தமிழ் முழுதறிந்தோன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 5,391 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நம் தமிழ் நாட்டைப் பல சிறிய அரசர்களும், பெரிய அரசர்களும் ஆண்டு வந்தனர். அவர்கள் தங்களுடைய அடையாளங்களாகப் பலவற்றை வைத்துக்கொண்டிருந்தனர். அவற்றுள் ‘முரசு’ என்பதும் ஒன்று.

இம் முரசினை எவ்வாறு செய்தார்கள்? காட்டில் வாழ்கின்ற விலங்குகளுக்குள் சண்டை உண்டாவது வழக்கம். காளைமாடு புலியுடன் சண்டையிட்டுத் தன் கொம்புகளால் புலியைக் கிழித்துக் கொல்லும். அவ்வாறு கொன்ற காளை இறந்த பிறகு அதன் தோலால் முரசினைச் செய்வார்கள். தோலின் மேல் இருக்கும் மயிரி னைப் போக்காமல் இருந்தவாறே அமைப்பார் கள். அதனால் இது , ‘மயிர்க்கண் முரசு’ என்று சொல்லப்படும்.

இதனை எங்கே வைப்பார்கள்? சிறந்த கட்டிலின் மேல் முரசு வைக்கப்படும். மக்கள் எவரும் அக்கட்டிலின் மேல் ஏறி இருத்தல் ஆகாது. முரசுகட்டில் தூய்மையும் தெய்வத் தன்மையும் உடையது என்று வணங்கப் பட்டுவந்தது. அரசன் கொலுவீற்றிருக்கும் அரியணையாகிய அரசு கட்டில் மிக உயர்ந்தது. அவ்வாறே முரசு கட்டிலும் மிக உயர்ந்தது.

முரசை எதற்குப் பயன்படுத்துவார்கள்? அரண்மனையில் திருமணம் நடக்கும் காலம், திருவிழா நாட்கள், பகைவன்மேல் போரிடச் செல்லும் நாள் ஆகிய காலங்களில் வள்ளுவன் என்னும் அரசனுடைய வேலையாள் முரசினை யானையின் மேல் ஏற்றிக்கொண்டு ஊர் நடுவே செல்லுவான். முரசினை அடித்துச் செய்தியைச் சொல்லுவான்.

இவ்வளவு பெருமை பொருந்திய முரசு வைக்கப்படும் இடமாகிய முரசுகட்டிலோடு பொருந்திய கதை யொன்றைச் சொல்லுகின்றேன். கருத்துடன் கேளுங்கள்.

பாண்டி நாட்டில் மோசிகுடி என்று ஓர் ஊர் இருந்தது. அங்கு அறிவுடையோர் பலர் வாழ்ந்தனர். அவர்களுள் கீரனார் என்ற பெய ருடைய ஒருவர் இருந்தார். இவர் நல்ல சொற்களையே எப்பொழுதும் பேசினார்.

அன்பர்களே! உங்கள் முன்னே பழுத்த மாம்பழம் ஒன்றையும் துவர்ப்புடைய மாங்காய் ஒன்றையும் வைக்கின்றேன். ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கின்றேன். நீங்கள் எதனை எடுத்துக் கொள்வீர்கள். இனிக்கும் பழத்தையா? அல்லது துவர்ப் புடைய காயையா? நீங்கள் பழத்தைத்தானே விரும்புவீர்கள். அதைப்போல நாம் பேசுவதற்கு நல்ல சொற்களும் இருக்கின்றன. தீய சொற்களும் இருக்கின்றன. இவற்றுள் எதனைக் கொள்ள வேண்டும்? பிறருக்குத் துன்பத்தைத் தரும் தீய சொற்களையா? அல்லது பிறர் மகிழ் வதற்குரிய இனிய சொற்களையா? பழத்தை விரும்பிய நீங்கள் இனிய சொல்லையே விரும்பு வீர்கள். ஆகவே, உங்களைப் போலவே புலவரும் இனிய சொற்களாகிய நல்ல சொற்களையே பேசினார். தீய சொற்களை இவர் கனவிலும் நினைக்கவில்லை. இவர் பிறந்த ஊர் மோசிகுடி என்று சொன்னேன் அல்லவா? இவருடைய பெயரோ கீரனார் என்பது. மக்கள், இவர் பிறந்த ஊரோடு இவர் பெயரையும் கூட்டி மோசி கீரனார் என்று அழைத்தார்கள்.

இவர் வாழ்ந்த காலத்தில் சேர நாட்டை இரும்பொறை என்ற அரசன் ஆண்டுவந்தான். இவன் சிறந்த வீரனாக விளங்கினான். தகடூர் என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்டு அதியமான் என்ற சிற்றரசன் அரசாண்டு வந்தான். அவனுக்கும் சேரனுக்கும் போர் மூண்டது. இரும்பொறை அதியமானை வென்று தகடூரை அழித்தான். இந்த வெற்றியின் பிறகு, இவன் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான்.

இரும்பொறையின் பெருமை பாண்டி நாடு முழுவதும் பரவியது. அவன் பெருமையை மோசி கீரனாரும் அறிந்தார். அவனைக் காண வேண்டும் என்று எண்ணிச் சேர நாடு சென்றார்.

மன்னனைக் கண்டார். இருவரும் பொருந்திய நண்பர்கள் ஆயினர். யானை, பொன், முத்து முதலியவற்றைப் புலவருக்கு அரசன் பரிசி லாகத் தந்தான்.

காலையிலும் மாலையிலும் இரும்பொறை புலவருடன் கலந்து பேசிக்கொண்டிருப்பான். அரசியல் நுட்பங்களை எல்லாம் புலவரைக் கேட்டு அறிந்துகொள்வான். ஆதலின், அரசியல் துன்பங்களை நீக்கும் மருந்தாகப் புலவர் விளங்கினர். சேரனும் புலவரில்லாமல் தான் வாழமுடியாது என்று கருதினான்.

புலவரின் பிறப்பிடம் எது? பாண்டி நாட்டிலுள்ள மோசிகுடி என்பதன்றோ? தம் சொந்த ஊருக்குச் செல்லவேண்டும் என்று புலவர் நினைப்பாரன்றோ? தன்னூருக்குச் செல்லவேண்டும் என்று நினைந்து அரசனிடத் துச் சென்று சொன்னார். அரசனோ இவரை விட்டுப் பிரிய முடியாது தவித்தான்.

“எனக்கு நல்லறிவு தந்த அறிஞரே! ஏன் இப்போது பாண்டி நாட்டிற்குச் செல்ல வேண்டும்? பிறந்த ஊரைப் பிறகு சென்று பாருங்கள். தாங்கள் என் அவையில் வீற்றிருக்கும் போது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி உண்டா கின்றது; என்னை யறியாமலே என் மனத்தில் சிறந்த ஊக்கம் விளங்குகின்றது; முழுமதி விளங் கும் வானம் போல் என் அவையும் ஒளிவிடுகின்றது, எல்லா வகையாலும் உயர்ந்த தங்களை விட்டுப் பிரிந்து என்னால் வாழ முடியாது,” என்று கூறித் தடுத்துவிட்டான்.

புலவர் மேலும் மேலும் மன்னனைத் தூண்டினார். அவர் ஊர் சென்று வருதலை ஒரு வாறு ஒத்துக்கொண்டான். சில நாட்களில் திரும்பி வருமாறு சேரன் கேட்டுக்கொண்டான்.

கீரனார் மோசிகுடிக்குச் சென்றனர். நாள் பல ஆயின. மனைவி மக்களுடன் இன்பமாகக் காலத்தைப் போக்கினார். ஆகவே, சில நாளில் புறப்பட்டுச் சேர நாடு செல்ல முடியாதவரானார்.

நாள்களை எண்ணிக்கொண்டிருந்தான் சேரன். புலவர் வரவில்லையே என்று வருந் தினான். அவர் வரமுடியாதவாறு என்ன துன்பம் நேர்ந்ததோ என்று நினைந்து வருந்தினான். உடனே தூதர் சிலரைப் பாண்டி நாட்டிற் கனுப்பிப் புலவரை அழைத்து வரும்படி கட்டளை இட்டான்.

தூதர்களைக் கண்டதும் புலவருக்கு அரசன் நினைவு வந்தது; அவனுடைய அன்பு நிறைந்த உள்ளத்தை நினைந்தார். உடனே புறப்பட்டுச் சேர நாட்டை நோக்கி நடந்தார்.

ஆயிரக் கணக்கான கல்தொலை செல்ல வேண்டும் என்றாலும் இக்காலத்தில் இயந்திரத் தின் உதவியால் செல்லலாம். கீரனார் முதலியோர் வாழ்ந்த அந்தப் பழங்காலத்தில் இவ்வகை இயந்திரங்கள் இல்லை. ஆனால் அவர்களின் உடல் நல்ல உரத்துடன் இருந்தன;

சங்க காலத்துக் கதைகள் அவர்கள் உடலில் ஓடிய குருதி செக்கச் செவே ரெனச் சிவந்திருந்தது. தடை படாத குருதி ஓட்டத்தால் தசை நார்கள் வன்மையாகவிருந்தன. ஆதலின், அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நடந்தே சென்றனர். இந்த நாட்களிலே பட்டினங்களில் வாழ்வோர் நடந்து செல்வதை உடற்பயிற்சியாகக் கொள்கின்றனர்.

நம் புலவர் பாண்டி நாட்டினின்றும் நடந்தே சென்றார். ஆதலினால் உடல் இளைத் தார். சேர நாட்டை அடைந்து சேரன் அரண் மனையை அடைந்தார். நீண்ட வழி நடந்து வந்தாரன்றோ ? அவருக்கு இளைப்பும் களைப்பும் வந்தன; அரசன் எங்கோ வெளியில் சென் றிருந்தான். அரசன் வரும்வரை ஓரிடத்தி லிருந்து களைப்பைப் போக்கிக்கொள்ள எண்ணினார். எங்கும் பார்த்தார்.

நல்ல உருவங்கள் செதுக்கப்பட்ட அழகிய கட்டில் ஒன்று காணப்பட்டது. எண்ணெய் நுரையைப் போன்ற பல துணிகள் அக்கட்டிலின் மேல் போடப்பட்டிருந்தன. மேலும் காம்பு அரியப்பட்ட மலர்களும் தூவப்பட்டிருந்தன. அக்கட்டில் மிக அழகாக விளங்கிற்று; புலவரைத் தன் பக்கம் இழுத்தது.

இளைப்போடிருந்த புலவர் இளைப்பைப் போக்கிக்கொள்ள ஓர் இடம் தேடி கொண்டிருந் தாரன்றோ? கட்டிலைக் கண்டவுடன் அதன் மேலேறிப் படுத்துத் தூங்கித் தம் உடல் அலுப்பினைப் போக்கிக்கொள்ளக் கருதினார். அவர் பார்த்தது முரசு கட்டில் என்பதை அவர் அப்போது தெரிந்து கொள்ள வில்லை. ஆனால் அவருக்கு முரசு கட்டிலே தெரியாதா? அவர் முரசு கட்டிலை அறிந்தவரே. ஆயினும் உடல் களைத்திருந்தமையால், ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கவலையே இருந்தமையால் முரசு கட்டில் என்பதை மறந்தார். கட்டிலின் மேல் ஏறிப் படுத்தார். நன்றாகத் தூங்கி விழித் தவர்களும் இந்த முரசு கட்டிலில் படுத்தவுடன் உறங்கிவிடுவார்கள். எதனால்? கட்டிலின் மேல் போடப்பட்டிருந்த துணியின் மென்மையாலும் பூவினாலும் தூங்கியே தீருவர் என்றால், உடல் களைத்த நம் புலவர் தூங்கினார் என்று சொல்லவும் வேண்டுமோ . தம்மை மறந்து அயர்ந்து நன்றாகத் தூங்கினார்.

கட்டிலில் இருந்த முரசு எங்கே சென்றது? இரும்பொறை அரசனுக்கும் அடுத்த நாட்டரசனுக்கும் சண்டை உண்டாகியது . ஆதலினால், சேரன் அந்தப் பகைவன் மேல் படையெடுத்துப் போக வேண்டி இருந்தது. போர் செய்யச் செல்லும் முன்னர் முரசினை ஆற்றிற்குக் கொண்டு போவார்கள். அங்கே அதனை நீராட்டுவார்கள். பிறகு மயிலிறகால்’ செய்யப்பட்ட மாலை, மலர் முதலியவற்றை அணிவார்கள்; வணங்குவார்கள்; உயர்ந்த யானையின் மேல் ஏற்றுவார்கள். வள்ளுவன் என்பவனும் உடன் ஏறி இருப் பான், ஊர் நடுவில் யானையைக் கொண்டு போய் நிறுத்துவர்; வீரத்துடன் முரசினை அடிப்பர்; முரசொலியைக் கேட்ட வீரர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பெரிய சேனை ஆகி அணி வகுத்துப் படை எடுத்துச் செல்வார்கள். ஆகவே, முரசு வெளியில் கொண்டு போகப் பட்டது. முரசு இல்லாமலிருந்த கட்டிலில் கீரனார் உறங்கினார்.

வெளியில் சென்றிருந்த மன்னன் அரண் மனைக்கு வந்தான். வழக்கம் போல் முரசு கட்டிலைப் பார்க்கச் சென்றான். அவன் கண்கள் என்ன கண்டன! யாரோ ஒரு நாடோடி கட்டிலின் மேல் தூங்குவதாக நினைத்தான். அவன் உடல் படபடத்தது; நெஞ்சு காய்ந்தது; நாக்கு வறண்டது; சினம் மேல் எழுந்தது; “கடவுள் வாழும் கோவில் எவ்வளவு சிறந் ததோ அவ்வளவு சிறந்ததன்றோ முரசு கட்டில்! இந்த உண்மை யாருக்குத் தெரியாது? என் அரண்மனையில் இப் பகற்காலத்தில் முரசு கட்டிலில் ஓர் ஆள் படுத்துறங்குவதா? அவ் வளவு இழிந்துபோய் விட்டதா என்னுடைய அரசியல்! இந்தக் கொடியவனைக் கொன்றால் தான் என் வெகுளி தணியும். என் முரசிற்குப் பகைவரைப் பலி ஆக்க வேண்டியவன் யான். ஆனால், இன்றைய தினம் முறை யறியா இவனை முரசு கட்டிலுக்குப் பலி ஆக்குவேன்,” என்று கூறிக்கொண்டே வாளை ஓங்கிக்கொண்டு கட்டிலை நெருங்கினான்.

ஒரு வினாடிகாலமே உள்ளது; வாள் புலவரைத் துண்டம் செய்திருக்கும். தாம் வெட்டுண்டதை அறியாமலே புலவரும் நீண்ட தூக்கமாகத் தூங்கியிருப்பர். வலக்கையை முகத்தின் மேல் வைத்துக்கொண்டு புலவர் உறங்கினார்; அதனால் முகத்தை அரசன் தொலைவிலிருந்தபோது காணவில்லை. அருகில் வந்தவன் முகத்தைக் கண்டான்; புலவர் என்றறிந்தான்; அவர் அயர்ந்து உறங்குவதை யும் தெரிந்துகொண்டான். பெரிய கொடுஞ் செயல் செய்தவனைப் போலத் துள்ளினான்; கொலைத் தொழிலைச் செய்தவனைப் போல விழித்தான்; வாளைக் கீழ் விடுத்தான்.

“ஐயோ! என் உயிரைப் போன்ற புலவ ரைக் கொன்றிருப்பேனே! எனக்கு நல்லறிவு தந்த கடவுள் இவர் அல்லரோ! அரசியல் அறி வித்த ஐயரையா கொல்ல நினைந்தேன்! என்னே என் மதியின் இழிவு ! நடந்துவந்த இளைப்பால் உறங்குகின்றார். கால் முழுவதும் பாதைப் புழுதி படிந்திருக்கின்றதே. ஏ! தமி முன்னையே! உன்னுடைய அருமையான மகன் ஒருவனைக் கொலை செய்ய நினைந்தேன்! தவறு தலால் நேர்ந்த தப்பு எண்ணம் இது! ஆதலின் தமிழ்த் தாயே, மன்னிக்க வேண்டும்,’ என்று பல வற்றை முணுமுணுத்துக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாய் நின்றான். துக்கக் கடலில் ஆழ்ந்தான்.

அரசன் செயலையேனும் எண்ணங்களை யேனும் புலவர் அறிவாரா? ஒரு சிறிதும் அறியார். தூங்கிய அவர் சிறிது அசைந் தார். ‘இவர் விழித்துக்கொண்டு யான் நிற் கும் நிலையைப் பார்த்தால் என்ன நினைப்பார்?” என்று அரசன் கருதினான். சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே முரசிற்கு வீசும் கவரி வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்துத் தானே மெதுவாக வீசினான். புலவர் எதனை யும் அறியாத தூக்கக் கடலில் ஆழ்ந்திருந்தார்.

புலவர் கண் விழித்தார். ஆனால் கண் விழித்துப் பார்க்க முடியவில்லை. எங்கும் நோக் கினார். தாம் எங்கு இருக்கின்றோம் என்பதை உடனே அவரால் அறிய முடியவில்லை. மேலும் நினைத்துப்பார்த்தார். அரண்மனையில் இருப் பதை அறிந்தார். என்னே புதுமை. அரசன் கவரி வீசுகின்றான். இச் செயலைக்கண்ட புலவர் உடனே எழுந்து ஓடி, அரசன் கைகளைப் பிடித்துக்கொண்டார். கவரியை வாங்கி வைத்தார்.

“மலை நாட்டு மணியே! மணிமுடி தரித்த மன்னனே! வெற்றி நிறைந்த கொற்றவனே! என்ன காரியம் செய்தாய்? குற்றமற்ற வாரினால் கட்டப்பட்டது ; கருமரத்தால் செய்யப்பட்ட அடிப்பாகத்தை உடையது: மயிற்பீலி மாலை, நீலமணி மாலை முதலிய மாலைகள் சூட்டப்பட்டது; குருதிப்பலியைக் கொள்வது; வீரம் நிறைந்தது; இவ்வாறு சிறந்த முரசம் நீராடு வதற்காக வெளியில் கொண்டுபோகப் பட்டிருக் கின்றது. அம்முரசம் வைக்கப்படும் இடத்தில் யான் என்னை அறியாமலே உறங்கினேன். இச் செயல் என் உடல் களைப்பாலும் அறியாமை யாலும் நடந்தது. நீதி அறிந்த மன்னனே! நீவிர் என்ன செய்தல் வேண்டும்? முரசு கட்டி லின் தூய்மையைக் கெடுத்த என்னை இரண்டு கூறுகளாகத் துண்டித்திருக்க வேண்டும். அவ் வாறு செய்யவில்லை. நும்மைப் பற்ற வேண்டிய சினத்தைக் கெடுத்தீர். அவ்வளவோடு நில்லாது என்னருகே வந்தீர். என்னைக் கொல்லுதற்காக வாளேந்த வேண்டிய கையில் கவரியை ஏந்தினீர். மேலும் எனக்குத் தூக்கம் வருதல் வேண்டும் என்று வீசினீர். ஆ! நும் செயலை என்னென்பேன்! இவ்வாறு நும்மைச் செய்யச் செய்தது எது! தமிழ், ஆம், தமிழே. நீவிர் தமிழ் வளத்தை அறிந்தீர். அறிந்து நின்ற பெருமைக் குணமே என்னைக் கொல்லாது தடுத்தது. நீரே தமிழறிந்தவர். தமிழ் முழுதறிந்த தலைவரே! நும்முடை இக்குணம் என்றென்றும் வாழ்க! நும் வாழ்க்கை , வெற்றி சிறந்து விளங்குவதாக! நும் அறிவு தமிழின்பத்தைத் துய்த்து மேலும் மேலும் சிறப்பதாகுக,” என்றார்.

வாய் நிறையும் வாழ்த்தால் புலவர் வாழ்த்தினர். மன்னன், “புலவரே! தங்கள் நட்பே எனக்குத் தமிழறிவைத் தந்தது. தமிழறிவே என்னுள்ளத்தைப் பண்படுத்தியது. தங்கள் வாழ்த்து என்னை மேலும் மேலும் தமிழன் னைக்குத் தொண்டு செய்பவனாக ஆக்க வேண்டும் என்று தமிழ்க் கடவுளை வணங்குகின்றேன்,” என்றான். இருவரும் மகிழ்வுடன் அரண்மனையுள் புகுந்தனர்.

வாழ்க தமிழ்ப் புலவர் ! வாழ்க தமிழ் முழு தறிந்தோன் !

– சங்க இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *