(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“எங்கிருந்து வருகிறீர்கள்?”
“தமிழ்நாட்டிலிருந்து.”
“அப்படியா? மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் படைக்கும் கெளரவர் படைக்கும் குறைவில்லாமல் உணவு கொடுத்த தமிழ்நாட்டிலிருந்தா?”
“ஆம்.”
“உங்கள் அரசன் மகா தாதாவாக இருக்கிறானே!”
“அவன் பரம்பரையே அப்படித்தான்.”
“உதியஞ் சேரலாதன் என்ற பெயரை நாங்கள் அறிவோம். ஆனால் அவன் இயல்பு ஒன்றும் எங்களுக்குத் தெரியாது”.
“அவன் எல்லாக் குணங்களிலும் சிறந்தவன்.”
இவ்வாறு பேசிக்கொள்பவர்களில் ஒருவர் தமிழ் நாட்டார். மற்ருெருவர் வடநாட்டார். தமிழ்நாட்டில் உள்ள முரஞ்சியூர் என்ற ஊரிலே பிறந்த நாகராயர் என்ற புலவர் வடநாட்டு யாத்திரை செய்யலானார். புலவர்களிலே சிறந்தவர்களுக்கு அரசர்கள் முடியணி யும் சிறப்பை வழங்குவார்கள். அந்தச் சிறப்பைப் பெற்றவர் நாகராயர் ஆதலின் அவரை முரஞ்சியூர் முடி நாகராயர் என்று தமிழ்நாட்டார் வழங்குவர்.
பாரத யுத்தம் நடந்து முடிந்த காலம் அது. அந்தப் பெரும்போரில் குருக்ஷேத்திரத்தில் எல்லா நாட்டு மக்களும் இரு கட்சிகளிலும் சேர்ந்து போரிட் டனர். போர் நிகழ்ச்சியில்ை வேளாண்மை முதலிய முயற்சிகள் சுருங்கின. பதினெட்டு நாள் போராடி ஞலும் அதற்கு முன்னே பல பல ஏற்பாடுகள் நடந் தமையால் இந்த நிலை வந்துவிட்டது. போர், அறப் போராக, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடை பெற்றது.
பாரதப் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு உணவு போதாது என்ற செய்தி தமிழ்நாட்டு மன்னன் காதுக்கு எட்டியது. தமிழ் வீரர்களிலே சிலரும் பாரதப் போரில் ஈடுபட்டிருந்தனர். அக்காலத்தில் தமிழ்நாட்டின் பெரும் பகுதியை உதியஞ் சேரலாதன் என்ற சேரமன்னன் ஆண்டுவந்தான். தமிழ்நாடு நெல்லும் கரும்பும் விளையும் நாடு. பாரதப் போர் வீரர்களுக்கு அரிசி அனுப்பும் காரியத்தைச் சேர மன்னன் மேற் கொண்டான். ஒரு கட்சியினருக்குத்தான் உணவு தருவேன் என்று சொல்லவில்லை. தர்ம யுத்தத்தில் தர்ம நெறியுடையார் வெல்வார் என்ற உறுதி யாவருக்கும் இருந்தது. பசித்தவன் யாராக இருந்தாலும், பகைவகை இருந்தாலும் அவன் பசியைப் போக்குவது அறமென்பது சான்ருேர் கொள்கை.
சேரலாதன் இத்தகைய உள்ளம் படைத்தவன். இருவகைப் படைக்கும் போதிய உணவு அளிப்பதே தன் கடமை என்று உணர்ந்து, போர் முடியும் வரைக்கும் அப்படியே செய்து வந்தான். இந்தப் பெருஞ் செயல் காரணமாக அவன் புகழ் பாரத நாடு முழுவதும் பரவியது. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்று அவனை யாவரும் வழங்கலாயினர். முரஞ்சியூர் முடி நாகராயர் வடநாட்டு யாத்திரையில் வடநாட்டுப் பெருமையை உணர்ந்ததோடு, அங்குள்ளார் தமிழ் மன்னன் வண்மையைப் போற்றக்கேட்டு அம் மன் னன் பெருமையையும் நன்கு உணர்ந்தார்.
வடநாட்டில் அவரிடம் சேரனப்பற்றிய செய்திகளே ஆவலோடு பலரும் கேட்கலாயினர்.
“உங்கள் நாட்டில் போரே இல்லையா?”.
“இல்லை. பகைவரே இல்லை. அதனால் போரும் இல்லை”.
“அது எப்படிச் சாத்தியம் ஆகும்?”
“எங்கள் அரசனுடைய இயல்புகள் பகையில்லாமற் செய்துவிடுகின்றன. அப்படிச் சிறு பகை எங்கேனும் இருந்தால் அவர்களை ஒடுக்கும் படைவன்மை எங்கள் அரசனுக்கு உண்டு.”
“பகைவர் இல்லாமல் ஒரு நாடு இருக்க முடியுமோ?”.
“பகைமை கொண்டு எவரேனும் தவறு செய்தால் சிறு தவறு காரணமாகப் பெரிய போரைத் தொடங்குவது எங்கள் மன்னன் வழக்கம் அன்று. அப்பகை வரைப் பொறுத்தருள்வான். போற்ருரைப் பொறுக்கும் திறத்தில் அவன் பூமிக்குச் சமானம் ஆனவன்.”
“அவன் பொறுமை உடையவனாக இருக்கலாம். ஆனால் பகைவர் செய்யும் தீங்கு மிகுதியாகிவிட்டால் அரசனாக இருப்பவன் சும்மா இருக்கலாமா?”.
“அளவுக்கு மிஞ்சிப்போனால் உடனே போரைத் தொடங்க மாட்டான். ஒன்றும் செய்யாமல் வாளா இருக்கவும் மாட்டான். ‘எப்படிப் போர் நடத்தலாம்? பகைவரை அடக்குவது ஒன்றுதான் நம் இலக்கு. அதற்கு ஏற்ற தந்திரங்கள் எவை? நாட்டுக்கு அதிக ஊறுபாடு நிகழாமல் போரிட வழி என்ன?’ என்றெல்லாம் அமைச்சர்களுடன் விரிவாக ஆராய்வான்.”
“செயலில் முனையாமல் ஆராய்ந்து சூழ்ந்து என்ன பயன்?”.
“பலமற்றவர் செய்யும் ஆராய்ச்சி அல்ல இது. பலமுடையவன் நாடு வாழவேண்டும் என்னும் நோக்கத்தோடு தீர ஆராயும் சூழ்ச்சி இது. அவன் தனி மனிதன் என்ற நிலையில் உறுதிகுலையாத மனத்திண்மை படைத்தவன். அரசனென்ற வகையில் வீரமும் வலிமையும் உடைய படைகளைப் பெற்றவன். சூருவளிக் காற்றைப் போன்ற வலிமை அது. அதன் முன் எந்தப் படையும் நில்லாது.”
“இவ்வளவு பலமுடையவன் காலத்தைப் போக்கிக்கொண்டே இருப்பானா?”.
“அதுதான் இல்லை. பகைவர்களின் குறும்பு தனக்குத் தெரியும் என்பதைக் காட்டிப் பொறுமையை மேற்கொள்ளும்போது பலர் தம் பகைமையை விட்டொழிப்பர். போருக்கு வேண்டிய யோசனை செய்கிறான் என்ற அளவில் பகைவர் பலர் அஞ்சி ஒடுங்குவர். பின்னும் முனைபவர்கள் அரசனது படை வன்மையைக் கண்டு பேதுறுவர். அதுவும் செய்யாது போருக்கு எழுபவரை அழிப்பதில் தீயைப் போன்றவன் மன்னன். எத்தகைய படையாக இருந்தாலும் பொடியாக்கி விடுவான்.”
“எல்லோரையும் போலப் பகையை அடக்கும் அரசன் தானே அவன்?”
“அல்ல, அல்ல. போர்மூண்ட பின்னரும் தம் பிழையை உணர்ந்து வழிபடும் பகைவர்களே, நீரைப் போலக் குளிர்ந்த உள்ளத்தோடே ஏற்றுக்கொண்டு நன்மை செய்யும் உத்தமன் அவன்.”
“ஆ! எங்கும் கேளாத பெருமையாக அல்லவா இருக்கிறது? உலகமெல்லாம் ஐந்து வகையான பூதத் தின் சேர்க்கை என்று சொல்லுகிருர்கள். உலகத்தைக் காக்க வந்த உங்கள் அரசனும் ஐம்பூதங்களின் இயற். கையை உடையவனாக இருக்கிருன். நிலத்தைப் போன்ற பொறையும், விசும்பைப் போன்ற சூழ்ச்சியும், வளியைப்போன்ற வலியும், தீயைப்போன்ற தெறலும், நீரைப்போன்ற அளியும் அவன்பால் இருக்கின்றன என்று தெரிகிறது. அவன் நாட்டின் விரிவு எப்படி?”
“அவன் அன்பு நிறைந்த ஆட்சியில் சூரியன் மகிழ்கிருன். அவனுக்குரிய கீழ்கடலிலே உதயமாகி, அவனுக்குரிய மேல் கடலிலே மறைகிருன்.”
“இரு கடலுக்கும் இடைப்பட்ட நாடென்று சொல்கிறீர்கள். அவன் நாட்டு வளப்பம் எங்களுக்குத் தெரிந்ததே. அவன் புகழை வடநாட்டார் அறிந்தது கிடக்கட்டும். போரில் மாய்ந்து வீர சுவர்க்கம் புக்கவர்கள் வானத்தில் அவன் புகழைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவன் நாட்டுக்குக் கடல் வரம் பாலுைம் அவன் புகழுக்கு வானந்தான் வரம்பு.”
“ஆம், வானவரம்பன்தான் எங்கள் மன்னன்.”
“பஞ்சபாண்டவர்களோடு நூற்றுவராகிய துரி யோததிையர் போட்ட சண்டையில் அந்த நூற்று வரும் அழிந்தொழிந்தார்கள். அதர்மம் தோற்றது. அவர்கள் அழியும் வரைக்கும் இரு படைக்கும் கணக்கேயில்லாமல் சோறு வழங்கிளுன் உங்கள் அரசன். அவன் நீடுழி வாழவேண்டும். பசுவின் பால், கறக்கும்போதே புளித்துப் போனாலும், சூரியனுக்குள் இருட்டுப் புகுந்தாலும், நான்கு வேதங்களின் நெறி பிறழ்ந்து போனாலும் தனக்கு உதவியாக நிற்கும் மாறா மனம் படைத்த மந்திரிகளோடே நடுக்கமில்லாமல் வாழ்வானாக! எங்கள் இமாசலம்போல் வாழ் வானாக!”.
இந்த வாழ்த்துப் புலவர் காதிலே குளிர்ச்சியாக விழுந்தது.
“இமாசலம் போல நடுக்கமின்றி உங்கள் அரசன் வாழ்க!” என்று அந்தப் பெரியவர் சொன்னாரல்லவா? அதைக் கேட்டவுடன் புலவருக்கு இமாசல நினைவு வந்தது. அந்த மாபெரு மலைக்குச் செல்ல அவா எழுந்தது. புறப்பட்டார். போனார். கண்டார்.
இமயமலையின் உன்னதத்தைக் கண்ணுல் அளக்க முடியுமா? பாரதநாட்டின் வடபேரெல்லையாக வானை நோக்கி நிமிர்ந்து நிற்கும் அந்த மலைச் சாரலிலே புகுந்து பார்த்தார். பல முனிவர்களின் ஆசிரமங்க அடைந்து அவர்களைத் தரிசித்தார்.
ஆசிரமங்களில் இயற்கை எழில் தவழ்ந்தது. தவம் மலிந்திருந்தது. எல்லாம் அன்பு மயம். முனி வர் எரியோம்பும் வாழ்க்கையுடையவர். அந்த ஒமகுண்டத்தைச் சுற்றி இரவுக் காலத்தில் மடமான்கள் தங்கள் குட்டிகளோடு அச்சமின்றித் தூங்கின. அந்த முத்தீயாகிய விளக்குக்கு முன்னே, புலி முதலிய விலங்கினங்கள் வாரா என்ற தைரியத்தோடு தம்மை மறந்து அவை துயில் புரிந்தன. இந்தக் காட்சி முடி நாகராயருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
காலையில் சூரியனது செங்கதிர் இமயத்தின் மேலே வீசியது. வானளாவிய அதன் சிகரம் பொன்னைப் போலப் பளபளத்தது. அதைப் பார்த்து வியந்து கொண்டே நின்ருர் புலவர். பொற்குவையே சிகர மாக அங்கே பொருந்தி நிற்கிறதோ?’ என்று ஐயுற்று நின்ருர். ஒரு முனிவர், “அதற்குக் காஞ்சன சிருங்கம் என்று பெயர்” என்றார். புலவர், “பொற் கோட்டு இமயம்” என்று அப்பெருமலையைப் போற்றினர்.
“ஆம், நம் மன்னன் இந்த இமாசலத்தைப் போன்ற உயர்வுடையவன்; பரந்த உள்ளமுடையவன்; குளிர்ந்த உள்ளமுடையவன்; இதைப்போல நடுக் கின்றி வாழ்வானாக” என்று மனத்துள் வாழ்த்தினர்.
இமாசலத்தின் முன்னலே அவருக்குத் தமிழ் நாட்டு நினைவு தோன்றியது. ‘உருவத்தால் சிறியவராயினும் வன்மையில் பெரிய அகத்தியர், உருவத்தால் சிறியதாயினும் புகழினல் பெரிய பொதிகையில் இருக்கை கொண்டார். இமயமும் பொதியிலும் பெருமையால் ஒத்தனவே; பாரத நாட்டின் கலைத் திறத்தையும் தவச் சிறப்பையும் காக்கும் தம்பம்போல் இருக்கின்றன. இரண்டும் நடுக்கம் இல்லாதவை. சேரன் இமாசலத்தைப் போல வாழவேண்டும். பொதியிலைப் போலவும் தமிழைப் பாதுகாத்து நடுக்கின்றி வாழவேண்டும்.”
தமிழ்ப்புலவர் உள்ளம் இயமத்தையும் பொதியிலேயும் இணைத்துப் பார்த்து மகிழ்ந்தது. இரண்டும் ஒரே சால்புக்கு எல்லையாக நிற்பதை உணர்ந்தது. பாரத நாட்டின் சிறப்பையே அளந்து கண்டவர்போன்ற பெருமிதம் அவருக்கு உண்டாயிற்று.
முரஞ்சியூர் முடிநாகராயர் தமிழ்நாட்டுக்கு மீண்டு வந்தார். உதியஞ் சேரலாதனைப் பார்த்துவிட்டுத்தான் மறுகாரியம் செய்வதென்ற வேகம் இருந்தது அவருக்கு. மன்னனை அணுகினர்.
“புலவரே, வடநாட்டு யாத்திரை சுகமாக இருந்ததா? என்ன என்ன அதிசயம் கண்டீர்கள்?” என்று சேரன் கேட்டான்.
“எங்கும் சேரலாதன் பெருமையைத்தான் கேட்டேன். நீ வாழ்க!’ என்று உணர்ச்சி மிகுதியால் பேசினர் புலவர். அவர் உள்ளக் கருத்து, பாட்டாக வெளியாயிற்று.
மண்திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும் வளித்தலேஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றர்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்,
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின்
வெண்டலப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னட்டுப் பொருந,
வான வரம்பன நீயோ பெரும,
அலங்குளேப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்த8லக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்,
பாஅல்புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல்வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலீஇயரோ அத்தை, அடுக்கத்துச்
சிறுதலே நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே!
[மண் அணுச் செறிந்த நிலமும், அந்த நிலத் திற்கு மேலே உயர்ந்த வானமும், அந்த வானத்தைத் தடவி வரும் காற்றும், அந்தக் காற்ருேடு சேர்ந்த தீயும், தீயை அவிக்கும் நீரும் என்ற ஐந்து வகையான பெரிய பூதங்களது இயல்பைப்போல, பகைவர் தவறு செய்தால் அதைப் பொறுத்தலும், அளவுக்கு மேற் போனல் தண்டிக்கச் செய்யும் ஆராய்ச்சியின் விரிவும், அவர்களை அழிப்பதற்கேற்ற திடமும் படைப் பலமும், அவற்றைக்கொண்டு அவர்களை அழித்தலும், அவர்கள் வந்து பணிந்தால் இரங்கிக் காட்டும் கருணையும் உடையவனே! உனக்குரிய கடலிலே உதித்த சூரியன் உனக்குரிய கடலிலே குளிக்கும் எல்லையையும், புதிய புதிய விளைவையுடைய ஊர்களையும் பெற்ற நல்ல நாட்டுக்கு வேந்தே! வானத்தையே புகழுக்கு வரம்பாக உடையவன் நீ போலும், பெருமானே! அசைகின்ற கவரியை அணிந்த குதிரையையுடைய பஞ்சபாண்டவருடனே பகைத்து, பொன்னலாகிய போர்ப் பூவாகிய தும்பையை அணிந்து துரியோதனன் முதலிய நூறு பேரும் பொருது போர்க்களத்தில் அழியும் வரையில், பெருஞ் சோருகிய மிக்க உணவை இரண்டு படைகளுக்கும் கணக்கில்லாமல் வழங்கினவனே! பால் புளித்துப் போனலும், நான்கு வேதத்தின் வழியே நடைபெறும் ஒழுக்கம் வேறுபட்டாலும் வேறுபாடு இல்லாத ஆலோசனையைப் பெற்ற மந்திரிகளோடு நெடுங்காலம் விளங்கி, மலைச் சாரலில் குட்டிகளோடு பெரிய கண்ணையுடைய பெண்மான்கள் அந்திக் காலத்தில் அந்தணர் செய்யும் கடனாகிய ஓமத்தைச் செய்யும் முத்தியாகிய விளக்கிற்கு அருகில் துயிலும் பொற் சிகரங்களையுடைய இமய மலையையும், பொதிய மலையையும்போல நடுக்கம் இல்லாமல் வாழ்வாயாக!]
– எல்லாம் தமிழ், எட்டாம் பதிப்பு: ஜூன் 1959, அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், சென்னை.
இலக்கிய ஆதாரங்கள்
இரண்டு படைக்கும் சேரன் உணவு அளித்தான் என்பதைப் புறநானுற்றில் உள்ள இரண்டாவது பாட்டின் உரையில், உரையாசிரியர் தெரிவிக்கிறார், “பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத் தோய்” என்ற அடிக்கு, பெருஞ் சோருகிய மிக்க உணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய்’ என்று எழுதிய உரையிலிருந்து இது விளங்கும்.
“மண்திணிந்த” என வரும் பாடல் புறநானுற்றின் இரண்டாவது பாட்டு. ‘சேரமான் பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது’ என்பது அதன் பின் உள்ள பழங்குறிப்பு.