ஜராசந்தன் வதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 28,064 
 
 

மகத நாட்டு அரசன் பிரகத்ரதன். காசிராஜனுடைய இரட்டைப் பெண்களை விவாகம் செய்து கொண்டான். இரு மனைவியர் மீதும் அளவில்லா அன்புடையவனாக இருந்தான். மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அரசன் பிரகத்ரதனுக்கு சந்தானப் பிராப்தி இருக்கவில்லை. அதனால் மிகுந்த மன வருத்தம் உடையவனாக இருந்தான். ஒருமுறை வனத்தில் வசிக்கும் கௌசிகர் முனிவரை சந்தித்தான். தனக்கு புத்திரப் பேறு வேண்டும் என்று விண்ணப்பிக்கிறான். மாமரத்தினடியில் உட்கார்ந்திருந்த அவர் மடியில் ஒரு மாங்கனி வந்து விழுந்தது.

கௌசிகர் முனிவர் அந்த கனியினை அரசன் பிரகத்ரதனுக்குக் கொடுத்து மிகச் சிறந்த மகன் வாய்க்க ஆசீர்வாதம் செய்கிறார்.

அரசன் பிரகத்ரதன் இரட்டை சகோதரிகளான இரு மனைவியர் மீதும் சமமான அன்புடையவனாக இருந்தான். அதனால் மாங்கனியை இருவருக்கும் பகிர்ந்தளித்தான். இரண்டு மனைவிகளும் கர்ப்பவதியாகினர். தகுந்த காலத்தில் பிரசவம் ஆனது. குழந்தை ஒரு மனைவிக்கு ஒரு பாதி உடலும் மற்றொரு மனைவிக்கு ஒரு பாதி உடலுமாக, ஒரு குழந்தையை நீண்ட வாக்கில் சரிபாக மாக வெட்டியது போன்று இரண்டு துண்டான உடல்கள் பிறந்தன.

ஒரே குழந்தையின் இரு துண்டு பாகங்களாகப் பிறந்த பிண்டங்களைப் பார்த்து அரசனும் அரசிகளும் மிகவும் துயருற்றனர். பணிப்பெண்களை அழைத்து ஊருக்கு வெளியே வனாந்தரத்தில் தூக்கி எறிந்து விடக் கூறினான். அரசகட்டளையின் படி பணியாட்கள் கானகத்தில் வீசி எறிந்தனர்.

கானகத்தில் நரமாமிசம் உண்ணும் ஜரா என்ற அரக்கி ஒருத்தி அப்பிண்டங்களைப் பார்த்து மிக சந்தோஷமாக அதனைச் சாப்பிட்டுப் பசியாறலாம் என வருகிறாள். உண்பதற்கு முன் அவள் அந்த இருபாதி உடல்களையும் ஒன்று சேர்க்க உடனை அவை ஒட்டிக் கொண்டு ஒரே குழந்தையாகி அழத்துவங்கியது.

அரக்கிக்கு அக்குழந்தையை உண்ண மனமில்லை. குழந்தையைக் கொல்லாமல் அரசன் பிரகத்ரதனிடமே கொண்டு வந்து கொடுத்து விடுகிறாள். பெற்றோர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஜரா என்ற அரக்கியால் ஒன்று சேர்க்கப் பட்டகுழந்தை ஆனதால் ஜராசந்தன்.

இவ்வாறு இரு துண்டுகளாகப் பிறந்த ஜராசந்தன் ஒன்று சேர்த்துக் குழந்தையானதால் அவனது உடல் எப்போதும் இரண்டாகப் பிரியும் தன்மை உடையதாக இருந்தது. இது ஜராசந்தனின் பிறவி ரகசியம் ஆகும்.

அரக்கு மாளிகையில் இருந்து தப்பித்துச் சென்ற பாண்டவர்கள், பாஞ்சால தேசம் சென்றனர். அங்கு திரௌபதியை அர்ஜுனன் போட்டியில் வெற்றி பெறுகிறான். பாண்டவர்கள் அவளை மணந்து கொள்கிறார்கள்.

இது இவ்வாறு இருக்க,

பீஷ்மருடைய அறிவுரைகளை மறுக்க இயலாத திருதராஷ்டிரன் விதுரரை பாஞ்சால தேசம் அனுப்பி பாண்டவர்களை ஹஸ்தினாபுரம் வரவழைக்கிறான். பாண்டவர்களை மக்கள் மிக சந்தோஷமாக, மிக உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள். பீஷ்மரின் விருப்பப்படி பாண்டவர்களுக்கு பாதி ராஜ்யம் தரப்படுகிறது. யுதிஷ்டிரருக்குப் பட்டாபிஷேகம் நடக்கிறது. காண்டவப்பிரஸ்தத்தை தலைநகராக கொண்டு பாண்டவர்கள் அரசாள்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணன் விண்ணுலகின் இந்திர லோகம் போன்று காண்டவப்பிரஸ்தத்தை மாற்ற விழைகிறார் அதனால் தேவ கலைஞன் விஷ்வகர்மாவைப் பணித்தார். எனவே காண்டவப்பிரஸ்தத்தை ஒரு மாயா லோகம் போன்று வடிவமைத்துக் கொடுக்கிறான் விஷ்வகர்மா. எந்த ஒரு குறையும் இல்லாத அந்நகரத்திற்கு இந்திரப்பிரஸ்தம் என்று பெயர் சூட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து ராஜ்யத்தை ஆளத் துவங்குகிறார்கள். ஒருநாள் நாரதமகரிஷி இந்திரபிரஸ்தம்வருகிறார். விண்ணுலகில் இருந்து ஒரு தகவல் கொண்டு வருகிறார். பாண்டவர்கள் யாகங்களில் சிறந்த ராஜசூயம் என்ற யாகத்தைச் செய்ய வேண்டும் என்ற பாண்டுவின் ஆசையைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். இந்த யாகத்தை சிறப்பாக செய்து முடித்தால் பாண்டுவுக்கு இந்திரலோகத்தில் சிறப்பான ஒரு இடம் கிடைக்கும். எனவே பாண்டுவின் இந்த விருப்பத்தினைப்பற்றி நாரதர் எடுத்துக் கூறுகிறார்.

ஆனால் ராஜசூயயாகம் செய்யும் போது நிறைய சிக்கல்களும் இடையூறுகளும் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. எனவே கவனமாக கார்யங்களை ஆற்றும் படி அறிவுறுத்துகிறார். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவதற்காக யாகம் செய்ய விரும்புகிறார் யுதிஷ்டிரர். அதற்கு முன் ஸ்ரீகிருஷ்ணரிடம் ஆலோசனைக் கேட்கிறார். எல்லா மன்னர்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு எந்த மன்னன் போற்றப்படுகிறானோ அவனே இந்த யாகம் செய்வதற்கு தகுதியானவன்.

ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் இந்த யாகத்தைச் செய்யக் கூடிய எல்லா தகுதிகளும் உன்னிடம் உள்ளன. துரியோதனனும் கர்ணனும் கூட இந்த யாகத்திற்கு தடையாக இருக்க மாட்டார்கள். ஆனால் மகத நாட்டரசன் ஜராசந்தன் நிச்சயமாகத் தடையாக இருப்பான்.

ஜராசந்தன் நரமேதம் என்கிற யாகம் செய்வதற்கு விரும்புகிறான். அதற்கு நூறு அரசர்களை ருத்திரனுக்குப் பலியிட வேண்டும். அவ்வாறு பலியிட்டு நரமேதயாகத்தினை அவன் பூர்த்தி செய்து விட்டால் அவன் மிகவும் வலிமையுடையவன் ஆகிவிடுவான். அதன்பின் யாராலும் ஜராசந்தனை வெற்றி பெற இயலாது. யாகம் செய்வதற்காக இதுவரை எண்பத்து ஆறு அரசர்களை வென்று சிறையில் அடைத்து வைத்திருக்கிறான். இன்னும் பதினான்கு அரசர்கள் தேவை. அதற்குள் நாம் ஜராசந்தனை யாகம் செய்யவிடாமல் தடுத்தால் நாம் வெற்றி அடையலாம்.

ஜராசந்தனை எதிர்ப்பதும் சுலபமானது அல்ல. அதிக வீர பராக்கிரமம் உடையவன் மேலும் சிசுபாலன் போன்ற வீரர்கள் அவனை ஆதரிக்கிறார்கள்.

ஜராசந்தனுடைய மகள் கம்சனின் மனைவி ஆவாள். ஜராசந்தனின் மருமகன் கம்சனை கிருஷ்ணனாகிய நான் கொன்றதனால் என்மீதும் என் யாதவ ஜனங்கள் மீதும் ஜராசந்தன் மிகுந்த குரோதம் உடையவனாக இருக்கிறான். அவன் மீதுள்ள பயம் காரணமாகவே

துவாரகாபுரிக்கு நாங்கள் இடம் பெயர்ந்தோம்.ஜராசந்தன் கொல்லப்பட வேண்டியவன் தான். அதனால் அவனை எவ்விதமாகவாவது வதம் செய்வதற்கு நானும், பீமனும், அர்ஜுனனும் முயற்சி செய்கிறோம். மகதநாடு செல்கிறோம் “ என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

ஸ்ரீகிருஷ்ணரும், பீமனும், அர்ஜுனனும் வேதியர் வேஷமிட்டு மகதநாடு சென்று ஜராசந்தனை தனிமையில் சந்திக்கறார்கள். அவனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.அதன்பின் எங்கள் மூவரில் யாருடனாவது தனிமையில் மற்போர் புரிய வேண்டும் என்று அறைகூவுகிறார்கள்

படைகளுடன் சென்று போரிட்டால் வெற்றி பெறுவது சற்று கடினம். அதனால் தனியாக மல் போருக்கு அழைக்கின்றனர்.

அதுகேட்டு ஜராசந்தன் பலமாக சிரிக்கிறான். கண்ணன் யாதவன், இடைக்குலத்தவன். அர்ஜுனன் சிறியவன். அதனால் தனக்கு நிகரான பீமனுடன் போர்புரிய வரும்படி அழைககிறான். அதனால் ஜராசந்தனுக்கும் பீமனுக்கும் இடையே மல் போர் ஆரம்பிக்கிறது. இருவரும் மிகக்கடுமையாகப் போர் செய்கின்றனர். மல்போர் விடாமல் அன்ன ஆகாரமின்றி பத்துப் பதினைந்து நாட்களுக்கு தொடர்ந்து நடை பெறுகின்றது.

ஜராசந்தன் சற்று களைப்படைய, பீமன் அவனைத் தலைக்கு மேல் தூக்கி நூறு சுற்றுக்கள் சுற்றி பின் கீழே போடுகிறான். ஜராசந்தனின் கால்களைப் பற்றி இரண்டாக கிழித்து வீசி எறிந்தான்.

இரண்டாகப் பிரிந்து ஒட்டக் கூடிய உடல் தன்மை கொண்ட ஜராசந்தன் பீமனால் எத்தனை தடவை இரண்டாக வகிர்ந்து போடப்பட்டாலும் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று போரிடுகிறான்

இதனால் ஆச்சரியப் பட்ட பீமன் திகைத்து தடுமாற ஸ்ரீகிருஷ்ணர் அவனை எப்படிக் கொல்வது என்பதனைக் குறிப்பால் உணர்த்துகிறார். ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து இரண்டாகப் பிரித்து அதனை தலை மாற்றிப் போடுகிறார். அக்குறிப்பினை புரிந்து கொண்ட பீமன் ஜராசந்தனை இரண்டாக வகிர்ந்து கால் மாற்றிப் போடுகிறான். முதுகோடு முதுகு சேர்ந்து உடல் ஒட்டிக் கொள்ள முடியாததினால் ஜராசந்தன் மரணமடைகிறான். இவ்விதமாக யுதிஷ்டிரர் செய்யப் போகும் யாகத்திற்கு தடையாக இருந்த ஜராசந்தன் கொல்லப் படுகிறான். ராஜசூய யாகத்திற்கு முதல் பலி போன்று ஜராசந்தனின் வதம் அமைந்தது.

நரமேதயாகத்திற்காக ஜராசந்தனால் சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்த எண்பத்து ஆறு அரசர்களும் விடுதலையாகி மட்டற்ற மகிழ்ச்சியுடன் தத்தம் நாடுகளுக்குத் திரும்பினர்.

இவ்விதமாக ஜராசந்தனின் வதம் நிகழ்ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *