கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 5, 2023
பார்வையிட்டோர்: 3,584 
 
 

(1983ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவள் கதை | ராட்சஸி

சந்திரமதியை அணைத்த வண்ணம் திரும்பிய சத்ருஞ்சயன் கையில் வாளை உருவிநின்ற கோட்டைக் காவலர் தலைவனை மிக அலட்சியத்துடன் பார்த் தான்.”யார் நீ?” என்றும் விசாரித்தான், அலட்சியம் குரலிலும் ஒலிக்க.

“உன்னை நேற்று மல்லிநாதருடன் அனுப்பியவன். நினைப்பில்லை உனக்கு? உன் வாள் விறகுக் கட்டையில் சொருகியிருந்தாலும் என் கண்களை மறைக்க முடியவில்லை. உன்னைத் தனது வேலையாள் என்று மல்லிநாதர் சொன்னதை நான் நம்பி விட்டேனென்று அவர் எண்ணியது விசித்திரம். அத்தனை சுலபமாக மல்லிநாதர் ஏமாறுபவர் அல்லர். ஏமாற்றும் குணமும் அவருக்குக் கிடையாது. நேற்று என்னவோ சுபாவத் துக்கு எதிராக நடந்து கொண்டார். அப்படி அவர் உன்னைக் காப்பாற்றியதற்கு நீ செய்யும் கைமாறு இதுதானா ?” என்று வினவினான் கோட்டைக் காவலர் தலைவன்.

சத்ருஞ்சயன் கண்கள் அவன் மீது பதிந்தன. “கோட்டைக் காவலர் தலைவரே! அந்த மல்லிநாதர் என்னை ஆடுகளை மேய்க்க, அவரது மகளுக்கு உதவ நியமித்திருக்கிறார். ஆடுகள் தறிகெட்டு ஓடாமல் வளைக்கவே வந்தேன்” என்று விளக்கம் தந்தான், கண்களைக் கோட்டைக் காவலர் தலைவனிடமிருந்து எடுக்காமலே.

கோட்டைத் தலைவன் அந்த நிலைமையிலும் அமைதியைக் காட்டி, “நீ ஆடுகளை வளைப்பதாகத் தெரியவில்லையே. அவர் மகளை வளைத்திருப்பதாகத் தெரிகிறதே!” என்று சொல்லி சத்ருஞ்சயன் இடது கை சந்திரமதியின் இடையில் தவழ்ந்திருப்பதைத் தனது வாளாலும் சுட்டிக் காட்டினான்.

அதுவரை அவர்கள் உரையாடலில் ஈடுபடாம்லிருந்த சந்திரமதி சத்ருஞ்சயனிடமிருந்து சற்று முன்னே நகர்ந்து நின்றாள். “ஜஸ்வந்த்சிங்! யாரைப் பார்த்து என்ன பேசுகிறாய் என்பதைப் புரிந்து கொண்டு பேசுகிறாயா?” என்று வினவினாள் மிகவும் நிதானமான குரலில்.

அப்படி அவள் நிதானங் காட்டிய சமயத்தில் அவள் பருவ உடல் கெட்டிப்பட்டு விட்டதையும், கால்கள் விரைத்து நின்றதையும், திடீரென அவள் நிமிர்ந்ததையும், தலையை ஒரு முறை ஆட்டிக் குழலைப் பின்னுக்குத் தள்ளியதையும் சத்ருஞ்சயன் கண்டாலும், காவலர் தலைவனை நோக்கிய முகத்தைக் காண முடியவில்லையாகையால் அவள் விழிகள் சீறியதை, முகம் பயங்கரமாகச் சிவந்ததை அவனால் பார்க்க முடியவில்லை.

ஆனால் அவள் கமல முகம், அன்பு சொட்டிய முகம் திடீரென ராட்சஸ முகமாக மாறிவிட்டதை ஜஸ்வந்த் கண்டான். அந்த நிலையில் அவள் எதற்கும் துணிந்தவள் என்பதையும் புரிந்து கொண்டான். ஆகவே சற்றுப் பின்னடைந்து வாளையும் சிறிது தாழ்த்தி, “சந்திரமதி! உன்னைக் காப்பாற்றவே நான் வந்தேன். திருட்டுத்தனமாக ஊருக்குள் புகுந்த இவனி டம் எனக்கு நம்பிக்கையில்லை,” என்று கூறினான்.

“என்னைக் காக்க இன்னொருவன் தேவையா?” என்று வினவிய சந்திரமதியின் குரல் அடியோடு மாறி யிருந்தது.

காவலர் தலைவன் பணிவுடனேயே பதில் சொன்னான். “இல்லை மல்லிநாதர் மகளே! இங்கு அடிக்கடி சித்தூர் ராணாவின் ஒற்றர்கள் வருகிறார்கள். உன்னைத் தூக்கிச் செல்லவே அவர்கள் வருவதாகவும் கேள்வி இந்தக் கோட்டையின் காவலர் தலைவன் என்ற முறையில் உன்னைக் காப்பது என் கடமை” என்று.

சந்திரமதி ஒரு விநாடி பதில் சொல்லவில்லை. “பிறகு, ஜஸ்வந்த்! நீ போகலாம்” என்று ராணியைப் போல், உத்தரவிட்டாள்.

அந்தக் கட்டளைக்கு அவன் மசிந்ததாகத் தெரிய வில்லை. “சந்திரமதி! கோட்டைக் காவலர் தலைவன் என்பதால் சில பொறுப்புகள் எனக்கு உண்டு” என்றான்.

“பெண்களைக் கண்காணிப்பது அவற்றில் ஒன்றா?” இம்முறை அவள் குரலில் சூடு துளிர்த்தது.

“கண்காணிப்பதல்ல, பாதுகாப்பது,” என்ற ஜஸ் வந்த், “பெண்ணே, விலகி நில். நான் அந்தக் கயவனை அழைத்துச் செல்கிறேன்” என்று வாளை மீண்டும் நீட்டிக்கொண்டு ஓர் அடி முன் எடுத்து வைத்தான்.

அதுதான் அவன் செய்த தவறு. அவனுக்கு வழி விடுவதுபோல் நகர்ந்த சந்திரமதி காலில் சிக்கிய சேலையைச் சரி செய்வதுபோல் குனிந்தாள். அடுத்து அவள் சரேலென எழுந்தபோது ஏற்கெனவே முறிந்து விழுந்த மரக்கிளை அவள் கையிலிருந்தது. அடுத்த விநாடி அந்த மெல்லிய கை மிகுந்த உரமுடன் எழுந்து மின்னல் வேகத்தில் காவலர் தலைவன் தலையில் மரக் கிளையை இறக்கிவிட்டது. இது இறங்கிய வேகத்தில் தன்னைத் தடுத்துக்கொள்ள அவன் நீட்டிய வாள் நிலத்தில் ஆடிப் புதைந்தது. காவலர் தலைவன் தலைமீது இறங்கிய கிளையின் வேகத்தின் விளை வாகச் சிறிது சத்தங்கூடப் போடாமல் மண்ணில் சாய்ந்தான். அவன் தலையில் கிளை தாக்கிய இடத்தில் குருதி பாய்ந்து கொண்டிருந்தது.

முற்றும் எதிர்பாராத விதமாக நேர்ந்த அந்த நிகழ்ச்சியைக் கண்ட சத்ருஞ்சயனும் பிரமை பிடித்து நின்றான். அந்த மெல்லிய கைக்கு, சற்று முன்பு தனது கழுத்தை வளைத்த பட்டுக் கைக்கு, இத்தனை பலம் எங்கிருந்து வந்தது என்று வியப்பின் எல்லையை அடைந்து நின்றான் அவன். அந்த ஊக்கத்துடன் சந்திரமதி திரும்பியபோது அவள் கண்களில் இருந்த பயங்கரம், சமுகத்தில் காணப்பட்ட கொடூரம் இரண்டும் சத்ருஞ்சயனுக்கே அதிக அச்சத்தை அளித்தன.

அடுத்து அவள் நடந்துகொண்ட முறை மேலும் அவன் அச்சத்தை அச்சத்தை உச்ச உச்ச நிலைக்குக் கொண்டு போயிற்று. அவள் எதிரே கிடந்த ஜஸ்வந்த்சிங்கின் உடலை நோக்கிச் சென்று காலால் அவனை உதைத்துப் பார்த்தாள். பிறகு காயத்தைக் கூர்ந்து கவனித்தாள். பிறகு கையிலிருந்த பெரும் மரக் கிளையால் அவன் உடலைப் புரட்ட முயன்றாள். அவள் அடித்த வேகத்தில் கிளை முறிந்து விட்டதால் காவலர் தலைவனின் பெரிய தேகத்தை அதைக் கொண்டு புரட்ட முடியாததன் விளைவாக சத்ருஞ் சயனை நோக்கி, “இப்படி வாருங்கள். அவனைச் சற்றுப் புரட்டி அவன் உடலின் கீழ் மண்ணில் பாய்ந் திருக்கும் வாளை எடுங்கள்” என்று உத்தரவிட்டாள்.

சத்ருஞ்சயன் ஏதும் பேசவில்லை. சற்று முன்பு கோபத்தால் சிவந்தும் கருத்தும்விட்ட அவள் வதன மும் சிறிய கண்களும் அவளை ராட்சஸியாக அடித் திருந்ததை அவன் கவனித்திருந்தானாகையால் ஏதும் பேசாமல் அவள் இட்ட பணிகளை நிறைவேற்ற முனையலானான். மெள்ள காவலர் தலைவனை லேசாகப் புரட்டிச் சற்று தூரம் இழுத்துச் சென்று தலைக்காயத்தில் மண் படாதிருக்கக் குப்புறவே படுக்க வைத்தான். பிறகு ஆழமாக மண்ணில் பாய்ந்திருந்த வாளைப் பிடுங்கினான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும் பாவனையில் சந்திர மதியை நோக்கினான்.

“என்னைப் பார்ப்பானேன்? அவன் தலைக் காயத்தைக் கவனியுங்கள். குருதியை நீர் கொண்டு கழுவிக் கட்டுப் போடுங்கள், குருதியை நிறுத்த,” என்று கூறினாள் சந்திரமதி.

சத்ருஞ்சயன் ஏதும் பேசாமல் இல்லத்திலிருந்து இருவரும் குடிப்பதற்காக அவள் கொணர்ந்திருந்த ராஜ புதனத்தின் தனிப் பொருளான நீண்ட கூஜாவி லிருந்து நீர் எடுத்துத் தலைவனின் தலைக் காயத்தைக் கழுவினான். “காயம் ஆழமாயிருக்கிறது. குருதி நிற்க வில்லை” என்றான் சந்திரமதியை நோக்கி.

“அவன் உடையிலிருந்து அவன் வாளாலேயே சிறிது துணி கிழித்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு கட்டுப் போடுங்கள்,” என்றாள் அவள் சர்வ சாதாரணமாக.

அவள் சொன்னபடியே தலைவன் உடையைக் கிழித்துத் தலைக்குக் கட்டுப் போட்டு சத்ருஞ்சயன் அவனைத் தூக்கிக் கொண்டு எட்ட இருந்த மரத் தடிக்குச் சென்று அவன் மேலங்கியை கழற்றி தலைக்கு சுருட்டி வைத்து மிக லேசாகப் படுக்க வைத்தான். பிறகு சந்திரமதி நின்றிருந்த இடத்துக்கு வந்து, “அடுத்து என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினான்.

சிறிது தூரத்தில் ஆடுகள் தழை மேய்ந்து கொண் டிருந்ததைச் சுட்டிக் காட்டிய சந்திரமதி, “அந்த ஆடு களைக் கோல் கொண்டு வளையுங்கள். தழைகள் போக மீதியுள்ள சுள்ளிகளை விறகாக வெட்டிக் கட்டித் தூக்கிக் கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டாள்.

‘அட சலூம்ப்ரா! வீரனா நீ? இந்த ராட்சஸியிடம் அகப்பட்டுக் கொண்டாயே’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு அவள் சொன்னபடியே செய்து விறகுக் கட்டைகளைக் கட்டித் தலையில் தூக்கிக் கொண்டு கோலையும் எடுத்துக் கொண்டான். கோலுடன் தலைவன் வாளையும் எடுத்துக் கொள்ள முயன்றவனைத் தடுத்த சந்திரமதி, “அவன் வாளை அவன் பக்கத்திலேயே வைத்து விடுங்கள்” என்று சொன்னாள்.

பதிலேதும் பேசாமல் அவள் கட்டளையை நிறை வேற்றுவதற்கும் மாலை நெருங்குவதற்கும் சமயம் சரியாயிருக்கவே, ஆடுகளைத் திரட்டி ஓட்டிக் கொண்டு கிளம்பினான் சத்ருஞ்சயன். சந்திரமதியும் ஏதுமே நடக்காததுபோல் காளையை அவிழ்த்து அதன் மீது ஏறிக்கொண்டு குழலை வாயில் வைத்து ஊதி னாள். அந்தக் குழலோசை துவங்கியதுமே ஆடுகள் திரண்டு ஊர்ந்தன, கோட்டையை நோக்கி. ஒன்றை யொன்று முட்டி விளையாடிக் கும்பலாகச் சென்ற ஆட்டுக்குட்டிகளை சாதாரண சமயமாயிருந்தால் சத்ருஞ்சயன் ரசித்திருப்பான். ஆனால் இன்னொரு வீரனை மரணாவஸ்தையில் மரத்தின் கீழ் கிடத்தி விட்டு வந்ததை அவனால் பொறுக்க முடியாததால் இதய வேதனையுடனேயே அவன்நடந்தான்.

ஆனால் சந்திரமதி எதைப் பற்றியும் நினைத்த தாகத் தெரியவில்லை. முதல் நாளைப் போலவே மதுரமாக குழலை ஊதிக் கொண்டு சென்றாள். அவளை நினைக்க நினைக்க ஏதும் புரியாத, குழம்பிய நிலையை அடைந்தான் வீரனான சத்ருஞ்சயன். அவளை அன்று மென்மையான உள்ளம் படைத்த காதலியாகவும் பார்த்தான். மரக்கிளையையே ஆயுத மாகக் கொண்டு பெரும் வீரனொருவனை வீழ்த்தக் கூடிய ராட்சஸியாகவும் கண்டான். இத்தனையையும் விட காய மடைந்தவனை வனத்திலேயே விட்டுப் போகும் இரக்கமற்ற அரக்கியாகவும் கண்டதால் மனம் பொறுக்காமல் அவள் காளையை அணுகி, ‘சந்திரமதி! காவலர் தலைவன் நல்ல காயமடைந்திருக்கிறான்,” என்று இழுத்தான்.

பதிலுக்கு அவள் குழலிலேயே இரண்டு ஸ்வரங் களை ஊதினாள் “உம் உம்” என்று.

“அவனை இந்த நிலையில் அனாதரவாக விட்டுப் போவது தவறு,” என்றான் சத்ருஞ்சயன்.

இம்முறை குழலை வாயை விட்டு எடுத்தாள் சந்திரமதி. “சரி என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள்.

“நீ காளையிலிருந்து இறங்க வேண்டும்.”

“இறங்கினால்?”

“அவனை இதன் மீது கிடத்திப் பிடித்துக் கொண்டு வருவேன்.”

“அவன் தலைக் காயத்துக்குக் காவலர்களுக்கு என்ன சமாதானம் சொல்வதாக உத்தேசம்?”

“ஏதாவது சொல்கிறேன்.”

“அப்படியானால், நீங்கள் அவனைத் தோளில் தூக்கிக்கொண்டு வாருங்கள்” என்ற சந்திரமதி காளையை நகர்த்தினாள்.

அவளை எரித்து விடுவதுபோல பார்த்த சத்ருஞ் சயன், “அடி ராட்சஸி!” என்று சற்று இரைந்தே சொன் னான். பிறகு திரும்பி தலைவனைப் படுக்க வைத்த இடத்துக்குச் சென்றான். சென்றதும் நின்ற வண்ணம் அவனை நோக்கினான். பிறகு அவன் கத்தியை எடுத்து அதில் ஒட்டியிருந்த மண்ணைத் துடைக்கலானான்.

அந்தச் சமயத்தில், “அதோ இருக்கிறான் கொலை யாளி” என்று யாரோ கூவினார்கள். அடுத்த சில விநாடிகளில் காவலர் பலர் சத்ருஞ்சயனைச் சூழ்ந்து கொண்டார்கள். “கத்தியை இப்படிக் கொடு” என்ற ஒருவன், “உன்னைச் சிறை செய்திருக்கிறோம்’ என்றான். உருவிய வாட்களுடன் காவலர் பலர் அவனை நெருங்கினார்கள்.

– தொடரும்

– சந்திரமதி (குறுநாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *