(பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக தமிழ் கூறும் நல்லுலகத்தில் நிகழ்ந்த நிகழ்வு பற்றிய ஒரு புனைவு சொல் ஓவியம்)
கதிரவன் தன்னுடைய கடமையைத் தவறாமல் கதிரொளியைப் பரப்பிக் கொண்டிருந்த காலை வேளை தருணத்தில் மஞ்சத்தில் படுத்திருந்த, முற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவரான நிலந்தரு திருவிற் பாண்டியன் என்று போற்றப்பட்ட கம்பீரத் தோற்றம் கொண்ட என்புழித் திருமாறன் கண் விழித்தார். சாளரம் வழியாக கதிரவனைப் பார்த்தார்.
நாம் இப்போது எங்கிருக்கிறோம் இது என்ன இடம் என்று கேள்விகள் மன்னனின் நெஞ்சில் ஓடின. அவரை உலுக்கிய, நேற்று கண்ட காட்சிகள் அவரது மனத்திரையில் விரிந்தன. கோ நகரமான கபாடபுரத்திற்கு வெளியே உள்ள கிராமங்களுக்குச் சென்று சிறிய தேரில் தமது மெய்க்காப்பாளர் உடன் தலைநகரத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது முன்னோர்களாலும் தம்மாலும் போற்றிப் பாதுகாக்கப் பெற்ற செல்வச் செழிப்பு மிக்க கபாடபுரத்தை ஆழிப்பேரலை கபளீகரம் செய்யும் காட்சியைக் கண்டு துடிதுடித்துப் போய் தேரிலிருந்து இறங்கி ஊரை நோக்கி ஓடினார். மெய்க்காப்பாளர் முத்தப்பன் ஓடிக் கொண்டிருந்த அரசனின் கரங்களைப் பிடித்து இழுத்தார். மன்னா இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்றார். உலகமே இருண்டு போனதாகத் தோன்றியது அரசனுக்கு. கடல் சூழ்ந்த உலகம் என்பார்கள். அதனால் கடல், இந்த அழகிய மாநகரை மக்களோடும் உடைமைகளோடும் சேர்ந்து விழுங்குவதா? கவிகள் பாடியது போல் பரந்து கெடுக உலகியற்றியான் என்று தான் சொல்ல வேண்டும். அப்போது மனம் கலங்கி மயங்கியவர் இப்போது தான் சுய நினைவைப் பெற்றார்.
கதவைத் திறந்து கொண்டு ஓர் அழகான இளைஞி அரசனின் அருகில் வந்தாள். அரசரைக் கைகூப்பி வணங்கிளாள்.
‘மாமன்னருக்கு வணக்கங்கள். மாமன்னர் வாழ்க வாழ்க’ என்றாள். ‘தாங்கள் நீராட்டம் கொள்ள…. ‘
‘வாழ்த்துக்கள் இளம்பெண்ணே.. இடத்தைக் காட்டு நானே நீராடி விட்டு வருகிறேன். இது என்ன இடம்? நான் இங்கு எப்படி வந்தேன்… இந்த ஊர் இயற்கை சீற்றத்திலிருந்து தப்பி பிழைத்து விட்டதா?‘ நெஞ்சில் மோதும் வருத்தங்களுடன் கஷ்டப்பட்டு சொற்களை உதிர்த்தார் அரசர்.
‘ஆம் மாமன்னா. இது பூவனம் கிராமம். என் தலைவி இளங்கிளி அவர்கள், கடலோரக் கிராமத்து மக்களுக்காக நடத்தி வரும் ஆதுர சாலை இது. கடல் அன்னைக்கு அருகில் இருந்தாலும் கோ நகரமான கபாடபுரத்தை விழுங்கிய பேரலை எங்களை விட்டு விட்டது இறைவனின் கணக்கு யாருக்குப் புரியும். மன்னிக்கவும் அதிகமாகிப் பேசி விட்டேன்… மைய சாலையில் மயக்கத்தில் இருந்த தங்களையும் தங்கள் மெய்க்காப்பாளரையும் எங்கள் தலைவி நேற்று மாலை இங்கு அழைத்து வந்தார்கள்.
‘என்னுடன் இருந்தவர்… ‘ மன்னர் கேட்டார்.
‘அவர் மற்றொரு அறையில் மஞ்சத்தில் படுத்துக் கொண்டு இருக்கிறார். கண் விழிக்கவில்லை. காய்ச்சலும் வந்துள்ளது . நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் மாமன்னரே’
‘உன்னுடைய பெயர்.. ‘
‘பொருணை என்பார்கள் என்னை’
‘பொருணை..நான் நீராட வேண்டிய இடத்தைக் காட்டு . எனக்கான மாற்று உடை எடுத்து வை.‘
மன்னர் அறையை விட்டு வெளியேறினார். பொருணை அவளைப் பின் தொடர்ந்தாள்.
ஆதுர சாலையின் மையப் பகுதியில் நீள் இருக்கையில் அமர்ந்து இருந்த பாண்டிய அரசர் என்புழித் திருமாறனை ஆதுர சாலையின் தலைவி பேரிளம் பெண்மணி இளங்கிளி சிரம் தாழ்த்தி வணங்கினார்.
மன்னரின் எதிரே வைக்கப்பட்டிருந்த பால் பழங்களை அவர் தொடவில்லை என்பதை அந்தப் பெண்மணி அறிந்து கொண்டாள்.
‘மாமன்னர் அவர்களே’ என்று மெல்லிய குரலில் மிகுந்த பணிவுடன் அவர் பேசினார். ‘தாங்கள் சிறிது அளவாவது அமுது செய்ய அடியாள் விண்ணப்பிக்கிறேன்.’ என்றார்.
‘அம்மையே… முன்னோரும் அடியேனும் கட்டிக் காத்த, பரிபாலணம் செய்த, கடலோர கோ நகராம் கபாடபுரத்தை பெருங்கடல் அரசன் அமுது செய்து விட்டானே.. எப்படி நான் அன்ன ஆகாரத்தைப் போனகம் செய்வேன். இடைச் சங்கத்து இறுதியில் இருந்தவன் என்புழித் திருமாறன், மக்களையும் உறவுகளையும் கொண்ட பெண்டிரையும் பெற்ற்றெடுத்த பிள்ளைகளையும் தலைநகரத்தையும் மாக்கடல் விழுங்குவதை வேடிக்கை பார்த்தான் என்று நாளைய வரலாறு என்னைப் பேசப் போகிறது இல்லை ஏசப் போகிறது’ என்றார் மன்னர்.
‘மாமன்னா..அடியாள் விண்ணப்பிக்கும் சொற்களை சற்றே செவி மடுக்க வேண்டுகிறேன். தங்களைப் போலவே பாண்டிய நாட்டு மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இயற்கை நாம் வாழ வழிவகை செய்வது போல் சில சமயங்களில் நமது உடைமைகளையும் மக்களையும் ஊழிக்காலம் போல் இயற்கைச் சீற்றங்களால் பறித்துக் கொள்கிறது. தங்கள் முன்னோர் முன்பு தலைச்சங்கம் நடத்திய தென்மதுரையும் அழிந்து பட்டது என்று என்னுடைய பாட்டானார் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட பேரிழப்பையும் சமாளித்துத் தானே தொடர்ச்சியாக அவர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்… ‘
‘தாங்கள் என்ன கூற வருகிறீர்கள்?‘
‘மாமன்னரே… தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி என்பது பெரியோர் வாக்கு . தங்களின் செங்கோல் ஆட்சியின் முன்னால் பல்வேறு சவால்கள் பல்வேறு வடிவங்களில் முன் நிற்கும். அவற்றில் இயற்கைச் சீற்றங்களும் அடங்கும். தங்கள் மனக்கலக்கம், வருத்தம் புரிகிறது… ‘
அரசர் அந்தப் பெண்மணியின் முகத்தை உற்றுப் பார்த்தார்.
‘அடியாள் தகாத சொற்களைக் கூறி இருந்தால் மன்னிக்க வேண்டும் மாமன்னரே … ‘
‘தாங்கள் அதிகப் பிரசங்கம் எதுவும் பேசி விடவில்லை. தாங்கள் என்னை விட வயதில் மூத்தவராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மூத்தவராக தாங்கள் எனக்கு கூறியது தெம்புரைதான். சென்றதினி மீளாது. இன்று புதிதாய்ப் பிறந்தோம்..‘ என்று பேசிக் கொண்டே பால் பழங்களைப் பருகினார்.
‘எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே . சற்று தொலைவில் வடக்கில் உள்ள மதுரையை கோ நகரமாக ஆக்கி எனது முன்னோர் என்னிடம் விட்டுச் சென்ற செங்கோல் ஆட்சியைத் தொடர்கிறேன். தாங்கள் என் உதவியாளர் முத்தப்பனை எழுப்பி அழைத்து வாருங்கள். மேலே ஆக வேண்டிய செயல்கள், மறு சீரமைப்பு பணிகள் பற்றி எல்லாம் பார்ப்போம். சுற்றுப்புறக் கிராமங்களின் தலைவர்களையும் குடிகளையும் அழைத்து வர ஆட்களை அனுப்புங்கள்’ என்று கூறி எழுந்து நின்ற மன்னர், அங்கே ஓர் இடத்தில் தொங்க விடப்பட்டிருந்த கூண்டுக் கிளிகளைப் பார்த்தார்.
கிளிகள் ‘பாண்டிய மாமன்னர் வாழ்க பாண்டிய மாமன்னருக்கு வெற்றிகள்’ என்று மிழற்றின.
மன்னர் ‘இளங்கிளி அம்மையார் வளர்க்கும் கிளிப்பிள்ளைகளோ‘ என்றார். பேரிளம் பெண்மணி இளங்கிளியின் முகத்தில் புன்னகை.
குறிப்பு –
1) இந்தப் புனைகதையின் கதைக் கருவுக்கான ஆதாரம் – அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராக இருந்த மகா வித்துவான் தமிழறிஞர் ரா. இராகவையங்கார் அவர்கள் (20 செப்-1870 – 11 ஜூலை 1946 ) எழுதிய தமிழ் வரலாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ள ‘கடல்கோள்’ என்ற தலைப்பிலான கட்டுரை. இந்த நூலை சென்னை பூம்புகார் பதிப்பகம் 2017 ல் வெளியிட்டுள்ளனர்.
2) முற்காலப் பாண்டிய மன்னர்களின் தலைநகரமான கடலால் கொள்ளப்பட்ட கபாடபுரம் பற்றி, அதன் செலவச் செழிப்பு பற்றி முதுபெரும் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி அவர்கள் ‘கபாடபுரம்’ என்ற வரலாற்றுப் புதினத்தைப் படைத்துள்ளார்.
குறிப்பு – சவால் என்பதை அடிநாதமாக கொண்டு சவால் கதைகள் 10 என்ற இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன். இந்தப் புனைகதைகளில் , சமூக கதைகளில் விவரிக்கப்படும் சூழல்கள் , பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.