கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 22, 2024
பார்வையிட்டோர்: 1,352 
 
 

(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

“கங்கா!” 

“அப்பா.” 

“நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. உடம்பை கவனித்துக்கொள்.! நீதான் மணப்பெண். விசுவநாதன் வெற்றி வீரன். இதில் மாற்றம் இருக்காது”. 

“அப்பா, வேறு யாராவது ஜெயித்து விட்டால் என்னப்பா செய்வது?” கங்கா பயத்துடன் கேட்டாள், 

“கங்கா என்ன பிதற்றுகிறாய். சூரியனுக்கு மிஞ்சிய விளக்கு இருக்கிறதா?” 

“விசுவநாதன் கலந்து கொள்ளாவிட்டால் என்ன செய்வது?”- மீண்டும் மீண்டும் குறுக்கிட்டாள். 

“நீ பெண், அதுவும் பேதைப்பெண். உனக்கு மனிதாபி மானம் தெரியாது, கங்கா! புகழை விரும்பாத மனிதன் இல்லை.மதுப்போதையைக் காட்டிலும் புகழ் போதைதான் மனித குலத்தைத் தடுமாற வைக்கிறது. அதுவும் விசுவ நாதனுக்கு இப்போது கிடைக்கப் போகும் புகழ் அழிவற்ற புகழ். நிச்சயமாக அவன் கலந்து கொள்வான். தைரியமாக இரு.போ! யாரோ வருவது போலிருக்கிறது. உள்ளே போய்விடு”! என்று கனத்த குரலில் பேசினார் துர்ஜதி.

தளபதி சிங்கராயன் கம்பீரமாக மாளிகைக்குள் நுழைந்தான். 

“வருக தளபதியாரே வருக!” என்று முகப்புகழ்ச்சி யுடன் வரவேற்றார் துர்ஜதி. 

“நல்ல ஏற்பாடு செய்தீர்கள். மன்னர் பிரானின் குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றிய பெருமை உங்களையே சாரும். காதலாம் காதல்! இருக்க இடம்கொடுத்தால் படுக்க இடம் பிடித்துக் கொள்வது மனித இயல்பாகி விட்டது’ சிங்கராயன் வயிற்றெரிச்சலைத் தொடுத்துக் கொண்டே போனான். 

இந்தப் பெருமை அரியநாதனைத்தான் சாரும். உத்தமன். நன்றியுள்ளவன். மல்யுத்தப்போட்டிக்குப் பரிசைத் தீர்மானித்தது அரியநாதன் அல்லவா” என்றார் துர்ஜதி. 

“நான் இவ்வளவு காலமும் அரியநாதனும், விசுவ நாதனும் உயிருக்குயிரானவர்கள் என்று நினைத்தேன். அவர்கள் இருவருக்குமிடையே இவ்வளவு இடைவெளி இருக்குமென்று நினைக்கவில்லை,” – சிங்கராயன் பூரண திருப்தியோடு தெரிவித்தான். 

“ஒருவன் புகழ் பெறுவதை இன்னொருவன் விரும்பு வதில்லை. அதுவும் அரசாங்கத்திற்குத் துரோகம் நினைக்கும் விசுவநாதனை யார்தான் ஆதரிக்கப் போகிறார்கள். மன்னர் குடியை அல்லவோ கெடுக்கப் பார்த்தான் விசுவநாதன். இனி ஒருபோதும் அவனுக்குத் துங்கபத்திரை கிடைக்க மாட்டாள்” என்று கூறி வெற்றிச் சிரிப்புச் சிரித்தான், துர்ஜதி. 

சிங்கராயன் அத்துடன் விட்டுவிடவில்லை. மேலும் தொடர்ந்தான். 

“விசுவநாதனே போரில் வெற்றி பெறுவதாகவே வைத் துக் கொள்வோம். அவன் எந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பான்?” – அபலமிகுந்த இந்தக் கேள்வியில் அற்பத்தனம் கூடுகட்டி நின்றது. 

துர்ஜதிக்கு முகம் வெளுத்து விட்டது. விசையைத் தட்டியவுடன் வெடிக்கும் துப்பாக்கியைப் போல் பதில் சொல்லும் துர்ஜதியார் ஒரு கணம் சுழன்று விட்டார். பொரு ளில்லாமல் ஒரு சிரிப்பைத் தெளித்தார். 

”நன்றாகக் கேட்டீர்கள்! அழகான பெண் யார் இருக்கி றார்கள். ஏதாவது ஒரு குரங்கைக் கட்டிக் கொள்ள வேண் டியதுதான். வேறு வழி ஏது?” என்றார் துர்ஜதி. 

”சபாஷ்! நல்ல அடி அவனுக்கு; புலவர் கவனத்திற்கு ஒன்று கூறுகிறேன். நமது கங்காவை எச்சரிக்கையாக நடந்து கொள்ளச் சொல்லி விடுங்கள்! மல்யுத்த அரங்கிற்கு கங்கா வரும்போது எந்த வித அலங்காரமும் இல்லாமல் வரவேண்டும். கங்காவின் அழகில் விசுவநாதன் மயங்க வழி வைத்துவிடக்கூடாது. எச்சரிக்கை புலவரே.” 

“நான் என்ன மூடனா தளபதியாரே! கங்காவை அலங் காரமே செய்யக்கூடாது என்று சொல்லப் போகிறேன். பைத்தியக்காரியைப் போல் தலைவிரி கோலமாகவே அவளை அனுப்பப் போகிறேன்” என்றார் துர்ஜதி. 

இதுவரை பலகணி வழியாக பார்த்துக் கொண்டிருந்த கங்கா ‘படார்’ என்று கதவைச் சாத்தினாள். 

துர்ஜதி வேகமாக நடந்து உள்ளே போனார். அங்கே கங்கா மயக்கமாகக் கிடந்தாள். 

”கங்கா! கங்கா என்னம்மா!” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் துர்ஜதி. அவர் உடல் நடுங்கியது. உள்ளம் ஆட்டங்கண்டுவிட்டது. விஷம் தீண்டியிருக்கக்கூடும் என்று நினைத்துச் சுற்று முற்றும் பார்த்தார். வெளியே சிங்கராயன் வேறு உட்கார்ந்திருக்கிறான். அது அவனுக்குத் தெரிந்தால் கோளாறு என்று ஒரு பக்கம் துர்ஜதி உள்ளம் ‘படக் படக்’ என்று அடித்துக் கொண்டிருந்தது. குடும்ப விவகாரம் அல்லவா! அதுவும் கன்னிப் பெண்ணைப் பற்றியது. ஓசைப்படாமல் இயந்திரம் போல் வேலை பார்த்தார் துர்ஜதி. மயக்கம் தெளிவிக்கும் மூலிகை கொடுப்பதற்காகக் கொல்லைப் பக்கமாகப் போக நினைத்தார். அதுவரை குப்புறக் கவிழ்ந்து கிடந்த கங்கா தலையை நிமிர்த்தினாள். 

“கங்கா! என்னம்மா!” 

“எனக்குப் பயமாக இருக்கிறது!” 

“என்ன பயம்? என்ன கங்கா உளறுகிறாய்?”

“என்னிடம் ஒன்று சொன்னீர்: தளபதியாரிடம் ஒன்று சொல்கிறீர்கள்.’ 

“பைத்தியம்! பைத்தியம்!” என்று பலமாகச் சிரித்தார் துர்ஜதி. அந்தச் சிரிப்பொலியில் உறுதியிருந்தது. கங்காவே அவருடைய நாடகத்தை நம்பிப் பயந்திருக்கும் போது சிங்க ராயன் நம்பாதிருக்க மாட்டான் என்ற எண்ணம்தான் துர்ஜதியாருக்கு! 

“கங்கா,நீ பேதை, இங்கிதம் தெரியாதவள். பசு நனையக்கூடாது என்று புலி வருத்தப்படுகிறது என்று சொன்னால் நான் நம்பி விடுவேனா கங்கா! தளபதிக்கு உன்னை அடைய ஆசை; உனக்கு விசுவநாதன் மீது தணியாப் பிரியம்! இதில் ஏதாவது ஒன்று நிறைவேறியாக வேண்டும். வழி எத்தனை இருந்தாலும் விடை ஒன்றுதான் கிடைக்கும். அதுவும் உனக்குப் பிடித்தமான விடையைக் காண நான் இருக்கிறேன்.நீ ஏன் அலட்டிக் கொள்கிறாய்? ஆசைக்கும் வெட்கத்திற்கும் உறவு இருந்ததில்லை. அதனால் சிங்கராயன் உளறுகிறார்” என்று துர்ஜதி மெதுவாகச் சொல்லி கங்கா வைச் சமாதானம் செய்து விட்டு முகப்பிற்கு போனார். அங்கே சிங்கராயன் புலவரின் வருகையை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். 

“என்ன புலவரே, அவசரமாகப் போனீர்களே!” 

”ஆம், கங்கா உங்களுக்காகச் சுவைமிக்க விருந்து தயாரித்திருக்கிறாள். உங்கள்பால் அவளுக்கு அளவு கடந்த அக்கறை,”- குழைந்து பேசினார் துர்ஜதி. 

“உண்மைதான், இதை நான் அறிவேன். என்ன இருந் தாலும், உங்களுக்கும் எனக்கும் இன்று நேற்று உறவா?” 

”பேஷ் …… வரவர அந்த உறவு நெருங்கி அல்லவா வருகிறது!” 

“வரவேண்டுமென்பதுதானே என் பிரார்த்தனை!” 

“வேள்வி வெற்றி பெற வித்தியாரண்யர் அருள் புரிவாராக” என்று வினயத்தோடு ஆசி கூறினார் துர்ஜதி. 

தளபதி சிங்கராயன் விடைபெற்றான். விடை பெறும் பொழுது, அவனது விழிகள் கங்கா உலவிய கொல்லைப் பக்கத்தை முற்றுகையிட்டன. கங்கா அப்போது அவளு டைய வெள்ளைப் பூனைக்கு குங்குமத்தால் நாமம் போட்டுக் கொண்டிருந்தாள். 


இரவு, பகல் எந்த நேரமும் மல்யுத்தப் போட்டியைப் பற்றியே சிந்தனை விசுவநாதனுக்கு. வெற்றி பெற்றவன் சாம்ராஜ்யத்தின் கவனத்தை கவர்வான். மன்னரின் மாறாத அன்புக்கு பாத்திரமாவான் என்பதை நினைத்து நினைத்து அவன் பூரிப்பெய்தினான். 

இரவு நேரம் – விசுவநாதன் அவனது வண்ணக்கூடாரத் தினுள்ளிருந்து யுத்தப் பயிற்சி செய்து கொண்டிருந்தான். மெல்லிய பட்டு விரித்தாற்போல் துங்கபத்திரை நதியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. 

காவல் கோபுரத்தின் மேல் மாடத்திலிருந்து காவல் காரன் சுழல் விளக்கு வைத்துக் கொண்டு தொலை நோக்கிய வண்ணமிருந்தான். கூடாரக் காவலர்கள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். இத்தனைக் கட்டுக் காவலர்களையும் மீறிக் கொண்டு ஒரு வாலிபன் அந்த முகாமுக்குள் நுழைந்து வெளியில் வந்தான். விசுவநாதனுடைய கூடாரம் எது என்று தெரியாமல்தான் அவன் அவ்வாறு அலைந் திருக்க வேண்டும். அவனுடைய இடுப்பிலே வாள் தொங்கியது.கால் உறைக்குள் கத்தி இருந்தது. 

வாலிபன், விசுவநாதன் கூடாரத்தருகே வந்து விட் டான். அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். காவல் கோபுரத்திலிருந்த காவல்காரனின் சுழல் விளக்கு திடீரென்று கூடாரங்களுக்கு மத்தியில் சுழலத் தொடங்கி திருட்டு வாலிபன்மீது விழுந்தது. அந்த மின்னல் வெளிச் சத்தில் காவல்காரன் கண்களில் வாலிபன் சிக்கிவிட்டான். அடுத்தகணம் கோபுரத்திலிருந்து கொம்பு முழங்கியது. மேலேயிருந்து குரல் கொடுத்தான். 

“விசுவநாதா கூடாரத்தருகே வேற்றாள் உலவுகிறது”. என்று காவல் கோபுரத்திலிருந்தவன் அறிவித்தான். அவ்வளவுதான் தரையில் கிடக்கும் தவளை மீது வானத்தில் பறக்கும் பருந்துகள் பாய்வது போல அத்தனை பேரும் விசுவநாதன் கூடாரத்தைச் சூழ்ந்து விட்டார்கள். 

அந்த வாலிபன் ‘குபீர்’ என்று விசுவநாதன் கூடாரத் திற்குள்ளேயே நுழைந்து விட்டான். அதுதான் விசுவநாதன் கூடாரமென்று அவனுக்குத் தெரியாது. உள்ளே எண்ணெய் தோய்ந்த உடம்புடன் மல்யுத்தப் பயிற்சியிலிருந்த விசுவ நாதன் புலிப்பிடியாகப் பிடித்து அந்த வாலிபனை ஒரு சுழற்றுச் சுழற்றினான். அவன் சுருண்டு புரண்டு முலையில் போய் விழுந்தான். அந்தக் கலவரத்தில் வாலிபன் கையிடுக்கிலிருந்த ஒலை கீழே விழுந்து விட்டது. விசுவ நாதன் ஓலையை எடுத்துப் பிரித்தான். 

“இனிய விசுவத்திற்கு, 

நமது தலைநகரத்தில் இரண்டாவது நூற்றாண்டு நிறைவு விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காகப் பல நகரங்களிலிருந்தும் வீரர்கள் வந்திருக்கிறார்கள். தாங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டால் என்னை இழந்தவ ராவீர்கள்.தங்களை வெல்ல யாருமில்லை. நீங்கள் வென்றால் அரசாங்கத்தின் நிபந்தனைப்படி ஒரு குமரிப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள நேரிடும். அதை என்னால் சகித்துக் கொள்ள முடி யாது அத்தான். நம்முடைய காதல் ஈடேற வேண்டு மென்று தங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது. 

தங்கள் உயிர்க் காதலி, 
துங்கபத்திரை. 

விசுவநாதனின் உள்ளத்தை இந்தக் கடிதம் கிள்ளி எடுத்தது. விசுவநாதன் நிமிர்ந்து பார்த்தான். அங்கே அந்த வாலிபனைக் காணவில்லை.இவ்வளவு பாதுகாப்பையும் விழுங்கிவிட்டு, அந்த வாலிபன் தப்பித்து விட்டான். விசுவநாதன் கோபத்துடன் கூடாரத்திற்கு வெளியே வந்து கைவிளக்கைத் தலையில் வைத்துக் கொண்டு சுற்றினான். அந்த வாலிபன் ஆற்றோரமாக ஓடிக்கொண்டிருந்தான். வெகு தூரத்தில் குதிரை ஒன்று நின்றுகொண்டிருந்தது. விசுவநாதன் உடனே அவனுடைய வெண்புரவியில் ஏறினான். முன்னும் பின்னுமாகக் குதிரைகள் பறந்தன. 

வாலிபனின் குதிரை வெகு தூரம் எட்டிவிட்டது. விசுவநாதன் முகாமுக்குத் திரும்பிவிட்டான். வழியெல்லாம் அவன் மனம் தத்தளித்தது. கரை தெரியாமல் திணறினான். கடிதத்தில் கண்ட வாசகங்கள் அவனை உறுத்திக்கொண்டிருந்தன. 

போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால் நிபந்தனைப்படி ஒரு குமரிப்பெண்ணை மணந்துகொள்ள வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது நியாயமாகப்பட்டதால் அது விசுவநாதனைப் பெருமூச்சு விடத் தூண்டியது. அதே நேரத்தில் ஆருயிர் நண்பன் அரியநாதன் செய்துவிட்டுப்போன போதனை விசுவநாதன் தலையில் பெரும் பாரமாகச் சேர்ந்து கிடந்தது. “மன்னர் உன் வெற்றியை எதிர்பார்க்கிறார்; உனக்குப் பொன்னா பிஷேகம் செய்து போற்றிப் புகழத் துடிக்கிறார். தவற விட்டு விடாதே!” என்று அவன் உணர்த்திய உற்சாகப் பேச்சு ஒரு பக்கம் போதையேற்றி வைத்திருந்தது. 

குதிரை முகாமுக்குள் வந்துவிட்டது. விசுவநாதன் உள்ளம் நிலைபெறவில்லை. 


விஜயநகரப் பேரரசின் இரண்டாவது நூற்றாண்டு நிறைவு விழா! நகரம் புதுப் பொலிவு பெறத் தொடங் கியது. இல்லங்களும் உள்ளங்களும் குதூகலித்திருந்தன. அரண்மனை மாடத்தில், ஆலயத்துக் கோபுரத்தில், போர்க் களத்தில் ஆர்த்தெழுந்து பலியான அடலேறுகளின் கல்லறை களில் விளக்கொளி நிறைந்தது. விஜயநகரப் பேரரசின் இரண்டாவது நூற்றாண்டு நிறைவு விழாவை அவ்வளவு சிறப்பாகக் கொண்டாடிக் களிப்பெய்தினார்கள். அரசாங்கம் செல்வத்தை மழைபோல் அள்ளிச் சொரிந்தது. சக்கர வர்த்தி ராயர் தனிப்பெரும் ஆனந்தத்தில் திளைத்திருந்தார். அந்த ஆனந்தம், ராஜ்ய மக்கள் அவர் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பைத் தெளிவாக்கியது. மன்னர்தான் என்றாலும், மக்களுக்கு அவர் மகேசுவரனாகவே விளங்கினார். திருவிழாக் காலத்தில் அவருடைய ஒவ்வொரு எண்ணங் களும், திட்டங்களும் மக்களின் புன்னகையை ஒட்டியே சுழன்றன. அதைப்போலவே ஒவ்வொரு வீடும் இன்பப் பெருவெள்ளத்தில் மிதந்தது. அதுவும் கன்னிப் பெண்கள் உள்ள வீடுகள் மணவீடுகளாகவே அலங்கரிக்கப்பட்டிருந் தன. ஒவ்வொரு வீட்டுப் பெரியவர்களும், மல்யுத்தப் போட்டியில் வெற்றிபெரும் வீரன் தங்கள் தங்கள் பெண் களைத் தேர்ந்தெடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற நினைப்பில் வீடுகளைப் புதுப்பித்து வைத்திருந்தனர். 

எத்தனையோ களியாட்டங்கள் நடைபெற்றன. நாடகம், நாட்டியம், செப்படிவித்தை, களைக்கூத்து, சிலம்பு விளை யாட்டு இப்படிப் பலவிதம். ஆனால் மக்கள் அனைவரும் குடும்பம் குடும்பாக மல்யுத்த அரங்கிற்குத்தான் திரண்டு கொண்டிருந்தார்கள். விஜயநகர அரசு அந்தப்போட்டியை வெறும் வீர விளையாட்டாக மட்டும் ஏற்பாடு செய்யவில்லை. அதில் குடும்பங்களின் இணைப்பையும் ஏற்படுத்தியிருந்தது. சிறைப்பட்டுக் கிடந்த சித்திரப் பைங்கிளிகளின் எதிர் காலமும் ஜோடிக்கப்பட்டிருந்தது. 

சக்கரவர்த்தி ராயர் வண்ணமேடையில் வெள்ளிக் குறிச்சியில் வீற்றிருந்தார். அஷ்டகஜங்கள் அரண்மனை மரியாதைக் குரியவர்களின் ஆசனங்களில் அமர்ந்திருந்தார்கள். கண்ணைக் கவரும் வனப்புடன் கன்னிப் பெண்கள் ஒருபுறம் – மின்னலைப் போன்ற மேனியுடன் கூடிய மல்யுத்த வாலிபர்கள் மற்றொருபுறம். அரியநாதன் மன்னருக்கருகில் நின்று கொண்டிருந்தான். முதலில் சிங்கராயனை தளபதிக் குரிய ஆசனத்தில் காணவில்லை. ஆம்; அவன் தாமதமாக வந்தான். கன்னிப் பெண்களின் நுழைவாயிலில் நின்று அவன் குறிப்பெடுத்துக் கொண்டிருந்துவிட்டு அப்போது தான் களத்திற்குள் நுழைந்தான். 

திடீரென்று மண்டபத்தில் கடல் அலைபோல் கையொலி எழுந்தது. அழகிய ரோஜா நிறப்பட்டு உடுத்தி விசுவநாதன் பார்வையாளர் பகுதியில் வந்துகொண்டிருந்தான். மன்னர் முகத்தில் இன்பக் குறி முளைத்தது. குமரிகளின் பூங்காவில் குமிண்சிரிப்பும், இதழ்விரிப்பும் தென்பட்டன. துர்ஜதியின் தவப் புதல்வி கங்கா கண்ணிலாடும் பாவையாய், கருத்தில் மிதக்கும் அச்சுப் பதுமையாய் அரங்கத்தை விழுங்கிக் கொண்டிருந்தாள். கோடானகோடிக் கண்கள் அவளைத் தொட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அவள் கண்கள் மட்டும் தென்திசையை வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அந்தத் திசையில்தான் விசுவநாதன் இருந்தான். இதைக் கண்டு சிங்கராயன் உள்ளம் தீக்குழம்பாய் இருந்தது. 

போட்டி நடந்துகொண்டிருந்தது. யார்யாரோ யுத்தம் புரிந்தார்கள். வலுவிழந்து, நம்பிக்கை இழந்து தோற்றவர் களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருந்தது. தோற்றத் தைக் காட்டித் தோகை மயில்களின் கவனத்தை ஈர்த்தவர்க ளெல்லாம் கேலிக் கூத்துக்காளானார்கள். 

போட்டி முடிவுறும் கட்டத்திற்கு வந்துகொண்டு இருந் தது. நீர்யானை என்ற திடகாத்திரமுள்ள வீர வாலிபனொரு வன் வெற்றிமேல் வெற்றி பெற்றுக்கொண்டு வந்தான். அவனுடைய அற்புதமான போர்ப்பயிற்சி அரங்கத்தையே மெய் சிலிர்க்க வைத்தது. 

கடைசிக் கட்டத்தில் இன்னொருவன் கிளம்பினான். அவன் புதியவன். ஆனால் புஜபலம் மிக்கவன். அவன் பெயர் முதலை. 

நீர்யானைக்கும் முதலைக்கும் கடும்போர் நிகழ்ந்தது. அரங்கமே இரண்டு கட்சிகளாகப் பிரிந்துவிட்டது. மன்னர் முதலைக் கட்சி. மற்றவர்கள் நீர்யானைக் கட்சி. சபையில் ஓயாத சலசலப்பு. நல்ல தருணத்தில் நீர்யானையை முதலை மடக்கிவிட்டான். நீர்யானையால் எழுந்திருக்க முடிய வில்லை.சேவகர்கள் மயக்கமுற்றுக் கிடந்த நீர்யானையை அப்புறப்படுத்தினார்கள். நீர்யானையை வென்ற முதலைக்குத் தலையில் முடியில்லை. மொட்டைத் தலை. பார்ப்பதற்கு மூர்க்கனைப் போல் தென்பட்டான். அவன் சபை முன் வந்து நின்றான். சபையினர் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

விசுவநாதன் உற்சாகத்தோடு மல்யுத்தத்தைக் கவனித் துக்கொண்டிருந்தான். அவனுடைய கையும், காலும் அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. களத்தில் குதித்து விடக்கூட அவன் எண்ணினான். முதலையைச் சவாலுக்கு அழைக்கக்கூட விரும்பியதுண்டு. அவன் உடல் முழுதும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து நின்றது. நரம்புகள் முறுக்கு வீட்டு நின்றன. ஆனால், அந்தக் கடிதம் வாலிபன் கொண்டுவந்து தந்த கடிதம் – விசுவநாதனை தணலில் புழுவாக்கி வேடிக்கை பார்த்தது. 

மன்னர் முடிவு அளக்கக் கூடிய நேரம் வந்தது விசுவநாதன் அடிவயிற்றில் நெருப்பிட்டதைப் போல் அவனுடைய வடவெல்லை முகாமிலிருந்து, காவல் கோபுரக் காவலன் கொம்பை ஊதினான். வடக்கு எல்லைக்கு பீஜப்பூர் சுல்தான் ஆபத்து வந்துவிட்டது என்று விசுவநாதன் முடிவுகட்டி விட்டான். எந்தக் காரியத்தையும் தருணம் பார்த்துச் செய்வதிலே கைதேர்ந்தவன் பீஜப்பூர் அடில்ஷா. திடீரென்று விஜயநகரை முற்றுகையிட்டு விட்டதாக விசுவநாதனுக்கு நினைப்பு. தீச்சுட்டவனைப் போல் எழுந்து முகாமிற்கு விரைந்தான். 

காவல் கோபுரத்தின் கொம்பு மீண்டும் மீண்டும் ஒலித்தது. 

விசுவநாதன் குதிரையில் காற்றாய்ப் பறந்தான். 

முகாம் தூங்கிக் கொண்டிருந்தது. குதிரைகள் லாயத்தில் அமைதியாகநின்று கொண்டிருந்தன. எந்த அரவமும் தென் படவில்லை. விசுவநாதன் முகாமை மூன்று முறை சுற்றினான். இறுதியாக காவல் கோபுரத்தின் வாயிலில் நின்று அண்ணாந்து பார்த்தான். இரண்டு உருவங்கள் மேலே நின்றன. வாளை உறுவிக்கொண்ட விசுவநாதன் கோபுரத் திற்குச் சென்றான். அங்கே அவன் கண்ட காட்சி அவனையே துணுக்குற வைத்துவிட்டது. அன்று கடிதம் கொண்டுவந்த அதே வாலிபன்’ திண்ணையில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந் தான்! காவல் கோபுர பொறுப்பாளன் உத்தண்டி அவனுக்கு எதிரே கைட்டி நின்றான். 

”உத்தண்டி! என்ன இது?” 

உத்தண்டி எச்சிலை விழுங்கிக் கொண்டே விசுவ நாதனுக்கு ஜாடை காட்டினான். விசுவநாதனுக்கு அது விளங்கவில்லை. 

விசுவநாதனின் வீரக்கனல் கண்டு வாலிபன் இளஞ் சிரிப்பைத் தெளித்தான். உத்தண்டிக்கும் சிரிப்பு வந்து விட்டது.அக்கினிப்பிழம்பானான் விசுவநாதன்.உத்தண்டியை ஓங்கி அறைந்து கீழே தள்ளினான். உத்தண்டி படிக்கட்டில் உருண்டான். திண்ணையிலிருந்த வாலிபன் ‘வீல்’ என்று கதறித் தரையில் சாய்ந்தான்; அவன் தலைப்பாகை அவிழ்ந்தது. 

“துங்கபத்திரா” – கூவினான் விசுவநாதன். 

அவள் சிரித்தாள். கல்லிக்குருவிகளின் கூட்டுக் கத்தலைப் போல் அவள் பலமாகச் சிரித்தாள். 

விசுவநாதன் தாவி ஓடிப் படிக்கட்டில் கிடந்த உத்தண் டியைத் தூக்கி முகம் துடைத்துத் தேற்றினான். அவன் இப்போதும் சிரித்தான். ரத்தக்காயத்தோடு சிரித்தான். விசுவநாதன் அவனை அணைத்துக் கொண்டே மேலே வந்து படுக்க வைத்தான். இளவரசி அவனுக்குத் துணைபுரிந்தாள் 

“ஏன் இந்த வேஷமெல்லாம்?” 

”வேஷமில்லாமல் இங்கே எப்படி நுழைய முடியும்? நான் வாலிபன் வேடத்தில் வந்ததால்தான் அந்தப்புரத்தி லிருந்து வரமுடிந்தது.”

“நேராக இங்கு ஏன் வந்தாய்? போட்டி நடந்துகொண்டி ருக்கும் போது நான் இங்கே இருக்கமாட்டேன் என்பது தெரியாதா?” 

துங்கபத்திரையிடமிருந்து பதில் இல்லை. விசுவநாதன் நிமிர்ந்து பார்த்தான். அவள் முகம் கருகி இருந்தது. 

“ஏன் துங்கா?” 

“நீங்கள்? அந்தக் களத்திற்கே போயிருக்க மாட்டீர்கள் என்றுதான், நான் திடமாக நினைத்து வந்தேன். அதனால் இங்கு வரவழைப்பதற்கு இந்த எச்சரிக்கைக் கொம்பை ஊதினேன். நானே ஊதினேன். எவ்வளவோ கெஞ்சினேன். உத்தண்டி மறுத்துவிட்டான். ஊதினால் மன்னரே வந்து விடக்கூடுமென்று என்னை மிரட்டிவிட்டான்.” 

“இவ்வளவு தைரியமாகப் பகல் நேரத்தில் வந்த நீ அன்று ஏன் கடிதத்தைக் கொடுத்துவிட்டு ஓடவேண்டும்.” 

“அன்று எல்லைக் காவலர்கள் மத்தியிலும் அகப்பட்டுக் கொள்ள இருந்தேன். அகப்படாமல் தப்பிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அன்று மட்டும் அகப் பட்டிருந்தால் என் வேடம் அம்பலமாகி இருக்கும். அந்தப்புரம், அரண்மனை எல்லாம் பரவி இருக்கும்.” 

”உன்மேல் எனக்கு வெகுநாளாகக் கோபம்.முன்பு ஒரு முறை என்னை அந்தப்புரத்திற்கு வரச்சொல்லி ஏமாற்றி விட்டாய் அல்லவா! நன்றாக நினைத்துப் பார்.” 

“இல்லை, நீங்கள் மறதியாகச் சொல்கிறீர்கள். ஒரு தடவை கூட நான் உங்களை அந்தப்புரத்திற்கு வரச் சொல்லவே இல்லை.” 

“துங்கா!” 

”கேலி செய்கிறீர்கள்…என்ன யோசிக்கிறீர்கள்?” 

“இரு! ஏதோ நமக்குத் தெரியாமல் ஒரு கபட நாடகம் நடந்துகொண்டிருக்கிறது. உன் முத்திரையிட்டு அனுப்பிய ஒலைகூட என்னிடம் இன்னும் அப்படியே இருக்கிறது. சரி, நீ மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும், நீ யார் மூலமாகவும் ஓலை அனுப்பாதே, நானும் அப்படித்தான்”. 

பகல் மங்கிக்கொண்டு வந்தது. துங்கபத்திரை தலைப் பாகையைச் சரிசெய்து கொண்டாள். கோபுரப் பொறுப் பாளர் உத்தண்டிக்கு இந்தக் காட்சிகளெல்லாம், பெரும் புதிராக இருந்தது. மண்டைக் காயத்தைக்கூடப் பெரிதாக எண்ணவில்லை.நிச்சயமாக தனக்குப் பதவி உயர்வு இருக்கிறது என்று தீர்மானித்துவிட்டான். அடிமைகளின் முன்னேற்றம் உண்மையான உழைப்பில் இல்லை உயர் அதிகாரிகளின் பலவீனத்தைத் தெரிந்து கொள்வதில்தான் இருக்கிறது.உத்தண்டி இதை உணர்ந்து கொண்டான். அதனால்தான் அவன் காயத்தைச் துச்சமென மதித்தான். வேதனையைச் சுவைத்து அனுபவித்தான். 


மல் யுத்தக் களத்தில் முதலை வெற்றி வீரனாக நின்றான். இறுதி வெற்றி அவனுக்குத் தான் கிடைத்தது. பரிசு கொடுக்கும் நேரம் வந்தது. சபையில் அமைதி. ஊசி விழுந்தால் ஓசை கேட்கும்; அவ்வளவு அமைதி. பெண்கள் பகுதியில் சோகம் படையெடுத்து நின்றது. அழகுள்ள பெண்களின் முகங்கள் சோகம் அடைந்திருந்தன! அவர் களில் சிலர் முகத்தைக் கோணவைத்துக் கொண்டார்கள். வேறுசிலர் கண் மையை கன்னமுழுதும் இழுகிக் கொண்டு கோரமாகத் தோன்றினார்கள். பட்ட மரத்துக் கழுகைப் போல் துர்ஜதி கங்கா பக்கமாகக் கழுத்தைத் திருப்பினார். கங்கா மகுடாபிஷேகத்திற்குரிய மகாராணியைப்போல் அலங்காரமாக இருந்தாள். துர்ஜதி முகத்தைச் சுழித்தார். கங்கா உனக்குப் புத்தியில்லை’-என்று இடித்துரைப்பது போல் இருந்தது அந்தச் சுளிப்பு. கங்கா புரிந்துகொண் டாள். கூட்டத்தில் அவள் எவ்வளவு அழகாக விளங் கினாளோ அவ்வளவு குரூபியாக மாறினாள். கண்களைக் கசக்கி குருவி ரத்தம் போல் ஆக்கிக்கொண்டாள். நெற்றி யிலிருந்த சாந்துப் பொட்டை மூக்கு நெடுக வடியவிட்டாள். பார்ப்பதற்குப் பேய் பிடித்தவள் போல் இருந்தாள். துர் ஜதிக்கு அப்போதுதான் உயிர் வந்தது. தானே சிரித்துக் கொண்டார். 

சபை, நிகழ்ச்சித்தொடரை ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தது. பின்னால் இருந்தவர்களெல்லாம் முண்டி அடித்துக் கொண்டு முன்னால் வந்தார்கள். கூச்சலும், குழப்பமும் அதிகரித்தன. குழந்தைகள் கதறின. பேரிரைச் சலால் மன்றமே தெப்பம் போல் ஆடி அசைந்தது. 

பெத்தன்னா எழுந்தார். எந்த அரசுக் காரியத்தையும் அவர்தான் துவக்கி வைப்பவர். பொறாமைக்கும் போட்டிக் கும், தீனியாகிவிடாத பெருந்தகையாக அவர் விளங்கினார். 

“அறம் வாழ்க! அரசு வாழ்க! வளம் செழிக்க! வாழ்வு மலர்க!” என்று பெத்தன்னா அரசாங்கத்தின் சார்பில் உரையைத் தொடங்கினார். சபை தூங்கும் குழந்தை போல் அமைதியாகச் சுவைத்தது. 

முதலை கம்பீரமாக நின்றான். மேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிலவைப் போல் அவன் விழிகள் பெண்கள் பக்கம் படம் பிடித்துக் கொண்டிருந்தன. 

பெத்தன்னா பேசினார்; “விஜயநகரப் பேரரசால் மல்யுத்த வீரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலை, இங்கே மன்றத் தில் கூடியிருக்கும் கன்னியரில் யாரையேனும் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்துத் தனக்குத் துணைவியாக வைத்துக்கொள்ள நமது அரசாங்கம் அவருக்கு அனுமதி அளிக்கிறது.”- சொன்னார். 

மன்றம் முதலையின் முகத்தைப் பார்த்தது! முதலை சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஏளனம் விளையாடியது. வெகு அலட்சியமாகப் பேசினாள். 

“அவள் இல்லை. நான் விரும்பியவள் இல்லை. அந்த அழகியைக் காணோம்” என்றான் முதலை. 

அப்போது ஒரு அழகிய பெண் மன்னருக்குப் பின் வரிசையில் வந்துகொண்டிருந்தாள். முதலை அந்தக் காட்சியைப் பார்த்தான். பைத்தியம் பிடித்தவனைப் போல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான். 

“வந்துவிட்டாள் என் மனைவி வந்து விட்டாள், அதோ அவள்தான்! சக்கரவர்த்தி ! அந்தப் பெண்ணைத் தாருங்கள்” என்று கூச்சலிட்டான். 

சபை அந்தப் பக்கம் திரும்பியது. அரசகுமாரி துங்கபத்திரைதான் மன்னருக்குப்பின் நடந்து வந்து கொண் டிருந்தாள். அனைவரும் திகைத்தார்கள். ‘ராஜகுமாரியா?’ என்று கூடச் சிலர் வாய்விட்டுக் கத்திவிட்டார்கள். மன்னர் முகத்தில் இருள் சூழ்ந்தது. அஷ்ட கஜங்களும் பெருமூச்சு விட்டார்கள். பெரியவர்கள் பலர் கண்ணைக் கசக்கினார்கள். இத்தனைக்கும் முதலை கலங்காமல் நின்றான். அவன் முகத்தில் களை தட்டி நின்றது. 

தாக்குண்ட சிங்கம் போல் மன்னர் அசைந்தார்; பின் எழுந்தார். 

“வீரன் கேட்டதில் தவறில்லை. நமது கொற்றம் நிலைக்க வேண்டுமென்றால் நாம் அவன் விருப்பத்தில் தலையிடக் கூடாது. நமது நிபந்தனையில் அரசகுமாரிக்கு விதிவிலக்கு அளிக்கவில்லை. ஆகையால் முதலை கேட்டது முற்றிலும் சரி. நாம் ஏற்றுக் கொள்ளத்தக்கது” என்று மன்னர் தளதளத்த குரலில் கூறினார். 

பெத்தன்னா குறுக்கிட்டுப் பேசினார். 

“மன்னர் என்னை மன்னிக்க வேண்டும். எந்த நாட்டிலும் எந்தச் சட்டமும் அரசகுடும்பத்தைப் பாதிக்காது. அரசகுமாரி அரசகுமாரனைத்தான் மணக்க வேண்டும்” என்றார். 

துர்ஜதியின் முகம் பழுத்தது. கண்கள் ரத்தம் போல் மின்னின. 

“பெரும் புலவர் பெத்தன்னா அவர்கள் கூற்றில் ராஜ விசுவாசம் இருக்கிறது. ஆனால் மன்னர் மகளை முதலைக்குக் கொடுப்பதனால் மன்னருக்கும், நமது சாம்ராஜ்ஜியத்திற்கும் பெரும் புகழ்ச்சி கிடைக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. மன்னர் கடவுளவதாரம் அல்ல என்பதை விஜய நகரம் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் நமது மக்கள் கடவுளாக மதிப்பார்கள்!” 

துர்ஜதி பேசிக்கொண்டே போனார். 

“துர்ஜதியார் பேசுவதில் நீதி இல்லை. பரம்பரை வழக்கத்தை மீறலாகாது.”- பெத்தன்னா சொன்னார். 

“வழக்கம் மனிதனால் வகுக்கப்பட்டதுதான்! நிபந்தனைப் படி துங்கபத்திரை முதலைக்கு உரியவராவார்.” – துர்ஜதி கர்ஜித்தார். 

“நான் இதை ஆட்சேபிக்கிறேன்.”- மீண்டும் பெத்தன்னா குறுக்கிட்டார். 

“ஆட்சேபனையை அரங்கம் ஏற்க வேண்டும். அப்போது தான் விஜயநகரத்தின் எதிர்காலம் சோபிக்கும்”  என்று அதற்குப் பதில் அளித்தார், துர்ஜதி. 

யாரும் எதிர்பார்க்கவில்லை. பெண்கள் பகுதியிலிருந்து ஒரு தனிக்குரல் ஒலித்தது.’இளவரசியார் முதலைக்குச் சேர வேண்டியவர்தான். மன்னர்பிரான் இதில் தவறினால் விஜய நகரத்திற்கே பெரும் அபகீர்த்தி ஏற்பட்டு விடும். இளவரசி யும் விஜயநகரப் பிரஜைதானே!” என்றது அந்த குரல். 

துர்ஐதி தனக்கொரு துணைக்குரல் கிடைத்தது என்ற பூரிப்பில் அந்தப் பக்கமாகத் திரும்பினார். அலங்கோல உருவில் கங்கா பேசிக்கொண்டு நின்றாள். பேசுவது துர்ஜதியின் மகள் என்று சிங்கராயன்கூடக் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு அவள் சீர்கெட்டுத் தோன்றினாள். 

கங்காவின் எண்ணத்தை மற்ற பெண்கள் ஏற்கவில்லை. 

“முடியாது இளவரசியை அடைய முதலைக்குத் தகுதி இல்லை” என்று பெருங்கூச்சல் எழுந்தது. 

மன்னர் எழுந்தார். சபைக்கு ஆறுதல் சொன்னார்: “உங்கள் மன்னன் நீதி தவறி நடக்கமாட்டான். இதோ அவைப் பெரும் புலவர்கள் இருக்கிறார்கள். அமைச்சர் குழு இருக்கிறது. இவர்களெல்லாம் கூடி முடிவு செய்வதை நான் மீறமாட்டேன். நீங்கள் அமைதி பெறுங்கள். நாட்டை வாழ்த்திக் கலையுங்கள். நாளை மாலை அஸ்தமனத்திற்கு முன் முடிவு அறிவிக்கப்படும்” என்று அடக்கமாகப் பேசினார். 

இரவோடு இரவாக ஆய்வுக் குழு கூடியது. மன்னர் அவர்களுக்கு நிலமாக விளங்கினார். அரிய நாதர் மன்ன ருக்கு உடைவாளாக அருகே நின்றார். 

பெத்தன்னாவுக்கும், துர்ஜதிக்கும் வாக்கு வாதம் ஓய வில்லை. மன்னர் தலை சுழன்றது. மற்றவர்களும் குழம்பித் தவித்தார்கள், இறுதியாக மன்னர் பேசினார். 

“விஜயநகரப் பிரஜைதான் போட்டியில் கலந்து கொள்ளத் தகுதியுடையவர்கள் என்று நாம் அறிவித்திருக் கிறோம். இப்போது வெற்றி பெற்றிருக்கும் முதலை நம் ராஜ்ஜியத்தில் எந்தப் பகுதி, என்ன முகவரி?” என்பதைச் சபை ஆராய வேண்டுகிறேன். 

“முதல் கோட்டை. இல்லத்து எண் இருபத்து நான்கு” என்றார் அரண்மனைக் கணக்காயர். 

துர்ஜதி சிரித்தார். “மன்னர் எண்ணப்படி பார்த்தாலும் முதலை விஜயநகரப் பிரஜைதான்” என்று கூறிவிட்டு சிங்கராயன் பக்கம் திரும்பினார். அவரும், அவனும் ஒரே கட்சியல்லவா? சிங்கராயன் முகம் மலர்ந்திருந்தது. 

பெத்தன்னா கேட்டார். “என்ன சிங்கராயரே, துர்ஜதி யார் கருத்துக்கு என்ன சொல்கிறீர்கள்?” 

“நான் துர்ஜதியார் கட்சிதான்” என்றார் சிங்கராயர். 

பெத்தன்னா துடித்துப் போனார். உடல் நடுங்கிற்று. சபை விம்மிக் கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

தெனாலிராமன் பைத்தியக்காரனைப் போல் பலமாகச் சிரித்துக்கொண்டு ஆய்வு மன்றத்திற்குள் நுழைந்தான்; பெத்தன்ன ஆத்திரப்பட்டார். 

“தெனாலி! தெரியாது உமக்கு! இங்கே சபை நடக்கிறது! இது விகடக்கச்சேரி அல்ல” என்று செந்தணல் சிந்தினார் பெத்தன்னா. 

தெனாலிராமன் வாய்க்குள் சிரித்தான். பொங்கி எழுந்த கோபத்தை அந்த மோகனச் சிரிப்பு ஜீரணித்துவிட்டது. 

”அவசரப்பட்டு விட்டீர்கள் தலைவரே, இந்த ராமகிருஷ் ணன் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொண்டான். புரியாது பலருக்கு!எனக்கு வந்த அடங்காக் கோபத்தை நானே சிரித்து மறக்கடித்துக் கொள்ள எத்தனித்தேன். அவ்வளவுதான்!” என்றான் தெனாலி. 

சபை புரியாமல் விழித்தது. 

“சற்று முன்பு கணக்காயர் தெரிவித்த மல்யுத்த வீரரின் முகவரி என் வீட்டு முகவரி. என் இல்லத்தில் முதலையைப் போல் அப்படி ஓர் ஆள் யாரும் இல்லை” – அடக்கத்தோடு தெரிவித்தான் தெனாலிராமன். 

மன்னர் திகைத்தார். பெத்தன்னா வெட்கத்தால் கூனிப் போனார்; குறுகிப் போனார். 

“முதலை விஜயநகரப் பிரஜையல்ல; யாரோ இனம் தெரியாத அன்னியன் அவன். நமது அரசியல் அறிவிப்புப் படி, முதலை அந்நியனானதால் நமது இளவரசியை பந்தயப் பொருளாகத் தருவது முறையற்றது அது. நீதியுமாகாது’ என்றான் அரியநாதன் திடீரென்று. அதை ஆதரிப்பதைத் தவிர சபைக்கு வேறு மார்க்கம் தெரியவில்லை. சக்கரவர்த்தி ராயர் அவருடைய மௌனத்தால் தனது பெருந்தன்மையை நிலை நாட்டினார். 


பொழுது புலரப் போகிறது; கீழ்வானம் வெளுத்து விட்டது. சக்கரவர்த்தி ராயர் அப்படி ஒரு துயரச் சேதி காத்திருக்குமென்று எதிர் பார்க்கவில்லை. அதிகாலையில் அவரை எழுப்பிய அரியநாதன் இளவரசி காணாமல் போன தகவலை அவர் காதில் போட்டான். மன்னருக்கு குடல் ஆடிப் போய்விட்டது. கண் விழிகள் பிதுங்கிவிட்டன. கனவு கண்ட ஊமையனைப்போல் விழித்தார். எளியோர் துயரை துடைக்கலாம்; ஆறுதல் கூறலாம். மன்னவன் துயரை யாரால் துடைக்க முடியும்? ஆறுதல் கூறுவதற்குக்கூட துணிவும் நம்பிக்கையும் வேண்டுமல்லவா? 

பூமி பிளப்பது போல் – வானம் இடிந்து விழுவதுபோல் மனப்பிராந்தி பிடித்திருந்த மன்னரை அப்போது அங்கு நுழைந்த துர்ஜதியின் குரல் இழுத்தது. 

“அரசுக்கு அகௌரவம் வந்துவிட்டது புலவரே; ராஜ் ஜியத்தில் வாழ்வு இருந்து, வளம் இருந்து என்ன பயன்? இப்போது மானம் போய்விட்டது. பொருள் சம்பாதித்து விடலாம்; தேசத்தைச் சம்பாதித்துவிடலாம்; பெருமை போய் விட்டதே, இதை எப்படிச் சம்பாதிக்கப் போகிறேன்? இளமை அழிந்துவிட்டால் கூட தென்னாட்டவர்கள் வருத்தப் படமாட்டார்கள். ஆனால் மானம் போய்விட்டால் துடித்துப் போய்விடமாட்டார்களா? எட்டுத் திக்கிலும் என் புகழ் இருந்தென்ன? கொட்டு முரசு கொட்டி நாடு வாழ்ந் தென்ன? பட்டுப் பூச்சி போல் மக்கள் நெறி தவறாது உழைத் தென்ன? எல்லாம் இன்றோடு பாழ்!”…மன்னர் கண்ணீர் வடித்தார். அவர் உடல் படபடத்தது. உதடுகள் துடித்தன. 

“ஆறுதல் பெறுக சக்கரவர்த்தி! அன்னை துங்கபத்திரை கிடைத்து விடுவார்” என்று சாந்தமாகக் கூறினார் துர்ஜதி. அவர் முகத்தில் மர்மம் சுழன்றது. கண்கள் அந்த அறையை முற்றுகையிட்டன. மன்னர் அவர் நிலையைப் புரிந்து கொண்டார். 

”துர்ஜதியாரே, தைரியமாகச் சொல்லுங்கள். இங்கு வேறு யாருமில்லை. அரியநாதன் நம்மவன்தான். அந்தரங் கத்தைக் காப்பதில் உத்தமன்!” என்றார் மன்னர். ஆனால் அவர் ஒருபோதும் இப்படித் தாழ்ந்து பேசியதில்லை. 

“சக்கரவர்த்தி நான் சொல்லப் போவதை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி. என் மீது கோபப்பட்டால் கூட நான் வருந்தப் போவதில்லை. எனக்குத் தங்கள் மீதும் இந்த ராஜ்ஜியத்தின் மீதும் உள்ள தணியாத பாசத்தினால் நான் உண்மையைத் தெரிவிக்கத் துடிக்கிறேன். இதுவரை என் வாழ்நாளில் நான் போட்ட கணக்கு தப்பியதே இல்லை! இன்று இந்த நாட்டின் எதிர்கால அன்னையாக விளங்க வேண்டிய இளவரசியைக் காணவில்லை என்று அரண்மனை முழுதும் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில்கூட நான் உண்மையை வெளியிடாவிட்டால், பிறந்த நாட்டுக்குத் துரோகம் செய்தவனாகிவிடுவேன். இத்தனை காலமும் நான் ஆற்றிய தொண்டுகளனைத்தும் விரயமாகிவிடும்…” – துர்ஜதி நிறுத்தவில்லை. தொண்டை நோகப் பேசிக்கொண்டே போனார். 

”புலவரே, புதல்வியைக் காணாமல் இதயம் துருப் பிடித்து வருகிறது, நடந்ததைத் தெரிவியுங்கள்.” மன்னர் புழுவாகத் துடித்தார். 

“வல்லவர், வெள்ளை மனத்தினன், பகைப் புலத்தைத் தூளாக்குவதில் அவன்தான் விவேகசிந்தாமணி என்றெல் லாம் வர்ணித்தீர்களே விசுவநாதனை, அவன் செய்த தீவினை தான் மன்னவரே இன்று திக்கெட்டும் நம் கீர்த்தியை அழித்துவிட்டது !” – துர்ஜதி நெருப்புக் கோழியானார். 

“துர்ஜதி! இதெல்லாம் என்ன பேச்சு! பிளந்த புண்ணில் மிளகாயைத் தூவாதீர்! யாரைப் பற்றி யாரிடம் பேசுகிறோம் என்பதை அறிந்து பேசும்!” – மன்னர் எதிர்ப் பாட்டுப் பாடினார். 

”மன்னா!” – இரைந்தார் புலவர். 

“போதும்! உண்மை ஏதாவது தெரிந்தால் கூறும்!” மன்னர் துண்டித்துப் பேசினார். 

”சக்கரவர்த்தி, ஏழை சொல் இது. ஆனால் அம்பல மேறியே தீரும்! தோளிலிருந்து செவியைக் கடிப்போனைத் துல்லியதமாகக் கூறிவிட்டேன். பாலில் நஞ்சு கலக்க அவன் ஆயத்தமாகி விட்டான். கோபுரம் போல் உயர்ந்த உமது கீர்த்தியைக் கவிழ்த்து விடாதீர் கொற்றவரே! சாய்ந்த கோபுரத்தை நிமிர்த்த சஞ்சீவி பர்வத மூலிகையாலும் முடியாது.” 

”துர்ஜதி!” 

“நல்வழி கூறுவதே என் தொழில். அவ்வழி முள்வழி என்றால்…….” 

“ஐயோ அரியநாதா என் தலை சுழல்கிறது வாலிபனே!” மன்னர் குழம்பினார். 

“மன்னிக்க வேண்டும் பிரபு, புலவர் கூறுவதில் சிறிது உண்மையும் இருக்கிறது. ஆனால் விசுவநாதன் தான் இளவரசியைக் கடத்தி இருக்கிறான் என்று என்னால் உறுதி கூறமுடியாது.” அரியநாதனின் பேச்சு மிரண்ட பூனை போல் நகர்ந்தது. 

“நீயும் புதிர் போடாதே! தகவலைக் கூறு. என்ன நடந்தது? எப்போது நடந்தது?” – மன்னர் நிமிர்ந்து உட்கார்ந்தார். 

“வெள்ளம் அணை கடந்து விட்டது. இனி நஞ்செய் போனால் என்ன, புஞ்செய் போனால் என்ன! நானே தெரிவித்து விடுகிறேன். விசுவநாதனுக்கும் இளவரசிக்கும் நீண்ட நாட்களாகக் கள்ள உறவு இருந்தது. அதை நானே பார்த்தேன். அதுமட்டுமல்ல, ஒரு நாள் இரவு அந்தப்புர முற்றத்தில் இளவரசிக்காக விசுவநாதன் காத்திருந்ததை அரியநாதனிடம் காண்பித்தேன்.”. துர்ஜதி முடிக்கவில்லை. 

“அரியநாதா! அரியநாதா!” – கதறினார் மன்னர். 

“ஆம்; புலவர் கூறுவது உண்மைதான்!”- நடுக்கத் துடன் கூறினான் அரியநாதன். 

“காதலியை ஏன் அவன் கடத்த வேண்டும். அந்தப் புரத்தில் வைத்தே அழகு பார்த்து மகிழலாமே என்று கேட் பீர்கள். அதற்கும் காரணம் கூறுகிறேன். நேற்றையப் போட்டியில் வெற்றியடைந்த முதலை எங்கே இளவரசியைப் பரிசாகப் பெற்றுவிடுகிறானோ என்று எண்ணித்தான் விசுவநாதன் இரவோடு இரவாக இளவரசியைக் கடத்தி இருக்கிறான் அண்ணலே! ஆற அமர இருந்து ஆய்ந்து பாருங்கள். உண்மை துலங்கும். எனக்கும் விசுவநாத னுக்கும் போட்டியில்லை; பொறாமை யில்லை. அவன் வாழ்க் கைக்கு முகவுரை தீட்டும் பருவத்தினன்; நான் நன்றி நவிலும் முதியவன்.”- துர்ஜதி ஆடித் தீர்த்தான். 

துர்ஜதியின் வாதத்தில் மன்னர் சொக்கிப் போனார்; அவர் உள்ளத்தில் சூறாவளி வீசியது. எரிமலை புகைந்தது. பவளங்களைப்போல் கண்கள் சிவந்துவிட்டன. 

தருணம் பார்த்து அப்போது சிங்கராயன் நுழைந்தான். 

“சிங்கராயா நான் முகப் புகழ்ச்சியில் மயங்கி விட்டேன். கலம் கவிழு முன் கண்ணைத் திறந்துவிட்டார் துர் ஜதியார். போ! துங்கபத்திரையின் தென்கரையில் அந்தத் துஷ்டன், நன்றி கெட்டவன், துரோகி இருப்பான். அவனைப் பிடித்து ரகசியச் சிறையில் போடு. போ, இப்போதே!”-மன்னர் பேச்சில் தீச்சுடர் பறந்தது. 

“புரியவில்லை மன்னவரே, யாரைச் சொல்கிறீர்கள்? எல்லை முகாமில் நமது விசுவநாதனல்லவா இருக்கிறார்!” என்று ஒன்றும் புரியாதவனைப்போல் நடித்தான் சிங்கராயன். 

“அந்த நாயைத்தான் சொல்கிறேன், அற்பன்!” – மன்னர் பல்லைக் கடித்தார். 

அரியநாதன் குறுக்கிட்டான். மன்னர் அரியநாதன் பக்கம் பருந்தைப்போல் கழுத்தைத் திருப்பினார். 

“ஒரு சேதி! விசுவநாதனை நாம் கைது செய்வது ரகசியமாக இருந்தால் உத்தமம். இல்லையென்றால் மதுரையி லிருக்கும் நாகமர் ஆத்திரப்பட்டு எதிரியாகிவிடக்கூடும்” என்றான். 

“ஆனால் என்ன! நாகமருக்கு என்ன கொம்பா முளைத் திருக்கிறது?” என்றார் மன்னர். 

“இல்லை அரசே, அரியநாதன் கூறுவதும் சரிதான். ஒரே நேரத்தில் நாம் எதிரிகளைப் பெருக்கிக் கொள்வது விவேகமில்லை! பகைவர்களைப் பிரித்துத்தான் பதம் பார்க்க வேண்டும்!” என்றார் துர்ஜதி. 

மன்னர் பதில் பேசவில்லை. 

சிங்கராயன் குதிரை துங்கபத்திரை நோக்கி விரைந்தது. 

அத்தியாயம்-8

சுல்தான் அடில்ஷாவின் கோட்டையைச் சுற்றி ஆழ மான அகழிகள் இருந்தன. கோட்டை ஒரு தீவைப்போல் விளங்கியது. அகழிகளின் இரு பக்கத்திலும் சுல்தானின் முன்னோர்களது பெருமைக்குரிய கல்லறைகள் தென் பட்டன. கோட்டையின் நெடிதுயர்ந்த அரண்களின் மீதிருந்து கீழே பார்த்தால், அகழிகளெல்லாம் நொங்கும் நுரையுமாகச் சுழன்றோடும் ஜீவ நதிகளைப் போல் தெரிந்தன. 

கோட்டையைச் சுற்றி மூன்று அரண்கள் இருந்தன. ஒரு அரணுக்கும் இன்னொரு அரணுக்கும் இடையிலுள்ள தரிசு நிலத்தில் நூல் பிடித்தாற்போல் ஆறு பேரைப் படுக்க வைக்கலாம். ஒவ்வொரு அரணைச் சுற்றிலும் ஆயுதந் தாங்கிய வீரர்கள் கண்காணித்து வந்தார்கள். ேகாட்டைச் சுவர்களில் ஆங்காங்கே காணப்பட்ட பிளவுகள் விஜயநகரப் படையின் அடுத்தடுத்த படையெடுப்புக்களைப் பற்றிக் காவியம் பாடிக்கொண்டிருந்தன. மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், அரசவையும், அத்தாணி மண்டபமும் சோபிதமான சித்திரச் சாலைகளும் நிறைந்து பெரியதோர் சமுதாயத்தின் அதிகார பீடமாக விளங்குவதற்குத் தகுதி உண்டு என அந்த பீஜப்பூர் கோட்டை முணகிக்கொண்டிருந்தது. 

கோட்டைக்குள்ளே ஓர் அழகிய பள்ளி வாசல். அது சலவைக் கல்லால் ஆனது. அடில்ஷாவால் எதிர்காலத்தில் தன்பெயர் நிலைக்க அக்கறையோடு எழுப்பப் பெற்றது. அதில் வானோக்கி உயர்த்தி எழுப்பப் பெற்ற மீனோராக்கள் தொலை தூரக் காட்சிகளைப் பார்ப்பதற்குப் பேருதவி புரிந்தன. அதன் சிகரத்திற்குப் போக உள்ளே ரகசியப் படிக்கட்டுகள் இருந்தன. 

சுல்தான் அடில்ஷா தொழுகை முடிந்து கோட்டைக்குப் போக நினைத்தவர், மனம் மாறி மீனோராவுக்கு ஏறினார். அவரைத் தொடர்ந்து இரண்டு சிப்பாய்கள் போனார்கள். சுல்தான் பருவத்தில் அரைக்கட்டு கடந்தவர். அவருடைய சாதனைகளும் வெற்றிகளும் அவர் முகத்தில் அனுபவ ரேகை களாகப் படர்ந்திருந்தன. 

முதலில் சிப்பாய்கள் மினோராவின் மேல் தளத்திற்கு வந்தார்கள். பிறகு சுல்தான் வந்தார். வந்தவர் வேறு எதையும் கவனிக்கவில்லை. தென்திசை பார்த்தார். மிகவும் கூர்மையாகப் பார்த்தார். அவர் முகத்தில் சோகம் சூழ்ந் திருந்தது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு குதிரை ஒன்று புகை கிளப்பிக்கொண்டு வந்தது. அதைப் பார்த்த பிறகு கூட அடில்ஷா முகம் மலரவில்லை. ஏனெனில் அவர் எதிர் நோக்கியிருந்த திசையிலிருந்து அந்தக் குதிரை வரவில்லை. ரெய்ச்சூர் பக்கமிருந்து அது வந்துகொண்டிருந்தது. சுல்தான் மினோராவிலிருந்து இறங்கினார். குதிரை வீரன் கோட்டைக்குள் நுழைந்ததும் சுல்தானைக் கண்டான். 

“என்ன!” 

“ரெய்ச்சூரிலிருந்து வருகிறேன்; கோட்டைக் காவலர் ஓலை தந்திருக்கிறார்” என்று கூறி அவன் ஒரு பட்டுச் சுருளை சுல்தானிடம் கொடுத்தான். 

சுல்தான் ஓலையைப் பிரித்தார்: 

“இளவரசர் மாலு, ஓர் அழகிய இந்துப் பெண் ணுடன் ரெய்ச்சூர் கோட்டையில் முகாமிட்டிருக் கிறார். அந்தப் பெண் பார்வைக்கு ஓர் அரசிளங் குமரிபோல் தோன்றுகிறாள். நமது இளவரசர் அந்தப் பெண்ணை அடைவதற்குப் படாத துயரங்க ளெல்லாம் பட்டிருக்க வேண்டும் என்று யூகிக் கிறேன். ஏனெனில், கரடி மயிரைப்போல் உறுதி யாகவும், கருமையாகவும், நெருக்கமாகவும் இருந்த காணவில்லை. மொட்டை அவருடைய முடியைக் அடித்திருக்கிறார். மீசைகூட இல்லை. சின்னப் பட்டம் மாலு அந்தப் பெண்ணை ரெய்ச்சூர் கோட்டையிலேயே தங்க வைக்க வேண்டுமென்று வாதாடுகிறார். நான் அரண்மனையின் உத்தரவை திர்பார்த்து மாலுவுக்கும் தெரியாமல் இந்த ஓலை அனுப்பியிருக்கிறேன். ஆக்ஞையை எதிர்பார்க்கிறேன். 

இங்ஙனம், 
கான்ராவுத்தன். 
ரெய்ச்சூர் கோட்டைக் காவலன். 

சுல்தானின் சுருதி குறைந்தது. அவர் புரியாமல் தவித்த புதிருக்கு விடை கிடைத்துவிட்டது. பத்து நாட்களாக அருமை மகன் மாலுவைக் காணாமல் சுல்தான் அடில்ஷா பித்துப் பிடித்தவரைப்போல் பிதற்றிக் கொண்டிருந்தார். இப்போது அவன் ரெய்ச்சூருக்கு வந்திருக்கும் கோலம்? சுல்தான் அதைப்பற்றிச் சிந்திக்காமல் இல்லை. ஓலையைத் திரும்பவும் படித்துப் பார்த்தார். 

அப்போது மசூதி நகரா ஒலித்தது. பள்ளி வாசலி லிருந்து எல்லோரும் கலைந்துகொண்டிருந்தார்கள். 


அடில்ஷா அவரது ஒளி மாடத்திற்கு நடந்தார். அது அவருடைய தனிமைக்கு அமைக்கப் பெற்ற அழகான மாளிகை. இரவு முழுதும் அவர் குழம்பிக் கொண்டிருந் தார். மாலு பீஜப்பூர் ராஜவம்சத்தின் ளிவிளக்கு அதுவும் தனிவிளக்கு! அவன் மனம் கோண அடில்ஷா ஒரு போதும் நடந்ததில்லை. பாலைவனத்தில் பச்சை வர்ணத்தில் குயில் இருக்கிறது என்று மகன் சொன்னால்கூட படையை அனுப்பிப் பிடித்துவா என்பார் அடில்ஷா. அவ்வளவு அன்பு மகன் மீது! ஆனால் இந்த முறை அவர் மாலுவின் எண்ணத்தைத் தடை விதிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந் தார். மாலுவின் சுகத்தைக் காட்டிலும், மகோன்னதமாக விளங்கிக் கொண்டிருந்த விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் அழிவையே அடில்ஷா பெரிதும் மதித்துக்கொண்டிருந்தார். அந்த அழிவைக் கண்டு சுவைக்க ஒரு நல்ல தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப் போல் தோன்றினார். அதனால் அவரது வெறித்தனம் பீஜப்பூர் மக்களுக்கு எந்த வகையிலும் ஓர் ஏழை இந்துவிடம்கூட பற்றும் பாசமும் ஏற்பட்டுவிடக் கூடாது. என்று எண்ணினார். பாசமும் பரிவும் மகமதிய அரசின் வீரத்தை மழுங்கடித்துவிடும் என்று அவர் தீர்மானமாக முடிவுகட்டிவிட்டார். ஏனெனில் இளவரசன் மாலு கிளப்பிக்கொண்டு வந்திருப்பது இந்துப் பெண் அல்லவா! 

சிறிது நேரத்திற்குப் பிறகு இன்னொரு ஒற்றன் வந்தான். அவனும் ரெய்ச்சூர் கோட்டையிலிருந்துதான் வந்தான். அவன் சொன்ன தகவல் அவரைத் திகிலடைய வைத்தாலும் அதை அவர் எதிர்பார்க்காமலில்லை. அவர் நினைத்தது பலித்தது. இளவரசன் மாலு கடத்தி வந்திருப்பது கிருஷ்ண தேவராயரின் மகள் துங்கபத்திரை என்று இரண்டாவது ஓலை கூறியது. அடில்ஷாவுக்கு உடம்பு சில்லிட்டது. ரெய்ச்சூர் கோட்டைக் காவலனுக்கு அவசர முடங்கல் எழுதினார். 

சுல்தான் கட்டளை! இளவரசியைச் சிறைப் பிடித்துவை! மாலுவுக்கும் இளவரசிக்கும் உறவு ஏற்பட்டால் பீஜப்பூருக்கும் விஜயநகரத்திற்கும் இடையில் பகை உணர்ச்சி குறைந்துவிடும். கிருஷ்ணதேவராயரின் தலையைக் கொண்டு வந்து பீஜப்பூர் ராஜசபையில் சமர்ப்பித்தால்தான் மாலு இளவரசியை மணந்து கொள்ள பீஜப்பூர் அரசாங்கம் அனுமதியளிக்கும். இந்த நிபந்தனையை மாலு ஏற்றுக் கொள்ளாவிடில் இளவரசி மாலுவுக் கல்ல. அவள் சாகடிக்கப்பட வேண்டியவள். இந்தக் கட்டளை யை மாலுவுக்குத் தெரிவித்துவிட்டு, இளவரசியைப் பீஜப்பூர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கவும். இதில் திருத்தமில்லை; உடனடியாக அமுல் செய்ய வேண்டிய கட்டளை. 

பீஜப்பூர் சுல்தான் 
அடில்ஷா. 

ரெய்ச்சூர் காவலன் கான்ராவுத்தன் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து இப்படி ஓலை வருமென்று எதிர் பார்க்கவே இல்லை. பீஜப்பூர் ஓலையை எடுத்துக்கொண்டு இளவரசன் தங்கியிருந்த தனி மாளிகைக்குச் சென்றான். 

அங்கே – 

“இளவரசி! இதுவரை என்னைப் பற்றி உனக்குத் தெரிந் திருக்காது. நான் பீஜப்பூரின் பட்டத்து வாரிசு. சாதாரண மல்யுத்த வீரனல்ல! நீ ராஜகுமாரி. நான் ராஜகுமாரன். எந்தச் சட்டமும் நம்மை எதிர்க்க முடியாது. நமது மணம் நடந்தால் இனிமேல் இந்து முஸ்லிம் கலவரமே ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் நான் உன் தந்தை பக்கம்தான் துங்கபத்திரா!” – மாலு இளவரசியிடம் கெஞ்சினான். 

“மோசக்காரன்!” 

“இல்லை. வேஷம்தான் அணிந்து வந்தேன். அதுவும் என்னை யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான்! என்னை நம்பு பெண்ணே!” 

“மூர்க்கா!” 

”உன்னிடம் அப்படி நடந்துகொள்ள! மாட்டேன்.நீ எனக்குச் சீமாட்டி!” – அடிமையைப் போல் தலை தாழ்த்திப் பேசினான் மாலு. 

கோட்டைக் காவலன் கான்ராவுத்தன் உள்ளே நுழைந் தான். அவனுக்குச் சிரிப்பு ஒரு பக்கம்; ஆத்திரம் ஒரு பக்கம். 

“சலாம் ஆலேக்கும்!” 

“யாரது!”-இளவரசன் திரும்பிப் பார்த்தான். 

எதிரே கான்ராவுத்தன் நின்றுகொண்டிருந்தான். 

“கான்ராவுத்தா. கட்டளை இல்லாமல் இங்கு என்ன வேலை? போ! பொழுது சாய்ந்ததும் வா!” என்று எரிந்து விழுந்தான் மாலு. 

“பீஜப்பூர் உத்தரவு வந்திருக்கிறது இளவரசே!’ “தொந்தரவு செய்யாதே! உத்தரவைப் பிரித்துப் படித்து பதிலை எழுதி நீயே அனுப்பு!’ 

”மாலு!”-கான்ராவுத்தன் இரைந்தான். 

மாலு வெறிக்கப் பார்த்தான். அடுத்த கணம் கான் ராவுத்தனை ஓங்கி அறைந்துவிட்டான். கான்ராவுத்தன் இலேசாகச் சிரித்து சுவர் மறைவில் நின்ற காவலர்களுக்கு ஜாடை காண்பித்தான். காவலர்கள் இளவரசியைக் கைது செய்து, தனி இடத்திற்கு அழைத்துப் போனார்கள். கான்ராவுத்தன் பீஜப்பூர் உத்தரவை மாலு முன் போட் டான். ஓலையைப் படித்த மாலுவுக்குத் தலை சுற்றியது. ‘இளவரசி வேண்டுமென்றால் கிருஷ்ணதேவராயரின் தலை வேண்டும்’- என்று எழுதி இருந்த வரிகள் மாலுவை மிரட்டிக் கொண்டிருந்தன. மிதமிஞ்சி மது குடித்தவனைப் போல் சோர்ந்து படுத்துவிட்டான். 


“கங்கா……. கங்கா !” 

“…”

“அரும்பு… அழுது கொண்டு கிடக்கும்! கண்ணீர் மட்டும் இல்லாவிட்டால் உலகத்தின் கதையையே பெண்கள் மாற்றி யிருப்பார்கள். துக்கத்தையும் கண்ணீரையும் பலவீனர் களுக்கென்றே பகவான் படைத்திருக்கிறார்.கங்கா!” 

கங்கா கதவைத் திறந்தாள். அவள் முகம் வியர்த்திருந்தது. 

காலணிகளை அகற்றிவிட்டுப் பெருமூச்சு விட்டுக் கொண்டே ஆசனத்தில் உட்கார்ந்தார் துர்ஜதி. 

”மகளே உனக்கு விபரம் தெரியுமா? யாருமே எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் நடை பெற்றிருக்கிறது!” 

கங்கா சிரித்தாள். 

“என்னம்மா சிரிக்கிறாய்? உனக்கெப்படித் தெரிந்தது? எனக்கு மட்டும்தானே தெரியும்! வா, இப்படி உட்கார்…! என்றார் துர்ஜதி. 

“என்னப்பா இது,ஊர் முழுதும் பேசிக்கொள்கிறார்கள் – எனக்கு மட்டும் தெரியாமல் போய்விடுமா?’ பீடிகை போட்டாள் கங்கா! 

துர்ஜதிக்கு முகம் கறுத்தது. 

“இளவரசி காணாமற்போன தகவலைத்தானே சொல் கிறீர்கள். இது யாருக்குத் தெரியாது? அரண்மனைக் குதிரைக்காரனுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது. இதி லென்ன ரகசியம். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியுமா?”- கங்கா ஓங்கிப் பேசினாள். 

துர்ஜதி பலமாகச் சிரித்தார். தலை தப்பியது போன்ற உணர்ச்சி அந்தச் சிரிப்பொலியில் ஒளிந்தது கிடந்தது. 

“கங்கா, அது முதல் நாள் நடந்தது. அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்துவிட்டது.நீ பழைய இடத்திலேயே நிற்கிறாய். உலகம் அச்சு ஓடிந்த வண்டியல்ல மகளே. நகர்வது தெரியாமல் நடந்துகொண்டிருக்கும் நத்தை அது. இங்கே வா!இப்போது இளவரசி எங்கே இருக்கிறாள் தெரியுமா? பீஜப்பூரில் இளவரசன் மாலுவின் மடியில் இருக்கிறாள்!” என்று கூறிவிட்டு இடி இடிப்பது போல் சிரித்தார் துர்ஜதி. 

”இளவரசரா? அவருக்கு எப்படித் தெரியும் துங்க பத்திரையைப் பற்றி?” – கங்கா வியப்புடன் கேட்டாள் 

“பைத்தியக்காரப் பெண்ணே, மல்யுத்தப் போட்டியில் வெற்றி பெற்ற முதலைதான் பீஜப்பூர் இளவரசன்.மாறு வேடத்தில் வந்து இங்கே வெற்றி பெற்றிருக்கிறான்” என்றார் துர்ஜதி. 

“இதெல்லாம் உங்களுக்கு எப்படியப்பா தெரிந்தது?” 

“தெய்வம் நப்பக்கம் இருக்கிறது மகளே! தேசம்,ஞானம், கல்வி என்பதெல்லாம் கடைச் சரக்கா? எல்லாம் சேவாணிக் கிரகத்தால் கிடைத்ததல்லவா? கங்கா, சில நாட்களுக்கு முன்பு பீஜப்பூர் ஒற்றன் ஒருவன் கையும் களவுமாக அகப் பட்டான் அல்லவா! அவன்கூட இப்போது அரண்மனை மரக் கூண்டில் அடைபட்டுக் கிடக்கிறான். ஒரு நாள் இரவு – நான் அரண்மனையிலிருந்து வீடு திரும்பும் போது அந்த மரக் கூண்டுக்கு அருகில் நின்று ஒருவன் பேசிக்கொண்டிருந்தான். நான் ஒளிந்து நின்று கேட்டேன். “நீங்கள்தான் இளவரசன் என்று தெரியாமல் நடந்து கொள்ளுங்கள்” என்று மரக் கூண்டு மனிதன் சொன்னது என் காதில் விழுந்தது. எனக்கு மூளை குழம்பியது. ஆனால் நான் விசுவநாதன் கலந்து கொள்ளமாட்டான் என்று எதிர்பார்க்கவே இல்லை. அந்தத் தவறான கணக்கைச் சரியாக்குவதற்கு இன்னொரு தவறான கணக்கைப் போட வேண்டிய நிலைமைக்கு நான் வந்துவிட் டேன். போரில் வெற்றி பெற்றவன் இளவரசன்தான் என்று அறிந்தேன்; இது யாருக்கும் தெரியாது. எனக்குப் பயம் வந்துவிட்டது. மறுபடியும் இளவரசி – விசுவநாதன் காதல் தொடரப்போகிறதே என்று கவலைப்பட்டேன். ஆனால் இளவரசன் முதலை இளவரசியையே கேட்டுவிட்டான். அப்போதே என் மனம் குளிரத் தொடங்கிவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அரசவையில் சட்டத்திற்கு விரோதமாகப் பேசினேன். முதலையை இரவோடு இரவாகச் சந்தித்து இளவரசியைக் கடத்திக்கொண்டு போய் விடும்படி தூண்டினேன். முதலை இந்த உதவியை மறக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான். ஒருவேளை பீஜப்பூர்,விஜயநகரத்தின் மீது படையெடுத்து வெற்றி பெற்றால் நான்தான் முதலமைச்சன். நீ ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவளாகக் கூட நிலைமை மாறலாம். கங்கா, காலம் மாறுகிறது; கவனமாக இரு. இனி துங்கபத்திரை உனக்குப் போட்டிப் பெண் அல்ல. அவள் போய் விட்டாள். மீண்டும் வர மார்க்கமில்லை. சதி வெற்றி முகப்புக்கு வந்து நிற்கிறது. என் சொல்லை மதிக்காத விசுவநாதன் சிறையில் கிடக்கிறான்” என்று பேச்சை முடித்தார் துர்ஜதி. 

“ஆ! அப்பா!'” 

“என்ன மகளே! உண்மைதான். இது அரண்மனை ரக சியம்! யாருக்கும் தெரியாது. நீயும் ரகசியமாகவே வைத்துக் கொள்ளவேண்டும். என்று அழுத்தமாகச் சொன்னார் துர்ஜதி. 

கங்கா சோர்ந்தாள். துர்ஜதி அவளை அணைத்தபடி படுக்கையில் கிடத்தினார். 

அப்போது திடீரென்று அரண்மனைச் சங்கு ஒலித்தது. அந்தச் சங்கு அடிக்கடி ஒலிப்பதில்லை. அவசரமாக ஆய்வுக் குழுவைக் கூட்ட நேர்ந்தால் மன்னரே அந்தச் சங்கை ஒலிக்க வைப்பார். அந்த விசை மன்னரிடமே இருந்தது. 

துர்ஜதி சால்வையைத் தூக்கிப் போட்டுக்கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டார். 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை அரண் மனைச் சங்கு இப்படி ஊதியிருக்கிறது. யானை மதங்கொண்டு அரண்மனைக்குள் புகுந்துவிட்டதால் அப்போது சங்கு ஒலித் தது. அதற்குப் பிறகு இப்போதுதான் சங்கு ஊதியிருக் கிறது. எதிர்பாராத ஆபத்து ஏற்படும்போதுதான் விஜய நகரத்தில் அரண்மனைச் சங்கு ஒலிக்கும். 

திடீரென்று எழுந்த சங்கொலி குடிபடைகளைக் குழப்பி யது. புலவர்களைத் திகைக்க வைத்தது. படைத் தலைவர் கள் ஒன்றும் விளங்காமல் விழித்தார்கள். ராஜவீதிகளில் பரபரப்பு அதிகரித்தது. புலவர்களின் பல்லக்குகள் அரண் மனைக்குள் ஓடின. துர் ஜதியின் நீலவண்ணப் பட்டுப் பல்லக்கு பொன்வண்டைப் போல் பொங்கி வரும் ஆற்று நீரைப் போல் வெகுவேகமாக அரண்மனைக்குள் ஓடியது. 

அரண்மனையில்– 

அரசவை கூடியிருந்தது. எல்லோர் முகத்திலும் இருள் சூழ்ந்திருந்தது. தணலில் வாட்டிய தாமரை போல் சக்கரவர்த்தி ராயர் அமர்ந்திருந்தார். 

பெரும் புலவர் பெத்தன்னா மெத்த வருத்தத்துடன் விபரத்தைத் தெரிவித்தார். 

”விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வடக்கு எல்லையாக இருக்கும் துங்கபத்திரை நதியை எங்களுக்குத் தந்து அதையே எங்களது தெற்கு எல்லையாக அங்கீகாரம் செய்யா விடில் எங்கள் வசமுள்ள இளவரசி துங்கபத்திரையைச் சிறையில் போட்டு வதைக்க நேரிடும்.” 

என்று பீஜப்பூர் சுல்தான் அனுப்பியிருந்த ஓலையைப் பெத்தன்னா சபையில் படித்துக் காண்பித்தார். 

சக்கரவர்த்தியார் நினைத்து நினைத்துப் பொருமினார். நெஞ்சம் கனலாகி நீறு பூத்திருந்தது. யாரும் யாருக்கும் ஆறுதல் கூற முடியாத சூழ்நிலையில் சபையில் ஆழ்ந்த அமைதி குடி புகுந்திருந்தது. மன்னர் தனக்குள் ஏதோ முடிவு செய்து கொண்டவராய் எழுந்தார். பின் பேசினார்: 

“விஜயநகரத்திற்கு இது ஒரு பலப் பரிசோதனை; தவிர்க்க முடியாத பரிசோதனை. இதில் நாம் அழிவதா பிழைப்பதா என்ற முடிவை அறியப் போகிறோம். அந்த முடிவு நாம் எதிர்பாராததாகக்கூட இருக்கலாம். அல்லது நமது விருப்பம் போல் கூட அமையலாம். இந்தக் கட்டத் தில் நாம் சளைத்துவிட்டால் இத்தனை காலமும் நாம் அடைந்து வந்த வெற்றிகள் அனைத்தும் நமது படை பலத்தின் பெரு மையைச் சாராமல் அதிர்ஷ்டத்தின்பால் போய்விடும். ஆகையால், இந்த நெருக்கடியான நேரத்தில் நமது முழு பலத்தையும் சேகரித்து பீஜப்பூர் படையை எதிர்த்தே ஆக வேண்டும். எந்த நாட்டின் ஒத்துழைப்பையும் கோராமல் எதிர்க்க வேண்டும். 

“இன்னொரு வருந்தத்தக்க தகவல். என்னையுமறியாமல், சந்தர்ப்ப நிலையை வைத்துச்செய்த பிழை அது. அரசாங்கத் திற்கு உழைத்து உழைத்து உதிரமெல்லாம் விசுவாசத்தை ஏற்றிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய குடும்பத்திற்கு விஜய நகர அரசு துரோகம் நினைத்துவிட்டது. துர்ஜதியாரின் தவறான கணக்கு என்னையும் தவறிழைத்தவனாக்கிவிட்டது. நிரபராதியான விசுவநாதனைக் கைது செய்ததற்கு இந்தச் சபை வருந்துவதுடன் அவனை விடுவித்து கௌரவிக்கவும் தீர்மானிக்கிறது.” 

-என்று மன்னர் பேசி முடிக்கும்போது அவர் கண்களில் நீர் துளிர்த்தது. துர்ஜதி தலை கவிழ்ந்து நின்றார். 

படை கிளம்பியது. எழுச்சி தரும் போர்ப்பாடல் நாடு நகரங்களில், காடு,மலை,கடந்த கழனிகளில், கூன் குருடு களின் உள்ளங்களில் அரும்பி மலரத் தொடங்கியது. விஜய நகர மண்ணெல்லாம் வீரம் பூத்து நின்றது. அரண்மனைக் காவற்படை தவிர நகரில் ஆளரவமில்லை. 

சக்கரவர்த்தித் திருமகனார் அரண்மனை மேன்மாடத் தினின்று வடதிசை நோக்கி அமர்ந்துவிட்டார். 

படை கிளம்பி பன்னிரு நாட்கள் ஓடிவிட்டன. விஜய நகரத்திற்கு அதுவரை போர் நிலவரம் சரிவரத் தெளி வாகவில்லை. தினசரி வந்து கொண்டிருந்த ஒற்றர்கள் விஜய நகர் படையின் பலவீனத்தையே திரும்பத் திரும்பத் தெரி வித்தார்கள். விஜயநகரம் வீழ்ந்துவிடும் என்பதற்கான அறிகுறிகளே அவர்களின் வாக்குமூலத்தில் புலப்பட்டன. பீஜப்பூர் சுல்தானின் செல்வன் மாலுவே எதிரிப்படைக்குத் தலைமை தாங்கியிருக்கிறான் என்ற தகவல் வேறு ராயரை அரித்துத் தின்னத் தொடங்கியது. மாலு போர்த் திறமை இல்லாதவன். போர் என்றால் அந்தப்புரத்தில் ஒளிந்து கொள்பவன். அப்பேர்ப்பட்ட கோழையின் தலைமையில் நிற்கும் படையைக் கூட விஜய நகரப்படை வெல்ல முடிய வில்லையே என்றுதான் மன்னர் அதிகமாக வருந்தினார். காலம் அவரது நம்பிக்கையை நாசமாக்கிக் கொண்டு வந்தது. அவருடைய ஒவ்வொரு மூச்சும் தனது இந்து ராஜ்ஜியத்தின் மீட்பைப் பற்றியதாகவே அமைந்துவிட்டது. அவரது கவலையும் ஆத்திரமும் அவருக்கிருந்த பேராற்றல் களை யெல்லாம் மென்று தின்று விட்டன. 


“கங்கா!” 

”கங்கா இன்னும் சாகவில்லை. இப்போதுதான் சாவ தற்கு ஆயத்தமாகி வருகிறாள்.” 

“அறியாப் பெண்ணே! நடைபாதை இருக்கும் போது, ஏன் குறுக்குப் பாதைக்குப் போகிறாய்! துர்ஜதியின் இல்லத் தில் துர்மரணம் ஏற்படலாமா? வெற்றி எப்போதும் எல்லோருக்கும் கொட்டு மேளத்துடன் வருவதில்லை. சிலருக்கு அது அழுது கொண்டே ஓடி வந்து விடக்கூடும்.” – துர்ஜதி மகளைச் சாந்தப் படுத்த முயன்றார். 

“எந்தத் தத்துவமும் பெண்களின் வாழ்க்கைக்குப் பயன்பட்டதில்லை. அவர்களை ஊக்குவித்ததில்லை. கண்ணீ ரைத் துடைத்ததில்லை.” – கங்கா துயரத்தோடு பேசினாள். 

”தவறு, கவலைக்கு மூலிகை தத்துவங்கள்தான்.ஆனால் பெண்கள் அதுவரை பொறுத்திருப்பதில்லை. காலையில் விதைத்து மாலையில் அறுவடை செய்யும் சக்தி தங்களிடம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்.” 

“அப்பா” 

“என்ன கங்கா!… ஏன் அவசரப்படுகிறாய்? வெற்றி நிச்சயமாக நமக்குத்தான் என்று நான் முடிவு கட்டியிருக்கி றேன். நீகூட நம்பியிருக்க மாட்டாய். நான் யார் தெரியுமா? துர்ஜதி. அரண்மனையில் எனக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு. அது உனக்குத் தெரியுமா? உனக்கு எங்கே தெரியப் போகிறது! நீதான் அடைக் கோழியாயிற்றே! அரண்மனையில் என்னைப் பற்றி யாராவது ரகசியம் பேசிக் கொள்வதென்றால் ‘உடும்பு’ என்று புனைப் பெயரிட்டுத்தான் பேசிக் கொள்வார்கள். அரண்மனை விவகாரங்களிலேயே விட்டுக் கொடுக்காத இந்த உடும்பு சொந்தக் காரியத்தில் விட்டுக் கொடுத்து விடுமா கங்கா?” 

“அப்பா, என்ன சொல்லுங்கள் எனக்கு நம்பிக்கை இல்லை!” 

“துடிக்கிறாய் கங்கா, நீ மிகமிக அவசரக்காரப் பெண். என்னுடைய போர்த்திட்டத்தை நீ அறிய மாட்டாய். இன்று வரை ஒருவனுடைய தோல்விதான் இன்னொருவனின் வெற்றியாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால் நான் வகுத்திருக்கும் முறையோ மிகவும் விசித்திரமானது. யார் வெற்றி பெற்றாலும் நமக்கு வெற்றி கிடைக்க வேண்டும். இப்படி ஒரு போர்த்திட்டத்தை இதுவரை யாராகிலும் தயாரித்ததுண்டா? சொல் மகளே!”துர்ஜதி நளினமாகப் பேசினார். 

கங்கா சிரித்தாள். அது ஏளனச் சிரிப்பு. 

“என்ன மகளே சிரிக்கிறாய்! உன் தந்தைக்குப் பித்துப் பிடித்துவிட்டதென்று நினைக்கிறாயா? இதுவரை போரில் விஜயநகரத்திற்கு வீழ்ச்சிதான் ஏற்பட்டு வருகிறது. விஜய நகர் தோற்றால் நம்மைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள். விசுவநாதன் கதியும், துங்கபத்திரை கதியும் அப்படித்தான் முடியப் போகிறது. இது ஒன்றே நமக்குப் பெரு வெற்றியல்லவா! நமது சிரிப்பைவிட எதிரி யின் அழுகையில்தான் இன்பம் காண வேண்டும், அதுதான் ராஜதந்திரம்!” 

கங்கா இங்கே குறுக்கிட்டாள் : 

“விசுவநாதன் தப்பித்து ஓடி விட்டால் என்ன செய்வீர்கள்?” 

“எங்கே ஓடப்போகிறான்? ஓடினால் மதுரைக்குப் போவான். போகட்டுமே, துங்கபத்திரை அவனுக்குக் கிடைக்க மாட்டாளல்லவா! அது போதாதா? அதுதானே உன் கவலை!’ என்று அடித்துப் பேசினார் துர்ஜதி. 

“ஸ்… ஸ்…! யாரோ வருகிறார்கள்!” என்றாள் கங்கா. துர்ஜதியின் அரண்மனை உளவாளி சிவநேசன் ஓடி வந்தான். 

“சிவநேசா! என்ன இப்படி வருகிறாய்? புதிய தகவல் ஏதாவது கிடைத்திருக்கிறதா?” என்று பரபரப்புடன் கேட்டார் துர்ஜதி. 

“போர் முடிவு மாறினாலும் மாறக்கூடும். நிலைமையைச் சரிக்கட்ட பெருமுயற்சி எடுக்கிறது விஜயநகரப்படை!” என்று கூறிவிட்டு துர்ஜதியின் காதருகில் வந்து ரகசியமாக ஏதோ சொன்னான் சிவநேசன். 

துர்ஜதிக்கு முகத்தில் களை குன்றியது. 

“சிவநேசா இது உண்மைதானா?” என்று அழுத்தந்திருத்தமாகக் கேட்டார் துர்ஜதி. 

”உண்மை ஐயனே. இன்னும் ஒரு நாழிகை கழித்து நடக்கப் போகிறது. இருள் சூழ்ந்ததும் நிச்சயமாக நடக்கும்” என்று உறுதி கூறினான் சிவநேசன். 

துர்ஜதி, சிவநேசன் குறிப்பிட்ட நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

அத்தியாயம்-9

அந்தி மயங்கிவிட்டது. முகம் மறையும் நேரம் வந்து விட்டது. அழகான முத்துப் பல்லக்கு ஒன்று அரண்மனைக் குள்ளிருந்து கோட்டை மதில்களைக் கடந்து வந்துகொண் டிருந்தது. அந்த முத்துப் பல்லக்கு அதுவரை வெளி வராததாக இருந்தது. விஜயநகரத்தில் யாரும் பார்த்திராத புதியதாகவும் இருந்தது. 

பல்லக்கு நேராகப் பெரிய அதிகாரிகள் மாளிகைகள் இருக்கும் பெரிய வீதிக்குள் நுழைந்து நாகம நாயக்கர் இல் லத்தில் நின்றது. அங்குதான் விசுவநாதன் இருந்தான். 

பல்லக்கிலிருந்து இறங்கிய மன்னர் குடுகுடுவென்று மாளிகைக்குள் விரைந்தார். சித்திரம் போல் அமர்ந்திருந்த விசுவநாதன் எழுந்து நின்றான். மவுனமாகத் தலை வணங்கி னான். வாய் திறந்து பேச அவனுக்கு மனமில்லை. 

“விசுவநாதா……! உனக்குப் புத்திமதி கூற வேண்டிய தில்லை. நீதான் பிறருக்கு ஆறுதல் கூற வேண்டியவன். நீ பிழை செய்யவில்லை என்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டது. ஆனால் உன் விஷயத்தில் அரசாங்கம் தவறு செய்துவிட்டது உண்மைதான். போதிய ஆதாரங்கள் இல்லாமல் பேதமையால் செய்யப்படும் காரியங்களைத்தான் தவறு என்று சொல்வது.நீ இன்று விடுதலை செய்யப்பட்டதி லிருந்து அரசாங்கம் தவறு செய்ததை உணர்ந்துவிட்டது என்பதை நீயும் புரிந்து கொண்டிருப்பாய்.’ 

விசுவநாதன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டு நின்றான். அவன் மன்னர் பக்கம் திரும்பவே இல்லை. 

“பெருந்தன்மை என்பது வயதானவர்களிடம் மட்டும் காணப்படக் கூடியது என்பதல்ல. உன்னிடம் தென்பட்டால் அது விஜயநகரத்திற்கே பெருமையல்லவா! நீ பெரிய குடும்பத்தைச் சார்ந்தவன். உன் தந்தை அடக்கம் நிறைந்த வீரர், மாவீரர்.” 

விசுவநாதன் கண்கள் பஞ்சடைந்துவிட்டன. 

“விசுவநாதா, இரண்டு கிழமைகளாகப் போர் நடந்து வருகிறது, இதுவரை நமக்கு நட்டக் கணக்குத்தான் கிடைத்து வருகிறது. இந்தக் கவலையை என்னால் தாங்கவே முடியவில்லை. வாலிபனே, நீ தீரமிக்கவன். இளவல்களின் திலகம். உனக்கெனத் தனித் திறமைகள் இருக்கின்றன. இப்பொழுது நடப்பது சாதாரணச் சண்டையல்ல. எல்லைக் கோடுகளை மாற்றிக் கிழித்துக்கொள்ளும் வெறும் மண்ணாசை யல்ல. ஒரு பாரம்பர்யத்தை அழித்து, இன்னொரு பாரம்பர் யத்தை நிலைநாட்டும் புனிதப் போராட்டம். நாம் வெற்றி பெற்றால் மசூதிகளை அழிக்கப் போவதில்லை. மகமதிய சமூகத்தினரை வதைக்கப் போவதில்லை. ஆனால் அவர்கள் வெற்றி பெறுவார்களானால் இந்து சாம்ராஜ்ஜியம் நிச்சய மாகத் தவிடு பொடியாக்கப்படும். வானோக்கி வளர்ந்து நிற்கும் இந்துக்கோயில்களின் ராஜகோபுரங்களை புழுதி மேடுகளாக்கிவிடுவார்கள். தென்னாட்டுச் சிற்பக் கலையைப் பொசுக்கிச் சாம்பலாக்கி விடுவார்கள்”. 

விசுவதநானுக்கு முகம் சிவந்து விட்டது. 

“விசுவநாதா! பீஜப்பூர் ளவரசன் மாலு என்பவன் ஸ்திரீலோலன். அவனுக்கு முன்னால் நம் படை வெற்றி பெறத் தகுதியில்லை என்பதை நினைக்கும்போது என் மனம் வேகிறது. இளைஞனே! நாகமர் இருந்த படை – நாடெல்லாம் பேர்பெற்ற படை – பல்லாயிரம் தேசத்தினரை புறமுதுகிடச் செய்த படை இன்று ஒரு பேடியிடம் சரணடையப் போவதை எப்படிச் சகிப்பேன் விசுவநாதா ! இளவரசி துங்கபத்திரையை அவர்கள் கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். அதுபற்றிக்கூடக் கவலையில்லை. நான் மகுடம் இழந்து வன வாசம்கூடப் போகக் தயாராக இருக் கின்றேன். ஆனால் இந்த நாட்டில் மகமதியர்களை மட்டும் ஆதிக்கம் செலுத்த வைக்க என் மனம் இடந்தராது விசுவ நாதா! நன்றாக யோசனை செய்து பார்! போர் நுணுக்கம் உனக்குத் தெரியாததல்ல. நாம் ஓர் அடி பின் வாங்கினால் எதிரிகள் ஒன்பது பங்கு பெறுவார்கள். இவ்வளவு நேரம் அங்கு என்ன நடந்ததோ தெரியவில்லை” என்று மன்னர் தளதளத்த குரலில் பேசினார். அப்போது அவசர அவசர மாக ஒரு சேவகன் ஓடி வந்தான். வந்தவன் மன்னரைத் திடுக்கிட வைத்தான். 

“நமது படை அழிந்துகொண்டு வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்குக்கூட நம்படை தாங்காது” என்று அவன் சொன்னான். 

“விசுவநாதா! விசுவநாதா!தாய் நாட்டின் மானத்தைக் காப்பாற்று!தென்னகத்தின் தீரத்தை நிலை நாட்டு. விஜய நகரக் கோட்டையில் புதுக்கொடி பறக்கப்போகிறதா? தாயின் மணிக்கொடி இறங்கப் போகிறதா? விசுவநாதா என்ன செய்யப் போகிறாய்? உன் இனத்தை வாழவைக்கப் போகிறாயா? அல்லது அடிமைகளாக்கப் போகிறாயா? சொல் இளைஞனே…” 

சக்கரவர்த்தி ராயர், யாரையும் வீடு தேடிப் போய் பார்த்ததில்லை. எவருக்கும் வேண்டுகோள் விடுத்தது கிடையாது. அவர் அதிகமாக மரியாதை காட்டியது பெத்தன்னா ஒருவரிடம்தான். ஆனால் அவரைத் தேடி ஒரு போதும் மன்னர் வீட்டுக்குப் போகமாட்டார். ராயரின் வாழ்க்கையில் – விஜயநகர சரித்திரத்தில் மன்னர்களுக் கெல்லாம் மன்னர், வீரர்களுக்கெல்லாம் தலைவர், நாட்டின் நலனுக்காக வீடு தேடிப் போனது, விசுவநாதனைத் தேடி அவனது இல்லத்திற்கு ராயர் சென்றது இதுதான் முதல் தடவை. 

குனிந்து கொடுப்பது கோழைத்தனந்தான். தாழப் பணிந்து பேசுவது தன்னம்பிக்கை அற்ற செயல்தான். ஆனால் கோபக்காரனின் இதயத்தை இளக வைக்க அதைக் காட்டிலும் சிறந்த மார்க்கம் இருக்கிறதா? 

ராயரின் பணிவு, ஆத்திரமடைந்திருந்த விசுவநாதனை உலுக்கிவிட்டது. அவன் உடம்பெல்லாம் நீர் பூத்தது. உதடுகள் துடித்தன. 

மன்னர் கண்களில் காவி படர்ந்தது. 

விசுவநாதன் அருள் வந்தவனைப் போல் மடை திறந்த வெள்ளமெனக் கொதித்தெழுந்து பேசினான். மன்னர் முகத்தில் இன்பம் சுரந்தது; வீரம் பீரிட்டது. 

“பிரபு! புறப்பட்டுவிட்டேன். வெற்றித் திருவீரனாக வருகிறேன். தெற்கு திலகமிட்டு வரவேற்கும் மாவீரனாகத் திரும்புகிறேன்” என்று வீறிட்டுக் கிளம்பினான் விசுவநாதன். மன்னர் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். நாடு மீண்டுவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது. வெற்றி பெற்றுவிடலாம் என்ற தெம்பு முளைத்தது. 

போர்க்களம் நோக்கிப் புதுப்படை கிளம்பியது. அரண்மனைக் காவலுக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஏழாயிரம் குதிரை வீரர்கள் விசுவநாதன் தலைமையில் அணிவகுத்துச் சென்றனர். 


“கங்கா!” 

“என்னப்பா” 

“கேட்டாயா சேதியை!” 

“துங்கபத்திரை வந்துவிட்டாளா?” 

“அது இந்த ஜன்மத்தில் நடக்கக் கூடியதா?. விசுவநாதன் புறப்பட்டு விட்டான் போருக்கு……! பாவம் அவன் நாகமருக்கு ஒரே மகன். அநியாயமாய் அழியப் போகிறான்!” 

“ஏனப்பா இப்படிச் சாபம் போடுகிறீர்கள்?” 

“இது சாபமல்ல! நடக்கப்போவது! சுல்தான்படை தலைக்குமேல் வந்துவிட்டது. இனிமேல் விசுவநாதன் போய் ஜெயிக்கவா?” 

“ஏன் முடியாது? நிச்சயமாக விஜயநகரப் படைதான் வெல்லப்போகிறது!” 

”யார் ஜெயித்தால் என்ன நமக்கு! வெற்றியின் பயன் இந்த துர்ஜதிக்குத்தான்!” 

விஜயநகர் ஜெயித்தால் நமக்கொன்றும் பயன் இல்லை. நாம் இந்த ஊரைவிட்டே ஓடிவிட வேண்டியதுதான். விசுவநாதர் துங்கபத்திரையைத் திருமணம் செய்து கொள்வார். அதை நம்மால் தடுக்க முடியுமா? முடியவே முடியாது!” 

“கங்கா உளறாதே! இந்த துர்ஜதி இருக்கும் வரையில் அப்படி ஒன்றும் நடந்து விடாது. ஒருபோதும் துங்கபத்தி ரையை வெற்றிபெறச் செய்துவிட மாட்டேன். இப்பொழுதே தெரிவிக்கிறேன். துங்கபத்திரை விசுவநாதனை மணக்காது இருக்க வேண்டுமானால் நீ மிகத் துணிச்சலாக ஒரு காரியம் புரிய வேண்டும். பெண்கள் அவர்களின் வெற்றிக்காக எதை யும் செய்வார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் இது பயங்கரமானது. கோரம் விளைந்தாலும் நான் ஆச்சரியப் படமாட்டேன். உனக்குத் தைரியமிருந்தால் செய்! வா” என்று துர்ஜதி கங்காவை அழைத்தார். 

கங்கா அவரருகில் வந்தாள். துர்ஜதி அவள் காதருகில் ஏதோ சொன்னார். கங்கா நெற்றியைச் சுளித்தாள். புருவத்தை வளைத்தாள். 

“பயப்படாதே! வெற்றி உனக்குத்தான்!” என்று மகளின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். 

கங்கா வீட்டுக்குள் ஓடினாள். துர்ஜதி பலமாகச் சிரித்தார்; நம்பிக்கையோடு சிரித்தார். 


போர் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. விசுவநாதன் போரில் கலந்து கொண்டு விட்டான் என்ற தகவல் போர்க்களம் முழுவதும் எதிரொலித்துவிட்டது. விஜயநகரப்படை முன்னிலும் தீவிரமாகப் போர் புரிந்தது. நம்பிக்கையும் துணிச்சலும் ஒவ்வொருவர் பலத்தையும் பெருக்கிக் காட்டியது. படைவீரர்களும் விசுவநாதனும் தளத்து முகப்பில் நின்று வீரப்பணியாற்றிக் கொண்டிருந் தார்கள். சிங்கராயன் படைக்குத் தலைமை வகித்து வந்தவன் எங்கோ ஒரு மூலையில் கள்ள விழிகளுடன் சண்டை யிட்டுக்கொண்டிருந்தான். விசுவநாதன் அவனைக் கவனிக் காமல் இல்லை. அடிக்கடி அவனைக் கவனித்துக் கொண்டிருந்தான்! 

போரின் கட்டம் திசைமாறத் தொடங்கியது. சுல்தான் படையினர் பின்வாங்கத் தலைப்பட்டுவிட்டார்கள். அப்போது ஒரு வெள்ளைக் குதிரை – புதுக்குதிரை ரத்தக்கறை – படாத குதிரை களத்திற்கு ஓடிவந்தது. அதன் மேல் ஒரு விஜயநகர வீரன் இருந்தான். அவன் நேராகச் சிங்கராயன் சண்டை யிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தான். சிங்கராயன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். இருவருக்கும் இடையில் வெறும் பார்வை பரிமாறிக் கொள்ளப்பட்டது. பேச்சு வார்த்தை இல்லை. அடுத்தவர்களுக்குத் தெரியாமல் அந்தக் குதிரைக்காரன் சிங்கராயனிடம் ஓர் ஓலையைக் கொடுத் தான். இருவருமாகப் போர்க்களத்தை விட்டு ஒதுங்கிப் போய் நின்றார்கள். சிங்கராயன் ஓலையைப் படித்தான். 

தளபதியாருக்கு, 

விஜயநகர் வெற்றி பெறப்போவதாகக் கேள்வி. ஆகவே எப்படியாவது சிறையிலடைபட்டுக் கிடக்கும் இளவரசி துங்கபத்திரையைத் தீர்த்து விட்டு வரவேண்டியது உமது பொறுப்பு. கடிதம் கொண்டு வருவது வேறுயாருமல்ல; என் மகள் கங்காதான். 

இப்படிக்கு, 
துர்ஜதி. 

என்று எழுதப்பட்டிருந்தது. சிங்கராயனுக்கு உச்சி குளிர்ந் தது. உள்ளம் புளகாங்கிதம் அடைந்தது. கங்காவின் கன்னத் தில் செல்லமாகத் தட்டினான். அதை அவள் விரும்பவில்லை என்றாலும் அவளுடைய வெற்றிக்கு அதைச் சகித்துத் கொண்டாள். 

“கங்கா ! இந்த உடையை இன்று பூராவும் மாற்றாமல் இரு! இரவு வந்ததும் நான் ஒன்று கூறுவேன். உன்னால் தான் அந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியும். அதோ இருக்கிறதே நமது பாசறை. அங்கே போரில் காயம் பட்ட வர்கள் கிடக்கிறார்கள். அவர்களுக்குள்ளே நீயும் பதுங்கிக் கொள். பொழுது சாய்ந்ததும் நான் வருகிறேன். போர் முடிய இன்னும் மூன்று நாட்களாவது பிடிக்கும். தைரியமாக இரு. வெற்றி நமக்குத்தான்!” என்று கங்காவைப் பாச றைக்கு அனுப்பி வைத்தான். கங்கா தயங்கிக்கொண்டே பாசறைக்கு நடந்தாள். 


பீஜப்பூர் அந்தப்புரம்!

பத்து நாட்களாகச் சுல்தான் அந்தப்புரத்திற்குப் போகவில்லை. போரின் போக்கு அவனைக் குழப்பி வைத்துக் கொண்டிருந்தது. ராணி கைதிலி பேகத்திற்கு இது பெருங் கவலையைத் தந்தது. மகமதியப்படை தோற்றால் மதம் அழியும். இனம் அழியும், சுதந்திரம் பாழாகும் – என்ற கவலை அவளையும் வாட்டி எடுத்தது. 

அப்போது தாதி வந்தாள். 

பெரிய மசூதியிலிருந்து மதகுரு வந்திருப்பதாகத் தெரிவித் தாள். அழகிய பட்டுத் திரைக்குப் பின்னிருந்து பேட்டியளிக்க ராணி இசைந்தாள். அதன்படி ஏற்பாடாயிற்று. ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத வகையில் பேட்டி நடைபெற்ற. 

”போரை நிறுத்தவில்லையானால் மகமதியர் சரித்திரமே தோல்வியோடு முற்றுப் பெறும்” என்று மதகுரு வருத்தத் தோடு தெரிவித்தார். 

“உண்மைதான்! நான் அந்தப்புரத்தில் அடைபட்டுக் கிடக்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று கூறுங்கள்; நான் செய்கிறேன் என்று அரசி பவ்யமாகச் சொன்னாள். 

“ஒன்று சொல்லலாம்! போரில் தோற்றால் நாம் அழியப் போகிறோம். நமது சந்ததியே ஒழியப் போகிறது. ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அந்த வழியைக் கடைசி முறையாகச் செய்து பார்ப்போம். நீங்கள் மட்டும் இசைந்தால் வெளியில் காத்துக் கிடக்கும் பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்கள் பேரானந்தமடைவார்கள்.செய்யுங்கள் மகாராணி!” என்று மதகுரு வற்புறுத்தினார். 

“நிச்சயமாகச் செய்கிறேன். மார்க்கமென்ன?” என்று தைரியமாகக் கேட்டாள் ராணி. 

“அடைபட்டுக் கிடக்கும் இளவரசியைத் திறந்து விட்டால் போர் நின்றுவிடும் என்றார் மதகுரு. 

ராணிக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. 

“சிறையி லிருப்பவளையா திறந்துவிடச் சொல்கிறீர்கள்? சுல்தான் உத்தரவில்லாமலா? அது பெருங்குற்றமல்லவா?” என்று கேட்டாள் ராணி. 

“ஆம் சுல்தான் உத்தரவு இல்லாமல்தான் அவளைத் திறந்துவிடவேண்டும். சுல்தானிடமிருந்து உத்தரவு வரும் வரை நாடு தாங்காது அரசியாரே! நாம் பிழைக்கவேண்டு மானால், நமது சமுதாயம் பிழைக்க வேண்டுமானால், அன்பு கூர்ந்து துங்கபத்திரையைத் திறந்து விடுங்கள். அவள் நிச்சயமாகப் போரை நிறுத்திவிடுவாள். இந்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டாள்; இன்றே செய்யுங்கள்!இப் பொழுதே செய்யுங்கள். உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு; அல்லா உங்களை ரட்சிப்பார்!” என்று மதகுரு அடுக்கிக்கொண்டே போனார். அவர் கண்களில் நீர் துளித்து நின்றது. 

ராணிக்கு உரம் பிறந்தது. திரைக்குப் பின்னால் நின்றே காவலனுக்கு உத்தரவிட்டு, இரவு வந்ததும் துங்கபத்தி ரையை அந்தப்புரத்திற்கு அழைத்துவரச் சொன்னாள். 


பொழுது சாய்ந்தது. போர்ப்படைகள் பாசறைக்குத் திரும்பிவிட்டன. சிங்கராயன் அவனது திட்டப்படி கங்கா வைச் சந்தித்தான். இருவருமாகப் பேசிக்கொண்டே பாசறைக்கு வெளியே வெகுதூரம் போய்விட்டார்கள். சிங்கராயன் கடைசியாகக் கூறியதுமட்டும் காதில் விழுந்தது. 

“கங்கா, இந்தக் கத்தியை இடையில் வைத்துக்கொள்! நான் சொன்ன பாதையை மறந்துவிடாதே! நீ கொண்டு வந்திருக்கும் கோஷாப்பெண் உடைகளை அணிந்துகொள்! தைரியமாக நட! ஊமையாக நடித்துப் பார்! யாரும் கேட்டால் அந்தப்புரத்துச் சேடி என்று கைஜாடை மூலம் காட்டி விடு!” என்று சிங்கராயன் சொல்லியனுப்பினான். 


சுல்தான் பாசறையில்! 

சுல்தான் இளவரசன் மாலுவை அழைத்தான். மாலு பயபக்தியுடன் வந்து நின்றான். 

சுல்தான் முகத்தில் களை இல்லை; தெம்பில்லை.நம்பிக்கை இல்லை. கண் கலங்கி இருந்தது. நரம்புகளெல்லாம் வெறி பிடித்துக் கிளம்பிக் கொண்டிருந்தன. 

“மாலு? நீ மகமதியன்! இந்துக்களின் பகைவன். மகமதிய சாம்ராஜ்ஜியத்தின் வெற்றியை நம்பிக்கொண் டிருக்கும் பேரரசின் வம்சவிளக்கு! நமது மூதாதையரின் கீர்த்தியை மனத்தில் நினைத்துக்கொள். நாம் அரசாண்ட பெருமைகளை ஒருமுறை எண்ணிப் பார்த்துக்கொள்! கோட்டைக்கொத்தளங்களில் கொடி கட்டி வாழ்ந்த பீஜப்பூரின் சுதந்திரத்தையும் நினைத்துப் பார்! அதன் பிறகு நட! உனது தந்தை கட்டளை இடுகிறேன். சாகப் போகும் ஒரு முடியரசின் தலைவன் கட்டளை இடுகிறேன். உனக்கு விருப்பமில்லாவிட்டாலும் உன் மனம் இடந்தர மறுத்தாலும் நாட்டுக்காக நீ செய்யத்தான் வேண்டும். நான் செய்துவிட முடியும். ஆனால் நான் சொல்லப் போவதை நீ செய்தால்தான் பெருமை உண்டு! நாட்டு மக்கள், களத்தில் வாடும் வீரப்படையினர் நமது ராஜ குடும்பத்தை மதிப் பார்கள். உன் தியாகத்தைப் போற்றுவார்கள். ஒரு மனிதன் ஆயுள் காலம் முழுதும் செய்த தவறுகளை அவன் சாகப் போகுமுன் செய்யும் தியாகத்தால் மறைத்துவிட முடியும்! மாலு! என் அருமை மகனே ! இந்த வாளை எடுத்துக் கொள்! நேராக ரகசியச் சிறைக்குப் போ! அங்கே இருக்கிறாள் விஜயநகர இளவரசி துங்கபத்திரை. அவளை உன் கைகளா லேயே வெட்டி விடு! போ! மனசைத் தேற்றிக்கொள்! விஜய நகரம் போரில் வெல்லட்டும், பீஜப்பூர் அது வெளியிட்ட நிபந்தனையாலாவது வெல்லட்டும்! மாலு! மாலு! போடா! போ!” என்று கூவினார் சுல்தான். 

மாலு உடம்பில் வெறியேறிவிட்டது. இதயத்தில் குடி கொண்டிருந்த மோகினிப் பிசாசு தலை தெறிக்க ஓடிவிட்டது. அவனுடைய இரும்புக் கரத்தை சுல்தான் முன் பணிவுடன் ஏந்தி நின்றான். 

“உனக்கு மகுடாபிஷேகம் சூட்டினால் எவ்வளவு மகிழ் வேனோ அதைப் போல் பதின்மடங்கு மகிழ்ச்சி அடை கிறேன். இன்று நீ எனக்காகச்செய்யப் போகும் கொலையை மகமதிய சமுதாயம் ஒரு தியாகம் என்றே வர்ணிக்கும். புகழ்மாலை சூட்டும்/ போய் வா!” என்றார் சுல்தாள். 

மாலு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வாளை உருவிய வண்ணம் ரகசியச் சிறைக்கு நடந்தான். 

ரத்தம் முறிந்து நீராகி விட்டது போலிருந்தது மாலுவுக்கு. அம்பைப் போல் கிளம்பி ஓடினான். எதிர்கால எண்ணங்கள் சரிந்து மண்ணானதை எண்ணி அவனது கால்கள் பின்னின. கண்டும் கேட்டுமிராத பூதங்கள் அவனைத் துரத்திக் கொண்டு வருவதுபோல் நினைத்து வாய் விட்டு அலறிய வண்ணம் தெருத் தெருவாகக் கடந்து வந்தான். 

சிறை நெருங்கிவிட்டது. கோட்டைச் சுவர் கடந்து உள்ளே வந்துவிட்டான். காவலர்கள் பீதி அடைந்து வழி விட்டு ஒதுங்கிக் கொண்டார்கள். துங்கப்பத்திரையின் இதயத்தை இளக வைக்க ஒவ்வொரு நாளும் அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் மனக்கண்முன் வந்து அணி வகுத்து நின்றன. பெண் புலிபோல் அவள் சீறி விழுந்த தோரணைகளை அவன் மறந்துவிடவில்லை. அவளுடைய பேச்சை பலமுறை மாலு உருவகப்படுத்திப் பார்த்திருக் கிறான். பெண்களின் குரலுக்கு இரண்டு தன்மைகள். இதயம் குளிர்ந்திருக்கும் போது அவர்களது குரல் இனிமையாக இருக்கும். கேட்பதற்குச் சுவையாகத் தெரியும். அவர்கள் கோபமாக இருந்தால் வார்த்தைகள் நெருப்புக் கங்குகளாக உதிரும். அதில் சுவை இருக்காது. அறுந்து சுருண்டு கிடக்கும் வீணைக் கம்பியில் கதவிடுக்கின் வழியாக வீசும் காற்றுப் பட்டது மாதிரி இருக்கும். மாலுவுக்கு இது தெரி யாதா என்ன? அவனோ மகமதிய இளைஞன். சுல்தானின் செல்லப்பிள்ளை. தன் மாளிகைக்குச் சொந்தக்காரன். அவனுக்குக் குயிலின் குரலும் தெரியும். சாகப் போகும் கிளியின் மொழியும் தெரியும். துங்கபத்திரை அவன் உடம் பெல்லாம் ஓடிக்கொண்டிருந்தவள்; அவனுடைய உள்ளத்தை இடைவெளி இல்லாமல் நிறைத்துக் கொண்டிருந்தவள். உனக்காக எது வேண்டுமானாலும் செய்கிறேன். எதை வேண்டுமானாலும் கொண்டு வருகிறேன். நீ உன் உள்ளத்தில் இந்த வாலிபனுக்கு ஒரு மூலையில் மட்டும் இடம் ஒதுக்கிவை. என்று அவன் தினசரி கெஞ்சிக் கொண்டிருந்தானே.அந்த நாள் மறைந்து அவளைத் தொட இருந்த கரத்தால் அவளையே துண்டிக்க வந்து கொண்டிருந்தான். 

ரகசியச் சிறையின் இரண்டாவது வாசல் வந்து விட்டது. அப்பொழுது தான் மாலுவின் தலை சுற்றத் தொடங்கியது. கதவருகில் ஓடி வந்து பாதையைத் திரும்பிப் பார்த்தான். பூதலமே புகை சூழ்ந்ததுபோல் தெரிந்தது. கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த பீஜப்பூர் பளிங்கு மசூதி மட்டும் அவன் கண்களுக்குமுன் நிழலாடிக் கொண் டிருந்தது. அந்த மசூதியின் மேல் நின்றுகொண்டு அவனு டைய தந்தை பீஜப்பூர் சுல்தாள் சபதம் செய்வது போல அவனுக்குத் தோன்றியது. ‘போரில் விஜயநகரம் வெல்லட் டும். புறப்படு மாலு போ!’ என்று சூடேற்றி அனுப்பி வைத்த அந்த வெறிச் சொற்கள் மாலுவின் தலையில் அழுத்திக்கொண்டு நின்றன. தாங்க முடியாத சுமையைத் தாங்கி நிற்கும் கிழவியைப் போல் அவன் உடல் குன்றிப் போய்விட்டது; ஒரு கணம் நிதானித்து ‘குலாம்’ என்று கத்தினான். 

சிறைக் கோட்டத்தின் கிழட்டுக் காவலன் ஓடிவந்து நின்றான். 

“இதோ இருக்கிறது சாவி. சுல்தான் கட்டளை. ரகசிய சிறையிலிருக்கும் பெண் கைதியைக் கொலை செய்துவிட வேண்டும்” என்று ஆக்ஞை பிறப்பித்தான். 

குலாம் இரவெல்லாம் காவல் இருந்துவிட்டு அப்போது தான் தூங்கத் தொடங்கி இருந்தவன். இளவரசின் கட்டளை அவனுக்குப் புரியவில்லை. ஒன்றும் தெரியாமல் திகைத்தான். மாலு மறுபடியும் சொன்னான். 

“ஒன்பதாவது கொட்டடியில் இருக்கும் பெண்ணை அங்கேயே கொன்று விட்டு வா” என்றான். 

குலாம் கொட்டடிச் சாவியை வாங்கிக்கொண்டு தள்ளாடிக் கொண்டே ஓடினான். 

இளவரசன் மாலு மசூதியைப் பார்த்துக்கொண்டே கண்களை மூடிக் கொண்டு நின்றான். சற்று நேரத்திற்கு பிறகு “ஹா! அய்யோ” என்ற ஒரு குரல் கேட்டது. மாலு, சோகம் தாங்காமல் கைகளை இறுகப் பிசைந்தான்; அவன் அணிந்திருந்த மோதிரங்கள் நெளிந்து விழுந்தன. 

உடனே மாலு போர்க்களத்திற்குத் திரும்பினான். வரும் வழியில் அரண்மனைக்குள்ளிருந்த ரோஜாச் செடியில் மலர இருந்த மொட்டுக்களையெல்லாம் கசக்கி எறிந்து கொண்டே வந்தான்.

– தொடரும்…

– துங்கபத்திரை (நாவல்), முதற் பதிப்பு: பெப்ரவரி 1970, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *