(1960ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பாடும் குரல்
பாட்டு
புகழனார் தமக்குரிமைப் பொருவில்குலக் குடியின்கண்
மகிழவரு மணம்புணர்ந்த மாதினியார் மணிவயிற்றில்
நிகழுமலர்ச் செங்கமல நிரையிதழின் அகவயினில்
திகழவரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார்.
தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயா
உம்பர் உலகு அணையஉறு நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதி யார் இருந்தார்.
காட்சி : 1
[திலகவதியார் வீடு. அவருடன் நெருங்கிப் பழகும் பூங்கொடி வந்து அன்புடன் பேசி ஆறுதல் கூறுகிறாள்.]
பூங்கொடி : அம்மா திலகவதி! உன் கவலை துயரம் எல்லாம் உணர்கிறேன், ஆனாலும்-
திலகவதி : (பெருமூச்சு விட்டு) யார் எவ்வளவு உணர்ந்தாலும் என்ன செய்ய முடியும் அம்மா? நான் வந்த வழி. நான் பட்டுத் தீர வேண்டும். இந்த வயதில் எனக்கு ஈசன் இப்படி – (கலக்கம்.)
பூங் : திலகவதி ! இப்படித் துயரப்பட்டுக் கலங்காதே. யார் என்ன செய்ய முடியும்? எப்படியாவது நீதான் உன் மனத்தைத் தேற்றிக்கொள்ள வேண்டும்.
தில : அது தான் முடியவில்லை அம்மா. நான் ஒரு பாவி. என்னையும் தம்பியையும் விட்டுவிட்டு – இந்தச் சின்ன வயதில் திக்கில்லாமல் விட்டுவிட்டு – அப்பாவும் அம்மாவும் ஒருவர்பின் ஒருவராகப் போய்விட்டார்களே. பூங் : திரும்பத் திரும்ப அதையே நினைத்து நினைத்துக் கலங்குவதால் பயன் என்ன அம்மா? தில : நான் எப்படி மறப்பேன்? போன மாதம் வரையில் குடும்ப வேலை என்றால் என்ன என்று தெரியாதபடி என்னை வளர்த்து வந்தார்கள். திடீரென்று இப்படிப் பிரிந்து போய்விட்டார்களே!
பூங் : நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. தம்பி மிகவும் சிறியவன். தில : அவனை நான் எப்படிக் காப்பாற்றப் போகிறேனோ, தெரியவில்லை. அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. இரவில் எதையாவது நினைத்துக்கொண்டு தூக்கத் தில் எழும்போது – அம்மா அம்மா’ என்று அலறிக் கொண்டு அழுகிறான்.
பூங் : அய்யோ ! இன்னும் அம்மா இருப்பதாகவே நினைக்கிறது அவனுடைய மனம்.
தில : பூங்கொடி ! (அமைதி)
பூங் : என்ன திலகவதி? ஏன் அப்படிக் கண்ணீர் விடுகிறாய்?
தில : தம்பியின் முகத்தில் அடிக்கடி ஏக்கம் இருக்கிறது. அவனைச் செல்வக் குழந்தையாக என் பெற்றோர்கள் வளர்த்தார்கள். இப்போது அவன் முகத்தில் ஏக்கம் காணும்போதெல்லாம்.
பூங் : இப்படிக் கலங்காதே திலகவதி.
தில : தம்பியின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் நெஞ்சம் உடைந்து போகிறது அம்மா. என் கண்ணீரை நிறுத்த முடியவில்லை அம்மா.
பூங்: கலங்காதே அம்மா.
தில : இன்று காலையில் அவனுக்கு உணவு இட்டபோது அவன் முகத்தைப் பார்த்ததும் என்ன என்னவோ நினைவுகள் வந்துவிட்டன. என் கண்ணீரை அவன் பார்த்தால் அழுது கலங்குவானே என்று ஒன்றும் பேசாமல் தோட்டத்திற்குப் போய்விட்டேன். பூங் : நீயே இப்படிக் கலங்கினால், தம்பியை எப்படித் தேற்ற முடியும் அம்மா? இனிமேல் அப்படிச் செய் யாதே. உன்னைவிட இளமனம் உள்ள அவனுக்குத் துயரம் தோன்றா தபடி காப்பாற்ற வேண்டியது உன் கடமை அல்லவா? தில : ஆமாம் பூங்கொடி. தெரிகிறது. என்ன செய்வேன் ?
பூங் : உன் மனத்தை முன்னே தேற்றிக்கொள்ள வேண்டும்.
தில : என் மனம் கேட்கவில்லையே. நான் என்ன செய்வேன்? இன்னும் ஆறுவாரம் முடியவில்லையே. என்னை யும் தம்பியையும் பக்கத்தில் உட்காரவைத்து எங்கள் அம்மா சோறு இட்டுப் பசி தீர்த்தாளே போன மாதத்தில். அந்த அன்னையின் கை அன்போடு சோறு இட்ட நாள் மாறிவிட்டதே. தம்பிக்கு நான் சோறு இடும் காலம் இப்படி வரும் என்று எதிர்பார்க்க வில்லையே.
பூங் : இப்படி எதை எதையோ எண்ணாதே திலகவதி.
தில : எப்படி அம்மா எண்ணாமல் இருப்பேன்?
பூங் : திலகவதி! ஒருவகையில் உன் பெற்றோர் உனக்குச் செய்யவேண்டிய முக்கியமான கடமையை முடித்து விட்டுப் போனார்கள் என்றே சொல்ல வேண்டும்.
தில : எதைச் சொல்கிறாய் அம்மா?
பூங் : கடவுள் இந்த அளவிற்காவது கருணை செய்தார் என்று ஆறுதல் அடைய வேண்டும் அம்மா. நீ நினைக்கிறபடி பெற்றோர் உன்னைத் திக்கற்றவளாய் விட்டுவிட்டுப் போகவில்லை. உன் வாழ்க்கைக்குத் துணைதேடி, இன்னார் உன் கணவர் என்று ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்கள் அல்லவா?
தில : (பெருமூச்சு – அமைதி)
பூங் : திருமணம் செய்யவில்லையே தவிர, மணம் பேசி இசைந்துவிட்டார்கள் அல்லவா? அதுவே முக்கால் பகுதித் திருமணம் நிறைவேறியதுபோல் தானே? அவர் எப்போது வருவார் அம்மா?
தில : எனக்குத் தெரியாது, பூங்கொடி.
பூங் : இப்போது எங்கே இருக்கிறார்?
தில : அரசருடைய ஆணையால் போர்க்களத்துக்குப் போனவர் இன்னும் அங்கேயே இருக்கிறாராம்.
பூங் : அப்படியானால், இன்னும் போர் முடியவில்லை என்று சொல்.
தில : அப்படித்தான் தெரிகிறது. பூங் : போர் முடிந்ததும், விரைவில் திரும்பி வருவார். வந்ததும் உனக்குத் திருமணம் நடக்கும். அதன் பிறகு, உன் வாழ்க்கையில் ஒரு குறைவும் இருக்காது. தம்பியும் சில ஆண்டுகளில் வளர்ந்து பெரியவனாகிவிட்டால், அவனுக்கு ஒரு குடும்பம் ஏற்பட்டுவிட்டால், பிறகு எல்லாம் நல்லபடி நடக்கும் அம்மா–வீணாகக் கலங்காதே.
தில : பூங்கொடி ! அதோ தம்பி வருகிறான். இந்தப் பேச்சு அவன் செவியில் விழவேண்டா. அம்மாவைப் பற்றி யார் என்ன பேசினாலும் அவன் முகமே மாறிவிடுகிறது.
பூங் : அய்யோ! அவன் மனம் என்ன என்ன எண்ணி ஏங்குகிறதோ?
தில : மெல்லப் பேசு.
மரு : அக்கா !
தில : எங்கே போய் வந்தாய் தம்பி? பசிக்கிறதா? சாப்பிடுகிறாயா?
மரு : சாப்பிடுவேன். இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும். பூங்கொடி அக்கா இப்போது தான் வந்தார்களா?
பூங் : நான் முன்னமேயே வந்தேன் தம்பி, உன்னைத்தான் காணோம். எங்கே போய் வந்தாய்?
மரு: கோயில் பூந்தோட்டம் பக்கமாகப் போய் வந்தேன். அங்கே கோயில் மண்டபத்தில் வெளியூர்த் துறவிகள் இருவர் வந்திருந்தார்கள். அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
தில : துறவிகளா ? எந்த நாட்டார்? எந்த ஊரார்?
மரு : மதுரைப் பக்கத்திலிருந்து வந்திருக்கிறார்கள்.
தில : நம் ஊரில் தங்கியிருக்கப் போகிறார்களா? ஏதாவது நல்ல நூல் பற்றிப் பேசப் போகிறார்களா?
மரு : இல்லை அக்கா. அவர்கள் சிதம்பரத்துக்கு வந்து, அங்கிருந்து காஞ்சிக்குப் போகிறார்கள். வழியில் நம் ஊரில் ஒருநாள் தங்கி இளைப்பாறுகிறார்கள்.
தில : அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்ததாகச் சொன்னாயே !
மரு : அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனா லும் கேட்கக் கேட்க அறிவுக்கு விருந்தாக இருந்தது.
பூங் : எதைப் பற்றி?
மரு : திருக்குறளைப் பற்றிப் பேசினார்கள்.
பூங் : திருக்குறள் உனக்குத் தெரியுமே தம்பி! நீ நன்றாகப் படித்திருப்பதாகத் திலகவதி சொன்னாளே!
மரு : இருந்தாலும், ஒவ்வொரு குறளையும் அவர்கள் ஆழமாகச் சிந்தனை செய்து சொல்லும் கருத்துக்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!
தில : அப்படியா தம்பி!
மரு : ஆமாம் அக்கா ! கேள்வியால் தோட்கப்படாத செவி என்று திருவள்ளுவர் சொன்னது பெரிய உண்மை. நாம் எவ்வளவோ கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
பூங் : இன்னும் யார்யார்வந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்?
மரு : நானும் பக்கத்துத் தெரு மாணவர்கள் சிலரும் கேட்டுக்கொண்டிருந்தோம். வடநாட்டிற்கு யாத்திரை யாகப் போய்த் திரும்பியவர்கள் மூன்று பேர் மண்டபத்தில் தங்கியிருந்தார்கள். அவர்களும் எங்களோடு இருந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
பூங் : வடநாட்டில் நம் அரசர் நடத்தும் போரைப் பற்றி அவர்கள் ஏதாவது சொன்னார்களா?
மரு : சொன்னார்கள்.
பூங் : என்ன சொன்னார்கள் தம்பி?
மரு : தமிழர்படை வீரத்தோடு போர் செய்கிறதாம். வெற்றி நமக்குத்தானாம். விரைவிலேயே போர் முடிந்து விடுமாம். கலிப்பகையார் கலிப்பகையார் என்று அத்தான் பெயரைப் பெருமையோடு சொல்லிப் புகழ் கிறார்கள் . அவரால் தான் நம் அரசர்க்கு வெற்றி என்று பாராட்டுகிறார்கள். அவர் நம் அத்தான் என்பதை நான் ஒருவர்க்கும் சொல்லவில்லை.
பூங் : கடவுள் காப்பாற்ற வேண்டும். இனிக் குடும்பத்துக்கு அவர் தான் தெய்வம் போல. அவர் வெற்றி மாலை சூடித் திரும்பிவந்து உங்களைக் காக்கவேண்டும். சரி, திலகவதி! நேரம் ஆய்விட்டது. நான் சென்று வரட்டுமா?
தில : போய்வா பூங்கோதை ! (பூங்கோதை போகிறார்.)
(சோக இசை – திலகவதியார் வீடு – வெளியூரிலிருந்து ஒருவன் ஓலை கொண்டுவந்து கதவைத் தட்டுகிறான்.)
வந்தவன் : (கதவைத் தட்டிக்கொண்டே) யார் அம்மா வீட்டிலே?
தில : (உள்ளே இருந்து குரல் கொடுத்து) யார் அய்யா? எந்த ஊர் ?
வந்த : வெளியூர் அம்மா. இது தானே புகழனார் வீடு?
தில : (கதவைத் திறந்து) ஆமாம், என்ன செய்தி? (அப்போது மருணீக்கியார் வெளியே போயிருந்து திரும்பிவருகிறார்.)
வந்த : இழவோலை அம்மா.
மரு : (அதைக் கையில் வாங்கியபடி திடுக்கிட்டு) என்ன இது? எங்கே? எந்த ஊரிலே? (வாங்கிப் படிக்கிறார்.)
திருவாமூர் புகழனாரின் மக்களுக்குத் தெரிவிக்கும் துயரச் செய்தியாவது : எங்கள் கொடிய வினையின் பயனால் எங்கள் அருமை மகன் கலிப்பகை போர்க்களத்தில் விழுப்புண் பட்டு மாண்டதாக அரசரிடமிருந்து செய்தி வந்தது. எங்கள் குடும்பம் கதிகலங்கி…தில : ஆ தெய்வமே! தெய்வமே! முடிந்ததா என் வாழ்க்கை! தெய்வமே! (மூர்ச்சையாகிறார்.)
மரு : அய்யோ! அக்கா, அக்கா! இப்படியா ஆக வேண்டும்? அக்கா அக்கா!
தில : (சிறிது நேரம் கழித்து, ஆழ்ந்த குரலில்) தம்பி!
மரு : (அலறிய நிலையில்) அக்கா !
தில : தம்பி! அழாதே.
மரு : எனக்குச் சொல்கிறாயே, அக்கா.
தில : இனி நான் அழவேண்டியதில்லை. தம்பி! என் வாழ்க்கை முடிந்தது.
மரு : அய்யய்யோ ! அப்படிச் சொல்லாதே அக்கா.
தில : அம்மாவை அனுப்பிவைத்தார்களே, அது போல் என்னையும் அனுப்பிவிடு தம்பி!
மரு : அக்கா! அப்படிச் சொல்லாதே, வேண்டா, வேண்டா .
தில : இனி நான் வாழ மாட்டேன், தம்பி.
மரு : உன் வாயால் சொல்ல வேண்டா, சொல்லாதே.
தில : நான் வாழக்கூடாது தம்பி! என்னால் முடியாது. அவருடன் போய்ச் சேர்வேன், போய்விடுவேன்.
மரு : அய்யோ ! என்னைக் கைவிட்டுவிட்டா?
தில : அவரிடம் என் உயிர் போய்ச் சேர வேண்டும்.
மரு: என் கதி என்ன அக்கா? எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்? நான் மட்டும் இந்த உலகத்தில் ஏன் வாழ வேண்டும்? அம்மா ! அம்மா!
தில : (அமைதி. பெருமூச்சு) தம்பி!
மரு : அம்மாவுக்குப்பின்-நீ தான்…
தில : தம்பி ! (கலக்கம். துயரம்.)
காட்சி : 2
[தெரு. தெருவில் உள்ளவர் இருவர் பேசிக்கொள்கிறார்கள்.]
ஆள் 1: என்ன அங்கே? ஏதோ குழப்பமான ஒலி கேட்கிறதே. அந்த வீடு எப்போதும் அமைதியாய் இருக்கும் வீடு அல்லவா?
ஆள் 2 : எங்கே? புகழனார் வீட்டிலா?
ஆள் 1: ஆமாம். என்ன குழப்பம் ?
ஆள் 2: அய்யோ பாவம்! அந்தத் துயரக்கதையை ஏன் கேட்கிறாய்.
ஆள் 1: அதுதான் தெரியுமே. மக்கள் இருவரையும் திக்கில்லாமல் விட்டுவிட்டு அவர்கள் மாண்டு போனார்கள். அதற்கு இப்போது என்ன?
ஆள் 2 : பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்று
ஆள் 1: என்ன அய்யா அது ? வேறே ஏதாவது ?
ஆள் 2: அது தான் அய்யா கொடுமை! தெய்வத்திற்குக் கருணையே இல்லை போல் தெரிகிறது. அந்தப் பெண்ணுக்குப் பெற்றோர் இருக்கும்போதே திருமணத்துக்குப் பேசி முடித்துவிட்டார்கள் அல்லவா?
ஆள் 1: ஆமாம், ஆமாம்.
ஆள் 2: அந்த மணமகன் இறந்துவிட்டதாகச் செய்தி வந்திருக்கிறதாம்.
ஆள் 1: என்ன? என்ன? என்ன அய்யா?
ஆள் 2: வடக்கே நம் அரசர் நடத்தும் போருக்குப் போய் இருந்தார் –
ஆள் 1: அது தெரியும் அய்யா? வந்த செய்தி உண்மையானதா? யார் சொன்னது? என்ன அய்யா அது?
ஆள் 2: இந்த உலகத்தில் என்ன என்னவோ நடக்கிறது அய்யா !
ஆள் 1: கொடுமை, கொடுமை! எனக்கு அந்த ஆளே தெரியுமே. பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். கலிப்பகையார் என்று அவர் பெயரைச் சொன்னால், யமனும் நடுங்குவானே ! அய்யோ !
ஆள் 2: கொடுமை, கொடுமை !
ஆள் 1: என்ன கொடுமை அய்யா! தந்தையும் தாயும் இறந்து இன்னும் இரண்டு மாதம் முடியவில்லை. இதற்குள் வரப்போகிற மாப்பிள்ளையும் இப்படி
[அப்போது வழியில் போய்க்கொண்டிருந்த பூங்கொடி அந்தப் பேச்சைக் கேட்டுத் திடுக்கிடுகிறாள்.]
பூங் : என்ன அய்யா அது? யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள்?
ஆள் 1: அதோ அந்தப் புகழனார் வீட்டில் மரணச் செய்தி வந்திருக்கிறதாம் அம்மா.
பூங் : என்ன? மரணச் செய்தியா? அதனால் தான் அவ்வளவு பேர் கூடியிருக்கிறார்களா?
ஆள் 1: பெற்றோர் இருந்தபோதே பெண்ணுக்குத் திருமணம் பேசி –
பூங்: (பரபரப்போடு) ஆமாம். அது தெரியும்.
ஆள் 1: அந்த மாப்பிள்ளை போர்க்களத்தில் மடிந்து போய் விட்டாராம்.
பூங் : அய்யோ திலகவதி! (அலறியபடியே ஓடுகிறாள்.)
காட்சி : 3
[திலகவதியார் வீடு. பூங்கொடி ஆறுதல் கூற வந்து பேசுதல்.]
பூங் : திலகவதி!
தில : (பெருமூச்சு . அமைதி )
பூங் : திலகவதி!
தில : என்ன ?
பூங் : என்ன திலகவதி ! சித்திரம் போல் இப்படி இருக்கிறாயே. இப்படி இருந்தால் –
தில : இனிமேல் எனக்குக் கவலை என்ன அம்மா இருக்கிறது?
பூங் : என்ன, இப்படிப் பேசுகிறாயே?
தில : என்ன பூங்கொடி?
பூங்: நேற்று ஓடி வந்து உன்னைப் பார்த்தேன். அழுத கோலத்தில் கிடந்த உன்னோடு பேச வாய்வரவில்லை. நானும் அழுது கலங்கினேன். இப்போது உனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அம்மா.
தில : என்ன அம்மா செய்வது?
பூங் : நீ எப்படி ஆறுதல் அடையப் போகிறாய்?
தில : வருவது வரட்டும் அம்மா.
பூங்: என்னால் நினைக்கவும் முடியவில்லையே. (அமைதி) இப்படி மூலையிலே உட்கார்ந்திருந்தால் – (திலகவதி பேசவில்லை) தம்பி எங்கே அம்மா?
தில : வெளியே போயிருக்கிறான்.
பூங் : சரியாகப் பேசவும் மாட்டேன் என்கிறாயே, திலகவதி!
தில : என்ன பேசுவது?
பூங் : கலங்காதே அம்மா.
தில : பூங்கொடி ! நான் ஏன் கலங்கப் போகிறேன்? துயரத்தில் கால்வைக்கும் போது தான் கலக்கம், துன்பம் எல்லாம். துயரத்தின் எல்லையைக் கண்ட பிறகு ஒன்றும் இல்லை அம்மா. எனக்கு இனி வரவேண்டியது என்ன இருக்கிறது?
பூங் : அப்படி மனம் சோர்ந்து போகாதே அம்மா.
தில : சோர்வு ஏது, பூங்கொடி? என் வாழ்க்கை முடிந்து விட்டது.
பூங் : அய்யய்யோ ! அப்படி எல்லாம் நினைக்காதே.
தில : வேறு எப்படி நினைக்க வேண்டும்? எனக்குத் திருமணம் என்று அவரைப்பற்றிப் பேசி முடிவு செய்த போதே நான் அவருடைய பொருளாகிவிட்டேன். தந்தையும் தாயும் இறந்த பிறகு, எனக்கு அவர்தான் ஒரு பற்றாக இருந்தார். அவர் வாழ்க்கை முடிந்த போதே என் வாழ்க்கையும் முடிந்தது தான்.
பூங் : என்ன திலகவதி இப்படிப் பேசுகிறாயே!
தில : அப்போதே என் உயிர் உடலைவிட்டுப் போயிருக்க வேண்டும். அதுதான் நான் செய்த முடிவு. தவறி விட்டது தம்பியால்.
பூங் : வேண்டா வேண்டா அம்மா! அப்படியெல்லாம் சொல்லாதே.
தில : என் முடிவை – என் துணிவை – தம்பியின் கண்ணீர் மாற்றிவிட்டது. தம்பியின் அலறல் மாற்றிவிட்டது. இல்லையானால் என் ஆவி அவரிடம் சென்று கலந்திருக்கும். எனக்கு ஏன் இனி வாழ்க்கை ?
பூங் : தம்பியின் வாழ்க்கையைப் பார் அம்மா. அவனுக்கு இந்த உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்? நீ அப்படித் துணிந்தால், அவன் அதன் பிறகு வாழ மாட்டான் அம்மா .
தில : அதை நினைத்துத்தான் இன்னும் உயிரோடு வாழ்கிறேன். இல்லையானால்…
பூங் : திலகவதி! இனிமேல் அந்த எண்ணமே வேண்டா அம்மா.
தில : தெய்வமே! என் வாழ்க்கையில் இதுவும் ஒரு சோதனையா? வாழ்க்கை முடிந்த பிறகும் உயிர்விட உரிமை இல்லாமல் என்னைப் படைத்துவிட்டாயே!
காட்சி : 4
[திருவாமூரில் ஒரு வீட்டுத் திண்ணை . சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.]
ஆள் 1: என்ன அய்யா, நம் ஊர்க்கு ஏதோ நல்ல காலம் போலத் தோன்றுகிறதே!
ஆள் 2: என்ன அது? எதை நினைத்துச் சொல்கிறாய்?
ஆள் 1: எந்தப் பக்கம் பார்த்தாலும் அறச்சாலைகள், எந்த வழியில் பார்த்தாலும் தண்ணீர்ப் பந்தல்கள், புதிய புதிய சோலைகள், குளங்கள், வருவார் போவார்க்கும் ஏழைகளுக்கும் உணவும் உதவியும். நம் ஊர்க்கு எவ்வளவு சிறப்பான பேர், தெரியுமா? இந்தத் திருவாமூர் ஏற்பட்டு இவ்வளவு பெருமை இதுவரை கண்டதில்லையே. வெளியூர்களிலெல்லாம் இப்போது நம் ஊரைப் பற்றியே புகழ்ந்து பேசுகிறார்கள்.
ஆள் 2: ஊருக்கா இந்தப் பெருமை எல்லாம் ? இல்லை, இல்லை. எல்லாம் அந்த மருணீக்கியார்க்குத்தான்.
ஆள் 1: அதைத்தான் சொல். வேறு எந்த ஊரில் இப்படிச் செய்கிறார்கள்?
ஆள் 2: அது உண்மை தான். புகழனார் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் வாரி வாரி வழங்குகிறார் வள்ளல் போல. அடஅட! இந்த மனம் நம் நாட்டு அரசர்க்கும் வராது அய்யா. கவலை இல்லாமல் அறங்கள் செய்தது செய்தபடியே செல்வத்தை எல்லாம் கரைத்துவிட்டார்.
ஆள் 3 : (அப்போதுதான் அந்தத் திண்ணைக்கு வந்து உட்கார்ந்தபடி பேச்சில் கலந்து கொள்கிறார்.) யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள்? செல்வத்தை எல்லாம் கரைத்துவிட்டதாகச் சொன்னீர்களே!
ஆள் 1: நம் ஊரில் மருணீக்கியார் இருக்கிறாரே அவரைப் பற்றித்தான்.
ஆள் 3 : ஓஓ ! அந்த உத்தமரைப் பற்றியா? அது ஒரு தனிக் குடும்பம் அய்யா. தந்தை தாய் மகன் மகள் எல்லாம் தனி வகையான மனிதர்கள்.
ஆள் 1: சந்தேகமே இல்லை. இந்தச் சின்ன வயதிலேயே இவ்வளவு சிறந்த அறங்கள் செய்கிறாரே.
ஆள் 3: அந்தக் குடும்பத்துக்கு வந்த துன்பம் வேறொரு குடும்பத்துக்கு வந்திருந்தால் இருந்த இடம் தெரியாமல் எல்லாம் அழிந்து போயிருக்கும்.
ஆள் 2: இந்தப் புகழனாரின் குடும்பத்துக்கு நாளுக்கு நாள் புகழ் ஒளிவிட்டு வளர்கிறது.
ஆள் – 3 : நெருப்பில் செத்தை விழுந்தால், ஒரு நொடியில் எரிந்து சாம்பலாகும். அந்த நெருப்பில் பொன்னை இட்டால், திருவள்ளுவர் சொன்னது போல், சுடச்சுட ஒளிவீசும், மேன்மேலும் ஒளிமிகும் அய்யா!
ஆள் – 2 : ஆமாம். உண்மைதான். துன்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து விடாமல் வந்துகொண்டிருந்தன.
ஆள் – 3 : இதை எண்ணிப்பார் அய்யா! திலகவதி என்ற அந்தப் பெண்ணுக்கு – இப்படிச் சொல்வதற்கும் நாக்குக் கூசுகிறது, அவ்வளவு உத்தமியாக உயர்ந்து விட்டார் அந்த அம்மா – திருமணம் ஆகவில்லை. பெண் கொடுப்பதாகப் பேச்சு முடிவாகியிருந்தது. அவ்வளவு தான். அந்த ஆள் போர்க்களத்தில் இறந்துவிட்டார் என்றால், கணவனை இழந்த கற்புடைமனைவி போலவே, இளமையும் அழகும் துறந்துவிட்டாரே அந்த உத்தமி. எண்ணிப் பார்க்க முடியுமா, இதை வேறு குடும்பத்தில்?
ஆள்-1: உனக்குத் தெரியுமா அய்யா! போர்க்களத்திலிருந்து செய்தி வந்தவுடன், அந்த அம்மா தானும் அப்போதே உயிரைவிடத் துணிந்துவிட்டாளாம். கடைசியில் தம்பி அழுது வேண்டிக்கொண்டதால் தான், உயிரோடு வாழ்கிறாராம். பார்த்தாயா, அய்யா!
ஆள் – 2 : அக்காவுக்கு ஏற்ற தம்பி அய்யா. அந்த அம்மா உயிரைத் துரும்பாக மதிப்பது போலவே, மருணீக்கி யாரும் செல்வத்தை ஒரு பொருளாக மதிக்காமல் இவ்வாறு செலவழித்து அறங்கள் செய்திருக்கிறார்.
ஆள்-3: மருணீக்கியாரின் மனமே மாறிவிட்டது, தெரியுமா? உலகத்தில் அவர்க்கு எதன்மேலும் பற்றே இல்லை. குடும்ப வாழ்க்கை, செல்வம் தேடுதல் எல்லாவற்றையுமே வெறுத்துவிட்டார்.
ஆள்-2 : அப்படியானால், திருமணம்?
ஆள்-3 : அவர் துறவியே ஆய்விட்டார் என்று சொல்ல வேண்டும் அய்யா! அந்த வீட்டில் இப்போது அவர் இல்லை, தெரியுமா. அக்காவைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டுப் பாடலிபுத்திரம் போய்விட்டார். ஆனால் அக்காவுக்கு அந்த வகையில் ஒரு குறை தான் என்று – சொல்கிறார்கள். பிறந்த சமயநெறியை விட்டுவிட்டு, அங்கே வேறு சமயத்தாருடன் பழகிக் கெட்டுப் போகிறாரே என்று அந்த அம்மா வருந்துவதாகச் சொல்கிறார்கள்.
ஆள்-1 : உத்தமர்கள் எங்கே போனாலும் யாருடன் பழகினாலும் கெட மாட்டார்கள் அய்யா.
ஆள்-2 : இந்தச் சிறுவயதிலேயே இவ்வளவு தான தருமம் செய்யும் மனம் உடையவர் ஒருகாலும் கெட்டுப்போக மாட்டார். பாடலிபுத்திரத்திலும் நல்ல பெயரும் புகழும் பெற்று விளங்குவார். இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துப்பார், தெரியும்.
ஆள்-3 : உண்மைதான். மாணிக்கம் எங்கே போனாலும் தன் ஒளியை வீசிக்கொண்டே இருக்கும். ஆனாலும், தனக்காகவே உயிர் வாழ்கின்ற அக்காவைத் தனியாக விட்டுவிட்டு, வெளியூர்க்குப்போய் வாழ்வது என்றால்…..
ஆள்-1 : அங்கே பெரிய அறிஞர்களோடும் துறவிகளோடும் பழகிக் கலைகளில் தேர்ந்தவராக விளங்க வேண்டும் என்ற ஆசை இருக்கலாம்.
ஆள்-3 : எல்லாம் வீண் ஆசை. தனக்காகவே வாழ்கிற தமக்கையைத் தனியே விட்டுவிட்டு, பேரும் புகழும் பெற வேண்டுமா?
ஆள்-1 : நேற்று யாரோ சொன்னார்கள், அந்த அம்மாவும் வெளியூர்க்குப் போகப் போவதாக.
ஆள்-2 : தம்பி இருக்கும் ஊருக்கே போக எண்ணமா?
ஆள்-1 : இல்லை, இல்லை. தம்பி தான் துறவியாகி, துறவிக ளோடு சேர்ந்து மடத்தில் வாழ்கிறாரே. அங்கே போக முடியுமா ? இந்த அம்மா எங்காவது கோயிலுக்குப் போய் தொண்டு செய்யப் போவதாகச் சொன்னார்கள்..
ஆள் 2: நூறு ஆயுசு அய்யா. (மெல்லிய குரல்) அதோ அந்த அம்மாவே வருகிறார்கள். பாருங்கள்.
ஆள்-1 : நல்ல இளமை. இந்த வயதில் இப்படி வாடி இளத்து மெலிந்த உடம்போடு சிவனடியாராகத் தொண்டு செய்ய வேண்டுமா?
ஆள்-3 : தாயைப் போல மகள் என்று சொல்வார்களே. அது உண்மையாகவே இருக்கிறது அய்யா.
ஆள்-2 : இரைச்சலிடாமல் மெதுவாகப் பேசுங்கள். (அந்த வழியாகத் திலகவதியார் நடந்து போகிறார். சிறிது நேரம் எல்லோரும் அமைதியாகப் பார்த்து நெஞ்சுருகி நிற்கிறார்கள், பிறகு பெருமூச்சு) என்ன உலகம் அய்யா!
ஆள்-3 : இவர்களுடைய தாயார் எனக்கு நன்றாகத் தெரியும். நான் சிறு பையனாக இருந்தபோது என்னை அன்போடு அழைத்துத் தின்பண்டங்கள் கொடுத் திருக்கிறார். தாய்க்கு இருந்த அதே அன்பின் பொலிவு மகளின் முகத்திலும் இருக்கிறது. என்ன அடக்கம் என்ன அமைதி! தரைக்கும் நோகாமல் நடக்கும் நடை! எங்கே போகிறாரோ தெரியவில்லை.
ஆள்-2 : அந்த முகத்தில் அன்பு மட்டும் அல்லாமல், ஏதோ ஏக்கமும் தேங்கியிருக்கிறது, பார்த்தீர்களா?
ஆள்-1 : என்ன அய்யா! யாரால் முடியும்? வந்த துன்பத்தை எல்லாம் தாங்கிக்கொண்டு அதற்கு மேலும் தொண்டு செய்து வாழ்க்கையை நடத்துவது என்றால் ….
ஆள்-3 : எனக்கென்னவோ, நினைத்தாலும் உடம்பு சிலிர்க்கிறது. நாம் பார்த்தது மனித உருவத்தை அல்ல, ஏதோ ஒரு தெய்வத்தைப் பார்த்தோம் அய்யா. (அமைதி.) சரி. போகிறேன், பிறகு பார்க்கலாம்.
காட்சி : 5
[திலகவதியார் வீடு. பூங்கொடி பேசிக்கொண்டிருக்கிறார்.]
பூங் : திலகவதி! உனக்கு எப்படி அம்மா பொழுது போகிறது?
தில : என்ன செய்வது? நான் வந்த வழி.
பூங் : ஏன் அம்மா வருத்தப்படுகிறாய்? உனக்கு வருத்தம் உண்டாக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை அம்மா .
தில : உன்னால் வருத்தம் இல்லை, பூங்கொடி ! என் நிலைமையைத் தானே சொன்னாய்?
பூங் : தம்பி இல்லாமல் தனியே ஒரு வீட்டில் இருப்பது துன்பமாகத்தான் இருக்கும்.
தில : தம்பிக்காகத்தான் இந்த உடம்பில் இன்னும் இருக்கிறேன். இந்த வீட்டில் இன்னும் இருக்கிறேன். தம்பி தனியாகப் போய்விட்டான்.
பூங் : திரும்பி வருவான் அம்மா. பாடலிபுத்திரத்திலேயே தம்பி இருக்கப் போவதில்லையே. பல கலைகளையும் படித்துத் தேற வேண்டும் என்று போயிருக்கிறான் அம்மா. படித்துத் தேறியதும் வீட்டிற்குத் திரும்பாமல் என்ன செய்யப்போகிறான்?
தில : தம்பி பழைய தம்பியாக இல்லை, பூங்கொடி ! கலைகளைப் படித்துத் தேறப் போனவன், வீட்டை மறந்து விட்டான். என்னை மறந்துவிட்டான் என்பதற்காக நான் கவலைப்படவில்லை. அவனைக் கெட்டவன் என்று குறை கூறவும் இல்லை. அவன் நல்லவன் ; மிக நல்லவன். அவன் சேர்ந்த இடம் அப்படிப்பட்ட இடம். சேர்க்கைக் குற்றம் அம்மா, சேர்க்கைக் குற்றம். இப்படி நேரும் என்றுதான் நான் முதலிலேயே தடுத்தேன். அங்கே என்னவோ புதிய உண்மைகள் விளங்குவதாக நம்பிப் போனான். போனவனை மயக்கிவிட்டார்கள். பேரும் பதவியும் கொடுத்து மயக்கிவிட்டார்கள் அம்மா .
பூங் : திலகவதி! நீ சொல்வதை நம்ப முடியவில்லை அம்மா. நம்முடைய தம்பி அப்படிப்பட்டவன் அல்ல. தம்பியின் குணம் நமக்குத் தெரியாதா?
தில : எப்படியோ? நான் தனியே இருந்து இங்கே என்ன செய்யப் போகிறேன்?
பூங் : வேறு என்ன செய்யப் போகிறாய்? தில : நல்ல முடிவுதான் செய்திருக்கிறேன்.
பூங் : என்னம்மா அது? தில : நானும் தம்பியும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது அம்மாவும் அப்பாவும் எங்களைத் திருவதிகை வீரட்டானத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அந்தக் கோயில் இன்னும் என் நினைவில் அப்படியே இருக்கிறது. நல்ல கோயில்!
பூங்: இப்போது ஏன் அம்மா அந்தக் கோயிலை நினைத்துக் கொண்டாய்?
தில : தம்பி அந்தக் கூட்டத்திலிருந்து தப்பித்து நல்ல வழிக்கு வர வேண்டும் என்று நான் வேறு எங்கே போய் முறையிடுவேன்?
பூங் : ஆண்டவனிடம் தான் முறையிட்டுக் கொள்ள வேண்டும்.
தில் : ஆண்டவன் என்று நினைத்தால், எனக்கு எப்படியோ அந்த ஊரிலுள்ள கோயில் தான் நினைவுக்கு வருகிறது.
பூங் : இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் இடம், ஒவ்வொரு கோயில், ஒவ்வொரு பழக்கம்.
தில : தம்பியை அடிக்கடி நினைக்கிறேன். வருந்துகிறேன். அப்போதெல்லாம் அந்தக் கோயிலுக்குப் போய் முறை யிட்டு, ஏதாவது தொண்டு செய்யவேண்டும் என்று …
பூங் : நல்லது தான். இந்த வெள்ளிக்கிழமை போகலாமே. நானும் வருவேன்.
தில : அங்கே போன பிறகு, நான் ஏன் அம்மா இந்த வீட்டுக்குத் திரும்பிவர வேண்டும்? இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்? நான் ஏன் வர வேண்டும்?
பூங் : அங்கேயே இருந்துவிடப் போகிறாயா?
தில : ஆமாம். அடுத்த வாரம் அங்கேயே போய்விடுவேன்.
பூங் : அதைத் தான் ஒரு நல்ல முடிவு செய்திருப்பதாகச் சொன்னாயா?
தில : ஆமாம் அம்மா. அது தான் கதி . வேறு வழி என்ன?
பூங்: உனக்கு யார் சொல்வார்கள்? சரிதான்.
காட்சி : 6
[திருவதிகை வீரட்டானம். விடியற்காலை. கோயிலில் திலகவதி யார் தொண்டு செய்கிறார். கோயிலைப் பெருக்கி, சாணத்தால் மெழு கிக்கொண் டிருக்கிறார். அங்கே ஒரு புறத்தில் ஒரு தூணின் அருகே படுத்து உறங்கிக்கொண் டிருந்த பூங்கொடி கண்விழித்துப் பார்த்து ஆர்வத்தோடு திலகவதியாரிடம் செல்கிறாள்.]
பூங் : திலகவதி!
தில : (திடுக்கிட்டு, மெழுகுவதை நிறுத்துகிறார். திரும்பிப் பார்க்கிறார்) யார் அம்மா அது?
பூங் : (திலகவதியைத் தழுவி ) நான் தெரியவில்லையா, திலகவதி –
தில : (எழுந்து நின்று ஒருகையால் அணைத்தபடி) பூங்கொடியா? நீயா இந்த நேரத்தில் வந்தாய்? இங்கே எப்படி வந்தாய் அம்மா?
பூங் : நேற்று இரவே இந்த ஊருக்கு வந்தேன். உன்னைப் பார்க்கவேண்டும் என்று தான் புறப்பட்டு வந்தேன். தேடிப் பார்த்தேன், கேட்டுப் பார்த்தேன் , யாரும் சரி யாகச் சொல்லவில்லை. கோயிலில் வந்தால் பார்க்கலாம் என்று இங்கே வந்தேன். அயர்ந்து படுத்தேன். நன்றாகத் தூங்கிவிட்டேன்.
தில : அய்யோ ! எனக்காக என் அம்மா இவ்வளவு தொலைவு வர வேண்டும்?
பூங் : நீ ஊரைவிட்டு வந்த நாள் முதல் உன் நினைவே ஓயாமல் இருந்துவருகிறது. நீ என் கண்ணிலேயே இருக் கிறாற் போல் இருக்கிறது. ஒருமுறை போய்ப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று துணிந்து வந்துவிட்டேன்
தில : அந்தத் தூணின் பக்கத்தில் நீயா படுத்துக்கொண்டிருந்தாய்?
பூங் : ஆமாம். நான் தான்.
தில : யாரோ படுத்துக்கொண்டிருக்கிறார்கள், எழுப்பக் கூடாது என்று எண்ணினேன். அந்த இடத்தை அப்புறம் பெருக்கலாம் என்று விட்டுவிட்டேன். முகத்தை நன்றாக மூடிக் கொண்டு படுத்திருந்தாய்.
பூங் : அப்படியா? நீ தான் பெருக்கிக் கொண்டிருந்தாயா? யாரோ வேலைக்காரர்கள் வந்து பெருக்குகிறார்கள் என்று கண் திறக்காமல் படுத்துக்கொண்டிருந்தேன்.
தில : வந்த அலுப்பு. உடம்பு எப்படியோ இருக்கும்.
பூங் : (திலகவதியின் கையில் சாணம் மெழுகும் துணியைப் பார்த்து) இது என்ன அம்மா கையில் ?- இதற்காகவா திருவாமூரை விட்டு – பிறந்த ஊரைவிட்டு – வீடு வாசலை விட்டு – இங்கே வந்தாய்? ஏழை வேலைக் காரரைப் போல் தரையைப் பெருக்கவும் மெழுகவும் உனக்குத் தலைவிதியா அம்மா? செல்வக் குடும்பத்தில் பிறந்து, என்னைவிடச் சீரும் சிறப்புமாக வளர்ந்து …
தில : என்ன பூங்கொடி நீயும் இப்படிப் பேசுகிறாயே. இந்த உலகத்தை எல்லாம் படைத்துக் காப்பாற்றும் கடவுள் ஒருவன் தானே செல்வன்? அவனுக்கு முன் நாம் எல்லாம் ஏழைகள் தானே அம்மா? நாம் அவனுக்குத் தொண்டு செய்யும் வேலைக்காரர்கள் தானே? உனக்குத் தெரியாதா?
பூங் : இருந்தாலும்…
தில : இந்த உடம்பே அவனுடைய தொண்டுக்காகப் பெற்றது தான் பூங்கொடி.
பூங்: இந்த வேலைகளைச் செய்வதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள், திலகவதி.
தில : இந்த வேலைகளைச் செய்வதற்குப் பிறந்த ஆட்களில் நான் ஒருத்தி அம்மா.
பூங் : உன்னோடு நான் எப்படிப் பேசுவது? நீ ஒரே பிடிவாதமாகப் பேசுகிறாயே.
தில : உண்மை உறுதியாகத்தான் இருக்கும் அம்மா.
பூங் : தம்பி மருணீக்கி தொண்டு செய்யவில்லையா? அவன் உன்னைப் போல் இப்படியா கைவருந்தி இந்த வேலைகளைச் செய்கிறான்? நீ மட்டும்…
தில : எனக்குத் தம்பிமேல் அது தானே வருத்தம்! அவன் பெயரையும் புகழையும் நாடுகிறானே. தகாதவர்களோடு சேர்ந்து கெடுகிறானே. அன்பையும் தொண்டையும் நாடவில்லையே. இப்படி எல்லாம் நினைத்து நினைத்துத் தான் வருந்துகிறேன்.
பூங் : அவனும் தான தர்மம் எவ்வளவோ செய்யவில்லையா?
தில : ஆண்டவன் கொடுத்த செல்வத்தை வாரி வழங்குவது மட்டும் போதுமா? அதைச் செய்வதில் ஒன்றும் அருமை இல்லையே. பெயர் கிடைக்கிறது, புகழ் கிடைக்கிறது. அதற்காகவே ஆசைப்பட்டு உலகத் தில் பலர் செய்கிறார்கள். அதனால் மனம் சீர்ப்படாது அம்மா. ஆணவம் அதனால் நீங்கிவிடாது. நேர் மாறாக, ஆணவம் வளர்வதற்கும் இடம் இருக்கிறது. ஏழையாய் எளிய கோலத்தோடு கைவருந்தித் தொண்டு செய்தால் தான், ஆணவம் அப்பால் செல்கிறது அம்மா. நான் இங்கே வந்த பிறகு அனுபவத்தால் தெரிந்து கொண்டேன். இப்பொழுது என் மனம் தூய்மையாக இருக்கிறது. அமைதியாக இருக்கிறது. இன்பமாகவும் இருக்கிறது பூங்கொடி ! தம்பியும் இந்த வழியில் தொண்டு செய்து வாழக்கூடாதா என்ற ஒரே ஒரு கவலை தான் இப்போது என்னை வாட்டுகிறது. அதைத்தான் ஆண்டவனிடம் முறையிட்டு வருந்துகிறேன்.
பூங்: உன் வாழ்க்கை எப்படி எப்படியோ மாறிவிட்டதே.
தில : எல்லாம் நன்மைக்கே என்று நினைக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் மெழுக வேண்டும். வேலை செய்தபடியே பேசிக்கொண்டிருக்கலாம்.
பூங்: நானும் செய்யட்டுமா? நானும் கொஞ்சம் மெழுகுகிறேன்.
தில : நல்லது தான். ஆனால், பயணத்தால் அலுத்திருப்பாய.
பூங் : என் பங்குக்கு நானும் ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமே!
தில : அப்படி உனக்கு ஆர்வம் இருந்தால், அதோ அந்தப் பவழமல்லி மரத்தின் கீழே உதிர்ந்திருக்கும் மலர்களைப் பொறுக்கிவை. நந்தியாவட்ட மலர்களைக் கொய்து வை. கொன்றை மலர்களைப் பறித்துவை. நான் மெழுகிவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு இருவரு மாகச் சேர்ந்து மாலைகள் தொடுக்கலாம். என்ன பார்க்கிறாய் அங்கே?
பூங் : அதோ வருகிறவரை எங்கோ பார்த்தாற் போல் இருக்கிறது.
தில : யாரோ வெளியூராராக இருக்கலாம். (புதியவர் நெருங்கி வருகிறார்.)
பூங் : அய்யா ! எந்த ஊரோ?
புதியவர் : நான் சிதம்பரம் அம்மா. காஞ்சிக்குப் போய் அங்கிருந்து பாடலிபுத்திரம் வரைக்கும் யாத்திரை போய் வருகிறேன், அம்மா.
பூங் : உட்காருங்கள். பாடலிபுத்திரத்தில் என்ன செய்தி? என்ன சிறப்புப் பார்த்தீர்கள்?
புதி : எங்கே பார்த்தாலும் துறவிகள், பெரிய பெரிய மடங்கள், பல பல கலைகள், அரிய பெரிய ஆராய்ச்சிகள், நமக்கு எட்டாத தத்துவங்கள் என்னென்னவோ இருக்கின்றன.
பூங் : அப்புறம்?
புதி : நம் பக்கத்திலிருந்து பலர் போய்ப் படிக்கிறார்கள் உயர்ந்த நிலையில் வாழ்கிறார்கள்.
பூங் : இருக்கலாம்.
புதி : மருணீக்கியார் என்பவர் ஒருவர். நம் பக்கத்தாராம். (திலகவதியார் வியப்புடன் கேட்டல்) அவர் அங்கே பல நூல்களையும் படித்து, மற்றவர்கள் எல்லோருக்கும் தலைவராய் விளங்குகிறார். தருமசேனர் என்ற பட்டமும் அவர்க்கு அளித்திருக்கிறார்கள்.
பூங் : அய்யா ! அவருடைய தமக்கையார் இந்த அம்மா.
புதி : (வியப்புடன்) அப்படியா? வணக்கம் அம்மா ! தரும் சேனருடைய தமக்கையாரா நீங்கள்? அப்படியா?
பூங் : உடன்பிறந்த தமக்கை அய்யா?
புதி : (இன்னும் தீராத வியப்புடன்) அப்படியா? உங்களுடைய தம்பியாரா தருமசேனர்?
பூங்: இந்த அம்மா செய்யும் தொண்டுகளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை அல்லவா?
புதி: அது தான் அம்மா சொல்லலாம் என்று வாய் எடுத்தேன். ஆனால், என்னவோ, வாய் திறப்பதற்கே அச்சமாக இருந்தது. நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
பூங் : இது தான் உலகம்.
புதி : தருமசேனர் அங்கே எவ்வளவு செல்வாக்கோடு விளங்குகிறார். அரசருக்கு அடுத்தபடி அவர் தான் அம்மா. அரசரும் வணங்கும்படியான குருவாக விளங்குகிறார்.
பூங் : இருக்கலாம்.
புதி: நான் கண்ணாலே கண்டேன் அம்மா. அவரைச் சுற்றிலும் மாணாக்கர் கூட்டங்கள், துறவிகளின் கூட்டங்கள். அவரைத் தரிசிப்பதே அருமையாய் இருக்கிறது.
பூங் : அப்படித்தான் கேள்விப்படுகிறோம்.
தில : அய்யா! அதெல்லாம் சரிதான். அவன் அங்கே மகிழ்ச்சியாக இருக்கிறானா? நல்லபடி இருக்கிறானா?
புதி : அவர் சொன்னதைத் தலைமேல் கொண்டு செய்வதற்கு எவ்வளவுபேர் காத்திருக்கிறார்கள் ! வந்தால், தருமசேனர் வாழ்க என்று வாழ்த்தொலி முழங்குகிறார்கள். எல்லோரும் அவருடைய பெருமையும் புகழுமே பேசுகிறார்கள். அவருக்கு என்ன அம்மா குறைவு?
பூங் : அப்படியா? என்ன பெருமை ! திலகவதி!
புதி : கண்ணால் பார்க்கக் கொடுத்துவைக்க வேண்டும் அம்மா .
தில : அந்த நிலை போதுமா?
புதி : அதைவிட இன்னும் என்ன வேண்டும் அம்மா. துறவிக்கு வேந்தனும் துரும்பு என்று வாழ்கிறார் அவர்.
தில : அவன் ஒரு பெரிய வேந்தனாக வாழ்கிறான் என்று சொல். அவ்வளவுதானே?
புதி: நீங்களும் அங்கே அவருக்குத் துணையாக இருக்காமல், இங்கே இப்படிக் காலம் கழிக்கிறீர்களே. அங்கே எவ்வளவு பெருமையோடு நீங்களும் இருக்கலாம்!
தில : வாழ்க்கையில் வீடும் வாசலும் பொன்னும் பொருளும் மட்டும் இருந்தால் அமைதியும் இன்பமும் கிடைக்குமா? பெருமையும் அப்படித்தான்! அய்யா! நானும் அங்கே இருக்கவேண்டுமா? (பூங்கொடியைப் பார்த்து) மறந்துவிட்டுப் பேசுகிறார் பூங்கொடி!
பூங்: எதை அம்மா?
தில : என்னைப் போன்ற பெண்களுக்கு அந்தக் கூட்டத்தில் இடம் ஏது அம்மா?
பூங்: ஆமாம் அய்யா. அது ஒரு வழி. இந்த அம்மா அங்கே போகவே முடியாது. சரி. எங்களுக்கு வேலை இருக்கிறது. நீங்கள் கோயிலுக்கு உள்ளே போய்ப் பாருங்கள்.
புதி : நல்லது அம்மா . போய் வருகிறேன். உங்களைப் பார்த்தது பெரிய பாக்கியம். வருகிறேன். நானும் உடனே ஊருக்குப் புறப்பட வேண்டும்.
பூங் : சரி, புறப்படுங்கள்.
[திருவதிகை வீரட்டானத்துக் கோயில் . மணி ஓசை. திலக வதியார் கண்ணீர் மல்கி நெஞ்சுருகி இறைவனை வேண்டுகிறார். வீணை இசை.]
தில : அம்மையப்பா! உன்னிடம் யான் பொன் கேட்கவில்லை, புகழ் கேட்கவில்லை, எந்தச் சிறப்பும் கேட்க வில்லை, முத்தியும் கேட்கவில்லை. தொண்டு செய்யும் இந்த வாழ்வே எனக்குப் போதும். ஆயினும் என் மனத்தில் பல ஆண்டுகளாக உள்ள ஒரு குறையை நீ தீர்க்கலாகாதா? என் தம்பியின் நெஞ்சம் அன்பு நெறியில் – தொண்டு நெறியில் – திரும்பக் கூடாதா? இந்த ஒன்று தான் நான் கேட்பது. தந்தையையும் தாயையும் இளமையிலே இழந்துவிட்ட என் தம்பி யைக் காப்பாற்றக் கருணை செய்யலாகாதா? அன்புரு வான தெய்வமே ! என்னைக் காத்தருளும் கருணை யுருவமே ! தன் நெஞ்சம் உனக்கு இடமாக வைக்கும் படியாகத் தம்பிக்கு அருள் புரிவாய். கலையறிவுக்கும் கற்பனைப் புகழுக்கும் பதவிக்கும் பட்டங்களுக்கும் இடமாக உள்ள அவனுடைய நெஞ்சம் உன் திருவடி களுக்கு இடமாக விளங்காதா? பல ஆண்டுகளாக உன்னை வேண்டிக்கொண்டேனே? இன்னும் அருள் செய்யாமல் இருந்தால், ஏழை நான் எப்படி உயிர்வாழ் வேன்? (அமைதி. உருகி நிற்கிறார்.)
[பாடலிபுத்திரத்திலிருந்து வந்த ஒருவன் அவரை வணங்குகிறான்.]
வந்: வணக்கம் அம்மா, பாடலிபுத்திரத்திலிருந்து வருகிறேன்.
தில: நீ யார் அப்பா.
வந்: உங்கள் தம்பியார் அனுப்பினார் அம்மா.
தில : ஏதேனும் செய்தி உண்டா ?
வந்: பொல்லாத சூலை நோயால் மிகவும் வருந்துகிறார் அம்மா. குடல் எல்லாம் முடக்கி வருத்துகின்றது. பட முடியாத துன்பம் அம்மா. என்னென்னவோ செய்தும் தீரவில்லை. எல்லாரும் கைவிட்டார்கள். யாருக்கும் தெரியாமல் அக்காவிடம் போய்ச் சொல்லி விட்டுவா என்று அவரே என்னை அனுப்பினார்.
தில : (கலங்கி நின்று) கருணைக் கடலே! (அமைதி. வந்தவனைப் பார்த்து) அப்பா! நான் அங்கே உள்ள மடத்துக்கு எந்தக் காரணத்தாலும் வரமுடியாதே. இதைத் தம்பியிடம் போய்ச் சொல். நான் என்ன செய்வேன்? என் நெஞ்சம் கலங்குகிறதே. அவன் வரக்கூடாதா?
வந்: நல்லது அம்மா. அப்படியே போய்ச் சொல்வேன். வணக்கம் அம்மா.
[போகிறான். திலகவதியார் கலங்கி நிற்கிறார்.]
காட்சி : 7
[கி. பி. 625. திருவதிகையில் திலகவதியார் உள்ள மடம். மருணீக்கியார் பாடலிபுத்திரத்திலிருந்து இரவில் புறப்பட்டு அங்கே வந்து சேர்கிறார். வந்து தமக்கையின் திருவடிகளில் விழுந்து வணங்குகிறார். நோயால் வருந்தி வருந்திப் பெருமூச்சு விட்டு நைகிறார்.]
மரு : அக்கா ! நீ தான் என்னை அன்று முதல் அன்போடு காப்பாற்றினாய். இன்றும் காப்பாற்ற வேண்டும்.. இந்தச் சூலை நோயை (வருந்தி மூச்சு விடல்) அய்யோ என்னால் பொறுக்க முடியவில்லையே. நெறி தவறிப் பல ஆண்டுகள் கழித்துவிட்டேன். அக்கா! நீ தான் என்னை நல்வழிப்படுத்திக் காப்பாற்ற வேண்டும்.
தில : தம்பி! இது இறைவனுடைய திருவருள் என்றே நம்பு. பதவி பட்டம் படிப்பு இவை எல்லாவற்றையும் மதிக்காதே. அன்பு தொண்டு இவைகளை மட்டும் போற்றி வாழக் கற்றுக்கொள். (திருநீறு எடுத்தளித்து) இதோ ஈசன் அருள் என்று அணிந்துகொள்.
மரு : (அதைப் பெற்றுக் கொண்டு) நல்வாழ்வு பெற்றேன். (அணிகிறார்) பதவிக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்டு நெறி அறியாமல் மயங்கினேன். அக்கா! மயக்கம் தீர்ந்தேன், தீர்ந்தேன்.
தில் : (பெருக்கி மெழுகுவதற்கு வேண்டிய தோண்டி முதலியவற்றை எடுத்துக் கொண்டு) விடியற்காலம் ஆயிற்று. கோயிலுக்குப் போவோம் வா. தொண்டு செய்வோம் வா. தொண்டு தான் மனத்தைத் தூய்மை செய்யும், தொண்டு தான் மனத்தைக் கோயில் ஆக்கும், தொண்டு தான் தெய்வ நெறி. வா, போவோம்.
[தமக்கையாரின் பின்னே தம்பியார் போகிறார்.]
மரு : (தமக்கையாரின் கையில் உள்ளவற்றைப் பார்த்து) அக்கா நானும் இனி ஒன்று செய்யப்போகிறேன். இனி இந்தக் கை ஏடுகளைப் புரட்டாது. கல்லையும் புல்லையும் புரட் டும். தலைமைச் சின்னங்களைத் தாங்கிய கை, இனி மேல் உழவாரத்தைத் தாங்கும். கோயில் வழியில் உள்ள புல்லைச் செதுக்குவேன். கல்லையும் முள்ளையும் அகற்றுவேன். என் வாழ்க்கை உய்வதற்கு உரிய வழியைக் கண்டுகொண்டேன். உன்னைப் பின்பற்று வேன். நீ எனக்கு முன் பிறந்த தமக்கை மட்டும் அல்ல, என்னை உய்விக்கும் குருவும் நீயே!
[கோயிலை அடைந்து இறைவன் முன் நின்றதும் மருணீக்கியார் பாடுகிறார்.]
மரு : கூற்று யினவாறு விலக்ககலீர்
கொடுமை பலசெய்தனன் நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றா தென்வயிற்றி னகம்படியே
குடரோடு தொடக்கி மடக்கியிடவே
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில
வீரட் டானத் துறையம்மானே.
தில : (பாட்டு இறுதி அடி ஒலித்துக்கொண் டிருக்கும்போதே) வீரட்டானத்து அப்பா! எல்லாம் வல்ல பரமே! காத் தருளினாய். தம்பியைக் காப்பாற்றினாய். உன் கருணை வாழ்க. என் வாழ்க்கையின் குறிக்கோள் நிறைவேறியது.
மரு : (பாடுகிறார்) நெஞ்சம் உமக்கே இடமாகவைத்தேன்
நினையாது ஒருபோதும் இருந்தறியேன்
வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன்
வயிற்றோடு தொடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்து என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலும் என்னீர் அதிகைக்கெடில
வீரட் டானத் துறை அம் மானே.
தில : (இறுதியடி ஒலிக்கும் போது) போதும் நான் வாழ்ந்தது. போதும். அருளுருவே! வேண்டியதை அளித்தாய், கருணைக்கடலே ! வாழ்ந்தோம், உய்ந்தோம்.
[பாட்டு மெல்ல முடிவதும் திலகவதியாரின் பேச்சு முடிவதும் ஒன்றாக இருக்க வேண்டும்.]
– மூன்று நாடகங்கள், முதற் பதிப்பு: நவம்பர் 1960, தாயக வெளியீடு, சென்னை.