கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 15, 2023
பார்வையிட்டோர்: 2,092 
 
 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குமணன் காட்டுக்குத் துரத்தப்பட்டான். அவன் தம்பியாகிய இளங்குமணனிடம் அரசாட்சி சிக்கியிருந்தது. காமுகனிடம் அகப்பட்டுக் கொண்ட குலப்பெண்ணைப்போல, குமணன் அரசாண்ட காலத்தில் அடிக்கடி அவனால் உதவப் பெற்று வாழ்க்கையை நடத்தியவர் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர். இளங்குமணன் ஆட்சிக்கு வந்ததும் புலவருடைய வாழ்க்கையில் மண் விழுந்தது; தம் துயரங்களை எல்லாம் காட்டிலிருக்கும் குமணனிடம் போய்க் கூறியாவது மனச்சுமையைத் தணித்துக் கொள்ளலாம் என்றெண்ணிக் காடு சென்றார் புலவர். 

அமைதியாகக் காட்டில் வாழ்ந்த குமணன், தம்பியின் கொடுமையை எண்ணிக் குமுறிக்கொண்டிருக்கவில்லை. அரசாட்சியிலிருந்து துரத்தப்பட்ட அவலத்தை எண்ணி வருந்தவில்லை. வாழ வழியில்லாத அனாதைபோல எல்லா மிருந்தும் ஒன்றும் இல்லாதவனாகக் காட்டில் திரிய நேர்ந்ததை எண்ணிக் கலங்கவில்லை. 

உயர்ந்த சிந்தனைகளைக்கொண்டு மனத்தை அடக்கி வாழ்ந்தான். தமிழ்ப் பாடல்களின் பெருமை நிறைந்த சுவையை எண்ணிக் களித்தான். வனத்தின் இயற்கைக் காட்சிகளில் கண் களைச் செலுத்தினான். ஆடும் மயில், பாடும் குயில், ஓடும் ஆறு, வீழும் அருவி, துள்ளும் மான்கள் எல்லாம் கண்டு இன்புற்றான். ஆனால் இந்த எல்லா வகை நிம்மதிகளுக்கும் இடையே ஒரு கவலையும் அவன் மனத்தை அரித்துக் கொண்டுதான் இருந்தது. அதுதான் தமிழ்ப் புலவர்களைப் பற்றிய மனக்கவலை. 

அவன் ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்தான். கவிச் செல்வர்களாகிய அவர்கள் புவிச் செல்வத்துக்காக ஏங்காமல் பாதுகாத்து வந்தான். ‘அறிவு நிறைந்தவர்களை வாழ்வுக்கு ஏங்கும்படியாக விட்டுவிட்டால் தன் நாட்டிற்கே அது ஒரு பெரிய சாபக்கேடாகப் போகும்?’ என்பதை அவன் உணர்ந்திருந்ததுதான் இதற்குக் காரணம். தன் தம்பி இளங்குமணனிடம் புலவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற உணர்ச்சி சிறிதும் இல்லை என்பதை அவன் அறிவான். முன்பு தன்னால் பேணி வளர்க்கப்பட்ட தமிழ்ச் செல்வர்களின் கதி இப்போது என்ன நிலைக்குத் தாழ்ந்து விட்டதோ என்பதுதான் அவனுடைய கவலை. இப்படி அவன் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தான் பெருந்தலைச் சாத்தனார் அவனைத் தேடிக்கொண்டு காட்டுக்கு வந்து சேர்ந்தார். 

குமணன் அவரை ஆவலோடு வணங்கி வரவேற்றான். பெருந்தலைச் சாத்தனர் நாடிழந்து தனி ஆளாக வனத்தில் நிற்கும் அவன் நிலை கண்டு உள்ளம் உருகினார். 

“என்ன சாத்தனாரே! யாவும் நலம்தானே? முன்பு பார்த்த உம்முடைய தோற்றம் இப்போது இளைத்திருக்கிறாற்போலத் தோன்றுகிறதே” 

“இளைக்காமல் என்ன செய்யும் குமணா! அன்பு செலுத்த நீ யில்லை. ஆதரவு கொடுக்க உன் கைகளில்லை. வாழ்க்கை இளைத்துவிட்டது. நானும் இளைத்துவிட்டேன். வீட்டு அடுப்பு எரிந்து பல நாட்களாகிவிட்டன. குழந்தை பாலுக்காகத் தாயின் மார்பைச் சுவைத்துப் பாலின்றி ஏமாற்றமடைந்து தாயின் முகத்தைப் பார்க்கிறது. தாய் என் முகத்தைப் பார்க்கிறாள். நான் வேறு யார் முகத்தைப் பார்ப்பது? உன் முகத்தைக் காண வந்தேன்?”

கூறிவிட்டுக் குமணனின் முகத்தைப் பார்த்தார் புலவர். அவன் கண்களில் உணர்ச்சியின் இரண்டு முத்துக்கள் திரண்டிருந்தன. 

“குமணா! நான் ஏதோ சொல்லி உன் மனம் நோகும்படி செய்துவிட்டேன். என் துயரம் என்னோடு போகட்டும்… நீ வருந்தாதே?” 

“அப்படி இல்லை சாத்தனாரே! நீர் இளைக்கிறபோது குமணன் இளைக்கிறான். உம்முடைய குழந்தை பாலில்லாமல் தாயின் முகத்தை நோக்கி அழுகிறபோது குமணன் அழுகிறான்.” “குமணா! நீ பெருந்தன்மை மிக்கவன். அதனால் அப்படி எண்ணுகிறாய்! அதற்கு நான் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவன்.” 

”சாத்தனாரே! இதற்கு முன்னால் உங்களுக்கு நான் கொடுத்ததெல்லாம் கொடை அல்ல! இப்போது உமக்கு ஏதாவது உதவி, உம்முடைய வறுமையைப் போக்க முடியுமானால், அது என் நற்பேறாக இருக்கும். ஆனால், நான் என்ன செய்வேன்? விதி என் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது. நான் அரசாளும் குமணனாக இல்லை! காடாளும் குமணனாக இருக்கிறேன்.” 

“எனக்காக வருந்தாதே, குமணா! நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். நீதான் என்ன செய்வாய்? நான்தான் என்ன செய்வேன்?”

“நான் நாடிழந்ததைவிடக் கொடுமையானது நீங்கள் என் உதவியை இழப்பது.”

“என் குமணனின் அன்பை நான் இன்னும் இழக்கவில்லை, குமணா! அது ஒன்று போதும் என் நிறைந்த வாழ்வுக்கு” 

“இல்லை சாத்தனாரே! உங்களுக்கு நான் ஏதாவது கொடுத்து உதவினாலொழிய என் மனம் திருப்தி அடையாது” 

‘இப்போதிருக்கும் நிலையில் நீ ஒன்றும் கொடுக்க முயற்சிக்காமல் இருந்தாலே நான் அதைப் பெரிய கொடையாகக் கொண்டு விடுவேன்!” 

“முடியாது! யாராலும் எவருக்கும் கொடுக்க முடியாத பொருளை உங்களுக்கு நான் கொடுக்கப் போகிறேன்.” 

“என்ன பொருள் அது?” 

“அந்தப் பொருள் என் தம்பியின் விலைமதிப்பின்படி ஆயிரக்கணக்கான பொற்கழஞ்சுகள் பெறுமானமுடையது. உம்மைப் போன்ற புலவர்களின் மதிப்பீட்டில் விலை மதிக்க முடியாதது அது”. 

“பொருள் என்னவென்று நீ சொல்லவில்லையே, குமணா?” “சொல்லுகிறேன். இந்த உடைவாளைக் கொஞ்சம் கையிலே பிடித்துக்கொள்ளுங்கள்.” 

பெருந்தலைச் சாத்தனர் எதுவுமே புரியாமல் அவன் கொடுத்த உடைவாளை வாங்கிக் கையிலே பிடித்துக் கொண்டார். 

குமணன் தலையைக் குனிந்தான். 

“இதோ! இந்தப் பொருள்தான் புலவரே!” குமணன் தன் தலையைத் தொட்டுக் காட்டினான். சாத்தனாருக்கு அப்போதும் விளங்கவில்லை. வாளைப் பிடித்த கையோடு மருண்டுபோய் அவனைப் பார்த்தார். 

“சாத்தனாரே! ஏன் தயங்குகிறீர்! இந்தத் தலையை இளங்குமணனிடம் வெட்டிக் கொண்டுபோய்க் கொடுத்தால் உம்முடைய வறுமை தீர்ந்துவிடும்.” 

“குமணா! என்னை என்ன பாதகம் செய்யச் சொல்லுகிறாய் நீ? பெருந்தலைச் சாத்தன் செத்தாலும் அவனுடைய கை இந்தப் பாதகத்தைச் செய்து உயிரைப் பேணி வறுமையைப்போக்கிக் கொள்ள விரும்பாது..” 

“ஒரு தமிழ்ப் புலவரின் வறுமையைப்போக்க இந்தத் தலை தவம் செய்திருக்க வேண்டும். இந்தத் தலைக்கு அந்த மாபெரும் பாக்கியத்தை அளிக்க மறுக்காதீர்கள் சாத்தனாரே!’ 

“வேண்டியதில்லை! இந்த வாள் போதும், உன் தம்பி இளங்குமணனிடம் இந்த வாளைக் காட்டியே பரிசில் பெறுவேன். 

“அது முடியாது சாத்தனாரே!” 

“இல்லை! என்னால் முடியும்! எனக்கு அதற்கு வேண்டிய சாமர்த்தியமிருக்கிறது. நான் போய் வருகிறேன், குமணா!” 

புலவர் வாளோடு கிளம்பினார். குமணன் அவர் போகின்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றான். 


பெருந்தலைச் சாத்தனார் கூறிய செய்தி இளங்குமனின் உணர்வை உருக்கியது. தன் தமையன் அப்படியும் செய்திருப்பானோ என்று எண்ணும்போதே அவன் உடம்பில் மயிர்க் கால்கள் குத்திட்டு நின்றன. தமையன்மேல் ஆயிரம் பகை இருந்தாலும் உடன்பிறந்த குருதி கொதிக்காமல் விடுமா? தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடியது. சாத்தனார் அவன் உணர்ச்சிகளைக் கிளறுவதற்காகக் குமணன் இறந்துவிட்டான் என்று கூறி அவன் வாளை எடுத்துக் காட்டினார். அவர் எதிர்பார்த்தது போலவே அவன் அதிர்ச்சி அடைந்து கலங்கி அழுதுவிட்டான். 

”இளங்குமணா! அஞ்சாதே, உன் தமையனை மீண்டும் உயிரோடு கூட்டிக்கொண்டு வருகிறேன். எனக்கு என்ன தருவாய்?” 

“இந்த அரசு முழுவதுமே தருகிறேன் புலவரே!” அவர் அவனைக் குமணனிடம் காட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றார். தமக்குக் கிடைக்கும் பரிசுகளைவிட அண்ணன் தம்பிகளின் ஒற்றுமை அவசியமாகப்பட்டது அவருக்கு. அதை அவர் முதலில் உண்டாக்கினார். 

ஒற்றுமை என்ற பெரும் பரிசைக் குமண சகோதரர்களிடமிருந்து சாத்தனார் பெற்றுவிட்டார். 

“கோடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றனென் ஆகக் கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்
நாடிழந் ததனினும் நனியின் னாதென 
வாள்தந் தனனே தலைஎனக் கீயத் 
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின் 
ஆடுமலி உவகையொடு வருவல் 
ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே” (புறநானூறு – 165) 

வயமான் தோன்றல் = குமணன், கொன்னே = வீணாக,பாடு பெருமை, வாடினன் = வருந்தி, இன்னாது = கொடியது, நனி மிகவும், ஆடுமலி = வெற்றி மிகுந்த, உவகை = மகிழ்ச்சி, ஓடாப் பூட்கை = அழியா வலிமை, கிழமையோன் = தமையன்.

– புறநானூற்றுச் சிறுகதைகள், இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2001, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *