிக்காத்த புகழை கணப்பொழுதில் சிதறடிக் கப்போகிறது. ராயரின் கீர்த்தி எங்கே? அவர்தம் வீரம் எங்கே என்று விஜயநகர மக்கள் கேலி செய்யப் போகிறார் கள்: சிரம் தாழ்த்திக்கிடந்த சிற்றரசர்களெல்லாம் கரம் உயர்த்தி கேள்வி கேட்கத் தலைப்பட்டு விடுவார்கள்; மன்னர் மனங்கவிழந்து போவார்; அதிகாரிகள் பிணம் தின்னும் கழுகுகளாய் மாறி அரசையே நிர்மூலமாக்கி விடுவார்கள் என்று நாகமநாயக்கர் எண்ணிக் கிடந்தார். அவரது இன்ப நினைவிலும் துன்பத்தின் சாயல் இருந்தது. விஜயநகர் வீழ்ச்சியைப் பற்றிக் கனவு கண்டவனைக் கூட சிரசாக்கினை செய்யத் தூண்டும் கடின சித்தம் கொண்ட நாகமர் அன்று அவ்வளவு பெரிய நினைவுச் சுழலில் அகப்பட்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்துவிட்டார். அவருடைய சக்கரவர்த்தியை நினைத்து அவருடைய பொன்னாட்டை நினைத்து மனம் இளகி போரைக் கைவிடத்துணியும் போதெல்லாம் ஒரே மகன் விசுவநாதன் சிறைக்குள் தவித்து நிற்கும் கோரக்காட்சி அவருடைய உள்ளத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தது. தாய் நாட்டைக் காட்டிலும் தனயனையே பெரிதாகக் கருதினார் நாகமர் என்று கூறுவதைவிட நாளெல்லாம் உழைத்த ஊழியன் ஒருவனைத் தண்டிக்க முனைந்த நன்றி கெட்ட அரசாங்கத்தை எதிர்க்கத் துணிந் தார் என்று சொல்லுவதே பொருத்தமானது! 

நாகமர் எப்படி வேண்டுமானாலும் நினைத்திருக்கலாம். அவர் நினைத்தது நியாயமாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் நினைத்தபடி நடந்ததா என்றால் இல்லை. மனிதர்கள், உருவத்தில் மட்டுமல்லாமல் உள்ளத்தின் பக்குவத்திலும் ஒருவருக்கொருவர் மாறு பட்டிருக்கிறார்கள். ஒருவர் மனம் இன்னொருவருக்கு இருப்பதில்லை; உயிருக்குயிரான உறவுள்ளவர்களானாலும் ஒரு மனத்திற்கும் இன்னொரு மனத் திற்கும் தொடர்பு இருப்பது கிடையாது. ஒரு மனிதன் எண்ணம் அவனுடைய மனோராஜ்ஜியத்திற்குள்ளேயே அமுலாகி ஓய்ந்துவிடுகிறது. அந்த எண்ணம் எல்லைக் கோடுகளைத் தாண்டி இன்னொரு மனிதன் மனோராஜ்ஜியத் திற்குள் நுழையும் போதுதான் குழப்பங்களும் சச்சரவு களும் தோன்றுகின்றன. ஒரு மனத்திற்கும் இன்னொரு மனத்திற்கும் அவரவருக்கும்புலப்படாத மானசீகத் தொடர்பு இருக்குமானால் சண்டைகளுக்கு இடமில்லை; வீண் ஆர்ப் பாட்டங்களுக்கு இடமில்லை. தந்தைக்கும் மகனுக்குமே அந்த உள்ள உறவு இல்லை என்றால் வேறு எவருக்கும் இருக்கக் காரணம் கிடையாது. நாகம நாயக்கர் நினைத்தது வேறு; நடந்தது வேறு. 

விஜயநகரத்திலிருந்து நாகமருக்குத் தகவல் கிடைத்தது. அரசாங்க ரீதியில் ஒற்றன் வந்திருந்தான். நாகமநாயக்கரின் அறை கூவலை கிருஷ்ணதேவராயர் ஏற்றுக்கொண்டுவிட்ட தாகவும், போருக்கு நாளைக் குறித்துத் தரும்படியும் விஜய நகர ஒற்றன் கேட்க வந்திருந்தான். 

நாகமருக்குத் தோள்கள் துடித்தன. அண்டம் நடுங்கும் படி பல்லைக் கடித்தார். ஒற்றனுக்கும் உடம்பு ஆட்டங் கண்டுவிட்டது. இரண்டடி பின்னால் வந்து நின்றான். 

”போருக்கு நான் எப்போதும் தயார். நாளும் கிழமை யும் யாருக்குத் தேவை! எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வரச்சொல். சந்திக்கும் களம் சோழ வந்தான். அங்குதான் சோழனை முறியடித்துப் பாண்டியனுக்குப் பதில் கொடுத்தேன். அதே சோழவந்தானில் சந்திப்ப தாகச் சொல்!” என்று ஒற்றனுக்கு மறுமொழி கூறி அனுப்பி வைத்தார் நாகமநாயக்கர். 


“கலிங்கா'” 

“ஐயா!” 

“தொடங்கப் போகிறது! வருகின்ற வெள்ளிக்கிழமை நமக்கும், நாகமநாயக்கருக்கும் கடும் போர் நிகழப் போகிறது. இந்த நேரத்தில் நாம் அயர்ந்துவிட்டால் காரியம் பாழாகிவிடும்.” 

”உண்மைதான்! அன்று இரவு ஆற்றுப் படுகையில் நீங்களும் கணபதியாரும் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந் தீர்களே, அந்தத் திட்டத்தை நிறைவேற்றி வைத்துவிட்டால் போகிறது!” என்றான் முத்துக்கலிங்கன். 

”ஆம் கலிங்கா, இப்போது மன்னரைப் பார்க்கத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். விஜயநகரத்திற்கு இது கெட்ட காலம். நாகமநாயக்கரை எதிர்ப்பதற்குத் தென் நாட்டிலேயே ஆளில்லை. அவரை எதிர்க்கப்போகும் நம் நாட்டுப் படை அவராலேயே பயிற்றுவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து நமது படை ஒரு நாழிகைகூட நிற்க முடியாது. அதனால்தான் சாகப்போகும் போதாவது நமது எதிரியையும் அழித்துவிட்டுச் சாவோம் என்று தீர்மானித்து விட்டேன்,” என்றார் துர்ஜதி. 

முத்துக்கலிங்கன் ஒன்றும் புரியாதவனைப் போல் திகைத்தான். 

“பாலகா என்ன விழிக்கிறாய்? உனக்கு விளங்க வில்லையா? அருகில் வா சொல்கிறேன்!” என்றார் துர்ஜதி. 

முத்துக்கலிங்கன் அவரருகில் போனான். துர்ஜதி ரகசியமாக ஏதோ சொன்னார். முத்துக்கலிங்கன் அப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவே இல்லை. துர்ஜதியின் திட்டத்தை மன்னர் ஏற்றுக்கொள்வாரா? அவ்வாறு மன்னர் ஏற்றுக்கொண்டால் எந்த நாட்டுச் சரித்திரத்திலும் நடைபெற்றிராத நிகழ்ச்சி ஒன்று தென்னாட்டில் நடந்து விட்டதாக அல்லவா உலகம் பழிக்கும்!- என்று முத்துக் கலிங்கன் எண்ணிக் கலங்கினான். 

துர்ஜதி சால்வையை உதறித் தோளில் போட்டுக் கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டார். அடேயப்பா! அவருடைய நடையில் எவ்வளவு கர்வம், எவ்வளவு மிடுக்கு ஒரு வயதுப் பெண்ணைப் பறி கொடுத்தவரைப் போலவா அவர் நடந்தார்? இல்லை. வெளியே தலைகாட்ட முடியாத துயரத்தில் உழலவேண்டிய அவர், திருமணத்திற்கு நாள் வைக்கப் போகிறவரைப் போல அன்று நடந்து சென்றார். உயிர் வாழ இருதயம் அவசியம். ஆனால் இருதயம் நிலைக்க இரக்கம் அவசியமில்லை. அதனால்தான் இரக்கமில்லாத வர்கள் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். துர்ஜதிக்கு இரக்க மில்லாததால்தான் தன் துயரம் தெரியவில்லை. சொந்த எரிச்சலைக் கூட எதிரியின் பக்கம் திருப்பிக் கொள்ளத் திட்டமிட்டார். 

– தொடரும்…

– துங்கபத்திரை (நாவல்), முதற் பதிப்பு: பெப்ரவரி 1970, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *