கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 21,862 
 

கொற்றவையின் ஒரு கையில் கூர்மையான கல்லாயுதம். அவள் தோளில் அப்பொழுதுதான் வேட்டையாடிய மான் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்துப் பாகத்திலிருஇருந்து இரத்தம் சொட்டி அவள் அணிந்திருந்த தோலாடை வழியே சிற்ரருவி யாக ஓடிக்கொண்டிருந்தது. அவளது மறுகையை அவளது பேரன்புக்குரிய சிறுவன் சேயோன் பற்றிக்கொண்டுவருகிறான்.

கொற்றவை முது தாய் . ஆனாலும் அவளிடம் இன்னும் இளமையும் உடல் வலிமையும் குறையவில்லை என்பதை பார்ப்பவர் எவரும் ஏற்றுக்கொள்வர்.அவள் தலைமைக்குக் கீழ் தாயரும் அவர்களின் கணவரும் அவர் பிள்ளைகளுமாய் சிறு கூட்டம் ஒன்று தொடர்ந்து கொண்டிருந்தது. அது ,மரங்கள் அடர்ந்த காட்டை நட்சத்திரங்களின் உதவியுடன் இருட்டை ஊடுருவி முன்னோறிக்கொண்டிருந்தது. அவர்களின் முன்னாலும் பின்னாலும் பெரிய வேட்டை நாய்கள் மோப்பம் பிடித்தபடி ஒடுவதும் நடப்பதுமாய் காவல் காத்துச் சென்றன.

அக்கூட்டத்தினரில் பெரும்பாலானவர்களின் கைகளில் கூர்மையான கொம்புகளும் கல்லாயுதங்களும் மட்டுமன்றி அன்று அவர்கள் வேட்டையாடிய மரை, முயல், உடும்பு முதலான விலங்குகளும் காணப்பட்டன. கைகளில் ஏந்திய சுமையோ காலை முதல் விலங்குகளின் பின் ஓடியதால் உண்டான களைப்போ அவர்களின் நடையின் வேகத்தைக் குறைக்கவில்லை.

இன்று அவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள். அவர்கள் எதிர்பாராத அளவு விலங்குகள் குறைந்த நேரத்துக்குள்ளாகவே கிடைத்துவிட்டன எப்படியும் ஒரு சில நாட்களுக்கு இந்த ஊண் உணவு போதும் . அவர்கள் தங்கள் குகைக் குடியிருப்புக்கு விரைந்து செல்வதற்குக் காரணம் இல்லாமலில்லை. இன்று அவர்கள் தரப்பில் ஒரு உயிர்கூடப் பலியாகவில்லை. இதனை அவர்கள் மிக மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும். கள்ளும் தேனும் அருந்தியும் குரவை இட்டு நடனம் ஆடியும் இந் நாளை அவர்கள் இனிதாக்கிக் கொள்வார்கள்.

கொற்றவை சேயோனைப் பெருமையாக நோக்குகிறாள். வேட்டையின் போது அவன் காட்டிய திறமை அவளுக்கு வியப்பைக்கூடத் தந்தது ,பன்னிரண்டு அகவையே சேயோனுக்கு ஆகியிருந்தது. கொற்றவையின் நாற்பது ஆண்டு கால அனுபவத்தில் இவ்வளவு திறமையான வேட்டைக்காரனை அவள் கண்டதில்லை. இலக்கு வைத்து அவன் எறிந்த கல்லாயுதங்கள் குறிதவறாது விலங்குகளைக் கொன்றுவிட்டன. ஒரு நாளில் பத்துக்கு மேலான விலங்குகளை ஒருவனே கொல்வது என்பதும் அதுவும் ஒரு குறிகூட பிழைக்காதவாறு கொல்வது என்பதும் அசுர சாதனைதான்,

தனக்குப் பின் இந்தக் கூட்டத்தை வழி நடத்த ஏற்ற வீரமும் வலியும் கொண்ட பெண் வாரிசு இல்லையே என்ற வருத்தம் கொற்றவையை சிலகாலமாக அரித்துக் கொண்டிருந்தது. அந்த வருத்தம் இன்று அறவே நீங்கிற்று.

சேயோன் ஆண் என்றாலும் அவனே இந்தக் கூட்டத்தை வழிநடத்தக் கூடிய தலைவன் என அவள் தீர்மானித்துக்கொண்டாள். உரியகாலத்தில் அவள் சேயோனைத் தலைவனாக தன் கூட்டத்துக்கு அறிவிப்பாள்.

சேயோன் இனக்குழு தலைவனாகி பல ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் சேயோன் ,கொற்றவை என்ற பெயர்கள் தொடர்ந்தும் தலைமைகுரிய பெயர்களாக வழங்கப்பட்டுவருகிறது.

வேட்டைத் தலைமையோடு கூடிய குலத்துக்கான தலைமையை பெண்கள் சில சமயங்களில் ஏற்றபோதும் ஆண்களே பெரிதும் தலைமை ஏற்று வருகிறார்கள். தாய முறைப்படியே இத்தலைமைத்துவம் வழங்கப்பட்டுவருகிறது முது தாய் என்ற வைகையில் கொற்றவை தனது இனக்குழுவுக்குரிய முக்கிய முடிவுகள் எடுப்பதில் பெரும் பங்கு வகித்துவருகிறாள்.

இன்றைய சேயோன் நாற்பது அகவைப் பராயத்தை அடைந்துவிட்டான் ஆனாலும் அவனது உடற்கட்டில் சிறிதும் தளர்ச்சியில்லை. பரந்து விரிந்த உரமேறிய மார்புடன் போரிட்டு போரிட்டு உறுதியான உடற்கட்டுடனும் அவன் ஆணழகனாக மிளிர்ந்தான்..

சேயோனின் தாயாகிய கொற்றவை முதுமையில் கனிந்துவிட்டாள், மகவீன்று சிலகாலமேயான தாயருடனும் அவரது சிறு மதழைகளுடனும் குடியிருப்பிலேயே இன்பமாகத் தனது பொழுதைக் கழிக்கிறாள்.

சேயோனின் தலைமையில் வேட்டையாடுவது அவன் குழுவினருக்கு குறிப்பாக இளைஞருக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்துவந்தது.

பெரும் விலங்குகள் வேட்டையின் போது அகப்படுத்தப் படுகின்றன. கரடி, சிறுத்தை மான் வரிசையில் யானைகூட வேட்டையாடப்படுகிறது. . இளைஞர்கள் மிகவும் செங்குத்தான மலைகளில் கூட லாவகமாக ஏறி மலைத்தேன் எடுத்துவந்தார்கள்.

பெண்கள் மலைச் சாரலில் தினை சாமை முதலான சிறுதானியங்களைப் பயிரிடக் கற்றுக் கொண்டுவிட்டார்கள. அக்குடியில் உள்ள சிறுமிகள் பயிர் முற்றும் காலங்களில் பறவைகள் ஊறுசெய்யாமல் இருக்க தினைப்புனத்தைக் காவல் செய்தார்கள். ஏனைய காலங்களில் அவர்கள் தங்கள் தாயருடன் சென்று வள்ளிக் கிழங்கையும் பழங்களையும் சேகரித்து வந்தனர். போதிய உணவு கிடைப்பதாலும் பெண்களுக்கு பயிர்த் தொழில் இருப்பதாலும் அவர்கள் இப்பொழுது வேட்டையாடச் செல்வதில்லை.

வேட்டை வாழ்வு முன்பு போல அதிக கடினமாக இல்லை. இரும்பாயுதங்கள் இன்று பாவனைக்கு வந்து விட்டன.வேல், வாள், கத்தி ,கோடரி, அம்பு முதலியன அவர்களது ஆயுதங்களாக உள்ளன.

இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அடைந்த மாறுதல்கள் மிகப் பெரியவைதாம்.

பெரும் குகைகளையே வாழ்விடமாகக் கொண்ட நிலைமாறி குரம்பைகளும் இறப்பை எனப்படும் தாழ்வாரங்களும் அமைத்து மண்ணால் வீடுகளை அமைக்கப் பழகிவிட்டார்கள்.

நெருப்பின் பயன்பாட்டைத் தெரிந்து கொண்டமை அவர்கள் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை ஏற்பதுத்தியிருந்தது. உணவை நெருப்பு கொண்டு சமைக்கப் பழகிவிட்டார்கள்.

களிமண்ணால் பானை சட்டி செய்து அவற்றை நெருப்பினால் சுட்டு பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

அவர்கள் குடி கிளைகள் பல பரப்பி மிக ஆழமாக அந்த அழகிய ஆதி மலை நிலத்தில் வேரூன்றத் தொடங்கிவிட்டது. அதனைக் கட்டிக்காக்கும் பொறுப்பை சேயோன் திறம்படச் செய்து வருகிறான்.. தனது குடியைப் பாது காக்கவும் பெருகிவரும் மக்கட் பெருக்கத்துக்கு வேண்டிய நிலத்தை விரிவுபடுத்தவும் அவன் தலைமை தாங்கி வேறு இனக்குழுக்களுடன் சிலபோர்களை நடத்தி அதில் தன்குடிக்கு அதிக சேதமில்லாது வெற்றிகளைக் கண்டிருந்தான். அதிலும் சூரனோடு போரிட்டு வெற்றிகொண்டது மிகவும் பேசப்படுவதாக இருந்தது.

ஆதி மலையில் வாழ்ந்த சேயோன் குடியை வெற்றிகொள்ள முதுமலையைச் சேர்ந்த சூரனது குடியினர் பலகாலம் திட்டமிட்டிருந்தனர். சூரன் மிகச்சிறந்த வீரன் என இனக்குழுக்கள் பலவற்றில் பேசப்பட்டுவந்தது. சூரனிடம் இருந்த படை மிகவும் பெரியது.அவன் பல குடிகளை ஏற்கனவே கொடுமையாகப் போரிட்டு வெற்றிகொண்டிருந்தான். ஆனால் சேயோனை வெற்றிகொள்வது கடினமானது என பலர் சொல்லக் கேட்டு சேயோன் மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்தான்.

சேயோனின் குடிகள் கள்ளுண்டு மயங்கியிருந்த ஒர் இரவுப் பொழுதினை அவர்கள் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுத்திருந்தனர். ஆதி மலைக்குள் ஊடுருவி காத்திருந்தனர்.

ஆனால் சேயோன் ஆயிரங்கண்கலோடு என்றும் விழித்திருப்பவன் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆதிமலை மிகவும் பெரியது . அடர்ந்த காடுகளால் சூழப்பட்டது. அதனுள் பகை உணர்வோடு புகுந்தவர்கள் உயிரோடு திரும்புவதென்பது முடியாததாக இருந்துவந்தது.

மலையில் ஆங்காங்கே கண்காணிப்பு பறன்கள் அமைக்கப்பட்டு வீரர் சிலர் எப்பொழுதும் காவல்காத்திருப்பர்.அவர்கள் விலங்குபோல குரலெழுப்பி எதிரியின் வருகையை அறிவிப்பார்கள்.

அன்றும் அவர்கள் எழுப்பிய ஒலி கேட்ட சேயோன் மது போதையில் இருந்தவர்களுக்கு போதையைத் தெளிவிக்கும் பச்சிலையை வழங்குமாறு கட்டளையிட்டான்.

போதைதெளிந்த ஆணும் பெண்னும் சில நிமிடங்களிலேயே போருக்கு தயாராகிவிட்டார்கள்.

சேயோனே தலைமை தாங்கி போருக்குச் சென்றான்.. சில மணிகளே நீடித்தது கடும் போர் .அம்பு மழைபோல் இருபக்கமும் பொழிந்தது. படைகளில் சில மற்போர் நிகழ்த்தின. வாள்போரில் வீரர் பலர் வீழ்ந்தனர். சூரனின் படை இத்தகைய மூர்க்கமான தாக்குதலை எதிர் பார்க்கவில்லை . அப்படை நிலைகுலைந்து போனது,.தப்பியோட முயன்றவர்கள் தாம் சேயோனின் படைகளால் முற்றுமுழுதாகச் சூழப்பட்டிருப்பதை உணர்ந்து திகைத்தனர்.

சூரனுக்கும் சேயோனுக்கும் நேரடியாகப் போர் நிகழ்ந்தது. ஒருசில கணப்பொழுதிலேயே சிறந்தவீரனான சூரன் சேயோனின் வாள்வீச்சினால் தலையறுபட்டு நிலத்தில் வீழ்ந்தான். தலைவனை இழந்த படைகள் சேயோனிடம் மண்டியிட்டன.

ஆதி மலையுடன் முதுமலையும் சேயோனின் தலைமைக்குள் வந்தது. இந்தப் போர் சேயோனின் வரலாற்றில் மறக்கப்படாத போராக மாறியது..

வேட்டையில் பெருவிலங்குகள் கிடைத்தபோது எல்லாம் அதனைக் கொண்டாடும் களியாட்டங்களும் அதிகம் நடக்கின்றன. போர் வெற்றி பெறும் போது அக்களியாட்டம் உச்சநிலையை அடையும். ஊண் உணவு நெருப்பில் வாட்டப்பட்டு மலைத்தேனுடன் தாராளமாக உண்ணப்படுவதுடன் மிகவும் புளிக்கவைக்ககப்பட்டு சுவை ஊட்டப்பட்ட தேறலும் ஆண்களாலும் பெண்களாலும் அருந்தப்படும். பல்லிழந்த முது பருவத்தினர் சுடப்பட்ட இறைச்சியின் மென்மையான பாகத்துடன் தினைச்சோற்றை குருதியுடன் கலந்து உண்கின்றனர்-.

இந்த முன்னேற்றத்துக் கெல்லாம் சேயோனின் தலைமையே காரணம் என அக்குடி நன்றாக உணர்ந்தது. அது நன்றியுணர்வாக குடியினரின் ஆழ்மனத்தில் உறைந்து கொண்டது.

குரவையிட்டு ஆடும் போது அவர்களில் குரல் வளமும் பாட்டிசைக்கும் திறனும் கொண்ட சிலர் பாடத் தொடங்கினர். சில பாடல்கள் வேட்டையின் போது அவர்கள் ஆற்றிய வீர தீரச்செயல்களை விபரிப்பனவாக இருக்கும். சில பாடல்கள் போர் வெற்றி பற்றிய செய்திகளை விபரிப்பனவாக இருக்கும். இப்பாடல்கள் பலவற்றில் தம்மைச் சிறப்பாக வழிப்படுத்தும் சேயோனின் பெருமை உயர்வாகக் கூறப்பட்டிருக்கும்.

அவர்கள் காதல் பாடலகளைப் பாடுவதிலும் மிகவும் உற்சாகத்தைக் காட்டுவார்கள்.அதில் சில தம் தலைவன் சேயோனதும் வள்ளியினதும் காதல் பற்றியனவாக இருக்கும். பெரும்பாலனவை பாடுபவர்களது சொந்தக் காதலை விபரிப்பனவாக இருக்கும்.அப்பாடல் பாடும் இளைஞன் தனது காதலிக்கு தன் காதலின் ஆழத்தை எடுத்துரைப்பான். தன் காதலி தன்னைத் தனிமையில் சந்திக்க வரவேண்டிய இடத்தைக் குறிப்பாக உணர்த்துவான். அவளும் அதற்கு எதிர்ப் பாட்டு பாடுவாள். ஆனால் அவர்கள் செய்தி பரிமாறிக்கொள்வது மற்றவர்களுக்கு புலப்படாதிருக்கும் அப்பாடல்களை அவர்களில் குறிப்பாக முதியோர் வெறும் காதல் பாடல்களாகக் கருதி மிகவும் இரசிப்பார்கள். குறிப்புப் பொருளை உள்ளுறுத்திக்கூறுவதற்கு அவர்களின் அபாரமன சூழலியல் அவதானமும் அறிவும் உறுதுணையாக இருந்தன.

காட்டில் மூங்கல்களில் எற்பட்ட துளைவாயிலாக உண்டான இன்னிசையைக் கண்டு குழல் கருவியைக்யும் வில்லைப் வளைத்து நாணெற்றிய போது ஏற்பட்ட ஓசை இனிமைதர அதில் சிலமாற்றங்களை ஏற்படுத்தி எளிமையான யாழ் போன்ற ஒரு கருவியையும் விலங்கின் தோல் கொண்டு மத்தளத்தையும் உருவாக்கி இசைப் பாடலுக்கு இணையாக இசைக்கவும் சில இளைஞர்கள் தொடங்கினர். இந்த சில இளைஞர்கள் யுவதிகளிடம் இருந்த ஆர்வமும் திறமையும் மற்றவர்களால் மிகுதியும் வரவேற்புக்கு உள்ளாகின. அவர்கள்தந்த உற்சாகம் இவர்கள் தம் திறமையை வளர்த்துக் கொள்ள உதவின.

அவர்கள் அறியாதவகையிலேயே அங்கு கலைகள் உருவாகி வளர்ந்துகொண்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *