கொளுத்தும் வெயிலை உள்வாங்கியும் ஒளிர முடியாது இருண்டு போயிருந்த அரண்மனைகள். காலியாய்க் கிடந்த உப்பரிகைகளில் இறந்த காலம் காற்றின் தூசாய் மாறிப் படிந்து பிரித்து விட முடியாத படி கிடக்க சந்திர மதி உலாவந்த நாட்களின் வெறுமைகள் மட்டும் இன்று வெக்கை வீசும் காலமாய் உலாத்துகிறது. நகரெங்கும் என் காலடிச் சுவடுகள் பதிய மறுக்கின்ற பொரித்தெடுக்கும் வெக்கை தாண்டி , வீசும் ஆவி கொப்பளிக்கும் காற்று, கடந்து நீரென்று பெயர் சொல்லி திரவமாகி ஓடுகின்ற சாம்பலின் கரையில், வழுக்குகின்ற பாறையில் பாசங்களை உண்டு பெருக்கும் மீன்கள் கூட்டம் , வீழுகின்ற துகளின் வட்டப் பெருவெளியை இரையென்று நம்பி மொய்க்கப் படகேறிக் கடக்கின்றேன். வேர் விட்டு உறிஞ்ச முடியா படகுகள் தாகம் தீராது பூக்களை நீரில் விட சுமந்த படி அக்கரை சேர இறுகிக் கிடந்த உணர்வுகள் ஈரமணலாய் பாதம் அப்பிக் கொள்ள உதிர்த்து விட்டு ஓடி விடத் தவிக்கின்றாள். எதுவும் தன்னில் கலந்தாலும் இணைந்து விட முடியாது தானாகி மட்டும் ஓடிக் கிடந்த மலட்டாறு அவள் ஆழங்களிலும் அடி வயிற்று கர்ப்பத்தின் சூடாய் என்றென்றும் தீர்த்து விட முடியா வெக்கை பிரவாகமெடுத்து ஓட விறகுகளிலும் மின்சாரத்திலும் வெந்து விடாத மனங்களின் பிணங்கள் அவளுள்ளும் தூக்கி வீசப் பட்டு, வீசப் பட்ட விநாடிகளில் சாம்பலாகிப் போகின்றது சில மூன்றாம் கண்ணின் நெருப்பைத் தோற்கடித்து.
பனி மலையை தன் நெஞ்ச வெக்கையில் கரைத்து விட விரும்பா ஆறு, தந்திருந்த ஜடாமுடி சிம்மாசனம் தவிர்த்து ஓடிவர வழி நெடுக காண முடியாது போன தாலிகளின் வெக்கைகள் அவளை அக்கினிக் குழம்பாய் மாற்றிப் போகின்றது.
இருள் மூடிய இரவில் நகர் கண் மூடாது திறந்த விழிகளோடு உறங்கி விடத் தீர்மானித்த பொழுதொன்றில் எரியாத லோகிதாசனின் உடலோடும் எரிகின்ற தன் உடலோடும் மூச்சு முட்டும் புகையாய் விசும்பலோடும் தூங்க விடாது துரத்தும் நினைவுகளோடும் வியாபிக்கின்றாள் சந்திரமதி .அவள் எரிகின்ற உள்ளத்தின் வெக்கையில் துளிர்த்து அடுத்த பருவம் வந்து விட முடியாது கழுவிப் போன காலங்கள் நாய்களின் குரைப்பில் அடையாளம் காணப் படுகின்றன ஆவிகளாக.
எத்தனையோ வேக மறுக்கின்ற உடல்களை எரித்த அரிச்சந்திரன், சந்திரமதி எரிந்த மனதை வேக வைத்து விட முடியாது ஆற்றுக்குள் வீசி விடப் பார்க்கின்றான்.
ஆழத்தின் குளிரில் வெக்கை மறையுமென நம்பி அரிச்சந்திர உண்மையைச் சொல்லிப் போக வரம் வாங்கிய சந்திரமதி தாலி தொலைக்க காரணமாயிருந்த விசுவாமித்ர , இந்திர நாரத புருஷர்கள் ஒளிந்து கொள்ள முயல மலட்டாறு திரிவேணி சங்கமத்தில் கலக்க மறுத்து பனி மலைக்கு மீண்டு விடப் பார்க்கின்றாள். அங்கேயும் அவளுள் ஒளிந்து கொள்ள முயலும் சிவனாரும் பூத கணங்களும். எல்லாரையும் வெளித்தள்ளி சந்திரமதி வெக்கையை மேலள்ளிப் பூசி பனி முகடுகளை சாகரங்களினால் மூழ்கடிக்கப் பார்க்கின்றாள்.
***
இராஜஸ்தானி முதல் விஜயநகரம் வரை மன்னர்கள் வந்து கட்டி விடுகின்ற அரண்மனைகள் சந்திரமதியின் அழுக்குச் சேலையின் உமட்டலையும் சிக்குப் படிந்த காடுகளில் அலைந்த தலையின் நாற்றத்தையும் தவிர்க்க முடியாது அதுவாகவே மாறிப் போகின்றன, அரிச்சந்திர புகழுக்கு விற்கப்பட்ட சந்திரமதிகள், தலையில்லாதிருந்த கால வலியும் லோகி தாச அரவம் தீண்டிய சடலமும் விடுகின்ற இறுதிப் பெருமூச்சிலும் வெக்கை தாங்காது பிறண்டபடி இருள் நகரம் இருக்க நூற்றாண்டுகளை நகர விடாது மழையினாலும் பனியிலும் குளிர்ந்து விடாது அழுக்கை பற்றிய படி கழுவ விடாதும் இருக்கின்றன. சவக்களை தாங்கிய முகங்கள் கால்களற்று சைக்கிள் ரிக்சாவை மிதித்த படி நகர முயற்சிக்கும் போதும் மலட்டாறு தன் பாசி வழுக்கியே நீருக்குள் மூழ்கி விடப் பார்க்கின்றாள்.
மூழ்கடித்தோ எறிந்தோ , எரித்தோ தீர்ந்து விட முடியா துயரங்களைப் புகைந்த படி நகரெங்கும் ஊடுருவிக் கிடக்கின்றாள் சந்திரமதி அரிச்சந்திரன் கூவி ஏலம் விட்டு விட்ட பொழுதொன்றில் மௌனமாக விலையற்றுப் போன பெண்மை மதிக்க மறந்த விசுவாமித்திரர்கள் வெட்டியான்களால் வேக வைத்து விட முடியாத படிக்கு சாபம் உரைத்து தாலியின் முதற்கண்ணியை விட்டெறிகிறாள் எட்டுக் குத்தில் முதற்குத்து ஜடாமுடியின் சிக்கலுக்குள் போய் தைத்துக் கொள்கின்றது.
இடம் பெயர்த்து போகின்றாள் இதுவரை உப்பரிகைகளில் சிறை வைக்கப் பட்டு இருந்திருந்தோமோ என்ற நினைப்பில் பற்றிக் கொண்ட பொழுதை நினைவு இடுக்குகளிலிருந்து தேடிய படி சூழ்ந்திருந்த இடமெங்கும் நிரம்பி வழிந்த பெருமைகள் ஐசுவரியங்கள் எதுவும் எடுத்தாளத் தேவைப் படாமலும் எல்லா இடமெங்கும் நிரம்பியிருந்தன.
அழகாக வைக்கப் பட்டிருந்த பழங்கள், பூக்கள், குடிக்க பானகமிருந்த குடுவைகள் யாரும் அமராமலேயே காத்துக் கிடந்த ஆசனங்கள் அதில் தேயாது பதிந்திருந்த ஒளி வீசும் திரவியங்கள் அறையெங்கும் மௌனவாசம் வீசித் தவழ்ந்த அத்தர் ஜவ்வாதுகள் எதுவுமே பயன் படுத்தலுக்காய் அன்றி நிறைந்து கிடந்ததைச் சொல்வதற்கென்றே சூழ்ந்திருக்க சொல்லப் போகின்ற உத்தரவுகளுக்காய் சிலையாகி நின்றிருந்த சேடிப் பெண்கள் பேசக் கூடுமென்றிருந்த போதும் ஊமைகளாய் கேள்விகளின் போது மட்டும் உயிர்க்கும் விக்கிரமாதித்த பதுமைகளாய் எல்லாம் இருந்திருந்தும் பயன் படாதிருந்தது ஒரு காலம்.
அரிச்சந்திர உண்மையின் பொருட்டு கேள்விகள் இல்லாமலேயே ஒரு விடியலில் மறைந்து போன இருளாய் எல்லாம் பின்னோக்கி நகர விட்டு தான் நகர்ந்து வந்த பொழுதினில் காலடி நிழலாய் தொடர்ந்தது இதுவரை இருந்து பயன் படுத்தாதிருக்க வைத்த தரித்திரம், முழுக்க வளங்களை அழித்துக் கொண்டு நிஜமாகவே இல்லாது போயிருந்ததை தேடல்களின் போது நிறைக்க வைத்தது.
அரண்மனை இருந்த தொடக்கம் விட்டு படியிறங்கிய காலமென தொட்டுத் தொடர்ந்து விட்டுச் சென்ற அவளது ஆசைகள் வௌவால்களாய் தொங்கி அந்த அறைகளை இருட்டாக்கி எச்சங்களினால் யாரையும் சுவாசிக்க விடாத படி இருந்தன.அவள் விளையாண்ட பல்லாங்குழிகளாய் கலகலத்து பளீரென ஒளி வீசிச் சிரித்த முத்துக்கள் காணாமல் பொய் வெறும் குழிகளாய் இருள் மூடிக் கிடக்க சந்திரமதியின் பல்லாங்குழி நாட்கள் நினைவுக்கு வந்து போகின்றன.
ஆண்களுக்கு கை வராத பெண்ணின் விழி மொழிகள் புரிவாரற்று பல்லாங்குழியோடு சோழிகளோடு பேசிக் கொள்கின்றன. அதன் ஒற்றை எழுத்தும் வாசிக்கத் திராணியற்ற அரிச்சந்திரர்கள் சூழ் உலகு விழியின் கருவிழி அசைவில் துடிக்கும் இமைகள் ஏதேதோ சொல்ல வெண்பரப்பு திரையாகியது அவளின் மனத்திற்கு. பல்லாங்குழி விளையாட்டில் நந்தவனத்து பந்தாடலில் உடன் சேர்ந்து பல்லாங்குழி நகைத்தது ஆச்சரியப் பட்டது. இவ்வளவு தானா? இன்னமும் இந்த மொழி உரையாடல் நிகழுமா என காது தீட்டிக் காத்திருந்தது
தோழியர்கள் செயிக்க முடியா ஆட்டம் ஆடினாளா? அவர்கள் ஜெயிக்க விரும்பாஅல்லது சந்திரமதியிடம் தோற்பதற்கென்றே விளையாடத் துவங்கினார்களா தெரியாது . எதிரிலிருந்த நிசும்ப சூதினி எப்பவும் தெக்கங்களையே .தடவியபடி இருந்தாள் தெக்கங்களைச் சரியாக வந்து சேருவதிலேயே அவளின் கண்களின் எண்ணிக்கை கணக்கிடும் வேகமும் விரல்கள் வழிய விடும் சோழிகளை விட மனம் வெகமாக பயணித்து முடிந்து விடுவதின் வேகமும் விவேகமும் ஆச்சரியப் பட வைக்க அவள் தோல்வி கண்டு சிரித்து சந்திரமதியின் வெற்றிக்கு ஆர்ப்பரித்தது கூட இருந்த தோழியர் கூட்டம்.
சந்திரமதி ஆழப் பார்த்தாள் நிசும்ப சூதினியை அடுத்தவர் எப்பவும் வெல்ல அவள் காய் நகர்த்திப் போகும் அழகு. அதை தியாகமெனவோ வெற்றியெனவோ அடையாளப் படுத்தி நிறுத்தாது அவள் விளையாட்டில் செய்ததை தான் வாழ்வில் செய்ய நேருமென்பதை உணராது வருத்தப் பட்ட காலங்கள் அவை. சந்திரமதியின் பார்வையின் அர்த்தம் வாசிக்க முடியாதவளில்லை நிசும்ப சூதினி. ஆழப் பார்த்த பார்வையில் மூழ்கி விடாது நீந்தி கரையேறும் மீன் குஞ்சுக் காரி நகைத்தாள் , சோழிகள் சிரித்து அவளின் சப்தத்தின் அழகை உறிஞ்சித் தீர்க்கின்றன.
மீண்டும் கை நிறைய சோழி அள்ளி வழி தோறும் விதைத்து தான் தெக்கக் கட்டத்தைத் தழுவ நேரும் போதும் எந்தப் பாண்டி பிரித்தாலும் பசுவும் முத்தும் சந்திரமதி வெல்ல வழி செய்கின்றாள்.
நிசும்ப சூதினி விளையாட்டில் தனக்காகச் செய்ததை சந்திரமதி வாழ்வில் எப்பவும் அரிச்சந்திரனுக்காக செய்ய நேருமென்பதை உணர்ந்திருந்தபடியே இருந்தாள்
” எல்லாரும் போகலாம்” தனிமை தேவை” உணர்ந்த உ ண்மைகள் பாரமாக யாருமற்ற தனிமை தேவைப் பட்டது.
சட்டென சூழ்ந்து சிரித்து மகிழ்ந்திருந்த கூட்டம் கலைய குழிகளை மூடி சோழிகளை இடம் மாற்றி வைக்கும் உத்தரவுக்காய் காத்திருந்தாள்.
எல்லாரும் போய் விட இருக்கையில் இரேன் நிசும்ப சூதினி ” நீ வெல்லும் ஆட்டத்தை நான் காண வேண்டும் என்றாள் சந்திரமதி வெல்லத் தெரிந்தவர்கள் ஆதிக்கக் காரர்களுக்காய் தோற்பது தியாகமல்ல துரோகங்கள். காலம் துரோகங்களை மன்னிப்பதில்லை தண்டித்து விடும் நான் தண்டணையிலிருந்து தப்ப வென்றுவிடு நிசும்ப சூதினி ஒரு முறை உன் கணக்கீடுகளை நீ வெல்ல பயன்படுத்திப் பாரேன் நிசும்ப சூதினி. உள்ளங்கை ரேகை வழி பார்வை ஓட விட்டாள் . ஊர் போய் சேர சாத்தியமின்றி குழப்ப ரேகை முடிச்சுகளுக்குள்ளும் அதன் ஆழங்கலுக்குள்ளும் தன்னை சிக்க விட்டாள் இருந்த போதும் எண்ணிப் பார்க்காத தருணமொன்றில் சிடுக்குகளுக்குள்ளிருந்து வெளி வந்து வீழ்ந்து விட்டாள் . பல்லாங்குழியின் தெக்கக் குழியில் நிறைந்தாள் அவளே முத்தானாள் பசுவானாள் யாரும் அள்ளி எடுக்க முடியா பாண்டியானாள். தன்னைப் பிரித்து வழியெங்கும் 14 இருப்புகள் தோறும் விதைத்து கொண்டாள் முதல் முத்தாய் விதைக்கப் பட்ட நேரம் தொட்டு வளர்ந்து நிறைந்து போனாள்.
சந்திரமதி நிசும்ப சூதினியின் பல்லாங்குழிக்குள் தானும் நிறைவதும் பிரிவதும் கண்டு கொள்ள சின்னதாகிச் சேர்ந்து கொண்டாள்
மனக் கணக்குகளை எப்பவும் அடுத்தவர் வெல்கைக்கு பயன்படுத்திய நினைவடுக்குகளின் எந்த இடை சந்திலும் அதன் உப்பரிகையின் எந்த சன்னல் திறப்பிலும் தன் வெல்கைக்கு எண்களை பயன்படுத்தும் எண்ணம் நிழலாய் கூட படிந்து விடாது போயிருக்க நிசும்ப சூதினி தன் அளப்பரிய ஆற்றலின் நடுவில் நின்ற இயலாமை ஏண்ணி மகிழ்கின்றாள் சிரிக்கின்றாள்
முடியாது அரசி இது தோல்விகளுக்கு சோழி வழிய விட்டு பழக்கப் பட்ட விரலிடுக்குகள் . ஒரு நாளும் கூட்டி அள்ள முடியாது போயிருக்கின்ற விரல்கள். அனிச்சை செயலாய் சந்திரமதி அள்ளி கை சேர்த்த சோழிகளையும் விரல் வழி வழிய விடுகின்றாள் சொட்டுகின்ற பாலாகி ஜதியோசையோடு நிரப்பிப் போகின்றது பல்லாங்குழிகள் இருவரையும் காலி செய்து.
நீ வெல்லும் விளையாட்டு கற்று வா உன்னோடு ஆடுகின்றேன் நிசும்ப சூதினி. சொல்லிய படி ஓடித் திரிந்த லோகிதாசனை மடியில் இருத்துகின்றாள் அவன் நழுவி ஓடுகின்றான்.
மூடி முத்து சேர்த்து எடுக்கப் போன பல்லாங்குழியை அங்கேயே இருக்கட்டும் விட்ட ஆட்டத்தை விட்டபடி போ நீ வெல்லப் பழகியதும் சொல்லு விட்ட இடமிருந்து தொடருவோம் . கவியும் இருளிலும் சிரித்து வைக்கின்றன சோழிகள் . தோற்க ஆசைப்படுகிற சந்திரமதியே . நீ வென்று வந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன என என்ணிய படி.
நிசும்ப சூதினி கால தேச வர்த்தமானங்களை கடந்தேடும் ஜெய தோல்வி பயமற்றவளாக இருந்ததை எண்ணி அவள் மேலிருந்த பிரேமையில் ஒரு கட்டத்தில் சந்திரமதி நிசும்ப சூதினியை படி எடுத்திருந்தாள். உடலும் உயிரும் தாண்டி உணர்வு வழியாக வாழவும் பயணிக்கவும் சாத்தியமாக ஸ்தூல உடலுக்குள் நின்று போன உயிர்களின் செயல்களை முன்னிறுத்தி அரிச்சந்திர வாழ்வு தொடருவதை எண்ணி அரிச்சந்திரர்களைப் போலவே கடந்தேக முடியாதவர்களாக பலர் இருப்பதை நம்பி சந்திர மதியும் இரவின் நிலவும் இருளில் அவிழ்த்து விட்ட கூந்தலாய் மயிரளில் உரசலில் சிலுசிலுப்பை ஊலர்த்திக் கொண்டிருந்த மலட்டாரும் நகைத்துக் கொண்டனர்.
லோகி தாசன் பஞ்சணையில் பிரள முடியாது கனவுகளில் ஆழத்தில் ஸ்திரமாக இறுகியிருக்க வெளிச்சங்கள் சூரியப் பிரபைகள் தேய்ந்து சிவப்பாகி மறைந்து கருமை சேர கரு நீலமென மாறி ஆங்காங்கே வித்துக்களின் சத்துக்களில் வழிந்த எண்ணெய்களில் எரிந்திருந்த தாமரைத் தண்டுகள் முடியத் துவங்கியிருந்த பொழுது அரிச்சந்திரன் சந்திரமதியை நெருங்கி வருகின்றான்
தீர்ந்து விடாத தாகமொடு சந்திரமதி காதலை சுவையோடும் காமத்தை கலையோடும் தினமொரு அரங்கேற்றுபவளாக இருக்க புதிய புதிய அவள் நர்த்தனங்களை சொல்லவும் சுவைக்கவும் திறனின்றி அரிச்சந்திரன் மகிழ கிழக்கிழிருந்து மேற்காக சாளர வழி வீழ்ந்த நிலவின் ஒளி நிசும்ப சூதினியும் சந்திரமதியும் விட்டு வந்த பல்லாங்குழிகளின் மேடு பள்ளங்களைத் தழுவிக் கொள்கின்றது வெண்திரை கீழ்த்திசைக் காற்றில் இருத்தலும் இல்லாமல் போவதும் தெரியாது அசைந்தாட சோழிகள் வெளிச்சத்தில் மின்னுகின்றன.தாமரை இதழ் விதைகளாய் சந்திர கைகள் சோழிகள் அள்ளி மேடுகளில் தூவி பள்ளங்களில் நிறைய விட்டு பசுவும் முத்துமாய் அள்ளிச் செல்கின்றது. பசுக்கள் சுரந்து தாகம் தணிக்க முத்துக்கள் நிர்வாணமென விரிந்த தெக்கங்களில் கடலை நிரப்புகின்றன அலைகளில் பெருமூச்சு ஓசை முத்துக்களுக்குள் அடங்கிக் கிடப்பதை வாசிக்க மறந்த பொழுதில் தெக்கங்களே தரிசனமாகின்றன. தெக்கங்கள் தடவி மீண்டால் பாண்டி கைசேருமென அறியாது அரிச்சந்திரன் தெக்கங்களில் தொக்கி நின்று போக கலை விட்டு நழுவி கட்டிலின் மடியில் வீழ்ந்து தூங்கிப் போக பல்லாங்குழியினில் எட்டுக் குத்து தாலியில் இரண்டாம் குத்து சுருக்கிட்டுக் கொள்கின்றது தன்னை
இருளை அழித்து சூரியன் வெளிச்ச நீரால் தெளிந்து கோலம் எழுதிப் போகையில் சந்திரமதியின் தாபம் கலையாகவும் காமமாகவும் மாற முடியாது கருக் கலைந்து குருதி சொட்டிய செவ்வண்ணமாய் வான நிறம் மாற அதை மறைக்க முடியாமலும் மறுக்க முடியாமலும் இருந்த போதும் வெக்கை அள்ளித் துப்பி தற்போதைக்கு மூடி வைக்கின்றது .
அடுத்த நாளிரவு வெள்ளி முளைக்கின்ற வேளையில் தாக்குப் பிடிக்காது மீண்டு எல்லாம் உயிர்த்தெழும்புகின்றது ஆவிகளாய் காலற்று விடியலில் ஏழாவது அடுக்கிலிருந்து மெல்ல இயந்திரப் பொறி ஆற்றங்கரையின் படித்துறைக்கு இறக்கி விட சுழன்றோடும் மீன் குஞ்சாய் மூழ்கி எழுந்தாள். நீரும் அவளும் காமன் கலையை கலையாகவே நிகழ்த்திய படி இருந்தன ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரிபவனாக இருந்த மன்மதனை அவள் பார்க்கக் கூடிய நீராய் உருமாற்றியிருந்தால் போலும். பெண்கள் முன்னாள் வரங்களும் சாபங்களும் பொய்த்துதான் போகின்றன. எதுவாக மாறி விடுகின்றன என்பது அதை பயன்படுத்துகிறவர்களுக்கே வெளிச்சம். மன்மதன் யார் கண்ணுக்கும் தெரியாதவனாகியிருந்த சாபத்தை அவள் தனக்கான வரமாக்கியிருந்தாள்.
அறுபத்து நாலு கலைகள் என்று வகுத்துச் சொன்னவர் பார்த்திருந்தால் பெண்களிடம் பிரித்துணர முடியா கலைகள் இருப்பதைப் பிரித்துணர முடியாது தவித்திருப்பார். நீரோடு போனாள். நீராக இருந்த மன்மதனோடு கலந்தாள்.எழுந்தாள் மூழ்கினாள் எதிர்த்தேகினாள் தன்னில் மோதி அலைகளாய் சிதறித் தெறிக்க வீழ்ந்தாள் , மிதந்தாள் தண்ணீர் அவளை தாமரை இலையாய் தாங்கியிருந்தது . நீர் ஒட்டாது நழுவிப் போயிருந்தது . கூந்தல் ஓட்டத்தோடு ஓடி விடப் பார்த்து சித்திரமாகியது. சூரியக் கதிரின் மின்னலில் மலராத மொட்டுக்கள் தாங்கிய பூங்கொத்தாய் மாறியிருந்தாள் மீன்கள் அவள் நிழலடியில் மூச்சு வாங்கிக் கிறங்கின.
காலம் கரைவதைக் கண்டு வேறு வழியில்லாது நாளைக்கென மிச்சம் வைத்து கரை யேறினாள்.அவளின் சுவையறிந்த ஆறு ஓடி விட மறுத்து சுழித்துக் கிடந்தது.உண்ட மயக்கம் உடலெங்கும் பரவ மீண்டு வெளி வந்தாள். தீராது தனை நனைத்துப் போட்ட நதியிலிருந்து விரும்பாது வெளி வந்தாள் நனைத்துப் போட்ட பின்னும் தீர்ந்து போன பெருமூச்சு விடாத நதியின் ஈரம் உலரத் துவங்கியிருந்த பொதும் உடல் உள்வாங்கியிருந்த தன்மையின் சுகம் உடலெங்கும் பரவ விழுங்கிச் சுவைத்தாள் சுவைத்ததை பகிர்ந்து கொள்ள மனம் விழைய இதுவரை நீர் சூழ இருந்தவள் ஆள் சூழ இருக்கும் கட்டடத்திற்குள் ஆடம்பரங்கள் நிரம்பித் ததும்பும் இறுக்கத்துள் நுழைந்து விட பகிர்ந்து கொள்ள காதுகள் கொண்ட மனம் தேடித் தவித்தாள் சுவையின் போதை பகிர்தலின் பின் நிறைவுறும் எனத் தோன்ற நெருக்கமான மனங்கள் எல்லாம் அந்த நேரம் தூர நின்றன. தூர நின்ற மனங்கள் அருகில் எப்பவும் இருக்க சந்தோச சுவைத்த தருணங்கள் மெல்ல சாயம் வெளிறி எட்டுக் குத்தில் மூன்றாம் குத்தை தொலைத்திருந்தன
***
மதுவனத்தின் எல்லா சப்தங்களும் வாசங்களும் உள் வர முடியா அரண்மணையின் மையப் பகுதிக்கு புலம் பெயர்ந்திருந்தால் மனமில்லாது. துவாரங்களின் வழியே என்ற போதும் முழுமையான காட்சி கிடைத்து கொண்டிருந்தது கீழிருந்த சபையினர்க்கோ அரிச்சந்திரனுக்கோ சந்திரமதியும் பெண்களும் அமர்ந்திருப்பது பார்வையில் காணக் கிடைக்காத ஒன்றாக இருக்க சபை தொடங்குகின்றது ஒரு பக்க கவனமுடனேயே . எப்பவும் பெண்களின் பார்வைக் கோணங்கள் ஆண்களால் சந்திக்க முடியாதொன்றாக
மேலிருந்து அலட்சியப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு விஸ்வாமித்ரரினின் வருகை உள்ளூர ஒரு அதிர்ச்சியை தந்து கொண்டிருந்தது ஏற்கனவே மகளை காரணமிட்டு மகள்களின் ஆசையைக் காரணமிட்டு நாடு கேட்ட கதையை அறிந்திருந்தாள். தருவதாக வாக்களித்து விட்டதில் நெஞ்சில் தானம் தந்து விட்ட பெருமை சூழத் திரிந்த அரிச்சந்திரன் நினைப்பில் சந்திரமதி சம்பந்தமில்லாது அறிவித்து விட்டதில் எந்ததவித உறுத்தலும் இல்லாதது ஆச்சரியமே தந்தது.
பல்லாங்குழிதனில் தெக்கம் தடவி விசுவாமித்திரன் பாண்டி அள்ளப் பார்க்கின்ற நொடியில் சோழிகளாக சந்திரமதியும் , விசுவாமித்ர மகள்களும் அள்ளப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.அல்லது வழிய விடப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.நிசும்ப சூதினியை பல்லாங்குழியை அப்படியே விட்டுப் போகச் சொன்னது தவறோ குழிகளில் சோழிகளாக பெண்களை இட்டு எடுக்கும் கைகளாக அரிச்சந்திரனும் விசுவாமித்திரனும் மாறிப் போன நொடியில் நாலாம் குத்து பல்லாங்குழி பலகையை அடித்து மூடி கட்டி விட அருந்து வருகின்றது.
வென்று இதுவரை தன் பக்கம் வைத்திருந்த முத்துக்கள் கைமாறியிருந்தது. தானம் தந்த நாடு உனக்கும் எனக்குமானதில்லையா? மகள்களின் காதலதை பலியிட்டு அரிசந்திரர்களை வெல்ல விலை சொல்ல, விலை போன போதும் மதிப்பில்லாது போனது என் வாழ்க்கைகள். உப்பரிகையின் மேலிருந்து பார்க்க அரிச்சந்திரனும் விசுவாமித்திரனும் மிகச் சின்னதாகிப் போனார்கள் . காணச் சகியாது எழுந்து அந்தப் புரம் வந்திருந்தாள். எப்பவும் கேள்விகளை மலட்டாறோடுதான் கலக்க விட்டாள் அதனை விழுங்கிய மீன்களுக்கெல்லாம் அதை கடத்திற்று.
நிசும்ப சூதினி வென்று விடத் தயாராக இருந்த பல்லாங்குழிகளை வைத்திருக்க தோற்றோடப் போகும் பொழுதுகள் குழிகளில் உறங்கிக் கிடந்தன. இதுவரை போட்டிருந்த வேசம் இந்த நொடி வரை கலைய விரும்பிய வேடம் இன்று கலைய வாய்த்த தருணம் அதுவும் தான் விரும்பாத தருணமாகவே மாறித் தொலைய இன்னொரு வேடத்திற்குள் புகுந்திருந்தாள் ஊரெல்லாம் இதுவரை பார்த்திருந்த தாலி அறுத்தெறிந்தாள் கேட்டவர் கண்களுக்கு மூவரும் தேவரும் காண இயலாத தாலி அரிச்சந்திரன் மட்டுமே அறியும் தாலி என்று சிரித்த படி சொல்லிப் போக நிசும்ப சூதினி அறிந்திருந்தாள் வெறுப்பில் ஒட்டு மொத்தமாய் தன்னை தன் உணர்வுகளை உணர மறுத்த் நாடு நோக்கி நகன்ற அரிச்சந்திரன் காண முடியாத தனை அவனுக்கானவளாய் சொல்லித் திரியும் தாலியை கழற்றி வீசியதை. சாளரம் வழி வீழ்ந்த தாலி மலட்டாற்றில் மூழ்கி பாவம் கரைக்கும் கங்கையாய் மாறிப் போகின்றது.
காடுகளோடு அவர்கள் நடக்க விழுங்கியிருந்தது காடு அவர்களை, அரியணை இருந்தபோது செய்த அதே தவறுகளை ,மீண்டும் ஒரு முறை செய்கின்றான். இதுவரை மௌனத்தில் விலை பேசப் பட்டிருந்த சந்திரமதி கூவல்களோடு கூட்டம் பார்த்திருக்க மகனோடும் விலை பேசப் படுகின்றாள். விற்கப் பட்ட காசு முனிக்கு போய் சேர ,அரூபமாய் அரிச்சந்திர கைகளில் வந்து சேர்ந்த நாளைய புகழின் விலை அவன் ரேகைகளை அழித்து அவனுக்குள் ஊடுருவுகின்றது புற்றாக . , விற்கப் பட்டு காசு கைமாறி லோகி தாசனை கை பிடித்து இறுகலான அடியெடுத்து வைத்தபடி நேர்ப்பார்வையில் வாங்கியன் பின்னால் நடக்க நேர்ந்தவளுக்கு, நின்று போக மனமில்லாது திரும்பி பார்ப்பாள் என எதிர்பார்த்திருந்த அரிச்சந்திரனுக்கு ,அவள் நிராகரிப்பு அந்த நிமிடத்திலிருந்து அவன் கண்ணுக்கும் அவளது தாலி தெரியாமையைத் தந்து போனது.
குற்ற உணர்வில் இரத்தம் உறியப் பட ரேகைகள் அழிய போதையை கசக்குகின்றான் இன்று வரை அவன் பரம்பரைகள் தொடர.
இனி ஒரு பெரிய வெக்கையை என்னால் தந்து விட முடியாது என்று உணர்த்திய படியே தினமும் வேகின்றன அரிச்சந்திர பிரட்டலில் உடல்கள்.எரிய மறுத்த நெஞ்சு, எரிந்தாலும் சாம்பராக மறுத்த சாறு தொலைத்த எலும்புகள்,சாம்பரான போதும் கரைய மறுத்த ஆவிகள், கறைக்க மறுத்த கங்கையின் தவிப்பு எல்லாமாக வளி மண்டலமாய் மாறிப் போனது. மேகம் திரண்ட போதும் தவிர்க்க முடியா வெக்கை அரிச்சந்திரனின் உடலாக மாறிப் போயிருக்க,மனத்தோடு யாரையும் வைக்க அச்சம் பரவுகின்றது.ஒரு வேளை இருந்தால் அவையும் அவர்களும் வெந்து உருகி கரைந்து போகக் கூடும். நினைத்த மாத்திரத்தில் இதுவரை நினைப்பிலில்லாத லோகிதாசனின் நினைப்பு வந்து சேர , திரும்பிய பார்வையின் எரிகின்ற பிழம்பின் வெப்ப ஆவியின் ஆடலுக்கு பின் உடலோடு பெண் நிற்கின்றாள்.அவள் உருவம் நீராய் நெளியத் துவங்க ,பார்வை மறைக்கும் தீப்பிழம்பிலிருந்து வெளி வருகின்றான் அரிச்சந்திரன்.
வார்த்தைகளில்லை உரையாட கண்ணீர் ஈரம் காய்ந்து போன விழிகள் சொல்லுது துக்கத்தின் வலியை.
பொற்காசு வேண்டும் எரிக்க
உணர்வுகள் அற்ற வார்த்தைகள் விறகுகளாய் வந்து விழுக
நிமிர்கின்றாள் அவள் பார்வையின் எதிரில் அவனிருந்த போதும் அவனில்லை என்பதை நின்று போன கருவிழிகள் உணர்த்தியிருந்தன.
நாடாண்ட மகாராணியாய் , அரிச்சந்திர மனைவியாய் இருந்த போதும் , யாருக்கோ தானம் அழித்த போதும், வாக்குறுதிக்கு விலையாய் கொடுத்த போதும் அதுவரை என்னிடமிருந்ததாய் நான் நம்பிய எல்லாவற்றையும் அது உனதில்லையடி என உணர்த்திய படி , தூக்கித் தந்த அரிச்சந்திரன்.,அடுத்த வேளை உணவுக்காய் அவள் பணி செய்து பசி கழுவிய தன்னிடம் இன்று கேட்கின்றான் , பொற்காசு இருக்கா என
இறுகலில் கழுத்துயர்த்தி நிமிர்ந்தாள்
அவள் கழுத்தில் தாலி மின்னி அரிச்சந்திரனுக்கு இப்பொழுதுதான் அவளை அடையாளம் காட்டுகின்றது.
இதுவரை அவள் நெஞ்சில் ஓடிய உரைகள் அவனிடம் கடத்தப்பட எரிக்காமல் எரிகின்றான்
கர்ப்பத்தோடவே இறந்து போன பெண்ணாய் காலம் சுமையோடு பெருமூச்சு விட்டபடி தவிக்கின்றது
பாம்புகளாய் ஊறும் ஜந்துக்கள் விழுங்கிய மனிதர்கள் உள்ளங்கை ரேகை அழிய கசக்கிய கஞ்சா உதடுகளுக்குள் திணிக்கப் பட்டு முகத்தின் உருவம் சிதைய சந்திரமதி தந்து போன வெக்கை தாங்க முடியாது எப்பவும் போதைக்குள் தன்னை திணித்திக்கொண்டனர்.
கடக்கின்ற யுகங்களில் பின்னும் பாவம் தொலைக்க நதி தாங்கிய நகரம் தன் பாவம்கீழிறக்க முடியாது சுமந்த படி யுகம் தாண்டி ஓடவும் முடியாது தொண்டை வரல நீர் கோடிட்டு ஒழுக பெருமூச்சு விட்டபடி இழுத்துக் கொண்டு ஊர்கின்றது.
நகரின் மேல் தாலிச் சரடு கட்டிபோட்டிருக்க இரவில் தூங்காது ,தூங்க முடியாது விழித்திருக்கும் நகரம் சந்திரமதி உலாத்தலை அச்சத்துடன் பார்த்துக் கொண்டேயிருக்கின்றது அழியாத சாட்சியாய்
– உயிர் எழுத்து டிசம்பர் 2007 இதழில் வெளி வந்த சிறுகதை.