குற்றாலக் குறிஞ்சி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 1,392 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம்.

இராகம் 19-21 | இராகம் 22-24 | இராகம் 25-27

இராகம்-22 

தர்பார்

தஞ்சையரண்மனையின் ஜயவாசல் திமிலோகப் படுகிறது. 

போன்சலே வமிசத்துப் போற்றத்தக்க கோமகனா ரல்லவா ராஜா சரபோஜி? அந்த மாமகனார் பெற்றெடுத்த மணிமுடிக்குரிய ஒரே செல்வன் சிவாஜியின் திருமணம் நடந்து “பத்தாண்டு பூர்த்தியாகிறதாமே! அதற்கா இப்படி ஒரு பகட்டு விழா? 

இதனை சிவாஜியே விரும்பவில்லை. 

மாண்பு என்ற சொல் மனைவிக்கே உரியது என்று குமரகுருபரன் சொன்னானே… ‘மனைத்தக்காள் மாண் பிலள் ஆயின்’… அந்தச் சொல்லுக்கே பொருத்தமற்ற ரோஜாச் செடியை மணந்ததற்கு, இப்படி ஒரு பத்தா மாண்டு பைத்தியக்காரத்தன விழாவா? பத்தாம் வயதில் திருமணம் செய்ததே பைத்தியச் செயல்! இந்தப் பத்து ஆண்டில் எந்த ரோஜாவை இனிது கொய்து முகர்ந்து ரசித்து இருக்கிறோம்? முட்கள் குத்தி முத்துப் போல ரத்தத் துளிகள் அரும்பியதுதானே மிச்சம்? 

*1818-இல் ஜூன் அல்லது ஜூலையில். 

இந்த மகத்தான வேதனையைத் தீர்த்து வைத்தது, குறிஞ்சியும் கலைவிழா அழைப்பை ஏற்று வருகை புரிந்து இருக்கிறாள் என்பதுதான்! ஓ… தென்றலின் வருகை! 

சரபோஜி மன்னரே ஆணிப் பொன் அம்பலத்து ஆடல் மகிழ்ச்சி கண்டுவிட்டார் என்றால்? 

குறிஞ்சியெனும் அந்தத் தேவதா வாசனை வந்திருக்கிறதா? 

சிவாஜி இயற்கையிலேயே மெளனம் நிறைந்த சிந்தனா வாதி. மராட்டிய வமிசத்தில் சற்றே மாறுபட்டும் வேறு பட்டும் பிறந்து விட்டவன். மங்கள விலாசம் என்கிற அசிங்கமான பெண்களை அடைக்கும் மாளிகையை வெறுப்பவன். அழகிய பெண்களைக் கத்திநட்டுக் கல்யாணம் செய்து வந்து, ஒரு நாள் அனுபவித்துவிட்டு, அந்த மாதர்களின் கண்ணீரில் புத்தி கெட்ட புலம்பல் கீதங்களைக் கேட்கும் செவிகளை அறுத்து எறிய வேண்டும். என்று தந்தைக்கே உபதேசம் செய்த சாமிநாதன்! இல்லை யென்றால் சித்தத்தைத் தடுமாறச் செய்கிற சித்தினியை மனைவியாகக் கொண்டு இரண்டாம் திருமணத்துக்குச் சித்தமாய் இருக்கிற எசவந்தராவ் ராமசந்திர சூர்வே யின் ரம்மியமான மகள் காமாட்சிபாயி காத்திருந்தும் மறுப்பானா? அப்போதைய அவனது மனத்தில் காமம் கரும்புப்பந்தலிட்டுத் தேன்கூடு கட்டித் துளித்துளியாய்ச் சிந்திய காலம். 

ஆ! இந்தத் தேவசுந்தரி குறிஞ்சி மட்டும் மனைவியாகக் கிடைப்பாளேயானால்? அது தேன்கூடல்ல; வான் கூடு! தஞ்சை என்ன? இந்தத் தரணியை துறக்கத் தயார்! அரசாவது? அதன் முரசாவது? 

இது ஓர் அரச போக வாழ்க்கையா? வெள்ளைக் கும்பினியனுக்கு அடிமைச் சாசனமிட்டு அப்பா, தஞ்சாவூர் பொம்மையாக வாழ்கிற வாழ்க்கை ஒரு சுகபோக வாழ்க்கையா? இப்படிக் கும்பினியனுக்குத் 

பின்னாளின் சிவாஜியின் கதை என்பது வேறு. அது விதிவசம். இங்குத் தேவையில்லாதது. சத்ரபதி சிவாஜிதான் அந்தப் பெயருக்குக் கௌரவமளித்தவர்! 

தலையாட்டும் சரபோஜியைக் கண்டல்லவா, தமிழுக்கு ரியவர்கள் தஞ்சாவூர் பொம்மை என்கிற ஒன்றைக் கண்டு பிடித்துத் தலையாட்டிக் கேலி செய்து வருகிறார்கள்? 

அரண்மனை சங்கீத மகாலில் கலைவிழா ஆரம்பமாகி விட்டது. 

மன்னர் சரபோஜியும், மந்திரி சர்க்கேல் ராஜேஸ்ரீ ராமோஜி போன்ற ஏனைய மந்திரிகளும், சேனாபதி பிரவகர ராஜேஸ்ரீ கிருஷ்ணாஜி போன்றவர்களும் பெரிய அண்ணா முத்தோஜி கோவிந்தராவ், சின்ன அண்ணா வேங்கட்டராவ் போன்ற உயர் அதிகாரிகளும், கலெக்டர் நெல்சன் துரையும் பிரதிநிதி (ரெஸிடென்ட்) ஜான் ஃபைஃப் போன்ற அதிகாரக் கும்பினி வர்க்கங்களும் கலை விழாவை ரசிக்கின்றனவோ இல்லையோ, கௌரவித்துக் கொண்டிருக்கின்றனர். 

மேன் மாடத்தே, சரபோஜி மன்னரின் முதல் ராணி யமுனாபாய் சாகேப், இரண்டாம் ராணி அகல்யாபாய் சாகேப், இளவரசன் சிவாஜியின் இளையராணி ரோஜாச் செடி சைதாம்பாயி சாகேப். ஏன்? இரண்டாம் ராணியாகக் காத்திருக்கும் காமாட்சிபாயி முதலானோர் அமர்ந்து காணப்பட்டனர். 

வேற்று இடத்தில் காமக்கிழத்தியின் கூட்டங்கள். இதில் சரபோஜியின் சிறிய தந்தை, ஆனால் பெரிய வீரர் திருவிடை மருதூர் அரசர் காலஞ்சென்ற அமர்சிங்கின் குடும்பங்களும், காமக்கிழத்திகளும் அடங்குவர். 

இதில் வேடிக்கை… 

விழா நாயகன் சிவாஜி, இன்னமும் வரவில்லை. அவன் குறிஞ்சியோடு வருவதில் குதூகலிக்கிறான் என்பது சரபோஜிக்குத் தெரிய வருகிறது. அவனது காதல் நெஞ்சம் அவர் அறிந்ததே! இப்போது அது அவத்தைக் கும் உள்ளானது. அவரது இதய வனத்திலிருந்து குறிஞ்சி மலரை எப்போதோ பறித்து எறிந்துதான் பல நாள்களாய் விட்டனவே! மகன் காதலிக்கிற போது?… 

குறிஞ்சி, தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குச் சென்று அபிஷேகங்களை முடித்துத் திரும்புகிறவரை சிவாஜி காத்திருந்தான். அவனுடைய உற்ற துணைவர் களும் மிகப்பெரும் அறிவாளிகளும், மகாவித்துவான்களு மான பண்டிதர் ராமசாமியய்யா தீட்சிதரும் அவருடைய செல்வக் குமாரன் பண்டிதன் வரகப்ப தீட்சிதனும் உடனிருந்தாலும் வரகப்ப தீட்சிதனே சிவாஜியின் புத்தி மதிக்குரிய புண்ணிய நண்பன். 

அரங்கில் நாட்டியமும் இசையும் அமர்க்களப்பட்டா லும், கண்களுக்கும் செவிகளுக்கும் அவை குறித்து அக்கறை என்ன? எங்கே குறிஞ்சி? எங்கே குறிஞ்சி? எப்போது வருவாள் குறிஞ்சி? எதிர்பார்ப்போ, எதிர்பார்ப்பு! 

அதோ குறிஞ்சியும் வந்துவிட்டாள். 

ஆ! அவள் குறிஞ்சியாகவா வருகிறாள்? தஞ்சை கோபுரத்துப் பொற்கலசமாய் வருகிறாள் ! கட்ட முடியாத- எட்ட முடியாத பெருவுடையானின் லிங்கமாய் வருகிறாள். கம்பனின் இராம காதையின் அலங்காரச் சொல்லினிப் பும் அற்புத கற்பனைக் கட்டுக்கோப்புமாக வருகிறாள்… 

காளிதாசனின் நாடக நயம் அவளது நடையில், சாகுந் தலமாகச் சங்கீதமிசைக்கிறது! வாணியின் வீணை அவளது தேகத்தில் நாதம் சொட்டுகிறது… 

மக்களிடையே ஒரே ஆரவாரம். 

“ராஜாளிப் பறவையை வரவழைத்த சங்கீத ராட்சஸி யல்லவா?” என்கின்றனர் சிலர். 

இத்தனைக்கும் அப்போது மேடையில் பாடிக் கொண்டி ருந்தவர் மகாவித்துவான் சுப்பராய சாஸ்திரிகள். தியாக பிரம்மத்தின் சீடர். என்ன பாடிக்கொண்டிருக்கிறார்? 

‘ஜனனி நின்னு வினா’ என்கிற ரீதி கௌளையில் அவராக இயற்றிய அற்புத சாகித்தியம். 

மக்களின் ஆரவாரம் பல மகாவித்துவான்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டன. அவர்களில் கொலைகாரர்களும் இருக்கிறார்கள்! ராஜகாந்தியால் அடக்கப்பட்ட கொலைஞர்கள் சிலர்! 

சபையில் முத்துசாமி தீட்சிதரின் இளைய சகோதரர் பாலுசாமி தீட்சிதர், அண்ணாசாமி சாஸ்திரி, வீணை குப்பய்யர், ஞானம் கிருஷ்ணய்யர், ஆணைய்யா, தஞ்சை சகோதரர்கள், வைத்தீஸ்வரன் கோயில் சுப்பராம சாஸ்திரி இவர்களுக்குத் தலைமையாகப் பல்லவி கோபாலய்யா… 

புலமைக் காய்ச்சல் என்பது வேறு! புலமை என்பது வேறு! கோபாலய்யா பல்லவியின் மகாசக்கரவர்த்தி: இதில் மறுப்பதற்கு இருவித கருத்து எவருக்கும் கிடையாது. 

ஒருபுறம் தமிழ்ப் புலவர் கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். அவரது ‘சரபேந்திரப் பூபாலக் குறவஞ்சி’ நாடகம் இரவு நடக்க இருந்தது. அதில் சுந்தரி கதாநாயகி யாக நடிக்க இருந்தும் இந்தக் குறிஞ்சிக்கு இப்படி ஒரு வரவேற்பா? 

அது ஒரு சங்கீதப் பொற்காலம். ஆனால் தமிழின் கற்காலம்! தமிழுக்குத் தரித்திரம் பிடித்த தலையெழுத்துக் காலம்! 

இளவரசன் சிவாஜியே எழுந்து சென்று குறிஞ்சியை வர வேற்று கோபாலய்யா அமர்ந்திருந்த ஆசனத்துக்குப் பக்கத் தில் அமரச் செய்ததுதான் விதியின் விளையாட்டோ? அல்லது ரதியின் விளையாட்டோ? 

இன்னமும் மக்கள் ஆரவாரம் அடங்கவில்லை. “குறிஞ்சியைப் பாடச் சொல்லுங்கள்” என்கிற எழுச்சிக் குரல் எழுப்பியதுதான், பல்லவி கோபாலய்யாவுக்கு எரிச் சலைமூட்டிப் பொறாமையைப் பொங்கச் செய்து விட்டது. அதுவே குறிஞ்சியே வம்புக்கு இழுக்காமல், காலமே வரிந்து கட்டிக் கொண்டு வம்புக்கு இழுத்துவிட்டது. இப்படி ஓர் இயல்பான சம்பவம் நேர வேண்டும்; தன் மீது பழியோ, ஆணவமோ ஏற்படக் கூடாது என்று குறிஞ்சி, தான் வணங்கும் தெய்வமான பத்திரகாளி பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டுக் கொண்டே வருகை தந்து அமர்ந்தாள். 

சினத்தின் சிண்டைப் பிடித்து உலுக்கிய பல்லவி கோபாலய்யா, தமது குடுமியைத் தட்டிவிட்டுக் கொண்டே அர்த்த சாஸ்திர சாணக்கியனைப் போல ஆவேசப்பட்டு எழுந்தார். அவரது கண்களில் பொறாமையின் நெருப்புத் துண்டங்கள் பொசுக்குவன போலப் பொறிகளைக் கிளப் பின. 

“இது என்ன வித்வ சபையா? வேடிக்கை சபையா? விஷமச் சபையா? ஐயர்வாளின் மரபு அருள் சங்கீதம் நடைபெறுகிறது. அவர் ஜனனி பாட நீங்கள் அனலியாக வும் கனலியாகவும் கூச்சல் போட்டால்? ரீதி கௌளைக்கு மதிப்பு தராத சபைரீதியை நான் கண்டிக்கிறேன்!” 

“எங்களுக்கு ஜனனியின் ரீதி கௌளை தேவையில்லை; குறிஞ்சியின் சங்கீத நீதி கௌளை தேவை!” என்றாள் பாரதி, அங்கேதான் அவளது விசுவரூபம் தலை தூக்கியது. அவளுக்குக் கிடைத்த பரம சந்தர்ப்பமல்லவா அது? 

பல்லவி கோபாலய்யா பார்க்கிறார். 

“ஓ…இவள் நம்மிடம் சபதமிட்டவளல்லவா? சச்சரவு செய்ய சமயம் பார்த்துச் சந்தர்ப்பத்தை உண்டு பண்ணுகிறாள். இந்தக் கிடைத்தற்குரிய சந்தர்ப்பத்தில் குறிஞ்சியைச் சங்கீத வறிஞ்சியாக்கிவிட வேண்டியதுதான்.” 

“நீ பாரதி இல்லை…” 

“இல்லை குறிஞ்சியின் சாரதி!” 

“நீ வந்த நோக்கம் அந்த நோக்கம்தானா?” 

“அதே நோக்கமே தான் ! இந்தச் சபை எங்கள் குறிஞ்சியை எதிர்பார்க்கிறது. ஆனால் எரிச்சலுடன் எரிந்து விழுந்து இருக்கிறீர்கள். எரிந்து விழுந்து பயனில்லை; வரிந்து கட்டிக் கொண்டு சபையில் அமர்ந்து உங்கள் சபதத்தை நிறை வேற்றுங்கள். அறுபது வயது அனுபவமிருப்பதாலேயே இருபது வயது அனுபவத்தை இளக்காரமாகிப் பேசி விட்டதை இன்னும் மறக்கவில்லை. கதைப்பவனெல்லாம் கதாசிரியனல்ல; கனகாங்கி ராகத்தைப் பாடத் தெரிந்ததாலேயே கானகலாதரனாகி விடவும் முடியாது. குறிஞ்சி ஒரு வரப்பிரசாதம்! ஞானசம்பந்தன் வாயில் ஒழுகிய முலைப்பால்! முனைந்துதான் பாருங்களேன்!” 

ஏது, ஏது, விழா என்று வருகிறபோது வீண் அபவாதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி சரபோஜி எழுந்து தலையிட, சிவாஜி குறுக்கிட்டான்: “அப்பா! இந்த வித்வப் போட்டியில் நீங்கள் தலையிட வேண்டாம். பலமுறை இந்தச் சபை குறிஞ்சியைப் பலவீனமாக விமரிசித்து இருக்கிறது. அவள் குரலினிமையில் ஜனங்களை மயக்கு கிறாள்; குன்றனைய சங்கீதத்தின் கல்லைக்கூடப் பொறுக் காதவள் என்று இந்தப் பல்லவி கோபாலய்யா பலமுறை சொல்லி நானே கேட்டிருக்கிறேன்! இப்போது பேசிய வள் குறிஞ்சியின் பரம ரசிகை! நான் குறிஞ்சியின் ரசிகர் களுக்கெல்லாம் தலைவன்! ஏன்? ராஜகாந்தியினும் ஒருபடி மீறியவன்! குறிஞ்சி கொட்டம் கொண்டவளல்ல; வேண்டுமானால் கோபாலய்யர் கொட்டத்தை அவள் அடக்க நான் ஆசைப்படுகிறேன் என்று சொல்வதைவிட ஆணையிடுகிறேன்! காரணம் குறிஞ்சியையே இங்குள்ள வர்கள் கொலை செய்யவும் துணிந்திருக்கிறார்கள்.’ 

“நான் தயார்” என்று கம்பீரமாகக் குரல் கொடுக்கிறார் பல்லவி கோபாலய்யா. 

அவையில் அமைதி, சித்திரையின் கத்தரி வெயில் போலப் புழுக்கம் கண்டு தடுமாறுகிறது. 

காலில் கொலுசு சத்தம் குறிஞ்சிராகம் இசைக்க எழுந்து நடந்து வருகிறாள். அமராவதிப் பட்டினத்து அழகிகளுக்கெல்லாம் அழகியான, அபூர்வ ராக அழகி ஆனால் அப்பழுக்குச் சொல்ல முடியாத அழகியான குறிஞ்சி. 

போட்டிக்கென ஒரு பெண் சிங்கம் போல நடந்து வந்தாலும், முத்துசாமி தீட்சிதரிடம் பயின்ற போற்றுத லுக்குரிய மரியாதைக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதால் வயதான-சங்கீத வாக்கேய சிங்கமான பல்லவி கோபாலய்யாவின் பாதங்களைத் தொட்டு அவள் வணங்கியதுதான் பலருடைய கண்களை வியக்கச் செய்து, தோல்வியை ஏற்று வீழ்ந்துபட்டாளோ என்று மயக்கவும் செய்தது. “குறிஞ்சி! என் சபதம் என்ன?” பாரதி பதறுகிறாள். 

“குறிஞ்சி! காலில் விழு! அது மரியாதை! கானத் தில் வீழ்ந்து விடாதே! அது இந்த இளவரசனையும், உனக்காகப் பரிந்து பேசிய ரசிகையையும் இழிவாக்கும் ஏளனம்!” என்று கர்ஜிக்கிறான் சிவாஜி. 

அப்போதுதான், குறிஞ்சி, சிவாஜியைப் பார்த்த பார்வை யில் ஜீவகன் தெரிந்தான்; காந்தருவதத்தை தெரிந்தாள்; சீவகசிந்தாமணியின் செல்வத் தமிழே தெரிந்தது! 

குறிஞ்சியின் இமைகள், குமார ராஜனான சிவாஜியை நோக்கிச் சிரித்தன. அந்தச் சிரிப்பில், எதிலும் பொறுமை வேண்டும்: சிந்தனை வேண்டும் என்பன தெரிந்தன. 

பல்லவி கோபாலய்யாவை வணங்கிய குறிஞ்சி, “பல்லவி சக்கரவர்த்தியை இந்தச் சிறுமி முதலில் பதவிசாக வேண்டிக் கொள்கிறாள். நீங்கள் “பச்சிமீரியம் ஆதியப்பய்யாவின்  அருமந்த சீடர். உங்களுடைய அடதாள் வர்ணங்களான தோடி ராக கனகாங்கியும், கல்யாணி ராக வர்ணமான வனஜாக்ஷியும் பயின்று சங்கீதக் காரியானவள் நான். நீங்கள் என்னிடம் போட்டியிட வேண்டுமா? யோசித்துப் பாருங்கள்!” 

*இன்றைய புகழ்பெற்ற பைரவி ராக விரிபோனி வர்ணம் இயற்றியவர். இவர்கள் தெலுங்கு மரபிலிருந்து வந்தவர்கள். 

“இது போட்டியல்ல; உனக்கு மிஞ்சிய சங்கீதமில்லை என்று இந்த உலகம் பேசுவதை நான் விரும்புவதில்லை. அபிராமிபட்டன் ஆனந்தப்பட்டிருக்கலாம்;தியாக பிரம்மம் ஏதோ சிறுமியாயிற்றே என்று புகழ்ந்திருக்கலாம். அரைப் பைத்தியமான கோபாலகிருஷ்ண பாரதி, தலைமேல் லிங்கத்தை வைத்துக் கூத்தாடுவது போல உன்னை வைத்துக் கூத்தாடியிருக்கலாம்! ஏதோ ஒரு சில மந்திர சக்திகளை வைத்துக் கொண்டு நீ ராஜாளிப் பறவையை வரவழைக்கலாம்; ராட்சஸனான ராஜகாந்தியை மயக் கலாம். என்னிடம் அந்த ஏமாற்று செல்லாது. நானும் அதர்வணம் தெரிந்தவன். பல்லவி பாடியே உன் பாட்டைக் கல்லறைக்கு அனுப்பிவிட முடியும்?” 

இப்படிச் சொன்ன அடுத்த கணமே இசை மாமேதை யான ஆனைய்யாவுக்கு ஆத்திரம் பொங்கிவிட எழுந்து கொண்டார். 

“கோபாலய்யா! கோபம் வரலாம்; ஆனால் கல்லால் அடிப்பதுப்போலச் சொல்லால் அடிக்கக் கூடாது. குறிஞ்சி மானுட ஞானியல்ல; தேவஞானி! தீட்சிதர் பெற்ற இசை ஞானி! அவளை வம்புக்கு இழுக்க வேண்டாமே!” 

“நீங்கள் தமிழில் பாடுகிறவரல்லவா? அதனால் தமிழுக்குப் பரிந்துரையோ? இவளை மீறவிட்டால் எங்கள் இசைப்புலமை நாறி விடும்!” 

ஆனைய்யா ஆவேசம் கொண்டு சிலிர்த்து எழுச்சி கண்டார். “என் தமிழை இழிவு செய்த நீ, அதே தமிழுக்குத் தலைவணங்கவில்லை என்றால் நான் வணங்கும் அகஸ்தீஸ்வரன் அகஸ்தீஸ்வரனல்ல! மங்களாம்பிகை, அமங்களாம்பிகையாய் விடுவாள்!” 

குறிஞ்சியின் நிலை இப்போது மிக்கவும் அறத்துன்பம். ஒருபுறம் ரசிகை பாரதியின் சபதம். இப்போது… 

ஆனைய்யா என்கிற இசை அரிமாவின் சபதமா? குறிஞ்சி இன்னமும் பல்லவி கோபாலய்யா என்கிற மாமேதைக்கு மரியாதையளித்துச் சொன்னாள்: “பல்லவி சக்கரவர்த்தி! நான் ஏற்கிறேன்!” 

இப்படிக் கூறியதும் அவையில் ஒரே எழுச்சிக் குரல்கள்… 

குறிஞ்சி மேலும் சொன்னாள்: 

“நீங்கள் பெரியவர், நீங்கள் முன்னே பாடி நான் பின்னே பாடக் கூடாது. இப்போது சொல்லுகிறேன். உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் சத்தியமாக எனக்கு இல்லை. என் வணக்கத்துக்குரியவர் நீங்கள். நான் முதலில் பாடுகிறேன். செவி சாயுங்கள். என் வித்வாம்சத்தில் குறை இருப்பின் நீங்கள் “ராகம், தானம், பல்லவி பாடலாம். அது திருவிதாங்கூர் கோவிந்த மாராரை மீறி இருப்பின் உங்கள் தாள் பணிந்து எனது தோல்வியை ஒப்புக் கொள்வேன். ஆனால் ஒன்றை மீண்டும் சொல்வேன். ‘எந்தரோ மகானுபாவுலு’ என்று தியாக பிரம்மமே பாடி விட்டார்! எவரிடம் எந்தப் புலமை எப்படி இருக்குமோ?” 

“எவரிடமும் அது இருக்கலாம்; உன்னிடம் அது இல்லை. உன்னிடமிருப்பது மக்களை மயக்கும் தமிழில் பாடும் சக்தி மட்டுமே! நீயே முதலில் உன்னிஷ்டம் போலப் பாடலாம்!” 

குறிஞ்சியும் ஞானசுந்தரமும் அரங்கேறிக் குந்துகிறார்கள். 

அமர்க்களமான கைதட்டல்கள். 

தம்பூர் சுருதி கூட்ட… 

கோபாலய்யர் ஒரு தடையை எழுப்பினார். 

“பக்க மேளங்கள் எங்களுடையனவாக இருக்க வேண்டும்.” 

ஒரு கணம் யோசிக்கிறாள் குறிஞ்சி. 

“ஆட்சேபணையில்லை.” 

அந்த நாளைய அரசுக் கலைஞர்கள் அரங்கம் நிறைந்து வாத்தியங்களுடன் அமருகிறார்கள். மிருதங்கத்தில் நந்தி எனப் புகழ்ப்பெற்ற தஞ்சை நரேந்திரன்; கடம் போலகம் சிதம்பரய்யர்; கிஞ்சிரா ராதாகிருஷ்ணய்யர்; பிடில் வெங்கடாசலமய்யா; முகர்சிங் மோகனதாசர். 

*ராகம், தானம், பல்லவி என்பது இசை இலக்கணத்துச் சிகரப் பயிற்சி. இதில் ஒருவர் முற்றுமாகத் தேர்ந்து விட்டால் அவர் இசை மாமேதை. என் குருநாதர் சித்தூர்ப் பிள்ளை 8-களைச் சவுக்கத்தில் பல்லவி பாடி நானும் மதுரை சோமுவும் கண்டு சிலிர்த்து வியந்திருக்கிறோம். எங்கள் குருவுக்குக் குருவான லயப்பிரும்மம் காஞ்சி நைனாப்பிள்ளை 16-களைச் சவுக்கத்தில் பாடுவாராம். அதுமட்டுமல்லாது சிம்மநந்தனத் தாளம் தெரிந்த ஒரே இசைமகான் அவர் என்றும் சொல்லுவர். திருப்புகழுக்குத் தாளங்கள் கண்ட திருமகன். 

குறிஞ்சி, குறிஞ்சியாகச் சிரிக்கிறாள். “ராகமும் நீங்கள் குறிப்பிட்டதைத்தான் பாட வேண்டுமா? இல்லை, இந்தப் பெரிய தர்பாரில் தர்பார் ராகமே படுமா?” 

“தர்பாரே தர்பார் நடத்தட்டும்.” 

பல்லவி கோபாலய்யர், தமது தர்பாரைக் காட்டினார்.

அமைதியைக் கிழித்துக் கொண்டு தம்பூர் தர்பாராய் ஒலிக்கிறது. 

*கஞ்சிராவை கிஞ்சிரா என்றுதான் வரலாறு பேசுகிறது. 

இராகம் – 23

இராகம் தானம் பல்லவி

ரீ.. ரிமபதநிசா; மபதநிச்ரீ… ரீ… கக்காரிச்…ரீ… எடுத்த எடுப்பில் ஞானசுந்தரமே தொடங்கியச் சுரப் பிரயோகம்… 

தொடர்ந்து குறிஞ்சியின் குயில் நாதம்… 

க்க்காரிச்; கக்காரிச்; க்க்காரிச்சா… 

மும்முறை தர்பாரின் கன்னத்திலேயே அடிப்பது போன்ற தர்பார் ராக மூர்ச்சனை… 

இதே மூர்ச்சனையை ஞானசுந்தரம் தொடர்ந்தும் இணைந்தும் மத்தியஸ்தாயியில்… 

இருவருமே மாறி மாறி… 

பல்லவி பாடுவதன் ஆரம்பமா இது?

“இதுதானே அவர்கள் தமிழ்ப்பாணி? 

மபதநிச்பா… ரிமபதநி… ககரிச் ககரிசா… க்காக்ரிச்…

நிச்ரிக்க்கா… ரிச்; 

*இந்தப் பாணி இன்றைய தக்கனச் சங்கீதத்தில் அரும்பி தமிழில் தலைதூக்குமேயானால் எதிர்கால சங்கீத உலகம் பொற்காலமாய்த் திகழும் என்கிற ஆசையினால் அறையலுற்று இப்புதினத்தை எழுதுகிறேன். நிறைவேறுமா? 

ரிச்ரிகக்காரிச… 

என்று சுருதியில் நிற்கிறபோது- 

சரபோஜியின் தர்பாரே அதிர்ந்து கைதட்டல்கள்…. 

அமைதி நிலவியதும் ஞானசுந்தரம் சரிமபதநிசா…” என்று ஆரோகணிக்க… 

குறிஞ்சி, ச்நிசதபமரி ககரிசா’ என்று அவரோகணித் ததும், தர்பார் ராகத்தை வக்கரித்தும் தணித்தும் பாடத் தொடங்குகிறாள் அழகின் தர்பாரான குறிஞ்சி. 

இது என்ன புதியமுறைத் தொடக்கம்? 

குறிஞ்சி தர்பாரா பாடினாள்? தர்பாரல்லவா குறிஞ்சி யிடம் தஞ்சம் புகுந்து, ‘கக்கரிக்’கிறது; கொக்கரிக்கிறது! 

அடிக்கடி எழும்புகிற கரவொலியைக் கேட்டு, கனிப் பொலியா? கற்கண்டொலியா? என்று கண் பிதுங்குகிறார் கள் கானகலா பூஷணங்கள்! 

அட்சரங்கள் மட்டுமா பாராட்டின? நிரட்சரங்களும் பாராட்டின! 

ஓ… இதுதான இசைக்கலையோ என்கிற ஞானோதயம் சரபோஜிக்கு மேலும் பளிச்சிடுகிறது. 

ஆ! இவள் என் காதலி! என் மனைவி!- இளவரசன் சிவாஜிக்குப் பித்தம் தலைக்கு ஏறுகிறது! 

அந்தத் தர்பாரை – சரபோஜியின் தர்பாரைக் கிடு கிடுக்க வைக்கிற அளவுக்கு ராகம் பாடுகிறாள்; தர்பாரையே பிழிந்து அமர்த்துகிறாள். 

பல்லவிக்கு உரியன, ராகம், தானம், பல்லவி! 

ராகம் என்பது இலக்கணத்து எழுத்ததிகாரம் போல!

தர்பார் ராகமா அது? 

சரபோஜி தர்பாரைக் காக்க ஆலாபனை செய் கிறாளா? கவிழ்க்க ராகம் பாடுகிறாளா? இப்படி ஒரு தர்பார் ஆவேசமா? 

கரகரப்பிரியா ராகம் பெற்றெடுத்த துக்கிரியான வக்கிர புத்தி படைத்த பிள்ளைகளுள், அழகிய ஆண்மை படைத்த கம்பீரக் குழந்தையல்லவா தர்பார் ராகம்! இல்லையென்றால் தர்பார் செலுத்த முடியுமா? பொதுவில் தர்பாரிலிருப்பவர்களுக்கே வக்கிரபுத்தியுண்டு என்பதன் உதாரணக் கொக்கரிப்பு இந்த ‘கக்கா’ரிப்பு! 

வக்கரிப்பிலும் குறிஞ்சியின் சுருதிசேர்ந்த கொக்கரிப்பில் மேலும் வக்கரிப்பு கண்டு பாட… 

மரபின் அழகும், அலங்காரமும் குறையாமல், அதுவரை சொல்லி வந்த சுகத்துக்கு மீறிய, ‘புதியன புகுதல்’ என்ற சுந்தர வரிக்கு மீறிய, சொர்க்கப் புதுமை என்பது இதுதானா? 

நாம் தமிழில் தான் எழுதுகிறோம். சிலப்பதிகாரம் முதல் இந்தக்காலம் வரை சில விழுக்காடு சமஸ்கிருதத்தைச் சேர்க்கவில்லையா? 

அந்தச் சொர்க்கச் சுகப் புதுமை இது! சுந்தரத் தமிழ்ப் புதுமை இது! 

‘தனித்தமிழ் எழுச்சி மரபு என்பது புலவர்க் குழாமுக குரியது. மாறுபடுகிறபோது மக்கள் குழாமிடம் போய் சேருகிறது. குறிஞ்சி மக்கள் குழாமின் மணித்தமிழ் படைத்த மாமகள்! எனவே மரபலங்காரத்திலிருந்து சின்ன திசை திருப்பம்! திசைகள் அவளது திருநாமத்தைத் தெரிந்தது; புரிந்தது; போற்றியது போலும்!” என்று அன்றைய ஆஸ்தான தமிழ்ப் புலவரான கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எண்ணிப் பார்த்தார். 

ராகம், தானம். *பல்லவியில் ராகம் பாடுவது தனனா என்று பாடுவது – ஆதி தமிழிசை மரபு.

‘தானம்’ பாடுவதும் ஓர் இனிய முறை. சொர்க்க சுகம். 

*முகநிலை, கொச்சம், முரியென மூன்று பிரிவுகளைப் பற்றி பண்டைத் தமிழ் இலக்கணம் பேசுகிறது. 

† ‘தென்னா தெனா என்று’… ஆளத்தி (ஆலாபனை) வகை’ – என்பது அடிபார்க்கு நல்லார் மேற்கோள். 

பதினைந்து விதமான கமகங்களைச் சுரப்பூக்கோலமிடும் இசை வண்ணச் சித்திரம். ராகம் என்பது எழுத்ததிகார மானால் தானம் என்பது சொல்லதிகாரம்! 

‘தா. அ. நம்’ என்று பிரித்து, ‘தனம்’ என்கிற தெய்வீக நிலை அது! 

குறிஞ்சி,தானம்தான் பாடுகிறாளா ? அல்லது இசையைத் தானமாக வழங்குகிறாளா? உங்கள் தனம் என் இசைக்கு ஈடாகுமா என்று கேட்கிறாளா? தனமிலாப் பெண்கள் அழகின் தரித்திரிகள் என்று மார்பகத்தை நிமிர்த்திப் பாடுகிறாளா? 

ஆ! குரலின் சுநாதமா? இல்லை வீணையின் நாதமா? கண்டுபிடிக்க முடியவில்லையே! 

தானம் பாடி நிறுத்தி, ஸ்ரீ ஆச்சார்யாள் பெருமாளைத் தியானிக்கிறாள்: “சுவாமி! என் வெற்றிக்கு ‘ததாஸ்து’ கூறுங்கள் !… ஏ. பிரத்தியங்கிரா தேவி!”… 

‘பல்லவி’ என்பது பொருளதிகாரம் போன்றது. 

எடுப்பு, அறுதி, முடிப்பு என்பன போன்ற பல இலக்கணங்கள். 

இதிலும் அவளுடைய மரபு வழுவா அலங்கார மீறல் கள்… 

பல்லவி பாடுதல் என்பதே செவி சாய்ப்பவருக்கு அலுப்பு தரக்கூடிய ‘தொல்காப்பியக் கடினம் போன்றது. 

தியானத்தை முடித்து… 

பல்லவியின் வரிகளை ஆரம்பிக்கிறாள்… 

*திருபம், கம்பிதம், ஸ்புரிதம், லீனம், ஆந்தோளிதம், வலி, திருபின்னம், குருளம், ஆகதம், உல்லாசிதம், பிலாவிதம், கும்பிதம், முத்திருதம், நாமிதம், மிகருதம் ஆகிய 15 கமகங்கள் இல்லையேல் அது சர்க்கரையில்லாத சங்கீதம். மேலை நாட்டு மொட்டைச் சரங்களாக நமது சங்கீதம் பரிணமித்து இருக்கும். இந்த இலக்கணங்கள் தோன்றிதே தமிழ்நாடு (தேவாரப்பாடல்கள்) என்கிறார் ‘ரத்தினாகரம்’ எழுதிய சாரங்கதேவர். 

*இன்றை ‘தொல்காப்பியம்’- பழைய (கி.மு.5000) தொல்காப்பியமே! ஆயினும் அதன் தமிழ் நடை சங்ககாலத் தமிழாகத் தெரியவில்லை. “இந்திர’த்துக்கு இதில் அவசியமில்லை. ஆய்ந்து வருகிறேன். 

என்ன வரிகள்? 

“தமிழ், முருகன் தந்த தமிழ்! இனிய தமிழ்; இசைத்தமிழ்; குற்றாலக் குறிஞ்சித் தமிழ்!” 

தமிழ் எடுப்பு… 

குற்றாலக் குறிஞ்சித் ‘தமிழ்’- அறுதி!
முடிப்பு என்ன? 

‘வற்றாமல் வாழி! வளமோடு வாழி! வானோங்க வாழி!”

வலிமைமிக்க, அசாதாரண அல்லது அசாத்திய பல்லவி.

பல்லவி கோபாலய்யா பதறிப் போனார்; மனம் சிதறிப் போனார்; உடல் உதறிப் போனார். எல்லோருமே, எல்லாமே தெலுங்கு, கன்னட தேசத்து ஆஸ்தான இறக்கு மதிகள்! தமிழைக் கண்டு தடுமாறின. 

ஆனைய்யாவும் தஞ்சை சகோதரர்களும் கண்ட அக மகிழ்ச்சிக்கு எல்லை எது? 

என்ன தாளம்? 

சிம்ம நந்தனம் என்கிற ஆண்மைமிக்க சிங்கத்தைப் பய முறுத்தவல்லதல்லவா சரபநந்தன தாளம்! பாடுவது சரப் நந்தன தாளம்! 

சிங்கத்தையே மருட்ட தக்கதல்லவா சரபம்? எட்டு கால்களுடைய பறவையாயிற்றே! நந்தனமாகி இந்திரன் பூந்தோட்டம் போன்ற விசாலமான தாளமாயிற்றே! 

சரப நந்தன தாளம் 19% மாத்திரை கொண்டது. ஓர் ஆவர்த்தனத்துக்கு 79 அட்சர காலம் கொண்டது. இதில் சோடசாங்கத்தையும் உபயோகப்படுத்துவதென்றால்? 

மூன்று காலம் பாடுவதென்றால்? 

திஸ்ரம் செய்வதென்றால்? 

அனுலோமம் பிரதிலோம சாதனைப் புரிவதென்றால்?…

*செய்தாள்; செய்து முடித்தாள்; செம்மை சேர் தமிழுக்குச் சிறப்பளித்தாள்! சரபோஜி அரண்மனையின் ‘ஓகோ’ வென்ற பாராட்டுக்களைச் சீதனங்களாகவும் பெற்று விட்டாள். 

ஆனால் பக்கவாத்தியக்காரர்கள்? 

மூச்சுத் திணறிப்போயினர் ! விக்கி விதிர்த்துப்போயினர்! பல இடங்களில் பதவிசாக அமர்ந்தும் விட்டனர். சரப நந்தனமா? சண்டமாருத பந்தனமா? 

உருப்படியாக குறிஞ்சிக் குழுவை உபயோகித்து இருக் கலாமே! பழக்கப்பட்டவர்கள்; பல்லவியும் இன்னும் வல்லபமாய் முழக்கப்பட்டிருக்குமே! 

அத்துடன் விட்டாளா? விடுவாளா? விடத்தான் முடியுமா? 

இராகமாலிகையில் பாடி தமிழுக்கு ராகங்களை மாலை களாக அணிவிக்கிறாள். 

தர்பார் ராகம் அரசனுக்குரியது. அதிகாரிகளை கெளரவித்து மாலையணிவிக்க வேண்டாமா? 

இராகமாலிகையை ஞானசுந்தரமும் குறிஞ்சியும் ஒவ்வோர் ராகமாகத் தேர்ந்தெடுத்து, ‘தமிழ் முருகன் தந்த தமிழ்!’ என்று பல்லவியை ஆரம்பிக்கிற போதெல்லாம், தமிழே கற்காலமாகிவிட்ட அந்தக் காலத்தில், தமிழ்த் தாயே எதிரே நின்று வாழ்த்துகிறாள். 

இந்த இடத்தில் அவர்கள் அபூர்வ ராகங்களைப் பாட வில்லை. வழக்கிலிருந்த ராகங்களைப் பாடினர். 

அத்துடன்… 

தான் யார் என்பதைக் காட்ட சங்கீத சேட்டையும் செய்கிறாள். 

சங்கரனுக்கே ஆபரணமான சங்கராபரணத்தைப் பாடி. சுருதிபேதம் செய்து பல்லவியை அதே சுருதியிலிருந்து ஆரம்பிப்பாளோ? என்ன துணிவு?’ சின்ன வயதுக்குரிய ஞானமா இது? செயல்படக்கூடிய செயலா இது? 

சங்கராபரணத்து சம்பூரண சுரங்களில், ‘ரி’ என்கிற ரிஷபத்தை சட்சமமாகக் கொண்டும், காந்தாரத்தை சட்சமமாகக் கொண்டும் மத்திமம் வரை சட்சமமாகக் கொண்டு வந்த மூன்று புதிய ராகங்களில் தமிழை ஆராதிக்கிறாளே! ஓ… குறிஞ்சி… குறிஞ்சி… 

இதுவரை வழக்கிலுள்ள ராகங்களை மாலிகையாகத் தொடுத்தவள், குற்றாலக் குறிஞ்சி என்கிற அபூர்வ ராகத்தை அவளது கண்டுபிடிப்பு ராகத்தை ஆலாபித்த போது… 

பத்திரக்காளி பிரத்தியங்கிரா தேவி மந்திரத்தை ஸ்ரீ ஆசார்யாள் உபதேசித்த மந்திரத்தை உச்சாடனம் செய்து ஆலாபித்த போது… 

இது என்ன ராகம் என்று கேள்விக் குறியை எழுப்பிக் கொள்ளாதார் யார்? 

இந்தக் கேள்விக் குறிகளுக்கு அவளே பதில் சொல்ல அந்த ராகத்துச் சுரம்பாடி, அதுவரை ‘முருகன் தந்த தமிழ்’ என்று சொல்லி வந்தவள், குற்றாலக் குறிஞ்சித் தமிழ்’ என்று கூறவே மலைத்தனர். ஆனால் பாராட்டுக் குரல் களை எழுப்பவில்லை. காரணம் மயங்கியே போயினர். எங்கே கரவொலி எழுப்ப முடியும்? 

குற்றாலக் குறிஞ்சி பாடினால் கொள்ளை இதயமே மயங்கியபோது, வெள்ளை இதயங்கள் மயங்கியதற்குச் சொல்ல வேண்டுமா? 

அல்லல் போம்; வல்வினை போம், அரசியல் வயிற்றில் பிறந்த தொல்லை போம்’ என்று அரசியலையே மறந்து அந்தக் கலையரசியின் நிழல் பற்றித் தொடர்ந்த நெஞ்சங்கள் நினைவிழந்து கிடந்தன. 

கொடுமை வாய்ந்த கும்பினியர்களோ, கும்பிடத்தக்க ‘வீனஸ்’ தெய்வம் இவள் என்று விழி மறந்து, ஆங்கில மொழி மறந்து, தமிழ்மொழிச் சிறப்பின் தவத்தில் மூழ்கிப் போயினர். 

சங்கீத மகாவித்துவான்களோ, மூச்சுவிடத் திணறி மயங்கினர். 

பல்லவி கோபாலய்யாவோ, மெய்மறந்து, மேனி சிலீர்த்துப் போனார். பொய்யற்ற சங்கீதம் கண்டு பொங்கிப் புளகித்துப் பூரித்தார்; அந்த நேரத்தில் வாரித்த பொறாமையை எண்ணி அந்த மயக்கத்திலும் வருந்தினார். 

குறிஞ்சி பல்லவி பாடி முடித்துக் கையெடுத்துக் கும்பிட்டு வணங்க… 

கரகோஷமா? குரல்கோஷமா?’ மயக்கத்தில் மலைத்துப் போன பிறகு கோஷமாவது? போலி ரசனையான வேஷ மாவது? 

ஒரே நிசப்தம்… 

ஆனைய்யா மட்டும் தம்மை மறந்து எழுந்து அரங்கம் நாடிச் சென்று குறிஞ்சியைச் சேர்த்துக் கட்டிக்கொண்டு. நீ புலைச்சியல்ல; மகளே ! கலைச்சி! வியாக்கியானத்துக்கு எட்டாத அந்த வேத ரூபிணி! ஏ, மங்களாதேவி! உன்னை அமங்களா என்று ஆத்திரத்தில் கூறி விட்டேன். என் கோபத்தைத் தீர்த்துச் சங்கீத சாபத்தைத் தீர்த்தாய்! சபதத்தை நீத்தாய்! வணங்குகிறேன் தாயே! நீயே மங்கள நாயகி! இந்தக் குறிஞ்சி ரூபத்தில் பிறந்து இருக்கிறாய்!” என்று கூறி ஆற்றியாற்றி மகிழ்ந்து பெருமை கொள் கிறார். 

தொலைவிலிருந்த விருபாட்சக் கவிராயர் மகிழ்ந்து போனார். 

பல்லவி கோபாலய்யா எழுந்து வந்து, “மகளே! குறிஞ்சி! நீ எனக்கு மகளாகப் பிறந்து இருக்கக் கூடாதா? நான் கொண்ட ஆணவத்துக்கும் பொறாமைக்கும் பொறுக்க முடியாத ஆற்றாமைக்கும் அடுத்த பிறவியில் உனக்கு நான் மகனாகப் பிறந்து பிராயச்சித்தம் தேடுவேன்!” என்று கூறிக் கண்ணிர் மல்கிக் கரம் கூப்ப… 

“ஐயோ! சங்கீத சக்கரவர்த்தி! நீங்கள் எனக்குக் கரம் கூப்புவதா? இப்போது மட்டுமென்ன? இன்று முதல் நான் உங்கள் மகளே!” 

“அருமை மகளே! ஏற்கிறேன்! கலைகளுக்கு ஜாதி யாவது? இனமாவது? ஆனால் கலைகளுக்கு ஒழுக்கம் கிடையாது. இந்த விஷயத்தில் நீ சம்பூரணமாகவே இருக்க வேண்டும்!” 

என்ன வார்த்தை சொல்லி விட்டார் கோபாலய்யா? ஆசார்யாள் சொன்ன பாஷாங்கம் நினைவுக்கு வருகிறது… 

ஞானசுந்தரத்தை நோக்குகிறாள். இதற்கு அர்த்தம் சொல்ல வேண்டியவன் அவன்தான்! ஓ. என்னே சோதனை?… 

அந்த நேரத்தில்… 

அவளது காலடியில் ஏதோ சில்லிடுவது போன்ற உணர்வு… 

குனிந்து பார்த்ததில் ரசிகை பாரதி. 

கண்ணீரால் காலைக் கழுவுகிறாள். 

அவனை எழுப்பி நிற்கச் செய்த குறிஞ்சி, “அடி பெண்ணே! நீ சபதமிடவில்லையென்றால் என்னை இவர்கள் புரிந்து கொண்டிருக்க முடியுமா?” என்று கூறி அணைத்துக் கொள்கிறாள். 

பல்லவி கோபாலய்யா, பாரதியின் தோள்களைத் தடவி, “நீ பாரதியல்ல! என் கண்களைத் திறக்க அந்தப் பராசக்தி பாரதி அனுப்பிய பாரதி!” என்றார். 

அரண்மனையில் அன்றைய விழாவும் விருந்தும், மல்லிகைப் பந்தலிட்டு, மகிழம்பூத் தோரணம் கட்டி, துல்லிய குறிஞ்சிக்குத் தோத்திரங்கள் பல பாடி, ராஜோப சாரத்தில் ரோஜா நகை புரிந்து விடைதந்தன. 

குறிஞ்சிக் குழுவினர், காளையார் கோயில் நோக்கிச் செல்லுமுன், ஒருநாள் ஒருத்திநாட்டில் ஓய்வு கொள்ள லாமே என்று எண்ணினர் 

அந்த ஒரு நாள் என்பது விதியின் ஒப்பந்தம்…

ஆனால் இளவரசன் சிவாஜி? 

காதலோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தால் கண்ணீர் மல்கத் தொடங்கி விட்டான். 

இராகம்-24 

சல்லாபம்

ரவிராசனை வணங்கி வழியனுப்பு விழா நடத்திய இராக்கன்னி, நட்சத்திர விருந்து நடத்திக்கொண்டிருக்கிறாள். 

ஒருத்தி நாட்டையடைந்த குறிஞ்சிக் குழுவினர், குறிஞ்சி மாளிகையடைந்ததும், வழக்கம் போல மக்கள் சூழ்ந்து வணக்கம் செலுத்துகிறார்கள். 

ஒரு காலத்தில் சரபோஜி மன்னரின் அருமைக் காதலி முத்தாம்பாளால் புகழ் பெற்ற அந்த நாடு, இப்போது குறிஞ்சியால் குன்றின் மேல் ஏற்றிய தீபமாய் பிரகாசம் கண்டிருக்கிறதல்லவா? 

வாத்தியக்காரர்கள் அவரவர் இல்லங்களுக்கு விடை பெறுகிறார்கள். தேவை என்கிறபோது அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதால், எல்லா வாத்தியக்காரர்களுக்கும் வீடுகளை வாங்கிக் கொடுத்து அங்கேயே வசிக்குமாறு செய்த ஏற்பாடு, ஞானசுந்தரத்தைக் கையெடுத்துக் கும்பிட வைத்தது. காரணம், அவர்களது ஒருகண் கூட, துளிநீரைச் சிந்தக் கூடாது என்பதற்கிணங்க பல வசதி களைச் செய்து கொடுத்திருந்தான். 

ஏழைமை சொல்லி தந்த பல்வேறு இலக்கணங்களைக் குருகுல வாசத்தில் கண்டவனல்லவா? வறுமையெனும் இலக்கியம்,கொடுமையெனும் அதிகாரங்களைக் கொண்டு கண்ணீரால் எழுதப்பட்டது என்பதை அவன்தான் அறியா தவனா? இல்லை குறிஞ்சிதான் அறிய மாட்டாளா? 

குறிஞ்சி மாளிகையின் பூட்டை விருபாட்சக் கவிராயர் திறக்கிறார். 

ஞானசுந்தரத்து இதழ்களில் கோணல் சிரிப்பு. “இது என்ன புது சிரிப்பு?” 

மெல்லிய குரலில் குறிஞ்சி ஓசைபடாது கேட்க, ஞான சுந்தரம், “நமது கனவுப் பூட்டையும் திறந்துவிட்டால் என்ன என்று தோன்றியது; சிரித்தேன்!” என்றான். 

“சீ…சீ..!” 

விருபாட்சக் கவிராயர் உள்ளே சென்றார். 

இருவரும் தொலைவில் நின்ற மக்களை வணங்கி விடை கொடுத்து மாளிகையினுள் நுழைத்தனர். 

அன்றைக்கு முழுவதும் அவர்கள் ஓய்வில் உறக்கம் கண்ட னர். மெளனமாய் எழுதப்படும் கவிதையல்லவா ஓய்வு! இலட்சியங்களை விதி சோதிக்கும் என்பது போல அவர்கள் இலட்சியக் காதலர்கள். அந்த இசைப் பறவை களுக்கென பல இலட்சியங்களிருப்பினும், சிலவற்றை உறுதியாகக் கடைப்பிடித்தனர். இந்த உறுதி ஒவ்வொரு நல்ல கலைஞனுக்கும் இருக்க வேண்டியது. 

மேம்படுத்திப் பேசுகிற போது மெய்ச்சிலிர்த்துப் போய் விடக்கூடாது. அதுபோலக் கீழ்படுத்திப் பேசுகிற சீழ் பிடித்த பொறாமைகளுக்கு உணர்ச்சி வயப்பட்டுவிடக் கூடாது. புகழ்ச்சியும் இகழ்ச்சியும் புவனத்துப் பாதி பாதி சித்தாந்தங்களைப் போல! இரவு-பகல்: இன்பம்-துன்பம்; அறிஞன்- அறிவிலி போல! 

இந்த உறுதியை அவர்கள் திருவாரூரில் முத்துசாமி தீட்சிதர் வீட்டில் குருகுலம் இருக்கிறபோதே ஏற்றுக் கொண்டு விட்டவர்கள். ஆனால் அவர்களது நல்வினைப் பயன், இதுவரை அவர்களை யாரும் இகழ்ந்து பார்க்க வில்லை. இதுவே விதிக்கு ஏற்பட்ட வேதனையோ? 

இரண்டாம் நாள்… 

இரவிப்பிரகாசன் புனிதாய் உதயம் கண்டு, நனிதாய் உச்சியடைந்து, இனிதாய் இரவு அத்தியாயம் எழுதிவிட்டு விடைபெற்றான். 

மேலே தொங்கும் கண்ணாடிப் பேழை விளக்குகளில் மெழுகுவத்திகள், தியாக (உருகி) ராகம் பாடி ஒளி நர்த்தனமிடுகின்றன. 

மாளிகையின் கீழ் அறையில் உண்டு முடித்த விருபாட்சக் கவிராயர், தமக்கே பிடித்த கம்பராமாய ணத்தில் மூழ்கி இருந்தார். கம்பராமாயணம் என்பது கற் கண்டு மலைக் காப்பியமாயிற்றே! 

மேன் மாடத்துச் சயன அறையில் ஞானசுந்தரமும், குறிஞ்சியும் மன்மதாயணத்து முதற்காண்டத்து முதற் படலத்தைப் படிக்க முயன்று கொண்டிருந்தனர். அந்தச் சுந்தரமான ஒப்பந்தத்தில் குறிஞ்சி மலர்ந்தே ஆக வேண்டும் என்பதுபோல ஞானம் துடித்துக் கொண்டிருந்தான். 

எந்தப் பசியையும் அடக்கலாம்: இளமைப் பசி என்பது அடங்கா அகோரப் பசியாயிற்றே! அந்தக் காம விருந்தினை இவர்களல்லவோ காலத்தை எதிர்பார்த்துப் புறக்கணித்து வருகிறார்கள்! ‘அநியாயமாகப் போடும் பட்டினி இது’ என முடிவு செய்துவிட்டான் ஞானசுந்தரம். இந்த இறுக்க மான புழுக்கத்தை எத்தனை நாட்களுக்குத்தான் கட்டுப் படுத்துவது? இது என்ன விரதமா? 

குறிஞ்சியின் இதயத்தில் மட்டும் இந்தத் துடிப்பு இல்லையா என்ன? துடிப்பில் என்ன ஏற்றத்தாழ்வு… 

கீழே விருபாட்சக் கவிராயருடன் கம்பன் பேசிக் கொண்டிருந்தாலும், அவனது ஆணவத் தமிழ்க்குரல் மேலே ஒலிக்கச் செய்தது. 

பொற்பில் நின்றது பொலிவு… 

பொய்யிலா நிற்பில் நிற்கிறது நீதி… 

ஓ… மாதுவே அற்பில் நிற்கலாமோ அறங்கள்’ கற்பில் நிற்க வேண்டியதல்லவா? 

காலமறிந்து பெய்ய வேண்டிய மழையைப் போன்ற தல்லவா கற்பு? 

“வேண்டாம் சுந்தரம்? இந்த மழை, காலத்தோடு பெய்யட்டுமே!” 

வாதாடுகிறாள் குறிஞ்சி. 

“இனியும் நான் காலத்தை நம்பி எதிர்பார்த்தால் வரப் போவது காலமல்ல; காலன்!” 

“ஞானீ !” 

அதிர்ந்து போனாள் அமுதத் தமிழழகி குறிஞ்சியெனும் கோதை நல்லாள். 

முந்திய குறிஞ்சி வேறு; இப்போதைய குறிஞ்சி சற்று மேலே… 

எனினும் ஞானசுந்தரத்தின் பாதம் நாம் என்பதை என்றுமே அவள் மறந்தாளில்லை. 

அபிராமிபட்டர்… 

தியாகய்யர்… 

கோபாலகிருஷ்ண பாரதி… 

ஆனையா… 

பல்லவி கோபாலய்யா… 

இவர்கள் உதிர்த்த சொல் மலர்கள்… 

எல்லாவற்றையும் எரிப்பன போல குறிஞ்சி சொன்ன சொற்கள்… 

“இதோ நான் சம்பூரணமாக நிற்கிறேன் ஞானீ! இப்போது சொன்ன சொல்லை இனியொருமுறை சொல்ல
வேண்டாம்! உங்களிஷ்டம் போல என்னை ஆராதிக்க லாம்: ஆலாபிக்கலாம்; சுருதி பேதம் செய்யலாம்! நாமிரு வரும் பிறந்த மேனியர்களாகப் படுத்துத் தூங்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். ஏன், மறுத்தேன்? நிச்சயமாக அப்படியே பொழுது விடிந்து விடாது. நீங்களும் விடிய வைக்க மாட்டீர்கள். நானும் விடிகிற வரை காத்திருக்க முடியாது! இதோ நானே முன் வருகிறேன்!” 

இட்டடி நோக, எடுத்தடி கொப்புளிக்க, கட்டில் மருங் கசைய அவன்முன்போய் நின்றாள்; அவன் நினைத்தது போல் அணைத்தாள்; மார்போடு மார்பொன்றி மகிழ்ந் தாள்; மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருந்தாள். 

குறிஞ்சிக் கண்களும் ஞானக் கண்களும் கூர்ந்து கவனிக்கின்றன; கூரிய மூக்குகள் ஒன்றோடு ஒன்றாய் உரசுகின்றன. அடுத்து… 

நான்கு அதரங்கள் ஓரதரமாகிறது. 

எவ்வாயோ செவ்வாய் என்று இனம் காண முடிய வில்லை… 

முத்த மழையில் காமவர்த்தினி ராகத்தின் ஐம்பத் தோராவது மேளம் அதிகார இடி முழக்கம் செய்தாலும், அதனையே திருப்பிப் போட்டால், பதினைந்தாவது மேள கர்த்தாவான மாயாமாளவ கௌளை ராகத்து மின்னல் தெறிக்கிறது. 

இசைப் பயிற்சியின் ஆரம்ப ராகமல்லவா மாயாமாளவ கௌளை? வாழ்க்கைப் பயிற்சியும் அதில் ஆரம்பமா கட்டுமே என்று மின்னுகிறதோ? 

அவன் அவளது மேலாடையைத் தொடுமுன், கௌளை ராகத்துக் கௌரவம் போல அது தானாகச் சரிந்துவிட்டது. 

இப்போது அங்கே தலையை நன்றாகவே நிமிர்த்தியது சல்லாப ராகம்! அது அவர்களுடைய தேகங்களைச் சல்லடையாகத் துளைக்கவும் செய்தது; சலிக்கவும் செய்தது. 

மேலே தொங்கும் கண்ணாடிப் பேழை விளக்கில் இரட்டை மெழுகுவத்திகள். ஏனோ அவர்கள் அறையில் மட்டும் இரட்டை மெழுகுவத்திகள். அப்படி ஒரு மனநிலை யில் ஆரம்பித்திலிருந்தே கடைபிடித்தார்கள். இரண்டும் ஒன்றாக உருகி ஒளி தருவன போல! இருவருமே ஒன்றாக உருகி இசை தர இந்த ஏற்பாடோ? 

மெழுகுவத்திகள் இரண்டும் அலைமோதுகின்றன; உருகி ஒளி தருகின்றன. 

தைப்பாவையாம் தமிழ்ப்பாவைத் திங்களை எதிர் பார்த்த மெய்ப்பாவைகள், இன்று… அதோ… ஒலித்துக் கொண்டிருக்கும் சல்லாப ராக மகிமையால் காமப் பொய்ப் பாவையாகி விடுவார்களோ என மெழுகுவத்திகள் அலை மோதி உருகுகின்றனவோ? ஒளி தருகின்றனவோ? 

அவன் அவளையுமாக, அவள் அவனையுமாக… தேகம் செய்கிற தவறுகளுக்கு ஆன்மா காரணமாகாது என்று பகவான் கீதையில் சொன்னது போல… இந்தத் தேகமே ஓர் ஆடை என்று சொன்னது போல… 

ஆடைகள் ஒவ்வொன்றாக நழுவித் தரையில் தவழத் தொடங்குகின்றன… 

மெழுகுவத்திகள் முடிவு செய்துவிட்டன. 

ஆண் மெழுகுவத்தி என்று நிச்சயித்தது சல்லாப ராகத்து ஆரோகணத்தைச் சொல்கிறது. 

சகமதநிச்… 

பெண் மெழுகுவத்தி அவரோகணம் சொல்கிறது…

ச்நிதமகச… 

மெழுகுவத்திகள் சொன்னதால் அங்கேகமகங்களில்லை. பாட வேண்டியவர்கள் இன்னமும் முத்த மழையில் மௌனமாக நனைந்து கொண்டிருக்கிறார்கள்… 

சல்லாப ராகத்தை ஈன்ற தாய் ராகமான பரணம் உத்தரவு தரவில்லையோ? 

வகுளா வகுளாபரணம் என்றாலே மகிழம்பூ மாலை. அது மன்மதன் மார்பை அலங்கரிக்க வேண்டியதுதானே? 

மகிழ்ச்சியைத் தூண்டவல்ல அந்த மாலை, இப்போது தான் காதலர்கள் இருவர் கழுத்துக்களையும் அலங்கரிக்கத் தொடங்குகிறது… பிறகு… 

நிசி இரவு, ருசி பார்க்கும் பசி இரவாகிறது…

சல்லாப ராகத்து மூர்ச்சனை கேட்கிறது. 

இந்தோளம், சாதாரண காந்தாரத்தால் இனிமை பயந்து பெண்ணைப் போல் இனிப்பது. அதுவே அந்தர காந்தாரமானால் சல்லாபம்! ஆண்மையின் கம்பீர மல்லவா அந்தர காந்தாரம்? 

இந்தோளமாக இருந்த குறிஞ்சி, அந்தர காந்தாரத்துக்கு அடிமையாகி சல்லாப ராகத்துடன் சங்கமமாகிவிட மஞ்சத்தை நெருங்கி அழைத்துச் செல்கிறாள். 

“குறிஞ்சி!” 

“ம்ம்!” 

“என் குறிஞ்சி!” 

“ம்ம்!” 

மஞ்சம் அவர்களை மகிழம்பூ மணத்துடன் வரவேற்ற போது… 

“குறிஞ்சீ! குறிஞ்சீ!” என்று பயங்கரக் குரல் கீழிருந்து ஒலிக்கிறது. 

அப்பாவின் குரல். ஏன் இப்படி அலறி அழைக்கிறார்? என்ன நடந்து விட்டது? 

ஓ… சல்லாப ராகத்து அந்தரகாந்தாரம் சுந்தரமாக ஒலித்துச் சொர்க்கத்தைக் காட்ட முனைந்த இந்த நேரத் தில் அப்பாவின் அலறல்… 

மீண்டும் விருபாட்சக் கவிராயரின் அலறல் சத்தம். சுருதி கலைந்து விட்டது. 

அவசர அவசரமாக இருவரும் ஆடைகளையணிந்து கொண்டு படியிறங்கி ஓடி வருகிறார்கள். 

அறையினுள் இடது மார்பில் கையை வைத்துக் கொண்டு சுவரில் சாய்ந்து காணப்பட்டார் விருபாட்சக் கவிராயர். வலது கரத்தில் கம்பராமாயண ஓலைச் சுவடிகள்… 

“என்னப்பா?… என்ன?” 

“நெஞ்சு அடைக்குது. மூச்சுவிட முடியவில்லை. போய் வைத்தியரைக் கூப்பிட்டு வர ஏற்பாடு செய்!” 

ஞானசுந்தரம் அக்கணமே பறந்தான். சல்லாப ராகம் அவர்களைப் பொறுத்தமட்டில் பொல்லாத ராகமோ? நிலைத்து, நில்லாத ராகமோ? 

சற்றைக்கெல்லாம் வைத்தியர் வந்தார்; நெஞ்சடைப்பு; மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். 

கீழே பிரிந்து கிடந்த கம்பராமாயண ஓலையில் வாலி வதைபடலம் விமர்சகர்களை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தது. 


பொல்லென்று விடிந்தது பொழுது. கொல்லென்று சிரித்தன பறவைகள். 

சில்லென்று வீசியது இளங்காலைக் காற்று. 

காளையார் கோயிலுக்குப் புறப்பட்டாக வேண்டுமே! அருமை நண்பர் கச்சேரிக்காக அற்புதமாக ஏற்பாடு செய்து வைத்திருப்பாரே! இந்த நிலையில் காளையார் கோயிலாவது? கானப்பேரெயிலாவது? 

“அப்பா! கச்சேரியை ரத்து செய்ய ஆளையனுப்பி விடுகிறேன்!” என்றாள் குறிஞ்சி. 

விருபாட்சக் கவிராயர் உடலில் இன்னமும் முன்னேற்றம் தெரியவில்லை. எப்படி விட்டுச் செல்வது?

“வேண்டாம்; போய் கச்சேரி முடித்துத் திரும்புங்கள்” என்றார் கவிராயர். 

“உங்களை இந்த நிலையில் விட்டு விட்டு என்னால் சத்தியமாகப் போக முடியாது.” 

சத்தியமாக… 

“ஒரு காரியம் செய் குறிஞ்சி! ஞானசுந்தரம் இங்கிருந்து என்னைக் கவனித்துக் கொள்வான். நீ போய் பாடி விட்டுத் திரும்பு!” 

“என்னால்தான் போக முடியாது என்று சொல்லுகிறேன்!” 

“அப்படியென்றால் ஞானசுந்தரம் போய் பாடிவிட்டுத் திரும்பட்டும்.” 

இப்போது ஞானசுந்தரம் குறுக்கிட்டான்: “குறிஞ்சி தனியாகச் சென்றாலாவது ஜனங்கள் ஏற்பார்கள். நான் சென்றால் ஏற்பார்களா?” 

“ஏற்றால் பாடி விட்டு வா! மறுத்தால் நிலைமையைச் சொல்லி, பிரிதொரு சமயம் ஏற்பாடு செய்து கொள்ளச் சொல்!” என்றார் விருபாட்சக் கவிராயர். 

ஞானசுந்தரமும் இந்தக் கட்டளை மனத்திற்கு உகந்த தென ஏற்று, அன்றே புறப்பாட்டுக்கான ஆயத்தங்களைக் கவனித்தான். 

இதுவரை இப்படித் தனியாகச் செல்கிற வேதனைக் குரிய அனுபவத்தைக் காணாத குறிஞ்சி, கண்கலங்கிப் போனாள். வேறு எந்தக் கச்சேரியாக இருந்தாலும் அலட்சியமாக உதறியிருப்பாள். தன்னை வளர்த்து ஆளாக்கிய பெரியப்பாவின் வறுமைக் காலங்களில் உதவி யவர் ஏற்பாடாமே! கம்பன் கண்ட சடையப்ப வள்ளல் மாதிரியாமே! அப்பேர்பட்டவர் மனம் நோகக்கூடாது என்கிறாரே!… 

பொதுவில் குறிஞ்சி இல்லாத கச்சேரியை மக்கள் ஏற்பரா? ரசிப்பரா? 

முத்துச் சிப்பி போன்ற குறிஞ்சியின் மூடாத விழிகளில் முத்து முத்தாய் நீர்த்துளிகள் உதிர்ந்தாலும், சில முத்துக் கள் சில யோசனைகளை முன்மொழிந்து பார்த்தன. 

என்னதான் ஞானசுந்தரமும் குறிஞ்சியும் காதலர்களாக இருந்தாலும், இசை பற்றியதில் ஞானசுந்தரமில்லையேல் குறிஞ்சி இல்லை. இது குறிஞ்சியே அறிந்த குறிஞ்சிப்பூ உண்மை! ஞானசுந்தரமும் குறிஞ்சியை மீறிய ஞானம் படைத்தவன்; குரலினிமையில் ஆணுக்கே உரிய தோகை மயில் ரசனையுண்டு; சிங்கப் பிடரியின் சிலிர்ப்புண்டு. கிளை களையாய் கொம்புகளையுடைய கலைமானின் அழகு உண்டு! இப்படியான ஆண் சிருஷ்டியின் பேரழகு அவனது குரலில் மட்டுமல்லாது உருவத்திலும் இருந்தது; ஞானத்திலும் இருந்தது; அவன் பெயருக்கு ஏற்ப ஞான சுந்தரம்தான்! 

அப்பேர்பட்டவன் இதயத்தே சிறு பொறாமை உண்டு; சிறு… மிகச் சிறு பொறாமை! ‘குறிஞ்சிக்குக் கிடைக்கிற கௌரவம் தனக்கு மட்டும் ஏன் அந்த அளவுக்குக் கிடைக்கவில்லை?” 

நியாயமான பொறாமைதான்; இதனைக் குறிஞ்சியும் அறிவாள். ஆனால் எக்காலத்திலும் எச்சந்தர்ப்பத்திலும் இதனைக் கண்டு கொண்டாளில்லை. அவளுக்கே அது நியாயமாகப்பட்டது போலும்! 

‘சென்றுதான் பார்க்கட்டும்; நேரில் அறிந்து கொள்ளட் டுமே! என்பதுதான், முத்துத் துளிகள் முன் மொழிந்த யோசனை. 

அவள் கண்ணீருடன் விடை தருகிறாள்…

அவனும் கண்ணீருடன் புறப்படுகிறான்.

ஆனால் விதி? 

‘பன்னீரில் குளித்து மகிழ்ந்து வாழ்க்கை நடத்த வேண்டிய குறிஞ்சி, இப்படிக் கண்ணீர்க் காப்பியம் போலக் காணப்படுகிறாளே’ என்று கருணைகூராமல் ‘முன்ளம் பழை வினையால் மூண்டது இத் தீ’ என்ற பல் லவியை முகாரியிலா பாடும்? 

– தொடரும்…

– குற்றாலக் குறிஞ்சி (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 2012, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

கோவி. மணிசேகரன் (கே.சுப்பிரமணியன்( 2 மே 1927 - நவம்பர் 18, 2021) சிறுகதை, நாவல், கட்டுரை என பொது வாசிப்புக்குரிய நூற்றுக்கணக்கான படைப்புகளை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது 'குற்றாலக் குறிஞ்சி' நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றார். கோவி மணிசேகரன் கல்கி மற்றும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்களால் ஈர்ப்படைந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதியவர் பின்னர் நாவல்களை எழுதலானார். கோவி மணிசேகரன் 1954-ல் 'கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *