குற்றாலக் குறிஞ்சி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 1,225 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம்.

இராகம் 22-24 | இராகம் 25-27| இராகம் 28-30

இராகம்-25

போகவதி 

குறிஞ்சியின் இசையரங்கம் என்றால் கூட்டம் தேனீக்களைப் போல எந்தத் திசையிலிருந்து எப்படி வருகிறது என்பதனை யாராலும் சொல்ல முடியாது. அப்படி ஒரு ரசனைத் தீ தமிழகத்தில் மட்டுமல்லாது ஆந்திராவைப் பிரித்துப் பிரித்து ஆண்டு கொண்டிருந்த ரெட்டிராஜாக் களிடமிருந்தது; மைசூர் அரசர் கிருஷ்ணராஜ உடையாரிட மிருந்தது; கேரளாவின் இளையராஜாவான சுவாதித் திரு நாளிடமும் இருந்தது. இவர்கள் அனைவருமே குறிஞ்சி யின் இசைப்பந்தலில் களைப்பாற தூது அனுப்பவே நாள்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். 

இதில் கேரளவர்மனான சுவாதித்திருநாள் ‘கருவில் திருவுடையான என்பார்களே, அவ்விதம் இளம் வயதில் சங்கீதத்தில் அபார ஞானம் பெற்றுக்கொண்டு வந்தவன். தஞ்சை சகோதரர்களில் ஒருவரான வடிவேலுவிடம் மட்டுமல்லாது கோவிந்தமாரார் போன்ற மாமேதை களிடம் இசை பயின்றவன். 

இந்தப் பிள்ளைக்கும் குறிஞ்சியின் மீது காதலா? 

*இன்றைய புகழ் பெற்ற கவாதித் திருநாள் கீர்த்தனைகளுக்குச் சொந்தக்காரர்.

பார்த்ததில்லை; பாட்டைக் கேட்டதில்லை. குறிஞ்சிப் பூவின் புகழ் மணம் அவனது மூக்கு வழியே காதலைச் சுவாசிக்கச் செய்துவிட்டது 

“சுவாதி மகாராஜா! குறிஞ்சி உங்களைவிட இரண்டு மூன்று வயது கூடியவள்?” என்று வடிவேலு பிள்ளை எடுத்துரைத்த போது, “அதனால் என்ன? கலைஞர்கள் வயதைப் பார்த்துக் காதலிப்பதில்லை” என்று போட்ட போடு… 

இலக்கிய மேதையல்லவா சுவாதித் திருநாள்? அந்த வடிவேலு பிள்ளையையே தூது அனுப்ப நாள் பார்த்துக் கொண்டிருந்தான் இளவரசன் சுவாதித் திருநாள். 

ஒரு பக்கம் தஞ்சையரண்மனையில் இளவரசன் சிவாஜி சித்தப்பிரமையே கண்டு எந்நேரமும், ‘குறிஞ்சி! குறிஞ்சி” என்று முனகிக் கொண்டிருக்கிறான். 

இங்கேயோ சிவகங்கை இளவரசன் சிலந்திவலை பின்னிக் கொண்டிருக்கிறான். 

குறிஞ்சியின் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது என்பதைக் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து காத்திருந்த கூட்டம் மெய்ப்பித்ததைக் கண்டு மருண்டு போகாதார் யார்? 

சொல்லப் போனால் இந்தக் கச்சேரியே, காளையார் கோயில் பண்ணையார் துரைவேலு முதலியார் ஏற்பாடு செய்திருந்தாலும், பின்புறமாக நின்றவன் திவான் தீர்த்தகிரி. 

சிவகங்கை அழைக்கிறது என்றால் குறிஞ்சி வருவாளா?

விருபாட்சக் கவிராயர் நிரம்பவும் துரைவேலு முதலியார்க்குக் கடமைபட்டவர் என்பதை எப்படியோ மோப்பம் பிடித்துச் செய்த ஏற்பாடல்லவா’ பாவம் முதலியார்? அவர் விதியைக் கண்டாரா? சதியைக் கண்டாரா? ஈசனின் துதியைக் கண்டு ஏற்பாடு செய்திருந்தார். 

இந்த நிலையில்தான் குறிஞ்சி வரவில்லை; முதலியாரின் மானம் மரியாதையைக் காக்க ஞானசுந்தரத்தை மட்டுமே கவிராயர் அனுப்பி இருக்கிறார் என்கிற செய்தி கேட்டுக் காளையார் கோயிலே கலகலத்துப்போனது. 

இளைய ஜமீன் இளைய வல்லபத் தேவ உடையான் இடிவிழுந்து போனான். 

பண்ணையாரான துரைவேலு முதலியார் இச்செய்தி யைக் கூறிப் பதிலை எதிர்பார்த்து நிற்கிறார். 

இளைய ஜமீன், திவான் தீர்த்தகிரியை நோக்குகிறான். பக்கத்திலிருந்த ஆர்க்காட்டு நாவப் ஆஜம்ஜா குறுந் தாடியை உருவிக் கொள்கிறான். 

இவர்களது திட்டமே குறிஞ்சியை இரவோடு இரவாக ஆர்க்காட்டுக்குக் கடத்திச் சென்றுவிட்டால் யாருக்குத் தெரியப்போகிறது? எவர்மீது பழி விழப்போகிறது என்பது. 

தீர்த்தகிரி ஒரு குட்டி சாணக்கியன். 

அதற்குள் ஏதோ மூளையைப் போட்டுக் குடைந்து ஒரு முடிவுக்கு வந்து சொன்னான்: 

“அதனாலென்ன, முதலியார்! கச்சேரியை நிறுத்தி விட முடியுமா என்ன? சேர்ந்திருக்கும் கூட்டம் கல்லால் அடிக்கும்!” என்று கூறியவன், சற்றே மீண்டும் தான் யோசித்ததை மறுபரிசீலனை செய்து கொண்டு திட்டத்தை விளக்கினான். 

ஒரு நல்ல திட்டமாகவும், மக்களைக் கவரக்கூடிய திட்டமாகவும் இருக்கக் கண்டு முகமலர்ந்து கேட்டார் முதலியார்: “போகவதி ஒப்புக்கொள்ள வேண்டுமே!” 

“நிச்சயம் ஒப்புக்கொள்வாள்! அவள் ஒரு குறிஞ்சி விசுவாசி! வந்தவர்களை அதே அரண்மனை விருந்தினர் மாளிகையிலேயே தங்கவையுங்கள். எல்லா ஏற்பாட்டை யும் முடித்துக்கொண்டு வாருங்கள். போகவதியை எப்படி ஒப்புக் கொள்ளச் செய்வது என்பது குறித்து விளக்கு கிறேன்.” 

பண்ணை முதலியார் பதவிசாக விடைபெற்றதும். திவான் தீர்த்தகிரி தனது தீர்க்கமான ஆலோசனையை இளையஜமீனிடம் திராட்சைப் பழத்தைப் பிட்டு வைப்பது போலப் பிட்டு வைக்க, வியந்து போனான் இளைய உடையத்தேவன். 

இவ்வளவும் சிவகங்கை பெரிய ஜமீந்தாரான பெரிய வல்லபத் தேவ உடையாருக்குத தெரியாது. ஏதோ மகன் கலைப் பித்து கொண்டு இப்படி ஒரு சங்கீத ராஜ்யம் காண்கிறான் என்றே கவனியாமல் விட்டுவிட்டார். 

போகவதி ஒப்புக்கொண்டாள் என்கிற செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஞானசுந்தரம் ஒப்புக்கொள்ள வேண்டுமே! 

அரண்மனை மாளிகையில் ஞானசுந்தரமும், அவனது குழுவினரும் ஓய்வு கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் மருதுபாண்டியன் கட்டிய அரண்மனை அது. 

எதிரொலி விஞ்ஞானி ஜான்தான் அந்தத் தனியறையுள் நுழைந்தான். 

“மிஸ்டர் ஞானசுந்தரம்! தமிழகத்தில் புகழ்பெற்ற நாட்டியக்காரி போகவதியும், சுச்சேரி ஏற்பாடு செய்த முதலியாரும் வந்திருக்கிறார்கள். உங்களைப் பார்க்க வேண்டுமாம்!” 

என்னது? போகவதியா? அவள் ஏன் என்னைப் பார்க்க வரவேண்டும்? ஓ!… அவளது ஊர் காளையார் கோயிலல்லவா? காளையார் கோயில் தாசி என்றும் சொல்வார்களே!… 

நினைவுக்கு வரவே, அனுமதிக்கும்படி உத்தரவிட்டான் ஞானசுந்தரம். 

முதன்முதலாகத் தனியாகப் பாடப்போகிறோம்… மக்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்குமோ? என்னென்ன பாடுவது என்கிற யோசனையில்தான் அதுவரையிலும் மூழ்கி இருந்தான். அதற்கு ஒரு தடங்கலே போல போகவதி வருவாள் என்பது அவன் எதிர்பாராதது. 

விதி பின்னும் சிலந்திவலைக்குள் எதிர்பார்ப்பு என்பது புதிர்போடும் புள்ளிக்கோலங்களல்லவா? புள்ளி மாறினால் கோலம் கோணல்! 

அந்நாளைய புகழ்பெற்ற நாட்டிய மகளிருள் நாயகியாக விளங்கியவள் போகவதி. 

சரபோஜி மன்னர் அரண்மனையிலிருக்கும் சுந்தரி, போகவதியின் சலங்கையின் முன் சூன்யம். ராஜா சரபோஜி மாதம் நூறு சக்கரம் சம்பளம் தருவதாகச் கூறியும், அலட்சியத்தை அம்பாரியில் ஏற்றி அனுப்பிய வளாயிற்றே! 

அவளது பெயரை, பெற்றவர்கள் தெரிந்துதான் வைத் தார்களோ, தெரியாமல் வைத்தார்களோ?’ 

தமிழகத்துப் பல செல்வந்தர்களும் ஜமீந்தார்களும், ‘போகம்’ என்ற சொல்லின் புண்ணியமும் பூலோக மோட்சமும் இவளிடமே புதைந்து கிடப்பனவாக எண்ணி ஏங்கினர். 

தேவதாசிதான்; ஆனால் தாசியில் அவள் தேவதை. ஆயிரம் சக்கரம் கொட்டிக் கொடுத்தாலும் அவள் சம்மதியாமல் எவரையும் அனுமதித்ததில்லை. அவளது விருப்பம்தான் பிரதான நிபந்தனை. 

ராஜா சரபோஜி, சரணடைந்தபோதும் இடது காலைத் தரையில் உதைத்துச் சலங்கையொலிக் குரலில் விரட்டியவள். 

காளையார்கோயில் என்பது சிவகங்கையின் கோநகரம். அந்த நகரில் வாழ்ந்து கொண்டே தன்னிடம் ஓரிரவு போகவதி ராகம் பாடப் புறக்கணித்தவளல்லவா? 

“நான் ஜமீன்!” என்று செருக்காகக் கூறிய இளைய உடையத்தேவனை நோக்கி முறுக்காகப் பதில் சொன்னாள் போகவதி: “அதனால்? வீட்டுக்கு வீடு இருக்கிற இளம் பெண்களை இரவுக்கு இரவு அனுப்பவேண்டும் என்று கட்டளைபோட முடியுமா என்ன?” 

“நீ போகவதிகள் குலத்தில் பிறந்த போகவதி! ஓராயிரம் என்ன? ஈராயிரம் சக்கரம் தருகிறேன்!” 

போகவதி, வேகவதியாய்ச் சீறிச் சினந்து சொன்னாள்: “நான் போகவதிதான்! மறுக்கவில்லை. ஆனால் கூப்பிடுகிறவன் பின்னால் போகிறவதியல்ல! நான் போகவதி என்பது கால் சதவிகிதம்! ஏனைய சதவிகிதங்கள் எனது கால் சதவிகிதங்கள்! புரியவில்லையா ஜமீன்? கால் சதம் போகவதி; முக்கால் சதம் கலாவதி! என் கலைக்கு ஊதியம் கொடுத்தால் மறுக்க மாட்டேன். என் நிலைக்கு ஊதியம் நான் விரும்பினால்! அது இலவசமாகவும் இருக்கலாம்! 

“பொட்டுக் கட்டியவள் பேசுகிற பேச்சா இது?” 

“ஆனால் தட்டுக் கெட்டவளல்ல; நீங்களும் தட்டுக் கெட்டுத் தடுமாறிப் பேசுவதை நான் விரும்பவில்லை. போகலாம்!” 

இந்த நிகழ்ச்சி சென்ற ஆண்டு நிகழ்ந்தது. 

இப்போது, குறிஞ்சியை வலையில் வீழ்த்த, இந்தக் குமரிக்கு அம்பு தொடுத்திருந்தான் திவான் தீர்த்தகிரி. ஆனால் அவன் எதிர்பார்ப்பது போல நடக்க வேண்டும். அங்கேதான் ஊழ் சிரித்தது. இல்லையென்றால் முதல் கட்டமாக போகவதி இரவு நாட்டியமாட ஒப்புக் கொண் டிருப்பாளா? 

ஓ… இந்த ஊழ்வினை எப்படியெல்லாம் மனிதர்களைக் கூழ் காய்ச்சிக் கும்பம் போட்டு விடுகிறது?… 


போகவதியும் முதலியாரும் அறையினுள் நுழைகிறார்கள். 

“வணக்கம்! வாருங்கள்! உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்!”. 

ஞானசுந்தரம் மிக்கவும் பண்புடன் வரவேற்று அமரச் செய்தான். முதன்முறையாக போகவதியை அவன் காண்கிறான். 

விலைமகளிருள் இவள் ஒரு விசித்திரப் பூக்கோள மல்லவா? குறிஞ்சியெனும் தேவகாப்பிய அளவுக்குப் புகழுக்குரியவளில்லையானாலும், முல்லைப்பூவுக்குரிய மானுடக் காப்பியப் புகழ் போகவதிக்குமிருந்தது. 

“கவனிப்பில் எந்தக் குறையும் இல்லையே?” என்றார் முதலியார். 

“ராஜோபசாரம்!” 

“ராத்திரி கச்சேரியில் ஒரு சின்ன மாற்றம்.” 

“என்ன?” 

“இங்கே ஜனங்களெல்லாம் குறிஞ்சியைக் காணத்தான் கட்டுச் சோறு மூட்டையுடன் குவிந்து இருக்கிறார்கள். குறிஞ்சி வரவில்லை என்றதும் அடிக்க வரவில்லை; அவ்வளவுதான். ஒருவன் பந்தலையே கொளுத்தப் போய் விட்டான்!” 

முகம் சுருங்கிப் போனான் ஞானசுந்தரம். குறிஞ்சிக் குள்ள சிறப்பை அவனால் அப்போதுதான் பூரணமாக உணர முடிந்தது. 

இப்போது போகவதி குறுக்கிட்டாள்: “முதலியார்! நீங்கள் போங்கள். நான் பேசிக்கொள்கிறேன்.” 

முதலியாரும், இரவு நல்லபடியாக நடக்க வேண்டுமே என்று காளையார் கோயில் ஈசனைப் பிரார்த்தனை செய்தவாறு புறப்பட்டார். 

“ஞானசுந்தரம்! நான் ஒரு குறிஞ்சி ரசிகை!”

“மகிழ்ச்சி!” 

“இரவு கச்சேரி தடைபடுகிறது என்று முதலியார் என்னிடம் அழுதார். அவரென்ன அழுவது? நானே அழுதேன்! அந்தச் சகோதரியின் பாட்டைக் கேட்கவே இன்று எட்டயாபுரத்து நிகழ்ச்சியை ஒத்தி வைத்து விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.” 

“இந்த நிகழ்ச்சியையும் ஒத்தி வைக்கலாமே!” 

“அது எப்படி முடியும்? நான் ஒரு வாரத்துக்கு முன்பே ஒத்தி வைத்து விட்டேன். நீங்கள் ஒருநாள் அவகாசம் கூடத் தராமல் வந்தும் விட்டீர்களே! தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். வந்தது வந்தாய் விட்டது. குறிஞ்சி பாடவில்லையென்றால் மக்களிடம் குமுறலைத் தான் எதிர் பார்க்க முடியும். பிறகு குறிஞ்சி கச்சேரி, வேறு எங்கு நடந்தாலும் ‘இவள் ஒப்புக் கொள்வாள்; ஆனால் ஏமாற்றி விடுவாள்’ என்கிற கெட்டப் பெயர் பரவும். நான் குறிஞ்சியின் புகழைக் காக்கவே இந்தத் திட்டத்தையே ஏற்றேன்! 

“என்ன திட்டம்?” 

“குறிஞ்சிக்குத் திடீரென்று உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் ஞானசுந்தரம் மட்டும் பாட வந்திருப்ப தாகவும், அந்தக் குறிஞ்சி ரசனையை ஈடுகட்ட, போகவதி ஆடப் போகிறாள் என்றும் மக்களுக்கு அறிவிக்கவே அமைதி கண்டு மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் மறுத்தால் குறிஞ்சியின் புகழ் குன்றும்படியான குமுறல்கள் கிளம்பி நாடு முழுவதும் பரவும்! ஒரு தேவதா சங்கீதத்தைக் களங்கப்படுத்த வேண்டுமா?” 

வாதம் ஏற்புடைத்தாயிருக்கவே ஞானசுந்தரம் வாய் மூடிப் போனான். 

“ஞானசுந்தரமாகிய அழகிய தேவ கந்தருவன் பாடி நானும் ஆடியிருக்கிறேன் என்கிற பெருமை எனக்கும் இருக்கட்டுமே!” 

அது என்ன அழகிய தேவ கந்தருவன் ? 

மருட்சியுடன் நோக்குகிறான் மன்மதனின் தம்பி என் சொல்லத்தக்க ஞானசுந்தரம். 

“நான் உண்மையைச் சொன்னேன்; மருள இதில் என்ன இருக்கிறது?” 

“போகவதி ராகம் இருக்கிறது!” 

“அப்படி ஒரு ராகம் இருக்கிறதா!’ நான் கேள்விப்பட்ட தில்லையே! இரவு நீங்கள் அதையே பாடுங்கள். நான் ஆடுகிறேன்!” 

“உங்களால் ஆட முடியாது. நான் பாடும் விதத்தில் அதைப் பாடினால், நீங்கள் பலர் முன்னிலையில் ஆடுவதை மறந்து என்னை அணைக்கத் தொடங்கி விடுவீர்கள்!” 

இப்போதும் அதுதானே தோன்றுகிறது… என்று எண்ணிக் கொள்கிறாள் போகவதி. 

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள் போகவதி?”

“போகவதியின் ராகத்தின் தாய்?” 

“கரகரப்பிரியா!” 

“எனக்குப் பிடித்த மேளகர்த்தா ! போகவதியின் ஆரோ கணம் அவரோகணம்?” 

“சரிகமநிச்; ச்நிமகரிச!” 

“இதற்கு வேறொரு தாயும் சொல்லலாமே!” 

“சில குழந்தைகளுக்குத் தாய் தகப்பன் பெயரே சரியாகத் தெரிவதில்லை.” 

“அதாவது என்னைப் போல!” 

ஞானசுந்தரம்கூட அந்த வேதனையில் இந்த நகைச் சுவை கேட்டுச் சிரித்து விட்டான். 

ஆனால் போகவதி? 

ஆரோகணம் அவரோகணத்தை அசைக்கிறாள். “ஐயய்யோ! உங்கள் பெயர் கொண்ட ராகத்தை நீங்கள் பாடுவதாவது?” 

“நீங்கள் என்னை அணைக்க மாட்டீர்களா என்று தான்!” என்று கூறிய போகவதி வேகமாக எழுந்து கொண்டாள். 

“தயவு செய்து இரவு இந்த ராகம் பாடிவிட வேண்டாம். கொள்ளைக்காரனையே மயக்கியவர்கள் நீங்கள்! நான் வருகிறேன்!” 

எந்தப் பதிலையும் எதிர்பாராமல் போகவதி போகும் திசை நோக்கித் திகைத்துக் கவனித்தான் ஞானசுந்தரம். 

இராகம்-26

தாண்டவம் 

அரங்கத்தைச் சற்று அகலமாகவே அதற்குள் அமைத்து அழகுபடுத்தி இருந்தனர். 

வந்த கூட்டம் வெளியேறவில்லை. 

குறிஞ்சியின் இசைப் புகழுக்கு இணையானது போகவதி யின் நாட்டியப் புகழ். வேறுபாடு என்பதே குறிஞ்சி தெய்வீகம்! போகவதி மானுடம்! 

கச்சேரி நேரம் நெருங்க நெருங்க மக்களிடையே ஒரு பரபரப்பு நிறைந்த ஆர்வம். 

அரங்கத்துள் பிரவேசிக்கிறான் அழகிய தேவ சொரூபன் போன்ற ஞானசுந்தரம். கரவொலிகள்; ஆனால் கூட்டம் அளவுக்கு அது இல்லை. ஞானசுந்தரம் கவலைப்படவும் இல்லை. வந்திருப்பது குறிஞ்சிக் கூட்டம். 

வாத்தியங்கள் சுருதி சேர்த்துக் கொண்டிருக்கின்றன. 

அரங்கத்தில் வந்து நின்ற ஞானசுந்தரம் கரம் கூப்பி வணங்குகிறான். குறிஞ்சி ஏன் வரவில்லை; ஏற்பட்ட தடங்கல் என்ன என்பதை விளக்குகிறான். பின்னர், “நான் என் மன ஆறுதலுக்காகவும், குறிஞ்சியின் சிறப்புக்காகவும் கொஞ்சநேரம் தனித்துப் பாடுகிறேன். அதன் பிறகு நாட்டிய கலாபூஷணியின் நாட்டியம் தொடங்கலாம். அந்த நாட்டியத்துக்கு திரு. முதலியார் கேட்டுக் கொண்ட படியால் ஒரே ஒரு பாடலைப் பாடி நான் முடித்துக் கொள்வேன். தொடர்ந்து நாட்டியம் அவர்களது குழு வினர் இசை முழங்க நடைபெறும். நான் விடைபெற்றுக் கொள்வேன்!” 

கூட்டத்தில் எந்தவிதமான எதிருணர்வுகளும் ஏற்பட வில்லை. அமைதி நிறைந்து காணப்பட்டது. 

ஞானசுந்தரம் முதன் முறையாகத் தனிமையில் சுருதி சேருகிறான். ஓம்… 

யாரைத் தியானிப்பான்? தனது குருவைத் தியானித் தான்; பிறகு குறிஞ்சியையே தியானித்தான். அவளைத் தியானிப்பதன் மூலம் அவளது சக்திகளைப் பெறுவதற்குச் சமமல்லவா? 

திருக்குறளின் கடவுள் வாழ்த்துப் பத்துக் குறள்களையும், பத்துவிதமான ராகங்களில் பாடிய விதம், போகவதியை மயக்கியது. இது பத்துவித மலர்களைத் தொகுத்த கதம்ப மாலையா? பத்துவித பழங்களைக் கொண்ட தசாமிருதமா? இறைவனுக்கு நல்ல அபிஷேகம்; கதம்ப மாலை ஆராதனை. 

ஆணழகின் கொலுமண்டபம் போல வீற்று, ஞானழகின் இசைப் பிரயோகம் மன்மத பாணங்களாய், போக வதியின் மார்பகத்துப் பூரண கும்பங்களைத் தொட்டன; சமயத்தில் துளைத்தன. 

ஆ! இவனையல்லவா நாம் ஆயிரம் சக்கரம் (ரூபாய்). கொடுத்து அனுபவிக்க வேண்டும்! கொடுத்து அனுபவிக்கிற பேரழகா இது? இசையின் சீரழகா இது? படைப்பின் பேரழகல்லவா இது? விற்று அனுபவிப்பது மன்மதனை வேதனையுறச் செய்வதாயிற்றே!’ 

கடவுள் வாழ்த்து முடித்து ரேவதி ராக ஆலாபனை.

வழக்கமாக வித்துவான்கள், ராகத்தை மாவரைத்து, பிறகு வயலினை அறுக்க விடும் மார்க்கத்தைத் தவிர்த்து, நாகசுர ஆலாபனை போல ஆலாபிப்பதும் இடையில் தவில் குரல் கொடுக்குமே அப்படி இங்கே மிருதங்கக் குரல்; கடம் கரல்; கஞ்சிராக் குரல்! நடுவரைப் போல மயூரியும் பிடிலும்! அந்தத் தந்திவாத்தியங்களும் சொன் னதையே சொல்கிற கிளிப்பிள்ளைகள் மாதிரி அல்ல. அவற்றுக்குத் தனிச் சுதந்திரம்; மக்களைக் கவரும் மாயாஜால வித்தைகளை அவரவர் எடுத்துக் கொண்ட ராகத்தில் காண்பிக்கலாம்! 

ரேவதி ராகம் பாடுவோர் பாடினால் பாறையும் உருகும் என்பர். இங்கே பார்வையாளர் உருகிக் கண்ணீர் மல்குகிறார்கள். இரும்பாகவே இருந்தவர்கள் சிவகங்கைச் சிலந்தி வலைகள். 

போகவதியின் கண்களில் நீர் வேசுவதி நதியாய் வழிகிறது… 

ஆலாபனை முடிந்தது. பிறகு வாத்திய வாய்ப்பு என்பது இவர்களது முறையில் தள்ளப்பட்ட ஒன்று. அவை தாம் ஆலாபிக்கிற போதே இடையே ஆனந்த கூத்தாடி விட்டனவே! இந்தப் புதிய முறைதானே குறிஞ்சியின் வெற்றிக்கே காரணம்? 

மரபுவழி உடும்புகள் இதனைப் பின்பற்றத் தயங்கிய தால் சங்கீதம் நாளுக்கு நாள் மங்கீதமாய் விட்டது போலும்! 

மிருதங்கம் ஆவேச முறையில் முத்தாய்ப்பை மும்முறை முழங்க, ஞானசுந்தரம் பல்லவியைத் தொடங்க, எழுந்தது கரவொலியா? 

யாருக்குத் தெரியும் ரேவதியும் ரேவதி ராகமும் முத் தாய்ப்பு ஜதிகளும்? எல்லாம் ரசனை, ரசனை, ரசனை! 

பாடுவோர் பாடினால், ஆண் பாடினால் என்ன? பெண் பாடினால் என்ன? ரசிகர்களை மயக்குகிறபோது புடவையும் வேட்டியும் மறைந்து சங்கீதம் பிரம்மத்தில் நின்றல்லவா பிரமிக்க செய்கிறது? தாய்மொழியல்லவா புரிய வைக்கிறது! 

பாடலைப் பாடி, சுரவிந்நியாசம் நிகழ்ந்து முடிந்ததும், “போதும் பாடியது; நாட்டியம் ஆரம்பமாகலாம்!” என்று ஓர் ஆணவக் குரல் கேட்டது. 

ஞானசுந்தரம் கவனிக்கிறான். 

ஓ…சிவகங்கையானா? இவனும் வந்திருக்கிறானா? இவனது கோநகரமல்லவா காளையார் கோயில்! வராம லிருப்பானா? 

சிவகங்கைக் குரலைத் தொடர்ந்து ஏற்பாடு செய்திருந்த கும்பலும் குரல் கொடுத்தன. இவன் பழி வாங்குகிறான்; புரிகிறது; ஆட்டுமந்தையை அழைத்து வந்திருக்கிறான். 

ஞானசுந்தரம் ஒன்றையும் கண்டு கொள்ளவில்லை. நாட்டியம் ஆரம்பமாகலாம் என்பது போலச் சமிக்ஞை செய்தான். 

ஞானசுந்தரம் இன்னும் பாட மாட்டானா என்று எதிர்பார்த்த போகவதியைக் கோபவதியாக்குகிறது. ஆனாலும் மறுக்க முடியவில்லை. ஊர்வசியைப் போல எழுந்து வந்து நின்று வணங்குகிறாள். 

கரகோஷமா அது? பெண்ணுக்குள்ள ரகசியத்தைப் பிரகடனப்படுத்துவதுபோல இருந்தது. எங்கும் பயங்கர சீழ்க்கை ஒலிகள்… 

இந்தக் கீழான சீழ்க்கையொலிகளதாம் குறிஞ்சியையும் போகவதியையும் பிரித்துக் காட்டுவன என்பதை உணரு கிறான் ஞானசுந்தரம். குறிஞ்சி ஒரு தேவகாப்பியம்; இவள் ஒரு மானுட காப்பியம் என்று எண்ணியதற்கு எடுத்துக் காட்டு. குறிஞ்சி பிரசன்னத்தின்போது எப்போது இந்தச் சீழ்க்கையொலிகள் எழுந்திருக்கின்றன? தெய்வ சந்நிதா னத்து முன் எவனாவது சீழ்க்கை அடிப்பானா? 

குறிஞ்சியின் அழகும் புகழும் கையெடுத்துக் கும்பிடுவன! போகவதியின் அழகும் புகழும் கைபிடிக்கச் செய்வன! 

ஞானசுந்தரத்தை நெருங்கி வந்த போகவதி “போகவதி ராகம் பாட வேண்டாம்” என்றாள். இருவருமே கலகல வென்று சிரித்துக் கொள்கிறார்கள். 

சிவகங்கையின் நெஞ்சு வெடிக்கிறது. நம்மிடம் முறுவலிக்க மறுப்பவள் இங்கே முழக்கமிட்டுச் சிரிக்கிறாளே! 

“ஞானசுந்தரம்! போட்டி நிகழ்த்தலாமா? பொறுமை யோடு முடிக்கலாமா?” என்றாள் போகவதி மெல்லிய குரலில், 

“நான் எதற்கும் தயார்!” 

எதற்கும் தயார்… 

தவறாகக் கற்பிதம் செய்து கொள்கிறாள் போகவதி. 

விதியின் கட்டம் முழுமை பெற்று விட்டது. ஞான சுந்தரம் புலமை சற்றே சிலிர்த்தது. 

“போட்டி மனப்பான்மையுடனேயே நிகழ்த்தலாம். நான் பாடப் போவது ஒரே பாட்டு. பிறகு நீங்கள் எப்படி வேண்டுமானலும் ஆடிக் கொள்ளலாம். நான் என் அறைக்குச் சென்று விடுவேன்.” 

“ஞானசுந்தரம்! பிறகு நான் ஆடுவதாவது? என்னை வீழ்த்துகிற அளவுக்குப் பாடுங்கள்! நீங்கள் பாடாமல் இந்தக் கச்சேரியை மேலும் நான் நீடிக்க விரும்பவில்லை. என்னை நீங்கள் வீழ்த்துவது குறிஞ்சிக்குத் தேடித் தரும் பெருமை! 

ஆ! இவள் குறிஞ்சியின்பால் என்ன அன்பு கொண்டி ருக்கிறாள்…? உண்மையாகத்தான் சொல்கிறாளா? 

அவர்கள் பேசியது அவர்களுக்கு மட்டுமே கேட்டது.

சிவகங்கை இளவரசனுக்கு எரிச்சலோ எரிச்சல். ‘ஏ போகவதி… 

திவான் தீர்த்தகிரி அமைதிப்படுத்துகிறான். “அணையப் போகிற விளக்கின் குபீர் பிரகாசம் இது” என்றும் காதில் முணுமுணுக்கிறான். 

நாட்டியம் ஆரம்பமாகிறது. 

முதல் அலங்கரிப்பு முடிகிறது. 

இப்போது ஞானசுந்தரம் பாடப் போகிறான். போகவதி ஆடப்போகிறாள்; அதுவும் ஒரே பாட்டு. நிபந்தனை அது. நிச்சயம் கடுமையான போட்டியில் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்ததும் இயற்கையே! 

‘போகவதி என்னை வீழ்த்துகிற மனப்பான்மையுடன் பாடுங்கள் என்று சொன்னதுதான் ஞானசுந்தரத்துக்குச் சவாலாக இருந்தது. புலமைப் பரீட்சைக்காகத்தான் சொன்னாளா? நிலைமை நிரவுதலுக்காகச் சொன்னாளா? 

‘என் குறிஞ்சி! உனது புகழை நான் காக்க வேண்டும்! உன்னைத் தியானித்தே தொடங்குகிறேன்! நீ வணங்கும் தெய்வங்களைத் தியானித்தே தொடங்குகிறேன்!…! 

தொடங்குகிறான்… 

நட்டுவாங்கனார் ஜதிகளைச் சொல்லி முடித்ததும் ஏதோ பாடலை ஆரம்பிப்பான் என்று பார்த்தால்… 

அடப்பாவி ஞானசுந்தரம்? ஆரம்பத்திலேயே சோதனையா? விஷமமா? 

கா…பதா..நிகா…ச்சா…நிபா..தகா…சகா…ச்கா… என்று மேல் காந்தாரத்திலேயே அப்படியே நிறுத்தியதும் 

அரண்டு போகிறாள் போகவதி. 

என்ன ராகம் இது? 

ஆயினும் அந்த மேலை நாட்டுப் பாணிக்கேற்ப சலங்கைகள் ஒலிக்கத் தவறவில்லை. 

முதலில் மேற்குச் சங்கீதம்போல மொட்டை மொட்டை யாகச் சுரங்களைப் பிரயோகிக்சு, அந்தத் தாண்டவ ராகம் இடம் கொடுக்கிறது. இல்லையென்றால் இதனை அவன் தேர்ந்தெடுத்து இருப்பானா? 

ஆனால் அப்படிப் பாடிய முறைக்கு அவள் அபிநயம் பிடிக்க, ஒரு புதிய பாவனையையே காண்பித்து, அடுத்து… அதே தாண்டவ ராகத்தைத் தமிழிசைக்கே உரிய கமகங்களைச் சேர்க்கிற போது… 

ஓ… பட்டை தீட்டிய வைரங்கள். 

இடையிடையே தத்தகாரத்தையும் சேர்த்து, லயத் துடன் ஆலாபிக்கிறான். 

முதலில் மழை போல் ஆரம்பித்த ராக தத்தகார ஆலாபனை, இடையில் தென்றலாய், முடிவில் பூமழை யாகப் பெய்தது… 

ஒரே கைதட்டல்கள்… 

கலையரசியல்லவா போகவதி? புரிந்து பூரித்துச் செய்த பாவனைகள், மழையாகவும், தென்றலாகவும் பூச்சொரித லாகவும்… 

ஓ… தங்கமும் வைரமும் சேர்ந்தால் அதன் மதிப்பு தனியானதோ? 

என்ன ராகம்? இருக்கட்டும்! என்ன ஆரோகன அவரோகனம்? சங்கராபரணத்துச் சுரங்கள்; புரிகின்றன. அது ஒன்றே மேற்குச் சங்கீதமாக மழையொழியும். ஆரோகணம், அவரோகணம்?… 

புரியாத நட்டுவனார்க்குப் புரிய வைக்கிறான் ஞான சுந்தரம். 

சகபதநிச்… சநிதபகச… 

இந்த ஆரோகண அவரோகணத்தை வைத்துக் கொண்டே தத்தகாரத்துடன் விளையாடுகிறபோது, நட்டுவனார், எதற்கு என்பது போல விழிக்கிறார் நட்டு வாங்க நட்டுவனார். தஞ்சை சகோதரர்களுடன் பாடம் கேட்டவனாயிற்றே ஞானசுந்தரம்! 

இந்த அட்டகாசங்களை நிகழ்த்திப் பாட்டின் பல்லவி யைத் தொடங்கி, அனுபல்லவியை அலசி, சரணத்தை நாடுகிறபோது… 

அமைதிக்கே வியர்த்துக் கொட்டுகிறது. 

எங்கும் மன்மத மயக்கங்கள். 

சொற்கொட்டுகளும் சுரக்கட்டுகளும் அடதாளத்தை அலற வைக்கிறது. கமகங்களும் தாளவித்தைகளும் கரகம் விளையாடுகின்றன. 

ஐந்துவித நடை வேறுபாடுகளான சதுஸ்ரம், திஸ்ரம், கண்டம், மிஸ்ரம் ஆகிய நான்கு மட்டுமே பேசி போகவதி யின் கால்களை நடுங்க வைக்கின்றன. இன்னும் “சங்கீரண ஜாதி தலை நீட்டவில்லை. ஆயினும் தாள அம்சத்தின் மூன்று அம்சங்களையும் மீறவில்லை. காலம், செய்கை, அளவு. 

சரணத்தில் தாள கதி பேதங்களுடனும் நடைபேதங் களுடனும் இலக்கணச் சுத்தம் நிறைந்த காலம், மார்க்கம், கிரியை, அங்கம், கிரகம், ஜாதி, களை, லயம், யதி, பிரத் தாரம் ஆகிய பத்து முறைகளில் தேவையானதைத் தேவையான இடங்களில் பெய்து, சங்கீரண ஜாதியைப் பிரயோகிக்கிற போது… 

போகவதி கால்கள் பின்னித் தடுமாறி விழுந்து புரண்டு போனாள்!… 

கூட்டத்தில் ஒரே களேபரம்… 

திரை மூடப்பட்டது…. 

போகவதிக்குக் கால் சுளுக்கு என்று அறிவிக்கப்பட்டு விட்டதால், மக்கள் ‘ச்சு’ கொட்டிக் கொண்டு கலையத் தொடங்கினர். அதே நேரத்தில் ஞானசுந்தரத்து ராட்சஸப் பாடலைப் புகழ்ந்து செல்லவும் செய்தனர். 

கொஞ்ச நேரம் ரசித்தாலும் கொடிகட்டிய கூத்து என்றே குறைபடாது மக்கள் கலைந்து 

கலைந்து சென்றனர். அப்போதைய ரசனை அறிவார்ந்த ரசனை! பொழுது போக்கு ரசனையல்ல! 

‘அடே! ஞானசுந்தரம்!” என்று கறுவிக் கொள்கிறான் சிவகங்கை இளவரசன். நடக்க வேண்டிய கட்டத்தை எதிர்பார்த்து எழுந்தான் திவான் தீர்த்தகிரி. 

*மகேந்திரவர்மப் பல்லவன் கண்டுபிடித்தது. வழக்கில் இல்லை. 
† தமிழ் மரபில் நான்கு அம்சங்கள் சொல்கின்றன. ‘கொட்டும், அசையும், தூக்கும். அளவும் ஓட்டப்புணர்வது பாணி (தாளம்) ஆகும்” சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் மேற்கொள். 


அரண்மனை மாளிகையின் தனியறையில், சாப்பாடு வேண்டாம் என்று மறுத்து பழங்களையுண்டு பாலை யருந்தி முடித்தான் ஞானசுந்தரம். 

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் போகத்துப் போற்றுதலுக்குரிய நாட்டியப் பொன்மயிலாள் போகவதி. 

ஞானசுந்தரம் இதனை எதிர்பார்க்கவில்லை. 

“நான் வருவேன் என்று நீங்கள் எதிர்பார்த்து இருக்க வேண்டுமே! தாண்டவத்துக்கேற்ப தாண்டவ ராகத்தைப் பாடி என்னைத் தடம்புரளச் செய்துவிட்டீர்கள்!இப்போது நீங்கள் தடம்புரள வேண்டும்.” 

“போகவதி?” 

“விழுந்தது நானல்ல; குறிஞ்சியின் புகழ் காக்க விழுந்தேன்; நீங்களும் என்னிடம் விழவேண்டுமே என்று விழுந்தேன்!” 

போகவதி மோகவதியாய்ச் சிரிக்கிறாள். 

ஞானசுந்தரம் விக்கித்துப் போனான். 

அவன் அப்படியும் தினைத்தான். அது சரியாக இருந்தது.

“போகவதி! என்னை மன்னித்துவிடு! உனது பெருந் தன்மையைப் பாராட்டுகிறேன். ஆனால் என் இதயத்தில் குறிஞ்சி தெய்வத்தைத் தவிர வேறு எவருக்கும் இடமில்லை.” 

“நீங்களும் இப்படிச் சொன்னால் நான் உங்களை நிச்சயம் பலாத்காரம் செய்து அடைந்தே தீருவேன். அந்தக் கலை எனக்குக் கைவந்த கலை.” 

அப்போது… 

டூமில் என்ற துப்பாக்கிச் சத்தம். 

மேலே தொங்கிக் கொண்டிருந்த மெழுகுவத்தி கொண்ட கண்ணாடிப்பேழை விளக்குச் சுக்கல் சுக்கலாகிப் போனது. 

ஒரே கும்மிருட்டு… 

எவனோ ஒருவன் உள்ளே தடதடவென்று நுழைகிற சத்தம்… 

அடுத்து… 

‘ஓ…’ என்று போகவதியின் அலறல்; மேலும் அலறல்.

போகவதி கொலைத் தாண்டவக் கொடுமைக்குப் பலியானாள். 

இராகம்-27 

அக்கினிக் கோபம் 

காதுகளைத்துளைக்கும் செய்தியா அது? சுட்டெரிக் கும் செய்தி; சூரிக் கத்திக் கொண்டு கிழித்தெரியும் செய்தி. 

என் காதலர் கொலைக்காரரா? 

‘என் கணவன் கள்வனோ?’ என்று கண்ணகி கேட் டாளே, அதே கேள்வி குறிஞ்சி கேட்டுக் கொள்கிறாள். 

காளையார் கோயிலிலிருந்து திரும்பிய வாத்தியக்காரர் கள் சொன்ன செய்திகள். அக்கினிக் கோபம் ராகம் பாடி எவரை எரிப்பது? எதை எரிப்பது? என்றே புரியவில்லை குறிஞ்சிக்கு! 

நகம் வெட்டக்கூட கத்தியைத் தொடப் பயப்படும் எனது ஞானசுந்தரம் கொலைகாரனா? 

‘முகத்தை மழித்துக் கொள்ளக் கூடாதா’ என்று கேட்டால், ‘நாவிதன் கொண்டு வரும் கத்தி முகத்தை வடுப்படுத்தி விடுமோ என்று பயமாக இருக்கிறது குறிஞ்சி!’ என்று கூறும் என் காதலர் கொலைகாரனா? 

போகவதி என்கிற அந்தக் கலை மாதுவைக் கொலை செய்து விட்டாரா? 

‘ஓ’ என்று தலையைப் பிய்த்துக் கொண்டு கதறத் தொடங்கி விட்டாள் குறிஞ்சி. 

சிவகங்கைச் சிறையில் அடைபடத்தான் கண்ணீருடன் விடை தந்தேனா? கண்ணீருடன் விடை பெற்றீர்களா?

இதயம் எரிமலையாய் மெளனமாய்க் குமுறுகிறது. 

ஆனால் வாத்தியக்காரர்களின் நாவுகள் நசுக்கிய சொற்கள்? 

“அவர்கள் ஒருவரையொருவர் விரும்பி நேசித்த மாதிரியே தெரிந்தது.” 

ஓ… தலையை இரு கரங்களால் பற்றிக் கொண்டு, “நம்ப மாட்டேன்; நம்பவே மாட்டேன்!” என்று நம்பிக்கை யுடன் அலறினாள். 

நடந்த சம்பவங்களை மனத் திரைச் சீலையில் வண்ண வண்ணமாக வாத்தியக்காரர்கள் வரைந்த ஓவியங்களில்… அரண்மனை மாளிகையின் தனிமைச் சந்திப்பு… அரங்கத்துக் கிசுகிசு பேச்சும் கிளிஞ்சல் சிரிப்பும்.. அதே மாளிகையில் இரவில் சந்திக்க வந்ததும்… 

நினைவைக் கத்தியாகக் கொண்டு அந்த வார்த்தைச் சித்திரத் திரைச் சிலையைத் தாறுமாறாகக் கிழிக்கிறாள் குறிஞ்சி… 

முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே! போகத்துக்கு வந்த போகவதியை, வரைந்து காட்டிய சொல்லோவியப் படிப் பார்த்தால், மோகத்து முத்திரையைப் பதித்து முறுவலித்து அனுப்பிவிட வேண்டியதுதானே? கொலை செய்ய வேண்டியதன் காரணம்? 

போகவதி ஓர் இலட்சிய வேசி. 

நாடறிந்த உண்மை. இலட்சியம் இரவில் தனித்துச் சந்திக்கச் சென்றதென்றால்? 

தந்தையை வைத்தியர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தகுந்த காவலுடன் சிவகங்கை நோக்கி விரைந்து பயண மானாள் குறிஞ்சி, 

வழி நெடுக இதயம் பிழிந்து ஊற்றெடுத்துப் பெருகிய ரத்தத்தால் குளித்துக் கொண்டு செல்கிறாள். இவள் எந்தச் சிலம்பை ஏந்திச் செல்கிறாள்? சத்திய ராகத்தை ஏந்திச் செல்கிறாள்! சிலம்பு வென்றது! சத்தியம் வெல்லுமா? 

அக்கினிக் கோபாவேசத்தில் சிவகங்கை நெருப்பில் குளிக்குமோ? மேக ராகக் குறிஞ்சியால் நீரில் மூழ்குமோ? 

இரண்டுக்கும் சூழ்நிலையும், தியானமும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தானே? 

 அலைமோதிக் கலைபட்டு அழுகையாற்றில் அடித்துச் சென்று கொண்டிருக்கிற போது?… 


காற்றுக்கு நெருப்பு வைப்பாருண்டோ? 

அதற்குப் பெயர்தான் நாட்டின் எரிமலைச் செய்தி. அது திசைகளைப் பற்ற வைத்துக்கொண்டிருந்தது. 

செய்தியறிந்த சரபோஜி மன்னர், மங்கலமான மத்திய மாவதி ராகத்தை, நிரந்தர முகாரியாக்கி விடுவார்களோ என்று சுருண்டு போய் சுருட்டி ராகம் பாடத் தொடங்கி விட்டார். 

ஆ! சிவாஜியின் கதி? சிவாஜியின் கதி? 

இரு தினங்கள் கழித்து அவராகவே ஒருத்தி நாடு நோக்கித் தூது செல்ல இருந்தார். இப்போது குறிஞ்சி இருட்டுக்கே தூது போய்க் கொண்டிருக்கிறாளாமே! சித்தப் பிரமை பிடித்திருக்கும் சிவாஜியின் வெளிச்சம் என்னாவது? 

எந்த நேரமும், ‘குறிஞ்சி, குறிஞ்சி !”… 

எப்போது பார்த்தாலும், ‘குற்றாலக் குறிஞ்சி ராகம் பாட மாட்டாயா? குறிஞ்சி, நீ பாட மாட்டாயா? என்கிற தேம்பல்தான்! 

இந்தத் தேம்பலால், கணவன் தனக்குத் தேறமாட்டான் என்று ஏற்கெனவே ஓமலுக்கு ஒத்தடம் கொடுத்த இளைய ராணி சிவாஜி மனைவி சைதம்பாபாயி சாகேப், எப்போதும் போலவே திருவிடை மருதூருக்குப் பெரு விடை பெற்றுச் சென்று விட்டாள். அரச போகத்தில் இவையாவும் இயல்பான ராகங்கள். 

மன்னர் சரபோஜி… 

மகன் சிவாஜிக்கான மார்க்கம் என்ன? இரண்டாம் திருமணம் செய்து வைக்கிற நேரத்தில் இப்படி ஒரு குறிஞ்சி குறுக்கிடுவாளா? அதுவும் எந்த ஒருத்தி நாட்டில் தமது சிறு பிராயத்தில் ஒருத்தி எதிர்பட்டாளோ, அப்படியா இவனுக்கும் அந்த ஒருத்தி நாட்டில் வாழும் ஒருத்தி? 

நெஞ்சில் இன்னொரு முள் குத்தி அவரைச் சிரிக்க வைக்கிறது. தாம் காதலித்தவளை மகன் காதலிக்க, தியாகம் செய்த வரலாறு இப்போது தாறுமாறாகக் கிழிந்து கொண்டிருக்கிறதே! ஒருதலைக் காதலானாலும் எதிர் பார்த்த ஏக்கம்தானே? இப்போது மகனுக்கு ஏற் பட்ட வீக்கத்துக்கு எங்கு போய் மருத்துவம் பார்ப்பது? என்ன நடவடிக்கை எடுப்பது?’ 

தஞ்சை ரெஸிடென்ட் ஜான் ஃபைப்புக்கும் ராமநாதபுரம் ரெஸிடென்டுக்கும் கட்டளையிட முடியாது. சென்னை கவர்னருக்கு எழுதினாலும், இதில் ஆர்க்காட்டு நவாப் சம்பந்தம் கொண்டிருக்கிறான். கல்கத்தாவிலிருக்கும் 

கவர்னர் ஜெனரலுக்கு எழுதி, பதில்வருவதற்குள் நிலைமைகள் எங்கெல்லாம் நீச்சல் போட்டு விடுமோ? 

எதற்கும் சென்னை கவர்னர் வாஷிங்டனுக்கு முறைப்படி கெலெக்டர் நெல்சன மூலம் செய்தியனுப்ப விரைந்து முனைந்தார் சரபோஜி மன்னர். 


தமிழ்நாட்டு உதடுகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் பாட கியாம் குறிஞ்சியெனும் தேவமகள், சிவகங்கை நோக்கி வந்திருக்கும் செய்தி, அரண்மனை வாயிலுள் நுழைந்து பெரிய ஜமீந்தார் பெரிய வல்லப தேவ உடையாரின் பாதங்களை முத்தமிடுகிறது. 

ஓ… தெருப்பு அரண்மனைக்குள் நுழைகிறது. அக்கினிக் கோபம் சிவகங்கையை அடைத்து விட்டது. 

*கௌரி வல்லப தேவ உடையார் என்றும் கூறுவர். 

“டேய்! சின்னதேவா! என்ன சொல்லுகிறாய்? உனது தாயிருந்தால் அவளது கண்ணீரில் உன்னைக் கரைய வைப்பாள். அதுவும் வயதான காலத்தில் வந்துதித்தவனல்லவா நீ! நீ செய்கிற சேட்டை தாங்காமல் தாயை விழுங்கினாய்! இப்போது தந்தையையும் தந்தையையும் விழுங்க வேண்டுமா?” 

பெரிய ஜமீந்தார் இவ்வாறு கூறியதும், பக்கத்தில் அமர்ந்திருந்த ஆர்க்காட்டு நவாப் ஆஜம்ஜா, மெல்லிதாக ஏப்பம் விட்டான். திவான் தீர்த்தகிரி கால் பெரு விரலால் பதில் எழுதிக் காட்டிக் கொண்டிருக்கிறான். 

“அப்பா இது என் சொந்த விஷயம்!” 

“எது? சிவகங்கை எரியப் போவதா?” “வந்திருப்பவள் கண்ணகியல்ல!” 

“அவள் அவதாரம்!” 

“வெறும் கட்டுக் கதை!” 

“நீயே நேரில் கண்டிருக்கிறாயே!” 

“குருவி உட்கார இளநீர் விழுந்த சம்பவம்!” 

“மரியாதையாக நீ ஞானசுந்தரம் என்கிற அந்த ஒரு பாவமும் அறியாத பிள்ளையைச் சிறையிலிருந்து விடுவித்து அனுப்பிவிடு!” 

“மறுத்தால்!” 

“அந்தச் சிறையில் நீ இருப்பாய்!! 

‘அந்த அதிகாரம் ரெஸிடென்டுக்குத்தான் உண்டு ஜமீந்தார் சாகேப்!” என்றான் ஆர்க்காட்டு நவாப் ஆஜம்ஜா. “நீங்கள் கும்பினிப் பட்டாளத்துக்குக் கும்பிடு போடுகிறவர்கள். ஆர்க்காட்டு நவாப் அளித்த பிச்சை இதுவரை நீங்கள் ஆண்டு வருவது!” 

ஓ… ராணி வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் வாழ்ந்த மண்ணிலா இப்படியான சகதிச் சொற்களை வாரி இரைத்துக் கொள்கிறோம்? இந்த அகமுடையவர் கள் வழியில் ‘நானும் உடையான்’ என்று கூறிக்கொண்டு உதித்து விட்டேனே! என்னே கொடுமை! 

பெரிய வல்லப தேவ உடையார் மனம் புழுங்கிக் கண் கலங்கிப் போனார். 

“மகனே! என்னைப் பொம்மையாக்கி வேடிக்கை பார்க் கிறாய்! மகிழ்ச்சி! மிகப்பெரிய சாம்ராஜ்யங்கள் பெண் ணால் அழிந்த கதை உலகம் அறிந்த உண்மை! இது மறவர்கள் வாழ்ந்த-வாழ்கிற மண்! மாசு தேடி விடாதே! எண்ணித் துணிக கருமம்! வள்ளுவன் வாக்கு! துணிந்த பின் எண்ணுகிற இழுக்கு, நாமாகச் சேசுரித்துக் கொண்ட அழுக்காக முடிந்துவிடும்! இனி இந்த விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். உன் தலையெழுத்துப்படி நடக் கட்டும்.” 

பொருமலின் நெருப்பருவியாய்க் கண்ணீரைச் சிந்தி விட்டு அரண்மனைக்குள் வேகமாகச் சென்று விட்டார். சிவகங்கைப் பெரிய ஜமீந்தார். 

இப்போது தீர்த்தகிரி ஒரு திருப்பமான ஆலோசனை யுடன், “குறிஞ்சியை அழைத்து வாருங்கள்!” என்று ஆணை பிறப்பிக்கிறான். 

சற்றைக்கெல்லாம்… 

‘வாயிலோயே, வாயிலோயே என்று கேட்ட பின்னர், ‘தேரா மன்னா செப்புவது உடையேன்!” என்று கேட்க வரும் அக்கினிக் கோபக் கண்ணகி போல அரண்மனையுள் நுழைந்து கொண்டிருக்கிறாள் குறிஞ்சி. 

மூவர் மட்டுமே அரண்மனைக் கூடத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். 

காவலர்களுக்கு வெளியே போய்விடுமாறு ஆணை. 

எரிமலை மகளென எதிர்வந்து நின்ற குறிஞ்சி எனும் நெகுப்புத் தெரியவில்லை. அவளது கோபுரக் கலசங்கள் தெரிகின்றன; கோபுரம் போலுயர்ந்த பேரழகு தெரி கிறது; ஆனால் தாங்கள் மட்டும் கோபுரத்து அடிவாச லில் இருக்கிறோம் என்பதை மறந்து அல்லது உணராது கவனிக்கிறார்கள். 

“உன்னை எதிர்பார்த்தேன் குறிஞ்சி!” என்றான் இளைய ஜமீந்தார். 

கற்பின் கனவியாய்க் குறிஞ்சி கவனிக்கிறாள். ஆயினும் அவள் கண்ணகியாகிவிட முடியுமா? ஏன் முடியாது? 

“என்னை ஏன் எதிர்பார்க்க வேண்டும்?” 

“ரதியின் அவதாரம்போல வந்து நிற்கும் நீ எதற்காகக் கண்ணகி அவதாரம் போல வேஷம் போட வேண்டும்!”

“மரியாதை கொடுத்தால் மரியாதையை எதிர்பார்க்கலாம்.” 

“இல்லையென்றால்?” 

“மரியாதை மண்ணைப் பிளக்கும்!” 

“நானே உன்னைப் பிளக்கத்தானே எதிர்பார்த்தேன் என்று சொன்னேன்!” 

“தூ!” 

குறிஞ்சி காறியுமிழ்ந்த மறுகணம், “சபாஷ்! வேலு நாச்சியை மீண்டும் இந்த மண்ணில் பார்க்கிறேன்!” என்று கூறிக் கைதட்டியவண்ணம் அருகே வந்து நின்றாள் சிவ கங்கையின் இளைய நாச்சியார்-சின்ன வல்லப தேவனின் மனைவி. 

இளைய ஜமீன் கர்ஜிக்கிறான்: 

“நாச்சி! நீ அந்தப்புரத்திலிருக்க வேண்டியவள்!” 

அதாவது… நீங்கள் எந்தப் புரத்திலிருந்தாலும் நான் கண்டுகொள்ளக்கூடாது; இல்லையா?” 

“அப்படித்தான்!” 

சூட்டுக்கோல் போலப் பதில் சொல்லவே, நாச்சியாரின் நாவு சூடேறியது. உடன் இரு ஆண் ஜன்மங்கள் இருக் கின்றவே! நவாப் வேறு வாய்கூசாமல் சிரிக்கிறானே! 

நாச்சியார், நவாப்பை நோக்கினாள்: “நவாப் சாகேப்! உங்கள் அதிகாரத்தை நான் மதிக்கிறேன்! இங்கே புருஷன் மனைவிக்கிடையே போராட்டம் நிகழப் போகிறது. நீங்கள் போகலாம்.” 

“நாச்சி! அவர் நவாப்!” 

“உஸ்! நான் மறுத்தேனா? அதற்காக அவர் என்னைக் கேட்டால் கொடுத்து விடுவீர்களா?” 

“என்ன சொன்னாய்?” 

சிவகங்கை இளவரசன் சினந்து எழ, “உஸ்!” என்று மீண்டும் கையமர்த்துகிறாள் இசையநாச்சியார்; “எதிர்கால சிவகங்கை ஜமீனாக நடந்து கொள்ளுங்கள்! பிறகு எடு பிடிகளுக்கும் உங்களுக்கும் எந்தவித வேறுபாடும் தெரியா மல் போய்விடும்! நவாப்ஜீ! தயவு செய்து இந்த இடத்தை விட்டுப் போகலாம்! ராஜகாந்தி என்கிற ராட்சஸனுக்கு இந்தச் செய்தி இன்னும் எட்டவில்லை என்று நினைக் கிறேன். அதற்குள் நீங்கள் ஆர்க்காட்டுக்கே போய் விட்டாலும் குலை தப்புமோ? தலை தப்புமோ?” 

நவாப் ஆஜம்ஜா, ராஜகாந்தி என்றதும் அரண்டு போனான். ஆனாலும் குறிஞ்சியை அனுபவிக்காமல் போகிறோமே என்கிற வேதனைத் துடிப்புடன் கவனிக் கிறான். 

“ஏன், குறிஞ்சியைப் பார்க்க வேண்டும்? அவளை என் புருஷனாலேயே தொடமுடியாது என்றால் நீங்கள் பாவம்! போய்வாருங்கள்! நானும் இதனை அனுமதியேன்; இல்லை. ராஜகாந்தி வந்தால் ஆர்க்காட்டுக்கே அனுப்பி வைப்பேன்.” 

நாவப் உள்ளுக்குள் கறுவிக் கொண்டே வெளியேறினான். 

அடுத்து திவான் தீர்த்தகிரி. 

“நீங்கள் மட்டும் ஏள நிற்கவேண்டும்? எனக்கென்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்றா? உங்கள் வேலையை மரியாதையாக ராஜினாமா செய்துவிட்டுப் போய் விடலாம்! இல்லை, நாளை முதல் உங்களைப் பதவி யிலிருந்து நீக்கம் செய்கிறேன்.” 

“நாச்சி ” 

கதறுகிறான் இளைய ஜமீன். 

“உஸ்! போகவதியைக் கொலை செய்தது போல என்னை அவ்வளவு எளிதில் செய்து விட முடியாது. எனது சேது நாட்டுக்குக் காதுகள் இன்னும் செவிடாகி விடவில்லை!” 

திவான் தீர்த்தகிரி திருட்டு விழிகளோடு வெளியேறினான். 

“இப்போது சொல்லுங்கள். இவளைத் தீண்ட வேண்டுமா?” 

“ஆமாம்; ஆமாம்; ஆமாம்!” 

“எதோ தீண்டுங்கள். அவள் நெருப்பு! ம்ம்! என் எதிரேயே தீண்டுங்கள்.” 

சிவகங்கை இளவரசன் வெறிகொண்டு எழுகிறான். 

“இளைய ஜமீன்! நில்! இந்த மாதரசிக்காக எனது கோபத்தை அடக்கிக் கொண்டு இருக்கிறேன்! நான் ‘அக்கினிக் கோபம் ராகம் பாடுவேனேயானால், இந்த அரண்மனையே பற்றி எரியும்!” 

“எதோ பாடு பார்க்கலாம்!” 

“நாய் குரைக்கும் ஓசையைத் தவிர வேறு எந்தச் சங்கீத மும் அறியாதவன் முன் நான் பாடுவதா?” 

“அடி நாயே! குறிஞ்சி !” 

மீறிவிட்டான் சிவகங்கை இளவரசன். 

குறிஞ்சியும் கொஞ்சமும் கீழே இறங்காமல், “அட நாயே! சின்ன வல்லப தேவா! ராஜகாந்தி வருவான்!” என்றாள். 

“அவன் வருகிறபோது வரட்டும்? இப்போது என் மனைவியின் முன்பே உன்னைக் கற்பழிக்கிறேன் பார்!” 

*ஆ:சகமபநிச்; அ: ச்நிபமகரிச. 
நடைபைரவியில் பிறந்த நெருப்பு ராகம். ‘அக்கினிக் கோபம்’ என்ற தலைப்பில் நான் எழுதிய (1954) முதல் வரலாற்று நாவல். அது இசை நாவலல்ல அக்கினிக்கு இரையான சாம்ராஜ்ய நாவல். 

சிவகங்கை இளவரசன் காமாதுரனைப் போல வெறி கொண்டு எழுந்துவர… 

“ஆ…” என்று உச்சஸ்தாயில் ராகக் குரல் கொடுக் கிறாள் குறிஞ்சி. 

அக்கினிக் கோபமே பாட ஆரம்பித்துவிட்டாள். 

குறுக்கே புகுந்த இளைய நாச்சியார் கணவனைப் பற்றிக் கொண்டு, “வேண்டாம் அழிவு; வேண்டாம்!” என்று கதறுகிறாள். 

மபநிச்ரீ…ச்சா..மக்ரிசா… 

“குறிஞ்சீ! மகளே குறிஞ்சீ!” 

யார்? யார்? யார்? 

பெரிய வல்லப உடையத் தேவர்தான் ஓடிவந்து குறிஞ்சியின் வாயை தமது வலது கையால் பொத்துகிற போது… 

இளைய நாச்சியாரோ, குறிஞ்சியின் கால்களைப் பற்றிக் கொண்டாள். “வேண்டாம்! தாயே! குறிஞ்சியம்மா! ஏதோ அக்கினிக் கோபம் ராகம் என்றாயே! அதைப் பாடி எங்களை அக்கினிக்குள்ளாக்க வேண்டாம்! கோபம் வேண்டாம்!” 

வாய் பொத்திவிடவே கோபம் குறிஞ்சிக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்து வருகிறது. பெருமூச்சு வாங்குகிற போது மார்பகங்கள் ஏறி இறங்கும் அழகை அந்தக் கட்டத் திலும் ரசிக்கிற தனது கணவனை நோக்கிய இளைய நாச்சியார், “உங்களுக்குக் கழுத்தை நீட்டியதற்காக வெட்கப்படுகிறேன்!” என்று கூறி, குறிஞ்சியைச் சமா தானப்படுத்த அந்தப்புரத்துக்கு அழைக்கிறாள். 

“முதலில் எனது காதலனை என்னிடம் ஒப்படை யுங்கள்!” 

அமைதி மகளே! இன்று மாலைக்குள் உனது காதலனை உன்னுடன் அனுப்பி வைப்பேன்!” என்றார் பெரிய ஜமீந்தார் கௌரி வல்லபதேவ உடையார். 

அப்போது ஒரு ராட்சஸைைனப் போல கடகட வென்று பெருதகை புரிந்தான் இளைய ஜமீன் சின்ன வல்லப உடையத்தேவன். 

ஏன் இப்படி வெறிக் கொண்டு சிரிக்கிறான் இவன்?

– தொடரும்…

– குற்றாலக் குறிஞ்சி (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 2012, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

கோவி. மணிசேகரன் (கே.சுப்பிரமணியன்( 2 மே 1927 - நவம்பர் 18, 2021) சிறுகதை, நாவல், கட்டுரை என பொது வாசிப்புக்குரிய நூற்றுக்கணக்கான படைப்புகளை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது 'குற்றாலக் குறிஞ்சி' நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றார். கோவி மணிசேகரன் கல்கி மற்றும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்களால் ஈர்ப்படைந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதியவர் பின்னர் நாவல்களை எழுதலானார். கோவி மணிசேகரன் 1954-ல் 'கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *